Sunday, October 19, 2014

துயரத்தில் துரியோதனன்!

இப்போது நாம் அவசரமாக ஹஸ்தினாபுரம் போயாகணும்.  அங்கே துரியோதனன் ஏற்கெனவே கோபத்தில் இருக்கிறான். அவனை மேலும் கோபமூட்டும்படியான நிகழ்ச்சிகள் வேறு நடக்க இருக்கின்றன.  வாருங்கள்! விரைந்து செல்வோம்!  அட!  அதிகாலை நேரமன்றோ!  அதனால்  இப்போது தான் விடிய ஆரம்பித்துள்ளது.  ஹஸ்தினாபுரம் மெல்ல மெல்ல விடியலுக்குத் தன்னைத் தயாராக்கிக் கொண்டிருக்கிறது.  இதோ கங்கைக்கரை!  கரையில் நீள நெடுக ஆங்காங்கே காணப்பட்ட அரச மாளிகைகள் கரையின் பெரும்பாலான பகுதியில் காணப்பட்டன.  சில மாளிகைகளின் பக்கவாட்டில் கங்கை ஓடினால், சிலவற்றின் பின் பக்கமும், சில மாளிகைகள் கங்கையைப் பார்த்தவண்ணமும் அமைக்கப்பட்டிருந்தன.  ஆங்காங்கே பணியாளர்கள் தங்கள் அதிகாலை வேலைகளைத் தொடங்கிவிட்ட சப்தமும் கேட்டுக் கொண்டிருந்தது.


துப்புரவுப் பணியாளர்கள் சுத்தம் செய்து கொண்டிருக்கப் பெண் வேலையாட்கள் கங்கையிலிருந்து நீரை மொண்டு வந்து சுத்தம் செய்து கொண்டிருந்தனர்.  தண்ணீர்ப் பாத்திரங்களில் தண்ணீர் நிரப்பப்பட்டது.  மாளிகையில் கட்டப்பட்டிருந்த கோயில்களில் வழிபாடுகளை நடத்தும் பிராமணர்கள் கங்கையில் இறங்கித் தங்கள் நித்ய கர்மானுஷ்டானங்களைச் செய்த வண்ணம் கைகளில் நீரை ஏந்தி அர்க்யம் விட்டுக் கொண்டிருந்தனர்.  அனைவரும் சூரியன் உதிக்கும் கிழக்குத் திசையை நோக்கி நின்ற வண்ணம் சூரியனுக்கு வழிபாடு செய்து கொண்டிருந்தனர்.


ஒரே ஒரு அரசமாளிகை மட்டும் அங்கே தனித்துக் காணப்படவில்லை.  தனித்தனியாகப் பல மாளிகைகள், பணியாளர் குடியிருப்பு எனக் காணப்பட்டன.  அத்தனை மாளிகைகளுக்கும் சேர்த்து நீண்ட பெரிய சுற்றுச் சுவரும் கட்டப்பட்டிருந்தது.  அந்தச் சுற்றுச் சுவரை ஒட்டிய ஒரு பெரிய மாளிகையில் திருதராஷ்டிரன் குடி இருந்தான்.  அந்தக் காலத்தில் பொதுவாக அனைவரும் திறந்த வெளியிலேயே படுக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தனர்.  அதைப் போல திருதராஷ்டிரனும் திறந்த வெளியில் கட்டிலைப் போட்டுக் கொண்டு அதன் மேல் படுத்துத் தான் தூங்குவான்.  இப்போதும் வெள்ளியால் இழைக்கப்பட்ட தன் தந்தக் கட்டிலில் பாதி படுத்த வண்ணமும், பாதி அமர்ந்த வண்ணமும் காட்சி அளித்தபடி அமர்ந்திருந்தான் திருதராஷ்டிரன்.  இரு பக்கமும் தலையணைகளை அண்டக் கொடுத்த வண்ணம், வயதுக்கு மீறிய முதுமையோடு நரைத்த தலைமயிரோடும், தாடியோடும், சுருக்கங்கள் விழுந்த நெற்றியோடும் காணப்பட்டான்.  மிகவும் பலஹீனமாகவும் காணப்பட்டான். வலுவற்ற அவன் மனம் அவன் முகத்திலேயே வெளிப்படையாகத் தெரிய செயலற்று அமர்ந்திருந்தான்.


அவனருகே தரையில் துரியோதனன் அமர்ந்திருந்தான்.  குரு வம்சத்து யுவராஜாவான துரியோதனன்  தன் தந்தையின் பாதங்களின் மேல் தன் தலையை வைத்த வண்ணம் கவலையும், துயரமும் நிறைந்த முகத்தோடு காணப்பட்டான்.  அவன் மனம் சுக்குச் சுக்காக உடைந்து விட்டது.  மீளாத் துயரத்தில் ஆழ்ந்திருந்தான் துரியோதனன்.  வருடக்கணக்காக அவன் அவமானங்களுக்கு மேல் அவமானத்தையே சந்தித்து வந்திருக்கிறான். ஒன்று மாற்றி ஒன்று அவமானம் அடைந்திருக்கிறான்.  இப்போதோ!  அனைத்தையும் தூக்கிச் சாப்பிடும் வண்ணம் அவனை இழிவு செய்யும் பெரியதொரு நிகழ்வு நடந்துவிட்டது.  மிகச் சிறு வயதிலிருந்தே அவன் சந்தித்தது ஏமாற்றங்களே.


அவன் தந்தை திருதராஷ்டிரன் கண் தெரியாக் குருடனாகப் பிறந்தது அவனுடைய மிகப் பெரிய துரதிர்ஷ்டம்.  ஏனெனில் அதன் பொருட்டே அவன் தந்தைக்கு இந்த மாபெரும் குரு வம்சத்தினரின் சாம்ராஜ்யத்துக்கு அதிபதியாக ஆகும் பாக்கியம் கிட்டவில்லை.  அந்தக் காலத்து ஆரியர்களிடம்  ஒரு குருடனை அரசனாக்கும்படியான நியமங்களுக்கு இடமில்லாமல் போய்விட்டது.  ஆகவே திருதராஷ்டிரனின் இளைய சகோதரன் பாண்டு குரு வம்சத்து அரியணையில் ஏறும்படி ஆகிவிட்டது.   பாண்டு சக்கரவர்த்தியானதில், துரியோதனனுக்கு நியாயப்படி கிடைக்கவேண்டிய மாபெரும் சாம்ராஜ்யம் கிட்டவில்லை.  ஏனெனில் பாண்டுவிற்குப் பிறகு அவன் மூத்த மகனுக்குத் தான் அந்த சாம்ராஜ்யம் போகும்.  ஹூம்!  அவன் தகப்பன் குருடனாக இருந்தது துரியோதனன் செய்த தவறா!  அவன் செய்யாத ஒரு தவறுக்கு எப்படி எல்லாம் தண்டனை அனுபவிக்க வேண்டி வருகிறது!  அவனிடம் என்ன இல்லை?


தைரியம், ஆர்வம், விடாமுயற்சி, போர் புரியும் திறன், கதையில் செய்யும் சாகசங்கள், வில் வித்தை, ரதம் ஓட்டுதல், குதிரை ஏறுதல், யானை ஏற்றம் என அனைத்திலும் திறம்படப் பயிற்சி பெற்றவனே துரியோதனன்.  ஆஹா, இது அனைத்துக் கடவுளரும் அவனுக்கு எதிரே செய்த மாபெரும் சதியன்றோ!  இதை அவன் எவ்வகையிலேனும் தடுத்தாக வேண்டும்.  இதை வெல்ல வேண்டும்.  இதோடு மட்டுமா?  தாத்தா  பீஷ்மர்!  அவன் சிறுவனாக இருந்தபோதில் இருந்தே அவருக்கு அவனிடம் உண்மையான பாசம் இல்லை.  அந்தக் கிழவி,  நம் தந்தையின் பாட்டி, மஹாராணி, சத்யவதி அம்மையார்!  ஹா!  உண்மையில் அந்தக் கிழவியும், அவள் மூத்தாள் மகனுமான அந்தக் கிழவன் பீஷ்மனும் தானே இந்த ஹஸ்தினாபுரத்தை ஆள்கின்றனர்!இருவருக்கும் துரியோதனனிடமும், அவன் சகோதரர்களிடமும் பாசம் என்பதே இல்லை.  அவர்களின் பாசமெல்லாம் பாண்டுவின் புத்திரர்கள் என அழைக்கப்படும் அந்த ஐவரிடம் தான்.  ஐவரையும் சித்தப்பா பாண்டுவின் புத்திரர்களாக ஏற்றுக் கொண்டதோடு அவர்களுக்கு உரிய அரச மரியாதைகளையும் கிடைக்கும்படி செய்துவிட்டனரே!  அந்தக் கிழவர்கள் இருவரும் சூழ்ச்சிக்காரர்கள்!


கொடுமையிலும் கொடுமையாகப் பாண்டவர்கள் ஐவரும் மிகவும் தேஜஸோடும், அழகும், கம்பீரமும் நிறைந்தவர்களாகக் காட்சி அளிக்கின்றனர்.  புத்திசாலிகளாகவும், திறமைசாலிகளாகவும் இருப்பதோடு அனைவரையும் வெகு விரைவில் கவர்ந்து விடுகின்றனர்.  மக்களிடமும் மிகவும் அன்பைப் பெற்றிருக்கின்றர்.  அனைவரின் நம்பிக்கை நக்ஷத்திரங்களாக அவர்கள் திகழ்கையில் துரியோதனனை நம்புவார் யாருமில்லை.  அவனைக் கண்டாலே அனைவரும் நடுங்குகின்றனர்;  அச்சமடைகின்றனர்.  அவன் மனைவியான பானுமதி உட்பட! ஹூம்! வாழ்க்கையே வீணாகிவிட்டது.  என்னைப் போன்ற துரதிர்ஷ்டக்காரன் யாருமில்லை.  இப்படி எல்லாம் நினைத்து நினைத்துத் தன் மனதை விஷமாக்கிக் கொண்டிருந்தான் துரியோதனன்.  பாண்டவர்கள் மேல் அவன் கொண்டிருந்த பொறாமையும் சேர்ந்து கொண்டு அவன் வெறுப்பில் இன்னமும் துணை புரிய பொறாமையும் வெறுப்பும் கலந்ததொரு அணைக்க முடியா அக்னியில் வெந்து சாம்பலாகிக் கொண்டிருந்தான் துரியோதனன்.


