Sunday, January 18, 2015

பானுமதி வழி காட்ட நினைக்கிறாள்!

துரியோதனன் முகத்தைக் கோணிக் கொண்டான். அவன் உதடுகள் முறுக்கிக் கொண்டன. திரௌபதியின் சுயம்வரத்தில் போட்டியில் அவன் தோற்ற அந்த நிமிடத்தை அவனால் இன்று வரை மறக்க முடியவில்லை. இன்னமும் அந்த நினைவுகள் அவன் மனதில் பேயாட்டம்போட்டுக் கொண்டிருக்கின்றன. அந்த நினைவுகள்  இரவும், பகலும் அவனைத் துரத்துகின்றன. அவனால் அதை எப்பாடு பட்டும் அடக்க முடியவில்லை.  ஆனால் அவன் இந்த மாபெரும் மன வெடிப்பில் இருந்து தப்புவதற்கு ஒரே வழிதான். அந்த ஒரே வழியில் தான் அவனுக்குக் கொஞ்சமானும் நிம்மதி கிடைக்கும். அது தான் பானுமதியை வாயில் வந்தபடி பேசுவதும், அவளைத் துன்புறுத்தி மகிழ்வதும்.  இப்போதும் துரியோதனன் அதையே செய்தான்.  அவள் மகிழ்ச்சியைப் பார்த்து பொறாமைத் தீயில் எரிந்த துரியோதனன் அவள் துன்பத்தில் மகிழ நினைத்தான். “ இழிவான, கேடு கெட்ட பெண்ணே! என்ன நினைக்கிறாய் உன் மனதில்? உனக்கும் நான் கேவலமாகப் போய் விட்டேனா? போட்டியில் ஜெயிக்கவில்லை எனில் நான் மட்டமாகப் போய் விட்டேனா?”

பானுமதியின் கைகள் மன்னிப்பை வேண்டிக் குவிந்தன. ஆனால் அவள் மருதாணி அலங்காரம் கலைந்து விடப் போகிறதே என்னும் எண்ணத்தில் அவள் தாதி அவள் கைகளைப் பிரித்தாள். அப்படி அவள் செய்யவில்லை எனில் அந்தப் பசை அவள் உடைகளில் விழுந்து உடைகளைப் பாழாக்கி இருக்கும். பானுமதி முறையிடும் தோரணையில் கணவனைப் பார்த்தாள்.


 “பிரபுவே, என்னிடம் கோபம் கொள்ளாதீர்கள்! நீங்கள் என்னை இப்போது பயமுறுத்தியதில் நான் எதுவும் நினைக்கவில்லை.  ஆனால் நீங்கள் உங்கள் பட்டத்து இளவரசனை அன்றோ பயமுறுத்துகிறீர்கள்?” என்று தன் நிறை வயிற்றைத் தடவிய வண்ணம் சொன்னாள் பானுமதி.  துரியோதனன் மனம் விரக்தியில் ஆழ்ந்தது.  அந்நிலையிலிருந்து மீளாமலேயே அவன் தன் நெற்றியில் கைகளை வைத்துக் கொண்டான். அவனுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை.  அவன் மனைவியின் சந்தோஷமான மனோநிலையை அவனால் கெடுக்க இயலவில்லை.  அவள் மாற மாட்டாள் போல் தெரிகிறது. ஆனால் அதே சமயம் அவள் வயிற்றில் வளரும் தன் குழந்தையை அவள் பட்டத்து இளவரசன் என்று சொல்வதை நினைத்து அவனால் புன்னகை புரியாமலும் இருக்க முடியவில்லை.  தான் பட்டத்து இளவரசனைப் பயமுறுத்துவதாக மனைவி சொன்னதைக் கேட்டுப் புன்னகைத்துக் கொண்டே,”இப்போது உன்னை எந்த விஷயமும் தொந்திரவு செய்ய முடியாது போல் தெரிகிறது.” என்றான்.

“உங்களைப் போன்ற கணவனைப்  பெற்ற எனக்கு என்ன கவலை இருக்க முடியும், ஐயா?” முழு நம்பிக்கையுடன் கூறினாள் பானுமதி.

“துருபதனின் மகளை நாளைக்கு இங்கே வரவேற்க இருப்பதில் உனக்குக் கேவலமாக இல்லையா? அவள் எனக்கு ராணியாக இருக்க வேண்டியவள்.  ஆனால் இப்போதோ?  பாண்டவர்கள் ஐவரையும் மணந்ததில் இந்த சாம்ராஜ்யத்தையே ஆளும் தகுதி படைத்து விட்டாள்.”

“எனக்கு என்ன கேவலம் ஐயா?  இது கேவலம் மனிதர்களால் நடந்த ஒன்றல்ல.  கிரஹங்கள் ஒன்று கூடி ஏற்படுத்திய விளைவு.  இதற்கு நாம் என்ன செய்ய முடியும்? அதோடு அவள் குரு வம்சத்தின் மூத்த இளவரசனின் மனைவியாகி விட்டாள்.  ஆகையால் அவளுக்கு உரிய மரியாதையைக் கொடுக்கத் தான் வேண்டும்.”

