Tuesday, May 20, 2014

கிருஷ்ணனின் வரவும், திரெளபதியின் மறுப்பும்!

ஷிகண்டின் சென்ற திசையையே பார்த்துக் கொண்டு நின்று கொண்டிருந்தாள் திரெளபதி.  அவளால் அசையக் கூட இயலவில்லை.  அவள் உடலின் சக்தி முழுதும் வடிந்து விட்டாற்போல் உணர்ந்தாள்.  அவள் சீற்றமெல்லாம் வடிந்த பின்னர் அவளிடம் ஓர் வெறுமை உணர்வு தோன்றியது.  ஷிகண்டின் சென்ற கதவு வழியைப் பார்த்த வண்ணமே நின்று கொண்டிருந்தவளுக்கு ஒரு ரதம் கிளம்பத் தயாரானதும், அது கிளம்பும் ஓசையும் கேட்டது.  ஷிகண்டின் அரண்மனையை விட்டே செல்கிறான் என்பதைப் புரிந்து கொண்டாள். அவள் கால்கள் நடுங்கின.  அவளால் நிற்க முடியவில்லை.  மெல்ல மெல்ல நகர்ந்து அங்கிருந்த படுக்கையில் விழுந்தாள்.  ரதம் செல்லும் ஓசை கேட்டு மெல்ல மெல்ல மறைந்தது.  இனம் புரியாத தளர்ச்சியும், சோகமும் அவளைப் பிடித்து ஆட்ட வாய் விட்டு அழுதாள். யாரிடம் என்று சொல்ல முடியாவண்ணம் கோபமும், மனக்கசப்பும், தன்னிரக்கமும் அவளைப் பிடித்து ஆட்டின.  சொல்லமுடியாத சோகம் அவளைக் கவிந்து கொண்டது.  அவளைப் போன்றதொரு துரதிர்ஷ்டம் பிடித்த அரசகுமாரியை எவரேனும் பார்த்திருப்பார்களா?  நிச்சயமாக இருக்காது.

கிருஷ்ண வாசுதேவனைச் சந்திக்கும் வரையில் அவள் தன்னம்பிக்கையுடனும் தன்னில் நிச்சயத்துடனும் தான் இருந்து வந்தாள். அவள் தந்தையின் சபதத்தை நிறைவேற்றுவதற்காகக் கிருஷ்ண வாசுதேவனைத் திருமணம் செய்து கொள்ளவும் தயாராகவே இருந்தாள். கிருஷ்ண வாசுதேவனுக்கு ஏற்ற நல்லதொரு மனைவியாகவே இருந்திருப்பாள்.  யாதவர்களுக்கும் பாஞ்சால நாட்டு மக்களுக்கும் இடையிலே நல்லதொரு பிணைப்பும் ஏற்பட்டு கிருஷ்ண வாசுதேவனும் அரசர்க்கெல்லாம் அரசனாக, சக்கரவர்த்திகளுள் மாபெரும் சக்கரவர்த்தியாக இருந்திருப்பான்.  ஆனால்…. ஆனால்…. இவை எதுவுமே நடக்கவில்லை.  சோகம் என்னவெனில் அவன் வந்த போது  தன்னுடைய கருத்துகளைத் தான் அவர்கள் மனதில் புகுத்தினான்.  தனக்குத் தானே வகுத்துக் கொண்டதொரு பாணியைக் காட்டி அவர்களை எல்லாம் மனோ வசியம் செய்துவிட்டான். அவன் இழுத்த இழுப்புக்கு அவர்கள் அனைவரும் போகும்படி அவன் சொல்வதைக் கேட்கும்படி அவர்களை பொம்மைகளாக மாற்றி விட்டான். சூத்திரதாரியாகச் செயல்பட்டான்.  ஆனால் அவர்கள் புரிந்து கொள்ளவில்லை.  இப்போது அவர்கள் அனைவருமே ஒவ்வொரு வகையில் பேராசை பிடித்த மன்னர்களின் வலையில் நன்றாகச் சிக்குண்டார்கள்.  இது தான் அனைவரும் கொண்டாடும் தெய்வத் தன்மையுள்ளவன் எனக் கருதப்படும் கிருஷ்ண வாசுதேவனின் தந்திரம்.  ஹூம். இவை எல்லாம் கிடக்க என் அருமைச் சகோதரன் கூட இவனைக் கடவுளாக நினைத்துக் கொண்டாடுகிறான்.

