Sunday, April 10, 2011

ஷாயிபாவின் கோபமும், ஷ்வேதகேதுவின் ஆவலும்! கண்ணன் வருவான் 2-ம் பாகம்!

ஷாயிபாவின் மனதில் எழுந்த கோபத்தை அவளால் கட்டுப்படுத்த முடியவில்லை. சற்று நேரம் அப்படியே நின்றார்கள். அங்கே மெளனம் நீடித்தது. இருவருமே எதுவும் பேசவில்லை. அவர்களோடு சேர்ந்து காலமும் நின்றுவிட்டதோ எனும்படி எங்கும் ஒரே அமைதி. அந்தக் கல்லால் ஆன சிங்காதனத்தின் எதிரே தானும் ஒரு கற்சிலை போல் நின்றிருந்தாள் ஷாயிபா. முதலில் தன்னைச் சமாளித்துக்கொண்டு ஷ்வேதகேதுவே பேச ஆரம்பித்தான். “ஷாயிபா, கண்ணன் உன்னிடம் சொல்லி இருப்பானே??என்னால் உன்னை விட்டுவிட்டு வாழ முடியாது. நீ இல்லாமல் எனக்கு வாழ்க்கையே சூனியமாய்த் தெரிகிறது. இரவும், பகலும் நான் உன்னை நினைந்து ஏங்குகிறேன். உன்னோடுசேர்ந்து வாழப்போகும் வாழ்க்கைக்கான கனவுகளில் மூழ்கி விடுகிறேன். நான் இப்போது இங்கே வந்ததே உன்னை என் மனைவியாக்கிக்கொண்டு குண்டினாபுரம் அழைத்துச் சென்று அங்கே அமைதியானதொரு வாழ்க்கையைக் கழிக்கவேண்டும் என்று தான்.” ஷ்வேதகேது ஒரு வழியாகச் சொல்லி முடித்தான்.

“பொய்யனே!” வெடித்தாள் ஷாயிபா. அடக்க முடியாத கோபம் அவள் குரலில் தெரிந்தது. நீ குண்டினாபுரத்திலிருந்து இங்கே வந்ததன் உண்மையான காரணம் எனக்குத் தெரியாதென நினைத்தாயா?? உன் அருமைச் சிநேகிதனும் உன் மாணவன் எனப் பெருமை அடித்துக்கொள்ளும் கிருஷ்ணனுக்காகச் செய்தி கொண்டு வந்திருக்கிறாய். பீஷ்மகன் தன் ஒரே மகள் ருக்மிணிக்குத் திருமணம் செய்து வைக்க மாப்பிள்ளையைத் தேர்ந்தெடுக்கச் சுயம்வரம் வைத்திருக்கும் தகவலை நேரில் தெரிவிக்க வந்துள்ளாய். ஏனெனில் பீஷ்மகனின் அதிகாரபூர்வ அழைப்பு இங்கே வரவில்லை என்பது எனக்குத் தெரியும்.” சற்றே நிறுத்தினாள் ஷாயிபா. கோபத்திலும், ஆத்திரத்திலும் அவள் உடலே துடித்துக்கொண்டிருந்தது. ஷ்வேதகேது அதை மறுப்பான் என எண்ணினால் ஷாயிபா ஏமாற்றமே அடைந்தாள்.