துரியோதனனின் பொறாமையை அதிகப்படுத்தும் வண்ணம் பாண்டவர்களில் மூத்தவன் ஆன யுதிஷ்டிரனுக்கு யுவராஜப் பட்டாபிஷேஹம் செய்து வைக்கப்பட்டு அவன் யுவராஜாவாக அறிவிக்கப்பட்டான்.  ஹூம்!  இதை துரியோதனன் தந்தை திருதராஷ்டிரனும் ஒத்துக்கொள்ள நேர்ந்தது.  துரியோதனனின் ஆசைக்கனவுகளுக்குக் கிடைத்த மாபெரும் மரண அடியாக அது அமைந்தது.  அதற்காகவெல்லாம் துரியோதனன் வாளாவிருந்துவிடவில்லை.  உட்பகையைத் தூண்டி விட்டுக் கொண்டே இருந்தான்.  அவனால் இயன்ற அளவுக்கு அவன் பகையைத் தூண்ட அதற்குப் பக்கபலமாக அவன் மாமன் சகுனியும், நண்பர்கள் அஸ்வத்தாமா, கர்ணன் ஆகியோரும் உதவினார்கள்.  கடைசியில் அவனுடைய தொல்லை பொறுக்க முடியாமல் பாண்டவர்களைத்  தாத்தா பீஷ்மர் நாடு கடத்தி வாரணாவதத்துக்கு அனுப்பி வைத்தார்.  இங்கேயும் துரியோதனன் சும்மா இருக்கவில்லை.


தன்னுடைய தீவிர முயற்சிகளால் வேலையாட்களைத் துணைக்கு வைத்துக் கொண்டு பாண்டவர்கள் ஐவரும் அங்கேயே அரக்கு மாளிகையில் எரிந்து சாம்பலாகும்படி ஏற்பாடுகள் செய்து மாளிகைக்குத் தீயும் வைக்கச் செய்தான். அவர்கள் எரிந்து சாம்பலாகிவிட்டதாகவே அனைவரும் கூறினார்கள்.  கடைசியில் அவனுக்கு எதிர்ப்பே இல்லாமல் போக, அவன் நினைத்ததும் நடந்தது.  துரியோதனன் இந்த மாபெரும் சாம்ராஜ்யத்தின் யுவராஜாவாக அறிவிக்கப்பட்டான்.  துரியோதனன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.  ஆனால்……ஆனால்……!!


துரியோதனனின் விருப்பத்துக்கு மாறாகவே அனைத்தும் நடந்தது.  அவன் பெயரளவுக்கே யுவராஜாவாக இருந்தான்.  அவனுடைய யுவராஜப் பதவியை வைத்துக் கொண்டு அவனால் எதையும் சாதிக்க முடியவில்லை.  அவன் என்ன செய்தாலும் குறுக்கே வந்தார் தாத்தா பீஷ்மர்!  அவன் விரும்பிய வண்ணம் எதையும் செய்ய அவர் அவனை அனுமதிக்கவே இல்லை. சாம்ராஜ்யத்தின் அரசியல் நிலவரங்களைக் கட்டுப்படுத்தும் பொறுப்பை அவரே மேற்பார்வை பார்த்து வந்தார்.  அவருடைய முழுக்கட்டுப்பாட்டில் அது இருந்து வந்தது.   இந்நிலையில் தான் துரியோதனனுக்கு மற்றொரு இடி! அவனுடைய குருவான துரோணர் அவன் ஆசைகளில் மண்ணை வாரிப் போட்டார்.  தன்னுடைய தனித்துவம் வாய்ந்த திறமைகளால் குரு வம்சத்தினரின் அந்த மாபெரும் சாம்ராஜ்யத்தின் வீரர்களுக்குப் பயிற்சி அளிக்கும் குருவாகவும், மேலும் அந்த மாபெரும் படையை நடத்திச் செல்லும் தளபதியாகவும் நியமிக்கப்பட்டிருந்த துரோணர் துரியோதனனை நம்பவில்லை.  அது மட்டுமா?  சாம்ராஜ்யத்தின் மக்களுக்கு எப்படியோ துரியோதனன் தான் வாரணாவதத்து அரக்கு மாளிகைக்குத் தீ வைத்துப் பாண்டவர்களைக் கொன்றான் என்னும் விஷயம் தெரிந்து விட்டிருந்தது. ஆகவே அவன் வெளியே உலாச் சென்றாலே மக்கள் அவனைப் பார்க்க மறுத்தனர்; வெறுத்தனர்.  பாண்டவர்களின் மரணத்துக்கு அவன் தான் பொறுப்பு என்பதைச் சுட்டிக்காட்டிப் பேசிக் கொண்டனர்.

Wednesday, October 15, 2014

பீமன் சத்தியம் செய்கிறான்!

பீமன் உள்ளே நுழைந்ததுமே கிருஷ்ணன் அவனைப் பார்த்துச் சிரித்தான்.  “இதோ நம் வீராதி வீரன், கதாநாயகன் வந்துவிட்டான்!  யுதிஷ்டிரா, எவ்வளவு அருமையான சகோதரனைப் பெற்றிருக்கிறாய் நீ!  இவன் மட்டும் இல்லை எனில் நேற்று சுஷர்மாவும், ஜாலந்தராவும் நதியில் மூழ்கி இருப்பார்கள்.  பீமன் தக்க சமயத்தில் அங்கே சென்று அவர்களைக் காப்பாற்றினான்.  அது மட்டுமா!  அவன் நகுலனை ஏகசக்கரத்துக்கு அனுப்பி வைத்திருக்கிறான். எதற்குத் தெரியுமா!  ஏகசக்கரத்து அரசனின் படகை வாங்கி வருவதற்காக. அப்போது தான் சுஷர்மாவும், ஜாலந்தராவும் இன்றிரவே ஹஸ்தினாபுரம் செல்ல முடியும் அல்லவா!நகுலனுடன் சாத்யகியும், சிகுரி நாகனும் உடன் சென்றிருக்கின்றனர். இப்படி ஒரு தர்மசங்கடமான சூழ்நிலையைச் சமாளிக்கவும், சிந்தித்துச் செயலாற்றவும் வ்ருகோதர அரசனைத் தவிர வேறு எவரால் முடியும்?”


பீமனுக்கு என்ன சொல்வது எனத் தெரியவில்லை.  கிருஷ்ணன் முகத்தையே பார்த்தான்.  முகத்தில் குறும்பு கூத்தாடியது.  கண்களும் சிரித்தன. கிருஷ்ணனின் உடல் முழுதுமே சிரித்தது போல் இருந்தது பீமனுக்கு. தன் சகோதரர்களைப் பார்த்தான். இருவர் முகங்களிலும் பீமனைக் குறித்த பெருமிதம் தெரிந்தது.  பீமனுக்கு என்ன செய்வது எனப் புரியவில்லை. கண்ணன் சொன்னவற்றையும், அதை வைத்து பீமனைப் பாராட்டும் விதமாய்ப் பார்க்கும் சகோதரர்கள் இருவரையும் உண்மையைச் சொல்லி மிரள வைப்பதா?  கண்ணன் சொல்வதை ஏற்பதா?  சகோதரர்களின் பாராட்டை ஏற்பதா?  அல்லது மறுப்பதா?  என்ன செய்யலாம்!  அல்லது கண்ணன் இப்படிச் செய்து விட்டானே என அவன் மேல் கோபப்படுவதா? கோபத்தை அடக்கிக் கொள்வதா?  இந்தக் கண்ணன் நம்மை தர்மசங்கடமான நிலையில் அல்லவோ ஆழ்த்திவிட்டான். “ஆம், ஆம், நான் தான் செய்தேன்.  இவற்றை எல்லாம் நான் தானே செய்தேன்!  கண்ணா!  நீ சர்வ நிச்சயமாக அறிவாய் அல்லவா?”



“ஆஹா, பீமா! பீமா!  யுதிஷ்டிரா, பீமன் தன்னடக்கத்தோடு சொல்லிக் கொள்கிறான். இல்லையா பீமா!” என்று கிருஷ்ணன் சொல்ல மூவரும் சிரித்தனர்.  “தன்னடக்கம்!  எனக்கு!” கொஞ்சம் கத்திய பீமன்,”என் வாழ்நாளிலேயே இதான் முதல்முறை!  என்னையும் ஒருவர் தன்னடக்கம் எனச் சொன்னது.” என்றும் தனக்குத் தானே கூறிக்கொள்வது போல் சொல்லிக் கொண்டான்.  சற்று நேரத்தில் அங்கிருந்து யுதிஷ்டிரனும், பீமனும் வெளியேறினார்கள்.  பீமன் அதுவரை அடக்கி வைத்திருந்த கோபமெல்லாம் ஒருசேரப் பொங்கி வரக் கோபத்துடன் கிருஷ்ணன் மேல் பாய்ந்தான்.  தன் மூர்க்கத்தனம் சற்றும் குறையாமல் கிருஷ்ணனைப் பார்த்து, “கோவிந்தா, கோவிந்தா, இரு இரு, என்றாவது ஒரு நாள் உன் மண்டையை நான் உடைத்து விடுகிறேன்.”  என்றான்.


கிருஷ்ணன் உல்லாசமாகச் சிரித்தான்.  “பொறு, பீமா!  என் மண்டையை நீ நிதானமாக ஒரு நாள் உடைக்கலாம்.  அதற்கு முன் செய்ய வேண்டிய காரியங்கள் நிறைய இருக்கின்றன.  நீ ஜாலந்தராவிடம் ரகசியமாக ஏதோ கிசு கிசுத்தாயாமே!  அது என்ன?  அதை மட்டும் என்னிடம் சொல்லிவிடு!”


சட்டென பீமனின் மனோபாவம் மாறியது. கொஞ்சம் கபடமாகச் சிரித்தான்.  சிரித்துக் கொண்டே, “ நான் அவள் காதுகளில் ரகசியம் பேசினேனா?  நான் பேசினேன்?  அப்படியா?  அது உனக்கு எப்படித் தெரியும்?”


“அவள் என்னிடம் புகார் கொடுத்தாள்.” என்றான் கிருஷ்ணன்.  தன் ஆள்காட்டி விரலால் பீமனைப் பயமுறுத்துவது போல் சைகையும் செய்தான்.  “ஆஹா, உன்னிடம் அவள் புகார் அளித்தாளா?  கோவிந்தா, கோவிந்தா, நீ என்ன மாயம் செய்கிறாய்?  இந்த உலகிலுள்ள அனைத்து இளம்பெண்களும் தங்கள் அந்தரங்கத்தை உன்னிடம் பகிர்ந்து கொள்கின்றார்களே!  இதில் அவர்களுக்கு எவ்விதத் தயக்கமும் இருப்பதாகத் தெரியவில்லையே! எப்படி இது?  அது சரி, ஜாலந்தரா உன்னிடம் என்ன சொன்னாள்?”


“அவள் பேச்சை விடப் பார்வை பல விஷயங்களைச் சொன்னது.  உன்னைப் பற்றி உன் தாயிடம் பேசிக் கொண்டிருந்தேன் காலையில்.  அப்போது அவளைப் பார்த்தால் அவள் முகம் பல விஷயங்களைச் சொன்னது.”


“உண்மையாகவா?  கிருஷ்ணா, நான் ஜாலந்தராவைக் கல்யாணம் செய்து கொள்ள விரும்புகிறேன்.  நீ எனக்கு இந்த விஷயத்தில் உதவுவாயா?”


