Saturday, September 27, 2014

உத்கோசகம் வந்த ஊர்வலம்!

பீமன் மிகவும்  மனக்கிளர்ச்சியுடன் காணப்பட்டான்.  மணமக்கள் ஹஸ்தினாபுரம் செல்லும் ஊர்வலம் ஆரம்பித்து விட்டது.  அதன் தலை பாகத்தில் ஓர் அழகான யானை மேல் அமர்ந்த பீமனுக்கு அமரும்போதே மனம் மிகவும் உணர்ச்சி வசப்பட்டது. ஒரு மாபெரும் படையையே வென்று விட்டு நாட்டுக்குத் திரும்பும் உணர்வு அவனுள் ஏற்பட்டிருந்தது.  வெற்றி கண்ட படையை தான் வழிநடத்திச் செல்லப் போவதாகவும் அவனுக்குள் ஓர் உணர்வு.   எங்கே பார்த்தாலும் பீமன் காணப்பட்டானோ என்னும்படிக்கு பீமன் எங்கும் இருந்தான். மனம் விட்டு அனைவருடனும் மென்மையாகவும், கனிவாகவும் பேசிக் கொண்டு, களைப்புற்றிருந்தவர்களை உற்சாகப்படுத்திய வண்ணம், சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறவர்களுக்கு உதவிகள் செய்த வண்ணம், நடுவே சமையல் மேற்பார்வைகளும் பார்த்துக் கொண்டும், தன்னுடன் கூட வந்த அனைவருக்கும் எல்லாவிதமான சௌகரியங்களும் செய்து கொடுக்கப்பட்டிருக்கிறதா?  அனைவருக்கும் உணவு சரியாகப் போய்ச் சேர்கிறதா என்பதை எல்லாம் கவனித்துக் கொண்டும் அங்குமிங்கும், எங்கும் பீமன் காணப்பட்டான்.


இத்தனைக்கும் நடுவே கூடப் பயணம் செய்யும் பெண்களோடு அவ்வப்போது தன் நகைச்சுவை உணர்வைக் காட்டிப் பேசிச் சிரிப்பதிலும் பின்வாங்கவில்லை.  அந்தப் பெண்மணிகள் எவ்வளவு உயர்ந்த ஸ்தானத்தில் இருந்தாலும் சரி;  சேடிகளாக இருந்தாலும் சரி; பீமன் அதைக் குறித்துக் கவலை கொள்ளவில்லை.  தன் வார்த்தைகளால் அவர்களை முகம் சிவக்க வைத்தான்.  ஒரு சில பெண்கள் வெட்கம் தாங்க முடியாமல் அவர்கள் புடைவை முந்தானையால் முகத்தை மூடிக் கொண்டு வேறுபக்கம் திரும்பிச் சிரித்தனர்.     பீமனின் இந்த உற்சாகமான மனோபாவம் அந்த ஊர்வலத்தில் பயணம் செய்த அனைவரையும் தொற்றிக் கொண்டது.  காம்பில்யத்தில் ஆரம்பித்த அந்த ஊர்வலம், கங்கைக் கரையோடு சென்று உத்கோசகத்தில் தண்டு இறங்கியது.  அங்கே தான் அவர்கள் ஆஸ்தான குரு மற்றும் அரசியலில் ஆசானாக சுயம்வரத்துக்குச் செல்லும் முன்னர் நியமிக்கப்பட்டிருந்த தௌம்ய ரிஷியின் ஆசிரமம் இருந்தது.


கங்கைக்கரையின் இருபுறமும் வசித்த நாகர்கள் மற்றும் ஆரியர்கள் மத்தியில் வாரணாவதத்தில் இறந்து போனதாகக் கருதப்பட்ட பாண்டவர்கள் உயிருடன் இருக்கும் செய்தியும், காம்பில்யத்தில் சுயம்வரத்தில் அர்ஜுனன் கலந்து கொண்டு திரௌபதியை வென்ற நிகழ்ச்சியும், பாண்டவர்கள் ஐவரும் திரௌபதியை மணந்த செய்தியும் பரவி இருந்தமையால் அப்போது அங்கே அனைவரும் அதைக் குறித்தே பேசி ஆச்சரியப்பட்டுக் கொண்டிருந்தனர். அதோடு அவர்களுடன் கிருஷ்ண வாசுதேவன் வரும் செய்தியும் பரவியதால் மக்கள் அலை அலையாக வந்து பழங்கள், பூக்கள், பால், தேன், தேங்காய்கள் போன்றவற்றைக் கிருஷ்ணனுக்குச் சமர்ப்பித்தனர்.  அவன் கால்களில் விழுந்து ஆசிகளைப் பெற்றனர்.  அவனைக் கட்டித் தழுவி மனமாரத்  திருப்தி கொண்டனர்.பீமன் நினைத்தமாதிரியே அனைத்தும் நடந்து கொண்டிருந்தது.  ஊர்வலத்தின் முன்னிலையில் இருந்தபடியால் பலரும் அவனைத் தான் கிருஷ்ண வாசுதேவன் என நினைத்து மரியாதைகளைச் செய்ய உள்ளூரச் சிரிப்புடன் பீமன் அதை ஏற்றுக் கொள்வான்.  அவர்கள் மரியாதைகளைச் செய்து முடித்ததும், வந்திருக்கும் மக்களைப் பார்த்து இடி இடியெனச் சிரித்து அவர்கள் தவறைச் சுட்டிக்காட்டுவான் பீமன்.  தன் யானையும், தானும் செய்யும் இந்தத் தந்திரங்களை எல்லாம் ஒரு நொடிக்காகக் கூட வீணாக்காமல் அங்கே கூடி இருக்கும் கூட்டமும், மற்றும் ஊர்வலத்தில் வரும் மக்களும் இதன் மூலம் மகிழ்ச்சி அடையும்படி பார்த்துக் கொண்டான் பீமன்.


 உத்கோசகத்தில் தௌம்ய ரிஷியின் ஆசிரமம் பெரிதாக இருந்தது.  நதிக்கரையோடு பல காத தூரம் சென்றது.  பல வருடங்களாக தௌம்ய ரிஷியும், அவருடைய சீடர்களும் இங்கே ஆசிரமம் அமைத்துத் தங்கியதில் வெறும் கல்வி மட்டும் கற்றுக் கொடுக்கவில்லை.  காட்டுக்குள் வசித்து வந்த பல மக்களை ஆரியர்களின் வாழ்க்கை முறைக்கு மாற்றியும் வந்தனர். அவர்களுக்கு ஒழுக்கம், கட்டுப்பாடு ஆகியவற்றை போதித்து, திருமண நடைமுறைகள், குடும்ப வாழ்க்கை, இல்லற தர்மம் ஆகியவற்றையும் போதித்து, மத ரீதியான சடங்குகளைக் கற்றுக் கொடுத்து அவர்களை நல்வழிப் படுத்தி வந்தனர்.  இந்த ஊர்வலம் ஆசிரமம் வந்ததும் தௌம்ய ரிஷியும், சீடர்களும் வந்திருக்கும் அரச குடும்ப விருந்தினர்களுக்காகத் தங்கள் குடில்களை ஒழித்துக் கொடுத்தனர்.  மற்றவர்கள் ஆங்காங்கே கங்கைக்கரையிலும் அடுத்திருந்த மைதானத்திலும் கூடாரங்களை அமைத்துக் கொண்டு தங்கினர்.  யானைகள், குதிரைகள் ஆகியன அவற்றைப் பராமரிப்பவரின் மேற்பார்வையிலேயே விடப்பட்டன.  மாட்டு வண்டிகளில் இருந்து மாடுகள் அவிழ்க்கப்பட்டு கங்கையில் குளிப்பாட்டப்பட்டு தீவனம் போடப் பட்டு ஓய்வில் இருந்தன.  ரதங்களை ரத சாரதிகளும், மற்றவர்களும் கங்கையில் கழுவிச் சுத்தம் செய்து மீண்டும் செல்ல வேண்டிய பயணத்துக்குத் தயார் செய்தனர்.இத்தனைக்கும் பீமனின் அயராத உழைப்பும் ஒரு காரணம்.  அவனும் ஓய்வு எடுக்காமல் வேறு எவரையும் ஓய்வு எடுக்க விடாமலும் அவன் கடுமையாக உழைத்தான்.  தனக்குத் தானே ஏற்படுத்திக் கொண்ட இந்த உத்தியோகத்தில் அவன் மகிழ்வும் அடைந்தான். இவ்வளவு வேலைகளுக்கு இடையேயும், இத்தனை பேரோடு பயணம் செய்து வந்த போதும், தாமரைப்பூப் போன்ற பாதங்களுக்குச் சொந்தக்காரியான காசி ராஜகுமாரி ஜாலந்தராவை பீமனால் மறக்கவே முடியவில்லை.  அவள் அழகான முகம் கண்ணெதிரே வந்த போதெல்லாம் பீமன் முகத்தில் விளக்கேற்றினாற் போன்றதொரு பிரகாசம். அவள் அண்ணன் சுஷர்மா இவர்களுடன் தரைவழிப் பயணம் செய்ய மறுத்து கங்கையில் படகுப் பயணத்தையே விரும்பினான்.  வேறு வழியில்லாமல் பீமனும் இதை  ஒரு சவாலாக ஏற்க நேர்ந்தது.உத்கோசகத்தை  அவர்கள்  ஊர்வலம் நெருங்கியதும், பீமன் தன் அருமை யானையை ஓட்டிக் கொண்டு கங்கைக்கரையில் அதைக் குளிப்பாட்டும் சாக்கில் போய் நின்று கொண்டிருந்தான்.  சற்று நேரத்திலேயே அவன் எதிர்பார்த்தது நடந்தது.  அதைக் குறித்து அவனுக்கு மகிழ்ச்சியும் ஏற்பட்டது.  இரண்டு பெரிய படகுகள் கங்கையில் மிதந்து வந்தன.  அதில் அன்ன பக்ஷியைப் போல் அலங்கரித்திருந்த படகில் காசி ராஜகுமாரன் சுஷர்மாவும், அவனருகே அவன் சகோதரி ஜாலந்தராவும் அமர்ந்திருந்தனர்.  இரு படகுகளும் கங்கைக்கரையில் அந்தத் துறைக்கு வந்ததும், அங்கே நங்கூரமிட்டு நின்றன.  இதைப் பார்த்த பின்னால் வந்த பரிவாரங்களும் ஆங்காங்கே நின்றன.

Wednesday, September 24, 2014

பீமன் பயண ஏற்பாடுகளைச் செய்கிறான்!

இருவரும் துருபதனைப் பார்க்க வேண்டி அங்கிருந்து அகன்றதும் பீமன் சற்று நேரம் காசி ராஜகுமாரியையே பார்த்து அவள் தைரியத்தை நினைத்து வியந்து கொண்டிருந்தான். அவள் பாதங்கள் சிறியனவாயும், அழகாயும் தாமரை மொட்டுக்களைப் போலவும் காட்சி அளித்தன. தன்னை உலுக்கிக் கொண்டான் பீமன். ஆஹா, நான் எவ்வளவு பொல்லாதவன்!  இப்போது தான் திரௌபதியுடன் திருமணம் முடிந்திருக்கிறது.  அதை மறந்து விட்டு…… இன்னொரு பெண்ணைக் குறித்து நினைப்பது…….ஆஹா, அவள் பானுமதியின் தங்கையல்லவோ!  பானுமதி துரியோதனன் மனைவி. ஆஹா, அக்கா, தங்கைகளை நாங்கள் இருவரும் முறையே திருமணம் செய்து கொண்டிருந்தால் நல்ல வேடிக்கையாக இருந்திருக்கும்.  ஒரு பெருமூச்சுடன் பீமன் அங்கிருந்து நகர்ந்தான்.


தன் சகோதரர்களைப் பார்த்ததும், அவர்களிடம் துருபதன் தங்களுக்கு அளிக்கவிருக்கும் பரிசுகளைப் பற்றி பீமன் கூறினான்.  அனைவரும் மனம் நெகிழ்ந்தனர்.  70 யானைகள், நூறு ரதசாரதிகள், போர் வீரர்கள், 400 கறவைப் பசுக்கள், 200 குதிரைகள், அத்துடன் சேர்ந்து பராமரிப்புப் பணிக்கான ஊழியர்கள், மற்றும் படை வீரர்கள், தேவையான சாமக்கிரியைகள், தங்கம், வெள்ளி, ரத்தினங்களால் ஆன ஆபரணங்கள், தங்கக் கட்டிகள், வெள்ளியிலான பாத்திரங்கள்.  இன்னும் கணக்கில்லா சீர் வரிசைகள்.“மிக அதிகம், மிக அதிகம்,  ஆம் உண்மையிலேயே இவை அதிகம்.” என்றான் யுதிஷ்டிரன்.  “ஆஹா, பீமா, நீ கேட்டாயா இவற்றை எல்லாம்?”


“இல்லை, இல்லை;  நான் கேட்கவே இல்லை.” அவசரம் அவசரமாக மறுத்தான் பீமன்.  “அரசர் தான் இவற்றை எல்லாம் அளித்தே தீருவேன் எனப் பிடிவாதம் பிடித்தார்;  வேறு வழியின்றி நான் ஒத்துக் கொண்டேன்.”


“வற்புறுத்தினாரா?  உண்மையாகவா?  பீமா, நீ சொல்வதெல்லாம் உண்மைதானா?”


“அண்ணாரே, என் பெரிய அண்ணாரே!  உமக்கு என்னைப் பற்றித் தெரியாதா?  நான் பிறந்ததில் இருந்து இன்று வரை ஒரு சின்னப் பொய் கூடச் சொன்னதில்லையே!” அர்ஜுனனைப் பார்த்துக் கண்ணடித்துச் சிரித்தான் பீமன்.  “நான் சொல்வதெல்லாம் உண்மைதான்;  இல்லையென்றால் நான் சொன்னதும் அவை உண்மையாகிவிடும். என் அண்ணாவே, இப்போது புரிந்ததா?”


“அதெல்லாம் சரியப்பா!  இவ்வளவு பெரிய குழுவை வைத்துக்கொண்டு நாம் என்ன செய்யப் போகிறோம்? நமக்கு எதற்கு இவ்வளவு ஆட், படைகள்?” யுதிஷ்டிரனுக்கு என்ன முயற்சித்தும் பீமனின் விளையாட்டுத் தனத்தைப் போக்கவே முடியவில்லையே என்னும் கவலையும் அதிகம் இருந்தது.  பீமனோ இன்னும் விளையாட்டாகவே பேசினான்.


“அது என்னோட ரகசியம், அண்ணாரே!  ஹஸ்தினாபுரப் பயணத்துக்குப் பாதுகாவலனாக நீங்கள் என்னை நியமித்துவிட்டீர்கள் அல்லவா?  அத்துடன் விடுங்கள்!  சுகமான பயணத்துக்கு வேண்டிய அனைத்து ஏற்பாடுகளையும் பண்ணி வைத்துள்ளேன்.  நீங்கள் அவற்றைத் திரும்ப ஒருமுறை பார்க்கவேண்டிய அவசியமே இல்லை.”


“என்ன முடிவு செய்திருக்கிறாய் பீமா?”