இந்தப் புதிய அனுபவம் தந்த ஏமாற்றத்தில் அவள் அழுதாள்;  மிகவும் அழுதாள். இது வரையிலும் அவள் தந்தை தான் அவர்கள் குடும்பத்தில் தலை சிறந்த ஆலோசகராக அனைவரையும் அடக்கி ஆளும் வல்லமை படைத்தவராக இருந்து வந்தார்.  அவர் சொல்வதை அவர் மக்கள் தட்டாமல் கேட்பார்கள்.  அவர் பேச்சுக்கு மறு பேச்சு இல்லை.  அவளைப் பொறுத்தவரையிலும் அவள் குடும்பம் உயர்ந்ததொரு மகிமை நிறைந்த பீடத்தில் இருந்து பாஞ்சாலத்தை ஆண்டு வந்தது.  அவள் தந்தையைக் குறித்தும், சகோதரர்கள் குறித்தும் பெருமையும் கர்வமும் கொண்டிருந்தாள் அவள்.  அந்த சுய கர்வத்தில் தன்னைத் தானே பொசுக்கிக் கொண்டாள்.  இப்போது எல்லாம் பொய்யாய்ப் பழங்கனவாய்ப் போய்விட்டதே!  இதைக் காப்பாற்றி ஆக வேண்டும். அவள் குடும்ப கெளரவத்தை அவள் மீட்டே ஆகவேண்டும்.  இதற்காக ஏதேனும் செய்ய வேண்டும்.  என்ன செய்யலாம்? வாய் விட்டு அழுத திரெளபதி, “மஹாதேவா, மஹாதேவா, என் கடவுளே, என் உதவிக்கு வா!  என் குடும்பத்தைக் காப்பாற்று! எங்களுக்கு உதவி செய்!” என்று அரற்றினாள்.

அப்போது குதிரைகள் விரைவாக வரும் காலடிச் சப்தமும் ரதத்தின் சக்கரங்கள் சாலையில் உருண்டோடி வரும் ஒலியும் கேட்டது.  அதோடு இல்லாமல் ரதங்கள் சில, ஒன்றிரண்டு இருக்கலாம்.  இழுத்துப் பிடிக்கப்பட்டு நிறுத்தப்பட்டன என்பதையும் அறிந்தாள்.  அரண்மனை முன்றிலிலும் விளக்குகளின் ஒளி தெரிந்தது.  எவரோ, யாரோ வந்திருக்கிறார்கள்.  ரதங்கள் ஒன்றிரண்டு இல்லை.  நான்கு குதிரைகள் பூட்டப்பட்ட ஒரே ரதம்.  அதில் யாரோ வந்துள்ளார்கள்.  யாராக இருக்கலாம்? வந்திருக்கும் விருந்தினர்களில் மிகச் சிலருக்கே இப்படிப் பட்ட ரதமும், இப்படி ஓட்டும் வழக்கமும் உண்டு. யாரோ பெரிய அரசன் போல.  மிகப் பெரிய வரவேற்பும் கொடுக்கப்படுகிறதே! எதிர்பாரா முக்கிய விருந்தாளி எவரோ இந்த நேரத்தில் வருகை புரிந்திருக்கிறார்கள்.  சில நிமிடங்களில் வந்திருப்பது யார் எனப் புரிந்து விட்டது.  மிகப் பெரிய கூட்டம் அரண்மனை முன்றிலில் கூடி, “கிருஷ்ண வாசுதேவனுக்கு மங்களம்!  ஜெய ஜெய கிருஷ்ணா!” என்றெல்லாம் கோஷமிட்டனர்.  ஆஹா!  அவனா!  திரெளபதி பொடிப் பொடியாக உடைந்து போனாள்.

அவள் தந்தை இப்போதிருக்கும் மன நிலையில் அவனை எதிர்கொண்டு பேசவேண்டுமே!  அவர் ஏதேனும் பேசிவிட்டால்!  ஒரு நிமிடம் அங்கே போய் அவனை அந்த இக்கட்டிலிருந்து காக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது அவளுக்கு. மறு நிமிடம் தன்னைத் தானே சமாளித்துக் கொண்டாள். மிகவும் சிரமத்துடன் தன்னை அடக்கிக் கொண்டாள்.  இக்கட்டான சூழ்நிலையில் தன்னைச் சமாளித்துக் கொண்டு பேசத் தெரியாத அளவுக்கு அவள் தந்தை மனோபலம் அற்றவர் அல்ல.  அவர் நன்றாகவே தன்னைப் பார்த்துக் கொள்வார்.  அவள் உதவி அவருக்குத் தேவையில்லை.  நேரம் சென்றது. சிறிது நேரத்தில் சத்யஜித் அங்கே வந்தான்.  அவன் வரும்போதே மிகவும் அதீதமான உணர்ச்சிவசப்பட்டிருப்பது தெரிய வந்தது.  அவன் முகமும் சந்தோஷமாக இருந்தது.  அவன் சொன்னான்:”கிருஷ்ணா, வாசுதேவன் வந்திருக்கிறான். தந்தையைச் சந்திக்க வேண்டும் என்றான்.  ஆனால் தந்தை தனக்கு உடல் நலம் சரியில்லாததால் திரெளபதியைப் பார்த்துப் பேசு என்று சொல்லி விட்டார்.  எல்லாவற்றையும் உன் பொறுப்பில் தந்தை விட்டு விட்டார்.  வாசுதேவன் உன்னைப் பார்க்கக் காத்திருக்கிறான்.”  என்றான்.