“கடவுளே, கடவுளே, எவ்வளவு முட்டாளாக இருக்கிறாய் நீ? எனக்கு இப்படி ஒரு முட்டாள் மனைவியா?  உன்னால் எதையுமே புரிந்து கொள்ள முடியாது.  முயற்சியும் செய்ய மாட்டாய்! நாளை யுதிஷ்டிரன் வந்ததும் அவனுக்குப் பட்டம் சூட்டப் போகின்றனர்.  இந்த சாம்ராஜ்யத்தையே அவன் ஆளப் போகிறான்.  ஹஸ்தினாபுரம் அவனுடையதாகி விடும். நான் ஸ்வர்ணப்ரஸ்தத்துக்கோ அல்லது பானிப்ரஸ்தத்துக்கோ சென்று யுதிஷ்டிரனுக்குக் கீழ் ஆட்சி புரிய அனுப்பப்படுவேன். பாண்டவர்கள் ஐவருக்குக் கீழே அவர்களுக்குக் கட்டுப்பட்டு நான் இருந்தாக வேண்டி இருக்கும். அதிலும் அந்த பீமன், மாபெரும் முட்டாள், அறிவில்லாதவன் ஒவ்வொரு நாளும் என்னை எதிலாவது மாட்டிவிட்டுச் சிரிப்பவன், அவனுக்குக் கீழே நான் இருக்க வேண்டுமா? இப்போதாவது உனக்கு இது என்னவென்று புரிகிறதா? “

“பிரபுவே, இதற்காகவா  மனம் வருந்துகிறீர்கள்? இதற்கெல்லாம் வருந்தலாமா? “தன் கைகளை உயரத் தூக்கிக் கொண்டு ஆட்டியவண்ணம் பேசினாள் பானுமதி. இதன் மூலம் அவனுடைய வருத்தத்தைத் தான் போக்குவதாக நினைத்தாள் பானுமதி.  “என்ன பெரிய விஷயம்!  நாம் அனைவரும் பாண்டவர்கள் ஐவரோடு நட்புப் பாராட்டினால் போதுமே! எந்தப் பிரச்னையும் வராது!”  தீர்மானமாக முடித்தாள் பானுமதி.

“ஒருக்காலும் இல்லை, இல்லை, இல்லவே இல்லை!” அடி வயிற்றிலிருந்து ஆங்காரமாகக் கத்தினான் துரியோதனன்.  தன் கைகளை ஒன்றோடு ஒன்று பிணைத்துக் கொண்டான்.  கை முட்டியை இறுக மூடி மூடித் திறந்தான்.  தவித்தான். “இப்போதும் இல்லை; எப்போதும் இல்லை.  பெண்ணே, இந்த ஜன்மத்திலும் இல்லை.  இனி வரப் போகும் ஏழேழு ஜன்மத்திலும் இல்லை. பாண்டவர்களுடன் நட்பா?  ஹூம், அவர்கள் என்னுடைய சாம்ராஜ்யத்தை என்னிடமிருந்து திருடிக் கொண்டவர்கள்!  அவர்களுடனா நட்பு? ஹா, அது ஒருக்காலும் நடவாத ஒன்று!” பற்களைக் கடித்தான் துரியோதனன்.

“நம் விதி என்னவோ அப்படி நடக்கட்டும்.  இதற்காக நாம் சண்டை போடவேண்டாம் ஐயா!” பேசும்போது தன் கைகளிலும், கால்களிலும் இருந்த மருதாணிப் பசை அழிந்து விடாமல் இருக்கப் பெரும்பாடு பட்டாள் பானுமதி.  “ஐயா, ஒரு நாள் நீங்கள் இந்த சாம்ராஜ்யத்துக்கு மன்னன் ஆவீர்கள்.  கடவுள் அருளால் இது நடக்கும்.” இதை முழு மனதுடன், துரியோதனன் புரிந்து கொள்ளும்படியான பரிதாபமான குரலில் கூறினாள்.  அவள் மனப்பூர்வமாகச் சொல்வதைப் புரிந்து கொண்ட துரியோதனன் கொஞ்சம் அமைதி அடைந்தான்.

“அப்படிச் செய்வார்கள் என நானும் நம்புகிறேன்.  ஆனால் இப்போது என்ன செய்வது என்று எனக்குப் புரியவில்லை.  என் தலைவிதி எப்படி ஆகும் என்றே புரியவில்லை. எனக்கு எந்த வழியும் புலப்படவில்லை.”

“நான் உங்களுக்கு ஒரு வழியைக் காட்டுகிறேன்.” பானுமதி புன்னகையுடன் கூறினாள்.

“என்ன வழி அது?  அந்தக் கிழவன் பீஷ்மன் யுதிஷ்டிரனை மன்னனாக்கும் வழிகளை எல்லாம் செய்து கொண்டிருக்கிறான்.  எல்லா ஏற்பாடுகளும் மும்முரமாக நடக்கின்றன.  கிழவனை எவராலும் அசைக்க முடியாது.  இமயம் போல் ஸ்திரமாக இருப்பான்.”

“ஆனால் நீங்கள் நான் சொல்வதைக் கேட்பீர்களா, பிரபுவே?” உண்மையான பயத்துடன் கேட்டாள் பானுமதி.  “என்ன சொல்லப் போகிறாய் நீ? முட்டாள் தனமாக எதையேனும் சொல்வாய்!  நான் நன்கறிவேன்.” என்று சொல்லிக் கொண்டே ஒரு பெருமூச்சு விட்டான் துரியோதனன்.

No comments: