Friday, May 30, 2014

என்றென்றும் உங்களுடன் இருப்பேன்!

கண்ணனின் இந்த உறுதியான நிலைப்பாட்டைக் கண்டதும் திரௌபதிக்கு சந்தோஷமாக இருந்தது; கிருஷ்ணனிடம் நன்றியும் ஏற்பட்டது.  இருந்தாலும் இன்னும் ஒன்று இருக்கிறதே! “துரியோதனன்?  அவன் ஜெயித்துவிட்டால் என்ன செய்வேன்? கோவிந்தா, பதில் சொல்!” என்றாள்.  “ஆம், திரௌபதி, அது தான் நான் சுமக்கவேண்டிய சுமைகளிலேயே மிகக் கடினமான ஒன்று.  என்னிடம் வேறொன்றும் கேட்காதே!” என்ற கண்ணனின் முகம் மீண்டும் இருளடைந்து போயிற்று.  சொல்லிலடங்காத துக்கம் அவனைச் சூழ்ந்தது.   அதைக் கண்ட திரௌபதிக்குக் கண்ணனின் நிலை கண்டு மனம் வேதனைப் பட்டது.  இப்போது அவள் கண்ணனைச் சமாதானம் செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டாள்.  “நீ என்னிடம் சொல்லவில்லை எனில், பரவாயில்லை, கோவிந்தா, நானும் உன்னிடம் எதுவும் கேட்க மாட்டேன்.” என்றாள்.

“என்னை நம்பு திரௌபதி! தர்மத்தின் பாதையில் செல்லும் ஒருவனுக்கே நீ மனைவியாக ஆவாய் என நான் சொல்லி இருப்பதில் நம்பிக்கை வை.  வீரம் நிறைந்த மகன்களைப் பெற்றெடுக்கப் போகும்  தாயும் ஆவாய்! மனிதர்களுக்கு என்றென்றும் நினைவில் இருக்கும் வண்ணம் தர்மத்தின் பாதையில் சென்று நல்லாட்சி புரியப் போகும்  ஒருவனின் ராணியாக நீ அனைவர் உள்ளங்களிலும் என்றென்றும் வாழ்வாய்! “

சற்று நேரம் ஒருவரும் பேசவில்லை.  திரௌபதியின் மனம் அவளையும் அறியாமல் உருகியது.  அவள் உள்ளே ஏதோ இனம் தெரியாத அன்பு சுரந்தது. அனைவரும் கடவுளெனப்போற்றும் இந்த மனிதனிடம் அவளையும் அறியாமல் இரக்கமும், பச்சாத்தாபமும் மிகுந்தது.   அவள் மனக் கதவம் திறந்தது.  அங்கே இத்தனை நாட்களாக அடைந்து கிடந்த இருள் விலகியது. அவள் மனதில் கோடி கோடி சூரியப் பிரகாசம் தோன்றியது;  அது அவள் முகத்திலும் பிரதிபலித்தது.   அன்பெனும் ஊற்றுப் பொங்கியது. அவள் முகம் மிகவும் மென்மையானது.  அவளே மனதளவிலும், உடலளவிலும் மென்மையாக ஆகி விட்டாள்.  வெகு நாட்களாகப்பூட்டிக் கிடந்த அறையைத் திறந்ததும் உள்ளே பரவும் சூரிய ஒளியில் தெரியும் காட்சிகளைப்  போல  அவள் அனைத்தையும் தெள்ளத் தெளிவாகப் புரிந்து கொண்டாள்.  “கோவிந்தா, நான் உன்னைச் சரணடைந்து விட்டேன்.  என்னைப் பரிபூரணமாய் உன் காலடிகளில் கிடத்துகிறேன்.  நீயே எனக்கு அபயம் அளிப்பாய். சரணம் கோவிந்தா, சரணம்!  ஆனால் என் தந்தையை அவமானம் அடையும்படி விட்டு விடாதே!  நான் உன்னைக் கெஞ்சிக் கேட்பது அது மட்டுமே!  அவர் அவமானம் அடையக் கூடாது!”

வாசுதேவன் பேச ஆரம்பித்தான்.  மெதுவாகவும், அதே சமயம் தெளிவாகவும், உறுதியாகவும் அவன் கூறியது:” என்ன நடந்தாலும் சரி, திரௌபதி, நான் உன் பக்கமும் , உன் தகப்பன் பக்கமுமே துணை நிற்பேன்.  உங்களைத் தவிக்க விட மாட்டேன்.   இப்போது இருக்கும் சூழ்நிலையில் என்னால் இதற்கு மேல் அதிகம் சொல்ல முடியாது.  இதைவிடப் பெரிய வாக்குறுதிகளையும் நான் அளிக்கப் போவதில்லை.  ஆகவே என்னிடம் மேலும் மேலும் வேறெதையும் கேட்காதே! ஆனால் ஒன்று!  சுயம்வரத்தை சாதாரணமான ஒன்றாய் நினைக்காமல் அது தான் உன்னுடைய மற்றும் என்னுடைய தர்மமும் அதுவே என்பதைப் புரிந்து கொண்டு அதன்படி நடப்பாயாக!”  என்றான் கிருஷ்ணன்.

“நிச்சயமாக, கோவிந்தா!  நான் உன்னைச் சரணடைந்துவிட்டேன்! “ அவள் குரலில் பரிபூரண சரணாகதி தெரிந்தது.

 “அப்படி எனில் நீ எனக்காக இந்த அபச்சாரத்தைப் பொறுத்துக் கொண்டே ஆகவேண்டும்.  ஷகுனியும், துரோணரின் பிள்ளையான அஸ்வத்தாமாவும் உன்னைப் பார்க்க விரும்புகின்றனர்.  அவர்களை நீ சந்திக்க வேண்டும். “ என்றான் கண்ணன்.

“ஹூம், துரோணரின் பிள்ளை!  என்னை உனக்காக விஷமா குடிக்கச் சொல்கிறாய் கோவிந்தா?” திரௌபதியின் குரலில் கசப்பு வழிந்தோடியது.  இந்த வேண்டுகோளில் அவள் திகைத்துப் போயிருப்பதும் தெரிய வந்தது.  ஆனால் கிருஷ்ணன் அதற்கெல்லாம் கலங்கவில்லை.

“ஆம், திரௌபதி, நான் பானுமதிக்கு வாக்களித்திருக்கிறேன்.  இவர்கள் இருவரையும் உன்னைச் சந்திக்க வைப்பதாக அவளுக்கு நான் வாக்குக் கொடுத்திருக்கிறேன்.  அதோடு இன்னொரு விஷயமும் கேட்டுக்கொள்; அஸ்வத்தாமா உனக்கு ஒரு உறுதி மொழி கொடுப்பான்.  அதாவது சந்தர்ப்பவசத்தால் நீ அவனையோ அல்லது குருவம்சத்து இளவல்களில் ஒருவனையோ தேர்ந்தெடுக்க நேர்ந்தால்,  அவன் தந்தையை ஹஸ்தினாபுரத்தை விட்டுச் செல்வதிலிருந்து தன் உயிரைக் கொடுத்தாவது தடுப்பான். அந்த உறுதிமொழியை நீ ஏற்றுக் கொள். "

வியப்பில் விரிந்த கண்களோடு திரௌபதி கேட்டாள்: “ஒருவேளை நான் அவர்களில் எவரையும் தேர்ந்தெடுக்கவில்லை எனில்?”

“எப்போதுமே  உன் திருமணத்தில் உன் விருப்பம் தான் முக்கியம் திரௌபதி. “ என்று கிருஷ்ணன் சொல்ல, திரௌபதியோ,”துரியோதனன் ஜெயித்துவிட்டானெனில் என்ன செய்ய முடியும்?” என்று மீண்டும் கேட்டாள். அவளை இந்த பயம் தொடர்ந்து கொண்டிருக்கிறது என்பது வெளிப்படையாகத் தெரிந்தது. அதைக் கண்ட கிருஷ்ணன் சிரித்தான்.  இப்போது அவன் முகம் பூரணமாக விகசித்துக் கிடந்தது.  அதே விளையாட்டுக் குரலில், நாட்டியம் ஆடும் கண்களோடு அவன் திரௌபதியிடம், “ நீ தான் அப்போது ஹஸ்தினாபுரத்து மஹாராணியாகிவிடுவாய் அல்லவா?  அவளுக்கு மண்டியிடாமல் பின்னர் துரோணர் வேறு யாருக்கு மண்டியிடுவார்?”  என்றான்.

 திரௌபதி நினைத்தாள்.  ஆஹா, இவன் மீண்டும் மக்கள் அனைவரும் போற்றிக் கொண்டாடும்,  மிகவும் விரும்பிப் பாராட்டும் தன் மாட்டிடையன் உருவைக் காட்டுகின்றான் போல் இருக்கிறதே!  இவன் சாமானியன் அல்ல; அல்லவே அல்ல.  திரௌபதி இப்போது இவன் சொன்னதன் உள்ளர்த்தத்தைப் புரிந்து கொள்ள விரும்பினாள்.  தன்னைக் கிருஷ்ணன் கேலி செய்கிறான் என்பது வரை புரிந்து கொண்ட அவள் மேலும் எதையும் கேட்காமல் மௌனமடைந்தாள்.

கிருஷ்ணன் இப்போது குரலை மிகவும் தழைத்துக் கொண்டு அவளிடம் பேச ஆரம்பித்தான்; “இதன் மூலம் உனக்கு ஏதேனும் மனத் திருப்தியோ, நிம்மதியோ கிட்டும் எனில் கேள்; நான் உன்னிடம் ஒரு ரகசியம் சொல்லப் போகிறேன்.  நான் என்னுடைய அருமையான தங்கை, சின்னத் தங்கை பானுமதிக்கு என்ன உறுதி மொழி கொடுத்திருக்கிறேன் என்பதை நீ அறிவாயா?  எக்காரணம் கொண்டும் நீ அவளுக்குப் போட்டியாக துரியோதனனின் மற்றொரு ராணியாக ஆகாமல் பார்த்துக் கொள்வதாக உறுதிமொழி கொடுத்திருக்கிறேன்.  இது போதுமா உனக்கு? இன்னும் உறுதி மொழி வேண்டுமா?”

திரௌபதிக்கு முகமெல்லாம் சிவந்தது.  “கோவிந்தா, நீ தானே சொன்னாய்?  அஸ்வத்தாமா இங்கே எனக்கு உறுதிமொழி கொடுப்பான்;  அதை ஏற்றுக்கொள் என!  என்னை அதை ஏற்றுக்கொள்ளச் சொல்லி விட்டு, இப்போது பானுமதிக்கு நான் போட்டியாக இருக்காமல் பார்த்துக்கொள்வதாக அவளுக்கு உறுதிமொழி கொடுத்திருப்பதாய்ச் சொல்கிறாயே!  நான் என்ன செய்யட்டும், கோவிந்தா?  எது உண்மையான கிருஷ்ண வாசுதேவன்?  பானுமதிக்கு உறுதிமொழி கொடுத்தவனா?  இப்போது அஸ்வத்தாமா சொல்வதைக் கேட்டுக்கொள் என என்னிடம் சொல்பவனா?  உன்னுடைய உண்மையான சொரூபம் தான் என்ன கோவிந்தா?” தன் கரங்களைக் கட்டிக் கொண்டு செய்வதறியாமல் திகைத்தவண்ணம் கேட்டாள் திரௌபதி.

“எப்படி வேண்டுமானாலும் நினைத்துக்கொள் திரௌபதி.  உன் இஷ்டம்;  ஆனால் ஒன்று.  என்னிடம் நம்பிக்கையை மட்டும் இழக்காதே!”

“என்றால் நான் இப்போது இந்த அவமானமான சந்திப்பை ஏற்றே ஆகவேண்டும் என்கிறாயா?  அதாவது நீ அவர்களுக்குக் கொடுத்திருக்கும் வாக்குறுதி அப்போது தான் பூர்த்தி ஆகும்; இல்லையா?”

“ஆமாம்,  இந்தச் சந்திப்பின் மூலம் நீயும், நானும் இன்னும் நன்கு பிணைக்கப்பட்டுவிடுவோம்.”

“நல்லது கிருஷ்ணா!  நீ விரும்பும் வண்ணமே அனைத்தும் நடக்கட்டும்.  வேறு என்ன விஷயம்?”

“வேறெதுவும் இல்லை!”

“நீ ஒரு தேர்ந்த மந்திரவாதி கோவிந்தா!  இல்லை எனில் சூனியக்காரனா?  ஆஹா, நீ மட்டும் என்னிடம் துரியோதனனை மணந்து கொண்டு விடு என்று சொன்னாயானால்??  என்னால் அதை மறுக்க முடியுமா என்பதே சந்தேகமாக இருக்கிறது!”

“ஒருவேளை என் தர்மமோ, அல்லது உன் தர்மமோ அப்படிச் செய்யச் சொல்லி இருந்தால் நான் அதையும்  உன்னிடம் யாசித்துக் கேட்டு இருப்பேன் திரௌபதி! “ கிருஷ்ணன் சிரித்தான்.  எவ்வளவு யோசித்தும் கிருஷ்ணனின் இந்தச் சாதுர்யமான வேலைகள் தன் அறிவுக்குப் புலப்படாமல் போவதைக் கண்டு திரௌபதி அதிசயித்தாள்.  அந்த ஆச்சரியத்துடனேயே அவள் அவனைத் தன் விரிந்த கண்களோடு பார்த்த வண்ணம், “ நீ பேசுவதே புதிர்களாகவும், விடுவிக்க முடியா விடுகதைகளாகவும் உள்ளது கிருஷ்ணா!” என்றாள்.

“நானே ஒரு புதிர் தான் திரௌபதி.  நீயும் தான்.  சற்றும் குறைந்தவள் அல்ல.  ஆனால் இப்போது இந்தப் புதிர்களையும், விடுகதைகளையும் புரிந்து கொள்ளவோ, தெரிந்து கொள்ளவோ நேரமில்லை.  போகட்டும்.  ஷகுனியையும், அஸ்வத்தாமாவையும் உன்னைச் சந்திக்க இப்போது அனுப்பி வைக்கலாமா?”

“நீ மிகவும் விரும்பினாயெனில் நான் கட்டாயம் அவர்களைச் சந்திக்கிறேன் கிருஷ்ணா.  ஆனால் எதற்கும் தந்தையிடம் முதலில் தெரிவிக்க வேண்டும்.   நான் தந்தையைச் சந்தித்து அனுமதி கேட்கிறேன்.  நீ அவர் மனம் காயப்படும்படி அவரைத் துன்புறுத்தும், அல்லது அவமானப்படுத்தும் எந்த விஷயத்தையும் செய்யப் போவதில்லை என்னும் உறுதியை அவருக்கு நான் தெரிவிக்கலாமா?”

“அப்படியே செய்.  நினைவில் வைத்துக்கொள் திரௌபதி.  உனக்கும், உன் தகப்பனாருக்கும் நான் என்றென்றும் உதவுவேன் என்பதை நினைவில் வைத்துக்கொள்.  அந்த உதவியால் என்னுடைய உயிருக்கு ஆபத்து நேரிட்டாலும் சரி!  நான் என்றும் உங்கள் பக்கமே நிற்பேன்.  இதில் மாற மாட்டேன். !”

Wednesday, May 28, 2014

என் தர்மம் எது எனக் காட்டு கோவிந்தா!

“ஆம், வாசுதேவா, ஆம். உண்மை.  நீ சொல்வது முற்றிலும் உண்மை.  ஒரு மட்டமான விஷயத்தில் நான் மிகப் பெருமை கொண்டிருந்தேன்.  அதோடு என் தந்தையின் சபதமும், ஆசையும் பூர்த்தி அடைய வேண்டும் என்னும் ஆவலும், ஆர்வமும் கொண்டிருந்தேன்.  அவர் பழி வாங்குவதைக் காணவும் ஆவலொடு காத்திருந்தேன்.  ஆகவே நான் நானாக இருக்காமல் என் தந்தையின் பெண்ணாகவே இருந்து வந்திருக்கிறேன்.  என் சுயத்தை இழந்திருக்கிறேன். ஆனால் அந்த விலையை அவரின் பிரியத்துக்கும்,விசுவாசத்துக்கும் உகந்த மகளாக நிறைவேற்றியே கொடுத்திருக்கிறேன்.  இப்போது தோன்றுகிறது, நான் ஓர் அரச குடும்பத்திலேயே பிறந்திருக்கக் கூடாது.  சாதாரணக் குடும்பத்தில் பிறந்திருக்க வேண்டும்.” மிகவும் வருத்தத்துடன் இந்த வார்த்தைகளைக் கூறிய வண்ணம் திரௌபதி நிமிர்ந்து கண்ணனைப் பார்த்தாள்.  அவனோ சிரித்துக் கொண்டிருந்தான்.  அவளையே பாசத்துடனும், கருணையுடனும் பார்த்துச் சிரித்தான் வாசுதேவக் கிருஷ்ணன்.  திரௌபதிக்கு வெட்கம் மிகுந்து விட்டது.

“கிருஷ்ணா!” என அவளை அவளுடைய தனிப்பட்ட பெயரைக் குறித்து முதல்முறையாக அழைத்தான் வாசுதேவ கிருஷ்ணன்.  மிகவும் பாசத்துடனும், பிரியத்துடனும், அவளிடம் சொன்னான்;  “உன் குடும்பத்தையும், தந்தையையும் குறித்து நீ கொண்டிருக்கும் பெருமை சரியானதே.  அதில் தவறில்லை. தர்மத்தோடு, அரச தர்மத்தோடு பின்னிப் பிணைந்த ராஜாங்கமும் அதன் அரசனும் சாமானியமானவர்கள் அல்ல.  மிகப் பெரியவர்கள்.   மிகப் பெரிய விஷயமும் கூட.  தர்மத்தை அடைய நான் எவ்வளவு கஷ்டப்பட்டுப் போராடி வருகிறேன் என்பது எனக்குத் தான் தெரியும்.  எவ்வளவு போராடி இருக்கிறேன் தெரியுமா?” என்றான் கிருஷ்ணன்.

“ஆனால் நீ சந்தோஷமாகவே இருக்கிறாய் வாசுதேவா!”

“ஆம், கிருஷ்ணா, நான் சந்தோஷமாக இருக்கிறேன் தான்.  ஏனெனில் என் வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிஷத்தையும் தர்மத்தின் பாதையிலேயே வாழவும், அதற்காகவே போராடவும் செலவழித்து வருகிறேன்.  அதிலிருந்து பிறழ்ந்து வாழ நான் விரும்பியதில்லை.”

“ஆனால் நான் சந்தோஷமாக இல்லை வாசுதேவா!  ஒருவேளை நான் சுய தர்மத்தைக் கடைப்பிடிக்காமல் வாழ்வதாலோ!  தெரியவில்லை.   தர்மத்தின் பாதையில் வாழ்வது எப்படி என்பது எனக்கு இன்னமும் புரியவில்லை வாசுதேவா.  என் சுய தர்மம் தான் என்ன? அதை எனக்குக் காட்டுவாயா?  கோவிந்தா, காட்டுவாயா?” திரௌபதிக்கே தெரியாமல் அவள் கண்ணனுக்கு நெருக்கமானவர்கள் மட்டுமே அழைக்கும் கோவிந்தன் என்னும் பெயர் அவள் வாயில் அந்நேரம் வந்தது.  அப்போது தான் அவளுக்குச் சட்டெனத் தான் கண்ணனுடன் ஏதோ ஒரு வகையில் பிணைக்கப்பட்டுவிட்டோம் எனப் புரியவும் வந்தது.  அவள் உடல் சிலிர்த்தது.

“ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தர்மம் உண்டு திரௌபதி.  அதை அவரவரே கண்டு பிடிக்க வேண்டும்.  தர்மத்தின் பாதைகளும் பலவகைப்படும்.  அதில் உன் பாதையை நீ தான் தேர்ந்தெடுக்க வேண்டும்.”

“அது சரி வாசுதேவா!  இந்த நிமிஷத்தில் என்னுடைய சுய தர்மம் தான் என்ன?” திரௌபதி கேட்டாள்.

“நம்பிக்கையோடும், விசுவாசத்தோடும் இந்த சுயம்வரத்தை எதிர்கொள், கிருஷ்ணா!  ஆர்யவர்த்தத்தின் தலை சிறந்த வில் வீரனை உன் மணமகனாய்த் தேர்ந்தெடுப்பாய்!  அவனை உன் மணாளனாக ஏற்றுக் கொண்டு அவன் காலடிகளை ஒட்டி நீயும் நட.  அவன் எங்கே சென்றாலும் உடன் செல்.  அவனுக்கு நீ அளிக்கப் போகும் விசுவாசத்திலும் நம்பிக்கையிலும் உன்னை அர்ப்பணிப்பதன் மூலமும் ஒரு மாபெரும் தர்ம சாம்ராஜ்யத்தை உருவாக்கு!”

“என் தந்தை என்ன ஆவார்?”

“நீ தர்மத்தைக் கடைப்பிடித்து அதன் பாதையில் சென்றாலே உன் தந்தை வெற்றியை அடைவார் கிருஷ்ணா!  அது தான் அவர் வெற்றியே.  துரோணர் தோல்வியைத் தான் அடைவார்.  அது எப்படி எனக் கேட்கிறாயா?  நீ நினைக்கும் யுத்தங்களில் அல்ல.  அது வாழ்க்கையைத் தான் முடிக்கிறது.  உயிரைத் தான் எடுக்கிறது.  ஆனால் தர்மத்தின் பாதையில் செல்பவர்களுக்குக் கொடுங்கோன்மை, கர்வம், வெறுப்புப் போன்றவற்றை வெல்வதில் வெற்றி கிட்டும். இது சாமானிய வெற்றி அல்ல.” கிருஷ்ணன் சொன்னான்.

