Sunday, August 25, 2013

கண்ணன் வந்தான் தேரினிலே!

அவர்கள் இருவரின் தாயான ரவிகா இருவரையும் தேற்ற முனைந்தாள். “ சரி, சரி, அதனால் என்ன இப்போது!  உத்தவன் சென்றான் எனில் அவனை அவன் நண்பனும் சகோதரனும் ஆன கிருஷ்ணன் அனுப்பி வைத்தான்;  அதனால் சென்றான்.  ஆனால் அதற்காக மணிமானும் தன் உயிரைப் பணயம் வைக்க முடியுமா?” என்றாள் ரவிகா. “ஆஹா, ஆஹா, அது தான் நினைத்தேன்!’ கத்தினாள் கபிலா என்பவள். “உத்தவன் அவன் சகோதரன் கிருஷ்ணன் சொன்னதால் சென்றான் என்பது சரிதான்!  தன் சகோதரனின் வேண்டுகோளை நிறைவேற்ற வேண்டித் தன் உயிரையே பணயம் வைத்திருக்கிறான் அல்லவா?  ஆனால் இங்கே???? இதோ உன் அருமை மகன் தன் இன்னுயிரைக் காக்க வேண்டித் தன் இரு சகோதரிகளின் நிலையையும், அவர்கள் உயிரையும் காக்க வேண்டும் என நினைக்கக் கூட இல்லை!”

“நீங்கள் அனைவருமே சுயநலக்காரக் கோழைகள்!” என்றாள் பிங்கலாவும் ஆத்திரம் கொப்பளிக்க.  இவர்கள் திட்டியதைக் கேட்டு மணிமான் மிக வேதனை அடைந்தான் என்பது அவன் முகத்திலேயே தெரிந்தது. “இருவரும் ஏன் தான் இவ்வளவு முட்டாளாக இருக்கின்றீர்களோ, தெரியவில்லை!” என்றான் கோபத்தோடு. “அப்படி ஒருவேளை உத்தவன் திரும்பி வரவில்லை எனில் ஓரிரு வருடங்களில் நீங்கள் இருவருமே அவனை மறந்துவிடுவீர்கள்.  உத்தவனை விடவும் அருமையான கணவன்மார் உங்களுக்குக் கிடைப்பார்கள்.”

கபிலா அவனை ஆவேசத்துடன் முறைக்கப் பிங்கலாவோ, “நாககூடத்தின் வருங்கால அரசரின் இம்மொழிகளைக் கேளீர் உலகோரே!” என்று கேலியாகக் கூறினாள்.  தாயைப் பார்த்து, “இவன் ஏற்கெனவே எங்களுக்கு வேறு மணமகன்களைத் தேடவும் ஆரம்பித்துவிட்டான்.  உத்தவன் வரப் போவதில்லை என்று நிச்சயம் செய்து கொண்டுள்ளான்.” என்றாள் சீற்றத்தோடு. ரவிகா உடனே குறுக்கிட்டு  “குழந்தாய், என் குழந்தாய்!  அமைதி கொள்வாய்.  நீயும் தான் கபிலா! அமைதி அடைவாய்! இருவருமே மிகவும் உணர்ச்சி வசப் படுகிறீர்கள்.  உத்தவன் திரும்பப் போவதில்லை என்பது நம் அனைவருக்கும் மிக நன்றாகவே தெரியும்.  அது தான் உண்மை; உறுதியும் கூட.  இப்போது உங்கள் சகோதரனுக்கு உங்கள் இருவரின் எதிர்காலம் குறித்தே கவலை!  அதற்குத் தான் இப்படி எல்லாம் பேசுகிறான்.” என்றாள்.  “நாங்கள் உங்கள் கவலையைக் குறித்தோ, நீங்கள் அனைவரும் சிந்திக்கும் எங்கள் எதிர்காலம் குறித்தோ எந்தக் கவலையும் கொள்ளவில்லை;  இதோ இரண்டு பெளர்ணமிகள் வரை காத்திருந்தோம்.  உத்தவன் வரவில்லை.   இனி உத்தவன் சென்ற வழியைத் தொடர்ந்து செல்வதே எங்கள் வேலை!” என்றாள் பிங்கலா.  அவளைத் தொடர்ந்த கபிலா, “நாங்கள் எங்களைக் கங்கையில் முழுக அடித்துக் கொள்வோம், அல்லது ராக்ஷசவர்த்தத்திற்கே சென்று எங்கள் தலைவனும், இதய நாயகனும் ஆன உத்தவனை எப்படி அந்த ராக்ஷசர்கள் உணவாக உண்டனரோ அவ்வாறே எங்களையும் சாப்பிடக் கொடுப்போம்.” என்றாள்.  ரவிகாவுக்கு வந்த கோபத்திற்கு இருவரையும் ஓங்கி ஒரு அறை கொடுத்துவிடலாமா என்றிருந்தாள்.  ஆனால் அப்போது மணிமான் குறுக்கிட்டான்.

