அவர்கள்
அனைவருக்கும், அவர்கள் குடும்ப விளக்கான மரிஷாவைக் குறித்து அறிய ஆவல். ஆகவே கிருஷ்ணனிடம் அவளைப் பற்றிக் கேட்க ஆரம்பித்தனர். ஆனால் சகோதரிகள் இருவருக்குமோ, கிருஷ்ணனைக் கண்டு
உத்தவன் என்ன ஆனான் என்று பார்த்து அவனைக் காப்பாற்றி வரச் சொல்ல வேண்டுமென்று ஆவல்
அதிகமாக இருந்தது. அதைச் சொல்லத் துடிதுடித்தனர்
இருவரும். ஆனால் அவர்கள் சற்றும் எதிர்பாராமல் நாகர்கள் படைத்தலைவர்கள்
விடைபெற்றுச் சென்றதுமே இளவரசனும் யுவராஜாவும், அவர்கள் தகப்பனும் ஆன கார்க்கோடகனைப்
பார்த்துக் கிருஷ்ணன், “உத்தவன் எங்கே?” என்று கேட்டான். பெண்கள் இருவரும் தங்கள் காது வலிக்கும்படி உற்றுக்
கேட்டனர். “அவன் எங்களை விட்டுச் சென்றுவிட்டான்.”
கார்க்கோடகன் பதிலில் தயக்கமும், அவநம்பிக்கையும் மிகுந்திருந்தது. தான் சொல்வதைக் கிருஷ்ணன் ஏற்றுக் கொள்ள வேண்டுமே
என்ற கவலையும் தெரிந்தது. “எங்கே சென்றான்
அவன்?” கிருஷ்ணனுக்கு ஆச்சரியமும், ஆர்வமும் மிகுந்தது. “இங்கேயே காத்திருக்கும்படியும், அனைவரும் சேர்ந்து
துவாரகை செல்லலாம் என்றும் அவனிடம் சொல்லி இருந்தேனே! உத்தவன் இங்கே தானே காத்திருக்க வேண்டும்!” கார்க்கோடகனுக்கு இப்போது குழப்பமாக இருந்தது. “அவன் ராக்ஷசவர்த்தம் சென்றிருக்கிறான்.” என்றான்.
“என்ன?
ராக்ஷசவர்த்தத்துக்கா? ஏன்?” கிருஷ்ணன் கேட்டான்.
“எங்கள்
நாகர் தலைவர்ர்க்களில் ஒருவன் ராக்ஷசச் சிறுவன் ஒருவனைப் பிடித்தான். அவன் மூலம் சகோதரி
குந்தியும், ஐந்து சகோதரர்களும் உயிருடன் இருப்பட்தாகவும், அனைவரும் காட்டின் உள்ளே
சென்று ராக்ஷசவர்த்தத்தில் நுழைந்ததாகவும் செய்தி கிட்டியது.”
“நிச்சயமாகத்
தான் சொல்கிறாயா?”
“அந்தப்
பையன் அரைப்பைத்தியமாகத் தான் இருந்தான்; ஆனால்
அவன் சொன்னதிலிருந்து எங்களுக்கு இப்படித்தான் புரிந்தது.”
“ஆகவே
உத்தவன் தானே தனியாக அவர்களைத் தேடிச் சென்றிருக்கிறனா?” கண்ணன் கேட்டான்.
“ஆம்,
ஆனால் நீ தான் அவ்வாறு போகும்படி சொன்னதாகவன்றோ அவன் எங்களிடம் சொன்னான்!” கார்க்கோடகனின்
குழப்பம் நீடித்தது. “அது தான் உத்தவன். நான் என்ன எதிர்பார்க்கிறேன் என்பதை அவனாகவே புரிந்து
கொண்டு நிறைவேற்றுவான்.” கண்ணன் குரலில் பெருமையும் உத்தவனிடம் அவன் கொண்ட பாசமும்
வெளிப்பட்டது. இதைக் கேட்ட சகோதரியர் இருவருக்கும்
அழுகையைக் கட்டுப்படுத்த இயலவில்லை. அவர்கள் அழுவதைக் கேட்டு அனைவரும் அவர்கள் பக்கம்
திரும்பிப் பார்த்தனர். கண்ணனும் திரும்பினான். அவர்களைக் கண்டதும், “சகோதரிகளே, என்ன ஆயிற்று?
ஏன் அழுகிறீர்கள்? “ என்று வினவினான். ஆனாலும்
தான் சொன்னதற்கும் அவர்கள் அழுவதற்கும் ஏதோ சம்பந்தம் இருக்கிறது என்பது கண்ணனுக்குப்
புரிந்தது.
