Sunday, September 7, 2014

அர்ஜுனனின் முட்டாள் தனம்!

“நாங்கள் ஏன் அப்படிச் செய்கிறோம், கிருஷ்ணா!  நாங்கள் சகோதரர்கள் ஒருவர் மேல் ஒருவர் பொறாமை கொண்டவர்கள் இல்லை!”


கிருஷ்ணன் சிரித்தான்.  “ இப்போது என்ன நடந்திருக்கிறது அர்ஜுனா!  இதே காரணத்துக்காகத் தான், அதாவது உன் மனைவியை உன்னிடமிருந்து நான்கு வருடங்கள் பிரிக்கிறாரே என்னும் காரணத்துக்குத் தான் நீ உன் பெரிய அண்ணன் யுதிஷ்டிரனிடம் கோபம் கொண்டிருக்கிறாய்.  ஆனால் ஒரு விஷயம் நிச்சயமாய்ப் புரிகிறது.  உங்கள் உறவுமுறைகளை எப்படியானும் ஒரு ஒழுங்குக்குள்  கொண்டு வர வேண்டும்.  அதற்கு ஏதேனும் செய்தாக வேண்டும்.  ஒன்றைச் செய்தால் மற்றது சரியில்லை.  சரியானதைச் செய்தால் எவருக்கும் சரியாயில்லை!”


“இது உன் பார்வையில் நகைப்புக்கிடமாகி இருக்கிறது கிருஷ்ணா!  இது சிரிக்க வேண்டிய விஷயம் அல்ல.  நான் மகிழ்ச்சியில்லாமல் வருத்தத்தில் இருப்பதைப் பார்த்து நீ பரிகாசம் செய்து சிரிக்கிறாய்.   அது உனக்கு சந்தோஷத்தைத் தருகிறது அல்லவா? என் வரையில் இது மரண அடிக்கு ஒப்பாகும்.” அர்ஜுனன் கோபத்துடனேயே சொன்னான்.


“திரௌபதி இதைக் குறித்து என்ன நினைக்கிறாள் என்பது உனக்குத் தெரியுமா? அவள் உணர்வுகள் குறித்து நீ என்ன நினைக்கிறாய்?”


“முதலில் நான் என்ன நினைக்கிறேன் என்பதைப் பார் கிருஷ்ணா!” சிடுசிடுத்தான் அர்ஜுனன். “சுயம்வரத்திற்கு நான் சென்றபோது, என் வாழ்க்கையின் ஒரு புதிய அத்தியாயத்தை நான் ஆரம்பிக்கப் போகிறேன் என்றே உணர்ந்தேன்.  அப்படியே நடந்தது.  நான் போட்டியில் ஜெயித்தேன். ஆர்யவர்த்தத்தின் சிறந்த வில்லாளியாக நான் அறிவிக்கப்பட்டேன். திரௌபதி தங்களுக்குக் கிடைக்கமாட்டாளா என அனைத்து அரசர்களும் பேராசையுடன் காத்திருக்கையில் அவள் எனக்கு மணமகளாய்க் கிடைத்தாள்.  நான் மகிழ்ச்சியின் உச்சியில் இருந்தேன்.  அவள் எனக்குக் கிடைத்ததை என் அதிர்ஷ்டமாய்க் கருதினேன்.  திரௌபதிக்கும் சந்தோஷம் என்றே நினைத்துக் கொண்டிருந்தேன்.  பின்னர் அம்மாவிடம் சென்றால், அவள் திரௌபதியை நாங்கள் ஐவரும் பங்கிட்டுக் கொள்ளவேண்டும் எனச் சொல்லிவிட்டாள். அதை எங்கள் குல முதல்வரும் குருவுமான ஆசாரியர் வியாசரும் அங்கீகரித்து விட்டார்.  நீ ஒரு வார்த்தை கூட அதை எதிர்த்துச் சொல்லவே இல்லை.  ஏன்? கிருஷ்ணா?  ஏன்?  இப்போது என்னவென்றால் எங்கிருந்தோ நாரதமுனிவர் ஒரு விசித்திரமான ஆலோசனையுடன் வந்துவிட்டார்.  அதை ஏற்றுக் கொண்டு என் அண்ணனும் ஒரு முடிவை எடுத்திருக்கிறார்.  என்னை ஒன்றுமில்லாமல் நசுக்கிவிட்டனர்.  நான் திக்குமுக்காடிக் கொண்டிருக்கிறேன்.” தாங்க முடியாத ஆத்திரத்துடன் அர்ஜுனன் பேசினான்.


