Saturday, September 27, 2014

உத்கோசகம் வந்த ஊர்வலம்!

பீமன் மிகவும்  மனக்கிளர்ச்சியுடன் காணப்பட்டான்.  மணமக்கள் ஹஸ்தினாபுரம் செல்லும் ஊர்வலம் ஆரம்பித்து விட்டது.  அதன் தலை பாகத்தில் ஓர் அழகான யானை மேல் அமர்ந்த பீமனுக்கு அமரும்போதே மனம் மிகவும் உணர்ச்சி வசப்பட்டது. ஒரு மாபெரும் படையையே வென்று விட்டு நாட்டுக்குத் திரும்பும் உணர்வு அவனுள் ஏற்பட்டிருந்தது.  வெற்றி கண்ட படையை தான் வழிநடத்திச் செல்லப் போவதாகவும் அவனுக்குள் ஓர் உணர்வு.   எங்கே பார்த்தாலும் பீமன் காணப்பட்டானோ என்னும்படிக்கு பீமன் எங்கும் இருந்தான். மனம் விட்டு அனைவருடனும் மென்மையாகவும், கனிவாகவும் பேசிக் கொண்டு, களைப்புற்றிருந்தவர்களை உற்சாகப்படுத்திய வண்ணம், சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறவர்களுக்கு உதவிகள் செய்த வண்ணம், நடுவே சமையல் மேற்பார்வைகளும் பார்த்துக் கொண்டும், தன்னுடன் கூட வந்த அனைவருக்கும் எல்லாவிதமான சௌகரியங்களும் செய்து கொடுக்கப்பட்டிருக்கிறதா?  அனைவருக்கும் உணவு சரியாகப் போய்ச் சேர்கிறதா என்பதை எல்லாம் கவனித்துக் கொண்டும் அங்குமிங்கும், எங்கும் பீமன் காணப்பட்டான்.


இத்தனைக்கும் நடுவே கூடப் பயணம் செய்யும் பெண்களோடு அவ்வப்போது தன் நகைச்சுவை உணர்வைக் காட்டிப் பேசிச் சிரிப்பதிலும் பின்வாங்கவில்லை.  அந்தப் பெண்மணிகள் எவ்வளவு உயர்ந்த ஸ்தானத்தில் இருந்தாலும் சரி;  சேடிகளாக இருந்தாலும் சரி; பீமன் அதைக் குறித்துக் கவலை கொள்ளவில்லை.  தன் வார்த்தைகளால் அவர்களை முகம் சிவக்க வைத்தான்.  ஒரு சில பெண்கள் வெட்கம் தாங்க முடியாமல் அவர்கள் புடைவை முந்தானையால் முகத்தை மூடிக் கொண்டு வேறுபக்கம் திரும்பிச் சிரித்தனர்.     பீமனின் இந்த உற்சாகமான மனோபாவம் அந்த ஊர்வலத்தில் பயணம் செய்த அனைவரையும் தொற்றிக் கொண்டது.  காம்பில்யத்தில் ஆரம்பித்த அந்த ஊர்வலம், கங்கைக் கரையோடு சென்று உத்கோசகத்தில் தண்டு இறங்கியது.  அங்கே தான் அவர்கள் ஆஸ்தான குரு மற்றும் அரசியலில் ஆசானாக சுயம்வரத்துக்குச் செல்லும் முன்னர் நியமிக்கப்பட்டிருந்த தௌம்ய ரிஷியின் ஆசிரமம் இருந்தது.


கங்கைக்கரையின் இருபுறமும் வசித்த நாகர்கள் மற்றும் ஆரியர்கள் மத்தியில் வாரணாவதத்தில் இறந்து போனதாகக் கருதப்பட்ட பாண்டவர்கள் உயிருடன் இருக்கும் செய்தியும், காம்பில்யத்தில் சுயம்வரத்தில் அர்ஜுனன் கலந்து கொண்டு திரௌபதியை வென்ற நிகழ்ச்சியும், பாண்டவர்கள் ஐவரும் திரௌபதியை மணந்த செய்தியும் பரவி இருந்தமையால் அப்போது அங்கே அனைவரும் அதைக் குறித்தே பேசி ஆச்சரியப்பட்டுக் கொண்டிருந்தனர். அதோடு அவர்களுடன் கிருஷ்ண வாசுதேவன் வரும் செய்தியும் பரவியதால் மக்கள் அலை அலையாக வந்து பழங்கள், பூக்கள், பால், தேன், தேங்காய்கள் போன்றவற்றைக் கிருஷ்ணனுக்குச் சமர்ப்பித்தனர்.  அவன் கால்களில் விழுந்து ஆசிகளைப் பெற்றனர்.  அவனைக் கட்டித் தழுவி மனமாரத்  திருப்தி கொண்டனர்.



பீமன் நினைத்தமாதிரியே அனைத்தும் நடந்து கொண்டிருந்தது.  ஊர்வலத்தின் முன்னிலையில் இருந்தபடியால் பலரும் அவனைத் தான் கிருஷ்ண வாசுதேவன் என நினைத்து மரியாதைகளைச் செய்ய உள்ளூரச் சிரிப்புடன் பீமன் அதை ஏற்றுக் கொள்வான்.  அவர்கள் மரியாதைகளைச் செய்து முடித்ததும், வந்திருக்கும் மக்களைப் பார்த்து இடி இடியெனச் சிரித்து அவர்கள் தவறைச் சுட்டிக்காட்டுவான் பீமன்.  தன் யானையும், தானும் செய்யும் இந்தத் தந்திரங்களை எல்லாம் ஒரு நொடிக்காகக் கூட வீணாக்காமல் அங்கே கூடி இருக்கும் கூட்டமும், மற்றும் ஊர்வலத்தில் வரும் மக்களும் இதன் மூலம் மகிழ்ச்சி அடையும்படி பார்த்துக் கொண்டான் பீமன்.


