Sunday, June 28, 2015

யுதிஷ்டிரன் விருப்பம்!

“என்னுடைய அனைத்து வலுவையும் திரட்டிக் கொண்டு உங்கள் அனைவரையும் நல்ல முறையில் பாதுகாப்பேன். உண்மையாகவும், நேர்மையாகவும் நல்லாட்சி புரிவேன்; என்னுடைய அரச தர்மம் எதுவோ அதை விடாமல் கடைப்பிடிப்பேன். அனைவரையும் என் பிரஜைகளின் சந்தோஷத்துக்காகவும்,பாதுகாப்புக்காகவும் நண்பர்களாக்கிக் கொள்வேன். சாஸ்திர, சம்பிரதாயங்களில் உள்ளபடி நடந்து கொண்டு மனிதனுக்கு நியமிக்கப்பட்ட குல தர்மத்தையும் விடாமல் கடைப்பிடிப்பேன்; இங்கே உள்ள அனைத்து பிராமணர்களையும் பாதுகாப்பேன்; அவர்கள் தங்கள் கல்வித் தொழிலைக் குறைவறச் செய்யத் தேவையான வசதிகளைச் செய்து கொடுப்பேன்; க்ஷத்திரியர்கள் அனைவரையும் பாதுகாக்கவேண்டிய வசதிகளைச் செய்து தருவேன்; ஏழைகளுக்கும், ஒடுக்கப்பட்டவர்களுக்கும் வேண்டிய பாதுகாப்பை அளிப்பேன்; வைசியர்கள் தங்கள் வியாபாரத் திறமையால் பணம் ஈட்டி அனைவருக்கும் தேவையான சமயம் உதவுவதற்கு நானும் துணையாக நிற்பேன். சூத்திரர்கள் விசுவாசத்துடன் தங்கள் தொழிலைச் செய்து வர உதவி புரிவேன். என்னுடைய ஆட்சியில் பெண்கள் பயமின்றித் தன்னந்தனியாக வெளியே சென்று வரலாம்; பசுக்கள், மிருகங்கள் ஆகியனவற்றிற்கும் போதிய பாதுகாப்புக் கொடுப்பேன். இறைவனுக்கு என ஏற்படுத்தப்பட்டிருக்கும் கோயில்களையும் நல்ல முறையில் பராமரிப்பேன்.”

யுதிஷ்டிரன் சற்று நிறுத்திவிட்டு அவையோரைப் பார்த்தான். கூட்டம் கைத்தட்டி கோஷித்தது. பின்னர் அமைதியை நிலைநாட்டி விட்டு மீண்டும் பேச ஆரம்பித்தான் யுதிஷ்டிரன். இம்முறை திருதராஷ்டிரனை நேருக்கு நேர் பார்த்த வண்ணம் பேச்சை ஆரம்பித்தான்.

“அரசே, நான் உங்களுக்கு உறுதியாய்க் கூறுகிறேன்: நான் துரியோதனனுக்கும், அவனுடைய மற்ற சகோதரர்களுக்கும் அன்பானவனாய் நடந்து கொள்வேன். என் சொந்த சகோதரர்களை விட மேலாக அவர்கள் நலனில் கண்ணும், கருத்துமாக இருப்பேன். அவர்கள் சுகமும், சந்தோஷமும் எனக்கு முக்கியமானது என்றே நினைப்பேன். நான் அரசனாக நியமிக்கப்படுவதன் மூலம் நீங்களும், தாத்தா அவர்களும் எனக்கும் என் சகோதரர்களுக்கும் மாபெரும் நீதி ஒன்றை நிலைநாட்டி இருக்கிறீர்கள்.  எங்களுக்கு நியாயமான ஒன்றைப் பெற்றுத் தந்ததன் மூலம் நீதியை விட மேன்மையான ஒரு காரியத்தைச் செய்து காட்டியுள்ளீர்கள்.”

மீண்டும் கரகோஷம் எழ, அமைதி நிலவக் காத்திருந்த யுதிஷ்டிரன் மேலும் தொடர்ந்தான்:” என் அரசே, உங்களிடம் ஒன்று சொல்ல வேண்டும். தாங்கள் என் தந்தையை விட எனக்கு உயர்ந்தவர். உங்களை என் தந்தையை விட மேலானவராகவே நான் கருதி வருகிறேன்.  எங்கள் ஐவருக்கும், உங்கள் குமாரர்கள் நூற்றுவருக்கும் இடையே உள்ள உறவை எப்படி பலப்படுத்துவது என்பதை நான் உங்களிடமே விட்டு விடுகிறேன். இதை எப்படிக் கையாளுவது என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்!”

யுதிஷ்டிரன் மீண்டும் நிறுத்தக் கூட்டம் அமைதியிலும் ஆச்சரியத்திலும் உறைந்து இருந்தது. எங்கும் நிசப்தம்! அனைவரும் யுதிஷ்டிரன் மேலே பேசக் காத்திருந்தனர்.