“கட்டாயம் பீமா!  ஆனால் நீ எனக்கு ஒரு உறுதிமொழி கொடுக்கவேண்டும்.”


“என்ன அது”


“நீ அவள் கையைத் திருமணத்துக்காகப் பற்ற வேண்டிய நாள் இன்னும் தூரத்தில் இருக்கிறது.  எப்போது தெரியுமா?  யுதிஷ்டிரன் உண்மையாகவே மன்னன் ஆக வேண்டும்.  நீ யுவராஜா ஆகவேண்டும். பேருக்கு அல்ல.  உண்மையாகவே. “


“ஆஹா, அதற்கென்ன, கிருஷ்ணா!  நான் கட்டாயம் சத்தியம் செய்து கொடுக்கிறேன்.  நான் விரைவில் யுவராஜாவாக ஆகிவிடுவேன் என்னும் நம்பிக்கைஎனக்குஇருக்கிறது.  அதிலே ஒரே ஒரு சங்கடம் தான்.  என் அருமைப் பெரியப்பாவின் அன்பு மகன் துரியோதனன் விரைவில் யமதர்மனுக்குத் தோழனாகச் செல்ல வேண்டும்.  அந்த நாள் விரைவில் வரவேண்டும்.”


“சரி, பீமா! அப்போது நீ சத்தியம் செய்திருக்கிறாய்.  இதை நினைவில் வைத்துக் கொள்.  கிருஷ்ணன் தன் உள்ளங்கையை நீட்டியவண்ணம் பீமனுக்கு எதிரே காட்ட, பீமனும் தன் உள்ளங்கையால் கிருஷ்ணன் கைகளின் மேல் ஓங்கி அடித்துச் சத்தியம் செய்தான்.


Sunday, October 12, 2014

கண்ணனின் கொட்டமும், பீமனின் திண்டாட்டமும்!

அன்றைய தினம் பீமன் எழுந்திருக்கச் சற்று நேரம் ஆனது.  தாமதமாகவே எழுந்தான் பீமன்.  அவனுக்குள் சந்தோஷ ஊற்றுப் பெருக்கெடுத்தது. அவனுடைய தீவிர முயற்சியால் ஜாலந்தராவைத் தரை வழிப் பயணம் செல்ல வேண்டிய நிலையை உருவாக்கிவிட்டான் பீமன்.  அதில் அவன் சந்தோஷம் அடைந்தான். நதிக்கரைக்குச் சென்று குளித்து நித்திய கர்மானுஷ்டானங்களை முடித்துக் கொண்டான்.  பின்னர் தன் தாய் தங்கி இருக்கும் குடிலுக்குச் சென்று தாயை நமஸ்கரித்தான்.  பின்னர் அவள் அருகே அமர்ந்திருந்த ஜாலந்தராவை ஒரு கள்ளப்பார்வை பார்த்தான்.  ஜாலந்தராவும் அதே ரகசியத்தைக் கடைப்பிடித்துத் தன் பார்வையைத் திருட்டுத்தனமாக பீமன் மேல் காட்டினாள்.


அப்போது குந்தி பேச ஆரம்பித்தாள்.  “காசி அரச குடும்பத்துப் படகுகள் நீரில் மூழ்க ஆரம்பித்தது மிகவும் துரதிர்ஷ்டவசமான ஒன்று.  மூழ்க இருந்த படகுகளில் இருந்து இவர்களை  நீ எவ்வளவு சாமர்த்தியமாகவும் கெட்டிக்காரத்தனமாகவும் காப்பாற்றினாய் என இளவரசி எனக்குச் சொல்லிக் கொண்டிருந்தாள்.”


“தாயே, நீங்களே நன்கறிவீர்கள் அல்லவா?  இத்தகைய சங்கடங்களில் மாட்டிக் கொள்பவர்களைத் தப்புவித்து மீட்டுக் கொண்டு வருவதற்கே நான் என் வாழ்நாளைச் செலவு செய்து வருகிறேன்.””மீண்டும் ஒரு வெற்றிச் சிரிப்போடு ஜாலந்தரா பக்கம் கள்ளப்பார்வை பார்த்தான் பீமன்.  அப்போது மீண்டும் குந்தி பெருமையுடன், “அப்படி எனில் உன்னைப் பாராட்டுவதை எங்களிடம் விட்டு விடு பீமா!” என்றாள்.  “ஆஹா, தாயே, என்னைப் பாராட்டுவதா?  என்னைப் பாராட்டுவதை மனமின்றி அல்லவோ செய்கிறீர்கள் நீங்கள் அனைவரும். முழு மனதோடு பாராட்டுபவர் யார்? நல்லதிற்கே காலம் இல்லை, அம்மா! ஆனால் எனக்கு இளவரசனும் இளவரசியும் காப்பாற்றப்பட்டது மிக மகிழ்ச்சியை அளிக்கிறது.  நான் மட்டும் தக்க சமயத்தில் அங்கே செல்லவில்லை எனில் நதியின் ஆழத்தில் இருவரும் மூழ்கி இருப்பார்கள்.” தன் குறும்பை நினைத்து உள்ளூரச் சிரித்த வண்ணம் கூறினான் பீமன்.


குந்தி புன்னகை புரிய, ஜாலந்தரா தனக்கு வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டாள்.  “அதோடு இல்லை பீமா!  நீ நகுலனையும், சாத்யகியோடு ஏகசக்கரத்துக்கு அனுப்பி அங்குள்ள அரசகுலப் படகைக் கொண்டு வரச் செய்து இவர்களை இன்றே அனுப்ப ஏற்பாடு செய்ததும் பாராட்டுக்கு உரியதே!” என்றாள் குந்தி.  பீமனுக்குத் தூக்கி வாரிப் போட்டது.  “என்ன!  என்ன!  நான் நகுலனை அனுப்பினேனா?  அதிலும் ஏக சக்கரத்துக்கு?  அரசகுலப்படகை வாங்கி வந்து இன்றே இவர்களை அனுப்ப ஏற்பாடு செய்தேனா? “பீமனின் ஆச்சரியம் அவன் குரலின் ஏற்ற, இறக்கத்திலிருந்து புரிந்தது.  குந்தி தன் ஆள்காட்டி விரலை பீமன் முன் நீட்டி பயமுறுத்துவது போல் விளையாட்டாக ஆட்டிய வண்ணம், “ஓஹோ, பீமா!  இதிலும் நீ என்னை ஏமாற்றப் பார்க்காதே!  உனக்குத் தெரியாமலா நகுலன் சென்றான்!”  என்றாள்.  மேலும், “ஏகசக்கரத்து அரசன் உன்னுடைய தோழன்.  வேறு எவர் நகுலனை அங்கே அனுப்ப முடியும்?  எனக்குத் தெரியும் அப்பா!  நீ எவ்வாறு அனைவரின் சௌகரிய, அசௌகரியங்களைக் கவனித்துக் கொள்கிறாய் என்பதை நான் நன்கறிவேனே!” என்று குந்தி மீண்டும் பாராட்டுக் குரலில் கூறினாள்.


“அது சரி அம்மா!  இவை அனைத்தையும் உங்களுக்குச் சொன்னவர் யார்?” பீமனுடைய பிரமிப்பு இன்னமும் நீங்கவில்லை.  தான் ஏதேனும் கனவு காண்கிறோமா என அவன் எண்ணினான்.  “ஓஹோ, அது உனக்குத் தெரியாதா?  வேறு யார்?  கோவிந்தன் தான் சொன்னான்.  இங்கே வந்திருந்தான்.  அவன் தான் அனைத்தையும் என்னிடம் சொன்னான்.  நீ அவர்களை எப்படிக் காப்பாற்றினாய் என்பதையும் சொன்னான்.  அதோடு இன்றே அவர்கள் திரும்ப நீ செய்திருக்கும் ஏற்பாடுகளையும் கூறினான். அதிலும் இன்றிரவே இவர்கள் திரும்ப நீ ஏற்பாடு செய்திருக்கிறாய்.  ஆஹா, என் மகன் பீமனை நினைத்து நான் பெருமை கொள்கிறேன்.  பீமா, பீமா, நீ மிகவும் நல்ல பையன்.” குந்தியின் குரலில் கர்வம் மிகுந்திருந்தது.


பீமனுக்குத் தான் செய்ததாகக் கூறும் நல்ல காரியத்தை மறுக்கவும் மனமில்லை.  அதே சமயம் அவனால் நகுலன் அனுப்பப்பட்டான் என்பதை நம்புவதும் கடினமாக இருந்தது.  திரும்பத் திரும்ப அவன், “நான் நகுலனை ஏகசக்கரத்துக்கு அனுப்பினேனா?  நான் நகுலனை அனுப்பினேனா?” எனக் கேட்டுக் கொண்டான். “ஆம், பீமா, ஆம், நீ தான் அனுப்பி உள்ளாய்.  நீ நகுலனை அனுப்பியது குறித்து மிகவும் பெருமையுடன் கூறினான் கோவிந்தன்.  பீமன் எவ்வளவு கவனமாக எல்லா ஏற்பாடுகளையும் செய்கிறான் என எடுத்துச் சொன்னான்.  உன்னைக் குறித்து அவனுக்கு மிகவும் பெருமை.  அதோடு நீ ஏகசக்கரத்தையும், அதன் மக்களையும் ராக்ஷசர்களிடமிருந்து காப்பாற்றி இருக்கிறாய்.  ஆகவே அதற்கான நன்றியைத் தெரிவித்துக் கொள்ள ஏகசக்ர மன்னனுக்கும் இது சரியானதொரு சந்தர்ப்பமாக அமைந்து விட்டது.”


“ஆமாம், ஆமாம்,” அவசரமாக ஆமோதித்தான் பீமன்.  கண்ணன் ஏதோ குறும்பு வேலை செய்திருக்கிறான் இதில் என்பது வரை அவன் புரிந்து கொண்டான்.  வேகமாக தன் தாயின் குடிலில் இருந்து வெளியேறியவன் கண்ணனின் குடிலை நோக்கிச் சென்றான்.  ஆஹா!  அங்கே கண்ணன் தனியாக இருக்கவில்லை!  கூடவே யுதிஷ்டிரனும், அர்ஜுனனும் இருந்தனர்.

Saturday, October 11, 2014

சுஷர்மன் கோபம்; கண்ணன் சாந்தம்!

“ஹூம், படகுகள் எப்படி ஓட்டையாயின என அறிவாயா கோவிந்தா?  அவை ஒருவரின் கட்டளையின் பேரில்  ஓட்டை ஆயின! அல்ல…. அல்ல விருப்பத்தின் பேரில் ஓட்டையாயின.  நான் என்ன செய்வது என்று எனக்குப் புரியவில்லை.”


கிருஷ்ணன் அவன் தோள்களைப் பிடித்து அழுத்தி ஆறுதல் சொன்னான். இருவரும் சேர்ந்தாற்போல் நதிக்கரையை நோக்கி ந்நடக்க ஆரம்பித்தனர். கண்ணன் பேச ஆரம்பித்தான்.


“இது மிக துரதிர்ஷ்டவசமானது.  நாங்கள் ஹஸ்தினாபுரம் வந்தடைவதற்குள்ளாக நீங்கள் அங்கே போயாகவேண்டும் அல்லவா?  உன்னை உடனடியாக ஹஸ்தினாபுரம் வரச் சொல்லி துரியோதனன் அவசரச் செய்தி அனுப்பி இருக்கிறான் எனக் கேள்விப் பட்டேனே!”


“ஆம், நாங்கள் விரைவில் ஹஸ்தினாபுரம் சென்றடைய வேண்டும்.  துரியோதனன் அதில் மிக ஆர்வம் காட்டுகிறான்.  எங்கள் வரவை ஆவலுடன் எதிர்பார்க்கிறான்.  நீங்களெல்லாம் வருவதற்குச் சில நாட்கள் முன்னாலேயே அவன் எங்களை அங்கே எதிர்பார்க்கிறான்.  இப்போது நாங்கள் இங்கே தடுத்து நிறுத்தப்பட்டோம்.  நாங்கள் உங்களுடன் தான் வந்தாகவேண்டும்.  வேறு வழியில்லை.  கடவுளே, மஹாதேவா!  துரியோதனன் எங்களைக் குறித்து என்ன நினைப்பான்?”


“நீங்கள் அனைவரும் எங்களுடன் வருவதை நான் சிறிதும் ஆதரிக்கவில்லை. அந்த யோசனை எனக்குப் பிடிக்கவில்லை.  உனக்குத் தெரியும் அல்லவா? பானுமதியை நான் என் சகோதரியாக ஸ்வீகரித்திருக்கிறேன் என்பதை அறிவாய் அல்லவா?  நீ மட்டும் துரியோதனனால்  குறித்த நேரத்துக்குள்ளாக ஹஸ்தினாபுரம் சென்ல்லவில்லை எனில் துரியோதனன் அவள் மேல் தன் கோபத்தை எல்லாம் காட்டுவான்.  அவளால் தாங்க இயலாது.”


“ஆஹா, எனக்குத் தெரியும், அவன் அவளை என்னவெல்லாம் செய்வான் என!  அவளைத் தூக்கி எறிவான் அல்லது அவள் இடத்திற்கு வேறு யாரையேனும் கொண்டு வருவான். அதிலும் நாங்கள் பாண்டவர்களோடு சேர்ந்து வருவதை அறிந்தால் நாங்கள் அவர்களுக்கு எங்கள் ஆதரவைக் காட்டுகிறோம் என நினப்பான்.  பாண்டவர்களுடன் அவனுக்கு இருக்கும் சண்டை பெரிதாகவும் ஆகி விடும்.  எங்களையும் வெறுக்க ஆரம்பிப்பான்.  கடவுளே, கடவுளே, இத்தகைய நிலைமையில் நான் என்னதான் செய்வது? ஒன்றும் புரியவில்லை!”


“கவலையே படாதே!  பீமன் இருக்கிறான்,  பார்த்துக் கொள்வான்.”


“என்ன, பீமன் பார்த்துக் கொள்வானா?  கோவிந்தா! இந்தத் தடங்கலை ஏற்படுத்தி எங்களை இங்கேயே நிறுத்தியதே அவன்  தான்.  அவன் செய்த விளையாட்டுத் தனத்தால் ஏற்பட்ட விளைவு தான் இது.  நாங்கள் நதிவழிப் பயணம் செய்வதை நிறுத்த வேண்டி அவன் வேண்டுமென்றே போட்ட திட்டம் தான் இது.”  கோபத்துடன் கத்தினான் சுஷர்மன்.


“நீ பீமனைச் சரியா நடத்தவில்லை.  அவனிடம் நட்போடு பழகு!”


“பீமனிடம் நட்பு? அவனை நான் சரியாக நடத்தவில்லையா?  கோவிந்தா!  அவன் கழுத்தை வெறும் கைகளாலேயே நெரித்துவிடலமா எனத் தோன்றுகிறது எனக்கு. “


“நீ ரொம்ப அவசரப் படுகிறாய் சுஷர்மா! துரியோதனனிடம் நீ தோற்றுப் போய் நிற்பதை பீமன் விரும்ப மாட்டான்.”


“ஹூம், துரியோதனனிடம் தோற்றுப் போயாகிவிட்டது.   பீமன் நாங்கள் உங்களுடன் தரைவழிப் பயணம் செய்ய வேண்டும் என்றே விரும்பினான்.  அவன் விரும்பியது போலவே இப்போது நடக்கிறது. “


“சுஷர்மா, அவன் உங்களை நதிப் பயணம் தான் செய்யச் சொல்கிறான். அதுவும் நாளை நள்ளிரவுக்குள் நீங்கள் கிளம்ப வேண்டும். நீ தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறாய்.”


“ஓஹோ, கோவிந்தா, நாளை என்பது இதோ சூரிய உதயம் ஆனதும் வந்துவிடும்.  ஆனால் நாங்கள் போவது எங்கனம்?”


ஏகசக்கரத்து அரசனின் அரசப்படகை வாங்கி வருவதற்காக பீமன் தன் சகோதரன் நகுலனை அங்கே அனுப்பி வைத்துள்ளான்.  இன்று மாலைக்குள் அது இங்கே வந்துவிடும்.”


“என்ன? நிஜமாகவா?  இன்றிரவு நாங்கள் கிளம்புவதற்கு பீமனா இந்த ஏற்பாடுகளைச் செய்தான்?” சுஷர்மாவால் இதை நம்பவே முடியவில்லை.  “ஆம், சுஷர்மா.  உண்மை தான்.  நகுலன், சாத்யகி மற்றும் நாகநாட்டு இளவரசன் மணிமானின் படைத்தளபதியான சிகுரி நாகன் மூவரும் சிறு படகு ஒன்றில் ஏகசக்கரம் நோக்கிப் பயணித்திருக்கின்றனர். “


“ஓஹோ, அப்படியா?” எனக் கேட்ட சுஷர்மாவின் குழப்பம் முற்றிலும் அகலவில்லை.  என்றாலும் கொஞ்சம் தன்னை நிதானப்படுத்திக் கொண்டு, மீண்டும் பேச ஆரம்பித்தான்.  இம்முறை அவன் குரலில் கொஞ்சம் பணிவு தெரிந்தது.  “ பின் அவன் ஏன் எங்கள் படகுகளை ஓட்டை போட்டு முழுகச் செய்தான்?” என்று வினவினான். “இளவரசே, பல சமயங்களில் நம் கண்கள் நம்மை ஏமாற்றும்.  நாம் காண்பதில் உண்மை இருப்பது போலத் தோன்றினாலும் அதில் பொய்யும் இருக்கும்.”


“போகட்டும், கோவிந்தா!  உண்மையாகவே இன்றிரவே நான் கிளம்புவதற்கான ஏற்பாடுகளை பீமன் மட்டும் செய்திருந்தான் எனில் நான் என் வாழ்நாள் முழுதும் அவனுக்குக் கடமைப் பட்டிருப்பேன்

Wednesday, October 8, 2014

கண்ணன் காப்பாற்றுகிறான்!

 “அவர்கள் இப்போது எங்கிருக்கின்றனர்?” கிருஷ்ணன் கேட்டான்.


“மயக்கத்தில் இருந்த ஜாலந்தராவை பீமன் எங்கள் தாய் குந்தியின் குடிலுக்கு அழைத்துச் சென்றான். அங்கே அவளைத் தாயின் பொறுப்பில் ஒப்படைத்திருக்கிறான்.  சுஷர்மா கடும் கோபத்தில் அனைவரையும் வசைபாடிக் கொண்டு எங்கள் குடிலுக்கு வந்தவன், துணிகளை மாற்றிக் கொண்டு பீமனின் படுக்கையில் படுத்தான்.  அவனுக்கு நன்கு புரிந்து விட்டது. இது பீமனின் விளையாட்டு என்று.  வேண்டுமென்றே படகுகளில் துளைகள் போட்டு அவனுடைய நதி வழிப் பயணத்தைத் தடுத்துத் தரை வழிக்கு மாற்றி விட்டான் என்பதை சுஷர்மா புரிந்து கொண்டு விட்டான்.”


“பீமன் என்ன நோக்கத்தில் இதைச் செய்திருக்கிறான் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. அவன் மூளை முழுவதும் காசி இளவரசி ஜாலந்தராவே நிறைந்திருக்கிறாள்.  அவள் நம்மோடு தரைவழிப் பயணத்தில் ஹஸ்தினாபுரம் வர வேண்டும் என பீமன் எதிர்பார்க்கிறான்.  அவர்கள் இருவரும் காம்பில்யத்தில் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொண்டனர். அப்போது இருவரும் ஒருவர் பால் ஒருவர் ஈர்க்கப்பட்டு விட்டனர்.”


“ஆஹா, இது தான் என் அண்ணன் பீமன்!  நாங்கள் திரௌபதியை மணந்து இன்னமும் ஒரு மாசம் கூட ஆகவில்லை.”


கிருஷ்ணன் புன்னகையுடன், “ உனக்குத் தான் உன் தமையனைத் தெரியும்.  ஒருவேளை அவன்  திரௌபதி நான்கு வருடங்களுக்கு ஒருமுறை தான் சேர்ந்து இருக்கலாம் என முடிவு கட்டியதற்காக அவளைத் தண்டிக்கிறானோ?”


“அது எப்படி இருந்தாலும் சரி கிருஷ்ணா!  திரௌபதி எடுத்தது சரியான முடிவு என்பதில் எங்களில் யாருக்கும் சந்தேகம் இல்லை.  நியாயமான முடிவு!”


“பீமனுக்கு உன்னுடைய முடிவு பிடித்திருக்காது.  அவன் உன்னுடன் ஒத்துப் போக மாட்டான். நீ பார்க்கும் கோணமும், அவன் பார்க்கும் கோணமும் வேறுபட்டிருக்கும்.  உன்னை மாதிரி இந்த விஷயத்தை அவன் எதிர்கொள்ள மாட்டான்.” கிருஷ்ணன் புன்னகையுடன் கூறினான்.


“கோவிந்தா!  நீ சொன்ன மாதிரி சுஷர்மா  துரியோதனன் குறித்த காலத்துக்குள் ஹஸ்தினாபுரத்தை அடையவில்லை எனில் துரியோதனன் அவனை என்ன செய்வான் எனச் சொல்ல முடியாது.  மேலும் அவன் தன்னுடைய மைத்துனன் ஆன சுஷர்மாவிடம் நாங்கள் அங்கே வரும்போது அந்த நிகழ்வை எப்படி எதிர்கொள்வது என ஆலோசிக்கவும் விரும்பலாம்.  அதையும் நாங்கள் அங்கே சென்றடைவதற்குள்ளாக அவன் ஆலோசிக்க விரும்பலாம்.”


