Wednesday, October 15, 2014

பீமன் சத்தியம் செய்கிறான்!

பீமன் உள்ளே நுழைந்ததுமே கிருஷ்ணன் அவனைப் பார்த்துச் சிரித்தான்.  “இதோ நம் வீராதி வீரன், கதாநாயகன் வந்துவிட்டான்!  யுதிஷ்டிரா, எவ்வளவு அருமையான சகோதரனைப் பெற்றிருக்கிறாய் நீ!  இவன் மட்டும் இல்லை எனில் நேற்று சுஷர்மாவும், ஜாலந்தராவும் நதியில் மூழ்கி இருப்பார்கள்.  பீமன் தக்க சமயத்தில் அங்கே சென்று அவர்களைக் காப்பாற்றினான்.  அது மட்டுமா!  அவன் நகுலனை ஏகசக்கரத்துக்கு அனுப்பி வைத்திருக்கிறான். எதற்குத் தெரியுமா!  ஏகசக்கரத்து அரசனின் படகை வாங்கி வருவதற்காக. அப்போது தான் சுஷர்மாவும், ஜாலந்தராவும் இன்றிரவே ஹஸ்தினாபுரம் செல்ல முடியும் அல்லவா!நகுலனுடன் சாத்யகியும், சிகுரி நாகனும் உடன் சென்றிருக்கின்றனர். இப்படி ஒரு தர்மசங்கடமான சூழ்நிலையைச் சமாளிக்கவும், சிந்தித்துச் செயலாற்றவும் வ்ருகோதர அரசனைத் தவிர வேறு எவரால் முடியும்?”


பீமனுக்கு என்ன சொல்வது எனத் தெரியவில்லை.  கிருஷ்ணன் முகத்தையே பார்த்தான்.  முகத்தில் குறும்பு கூத்தாடியது.  கண்களும் சிரித்தன. கிருஷ்ணனின் உடல் முழுதுமே சிரித்தது போல் இருந்தது பீமனுக்கு. தன் சகோதரர்களைப் பார்த்தான். இருவர் முகங்களிலும் பீமனைக் குறித்த பெருமிதம் தெரிந்தது.  பீமனுக்கு என்ன செய்வது எனப் புரியவில்லை. கண்ணன் சொன்னவற்றையும், அதை வைத்து பீமனைப் பாராட்டும் விதமாய்ப் பார்க்கும் சகோதரர்கள் இருவரையும் உண்மையைச் சொல்லி மிரள வைப்பதா?  கண்ணன் சொல்வதை ஏற்பதா?  சகோதரர்களின் பாராட்டை ஏற்பதா?  அல்லது மறுப்பதா?  என்ன செய்யலாம்!  அல்லது கண்ணன் இப்படிச் செய்து விட்டானே என அவன் மேல் கோபப்படுவதா? கோபத்தை அடக்கிக் கொள்வதா?  இந்தக் கண்ணன் நம்மை தர்மசங்கடமான நிலையில் அல்லவோ ஆழ்த்திவிட்டான். “ஆம், ஆம், நான் தான் செய்தேன்.  இவற்றை எல்லாம் நான் தானே செய்தேன்!  கண்ணா!  நீ சர்வ நிச்சயமாக அறிவாய் அல்லவா?”“ஆஹா, பீமா! பீமா!  யுதிஷ்டிரா, பீமன் தன்னடக்கத்தோடு சொல்லிக் கொள்கிறான். இல்லையா பீமா!” என்று கிருஷ்ணன் சொல்ல மூவரும் சிரித்தனர்.  “தன்னடக்கம்!  எனக்கு!” கொஞ்சம் கத்திய பீமன்,”என் வாழ்நாளிலேயே இதான் முதல்முறை!  என்னையும் ஒருவர் தன்னடக்கம் எனச் சொன்னது.” என்றும் தனக்குத் தானே கூறிக்கொள்வது போல் சொல்லிக் கொண்டான்.  சற்று நேரத்தில் அங்கிருந்து யுதிஷ்டிரனும், பீமனும் வெளியேறினார்கள்.  பீமன் அதுவரை அடக்கி வைத்திருந்த கோபமெல்லாம் ஒருசேரப் பொங்கி வரக் கோபத்துடன் கிருஷ்ணன் மேல் பாய்ந்தான்.  தன் மூர்க்கத்தனம் சற்றும் குறையாமல் கிருஷ்ணனைப் பார்த்து, “கோவிந்தா, கோவிந்தா, இரு இரு, என்றாவது ஒரு நாள் உன் மண்டையை நான் உடைத்து விடுகிறேன்.”  என்றான்.