“அரசே, எங்கள் ஐவருக்கும் உங்கள் குமாரர் நூற்றுவருக்கும் இடையே இந்த அரச பதவி குறித்த சர்ச்சையும், அதிகாரப் பங்கீடும் எவ்விதம் தீர்க்கப்பட வேண்டும், எப்படித் தீர்ந்தால் நல்லது என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரத்தை நான் என் மனப்பூர்வமாக உங்களிடமே விட்டு விடுகிறேன். நீங்களே பார்த்து  ஒரு நல்ல முடிவெடுங்கள். நாங்கள் ஐவரும் அதற்குக் கட்டுப்படுகிறோம். ராஜ்ஜியம் பிரிக்கப்பட வேண்டுமா என்பதையும் நீங்களே முடிவெடுங்கள். அப்படிப் பிரித்தால் எந்தப் பகுதியை துரியோதனாதியர் ஆள்வது என்பதும், நாங்கள் ஆள வேண்டிய பகுதி எது என்பதையும் வரையறுத்துச் சொல்லுங்கள். “

கூட்டத்திலிர்ந்தோர் திகைத்தனர். மலை ஏறுபவன் ஒரு செங்குத்துப் பாறையின் நுனியில் நிற்பது போல ஒரு நிலைமையில் யுதிஷ்டிரன் இருப்பதாக அவர்கள் உணர்ந்தனர். அந்த செங்குத்துப் பாறை நுனியிலிருந்து யுதிஷ்டிரன் அப்பால் செல்வானா? அல்லது கீழே விழுவானா? எந்நேரமானாலும் கீழே விழுந்துவிடுவானோ? கூட்டத்திலிருந்தோர் அனைவரும் கலவரத்துடன் மேலே நடக்கப்போவதை ஆர்வத்துடன் எதிர்பார்த்தனர். உண்மையிலேயே துரியோதனாதியருக்கு இது  ஆச்சரியத்தையே கொடுத்தது என்பது அவர்கள் முகபாவங்களில் இருந்து புரிந்தது. ஆனாலும் துரியோதனன் மனதில் இதில் ஏதோ சூது இருக்குமோ என்னும் எண்ணமும் தோன்றாமல் இல்லை. யுதிஷ்டிரன் மேலே பேச ஆரம்பித்து விட்டான்:

“என் மனப்பூர்வமாக நான் உறுதி மொழி கூறுகிறேன்; துரியோதனன் எனக்குப் பின்னால் எனக்குக் கீழே ஓர் யுவராஜாவாக மட்டும் இருக்க மாட்டான்; எனக்குச் சமமாக அவனும் ஓர் மன்னனாகவே இருப்பான். என்னுடன் சரியாசனத்திலேயே அவனும் அமர்வான். அரசே, மீண்டும் சொல்கிறேன்! தாங்கள் என் தந்தையை விட மேலானவர். நீங்கள் அனைவரின் தகுதியையும், திறனையும் உங்களால் தீர்மானிக்க முடியும். யாருக்கு என்ன கொடுப்பது என்பதையும் நீங்கள் நன்கறிவீர்கள். தந்தையே, நீங்கள் என்ன முடிவெடுத்தாலும் சரி! நாங்கள் சகோதரர்கள் ஐவரும் அதற்குக் கட்டுப்படுகிறோம். இதில் மாற்றம் இல்லை. தயங்காமல் கட்டுப்படுவோம்.”

எங்கும் அமைதி! ஏதோ புயல் அடித்து ஓய்ந்தது போல் இருந்தது அனைவருக்கும். பெரும் முழக்கத்துடன் கேட்ட இடியோசை சட்டென நின்று போனது போல் அங்கே அமைதி நிலவியது. பீஷ்மரின் முகம் கடுகடுவென மாறியது. அவருக்கு இது பிடிக்கவில்லை என்பது புரிந்தது. அங்கு கூடி இருந்த அரசர்கள் அனைவரும் ஒருவரை பார்த்துக் கொண்டனர். யாருக்கும் எதுவும் பேசத் தோன்றவில்லை. பீமன் முகம் கோபத்தில் கொதித்துக் கொண்டிருந்தது. அவன் கண்களில் தெரிந்த ஒளி பயங்கரமாக இருந்தது. தன் கைகளைப் பிசைந்து கொண்டான். அப்படியும் அவை கோபத்தில் நடுங்கின. மற்ற சகோதர்கள் மூவரும் குழப்பத்தில் ஆழ்ந்தனர். அனைத்தையும் ஒரு பார்வையில் பார்த்த யுதிஷ்டிரன் மேலே பேச ஆரம்பித்தான். அவன் குரலில் இனம் காணா அமைதி தெரிந்தது.

