Friday, January 30, 2015

பானுமதியின் வருத்தம்! ஜாலந்திராவின் ஆறுதல்!

“உன் கணவர் அப்படியா சொன்னார்?  நீ கிருஷ்ண வாசுதேவனை ஏன் பார்க்கக் கூடாதாம்?  என்ன காரணம்?  சுஷர்மா சொல்கிறான்: கிருஷ்ண வாசுதேவன் நம் சகோதரி பானுமதியிடம் மிகவும் பாசமும், அன்பும் பாராட்டுகிறான்.  உண்மையான சகோதரியைப் போலவே அவளை நினைக்கிறான். என்றெல்லாம் என்னிடம் சொல்கிறானே! வாசுதேவனைச் சந்திக்க துரியோதனனிடம் நீ ஏன் அனுமதி வாங்க வேண்டும்? வாசுதேவனை அனைவருமே சென்று எளிதாக தரிசித்து வருகின்றனர். இதற்கு உன் கணவன் ஏன் அனுமதிக்க வேண்டும்? தௌம்யரின் ஆசிரமத்தில் கூட நான் பார்த்தேன்.  அனைத்து மக்களும், ஆண்கள், பெண்கள், குழந்தைகள், வயோதிகர்கள் உட்படக் கிருஷ்ண வாசுதேவனைச் சென்று தரிசித்த வண்ணம் இருந்தனர். “ ஜாலந்திரா கோபமாய்க் கேட்டாள்.

பானுமதி தழுதழுக்கும் குரலில் பேசினாள். “கிருஷ்ண வாசுதேவன் ஹஸ்தினாபுரம் வரப்போவதை நான் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தேன்.  அவனைச் சந்திக்கவேண்டும் என்று ஆவலுடன் துடித்துக் கொண்டிருந்தேன்.  ஜாலா, நான் ஏற்கெனவே உன்னிடம் கூறியுள்ளேனே!  எப்படி ஒரு இக்கட்டான நிலையில் இருந்து என்னைக் கிருஷ்ண வாசுதேவன் காப்பாற்றி உயிருடன் கௌரவமாக உலவ விட்டிருக்கிறான் என்பதை! இல்லை எனில் நான் ஓர் நடைப்பிணமாகவே வாழ்ந்திருப்பேன். அவனிடத்தில் வேறு எவராவது இருந்திருந்தால்!  ஜாலா! ஜாலா!  நினைக்கவே பயமாக இருக்கிறது!  அப்படி ஓர் பாசத்துடன் என்னைக் கவனித்துக் கொண்டு என்னைப் பாதுகாத்தான்! “ இதற்கு மேல் பேச முடியாமல் பானுமதிக்குக் குரல் உடைந்து விட்டது. விம்மி, விம்மி அழ ஆரம்பித்து விட்டாள். ஜாலந்திரா தன் சகோதரியை அன்புடன் அணைத்துக் கொண்டு அவள் கண்ணீரைத் துடைத்து ஆறுதல் சொன்னாள்.

“ஒரு வேளை……ஒரு வேளை……நான் அவனைச் சந்திக்கவே இல்லை எனில்!  இப்படி ஒரு சம்பவம் நிகழவே இல்லை எனில்…….. அப்போது நான் இதைப் பொருட்படுத்தியே இருக்க மாட்டேன்.  ஆனால் ஜாலா!  நான் இப்போது ஆர்யபுத்திரரின் நன்மைக்காவே வாசுதேவக் கிருஷ்ணனைச் சந்திக்க நினைக்கிறேன்.  உனக்குத் தெரிந்திருக்கும்.  கோவிந்தன் அதிசயங்களைச் சாதித்துக் காட்டுவான்.  நீ அறிந்திருப்பாய்!  பாண்டவர்கள் ஐவரையும் அவன் காப்பாற்றி உயிருடன் கொண்டு வந்ததை விடவா ஓர் அதிசயம் இனிமேல் நடக்கப் போகிறது?  ஜாலா!  அவனால் நிச்சயம் ஆர்யபுத்திரரைக் காக்க முடியும். ஆனால்……ஆனால் ஆர்யபுத்திரரோ!  வாசுதேவனை வெறுக்கிறார்.  அவனால் தான் காப்பாற்றப்பட வேண்டாம் எனப் பிடிவாதம் பிடிக்கிறார். “

திடீரென்று அவள் கண்கள் செருக மயக்கத்தில் ஆழ்ந்தாள். தலை சுற்றியது பானுமதிக்கு. தன் தங்கையின் மேல் சாய்ந்து கொண்டாள்.  அந்த அரை மயக்கத்திலேயே கண்களைத் திறந்து, தன் தங்கையிடம் சொன்னாள்.”ஜாலா! இப்போது இருக்கும் நிலவரப் படி ஆர்யபுத்திரருக்கு ஹஸ்தினாபுரத்து சிம்மாதனம் கிடைக்கப் போவதில்லை;  என் வயிற்றில் பிறக்கப் போகும் பிள்ளை அந்த சிம்மாதனத்துக்கு வாரிசாக ஆகப் போவதும் இல்லை. குரு வம்சத்து சாம்ராஜ்யத்துக்குச் சக்கரவர்த்தியாக அவன் ஆகப் போவது இல்லை.” பானுமதி மீண்டும் குரல் உடைய, மெல்லிய அவள் உடல் துயரத்தில் குலுங்க விம்மி விம்மி அழுதாள். பெருகி ஓடும் நதியின் வெள்ளப்பெருக்கிலே அகப்பட்டுக் கொண்ட மலர்க்கொடி ஒன்று புயல்காற்றில் அங்குமிங்கும் அலைபடுவதைப் போல் அவள் உடல்  துன்ப சாகரத்தில் தத்தளித்தது.

ஒரு சிறு பெண் வலி தாங்க முடியாமல் கத்தி அரற்றுவதைப் போல் அவள் கத்தினாள்.”கடவுளே, கடவுளே, என் மேல் கருணை காட்டுங்கள். இரக்கம் காட்டுங்கள்.  நான் உயிருடன் இருக்கவே விரும்பவில்லை.  என்னை மாய்த்துக் கொள்ளவே விரும்புகிறேன்.  ஆனால்……ஆனால்…….. என் வயிற்றில் வளரும் என் மகன்!  அவன் அப்பாவி! இந்த உலகையே இன்னும் பார்க்கவில்லை.  அவனை நான் எப்படிக் கொல்வேன்! பாவியாகிவிடுவேனே!” எனச் சத்தம் போட்டுக் கதறினாள்.

ஒரு நிமிடம் ஜாலந்திரா கொஞ்சம் யோசித்தாள்.  தயங்கினாள்.  ஆனால் அவள் அக்காவின் நிராதரவான நிலை அவளை யோசிக்க விடவில்லை.  அவள் மீது இரக்கம் கொண்டு அவள் அருகே குனிந்து அவள் காதுகளில் மெல்லக் கிசுகிசுத்தாள். “பானுமதி, கவலைப்படாதே!  நான் இருக்கிறேன் உனக்கு!  வாசுதேவனுக்கு என்ன செய்தியைச் சொல்லவேண்டுமோ, அதை என்னிடம் சொல்!  நான் எப்படியாவது அவனிடம் சேர்ப்பித்துவிடுகிறேன்.” என்றாள்.

“ஓ, இல்லை, இல்லை, ஜாலா!  இது மட்டும் ஆர்யபுத்திரருக்குத் தெரியவந்தால்!  என்னைக் கொன்றே போட்டுவிடுவார்.” பயத்துடன் கண்ணீர் ததும்பிக் கண்களிலிருந்து கன்னம் முழுதையும் நனைத்துக் கொண்டிருக்கக் காட்சி அளித்த பானுமதியின் முகத்தையே இரக்கம் ததும்பப் பார்த்தாள் ஜாலந்திரா. அத்தனை துயரத்திலும் துரியோதனன் என்ன செய்துவிடுவானோ என்னும் பயம் அவள் கண்களில் தெரிந்ததைக் கண்டதும் அவள் மனம் வருந்தியது.

