Monday, August 5, 2013

தொடர்ந்து சொல்கிறான் பீமன்!

“அது சரி, அந்த மதகுரு என்னவானான்?”

“அவன் இறந்துவிட்டானப்பா மறுநாளே!” என்றான் பீமன்.

“ஆஹா, இப்படியெல்லாம் நடக்கும் என நான் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை;  இப்படியெல்லாம் நடந்தது என்று கேட்டதும் இல்லை.  சரி, அப்புறமாய் நீ என்ன செய்தாய்?”

“நான் என்ன செய்தேனா?  நீ என்னையா கேட்கிறாய்? உத்தவா, ஹிடும்பியை என் மனைவியாக்கிக் கொண்டேன்.” இதை பீமன் சொன்னதைப் பார்த்தால் அவன் வாழ்நாளின் லக்ஷியமே ராக்ஷசப் பெண்ணோடு நடந்த திருமணம் தான் என நினைக்கும்படியும் இது மிக இயல்பான ஒன்றே என எண்ணுமாறும் இருந்தது.  “ஆஹா, கடவுளே, ஏ மஹாதேவா!  இது என்ன  கூத்து!  அத்தை குந்தியும், உன் பெரிய சகோதரனும் இதற்கு என்ன சொன்னார்கள்?”

“ஆஹா, அவர்கள் என்ன சொல்ல முடியும்?  முகத்தை முறுக்கிக் கொண்டு கோணிக்கொண்டனர்!  ஹா, கேள் உத்தவா, என் தாய் குந்தி, அழகான எலும்புகளால் ஆன மாலையை அணிந்த, முன் பக்கம் துருத்திய பற்களோடு கூடிய என் மிக அழகான ராக்ஷச மனைவியை நிமிர்ந்துகூடப் பார்க்க மறுத்துவிட்டார்.  என் அண்ணா யுதிஷ்டிரருக்கோ அவருடைய புனிதமான மனசாட்சியின் உறுத்தல் தாங்கவில்லையாம்.  அர்ஜுனனும், நகுலனும் மிகவும் வெறுப்படைந்து முகத்தைத் திருப்பிக் கொண்டுவிட்டனர்.  கடைசியில் சஹாதேவன் தான் என் உதவிக்கு வந்தான். அவன் என்ன சொன்னான் தெரியுமா? “நாம் இவ்வுலகில் மற்றவர்களிடமிருந்து மறைந்து வாழ இதைவிடச் சிறந்த வழியும், இடமும் வேறு இல்லை. “ என்றான்.  அவன் எவ்வளவு புத்திசாலி என்பது தான் தெரியுமே உனக்கு.  உடனே தாய் குந்தியும் ஒத்துக் கொண்டுவிட்டார். வேறு வழியே இல்லையே உத்தவா!”

“ஆகக் கூடி நீ ராக்ஷசவர்த்தத்தின் தலைவனாக, ராக்ஷசர்களின் மாபெரும் அரசனாக ஆகிவிட்டாய்!” என்றான் உத்தவன்.  “ஆமப்பா, ஆம்.  நீ என்ன நினைக்கிறாய்?  அவர்களின் தலைவனாக ஆக என்னை அழைக்கவில்லை எனில் நான் ஹிடும்பியைத் திருமணம் செய்து கொண்டிருப்பேன் என எண்ணுகிறாயா?  இல்லை அப்பா இல்லை.  ஆனால் அதன் பின்னர் தான் என் கஷ்டங்களே ஆரம்பித்தது. அவர்களுடைய வழக்கப்படி ஹிடும்பனின் தலையைக் கொய்து தனியே எடுத்து விட்டு அவன் உடலை நெருப்பில் வாட்டி எனக்காகத் தயாரிக்கப் போகும் ராக்ஷசர்களின் சடங்குகளோடு கூடிய விருந்தில் கலக்க வேண்டும் என முனைந்தார்கள்.  நான் அப்போது அவர்கள் பேச்சின் குறுக்கே புகுந்து அவர்களைத் தடுத்தேன். ஹிடும்பனின் தலையைக் கொய்து உடலை நெருப்பில் வாட்ட நான் அனுமதிக்கவே இல்லை.  அவன் உடலைத் தீயூட்டும் போது நான் அருகேயே இருந்தேன்.  அவன் உடலின் கடைசித் துளி சதையும், கடைசி எலும்பும் முற்றிலும் நெருப்பில் எரிந்து சாம்பலாகும் வரையும் நான் அந்தப் பக்கம் இந்தப்பக்கம் திரும்பவில்லை.  ஆனால் அந்த ராக்ஷசர்கள் இருக்கிறார்களே, அவர்களுக்கு ரொம்பவே வருத்தம், ஒரு அருமையான விருந்து கை நழுவி விட்டதே என அனைவரும் ஆழ்ந்த வருத்தத்தில் இருந்தார்கள்.  என்னையும் சூழ்ந்து கொண்டு என்னையே பார்த்துக் கொண்டிருந்தனர்.  அவர்களுக்குள்ளேயே இதில் மனவேறுபாடுகளும் இருந்தன. “