“நான் அரசனாக முடிசூட்டப்பின்னரும் கூட உங்கள் விருப்பங்கள், ஆசைகள் அனைத்தும் நீங்கள் எனக்கிட்ட கட்டளைகளாகவே கருதி அவற்றை விருப்புடன் நிறைவேற்றுவேன். இதை என் தந்தை சொர்க்கவாசியாக ஆகிவிட்ட மன்னர் பாண்டுவின் மேல் ஆணையிட்டுச் சொல்கிறேன். அவற்றை எல்லாம் நான் உண்மையாகவும் சந்தோஷமாகவும் செய்து முடிப்பேன்.”

யுதிஷ்டிரன் பேச்சை முடித்தான். வியாசரின் எதிரே நின்று அவர் கால்களில் விழுந்தான். துரியோதனனும், அவன் சகோதரர்களும் மகிழ்ச்சியில் கூக்குரல் இட்டனர். ஆடிப்பாடி மகிழ்ந்தனர். இந்த உறுதி மொழிகளில் உள்ள ஆபத்தை அவர்கள் உணர்ந்திருந்தாலும் தற்போதைய மகிழ்ச்சியை அவர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை. வியாசர் எழுந்து நின்று கொண்டு தன் கைகளை உயர்த்தி அனைவரையும் ஆசீர்வதித்தார். பின் கீழ் வரும் துதிகளைச் சொன்னார்.
“அனைத்துக் கடவுளரும் நம்மைப் பாதுகாக்கட்டும்!
நாம் அனைவரும் இந்த அருமையான வாழ்க்கையை ஒன்றாக சந்தோஷமாக வாழ்வோம்!
அனைவரும் ஒன்றாய்க் கூடித் தொழில் செய்து உயர்வோம்!
நம் கல்வி நமக்கு உயர்ந்த ஸ்தானத்தை அளிக்கட்டும்!
எவரையும் நாம் அவமதிக்காமல், வெறுக்காமல் இருக்க முயல்வோம்!’
எங்கும் அமைதி நிலவட்டும்.
சாந்தி! சாந்தி! சாந்தி!
முரசங்கள் ஆர்ப்பரித்தன. சங்கங்கள் முழங்கின. அனைவரும் கூப்பிய கரங்களோடு எழுந்து நின்றனர். பிராமணர்கள் அனைவரும் மந்திர கோஷங்களை எழுப்பி அனைவரையும் ஆசீர்வதிக்கும் மந்திரங்களைச் சொன்னார்கள். ஆசனங்களிலும், சிம்மாசனங்களிலும் வீற்றிருந்தவர்கள் மெல்ல மெல்ல வெளியேறினார்கள். அதைத் தொடர்ந்து ஏற்பட்ட குழப்பத்தில் பீமன் கோபு பின் தொடர பக்கத்து வாசல் வழியே மிகவும் விரைவாக வெளியேறினான். அவன் தலைமயிர் எல்லாம் பறந்து ஒழுங்கில்லாமல் கிடந்ததோடு கோபத்துடன் இருக்கும் முள்ளம்பன்றியின் முட்களைப் போலவும் காட்சி அளித்தது. கட்டுப்படுத்த முடியாத கோபத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் இருந்த பீமன் தன் கை முஷ்டிகளைச் சேர்த்து ஒன்றை ஒன்றால் பிசைந்த வண்ணம் நடந்தான்.

Tuesday, June 23, 2015

யுதிஷ்டிரனுக்கே பட்டம்! பீஷ்மர் அறிவிப்பு!

“யுதிஷ்டிரன் தன் திறமை, விவேகம், ஞானம் ஆகியவற்றால் என் தந்தையும் குரு வம்சம் கண்ட மாபெரும் சக்கரவர்த்தியும் ஆன ஷாந்தனு கண்ட கனவுகளை எல்லாம் நனவாக்குவான். அடுத்ததாக ஒரு முக்கிய முடிவு. இது வரையிலும் யுவராஜாவாக இருந்து வந்த நம் அருமை மகன் ஆன துரியோதனன் அந்தப் பதவியிலேயே நீடிப்பதோடு அல்லாமல் அரசன் ஆன யுதிஷ்டிரனுக்கு ராஜாங்க காரியங்களில் பெரும் உதவிகளையும் செய்வான் என எண்ணுகிறோம். எந்த அளவு விசுவாசத்தோடும், ஈடுபாட்டோடும் எங்களுக்குச் சேவை செய்தானோ அதே அளவு விசுவாசத்தையும், ஈடுபாட்டையும் யுதிஷ்டிரனுக்கும் காட்டுவான் என நினைக்கிறோம். “ பீஷ்மர் இதைச் சொன்னதுமே அந்த மாபெரும் சபையில் நிசப்தம் ஏற்பட்டது. அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். துரியோதனன் முகம் மிகவும் பயங்கரமாக மாற அவன் சகோதரர்களும் கடுமையான முகபாவத்தைக் காட்டினார்கள். அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். கர்ணன் முகம் க்ரோதத்தில் கொதிக்க அஸ்வத்தாமாவோ தன் கொடூரமான பார்வையை பிதாமகர் பீஷ்மர் பக்கம் திருப்பினான்.