“உன் இடத்தில் நான் இருந்தாலோ, அல்லது எவர் இருந்தாலும், இப்படித் தான் நினைப்பார்கள் அர்ஜுனா!  இப்போது இதற்கு என்ன செய்யலாம் என்பதை நாம் பார்ப்போம்.  நீ இப்போது செய்யக் கூடியது என்னவென்றால் என்னுடன் துவாரகைக்கு வந்துவிடுவது தான். “தன் குரலில் எவ்விதமான விருப்பு, வெறுப்பையும் காட்டாமல் அமைதியாகக் கண்ணன் இதை அர்ஜுனனிடம் தெரிவித்தான்.  யோசித்து யோசித்துப் பேசினான் என்பது அவன் மெல்ல, மெல்லச் சொல்வதில் இருந்து தெரிந்தது.


“ஆமாம், அது தான் சரி!  நான் உன்னுடனேயே வருகிறேன்.  இந்தச் சூழ்நிலையில் என்னால் தாக்குப் பிடிக்க முடியாது.”


“சரி அர்ஜுனா! உன் மூத்த சகோதரர்  இதற்கு என்ன நினைப்பார் ?  நீ இல்லாமல் அவரால் தாக்குப் பிடிக்க முடியுமா?”


“அதைக் குறித்து எனக்குக் கவலையில்லை!” உணர்ச்சி வசப்பட்டிருந்த அர்ஜுனன், பட்டென்று மறுமொழி கொடுத்தான்.  மேலும், “ அவர் தன்னைத் தானே பார்த்துக்கொள்வார்!” என்றவன் சற்றே நிதானித்துக் கொண்டு, “ம்ம்ம்ம்ம்ம், பீமனும், இரட்டையர்களும் அவரை நன்றாகப் பார்த்துக் கொள்வார்கள்.” என்று முடித்தான்.  “உன் தாயையுமா?  அவர்கள் பார்த்துக் கொண்டுவிடுவார்கள் அல்லவா?” கிருஷ்ணன் மென்மையாகக் கேட்டான்.


“ஓ, என் தாய்!  என் தாய்!” தலை குனிந்த வண்ணம் கொஞ்சம் யோசித்தான் அர்ஜுனன். “ஒரு வேளை…..ஒரு வேளை அவளுக்கு மனம் உடைந்து போகலாம்.  எங்களில் எவரேனும் ஒருவர் பிரிவதைக் கூட அவளால் அனுமதிக்க இயலாது.  அவள் இதைத் தாங்க மாட்டாள்.”


“திரௌபதி என்ன நினைப்பாள்?” கண்ணன் அப்பாவி போல, ஏதுமறியாதவன் போல அர்ஜுனன் வழியிலேயே போய் அவனை மாற்ற முயற்சித்தான்.  அர்ஜுனன் இப்போதும் கொஞ்சம் யோசித்தான். “திரௌபதிக்குக் கட்டாயம் மனம் உடைந்து போகும்.  இல்லையென்றாலும் அவள் மனதளவில் காயப்பட்டுத் தான் போவாள்.  ஒருவேளை நான் அவளை விட்டுச் சென்றுவிட்டது அவளைத் தனிமைப்படுத்தியதாகவும் நினைக்கலாம். “ அர்ஜுனன் தன்னையறியாமல் உண்மையை ஒத்துக் கொண்டான்.