“அவர்களில் வயதான இரு பெரியவர்கள் இது மதச் சடங்குகளை அவமதிக்கும் நோக்கத்தோடு கூடியதொரு செயல்;  இதை அநுமதிக்கக் கூடாது;  பின் விளைவுகள் ஏற்படலாம்” என அழுத்தம் திருத்தமாகக் கூறிப் பார்த்தனர்.  நான் அவர்கள் இருவரையும் அருகே அழைத்து ஒருவரோடு ஒருவர் மண்டையை வேகமாக மோதவிட்டுப் பின் என் முதல் அரச கட்டளையைப் பிறப்பித்தேன். “இனி எவனாவது ஒருவன் மனித மாமிசம் சாப்பிடுகிறான் என்றாலோ கைதியாகப் பிடித்து வருபவர்களை உயிரோடு நெருப்பில் வாட்டித் தின்றாலோ அவனை ஒரு உயரமான மரத்தில் தலைகீழாகத் தொங்க விட்டு அவன் சாப்பிட்டது அனைத்தையும் வெளியே வாந்தியெடுக்குவரை தொங்க விடப்படுவான்.  மேலும் எந்த மதகுருவானவர் இந்த நர மாமிசத்தைச் சாப்பிடுவதைப் பெரிய விருந்தாக நடத்துகிறாரோ அவர் மண்டையும் உடைக்கப்படும். “ என்று கட்டளை பிறப்பித்தேன்.”

“ஓஹோ, அப்படி எனில் இப்போது அவர்கள் நர மாமிசம் உண்பதை நிறுத்தி விட்டனரா?” உத்தவன் குரலில் கேலி இருந்தது.

“இன்னும் எல்லாரும் நிறுத்தாவிட்டாலும் பலரும் நிறுத்தி விட்டனர்.  கொஞ்சம் கொஞ்சமாகத் தானே நிறுத்த முடியும்!  ஆனால் நீ நேரில் பார்த்தமாதிரியும் நடக்கிறது தான்.  இந்தக் காட்டிலேயே வெகு தூரம் சென்று அவர்கள் மனதுக்குப் பிடித்த வண்ணம் நர மாமிசம் உண்டுவிட்டு வருகிறவர்களும் உண்டு.  அவர்கள் அந்த ருசிக்குப் பழகி விட்டார்கள்.  உடனடியாக நிறுத்துவது மிகக் கடினமான ஒன்று!” என்றான் பீமன்.

“அது சரி, ஹிடும்பி உன்னைச் சாப்பிட வேண்டும் என ஆசைப்படவில்லையா?” உத்தவன் கேட்டான்.

“ஓஹோ, உத்தவா, நீ அவளை நன்கு அறியவில்லை. அவள் என்னை மிகவும் நேசிக்கிறாள். அதற்கு ஈடு, இணையே இல்லை.  ஹிடும்பனின் மண்டை ஓட்டை வெயிலில் காய வைத்திருக்கின்றனர்.  அதை எடுத்து என் இடுப்பில் கட்ட வேண்டும் என்பது அவள் எண்ணம்.  நான் ஹிடும்பனை வென்று இந்த ராக்ஷசவர்த்தத்தின் தலைவன் ஆனதுக்காக எனக்குக் கொடுக்கப்படும் விருது அது என்பது அவள் கருத்து.  என்னை மிகவும் தொந்திரவு செய்தாள்.  நான் மறுத்தேன்.  விடாமல் பிடிவாதம் பிடித்தாள்.  அந்த மண்டை ஓட்டைச் சுக்குச் சுக்காக நொறுக்கிவிடுவேன் என பயமுறுத்தினேன்.  உடனே மிகப் பரிதாபமாக அழ ஆரம்பித்துவிட்டாள்.  அவளுக்கு என்ன பயம் என்றால், அந்த மண்டை ஓடு என்னோடு உடலில் பொருத்தப்படவில்லை எனில் ஹிடும்பனின் துர் ஆவி என்னிடம் வந்து என்னை அடியோடு அழித்துவிடும் என்பது அவள் அச்சம்.  ஆகவே ஒரு விசுவாசமான மனைவியாகவே அவள் என் நலத்தைக் குறித்து கவலைப்பட்டு அழ ஆரம்பித்தாள்.  அதை என்னிடம் சொல்லவும் சொன்னாள்.”