“தாயே, நீங்கள் அமைதி அடையுங்கள்;  கவலை வேண்டாம்.  நான் தந்தையாரிடம் இந்த இருபெண்களின் நிலைமை குறித்துக் கூறியுள்ளேன்.   பாட்டனாரை இந்த இரு பெண்களின் நிலை குறித்து ஆலோசிக்கும்படிக் கேட்டுக்கொள்ளச் சொல்லி இருக்கிறேன்.  பாட்டனாருக்கும் இவர்கள் நிலை புரியும்.  ஒரு வேளை அவர் இதற்குள் ஆசாரியர் வேதவியாசரிடம் கூட இதைப் பற்றிக் கூறி இருக்கலாம்.” என்றான். பிங்கலா உடனேயே “ஓஹோ, அப்படியா?  பாட்டனாரையும், ஆசாரியரையும் எங்கள் முன் நிறுத்தி அவர்களைக் கேள்விகள் கேட்க வைத்து எங்களைக் குற்றவாளிகளாக ஆக்கப் போகிறாயா?  எங்களுடன் பேசச் சொல்லி இருக்கிறாயா? ஒரு விஷயம் தெரியுமா உனக்கு?  ஆசாரியரே நேரில் எங்களிடம் இரு பெளர்ணமிகள் முடிந்தும் உத்தவன் வரவில்லை என்றால் இந்தக் கோழைகள் நிறைந்த நாககூடத்திலிருந்து எங்களை அழைத்துச் செல்வதாக உறுதி கூறியுள்ளார்.  அதன் பின்னர் நாங்கள் எங்கள் விருப்பப்படி எங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள அவர் மிகவும் உதவி செய்வார். “

“ஆர்யகனின் இளவரசிகள் நாககூடத்தை விட்டு வேற்று நாட்டுக்கா?”  ரவிகாவால் இதை ஜீரணிக்க முடியவில்லை.  “ஆம், நாங்கள் ஆசாரியர் எங்கே அழைத்துச் செல்கிறாரோ அங்கே செல்லப் போகிறோம்.” என ஆமோதித்தாள் பிங்கலா. “எங்கே வேண்டுமானாலும் செல்வோம்;  மற்றோர் புதிய உலகுக்குக் கூட.  அங்கே சென்றால் இங்கே இருக்கிறாப்போல் கோழைகள் நிறைந்திருக்க மாட்டார்கள் அல்லவா!” என்றாள் கபிலா.  மேலும் தொடர்ந்து, “இந்த மகத்தான இளவரசனுக்கு உத்தவன் பின்னால் செல்ல மனமில்லை.  அதற்கு தைரியமும் இல்லை.  கோழைகள், கோழைகள், கோழைகள்!” என்றாள் திரும்பவும் கபிலா.  இருவரும் மீண்டும் அழ ஆரம்பிக்கவே மணிமானுக்கு என்ன செய்வது எனப் புரியவில்லை. தன்னைக் குறித்தும் தன் நிலை குறித்தும் அவனுக்குள் வெட்கமாகவும் இருந்தது.  அவன் ஏதோ தவறு செய்துவிட்டானோ!  அவன் சரியில்லையோ?  நாககூடத்தின் வருங்கால அரசன் ஆன மணிமான் என்ன செய்திருக்க வேண்டும்!  உத்தவனைச் செல்லாமல் தடுத்திருக்க வேண்டுமோ?  அல்லது உத்தவனுடன் கூடச் சென்றிருக்க வேண்டுமோ?   சரி, அதுதான் இயலவில்லை எனில் அவன் சொந்த சகோதரிகள் இருவரையும்  உத்தவனை மறக்கச் செய்ய நினைத்தால், அது கூட இயலவில்லையே அவனால்! அவனால் எதுவும் இயலவில்லை!   ஹூம், இவர்கள் அனைவரிடம் உள்ள ஏதோ  ஒன்று என்னிடம் இல்லை; என்ன அது?  புரியவில்லை. மணிமானுக்கு தர்மசங்கடமாக இருந்தது.