“துரியோதனனுக்கு இந்தச் செய்தியே போய்ச்சேராவண்ணம் நான் பார்த்துக்கொள்கிறேன், பானு!  கவலைப்படாதே!  நீ மட்டும் மனது வை!  அது போதும். ஏதேனும் உபாயம் செய்து வாசுதேவனைச் சந்திக்கப் பார்க்கிறேன்.  நீ விரும்பினால், உன் கணவன் அறியாமல் நீயும் ரகசியமாக வாசுதேவனைச் சந்திக்க ஏற்பாடு செய்கிறேன்.”

“வேண்டாம், வேண்டாம்!”  வேகமாகவும் உறுதியாகவும் மறுத்தாள் பானுமதி!  “ஆர்யபுத்திரரின் விருப்பத்துக்கு மாறாக நான் நடக்க விரும்பவில்லை, ஜாலா!  வேண்டாம். ஆனால் அவர் எப்படியேனும் காப்பாற்றப்பட வேண்டும். அது தான் எனக்கு முக்கியம்!”

“சரி, பானு, உன் விருப்பம் அதுவானால் அப்படியே இருக்கட்டும்.  நான் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்கிறேன்.  நீ கவலைப்படாதே.  அழவும் அழாதே!  முதலில் உன் அழுகையை நிறுத்து. “

“ஜாலா, வாசுதேவனைச் சந்திக்கையில் அவன் தனியாக இருக்கிறானா என்று பார்த்துக் கொள். அவனிடம் என் சார்பாக இந்தச் செய்தியைச் சொல்வாய்:”வாசுதேவா, உன் சின்னத் தங்கை எந்நேரமும், எந்த நிமிடமும் உன் நினைவாகவே இருக்கிறாள்.  அவள் வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடத்திலும் அவளால் உன்னை மறக்க முடியாது. அவளே நேரில் வந்து உன்னைச் சந்தித்துத் தன் மரியாதையைத் தெரிவிக்கத் தான் விரும்பினாள்.  ஆனால்……ஆனால்…..அவள் பிரபு, அவள் கணவனின் அனுமதி கிடைக்கவில்லை.  அவள் வாசுதேவனைச் சந்திக்கக்கூடாது என்பது அவள் கணவன் கட்டளை.  அதை மீற அவள் விரும்பவில்லை. “ இதைச் சொல்லிவிட்டு வாசுதேவனிடம் ஆர்யபுத்திரரை மன்னிக்கும்படி கேட்டுக் கொள் ஜாலா!”  பேசும்போதே மீண்டும் குரல் உடைந்து அழுதாள் பானுமதி

Sunday, January 25, 2015

ஜாலந்திரா வந்துவிட்டாள்!

பானுமதியின் நெஞ்சை துக்கம் அமுக்கியது.  தன் நெஞ்சை அமுக்கிப் பிடித்துக் கொண்டாள்.  அடைபட்ட துக்கம் பொங்குமாகடலெனக் கண்கள் வழியாகப் பெருகியது. கூடவே அலை ஓசை போல் அவள் விம்மல்களும் தொடர்ந்தன. தாங்கொணாத்துயரில் தத்தளித்தாள். அவளுடைய தாதியான ரேகா தன் கையில் பிடித்திருந்த வெயிலுக்கான மறைப்புக் குடையை மற்றொரு கையில் மாற்றிக் கொண்டே தன் வலக்கையால் பானுமதியைத் தன் நெஞ்சோடு ஆரத் தழுவிக் கொண்டாள். தான் வளர்த்த குழந்தை துயரில் துடிப்பதைக் கண்டு மனம் பொறுக்காத அவள் கண்களும் கண்ணீரால் நிரம்பின.  எவ்வளவு அருமையாக வளர்ந்த பெண்!  இங்கே இவ்வளவு குரூரமாக அவள் கணவனாலேயே நடத்தப் படுகிறாளே!  மனம் நொந்து வாய் விட்டு அழுதாள் ரேகாவும்.

அப்போது அவளுடன் தங்கி இருந்து சிசுருஷை செய்வதற்காக வந்திருந்த ஜாலந்திராவுக்குக்  கலவரமான பேச்சுக்குரல் கேட்கவே ஓடோடியும் அங்கே வந்தாள்.  தன் சகோதரி அழுவதைக் கண்டு பொறுக்காமல் ஓடி வந்தவள் ரேகாவைத் தள்ளிவிட்டு விட்டுத் தன் கைகளால் பானுமதியைத் தழுவிக் கொண்டாள். அவளைத் தட்டிக் கொடுத்து சமாதானம் செய்தாள். எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்தவண்ணம் அங்கே நின்றிருந்த துரியோதனனைக் கடுமையாகப் பார்த்தாள். “என்ன இது யுவராஜா?  இப்படி நடந்து கொள்வது உங்களுக்குத் தகுமா?  அவள் நிலைமையைப் புரிந்து கொண்டீர்களா நீங்கள்? இம்மாதிரி நிலையில் அவளை இப்படி நடத்துவது சரியா? பானுமதியின் உடல்நிலை குறித்து உங்களுக்குச் சிறிதும் அக்கறையே இல்லை!” என்று கோபமாகக் கூறிய வண்ணம் பானுமதி பக்கம் திரும்பி, “இதோ பார், பானுமதி!  முதலில் அழுகையை நிறுத்து!” என்றாள்.

ஒரு கணம் துரியோதனன் அவளை மிகக் கடுமையாகப் பார்த்தான்.  பின்னர் அவளை அடித்தே விடுவான் போல் அவள் மேல் பாய இருந்தவன், திடீரென நின்றான்.  அவளையே பார்த்தான்.  இத்தனை கோபத்திலும் அவள் முகத்தின் அழகும், அதன் ஜொலிப்பும் அவனைக் கவர்ந்தது.  கோபத்தில் கூட இத்தனை அழகைக் கொட்டுகிறாளே இந்தப் பெண்!  ஆஹா, அவள் கறுத்த கண்மணிகள் வைரம் போல் அல்லவோ ஒளிவீசுகின்றன!  அவள் அழகில் மயங்கினான் துரியோதனன். ஆனால் ஜாலந்திரா எதையும் லட்சியம் செய்யவில்லை.  அவனை தைரியமாக நிமிர்ந்து பார்த்தாள்.  அலட்சியமாக, “இதோ பாருங்கள் இளவரசே! உங்கள் கரங்கள் என்னைத் தொடட்டும்!  கைகளை வெட்டி விடுகிறேன்.” என்றாள். துரியோதனனால் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை. அவமானம் தாங்காமல்  அவளைக் கோபம் பொங்கப் பார்த்த வண்ணம் அந்த அறையை விட்டு வெளியேறினான்.  பானுமதியின் உடலே நடுங்கிக் கொண்டிருந்தது.

ஜாலந்திரா தன் சகோதரியைச் சமாதானப் படுத்திய வண்ணம், “என்ன விஷயம் பானு? என்ன நடந்தது?  ஏன் அழுகிறாய்?” என அன்பாகக் கேட்டாள்.  அவள் தன் கைகளால் அவளைச் சமாதானம் செய்வதை நிறுத்தவில்லை. “இப்படி அழுதாயானால் உன் உடல்நிலை மோசமாகக் கெட்டுவிடும்.  உன் குழந்தைக்கும் இதனால் பாதிப்பு ஏற்படும்.  தைரியமாக இரு பானு!” என்றாள். ஆனால் பானுமதியோ அவளைப் பார்த்து, “ஓ, ஜாலா, ஜாலா, என்ன செய்துவிட்டாய்? ஆர்யபுத்திரரை மிரட்டியதன் மூலம் நீ அவரை அவமதித்து விட்டாய்!  பெருந்தவறு செய்துவிட்டாய்!” என்றாள்.  “இல்லை, பானு! இல்லை.  நான் சரியாகத் தான் சொல்லி இருக்கிறேன்.  நீ உன் கணவனை மிகவும் கெடுத்துவிட்டாய்!  நானாக இருந்தால் இப்படி எல்லாம் அவர் நடந்து கொள்ளும்படி விட மாட்டேன்.  என் கட்டுப்பாட்டில் வைத்திருப்பேன்.  நல்லமுறையில் நடந்து கொள்ளும்படி ஆக்கி இருப்பேன்.”