“உண்மைதான் ஷாயிபா. உனக்கு எல்லா விஷயங்களும் தெரிந்திருக்கின்றதே. எப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையில் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த செய்தியை நான் கொண்டு வந்திருக்கிறேன் என்பதைப் புரிந்து கொண்டிருக்கிறாய் அல்லவா?? அங்கே ஒரு பெரிய சதியே நடக்கிறது. அந்தச் சதியின் மூளை ஜராசந்தன். எவ்வாறேனும் யாதவர்களையும், கண்ணனையும் அடியோடு அழிக்கத் துடிக்கிறான் . கண்ணனை எவ்வாறேனும் கொல்வது ஒன்றே அவன் குறிக்கோள். இந்நிலையில்………..” ஆரம்பித்த ஷ்வேதகேதுவை இடைவெட்டினாள் ஷாயிபா. “அப்படிக் கண்ணன் கொல்லப் பட்டால் அது சரியானதே. அவன் செய்த அனைத்துத் தீங்குகளுக்கும் சரியான பதிலாகும். நன்றாய்ச் சாகட்டும்.” ஆத்திரத்துடன் மொழிந்த ஷாயிபா, ஷ்வேதகேதுவைப் பார்த்து, "அதுசரி, என்ன உனக்கு இந்தக் கண்ணனிடம் மட்டும் இவ்வளவு பாசமும், கருணையும் பொங்குகிறது??? இவனிடம் எதைக் கண்டாய்?? இவனுக்காக நீ என்னையும் ஏமாற்றினாய். என் பெரியப்பாவையும் ஏமாற்றினாய். இப்போது நீ ஊழியம் செய்யும் அரசன் பீஷ்மகனையும் ஏமாற்றப்போகிறாயா? உன்னுடைய துரோக சிந்தனைகளுக்கு அளவே இல்லையா? “ ஷாயிபா கோபத்துடன் கேட்டாள்.

“ஷாயிபா, ஷாயிபா, நீ எங்களைப் புரிந்து கொண்டது இவ்வளவு தானா?? நீ ஏன் எப்போதும் கரவீரபுரத்தின் நடைமுறைகளையும், அதன் அளவுகோலாலேயேயும் எங்களை எடை போடுகிறாய்?? இங்கே….” அதற்குள்ளாக ஷாயிபா கடுகெனப் பொரிந்தாள். “எங்கள் அளவுகோல் நீங்கள் வைத்திருப்பதை விட மிக மிக மேலான ஒன்று. நாணயமான ஒன்று.” என்றாள். “இருக்கலாம், இருக்கலாம். ஆனால்…… ஆனால்…….. இங்கே இங்கே ஆரியர்களின் பழக்க வழக்கங்கள் வேறு. முற்றிலும் வேறான ஒன்று. கரவீரபுரத்தின் வழக்கங்களை விட முற்றிலும் மாறுபட்டது. இங்கே உள்ள அரச தர்மம் நீடித்து நிலைத்துத் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் ஒன்று. எவராலும் அதை மீற இயலாது. இதைக் கேள் ஷாயிபா, எங்கள் முன்னோர்கள் இறந்துவிட்டார்கள் தான். அவர்கள் நிலைத்து இருக்கவில்லை. ஆனால் அவர்கள் நிலைநாட்டிய தர்ம்ம் செத்துவிடவில்லை. நிலைத்து நிற்கின்றது. அடுத்தடுத்துத் தொடர்ந்து வரும் அனைத்து மன்னர்களும் இதைத் தொடர்ந்து நிலை நாட்டுகின்றனர். தர்மத்தின் எல்லையைக் கடக்க எவரும் முயலவில்லை. முயலவும் மாட்டார்கள்.” என்றான் ஷ்வேதகேது.

“எனில் என் பெரியப்பாவிடம் அந்த தர்மமே இல்லையா? ஜராசந்தனிடம் இல்லையா?” ஷாயிபா கேட்டாள். “நீ கேட்பது சரியே. உனக்கு விளக்கவேண்டியதும் என் கடமை. இந்த ஜராசந்தன் பல வருடங்களாகச் சிற்றரசர்களைக் கொன்று அவர்களின் ராஜ்ஜியத்தைத் தன் ராஜ்யத்தோடு இணைத்துக்கொண்டுவிடுகிறான். அவர்களின் குடும்பப்பெண்களை மானபங்கம் செய்து தன் அரண்மனையில் பணிப்பெண்களுக்கும் கீழாக நடத்துகிறான். வீரர்களையும் தீரச் செயல்கள் செய்பவர்களையும் அவனுக்குப்பிடிக்கவில்லை. அவர்களை எவ்விதமேனும் அடிமைப் படுத்தி விலங்கிட்டுச் சிறையில் தள்ளுகிறான். பல வித்யாஸ்ரமங்களையும், குருகுலங்களையும் அடியோடு அழித்து ஆசாரியர்களை அவமானம் செய்து நாட்டை விட்டே துரத்தினான். இப்போது…. இப்போது….. இவை அனைத்துக்கும் ஒரு முடிவு கண்ணனால் ஏற்படப்போகிறது.” ஷ்வேதகேது நிறுத்தினான்.