“அப்போது சரி.  ஒவ்வொரு நான்காம் வருடம் முடிந்து உன் முறை ஆரம்பிக்கும்போதெல்லாம் நீ துவாரகையை விட்டு வந்துவிடலாம்.” என்று சிரித்த வண்ணம் கண்ணன் கூற, மீண்டும் வெகுண்டு எழுந்தான் அர்ஜுனன்.  “என்னைப் பரிகாசம் செய்யாதே, கிருஷ்ணா!  நான் எவ்வளவு தூரம் பாதிக்கப்பட்டிருக்கிறேன் என்பதை நீ புரிந்து கொள்ளவில்லை.” என்று வெடித்தான். அவனுடைய அளவு கடந்த துக்கம் குரலில் தெரிந்தது.


“உன்னைப் போல் நானும் பாதிப்பு அடைந்துவிட்டேனே என நினைத்துக் கொண்டிருந்தேன் என்றால், அதனால் என்ன பயன் உண்டாகும் அர்ஜுனா! “ இதைக் கேட்டுக் கொண்டே கிருஷ்ணன் சற்றே யோசித்தான்.  பின்னர் ஏதோ புதிய விஷயம் தோன்றியதைப் போல் அர்ஜுனனிடம், “ நீ என்ன செய்திருக்க வேண்டும் தெரியுமா? ஆசாரியர் அவளிடம் ஐவரையும் மணந்து கொள்வது சரி என்று சொன்னபோது மறுத்திருக்க வேண்டும்.  திரௌபதியிடமே உன்னை மட்டும் மணந்து கொள்ளும்படி வற்புறுத்தி இருக்க வேண்டும்.  ஆனால் திரௌபதியின் முடிவே இறுதியானது என்ற தீர்மானத்துக்கு நீயும் கட்டுப்பட்டுத் தான் இருந்தாய்!”


“எனக்குத் தெரிகிறது, கோவிந்தா.  நன்கு புரிகிறது.  இந்தக் குழப்பத்துக்கு என்னுடைய பலஹீனமான மனதே காரணம்.  அப்போது நீங்கள் அனைவரும் இந்த ஏற்பாட்டுக்குச் சம்மதம் தெரிவிக்கவே என்னால் எதுவும் பேசவோ, செய்யவோ முடியாமல் போயிற்று.  சுயம்வரத்துக்குள்ளே இன்னொரு சுயம்வரத்தை நான் முற்றிலும் எதிர்பார்க்கவே இல்லை, கோவிந்தா! நான் என்ன செய்வது?  இப்போது அதை நினைத்து என்ன செய்ய முடியும்?  ஏதேனும் ஒரு நல்வழியை நீதான் எனக்குக் காட்டவேண்டும்.” அர்ஜுனன் இறைஞ்சினான்.


“நீ இப்போது இருக்கும் சூழ்நிலையில்  உனக்கேற்றதொரு வழியை நீதான் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.  அப்போது தான் உன் சுயமரியாதையை நீயே காத்துக் கொண்டவன் ஆவாய்!”


“எனக்கு என்ன சுயமரியாதை இருக்கிறது கண்ணா?  சுயமரியாதை எனக்கு எப்படி வரும்? என் கண்களுக்கே நான் மிகவும் சிறியவனாகத் தென்படுகிறேன். என் சுயமதிப்பை என்னிடமே நான் இழந்து விட்டேன்.  என் திறமையால் நான் திரௌபதியை வென்றேன்.  ஆனால் என் முட்டாள்தனத்தால் அவளை இழந்தேன்.”

1 comment:

ஸ்ரீராம். said...

சபாஷ்... சபாஷ்.... அர்ஜுனனின் உணர்வுகள் உண்மையானவை.

கண்ணன் அர்ஜுனனுக்குத்தான் ரொம்பக் க்ளோஸ் இல்லை?

தருமர் கடைசி நாட்களில் திரௌபதி விழுந்ததும் 'அவள் அர்ஜுனனுக்குத்தான் உண்மையாக இருந்தாள்' என்று தன்னையும் அறியாமல் (?) உணர்வை வெளிப்படுத்துவார் இல்லையா?