இத்தனை அமர்க்களத்திற்கும் விடாமல் தொடர்ந்து கிளி, “பானுமதி, எழுந்திரு!” எனக் கீச்சிட்டுக் கொண்டிருந்தது.  அவ்வளவு நேரமும் கூரை மேல் அமர்ந்த வண்ணம் எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருந்த மயிலோ தன் பெரிய இறக்கை படபடக்க அங்கிருந்து இறங்கித் தன் எஜமானியிடம் அழகு நடை நடந்து வந்தது.  பானுமதி தன் தங்கையைப் பார்த்தாள்.  இவள் தைரியம் நமக்கில்லையே என ஒரு கணம் நினைத்தாள்.  உடனே அவளைப் பார்த்து, “ஜாலா, ஜாலா, நான் ஒரு துரதிர்ஷ்டம் பிடித்த பெண்! நானும் வருடக் கணக்கில் முயன்று பார்த்துவிட்டேன்;  ஆர்யபுத்திரருக்கு எது எல்லாம் பிடிக்கும் எனத் தெரிந்து வைத்துக் கொண்டு அனைத்தையும் செய்து பார்த்துவிட்டேன்.  எனக்குத் தெரிந்த அனைத்தையும் செய்து பார்த்து விட்டேன்.  ஆனால், ஆனால், நான் தோற்றுப் போய்விட்டேன், ஜாலா!” மிகப் பரிதாபமான குரலில் கூறினாள் பானுமதி.

“ஹூம் ஆர்யபுத்திரர்!  உன் ஆர்யபுத்திரர் ஒரு மோசமான குரூரமான மனிதன்!  நீ இப்படி நிறை கர்ப்பிணியாக இருக்கும் நிலையில் உன்னை எவ்வளவு மோசமாக நடத்துகிறான்! என்ன மனிதன் அவன்!”

“உனக்குத் தெரியாது ஜாலா!  அவர் மிக நல்லவர்.  மிக மிக நல்லவர்.  ஆனால் திரௌபதியை வெல்ல முடியவில்லை என்று ஆனதில் இருந்து அவர் மனம் சுக்குச் சுக்காக உடைந்து விட்டது.  அதிலும் இங்கு ஹஸ்தினாபுரத்தில் உள்ள பெரியோர்கள் அனைவருமே அவருக்கு எதிராகவே இருக்கின்றனர்.  அவருடைய அடக்கப்பட்ட உணர்ச்சிகள் அனைத்தும் என்னைக் கண்டதும் சீறிப் பாய்கின்றன.  என்னிடம் வெளியிடுகிறார்.  வேறு எவரிடம் செல்ல முடியும் சொல்!” என்றாள் பானுமதி மிக இரக்கமாக.

“அது சரி!  நீ எப்போதும் எல்லாத் தவறும் உன்னுடையது என்பது போல் பேசி விடுகிறாய்.  செய்யாத தவறுகளுக்குப் பொறுப்பேற்கிறாய்! அதனால் தான் அந்த துரியோதனன் கண்களுக்கு நீ ஓர் அடிமை போல் தெரிகிறாய்.  சரி, போகட்டும், விடு!  இப்போது இத்தகையதொரு கோபத்துக்கும், ஆத்திரத்துக்கும் என்ன காரணம்?” என்று கேட்டாள் ஜாலந்திரா.

“ஒன்றுமில்லை.  பாண்டவர்கள் ஐவரும் ஹஸ்தினாபுரம் வருகின்றனர் அல்லவா? ஆர்யபுத்திரர் தன்னை ஹஸ்தினாபுரத்தை விட்டு வெளியேற்றிவிடுவார்களோ என அஞ்சுகிறார்.  ஆர்யபுத்திரருக்கும் அதிர்ஷ்டம் என்பதே இல்லை ஜாலா!  இதில்  அவர் தவறு ஏதும் இல்லை;  ஒரு பிறவிக்குருடருக்கு மகனாய்ப் பிறந்தது அவர் தவறா? எனக்கு அவர் மனோநிலை புரிகிறது ஜாலா!  நன்றாகப் புரிகிறது.  ஆனால் இதற்கு என்னால் என்ன செய்யமுடியும்?  நான் என்ன செய்யலாம் என்பது தான் புரியவில்லை.  எவ்விதம் நான் இதைச் சரி செய்ய முடியும்?”

“ஆஹா, இவை எல்லாம் பழங்கதை, பானுமதி!  அவற்றை விட்டுவிடு! இப்போது புதிதாக என்ன வந்திருக்கிறது?  இந்தக் கோபத்துக்கு என்ன காரணம்?”

“அவர் இந்தக் கஷ்டங்களில் இருந்து எப்படி வெளியேறுவது என என்னிடம் வழி கேட்டார்.  நான் நினைப்பதை அவரிடம் சொன்னேன்;  கோவிந்தனிடம் உதவி கேளுங்கள் என்றேன்.  அது தான் அவரை மிகவும் கோபப் படுத்திவிட்டது.  என்னை ஒரு தாசி போல் நினைத்து மிகக் கேவலமாகப் பேசிவிட்டார். “ பானுமதியின் குரல் உடைந்தது.”கோவிந்தன் இங்கே வரும்போது அவன் என்னைப் பார்க்க வருவதோ, நான் அவனைப் பார்ப்பதோ கூடாது என உறுதியாகச் சொல்லிவிட்டார்!”பானுமதி மீண்டும் உடைந்து போனாள்.

Tuesday, January 20, 2015

பானுமதிக்கு ஆபத்து?

தன் குரலைத் தழைத்துக் கொண்டு ரகசியம் பேசுவது போல் சொன்னாள் பானுமதி. “பிரபுவே, கோவிந்தன், கிருஷ்ண வாசுதேவனின் உதவியை நாடுங்கள்!”

“என்ன?” எரிச்சலுடன் கத்தினான் துரியோதனன். கோவிந்தனின் உதவியை நாடவேண்டுமா?  அந்த இடையன் முன்னால் நான் உதவி கேட்டுக் கை கட்டி நிற்கவேண்டுமா? என்ன தைரியம் உனக்கு? ஒருக்காலும் முடியாது.  அவன் தான் எனக்கு முதல் எதிரி.  ஆம், பீமனை விட அவன் தான் எனக்கு முதல் எதிரியாவான்! பீமனை விட மோசமானவன் அவன்!”

பானுமதி தயக்கத்துடன், “ பிரபுவே, அவன் ஒரு விஷயத்திற்கு உறுதி மொழி கொடுத்தான் எனில் கடைசிவரை எப்பாடுபட்டேனும் காப்பாற்றுவான்.” என்றாள்.

துரியோதனனின் பொறுமை எல்லை மீறிப் போய்விட்டது.  பல்லைக் கடித்தான். “எப்போதும் கோவிந்தன், கோவிந்தன்!  அவன் பெயரையே சொல்லிக் கொண்டிருக்கிறாய்! அவனிடம் இவ்வளவு பைத்தியமாக இருக்கிறாய்?  ஏன் நீ என்னை விட்டுவிட்டு அவனுடன் போய் வாழக் கூடாது?”

பானுமதியின் மனம் உடைந்தே போனது. இப்படி ஒரு மோசமான எண்ணம் துரியோதனன் வாயிலாகக் கேட்டதில் அவள் மிகவும் நொந்து போனாள்.  கண்ணீர் பெருகியது. விம்மி விம்மி அழ ஆரம்பித்தாள். அவளுடைய தாதி ரேகா அவளைச் சமாதானம் செய்யும் வகையில் அவள் தோள் மேல் கை வைத்துத் தட்டிக் கொடுத்தாள்.  “பிரபுவே, நீங்கள் கேட்டதால் நான் இந்த யோசனையைச் சொன்னேன்!” என்று தழுதழுத்த குரலில் சொல்லிவிட்டுப் பரிதாபமாக அழத் தொடங்கினாள். தன் மனைவி தேற்றுவதற்கு ஆளில்லாமல் நிறை கர்ப்பிணியாய் அழுவதைப் பார்த்த துரியோதனன் ஒரு நிமிடம் மனம் கலங்கினான்.  பானுமதியின் பால் இரக்கம் தோன்றியது.