ரவிகா குறுக்கிட்டு, “வாசுதேவ
கிருஷ்ணா! அவர்கள் இருவரும் எங்கள் பெண்கள். இளவரசிகள்.
இரட்டையர். ஒருத்தி கபிலா, இன்னொருத்தி
பிங்கலா.” என அறிமுகம் செய்து வைத்தாள். “ஆனால்
ஏன் இருவரும் இப்படி அழ வேண்டும்?” கண்ணன் குரலில் அவன் கவலை நன்கு தெரிந்தது. சம்பிரதாயமான மரியாதையை எல்லாம் தூக்கி எறிந்த பிங்கலா,
கண்ணனிடம், “சகோதரா, ஓ சகோதரா, அவரை, அவரை ராக்ஷசர்கள் சாப்பிட்டுவிட்டனர்!” என்று
கூறிவிட்டு மேலும் அழ ஆரம்பித்தாள். கபிலா
உடனே குறுக்கிட்டாள். “இந்தக் கோழைகள் பயந்து கொண்டு அவரோடு துணைக்கும் செல்லவில்லை!”
இதை கூறிக்கொண்டே ஆத்திரம் கொப்பளிக்கும் கண்களால் தன் தகப்பனையும், சகோதரனையும் பார்த்தாள். அவள் கண்கள் கண்ணீரால் நிரம்பி இருந்தது.
கிருஷ்ணன்
இது என்ன என்பது போல் கார்க்கோடகனைப் பார்த்தான்.
அவனைப் புரிந்து கொண்ட கார்க்கோடகன் விளக்க ஆரம்பித்தான். ராக்ஷசச் சிறுவன் அங்கே எப்படி வந்தான் என்பதிலிருந்து,
அவனோடு உத்தவன் சென்றது வரை அனைத்தையும் விளக்கிக் கூறினான். “மாட்சிமை பொருந்திய வாசுதேவா! உத்தவன் ராக்ஷச வர்த்தம் சென்றுவிட்டான் என்பது
உண்மையே! ஆனால் நீ கேட்டுக் கொண்டதாலேயே செல்வதாக அன்றோ அவன் கூறினான்! எங்களால் அங்கே
செல்ல முடியாது. எந்த நாகனும் அவன் நாட்டின்
எல்லையைத் தாண்டியதில்லை. ராக்ஷசர்களின் நாட்டு எல்லைக்குள் நுழைந்ததும் இல்லை. அது ஒரு மோசமான நாடு. அங்கே நுழையும் எந்த மனிதனும் உயிரோடு திரும்பியதாக
இல்லை!” என்று முடித்தான்.
அவன் சொல்வது அனைத்தையும்
கிருஷ்ணன் இரக்கத்தோடும், கருணையோடும் கேட்டு வந்தான். வழக்கம் போல் புன்சிரிப்பு அவன் உதடுகளில் தாண்டவம்
ஆடியது. “நீங்கள் யாரும் ஏன் உத்தவனோடு செல்லவில்லை
என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது!” என்று அமைதியாகவே பதில் சொன்னான். அவன் குரலின் தன்மையிலிருந்து அங்கிருந்த ஒவ்வொரு
நாகனும் அதைக் கிருஷ்ணன் தங்களுக்காகவே தனிப்பட்ட முறையில் சொல்வதாக எடுத்துக் கொண்டனர். அவ்வளவு தயையுடனும், அவர்களுக்கு மன்னிப்புக் கொடுக்கும் தன்மையிலும்
இருந்த அந்தக் குரலையும் கிருஷ்ணன் சொன்ன மாதிரியையும் கேட்ட அந்த நாகர்கள் அனைவருமே
வெட்கித் தலை குனிந்தனர். அவர்களால் கிருஷ்ணனை
நிமிர்ந்தே பார்க்க முடியவில்லை. இவ்வளவு கருணையைக்
காட்டும் ஒருவனுக்கு உதவக் கூடியதொரு அரிய சந்தர்ப்பத்தை உயிருக்குப் பயந்து கொண்டு
இழந்துவிட்டோமே என ஒவ்வொருவனும் நினைத்தான்.
ஆர்யகனோ
எப்போதும் போல் மெளனமாகவே அனைத்தையும் கேட்டுக் கிரஹித்துக் கொண்டிருந்தான். இப்போது கண்ணனிடம், “நான் மட்டும் இன்னும் வயது
குறைந்து இளைஞனாக இருந்திருப்பேன் ஆனால், உத்தவனைத் தனியாகச் செல்ல விட்டிருக்க மாட்டேன்.”