“நீ என் தகப்பனாக இருந்திருந்தால் இப்போது எப்படி நடந்து கொள்வாய்?”திரௌபதி கேட்டாள்.

“நான் உன் தகப்பனாக இருந்தால்---- துரோணருக்கு அவர் வாழ்நாள் முழுதும் மறக்க முடியா வண்ணம் ஒரு பாடம் புகட்டுவேன்.  அவருடைய பிராமணத்துவம் என்னும் உயர்ந்த நிலையில் இருந்து அவர் தாழ்ந்த நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டார் என்பதை உணர்த்துவேன்.  அதுவும் எப்படி?  உன் தந்தையை அவர் அவமானம் செய்தாரே அன்றே அவர் தன் மங்காப் புகழின் உச்சியிலிருந்து கீழே தள்ளப்பட்டுவிட்டார் என்பதை எடுத்துக் காட்டுவேன். “ என்றான் வாசுதேவன்.

“ஓஹோ, வாசுதேவா,   துரோணராவது, தன் தோல்வியை ஒப்புக்கொள்வதாவது!  ஒரு நாளும் நடவாத காரியம்.” திரௌபதி சொன்னாள்.

 “ஓஹோ, நீ மிகவும் நிச்சயமாய்ச் சொல்கிறாயே?  ஏன் அப்படி?” சிரித்தவண்ணம் கேட்ட கிருஷ்ண வாசுதேவன் பேச்சை மாற்றினான்.  “போகட்டும், இப்போது நம்மை எதிர்கொள்ளும் பிரச்னைகளை எப்படிச் சமாளிப்பது எனப் பார்க்கலாம்.  திரௌபதி, நான் திரும்பவும் உன்னைக் கேட்கிறேன்.  உன் மனதில் எந்த வீரனாவது இருக்கிறானா? யாரையாவது நீ மனதில் நினைத்துக் கொண்டிருக்கிறாயா?”

‘எனக்கு அப்படி எல்லாம் யாரும் இல்லை.  விருப்பு, வெறுப்பே இல்லை.  நீ யாரைச் சுட்டிக் காட்டுகிறாயோ அவரைத் தேர்ந்தெடுப்பேன்.” மிகப் பணிவோடும், உண்மையான நம்பிக்கையுடனும் சொன்னாள் திரௌபதி.  “அப்போது நான் சொல்வதைக் கேள் கிருஷ்ணா!  நான் ஏற்கெனவே சொன்னது போல் என் பாரத்தை, என் கஷ்டத்தைப் பகிர்ந்து கொள்.” என்றான் வாசுதேவன்.  “நான் எப்படி உனக்கு உதவி செய்ய முடியும்?” என்றாள் திரௌபதி.  “ஜராசந்தனைக் கண்டு கலங்காதே. பயப்படாதே.  அவனால் போட்டியிலும் வெல்ல முடியாது.  உன்னைத் தூக்கிச் செல்லவும் முடியாது.” என்றான் கிருஷ்ணன் திட்டவட்டமாக.

“உனக்கு எப்படித் தெரியும்?” திரௌபதி கேட்டாள்.

“அவன் வயது, முதுமை, வளைந்த உடல்!  அவனால் ஒரு போதும் போட்டியில் வெல்ல முடியாது.”

“ஆனால் அவனால் என்னைக் கடத்திச் செல்ல முடியும்!’ திரௌபதி கூறினாள்.

 “நிச்சயமாக உன்னைக் கடத்த முடியாது.  அப்படி அவன் உன்னைக் கடத்தினால் என் பிணத்தைத் தாண்டித் தான் செல்ல முடியும்.  நான் மட்டுமல்ல. என்னுடன் வந்திருக்கும் யாதவ மஹாரதர்கள், அதிரதர்கள் அனைவரின் பிணங்களையும் தாண்டியே அவன் உன்னைக் கடத்திச் செல்ல வேண்டும். “ கண்ணன் உறுதிபடக் கூறினான்.


Tuesday, May 27, 2014

நான் உன் சகோதரன்!

திரௌபதிக்குத் தலையோடு கால் நடுங்கியது. அவள் உடலே ஆடியது; மிதந்தது; எல்லையற்ற பெருவெளியில் பறந்தது.  பல வண்ணமயமான காட்சிகளைக் கண்டு இன்புற்றது.  அவள் வாழ்நாளிலேயே இன்று வரை கண்டிராத ஓர் அதிசய உலகில் அவள் இருந்தாள்.  அங்கே அழகும் இருந்தது.  ஆபத்தும் இருந்தது.  ஆனால் அதைக் கண்டு அவள் இப்போது அஞ்சவில்லை.  மனம் உடைந்து போகவில்லை.  அவள் கனவில் கண்டிராத ஓர் அற்புத உலகில் அவள் அதன் ஓரத்தில் நின்று கொண்டு அந்த பயங்கரங்களை ஒரு மூன்றாவது மனுஷியாகப் பார்த்துக் கொண்டிருந்தாள்.  சட்டெனத் தன்னை உலுக்கிக் கொண்டாள் திரௌபதி.  அவள் தன்னையே மறந்திருந்தாள்.  இந்த அதிசயங்களைப் பார்த்ததில் இவ்வுலகையே மறந்து விட்டாள்.  மிக மெல்லிய ரகசியம் பேசும் குரலில் ,”வாசுதேவா, அது , அதாவது அந்த வாசுதேவன், பர வாசுதேவன் அனைவரிடமும் உள்ளான்.   ஆனால்…. ஆனால் நீ யார்? நீ அந்தப் பர வாசுதேவன் இல்லையா?”

இப்போது கண்ணன் சகஜ நிலைக்கு வந்துவிட்டான். “நான் யாரெனக் கேட்கிறாயா? திரௌபதி நான் உன்னுடைய சகோதரன்.  என்னுடைய கஷ்டங்களை, பாரங்களை உன்னுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.  ஒரு எளிய சகோதரன் நான்.”

“உன்னுடைய பாரங்களும், கஷ்டங்களும் தான் என்ன, எப்படிப்பட்டவை?  இவ்வுலகிலேயே நீ தான் மகிழ்ச்சியான மனிதன் என நினைத்திருந்தேனே!  நீயும் அப்படித் தான் தோன்றினாய்!” தன்னை மீறிக் கேட்டாள் திரௌபதி.

“ஓ, மிகப்பெரியதொரு பாரத்தை நான் சுமந்து கொண்டிருக்கிறேன்.  சொன்னால் புரிந்து கொள்வாயா? அது என்னவெனத் தெரிந்து கொள்ள விரும்புகிறாயா? அதர்மத்திலிருந்து மனிதனை சுத்தம் செய்வதே அது.  பரிசுத்தமாக்குவது.”

“அதர்மம்? அப்படி என்றால் என்ன?”

“என்னால் அதை விளக்க முடியாது.  ஆனால் அதை நான் உணர்கிறேன்.  ம்ம்ம்ம்ம்….. வாசுதேவன், பர வாசுதேவன் நம்மிடம் இல்லை என மறுப்பது கூட ஒரு வகையில் அதர்மம் தான்.  அவன் இருப்பை அவனை உணராமல் இருப்பதும் ஒரு வகையில் அதர்மமே!” கண்ணனின் இந்த வார்த்தைகள் திரௌபதிக்குக் குழப்பத்தை ஏற்படுத்தியது.  அவளுக்கு என்ன கேட்பது என்றே புரியவில்லை.  கண்ணன் மேலும் பேசினான்.

“நான் பாஞ்சாலத்தில் தர்மம் சிங்காதனம் ஏறுவதைப் பார்க்க விரும்புகிறேன்.  பாஞ்சாலம் மட்டுமில்லை, ஹஸ்தினாபுரத்தில், ஆர்யவர்த்தத்தின் அனைத்து நாடுகளிலும் தர்ம சிங்காதனம் அமைய விரும்புகிறேன்.  அதற்காகத் தான் நான் ஓய்வில்லாமல் உழைக்கிறேன்.  திரௌபதி, நீ எனக்கு இதற்காக உதவி செய்வாயா? “ கேட்டுக் கொண்டே கெஞ்சும் கண்களால் திரௌபதியைப் பார்த்தான் கண்ணன்.  “நான் எவ்வகையில் உனக்கு உதவமுடியும் எனத் தெரியவில்லை, கண்ணா.  ஏனெனில் எனக்கு என்ன வேண்டும் என்பதே என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. “  கேள்விக்கணைகளைத் தவிர்க்கும் வண்ணம் பேசினாள் திரௌபதி.

“என் அருமைச் சகோதரியே, நீ உணமையை அறிந்து கொள்வதில் விருப்பமாக இருக்கிறாய். அதற்காகத் துடிக்கிறாய்.  ஆனால் அதை எப்படி அடைவது, அறிவது என்பதே உனக்குத் தெரியவில்லை.” என்றான் கண்ணன்.  கண்ணன் கண்கள் முன்பிருந்ததைப்போல இப்போது அதீதக் களைப்புடனும், அயர்ச்சியுடனும், சோகத்துடனும் தெரியவில்லை.  அதே சமயம் அந்தப் பர வாசுதேவனின் பிரகாசமான ஒளிக்கதிர்கள் வீசியதைப் போலவும் ஒளிமயமாகத் தெரியவில்லை.  மாறாக அவன் இயல்பாக இருந்தான்.  ஒரு புரிதல் நிறைந்த அன்னை தன் குழந்தையை எவ்வாறு விவேகத்துடனும், கருணை கலந்த அன்போடும்  பார்ப்பாளோ அவ்வாறு உணர்ந்தாள் திரௌபதி. அவள் பிறந்ததுமே அவள் தாய் இறந்துவிட்டாள். இப்போது தாயின் முகம் கூட நினைவில் இல்லை திரௌபதிக்கு.   இனம் புரியாததொரு ஏக்கம் அவளைச் சூழ்ந்து கொண்டது.  எதற்கு என்றே தெரியாமல் கண்ணன் காலடிகளில் வீழ்ந்து வாய் விட்டு அழவேண்டும் போல் இருந்தது அவளுக்கு.  ஆம், கண்ணன் சொல்வது உண்மைதான்.  அவளுக்கு எல்லாவற்றிலும், எதிலும் நம்பிக்கை என்பதே இல்லாமல் போய்விட்டது.  தன் நம்பிக்கையை மீட்டெடுக்க அவள் ஆவலோடு காத்திருந்தாள்.

திரௌபதியின் கர்வம் முழுவதும் பொசுங்கியது.  அவளுடைய நிமிர்ந்த தலை தானாகவே குனிந்தது.  “நான் இப்போது என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்ட வண்ணம் பரிதாபமாக அழுதாள் அவள்.


கிருஷ்ணன் புன்னகைத்தான். “நான் சொல்லட்டுமா?  திரௌபதி நீ பேரழகு வாய்ந்தவள்.  பொதுவாகப் பெண்களுக்கே இப்படி அழகானவர்களாக இருந்தால் மிக மகிழ்வோடு இருப்பார்கள்;  ஆனால் நீ மகிழ்ச்சியாக இல்லை. நேர்மையும், நீதியும் வெற்றியடைய வேண்டும் என்னும் ஆவல் உன்னிடம் இயல்பாகப் பொருந்தி உள்ளது.  ஆனால் கர்வம், அகங்காரம், மனக்கசப்பு போன்றவற்றால் உன்னால் அவற்றிற்கு ஏற்றாற்போல் நடக்க முடியவில்லை.

“ஆம், நான் கெட்டவள்.  மிக மோசமானவள். “ என்று தனக்குள்ளே முணுமுணுத்தாள் திரௌபதி.  அவளுக்கு இப்போது தான் புரிந்தது.  இத்தனை வருடங்களாக அவள் குடும்பமும், குடும்ப அங்கத்தினர்களும் மனக்கசப்பிலும், கர்வத்திலும், அகங்காரத்திலுமே வாழ்ந்து வந்ததால் ஏற்பட்டிருக்கும் பரிதாபமான நிலையை எண்ணிப் பார்த்து வெட்கம் அடைந்தாள்.

 “உன்னை நீயே தாழ்த்திக் கொள்ளாதே! திரௌபதி, உன்னிடம் தர்மத்தைக் காக்கும் அறிவு இயல்பாகவே இருக்கிறது.  அதற்காகப் போரிடவும் நீ தயங்க மாட்டாய்.  வேண்டாத விஷயங்களில் மனதைச் செலுத்தி அதற்காகப் பெருமை அடையாதே! தர்மத்துக்காகப் போராடு!” என்றான் கண்ணன்.

Sunday, May 25, 2014

அன்புச் சங்கிலியில் பிணைத்தான் கண்ணன்!

 தன்னெதிரே அமர்ந்திருந்த அந்த மெல்லிய உருவத்தை வியப்போடு பார்த்துக் கொண்டிருந்த சத்யாஜித்துக்குக் கண்ணன் தன்னிரு கரங்களால் தன் கண்களை மூடிக்கொண்டு அமர்ந்திருந்த ஆசனத்தில் நன்கு சாய்ந்ததும் அவன் இதயம் படபடவெனத் துடிக்க ஆரம்பித்தது.  அடுத்து என்ன நடக்கப் போகிறதோ எனக் காத்திருந்தவனுக்குச் சட்டெனக் கிருஷ்ணன் தன் கைகளை அகற்றியதும், திரெளபதியை நேருக்கு நேர் பார்த்து, “திரெளபதி, என்னிடம் நம்பிக்கையை இழந்துவிட்டாயா?  இப்படி உன் நம்பிக்கையை நீ இழந்துவிட்டாயெனில் என்னால் அதிசயங்களை எப்படி நிகழ்த்த முடியும்?  நீ என்பக்கம் எனக்குப் பக்கபலமாக இருந்தால் அன்றோ என்னால் அதிசயங்களைச் செய்ய இயலும்?”  இப்போது கிருஷ்ணன் அவளைப் பார்த்துக் கேட்ட தொனியில் அவன் மன உறுதியும், தனக்கு உரிமையான ஒன்றைக் கேட்கிறோம் என்னும் நிச்சயத் தன்மையும் புலப்பட்டது.

மறுபடியும் திரெளபதியைப் பார்த்து, “திரெளபதி என்னிடம் கோபித்துக் கொண்டு முகத்தைத் திருப்பிக் கொள்ளாதே!  தயவு செய்து என்னிடம் உண்மையைச் சொல்வாய்!  நீ இங்கு வந்திருக்கும் அரசர்கள், இளவரசர்களில் எவரையேனும் ஏற்கெனவே தேர்ந்தெடுத்துவிட்டாயா?  மறைக்காமல் வெளிப்படையாகச் சொல்லி விடு.  அப்படி நீ தேர்ந்தெடுத்திருந்தால் அவரே உனக்கு மணாளன்.  சுயம்வரம் நடந்தாலும் சரி, இல்லை எனினும் சரி.  அது நிச்சயம்.” தவிர்க்க இயலாத நிச்சயத்தன்மையுடன் அதே சமயம் குரலில் இயல்பான இனிமையுடனும் பேசினான் கிருஷ்ணன்.  எங்கோ கற்பனா லோகத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்த திரெளபதியை இந்தக் கேள்வி பூலோகத்துக்குக் கொண்டு வந்து விட்டது.  கிருஷ்ணனைப் பார்த்து, “எங்கே, நீ என்னை எங்கே தேர்ந்தெடுக்க விட்டாய் கிருஷ்ணா!  நான் தேர்ந்தெடுக்கத் தான் நினைத்தேன்.  ஆனால் நீ தானே அது வேண்டாம் என மறுத்தாய்.  இப்போது எனக்கு வேறு வழியில்லை.  போட்டியில் வெல்லும் எவரானாலும், அவர் என் தந்தையின் கெளரவத்தை மீட்டுக் கொடுப்பார் என்னும் நம்பிக்கையுடன் மணந்து கொண்டே ஆகவேண்டும். “

“ஆஹா, அப்படி எனில் நீ உன் வாழ்க்கையைத் தியாகம் செய்யத் தயாராகி விட்டாயா?  சாவித்திரி சத்யவானுக்காகச் செய்தது போல்?  இந்தப் போட்டியில் வெல்பவர் எவரானாலும் நீ மணந்து கொள்ளத் தயார் என்கிறாயா?” கண்ணன் மீண்டும் அவளை வற்புறுத்திக் கேட்டான்.  “நான் வேறென்ன செய்வது?  இது தான் என் தந்தை சுயம்வரத்தில் அவமானம் அடையாமலிருக்கும் ஒரே வழி! வேறு வழியில்லை கிருஷ்ணா! “ திரெளபதிக்கு மீண்டும் வந்த கோபத்தை அவள் உள்ளடக்கிக் கொண்டு பதில் சொன்னாள்.

“திரெளபதி, நாம் யுத்தம் செய்யாமலேயே துரோணரை வெல்ல முடியாது என்கிறாயா?” கிருஷ்ணன் கேட்டான்.  திரெளபதிக்குத் தூக்கி வாரிப் போட்டது.  “யுத்தம் செய்யமாலா ? அது எங்கனம்?” ஆச்சரியம் மாறாமலேயே கிருஷ்ணனைக் கேட்டாள்.  “வெறுப்பையும், பழிவாங்கும் உணர்வையும், நாம் சுயதர்மமாக மாற்றிவிடலாம். “ கிருஷ்ணன் அமைதியாகச் சொன்னான்.  திரெளபதி உடனே, “எனக்கென சுய தர்மம் ஏதும் இல்லை;  என் தந்தை செய்திருக்கும் சபதம் தான் என்னுடைய தர்மம்.” என்று பளிச்செனச் சொன்னாள்.

“திரெளபதி, நீ ஓர் இளம்பெண்.  வயதில் மிகச் சிறியவள்.  ஆனால் உண்மையும், நேர்மையும் நிரம்பியவள்.  இருந்தாலும் அரசகுமாரி என்பதால் அரச கெளரவத்தோடு வளர்க்கப்பட்டு விட்டாய்.  தர்மம் என்பது என்ன என்பதை நான் பார்க்கும் கோணத்திலிருந்து உன்னால் பார்க்க இயலாது.  பார்த்தாலும் புரிந்து கொள்ள இயலாது. “

“நீ எப்படிப் பார்க்கிறாய்?”

“துவேஷமும், பழிவாங்கும் உணர்வும் தர்மத்தோடு சேர்ந்தது அல்ல.  தர்மம் ஒரு நாளும் இவற்றுக்கு அடங்கிப் பணி புரியாது.  தர்மம் என்பது இவற்றின் ஆயுதமும் அல்ல .  தர்மம் என்பது எனக்கு வாழ்க்கை.  என் வாழ்க்கையாக நான் அதைப் பார்க்கிறேன்.  இந்த  ஏழை மாட்டிடையனின் கஞ்சிக்கு இனிப்புச் சேர்க்கிறது.  இந்த மட்டமான பிச்சைக்காரனை ஒரு அரசனின் தகுதிக்கு உயர்த்தி வைக்கிறது.  ஆனால் அதன் உண்மையான பொருள் தான் என்ன?” எங்கோ தூரத்தில் கனவு காணும் கண்களோடு பேசிக் கொண்டிருந்த கிருஷ்ணன் இப்போது திரெளபதியைப் பார்த்துத் திரும்பி நேருக்கு நேர் பேசலானான்.  “அதை என்னவெனத் தெரிந்து கொள்ள ஆசைப் படுகிறாயா?  அது அந்த அனைவருக்கும் பரம்பொருளின் விருப்பம், ஆசை.  ம்ஹூம், இல்லை, இல்லை நாம் சாதாரணமாய் தினம் தினம் வணங்குகின்ற கடவுளரைச் சொல்லவே இல்லை.  அந்த வாசுதேவன், பர வாசுதேவன் அவனைச் சொல்கின்றேன்.  எவன் அனைத்து உயிரிலும் அடக்கமோ, எவனுள் அனைத்து உயிர்களும் அடக்கமோ அந்தப் பர வாசுதேவன்.  அவன் விருப்பம் இது! "

மன எழுச்சியுடன் பேச ஆரம்பித்தான் கிருஷ்ணன்.  மெல்ல மெல்லத் தனக்குள்ளே பேசிக் கொள்ளும் பாணியில் பேச ஆரம்பித்தான்.  அவன் பேசப் பேச அவனைச் சுற்றி ஒரு அமைதி பரவத் தொடங்கியதை திரெளபதி உணர்ந்தாள்.  கண்ணன் முகமும் கண்களும் ஜோதியைப் போல் ஒளிர்ந்தன.  சத்யாஜித் வாயே திறக்காமல் அனைத்தையும் ஒரு அதிசயமாகப் பார்த்துக் கொண்டிருந்தான்.  திரெளபதி துடிக்கும் தன்  இதயத்தை அடக்கிக் கொண்டு கிருஷ்ணன் பேசுவதைக் கேட்டாள்.  அவன் பேசுவது எங்கோ தூரத்தில் இருந்து பேசுவது போல் இருந்தாலும் கண்ணன் கிட்டேயும் இருக்கிறான் என்பதும் புரிந்தது.  ஒரே சமயத்தில் எப்படி இவ்வாறு நிகழ முடியும்?