 உத்கோசகத்தில் தௌம்ய ரிஷியின் ஆசிரமம் பெரிதாக இருந்தது.  நதிக்கரையோடு பல காத தூரம் சென்றது.  பல வருடங்களாக தௌம்ய ரிஷியும், அவருடைய சீடர்களும் இங்கே ஆசிரமம் அமைத்துத் தங்கியதில் வெறும் கல்வி மட்டும் கற்றுக் கொடுக்கவில்லை.  காட்டுக்குள் வசித்து வந்த பல மக்களை ஆரியர்களின் வாழ்க்கை முறைக்கு மாற்றியும் வந்தனர். அவர்களுக்கு ஒழுக்கம், கட்டுப்பாடு ஆகியவற்றை போதித்து, திருமண நடைமுறைகள், குடும்ப வாழ்க்கை, இல்லற தர்மம் ஆகியவற்றையும் போதித்து, மத ரீதியான சடங்குகளைக் கற்றுக் கொடுத்து அவர்களை நல்வழிப் படுத்தி வந்தனர்.  இந்த ஊர்வலம் ஆசிரமம் வந்ததும் தௌம்ய ரிஷியும், சீடர்களும் வந்திருக்கும் அரச குடும்ப விருந்தினர்களுக்காகத் தங்கள் குடில்களை ஒழித்துக் கொடுத்தனர்.  மற்றவர்கள் ஆங்காங்கே கங்கைக்கரையிலும் அடுத்திருந்த மைதானத்திலும் கூடாரங்களை அமைத்துக் கொண்டு தங்கினர்.  யானைகள், குதிரைகள் ஆகியன அவற்றைப் பராமரிப்பவரின் மேற்பார்வையிலேயே விடப்பட்டன.  மாட்டு வண்டிகளில் இருந்து மாடுகள் அவிழ்க்கப்பட்டு கங்கையில் குளிப்பாட்டப்பட்டு தீவனம் போடப் பட்டு ஓய்வில் இருந்தன.  ரதங்களை ரத சாரதிகளும், மற்றவர்களும் கங்கையில் கழுவிச் சுத்தம் செய்து மீண்டும் செல்ல வேண்டிய பயணத்துக்குத் தயார் செய்தனர்.



இத்தனைக்கும் பீமனின் அயராத உழைப்பும் ஒரு காரணம்.  அவனும் ஓய்வு எடுக்காமல் வேறு எவரையும் ஓய்வு எடுக்க விடாமலும் அவன் கடுமையாக உழைத்தான்.  தனக்குத் தானே ஏற்படுத்திக் கொண்ட இந்த உத்தியோகத்தில் அவன் மகிழ்வும் அடைந்தான். இவ்வளவு வேலைகளுக்கு இடையேயும், இத்தனை பேரோடு பயணம் செய்து வந்த போதும், தாமரைப்பூப் போன்ற பாதங்களுக்குச் சொந்தக்காரியான காசி ராஜகுமாரி ஜாலந்தராவை பீமனால் மறக்கவே முடியவில்லை.  அவள் அழகான முகம் கண்ணெதிரே வந்த போதெல்லாம் பீமன் முகத்தில் விளக்கேற்றினாற் போன்றதொரு பிரகாசம். அவள் அண்ணன் சுஷர்மா இவர்களுடன் தரைவழிப் பயணம் செய்ய மறுத்து கங்கையில் படகுப் பயணத்தையே விரும்பினான்.  வேறு வழியில்லாமல் பீமனும் இதை  ஒரு சவாலாக ஏற்க நேர்ந்தது.



உத்கோசகத்தை  அவர்கள்  ஊர்வலம் நெருங்கியதும், பீமன் தன் அருமை யானையை ஓட்டிக் கொண்டு கங்கைக்கரையில் அதைக் குளிப்பாட்டும் சாக்கில் போய் நின்று கொண்டிருந்தான்.  சற்று நேரத்திலேயே அவன் எதிர்பார்த்தது நடந்தது.  அதைக் குறித்து அவனுக்கு மகிழ்ச்சியும் ஏற்பட்டது.  இரண்டு பெரிய படகுகள் கங்கையில் மிதந்து வந்தன.  அதில் அன்ன பக்ஷியைப் போல் அலங்கரித்திருந்த படகில் காசி ராஜகுமாரன் சுஷர்மாவும், அவனருகே அவன் சகோதரி ஜாலந்தராவும் அமர்ந்திருந்தனர்.  இரு படகுகளும் கங்கைக்கரையில் அந்தத் துறைக்கு வந்ததும், அங்கே நங்கூரமிட்டு நின்றன.  இதைப் பார்த்த பின்னால் வந்த பரிவாரங்களும் ஆங்காங்கே நின்றன.

1 comment:

ஸ்ரீராம். said...

நடுவில் இது வேறா? பீமனுக்கு அங்கேயும் ஒரு கண்ணா?