“நாம் ஹஸ்தினாபுரத்துக்குச் செல்ல வேண்டிய வழியைத் தேர்ந்தெடுத்திருக்கிறேன்.  யானைகள் நம் பயணத்தில் முன்னிலை வகிக்கும்.  நான் அனைவருக்கும் முன்னால் ஒரு தலைவனாகச் செல்லப் போகிறேன்.  காலாட்படை வீரர்களோடு கால்நடைகள் வரும். அதன் பின்னர் வரும் குதிரைப்படையை நகுலனின் பொறுப்பில் விட்டிருக்கிறேன்.  அவன் அதைக் கவனித்துக் கொள்வான்.  அதன் பின்னர் அதிரதர்கள், மஹாரதர்கள் அனைவரும் அர்ஜுனனின் பொறுப்பில் வருவார்கள்.  அதன் பின்னர் உயர்ந்ததொரு ஆசனத்தில் அமர்ந்த வண்ணம் நீரும், திரௌபதியும் புதுமணத் தம்பதிகளாகத் தொடர்வீர்கள்.  உங்களோடு சித்தப்பா விதுரரும் வருவார்.  அதன் பின்னர் மற்ற அரசர்கள், இளவரசர்கள், அவர்களின் பரிவாரங்கள் பலராமர் தலைமையில் பின் தொடர்வார்கள்.  பின்புறப் படைகள் அனைத்தும் சஹாதேவன் பொறுப்பில் இருப்பார்கள்.  ஹாஹா, சஹாதேவன் மனிதப்படைக்குப் பொறுப்பேற்பதற்குப் பதிலாகச் சீர் வரிசைகளையும் மற்றப் பொருட்களையும் சுமந்து வரும் மாட்டு வண்டிகள், ஒட்டக வண்டிகள் ஆகியவற்றைக் கவனிக்கும் பொறுப்பில் இருப்பான்.”


“அது சரி, கிருஷ்ணன்?  அவன் என்னவானான்?  நீ அவனை மறந்தே விட்டாயே?”அர்ஜுனன் கேட்க, “ என்னவாயிற்று எனக்கு?” என்று கேட்ட வண்ணம் உள்ளே நுழைந்தான் கிருஷ்ணன். மஞ்சள் வண்ணப் பட்டுடுத்தி, தலையில் மயில் பீலியைச் சூடி இருந்த கிருஷ்ணன் வழக்கமான அமைதியான போக்குடன் நிதானமாகவே காணப்பட்டான்.  யுதிஷ்டிரன் அவன் பக்கம் திரும்பிப் பார்த்துப் புகார் சொல்லும் தோரணையில், “கோவிந்தா, பீமனை இந்தப் பயணத்தை ஏற்பாடு செய்யும்படி சொன்னேன்.  அவன் துருபதனிடம் போய்க் கொள்ளை அடித்துக் கொண்டு வந்திருக்கிறான்.  துருபதனின் படை வீரர்களில் பாதிக்கும் மேல் நம்முடன் வருகின்றனர்.  ஆனால் உன்னை மறந்துவிட்டான் பார்!”


ஆகாயத்தை நோக்கி இரு கைகளையும் தூக்கிக் கும்பிட்ட பீமன், “மஹாதேவா, மஹாதேவா, இந்த மக்களின் நன்றி கெட்டதனத்துக்கு ஒரு எல்லையில்லாமல் போய்விட்டது.  என் மூத்த அண்ணா உரிமையுடன் இட்ட கட்டளையை மதித்து நான் கீழ்ப்படிந்தேன்.  எல்லா ஏற்பாடுகளையும் மிக நன்றாகச் செய்திருக்கிறேன்.  ஆனால் எல்லாவற்றையும் செய்வதில் என் நேரத்தை நான் வீணாக்கிவிட்டேனோ?  கிருஷ்ணா, இதோ நீயே பார்க்கிறாயே!  என் மேல் எப்படிக்குற்றம் சாட்டுகின்றனர் என்பதைப் பார்!” எனக் கிருஷ்ணன் பக்கம் திரும்பிக் குற்றம் சாட்டும் தொனியில் கூறி முடித்தான்.


“ஆனால் நீ கிருஷ்ணனுக்கு எங்கேயும் இடம் ஒதுக்கவே இல்லையே அப்பா!” அர்ஜுனன் மீண்டும் குறை கூறினான்.  “என்னை மறந்துவிட்டானா?  ஆஹா, அரசே, வ்ருகோதரரே, இது என்ன?  நீர் என்ன செய்துவிட்டீர்?”  கிருஷ்ணன் பீமனைப் பார்த்துப் புன்னகையுடன் வினவினான்.


“ஆஹா, வ்ருகோதரனா மறப்பவன்?  அவன் யாரையும் மறக்கவே இல்லை.  அதிலும் கோபியர் கொஞ்சம் ரமணனாகிய கோபியரின் உள்ளத்தில் குடி இருப்பவன் ஆன கோவிந்தனையா மறப்பேன்?  ஒருக்காலும் இல்லை.  நான் உனக்கு ஏற்றதொரு நல்ல இடம் கொடுத்திருக்கிறேன் கோவிந்தா!  அரசர்களுக்கும், ஒட்டகங்களுக்கும் இடையில் நீ அம்மா குந்தியுடன் ஒரே ரதத்தில் வருகிறாய்.   ஏனெனில் தனித்து விடப்பட்டால் அம்மாவால் தாங்க முடியாது.  நீ ஒருத்தன் தான் அவளோடு பயணம் செய்ய உகந்தவன்.  அவள் சகோதரர்களைப் பற்றிக் கூறிக்கொண்டு வா!  ஆனந்தமாகக் கேட்டுக் கொண்டே பயணம் செய்வாள்.  எங்களோடு பயணம் செய்து, செய்து அவளுக்கு அலுத்துவிட்டது.  போதும், போதுமென்றாகி விட்டது.” என்றான் பீமன்.


“அதெல்லாம் சரி அப்பா!  ஆனால் ஏன் கடைசியில் போக வேண்டும்? அரசர்களுக்கு முன்னால் கம்பீரமாக ஒரு தலைவனைப் போல் வரவேண்டியவன் கிருஷ்ணன்!” அர்ஜுனன் விடாமல் கேட்டான்.


ஆனால் கிருஷ்ணனோ, “பீமன் சொல்வதே சரியென எனக்குப் படுகிறது.  நானோ ஒரு மாட்டிடையன்.  கால்நடைகளைக் கவனித்துக்கொண்டே பின்னாலேயே வந்துவிடுவேன்.”  என்றான்.


“உன்னை நீயே மட்டம் தட்டிக் கொள்ளாதே கிருஷ்ணா!  நான் உன்னைக் கடைசியில் வரச் சொன்னது உன் நன்மைக்காகவே அல்ல.  எல்லாம் என் நன்மைக்குத் தான்.”  என்றான் பீமன்.


“உன் நன்மைக்கா?” ஆச்சரியத்துடன் கேட்டான் யுதிஷ்டிரன்.  “ஆம், என் நன்மைக்குத் தான்.  ஏற்கெனவே ஆர்யவர்த்தம் முழுவதும் இந்தச் செய்தி போய் விட்டது.  என்ன தெரியுமா?  அதிசயங்களை நிகழ்த்தும் கிருஷ்ண வாசுதேவன், பாண்டவர்கள் ஐவரோடு சேர்ந்து ஹஸ்தினாபுரம் செல்கிறான் என்னும் செய்தி தான்.  வழியெங்கும் மக்கள் வெள்ளமாகக் குவிந்து கிருஷ்ணனைக் காணவேண்டித் தவிப்பார்கள்.  நம் எல்லோருக்கும் முன்னால் முதலில் கிருஷ்ணனை வைத்தோமானால் மக்கள் அனைவரும் கிருஷ்ணனைப் பார்த்து நமஸ்கரிப்பதும், கட்டி அணைப்பதும், அவனோடு பேச வருவதுமாக இருப்பார்கள்.  நம்மை எல்லாம் திரும்பிக் கூடப் பார்க்க மாட்டார்கள்.  இப்போது என்ன நடக்கும் என யோசித்துப் பார்!  அவர்கள் அனைவரும் முதலில் பார்க்கப் போவது என்னைத் தான்.  என்னைப் பார்த்துக் கிருஷ்ணன் என நினைக்கப் போகின்றனர்.  கிருஷ்ணனுக்குக் கிடைக்கவிருக்கும் மாலைகள், தேங்காய்கள் அனைத்தையும் எனக்குக் கொடுக்காவிட்டாலும் பாதியாவது கிடைக்கும்.  அதுக்கப்புறம் புதுமணத்தம்பதிகளுக்கு மிச்சத்தைக் கொடுப்பார்கள்.  வயதான குந்தியுடன் வரும் கிருஷ்ணனைக் கண்டுபிடிப்பதற்குள்ளாக நம் ஒவ்வொருத்தரையும் பார்த்துப் பாராட்டியே ஆகவேண்டும் அவர்கள் அனைவரும். “ பீமன் இளித்தான்.


“இது ரொம்ப மோசமாக இருக்கிறதே! எனக்கு இதெல்லாம் வேண்டாம்.  மக்களின் பக்திபூர்வமான இந்த மரியாதைகள் எல்லாம் கிருஷ்ணனுக்கு மட்டுமே உரியது. உனக்கில்லை.” அர்ஜுனன் கூறினான்.


“ம்ஹூம், வேறே வழியே இல்லையப்பா.  இந்த ஒரு வழியில் தான் என்னால் மக்களின் பக்திபூர்வமான மரியாதைகளைப் பெற முடியும்.  இல்லைனா என்னையா வந்து அனைவரும் பார்க்கப் போகின்றனர்?  கிருஷ்ணன் சிரித்தான்.  “அர்ஜுனா, பீமன் சரியாகவே சொல்கிறான்.  மக்கள் முதலில் தங்கள் மரியாதைகளை பீமனுக்கும், பிறகு உனக்கும் செலுத்தட்டும்.  அதன் பின்னர் புதுமணத் தம்பதிகளுக்கு.  நான் தான் எப்போதுமே சொல்வேனே!  பீமனைப் போல் புத்திசாலிகள் கிடையாது என!  அது சரிதானே பீமா?”  கிருஷ்ணன் கேட்டான். “என்னைக் குறித்தும் என் புத்திசாலித்தனம் குறித்தும் எனக்கு எவ்விதச் சந்தேகமும் இல்லை.  ஆனால் உங்களுக்கெல்லாம் தான் அதில் சந்தேகம் இருக்கிறது.  அதனால் தான் ஒவ்வொரு முறையும் என் அண்ணார் கஷ்டங்களில் மாட்டிக்கொள்ளும்போதெல்லாம் நான் வரைத் தப்புவித்து இழுத்துக் கொண்டு வந்து சேர்க்க வேண்டியுள்ளது.”

Saturday, September 20, 2014

துருபதனின் ஒப்புதல்! திரௌபதியின் குழப்பம்!

“ஆஹா, அருமை மாமனாரே, இதை மட்டும் உங்கள் பெண்ணின் காதில் போட்டுவிடாதீர்கள். அவள் என்னை ஒரு வளர்ந்த சிறுவன் என்றே நினைத்துக் கொண்டிருக்கிறாள்.  சரி, சரி, இப்போது அனைத்தும் முடிவாகிவிட்டது என நான் எண்ணுகிறேன். எங்களால் எவ்வளவு பொருட்களைக் கொண்டு செல்ல முடியும் என நீங்கள் நினைக்கிறீர்களோ அத்தனை பொருட்களையும் எடுத்துச் செல்லும்படி நீங்கள் எங்களை வற்புறுத்துவீர்கள் என எதிர்பார்க்கிறேன்.  அப்போது தான் துரியோதனன் பொறாமையில் வெடித்துச் செத்துப் போவான்.”


“அது சரி, ஆனால் ஏன் வற்புறுத்த வேண்டும்?  நான் சந்தோஷமாகவே முழு மனதுடன் உங்களுக்கு வேண்டிய சீர் வரிசைகளைத் தருவேனே!”


“ம்ஹூம், சரியில்லை ஐயா.  நீங்கள் எங்களை வற்புறுத்த வேண்டும்.  அப்போது தான் நான் என் பெரிய அண்ணனிடம் சத்தியம் செய்ய முடியும். நான் எதுவுமே உங்களைக் கேட்கவில்லை;  நீங்களாக எல்லாவற்றையும் கொடுக்கிறீர்கள் என்று நான் சொல்வதை அவர் நம்பவேண்டும் அல்லவா? இல்லை என்றால் எங்களைப் போன்ற துறவிகள், உங்களிடமிருந்து பொருட்களைப் பெற்றுக் கொள்வது ஏற்கக் கூடியது அல்லவே!”


“ஆஹா, மிகவும் புத்திசாலித்தனமாக யோசிக்கிறீர் பீமசேனரே!  ஒரு விதத்தில் நீங்கள் சொல்வதும் சரியே.  நான் த்ருஷ்டத்யும்னனிடம் சொல்லி உங்களுக்குத் தேவையானவற்றைக் கொடுக்கும்படி ஏற்பாடுகள் செய்யச் சொல்லுகிறேன்.  ஆனால் என் படைவீரர்கள்?  தயவு செய்து அவர்களைப் பிரித்துவிடாதீர்கள்! சின்னாபின்னமாகிவிடும்.”


“ஆஹா, பிரபுவே, நான் உங்கள் பக்கம் அன்றோ இருக்கிறேன்!  இத்தகைய சிறிய விஷயங்களில் உங்கள் கவனத்தைச் செலுத்தாதீர்கள். அப்படி உங்கள் படை வீரர்கள் சிதறினால், உடனே ராக்ஷச அரசன் வ்ருகோதரனை அழையுங்கள்.  அவன் வந்து படை வீரர்களை ஒன்றாக்கிக் கொடுப்பான்.”துருபதன் நிறைந்த மன மகிழ்ச்சியுடன் மீண்டும் தன் நிலையை மறந்தவனாக பீமனின் முதுகில் ஓங்கித் தட்டி உற்சாகப்படுத்தினான்.   பீமன் முழு மனநிறைவோடு அந்த அறையிலிருந்து கிளம்பினான்.  அப்போது திரௌபதி இன்னொரு அரசகுமாரியுடன் துருபதனைப் பார்த்து தன் வணக்கங்களைத் தெரிவிக்க வந்து கொண்டிருந்தாள்.  அந்த அரசகுமாரி யாரென பீமனுக்குத் தெரியவில்லை.  ஆனாலும் தன் இரு கைகளையும் அகல விரித்து அவர்கள் மேலே நடப்பதிலிருந்து அவர்களைத் தடுத்தான்.  திரௌபதிக்குக் குழப்பமாக இருந்தது.  பாஞ்சால நாட்டில் இம்மாதிரியான விளையாட்டுத் தனமான நடத்தைகள் எல்லாம் முற்றிலும் புதியவை.  அவள் அறிந்திராதவை.


அதிலும் அரண்மனையின் முக்கியக் காரியஸ்தரும், இன்னும் அரண்மனை ஊழியர்களும் புடை சூழ வருகையில் இப்படி நடந்து கொள்வதை எவரும் எதிர்பார்க்கவில்லை.  என்றாலும் ஊழியர்கள் தங்கள் நிலையை மாற்றாமல் முக பாவத்தை மாற்றாமல் இருக்க முயன்று தோற்றனர்.


“எங்களைச் செல்ல விடுங்கள், ஐயா!” திரௌபதி கெஞ்சும் குரலில் கூறியவள், “தந்தை எங்களை எதிர்பார்த்துக் காத்திருப்பார்.” என்றாள்.


“ஓஹோ, அதெல்லாம் கவலைப்படாதே!  இப்போது தான் அவர் இந்த அருமை மருமகன் குறித்து அறிந்தார்.  அவர் முழுக்க முழுக்க என்னைப் பாராட்டிக் கொண்டிருந்தார்.  இப்போதும் அதே மனநிலையிலேயே இருப்பார்.”  இதைக் கேட்ட திரௌபதி கூட வந்த ராஜகுமாரிக்குச் சிரிப்பை அடக்க முடியாமல் போகவே அவள் கலகலவெனச் சிரித்தாள். பீமன் அவளையே பார்த்தான். அவன் கண்கள் வியப்பில் விரிந்தன.  சிவந்த நிறமுடைய பதினெட்டு வயது மதிக்கத் தக்கதொரு இளமங்கையை அவன் கண்டான்.  உடல் சிறு கூடாக இருந்தாலும் வடிவமாக இருந்தாள். அவள் கண்களும், உதடுகளும் தனியான நிறம் பெற்றுக் காட்சி அளித்தன.  திரௌபதியின் குழப்பத்தை ரசித்தவளாக, பீமனைப் பாராட்டும் நோக்கோடு பார்த்த வண்ணம் நின்றிருந்தாள். பீமன், தன் மனைவியைப் பார்த்து, “பாஞ்சால இளவரசியே, இந்தப் பெண்மணி யார்? “ என்று கேட்டான்.திரௌபதி, “இவள் பெயர் ஜாலந்தரி.  காசி தேசத்து இளவரசி.  தந்தையைச் சந்தித்துத் தன் நமஸ்காரங்களைத் தெரிவிக்க விரும்புகிறாள்.” என்றாள்.