திரெளபதி அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.  அவன் முகம் மட்டும் ஒளிரவில்லை என்பதும், அவனைச் சுற்றியே ஓர் ஒளிவட்டம் உருவானதையும் மூச்சடைக்கப்பார்த்துப் பிரமித்துப் போய் உட்கார்ந்திருந்தாள்.  அவன் கண்களில் இருந்து ஒரு வித்தியாசமானதொரு சக்தி தன்னிடம் வந்து புகுந்து கொண்டதையும் திரெளபதியால் உணர முடிந்தது.  கதிரொளியால் நிரம்பியதொரு மாபெரும் ஒளிக்கடலில் தான் மிதப்பதையும் உணர்ந்தாள்.  ஆனால் அவள் தனியாக மிதக்கவில்லை;  கண்ணனும் அவளோடு இருந்தான்.  அவன் சொல்வது அனைத்தையும் அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை;  எனினும் அவன் என்ன சொல்ல வருகிறான் என்பதை அவளும் அவள் புரிந்து கொள்கிறாள் என்பதைக் கண்ணனும் தெரிந்து கொண்டார்கள் என்பதை திரெளபதி உணர்ந்தாள்.  ஒரு மூன்றாம் மனுஷியைப் போல் தனித்திருந்து தன்னைப் பார்க்க அவளால் முடிந்தது.  விவரிக்க ஒண்ணாதோர் இணைப்புச் சங்கிலி அவனையும், அவளையும் பிணைத்தது.Saturday, May 24, 2014

கண்ணன் கெஞ்ச, திரெளபதி மிஞ்ச! :)

திரெளபதிக்கு மீண்டும் சீற்றம் வந்தது.  கிருஷ்ணனின் தொனி அவளுக்குள் தாங்கமுடியாத கோபத்தைக் கொடுத்தது. அவனைப் பார்த்து, “நீயோ என்னை ஏற்கப் போவதில்லை என்று சொல்லிவிட்டாய்! போட்டியிலும் நீ கலந்து கொள்ளப் போவதில்லை!  இது மட்டும் போதாது என நினைத்து என் சகோதரனைத் திருடி அவனை துரோணரின் அடிமையாக்கி வைத்திருக்கிறாய்! “ திரெளபதியின் உள்ளக் கசப்பெல்லாம் அவள் குரலில் தெரிந்தது.  ஆனால் கிருஷ்ணன் இதற்கெல்லாம் அசைந்து கொடுக்கவே இல்லை.

“அட, உனக்குத் தெரிந்து விட்டதா? அவன் இங்கே வந்தானா? “ என்று சிரிப்புடன் கேட்ட கிருஷ்ணன், “ஆம், நான் சென்ற முறை இங்கே வந்த போது அவனை வழியில் பார்த்தேன். ரதத்தில் சுருண்டு அமர்ந்த வண்ணம் ஒரு குழந்தையைப் போல் அழுது கொண்டிருந்தான்.  மிகவும் மனம் உடைந்து போயிருந்தான். அவனைக் காப்பாற்ற யாருமே இல்லை என்பதில் மிகவும் வேதனைப் பட்டுக் கொண்டிருந்தான்.  அனைவரும் அவனைக் கைவிட்டுவிட்டதாய்க் கூறினான். “  “ஓஹோ, உனக்கு அவனை அவ்வளவு பிடித்திருக்கிறதோ?” திரெளபதி சீறினாள்.

கண்ணன் கலங்காமல், “அவன் மிகவும் தைரியமான பிள்ளை.  எல்லாத் துன்பங்களையும் சிரித்துக் கொண்டே பொறுத்துக் கொண்டான்.  எதற்கு?  உன் தந்தையையும், மற்றும் உங்கள் குடும்பத்தினர் அனைவரையும் அவனைக் குறித்து பெருமையும் கர்வமும் அடைய வைப்பதற்காகவே அனைத்தையும் சகித்துக் கொண்டான்.  அதுவும் சிரித்த முகத்தோடு!” குற்றம் சாட்டும் தோரணையில் திரெளபதியைப் பார்த்தான் கண்ணன்.


ஆனால் திரெளபதிக்கோ இன்னும் அதிகக் கோபம் வந்தது. “நீ எங்கள் ஜன்ம வைரியை நண்பராக்கிக் கொண்டதோடு அல்லாமல், அவரிடமிருந்து ஒரு விலையையும் பெற்றிருக்கிறாய்.   அது தான் புஷ்கரம்.  ஆம், உன்னுடைய சிநேகத்துக்கு அவர் கொடுத்த விலை புஷ்கரத்தை உன் கைகளில் மீண்டும் ஒப்படைத்தது தான்.  இல்லையா?  அந்தப் பரம்பொருளுக்குத் தான் தெரியும், நீ ஏன் இப்படிச் செய்தாய் என!”  அவள் முகம் தீப்பிழம்பு போல் ஜொலித்தது. "நாடோடிப் பாடல்கள் பாடுபவர்கள், நீ கோபியருக்குத் தான் பொய்யானவனாக இருந்ததாகச் சொல்லிப் பாடிக் கேட்டிருக்கிறேன்.  ஆனால் நீ எங்களுக்கும் உண்மையாக நடந்து கொள்ளவில்லை!”

சத்யாஜித் மெளனமாக இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்தான்.  அவன் உள் மனதில் தன் சகோதரி மிகவும் கடுமையுடன் பேசுவதாகவும் கடுமையைக் கொஞ்சம் குறைத்துக் கொள்ளலாம் எனவும் தோன்றியது. கிருஷ்ணனுக்கு இதனால் கோபம் வரப் போகிறது என நினைத்த வண்ணம் கிருஷ்ணன் பக்கம் திரும்பிப் பார்த்தான்.  கிருஷ்ணனுக்குக் கோபமே வரவில்லை. மாறாக  அவன் முகத்தில் அளவு கடந்த வருத்தம் தான் தெரிந்தது.  திரெளபதியையே தீவிரமாக உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான் கண்ணன்.  திரெளபதியின் உணர்ச்சிகரமான பேச்சைக் கேட்ட கிருஷ்ணன் அவளையே பார்த்து கொஞ்சம் வருத்தத்துடன், மெதுவாகப் பேச ஆரம்பித்தான். “சாந்தம், சாந்தம், இளவரசி, கொஞ்சம் சாந்தமாக இரு! ஆண்கள் எவ்வளவு இகழ்ச்சியாகப் பேசினாலும் அதை கவனத்தில் கொள்ளமாட்டேன்.  ஆனால் ஒரு பெண்ணின் இகழ்ச்சியான பேச்சை என்னால் பொறுக்க முடியவில்லை.  அதுவும் நான் சகோதரியாய் மதிக்கும் ஒரு பெண்ணின் வாயிலிருந்து இப்படிப்பட்ட இகழ்ச்சிச் சொற்கள் வருவதை என்னால் சகிக்க முடியவில்லை.”

கிருஷ்ணனையே பார்த்த திரெளபதிக்கு அவன் தன்னை ஏமாற்ற வேண்டி வருத்தம் அடைந்ததாக பாவனை செய்கிறான் என்று நினைத்தாள். அவனுடைய இந்தக் கெஞ்சல்களுக்கோ, கொஞ்சல்களுக்கோ அவள் அசைந்து கொடுக்கக் கூடாது.  தன் மனதுக்குள் எஃகு போல் உறுதியை வரவழைத்துக் கொண்டாள் திரெளபதி.  சற்று நேரம் மெளனத்தில் கழிந்தது.  பின்னர் கண்ணன் அவளைப் பார்த்து, “நீ உன் தரப்பு நியாயங்களைக் கூறி விட்டாய் இளவரசி.  இப்போது நான் சொல்வதையும் கொஞ்சம் காது கொடுத்துக் கேள்! “ என்றான்.  “சொல், அதை விட வேறு வழி என்ன இருக்கிறது?” சீறினாள் திரெளபதி.

கண்ணன் மெதுவாகப் பேச ஆரம்பித்தான். கோபமோ, வருத்தமோ இல்லாத குரலில் பேசினான். “ இளவரசி, உன் தந்தையும், உன் சகோதரர்களும், நீயும் என்னிடம் நம்பிக்கை வைத்ததில் நான் மிகவும் மகிழ்ந்தேன்.  உன்னுடைய நம்பிக்கை மிக உறுதியானது என நினைத்து இந்த ஆர்ய வர்த்தத்தையே அதன் போக்கிலிருந்து மாற்றக் கடந்த ஒரு வருஷமாக முயற்சிகள் எடுத்தேன். மாற்றிவிட்டேன் என்றே நினைத்திருந்தேன்; உன்னைப் பார்க்கும் வரையிலும். ஆனால் அதில் நான் தோற்றுவிட்டேன் என்பதை இப்போது தான் அறிந்தேன். “ கண்ணன் குரலில் தெரிந்த ஏமாற்றமும், மனக்கசப்பும் திரெளபதியைத் திகைப்படைய வைத்தது.  கண்களில் தெரிந்த கேள்விகளோடு அவனைப் பார்த்தாள்.  அவன் மேலே தொடர்ந்தான்.

“இப்போது உங்கள் யாருக்குமே என்னிடம் நம்பிக்கை இல்லை என்பது புரிந்து விட்டது. நான் மிகக் களைத்துவிட்டேன்.  உண்மையை, சத்தியத்தை எங்கும் காணவில்லை.  அல்லது என் காதுகளில் அதன் இசை விழவில்லை.  இப்போது உண்மையைத் தேடிக் கண்டுபிடிக்க நேரமும் இல்லை.  இரண்டு இரவுகளும் ஒரு பகலுமே மீதம் உள்ளது.  ஒருவருடமாக நான் பாடுபட்டதெல்லாம்—என் வாழ்நாளை இதற்கெனச் செலவிட்டதெல்லாம் வியர்த்தமாகிவிடும் போல் இருக்கிறது.  ஓ பரம்பொருளே, மஹாதேவா!  எவராலும் அழிக்க முடியா தெய்வங்களே!  ஏன் அழியக் கூடிய நாங்கள் எங்களை நாங்களே காத்துக்கொள்ள முடியவில்லை?” எல்லையற்ற கருணையுடனும் பரிதாபத்துடனும், திரெளபதியைப் பார்த்தான் கிருஷ்ணன்.

தன் சீற்றம் மெல்ல மெல்ல வடிவதை உணர்ந்தாள் திரெளபதி.  இனம் தெரியா ஆறுதலும், நிம்மதியும் அவள் மனதில் புகுந்தது.  இவன், இந்தக் கிருஷ்ண வாசுதேவன், எவ்வளவு பெரிய ஆற்றல் நிறைந்த மனிதன்!  இவன் இன்று பாஞ்சால இளவரசியான அவளிடம் வந்து அவள் நம்பிக்கையை யாசகமாகக் கேட்கிறான்.  அனைவரும் மிகவும் பெருமிதத்துடன் இவனின் வீரச் செயல்களைக் குறித்துப் பெருமையாகப் பேச இவனோ இங்கு வந்து இளவரசியின் விசுவாசத்தை யாசிக்கிறான்.  ஒரு ராஜதந்திரிக்கு உள்ள எந்தவிதத் தந்திரமான நடவடிக்கைகளோ, ஒரு மாயாவிக்கு உள்ள மந்திர சக்தியோ எதுவுமே இவனிடம் இல்லை.  அவனுடைய அந்த அழகான கண்கள் அன்பைக் காட்டுவது மட்டுமல்ல; அவளுடைய அவநம்பிக்கையையும் மெல்லக் கண்டிக்கிறது.  அவனைத் தவறாக நினைத்தது அவள் தவறே எனச் சுட்டிக் காட்டுகிறது.  இத்தனை பேசியும் அவளிடம் அன்பை மட்டுமே காட்டுகின்றன அந்தக் கண்கள்.   மீண்டும் அவனைக் கோபித்துப் பேச வேண்டும் என திரெளபதி செய்த முயற்சிகள் பலனளிக்கவில்லை.  மாறாக எல்லையற்ற சோகத்துடன் அங்கே அமர்ந்திருக்கும் அந்த மெல்லிய உருவத்தின் தலையிலிருந்து கால் வரை பரவி இருக்கும் சோகத்தை மாற்றி அவனை ஆறுதல் மொழிகள் சொல்லித் தேற்ற வேண்டும் என்னும் எண்ணம் அவளுள் எழுந்ததை அவளால் தவிர்க்க முடியவில்லை.Thursday, May 22, 2014

கிருஷ்ண வாசுதேவனும் ஒரு மனிதனே!

சட்டெனத் தன்னைச் சரிப்படுத்திக் கொண்டு சமாளித்துக் கொண்டாள் திரெளபதி.  எழுந்து வந்து அவனை வரவேற்க ஆயத்தமானாள்.  வாசனை மிகுந்த எண்ணெயால் எரிக்கப்பட்ட தீபங்கள் ஒளிவிட்டுப் பிரகாசித்து நறுமணப் புகையை எங்கெங்கும் பரப்பிக் கொண்டிருந்தது.  அந்த தீபங்களில் ஒளியில் அவள் அந்த மறக்க முடியாத உருவத்தைக் கண்டாள்.  ஒளி வீசும் கண்கள், அதில் தெரிந்த குறும்பு, பிரகாசிக்கும் முகம், இதழ்களில் புன்னகை, தலையில் வைத்திருந்த மயிலிறகு, அதே தன் வயப்படுத்தும் பார்வை.  மிகுந்த பிரியத்துடன் அனைவரையும் புரிந்து கொண்டிருக்கும் பாவனை.  கண்ணனைப் பார்த்ததுமே அனைவருக்கும் ஏற்படும் ஒரு நிம்மதி உணர்வு திரெளபதிக்கும் ஏற்பட்டது. ஆனால் தன்னையும் அறியாமல், ஆஹா இவை எல்லாமே இவனுடைய தந்திரமன்றோ என்ற எண்ணம் தோன்றி அந்த உணர்வை அழித்தது.

தன்னுடைய இந்த எண்ணங்களைக் கிருஷ்ணன் அறியாமல் தன்னைச் சமாளித்துக் கொள்ளப் பாடுபட்டாள் திரெளபதி.  அதில் வெற்றியும் கண்டாள்.  தன்னைத் தானே அடக்கிக் கொண்டு, கிருஷ்ணனிடம், “வர வேண்டும் வாசுதேவா, தந்தைக்குச் சிறிது உடல் நலமில்லை.  ஆகவே உன்னை நான் சந்திக்க வேண்டும் என சத்யாஜித்திடம் இப்போது தான் சொல்லி அனுப்பினார். “ என்றாள்.  அவள் உள்மனம் கொதித்துக் கொண்டிருந்தது.  எந்நேரமும் வெடித்து விடுவோமோ என அஞ்சினாள்.  தன்னை எவ்வளவு தான் சமாளித்துக் கொண்டாலும் தன்னையும் அறியாமல் வெடித்துச் சிதறி விடுவோமோ என அஞ்சினாள்.  ஆனால் கிருஷ்ணனின் சிரிப்பையும், அவன் இணக்கமான போக்கையும் கண்டு அவளுக்குள்ளாக ஆச்சரியம் ஏற்பட்டதோடு அல்லாமல், அவனிடம் இப்படி எல்லாம் தன்னால் நடக்க முடியாது  எனப் புரிந்து கொண்டாள்.  கிருஷ்ணன் உள்ளே வருகையிலேயே , “என் ஆசிகள் திரெளபதி!  இளவரசியைப்பார்க்க வேண்டி எத்தனை நாட்களாகக் காத்திருந்தேன்!” என்று கூறிய வண்ணம் சத்யாஜித் காட்டிய ஆசனத்தில் அமர்ந்து கொண்டான் கிருஷ்ணன்.

கிருஷ்ணனோடு உள்ளே நுழைந்த உதவியாளர்கள் அங்கிருந்த சுவற்றில் பொருத்தப்பட்டிருந்த விளக்குகளை ஏற்றி மேலும் வெளிச்சம் உண்டாக்கினார்கள்.  மந்திரி உத்போதனரும் விடைபெற்றுக் கொண்டு போய் விட்டார்.  சத்யாஜித் மிகவும் உணர்ச்சிவசப்பட்டிருந்தான்.  அடுத்து என்ன நடக்கப் போகிறதோ என்னும் எதிர்பார்ப்பில் இருந்தான். தன்னுடைய ஆசனத்தில் கூட அமராமல் நின்ற வண்ணமே கிருஷ்ணனைப்பார்த்துப் பார்த்து வியந்து கொண்டிருந்தான். உள்ளூர திரெளபதி அவனிடம் கோபத்தைக் காட்டிச் சண்டை போடுவாளோ என்னும் எண்ணமும் வந்தது.  வந்திருக்கும் விருந்தாளியிடம் அப்படி எல்லாம் மரியாதைக் குறைவாக நடந்து கொள்ள மாட்டாள் எனவும் நம்பினான். வெளிப்படையாகக் கிருஷ்ணன் என்னதான் உற்சாகத்தைக் காட்டிக் கொண்டாலும் சொல்ல முடியாத சோர்வு அவனை ஆட்டிப் படைக்கிறது என்பதைக் கண்ட திரெளபதி ஆச்சரியமடைந்தாள்.  இது கிருஷ்ணனின் இயல்புக்கு மாறுபட்டதாக அவள் உணர்ந்தாள்.

அதற்கேற்றாற்போல் கிருஷ்ணனும் சத்யாஜித்தை அழைத்து, “ என்னைப் பிணைத்திருக்கும் இந்த ஆயுதங்களை எல்லாம் நீக்குவதற்கு உதவி செய்!  நான் மிகக் களைத்திருக்கிறேன்.” என அழைத்தான்.  சத்யாஜித்திற்குத் தூக்கி வாரிப் போட்டது.  கண்ணன் தன்னை சகோதரன் போல் கருதி உதவி செய்ய அழைத்ததில் மனம் நெகிழ்ந்திருந்த அவனுக்குக் கண்ணனின் களைப்பு அதிசயமாகப் பட்டது.  “என்ன, உங்களுக்குக் களைப்பா?” என்று அதிசயித்தான்.  அனைவரும் இவனை மனித ஆற்றலுக்கு மேம்பட்டதொரு காரியங்களைச் செய்பவன் என்று சொல்லியே வந்ததால் அவன் தெய்வீகத் தன்மை படைத்தவன் என்னும் எண்ணம் சத்யாஜித்திடம் ஆழப் பதிந்திருந்தது.  ஆகவே கிருஷ்ணனிடம், “ என்ன இது வாசுதேவா! உங்களுக்குக் களைப்பா?  களைப்பும் சோர்வும் நீங்கள் அறியாதது எனவும், இரவில் கூடத் தூங்க மாட்டீர்கள் என்றெல்லாம் அறிந்திருக்கிறேனே! இங்கே அனைவரும் இப்படித் தான் சொல்கின்றனர்!” என்றான்.

“எல்லாம் அளவுக்கு மீறிய கட்டுக் கதை சத்யாஜித்.  எந்த விதமான காரணங்களும் இல்லாமல் மனிதர்களால் கட்டி விடப்பட்ட இந்தக் கட்டுக் கதையால் என் மனம், உடல் இரண்டுமே மிகச் சோர்ந்து போகிறது. “இந்த வார்த்தைகளில் தொனித்த மறைமுகக் கண்டனத்தை உணர்ந்த திரெளபதி பொங்கி எழப் போனாள்.  அப்போது கிருஷ்ணன் அலுப்போடும், சலிப்போடும் தன்னுடைய வாளை அதன் உறையிலிருந்து எடுத்துக் கீழே போட்டான்.  சத்யாஜித் அதை எடுத்து  ஒரு பக்கமாகத் தனியாக வைத்தான்.  அப்போது திரெளபதி தான் செய்வது இன்னவென்று அறியாமலேயே,  கண்ணன் மேல் தனக்கிருந்த சினத்தையும் கூட மறந்தவளாய், கிருஷ்ணன் கைகளில் இருந்த கிரீடத்தைத் தானே வாங்கி அருகிலிருந்த மேடையின் மேல் வைத்தாள்.  கிருஷ்ணன் சிரித்த வண்ணம் தன் தோள்களில் இருந்த சக்கரத்தைத் தானே கழட்டி அதை சத்யாஜித்தின் கரங்களில் வைத்தான். கிருஷ்ணனின் இந்தப் பிரசித்தி பெற்ற ஆயுதம் தன் கைகளில் வந்ததும் சத்யாஜித் எத்தனையோ பேருக்கு எமனாக விளங்கிய அந்தச்சக்கராயுதத்தை பயபக்தியுடன் பார்த்தான்.

“தந்தைக்கு என்ன இளவரசி? ரொம்பவும்  உடல் நலம் சரியில்லாமல் உள்ளாரா?  உங்கள் தந்தையை இப்போது பார்க்க முடிந்திருந்தால் சந்தோஷம் அடைந்திருப்பேன்.  எனக்காக அவர் மனக்கதவு மூடப்பட்டு விட்டதோ?” என்றும் கேட்டான் கிருஷ்ணன்.  திரெளபதிக்கு இம்மாதிரியான நேரடிக்கேள்வி பிடிக்கவில்லை.  “அவர் உடல் நலம் சரியில்லை!” என்று வெட்டென பதில் சொன்னாள்.  கிருஷ்ணன் அதைக்  கவனிக்காதவன் போல திரெளபதியிடம், “ சொல் திரெளபதி, இந்நாட்களில் உன் மனோநிலை எப்படி உள்ளது?  நீ என்ன நினைக்கிறாய்?  சுயம்வரத்தை எதிர்கொள்ளத் தயாராகி விட்டாயா?  உனக்குப் பொருத்தமானவர்கள் என எத்தனை பேரை நீ தேர்ந்தெடுத்திருக்கிறாய்?” கிருஷ்ணனின் இந்தக் கேள்விகள் திரெளபதியின் உள் சீற்றத்தை அடக்குவது போல் காணப்பட்டது.  ஆனால் திரெளபதிக்கோ எரிச்சலே மிகுந்தது.  கிருஷ்ணன் தன்னையும்  தன் குடும்பத்தையும் இக்கட்டில் ஆழ்த்திவிட்டு இப்போது பொய்யான பரிவைக் காட்டிக் கேலி செய்கிறான் என்றே நினைத்தாள்.