இது எதைப் பற்றியும் கவலையே இல்லாமல் பீஷ்மர் தொடர்ந்தார்:”நாம் குலகுருவும் மூத்தவரும் ரிஷிகளில் சிறந்தவரும் ஆன வேத வியாசரின் ஆசிகளோடு முடிசூட்டு விழா நாளையிலிருந்து ஐந்தாம் நாளன்று ஆரம்பம் ஆகும். சூரிய உதயம் ஆகி ஒரு கடிகைக்குப் பின்னர் ஆரம்பிக்கும் பட்டாபிஷேஹ விழா, கிரஹங்களின் சேர்க்கையின் மூலம் கிடைக்கப்பெற்ற நல்ல நேரத்தில் நடைபெறும். இது தான் எங்கள் முடிவு.”

“இந்த எங்கள் முடிவை நீங்கள் அனைவரும் ஆதரிக்க வேண்டும். இன்று வரை எங்களிடம் நீங்கள் அனைவரும் காட்டி வரும் விசுவாசத்தையும், ஆதரவையும் யுதிஷ்டிரனுக்கும் அளித்து அவன் நல்லாட்சி புரிய உதவ வேண்டும்.” பீஷ்மர் தன் பேச்சை முடித்தார்!

“மங்களம் உண்டாகட்டும்! யுதிஷ்டிரனுக்கு ஜெயம்!” என்றெல்லாம் கோஷங்கள் எழுந்தன. ஒரு சிலர், “பிதாமகருக்கு ஜெயம்!” என பீஷ்மருக்கும் வெற்றி முழக்கங்களை எழுப்பினார்கள். இந்த முழக்கங்கள் நின்றதும் சற்று நேரம் இடைவிடாமல் சங்கங்கள் ஊதப்பட்டன. உடனே அனைத்து வாத்தியங்களும் தங்கள் முழக்கங்களை எழுப்பச் சிறிது நேரம் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமான முழக்கங்களை வாத்தியங்கள் எழுப்பின. பீஷ்மர் மீண்டும் அவற்றை நிறுத்தும் வண்ணம் கைகளால் சைகை செய்தார். பின்னர், “இப்போது நம் அரசப் பிரதிநிதியாக இருந்து வரும் திருதராஷ்டிரன் பேசுவான்.” என அறிவித்தார். திருதராஷ்டிரன் கைகள் நடுங்கின. தன் கைகளை நெற்றியின் மேலே வைத்துக் கொண்டு தலை கவிழ்ந்தான். அவன் உதடுகள் கோணிக்கொண்டன. ஆனாலும், அவன் மெல்லப் பேச ஆரம்பித்தான். மிகவும் பலவீனமான தொனியில் அவன் பேச ஆரம்பித்தான்.

“ஆசாரியர் வியாசர் அவர்களே, மரியாதைக்குரிய தாத்தா பீஷ்மர் அவர்களே, இங்கு கூடியிருக்கும் மாட்சிமை பொருந்திய அரசர்களே, மற்றும் திறமையும் வலிவும் வாய்ந்த க்ஷத்திரியப் பெருமக்களே! இப்போது பீஷ்மர் அறிவித்தவற்றை நீங்கள் அனைவரும் கேட்டீர்கள். எனக்கு அவற்றில் முழு ஒப்புதல் உள்ளது. என் முழுமனதோடு அவர் சொன்னவற்றை நான் ஆமோதிக்கிறேன். பீஷ்மரின் முடிவு நியாயமானது. முறையானது. தேவகுருவான பிரஹஸ்பதியை ஒத்த அறிவு படைத்த பீஷ்மப் பிதாமகர் பிரஹஸ்பதியை விட அறிவிற் சிறந்ததொரு முடிவை எடுத்துள்ளார். இதை விடச் சிறந்த முடிவை எவராலும் எடுக்க முடியாது என்பதோடு இங்கே வருகை தந்திருக்கும் ஆசாரியர் வேத வியாசர், ரிஷிகளுக்குள் சிறந்தவரின் ஆசிகளும் இந்த முடிவுக்குக் கிடைத்துள்ளது. இந்த முடிவின் மூலம் நமக்குச் சிறப்பானதொரு அரசாட்சியும் கிடைக்கும். அதன் பலன்களையும் நாம் அனுபவிக்க இருக்கிறோம்.”

