Saturday, May 3, 2014

மோதிக் கொண்ட சிம்மங்கள்!

துருபதன் தனக்குள் பொங்கிய கோபத்தை அடக்க மிகப் பாடுபட்டான். கோபத்தை அடக்கிக் கொண்டு விருந்தினருக்குக் காட்டும் அதே மரியாதையுடன், சஹாதேவனைப் பார்த்து, “ மாட்சிமை பொருந்திய இளவரசே, துருபதன் வாக்குக் கொடுத்தான் எனில் அதை மீற மாட்டான். அதிலிருந்து பின் வாங்குவது என்பதும் இல்லை.  ஆகவே இந்தப் போட்டியில் ஜெயிப்பவர் யாராக இருந்தாலும், என்ன வயதாக இருந்தாலும், அவர் அரசராக இருந்தாலும் சரி, இல்லை எனினும் சரி, போட்டியில் வென்றால் அவரே என் மாப்பிள்ளை ஆவார்.  இதில் எவ்வித மாற்றமும் இல்லை.” என்றான்.

“அது சரி, ஒரே ஒரு மன்னன், அல்லது இளவரசன் வென்றால் நீர் சொல்வது சரியே!  இரண்டுக்கும் மேல் வென்றார்களானால் அல்லது யாருமே வெல்லவில்லை எனில்?” நேருக்கு நேர் பேசிக் கொண்டு ஒருவருக்கொருவர் சம்மதத்துடன் நடைபெற வேண்டிய ஒரு திருமணத்துக்கு இத்தனை விதிகளா என சஹாதேவனுக்குக் கொஞ்சம் ஆச்சரியம் கலந்த கோபம் வந்தது.  ஆனால் துருபதனோ எதற்கும் கலங்கவில்லை.  “அப்படி ஏதேனும் நேர்ந்தால் வென்றவர்களில் யாரேனும் ஒருவரை என் மகள் தனக்கு ஏற்ற மணமகனாகத் தேர்ந்தெடுப்பாள்;  அவளுக்கு அதற்கான சுதந்திரம் உண்டு.  அப்படி யாருமே வெல்லவில்லை என்றாலும் வந்திருக்கும் அரசர்களுள் அவளுக்கு யாரைப் பிடித்திருக்கிறதோ அவரைத் தேர்ந்தெடுப்பாள். “ என்று சொன்ன துருபதன் சஹாதேவனின் பேரத்தை அத்தோடு முடிக்க நினைத்தான். ஆனால் சஹாதேவனோ விடுவதாய் இல்லை.

“இந்தப் போட்டியில் துரோணாசாரியாரின் சீடர்களான குரு வம்சத்து  இளவல்களில் ஒருவன் வென்று விட்டால்?  அப்போது என்ன நடக்கும்?” என்று கேட்டான்.  மேலும் தொடர்ந்து, “குரு வம்சத்தினர் உனக்கு எதிரிகள் இல்லையா?  அதோடு கூட உன் பரம வைரியான துரோணாசாரியார் திரெளபதியைத் தூக்கிச் செல்வதற்காகவே அவர்களை இங்கே அனுப்பி இருப்பதாகவும் அனைவரும் பேசிக் கொள்கின்றனர்.” என்றான்.  இவ்வளவு நேரம் சமாளித்த துருபதனுக்கு இது மிகப் பெரிய அடியாக விழுந்தது. அவனால் இதைத் தாங்க முடியவில்லை.  எனினும் உறுதியான குரலில், “ என் மகள் துரியோதனனையோ, அல்லது துரோணரின் மகனையோ மணமகனாக ஏற்கவே மாட்டாள்.” எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தான்.  “இளவரசே, அதனால் தான் உங்கள் தந்தையின் உதவியை நான் நாடுகிறேன்.” என்றும் கூறினான்.

“என்ன உதவி? எவ்வகையில் என் தந்தை உனக்கு உதவ வேண்டும்?” என்று கேட்டான் சஹாதேவன்.