திரெளபதிக்கு உள்ளம் கொதித்தது.  கூடவே ரத்தமும் சூடாகவும், வேகமாகவும்  உடல் முழுதும் பாய்ந்தது.  முதலில் அவளுக்குத் தோன்றியது என்னவெனில்  கிருஷ்ண வாசுதேவனைப் பார்க்கக் கூடாது என்பதே! அவனைச் சந்திக்க முடியாது எனச் சொல்ல வேண்டும் என்றே நினைத்தாள். ஆனால் அவள் தந்தை பொறுப்பை அவளிடம் அல்லவோ ஒப்படைத்திருக்கிறார்.  இந்நிலையில் அவள் எப்படி விலக முடியும்?  அவள் சிந்தனைகள் முடிவடைவதற்குள் மந்திரி உத்போதனர் கதவுக்கருகே தோன்றினார். அவருடன் வந்திருக்கும் விருந்தாளி வாசுதேவன் என்பதையும் அறிந்தாள் . அவனை உள்ளே அனுப்பிக் கொண்டிருந்தார் உத்போதனர். கதவுக்குப் பின்னாலிருந்து கிருஷ்ணனின் குரல் வழக்கமான உற்சாகத்துடனும் நம்பிக்கை ஊட்டும் விதமாகவும் தொனித்தது.  “மாட்சிமை பொருந்திய இளவரசி, என்னை வரவேற்க மனமில்லையா?  முன்னர் எவ்வளவு ஆவலுடன் வரவேற்புக் கொடுத்தாய்? அது போல் வரவேற்க மனமில்லையா?” என்று கேட்டான்.

6 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்...

தொடர்கிறேன்...

ஸ்ரீராம். said...

கண்ணனின் திடும் ப்ரவேசம் திரௌபதிக்கு நம்பிக்கையை விதைக்கட்டும்!

எனக்கொரு சந்தேகம். கிருஷ்ணன் திரௌபதி சந்திப்பு முதலில் இந்த சுயம்வரத்தை ஒட்டி (அதற்குமுன் கண்ணன் இங்கு வந்து சென்றது) நிகழ்ந்ததுதானா? பழைய சுட்டி தராமல் விடையை இங்கேயே தரவும்! :))))))

sambasivam6geetha said...

நன்றி டிடி. தொடர்ந்து வருவதற்கு மீண்டும் நன்றி.

sambasivam6geetha said...

ஹாஹாஹா ஶ்ரீராம், மூல பாரதத்தின்படி திரெளபதி சுயம்வரத்தின் மூலம் மணமகனைத் தேர்ந்தெடுப்பதும், அதில் ஜராசந்தனிலிருந்து கர்ணன் வரை பங்கெடுப்பதும் தோற்றுப் போவதும் உண்டு. ஆனால் அதில் எங்கேயுமே துருபதன் கண்ணனை திரெளபதியை மணக்கச் சொல்லிக் கேட்டதாக வராது. :))))

sambasivam6geetha said...

எனக்குத் தெரிந்து கண்ணனுக்கும் திரெளபதிக்கும் அவள் கல்யாணத்திற்குப் பின்னரே சந்திப்பு நிகழ்ந்ததாக மூலத்தில் படித்த நினைவு. எதுக்கும் சரி பார்த்துக்கிறேன். :))))

sambasivam6geetha said...

ஆனால் முன்ஷிஜி எழுதியபடி முதலில் துருபதனைச் சந்திக்க வரும் கண்ணன் தன்னிடம் கேட்கப்பட்ட கோரிக்கையை நிராகரிக்கிறான். அதன் பின்னர் அவன் திரெளபதியை இப்போது தான் சந்திக்கிறான். :))))