“ஏன் ஒருவேளை என்கிறாய்?  நிச்சயமாக அவன் திட்டம் அது தான் என நான் அறிவேன்.  இல்லை எனில் உடனே ஹஸ்தினாபுரம் வரவேண்டும் என்று துரியோதனன் சுஷர்மாவுக்குச் செய்தி அனுப்பி இருக்கமாட்டான்.  பீமன் செய்திருப்பது மிக துரதிர்ஷ்டவசமான ஒன்று.  துரியோதனனை மீண்டும் மீண்டும் எரிச்சலூட்டுவது போல் நடந்து கொள்வதால் அவனை வெல்ல முடியாது.”


“கோவிந்தா, இப்போது என்ன செய்வது?  அரச குடும்பத்தினரின் படகு தயார் ஆவதற்குக் குறைந்தது பதினைந்து நாட்களாவது தேவைப்படும்.  நாமோ இன்னமும் மூன்று நாட்களில் இங்கிருந்து கிளம்ப வேண்டும். “


“பீமன் சரியான வழியில் திரும்புவதற்கு நாம் தான் அவனுக்கு உதவவேண்டும்.”


“கோவிந்தா, அவனை எப்படிச் சரியான வழியில் திருப்புவது?  அவன் இப்போது தானே பின்னிக்கொண்டதொரு வலையில் மிக மோசமாகச் சிக்கி இருக்கிறான்.  சுஷர்மா எங்கள் குடிலுக்கு வரும்போது அவன் அடைந்திருந்த கோபத்தை நீ பார்க்கவில்லை கிருஷ்ணா!  அவனுக்குச் சிறிதும் சந்தேகமே இல்லை.  இந்த வேலையை பீமன் தான் செய்திருக்கிறான் என்பதும், அவன் போட்ட துளைகளால் தான் படகு மூழ்க ஆரம்பித்தது என்பதையும் சுஷர்மா நன்கு புரிந்து கொண்டிருக்கிறான்.”


“அவன் மனோநிலை புரிந்து கொள்ளக் கூடிய ஒன்றே. ஒருவேளை….ஒருவேளை ஜாலந்தரா பீமனை மணந்து கொண்டாளானால்?? அது பானுமதிக்கும் ஓர் தவிர்க்க முடியாத சங்கடமான சூழ்நிலையைத் தோற்றுவிக்கும்.  “


“கோவிந்தா, கோவிந்தா!  என்ன செய்வது?”


“இந்தக் குறும்புத்தனமான விளையாட்டின் விளைவுகளைச் சரி செய்ய வேண்டும்.”


“எப்படி, கிருஷ்ணா, எப்படி? எவ்வாறு?  இந்த ஆசிரமத்தில் படகுகள் இருப்பதாகத் தெரியவில்லையே?  சுஷர்மாவும், இளவரசி ஜாலந்தராவும் அவர்களின் பரிவாரங்களும் செல்லத் தக்க பெரிய படகல்லவோ வேண்டும்!”


“கவலைப் படாதே நகுலா!  நாம் வந்த வழியில் ஏகசக்கரத்தில் ஒரு அரச குடும்பப் படகு நங்கூரமிட்டிருந்ததை நான் கண்டேன்.  “இதைச் சொன்ன வண்ணம் சாத்யகியைப் பார்த்துத் திரும்பிய கோவிந்தன், “சாத்யகி, உடனே இளவரசன் மணிமானைச் சென்று பார்ப்பாயாக!  உனக்கும் நகுலனுக்கும் துணையாக சிகுரி நாகனை அனுப்பி வைக்கும்படி அவனிடம் கேள்!  இங்கு இருப்பதிலேயே சிறந்த படகை எடுத்துச் செல்! நீ வெகு விரைவில் ஏகசக்ரத்தை அடைவாய் என எண்ணுகிறேன்.  அங்கே அரசனைப் போய்ப் பார்! அவனிடம் பீமனுக்கு அரசகுடும்பப் படகு தேவை என்று தெரிவி!  இந்தப் படகில் சுஷர்மாவையும், அவன் சகோதரியையும் உடனடியாக ஹஸ்தினாபுரம் அனுப்பியாக வேண்டும் என்று நிலைமையைச் சொல்!  ஏகசக்ரத்தின் அரசனை பீமன் ராக்ஷசர்களின் படை எடுப்பு, அவர்களின் தாக்குதல்கள் போன்றவற்றிலிருந்து காப்பாற்றி இருக்கிறான்.  ஆகவே அவன் பீமனுக்குக் கடமைப் பட்டிருக்கிறான்.  தன் மக்களையும் தன் நாட்டையும் காத்த பீமனின் வேண்டுகோளை அவன் புறக்கணிக்க மாட்டான். சந்தோஷமாக அவன் தன் படகைக் கொடுப்பான்.  அதை எடுத்துக் கொண்டு நீ நாளை மாலைக்குள்ளாக இங்கே வந்து சேர்ந்துவிடு.  நாளை நள்ளிரவில் ஹஸ்தினாபுரப் பயணத்தை அவர்கள் தொடங்கினால் சரியாக இருக்கும். “ என்றான் கண்ணன்.


“கோவிந்தா, பீமன் ஏதேனும் சொன்னால்?”


“அதை என்னிடம் விடு நகுலா!  நான் பார்த்துக் கொள்கிறேன்.” என்றான் கிருஷ்ணன்.


கிருஷ்ணன் தன் நித்திய கர்மானுஷ்டானங்களைச் செய்ய வேண்டி நதிக்கரைக்குச் செல்ல ஆயத்தமானான்.  செல்லும் வழியில் பீமனின் குடிலை எட்டிப் பார்த்தான்.  சுஷர்மா நதிக்குச் செல்ல ஆயத்தங்கள் செய்து கொண்டிருக்க பீமனோ இன்பக்கனா கண்ட மகிழ்வில் இதழ்களில் புன்னகையோடு தூங்கிக் கொண்டிருந்தான்.  கிருஷ்ணன் சுஷர்மாவிடம், “சுஷர்மா, உன் படகுகளில் தண்ணீர் புகுந்தது எனக்கு மிக வருத்தமாய் உள்ளது.” என அனுதாபத்துடன் தெரிவித்தான்.

Tuesday, October 7, 2014

நகுலன் கவலை அடைகிறான்!

கொஞ்சம் பின்னோக்கிப் போய் பீமனுடன் ஒரே குடிசையில் தங்கிய நகுலனைச் சிறிது கவனிப்போம்.  பீமனோடு ஒரே குடிசையில் தங்கினான் நகுலன்.  அன்றிரவு அனைவரும் படுத்துக் கொண்ட பிறகு வெகு நேரம் பீமன் தூங்கவில்லை.  நடு இரவுக்குச் சிறிது முன்னர் அவன் எழுந்து எங்கோ வேகமாக வெளியேறியதை நகுலன் பார்த்து ஆச்சரியம் அடைந்தான்.  உடனே தானும் எழுந்து அவனைப்பின் தொடர்ந்தான்.  அவன் பீமனைக் கவனித்தவரையில் விரைவில் ஏதோ குறும்புத்தனமான சேட்டைகள் செய்ய அவன் தனக்குள் தயார் ஆகிக்  கொண்டிருப்பதை நகுலன் உணர்ந்தான்.  உடனே அவன் மனம் இதை சுஷர்மாவோடு இணைத்து நினைக்க ஆரம்பித்தது.  அன்று மதியம் தான் நகுலன் சுஷர்மாவைக் கிருஷ்ணனின் குடிலில் பார்த்திருந்தான்.  அவனிடம் பீமன் தயவாகக் கேட்டுக் கொண்டும் சுஷர்மா தரைவழிப் பயணத்துக்கு மறுத்ததையும் பார்த்துக் கொண்டிருந்தான்.

நகுலனுக்குத் தன் சகோதரனின் இந்தக் குறும்புகளிலும் சேட்டைகளிலும் சிறிதளவு நம்பிக்கை கூட இருந்ததில்லை.  என்னதான் அவை எந்தவிதமான தீமையையும் விளைவிக்காவிட்டாலும் பல சமயங்களில் தர்மசங்கடமான நிலை ஏற்பட்டு விடுகிறது. பீமன் இருந்த இடத்திலிருந்து சற்று தூரத்தில் இருந்து கவனித்துக் கொண்டிருந்த நகுலன் பீமன் நதியில் நீந்தி படகுகளுக்கு அடியில் சென்றதையும், சற்று நேரத்தில் திரும்பியதையும் கவனித்தான். அதன் பின்னர் சற்று நேரத்திலேயே படகுகளுக்குள் நீர் புகுந்து படகுகள் மூழ்க ஆரம்பித்ததையும் கவனித்தான்.  அப்போது உடனேயே பீமன் மறுபடி நீரில் பாய்ந்து படகுகளுக்கு அருகே சென்றதையும் சுஷர்மாவை நீந்த வைத்ததையும், ஜாலந்தராவைத் தன் தோள்களில் சுமந்து கொண்டு கரைக்கு வந்து சேர்ந்ததையும் கவனித்துக் கொண்டான்.  இதை எல்லாம் சத்தம் போடாமல் கவனித்த நகுலன் பீமனும், சுஷர்மாவும் வரும் முன்னரே விரைவாக குடிலுக்குச் சென்று அங்கே தன் படுக்கையில் படுத்துத் தூங்குவது போல் நடித்தான்.


சற்று நேரத்தில் சுஷர்மா குடிலுக்குள் சொட்டச் சொட்ட நனைந்த வண்ணம் குளிரில் நடுங்கிக் கொண்டும், அதே சமயம் கோபத்தில் கொந்தளித்துக் கொண்டும், வசைமாரி பொழிந்து கொண்டும் நுழைவதைக் கண்டான்.  பீமன் குரலும் அப்போது கேட்டது:”இளவரசே, நான் என் தாயிடம் உங்கள் சகோதரியை ஒப்படைத்துவிட்டு வருகிறேன்.” என்றது அந்தக் குரல்.  பீமனின் நோக்கம் தெள்ளத் தெளிவாகப் புரிந்தது நகுலனுக்கு.  பயத்தில் திகைத்துப் போன நகுலன் தன் தமையனின் இந்தச் சிறுபிள்ளைத் தனமான போக்கினால் ஏற்படப் போகும் விளைவுகளை எண்ணி மீண்டும் கவலை அடைந்தான்.  சுஷர்மா பீமனின் படுக்கையில் படுத்துக் கொண்டு தூங்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டான்.  சிறிது நேரத்தில் தன் குடிலுக்குத் திரும்பிய பீமன் உலர்ந்த ஆடைகளை உடுத்தி இருந்தான்.  எவ்விதமான ஆர்ப்பாட்டமும் செய்யாமல் அங்கேயே தரையில் படுத்தவன் உடனே தூங்கியும் போனான். சீரான அவன் குறட்டை ஒலி அவன் ஆழ்ந்து உறங்குவதை நிச்சயம் செய்தது.  நகுலனுக்கு உள்ளூரச் சிரிப்பு வந்தது. பீமன்,  தன் இந்தச் சிறுபிள்ளை விளையாட்டால், சுஷர்மாவுக்கு ஏற்பட்டிருக்கும் தர்மசங்கடமான நிலைமையை நினைத்துக் கொண்டு அதனால் சந்தோஷத்துடனும், நிம்மதியுடனும் இன்பக்கனா கண்டு கொண்டிருப்பான் என நகுலன் நினைத்துக் கொண்டான்.