“ஓஓஓஓஓ, இந்த கோவிந்தன் என்பவன், மாடுகளை மேய்த்துக்கொண்டிருந்த இடைச்சிறுவன்….. அவன் தான் உங்களைக் காக்க வந்தவனா??? என் பெரியப்பனைக் கொன்றதோடு அல்லாமல், தன் சொந்த மாமனையும் தன் கரங்களாலேயே கொன்ற பாதகன்!” ஏளனம் பொங்கக் கேட்டாள் ஷாயிபா.


“ஆஹா, உனக்கு இப்போது எதுவும் புரியாது ஷாயிபா. கரவீரபுரத்தின் நீரின் மகிமை இன்னமும் உன் உடலில் ஒட்டிக்கொண்டிருக்கிறது. அது முழுதும் அகன்றால் தான் நீ உண்மையை உள்ளது உள்ளபடி பார்க்க ஆரம்பிப்பாய். “ ஷ்வேதகேது தொடர்ந்து பேசினான். “கடவுளரின் சக்தியும் சரி, மனிதர்களின் மகிழ்ச்சியும் சந்தோஷமும் சரி அனைத்தும் இந்த தர்மத்தாலேயே பிணைக்கப் பட்டிருக்கிறது. இது ஒன்றும் இங்கு ஆளும் அரசர்களின் தனிச் சொத்தும் அல்ல. பூர்வீகமாய் வந்த சொத்தும் அல்ல. பார்க்கப்போனால் தர்மமே இவர்களைத் தங்கள் கருவிகளாய் வைத்துச் செயல்பட்டுக்கொள்கிறது என்றும் கூறலாம். உன் பெரியப்பனும் சரி, கம்சனும் சரி, தர்மத்தைக் கடைப்பிடிக்க வில்லை. தர்மத்தின் வழி ராஜ்யம் ஆளவில்லை. அவரவர் விருப்பத்திற்கிணங்க இருவரும் ஆட்சி செய்தனர். அவர்களின் தவறுகளையும், குற்றங்களையும் சுட்டிக்காட்டும் நபர்கள் எவ்வளவு பெரியவர் ஆனாலும், அவர்களைத் தங்கள் பாதையிலிருந்து அகற்றினர். உன்னுடைய பெரியப்பாவும் அதையே செய்தார். இப்போது ஜராசந்தனும் அதையே செய்து வருகிறான்.”ஷ்வேதகேதுவின் வருத்தம் அவன் குரலில் தெரிந்தது. மேலும் அவன், “தர்மம் கடைப்பிடிக்கப்படவேண்டும். தர்மம் நிலைநாட்டப் படவேண்டும். “ என்றான்.

“ஓஹோ, அப்படி என்றால் நீ இப்போது உன் சிநேகிதன் தர்மத்தை நிலைநாட்டவேண்டி அவனுக்கு உதவி செய்து வருகிறாயா?? ஜராசந்தனை உன் சிநேகிதன் அழிப்பதன் மூலம் தர்மம் நிலை நாட்டப்படுமா?” ஷாயிபாவின் ஏளனம் அகலவே இல்லை.

“இல்லை ஷாயிபா, அங்கேதான் நீ தவறான புரிதலில் இருக்கிறாய். கண்ணன் ஜராசந்தனை தர்மத்தின் பாதையில் திருப்பவே முயல்கிறான்.” என்றான்.

“ஆஹா, ஆனால் அதற்கு உன் நண்பன் உயிரோடு இருக்கவேண்டுமே! ஒருவேளை அவனுக்குக் கூடிய சீக்கிரம் முடிவு வந்துவிட்டால்?” எகத்தாளம் ததும்பி நின்றது ஷாயிபாவின் குரலில்

1 comment:

priya.r said...

இந்த அத்தியாயம் எண் 60 படித்து விட்டேன்
ஏன் தான் இந்த ஷாயிபா மனதில் வஞ்சம் வைத்து கொண்டு தர்மத்தை மறுக்கிறாளோ:(

அரச தர்மம் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை ஷ்வேதகேது சொல்லியதன் வாயிலாக புரிந்து கொள்ள முடிந்தது.