சில நாட்களில் ஹஸ்தினாபுரத்தில் இருந்து யாதவ வீரர்கள் கூட்டம் கூட்டமாக வர ஆரம்பித்தனர்.  இரட்டைச் சகோதரிகள் ஏனோ இதைக் கண்டு உற்சாகமும், நம்பிக்கையும் கொண்டனர்.  எல்லாருக்கும் முன்னால் கிருதவர்மன் தலைமை வகித்து பளபளக்கும் ரதங்களோடும்,   துள்ளி ஓடும் குதிரைகளோடும், மின்னலைப் போன்ற ஆயுதங்கள் தரித்த வீரர்களோடும் வந்து சேர்ந்தான்.  கிருஷ்ணன் வருவதற்கு முன்னால் வரும் பரிவாரங்கள் அவை என்பது புரிந்தது.  ஏகசக்ர தீர்த்தத்தில் இருந்து திரும்பி துவாரகை செல்ல வேண்டியவன் இங்கே வருகிறான்.  துவாரகை செல்லும் வழியில் இங்கேயும் வந்துவிட்டுச் செல்கிறான்.  நாககூடத்தில் அனைவருமே உத்தவனையும், அவனை வழிநடத்திச் சென்ற ராக்ஷசச் சிறுவனையும் மறந்துவிட்டனர்.  ஏனெனில் இத்தனை குதிரைப்படைகளும், ரதங்கள் உள்ள படைகளையும் அன்றுவரை நாககூடம் கண்டதில்லை.  ரத சாரதிகள் வெறும் சாரதிகள் அல்ல.  ரதத்தைச் செலுத்திய வண்ணம் போரிடக் கூடிய திறமை படைத்தவர்கள்.  அவர்களின் வில்லும், அம்புகளும், அம்புகள் இருக்கும் அம்புறாத்தூணியும் பார்க்கப் பார்க்க வியப்பாக இருந்தது.  எல்லாவற்றுக்கும் மேல் இவ்வளவு பிரபலமான யாதவத் தலைவர்கள் அனைவரும் நாககூடத்தின் அரசன் ஆன ஆர்யகன் கால்களில் விழுந்து வணங்கி தங்கள் அறிமுகத்தைச் செய்து கொள்வது அவர்களுக்குப் பெருமையாகவும், கெளரவமாகவும் இருந்தது.  யாதவத் தலைவன் ஆன வசுதேவனின் தாய்வழிப் பாட்டனாராக இந்த ஆர்யகன் இருந்ததால் தானே இத்தனை கெளரவம்!  அனைவர் மனதிலும் மகிழ்ச்சி பொங்கியது.

மணிமானோ மெய்ம்மறந்து, தன்னை மறந்து போய்விட்டான்.  ஆரியர்கள் தங்கள் இனத்தாரிடம் காட்டிய வீராப்பையும், அவர்களின் தொந்திரவுகளையும் குறித்து நிறையக் கேட்டிருந்த மணிமானுக்கு, அவர்களிலும் இத்தனை நல்லவர்கள், வல்லவர்கள் இருப்பது குறித்து ஆச்சரியமாகவே இருந்தது.  இவ்வளவு நட்புணர்வோடு பழகுபவர்கள் இருப்பதை அவனால் நம்பவே முடியவில்லை.   அனைவரும் விரைவில் நண்பர்கள் ஆகிவிட்டனர்.  இரட்டைச் சகோதரிகள் மனதிலும் ஒரு ஓரத்தில் நம்பிக்கை புகுந்தது.  இது கிருஷ்ணனின் படை.  அவன் வீரர்கள்.  அவனால் உத்தவன் ராக்ஷசவர்த்தம் அனுப்பப்பட்டிருக்கின்றான் எனில் அதில் ஏதோ பொருள் இருக்கிறது.  அனுப்பி வைத்த கிருஷ்ணனுக்கு அவனை மீட்டுக் கொண்டுவரத் தெரியாதா என்ன!  ஆஹா, கிருஷ்ணன் வந்தே விட்டானாமே!  எப்படி இருப்பான் அவன்?  அதோ கிருஷ்ணன்!