“என் தம்பி பாண்டுவின் மூத்த மகன் ஆன யுதிஷ்டிரனுக்கு என்னுடைய நல்லாசிகளை நான் தெரிவித்துக் கொள்கிறேன். குரு வம்சத்திலே சிறந்ததொரு இளவரசன் ஆன யுதிஷ்டிரன் இனி அரசப் பொறுப்பையும் ஏற்றுத் திறம்பட நிர்வகித்து நல்லாட்சியைத் தருவான் என உறுதிபடக் கூறுகிறேன்.” இதைச் சொல்கையில் திருதராஷ்டிரன் குரல் தழுதழுத்துச் சற்றே அவன் பேச்சை நிறுத்தும்படி நேரிட்டது. பின்னர் தன்னைச் சமாளித்துக் கொண்ட அவன் மேலும், “தர்மத்தின் பாதையிலும், குரு வம்சத்தினரின் பாரம்பரியத்தைக் காக்கும் விதத்திலும் யுதிஷ்டிரனின் ஆட்சி நடைபெறும் என உறுதியாக நம்புகிறேன்.”

“என் அருமை யுதிஷ்டிரா! மாட்சிமை பொருந்திய இளவரசே! என்றும் என் நினைவுகளில் நீங்கா இடம் பிடித்திருக்கும் என் அருமைத் தம்பி பாண்டுவின் குமாரனே! தாத்தா பீஷ்மர் உன்னை அரசனாகத் தேர்ந்தெடுத்ததில் இருந்து அவர் மிகச் சரியானதொரு முடிவை எடுத்திருப்பதை உணர முடிகிறது. நீ அரசன் ஆனதும், நான் இந்த அரசப் பதவியை விட்டு விலகி உனக்கு வழிகாட்டியாக இருப்பேன். இனி என் மகன்கள் துரியோதனனும், மற்றவர்களும் உன் பொறுப்பு! நீ பார்த்து அவர்களுக்கு எது நன்மையோ, எது நியாயமோ அதைச் செய்வாய்! அதன் மூலம் உங்களுக்கிடையே நட்பு வலுப்படட்டும். சகோதரர்களுக்குள்ளே ஒற்றுமை ஓங்கினால் தான் குடும்பம் சிறக்கும். இந்தக் குரு வம்சம் சிறந்தால் தான் இந்த நாட்டுக்கும் நல்லாட்சி கிடைக்கும். நாடும் செழிக்கும்.”

அனைவரும் “சாது, சாது!” என கோஷித்து இதை ஆமோதித்தார்கள். இதற்கு மேல் பேசமுடியாத திருதராஷ்டிரன் தன் பேச்சை நிறுத்திவிட்டு முகம், வாய் போன்ற இடங்களை ஒரு பட்டுத் துணியால் துடைத்தான். பீஷ்மரின் கண் பார்வையின் மூலம் அவர் தான் பேச வேண்டும் என்று விரும்புவதைப் புரிந்து கொண்ட யுதிஷ்டிரன் எழுந்து நின்றான். பெரியோர்கள் அனைவருக்கும் தன் வணக்கங்களைத் தெரிவித்துக் கொண்டான். பின்னர் சபையைப் பார்த்த வண்ணம் நின்றவன் தன் இருகரங்களையும் கூப்பினான். அவன் மனதில் உள்ள ஆர்வத்தையும், அவன் உண்மையாக நடப்பவன் என்பதையும் அவன் முகமும் கண்களும் காட்டிக் கொடுக்க யுதிஷ்டிரன் பேச ஆரம்பித்தான்.
“ஆசாரியரே, முனிசிரேஷ்டர்களே, என் பிரியமான தாத்தா அவர்களே, மாட்சிமை பொருந்திய மன்னர் பெரியப்பா திருதராஷ்டிரன் அவர்களே, அனைவருக்கும் என் நமஸ்காரங்கள். மிக மிகப்பணிவோடும், வணக்கத்தோடும் என் மீது நீங்கள் அனைவரும் சுமத்தி இருக்கும் இந்த மாபெரும் பொறுப்பை ஏற்கிறேன்.” சற்றே நிறுத்திய யுதிஷ்டிரன் மீண்டும் வணக்கத்துடனும், பணிவுடனும் பேசியதாவது:--

“என் மேல் நீங்கள் கொண்டு நம்பிக்கையும், விசுவாசமும் பொய்த்துப் போகாமல் நான் நல்லாட்சி புரிய விண்ணுலகத்து தேவர்களும், கடவுளரும் உதவுவார்களாக! அதற்குத் தேவையான மனோபலத்தை எனக்கு நல்குவார்களாக! குரு வம்சத்தினரின் இந்த நீண்ட நெடிய பாரம்பரியத்தையும், அரச தர்மத்தையும் நான் கட்டிக்காப்பேன் என உறுதி கூறுகிறேன்.”