 “இதோ பார் இளவரசி! இப்படி அழாதே!  நீ இருக்கும் நிலையில் உடல் நலம் மோசமாகக் கெட்டு விடும்.  ஆனால் உனக்கு எனக்கு நடப்பவை என்னவென்று தெரியவில்லை; புரியவும் இல்லை.  அந்தக் கிழவன் தாத்தாவாம் தாத்தா!  பீஷ்மனும், அந்தக் கிழவி மஹாராணி சத்யவதியும் என் முதன்மை எதிரிகள்.  இருவரும் என்னை அழிக்க நினைக்கின்றனர். தந்தைக்கு இங்கே எவ்வித அதிகாரமும் இல்லை.  அவர் குரல் எடுபடாது. கர்ணனும், அஸ்வத்தாமாவும் என்னை விட்டுச் செல்ல நினைக்கின்றனர்.  துஷ்சாசனனும், மற்ற சகோதரர்களும் காந்தாரம் சென்றுவிடலாம் என எண்ணுகின்றனர்.  நான் நிராதரவாக நிற்கிறேன். எனக்கு உதவ யாருமில்லை.  இந்த உலகமே எனக்கு எதிராக நிற்கிறது.”


“எனக்குத் தெரியும், நான் அறிவேன், பிரபுவே! ஆனால் நான் என்ன செய்ய முடியும்? நானும் ஒரு நிராதரவான பெண் தானே! என்னை மன்னித்துவிடுங்கள் பிரபுவே, என் வார்த்தைகள் உங்களைத் துன்புறுத்தி இருந்தால் என்னை மன்னியுங்கள். நீங்கள் என்ன சொல்கிறீர்களோ அதைச் செய்கிறேன். என்னை மன்னியுங்கள். “ குரல் தழுதழுக்கக் கூறினாள் பானுமதி.

“ஆனால் நாம் என்ன செய்ய முடியும்? யுதிஷ்டிரனை இங்கே ஹஸ்தினாபுரத்தின் மன்னனாக முடிசூட்டப் போகின்றனர்.  இதற்கு நான் இறந்தே போகலாம். யுதிஷ்டிரனுக்குக் கீழே யுவராஜாவாக நான் இருப்பதை விட இறப்பதே மேல்.” கொஞ்சம் கோபத்துடனேயே கூறிய துரியோதனன் சற்று நேரம் யோசித்தான்.  பின்னர் ஒரு முடிவுக்கு வந்தவன் போல், மீண்டும் பேச ஆரம்பித்தான்.”இதெல்லாம் யாரால் என நினைக்கிறாய்? அசட்டுப் பெண்ணே! இவற்றிற்கு மூல காரணமே உன் கோவிந்தன் தான்.  இவை அனைத்தும் அவன் திருவிளையாடல் தான்.  ராக்ஷசவர்த்தத்தில் எங்கோ ஒளிந்திருந்தவர்களைக் கிட்டத்தட்ட மரணத்தின் வாயிலுக்கே செல்ல இருந்தவர்களைத் திரும்பக் கொண்டு வந்தது உன் கோவிந்தன் தான்.”

“அவன் தான் அர்ஜுனன் திரௌபதியை மணக்கவேண்டும் எனத் திட்டமிட்டது. அது முடிந்ததும் பாண்டவர்கள் ஐவரையும் இங்கே ஊர்வலமாக வந்து விழா எடுக்கத் திட்டமிட்டதும் அவனே.  அவனால் தான் யுதிஷ்டிரன் வருகை இங்கே இவ்வளவு முக்கியமாக ஏதோ போரில் வெற்றி பெற்றவர்களை வரவேற்கும் விஜய யாத்திரையாகக் கொண்டாடப் படுகிறது.”

பதிலே சொல்லாமல் அவனைப் பார்த்தவண்ணம் அமர்ந்திருந்தாள் பானுமதி.  அவள் கணவன் அவளை கோவிந்தனுடன் சென்று வாழச் சொன்னதை நினைத்து நினைத்து மறுகிக் கொண்டிருந்தாள்.  இவ்வளவு கடுமையாக அவள் கணவன் அவளிடம் பேசுவான் என அவள் நினைக்கவில்லை.  இப்போதும் நாம் சாதாரணமாக ஏதேனும் சொல்லிவிட்டால் அது தப்பாகிவிடுமோ என்னும் பயத்தில் எதுவுமே பேசாமல் இருந்தாள்.  தன் பேச்சு கணவனை மீண்டும் கோபப் படுத்திவிடுமோ என அஞ்சினாள்.  அவனைப் பார்த்து இனிமையாகப் புன்னகைக்க நினைத்தாள்.  அதுவும் அவளால் முடியவில்லை.

துஷ்சாசனன் தனக்குக் கொடுத்த எச்சரிக்கை துரியோதனன் நினைவில் வந்தது.  அவன் அருமை மனைவி அவன் குருவான துரோணரால் பெற்ற பெண்ணை விட அருமையாகப் பார்க்கப் படுவது அவன் நினைவில் வந்தது. மேலும் கிருஷ்ண வாசுதேவனோ உடன் பிறந்த தங்கையாகவே நினைக்கிறான். இருவரும் கொடுக்கும் தைரியத்தில்  அவன் மனைவி அவன் கூப்பிடாமலேயே அவன் விஷயங்களில் மீண்டும் தலையிடுவாளோ என அஞ்சினான் துரியோதனன்.  அதன் மூலம் மீண்டும் கிருஷ்ண வாசுதேவனின் சூழ்ச்சிக்கு இரையாகிவிடுவோமோ என எண்ணினான்.

“இதோ பார் இளவரசி, நான் இங்கே வந்தது என்னவெனில் நீ மீண்டும் என் விஷயத்தில் தலையிட்டுக் குழப்பிவிடாதே! இதைக் கேட்டுக் கொள்ளத் தான் நான் இங்கே வந்தேன்!”

“பிரபுவே, நான் உங்கள் விஷயங்களில் தலையிட்டுக் குழப்புகிறேனா?  இது என்ன புதிய செய்தி? ஏன் என்னை நீங்கள் நம்பவே மாட்டேன் என்கிறீர்கள்?”பரிதாபமாகக் கேட்டாள் பானுமதி!

“நீ மிகவும் எளிமையாகவும் அதே சமயம் வெளிப்படையாகவும் பேசுகிறாய். உன்னால் எதையும் மறைக்க முடியாது.   ஆகவே நீ வாசுதேவனைச் சந்திக்கவே கூடாது.  அவனுக்கு எந்தச் செய்தியையும் அனுப்பாதே.  அவனிடமிருந்து உனக்கும் எந்தச் செய்தியும் வரக் கூடாது. புரிகிறதா?” பற்களைக் கடித்த வண்ணம் பேசினான் துரியோதனன்.  “புரிகிறது ஐயா, புரிகிறது!” என்று மிகவும் ஈனமான குரலில் கூறினாள் பானுமதி.  அவள் சொன்னது அவளுக்கே கேட்கவில்லை.  பற்களைக் கடித்துக் கொண்டு தன் உதடுகளை இறுக்க மூடிக்கொண்டு தனக்கு வரவிருந்த பெரும் விம்மலை அடக்க முயற்சி செய்தாள்.  அவள் கணவனின் கடுமையான நடத்தையினாலும், கடுமையான சொற்களினாலும் அவள் மனம் புழுங்கித் தவித்தது.