விடிவெள்ளி முளைக்கும் முன்னரே நகுலன் எழுந்து தன் வாளை உருவிச் சரிபார்த்த வண்ணம் கிருஷ்ணனின் குடிலுக்குச் செல்ல ஆயத்தமானான்.  குடிலுக்குள் மெதுவாக சப்தமின்றி அவன் நுழைந்தாலும் நுண்ணுணர்வு அதிகம் கொண்ட கிருஷ்ணன் எப்படியோ தன் குடிலுக்கு யாரோ வந்திருப்பதை அந்த ஆழ்ந்த உறக்கத்திலும் அறிந்து கொண்டுவிட்டான்.  “யாரது?” என்றும் கேட்ட வண்ணம் எழுந்து அமர்ந்தான்.  “கோவிந்தா, நான் நகுலன்.  உன்னுடன் தனிமையில் பேச வேண்டும்.”  “வா, நகுலா, வா! உள்ளே வா!” என வரவேற்றான் கிருஷ்ணன்.  கிருஷ்ணனின் குரலைக் கேட்ட சாத்யகி உடனே படுக்கையிலிருந்து எழுந்து தன் வாளை உருவிக்கொண்டு பாய ஆயத்தம் ஆனான்.  “சாத்யகி, சாத்யகி, இது நகுலன்!” என்று நிதானமான குரலில் கிருஷ்ணன்கூறினான்.   தன்னைச் சுதாரித்துக் கொண்ட சாத்யகி, “உள்ளே வா நகுலா, இவ்வளவு அதிகாலையில் நீ இங்கே வரவேண்டிய அவசியம் என்னவோ?  எந்த விஷயம் உன்னை இங்கே வரவழைத்தது?” என்று வினவினான்.


“அண்ணன் பீமனின் சிறுபிள்ளைத்தனமான விளையாட்டு ஒன்றினால் விரும்பத் தகாத விளைவுகள் நேருமோ என அஞ்சுகிறேன்.”  மெதுவாகக் கூறினான் நகுலன்.  “என்ன விஷயம்?” என்றான் கிருஷ்ணன்.  “கோவிந்தா, உனக்குத் தெரியுமா?  பீமன் காசி தேசத்து இளவரசன், இளவரசி இருவரையும் தரை வழிப் பயணம் மேற்கொள்ள வற்புறுத்திக் கொண்டிருந்தான்.  பார்த்தாயா?” என்று நகுலன் கேட்டான்.  “ஓ, ஓ, நான் பார்த்துக் கொண்டிருந்தேன்.  சுஷர்மா அதை மிகவும் புத்திசாலித்தனமாக மறுத்துவிட்டான்.  அவனுக்கு துரியோதனனிடமிருந்து தனிப்பட்ட முறையில் ஒரு செய்தி வந்திருக்கிறது.  சுஷர்மாவை ஹஸ்தினாபுரத்துக்கு உடனே வரச் சொல்லி அந்தச் செய்தி கூறுகிறது.  சுஷர்மா மட்டும் இந்தத் திருமணத் தம்பதிகளின் ஊர்வலத்தோடு வந்தானானால் துரியோதனன் பானுமதியின் குடலை உருவி மாலை போட்டுக் கொள்வான் என்றும் அந்தச் செய்தி கூறுகிறது.  அது சரி, அதற்கு என்ன?” கிருஷ்ணன் மீண்டும் கேட்டான்.



“பீமன் தன் நோக்கத்தில் ஜெயித்துவிட்டான்.  அவன் நதிக்குச் சென்று நதியின் நீர்மட்டம் உயர்ந்து படகுகள் செலுத்தத் தயாரானதும், நங்கூரத்தை எடுத்த கணமே படகினுள் நீர் புகும்படி பார்த்துக் கொண்டு விட்டான். அதன் பின்னர் அவர்களைக் காப்பாற்றச் செல்பவன் போல் நடித்துக் கொண்டு அங்கே சென்று அவர்கள் இருவரையும் ஆசிரமத்துக்கு அழைத்து வந்துவிட்டான்.”

Monday, October 6, 2014

பீமனின் சதியும், ஜாலந்தராவின் சந்தோஷமும்!

நள்ளிரவு நேரம்.  எங்கும் நிசப்தம்.  அந்த நிசப்தத்தைக் கிழித்துக் கொண்டு அவ்வப்போது நதியின் அலைகள் கரையில் மோதும் சப்தமும், துடுப்புக்களால் நதியலைகள் தள்ளப்படும் சப்தமும், அமைதியற்ற குதிரைகள் அவ்வப்போது கனைக்கும் சப்தமும், தூரத்துக் காடுகளில் இருந்த நரிகளின் ஊளைச் சப்தமும் மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தன.  எங்கும் இருட்டுக் கருமையாக அப்பிக் கிடந்த அந்த இரவிலே விண்ணில் நக்ஷத்திரங்கள் மட்டுமே அவ்வப்போது கொஞ்சம் ஒளியை பூமிக்கு அனுப்பிக் கொண்டிருந்தன.  பீமன் ஆசிரமத்திலிருந்து வெளியே வந்தான்;  அவன் கையில் ஓர் அங்குசம் இருந்தது.  யானைப் பாகர்கள் யானைகளை அடக்கி ஆளப் பயன்படுத்தும் அந்த ஆயுதத்தை வைத்து அவன் என்ன செய்யப் போகிறான்? கரைக்கு வந்த பீமன் நதியில் மிதந்து கொண்டிருந்த படகுகளைக் கவனமாகப் பார்த்தான். இளவரசன் சுஷர்மா, இளவரசி ஜாலந்தரா மற்றும் அவர்களுக்கு உதவி செய்ய வந்த வேலையாட்கள் அனைவருமே படகினுள் அமைக்கப்பட்டிருந்த கூடார அறையில் தூங்கி விட்டிருந்தனர்.  ஒரு சில படகோட்டிகள் மட்டுமே நதியின் நீர்மட்டம் உயர்ந்து வந்ததும் நங்கூரத்தை எடுத்துவிட்டுப் படகைச் செலுத்தத் தயாராகக் காத்திருந்தனர்.



பீமன் சத்தமில்லாமல் நதிக்கரையில் நடந்து நதியில் இறங்கும் இடத்துக்கு அருகே வந்து, நீரின் அலைகள் எழுப்பும் சப்தம் வராத நேரமாகப் பார்த்து நதியில் இறங்கினான்.  காசி அரசகுமாரனும், அரசகுமாரியும் உறங்கிக் கொண்டிருந்த பெரிய படகை நோக்கி சப்தம் எழுப்பாமல் நீந்தினான். நீருக்குள்ளேயே நீந்தியவன் படகுக்கு அடியில் போனான்.  அங்கே படகை நங்கூரத்துடன் பிணைத்திருந்த இடத்துக்குச் சென்றவன், தன் கையில் இருந்த அங்குசத்தினால் படகில் துளைகள் போட முனைந்தான்.  தன் பலத்தை எல்லாம் பிரயோகித்து மிகவும் பிரயாசைப்பட்டுத் துளைகள் போட்டு முடித்தான் பீமன்.   அதன் பின்னர் அருகே இருந்த மற்றொரு படகுக்குச் சென்றான்.  இந்தப் படகில் தான் சாப்பாடு தயாரிக்கப்பட்டதோடு, சமையல் பொருட்களும் நிரம்பி இருந்தன.  அதிலும் இப்படியே துளைகள் போட்டான். இந்த வேலை முடிந்ததும், வந்தது போலவே சப்தமின்றிக் கரைக்குத் திரும்பினான்.  தன் துணிகளைப் பிழிந்து காய வைத்துக் கொண்டு அரச குமாரனின் படகுக்கு எதிரே சற்று தூரத்தில் சென்று அமர்ந்த வண்ணம் என்ன நடக்கப் போகிறது என்பதை எதிர்பார்த்துக் காத்திருந்தான்.



அவன் எதிர்பார்ப்புப் பொய்யாகவில்லை.  சற்று நேரத்தில் நதியின் நீர்மட்டம் உயர்ந்தது.  படகோட்டிகள் நங்கூரத்தை அகற்றினார்கள்.  படகு மெல்ல மெல்ல நீரில் மிதக்க ஆரம்பித்தது.  திடீரென அரசகுலத்தினரின் படகில் இருந்து கூச்சலும், குழப்பமுமாகக் கேட்டது.  படகில் ஏற்படுத்தப்பட்ட துளைகளின் மூலம் தண்ணீர் படகினுள் புகுந்து கொண்டிருந்தது.  மெல்ல மெல்ல உட்புகுந்த தண்ணீர் இப்போது வேகமாகப் புக ஆரம்பித்தது.  படகின் பயணிகள் அதன் மேல் தளத்துக்கு வந்து சேர்ந்து நின்று கொண்டு திடீரெனத் தண்ணீர் புகுந்ததின் காரணத்தை ஆராயந்தனர்.  ஒருவருக்கும் ஒன்றும் புரியவில்லை.  தண்ணீர் எப்படி உட்புகுந்தது என்பதை எவராலும் கண்டறிய முடியவில்லை.  விளக்குகளை ஏற்ற முயன்றால் அப்போது வீசி அடித்த காற்றினால் விளக்குகளையும் ஏற்ற முடியவில்லை.  நக்ஷத்திரங்கள் மட்டுமே தந்த அந்தக் குறைந்த ஒளியில் காசி இளவரசனும், இளவரசியும் படகின் மேல் தளத்தில் நின்று கொண்டிருந்ததையும் அவர்களின் உதவியாட்கள் அவர்களைச் சுற்றி நின்று கொண்டு இருப்பதையும் ஒவ்வொருவரும் அவரவர் விருப்பத்திற்கேற்பப் பேசிக் கொண்டிருந்ததையும் ஒருவரும் மற்றவர் சொல்வதைக் கேட்கும் மனதோடு இல்லாமல் இருந்ததையும் பீமன் கண்டான்.