என்ன இவன் இத்தனை கருநீலமாக, மழைமேகம் போன்ற நிறத்தில் இருக்கிறானே!  அவன் உடலின் மஞ்சள் பட்டாடை அந்த நிறத்தை நன்றாகவே எடுத்துக் காட்டுகிறது.  அழகன் என்றால் இவனல்லவோ அழகன்!  தலையில் கிரீடத்தின் மேல் மயில்பீலியால் அலங்காரம்.   தங்கள் தனிப்பட்ட துன்பத்தையும் மறந்து கிருஷ்ணனை வரவேற்கச் சென்ற இரு இரட்டையரும் அவனைப் பார்த்ததுமே தங்களை மறந்தனர்.  வண்ண, வண்ண ஆடைகள் அணிந்து பெரிய பெரிய மணிமாலைகளை ஆபரணமாக அணிந்த நாகர்களும், நாக கன்னிகளும் அனைவருக்குமே கிருஷ்ணனைப் பார்த்ததும் உற்சாகம் கரை புரண்டது.  அனைவரும் உல்லாசமாகச் சிரித்துக் கொண்டும் ஒருவரை ஒருவர் கேலி செய்து கொண்டும் அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.  எப்போதும் சுருங்கிய முகத்தோடு காணப்படும் ஆர்யகன் முகத்தில் கூடப் புன்சிரிப்பு மலர்ந்தது.  கிருஷ்ணன் பாட்டனார் ஆர்யகனை நமஸ்கரித்துத் தன்னை, “கிருஷ்ண வாசுதேவன்” என அறிமுகம் செய்து கொண்டான்.  அவனையும், அவன் மிகவும் அடக்கமாக விநயத்தோடு கூடிய பணிவு தெரியப்  பாட்டனாரை நமஸ்கரித்ததையும் திறந்த வாய் மூடாமல் பார்த்தனர் இரு சகோதரிகளும்.  இவன் தான் உத்தவனின் நண்பன், சகோதரன், வழிகாட்டி எல்லாமுமா? பொருத்தமானவன் தான்!  இவன் அனைவர் கவனத்தையும் கவர்ந்துவிட்டான் என்பதையும் புரிந்து கொண்டனர்.  ஒரு சங்கு ஒன்று அவன் இடுப்பில் இருந்து தொங்கியது.   அவன் இடத்தோளில் வட்டமாக அதே சமயம் நிறையப் பற்களோடு கூடிய சக்கரம் போன்ற ஒரு ஆயுதம் பளபளத்தது.   அவன் சிரிப்போ, மிக மிக இனிமை;  அனைத்திலும் இனிமை.  உத்தவன் சிரிப்பை விடக் கூட இனிமையோ?  இல்லை இல்லை, உத்தவன் சிரிப்பைப் போல் இனிமை!