“நீ மட்டும் நான் சொன்னதற்கு மாறாகச் செய்தாயானால், பானுமதி, நான் உன்னைக் கொன்றே போட்டுவிடுவேன்.  இது சத்தியம்!” என்றான் துரியோதனன்.  

Sunday, January 18, 2015

பானுமதி வழி காட்ட நினைக்கிறாள்!

துரியோதனன் முகத்தைக் கோணிக் கொண்டான். அவன் உதடுகள் முறுக்கிக் கொண்டன. திரௌபதியின் சுயம்வரத்தில் போட்டியில் அவன் தோற்ற அந்த நிமிடத்தை அவனால் இன்று வரை மறக்க முடியவில்லை. இன்னமும் அந்த நினைவுகள் அவன் மனதில் பேயாட்டம்போட்டுக் கொண்டிருக்கின்றன. அந்த நினைவுகள்  இரவும், பகலும் அவனைத் துரத்துகின்றன. அவனால் அதை எப்பாடு பட்டும் அடக்க முடியவில்லை.  ஆனால் அவன் இந்த மாபெரும் மன வெடிப்பில் இருந்து தப்புவதற்கு ஒரே வழிதான். அந்த ஒரே வழியில் தான் அவனுக்குக் கொஞ்சமானும் நிம்மதி கிடைக்கும். அது தான் பானுமதியை வாயில் வந்தபடி பேசுவதும், அவளைத் துன்புறுத்தி மகிழ்வதும்.  இப்போதும் துரியோதனன் அதையே செய்தான்.  அவள் மகிழ்ச்சியைப் பார்த்து பொறாமைத் தீயில் எரிந்த துரியோதனன் அவள் துன்பத்தில் மகிழ நினைத்தான். “ இழிவான, கேடு கெட்ட பெண்ணே! என்ன நினைக்கிறாய் உன் மனதில்? உனக்கும் நான் கேவலமாகப் போய் விட்டேனா? போட்டியில் ஜெயிக்கவில்லை எனில் நான் மட்டமாகப் போய் விட்டேனா?”

பானுமதியின் கைகள் மன்னிப்பை வேண்டிக் குவிந்தன. ஆனால் அவள் மருதாணி அலங்காரம் கலைந்து விடப் போகிறதே என்னும் எண்ணத்தில் அவள் தாதி அவள் கைகளைப் பிரித்தாள். அப்படி அவள் செய்யவில்லை எனில் அந்தப் பசை அவள் உடைகளில் விழுந்து உடைகளைப் பாழாக்கி இருக்கும். பானுமதி முறையிடும் தோரணையில் கணவனைப் பார்த்தாள்.


 “பிரபுவே, என்னிடம் கோபம் கொள்ளாதீர்கள்! நீங்கள் என்னை இப்போது பயமுறுத்தியதில் நான் எதுவும் நினைக்கவில்லை.  ஆனால் நீங்கள் உங்கள் பட்டத்து இளவரசனை அன்றோ பயமுறுத்துகிறீர்கள்?” என்று தன் நிறை வயிற்றைத் தடவிய வண்ணம் சொன்னாள் பானுமதி.  துரியோதனன் மனம் விரக்தியில் ஆழ்ந்தது.  அந்நிலையிலிருந்து மீளாமலேயே அவன் தன் நெற்றியில் கைகளை வைத்துக் கொண்டான். அவனுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை.  அவன் மனைவியின் சந்தோஷமான மனோநிலையை அவனால் கெடுக்க இயலவில்லை.  அவள் மாற மாட்டாள் போல் தெரிகிறது. ஆனால் அதே சமயம் அவள் வயிற்றில் வளரும் தன் குழந்தையை அவள் பட்டத்து இளவரசன் என்று சொல்வதை நினைத்து அவனால் புன்னகை புரியாமலும் இருக்க முடியவில்லை.  தான் பட்டத்து இளவரசனைப் பயமுறுத்துவதாக மனைவி சொன்னதைக் கேட்டுப் புன்னகைத்துக் கொண்டே,”இப்போது உன்னை எந்த விஷயமும் தொந்திரவு செய்ய முடியாது போல் தெரிகிறது.” என்றான்.

“உங்களைப் போன்ற கணவனைப்  பெற்ற எனக்கு என்ன கவலை இருக்க முடியும், ஐயா?” முழு நம்பிக்கையுடன் கூறினாள் பானுமதி.

“துருபதனின் மகளை நாளைக்கு இங்கே வரவேற்க இருப்பதில் உனக்குக் கேவலமாக இல்லையா? அவள் எனக்கு ராணியாக இருக்க வேண்டியவள்.  ஆனால் இப்போதோ?  பாண்டவர்கள் ஐவரையும் மணந்ததில் இந்த சாம்ராஜ்யத்தையே ஆளும் தகுதி படைத்து விட்டாள்.”

“எனக்கு என்ன கேவலம் ஐயா?  இது கேவலம் மனிதர்களால் நடந்த ஒன்றல்ல.  கிரஹங்கள் ஒன்று கூடி ஏற்படுத்திய விளைவு.  இதற்கு நாம் என்ன செய்ய முடியும்? அதோடு அவள் குரு வம்சத்தின் மூத்த இளவரசனின் மனைவியாகி விட்டாள்.  ஆகையால் அவளுக்கு உரிய மரியாதையைக் கொடுக்கத் தான் வேண்டும்.”

“கடவுளே, கடவுளே, எவ்வளவு முட்டாளாக இருக்கிறாய் நீ? எனக்கு இப்படி ஒரு முட்டாள் மனைவியா?  உன்னால் எதையுமே புரிந்து கொள்ள முடியாது.  முயற்சியும் செய்ய மாட்டாய்! நாளை யுதிஷ்டிரன் வந்ததும் அவனுக்குப் பட்டம் சூட்டப் போகின்றனர்.  இந்த சாம்ராஜ்யத்தையே அவன் ஆளப் போகிறான்.  ஹஸ்தினாபுரம் அவனுடையதாகி விடும். நான் ஸ்வர்ணப்ரஸ்தத்துக்கோ அல்லது பானிப்ரஸ்தத்துக்கோ சென்று யுதிஷ்டிரனுக்குக் கீழ் ஆட்சி புரிய அனுப்பப்படுவேன். பாண்டவர்கள் ஐவருக்குக் கீழே அவர்களுக்குக் கட்டுப்பட்டு நான் இருந்தாக வேண்டி இருக்கும். அதிலும் அந்த பீமன், மாபெரும் முட்டாள், அறிவில்லாதவன் ஒவ்வொரு நாளும் என்னை எதிலாவது மாட்டிவிட்டுச் சிரிப்பவன், அவனுக்குக் கீழே நான் இருக்க வேண்டுமா? இப்போதாவது உனக்கு இது என்னவென்று புரிகிறதா? “

“பிரபுவே, இதற்காகவா  மனம் வருந்துகிறீர்கள்? இதற்கெல்லாம் வருந்தலாமா? “தன் கைகளை உயரத் தூக்கிக் கொண்டு ஆட்டியவண்ணம் பேசினாள் பானுமதி. இதன் மூலம் அவனுடைய வருத்தத்தைத் தான் போக்குவதாக நினைத்தாள் பானுமதி.  “என்ன பெரிய விஷயம்!  நாம் அனைவரும் பாண்டவர்கள் ஐவரோடு நட்புப் பாராட்டினால் போதுமே! எந்தப் பிரச்னையும் வராது!”  தீர்மானமாக முடித்தாள் பானுமதி.

“ஒருக்காலும் இல்லை, இல்லை, இல்லவே இல்லை!” அடி வயிற்றிலிருந்து ஆங்காரமாகக் கத்தினான் துரியோதனன்.  தன் கைகளை ஒன்றோடு ஒன்று பிணைத்துக் கொண்டான்.  கை முட்டியை இறுக மூடி மூடித் திறந்தான்.  தவித்தான். “இப்போதும் இல்லை; எப்போதும் இல்லை.  பெண்ணே, இந்த ஜன்மத்திலும் இல்லை.  இனி வரப் போகும் ஏழேழு ஜன்மத்திலும் இல்லை. பாண்டவர்களுடன் நட்பா?  ஹூம், அவர்கள் என்னுடைய சாம்ராஜ்யத்தை என்னிடமிருந்து திருடிக் கொண்டவர்கள்!  அவர்களுடனா நட்பு? ஹா, அது ஒருக்காலும் நடவாத ஒன்று!” பற்களைக் கடித்தான் துரியோதனன்.