பீமன் அவளைப் பார்த்து, “நான் உங்களை இங்கே கண்டதில்லை.  எப்போது வந்தீர்கள்?” என்று புன்னகையோடு கேட்டான்.  காசி ராஜகுமாரி அதற்கு, “ நான் என் சகோதரன் சுஷர்மாவுடன் சுயம்வரத்தில் கலந்து கொள்ள வந்தேன்.”  என்றாள்.  “இவர்களும் நம்முடன் ஹஸ்தினாபுரம் வருகின்றனர்.  அவர்கள் ஓர் புண்ணிய யாத்திரைக்குக் குருக்ஷ்க்ஷேத்திரம் செல்லும் வழியில் அங்கேயும் வருகின்றனர்.” என்றாள் திரௌபதி.


“ஓ, அப்படியா?  அப்போது நம்முடன் தான் இவர்களும் வருகின்றனரா?” என்று பீமன் தனக்குள்ளே ரசிக்கும் தோரணையில் கூறினான்.  “இல்லை, இல்லை, நாங்கள் படகில் பயணம் செய்யப் போகிறோம்.”  படகுப் பயணத்தை ஆவலுடன் எதிர்பார்க்கும் தொனியில் காசி ராஜகுமாரி கூறினாள். அதை அவள் கூறிய தொனியில் சிலிர்ப்போடு கூடிய மகிழ்ச்சியும் தெரிந்தது.  “ஹஸ்தினாபுரத்தில் தங்கப் போகின்றீர்களா?” என்று பீமன் அவளிடம் கேட்டான்.  “ம்ம்ம் சில நாட்கள் தங்குவார்கள் என நினைக்கிறேன்.  உங்களுக்குத் தெரியுமா?  இவள் துரியோதனன் மனைவி பானுமதியின் சகோதரி. “ என்றாள்  திரௌபதி.


பீமனுக்கு இந்த விஷயம் புதிதாகவும் ஆர்வமூட்டுவதாகவும் இருந்தது.  “திரௌபதி, இவர்களை நம்முடன் வரும்படி சொல்லேன்!” என்று அவளிடம் கேட்டான்.  திரௌபதி பீமனைக் கொஞ்சம் சந்தேகத்துடன் பார்த்தாள்.  ஆனால் காசி ராஜகுமாரியோ, “இல்லை, இல்லை, என் சகோதரன் படகுப் பயணத்தையே விரும்புகிறான்.” என்றாள்.  “ஓஹோ, உங்கள் தமையனார் படகுப் பயணத்தையே விரும்புகிறாரா? மாறாக எங்களுடன் பயணம் செய்தால் அது துரியோதனனை அவமதிக்கிறாப்போல் ஆகிவிடும் இல்லையா? “பீமன் வாய்விட்டுச் சிரித்தான். “ம்ம்ம்ம் கங்கா மாதா அனைவரையும் தன்னைக் கடந்து செல்ல இடம் அளிப்பாள், பார்க்கலாம்.” என்ற பீமன் மூளையில் ஏதோ புதியதோர் எண்ணம் தோன்றியது.  அவன் கண்கள் பளிச்சிட, “பார்க்கலாம்!” என்று மீண்டும் உள்ளூரச் சிரித்த வண்ணம் கூறினான்.


“ஓ, நீங்கள் தான் ராக்ஷச அரசர் வ்ருகோதரனா?  நிஜமாகவே ராக்ஷசர்களின் உலகை நீங்கள் ஆண்டீர்களா?” காசி ராஜகுமாரி அவனை நேருக்கு நேர் பார்த்து தைரியமாகக் கேட்டாள்.  “ஓ, நான் தான் அது!” பணிவோடு சொன்னான் பீமன்.  “நீங்களும் மனிதர்களை வெட்டிச் சாப்பிடுவீர்களா?” பயம் கலந்த ஆச்சரியத்தோடு காசி ராஜகுமாரி கேட்டாள்.  பீமன் ஒரு ராக்ஷசன் போல் தன் கண்களை உருட்டி விழித்த வண்ணம் நாக்கையும் நீட்டிக் கொண்டு, “நான் எப்போதும் அழகிய பெண்களை, குறிப்பாக இளவரசிகளை என் இரவு உணவாக உண்பேன்.” என்றான்.  காசி ராஜகுமாரி சந்தோஷத்தில் “க்ரீச்சி”ட்டுக் கொண்டு குதித்தாள்.  அரண்மனைக் காரியஸ்தருக்கும் மற்ற ஊழியர்களுக்கும் கூடச் சிரிப்பை அடக்க முடியவில்லை.  திரௌபதி அங்கிருப்பதையும் மறந்து அவர்களும் சிரித்துவிட்டனர்.


திரௌபதி தன் கைகளை உயர்த்தி அதை அடக்கினாள்.  பீமனைப் பார்த்து, “பிரபுவே, பிரபுவே, தந்தையின் காதுகளில் விழுந்துவிடப் போகிறது. “ என்று இறைஞ்சினாள்.  தந்தையின் அறைப்பக்கம் தன் திருஷ்டியைத் திருப்பினாள். தன் தந்தை அறையின் உள்ளே சிம்மாதனத்தில் அமர்ந்திருப்பார் என அவள் நினைத்திருந்தாள்.  ஆனால் குழப்பத்தில் துருபதன் அறை வாசலிலேயே நின்ற வண்ணம் பீமனின் பேச்சுக்களைக் கேட்டு ரசித்துக் கொண்டிருந்ததை அவளால் உடனே கவனிக்க முடியவில்லை.  பின்னர் கூர்ந்து பார்த்துக் கண்டுபிடித்தவள், “ஆஹா, அதோ தந்தையே நிற்கிறாரே!” என்று கலவரத்துடன் கூற திரும்பிப் பார்த்த பீமன் துருபதனைப் பார்த்துச் சிரித்த வண்ணம் இரு அரசகுமாரிகளையும் அங்கிருந்து செல்ல வழி விட்டு நின்றான்.

Thursday, September 18, 2014

பீமனின் ஆராய்ச்சி!

“ஓஹோ, அப்படியா விஷயம்?  அவை உமக்குக் கிடைக்கவில்லை எனில்?”


“சாத்தியமே இல்லை.  மக்கள் கொடுக்கும் அனைத்தையும்  நான் ஏற்கவேண்டும் என்றே அவர்கள் வற்புறுத்துகின்றனர்.  நீங்களும் அவ்வாறே வற்புறுத்துவீர்கள்;  அதிலும் இந்த ஹஸ்தினாபுரப் பயணத்தில் என்ன பணயம் காத்திருக்கிறது உங்களுக்கு எனத் தெரிய வந்தால் விட மாட்டீர்கள்!”


“என்னிடம் பணயமா?” சுற்றி வளைத்து பீமன் கேட்க விரும்புவதைப் புரிந்து கொண்ட துருபதனுக்குச் சிரிப்பை அடக்க முடியவில்லை.  நீங்கள் ஒரு பெரிய மஹாராஜா என்னும் உங்களைக் குறித்த நன்மதிப்பே இப்போது பணயம் வைக்கப்பட்டிருக்கிறதாக்கும்.  நான் தான் அதைக் கவனித்துச் சரி செய்ய வேண்டும்.”  இதைச் சொன்ன பீமன் இப்போது ஒரு வயதானவன் கூறும் தீர்ப்பைப் போலத் தன் கருத்தை மாறுபட்ட தொனியில் சொல்ல ஆரம்பித்தான். “பிரபுவே, உங்களைக் குறித்து என்ன சொல்வார்கள், தெரியுமா? ஒரு பெரிய மஹாராஜா, செல்வத்தில் செழித்தவன், மிகப் பெருந்தன்மையுள்ளவன், ஒரு நல்ல தந்தை, துரோணருக்கு எதிரியாகச் சிறப்புப் பெற்றவன். இப்போது இந்த அரசன், பாண்டவர்கள் ஐவரின் மாமனார். அதிலும் ஹஸ்தினாபுர  சாம்ராஜ்யத்தின் வருங்காலச் சக்கரவர்த்திக்கு மாமனார்.  இப்படிப் பெருமைகள் நிறைந்தவன் தன் மருமகன்கள் தங்களோடு யானைகள், குதிரைகள், ரதங்கள் ஆகியவற்றை அதிக எண்ணிக்கையில் எடுத்துச் செல்லும்படி அவர்களை வற்புறுத்தவில்லையாமே! ஹூம், இப்படியும் ஒரு கஞ்சமாஹாப் பிரபு!”


துருபதன் வாய்விட்டு மனம் விட்டுச் சிரித்தான். “நீங்கள் மிகவும் கெட்டிக்காரர், பீமசேனரே! அதோடு தைரியமும் நிரம்பியவர்.”


“அதெல்லாம் தைரியம் இல்லை பிரபுவே!  நான் ரொம்பவே அடக்கமானவனாக்கும்.  உங்களிடம் மட்டும் தான் இப்படிப் பேசுகிறேன்.  ஏனெனில் உங்கள் நன்மதிப்பை நன்கு அறிந்திருக்கிறேன்.  இத்தகைய பெருமை மிகவும் அபூர்வமாகவே இருக்கும் என்பதால். “


“வ்ருகோதரா, புதிர் போட்டுப் பேசாதீர்!  உங்களுக்கு என்ன வேண்டும் என்பதை வெளிப்படையாக என்னிடம் சொல்லுங்கள்.” பீமன் பேசும் முறையை துருபதன் மிகவும் ரசித்தான்.  “ஆஹா, பிரபுவே, எங்கள் அண்ணா உங்களை எதுவுமே கேட்கக் கூடாது எனச் சொல்லி இருப்பதாக ஏற்கெனவே கூறினேன் அல்லவா? நீங்களே உங்கள் மருமகன்களுக்கு என்ன கொடுக்க வேண்டும்; எதைக் கொடுக்கலாம்;  எவை சிறப்பானவை என்பதை முடிவு செய்யுங்கள்.  உங்கள் மருமகன்கள் போட்டியில் வென்று சிறப்பான பரிசுகளைப் பெற்று ஒரு வெற்றியாளராகப் போனால் நல்லதா?  அல்லது திருதராஷ்டிரனின் கைச் சோற்றை எதிர்பார்த்துக் கொண்டு அவருக்கும் அவர் பிள்ளைகளுக்கும் அடிமையாகச் செல்வதா என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள் மன்னா!”


துருபதன் மீண்டும் வாய்விட்டுச் சிரித்தான். “யார் உங்களுக்கு இவ்வளவு அழகாகப் பேசச் சொல்லிக் கொடுத்தது?” என்றும் கேட்டான்.  “கற்றுக் கொடுத்தார்களா?  மஹாதேவா!  யாருமே எனக்கு எதுவுமே கற்றுக் கொடுக்கவில்லை.  அதிலும் பேசக் கற்றுக் கொடுக்கவில்லை.  இது என்னோடு உடன் பிறந்த கலை மன்னா!  இறைவன் அளித்த பரிசு.  உங்களுடைய மருமகனாக, இந்த ஹஸ்தினாபுரப் பயணத்தை நான் தலைமை தாங்கிச் செல்கையில் அங்கே ஹஸ்தினாபுரத்தில் துரியோதனனின் கண்கள் பொறாமையால் சிவக்க வேண்டும்.  மனம் கொதிப்பில் வெந்து போக வேண்டும்.”


மீண்டும் சிரித்த துருபதன், “ சரி, சரி, அப்படியே ஆகட்டும்,  உம் வழிக்கே நான் வருகிறேன்.  நீர் என் நிலையில் இருந்தீரானால், அதாவது நீர் மாமனாராக இருந்தாயெனில் உம்  மருமகன்களுக்கு என்ன பரிசுகளை அளிப்பீர்?”


“நான்  அதை  என் மனதில் யோசித்து அறிந்து கொள்ள வேண்டும்.  பிரபுவே, உங்களுக்கு மூன்று மகன்களும், ஐந்து மருமகன்களும் உள்ளனர்.  உங்கள் இடத்தில் நான் இருந்தால்  ஒருவேளை இந்த சாம்ராஜ்யத்தை அனைவருக்கும் சமமாகப் பிரித்துக் கொடுத்துவிடுவேன்.  ஆனால் இந்த வழி உங்களுக்குப் பொருந்தாது என்பதையும் அறிவேன்.   ஏனெனில் உங்கள் மகன்கள் மூவரும் உங்களைப் “புத்” என்னும் நரகத்திலிருந்து மீட்பவர்கள்; அதே சமயம் உங்கள் மருமகன்களான நாங்கள் உங்களை நரகத்தில் தள்ளினாலும் தள்ளுவோம். “ ஏதோ ஞானம் பெற்றவனைப் போல, “சும்மாவா சொன்னார்கள்; ஒரு மருமகன் பத்தாவது கிரஹத்திற்குச் சமம் என!  கபடும், வஞ்சனையும் நிறைந்தவர்களும் கூட!”


“மஹாதேவா! நீர் ஓர் அற்புதமான மருமகன். உங்கள் செல்வாக்கில் எவ்வளவு கபடம், சூது உள்ளது என்பதை  எனக்குச் சொல்லுங்கள்!” துருபதனும் இப்போது இந்த வேடிக்கைப் பேச்சில் முழு மனதாகக் கலந்து கொண்டான்.  “நான் நன்மைகளை மட்டுமே கொடுக்கும் ஒரு கிரஹம், பிரபுவே.  அதனால் தான் உங்கள் மகள் ஹஸ்தினாபுரத்தில் நுழையும்போது, இந்த சாம்ராஜ்யத்தின் வருங்காலப் பட்டமஹிஷி வந்து விட்டாள் என்பதை துரியோதனன் புரிந்து கொள்ளவேண்டும் . அது தான் என் நோக்கம்.” என்று எவரையும் சுட்டாமல் பொதுவாகச் சொன்னான் பீமன்.


“ஆஹா, நீர் எப்போதும் துரியோதனன் என்ன நினைப்பான் என்னும் எண்ணத்திலேயே இருக்கிறீர் போலும்!”