நதி நீருக்குள் வெகுவேகமாய்ப் பாய்ந்த பீமன் இரண்டொரு விநாடிகளில் வேகமாக நீந்திப் படகுக்கு அருகே வந்து விட்டான்.   படகை நோக்கிய வண்ணம், “யுவராஜா, விரைவில் படகை விட்டு வெளியேறுங்கள்.  படகு நதியின் நட்டநடுவில் அலைகளுக்கு நடுவே ஆழமான பகுதியில் மாட்டிக் கொண்டால் வெளியேற முடியாது.  இளவரசி, தாங்களும் வெளியேறுங்கள்.  இருவரும் உடனே குதியுங்கள்!  இளவரசி, நீங்கள் குதிக்கையில் நான் உங்களைத் தாங்கிக் கொள்கிறேன்.” என்று சப்தமாகக் கத்தினான். அனைவரும் ஒருசேரப் பேசிக் கொண்டிருந்த அந்தக் குழப்பமான ஒலியையும், நதியின் அலை ஓசையையும் மீறிக் கொண்டு பீமனின் குரல் காண்டாமணியின் ஓசையைப் போல் கேட்டது.  “ஆஹா, ராக்ஷச அரசர் வ்ருகோதரரா?” இளவரசி கேட்டாள்.



“ஆம், இளவரசி, நானே தான்.  விரைவில் குதியுங்கள். “ என்றான் பீமன். இளவரசி சிறிதும் தயக்கமின்றி நீரில் குதிக்க பீமனும் அவளைப் பிடித்துக் கொண்டான்.  அவளை அடுத்து இளவரசனும் நீரில் குதித்தான்.  நீரில் குதித்த இளவரசன் தன்னைச் சமாளித்துக் கொண்டு நீந்த உதவிய பீமன் இளவரசியை நீருக்கு மேல் பிடித்துக் கொண்டு நீந்த ஆரம்பித்தான்.  ஒரு கையால் நீந்திய வண்ணம் இன்னொரு கையால் இளவரசியை நீருக்கு மேல் பிடித்துக் கொண்டு இருந்தான் பீமன்.  படகில் இருந்த ஆட்களிடம், “இளவரசியையும் இளவரசனையும் நான் நன்றாகக் கவனித்துக் கொள்கிறேன்.” என சப்தம் போட்டுக் கத்தினான்.  படகு மூழ்காமல் நீர் வரும் துளைகளை அடைக்கும்படியும் அவர்களைக் கேட்டுக் கொண்டான்.   இதற்குள்ளாக நதியிலிருந்து வந்த கூச்சல், குழப்பம் போன்ற சப்தங்களால் கரையிலும் மனிதர்கள் கூடி விட்டனர். சிலர் கைகளில் விளக்குகளையும் ஏந்திய வண்ணம் வந்தனர்.  அவர்களை பீமன் நீந்திப் படகுகளுக்குச் சென்றுப் படகின் துளைகளை அடைக்கும் ஆட்களுக்கு உதவும்படியும் படகுகள் முழுகாமல் காக்கும்படியும் கட்டளையிட்டு அனுப்பினான்.  பீமன் கரைக்குப் போய்ச் சேர்வதற்குள்ளாக ஜாலந்தரா அவன் கைகளிலேயே மயக்கம் அடைந்தாள்.



சுஷர்மாவுக்கு பீமன் ஜாலந்தராவைத் தொட்டுத் தூக்கிச் சென்றதைப் பொறுக்க முடியவில்லை.  ஆனால் இப்போது வேறு வழியும் தெரியவில்லை.  இந்த அவமானத்தைச் சகிக்க முடியவில்லை தான்.  ஆனால் அவனே வலுவில்லாதவன்.  நதியில் குதித்ததில் குளிரால் நடுங்கிக் கொண்டிருந்தான். அவனைக் கவனித்துக் கொள்வதே அவனுக்குப் பெரும்பாடாக இருந்தது. இதில் ஜாலந்தராவை எவ்வாறு கவனிக்க முடியும்?  வேறு வழியில்லை!  பொறுக்க வேண்டியது தான்!



அப்போது பீமன், “இந்தக் குளிர் காற்றிலே இங்கே வெட்ட வெளியில் இருப்பது உடல் நலனுக்கு உகந்தது அல்ல இளவரசே, வாருங்கள்.  உங்கள் இருவரையும் நான் ஆசிரமத்துக்கு அழைத்துச் செல்கிறேன்.” என்றான்.  அரை மனதாக இளவரசன் செய்த ஆக்ஷேபங்களை எல்லாம் புறக்கணித்துவிட்டு ஓர் ஆள் விளக்குடன் வழிகாட்ட பீமன் இளவரசி ஜாலந்தராவைத் தன் தோள்களில் சுமந்த வண்ணம் ஆசிரமத்தை நோக்கி நடந்தான்.  வேறு வழியின்றி இளவரசனும் அவனைப் பின் தொடர்ந்தான்.  ஜாலந்தரா கொஞ்சம் கூட கனமாக இல்லாமல் லேசாக ஒரு குழந்தையின் எடையுடன் இருப்பதைக் கண்டு பீமன் வியந்தான்.  அவனுக்கு ஹிடும்பியின் நினைவு வந்தது.  அவளுடைய எடையையும், இவள் எடையையும் ஒப்பிட்டுப் பார்த்த பீமனுக்கு உள்ளூரச் சிரிப்பு வந்தது.  “ஆஹா, இவளைப் பூக்களாலேயே பிரமன் படைத்திருப்பானோ!” என எண்ணிக் கொண்டான்.  தன் சுயநினைவின்றி அவள் ஓர் குழந்தையைப் போல் அவனைச் சார்ந்திருப்பதை மிகவும் விரும்பினான்.  அவள் உடலின் ஸ்பரிசம் பட்டதுமே தனக்குக் குளிரெல்லாம் அகன்று உடல் சூடானதாகவும் உணர்ந்தான்.



அவர்கள் சென்று கொண்டிருக்கும்போதே, பீமன் காதுகளில் ஓர் குரல் மெலிதாகக் கிசுகிசுத்தது.  “நீங்கள் தானே படகுகளை மூழ்கடித்தீர்கள்?” பீமன் தூக்கிவாரிப் போட ஜாலந்தராவைப் பார்த்தான்.  அப்படி என்றால் அவளுக்குச் சுய நினைவு வந்துவிட்டதா?  ம்ம்ம்ம்?  ஒருவேளை சுயநினைவு வந்திருக்கலாம்; அல்லது வராமலும் இருக்கலாம்.  ஆனால் அவள் தன் கைகளிலிருந்து விடுவித்துக் கொண்டு செல்ல விரும்பவில்லை.  ஆகையால் ஜாலந்தரா சுய நினைவின்றி இருக்கிறாள் என்னும் எண்ணத்திலேயே அவளைத் தூக்கிச் செல்லவே பீமன் விரும்பினான்.  ஆசிரமத்தை அடைந்ததும் சுஷர்மனிடம் திரும்பிய பீமன், “இளவரசே, உங்கள் தங்கையை நான் என் தாயிடம் விட்டு விட்டு வருகிறேன்.  நீங்கள் அதோ இருக்கும் என் குடிசைக்குச் சென்று உடனடியாக உடையை மாற்றிக் கொண்டு தூங்கச் செல்லுங்கள்.  இந்தக் குளிரில் உங்களுக்குக் கடுமையான ஜலதோஷம் பிடிக்கப் போகிறது.” என்றான்.



சுஷர்மாவுக்கு அந்தச் சூழ்நிலையில் தான் செய்யவேண்டியது என்னவென்று புரியவில்லை.  வேறு வழியின்றி பீமன் கூறியபடி அவன் குடிசைப் பக்கம் திரும்பிச் சென்றான்.  பீமன் அவளைத் தன் தாயிடம் தூக்கிச் செல்கையில் அவள் காதுகளில் கேட்கும்படி மெல்லிய குரலில், “என்னை விட்டு விட்டு நீ ஹஸ்தினாபுரத்துக்குப் படகுப் பயணமாகச் செல்ல நினைத்தாயா?  நல்லது, இப்போது முயன்றுதான் பாரேன்!” என்றான் அவளிடம்.  ஜாலந்தராவுக்கு நினைவு திரும்பியதாகத் தெரியவில்லை.  ஆனால் அவள் இதழ்களில் மெல்லிய புன்முறுவல் தோன்றியது.  அதைக் கண்ட பீமன் உள்ளம் சந்தோஷத்தில் கூத்தாடியது.


Saturday, October 4, 2014

பீமனின் திருட்டுத் தனம்!

அதைப் பார்த்த பீமன் உள்ளூரச் சிரித்தபடி, தாமரைப்பூப்பாதங்களைக் கொண்ட இளவரசி, இப்போது ஆசிரமத்திற்கு வந்துவிட்டாள் என எண்ணிக் கொண்டான். மீண்டும் இளவரசியைப் பார்க்கும் ஆவல் மேலிட்டாலும் அனைவரும் தங்குவதற்கு உரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டியதே இப்போது அவன் முதல் வேலையாக இருந்ததால் கவனத்தை அதில் தான் திருப்ப இயலும்.   ஏமாற்றத்துடன் பெருமூச்சு விட்டான் பீமன்.  ஆசிரமத்திற்கு வந்த பீமன் தன் அண்ணன் யுதிஷ்டிரனிடம் அனைவரும் தங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்து முடித்துவிட்டதாகவும் இரவு உணவு தயாராகிக் கொண்டிருப்பதாகவும் கூறினான்.  பின்னர் தௌம்ய ரிஷியின் கால்களில் விழுந்து வணங்கினான்.  அவரைப் பார்த்து, “குருதேவரே, உங்களால் என்னை எவ்வளவு ஆசீர்வதிக்க முடியுமோ அவ்வளவு ஆசீர்வதியுங்கள்.  அதற்கான கையிருப்பு இல்லை எனில் என் சகோதரர்களுக்கென வைத்திருக்கும் ஆசீர்வாதங்களில் இருந்து கடன் பெற்று என்னை ஆசீர்வதியுங்கள்.” என்றான்.



பின்னர் தன் தாய் தங்கியிருந்த குடிசைக்குச் சென்று தாயின் கால்களிலும் விழுந்து வணங்கினான்.  பின்னர் அங்கே தன் தாயுடன் அமர்ந்திருந்த திரௌபதியைக் கடைக்கண்களினால் பார்த்துவிட்டு அங்கு அமர்ந்திருந்த மற்றப் பெண்மணிகளிடம் யாரையோ தேடினான்.  என்ன ஏமாற்றம்!  அவன் எதிர்பார்த்த நபர் அங்கில்லை! பறக்கும் தாமரைப்பூப்போன்ற பாதங்களைக் கொண்ட அந்தக் காசி இளவரசி அங்கில்லை.  அரை மனதாக சமையல் நடைபெறும் இடத்திற்குச் சென்றான்.  சமையலில் கெட்டிக்காரனான அவன் மனம் இப்போது சமையலில் லயிக்கவில்லை.  ஆனாலும் என்ன நடக்கிறது என்று பார்த்தான்.  ராக்ஷச அரசன் வ்ருகோதரனின் மகத்தான பசியை நன்கு அறிந்திருந்த தௌம்ய ரிஷி அவனுக்காக ஏராளமான உணவுகளைத் தயாரிக்கச் சொல்லி இருந்தார்.  நிதானமாக அமர்ந்து ஒவ்வொன்றாக ருசி பார்த்தான் பீமன்.  பின்னர் அங்கிருந்து கிளம்பி கிருஷ்ணன் தங்கி இருக்கும் குடிசைக்குச் சென்றான்.