“என் சக்திக்கு உள்ளபடியும், என் சகோதரர்கள் மற்றும் குருவம்சத்து அனைத்துப் பெரியோர்களின் உதவியினாலும், ஒரு காலத்தில் சக்கரவர்த்தி பரதனால் ஏற்படுத்தப்பட்ட இந்த மாபெரும் சாம்ராஜ்யம் வலுவாக விளங்கும்படி பாதுகாப்பேன்; சக்கரவர்த்தி சாந்தனு அவர்களால் விஸ்தரிக்கப்பட்ட இதன் விஸ்தீரணம் சற்றும் குறையாமல் பாதுகாப்பேன்; அவருக்குப் பின்னால் இதோ என் அருமைத் தாத்தா பீஷ்மர் இந்த நாட்டுக்கெனவே உயிர் வாழ்பவர் அவரின் கனவுகளை நனவாக்குவேன்; அவர் போட்ட அஸ்திவாரத்தின் மேல் இந்த சாம்ராஜ்யக் கட்டிடத்தை வலுவாகவும், பெரிதாகவும் எழுப்புவேன்.”

“இதை நான் உறுதிபடக் கூறுகிறேன். நான் பக்தியுடன் வணங்கும் கடவுளர் சாட்சியாகவும், இங்குள்ள அனைத்துப் பெரியவர்கள் சாட்சியாகவும், நான் பணிவுடனும், அர்ப்பணிப்புடனும் பணியாற்றுவேன்.”

“எல்லாம் வல்ல மஹாதேவனை நான் தர்மத்தின் வழி நடந்து நல்லாட்சி தரவும், அரச தர்மத்தைப் பாதுகாக்கவும், அதற்கேற்ற உடல் வலுவையும், மனோவலுவையும் எனக்குத் தந்து அருளவும் பிரார்த்திக்கிறேன்.”

“மாட்சிமை பொருந்திய மன்னா! பெரியப்பா திருதராஷ்டிரரே! நீங்கள் இன்று வரை எங்களுக்குத் தந்தையாகவே இருந்துள்ளீர்கள்! இல்லை….இல்லை…. தந்தையிலும் மேலானவராக இருந்திருக்கிறீர்கள். என் மதிப்புக்கும், மரியாதைக்கும் உரிய தாத்தா பீஷ்மரே! நீங்கள் எங்களை மிகவும் அருமையான முறையில் நல்வழிப்படுத்தி உள்ளீர்கள். உங்கள் கட்டளைகளை நாங்கள் சிரமேற்கொண்டு நடத்தி வைப்போம். உங்கள் விருப்பங்களை நாங்கள் எங்களுக்கு நீர் அளித்த கட்டளைகளாகக் கருதி நிறைவேற்றி வைப்போம்.”

Tuesday, June 9, 2015

பீஷ்மர் தன் முடிவை அறிவிக்கிறார்!

கணீரென்று பேச ஆரம்பித்தாலும் பீஷ்மரின் குரலில் வயதானால் ஏற்படும் கரகரப்பு இருக்கத் தான் செய்தது. எனினும் எப்போதும் போல் அனைவரையும் ஆணையிடும் அந்தத் தொனி தன்னையும் அறியாமலேயே அவர் பேச்சில் இடம் பெற்றது. அதுவே அவர் இயல்பாகவும் அமைந்தது. பீஷ்மர் பேச ஆரம்பித்தார்:

“மாட்சிமை பொருந்திய ரிஷி, முனிவர்களே, துறவிகளே, மற்றும் இங்குக் கூடி இருக்கும் வேத சிரோன்மணிகளே! மதிப்புக்கும், மரியாதைக்கும் உரிய அரச குலத்தோரே! குரு வம்சத்தினரே, இந்நாட்டின் கண்ணுக்குக் கண்ணான மக்களே!

நான் இப்போது எல்லாம் வல்ல மஹாதேவனின் ஆசிகளாலும் இதோ இங்கே நம்மிடம் வந்து நம்மை ஆசீர்வதிக்கும் குரு மஹாதேவரான வியாசரின் அனுமதி பெற்றும் இங்கே பேச வந்திருக்கிறேன்.

இப்போது இங்கே ஒரு முக்கியமான முடிவை அறிவிக்க வந்திருக்கிறேன். இம்முடிவு ராஜா திருதராஷ்டிரனும், நானும் சேர்ந்து கலந்து ஆலோசித்து ஒரு மனதாக எடுத்த முடிவு ஆகும். இந்த முடிவு குருவம்சத்தினர் ஆண்டு வரும் இந்நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயம் செய்யும் முடிவாகும். என் அன்பார்ந்த மக்களே! உங்கள் அனைவருக்கும் தெரியும்!”