“ஆம், ஐயா, உங்களுக்கு என் அருமையான, அன்பான சகோதரனைக் குறித்து எதுவும் தெரியாது.  நாம் அனைவருமே எப்படிக் காற்றைச் சுவாசிக்கிறோமோ அப்படியே அவர் எங்களிடம் உள்ள பொறாமையைச் சுவாசித்துக் கொண்டு அதிலேயே வாழ்ந்து வருகிறார்.  ஒரு சமயம் நான் கூட நினைத்தேன். என் ராக்ஷசி மனைவி ஹிடும்பியை ஹஸ்தினாபுரம் அழைத்து வந்துவிடலாமோ எனத் தோன்றியது. அவளைப் பார்த்தாலே துரியோதனன் பொறாமையில் வெந்து சாம்பலாகிவிடுவான்.  ஏனெனில் அவன் என்னுடன் எத்தனையோ போட்டிகளில் போட்டி போட்டிருக்கிறான்.  எத்தனையோ விஷயங்களில் போட்டி போடுவான்.  ஆனால் ஒரு ராக்ஷசியைக் கல்யாணம் செய்து கொள்வது குறித்து அவனால் நினைத்துக் கூடப் பார்க்க முடியாது.  அவளை வைத்துக் கொண்டு என்ன செய்வது என அவன் யோசித்து முடிப்பதற்குள்ளாக அவள் அவனைக் கொன்று தின்று விடுவாள்.” சர்வ அலட்சியமாகச் சொன்னான் பீமன்,


“ஆஹா, அப்படி என்றால் ஹிடும்பியை ஒரு போதும் ஹஸ்தினாபுரம் அழைத்து வந்துவிடாதீர் !  என் அருமை மகள் கிருஷ்ணா அந்த அதிர்ச்சியிலேயே உயிரை விட்டுவிடப் போகிறாள்.” அடக்க முடியாமல் சிரித்த வண்ணம் துருபதன் இதைக் கூறினான்.“மன்னா, உங்களுக்குப் பெண்களைக் குறித்து நன்கு தெரியும் அல்லவா? ஆ, அவர்கள் எப்போதும் நம்மை மதிக்கவேண்டும்;  நம்மிடம் ஒரு மதிப்பு இருக்க வேண்டும்.  ஆகவே இப்படி ஏதானும் ஒன்றை நாம் நம் கையில் எப்போதும் தயாராக வைத்திருக்க வேண்டும்.  அப்போது தான் இந்தப் பெண்கள் நம்மை மதிப்பார்கள். லக்ஷியம் செய்வார்கள். உங்கள் மகள் மட்டும் என்னிடம் சரியாக நடந்து கொள்ளவில்லை எனில் நான் ஹிடும்பியைக் கொண்டு வந்துவிடுவேன்.”


தன்னுடைய கம்பீரத்தையும் வழக்கமான கடுகடுப்பான போக்கையை விட்டுத் தன்னை மறந்த நிலையில் துருபதன் பீமன் முதுகில் விளையாட்டாக ஓங்கித் தட்டினான்.  “பொல்லாத மனிதன்!  பெண்களைக் குறித்து அலசி ஆராய்ந்து அறிந்து கொண்டிருக்கிறீர் போல் தெரிகிறதே!”  என்றான்

Sunday, September 14, 2014

பீமனின் விருப்பம்!

பீமசேனன், தன் இதழ்களில் ஒரு போக்கிரித்தனமான சிரிப்புடன் தனக்காக துருபதன் காத்திருந்த அறைக்குள் நுழைந்தான்.  அந்த அறை கங்கையைப் பார்த்து சாளரம் அமைத்துக் கட்டப்பட்டிருந்தது.  குளிர்ந்த காற்று அந்தச் சாளரம் வழியாகவும் அறையின் வாயில் வழியாகவும் வீசியது. பீமன்   பயில்வானை விட அதிகம் பருத்திருந்த  தன்னுடைய உடலுக்குச் சற்றும் பொருந்தாததொரு சுறுசுறுப்போடு அத்தகைய பெரிய உடலைக் குனிய வைத்து துருபதனுக்கு சாஷ்டாங்க நமஸ்காரம் பண்ணினான்.  தன் முகம் சந்தோஷத்தில் மலர்ந்திருக்க, துருபதனுக்கு எதிரில் இருந்த ஆசனத்தில் அமர வைக்கப்பட்டான் பீமன்.  “என் ஆசிகள், பீமசேனரே! நீங்கள் சந்தோஷமாக இருக்கிறீர்களா?” எப்போதுமே கொஞ்சம் கடுகடுப்பாகவே முகத்தை வைத்திருக்கும் துருபதனின் முகத்திலும் பீமன் முகத்து சந்தோஷத்தைப் பார்த்ததும் மெல்லிய புன்முறுவல் தோன்றியது.  ஏற்கெனவே பீமனின் நகைச்சுவை உணர்வைக் கடந்து சென்ற பதினைந்து நாட்களில் கவனித்திருந்தான்.


“உங்களைச் சந்தித்ததில் மிகவும் சந்தோஷம், பிரபுவே! நான் உங்களுக்கு ஒரு முக்கியமான அவசியமான விஷயத்தைத் தெரிவிக்கவே வந்திருக்கிறேன்.  அது நல்ல செய்தியும் கூட.  எங்கள் பெரியண்ணா, நாங்கள் காம்பில்யத்திலிருந்து ஹஸ்தினாபுரம் செல்லும் பயணம் முழுவதையும் என் பொறுப்பில் விட்டிருக்கிறார்.  இந்தத் துணிகர முயற்சிக்கு உங்கள் ஆசிகளை வேண்டி வந்திருக்கிறேன். “ தன் உள்ளத்தின் ஆழத்தில் இருந்து அவன் பேசிய வார்த்தைகள் துருபதனைக் கவர்ந்தன. “பாண்டுவின் புத்திரனே!  உங்களுக்கு என் ஆசிகள் எப்போதும் உண்டு.  பயணத்தில்  உங்களுடன் கூடப் பயணம் செய்யப் போகும் ஒவ்வொருவரையும் நீங்கள் சிறப்பான முறையில் கவனிப்பீர்கள் என்ற முழு நம்பிக்கை எனக்கு உண்டு. “


பீமன் முகம் முழுதும் விரிந்த புன்னகையுடன், “நிச்சயம், அரசே, நிச்சயம்.  ஒரு சிறு விஷயம்…..ம்ம்ம்ம்ம் என் பெரியண்ணாவுக்குக் கொஞ்சம் வியப்பாக இருக்கிறதாம்……….நான் உங்களிடம் இதைத் தனிமையில்  தான் சொல்ல வேண்டும்.” பீமன் தன் குரலைத் தழைத்துக் கொண்டு பேச ஆரம்பித்தான்.  அவன் பேசும் தொனியும் அவன் உடல் மொழியும் ஏதோ சதித்திட்டத்திற்கு துருபதனையும் சேர்த்துக் கொண்டிருக்கிறாற்போல் இருந்தது.  துருபதனுக்குச் சிரிப்பு வந்தது. “என் பெரிய அண்ணா, நீங்கள் எங்களுக்குப் பரிசாக அளிக்கப் போகும் யானைகள், குதிரைகள், ரதங்கள் ஆகியவற்றின் எண்ணிக்கையைக் குறித்துக் கவலைப்படுகிறார்.  ஆனால் நிச்சயமாக இது ஒரு நுண்ணிய விஷயம். இதைக் குறித்து உங்களிடம் கேட்பது சரியல்ல தான்.  ஆனால் பாருங்கள், நான் பயணத்துக்கான ஏற்பாடுகளை எல்லாம் செய்தாக வேண்டும்.


பீமன் இந்த விஷயம் மிக நுண்ணியது, மென்மையானது என்று கூறிய கருத்துக்களில் துருபதனுக்குச் சிரிப்பு வந்தது.  அதை அடக்கிக் கொள்ள முயன்று தோற்றுப் போனான்.  “நான் ஒரு …ஒரு…. கூச்சமுள்ள மனிதன். “ இதைச் சொல்கையிலேயே கூச்சம் அடைந்தவனைப்போல பீமன் தன் கண்களைப் பாதி மூடிக் கொண்டான்.  அங்கிருந்த சூழ்நிலையையே இதன் மூலம் மாற்றிவிட்டான்.  இப்போது துருபதன் வாய்விட்டே சிரித்துவிட்டான்..” என் மகள் கிருஷ்ணா உங்கள் ஐவரையும் மணந்ததில் நான் மிகவும் சந்தோஷம் அடைந்திருக்கிறேன்.  எங்களோடு தங்க நீங்கள் சம்மதித்தீர்களானால் என் ராஜ்யத்தில் பாதியை உங்களுக்குக் கொடுத்துவிடுகிறேன்.” என்று மனமாரக் கூறினான்.


“வேண்டாம், வேண்டாம், அதெல்லாம் வேண்டாம்.” விளையாட்டுத்தனமான எதிர்ப்பைக் காட்டிய வண்ணம் பீமன் மேலும் கூறினான். “ஏற்கெனவே நாங்கள் ஐவருமாகச் சேர்ந்து உங்கள் பெண்ணை உங்களிடமிருந்து கவர்ந்து விட்டோம்.  இப்போது உங்கள் ராஜ்யத்தையும் கவர்ந்து கொள்ள விரும்பவில்லை.  ஆனால் ஒன்று நிச்சயமாய்த் தெரியும்.  மாட்சிமை பொருந்திய பாஞ்சால அரசர், எங்களைப் பிச்சைக்காரர்களைப் போல் ஹஸ்தினாபுரம் செல்ல அனுமதிக்க மாட்டார் என நம்புகிறேன்.”


“நிச்சயமாய் இல்லை.  வெளிப்படையாகக் கூறுங்கள்.  உங்களுக்கு என்ன வேண்டும்?”


சிறு பிள்ளையைப் போல் சிரித்த பீமனைப் பார்த்த துருபதன் மனம் குளிர்ந்து போனது.  ஆள் தான் வளர்ந்திருக்கிறான்;  உண்மையில் சிறு பிள்ளை தான் எனத் தனக்குள் நினைத்தான்.  “எங்கள் அண்ணா என்ன வேண்டுமென ஆசைப்படுகிறார் தெரியுமா?  பிரபுவே, அதை மட்டும் தெரிந்து கொள்ளுங்கள்.  நான் என்ன விரும்புகிறேன் என்பது வேண்டாம்.” குறும்புச் சிரிப்போடு பீமன் கூற துருபதனுக்கு வியப்பு அதிகரித்தது.  “என்ன?  நீர் விரும்புவதற்கும், உங்கள் அண்ணா விரும்புவதற்கும் வேறுபாடுகள் இருக்கின்றனவா?” ஆச்சரியத்துடன் கேட்டான்.


“ஆம், ஐயா, ஆம்.  எங்கள் அண்ணா ஒரு துறவி. ஆனால், நான் ராக்ஷசவர்த்தத்து அரசன் வ்ருகோதரன், அவரிலிருந்து வேறுபட்டவன்.  அரசன் வ்ருகோதரன் துறவிகளைப் பாதுகாக்கும் பொறுப்பை ஏற்றவர்.  இதை நீங்கள் ரகசியமாக வைத்திருங்கள். “போலியான பணிவோடு இதை ஒரு ரகசியம் போலக் கூறினான் பீமன்.  “ஓஓ, சரி, நான் புரிந்து கொண்டேன்.  உங்கள் அண்ணனின் தேவை என்ன?  அவருக்கு என்ன வேண்டும்? என்ன கொடுத்தால் அவருக்குத் திருப்தியாக இருக்கும்?  முதலில் அதைத் தெரிந்து கொள்வோம்.”


“ஹா, அவர் உங்களை எதுவும் கேட்கக் கூடாது என்று எனக்குக் கட்டளை இட்டிருக்கிறார்.  அவர் வரையிலும் நீங்கள் ஐந்து தேங்காய்களைக் கொடுத்தாலே போதும்;  திருப்தி அடைந்துவிடுவார்.  அவரிடம் எதுவும் இல்லை என்றாலே அவர் மிக சந்தோஷமாக இருப்பார். “வஞ்சப் புகழ்ச்சியாகவே இதைச் சொன்னான் பீமன்.  “இது போற்றத்தக்கதொரு உயர்வான குணம்.” என்றான் துருபதன்.  “ஹூம், இதை எல்லாம் அவர் எனக்காக விட்டு வைத்திருக்கலாம்.  மாட்சிமை பொருந்திய பிரபுவே, நீங்கள் ஏகமாகப் பரிசுகளை அள்ளிக் கொடுத்து விடப்போகிறீர்களே என்பது தான் அவருக்கு பயமே!” சொல்லிக்கொண்டே வேண்டுமென்றே பெருமூச்சு விட்டான் பீமன்.


“உங்களுக்கு இப்போது கவலை எல்லாம், என்ன கிடைக்கும் அல்லது கிடைக்காது என்பது தானே? க்ஷத்திரியர்களுக்கு இதுவும் ஒரு நல்ல வழக்கமே!  அரசே, வ்ருகோதரரே, உங்களுக்கு என்ன வேண்டும்?”துருபதன் கேட்டான். “அரசே, எனக்கு என்னவேண்டுமோ அதைக் குறித்து நான் கவலைப்படுவது இல்லை.  அவற்றை நானே எடுத்துக் கொள்வேன். “அழுத்தம் திருத்தமாகச் சொன்னான் பீமன்

Thursday, September 11, 2014

அர்ஜுனனின் பலமும், பலவீனமும்!

“ஆனால் இது தான் உண்மையான நிலை அர்ஜுனா!  புரிந்து கொள்.  உன் சகோதரர்கள் உன்னையும் நீ அவர்களையும் மிகவும் நேசித்து வருகிறீர்கள். இல்லையா?  நீ என்னுடன் இப்போது துவாரகைக்குக் கிளம்பி வந்தாயானால் அவர்கள் அனைவரும் வருத்தத்தில் ஆழ்ந்துவிடுவார்கள்.”


அர்ஜுனன் ஆமெனத் தலையை மட்டும் அசைத்தான். “அர்ஜுனா, இவர்களை எல்லாம் விட்டுத் தனியாக நீ மட்டும் சந்தோஷத்தை அனுபவிக்க வேண்டுமெனில் அதற்கான விலையை நீ கொடுத்துத் தான் தீர வேண்டும்.”


“விலை? என்ன விலை?” அர்ஜுனன் வியப்பாய்க் கேட்டான்.


“திரௌபதியை நீ கைவிடலாமா அர்ஜுனா! எந்தப் பெண்ணும், குறிப்பாக ஆரிய இனத்தைச் சேர்ந்த எந்தப் பெண்ணாலும் செய்ய இயலாத ஒரு காரியத்தை அவள் செய்திருக்கிறாள்.  எந்தப் பெண்ணாக இருந்தாலும், ஒரு கணவனோடு வாழவே விரும்புவாள்.  என்றென்றும் அவன் அன்புக்கு மட்டுமே பாத்திரமானவளாக இருக்க வேண்டும் என நினைப்பாள்.  ஆனால் திரௌபதி, இங்கே தன் ஆசைகளை எல்லாம் துறந்துவிட்டு, தனக்குச் சாதகமான முடிவை எடுக்காமல், உங்கள் ஐவரையும் மணந்துள்ளாள்.  இதெல்லாம் எதற்காகவென நினைக்கிறாய்? தன்னை வாழ்நாள் முழுவதற்குமாக ஒரு தர்மசங்கடமான நிலையில் திரௌபதி தன்னை முன்னிறுத்துவது எதற்காக? நீங்கள் அனைவரும் உங்கள் லக்ஷியத்தில் ஜெயித்து நீங்கள் விரும்பிய வண்ணம் தர்ம சாம்ராஜ்யத்தை ஸ்தாபிக்க வேண்டித் தான்.  உங்கள் ஐவரையும் எவராலும்தவிர்க்க இயலாத பலமுள்ளவர்களாக மாற்ற வேண்டும் என்பதற்குத் தான். “


“நீ மட்டும் அவளை அழைத்துக் கொண்டு தனியாகச் சென்றாயானால் அவள் ஒரு போதும் உன்னை மன்னிக்கவே மாட்டாள்.  என்றென்றும் மன்னிக்க மாட்டாள்.  அவ்வளவு ஏன்,தன்னையும் மன்னித்துக் கொள்ள மாட்டாள்.  உன் ஆசைகளையும் விருப்பங்களையும் நிறைவேற்றிக் கொள்ளக் கல்யாணத்தை ஒரு வாயிலாக நீ பயன்படுத்துவது தெரிய வந்தால் அவள் நிச்சயம் உன்னை மன்னிக்க மாட்டாள்.  நம் புராதன ரிஷிகளைப் போல அவள் இதை ஒரு சடங்காக, உன் குலத்து  முன்னோர்களுடன், இனி வரவிருக்கும் வாரிசுகளை இணைக்கும் ஒரு வலுவான பந்தமாக தர்மத்தை விருத்தி அடையச் செய்யும் ஒரு தூண்டுகோலாக அவள் இதைப் பார்த்திருக்கலாம்.”