“நான் என்ன நினைக்கிறேனா?  உனக்கு என்ன ஒன்றுமே தெரியாதா? தெரியாமல் தான் கேட்கிறாயா?” கோபம் மீதூறக் கேட்டாள் திரெளபதி.

“சொன்னால் தெரிந்து கொள்கிறேன்.  எனக்குத் தெரிய வேண்டும் என்பதே ஆசை!” என்றான் கிருஷ்ணன் தன் புன்னகை மாறாமல்.  திரெளபதி ஆத்திரம் அடங்காமலேயே, “ நீ தான் இந்த சுயம்வர யோசனையையே தந்தையிடம் சொன்னாய்.  உன் யோசனைப்படி தந்தையும் சுயம்வரத்திற்கு ஏற்பாடுகள் செய்து விட்டார்.  போட்டிக்கான தேர்வையும் தேர்ந்தெடுத்து அனைத்து அரசர்களையும் அழைத்து அவர்களும் வந்துவிட்டனர்.  எங்களை எல்லாம் சூழ்ச்சி வலையில் மாட்டி விட்டாய்!  தந்தை அப்படித் தான் நினைக்கிறார்.” திரெளபதி கொஞ்சம் சந்தேகத்துடனேயே கடைசி வரியைச் சொன்னாள்.

“ஏன்? சுயம்வரம் நடப்பதில் என்ன தவறு கண்டாய்?”

“என்ன தவறா?  எல்லாமே தவறு.  துரியோதனனோ, அஸ்வத்தாமாவோ போட்டியில் வென்றால் என்னை ஹஸ்தினாபுரம் இழுத்துச் சென்று விடுவார்கள்.  அங்கே போய் என் தகப்பனாரின் பரம வைரி துரோணரின் பாதங்களில் ஒரு அடிமையாக வீழ்த்துவார்கள்.  ஒரு வேளை அது ஜராசந்தனாக இருந்தால், போட்டியில் வெல்லும் வரை காத்திருக்காமல் என்னைக் கடத்திச் சென்று மகதத்தில் ஒரு கூண்டுக்கிளியாக, அடிமையாக வைத்திருப்பார்கள்.”

“உண்மையைத் தான் சொல்கிறாய்!” கிருஷ்ணன் அமைதியாகச் சொன்னான்.
Tuesday, May 20, 2014

கிருஷ்ணனின் வரவும், திரெளபதியின் மறுப்பும்!

ஷிகண்டின் சென்ற திசையையே பார்த்துக் கொண்டு நின்று கொண்டிருந்தாள் திரெளபதி.  அவளால் அசையக் கூட இயலவில்லை.  அவள் உடலின் சக்தி முழுதும் வடிந்து விட்டாற்போல் உணர்ந்தாள்.  அவள் சீற்றமெல்லாம் வடிந்த பின்னர் அவளிடம் ஓர் வெறுமை உணர்வு தோன்றியது.  ஷிகண்டின் சென்ற கதவு வழியைப் பார்த்த வண்ணமே நின்று கொண்டிருந்தவளுக்கு ஒரு ரதம் கிளம்பத் தயாரானதும், அது கிளம்பும் ஓசையும் கேட்டது.  ஷிகண்டின் அரண்மனையை விட்டே செல்கிறான் என்பதைப் புரிந்து கொண்டாள். அவள் கால்கள் நடுங்கின.  அவளால் நிற்க முடியவில்லை.  மெல்ல மெல்ல நகர்ந்து அங்கிருந்த படுக்கையில் விழுந்தாள்.  ரதம் செல்லும் ஓசை கேட்டு மெல்ல மெல்ல மறைந்தது.  இனம் புரியாத தளர்ச்சியும், சோகமும் அவளைப் பிடித்து ஆட்ட வாய் விட்டு அழுதாள். யாரிடம் என்று சொல்ல முடியாவண்ணம் கோபமும், மனக்கசப்பும், தன்னிரக்கமும் அவளைப் பிடித்து ஆட்டின.  சொல்லமுடியாத சோகம் அவளைக் கவிந்து கொண்டது.  அவளைப் போன்றதொரு துரதிர்ஷ்டம் பிடித்த அரசகுமாரியை எவரேனும் பார்த்திருப்பார்களா?  நிச்சயமாக இருக்காது.

கிருஷ்ண வாசுதேவனைச் சந்திக்கும் வரையில் அவள் தன்னம்பிக்கையுடனும் தன்னில் நிச்சயத்துடனும் தான் இருந்து வந்தாள். அவள் தந்தையின் சபதத்தை நிறைவேற்றுவதற்காகக் கிருஷ்ண வாசுதேவனைத் திருமணம் செய்து கொள்ளவும் தயாராகவே இருந்தாள். கிருஷ்ண வாசுதேவனுக்கு ஏற்ற நல்லதொரு மனைவியாகவே இருந்திருப்பாள்.  யாதவர்களுக்கும் பாஞ்சால நாட்டு மக்களுக்கும் இடையிலே நல்லதொரு பிணைப்பும் ஏற்பட்டு கிருஷ்ண வாசுதேவனும் அரசர்க்கெல்லாம் அரசனாக, சக்கரவர்த்திகளுள் மாபெரும் சக்கரவர்த்தியாக இருந்திருப்பான்.  ஆனால்…. ஆனால்…. இவை எதுவுமே நடக்கவில்லை.  சோகம் என்னவெனில் அவன் வந்த போது  தன்னுடைய கருத்துகளைத் தான் அவர்கள் மனதில் புகுத்தினான்.  தனக்குத் தானே வகுத்துக் கொண்டதொரு பாணியைக் காட்டி அவர்களை எல்லாம் மனோ வசியம் செய்துவிட்டான். அவன் இழுத்த இழுப்புக்கு அவர்கள் அனைவரும் போகும்படி அவன் சொல்வதைக் கேட்கும்படி அவர்களை பொம்மைகளாக மாற்றி விட்டான். சூத்திரதாரியாகச் செயல்பட்டான்.  ஆனால் அவர்கள் புரிந்து கொள்ளவில்லை.  இப்போது அவர்கள் அனைவருமே ஒவ்வொரு வகையில் பேராசை பிடித்த மன்னர்களின் வலையில் நன்றாகச் சிக்குண்டார்கள்.  இது தான் அனைவரும் கொண்டாடும் தெய்வத் தன்மையுள்ளவன் எனக் கருதப்படும் கிருஷ்ண வாசுதேவனின் தந்திரம்.  ஹூம். இவை எல்லாம் கிடக்க என் அருமைச் சகோதரன் கூட இவனைக் கடவுளாக நினைத்துக் கொண்டாடுகிறான்.

இந்தப் புதிய அனுபவம் தந்த ஏமாற்றத்தில் அவள் அழுதாள்;  மிகவும் அழுதாள். இது வரையிலும் அவள் தந்தை தான் அவர்கள் குடும்பத்தில் தலை சிறந்த ஆலோசகராக அனைவரையும் அடக்கி ஆளும் வல்லமை படைத்தவராக இருந்து வந்தார்.  அவர் சொல்வதை அவர் மக்கள் தட்டாமல் கேட்பார்கள்.  அவர் பேச்சுக்கு மறு பேச்சு இல்லை.  அவளைப் பொறுத்தவரையிலும் அவள் குடும்பம் உயர்ந்ததொரு மகிமை நிறைந்த பீடத்தில் இருந்து பாஞ்சாலத்தை ஆண்டு வந்தது.  அவள் தந்தையைக் குறித்தும், சகோதரர்கள் குறித்தும் பெருமையும் கர்வமும் கொண்டிருந்தாள் அவள்.  அந்த சுய கர்வத்தில் தன்னைத் தானே பொசுக்கிக் கொண்டாள்.  இப்போது எல்லாம் பொய்யாய்ப் பழங்கனவாய்ப் போய்விட்டதே!  இதைக் காப்பாற்றி ஆக வேண்டும். அவள் குடும்ப கெளரவத்தை அவள் மீட்டே ஆகவேண்டும்.  இதற்காக ஏதேனும் செய்ய வேண்டும்.  என்ன செய்யலாம்? வாய் விட்டு அழுத திரெளபதி, “மஹாதேவா, மஹாதேவா, என் கடவுளே, என் உதவிக்கு வா!  என் குடும்பத்தைக் காப்பாற்று! எங்களுக்கு உதவி செய்!” என்று அரற்றினாள்.

அப்போது குதிரைகள் விரைவாக வரும் காலடிச் சப்தமும் ரதத்தின் சக்கரங்கள் சாலையில் உருண்டோடி வரும் ஒலியும் கேட்டது.  அதோடு இல்லாமல் ரதங்கள் சில, ஒன்றிரண்டு இருக்கலாம்.  இழுத்துப் பிடிக்கப்பட்டு நிறுத்தப்பட்டன என்பதையும் அறிந்தாள்.  அரண்மனை முன்றிலிலும் விளக்குகளின் ஒளி தெரிந்தது.  எவரோ, யாரோ வந்திருக்கிறார்கள்.  ரதங்கள் ஒன்றிரண்டு இல்லை.  நான்கு குதிரைகள் பூட்டப்பட்ட ஒரே ரதம்.  அதில் யாரோ வந்துள்ளார்கள்.  யாராக இருக்கலாம்? வந்திருக்கும் விருந்தினர்களில் மிகச் சிலருக்கே இப்படிப் பட்ட ரதமும், இப்படி ஓட்டும் வழக்கமும் உண்டு. யாரோ பெரிய அரசன் போல.  மிகப் பெரிய வரவேற்பும் கொடுக்கப்படுகிறதே! எதிர்பாரா முக்கிய விருந்தாளி எவரோ இந்த நேரத்தில் வருகை புரிந்திருக்கிறார்கள்.  சில நிமிடங்களில் வந்திருப்பது யார் எனப் புரிந்து விட்டது.  மிகப் பெரிய கூட்டம் அரண்மனை முன்றிலில் கூடி, “கிருஷ்ண வாசுதேவனுக்கு மங்களம்!  ஜெய ஜெய கிருஷ்ணா!” என்றெல்லாம் கோஷமிட்டனர்.  ஆஹா!  அவனா!  திரெளபதி பொடிப் பொடியாக உடைந்து போனாள்.

அவள் தந்தை இப்போதிருக்கும் மன நிலையில் அவனை எதிர்கொண்டு பேசவேண்டுமே!  அவர் ஏதேனும் பேசிவிட்டால்!  ஒரு நிமிடம் அங்கே போய் அவனை அந்த இக்கட்டிலிருந்து காக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது அவளுக்கு. மறு நிமிடம் தன்னைத் தானே சமாளித்துக் கொண்டாள். மிகவும் சிரமத்துடன் தன்னை அடக்கிக் கொண்டாள்.  இக்கட்டான சூழ்நிலையில் தன்னைச் சமாளித்துக் கொண்டு பேசத் தெரியாத அளவுக்கு அவள் தந்தை மனோபலம் அற்றவர் அல்ல.  அவர் நன்றாகவே தன்னைப் பார்த்துக் கொள்வார்.  அவள் உதவி அவருக்குத் தேவையில்லை.  நேரம் சென்றது. சிறிது நேரத்தில் சத்யஜித் அங்கே வந்தான்.  அவன் வரும்போதே மிகவும் அதீதமான உணர்ச்சிவசப்பட்டிருப்பது தெரிய வந்தது.  அவன் முகமும் சந்தோஷமாக இருந்தது.  அவன் சொன்னான்:”கிருஷ்ணா, வாசுதேவன் வந்திருக்கிறான். தந்தையைச் சந்திக்க வேண்டும் என்றான்.  ஆனால் தந்தை தனக்கு உடல் நலம் சரியில்லாததால் திரெளபதியைப் பார்த்துப் பேசு என்று சொல்லி விட்டார்.  எல்லாவற்றையும் உன் பொறுப்பில் தந்தை விட்டு விட்டார்.  வாசுதேவன் உன்னைப் பார்க்கக் காத்திருக்கிறான்.”  என்றான்.

திரெளபதிக்கு உள்ளம் கொதித்தது.  கூடவே ரத்தமும் சூடாகவும், வேகமாகவும்  உடல் முழுதும் பாய்ந்தது.  முதலில் அவளுக்குத் தோன்றியது என்னவெனில்  கிருஷ்ண வாசுதேவனைப் பார்க்கக் கூடாது என்பதே! அவனைச் சந்திக்க முடியாது எனச் சொல்ல வேண்டும் என்றே நினைத்தாள். ஆனால் அவள் தந்தை பொறுப்பை அவளிடம் அல்லவோ ஒப்படைத்திருக்கிறார்.  இந்நிலையில் அவள் எப்படி விலக முடியும்?  அவள் சிந்தனைகள் முடிவடைவதற்குள் மந்திரி உத்போதனர் கதவுக்கருகே தோன்றினார். அவருடன் வந்திருக்கும் விருந்தாளி வாசுதேவன் என்பதையும் அறிந்தாள் . அவனை உள்ளே அனுப்பிக் கொண்டிருந்தார் உத்போதனர். கதவுக்குப் பின்னாலிருந்து கிருஷ்ணனின் குரல் வழக்கமான உற்சாகத்துடனும் நம்பிக்கை ஊட்டும் விதமாகவும் தொனித்தது.  “மாட்சிமை பொருந்திய இளவரசி, என்னை வரவேற்க மனமில்லையா?  முன்னர் எவ்வளவு ஆவலுடன் வரவேற்புக் கொடுத்தாய்? அது போல் வரவேற்க மனமில்லையா?” என்று கேட்டான்.

Sunday, May 18, 2014

திரெளபதியின் பிடிவாதம்! ஷிகண்டினின் உறுதி!

“நான் யாருக்கும் அடிமை அல்ல சகோதரி!  கிருஷ்ணனுக்கும் அடிமை அல்ல; துரோணருக்கும் அடிமை அல்ல!” என்ற ஷிகண்டின் கொஞ்சம் பெருமையுடனே மேலே தொடர்ந்தான். “நான் யார் என்பதை நான் மறந்தது இல்லை.  நான் துருபதனின் மகன்.  இந்தப் பாஞ்சாலத்துக்கோ, அதன் மக்களுக்கோ, என் தந்தையான அரசன் துருபதனுக்கோ அவமானத்தைத் தேடித்தரும் ஒரு காரியத்தை நான் நிச்சயம் செய்ய மாட்டேன்.  இத்தனை வருடங்களாக நாம் நமக்குள்ளே அனுபவித்து வந்த ஒரு கசப்பான நிலைமையை மாற்றவும், நம்முடைய கஷ்டங்களை எல்லாம் போக்கவுமே அந்த மஹாதேவன் வாசுதேவக் கிருஷ்ணனை நம்மிடம் அனுப்பி வைத்திருக்கிறான். “

திரெளபதி யோசனையுடன் எழுந்து அங்கிருந்த சாளரத்துக்கு அருகே போய் நின்ற வண்ணம் வெளியே பார்த்துக் கொண்டு சற்று நேரம் நின்றாள்.  “நீ சொல்வதிலிருந்து உன் மனம் முழுவதும் வாசுதேவன் நிறைந்திருப்பது தெரிய வருகிறது.  அப்படித் தானே சொல்கிறாய்?” சற்றே கரகரப்பான தன் குரலில் கேட்டாள் திரெளபதி.

“அவன் மற்றவர்களைப் போல் அல்ல சகோதரி!”

“ஓஹோ, இதைக் கேட்டுக் கேட்டு எனக்கு அலுத்துப் போய் விட்டது!” அவள் இதைச் சொன்ன வேகத்திலும், திரும்பிய வேகத்திலும் தன்னை அடிக்க வருகிறாளோ என்றே எண்ணினான் ஷிகண்டின். ஆனால் உதடுகளைக் கடித்துக் கொண்டு அவள் தன்னைச் சமாளித்துக் கொண்டதையும் பார்த்தான். ஆனாலும் கிருஷ்ணனைக் குறித்துப் பேசுகையில் அவனைப் புகழ்ந்து சொல்லுவதையும், அவன் பெருந்தன்மையையும் அங்கே குறிப்பிடாமல் அவனால் இருக்க முடியவில்லை.  அதோடு அவன் எவ்வளவு சாகசங்களைப் புரிந்திருக்கிறான்.  சாதாரண மனிதரால் இயலக்கூடியதா அவை?  பேய், பிசாசுகளை வென்றிருக்கிறான்.  ராக்ஷசர்களுக்கும், நாகர்களுக்கும் இடையே சமாதானம் செய்து வைத்து நண்பர்கள் ஆக்கி இருக்கிறான்.  அதோடு மட்டுமா?  நாகர்களை மாபெரும் வீரர்களாக மாற்றி வருகிறான்.  அதில் வெற்றியும் கண்டிருக்கிறான்.

இன்னும், இன்னும்,,,, புஷ்கரத்தை ஒரு சொட்டு ரத்தம் சிந்தாமல் மீட்டுக் கொடுத்திருக்கிறான். வல்லமை மிக்கவரும்,அதிகாரங்கள் நிறைந்தவருமான துரோணரைத் தன்னை வரவேற்கப் புஷ்கரத்துக்கு வருமாறு மறைமுகமாய்த் தூண்டி இருக்கிறான்.  அதுவும் சகல அரசமரியாதைகளோடு.   இது மட்டுமா? ஷிகண்டின் தன் சகோதரியிடம் கிருஷ்ணன் புகழ் பாடுவதைத் தொடர்ந்தான். அவன் மிகவும் மரியாதை உள்ளவன்;  நற்குணங்கள் மிக்கவன்.  புத்திசாலி. ஞானம் மிக்கவன்.  நான் மிகவும் நம்பிக்கை இழந்து அவநம்பிக்கையின் ஆழத்தில் இருந்தேன்.  இதிலிருந்து என்னால் வெளியேற முடியாது என நம்பினேன்.  அப்போது தான் அவன் மின்னலென என் வாழ்க்கையில் புகுந்தான்;  எனக்கு நம்பிக்கை அளித்ததோடு நல்வழியும் காட்டினான்.  இதை என்னால் மறக்கவே முடியாது.  அவனைப் பார்ப்பதே என்னுள் நம்பிக்கையையும் வாழ்வதற்கு ஆர்வத்தையும் தூண்டுகிறது.  “

இவை அனைத்தையும் திரெளபதியிடம் சொன்னான் ஷிகண்டின்.  திரெளபதிக்குக் கோபத்திலும், ஆங்காரத்திலும் முகம் சிவந்து விட்டது.  செய்வதறியாமல் தன் கழுத்திலிருந்த சங்கிலியைப் பிடித்து வேகமாக இழுத்தாள்.  அது அறுந்து கையோடு வந்துவிட்டது.  உடனே கோபத்திலும், சீற்றத்திலும் கத்த ஆரம்பித்தாள். “போதும் போதும் உன் வாசுதேவன் புராணம்! போதும் அவன் புகழ்!  நிறுத்திக்கொள் இதோடு!  ஆமாம், ஆமாம், அவன் கடவுள் தான்!  ஆஹா, கடவுள்!   அவனுடைய சூழ்ச்சியிலும், தந்திரத்திலும் வெளிவர முடியாததொரு சிக்கலான நிலையில் நாம் இப்போது மாட்டிக் கொண்டிருக்கிறோம்.  நம்மை அவன் சதிவலையில் மாட்டி விட்டான்.  நீ இப்போது அவனா? அல்லது தந்தையா என்பதை உடனே முடிவு செய்! “ என்றாள்.

ஷிகண்டினுக்கு தர்ம சங்கடமாக இருந்தது.  அவன் முகம் கவலையிலும், வருத்தத்திலும் வெளுத்துப் போனது.  “நம் தந்தையிடம்  நான் மிகவும் பிரியம் வைத்திருக்கிறேன் கிருஷ்ணா!  ஆனால் நீ சொல்லும் இந்த நிபந்தனைக்கு உட்பட மாட்டேன். நிச்சயம்!  நீ சொல்வதைக் கேட்க முடியாது!”

“நீ கேட்டுத் தான் ஆக வேண்டும். “ திரெளபதியால் உணர்ச்சியைக் கட்டுப்படுத்த முடியாமல் அவள் குரல் நடுங்கியது.  அசையாமல் நின்ற வண்ணம் ஷிகண்டினையே பார்த்தாள். இமைக்காமல் பார்த்தாள்.  “இப்போது நீ முடிவெடுக்க நேரம் வந்துவிட்டது.  கிருஷ்ணனிடமும், துரோணரிடமும் நீ வைத்திருக்கும் விசுவாசத்தை உடைக்க வேண்டும்.  அப்போது தான் நீ இங்கே தங்கலாம்; இல்லை எனில் நாம் எப்போதும், எங்கேயும் சந்திக்கப் போவதில்லை.”

ஷிகண்டின் எதுவுமே பேசாமல் மாடத்துக்கு வெளியில் தெரிந்த வெட்டவெளியை வெறித்துப் பார்த்துக் கொண்டு நின்றான்.  பிறகு ஏதோ முடிவு எடுத்தவன் போல் அவன் முகம் பிடிவாதத்தைக் காட்டியது.  “நீ என்ன கேட்கிறாய் என்பதைப் புரிந்து தான் கேட்கிறாயா?  நான் ஆண்மகனாக ஆவதற்கு உதவிய என் ரக்ஷகனையும், குருவையும் ஆணையிட்டுத் துறக்கச் சொல்கிறாய்?  அது என்னால் முடியாது!”