இந்த இடத்தில் சற்று நிறுத்திய பீஷ்மர் பின்னர் யுதிஷ்டிரனைச் சுட்டிக் காட்டிக் கொண்டே மேலும் பேசினார்!” இதோ நம்முடைய அன்புக்கும், பாசத்துக்கும் உரிய இந்தக் கோமகன், சக்கரவர்த்தி பாண்டுவின் மூத்த குமாரன் “

மீண்டும் நிறுத்திய பீஷ்மர், “ஆஹா, பாண்டு மட்டும் இவ்வளவு சீக்கிரம் நம்மை விட்டுப் பிரியாமல் இருந்திருந்தால்!” என்று க்ஷணகாலம் அவனை நினைத்து வருந்தினார். பின்னர் தனைச் சமாளித்துக் கொண்டு, “இந்தக் கோமகன், பாண்டுவின் மூத்த குமாரன், மிகவும் புத்திசாலி மட்டுமல்ல; விவேகமுள்ளவனும் கூட. அனைவருக்கும் நன்மைகள் செய்வதையே தன் நன்மையாகக் கொள்பவனும் கூட. அனைவராலும் விரும்பப்படுகிறவன். வேதங்களை நன்கு கற்று உணர்ந்தவன், தர்மத்தின் பாதையில் நடப்பதற்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்டவன், கடவுளரால் ஆசீர்வதிக்கப்பட்டவன், சத்தியத்தில் நம்பிக்கை உள்ளவன், அதற்கேற்ப ஆட்சி செய்வதில் வல்லவன்.” மீண்டும் நிறுத்திய பீஷ்மர் சபையில் உள்ளவர்களைச் சுற்றும் முற்றும் பார்த்தார். அனைவரும்,”சாது! சாது!” என்று கோஷித்தனர்.


மீண்டும் தொடர்ந்த பீஷ்மரின் குரல் இனம் தெரியாத மாற்றம். “இத்தகைய குணாதிசயங்கள் கொண்டவனை அவன் நான்கு சகோதரர்களோடும், தாயோடும் நாம், அதாவது இந்த ராஜ சபை வாரணாவதத்துக்கு நாடு கடத்தியது. அதுவும் இதோ மன்னன் திருதராஷ்டிரன் இருக்கிறானே! இவன் மகன் துரியோதனனுக்கும், யுதிஷ்டிரனுக்கும் ஏற்பட்ட மனக்கசப்பால் நாம் மாபெரும் துரோகம் செய்து பாண்டவர்களை அங்கே அனுப்பினோம். “

சற்றே நிறுத்திய பீஷ்மர் மீண்டும் தொடர்கையில், “நாம் அனைவரும் அந்த மஹாதேவனுக்கே நன்றி சொல்லவேண்டும். திரிசூலத்தை ஆயுதமாகக் கொண்ட அந்த மஹாதேவன், லோகமாதாவுக்கே எஜமானன் ஆனவன், நம்முடைய உயிரை எல்லாம் தன் கரங்களில் அடக்கி இருப்பவன், ஆகிய அந்த மஹாதேவனுக்குத் தான் நாம் நன்றி சொல்லவேண்டும். ஆம்! அது மட்டும் போதாது! இந்தப் பாண்டவர்களுக்கு நீண்ட ஆயுளைக் கொடுக்க வேண்டும் என்றும் இறைஞ்ச வேண்டும். வெற்றி மேல் வெற்றியாகக் குவிக்க வேண்டும். பெயரும், புகழும் பெற வேண்டும். தன் நாட்டு மக்களால் இவர்கள் ஐவரும் நேசிக்கப்பட வேண்டும்.”

“சபையில் கூடி இருக்கும் பெருமக்களே! அந்த மஹாதேவன் கருணையினால் இவர்கள் நல்லபடியாகத் திரும்பி விட்டனர். அதோடு மட்டுமல்ல, துருபத அரசனின் மகளும் காம்பில்யத்தின் இளவரசியும் ஆன திரௌபதியை வெற்றி கொண்டு ஜெயலக்ஷ்மியையும் கூட்டி வந்திருக்கின்றனர். இந்தத் திருமண பந்தத்தின் மூலம் குரு வம்சத்தினருக்கும், பாஞ்சால நாட்டினருக்கும் இடையில் நட்புப் பாலம் ஏற்பட்டிருக்கிறது.  அது மட்டுமல்ல மக்களே! பாண்டவர்கள் ஐவரும் இத்தனை நாட்களில் விராட அரசன், அரசன் சுநீதன் மற்றும் நாக நாட்டு மன்னன் மணிமான் ஆகியோரையும் தங்களுக்கு நண்பர்களாக ஆக்கிக் கொண்டிருக்கின்றனர். யாதவத் தலைவன் ஆன பலராமன், மனிதருக்குள்ளே அரிய மாணிக்கமாய்த் தோன்றி இருக்கும் வாசுதேவக் கிருஷ்ணன் ஆகியோர் இவர்களை வழி நடத்துகின்றனர். “

“சாது! சாது!” என்று கோஷித்த மக்கள் கூட்டம், “வாசுதேவக் கிருஷ்ணனுக்கு ஜெயம்! மங்களம் உண்டாகட்டும்!” என்றும் கோஷித்தனர். பீஷ்மர் தன் பேச்சைச் சற்றே நிறுத்தினார்.