“என்ன, ஹிடும்பனின் ஆவி உன்னை அழிக்குமா?” உத்தவன் குரலில் ஆச்சரியம் மிகுந்திருந்தது.

“அப்பனே, இவர்களின் நம்பிக்கைகளே அலாதியானவை.  உன்னால் புரிந்து கொள்ள முடியாது உத்தவா!  ஹிடும்பி அந்த மண்டை ஓட்டை நான் பத்திரமாக வைத்திருக்க வேண்டும் என விரும்பியது அவள் அண்ணனின் மேல் உள்ள பாசத்தால் அல்ல;  அந்த மண்டை ஓடு ஒரு கட்டுக்குள்ளாக வைக்கப்படாவிட்டால் ஹிடும்பனின் ஆவி மேல் உலகிலிருந்து எழுந்து வந்து என்னை அடியோடு அழித்துவிடும் என்பது அவள் எண்ணம்; நம்பிக்கை.” என்று முடித்தான் பீமன்.

“பின் நீ என்னதான் செய்தாய் அந்த மண்டை ஓட்டை?”

“நாங்கள் ஒரு சமரச உடன்படிக்கை செய்து கொண்டோம்; அதாவது கணவனும், மனைவியுமாக.  உத்தவா, அவள் ஒரு அபூர்வமான அதே சமயம் நல்ல மனைவி, உன்னிடம் நான் சொன்னேன் அல்லவா?  அது முற்றிலும் உண்மை.  மிக மிக என்னிடம் விசுவாசமாகவும் அன்புடனும், பாசத்துடனும் இருந்து வருகிறாள்.  ஆனாலும் எனக்கு ஒரு சின்னச் சந்தேகம்;  நான் எப்போவானும் உடல் நலக் கோளாறுடனோ அல்லது பலவீனமாக ஆனேன் என்றாலோ அவள் என்னை வறுத்துத் தின்று விடுவாளோ என்ற எண்ணம் இருந்தது.  என் தசையும், கொழுப்பையும் ருசிக்கும் ஆவல் அவளிடம் இருந்ததோ என எண்ணினேன்.”

“அது சரி அப்பா, அப்படி என்ன சமரச உடன்படிக்கை செய்து கொண்டாய்?  அதைச் சொல்லவே இல்லையே!”

“அவள் அந்த மண்டை ஓட்டைப் படுக்கையில் தன் தலையணைக்கு அடியில் வைத்துக்கொள்ளவேண்டும் என்றேன்.  அப்போது அந்த மண்டை ஓடு அவளுடைய முழுக் கட்டுப்பாட்டில் இருப்பதால் அவள் தமையனின் ஆவியும் இரவு, பகல் அவளுடைய கட்டுப்பாட்டில் இருக்கும் மண்டை ஓட்டிலிருந்து எழுந்து வந்து என்னைத் தாக்காது.  இல்லை எனில் எனக்குக் கெடுதல் சம்பவிக்கும். என்றேன்.  அவள் முழு மனதோடு ஒப்புக்கொண்டு விட்டாள்.”

“அத்தை குந்தியும், மற்ற நால்வரும் இதற்கெல்லாம் என்ன நினைக்கின்றனர்?  என்ன சொன்னார்கள்?”