“நம் விதி என்னவோ அப்படி நடக்கட்டும்.  இதற்காக நாம் சண்டை போடவேண்டாம் ஐயா!” பேசும்போது தன் கைகளிலும், கால்களிலும் இருந்த மருதாணிப் பசை அழிந்து விடாமல் இருக்கப் பெரும்பாடு பட்டாள் பானுமதி.  “ஐயா, ஒரு நாள் நீங்கள் இந்த சாம்ராஜ்யத்துக்கு மன்னன் ஆவீர்கள்.  கடவுள் அருளால் இது நடக்கும்.” இதை முழு மனதுடன், துரியோதனன் புரிந்து கொள்ளும்படியான பரிதாபமான குரலில் கூறினாள்.  அவள் மனப்பூர்வமாகச் சொல்வதைப் புரிந்து கொண்ட துரியோதனன் கொஞ்சம் அமைதி அடைந்தான்.

“அப்படிச் செய்வார்கள் என நானும் நம்புகிறேன்.  ஆனால் இப்போது என்ன செய்வது என்று எனக்குப் புரியவில்லை.  என் தலைவிதி எப்படி ஆகும் என்றே புரியவில்லை. எனக்கு எந்த வழியும் புலப்படவில்லை.”

“நான் உங்களுக்கு ஒரு வழியைக் காட்டுகிறேன்.” பானுமதி புன்னகையுடன் கூறினாள்.

“என்ன வழி அது?  அந்தக் கிழவன் பீஷ்மன் யுதிஷ்டிரனை மன்னனாக்கும் வழிகளை எல்லாம் செய்து கொண்டிருக்கிறான்.  எல்லா ஏற்பாடுகளும் மும்முரமாக நடக்கின்றன.  கிழவனை எவராலும் அசைக்க முடியாது.  இமயம் போல் ஸ்திரமாக இருப்பான்.”

“ஆனால் நீங்கள் நான் சொல்வதைக் கேட்பீர்களா, பிரபுவே?” உண்மையான பயத்துடன் கேட்டாள் பானுமதி.  “என்ன சொல்லப் போகிறாய் நீ? முட்டாள் தனமாக எதையேனும் சொல்வாய்!  நான் நன்கறிவேன்.” என்று சொல்லிக் கொண்டே ஒரு பெருமூச்சு விட்டான் துரியோதனன்.

Thursday, January 15, 2015

பானுமதியின் மகிழ்வும், துரியோதனன் கசப்பும்!

இப்போதும் அரைக்கண்களை மூடியவண்ணம் தான் கண்ணனைச் சந்திக்கப் போகும் தருணங்களையும், அவனிடமிருந்து தனக்குக் கிடைக்கப் போகும் பரிசுக்காகவும் கனவு கண்டாள்.  தன்னை ஒரு இளைய சகோதரியாகக் கருதும் கண்ணன் நிச்சயமாய் அவளுக்கு ஒரு இனிமையான பரிசைக் கொடுப்பான். கண்ணனைச் சந்தித்து அவனுடன் பேசப் போகும் அந்த நிமிடங்களுக்காகக் காத்திருந்தாள் பானுமதி.   அப்போது சேடிப் பெண் ஓடோடி வநது சொன்ன  செய்தியால் அவளுடைய இனிமையான பகல் கனவு  கலைந்தது.  ஓடி வந்த சேடிப் பெண், “இளவரசி, பிரபு வந்து கொண்டிருக்கிறார்!” என அறிவித்தாள். அங்கிருந்த சேடிப் பெண்கள் அனைவரிடத்தும் ஓர் படபடப்பு ஏற்பட்டது.  அனைவரும் தங்கள் உடைகளைத் திருத்திக் கொண்டு தாங்கள் செய்து கொண்டிருந்த வேலையைப் பாதியில் அப்படியே விட்டு விட்டு யுவராஜா துரியோதனன் உள்ளே நுழைந்ததுமே கிளம்ப ஆயத்தமானார்கள்.

துரியோதனன் உள்ளே நுழைந்ததும், தங்கள் முகத்திரையை விட்டுக் கொண்டு முகத்தை  மறைத்த வண்ணம் அனைத்துப் பெண்களும் வாய் பேசாமல் அறையை விட்டு வெளியேறினார்கள்.  பானுமதியின் தாதியான ரேகா மட்டும் அவளுக்காக வெயிலுக்கான மறைப்பைப் பிடித்த வண்ணம் அங்கே இருந்தாள்.  அங்கே அவ்வளவு நேரம் சுதந்திரமாக இருந்த மயில் கூட கிரீச்செனக் கத்திய வண்ணம் உயரே பறந்தது.  கிளியோ தன் சிறகுகளைப் படபடவென அடித்த வண்ணம், “பானுமதி, எழுந்திரு” எனக் கிரீச்சிட்ட குரலில் அலற ஆரம்பித்தது. ஆனால் பானுமதியால் அப்போது எழுந்திருக்க இயலாது.  அவள் கைகளும், கால்களும் மருதாணியால் அலங்கரிக்கப்பட்டிருந்தது இன்னமும் காயவில்லை. அவள் கொஞ்சம் அசைந்தாலும் அது கலைந்துவிடும்.  ஈரமான அவள் அளகாபாரமோ சட்டென எடுத்துக் கொண்டையோ, பின்னலோ போடும் நிலையில் இல்லை.  இன்னமும் ஈரம் காயாமல் இருந்தது.  இருந்தாலும் தன் தாதியின் உதவியுடன் பானுமதி சற்றே சாய்ந்தாற்போல் அமர்ந்தாள்.  அந்நிலை அவளுக்கு அசௌகரியமாகவே இருந்தது.

ஏற்கெனவே மிகுந்த வெறுப்பில் இருந்தான் துரியோதனன்.  அவன் உள்ளே நுழைந்ததுமே பானுமதியின் மலர்ந்த முகத்தையும், அவள் சந்தோஷமான மனநிலையில் இருப்பதும்   புலப்பட்டது.  அவனால் அதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை.  தன்னைச் சுற்றிலும் சேடிப் பெண்கள் புடைசூழப் பேசிக் கொண்டிருந்த பானுமதியைப் பார்த்ததுமே அவனுக்கு எரிச்சல் மேலோங்கியது. தன்னுடைய வெறுப்பையும், கோபத்தையும் எவரிடம் காட்டுவது எனத் தவித்துக் கொண்டிருந்தான் துரியோதனன்.  அவன் மனைவி தான் அதைத் தாங்கிக் கொள்ளச் சரியான நபர்.  அவன் என்ன சொன்னாலும் திரும்பப் பேசாமல் மௌனமாய்த் தாங்கிக் கொள்வாள். கோபத்துடன் பானுமதியைப் பார்த்தான்.

“இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறாய் காசி தேசத்து இளவரசியே!  மூவுலகங்களும் என் மேல் இடிந்து விழக் காத்திருப்பதைக் கூட அறியாமல் இங்கே உல்லாசமாக இருக்கிறாயாக்கும்? “எரிச்சலோடு கூவினான் துரியோதனன்.

பானுமதி எதையுமே கண்டுகொள்ளாமல், தன் மருதாணிக் கைகளைத் தூக்கி அவனிடம் காட்டிய வண்ணம், அவனைப் பார்த்துப் புன்னகைத்தாள். “என்ன ஆயிற்று பிரபுவே?  மூவுலகங்களும் ஏன் உங்கள் மேல் இடிந்து விழக் காத்திருக்கின்றன? என்ன நடந்தது?”