“ஓ, அவள் ஒரு வீரப் பெண்மணி! போற்றத்தகுந்த வீரம் அவளுடையது.”


“நீ போட்டியில் வென்றபோது அவள் அடைந்த சந்தோஷத்துக்கு அளவே இல்லை.  இதற்கு முன்னர் அவள் இவ்வளவு சந்தோஷமாக இல்லை. உன்னை மட்டும் தனியாக மணந்திருக்கவே அவள் விரும்பி இருப்பாள்.  ஆனால் அவள் உன்னையும், அவளையும் மட்டும் நினைக்காமல் உங்கள் அனைவரையும் குறித்து யோசித்து இந்த முடிவெடுத்தாள்.  உங்கள் அனைவரின் நன்மைக்காகவே இந்த முடிவை அவள் எடுத்திருக்கிறாள்.”


“ஓ, ஓ, ஓ, எனக்குத் தெரியும், கிருஷ்ணா! நான் நன்கறிவேன்.  எங்கள் அனைவரின் நன்மைக்காகவும் என்னால் எந்தத் தேர்வையும்  செய்திருக்க முடியாது.  இப்போது என்ன செய்வது என்றே எனக்குப் புரியவில்லை.”


“ஆ, நீ என்ன செய்யவேண்டும் என்பதை நீ நன்கறிந்திருக்கிறாய் அர்ஜுனா! ஒன்றுமில்லை, உன் மனதில் சிறு ஏமாற்றம் இருக்கிறது.” சொன்னவண்ணம் அர்ஜுனனைத் தட்டிக் கொடுத்து சாந்தப்படுத்தினான் கிருஷ்ணன்.  “ஏமாற்றமா? இல்லை, கிருஷ்ணா!  நான் மனம் உடைந்து போயிருக்கிறேன்.”  இதைக் கேட்ட கிருஷ்ணன் பேச்சை நிறுத்திவிட்டு யோசிக்க ஆரம்பித்தான்.  அவன் கண்களுக்கு நேரே எதிர்காலத்தைக் காண்பவன் போல் காட்சி அளித்தான். “எங்கெங்கு பார்த்தாலும் ஆபத்துத் தான் சூழ்ந்திருக்கிறது அர்ஜுனா!  உன்னை மட்டுமல்ல, ஹஸ்தினாபுரத்தை மட்டுமல்ல.  தர்ம சாம்ராஜ்யம் அமைக்கவும் ஆபத்து சூழ்ந்திருக்கும் நிலை தான் தெரிகிறது.  தர்மமே ஆபத்தில் இருக்கிறது.”  கிருஷ்ணனின் இந்த மனச் சங்கிலி அறுந்து போகாவண்ணம், அர்ஜுனன் அவன் எண்ணங்கள் பேச்சாக வெளிவருவதைக் கேட்டுக் கொண்டிருந்தான்.


“சுயம்வரத்தில் நீ வென்றதும் என்ன நடந்தது?  அங்குள்ள அனைத்து அரசர்கள், ம்ம்ம்ம்ம்ம்?? பெரும்பாலானவர்கள், மற்றும் ரிஷிகள், இளவரசர்கள் அனைவருக்கும் சந்தோஷத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அதிலும் நீ யார் எனத் தெரிந்ததும், உன் வெற்றியில் அவர்கள் தர்மமே வெற்றி பெற்றதாக எண்ணி மகிழ்ந்தனர்.”


“உண்மையாகவா கிருஷ்ணா?  என் வெற்றியை தர்மத்தோடு சேர்த்துப்  பிணைத்துப் பார்த்தார்கள் என்கிறாயா?”


“அர்ஜுனா,நான் எங்கும் அதர்மத்தையே பரவலாகக் காண்கிறேன். “ அர்ஜுனனுக்கு இதைச் சொல்வது போல் இருந்தாலும் கிருஷ்ணன் குரல் தனக்குத் தானே பேசிக் கொள்கிறாப் போல் இருந்தது.  “ கிழக்கே ஜராசந்தனும், மத்திய பாகத்தில் துரியோதனனும், வடக்கே ஷகுனியின் தந்தை சுபலாவும், தெற்கே சிசுபாலனும் ஆள்கின்றனர்.  இவர்களில் எவருமே ஆரியராக இருந்தும் ஆரிய வம்சத்தின் பாரம்பரியத்தைக் குலதர்மத்தைக் காப்பதில் எண்ணம் கொள்ளவில்லை. அதைக் குறித்தும் அவர்களுக்குக் கவலை இல்லை.  அவர்களால் தர்மம் நசுக்கி மிதிக்கப்பட்டு இருந்த இடம் தெரியாமல் இருக்கிறது.  அதற்குரிய மதிப்பு அதற்குக் கிடைக்கவில்லை. ஹஸ்தினாபுரத்தில் பிதாமகர் பீஷ்மர் கைகளில் இன்னமும் அதிகாரம் இருப்பதால் தர்மம் இருப்பது போல் ஒரு தோற்றம் அங்கே காணப்படுகிறது.  அவரும், ராணிமாதா சத்யவதியும் உயிருடன் இருக்கும்வரை தர்மம் அங்கே தோற்றத்திலாவது காணப்படும். அதன் பின்னர்? அதனால் தான் உங்கள் ஐவரையும் அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.  தர்மத்தின் கைகளை நீங்கள் ஐவரும் ஒற்றுமையாக இருந்தால் தான் வலுப்படுத்த முடியும்.”


“ஓ, அப்படி எல்லாம் எதுவும் இல்லை கிருஷ்ணா!  நீ முற்றிலும் தவறாகச் சொல்கிறாய்.  நீ அன்றோ தர்மத்தைக்காக்கவென்று, அதற்காகவென்று வந்திருக்கும் தர்ம தூதுவன்?  உன்னால் அன்றோ தர்மம் நிலைநாட்டப்படப் போகிறது? இவ்வளவு பெரிய பொறுப்பு உன்னிடம் அன்றோ உள்ளது?  இதன் வெற்றிக்கு நான் என்ன அவ்வளவு முக்கியமானவனா?”


“அர்ஜுனா, நீங்கள் ஐவரும் ஒன்றாகக் கூடி ஒற்றுமையாக இருந்தீர்களெனில் எவ்வளவு வலுப் பெற்றவர்களாக இருப்பீர்கள் என்பதை இன்னமும் உன்னால் புரிந்து கொள்ள முடியவில்லை!”


அர்ஜுனன் சற்று நேரம் ஆழமாகச் சிந்தித்தான்.  “இப்போது ஒரு மோசமான சூழ்நிலையில் இருப்பது புரிகிறது.  இது கஷ்டமானதும் கூட.  ஆனால் நாங்கள் ஐவரும் ஒன்றாக இருந்தாக வேண்டியது முக்கியம் என நான் சிறிதும் நினைக்கவில்லை. இது அவசியம் என்றும் நினைக்கவில்லை.”


“இப்படி ஒரு சூழ்நிலையில் உன் பெரிய அண்ணா என்ன முடிவெடுக்கிறாரோ அதுவே சிறந்தது அர்ஜுனா!  உன்னுடைய நம்பிக்கையில் ஆட்டம் காணும்போதெல்லாம் நீ துவாரகைக்கு வந்து எத்தனை நாட்களோ, மாதங்களோ வேண்டுமானாலும் இருந்து கொள்ளலாம்.  ஆனால் பிறரிடம் கொண்ட அன்புக்கும், நேசத்துக்கும் உன்னை ஒப்புக் கொடுப்பதன் மூலம் நீ எதையும் இழக்கப் போவதில்லை.”


அர்ஜுனன் தலை தானாகக் குனிந்தது.  “நான் மிகவும் சுயநலம் பிடித்தவன் கிருஷ்ணா!  என்னைப் பற்றி மட்டும் நினைத்துவிட்டேன்.  எனக்குப் பல கனவுகள் உண்டு.  ஆசைகள் உண்டு. லக்ஷியங்கள் உண்டு.  சந்தோஷமாக இருக்கவேண்டும் என்னும் நினைப்பும் உண்டு.  எனக்கென ஒரு தனி ராஜ்யம், அதில் எனக்கு மட்டுமே,  எனக்காகவே தன்னை அர்ப்பணித்துக்கொள்ளும் ஒரு மனைவி, என்ற கனவுகள் எனக்குள்ளும் உண்டு.  அந்தக் கனவுகள் எல்லாம் நிறைவேறாவிட்டால், நான் ஒரு பைத்தியமாகவே அலைந்து கொண்டிருப்பேனோ என நினைக்கிறேன். அப்படியே உணர்கிறேன்.”


“உனக்கு நீயே நீதி சொல்லாதே அர்ஜுனா!  உன்னை நீயே தாழ்த்திப் பேசிக் கொள்ளாதே! அந்தக் கனவுகள் தான் உன் வாழ்க்கையின் வலுவான மூலங்களாக இருந்து உன்னை உயர்ந்த நிலைக்குக் கொண்டு செல்லப் போகிறது. பெரிய விஷயங்களைக் குறித்துக் கனவு காணாமல் எவரும் வாழ்ந்ததில்லை.  அப்படிக் கனவு காண்பவர்களே பெரிய வெற்றிகளையும் அடைவார்கள்.”


“நான் மிகப் பலவீனமான மனிதன் கிருஷ்ணா!”


“இல்லை, அப்படி இல்லை, நீ வலுவானவன்.  பலசாலி.  உன் பலவீனத்தோடு போரிட்டு வென்று தான் உன் சக்தியை, வலுவை நீ அடைவாய். அப்போது தான் உன்னிடம் பலம் வந்து சேரும்.  போரிடு.  உன் பலவீனத்தோடு போரிட்டு வெல்வாய்!’


அர்ஜுனன் நீண்டதொரு பெருமூச்சு விட்டான்.

Wednesday, September 10, 2014

அர்ஜுனனின் புலம்பல்கள்!

“அர்ஜுனா, அர்ஜுனா!  அதெல்லாம் நீ அவளை இழக்கவில்லை; ஆனால் அவள் அனைத்தையும் கருத்தில் கொண்டு நன்கு யோசித்துத் தான் உங்கள் ஐவருக்கும் மனைவியாக இருக்க யோசித்திருக்கிறாள்.  “


“ம்ம்ம்ம், நான் புரிந்து கொண்டேன் கிருஷ்ணா.  அவள் ஏன் இதைத் தேர்ந்தெடுத்தாள் என்பதை நான் நன்கு புரிந்து கொண்டேன்.  அதிலும் நீ அவள் மனதில் விதைத்த விதை நன்கு வளர்ந்து செடியாகி மரமாகி விட்டது.  “பாண்டவர்கள் அனைவரையும் நீ மணந்து கொள்வதன் மூலம், தர்ம சாம்ராஜ்யத்தை நாங்கள் ஸ்தாபிக்க நீ மாபெரும் உதவி செய்வாய்.” என்று அவள் மனதில் நீ விதைத்தது மிக ஆழமாக அவள் மனதில் பதிந்து விட்டது. கிருஷ்ணா, இது நீ விதைத்த விதையன்றோ!”


“ஆஹா, அதில் உண்மை இல்லையா? நீங்கள் ஐவரும் ஒற்றுமையாக ஒருவருக்கொருவர் ஆதரவாக இல்லை எனில் தர்ம சாம்ராஜ்யத்தை உங்களால் ஸ்தாபிக்க இயலுமா?  உன்னால் தனியாக தர்ம சாம்ராஜ்யத்தை ஸ்தாபிக்க வலு உள்ளதா? “


“ஒரு வேளை இயலாது போகலாம். ஆனால் கிருஷ்ணா, நாங்கள் ஐவரும் எங்கள் வாழ்க்கையைத் தனித்தனியாகத் தான் வாழவேண்டும். “


“அதுவும் சரியே! ஆனால் உன்னால் உன் சகோதரர்களுடன் எதையுமே பங்கிட்டுக்கொள்ளாமல் தன்னந்தனியாக ஒரு வாழ்க்கையை வாழ முடியுமா?  அதற்கான மனோதிடம் உன்னிடம் உள்ளதா?”


“ஒருவேளை முடியாது போகலாம்.  ஆனால் ஒவ்வொருவரும் அவரவர் வாழ்க்கையைத் தனியாகத் தான் அவரவருக்குப் பிடித்த சிறந்த முறையில் வாழ்ந்தாகவேண்டும்.” அர்ஜுனன் திரும்பவும் அதையே சொன்னான்.  வேறு ஏதும் சொல்ல வார்த்தை இல்லை என்பது போல் அவன் பேச்சு இருந்தது.


“அப்போது எல்லாவற்றிலும் சிறந்த வழி எது?” கிருஷ்ணன் கேட்ட தொனியில் அவன் மனதில் சந்தேகம் தோன்றுமோ என்னும்படி இருந்தது.  “அர்ஜுனா, திரௌபதியுடன் சேர்ந்து ஒரு பொதுவான வாழ்க்கையை நீங்கள் ஐவரும் வாழ்வது சிறந்ததா? அல்லது நீங்கள் ஐவரும் தனித்தனியாக ஒருவர் மற்றவரிலிருந்து பிரிந்து தனியானதொரு வாழ்க்கையை வாழ்வது சரியா? இதன் மூலம் நீங்கள் ஐவரும் ஒருவர் மற்றவரிலிருந்து பிரிந்து தனியானதொரு வாழ்க்கையை வாழ்வீர்கள்!  இப்போது சொல்!  எது உன்னுடைய தர்மம்?  எது சிறந்தது?”


அர்ஜுனனுக்குப் புதிராக இருந்தது.  என்ன பதில் சொல்வதென்று அவனுக்குப் புரியவில்லை. சற்று நேரம் ஆழ்ந்து யோசித்தவன், பின்னர் கொஞ்சம் தயக்கமாகப் பேச ஆரம்பித்தான்.  “இந்தப் போட்டியில் நான் வென்றதற்கு ஏதாவது ஒரு காரணம் இருக்கவேண்டும்.  ம்ம்ம்ம்ம்… அதைத் தற்பெருமை என்று சொல்லலாம். அது தான் எனக்குப் புரிகிறது.  அப்படித் தான் நான் உணர்கிறேன்.”


“அர்ஜுனா, திரௌபதியை நீ உனக்கு மட்டும் மனைவியாக இருக்கவேண்டும் என நினைப்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.  அது சரியானதே!  ஆனால்……..”கிருஷ்ணன் கொஞ்சம் தயங்கி விட்டு அர்ஜுனனைப் பார்த்த பார்வையில் ஏதோ பொருள் பொதிந்திருந்தது. “அர்ஜுனா, உன் பெரிய அண்ணா யுதிஷ்டிரன் உன்னை ஒரு தந்தையைப் போல் அன்புடனும், பாசத்துடனும் கவனித்துக் கொள்கிறார் அல்லவா?”


“ஆம், கிருஷ்ணா!”


“சரி, பீமன் உன்னை எத்தனை நிகழ்வுகளிலிருந்து, ஆபத்துக்களிலிருந்து காப்பாற்றி உள்ளான்? அவன் இல்லை எனில் வாரணாவதத்திலிருந்து நீ உயிருடன் தப்பி வந்திருக்கவே முடியாது. ராக்ஷஸவர்த்தத்திலும் பீமன் இல்லை எனில் நீங்கள் அனைவருமே பக்ஷணமாக ஆகி இருப்பீர்கள்.” கிருஷ்ணனின் இந்தப் பேச்சுக்கு அர்ஜுனன் பதிலே பேசவில்லை.  கண்ணன் தொடர்ந்தான்.  “உன் தாயைப் பற்றி என்ன நினைக்கிறாய்? உங்கள் அனைவருக்குமாக அவள் தன் உயிரை வைத்திருக்கிறாள்.  உங்களில் அவள் தன்னையும் கலந்து விட்டாள்.  இனி நீங்கள்  அவளிடமிருந்தோ, அவள் உங்களிடமிருந்தோ பிரிய முடியாது.  அதோடு உங்களில் எவரையும் தனியாகப் பார்க்கவும் அவள் விரும்ப மாட்டாள்.  மேலும் உங்கள் தாத்தா பீஷ்மரும் சரி, ராணிமாதா சத்யவதியும் சரி, சரியான சமயம் வருகையில் நீங்கள் ஐவரும் அவர்களுக்குத் துணையாக இருப்பீர்கள் என்னும் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.  நீ உன் சகோதரர்களை இப்போது பிரிந்தாயானால் உங்களை எல்லாம் பற்றி அவர்கள் என்ன நினைப்பார்கள்?”


“கிருஷ்ணா, என் ஒருவனைத் தவிர மற்றவர்களுடைய நலன்கள் மட்டுமே உன் கண்களுக்குத் தெரிகிறது.  அனைவரின் நலன்களையும் குறித்துக் கவலைப்படும் நீ என்னைக் குறித்து எந்தக் கவலையும் படவில்லையே!” அர்ஜுனன் குரலில் துயரம் மிகுந்தது.


“நீ அன்புடன் நேசிப்பவர்களின் மன மகிழ்ச்சியைத் தொலைத்துவிட்டு உன் மகிழ்ச்சிக்கு அஸ்திவாரம் அதில் போடப் போகிறாயா?  நீ எழுப்பும் இந்த வாழ்க்கைக் கட்டிடம் உறுதியாக இருக்குமா? அனைவரின் வருத்தத்திலும், துக்கத்திலுமா உன் வாழ்க்கையை எழுப்பப் போகிறாய்? அனைவரும் வருந்திக் கொண்டிருக்கையில் நீ மட்டும் சந்தோஷமாக இருப்பாயா?” சவால் விடும் தொனியில் கிருஷ்ணன் கேட்டான்.


“நான் எவரையும் மனவருத்தத்தில் ஆழ்த்த விரும்பவில்லை.  அதே சமயம் எனக்கு நானே வருத்தத்தை விளைவித்துக்கொள்ளவும் விரும்பவில்லை.   என் வாழ்க்கை முழுதும் மனம் உடைந்த ஒரு மனிதனாக இருக்க நான் விரும்பவில்லை.”


“சரி, திரௌபதியைப் பற்றி என்ன சொல்கிறாய்? அவளுக்கு உன்னைத் தனியாகப் பிரித்துக் கூட்டிச் சென்று வாழ்க்கை நடத்துவதிலோ அல்லது உன்னை விட்டு விட்டு மற்ற நால்வருடன் வாழ்க்கை நடத்துவதிலோ சந்தோஷமாக இருக்குமா?  அவள் என்ன நினைப்பாள்?”


“ஆஹா, எப்படி ஒரு குழப்பமான சூழ்நிலையில் எங்களைக் கொண்டு தள்ளி இருக்கிறது பொல்லாத விதி!  எல்லாமே குழப்பம்.  ஆரம்பத்திலிருந்து குழப்பம். “அர்ஜுனன் தன் தலையை உலுக்கிக் கொண்டான்.


“அர்ஜுனா, இது கடுமையான சோதனைக் காலம்!  அக்னிப்ரவேசத்துக்கு நிகரானது. உனக்கு எதிரே இருப்பவை இரண்டே இரண்டு தேர்வுகள் தான். ஒன்று நீ மட்டும் தனியாக திரௌபதியை அழைத்துச் சென்று சந்தோஷமாகக் குடும்பம் நடத்துவது; உன்னிடம் அன்பான, பாசமான மற்றவரைப் பிரிய வேண்டும். இன்னொன்று உனக்குப் பிரியமானவர்களையும், உன்னிடம் பிரியமாக இருப்பவர்களிடமும் அவர்கள் மனமும் திருப்தி அடையும் வண்ணம் நடந்து கொள்வது.  இரண்டில் நீ எதைத் தேர்ந்தெடுக்கப் போகிறாய்?”


“கடவுளே, கடவுளே, கல்யாணம் என்பது எதற்காக?  என்னத்திற்காக?  ஒரு மனிதனை அது சந்தோஷப்படுத்தவில்லை எனில் அந்தக் கல்யாணம் தான் ஏன்?  இதன் பொருள் தான் என்ன?” அர்ஜுனனின் இந்தப் புலம்பலைக் கேட்ட கிருஷ்ணன் மறுப்பாகத் தன் தலையை மட்டுமில்லாமல் விரலையும் அசைத்து மறுப்புத் தெரிவித்தான்.


“கல்யாணத்தின் முக்கியத்துவம் குறித்து நம் குல முன்னோர்கள் ஏற்கெனவே நிறையச் சொல்லி இருக்கிறார்கள், அர்ஜுனா!  ரிஷிகளும், முனிவர்களும் நம் பழைமையான நியதிகள் குறித்து நிறையச் சொல்லி இருக்கின்றனர்.”


அர்ஜுனன் தன் நெற்றியில் கையை வைத்துக் கொண்டே, “கிருஷ்ணா, புதிர்களுக்குப் பதில் சொல்வதில் உன்னைப் போல் நான் திறமையானவன் அல்ல!”

Sunday, September 7, 2014

அர்ஜுனனின் முட்டாள் தனம்!

“நாங்கள் ஏன் அப்படிச் செய்கிறோம், கிருஷ்ணா!  நாங்கள் சகோதரர்கள் ஒருவர் மேல் ஒருவர் பொறாமை கொண்டவர்கள் இல்லை!”


கிருஷ்ணன் சிரித்தான்.  “ இப்போது என்ன நடந்திருக்கிறது அர்ஜுனா!  இதே காரணத்துக்காகத் தான், அதாவது உன் மனைவியை உன்னிடமிருந்து நான்கு வருடங்கள் பிரிக்கிறாரே என்னும் காரணத்துக்குத் தான் நீ உன் பெரிய அண்ணன் யுதிஷ்டிரனிடம் கோபம் கொண்டிருக்கிறாய்.  ஆனால் ஒரு விஷயம் நிச்சயமாய்ப் புரிகிறது.  உங்கள் உறவுமுறைகளை எப்படியானும் ஒரு ஒழுங்குக்குள்  கொண்டு வர வேண்டும்.  அதற்கு ஏதேனும் செய்தாக வேண்டும்.  ஒன்றைச் செய்தால் மற்றது சரியில்லை.  சரியானதைச் செய்தால் எவருக்கும் சரியாயில்லை!”


“இது உன் பார்வையில் நகைப்புக்கிடமாகி இருக்கிறது கிருஷ்ணா!  இது சிரிக்க வேண்டிய விஷயம் அல்ல.  நான் மகிழ்ச்சியில்லாமல் வருத்தத்தில் இருப்பதைப் பார்த்து நீ பரிகாசம் செய்து சிரிக்கிறாய்.   அது உனக்கு சந்தோஷத்தைத் தருகிறது அல்லவா? என் வரையில் இது மரண அடிக்கு ஒப்பாகும்.” அர்ஜுனன் கோபத்துடனேயே சொன்னான்.


“திரௌபதி இதைக் குறித்து என்ன நினைக்கிறாள் என்பது உனக்குத் தெரியுமா? அவள் உணர்வுகள் குறித்து நீ என்ன நினைக்கிறாய்?”


“முதலில் நான் என்ன நினைக்கிறேன் என்பதைப் பார் கிருஷ்ணா!” சிடுசிடுத்தான் அர்ஜுனன். “சுயம்வரத்திற்கு நான் சென்றபோது, என் வாழ்க்கையின் ஒரு புதிய அத்தியாயத்தை நான் ஆரம்பிக்கப் போகிறேன் என்றே உணர்ந்தேன்.  அப்படியே நடந்தது.  நான் போட்டியில் ஜெயித்தேன். ஆர்யவர்த்தத்தின் சிறந்த வில்லாளியாக நான் அறிவிக்கப்பட்டேன். திரௌபதி தங்களுக்குக் கிடைக்கமாட்டாளா என அனைத்து அரசர்களும் பேராசையுடன் காத்திருக்கையில் அவள் எனக்கு மணமகளாய்க் கிடைத்தாள்.  நான் மகிழ்ச்சியின் உச்சியில் இருந்தேன்.  அவள் எனக்குக் கிடைத்ததை என் அதிர்ஷ்டமாய்க் கருதினேன்.  திரௌபதிக்கும் சந்தோஷம் என்றே நினைத்துக் கொண்டிருந்தேன்.  பின்னர் அம்மாவிடம் சென்றால், அவள் திரௌபதியை நாங்கள் ஐவரும் பங்கிட்டுக் கொள்ளவேண்டும் எனச் சொல்லிவிட்டாள். அதை எங்கள் குல முதல்வரும் குருவுமான ஆசாரியர் வியாசரும் அங்கீகரித்து விட்டார்.  நீ ஒரு வார்த்தை கூட அதை எதிர்த்துச் சொல்லவே இல்லை.  ஏன்? கிருஷ்ணா?  ஏன்?  இப்போது என்னவென்றால் எங்கிருந்தோ நாரதமுனிவர் ஒரு விசித்திரமான ஆலோசனையுடன் வந்துவிட்டார்.  அதை ஏற்றுக் கொண்டு என் அண்ணனும் ஒரு முடிவை எடுத்திருக்கிறார்.  என்னை ஒன்றுமில்லாமல் நசுக்கிவிட்டனர்.  நான் திக்குமுக்காடிக் கொண்டிருக்கிறேன்.” தாங்க முடியாத ஆத்திரத்துடன் அர்ஜுனன் பேசினான்.


“உன் இடத்தில் நான் இருந்தாலோ, அல்லது எவர் இருந்தாலும், இப்படித் தான் நினைப்பார்கள் அர்ஜுனா!  இப்போது இதற்கு என்ன செய்யலாம் என்பதை நாம் பார்ப்போம்.  நீ இப்போது செய்யக் கூடியது என்னவென்றால் என்னுடன் துவாரகைக்கு வந்துவிடுவது தான். “தன் குரலில் எவ்விதமான விருப்பு, வெறுப்பையும் காட்டாமல் அமைதியாகக் கண்ணன் இதை அர்ஜுனனிடம் தெரிவித்தான்.  யோசித்து யோசித்துப் பேசினான் என்பது அவன் மெல்ல, மெல்லச் சொல்வதில் இருந்து தெரிந்தது.


“ஆமாம், அது தான் சரி!  நான் உன்னுடனேயே வருகிறேன்.  இந்தச் சூழ்நிலையில் என்னால் தாக்குப் பிடிக்க முடியாது.”


“சரி அர்ஜுனா! உன் மூத்த சகோதரர்  இதற்கு என்ன நினைப்பார் ?  நீ இல்லாமல் அவரால் தாக்குப் பிடிக்க முடியுமா?”


“அதைக் குறித்து எனக்குக் கவலையில்லை!” உணர்ச்சி வசப்பட்டிருந்த அர்ஜுனன், பட்டென்று மறுமொழி கொடுத்தான்.  மேலும், “ அவர் தன்னைத் தானே பார்த்துக்கொள்வார்!” என்றவன் சற்றே நிதானித்துக் கொண்டு, “ம்ம்ம்ம்ம்ம், பீமனும், இரட்டையர்களும் அவரை நன்றாகப் பார்த்துக் கொள்வார்கள்.” என்று முடித்தான்.  “உன் தாயையுமா?  அவர்கள் பார்த்துக் கொண்டுவிடுவார்கள் அல்லவா?” கிருஷ்ணன் மென்மையாகக் கேட்டான்.


“ஓ, என் தாய்!  என் தாய்!” தலை குனிந்த வண்ணம் கொஞ்சம் யோசித்தான் அர்ஜுனன். “ஒரு வேளை…..ஒரு வேளை அவளுக்கு மனம் உடைந்து போகலாம்.  எங்களில் எவரேனும் ஒருவர் பிரிவதைக் கூட அவளால் அனுமதிக்க இயலாது.  அவள் இதைத் தாங்க மாட்டாள்.”


“திரௌபதி என்ன நினைப்பாள்?” கண்ணன் அப்பாவி போல, ஏதுமறியாதவன் போல அர்ஜுனன் வழியிலேயே போய் அவனை மாற்ற முயற்சித்தான்.  அர்ஜுனன் இப்போதும் கொஞ்சம் யோசித்தான். “திரௌபதிக்குக் கட்டாயம் மனம் உடைந்து போகும்.  இல்லையென்றாலும் அவள் மனதளவில் காயப்பட்டுத் தான் போவாள்.  ஒருவேளை நான் அவளை விட்டுச் சென்றுவிட்டது அவளைத் தனிமைப்படுத்தியதாகவும் நினைக்கலாம். “ அர்ஜுனன் தன்னையறியாமல் உண்மையை ஒத்துக் கொண்டான்.


“அப்போது சரி.  ஒவ்வொரு நான்காம் வருடம் முடிந்து உன் முறை ஆரம்பிக்கும்போதெல்லாம் நீ துவாரகையை விட்டு வந்துவிடலாம்.” என்று சிரித்த வண்ணம் கண்ணன் கூற, மீண்டும் வெகுண்டு எழுந்தான் அர்ஜுனன்.  “என்னைப் பரிகாசம் செய்யாதே, கிருஷ்ணா!  நான் எவ்வளவு தூரம் பாதிக்கப்பட்டிருக்கிறேன் என்பதை நீ புரிந்து கொள்ளவில்லை.” என்று வெடித்தான். அவனுடைய அளவு கடந்த துக்கம் குரலில் தெரிந்தது.


“உன்னைப் போல் நானும் பாதிப்பு அடைந்துவிட்டேனே என நினைத்துக் கொண்டிருந்தேன் என்றால், அதனால் என்ன பயன் உண்டாகும் அர்ஜுனா! “ இதைக் கேட்டுக் கொண்டே கிருஷ்ணன் சற்றே யோசித்தான்.  பின்னர் ஏதோ புதிய விஷயம் தோன்றியதைப் போல் அர்ஜுனனிடம், “ நீ என்ன செய்திருக்க வேண்டும் தெரியுமா? ஆசாரியர் அவளிடம் ஐவரையும் மணந்து கொள்வது சரி என்று சொன்னபோது மறுத்திருக்க வேண்டும்.  திரௌபதியிடமே உன்னை மட்டும் மணந்து கொள்ளும்படி வற்புறுத்தி இருக்க வேண்டும்.  ஆனால் திரௌபதியின் முடிவே இறுதியானது என்ற தீர்மானத்துக்கு நீயும் கட்டுப்பட்டுத் தான் இருந்தாய்!”


“எனக்குத் தெரிகிறது, கோவிந்தா.  நன்கு புரிகிறது.  இந்தக் குழப்பத்துக்கு என்னுடைய பலஹீனமான மனதே காரணம்.  அப்போது நீங்கள் அனைவரும் இந்த ஏற்பாட்டுக்குச் சம்மதம் தெரிவிக்கவே என்னால் எதுவும் பேசவோ, செய்யவோ முடியாமல் போயிற்று.  சுயம்வரத்துக்குள்ளே இன்னொரு சுயம்வரத்தை நான் முற்றிலும் எதிர்பார்க்கவே இல்லை, கோவிந்தா! நான் என்ன செய்வது?  இப்போது அதை நினைத்து என்ன செய்ய முடியும்?  ஏதேனும் ஒரு நல்வழியை நீதான் எனக்குக் காட்டவேண்டும்.” அர்ஜுனன் இறைஞ்சினான்.


“நீ இப்போது இருக்கும் சூழ்நிலையில்  உனக்கேற்றதொரு வழியை நீதான் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.  அப்போது தான் உன் சுயமரியாதையை நீயே காத்துக் கொண்டவன் ஆவாய்!”