என்றான். அவன் குரலிலும், முகத்திலும் தன்
படைத்தலைவர்களும், மகனும், பேரனும் செய்தது சரியல்ல என்னும் தொனி தொனித்தது. மேலும் தொடர்ந்து, “இப்போதைய இளைஞர்களிடம் வீரத்தை
எங்கே பார்க்க முடிகிறது? அவர்கள் தலையை நன்கு
எண்ணெய் தேய்த்துப் போஷாக்குச் செய்து கொண்டு அலங்கரித்துக் கொண்டு விருந்துகளிலும்,
விழாக்களிலும் ஆடிப்பாடவே அவர்களுக்கு நேரம் போதவில்லை. இம்மாதிரி வீர, தீரப் பராக்கிரமங்களில் ஈடுபாடு
என்பதே இளைஞர்களிடை குறைந்துவிட்டது. நான்
ஒரு இளைஞனாக இல்லாது போனேன்!” குரலில் துக்கம் தொனிக்கக் கூறினான் ஆர்யகன்.
“இப்போது
அழுவதில் என்ன பிரயோசனம் பாட்டனாரே?” பிங்கலா தன் பாட்டனிடம் கூறினாள். “இவ்வளவு நாட்களில் ராக்ஷசர்கள் அவரைக் கொன்று சாப்பிட்டிருப்பார்கள்.”
என்றாள் சோகமாக. “அவர்கள் அனைவரும் கோழைகள்
என்பதை நான் முன்னமே சொன்னேனே, பாட்டனாரே?”கபிலா தொடர்ந்து ஒத்து ஊதினாள். கிருஷ்ணனுக்கு இருவரையும் பார்த்துச் சிரிப்பு வந்தது. அவர்கள் இருவரின் இந்த குணத்தை அவன் மிகவும் மதித்தான்
என்பது அவன் பேச்சிலிருந்து தெரிந்தது. “கவலை
வேண்டாம், சகோதரியரே! நாளைக்கு நான் ராக்ஷச வர்த்தம் சென்று உத்தவனை திரும்பக் கூட்டி
வருகிறேன். பாட்டனாரே, தயவு செய்து நாளைக்கு
எந்தக் கொண்டாட்டமும் வேண்டாம். அனைத்தையும்
ரத்து செய்யுங்கள். உத்தவனோடு நான் திரும்பி
வந்த பின்னர் கொண்டாட்டங்களை வைத்துக் கொள்ளலாம்.
ஒருவேளை ஐந்து சகோதர்களும், அத்தை குந்தியும் கூட வரலாம். “ சொல்லி விட்டுக் கண்ணன் எழுந்து விட்டான்.
பிங்கலா விடாமல் புலம்பினாள். “எங்கே? இத்தனை நாட்கள் அவரைக் கொன்று தின்றிருப்பார்களே!” உத்தவனை ராக்ஷசர்கள் கொன்று தின்றிருக்கலாம் என்ற
நினைப்பை அவர்களால் மாற்றிக்கொள்ள இயலவில்லை.
கண்ணன் அவர்கள் இருவரையும் மாறி மாறிப் பார்த்தான். பின்னர் இனிமையாகச் சிரித்த வண்ணம் வெகு இயல்பாக,
“நான் இருக்கும் வரையிலும் அவனை எவராலும் கொல்ல முடியாது.” என்றவன் சட்டெனத் திரும்பி
ஆர்யகனைப் பார்த்தான். எப்போதும் தோன்றும்
ஒரு விதமான உணர்ச்சி வேகமும் அவனை ஆட்கொள்ளத் தன்னையும் அறியாது அவன் உணர்ச்சி பூர்வமான
வார்த்தைகளைப் பொழிந்தான். “உத்தவனை எவராவது கொன்றிருந்தால் அவன் உயிரோடு இருக்க மாட்டான்!”
இதை ஒரு சபதம் போலச் சொன்ன கண்ணனுக்குத் தனக்குள்ளே இன்னொரு மனிதன் இருந்து விதியையே
மாற்றி அமைக்கும் இந்தத் தவிர்க்க இயலாத காரியத்தைச் செய்யும்படி கூறுவது போல் உணர்ந்தான். அடுத்த கணம் தன் கம்பீரத்தையும், மன உறுதியையும்
காட்டும் வண்ணமாகத் தன் உத்தரீயத்தை எடுத்துத் தோள்களில் வீசிப் போட்டவண்ணம் சாத்யகியுடனும்,
ஷ்வேதகேதுவுடனும் அந்த இடத்தை விட்டு வெளியேறினான்.