Thursday, April 28, 2011

ஷாயிபா பழி வாங்கினாள்! கண்ணன் வருவான், 2-ம் பாகம்!

தான் உடுத்தி இருந்த சேலைத் தலைப்பிற்குள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்துப் பார்த்தாள் ஷாயிபா. பின்னர் அதை மீண்டும் மறைத்து வைத்துக்கொண்டு, தான் படுத்திருந்த அறையின் ஒரு பக்கத்தில் இருந்த நீண்ட தாழ்வாரத்திற்குச் சென்றாள். அங்கிருந்து அருகே இருந்த பெரிய முற்றத்திற்குச் சென்றாள். அது வரை யாருமே அவளைப்பார்க்கவில்லை. எங்கும் இருட்டு மண்டி இருந்தது. காரிருள். அவள் அங்கிருந்து மெல்ல, மெல்ல கண்ணன் இரவுகளில் படுத்து உறங்கும் மாமரத்தடிக்கு சப்தமின்றி சென்றாள். பூனையை விடவும் மிருதுவாகப் பாதங்களை எடுத்து வைத்த ஷாயிபா, சில நிமிடங்களில் அந்த மாமரத்தடியை அடைந்தாள். மின்னும் மெல்லிய நட்சத்திர ஒளியில் கண்ணன் உறங்குவதும் தெரிந்தது. தன்னிரு கரங்களையே தலைக்கு அணையாக வைத்த வண்ணம் மெல்லிய புன்னகை இழையோட உறங்கினான் கண்ணன். எப்போது பார்த்தாலும் புன்னகை, மென்னகை, நகைமுகம். ஹும் இவன் செத்துப் போகும்போது கூடச் சிரித்துக்கொண்டே சாவானோ? ஷாயிபாவின் ஆத்திரம் எல்லை கடந்தது. ஹும், இருக்கட்டும், இருக்கட்டும், நன்றாய்ச் சிரிக்கட்டும். சில விநாடிகளில் இந்தப் புன்னகை முகம் உயிரை இழக்கப் போகிறது. அப்புறம் இந்த முகத்தை நெருப்பிலிட்டு எரித்துச் சாம்பலாக்குவார்கள். ஒரு குரூரத் திருப்தி அடைந்தாள் ஷாயிபா.

இன்னும் தாமதம் செய்யக் கூடாது. சீக்கிரம், சீக்கிரம், ஆம், இன்னும் சீக்கிரம். இவனைப் பார்த்துக்கொண்டிருந்தால், இவனின் இந்த வசீகரமான முகத்தின் அழகில் நான் என்னை இழந்து, என் காரியத்தை மறந்துவிடலாம். என் மனதைப் பலவீனமாக்கிவிடும் இந்த முகம். ஹூம்???? ஆமாம், அது என்ன?? யாரோ எதுவோ, எப்போவோ சொன்னார்களே?? ம்ம்ம்ம்ம்??? நான், அதாவது ஷாயிபா இந்தக் கண்ணனை மணக்க விரும்புவதாக யாரோ, எவரோ சொன்னார்கள் அல்லவோ?? யார் சொன்னது அப்படி?? சொன்னவர்கள் மட்டும் இப்போது என் எதிரே வரட்டும். ஒரு கை பார்த்துவிடுகிறேன். நானாவது இந்தக் கொலைகாரனை மணக்க விரும்புவதாவது! ஒரு வேளை…….. ஒரு வேளை…….. இது வேறுவிதமாக நடந்திருக்கக் கூடுமானால்…… ஓ, ஓஓ, ஓஹோ, இல்லை இல்லை, என் பெரியப்பா மேலுலகில் காத்திருக்கிறார். அவருக்கென நான் அளிக்கப் போகும் காணிக்கையை இன்னமுமா அளிக்கவில்லை என வியப்போடு பார்க்கிறார். இதோ, வந்துவிட்டேன், சீக்கிரமாய்ப் பழியை முடித்துக் காணிக்கையை அளிக்கிறேன், என் தேவனே, ஸ்ரீகாலவ வாசுதேவரே, பரம்பொருளே, உம்மை ஒரு வன் அழித்துவிட்டபிறகும் நான் சும்மா இருந்தேனே இவ்வளவு நாட்களாய்!