கிருஷ்ணன் உல்லாசமாகச் சிரித்தான்.  “பொறு, பீமா!  என் மண்டையை நீ நிதானமாக ஒரு நாள் உடைக்கலாம்.  அதற்கு முன் செய்ய வேண்டிய காரியங்கள் நிறைய இருக்கின்றன.  நீ ஜாலந்தராவிடம் ரகசியமாக ஏதோ கிசு கிசுத்தாயாமே!  அது என்ன?  அதை மட்டும் என்னிடம் சொல்லிவிடு!”


சட்டென பீமனின் மனோபாவம் மாறியது. கொஞ்சம் கபடமாகச் சிரித்தான்.  சிரித்துக் கொண்டே, “ நான் அவள் காதுகளில் ரகசியம் பேசினேனா?  நான் பேசினேன்?  அப்படியா?  அது உனக்கு எப்படித் தெரியும்?”


“அவள் என்னிடம் புகார் கொடுத்தாள்.” என்றான் கிருஷ்ணன்.  தன் ஆள்காட்டி விரலால் பீமனைப் பயமுறுத்துவது போல் சைகையும் செய்தான்.  “ஆஹா, உன்னிடம் அவள் புகார் அளித்தாளா?  கோவிந்தா, கோவிந்தா, நீ என்ன மாயம் செய்கிறாய்?  இந்த உலகிலுள்ள அனைத்து இளம்பெண்களும் தங்கள் அந்தரங்கத்தை உன்னிடம் பகிர்ந்து கொள்கின்றார்களே!  இதில் அவர்களுக்கு எவ்விதத் தயக்கமும் இருப்பதாகத் தெரியவில்லையே! எப்படி இது?  அது சரி, ஜாலந்தரா உன்னிடம் என்ன சொன்னாள்?”


“அவள் பேச்சை விடப் பார்வை பல விஷயங்களைச் சொன்னது.  உன்னைப் பற்றி உன் தாயிடம் பேசிக் கொண்டிருந்தேன் காலையில்.  அப்போது அவளைப் பார்த்தால் அவள் முகம் பல விஷயங்களைச் சொன்னது.”


“உண்மையாகவா?  கிருஷ்ணா, நான் ஜாலந்தராவைக் கல்யாணம் செய்து கொள்ள விரும்புகிறேன்.  நீ எனக்கு இந்த விஷயத்தில் உதவுவாயா?”


“கட்டாயம் பீமா!  ஆனால் நீ எனக்கு ஒரு உறுதிமொழி கொடுக்கவேண்டும்.”


“என்ன அது”


“நீ அவள் கையைத் திருமணத்துக்காகப் பற்ற வேண்டிய நாள் இன்னும் தூரத்தில் இருக்கிறது.  எப்போது தெரியுமா?  யுதிஷ்டிரன் உண்மையாகவே மன்னன் ஆக வேண்டும்.  நீ யுவராஜா ஆகவேண்டும். பேருக்கு அல்ல.  உண்மையாகவே. “


“ஆஹா, அதற்கென்ன, கிருஷ்ணா!  நான் கட்டாயம் சத்தியம் செய்து கொடுக்கிறேன்.  நான் விரைவில் யுவராஜாவாக ஆகிவிடுவேன் என்னும் நம்பிக்கைஎனக்குஇருக்கிறது.  அதிலே ஒரே ஒரு சங்கடம் தான்.  என் அருமைப் பெரியப்பாவின் அன்பு மகன் துரியோதனன் விரைவில் யமதர்மனுக்குத் தோழனாகச் செல்ல வேண்டும்.  அந்த நாள் விரைவில் வரவேண்டும்.”


“சரி, பீமா! அப்போது நீ சத்தியம் செய்திருக்கிறாய்.  இதை நினைவில் வைத்துக் கொள்.  கிருஷ்ணன் தன் உள்ளங்கையை நீட்டியவண்ணம் பீமனுக்கு எதிரே காட்ட, பீமனும் தன் உள்ளங்கையால் கிருஷ்ணன் கைகளின் மேல் ஓங்கி அடித்துச் சத்தியம் செய்தான்.


1 comment:

ஸ்ரீராம். said...

மாயக்கண்ணன்!