“கோவிந்தா!  உன்னை இப்போது நான் பார்க்க வரலாமா?” என்று கேட்ட வண்ணம் உள்ளே நுழைந்த பீமன், அங்கே கிருஷ்ணன், சாத்யகி ஆகியோருடன் அமர்ந்திருந்த தன் சகோதரன் நகுலனையும் இன்னொரு மனிதனையும் பார்த்தான்.  அந்த மனிதன் முகம் எங்கோ பார்த்தது போல் இருந்தது பீமனுக்கு.  சட்டெனப் பொறிதட்ட ஜாலந்தராவின் முக ஜாடையில் அவன் இருப்பதைப்பார்த்து, இவன் தான் காசி இளவரசன் சுஷர்மனாக இருக்க வேண்டும் என முடிவு கட்டினான்.  சற்று உயரம் குறைவாகவும், தேக அமைப்பில் மென்மையாகவும் காணப்பட்ட அந்த இளைஞனுக்கு 25 வயதிருக்கலாம் என நினைத்தான் பீமன்.



அப்போது கிருஷ்ணன், “என்னிடம் கேட்பதில் என்ன பலன்?  நீ ஏற்கெனவே உள்ளே நுழைந்து என்னைப் பார்க்கவும் பார்த்துவிட்டாய்!  என்ன விஷயம்?  எல்லாம் சரியாகப் போகிறது அல்லவா?” என்று பீமனிடம் கேட்டான்.  “ஆஹா, எல்லாம் நன்றாகப் போகிறது.” என்றான் பீமன்.  “ஆனால் கிருஷ்ணா, சில மனிதர்கள் மிகவும் வருத்தமாக உன்னைப் பார்க்க வேண்டிக் காத்திருக்கின்றனர்.”  என்றும் கூறினான்.  “அதோ கேள்! மக்களின் பொறுமையின்மையை!  “ஜெய ஜெய கிருஷ்ண வாசுதேவா!” எனக் கூக்குரல் போட்டுக் கொண்டு உனக்காகக் காத்திருக்கின்றனர்.  விரைந்து செல் கிருஷ்ணா!  உன் மக்களைச் சமாதானம் செய்!” என்ற வண்ணம் கிருஷ்ணனுக்கும், சுஷர்மாவுக்கும் இடையில் அமர்ந்தான் பீமன்.



“உண்மை தான்.  அவர்களை நான் காக்க வைக்கக் கூடாது.  வெகு தூரத்தில் இருந்தெல்லாம் என்னைப் பார்க்க வேண்டியே வந்திருக்கின்றனர்.  அது சரி, பீமா!  உனக்கு சுஷர்மாவைத் தெரியுமா?  மாட்சிமை பொருந்திய காசி அரசரின் புதல்வன்!  துரியோதனன் மனைவி பானுமதியின் உடன் பிறந்த சகோதரன்!” என்றான் கிருஷ்ணன்.



“நீ ஸ்வீகாரம் செய்து கொண்டிருக்கும் சகோதரிகளில் பானுமதியும் ஒருத்தி! அல்லவா! கிருஷ்ணா! “ என்று பீமன் சிரித்துக் கொண்டிருக்கும்போதே, கிருஷ்ணன் தன் கிரீடத்தையும், உத்தரீயத்தையும் அங்கேயே விட்டு விட்டு சாத்யகியுடன் குடிசையை விட்டு வெளியேறினான். சுஷர்மாவுக்கோ தர்ம சங்கடமாக இருந்தது. தன்ந்தங்கை கணவன் ஆன துரியோதனன் பீமனை எவ்வளவு வெறுக்கிறான் என்பதை அவன் நன்கறிவான்.  ஆகவே பீமனுடன் நட்புப் பாராட்ட அவன் விரும்பவில்லை.  அவன் அங்கிருந்து கிருஷ்ணனோடு வெளியேற விரும்பி எழுந்தபோது பீமனின் கரங்கள் அவன் தோள்களில் படிந்து அவனைத் தடுத்தது.



“உத்கோசகத்துக்கு எப்போது வந்தீர்கள், இளவரசே?” நட்புப் பாராட்டும் தொனியில் பீமன் கேட்டான்.  “மூன்று நாட்கள் ஆகின்றன!” என்றான் சுஷர்மன்.  பீமனுக்கு சுஷர்மனுக்குத் தன்னோடு உரையாடுவதில் விருப்பமோ, மகிழ்ச்சியோ இல்லை என்பது புரிந்தது.  சம்பாஷணையை வளர்த்த விரும்பாதவனாகக் காணப்பட்டான்.  அவனை வெறுப்படைய வைக்கும் கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தான் பீமன்.  “உத்கோசகத்தில் இருந்து எப்போது கிளம்புகிறீர்கள்?” என்று கேட்க, “இன்று மாலையே கிளம்புகிறோம்!” என்று பதிலளித்தான் சுஷர்மன்.  பீமன் அதற்கு, “என்ன அவசரம்?  கொஞ்சம் தங்கி எங்களுடன் சில நாட்களைக் கழித்த பின்னர் செல்லலாமே!” என்றான்.  சுஷர்மனின் புருவங்கள் நெரிந்தன.  “என் சகோதரி பானுமதிக்கு உடல்நலம் சரியில்லை.  எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு விரைவில் நாங்கள் ஹஸ்தினாபுரம் போயாக வேண்டும்!” என்றான் சுஷர்மன்.



“என்ன ஆயிற்று பானுமதிக்கு?” பீமன் விடாமல் கேட்டான்.
“ஓ, அவள் துரியோதனனின் குழந்தையைச் சுமந்து கொண்டிருக்கிறாள்.  விரைவில் அவளுக்குப் பிரசவம் ஆகிவிடும்.  அந்த சமயம் நாங்கள் அவளுடன் இருக்க விரும்புகிறோம்.”  இதைச் சொல்வதற்குள் சுஷர்மாவுக்கு வேர்த்து விறுவிறுத்து விட்டது.  “ஓ, அப்போது நீங்கள் ஹஸ்தினாபுரத்தில் பல நாட்கள் தங்கும்படி நேரும்!” என்றான் பீமன்.  “ஆம், இப்போது நாங்கள் புனித யாத்திரை செய்யப் போகிறோம்.  அதை முடித்துக் கொண்டு ஹஸ்தினாபுரம் வருவோம்.  என் தங்கை பானுமதிக்குக் குழந்தை நல்லபடி பிறந்து அவளும் உடல் நலம் தேறும் வரையில் நாங்கள் ஹஸ்தினாபுரத்தில் இருப்போம்.” சொல்லிக் கொண்டே அங்கிருந்து எழுந்து செல்ல ஆரம்பித்தான் சுஷர்மன்.



“ஏன், எங்களுடன் தரைவழிப் பயணம் மேற்கொள்ளலாமே?” என்று கேட்டான் பீமன்.  உடன் தானும் எழுந்து சுஷர்மாவுடன் செல்ல ஆயத்தமானான்.  பீமனுக்கு எப்போதுமே அவனை இப்படிப் பேசும்போது  நட்ட நடுவில் தவிக்க விட்டுச் செல்பவர்களைக் கண்டால் பிடிக்காது.  இவனும் இதையே செய்யப் பார்க்கிறானே! “நாங்கள் படகுப் பயணத்தையே விரும்புகிறோம்.” என்றான் சுஷர்மன்.  பீமன் சிரித்தான்.  “ஆம், ஆம், தூசி இருக்காது. உடலில் அழுக்குச் சேராது.  பாதையில் மேடு பள்ளங்கள் இருக்காது என்பதால் தூக்கிப் போடாது. அதோடு நதியில் போவதால் எப்போதும் குளிர்ந்த காற்று வீசும்.  ஆனால் தரை வழிப் பயணத்தில் நாங்களும் உங்கள் துணைக்கு இருப்போம். நீங்களும் எங்கள் துணைக்கு இருக்கலாம்.”



“இல்லை, நாங்கள் படகுப் பயணத்தையே விரும்புகிறோம்!” என்ற வண்ணம் பீமனைப் பார்த்துக் கும்பிட்டு விட்டுக் குடிசையின் வாயிலை நோக்கிச் சென்றான் சுஷர்மன்.  தன்னுடன் பேசுவதை நிறுத்திக் கொண்டு சட்டென அவன் கிளம்புவதால் அமைதியை இழந்த பீமன், “படகுகளுக்கு எப்போது போவீர்கள்? என்று கேட்ட வண்ணம் சுஷர்மனோடு சேர்ந்து கொண்டான். அலைகளின் ஏற்ற, இறக்கத்தையும், நீரின் மட்டத்தையும் பொறுத்து நங்கூரம் எடுக்கப்படும்.  ஆனால் நாங்கள் இரவு உணவுக்குப் பின்னர் படகுக்குப் போய்விடுவோம்.” என்றான்.



“நீங்கள் செல்லும்போது விடை கொடுக்க நான் வருகிறேன்.” என்றான் பீமன்.  அவனுக்கு இப்போது தான் செய்யவேண்டியது என்ன என்பது புரிந்தது.  நகுலனுக்கு பீமன் இப்படி வலுவில் அவனுடன் நட்புப் பாராட்டுவது ஆச்சரியத்தை அளித்தாலும், இதில் ஏதோ உள் நோக்கம் உள்ளது என்ற அளவில் புரிந்து கொண்டிருந்தான்.  ஆகவே அனைத்தையும் மௌனமாகப் பார்த்துக் கொண்டிருந்தான்.   தான் சொன்னபடியே இரவு உணவுக்குப் பின்னர் பீமன் நதிக்கரைக்குச் சென்ற தௌம்ய ரிஷியோடும், மற்றவர்களோடும் சேர்ந்து கொண்டு காசி இளவரசனும், இளவரசியும் அங்கிருந்து கிளம்புகையில் விடை கொடுக்கச் சென்றான்.  அவன் எதிர்ப்பார்ப்புப் பொய்யாகவில்லை.  ஜாலந்தராவுக்கும் அவனுக்கும் கண்களாலேயே ரகசியப் பேச்சு வார்த்தை நடந்தது.  திருட்டுத் தனமாகத் தன் பக்கம் அவள் பார்ப்பதையும், கண்களால் விடைபெறுவதையும் பார்த்த பீமன் ஆகாயத்தில் பறந்தான்.  அவன் உள்ளம் சந்தோஷத்தில் கூத்தாடியது.