“எனக்கு என்ன சுயமரியாதை இருக்கிறது கண்ணா?  சுயமரியாதை எனக்கு எப்படி வரும்? என் கண்களுக்கே நான் மிகவும் சிறியவனாகத் தென்படுகிறேன். என் சுயமதிப்பை என்னிடமே நான் இழந்து விட்டேன்.  என் திறமையால் நான் திரௌபதியை வென்றேன்.  ஆனால் என் முட்டாள்தனத்தால் அவளை இழந்தேன்.”

Friday, September 5, 2014

அர்ஜுனனுக்கு வந்த சோதனை!

பீமனும், திரௌபதியும் வெளியே சென்றதும் அர்ஜுனன் அங்கே வந்தான். ஒல்லியாக இருந்தாலும் திடமாகக் காணப்பட்ட அர்ஜுனன் தோள்கள் அகன்று அகலமாகவும், இடை சிறுத்தும், மெல்லிய ஆனால் நீண்ட உறுதியான கால்களோடும் காணப்பட்டான்.  பாண்டவர்களுக்குள்ளே இவன் மிக இளமையாகவும் அழகு நிறைந்தவனாகவும் காணப்பட்டான். செதுக்கியது போல் காணப்பட்ட முகவாயும், அதன் மேல்  பெண்களுக்கு இருப்பது போன்ற அழகிய உதடுகளும், கனவு கண்டு கொண்டிருக்கும் கவிஞனை நினைவூட்டும் கண்களும், நன்றாக வாரப்பட்டுத் தூக்கிக் கட்டப்பட்டிருந்த சிகையும், முகத்தில் காணப்பட்ட தாடியும் விவரிக்க ஒண்ணாததொரு கவர்ச்சியான தோற்றத்தை அவனுக்குத் தந்து கொண்டிருந்தது.  ஆனால்…. அனைத்தையும் மீறியதொரு துயரத்தின் சாயல் அதில் நிழல் போல் படிந்திருந்தது.  அர்ஜுனன் அந்தத் தாழ்வாரத்துக்கு வந்தபோது நேருக்கு நேர் திரௌபதியைப் பார்க்க நேரிட்டது.  அவளைச் சற்றே தீவிரமாகப் பார்த்த அவன் முகத்திலோ, கண்களிலோ சந்தோஷத்தின் சாயல் சிறிதும் இல்லை.  பின்னர் சட்டென முகத்தைத் திருப்பிக் கொண்டு தன் பார்வையைத் தவிர்த்தான்.


ஆனால் பீமன் விடவில்லை.  அர்ஜுனனைப் பார்த்த உடனேயே, பீமன் தன் நடையை நிறுத்திவிட்டு, திரௌபதியின் பக்கம் திரும்பிப் பார்த்தான்.  பின்னர் கிருஷ்ணனையும் பார்த்தான். “கிருஷ்ணா, இதோ இவன் தான் இந்த மங்கையைப் போட்டியில் வென்றான்; ஆனால் இப்போது?? நான் அவளைத் தூக்கிச் செல்கிறேன், பார்த்தாயா?  பாவம் இவன்!” இதைச் சொன்ன பீமன் தன் வழக்கப்படி பெரிய குரலில் மனம் விட்டுச் சிரித்தான். பின்னர் அங்கிருந்து அகன்றான்.  அர்ஜுனனின் மனப் போராட்டத்தை அவன் முகத்திலிருந்தே பார்த்த கிருஷ்ணன் அவனைப் பார்த்து, “அர்ஜுனா, என்ன ஆயிற்று?  என்ன விஷயம்?  நீ ஏன் இவ்வளவு வருத்தமான மனநிலையில் இருக்கிறாய்?  நான் இங்கே உனக்காகவே காத்திருக்கிறேன்.” என்ற வண்ணம் அங்கிருந்த ஓர் ஆசனத்தில் அர்ஜுனனை அமர்த்திவிட்டு அவன் தோள்களில்  தன் கைகளை வைத்துக் கொண்டு அவனை அன்புடன் பார்த்தான்.  சற்று நேரம் அர்ஜுனன் ஏதும் பேசவில்லை.  பின்னர் தன் தொண்டை அடைப்பைச் சமாளிக்கும் விதமாகச் சற்று நேரம் முயன்று பின் தன் தொண்டையைச் சரி செய்து கொண்டு பேச ஆரம்பித்தான். “எங்கள் மூத்தவர்” இப்போது தான் ஒரு முடிவை, தீர்மானத்தை அறிவித்தார்!”   சொல்லும்போதே அவன் குரல் உடைந்து போனது.  தன்னைச் சமாளித்துக்கொள்ள மிகவும் பிரயாசைப் பட்டான். அவனால் இயலவில்லை.


“அவசரப் படாமல் நிதானமாகச் சொல்!  சற்று நேரம் எடுத்துக் கொண்டு உன்னை நிதானப்படுத்திக் கொண்டு பேசு!” அன்புடனும், புரிதலுடனும் பேசினான் கிருஷ்ணன்.  சற்று நேரம் இருவருமே மௌனமாக இருந்தனர்.  பின்னர் கிருஷ்ணன் அர்ஜுனனைப் பார்த்து, “இப்போது சொல் அர்ஜுனா!  இந்தத் தீர்மானத்தைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய் என்பதை ஒளிவு, மறைவின்றி என்னிடம் சொல்.  இதைக் குறித்து நீ எவ்வாறு உணர்கிறாய்?”


“திரௌபதி எங்கள் ஒவ்வொருவருடனும் ஒவ்வொரு வருடம் வாழ்வதாகச் சொல்லி இருக்கிறாள்.  அதுவும் வரிசைக்கிரமமாக. “அர்ஜுனன் குரலில் துக்கம் பொங்கியது.  மேலும் பொங்கிய துக்கத்தை அடக்கிக் கொண்டு பேச ஆரம்பித்தான். “தேவ முனி நாரதர்  அவள் கனவில் வந்தாராம்.  வந்து இந்த ஆலோசனையைச் சொன்னாராம்.  அவள் இதைக் குறித்து என் அண்ணனிடம் பேசி இருக்கிறாள்.  அவரும் இதை ஒத்துக் கொண்டிருக்கிறார்.  ஆஹா, நான் மிகவும் துயரத்தில் இருக்கிறேன்.” இதைச் சொன்னவன் அழவே ஆரம்பித்தான்.


“உன்னால் தாங்க முடியாது என்பதை நான் அறிவேன், அர்ஜுனா!  இது மிகக் கொடுமையான ஒன்று.  ஒருவனின் மனைவி  அவனுடன் சேர்ந்து இருப்பது என்பது நான்கு வருடங்களுக்கு ஒரு முறை என்பதை யாராலும் ஏற்க முடியாது தான்.  மனைவியோடு அந்தரங்கமாக வாழ்நாள் முழுவதும் ஒன்றாக இருக்கவே எவரும் விரும்புவார்கள்.  அதிலும் ஜெயித்து அடைந்த மனைவி!”


“என் வாழ்க்கையின் அழகு, சந்தோஷம், ரம்மியம் அனைத்தும் ஒன்றுமில்லாமல் தொலைந்து போனது!”  அர்ஜுனன் ஒரு பெருமூச்சுடன் கூறினான்.  மிகக் கனிவோடு கிருஷ்ணன் அவனைப் பார்த்தான். “ ஆம் , இது இயற்கை தான்!  அனைவருக்கும் உள்ளதே!” என்றான்.  “கிருஷ்ணா, நான் எவ்வளவு மனக்கோட்டைகள் கட்டினேன் தெரியுமா?  திரௌபதி என் பக்கத்தில் இருக்க, நான் அவள் துணையோடு இந்த உலகையே வெல்லலாம் என நினைத்தேன்!”


“இப்போதும் ஒன்றும் கெட்டுப் போகவில்லை அர்ஜுனா! அது இப்போதும் நடக்கும். திரௌபதி ஒரு நல்ல பெண்!  புரிதலுடன் கூடியவள்.  விரும்பி மணந்த உன்னை ஒருபோதும் விட்டுக் கொடுக்கவே மாட்டாள்.  நீ பெரிய சாகசங்கள் செய்ய உனக்குத் துணை இருப்பாள்.  உன்னைத் தூண்டுவாள். அது நிச்சயம்!”  என்றான் கிருஷ்ணன் தன் மென்மையான குரலில்.


“ஹா, பெரிய சாகசங்களா?  ம்ஹூம், சாத்தியமே இல்லை! நான் ஏற்கெனவே சுக்குச் சுக்காக உடைந்து போய்விட்டேன்.”மீண்டும் அவன் கண்கள் குளமாயின.  “தெய்வீக முனி நாரதரால் திரௌபதிக்குச் சொல்லப்பட்ட இந்த ஆலோசனை எவ்வகையில் உனக்கு இயற்கைக்கு விரோதமாகப் படுகிறது?  நீ ஏன் அவ்வாறு நினைக்கிறாய்?”


“இந்தப் போட்டியில் நான் வென்றதிலிருந்தே அனைத்துமே இயற்கைக்கு விரோதமாகவே நடந்து வருகிறது. “மிகுந்த மனக்கசப்புடன் சொன்னான் அர்ஜுனன்.  “ஆம், உண்மை தான்.  இயற்கைக்கு விரோதமானவற்றை நாம் இயற்கைக்கு உகந்ததாக மாற்ற முயன்று கொண்டிருக்கிறோம்.  அது சரி, உண்மையிலேயே இது இயற்கைக்கு விரோதமா? அப்படிப்பட்டதா?  திரௌபதி தன்னைத் தானே ஒரு மோசமான அருவருப்பான இடத்தில் வைத்துக்கொண்டுவிட்டாளா?  கொஞ்சம் யோசித்துப் பார்!  அவளால் எப்படி ஐந்து கணவர்களையும் ஒரே சமயத்தில் சந்தோஷமாகவும், அந்தரங்கமாகவும் நடத்த இயலும்?”


“அவளால் முடியாதா?” அர்ஜுனன் விசித்திரமான தொனியில் கேட்டான். அவன் திகைத்துப் போனான் என்பதும் புரிந்தது.  “அர்ஜுனா, அவள் அப்படி மட்டும் நடந்து கொண்டிருந்தால் நீங்கள் ஐவரும் ஒருவர் குரல்வளையை இன்னொருவர் நெரித்துக் கொன்றிருப்பீர்கள்!  உண்மையா, இல்லையா?” கிருஷ்ணன் அர்ஜுனனை நேருக்கு நேர் பார்த்துக் கேட்டான்.

Wednesday, September 3, 2014

அன்பெனும் ஊற்று!

“இதோ பார், பீமா!  நான் சொல்வதைச் சற்றுக் காது கொடுத்துக் கேள்!  நான் ஹஸ்தினாபுரம் வருவது இப்போதுள்ள நிலையில் சரியில்லை!  நான் வந்தால் என்ன நடக்கும் என்பதை நீ நன்கறிவாய்! மக்கள் அனைவரும் உங்கள் ஐவரையும் மறந்துவிட்டு என் பின்னாலேயே வரத் தொடங்குவார்கள்.  இது நல்லதல்ல. இத்தையதொரு சூழ்நிலையில் மக்களின் கவனம் உங்களிடம், உங்களிடம் மட்டுமே இருக்கவேண்டும் என்பது என் கருத்து.  மக்களின் அன்பும் உங்களுக்கு மட்டுமே கிடைக்கவேண்டும்.”


“என்னைப் பற்றிக் கவலைப்படாதே, கிருஷ்ணா!  நான் எப்போதுமே என்னை நன்கு கவனித்துக் கொள்ளுவேன். தேவைப்பட்டால் என்னுடைய யானையை ஏவி துரியோதனன் அதன் காலின் கீழ் மிதிபடும்படிப் பார்த்துக் கொள்ளுவேன். “ பின்னர் போலியானதொரு கம்பீரத்துடன், “ இல்லை, சகோதரா, இல்லை!  ஒருக்காலும் இல்லை! அது மட்டும் போதாது.  ராக்ஷச அரசன் வ்ருகோதரன் கட்டளை இது! நாங்கள் ஐவரும் எங்கெல்லாம் போகிறோமோ, அங்கெல்லாம் கிருஷ்ண வாசுதேவனாகிய நீயும் வருகிறாய்!  இது என் ஆணை!”


“அல்லது இப்படியும் சொல்லலாம்.  எங்கெல்லாம் வாசுதேவக் கிருஷ்ணன் இருக்கிறானோ அங்கே நாங்கள் இருப்போம்!” புன்னகையுடன் திரௌபதி சொன்னாள்.  அவள் முழு மனதுடன் சொல்வதும் புரிந்தது.  “நீ ஒன்றும் புதிதாகச் சொல்லவில்லை;  நான் சொல்வதைத் தான் சொல்கிறாய்! ஆனால் வேறுவிதமாக!” என்ற வண்ணம் பீமன் திரௌபதியின் முதுகில் அவள் முகம் சுளிக்கும்வரை ஓங்கி அடித்தான்.  “அப்படிப் பார்க்காதே என்னை, துருபதன் மகளே!  நான் இன்னமும் என் மதியவேளை நித்யகர்மவை ஆரம்பிக்கக் கூட இல்லை!” என்றவன் கிருஷ்ணன் பக்கம் திரும்பி, “வாசுதேவா! இப்போது உனக்கு திரௌபதி ஒரு கீழ்ப்படிதலுள்ள மனைவி என்பது புரிந்திருக்கும்.  இல்லை என நீ மறுக்க நினைத்தால், நான் அவளை மீண்டும் கண்ணீர் விடச் சொல்லி ஆணையிடுவேன்.” என்றான்.


“ஹூம், நீங்கள் இருவரும் சேர்ந்து என்னை ஹஸ்தினாபுரம் இழுக்கச் சதி செய்கிறீர்கள் என்பது நன்கு புரிகிறது!” என்றான் கிருஷ்ணன்.  “ஹா, நீ வர மறுத்தாயானால் உன்னைக் கட்டி என் தோள்களில் சுமந்து கொண்டு சென்றுவிடுவேன்.” பீமன் கூறினான். கிருஷ்ணன் உள்ளார்ந்த அன்புடனும், கனிவுடனும், மிகவும் பக்திபூர்வமான உணர்வுடனும் இருவரையும் கொஞ்சநேரம் விடாமல் பார்த்தான்.  பின்னர், அவன் முகம் மெல்ல மெல்ல மென்மையாக மாறியதோடு அல்லாமல் அவன் வழக்கமான மந்திரச் சிரிப்பும் அதில் குடி கொண்டது.  “பீமா, நீ எங்கே இருக்கிறாயோ, அங்கே நானும் இருப்பேன்!” என்றான்.  பீமன் வெற்றி உணர்வோடு திரௌபதியைப் பார்த்தான்.


“நான் என்ன சொன்னேன் உன்னிடம்?  என் இந்தச் சின்னஞ்சிறு சிறுவனாகிய சகோதரன், பெரியண்ணனாகிய என்னைப் பார்த்து பயப்படுகிறான் எனச் சொல்லவில்லை?  அவனை நான் தோள்களில் சுமந்து செல்வேன் என்றதுமே பயந்துவிட்டான் பார்!” என்றான்.  “அதெல்லாம் சரி, ராக்ஷச ராஜா வ்ருகோதரரே, நான் உங்கள் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து விட்டேன். எனக்கு நீங்கள் ஓர் உதவி செய்ய வேண்டுமே!  என் பெரியண்ணன் பலராமனிடம் செல்லுங்கள்.  நீங்கள் ஒரு காலத்தில் அவருக்குப் பிரியமான சீடராக இருந்தீர்கள்.  அவரிடம் சென்று சொல்லுங்கள்.  அவர் வந்தால் தான் நானும் ஹஸ்தினாபுரம் வருவதாகச் சம்மதித்திருக்கிறேன் என்று சொல்லுங்கள்.  அவரையும் ஹஸ்தினாபுரம் அழையுங்கள். அவர் வந்தால் நானும் வருகிறேன்.”