“நீ இப்போது நம் தந்தைக்கும், அந்த மாட்டிடையனுக்கும் இடையில் எவராவது ஒருவரைத் தேர்ந்தெடு! அது தான் தேவை!  தந்தையா?  அந்த மாட்டிடையனா?”


அதற்கு ஷிகண்டின் தன் எஃகு போன்ற உறுதியைக் காட்டும் கண்களால் அவளைப் பார்த்து முறைத்துவிட்டு, தன் தலையை  மறுப்பாகஆட்டிவிட்டு ஒரு வார்த்தை கூடப்பேசாமல் அங்கிருந்து வெளியேறினான்.Thursday, May 15, 2014

வாசுதேவனா உன் கடவுள்?

திரெளபதி ஷிகண்டினின் முதுகில் கைவைத்து அவனை ஆசுவாசப் படுத்தினாள்.  அதே போல் சத்யஜித்தும் அவன் கைகளைப் பிடித்துக் கொண்டு தன் ஆறுதலைத் தெரிவித்தான்.  அப்போது திரெளபதி பேச ஆரம்பித்தாள்.  “ஷிகண்டின், சகோதரா, நீ வந்திருக்கும் இந்த நேரம் சரியானது அல்ல. ஹஸ்தினாபுரத்து யுவராஜா துரியோதனனால் நாம் மிகப் பெரிய சதி வலையில் மாட்டி இருக்கிறோம். “

“எப்படி சகோதரியே! என்னால் நம்ப முடியவில்லையே!”

“நம்முடைய பழைய நகரமான அஹிசாத்ராவில் அனுபவித்த அவமானத்தை விட மோசமான அவமானத்தை நம் மீது அவன் சுமத்தப் போகிறான்.  உன்னை ஆண்மகனாக்கியதன் மூலம் அந்தப் பொல்லாத அந்தணன் துரோணன் விசித்திரமானதொரு திறமையைக் காட்டி நம்மை ஏமாற்றவும் அவமானத்தில் ஆழ்த்தவும் திட்டம் போட்டிருக்கிறான்.  நாளை மறுநாள் நடக்கப் போகும் சுயம்வரத்தில் அவன் மாணாக்கர்களில் ஒருவன் போட்டியில் வென்று என்னை ஹஸ்தினாபுரம் தூக்கிச் செல்லச் சரியானதொரு திட்டம் வகுத்துக் கொடுத்துள்ளான். “

ஷிகண்டின் இப்போது தன்னைச் சமாளித்துக் கொண்டு விட்டான்.  அவனுக்கு துரோணர் மீது கோபமோ, அவர் சதிசெய்கிறார் என்னும் எண்ணமோ இல்லவே இல்லை.  ஆகவே தன் சகோதரியைப் பார்த்து, “ கிருஷ்ணா, நீ தப்புச் செய்கிறாய். ஆசாரியரை அவ்வளவு மட்டமாகவா நீ நினைக்கிறாய்?  ம்ஹூம், சரியில்லை கிருஷ்ணா!  அவர் என்னை ஏற்றுக்கொண்டிருக்காமல் திருப்பி அனுப்பி இருக்கலாம்.  ஆனால் அவ்வாறு செய்யவில்லை.  திருப்பி அனுப்பி இருந்தால் நான் நிச்சயம் கங்கையில் மூழ்கி என்னை மாய்த்துக் கொண்டிருப்பேன்;  இதன் மூலம் தன் எதிரியின் ஒரு மகனைக் கொன்ற திருப்தியாவது அவருக்குக் கிடைத்திருக்குமே!   ஆனால் இது அத்தனையையும் மீறி அவர் என்னை ஏற்றுக் கொண்டார்.  ஒரு போதும் தந்தைக்கும் அவருக்கும் இடையே உள்ள பகைமை குறித்து என்னிடம் பேசியதில்லை.  “ துரோணரின் பெருந்தன்மையான சுபாவத்தைக் குறித்துக் கூறும்போது ஷிகண்டின் கண் கலங்கினான்.  மீண்டும் அழவும் ஆரம்பித்தான்.  “மஹாதேவா, அவர் என்னை ஏற்காமல் இருந்திருக்கக் கூடாதா!  என்னை இறக்க விட்டிருக்கலாமே!  ஏன் என்னை ஏற்றுக் கொண்டார்!” என்றெல்லாம் புலம்ப ஆரம்பித்தான்.

“அதெல்லாம் சரி.  நீ எப்படி அவரிடம் சென்றாய்?  யாரோ ஒரு கடவுள் உன்னை அவரிடம் அனுப்பியதாய்க் கூறினாயே?” திரெளபதி கேட்டாள்.

தன் கண்களைத் துடைத்துக் கொண்டான் ஷிகண்டின்.  மெல்லிய புன்னகை உதடுகளில் இழைந்தோட, “ஆம் கிருஷ்ணா, ஒரு கடவுள் என்னை வந்து காப்பாற்றினார்.” என்றான்.  “யார் அந்தக் கடவுள்? சொல் , ஷிகண்டின். உன்னை துரோணரிடம் அனுப்பியவர் எவராக இருந்தாலும் சொல்.  ஏனெனில் இதன் மூலம் அந்த நபர் தந்தையைத் துன்புறுத்தி மகிழ எண்ணி இருந்திருக்கிறார். அதற்காகத் தான் உன்னைத் தூண்டி விட்டு அங்கே அனுப்பி உள்ளார்.”

“இல்லை, இல்லை!” வேகமாய் மறுத்தான் ஷிகண்டின்.  “ நான்  என் மாமனாரிடமிருந்து தூதுவர்கள் வந்ததில் மனம் சோர்ந்து போயிருந்தேன் என்பதை நீ நன்கறிவாய்.  அந்த நாளை என்னாலும் மறக்க இயலாது.  என் மனைவியை இங்கே அழைக்க வேண்டும்; என்றும் என்னுடன் அவள் வாழ ஏற்பாடுகள் செய்ய வேண்டும் எனவும் அந்தத் தூதுச் செய்தி கூறியது.  துருபதன் ஒரு பெரிய அரசன்.  மாமன்னன்.  அவன் பிள்ளைகளில் ஒருவன் பெண்ணாக வளர்க்கப்பட்ட செய்தி வெளியே தெரிந்தால் அது எத்தனை பெரிய அவமானம் என்பதை நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை.  அதோடு அந்தப் பெண்ணுக்கு இன்னொரு உண்மையான பெண்ணோடு திருமணமும் நடத்தி வைத்திருந்தது இன்னமும் கொடுமையான விஷயம் இல்லையா? இதெல்லாம் வெளியே தெரிந்தால் தந்தைக்கு எவ்வளவு பெரிய அவமானம் நேரிடும்!  இதை நினைத்து நினைத்து நான் வருந்திக் கொண்டிருக்கையில் அவன் வந்தான்.  ஒரு கடவுளைப் போல் வந்தான்.  என் உதவிக்கு வந்தான். அவன் மிகவும் கருணையுள்ளவன்.  அதோடு நம் குடும்ப கெளரவத்தை, பாரம்பரியத்தைக் காப்பாற்ற விரும்பினான்.  அவன் தான் என்னை துரோணரிடம் போகச் சொல்லி ஆலோசனை கொடுத்தான்.  அவனிடமிருந்து நான் செய்தியை எடுத்துச் செல்லாமல் போயிருந்தால் ஒருவேளை ஆசாரியர் என்னை ஏற்றுக் கொண்டிருக்கவே மாட்டார்.  அவன் செய்தி தான் அவரை என்னை ஏற்றுக்கொள்ள வைத்தது.  “கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தோடிய வண்ணம் ஷிகண்டின் பேசினான்.

“யார் அது, உன்னுடைய அந்தக் கடவுள்? விசித்திரமான கடவுள்!” திரெளபதி கேட்டாள்.

“நீ நன்கறிவாய் கிருஷ்ணா! அவன் உனக்குத் தன் உதவி எப்போதும் உண்டு என்றும் எப்போதும் உன் பக்கமே நிற்பேன் என்றும் வாக்குக் கொடுத்திருக்கிறான்.  ஆனால் உன்னை மணந்து கொள்ள மறுத்துவிட்டான்.” ஷிகண்டின் சொன்னான்.

“என்ன? கிருஷ்ண வாசுதேவனா?” திரெளபதி ஆச்சரியத்தில் ஆழ்ந்து போனாள்.

“ஆம், அவனே தான்.  அவன் என் பக்கம் நின்றான்.  எனக்குப் பாதுகாப்புக் கொடுத்தான்.  நீங்கள் அனைவருமே என்னைக் கைவிட்டு விட்டீர்கள்!  இவ்வுலகமே என்னைக் கைவிட்டு விட்டது.  அப்போது கிருஷ்ண வாசுதேவன் தான் எனக்குக் கைகொடுத்துத் தூக்கி விட்டான்.  நான் அதல பாதாளத்தில் அழுந்தாமல் காத்தான்.”

“அட கடவுளே, கிருஷ்ண வாசுதேவன்!  மீண்டும் மீண்டும் அவனா?  தந்தை சரியாகத் தான் சொல்லி இருக்கிறார்.  நம் அனைவரையும் மிகப் பெரிய பொறியில் சதி வலையில் சிக்க வைத்து விட்டான்.  ஆஹா, நம் எதிரியிடமிருந்து வந்த உன்னை மிகப் பெரிய பரிசாக ஏற்கச் சொல்லி வற்புறுத்தியது இதற்குத் தானா? “

“சகோதரி, துரோணர் மிகவும் நட்புடனே பழகினார்!  இதில் என்ன தவறு கண்டாய்?  நட்போடு பழகியவர்களிடம் திரும்ப நட்பைத் தானே காட்டியாக வேண்டும்!”

“ஆஹா, ஷிகண்டின்! நீ அந்த வாசுதேவன்மாதிரியே பேசுகிறாய்!  அவன் குரலிலேயே பேசுகிறாய்!”

“இது என் சொந்தக் குரல் சகோதரி!  வாசுதேவன் என்ன நினைப்பான்! அவனைக் குறித்து    நீ இம்மாதிரிச் சொல்வது சரியில்லை.  மிகவும் மோசமாக இருக்கிறது.”

திரெளபதி அவனைக் கோபத்துடன் பார்த்தாள்.  அவள் முகம் சிவந்தது.  “நீ தேவையில்லாத விஷயங்களில் அநாவசியமாகத் தலையிடுகிறாய் ஷிகண்டின்.   உன்னால் இதைப்புரிந்து கொள்ளக் கூட முடியாது.  தந்தையும், நானும், நாளை மறுநாள் சுயம்வரத்தை எதிர்கொள்ள வேண்டும்.  மகதச் சக்கரவர்த்தி ஜராசந்தன் வந்திருக்கிறான்.  அவன் என்னைத் தூக்கிப் போகப் போவதாய்ச் சொல்லிக் கொண்டிருக்கிறான்.  இந்த துரியோதனன் வேறு என்னை மணக்க வேண்டும் என்று ஆவலுடன் காத்திருக்கிறான்.  அவனை மணந்து கொள்வதை விடவும் நான் இறப்பதே சரியாக இருக்கும்.  நான் யாரைத் திருமணம் செய்து கொண்டாலும் சரி!  என்னுடைய முக்கிய நோக்கமே துரோணரோடு போராடுவது தான்.  என் மனதை நான் அதற்குத் தயாராக வைத்திருக்கிறேன்.   உன்னுடைய அருமை வாசுதேவன் இந்தப் போட்டியில் கலந்து கொள்ளப் போவதில்லை என அறிவித்துவிட்டான்.  அவன் எனக்கும் தந்தைக்கும் உதவியாக எங்கள் பக்கமே நிற்பேன் எனக் கொடுத்த வாக்குறுதியை மறந்துவிட்டான்.  தன் வாக்குறுதியை சுக்குச் சுக்காக்கி விட்டான்.”

ஷிகண்டினின் முகம் வெளுத்தது.  அவன் முகத்தில் மீண்டும் சவக்களை தெரிந்தது.  அவன் கைகள் நடுங்கின.  திரெளபதியைப் பார்த்து, “நீ ஏன் உன்னுடைய இந்த நிலைக்கு வாசுதேவன் தான் காரணம் என நினைக்கிறாய்?   நான் இன்று ஆண்மகனாய் இருப்பதே அவனால் தான்.  இந்த சுயம்வரத்தால் தந்தையின் கெளரவம் உயரத் தான் போகிறது. வாசுதேவனால் அந்த துரோணரையும் அவர் சூழ்ச்சிகளையும் கூட வெல்ல முடியும்!  துரோணர் வாசுதேவனை வரவேற்கப் புஷ்கரத்துக்கு நேரில் வந்திருந்தார் தெரியுமா உனக்கு?”

“ஆஹா!  நீ கிருஷ்ண வாசுதேவனின் அடிமையாகிவிட்டாய்!” குரலில் கசப்புத் தெரியக் கூறினாள் திரெளபதி.
*********************************************************************************

மேலே தொடரும் முன்னர்

இங்கே கொஞ்சம் நாம் அஹிசாத்ராவைக் குறித்து ஒரு சின்ன குறிப்புப் பார்ப்போம்.  குருகுலத்தில் ஒன்றாய்ப் படித்த துரோணரும், துருபதனும் பிரிந்து செல்கையில் துருபதன்  தனக்குக் கிடைப்பதில் பாதியை துரோணரோடு பங்கிட்டுக் கொள்வதாய்க் கூறினான்.  அதன்படி தன் நாடு சென்ற துருபதனுக்குத் தந்தை இறக்கவே அரியணை கிடைத்தது.  அதைக் கேள்விப் பட்ட துரோணர் துருபதனிடம் சென்று அவன் வாக்குறுதியை நினைவூட்டினார்.  துருபதனோ தான் சில கிராமங்களையும், தன் செல்வத்தையும் மட்டும் பங்கிட்டுக் கொள்வதாயும், நாட்டை எக்காரணம் கொண்டும்பங்கிட்டுக் கொள்ள முடியாது எனவும், இது பரம்பரையாக வந்தது;  க்ஷத்திரியர்களாலேயே ஆளப்பட வேண்டும்.  ஆகவே நாட்டைத் தவிர வேறு எதை வேண்டுமானாலும் தருவதாய்க் கூறினான்.  துரோணரோ நாடும் வேண்டும் எனக் கேட்கவே  துருபதன் அவரை அவமானப் படுத்தி அனுப்புகிறான்.

பழி வாங்க நினைத்த துரோணர் ஹஸ்தினாபுரம் சென்று அங்கு அரசகுலத்தவருக்கு குருவாகத் தன் மைத்துனன் கிருபாசாரியார் மூலம் பெற்று அரசகுலத்து இளவரசர்களுக்கு ஆசானாக சகல வித்தைகளையும் கற்பித்தார்.  உரிய காலம் வந்ததும் தன் மாணாக்கர்களை துருபதனைப் பழிவாங்க வேண்டும் என்று கேட்க அர்ஜுனனைத் தவிர மற்றவர் மறுத்தனர்.  அர்ஜுனன் ஒருவனே பாஞ்சாலம் சென்று துருபதனோடு போர் தொடுத்து அவனைத் தன் தேர்க்காலில் கட்டி இழுத்து வந்து தன் ஆசிரியரிடம் ஒப்படைக்கிறான்.  அப்போது தான் பாஞ்சாலம் இரண்டாகப் பிரிகிறது. அஹிசாத்ராவைத் தலைநகராய்க் கொண்டு வட பாஞ்சாலம் உருவாக துரோணர் தன் மகன் அஸ்வத்தாமாவிடம் அதன் பொறுப்பை ஒப்படைக்கிறார்.  அவன் அந்த நாட்டை நிர்வாகம் செய்தான் எனச் சொல்லப்பட்டாலும் அந்த நாடு பின்னர் ஹஸ்தினாபுரத்து அரசர்களிடம் வசப்பட்டு அஸ்வத்தாமா அவர்கள் பிரதிநிதியாகவே அங்கே ஆண்டான்.  ஆகவே ஹஸ்தினாபுரத்து குருவம்சத்தினருடனும் பாஞ்சால மன்னன் துருபதன் பகைமையே பாராட்டி வந்தான்.

இந்த அஹிசாத்ராவில் நடந்ததைத் தான் திரெளபதி இங்கே ஷிகண்டினுக்கு நினைவூட்டுகிறாள். கதையைத் தொடர்ந்து படிக்க இது உதவியாக இருக்கும்.

   

                 

Tuesday, May 13, 2014

ஷிகண்டினின் துக்கம்!

“போதும், போதும், இந்த அவமதிப்புப் போதும். இதற்கு மேல் தாங்காது.” திரெளபதி என்ன செய்வது எனப் புரியாமல் திகைத்து உட்கார்ந்திருந்தாள். அவளுக்குப் பைத்தியம் பிடித்து விடும் போல் இருந்தது.  ஷிகண்டினையே உற்றுப் பார்த்தாள்.  ஒருகாலத்தில் அவளுக்கு சகோதரியாக இருந்த ஷிகண்டின் இன்று சகோதரன்.  இந்த அவமானங்கள், அவமதிப்புக்கெல்லாம் இவனே/இவளே? காரணம்.  இவனால் தான் இத்தகைய அவமானம் தந்தைக்கு நேரிட்டிருக்கிறது.  வெகு தூரத்திலிருந்து வருகிறான்போல் தெரிகிறது. சாலைப் புழுதி முழுவதும் முகத்தில் அப்பி இருக்கிறது.  அவன் உறையிலிருந்து தொங்கிய வாளின் நுனி, வாளின் உறை முழுதும் கூடப் புழுதியால்  மூடப்பட்டு இருந்தது.   காம்பில்யத்துக்குச் சரியான நேரத்தில் வந்து சேர வேண்டும் என மிகவும் முயற்சி எடுத்திருக்கிறான்.  நீண்ட தூரப் பயணம் என்பதால் இப்படிப் புழுதி மூடிக் கிடக்கிறான்.

ஆனால் ஒரு விஷயம் உண்மைதான்.  இவன் முன்னர் இருந்த அந்த மென்மையான நுண்ணிய இதயம் படைத்த பெண் இல்லை.  இவன் முகத்தில் தெரிந்த அந்தப் பெண்மைக்குரிய வளைவு, நெளிவுகளை இப்போது காணமுடியவில்லை.  முகம் மிகவும் வெளுத்துக் கொஞ்சம் இளைத்தாற்போல் காணப்படுகிறான்.  கண்ணுக்கு மேலுள்ள புருவம் கூட ஒரு பெண்ணினுடையதாகத் தெரியவில்லை.  அதே போல் தாடையிலும் தாடி முளைத்துள்ளது.  இவன் சொல்வது உண்மைதான்.  முழு உண்மை.  ஒரு பெரிய மாற்றம் கட்டாயம் நடந்துள்ளது. இவன் இப்போது நிச்சயமாய்ப் பெண்ணல்ல.   அப்போது சத்யாஜித் அவன் வாயிலும் கொஞ்சம் நீரை ஊற்றினான்.  ஷிகண்டின் மெல்லக் கண்களை விழித்துத் தன் சகோதரியையும், இளைய சகோதரனையும் பார்த்துக் கொஞ்சம் வருத்தம் கலந்த புன்னகையைச் சிந்தினான்.  அவர்களிடம் மன்னிப்புக் கோருவது போல் இருந்தது அது.  வெயிலிலும், மழையிலும், காற்றிலும் அடிக்கடி இருக்க நேரிட்டதால் கடினப்பட்டிருந்த அவன் முகத்தை மிகவும் ஆவலோடும், அன்போடும் திரெளபதி பார்த்தாள்.  ஹூம், இவன் எவ்வளவு தான் நம் குடும்பத்துக்கும், பாரம்பரியத்துக்கும் கேடு தேடித் தந்தாலும் என் மனம் இவனிடம் பாசம் கொள்ளத் தான் செய்கிறது.  திரெளபதியின் மனம் ஷிகண்டின் பால் பாசத்தையே காட்டியது.  ஒருகாலத்தில் சகோதரியாக இருந்து, இப்போது சகோதரன் ஆகிவிட்ட அவனைப் பார்த்தபோதும் அவள் பாசம் குன்றவே இல்லை.

ஆனால்….ஆனால்…… இப்போது பார்த்து இவன் இங்கே வந்திருப்பது யாருக்குமே மகிழ்ச்சியைத் தரப் போவதில்லை.  ஏற்கெனவே தந்தையார் மனக்கலக்கத்தில் ஆழ்ந்திருக்கிறார்.  சகோதரன் த்ருஷ்டத்யும்னனுக்குப் பொறுப்புகள்  அதிகம். அதோடு தந்தையின் கவலையும் கூட.  சத்யஜித்துக்கு அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வதில் தான் நேரம் இருக்கும். எனக்கோ இந்த மாபெரும் சுயம்வரம் என்னும் போர்க்களம் காத்திருக்கிறது.  தலையை உலுக்கிக் கொண்ட திரெளபதி தன் கழுத்தில் போட்டிருந்த ஆபரணங்களை இன்னது செய்கிறோம் என்னும் எண்ணமில்லாமல் பிடித்து இழுத்த வண்ணம்மீண்டும் மீண்டும் யோசனையில் ஆழ்ந்தாள்.  அப்போது ஷிகண்டின் எழுந்து கொண்டான்.

“கிருஷ்ணை, நீயுமா என்னிடம் கோபத்தில் இருக்கிறாய்?” எனப் பரிதாபமாகக் கேட்டான்.  அவனுடைய அந்த அவநம்பிக்கைக் குரலைக் கேட்ட திரெளபதி அவனையே பார்த்தாள்.  “நீ என்னைப் புரிந்து கொள்வாய் என நம்பினேனே கிருஷ்ணை!  நீ எப்போதுமே ஒரு தாயின் பாசத்தை என்னிடம் காட்டி வந்துள்ளாய்!” என்று ஷிகண்டின் மீண்டும் தன் குரலில் ஏமாற்றம் தொனிக்கக் கேட்டான்.

“ஆனால் இவை எல்லாம் எப்படி நடந்தது சகோதரா?  என்னால் நம்பவே முடியவில்லையே! நீ சொல்வதை எல்லாம் என்னால் புரிந்து கொள்ளவும் முடியவில்லை.  நீ கங்கையில் முழுகி இறந்து போனாய் என்றல்லவா நாங்கள் எண்ணிக் கொண்டிருந்தோம்!” என்றாள் திரெளபதி.

ஷிகண்டின் மெல்லிய குரலில் பேச ஆரம்பித்தான்.  “நான் கங்கையில் விழுந்து உயிரை விடவே தீர்மானித்திருந்தேன்.  ஆனால்….ஆனால் என் வாழ்வில் ஒரு கடவுள் வந்தார்.  என் வழியில் அவர் வந்தார்.  அவர் தான் என்னை துரோணாசாரியாரிடம் போகச் சொன்னார்.  அவர் சொல்படி நான் துரோணரிடம் சென்றேன்.  நான் துரோணரின் பரம வைரியின் மகன் எனத் தெரிந்தும் என்னை மிகவும் பாசத்தோடும், நேசத்தோடும் துரோணர் வரவேற்று மாணாக்கனாக ஏற்றுக் கொண்டார்.” இதைச் சொல்கையில் ஷிகண்டின் தன் சகோதரியின் முகத்தையும், சகோதரன் முகத்தையும் கூர்ந்து கவனித்தான்.  அவர்கள் இதை எவ்வாறு ஏற்றுக் கொள்கின்றனர் என்பதை உன்னிப்பாய்க் கவனித்தான். இருவர் முகத்திலும் சுருக்கங்களும், கவலைக்கோடுகளும் கண்டதோடு அன்றி அடுத்து அவர்கள் விட்ட பெருமூச்சையும் கேட்டான்.


தன்னுடைய பயந்த குரலிலேயே தொடர்ந்தான் அவன்:”  ஆசாரியர் என்னை ஒரு யக்ஷனிடம் அனுப்பி வைத்தார்.  இருவருமாகச் சேர்ந்து ஓர் அற்புதமான நிகழ்வை உருவாக்கினார்கள்.  ஆனால் முதலில் ஒரு நான்கு மாதங்களுக்கு நான் மிகவும் வேதனைகளை அடைந்தேன்.  உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் கஷ்டங்களை அனுபவித்தேன்.  உணவு எனக்கு மறுக்கப்பட்டதோடு அல்லாமல் மூலிகைச்சாறுகளும், குடிநீருமே உணவானது.  கிட்டத்தட்ட என்னைத் தூள்தூளாக்கிவிட்டனர். நான் மிகவும் ரத்தமும் இழந்தேன். சில சமயங்களில் நான் துண்டு துண்டாக வெட்டப்பட்டுள்ளதாகவே உணர்ந்தேன்.  பல நாட்களுக்கு என் சுய நினைவில்லாமல் கிடந்தேன்.  நான் கண் விழித்துப் பார்க்கையில் யமனின் கைப்பிடிகளுக்குள் இருப்பதாகவே உணர்ந்தேன்.  ஆனால் அந்த மஹாதேவன் என்னில் அற்புதம் நிகழ்த்தி இருப்பதை உணர்ந்தேன்.  நான் மனிதன் ஆகிவிட்டேன் என்பதைப் புரிந்து கொண்டேன்.”

அதிக உணர்ச்சிவசப்பட்டதால் ஷிகண்டினின் குரல் நடுங்கியது.  கண்ணீர் பெருக்கெடுத்து வந்து அவன் கன்னங்களை நனைத்தது.  அவன் தன்னுடைய உணர்வுகளுக்கு ஒரு வடிகால் கொடுக்கும் முயற்சியில் அவற்றை நன்கு வெளிப்படுத்தினான்.  “சகோதரி, நான் மிகவும் மோசமான உடல்நிலையில் இருந்தேன்.  அப்படி இருந்தும், நான் இங்கே உங்களை எல்லாம் காண வேண்டி வெகு தூரம் பயணப்பட்டு வந்து சேர்ந்திருக்கிறேன்.  எவ்வளவு விரைவாக வந்திருக்கிறேன் தெரியுமா?  எதற்கு?  நான் உன் சுயம்வரத்தின் போது இங்கே, காம்பில்யத்தில் இருக்க வேண்டும் என ஆசைப் பட்டேன்.  அதோடு, அதோடு, நீங்கள் எல்லோரும் என்னைக் கண்டதும் ஆனந்தத்தில் ஆடுவீர்கள் என்றெல்லாம் எதிர்பார்த்தேன். “  இப்போது ஷிகண்டினால் கண்ணீரை அடக்கவே முடியவில்லை.  விம்மவும் ஆரம்பித்தான்.  சிறு சிறு விம்மல்கள் அவனிடம் தோன்றின.  கஷ்டப்பட்டு அவற்றை அடக்க முயன்றான்.

“ஆனால் நீங்கள் அனைவரும் என்னைக் கண்டதும் முகத்தைத் திருப்பிக் கொள்கிறீர்கள்.  தந்தையோ எனில் என்னைச் செத்துப்போ என்கிறார்.  உங்கள் யாருக்குமே நான் தேவை இல்லை.  என்னுடைய எவ்வித உதவியும் உங்களுக்கும் தேவை இல்லை.  நான் எதற்காக இத்தனை கஷ்டம் பட்டேன்? நம் குடும்பத்துக்கு ஏற்பட்டிருக்கும் இந்த மாபெரும் கறையைத் துடைக்க விரும்பினேன்.  அவமானத்தை அடியோடு அழிக்க விரும்பினேன். இதற்காகவே அந்த யக்ஷனிடம் அத்தனை துன்பங்களையும் அனுபவித்தேன். இந்த உலகுக்கு துருபதனுக்கு ஷிகண்டின் என்பவன் மகன் தானே தவிர மகள் அல்ல என்பதைக் காட்ட விரும்பினேன்.  அதற்காக அத்தனையும் பொறுத்துக் கொண்டு ஒரு ஆண்மகனாக மாறி இங்கே வந்துள்ளேன்.  ஆனால் சகோதரி, எனக்குக் கிடைத்திருக்கும் இந்த வரவேற்பு!”

இப்போது ஷிகண்டின் ஒரு பெண்ணைப் போலவே அழுதான்.  “நான் இறந்திருக்க வேண்டும்.  உயிரோடு இருந்திருக்கக் கூடாது.  நான் ஏன் சாகவில்லை?  உங்கள் அனைவருக்கும் இப்படி ஒரு கஷ்டத்தைக் கொண்டு வந்துவிட்டேனே!  இந்த அவலமான நிலைக்கு நானே காரணம். ஆனால்….ஆனால் நான் எங்கே போவேன்?  எந்த இடம்  இருக்கிறது நான் போக?  உங்கள் யாருக்குமே என்னுடைய உதவியோ, என்னுடைய அருகாமையோ தேவை இல்லை.  அப்போது நான் எங்கே செல்வது?”  தன் முகத்தைக் கைகளால் மூடிய வண்ணம் இன்னும் மோசமாகப் பார்க்கவே பரிதாபமாக அழுதான் ஷிகண்டின்.

Saturday, May 10, 2014

ஷிகண்டின் வந்தான்!

அப்போது அங்கே அரண்மனையின் சேடிப்பெண் திடீரென முன்னறிவிப்பின்றித் தோன்றினாள்.  அவள் வந்த வேகத்தில் எதிர்பாராதது ஏதோ நடந்திருப்பது புரிந்தது.  அவளும் மிகவும் வேகமாயும், குழப்பத்துடனும், “மன்னா, பிரபுவே, இளவரசர் ஷிகண்டின் வந்திருக்கிறார்.” என அறிவித்தாள்.   நால்வருக்கும் தூக்கிவாரிப் போட்டது. “ஷிகண்டின் வந்திருக்கிறானா?”  ஒரே சமயத்தில் நால்வரும் கேட்டனர்.  “இதோ வந்துவிட்டார், பிரபுவே!” எனச் சேடி அறிவிக்க உள்ளே நுழைந்தான் ஷிகண்டின்.  ஷிகண்டின் உள்ளே நுழைந்தான். அவனுடைய பழைய தோற்றத்திலிருந்து முற்றிலும் மாறிய புதியதொரு தோற்றத்தைப் பெற்றிருந்தான்.  ஒல்லியாக ஆனால் மிகவும் உயரமாக இருந்த அவன் நடையில் ஒரு சிறு தள்ளாட்டம் இருந்தது.  அவன் உதடுகளுக்கு மேல் புதர் போல் மீசை அடர்ந்திருக்க, தாடைகளில் தாடியும் காணப்பட்டது.  துருபதனும், மற்ற மூவரும் பேச்சு வராமல் திகைத்துப்போய்ப் பார்த்துக் கொண்டிருந்தனர். தங்கள் கண் முன்னால் ஏதோ ஒரு பிசாசு ஷிகண்டினைப் போல் வருகிறதோ என்றும் நினைத்தனர்.  ஆனால் ஷிகண்டின் உள்ளே நுழைந்ததும் தந்தை கால்களில் விழுந்து வணங்கினான்.

துருபதன் அவனைத் தூக்கினான். அணைத்துக் கொண்டான். ஆனால் அத்தனையும் ஏதோ கடமைக்கு என்பது வெளிப்படையாகவே தெரிந்தது.  திரெளபதி அவளுக்கு வந்த ஆனந்தக் கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள்.  த்ருஷ்டத்யும்னன் பெரியவன் என்னும் நிலையில் மெல்லச் சிரித்து வரவேற்க சத்யஜித் சந்தோஷமாக அவனை வரவேற்றான்.   துருபதன் அவனைப் பார்த்து, “ஷிகண்டின், இத்தனை நாட்களாக நீ எங்கே போயிருந்தாய்?” என்று கொஞ்சம் நிதானமாகவே கேட்டான்.  துருபதன் மனதுக்குள்ளாக இவன் இப்போது பார்த்து இங்கே ஏன் வந்தான் என்றே தோன்றியது.  இவன் பிறந்ததில் இருந்தே துருபதனுக்கு ஒரு பிரச்னையாக இருந்ததோடு இங்கே நிலைமை ஏற்கெனவே சிக்கலாக இருக்கையில் இவன் வந்திருப்பதால் சிக்கல் அதிகமாகி விடும் என்றும் நினைத்தான்.

“தந்தையே, நம் குடும்பத்திற்கும் வம்சத்திற்கும் ஏற்பட்ட இழுக்கைத் துடைக்க நினைத்தேன். “ என்ற ஷிகண்டின் பாசத்தோடு தன் தந்தையின் தோள்களில் சாய்ந்து கொண்டதோடு அல்லாமல், அவரிடமிருந்து ஆறுதலான வார்த்தைகளையும் எதிர்பார்த்தான்.  ஆனால் துருபதனோ வாய் திறக்கவே இல்லை.  மெளனமாகவே இருந்தான்.  அதற்குமேல் ஷிகண்டின் சும்மா இருக்காமல் தன் தகப்பனிடம், மெல்ல அவன் காதுகளுக்கு மட்டும் கேட்கும்படி, “நான் இனி ஒரு பெண் அல்ல! வாலிபன்!” என்றான்.  துருபதனுக்கு இரண்டாம் முறையாகத் தூக்கி வாரிப் போட்டது.  “என்ன?” என்று கேட்டவன் ஆச்சரியத்தால் விரிந்த கண்களோடு அவனைப் பார்த்தான்.  ஷிகண்டினோ ,”ஆம் தந்தையே, அந்த மஹாதேவன் அருளாலும், ஆசிகளாலும் நான் ஒரு ஆண்மகனாகி விட்டேன்.  இனி நீங்கள் ஹிரண்யவர்மனுக்குச் செய்தி அனுப்பலாம்.  அவர் மகளைக் காம்பில்யத்துக்கு அனுப்பி வைக்கச் சொல்லுங்கள்.  அவள் கணவனோடு சேர்ந்து வாழ்க்கையை அவள் துவங்கலாம் என செய்தி அனுப்புங்கள்.” என்று சொன்னான்.  அவன் குரல் நடுங்கியது.  ஷிகண்டின் சொன்ன செய்தியின் முக்கியத்துவம் குறித்து நினைத்துப் பார்த்துப் புரிந்து கொண்ட துருபதன் கண்கள் கண்ணீரால் நிறைந்தன.

என்றாலும் இன்னமும் அவனால் இதை நம்ப முடியவில்லை. “மகனே, இது உண்மை தானா?” என மீண்டும் மீண்டும் கேட்டான்.

“ஆம், தந்தையே!  இது உண்மை தான்.  என் குருநாதரின் ஆசிகளோடு நான் பெண்ணாக இருந்ததில் இருந்து ஆணாக மாற்றப்பட்டு விட்டேன். மனதளவிலும், உடலளவிலும் நான் இப்போது ஒரு முழு ஆண்மகன்.  உங்களுக்கு இப்போது இரண்டு பெண்கள் இல்லை;  மூன்று பிள்ளைகள்.  ஆண்மகன்கள்.” என்று மிகவும் சந்தோஷமாகக் கூறினான் ஷிகண்டின்.

“அப்படிப்பட்டதொரு குரு யார்?  அவர் எங்கனம் உன்னை ஏற்றுக் கொண்டார்? உனக்கு இத்தகையதொரு ஆசியை வழங்கி உன்னை ஆண்மகனாக்கியவர் யார்?”


“தந்தையே, கேட்டால் அதிசயமும், ஆச்சரியமும் அடைவீர்கள்.  அவர் வேறு எவருமல்ல.  துரோணாசாரியார் தான். “ இதைச் சொல்கையில் தன் தந்தையின் முகத்தையே கூர்ந்து கவனித்தான் ஷிகண்டின்.  தந்தையின் முகம் காட்டும் உணர்வுகளைக் கவனிக்க ஆயத்தமானான்.  அதற்கேற்றாற்போல் துருபதனின் முகம் கோபத்தால் தீக்கொழுந்து போல் ஜொலித்தது.  முகத்தின் சிவப்பு அருகிலுள்ளவர்களை அச்சமடைய வைத்தது.  கண்கள் இரண்டும் நெருப்புக் கங்குகள் போல் பிரகாசித்தன.  அவன் ஷிகண்டினைப் பார்த்துக் கோபமாகக் கத்தினான்; “துரோணாசாரியர்??  குரு வம்சத்தின் ஆசாரியரையா சொல்கிறாய்?  அவனா உன்னை ஆண்மகனாக்கினான்?  இது உண்மையா?” எரிமலை போல் வெடித்தான் துருபதன்.  பின்னர் ஷிகண்டினைப் பிடித்து தள்ளினான்.

“ஆஹா! இதை விடக் கொடுமை ஏதேனும் உண்டா?  என் பரம வைரியிடம் போய் இப்படிப்பட்டதொரு பரிசை வாங்கி வந்திருக்கிறாய்!  நீ எனக்குச் செய்த மாபெரும் நம்பிக்கை துரோகம் இது! “

துருபதனின் இந்தக் கோப ஆவேசப் பேச்சால் அனைவரும் திகைத்துப் போய்ச் செயலற்று நின்றனர்.  ஒரு மாதிரியாகத் தன்னைச் சமாளித்துக்கொண்ட துருபதன் கொன்று விடுவான் போலக் கோபத்துடன் ஷிகண்டினை முறைத்துப் பார்த்தான்.  “இதைக் காட்டிலும் நீ செத்து ஒழிந்திருந்தால் நான் மிகவும் மகிழ்ந்திருப்பேன்!” என்று சொன்ன வண்ணம் அவனை அடிக்கக் கைகளை ஓங்கியவன் என்ன காரணத்தாலோ தன்னை அடக்கிக் கொண்டு அந்த அறையை விட்டு அகன்றான்.  ஷிகண்டின் நிச்சயமாக இதை எதிர்பார்க்கவே இல்லை.  தந்தை கோபப்படுவார் என்றாலும் இந்த அளவுக்கு அவன் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை.  அவன் முகம் வெளுத்து ரத்தமெல்லாம் வடிந்தாற்போல் ஆகிவிட்டது.  உதடுகள் நடுங்கின; ஏன், மொத்த உடலுமே நடுங்கியது.  கீழே விழுந்துவிடுவான் போல் ஆடினான் அவன்.  நல்லவேளையாக திரெளபதி வேகமாக வந்து அவனைப் பிடித்துக் கொண்டாள்.  பின்னர் ஒரு தாயின் கருணையோடு அவனை அங்கிருந்த ஊஞ்சலில் படுக்க வைத்தாள்.

த்ருஷ்டத்யும்னன் தன் தந்தைக்கு இப்போது தன் உதவி தேவை என்பதைப் புரிந்து கொண்டு அங்கிருந்து சென்று விட்டான்.  சத்யஜித் ஒரு பாத்திரத்தில் குளிர்ந்த நீர் எடுத்து வந்து மயக்கமடைந்து இருக்கும் தன் சகோதரன் முகத்தில் தெளித்தான்.  பின்னர் ஆட்களை வரவழைத்து ஷிகண்டினை உள்ளே தூக்கிச் சென்று ஒரு அறையில் படுக்க வைத்தான்.  சத்யஜித் அவன் அருகேயே அமர்ந்து கொண்டான்.  திரெளபதியும் ஷிகண்டினின் படுக்கையில் அமர்ந்து கொண்டு கன்னத்தில் கை வைத்த வண்ணம் ஷிகண்டினையே பார்த்துக் கொண்டிருந்தாள்.  சவக்களை படர்ந்திருந்த ஷிகண்டினின் முகத்தை வைத்த கண் வாங்காமல் பார்த்த வண்ணம் அமர்ந்திருந்தாள் திரெளபதி.


தன் குடும்பமும், பாஞ்சாலமும் இப்போது இருக்கும் மோசமான நிலையை எண்ணிப் பார்த்தாள்.  மிகவும் மோசமான நிலை இப்போது ஏற்பட்டிருக்கிறது. இந்த ஷிகண்டினைப் பார்த்தால் செத்துவிடுவான் போல் இருக்கிறதே!  ஹூம் , இந்த அழகில் சுயம்வரம் நடப்பது எப்படி?  சுயம்வரம் ஏற்கெனவே பல சிக்கல்களில் மாட்டிக் கொண்டு இருக்கிறது.  இவனுக்கு ஏதேனும் நேர்ந்தால் இங்கே மகிழ்ச்சியான சுயம்வர நிகழ்வுக்கு பதிலாக துக்கம் அல்லவோ ஏற்படும்!  மிக மோசமானதொரு வருந்தத் தக்க சூழ்நிலை ஏற்படும்.  இந்த சமயம் பார்த்து ஜராசந்தன் அவளைக் கடத்தி விட்டால்??  பின்னர் என்ன!  போர் தான்!  ரத்த ஆறு ஓடும்.  பாஞ்சாலமும், மகதமும் ஒன்றுக்கொன்று போரிட்டுக் கொண்டு ஆர்யவர்த்தமெல்லாம் ரத்த ஆறு தான் ஓடப் போகிறது. எல்லாவற்றுக்கும் மேல் அந்த துரியோதனன் போட்டியில் வென்றான் எனில், அந்த கொலைகாரனை, சகோதரர்களைத் திட்டமிட்டுக் கொன்றவனை மணக்கும்படி ஆகிவிடுமே!  பின்னர் தன் தந்தையின் சபதமும், அவர் கெளரவமும் என்னாவது?

எல்லாவற்றையும் தூக்கி அடிக்கும்படியாக இப்போது இங்கே ஷிகண்டின் புதுப் பிறவி எடுத்து வந்திருக்கிறான்.  தந்தையின் ஜன்மவைரியால் கொடுக்கப்பட்ட பரிசாக வந்து சேர்ந்திருக்கிறான். தந்தைக்கு ஏற்பட்டிருக்கும் இந்த அவமானம் போதுமா?

Friday, May 9, 2014

துருபதன் வாக்குறுதியும், திரெளபதியின் மன உறுதியும்

“தந்தையே,போட்டி மிகக் கடுமையாக இருக்கப் போகிறது.  யார் வெல்வார்களோ எனக் கணிக்க முடியவில்லை.  யாருமே வெல்லாமலும் போகலாம்.” என்றான் த்ருஷ்டத்யும்னன்.  துருபதன் முகம் சுருங்கியது.  புருவங்கள் நெரிந்தன.  எதுவும் செய்ய முடியாமல் போனதை நினைத்து வருந்துபவன் போல் இருந்தது அடுத்து அவன் பேசியது: “ என் அருமைக் குழந்தைகளே!  சுயம்வரம் ஆரம்பிக்கையில் நான் இவ்வுலகின் உச்சியில் இருப்பேன்.  அடுத்து சுயம்வரம் முடிகையில் அதலபாதாளத்துக்குப் போய்விடுவேன்.  நம் கிருஷ்ணை, அருமைக் கிருஷ்ணை, ஒரு பலி ஆட்டைப் போலத் தன்னை வெட்டக் காத்திருப்பவனின் இல்லத்துக்குச் செல்வாள்.  ஹூம், எல்லாம் என் தவறு!  அந்தக் கிருஷ்ண வாசுதேவனின் பேச்சை நான் மிகவும் நம்பினேன்.  அது தவறு.  அவன் பேச்சை நான் நம்பியிருக்கக் கூடாது. “  என்றான் துருபதன்.

“தந்தையே, இப்போது வந்து போனானே ஜராசந்தனின் மகன்!  அவன் மூலம் ஜராசந்தன் என்ன செய்தி சொல்லி அனுப்பி உள்ளான்?  அவனும் ஏதேனும் சிக்கலை ஏற்படுத்துகிறானோ?  கிருஷ்ணையை அவன் பேரன் மேகசந்திக்குக் கொடுக்க வேண்டும் என ஜராசந்தன் வற்புறுத்துகிறானா?”  த்ருஷ்டத்யும்னன் குரலில் சஹாதேவன் வந்து என்ன பேசி இருப்பான் என்பதைத் தெரிந்து கொள்ளும் ஆவல் மேலிட்டிருந்தது.   துருபதன் இதைக் கேட்டதுமே பொரிந்து கொட்டினான்.  “ அவன் எவ்வளவு அவமதிப்பாகவும், இழிவாகவும் பேசினான் என்பது தெரியுமா உனக்கு?  அவன் கொண்டு வந்த செய்தி அதைவிட இழிவானது; ஜராசந்தன் அவன் பேரன் மேகசந்திக்குத் தான் திரெளபதியைக் கொடுக்க வேண்டும் என வற்புறுத்துகிறான்.  அப்படி இல்லை எனில் அவளைக் கடத்திச் செல்வான் என நான் நினைக்கிறேன்.”


துருபதன் மிகுந்த மனக்குழப்பத்தில் இருக்கிறான் என்பது அடுத்து அவன் பேசியவற்றிலிருந்து புரிந்தது.  “ எவ்வளவு பொல்லாத்தனம்!  துஷ்டன்!  நான் ஆர்ய வர்த்தத்தின் அரசர்கள் அனைவருக்கும் கொடுத்திருக்கும் வாக்குறுதியை உடைக்கவா முடியும்?  அப்படி உடைக்கவில்லை எனில் திரெளபதி கடத்தப்படுவதைப் பார்த்துக் கொண்டு பேசாமல் இருக்க வேண்டுமாம்!  மறைமுகமாக எச்சரிக்கிறான்.”  இவ்வளவு நேரமும் மிகவும் கஷ்டப்பட்டு அடக்கி வைத்திருந்த கோபம் எல்லாம் அணையை உடைத்துக் கொண்டு கிளம்பும் வெள்ளம் போல் பீறிட்டுக் கிளம்பியது.  “பாஞ்சாலத்தின் அருமையான இளவரசியை ஒரு ராக்ஷசியைக் கடத்துவதைப் போல் கடத்துவார்களாம்.  ஹூம், எல்லாம் அவன் அதிர்ஷ்டம் தப்பி விட்டான்.  ஆம், இந்தச் சமயம் அவன் என் விருந்தாளியாகப்போய்விட்டானே!  இல்லை எனில் அவனை நசுக்கி இருப்பேன்.” இதன் பின்னர் துருபதன் வெளிக்காட்ட முடியாச் சீற்றத்தில் உள்ளூற ஆழ்ந்து போய் மெளனமானான்.

“தந்தையே, வாசுதேவன் உங்களை அவமானப் படுத்தப் போகிறான் என்றோ அல்லது அவமானம் செய்துவிட்டான் என்பது குறித்து உறுதியாக அறிவீர்களா?   அவன் ஏன் அப்படிச் செய்யவேண்டும் தந்தையே?”  த்ருஷ்டத்யும்னன் துருபதனின் கோபாவேசத்தை அறிந்து கொண்டு அவன் மனதை மாற்றும் முயற்சியில் ஈடுபட்டான்.   ஆனால் துருபதனோ இந்தக் கேள்விக்கு ஒரு கைத்த சிரிப்பை வெளியிட்டான். அவன் பக்கம் திரும்பினான்.  “அவன் எவ்வாறு ஒத்துக்கொள்வான் மகனே!  அவன் இன்னமும் சொல்லிக் கொண்டு தான் இருக்கிறான். சுயம்வரம் என் விருப்பப்படியே நடக்கும் என்றும் எனக்கு கெளரவத்தைக் கொடுக்கும் என்றும் சொல்லிக் கொண்டு தான் இருக்கிறான்.  அவன் சொல்வதை எவ்வாறு நம்புவது?”

“ஆனால் தந்தையே, துரியோதனன் போட்டியில் வெல்லமாட்டான் என நம்பினால் தான் கிருஷ்ண வாசுதேவன் அவ்வாறு சொல்லி இருக்க வேண்டும். அப்படி அவன் ஏன் நம்புகிறான்?  அதற்குக் காரணம் என்ன?  ஒருவேளை….. ஒரு வேளை…..சாத்யகியோ, உத்தவனோ போட்டியில் வெல்லலாம் என எதிர்பார்க்கிறானோ?”

“உத்தவன் சிறந்த வில்லாளி தான்.  நான் பார்த்த பல வில்லாளிகளில் அவனும் ஒருவன்.  அவ்வளவே. சாத்யகியும் ஆர்வம் மிக்க நல்லதொரு சிறந்த வீரனே.   அதில் சந்தேகமே இல்லை.  ஆனால் வாசுதேவனுடைய மனதில் இவர்கள் இருவரும் இருந்தார்களெனில் அவன் ஏன் உத்தவனை ஹஸ்தினாபுரம் அனுப்ப வேண்டும்?  உத்தவன் எதற்காக தூது சென்றான்?  மகனே, எனக்குத் தலை சுற்றுகிறது.  எதுவுமே புரியவில்லை.  இப்படி ஏன் நடக்க வேண்டும்?”

“உத்தவன் இதற்குத் தான் தூது சென்றான் என்பது நமக்கு எப்படித் தெரியும் தந்தையே!  அவன் தூது சென்றது வேறு எதற்காக வேண்டுமானாலும் இருக்கலாமே! “ த்ருஷ்டத்யும்னன் சொன்னான்.

“இல்லை மகனே, நம்முடைய தூதுவர்கள் போய் சுயம்வர அழைப்பைக் கொடுத்ததும் கூட்டப் பட்ட  ராஜ சபையில் கெளரவர்கள் சுயம்வரத்திற்குச் செல்லலாம் என அனுமதி கொடுக்கப்பட்டது.  அப்போது  உத்தவனும் அந்த சபையில் இருந்திருக்கிறான்.  இதிலிருந்தே தெரிகிறதே, கிருஷ்ண வாசுதேவன் நம் கிருஷ்ணை துரியோதனனைக் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என நினைக்கிறான் என்பது தான் வெட்ட வெளிச்சமாகப் புரிகிறதே!”

“ம்ம்ம்ம்ம், தந்தையே, நாம் ஒரு வேலை செய்வோமா?  வந்திருக்கும் வீரர்களான அரசர்களில் சிறந்தவன் ஒருவனைத் தேர்ந்தெடுத்து அவன் மூலம் நம் திரெளபதியைத் தூக்கிச் செல்ல ஏற்பாடு செய்துவிடலாமா?  கிருஷ்ண வாசுதேவன் குண்டினாபுரத்தில் இது தானே செய்தான்.  அதே போல் நாமும் செய்து விடுவோம்.  அந்த அரசனுக்கு நாம் உதவி செய்து திரெளபதியைத் தூக்கிச் செல்லச் செய்து விடலாம்.” கொஞ்சம் தயக்கத்துடனும், யோசனையோடுமே இதைச் சொன்னான் த்ருஷ்டத்யும்னன்.

துருபதன் ஆச்சரியம் கலந்த பார்வையை மகன் மீது வீசினான்.  “மகனே, ஒரு நேர்மையான அரசனுக்குரிய கடமைகளையும் சுய தர்மத்தையும் இத்தனை வருடங்களாக நான் கடைப்பிடித்து வருகிறேன்.  ஒரு நல்ல வாக்குறுதி தவறாத அரசன் என்னும் பெயர் எடுத்திருக்கிறேன்.  இதற்காகவே என் வாழ்நாளை எல்லாம் அர்ப்பணித்தும் வருகிறேன்.  இன்று அதிலிருந்து என் சுய தர்மத்திலிருந்து என்னால் சிறிதும் விலக முடியாது மகனே!   என்ன நடந்தாலும் சரி!  நடப்பது நடக்கட்டும்!  இறைவன் செயல். ஆனால் அதற்காக ஒரு மோசடி செய்ய நான் உடன்பட மாட்டேன்.  ஆனால் நீ சொன்னாயே குண்டினாபுரத்தில்  வாசுதேவன் செய்தான் என.  அது கொஞ்சம் வித்தியாசமானது.  ருக்மிணி அவனைத் தான் மணம் செய்து கொள்ள விரும்பினாள்.  மனம் ஒப்பி அவனுடன் அவளாகவே சென்றாள்.  அவனுக்கு லிகிதம் எழுதி அவனை வரவழைத்து அவனுடன் சென்றாள்.  அது காந்தர்வத் திருமணம் என்பார்கள் மகனே.  பல காலமாக க்ஷத்திரியர்களுக்கு அப்படித் திருமணம் செய்து கொள்ளலாம் என்று தர்ம சாஸ்திர ரீதியாகச் சொல்லப்பட்டது.  அதைத் தான் கிருஷ்ண வாசுதேவனும் செய்தான்.”

“அப்படி எனில் தந்தையே, நம் கிருஷ்ணையையும் நாம் தப்ப விட்டு விடலாம்.” என்றான் த்ருஷ்டத்யும்னன்.

“ம்ஹூம், கூடாது, கூடாது!” என்று அழுத்தம் திருத்தமாகக் கூறினாள் திரெளபதி.  “நான் தந்தையின் வாக்குறுதியைப் பூர்த்தி செய்வேன்.  அவர் சபதம் பூர்த்தி அடைய ஒத்துழைப்பேன்.  வில் வித்தைப் போட்டியில் வெல்பவர் எவராக இருந்தாலும் சரி; எனக்குக் கவலையில்லை;  அவரே என் கணவர். அவரைத் தான் நான் திருமணம் செய்து கொள்வேன்.” அழுத்தம் திருத்தமாக உறுதியுடன் சொன்னாள் திரெளபதி.

“எனக்குத் தெரியும், கிருஷ்ணை, நான் அறிவேன்.  நீ ஓர் அற்புதமான, அன்பு நிறைந்த மகள்.  ஆனால் அந்த நேரம் தான் என் வாழ்க்கையின் மிக முக்கியமான பேராபத்து நிறைந்த நேரமாக இருக்கும்.  அதிலும் குரு வம்சத்து இளவரசர்கள் எவரேனும் வென்று விட்டாலோ  அல்லது அஸ்வத்தமா வென்று விட்டாலோ, என் வாழ்க்கையில் சூறாவளியே அடிக்கும்.  என் நிம்மதி, ஆனந்தம், சந்தோஷம் எல்லாம் போய்விடும். “ துருபதன் மிகவும் துக்கத்துடன் பெருமூச்சு விட்டான்.

“அப்படி எல்லாம் நினைக்காதீர்கள் தந்தையே!  நல்லதையே நினைப்போம்.  என்னை நம்புங்கள்.  தந்தையே, உங்களை ஒருக்காலும் நான் எந்நிலையிலும் கைவிடவே மாட்டேன்.  உங்களுக்குத் தோல்வி தேடித் தர மாட்டேன்.  உங்கள் சபதத்தை நான் எப்போது நினைவில் இருத்தி அதற்கு உரிய கெளரவம் தேடிக் கொடுப்பேன்.  துரோணரை ஜெயிக்க விடமாட்டேன்.”  இதைச் சொல்கையில் திரெளபதியில் அழகிய கண்களில் இருந்து கண்ணீர் பெருக்கெடுத்தது.  தந்தையின் மீது அவள் வைத்திருந்த அளவற்ற பாசம் அதில் வெளிப்பட்டது.  துருபதனும் மிகவும் பாசத்தோடு அவள் தலையைத் தடவிக் கொடுத்து அவளை அணைத்து உச்சி முகர்ந்து தன் ஆசிகளைத் தெரிவித்தான்.  தன் மகளின் துக்கத்தால் மனம் நெகிழ்ந்தான்.  சிவந்து போன அவள் முகத்தை ஆர்வத்தோடும் கர்வத்தோடும் பார்த்துக் கொண்டே, சற்று நேரம் அமைதியாக இருந்தான்.  பின்னர் தலையை ஆட்டிக் கொண்டே, “மகளே, நீ இன்னும் ஆண்களைச் சரியாகப்புரிந்து கொள்ளவில்லை.  நீ நினைக்கும் உலகிலிருந்து முற்றிலும் மாறுபட்டதொரு உலகில் ஆண்கள் இருக்கின்றனர்.  உனக்கு அதைச் சொன்னால் புரியாது மகளே!” என்றான்.

“அதிலிருந்து நான் ஒரு புதிய உலகை உருவாக்குகிறேன் தந்தையே!  என் திறமையில் நம்பிக்கை வையுங்கள்.” என்று சொன்ன திரெளபதியின் முகத்தில் மழைக்குப் பின் பளிச்சிடும் சூரியனைப் போல் புன்னகை பளிச்சிட்டது.


Monday, May 5, 2014

தந்தையும் மக்களும்!

அந்தப்புரத்திலிருந்து திரெளபதி, த்ருஷ்டத்யும்னன், சத்யாஜித் ஆகியோருடன் தந்தையைப் பார்க்க வந்து கொண்டிருந்தாள்.  அப்போது சஹாதேவனைப் பார்த்துவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்தான் துருபதன்.  அவனுடைய நிலையைப் பார்த்த மூவரும் அதிர்ந்தனர்.  கோபநடை நடந்து வந்த துருபதன் நேரே தன் ஊஞ்சலில் சென்று அமர்ந்து வீசி வீசி ஆட்டத்தொடங்கினான். பெரியவர்களிடம் மரியாதையுடனும், கண்ணியத்துடனும் நடந்தே பழக்கப்பட்ட மூவரும் உடனே அவனிடம் என்னவெனக் கேட்கத் தயங்கிக் கொண்டு ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.  ஆனால் தந்தையிடம் அவர்கள் மனம் திறந்து பழகிப் பழக்கப்பட்டவர்கள் ஆதலால் ஊஞ்சலில் துருபதன் அருகேயே மூவரும் அமர்ந்து கொண்டனர்.  தங்கள் மூவர் மனமும் ஒன்று போல் நினைப்பதைப் போலத் தாங்கள் மூவரும் ஒருங்கே சேர்ந்து அமர்ந்து பேசுவதிலும், அவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.   துருபதன் முதலில் எதுவுமே பேசவில்லை.  அவன் கோபமும், பொங்கி வந்த ஆத்திரமும் அடங்கும் வகையில் ஊஞ்சலை மிக மிக வேகமாய் ஆட்டினான்.  யோசனையில் அவன் நெற்றிப் புருவங்கள் சுளித்துக் கொண்டன.

தந்தையின் கிளர்ந்தெழுந்த முகத்தையே பார்த்த வண்ணம் த்ருஷ்டத்யும்னன் அமர்ந்திருந்தான்.   அவன் பார்வையில் தந்தையை எது வந்தாலும் நான் காப்பாற்றுவேன் என்னும் எண்ணம் தொனித்தது.  திரெளபதியோ அசையாமல் தரையைப் பார்த்த வண்ணம் அமர்ந்திருந்தாள்.  விக்ரஹம் ஒன்றுஇடம் பெயர்ந்து வந்தது போல் இருந்தது அவள் அமர்ந்திருந்த கோலம்.  சத்யஜித்தும்  தந்தையின் நிலையால் குழப்பம் அடைந்திருந்தாலும், அவர் இப்போது இதோ தன் எண்ணங்களைப் பகிரப்போகிறார் என்னும் எதிர்பார்ப்போடு காத்திருந்தான்.  அவன் எதிர்பார்த்தது போலவே துருபதன் பேச ஆரம்பித்தான்.  “என் அருமை மக்களே, நாம் பொறியில் சிக்கி விட்டோம். இந்த சுயம்வரத்தின் மூலம் துரோணரை அழிக்கலாம் என நான் நினைத்திருந்தேன்.  அதற்கு இது நம்மை இட்டுச் செல்லும் என எதிர்பார்த்தேன்.  ஆனால் நம்முடைய நோக்கம் தடைப்பட்டுவிட்டது.  வாசுதேவன் தந்திரமாக விளையாடி நம்மைச் சிக்க வைத்துவிட்டான்.” மிகவும் கோபம் இருந்தாலும் அதை அடக்கிக் கொண்டு அளவு கடந்த விரக்தியில் பேசினான் துருபதன்.  அவன் கண்களோ அவர்களை நேருக்கு நேர் சந்திக்கவில்லை.  தரையிலேயே பதிந்திருந்தன.

த்ருஷ்டத்யும்னன் தந்தையிடம், “நிச்சயமாய் இது கிருஷ்ண வாசுதேவனின் வேலை என்பதை நீங்கள் அறிவீர்களா தந்தையே?” என வினவிய அவன் குரலில் தொனித்த சந்தேகத்தைக் கண்டு துருபதன் ஆச்சரியம் அடைந்தான்.  தன் மகன் முகத்தைக் கூர்ந்து பார்த்தவன் ஊஞ்சல் ஆட்டுவதை நிறுத்தினான்.  கடைசியில், “ஆம்” என்றான் மெல்ல.  பின் தொடர்ந்து, “அவன் எப்போதுமே குரு வம்சத்தினரோடு நாம் இணங்கிப் போக வேண்டியதன் அவசியத்தைக் குறித்துக் கூறுவான்.  பாஞ்சாலமும், குரு வம்சமும் இணைந்திரு க்க வேண்டும் என்பான்.  இப்போது என் இந்த அவமானத்தின் மூலம் அதை நிறைவேற்றிக் கொள்ளப் பார்க்கிறான்.”  சற்றே நிறுத்தியவன், மேலே தொடர்ந்து, “  நான் குரு வம்சத்தினருக்கு அழைப்பு அனுப்பியதன் காரணத்தை நீ நன்கறிவாய் மகனே!  அரசர்களுக்குக் கொடுக்க வேண்டிய மரியாதை நிமித்தமே அனுப்பி வைத்தேன்.  அவர்கள் எவரையும் இங்கே நான் எதிர்பார்க்கவே இல்லை.  அதிலும் அந்த துரோணன்,தன் முதன்மைச் சீடர்களை இங்கே வந்து சுயம்வரத்தில் கலந்து கொள்ள அனுமதிப்பான் என எதிர்பார்க்கவே இல்லை. “ துருபதனுக்கு இருந்த மனக்கசப்பு அந்தக் குரலில் தெரிந்தது.

“அவர்கள் பரிசுப் பொருட்கள் கூட அனுப்பி உள்ளனர்.  அவர்களை எவ்விதம் தடுப்பது?  நம்மால் அது இயலுமா?” த்ருஷ்டத்யும்னன் கேட்டான்.  “முடியாது மகனே, முடியாது.  அவர்களைப் போட்டியில் கலந்து கொள்வதில் இருந்தோ அதில் வெல்வதில் இருந்தோ நாம் தடுக்கவே முடியாது. “ அதே கசப்பு நீடிக்கப்பேசிய துருபதன் மேலும் தொடர்ந்து, “ ஹூம், என் அருமைக் கிருஷ்ணை(திரெளபதிக்கு இன்னொரு பெயர் கிருஷ்ணை), அங்கே அந்த சகோதரச் சண்டைகள் நடக்கும் இடத்திற்கு மருமகளாகச் செல்லுவாள்; அங்கு போய் அந்த பிராமணப் படைத் தலைவன் துரோணருக்குப் பணிவிடைகள் செய்வாள்.  அவன் பழிவாங்கும் படலத்திற்கு இது நல்லதொரு வாய்ப்பு. அவமானம், அவமானத்திற்கு மேல் அவமானம்.  “ துருபதன் பொங்கினான்.