துருபதன் நீண்டதொரு பெருமூச்சு விட்டான்.  சற்று நேரம் அமைதியாக இருந்து விட்டுப் பின்னர், “மாட்சிமை பொருந்திய இளவரசே, நான் இப்போது ஒரு தர்ம சங்கடமான சூழ்நிலையில் இருக்கிறேன்.  என் மகளைத் திருமணம் செய்து கொள்ள வைத்திருக்கும் இந்தப் போட்டியை நான் மறுதலிக்கவில்லை. என்னால் அதைத் தேவையில்லை எனச் சொல்லவும் முடியாது.  ஆனால் இந்தப் போட்டியில் குரு வம்சத்தினரோ, துரோணரின் மகனோ வெல்லக் கூடாது.  அவர்கள் வெல்லாமல் இருக்க வேண்டும்.” என்ற துருபதன் தன் குரலைத் தழைத்துக் கொண்டு ரகசியம் பேசும் குரலில், “உங்கள் தந்தையார் மட்டும் இந்தப் போட்டியில் கலந்து கொண்டு வென்று விட்டாரானால் நான் மன மகிழ்வோடு என் மகளை உங்கள் தந்தைக்கு மணமுடிப்பேன்.” என்று முடித்தான்.

“துருபதா, மகதத்தின் மாபெரும் சக்கரவர்த்தி இந்தப்போட்டியில் கலந்து கொண்டு வெல்ல முடியாமல் இங்கிருக்கும் அனைத்து அரசர்கள் முன்னிலையிலும் அவமானம் அடைய வேண்டும் என்பது தான் உன் எண்ணமா? என்ன நினைக்கிறாய் எங்களைப் பற்றி?  இதோ  பார் துருபதா, நீ எங்களுக்கு ஆசை காட்டி மோசம் செய்துவிட்டாய்!   துளியும் சாத்தியமற்ற ஒன்றுக்கு இப்போது ஆசை காட்டுகிறாய்!  எங்களை இக்கட்டான நிலைக்குத் தள்ளுகிறாய்.  நாங்கள் என்ன நீ விளையாடும் சொக்கட்டான் காய்களா? பொம்மைகளா?  உன் பகடைக்காய்களாக இருக்க நாங்கள் விரும்பவில்லை. இதிலிருந்து எங்களைக் காத்துக் கொள்ள எங்களுக்குத் தெரியும் மன்னா! எப்படி என்பதையும் நாங்கள் அறிவோம்.”என்று சொல்லிவிட்டு அவனைக் கோபமாகப் பார்த்தான் சஹாதேவன்.


அவன் குரலில் தொனித்த மிரட்டல் தொனியால் ஒரு கணம் துருபதன் அசந்தே போனான்.  இனியும் தன் உணர்வுகளை மறைக்காமல்  இருக்க வேண்டும் என நினைத்துக் கோபம் கொந்தளிக்கும் கண்களோடு அவனைப் பார்த்தான். சஹாதேவன் மிரட்டியதன் உட்பொருளை அவன் நன்கு புரிந்து கொண்டான். எனவே அவனைப் பார்த்து, “என் மகள் ஒன்றும் ராக்ஷசி அல்ல.  அவளை அப்படி நடத்துபவர்களை நான் மன்னிக்கவே மாட்டேன்.  யாரும் அவளை அப்படி எல்லாம் நடத்த முடியாது.   நான் ஒரு ஆரிய அரசனுக்குரிய அரச தர்மத்தைத் தான் கடைப்பிடிக்கிறேன்.  அதை என்றும் செய்து வருவேன். போட்டியில் வெல்பவர்க்கே என் மகள் என்னும் வாக்குறுதியை நான் நிறைவேற்றியே தீருவேன்.  போட்டி நிச்சயம் நடக்கும்.” என்றான்.  இது தான் துருபதனின் முடிவு என்பதை சஹாதேவன் புரிந்து கொண்டான்.

சற்று நேரம் அங்கே மாபெரும் அமைதி நிலவியது.  பின்னர் சஹாதேவனும், துருபதனும் ஒருவரை ஒருவர் கோபமும், கொடூரமும் தொனிக்கப் பார்த்த வண்ணம் பிரிந்தனர்.



1 comment:

ஸ்ரீராம். said...

அக்னி நட்சத்திரத்தின் சூடு!