“ஓஹோ, அப்படியா?  அப்படியே செய்தால் போயிற்று!  நான் அழைத்தால் அவர் கட்டாயம் வரச் சம்மதிப்பார். “ என்று பீமன் கூறினான்.  அப்போது கிருஷ்ணன், “பெரியண்ணன் சம்மதித்துவிட்டாரானால்----நிச்சயமாய்ச் சம்மதிப்பார் என்றே எண்ணுகிறேன் ----- யாதவ அதிரதிகளையும், மஹாரதிகளையும், மற்றும் அவரவர் ஊருக்குக் கிளம்பிக் கொண்டிருக்கும் அரசர்கள், சிற்றரசர்களையும் நம்முடன் வருமாறு அழைக்கச் சொல் அவரை.  அவர் அழைத்தால் அவர்களும் வருவார்கள்.”


“அப்படியே செய்கிறேன் கண்ணா!  முதலில் என் மாமனார் துருபதனைப் பார்த்துவிடுகிறேன்.  அவருக்கு என் வணக்கங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.  என் மனைவியை நான் சந்தோஷப்படுத்த வேண்டுமெனில் அவளுக்கு நேரே அவள் தந்தையை வேண்டிய மட்டும் முகஸ்துதி செய்ய வேண்டும்.  அவள் தந்தை  வேறு  பக்கம் திரும்பினால் எவ்வளவு சாபமும் கொடுத்துக்கொள்ளலாம். “ என்றான் பீமன்.


“சரி, இன்னொரு விஷயம் பீமா!  ஹஸ்தினாபுரம் செல்லும் வழியில் ஆயிரக்கணக்கான மக்கள் என்னைப் பார்க்க வேண்டிக் காத்திருப்பார்கள். சாத்யகியையும் மணிமானையும் முன்னால் போய் மக்களிடம் நான் வந்து கொண்டிருப்பதாகவும், அனைவரையும் சந்திப்பேன் என்றும் சொல்லச் சொல்.  மக்கள் அப்போது தான் பொறுமையுடன் காத்திருப்பார்கள்.”


“இந்த மக்களையெல்லாம் சந்தித்து நீ என்னதான் செய்யப்  போகிறாய் கிருஷ்ணா?  என் இவர்களைச் சந்திக்க இவ்வளவு விருப்பம் காட்டுகிறாய்?”  பீமன் கேட்டான்.


“உனக்குப் புரியாது பீமா!  அவர்கள் எனக்கு மிகவும் முக்கியமானவர்கள்.  அவர்கள் எனக்கு மிக வேண்டியவர்கள். “ கிருஷ்ணன் முகம் மங்கியது.  கண்கள் தொலைதூரப் பார்வையை மேற்கொண்டன.  கனவில் பேசுவது போல் அவன் பேசினான்:”  உனக்குத் தெரியுமா?  அவர்கள், அந்த அப்பாவி மக்கள் என்னைப் பார்க்க வருகையில் நம்பிக்கை ஒன்றையே சுமந்து வருவதை நீ அறிவாயா?  என்னைப் பார்க்க வேண்டும் என்பதே அவர்கள் அபிலாஷை!  அது நிறைவேறியதும் அவர்கள் அடைகின்ற சந்தோஷம் அளவிட முடியாதது.  அதோடு மட்டுமில்லை.  அவர்கள் என்னையும் மனதளவில் தேற்றுகின்றனர்.  வலுவூட்டுகின்றனர்.   என்னைப் போன்றதொரு மாட்டிடையனிடம் இந்த அப்பாவி மக்கள் காட்டும்  அன்பும், பாசமும்  என் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்குகிறது.  நான் வீணான ஒரு வாழ்க்கையை வாழவில்லை என்பது புரிகிறது. “ இதைப் பேசும்போது கிருஷ்ணன் குரலில் தெரிந்த வித்தியாசமானதொரு உணர்வு திரௌபதியின் நெஞ்சுக்குள்ளே ஊடுருவி அவள் கண்கள் வழியே மழையாகப்பொழிந்தது.  ஆனால் அவள் மனம் மகிழ்ச்சியால் நிறைந்தது. அன்பெனும் ஊற்று அவள் உள்ளத்திலிருந்து பெருகிப் பிரவாகமாகக் கண்கள் வழியே கொட்டியது.

Tuesday, September 2, 2014

பீமன் அழைப்பும், கண்ணன் மறுப்பும்!

“உனக்கு யார் இப்படி ஒரு சபதம் எடுக்கும்படி கேட்கச் சொன்னார்கள், திரௌபதி?  யார் சொல்லிக் கொடுத்து நீ இவ்விதம் யுதிஷ்டிரனை சபதம் எடுக்க வைத்தாய்?” வாசுதேவக் கிருஷ்ணன் கேட்டான்.  “இது என் யோசனை இல்லை,கோவிந்தா.  தெய்வீகமான ரிஷி நாரதமுனி என் கனவில் வந்தார்.  அவர் தான் இந்த யோசனையைச் சொன்னார்.  இது ஒன்றே சகோதரர்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக்கொள்ளாமல் இருக்கும் வழி என்றும், மேலும் இதனால் எனக்கு நன்மையும் கிடைக்கும் என்றும் கூறினார்.” என்று திரௌபதி கூறினாள்.


“ஓஹோ, அப்படியா?  தவறான வழியில் ஒரு பிரச்னையைத் திர்க்கவேண்டுமெனில் நாரதமுனியைத் தான் கேட்கவேண்டும்.” என்றான் பீமன்.


  “திரௌபதி, கவலைப்படாதே!  இந்த முரடன் பீமன் வெகு விரைவில் உனக்கு அடிமையாகிவிடுவான்.  எப்படி எனச் சொல்லித் தருகிறேன். இவனுக்குப் பசி அதிகம்.  அதிலும் ஒரு ஓநாயைப் போல் எப்போதும் ஏதேனும் தின்றுகொண்டே இருக்க வேண்டும்.  அதற்காகவே இவனை வ்ருகோதரன் என அழைக்கின்றனர். வ்ருகோதரன் என்றால் ராக்ஷச உலகில் ஓநாயின் வயிற்றோடு கூடியவன் எனப் பொருள்.  இவனை நன்கு சம்பிரமமாகச் சாப்பிடவை.  உன் கைகளாலே சாப்பாடு போடு.  பின்னர் காலத்துக்கும் இவன் உனக்கு அடிமை. “ என்றான் வாசுதேவன்.


பீமன் உடனேயே தன் வயிற்றைத் தட்டிக்காட்டி, ஒரு வீம்புத்தனமான திருப்தியுடன், “திரௌபதி, நீ மட்டும் இந்த வயிற்றைச் சம்பிரமமாகச் சாப்பாடு போட்டு திருப்தி செய்து விடு.  நீ செய்த பாவங்களை எல்லாம் மன்னித்துவிடுகிறேன்.” என்றான்.  திரௌபதி  இப்போது தன்னுடைய சுபாவமான நிலைக்கு வந்துவிட்டாள்.  கிருஷ்ணனைப் பார்த்துப் புகார் செய்யும் குரலில், “கோவிந்தா, ஆர்யபுத்திரர் என்னை எவ்வாறு நடத்துகிறார் என்பதற்கு நீயே சாட்சி!  இவர்கள் எடுத்துக் கொண்டிருக்கும் சபதப்படி, நான் இந்த வருடம் முழுவதும், பெரியவருக்கே சொந்தமானவள்.  இவர் நடுவில் புகுந்து சபதத்தை உடைத்துவிட்டார்.” என்றாள்.


“ஆஹா, இதெல்லாம் தேவையில்லாத விஷயம்.  இவற்றைப் பற்றி எல்லாம் பேசாதே திரௌபதி. நான் சபதம் குறித்து அனைத்தும் அறிவேன். அது இன்றைக்கு நடுப்பகலில் இருந்து தான் ஆரம்பம் ஆகப்போகிறது. சூரியன் நடு வானுக்கு வருவதற்குள்ளாகச் சில நொடிகள் இன்னும் மீதம் இருக்கின்றன. அதுவரையிலும் நான் என்ன நினைக்கிறேனோ அதை உன்னிடம் சொல்லலாம்; ஆகவே நீ நினைப்பது நடவாது மகளே! “ என்று அவள் ஆக்ஷேபணையைப் புறம் தள்ளிவிட்டு பீமன் கூறினான்.  பின்னர் புனிதமான ஒன்றை ஏற்பது போல் பாவனை காட்டினான்.  “நான் மதியம் என்னுடைய நித்யகர்மாவைச் செய்ததும், இந்த சபதம் ஆரம்பிக்கும் நாள், நேரம் தொடங்கி விடும்.  அதன் பின்னர் ஒரு வருடத்துக்கு உன்னை நான் பார்க்கக் கூட மாட்டேன்.  ஆனால் அடுத்த வருடம் ஆரம்பிக்கட்டும்;  நான் சேர்த்து வைத்துப் பழி வாங்குவேன்.  நீ என் கால்களில் விழுந்து கதறி அழ வேண்டும்.  அழுது, அழுது உன் கண்ணீர் வற்றும் வரை உன்னை நான் திரும்பிக் கூடப் பார்க்க மாட்டேன்.  உன் கண்களே மங்கிப் போகும்வரை நீ அழ வேண்டுமாக்கும்!” என்ற பீமனுக்கு விளையாட்டுப் போக்கான மனோநிலை திடீரென மாறியது.  கொஞ்சம் தீவிரமான சிந்தனையுடன், “இதோ, பார் திரௌபதி, ஒரு நல்ல மனைவியாக இருப்பாய்.  கொஞ்ச நேரம் நான் சொல்வதைக் கேள்.  நான் சொல்லும்படி செய்.  இந்த கோவிந்தனை, உன் கோவிந்தனை நம்முடன் ஹஸ்தினாபுரம் வரவேண்டும் என்று சொல்!”  என்று சொன்னான்.


தன் திறமையான மயக்கும் குரலில், “ கொஞ்சம் யோசித்துப் பேசு பீமா!  நான் அங்கே வருவதில் என்ன பயன் இருக்கப்போகிறது?  நீங்கள் அனைவருமே அங்கே துரியோதனனோடு உள்ள உங்கள் மனவேறுபாடுகளைக் களைந்து கொள்ள ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது.  இது நல்ல வாய்ப்பு.  நீங்கள் அதற்காகத் தயாராகுங்கள்.  உங்கள் பக்கம் பிதாமகர் பீஷ்மரும், உங்கள் பாட்டியாரான மஹாராணி சத்யவதியும் இருப்பார்கள் என நம்புகிறேன்.”


“எங்கள் பக்கம் யார் இருந்தாலும் எனக்குக் கவலையில்லை, கிருஷ்ணா!  எவரும் என்னுடன் போட்டியிடும் அளவுக்கு நான் தகுதிக் குறைவானவன் அல்ல.  என் தகுதியைக் குறித்து நான் நன்கறிவேன்.  ஆனால் ஒன்று நினைவில் கொள்வாய் கிருஷ்ணா! நாங்கள் ஹஸ்தினாபுரத்தின் படை வீரர்கள் போல் ராணுவப்பயிற்சி பெற அங்கே செல்லவில்லை;  அப்படி ஒரு நினைப்போடு செல்லப் போவதும் இல்லை.  நாங்கள் பாண்டுவின் புத்திரர்கள்.  ஹஸ்தினாபுரத்து அரியணைக்கு முழு உரிமையுடையவர்கள். அதோடு எங்களை இப்போது உயிர்ப்பித்தவன், கிருஷ்ண வாசுதேவனாகிய நீ தான்.  உன்னால் தான் நாங்கள் உயிருடன் இருக்கிறோம்.  நடமாடும் கடவுளான வாசுதேவக் கிருஷ்ணன் எங்கள் பாதுகாவலன் என்பதை அனைவருக்கும் தெரிவிக்க விரும்புகிறோம்.”


“யுதிஷ்டிரனோடு இதைக் குறித்துக் கலந்து ஆலோசித்தாயா, பீமா?  அவருக்கு என்னை அங்கே அழைத்துச் செல்வது அறிவுள்ள, விவேகமான செயல் அல்ல என்பது நன்கு புரியும்.  அவர் புரிந்து கொள்வார். “


“அவர் அதை எங்கள் நால்வரிடமும் விட்டு விட்டார், கிருஷ்ணா.  நாங்கள் தான் நீ எங்களுடன் வரவேண்டும் என முடிவு செய்தோம்.  எங்கள் தாயும் அப்படியே விரும்புகிறார்.  இவர்களைத் தவிர நாங்கள் கலந்து கொள்ளவேண்டிய அடுத்த நபர் குடும்பத்தில் திரௌபதி தான்.  அவளோ இதோ இங்கே இருக்கிறாள். “ திரௌபதி பக்கம் திரும்பிய பீமன், “ இளவரசி, மரியாதைக்குரிய பாஞ்சால நாட்டு இளவரசி, நீ சொல், உன் கோவிந்தன் நம்முடன் வந்தாகவேண்டும் என்பதை!  நீ மட்டும் அவனிடம் சொல்லவில்லை என வைத்துக்கொள்!  என்ன நடக்கும் தெரியுமா?  அடுத்த வருடன் உன் எலும்புகள் அனைத்தும் நொறுங்கும். “


கொஞ்சம் வேடிக்கையுடன் இதைக் கூறிய பீமன் சொன்ன விதத்தைப் பார்த்த கிருஷ்ணனும், திரௌபதியும் சிரித்தனர்.  பீமன் கிருஷ்ணன் பக்கம் திரும்பி, “ ஏன் சிரிக்கிறாய் கிருஷ்ணா  இதில் சிரிக்க என்ன இருக்கிறது?  நீ ஒரு கல்லைப் போன்ற இதயம் படைத்த மாட்டிடையன்!   திரௌபதியை ஹஸ்தினாபுரத்திற்குத் தனியே அனுப்புவதில் உனக்குச் சம்மதமா?  அதில் உள்ள கொடுமை உனக்குப் புரியவில்லையா?  துரியோதனன், கர்ணன், ஷகுனி, துரியோதனனின் மற்ற சகோதரர்கள் அனைவருமே கொடுமையில் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லையே!  அஸ்வத்தாமா? ஒவ்வொருவரும் கொடுமையில் போட்டி போடுபவர்களாயிற்றே! இந்தப் பரிதாபமான பெண்ணை ஏமாற்றுகிறாயா கிருஷ்ணா!  நீ தான் இவள் தந்தையைச் சுயம்வரம் நடத்தச் சொன்னாய். எங்களை ராக்ஷசவர்த்த்தில் இருந்து வெளியேற்றி சுயம்வரத்திலும் கலந்து கொள்ள வைத்து இந்தப்பெண்மணியை எங்கள் தலையிலும் கட்டிவிட்டாய்.  இப்போது நீ எப்படி இவளை ஹஸ்தினாபுரத்துக்குத் தன்னந்தனியே அனுப்பி வைக்கச் சம்மதிக்கிறாய்?”


திரௌபதி பக்கம் திரும்பிய பீமன் கண்ணடித்துச் சிரித்தான்.  அதைப் பார்த்தும், அவனுடைய போலியான முறையீட்டைப் பார்த்தும் திரௌபதிக்கு அடக்க முடியாமல் சிரிப்பு வந்தது.  “இதோ பார், துருபதன் மகளே!  என்னையே பார்க்காதே!  நீ அப்படிப் பார்ப்பதைப் பார்த்தால் இவன் யார் முட்டாள் என நீ நினைக்கிறாப் போல் தெரிகிறதே!  சும்மா, அப்படிக் கொஞ்சம் கண்ணீர் விடு! உன் கண்களை அழுதது போல் சிவப்பாக்கிக்கொள்.  விம்மவானும் விம்மு.  உன்னால் எது முடியுமோ அதைச் செய்! இந்த உன் கோவிந்தன் மனதில் அழும் பெண்ணுக்கென்று ஒரு மென்மையான இதயம், உணர்வுகள் இருக்கின்றன.  நீ அழுவதைப் பார்த்தாலே அது உருக ஆரம்பிக்கும்