ஷாயிபா கைகளைத் தூக்கி இரு கைகளாலும் அந்தக் கத்தியைத் தன் எதிரே படுத்திருந்த உருவத்தின் மீது பாய்ச்சினாள். பின்னர் அதை எடுத்து மீண்டும் பாய்ச்சினாள். அடுத்து இன்னொரு முறை. படுத்திருந்த உருவத்திடமிருந்து எவ்வித எதிர்ப்பும் காணமுடியவில்லை. வலி தாங்காமல் ஓலக்குரலும் எழும்பவில்லை. அவ்வளவு ஏன், ஒரு சொட்டு ரத்தம் கூட வந்ததாய்த் தெரியவில்லை. ஆனால் ஷாயிபா அங்கே நிற்கவே இல்லை. கத்தியை அடுத்தடுத்துப் பாய்ச்சிவிட்டு அங்கிருந்து ஓட்டமாய் ஓடினாள். ஓடும்போதே அவளுக்குத் தன்னைச் சுற்றிலும் இருந்த இருள் விலகுவது தெரிந்தது. அவள் மாளிகைக்கு உள்ளே சென்றாள். அங்கே அங்கே தேவகி அம்மா இறந்து கிடந்தாள். ஆஹா, என்னை எவ்வளவு அன்பாகவும், ஆழமாகவும் நேசித்தாள்? இத்தனைக்கும் நான் என்ன கைம்மாறு செய்திருக்கிறேன்?? எப்போது பார்த்தாலும் எரிந்து விழுவேன்? கத்துவேன்! ஆஹா, அது என்ன?? அது,,,, அது தேவகி அம்மா எந்நேரமும் வைத்துப் பூஜிக்கும் கிருஷ்ணனின் குழந்தை பொம்மை அல்லவோ? ஆஹா, அது உடைந்துவிட்டதா என்ன? இல்லை, இல்லை, தேவகி அம்மா அதைத் தன் மார்போடு சேர்த்து அணைத்துக்கொண்ட வண்ணம் இறந்திருக்கிறார். தேவகி அம்மா ஏன் இறந்துவிட்டார்?? ஓஹோ, நான் கண்ணனைக் கொன்றுவிட்ட செய்தி அதற்குள் இங்கே வந்துவிட்டது போலும், அருமைப் பிள்ளையின் பிரிவு தாங்காமல் இறந்துவிட்டார் போலும். அதோ வசுதேவர்….. என்னவோ புலம்புகிறாரே……….என் கிருஷ்ணன்,,,,,,,, என் கிருஷ்ணன்,,,,,, ஷாயிபாவுக்குப் புரிந்துவிட்டது. அவள் தான் கண்ணனைக் கொன்றுவிட்டாள் எனத் தெரிந்து கொண்டு விட்டாரோ? திடீரென சுபத்ரா அழும் குரல் கேட்டது.

என் அண்ணாவே, கோவிந்தா, கோவிந்தா, அருமை அண்ணா!

3 comments:

priya.r said...

இந்த அத்தியாயம் எண் 64 படித்து விட்டேன்
ஆ ! இது என்ன ....................
ஒரு வேலை இது ஷாயிபாவின் கனவோ .............
ஒன்றும் புரியவில்லையே !

sambasivam6geetha said...

ப்ரியா, உங்களோட எல்லாப் பின்னூட்டங்களும் வந்தன. தனித்தனியாய் பதில் சொல்ல முடியலை,. மன்னிக்கவும்.

அரச தர்மம் குறித்து ராமாயணத்தில் கூட எழுதி உள்ளேன். அரசனாகத் தன் கடமையை நிறைவேற்ற வேண்டியே ஸ்ரீராமன் மூன்றாவது தரம் சீதைக்கு சோதனை வைத்து ஒரேயடியாக அவளைப் பிரிகிறான். உத்தரகாண்டத்தில் வரும். எழுதி உள்ளேன். படிச்சுப் பாருங்க. நன்றிம்மா.

priya.r said...

அட்சோ !இதுக்கு போய் பெரிய பெரிய வார்த்தைகள் எல்லாம் சொல்லி கிட்டு !

அவசியம் படித்து பார்க்கிறேன் கீதாம்மா

தங்களுடைய பரிவுக்கு நன்றி கீதாம்மா