“அவர்கள் அனைவருமே வில் வித்தையில்தேர்ந்தவர்களா தந்தையே!  மற்றவர்களோடு அவர்கள் எவ்விதத்தில் வேறுபட்டவர்கள்?  எவ்விதத்தில் மற்றவர்களை விடச் சிறந்தவர்கள்?” திரெளபதி கேட்டாள். “குழந்தாய், கிருஷ்ணை!,  துரியோதனன் மிகச் சிறந்த வில் வித்தை வீரன் ஆவான்.  அங்க தேசத்து மன்னன் கர்ணனும் மிகச் சிறந்த வில் வித்தை வீரரில் ஒருவன். அஸ்வத்தாமா குறித்தோ கேட்கவே வேண்டாம்;  துரோணரின் மகன். மிகச் சிறந்த வில் வித்தை வீரன்.  அவனுக்கு நிகர் யாருமில்லை.  யாதவர்களுக்குள் பார்த்தால், வாசுதேவக் கிருஷ்ணனை விட்டு விட்டால் மற்றபடி உத்தவன், சாத்யகி மற்றும் கிருதவர்மா ஆகிய மூவர் தான் தேறுவார்கள்.  மகத தேசத்தை எடுத்துக் கொண்டால் அங்கே சிறந்த வில் வித்தை வீரர் எவரும் வர வாய்ப்பில்லை.  ஒருவேளை சக்கரவர்த்தி ஜராசந்தனே  கலந்து கொள்ள முடிவெடுத்தால் அவன் ஒருவன் மட்டுமே இருப்பான்.  அடுத்து இவர்களை விடுத்தால் விராடனும், பிரபலமான வில் வித்தை வீரன் ஆவான்.  அதே போல் சேதி நாட்டு மன்னன் ஆன சிசுபாலனும் சிறந்த வில் வித்தை வீரன் ஆவான். “

“உண்மைதான்.  ஆனால் அவர்கள் அனைவரிலும் மிகச் சிறந்த வில் வித்தை வீரன் கர்ணன் ஒருவன் மட்டுமே.  ஆனால்……அவன் பிறப்பைக் குறித்துச் சில பேச்சுக்கள் இருக்கின்றன.  அவன் முறைதவறிப் பிறந்தவன் எனச் சொல்கின்றனர். “ என்று த்ருஷ்டத்யும்னன் கூறினான்.  அப்போது திரெளபதி “இருக்கட்டும், துரோணரின் இந்தச் சீடர்கள் போட்டியில் கலந்து கொள்ளட்டும்.  எவன் வென்றாலும் எனக்குக் கவலை இல்லை.  நான் அவனை மணமகனாக ஏற்கப் போவதில்லை.  அது உறுதி!” இதைச் சொல்கையில் திரெளபதியின் கண்கள் தீயைப் போன்ற ஒளியோடு ஜொலித்தன.  அவள் கண்களின் அந்த ஒளியக் கண்டு ஆண்கள் மூவரும் அதிசயித்தனர்.  ஆனால் துருபதனோ கவலையும் பட்டான்.  “மகளே, என் அருமை மகளே! நீ எவ்விதம் அவர்களை மறுதலிப்பாய்?  உன்னால் அவர்களிடமிருந்து தப்ப முடியுமா?  என் மகளே, எனக்கு இது தான் மாபெரும் கவலையாக இருக்கிறது!” என்று சொன்ன துருபதன் தூரத்தில் சலசலத்து ஓடிக் கொண்டிருந்த கங்கையைப் பார்த்துக் கொண்டே உதடுகளை மடித்துக் கொண்டு நின்றான்.  அவன் நின்ற கோலத்தைப் பார்த்தால் கங்கை உடனே அவன் கேள்விக்குப் பதில் சொல்வாள் என எதிர்பார்த்த மாதிரி இருந்தது.

பின்னர் மெதுவாகத் திரும்பினான். திரெளபதியைப் பாசம் பொங்கும் விழிகளோடு தலையோடு கால் வரை பார்த்தான்.  “மகளே, நான் ஆர்யவர்த்தத்து அரசர்களுக்கு வாக்குறுதி கொடுத்து விட்டேன்.  இந்தப் போட்டியில் ஜெயிப்பவன் எவனாக இருந்தாலும் என் மகள் அவனுக்கே என உறுதி மொழி கொடுத்திருக்கிறேன்.  அதிலிருந்து என்னால் விலக இயலாது. என் உறுதி மொழியை நானே உடைக்க முடியாது.”

“ஆனால் தந்தையே, இதில் இன்னொரு விஷயமும் இருக்கிறது.  ஒரு இளவரசன் அல்லது ஒரு அரசனுக்கு மேல் இரண்டு பேர் அல்லது மூவர் ஜெயித்தால் அவர்களில் ஒருவரைத் தேர்ந்தெடுக்கும் உரிமை திரெளபதிக்கு இருக்கிறது.  அதிலும் அவளுக்குப் பிடித்தவரை அவள் தேர்ந்தெடுக்கலாம்.” என த்ருஷ்டத்யும்னன் தங்கைக்காகப் பரிந்து பேசினான்.

“உண்மை மகனே! அவ்வாறே நடக்கும்!” துருபதன் கூறினான்.

“ஒருவருமே வெல்லவில்லை எனில்? என்ன செய்வது தந்தையே?” திரெளபதிக்கு சந்தேகம் முளை விட்டது.


“அப்போது நீ வந்திருப்பவர்களில் உனக்கு யாரைப் பிடிக்கிறதோ அவரைத் தேர்ந்தெடுக்கலாம். அதற்கான உரிமை உனக்கு உண்டு. “ என்று சொன்ன துருபதன்,  சற்றே கவலையுடன், “ஆனால் அதில் ஒரு சிக்கல் இருக்கிறது. இதன் மூலம் அரசர்களுக்குள் சண்டை வரும்;  அனைவரும் உன் கரத்தைப் பிடிக்கப் போட்டியிடுவார்கள்.  அவர்கள் ஒருவருக்கொருவர் போரிடுவார்கள். பின்னர் உன்னைத் தூக்கிச் செல்லக் கூட முயற்சிக்கலாம். “Saturday, May 3, 2014

மோதிக் கொண்ட சிம்மங்கள்!

துருபதன் தனக்குள் பொங்கிய கோபத்தை அடக்க மிகப் பாடுபட்டான். கோபத்தை அடக்கிக் கொண்டு விருந்தினருக்குக் காட்டும் அதே மரியாதையுடன், சஹாதேவனைப் பார்த்து, “ மாட்சிமை பொருந்திய இளவரசே, துருபதன் வாக்குக் கொடுத்தான் எனில் அதை மீற மாட்டான். அதிலிருந்து பின் வாங்குவது என்பதும் இல்லை.  ஆகவே இந்தப் போட்டியில் ஜெயிப்பவர் யாராக இருந்தாலும், என்ன வயதாக இருந்தாலும், அவர் அரசராக இருந்தாலும் சரி, இல்லை எனினும் சரி, போட்டியில் வென்றால் அவரே என் மாப்பிள்ளை ஆவார்.  இதில் எவ்வித மாற்றமும் இல்லை.” என்றான்.

“அது சரி, ஒரே ஒரு மன்னன், அல்லது இளவரசன் வென்றால் நீர் சொல்வது சரியே!  இரண்டுக்கும் மேல் வென்றார்களானால் அல்லது யாருமே வெல்லவில்லை எனில்?” நேருக்கு நேர் பேசிக் கொண்டு ஒருவருக்கொருவர் சம்மதத்துடன் நடைபெற வேண்டிய ஒரு திருமணத்துக்கு இத்தனை விதிகளா என சஹாதேவனுக்குக் கொஞ்சம் ஆச்சரியம் கலந்த கோபம் வந்தது.  ஆனால் துருபதனோ எதற்கும் கலங்கவில்லை.  “அப்படி ஏதேனும் நேர்ந்தால் வென்றவர்களில் யாரேனும் ஒருவரை என் மகள் தனக்கு ஏற்ற மணமகனாகத் தேர்ந்தெடுப்பாள்;  அவளுக்கு அதற்கான சுதந்திரம் உண்டு.  அப்படி யாருமே வெல்லவில்லை என்றாலும் வந்திருக்கும் அரசர்களுள் அவளுக்கு யாரைப் பிடித்திருக்கிறதோ அவரைத் தேர்ந்தெடுப்பாள். “ என்று சொன்ன துருபதன் சஹாதேவனின் பேரத்தை அத்தோடு முடிக்க நினைத்தான். ஆனால் சஹாதேவனோ விடுவதாய் இல்லை.

“இந்தப் போட்டியில் துரோணாசாரியாரின் சீடர்களான குரு வம்சத்து  இளவல்களில் ஒருவன் வென்று விட்டால்?  அப்போது என்ன நடக்கும்?” என்று கேட்டான்.  மேலும் தொடர்ந்து, “குரு வம்சத்தினர் உனக்கு எதிரிகள் இல்லையா?  அதோடு கூட உன் பரம வைரியான துரோணாசாரியார் திரெளபதியைத் தூக்கிச் செல்வதற்காகவே அவர்களை இங்கே அனுப்பி இருப்பதாகவும் அனைவரும் பேசிக் கொள்கின்றனர்.” என்றான்.  இவ்வளவு நேரம் சமாளித்த துருபதனுக்கு இது மிகப் பெரிய அடியாக விழுந்தது. அவனால் இதைத் தாங்க முடியவில்லை.  எனினும் உறுதியான குரலில், “ என் மகள் துரியோதனனையோ, அல்லது துரோணரின் மகனையோ மணமகனாக ஏற்கவே மாட்டாள்.” எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தான்.  “இளவரசே, அதனால் தான் உங்கள் தந்தையின் உதவியை நான் நாடுகிறேன்.” என்றும் கூறினான்.

“என்ன உதவி? எவ்வகையில் என் தந்தை உனக்கு உதவ வேண்டும்?” என்று கேட்டான் சஹாதேவன்.

துருபதன் நீண்டதொரு பெருமூச்சு விட்டான்.  சற்று நேரம் அமைதியாக இருந்து விட்டுப் பின்னர், “மாட்சிமை பொருந்திய இளவரசே, நான் இப்போது ஒரு தர்ம சங்கடமான சூழ்நிலையில் இருக்கிறேன்.  என் மகளைத் திருமணம் செய்து கொள்ள வைத்திருக்கும் இந்தப் போட்டியை நான் மறுதலிக்கவில்லை. என்னால் அதைத் தேவையில்லை எனச் சொல்லவும் முடியாது.  ஆனால் இந்தப் போட்டியில் குரு வம்சத்தினரோ, துரோணரின் மகனோ வெல்லக் கூடாது.  அவர்கள் வெல்லாமல் இருக்க வேண்டும்.” என்ற துருபதன் தன் குரலைத் தழைத்துக் கொண்டு ரகசியம் பேசும் குரலில், “உங்கள் தந்தையார் மட்டும் இந்தப் போட்டியில் கலந்து கொண்டு வென்று விட்டாரானால் நான் மன மகிழ்வோடு என் மகளை உங்கள் தந்தைக்கு மணமுடிப்பேன்.” என்று முடித்தான்.

“துருபதா, மகதத்தின் மாபெரும் சக்கரவர்த்தி இந்தப்போட்டியில் கலந்து கொண்டு வெல்ல முடியாமல் இங்கிருக்கும் அனைத்து அரசர்கள் முன்னிலையிலும் அவமானம் அடைய வேண்டும் என்பது தான் உன் எண்ணமா? என்ன நினைக்கிறாய் எங்களைப் பற்றி?  இதோ  பார் துருபதா, நீ எங்களுக்கு ஆசை காட்டி மோசம் செய்துவிட்டாய்!   துளியும் சாத்தியமற்ற ஒன்றுக்கு இப்போது ஆசை காட்டுகிறாய்!  எங்களை இக்கட்டான நிலைக்குத் தள்ளுகிறாய்.  நாங்கள் என்ன நீ விளையாடும் சொக்கட்டான் காய்களா? பொம்மைகளா?  உன் பகடைக்காய்களாக இருக்க நாங்கள் விரும்பவில்லை. இதிலிருந்து எங்களைக் காத்துக் கொள்ள எங்களுக்குத் தெரியும் மன்னா! எப்படி என்பதையும் நாங்கள் அறிவோம்.”என்று சொல்லிவிட்டு அவனைக் கோபமாகப் பார்த்தான் சஹாதேவன்.


அவன் குரலில் தொனித்த மிரட்டல் தொனியால் ஒரு கணம் துருபதன் அசந்தே போனான்.  இனியும் தன் உணர்வுகளை மறைக்காமல்  இருக்க வேண்டும் என நினைத்துக் கோபம் கொந்தளிக்கும் கண்களோடு அவனைப் பார்த்தான். சஹாதேவன் மிரட்டியதன் உட்பொருளை அவன் நன்கு புரிந்து கொண்டான். எனவே அவனைப் பார்த்து, “என் மகள் ஒன்றும் ராக்ஷசி அல்ல.  அவளை அப்படி நடத்துபவர்களை நான் மன்னிக்கவே மாட்டேன்.  யாரும் அவளை அப்படி எல்லாம் நடத்த முடியாது.   நான் ஒரு ஆரிய அரசனுக்குரிய அரச தர்மத்தைத் தான் கடைப்பிடிக்கிறேன்.  அதை என்றும் செய்து வருவேன். போட்டியில் வெல்பவர்க்கே என் மகள் என்னும் வாக்குறுதியை நான் நிறைவேற்றியே தீருவேன்.  போட்டி நிச்சயம் நடக்கும்.” என்றான்.  இது தான் துருபதனின் முடிவு என்பதை சஹாதேவன் புரிந்து கொண்டான்.

சற்று நேரம் அங்கே மாபெரும் அமைதி நிலவியது.  பின்னர் சஹாதேவனும், துருபதனும் ஒருவரை ஒருவர் கோபமும், கொடூரமும் தொனிக்கப் பார்த்த வண்ணம் பிரிந்தனர்.Thursday, May 1, 2014

துருபதன் ஆத்திரமும், சஹாதேவன் கோபமும்!

ஜராசந்தனின் செய்தி மட்டும் துருபதனைக் கோபப் படுத்தவில்லை; சஹாதேவனின் அதிகாரத் தொனியும் சேர்ந்து அவனை ஹிம்சை செய்தது. மிகவும் அதிகாரத்துடன் ஆணையிடும் தொனியில் சஹாதேவன் கொடுத்த ஜராசந்தனின் செய்தியால்  துருபதனுக்கு ஏற்கெனவே இருந்து வந்த சினம் இப்போது  கட்டுக்கடங்கா வண்ணம் தலைக்கேறியது.  எனினும் மிகவும் கஷ்டப் பட்டுத் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்ட துருபதனின் முகம் மட்டும் பாறையைப் போல் உறைந்து போனது.  அவனுடைய அசாதாரணமான மெளனத்தையும், முகத்தின் கடுமையையும் சற்றும் கவனிக்காத சஹாதேவன் மேலே பேசிக் கொண்டு போனான்.

“தந்தை உனக்கு இவ்விஷயத்தின் தன் வாக்குறுதியை மீண்டும் மீண்டும் அளிக்கிறார்.  மேகசந்தியைத் திரெளபதி தேர்ந்தெடுத்து மணந்து கொண்டால், நம்மிருவரின் படைகளும் சேர்ந்து மாபெரும் பலமுள்ள படையாக மாறும். உன் தலைமைக்குக் கீழ் இரு படைகளும் ஒற்றுமையாக ஒன்று சேர்ந்து செயல்பட்டு வரும்.  இப்போது நீ தான் யாருடைய உதவி உனக்குத் தேவை எனவும், யாரைத் தேர்ந்தெடுப்பது  உனக்கும், உன் நாட்டுக்கும் நல்லது எனவும் முடிவு செய்ய வேண்டும்.  “ மீண்டும் அதே ஆணையிடும் குரலில் கூறினான் சஹாதேவன்.  துருபதனுக்குத் தன் நாட்டுக்கு வரும் வேற்று நாட்டு மன்னர்களை மரியாதையுடனும், கெளரவத்துடனும் உபசரிப்பது என்பது உடம்போடு பிறந்தது.  ஆனால்!! இப்போதோ!  அவை அனைத்தையும் இந்த சஹாதேவன், ஜராசந்தனின் மகன் காற்றில் பறக்க விட வைப்பான் போலிருக்கிறதே!      சஹாதேவனின் இந்த அரசியல் பேரத்தால் , அவன் அதிகாரப் போக்கால் துருபதனுடைய கோபம் எல்லை மீறி விடும் போல் இருக்கிறதே!

தன்னைத் தானே கட்டுப்படுத்திக் கொண்டு தன்னுடைய குரலில் அடங்கும் தொனியே காட்டிக் கொள்ளாமல் அதிகாரத் தொனியிலேயே துருபதன் பேச ஆரம்பித்தான்.  “என்னுடைய வணக்கங்களை மன்னன் ஜராசந்தனுக்குத் தெரியப்படுத்துங்கள் இளவரசே! நான் எப்போதுமே அவர் நண்பன்.  இப்போதும் நண்பனாகவே இருக்க விரும்புகிறேன்.  அவருடன் அரசியல் உடன்படிக்கை செய்து கொள்வது என்பது எனக்கு மிகவும் பெருமையைத் தரும்.  அது என் அதிர்ஷ்டம்.” என்றான் துருபதன்.  “அப்படி எனில்   நாங்கள் கேட்டதை நிறைவேற்றுவதில் என்ன கஷ்டம் உனக்கு?” சஹாதேவன் கேட்டான். அவனுக்கு துருபதன் குரலில் இருந்த ஏதோ ஒன்று சங்கடப்படுத்தியது. அதோடு நட்புப் பாராட்டுவதாகக் கூறிய துருபதன் குரலில் அந்த நட்புத் தொனியே இல்லை என்பதையும் கவனித்துக் கொண்டான்.  இந்த வெளிப்படையான பேரத்தை துருபதன் சற்றும் ரசிக்கவில்லை.  ம்ம்ம்ம்ம்?? இப்போது உண்மையைச் சொல்லிவிடுவது தான் நல்லது என நினைத்தான் துருபதன்.  வெளியே சொல்லாமல் இருந்த ரகசியமான செய்தியைச் சொல்லிவிடலாம் என முடிவு செய்தான்.  “மாட்சிமை பொருந்திய இளவரசே, என் மகள் ஒரு முக்கியமான முடிவு எடுத்திருக்கிறாள்.  அவள் வைக்கும் ஆயுதப் போட்டியில் வெல்பவர் எவரோ அவருக்கே மாலையிட வேண்டும் என முடிவு செய்திருக்கிறாள்.  அது எந்த நாட்டு அரசனாகவோ, இளவரசனாகவோ இருக்கலாம்.”

“என்ன?? நீ போட்டிக்கு ஏற்பாடு செய்திருக்கிறாயா?” அதிர்ச்சி கலந்த குரலில் கேட்டான் சஹாதேவன். “ஆம், நான் இன்று மாலை அதை அறிவிக்க இருந்தேன்.  அநேகமாக எல்லா விருந்தினர்களும் வந்து சேர்ந்துவிட்டனர். குரு சாந்தீபனியால் ஏற்படுத்தப் பட்டிருக்கும் வில் வித்தையில் வெல்பவர் எவரோ அவருக்கே என் மகள் திரெளபதி மாலையிடுவாள்.  இந்தச் செய்தியால் நம்முடைய உடன்படிக்கைகளுக்குப் பங்கம் நேராது என நினைக்கிறேன்.  “ இதைச் சொல்கையிலேயே சஹாதேவன் முகத்தில் தெரிந்த கடுமையையும், கோபத்தையும் கவனித்துக் கொண்டான் துருபதன்.  சஹாதேவனால் ஏமாற்றத்தை அடக்க முடியவில்லை.  வெளிப்படையாகவே தெரிந்தது. “இதன் மூலம் மற்ற எல்லா அரசர்களைப் போலவே எங்களையும் நடத்துகிறாய்.  அவர்களையும் எங்களையும் சமமாக நினைக்கிறாய்!” என்று கோபத்துடன் கூறினான்.  அவனுடைய மிதமிஞ்சிய ஆத்திரம் குரலில் வெளிப்பட்டது.

இப்போது தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்வதில் அதிகக் கஷ்டப்படவில்லை துருபதன்.  மாறாக சஹாதேவனின் ஆத்திரம் அவனை இன்னமும் நிதானப்படுத்தியது.  "ஒரு சுயம்வரம் எனில் இப்படிப்பட்ட புனிதமான நியதிகள், சடங்குகள், நியமங்கள் கடைப்பிடிக்கப்படுவது ஒன்றும் புதிதல்லவே!  திரெளபதியின் முடிவு தான் இறுதியானது.” என்று தீர்மானமாகச் சொன்னான்.

“எனில் நம் உடன்படிக்கைக்கு மாபெரும் இடர்கள் நேரிட்டிருக்கின்றன.  நாம் ஓர் இக்கட்டான நிலையில் இருக்கிறோம்.” குற்றம் சொல்லும் தொனியில் பேசிய சஹாதேவன், மேற்கொண்டு, “மேகசந்தியால் நிச்சயம் இந்த வில் வித்தைப் போட்டியில் ஜெயிக்க இயலாது.  அவன் ஒரு தேர்ந்த வில்லாளி அல்ல.  குறிபார்த்து அம்பு எய்யும் முறையை அவன் கற்கவில்லை.” என மீண்டும் கோபம் கலந்த வருத்தத்துடன் கூறினான்.

“அடப் பாவமே!  இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது! “ சொன்ன துருபதன் குரலில் சிறிதும் வருத்தமே இல்லை.  “அவன் நம்மைப்போல் மல்யுத்தங்களில் சிறந்தவன்.” என்றான் சஹாதேவன்.  “ஓ, அப்படியா? ஆனால், சக்கரவர்த்தி மிகத் தேர்ந்த வில்லாளி ஆயிற்றே!  அவரால் இந்தப் போட்டியில் கலந்து கொள்ள இயலாதா?”  மிகவும் சாவதானமாக எவ்வித உணர்ச்சியையும் வெளிக்காட்டாமல் துருபதன் கேட்டான்.  சஹாதேவன் துருபதன் முகத்தைக் கூர்ந்து கவனித்தான்.  இவன் என்ன என் தந்தையைக் கேலி செய்கிறானா?  மகதத்தின் மாபெரும் சக்கரவர்த்தியையா?  ஹூம்! “ துருபதா, நீ என் தந்தை மகதச் சக்கரவர்த்தியையா போட்டியில் கலந்து கொள்ளச் சொல்கிறாய்?  இதன் மூலம் அவர் மற்ற அரசர்கள் முன்னால் அவமானம் அடைய வேண்டும் என்பது உன் எண்ணமா?” என்று கோபத்தோடு கேட்டான்.