“குந்தி தேவிக்கு, அதான் என் தாய்க்கு என்னைப் பாராட்டுவதா, இந்த ராக்ஷசர்களிடமிருந்து காப்பாற்றியதற்காக, அல்லது இப்படி ஒரு ராக்ஷசியைத் திருமணம் செய்து கொள்ள நேர்ந்ததிற்கு நொந்து கொள்வதா எனப் புரியவில்லை.  பெரிய சகோதரர் யுதிஷ்டிரருக்கோ இவை அனைத்தும் நமக்களிக்கப்பட்ட ஒரு தண்டனை;  இதைக் கடுமையான தவத்தின் மூலமே சரியாக்க இயலும் என்ற எண்ணம்.  அர்ஜுனனோ எப்போதுமே தவிப்புடன் இருந்து வருகிறான்.  இங்கே கிடைக்கும் மூங்கில்களில் இருந்து விற்களும், அம்புகளும் செய்து கொண்டிருக்கிறான்.  அவற்றை வைத்து விற் பயிற்சியும் செய்கிறான்.  ஆகாயத்தில் உயரே உயரே பறக்கும் பறவைகளுக்கு குறி வைத்து வீழ்த்துகிறான்.  இவை அனைத்தும் அவனுக்கு அலுத்துவிட்டால் இங்குள்ள கோரைப்புற்களினால் குழாய்கள் செய்கின்றான்.  வாத்தியம் போல அவற்றில் வாசித்துப் பழகுகிறான்.  இந்த ராக்ஷசர்கள் தங்களைச் சாப்பிட மாட்டார்கள் என்பது நிச்சயம் ஆனதாலோ என்னவோ அவ்வப்போது ஆடியும், பாடியும் பழகிக் கொள்கிறான். நகுலனும் சந்தோஷமாக இல்லை.  அவனும் தவிப்போடு தான் இருக்கிறான். இங்குள்ள மான்கள், முயல்கள், நாய்கள் போன்றவற்றைப் பழக்கி வருகிறான்.  அவன் அவற்றைப் பழக்கி முடிப்பதற்குள்ளாக அவை எல்லாம் இந்த ராக்ஷச ஜனங்களின் வயிற்றுக்கு உணவாகச் சென்று விடுகின்றன.  அதை அவனால் தடுக்க முடியவில்லை.  சஹாதேவன் ஒருவனே மிக புத்திசாலி.  இப்படி எல்லாம் எங்களுக்கு நடப்பதற்கு ஏதோ ஒரு முக்கியக் காரணம் இருக்கிறது என முழு மனதோடு நம்புகிறான்.  நாங்கள் இனியும் கஷ்டம் அனுபவிக்காமல் இந்த இடத்திலேயே கொஞ்ச காலம் வாழ்வதற்கு உண்டான வழியையும், எங்கள் கஷ்டங்களைத் தடுக்கும் வழியையும் நன்கு ஆலோசித்துக் கொண்டு இருக்கிறான். “

8 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

// கடைசியில் சஹாதேவன் தான் என் உதவிக்கு வந்தான். அவன் என்ன சொன்னான் தெரியுமா? “நாம் இவ்வுலகில் மற்றவர்களிடமிருந்து மறைந்து வாழ இதைவிடச் சிறந்த வழியும், இடமும் வேறு இல்லை. “ என்றான். அவன் எவ்வளவு புத்திசாலி என்பது தான் தெரியுமே உனக்கு. உடனே தாய் குந்தியும் ஒத்துக் கொண்டுவிட்டார். வேறு வழியே இல்லையே உத்தவா!”//

சஹாதேவனின் புத்திசாலித்தனம் அருமை.

>>>>>

வை.கோபாலகிருஷ்ணன் said...

//என் தாய் குந்தி, அழகான எலும்புகளால் ஆன மாலையை அணிந்த, முன் பக்கம் துருத்திய பற்களோடு கூடிய என் மிக அழகான ராக்ஷச மனைவியை நிமிர்ந்துகூடப் பார்க்க மறுத்துவிட்டார். //

அழகான ராக்ஷசியே ......
அடிமனதை வருடிறியே ...

என்ற பாடல் இந்த பீமனின் கதையிலிருந்து தான் எடுத்திருப்பார்களோ? ;)))))

தொடருங்கோ, சுவாரஸ்யமாக உள்ளது.

இராஜராஜேஸ்வரி said...

“அத்தை குந்தியும், மற்ற நால்வரும் இதற்கெல்லாம் என்ன நினைக்கின்றனர்? என்ன சொன்னார்கள்?”//

அவர்களின் தர்மசங்கடமான நிலைகளை விரிவாக பகிர்ந்திருப்பது பரிதாப்படவைக்கிறது..!

ஸ்ரீராம். said...

ஒளிந்துகொள்ள ஏதுவான இடம்...நல்ல யோசனை பீமனுக்கு...

sambasivam6geetha said...

வாங்க வைகோ சார், சஹாதேவன் சாத்திரத்தில் வல்லவனாயிற்றே!:)))

sambasivam6geetha said...

ஆமாம், எனக்கும் இந்தப் பாடல் தான் நினைவில் வந்தது.

sambasivam6geetha said...

வாங்க ராஜராஜேஸ்வரி, படித்து ரசித்தமைக்கு நன்றி.

sambasivam6geetha said...

வாங்க ஶ்ரீராம், ஆமாம், ராக்ஷசர்களோடு ஒளிந்து கொண்டால் நல்லாத் தான் இருக்கும். :))))