அவள் வெகுளியாகக் கேட்ட இந்தக் கேள்வியால் மேலும் எரிச்சலே அடைந்தான் துரியோதனன்.  “உன்னைப் போன்ற கல்மனசுக்காரியை நான் பார்த்ததே இல்லை.  நான் இங்கே ஒன்றுக்கும் உதவாத நிலையில் மிக இழிவான நிலையில் இருந்து வருகிறேன்.  ஆனால் நீயோ! உன்னை அழகு படுத்திக் கொண்டு, சிங்காரங்கள் செய்து கொண்டு என் ஜன்ம வைரியை வரவேற்கக் காத்திருக்கிறாய்!”

பானுமதியின் முகம் பயத்தால் வெளுத்தது.  கொஞ்சம முயற்சி செய்து புன்னகைத்தாள்.  “பிரபுவே, நான் உங்கள் மனைவி!  உங்கள் மனைவி அழகாக இருக்க வேண்டாமா? ஆகவே நான் அழகாக இருக்க முயற்சி செய்து வருகிறேன்.  உங்களுக்கு குரூரமான மனைவியைப் பிடிக்குமா பிரபுவே?  பிடிக்காதல்லவா?  உங்களுக்காகவன்றோ நான் அலங்கரித்துக் கொள்கிறேன்.  நான் சந்தோஷமாகத் தான் இருக்கிறேன்.  ஏனெனில் என் வயிற்றில் வளரும் உங்கள் மகன், உங்களைப் போலவே இருப்பான்.  ஒரு அழகான, கம்பீரமான இளைஞனாக வருவான்!”

“அழகான, கம்பீரமான இளைஞன்? சரிதான்! “ துரியோதனன் குரலில் கசப்பு மிகுந்தது.  “ இந்த அரண்மனையில் நடப்பது என்னவென்று நீ அறிவாயா?  இங்குள்ள ஒவ்வொருவரும் நமக்கு எதிராகச் சதி செய்வதை அறிவாயா?  ஹூம், எனக்கு மகன் பிறந்தால் கூட அவன் இந்த ஹஸ்தினாபுரத்தின் சிங்காதனத்தை அடைய முடியாது!  இதோ பார், இளவரசி!  நீ சில சமயம் மிகவும் முட்டாளாக இருக்கிறாய்.  அதனாலேயே உன்னை நான் மிகவும் கோபிக்கும்படி நேரிடுகிறது. நீ உன் வயிற்றில் வளரும் உன் மகனைத் தவிர மற்ற எவரைக் குறித்தும் கவலைப்படுவதும் இல்லை.”

“ஓ,ஓ, என்னிடம் கோபம் கொள்ளாதீர்கள், பிரபுவே!” தாழ்மையாகச் சொன்னாள் பானுமதி.  இதற்கு முன்னால் அவளுக்கு ஏற்பட்டிருக்கும் அனுபவங்களில் இருந்து துரியோதனன் கோபமாக இருக்கையில் அவனுக்கு அடங்கிப் போவதே உத்தமம் என்பதை நன்கு புரிந்து கொண்டிருக்கிறாள் அவள்.

“நான் ஒரு முக்கியமான விஷயத்தை உன்னிடம் சொல்வதற்காக வந்திருக்கிறேன், பானுமதி! நான் இன்று தந்தையைச் சந்திக்கச் சென்றேன். நான் ஹஸ்தினாபுரத்தை விட்டு வெளியேறும் நிலைமை ஏற்படாவண்ணம் பார்த்துக்கொள்வதாக அவர் எனக்கு சத்தியம் செய்து கொடுத்திருக்கிறார்.  ஆனால் அந்தக் கிழவன், பீஷ்மன் தந்தை சொல்வதைக் கேட்பானா என்பது சந்தேகமே!”

அவன் மனதை ஈர்க்கும் வண்ணம் பேசத் தொடங்கினாள் பானுமதி. “பிரபுவே, அனைவருமே மூத்தவர் யுதிஷ்டிரரைக் குறித்துப் பெருமையாகப் பேசுகின்றனர்.  மிகவும் நேர்மையானவரும், நீதிமானுமாவாராம்.  ஆகவே அவர் உங்களை ஹஸ்தினாபுரத்தை விட்டு வெளியேற்ற மாட்டார்.  இது நிச்சயம்.” என்றாள்.

“ஆம், ஆம், உனக்கு என்னை விட என் எதிரிகளைக் குறித்துத் தான் நன்கு தெரியும்.  இல்லையா! என் சிநேகிதர்களைக் குறித்தும் அறிய மாட்டாய்!” துரியோதனனுக்கு பானுமதியின் அப்பாவித் தனத்தைக் குறித்து எரிச்சல் மேலிட்டது.

“பிரபுவே, திரௌபதியை நீங்கள் வெல்ல முடியவில்லை எனில் அது கெட்ட கிரஹங்களின் சேர்க்கையால் நடந்து விட்டது.  இல்லை எனில் நீங்கள் போட்டியில் வென்றிருப்பீர்கள்.  எனக்குத் தெரியும்!” என்றாள் பானுமதி.

Monday, January 12, 2015

பானுமதியின் நிலை!

இப்போது நாம் துரியோதனன் மனைவி பானுமதியைக் கொஞ்சம் போய்ப் பார்க்க வேண்டும்.  அவள் மிகவும் துயரத்தில் இருக்கிறாள். நிறைமாத கர்ப்பிணி வேறு.  உண்மையில் அவள் மகிழ்ச்சியாக இருக்கவே காரணங்கள் இருக்கின்றன.  பின் ஏன் துயரம்?  என்னவென்று பார்ப்போமே!

தன் மாளிகையின் மேன்மாடத்தில் உள்ள ஓர் அறையில் அவள் கொஞ்சம் ஓய்வாகச் சாய்ந்து படுத்திருக்கிறாள்.  உடலைத் தளரவிட்டு இடுப்பில் ஒரு சிறிய பாவாடையை மட்டும் அணிந்த வண்ணம் ஒரு போர்வையால் உடலைப் போர்த்தி இருக்கிறாள்.  இந்த நாள் அவள் தன் அழகிய தலைமயிரைச் சுத்தம் செய்து கொண்டு, தன் கைகள், கால்களில் மருதாணியால் அலங்கரித்துக் கொண்டு அவற்றின் செம்மையால் கைகளும், கால்களும் பார்ப்பவர்களுக்குப் பூக்களைப் போன்ற தோற்றம் வருமாறு அலங்கரித்துக் கொள்ளும் நாள்.   கட்டுக்கடங்காத அவள் தலைமயிர் தலையணையில் பரவிக் கிடந்தது.  சேடிப் பெண் ஒருத்தி அவள் தலையைச் சுத்தம் செய்துவிட்டு சாம்பிராணிப் புகை மூட்டிக் கொண்டு உலர வைத்துக் கொண்டிருந்தாள்.

பானுமதியை அப்போது பார்க்கையில் மயில் ஒன்று தோகையை விரித்த வண்ணம் தரையில் அமர்ந்திருந்தாற்போல் இருந்தது.  இன்னொரு சேடி அவள் மேல் வெயில் படாமல் திரையிட்டுப் பாதுகாத்தாள்.  பானுமதியைக் குழந்தையில் இருந்து எடுத்து வளர்த்து வந்த அவள் தாதி ரேகா என்பவள் பானுமதியின் படுக்கையின் அருகிலிருந்த ஆசனத்தில் அமர்ந்து கொண்டு மனதில் ஊறிய தாயன்பை மறைக்காமல் அன்பு ததும்ப அவளைப் பார்த்துக் கொண்டிருந்தாள். எங்கிருந்தோ ஓர் மயில் பறந்து வந்து அங்கே அமர்ந்தது.  பானுமதி அதை வளர்க்கிறாள் போலும்!  அங்கிருந்த தங்கக் கூண்டில் சிறைப்படுத்தப்பட்டிருந்த கிளி ஒன்று தன் பவழ வாயைத் திறந்து, “பானுமதி! எழுந்திரு! பானுமதி! எழுந்திரு!” என்று விடாமல் தன் கிள்ளை மொழியில் பிதற்றிக் கொண்டிருந்தது.