அனைவரும் வரவேற்பு முடிந்து அவரவர் இல்லம் திரும்புகையில் கிருஷ்ணன் தான் வந்த ரதத்தில் ஏறாமல் பாட்டனாரின் பல்லக்கு அருகே பேசிக் கொண்டே நடந்து வந்தான்.  உத்தவனின் இந்த அருமை நண்பன் நடந்துகொள்ளும் முறை அவர்கள் இருவரையும் அதிர அடித்தது எனில் அவன் இப்போது வெகு சரளமாக நடந்து கொண்டே பாட்டனாரிடம் பேசுவதும் அதிர்ச்சியாக இருந்தது.  முதல் பார்வையில் அவனைப் பார்க்கையில் எதற்கும் அஞ்சாதவனாக, உணர்வுகளை வெளிக்காட்டாதவனாக, மிகவும் மதிப்புடையவனாகக் காணப்பட்டான்.  ஆனால், போகப் போக வெகு சகஜமாக எப்போதும் பார்த்துப் பேசும் ஒருவனாக ஆகிவிட்டானே!  அதுவும் அவன் கண்கள்!  பாட்டனார் குடும்பத்தினர் அனைவரையும் ஒவ்வொருத்தராக அறிமுகம் செய்கையில், அந்தச் சிரிக்கும் கண்களால் அவன் ஒவ்வொருத்தரையும் தனித்தனியாகப் பார்த்துச் சிரித்து அறிமுகத்தை ஏற்றுக் கொண்டான்.  ஏன், இந்த இரட்டைச் சகோதரிகளை அறிமுகம் செய்கையில் கூட அவன் கண்கள் அவர்களைக் கண்டு கருணையுடன் சிரித்தன.  விரைவில் கண்ணன் சரளமாக அனைவரிடமும் பழக ஆரம்பித்துவிட்டான். அனைவரையும் பார்த்துத் தன் குறும்புச் சிரிப்புடனும், கேலிப் பேச்சுடனும் பேசிக் கொண்டு விளையாடவும் ஆரம்பித்தான்.  அவன் இதழ்களில் எப்போதுமே புன்சிரிப்புக் குடி கொண்டு இருப்பதைக் கவனித்தனர் இருவரும்.  ஆர்யகனிடம் கிருஷ்ணன் என்ன சொன்னான் என்பதே தெரியவில்லை.  ஆனால் ஆர்யகன் சிரித்த சிரிப்பை அவர்கள் வாழ்நாளில் அன்று வரை கண்டதில்லை. ஆஹா, இவன் பாட்டனாரையே சிரிக்க வைத்துவிட்டானே! நிச்சயமாக அதிசயமான மனிதன் தான்!  அற்புதமானவன் தான்!

அனைவரும் ஊர்வலமாகப் பசுபதி நாதர் குடி கொண்டிருக்கும் கோயிலுக்குச் சென்றனர்.  கிருஷ்ணன் அங்கே பசுபதிநாதரை வழிபட்டான்.  பின்னர் அரண்மனைக்குக் கிருஷ்ணன் வந்தான்.   படைத்தலைவர்கள் அனைவரும் சென்றதும்,  ஆர்யகன் குடும்பமே அவனைச் சூழ்ந்து கொண்டது.7 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

//என்ன இவன் இத்தனை கருநீலமாக, மழைமேகம் போன்ற நிறத்தில் இருக்கிறானே! அவன் உடலின் மஞ்சள் பட்டாடை அந்த நிறத்தை நன்றாகவே எடுத்துக் காட்டுகிறது. அழகன் என்றால் இவனல்லவோ அழகன்! தலையில் கிரீடத்தின் மேல் மயில்பீலியால் அலங்காரம். தங்கள் தனிப்பட்ட துன்பத்தையும் மறந்து கிருஷ்ணனை வரவேற்கச் சென்ற இரு இரட்டையரும் அவனைப் பார்த்ததுமே தங்களை மறந்தனர். //

பிறரைப்பார்த்த மாத்திரத்தில் தன்பால் மயங்கச்செய்யும் கண்ணானக் கண்ணனல்லவா ! ;)

இராஜராஜேஸ்வரி said...

ஆஹா, இவன் பாட்டனாரையே சிரிக்க வைத்துவிட்டானே! நிச்சயமாக அதிசயமான மனிதன் தான்! அற்புதமானவன் தான்!


"கண்ணன் வந்தான் தேரினிலே!"
சரியான நேரத்தில் வந்து
உற்சாகம் ஊட்டுகிறான் ..!

திண்டுக்கல் தனபாலன் said...

தொடர்கிறேன் அம்மா...

sambasivam6geetha said...

வாங்க வைகோ சார், நன்றி. நன்கு ரசித்துப் படிக்கிறதுக்கு மீண்டும் நன்றி.

sambasivam6geetha said...

வாங்க ராஜராஜேஸ்வரி, நன்றிங்க.

sambasivam6geetha said...

நன்றி டிடி.

ஸ்ரீராம். said...

உத்தவன் இருக்கும் மனதில் கண்ணனை நுழையவிடாமல் இருக்கவைக்க சகோதரிகள் பிரயத்தனப் படுகிறார்கள் போல! யாரையும் மயக்கும் கண்ணன்!

சிரித்த முகமாய் இருப்பது ஒரு வரம். எல்லோருக்கும் வாய்த்துவிடுவதில்லை அது.