செழுமையான முகம் கொண்ட பானுமதி உருவத்தில் மிகவும் சிறியதொரு பெண்மணி.  அஞ்சனம் அப்பிய அவள் கருமையான கண்கள்  அவள் எவ்வளவு வெகுளி என்பதைப் பறை சாற்றிக் கொண்டிருந்தன.  பானுமதிக்கு அவள் கணவன் காம்பில்யத்தில் தோற்றுப் போய் நாடு திரும்பியதில் எவ்விதமான ஏமாற்றமும் இல்லை.  உண்மையில் அவளால் எப்போதும் துக்கத்தில் மூழ்கி இருக்க இயலாது.  சில நொடிகளில் அவள் மனம் மாறி மகிழ்ச்சி நிலைக்கு வந்துவிடுவாள்.  அவள் மகிழ்ச்சியடையப் பல காரணங்களும் இருந்தன.  காம்பில்யத்தில் அவள் கணவன் தோற்றுப் போனதும் திரௌபதியை அடைய முடியாததும் கடவுளால் அவளுக்கு அளிக்கப்பட்ட மிகப் பெரிய வரமாக நினைத்தாள் பானுமதி.  இதற்காக அவள் கடவுளருக்கு மட்டும் நன்றியைத் தெரிவிக்கவில்லை. அவளைத் தன் தங்கையாக ஸ்வீகரித்துக் கொண்ட கிருஷ்ண வாசுதேவனுக்கும் சேர்த்தே தன் நன்றியைத் தெரிவித்துக் கொள்ள விரும்பினாள்.


கிருஷ்ண வாசுதேவன் தான் அளித்த வாக்குறுதியிலிருந்து சற்றும் பிறழவில்லை.  திரௌபதியை துரியோதனன் வெல்ல முடியாதபடி பார்த்துக் கொண்டான்.  நல்ல வேளையாக இன்னொரு பெண்ணுடன், என்னதான் அரசகுமாரியாக இருந்தாலும், தன் கணவனைப் பங்கிட்டுக் கொள்வதில் இருந்து அவள் தப்பித்தாள்.  திரௌபதி வயதிலும், பதவியிலும் அவளைவிடக் குறைந்தவளாகவே இருந்தாலும், அவள் தந்தையின் செல்வாக்கால் விரைவில் அவளை விட முதன்மையான ஸ்தானத்துக்கு வந்திருப்பாள். ஆகவே அந்த இக்கட்டிலிருந்து பானுமதி தப்பியதில் அவளுக்கு மகிழ்ச்சியே!

பாண்டவ சகோதரர்கள் ஐவரையும் திரௌபதி மணக்க நேர்ந்ததில் பானுமதிக்கு எவ்வித ஆக்ஷேபணையும் இல்லை.  அவள் அதைக் குறித்துக் கவலைப்படவே இல்லை.  யுதிஷ்டிரன் குரு வம்சத்தில் மூத்தவனாக இருந்தும், அவனை திரௌபதி மணந்திருந்ததும், அடுத்த பட்டம் யுதிஷ்டிரனுக்குச்ச் சூட்டப்பட ஏற்பாடுகள் நடப்பதும், அதன் மூலம் திரௌபதி பட்டமகிஷியாக ஆவாள் என்பதும் அவளுக்குப் புரிந்தே இருந்தது.  பானுமதி இதை எல்லாம் குறித்துக் கவலைப்படவே இல்லை.  அரச குடும்பத்தில் இவை அனைத்தும் சகஜமாக நடைபெறும் ஒன்று.  இப்போது பானுமதிக்கு ஒரே ஒரு கவலை தான்.  ஒரே ஒரு விஷயத்தில் தான் ஆர்வம். அதுதான் அவள் கணவன் துரியோதனனின் மகிழ்ச்சி.  அவன் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றே பானுமதி விரும்புகிறாள்.


ஆகவே அவள் இப்போது எதிர்பார்ப்பதெல்லாம் ஒன்றே ஒன்று தான்.  விரைவில் அவளுக்கு அவள் கணவன் விரும்பிய வண்ணம் மகன் பிறக்க வேண்டும்.  அவன் தான் குருவம்சத்து அடுத்த வாரிசாக இருப்பான்.  ஏனெனில் பாண்டவர்களுக்கு இன்னமும் குழந்தை பிறக்கவில்லை.  இப்போது தான் திருமணமே ஆகி இருக்கிறது.  ஆகவே அவளுக்குப் பிறக்கும் மகனே குரு வம்சத்து மூத்தவன்.  யுதிஷ்டிரனுக்குப் பின்னர் அவன் மகன் வர முடியாது.  துரியோதனனுக்கும், பானுமதிக்கும் பிறக்கப் போகும் மகனே முடி சூடுவான்.  அந்த மகிழ்ச்சியான நாளுக்காகவே பானுமதி காத்திருந்தாள்.  தன் கணவனின் ஆசையும் விருப்பமும் இப்படியாவது நிறைவேறும் என எதிர்பார்த்தாள்.


ஆம், வரப் போகும் அடுத்த தலைமுறைக்கு அவள் மகனே மூத்தவனாக அரியணை ஏறும் உரிமை படைத்தவனாக இருப்பான்.  பானுமதியின் மகிழ்ச்சிக்கு இது மட்டும் காரணம் அல்ல.  அவளைத் தன் அருமைத் தங்கையாக ஸ்வீகரித்துக் கொண்ட கிருஷ்ண வாசுதேவன், அவள் அன்புடன் அழைக்கும் கோவிந்தன் இங்கே வருகிறான்.  புதுமணத் தம்பதியருடன் கிருஷ்ண வாசுதேவனும், பலராமனும், மற்ற யாதவர்களும் வரும் செய்தி பானுமதிக்கும் தெரிந்திருந்தது.  ஆகவே அவன் வரவுக்காக அவள் காத்திருந்தாள்.  சிறுமியாக இருக்கையில் இருந்தே கோபியர்கள் பாடிய கண்ணனின் லீலைகளைக் குறித்த நாட்டுப் பாடல்களைக் கேட்டுக் கேட்டு வளர்ந்தாள் பானுமதி.  இந்தப் பாடல்களைக் கேட்டுக் கேட்டு அவளுக்கு மனப்பாடம் ஆகி இருந்தது.  இவற்றைப் பாடிக் கொண்டே பௌர்ணமி நாட்களில் தன் தந்தையின் காசி அரண்மனை மாளிகையின் நிலாமுற்றத்தில் அவள் ஆடிப் பாடியது உண்டு.  அந்த நேரங்களில் அவள் கற்பனை எல்லை மீறிச் சிறகடித்துப் பறக்கும்.  தானும் ஒரு கோபியாக மாறிக் கண்ணனுடன், யமுனைக்கரையில் ராஸ்லீலாவில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதாக அவளுக்குத் தோன்றும்.


துரியோதனனை மணந்து ஹஸ்தினாபுரம் வந்த பின்னரும் அவளுடைய இந்த நடவடிக்கைகள் சற்றும் மாறவே இல்லை.  முதன் முதல் கிருஷ்ணன் அவளைப் பார்த்ததும் அவளை ஓர் இக்கட்டான அனைவருக்கும் அவமானம் உண்டாக்கக் கூடிய நிலையிலிருந்து காப்பாற்றிக் கரை சேர்த்ததையும் அவள் மறக்கவில்லை.  இல்லை எனில் அவள் இறந்திருப்பாள்;  ஆனால் பழிச்சொல்?  அவளை விட்டு நீங்கி இருக்காதல்லவா?  கிருஷ்ணன் தானே அவளை அந்தப் பழியிலிருந்து காத்து ரக்ஷித்தான்!  அவனுடைய பாசமும், நேசமும் தனக்குக் கிடைத்ததை கடவுள் தனக்களித்த விலை மதிக்க முடியாப் பரிசாக நினைத்தாள் பானுமதி!