“இந்தக் குரு வம்சத்தின் முன்னோர்களில் முக்கியமானவனும் முதல் சக்கரவர்த்தியும் ஆன பரத மஹாச் சக்கரவர்த்தி அமர்ந்திருந்த இந்த சிங்காதனத்தில் இப்போது ஓர் இளம் இளவரசன் அமர வேண்டும்,. குரு வம்சத்தினரின் அதிர்ஷ்டங்களை எல்லாம் அவன் தன் கைகளில் வைத்திருக்கிறான். இந்த நாட்டை எவ்விதமான முன்னேற்றப் பாதையில் பரதச் சக்கரவர்த்தி எடுத்துச் சென்றாரோ அத்தகைய முன்னேற்றத்தை விட அதிகமான முன்னேற்றங்களையும், வளத்தையும், வெற்றிகளையும் இந்நாடு இனி இவ்வம்சத்து இளைய தலைமுறையினர் மூலம் அடையப் போகிறது. இனி இளைய தலைமுறையினருக்கு வழி விட்டு மூத்த தலைமுறையினரான நாங்கள் வழி நடத்துதல் மட்டும் ஏற்றுக் கொண்டு விலகி இருப்போம்.”

“இது தான் நானும் மன்னன் திருதராஷ்டிரனும் சேர்ந்து எடுத்திருக்கும் முடிவு. ஆகவே மக்களே, இப்போது அனைவரிலும் வயதில் மூத்தவனும் சகல தகுதிகளும் நிரம்பப் பெற்றவனும் ஆன பாண்டுவின் மூத்த குமாரன் யுதிஷ்டிரனை இந்நாட்டின் சக்கரவர்த்தியாக முடிசூட்ட முடிவெடுத்திருக்கிறோம்.” கூட்டம் கைதட்டி ஆர்ப்பரித்து, “சாது, சாது!” எனக் கோஷித்ததோடு அல்லாமல், “யுதிஷ்டிரனுக்கு ஜெயம்!” என்றும் கோஷித்தது. பீஷ்மர் தன் கரங்களை உயர்த்திக் கூட்டத்தின் கூச்சலை அடக்கினார். “யுதிஷ்டிரனின் தலைமையில், அவனுடைய திறமையினாலும், விவேகமான நடத்தியினாலும் இந்நாடு கௌரவம்  அடைவது மட்டுமின்றி மேலும் பற்பல வெற்றிகளையும் பெற்று ஒளி வீசிப் பிரகாசிக்கப் போகிறது! “

Sunday, June 7, 2015

ராஜ சபையின் நிகழ்வுகள் (தொடர்ச்சி) 3

வலப்பக்கம் கடைசியில் இருந்த வெள்ளி சிங்காதனத்தில் யுதிஷ்டிரன் அமர்ந்து கொண்டான். அதே போன்றதொரு சிங்காதனத்தில் இடப்பக்கக் கடைசியில் துரியோதனன் அமர்ந்தான். இருவரும் அவரவருக்கு உரிய இடத்தில் அமர்ந்ததும், அங்கே அவ்வளவு நேரமாக சலவைக்கல்லால் ஆன சிலை போல் நின்று கொண்டிருந்த ஒரு இளம்பெண் தன் நடவடிக்கைகளை ஆரம்பித்தாள். தன் கையிலிருந்து பெரிய மயிலிறகு விசிறியால் இருவருக்குமாகச் சேர்த்து விசிறத் தொடங்கினாள். அடுத்துக் கட்டியக்காரர்கள் நாக நாட்டரசன் ஆன மணிமானின் வரவைத் தெரிவித்தனர். அவனுக்கு ஆரியர்களின் இந்த மாபெரும் சபையில் தானும் கலந்து கொள்வது குறித்து ஏற்பட்ட மகிழ்வை வெளிப்படையாகக் காட்டிக் கொண்டான். துரியோதனனுக்கு அருகில் காணப்பட்டதொரு தங்க சிங்காதனத்தில் அமரும்படி அவனுக்கு ஒரு பணிப்பெண்ணால் காட்டப்பட அவனும் அதில் அமர்ந்தான். அடுத்து நுழைந்தவர்கள் அனைவராலும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட விராடனும், சுநீதனும். யுதிஷ்டிரன் அருகே விராடன் அமர, சுநீதன் மணிமான் அருகே அமர்ந்தான். ஒவ்வொரு முக்கிய விருந்தாளி வரும்போதும் யானை மேல் அமர்ந்திருக்கும் இசை வல்லுநர்கள் தேர்ந்ததொரு இசையை இசைத்தனர். மல்லர்கள் தங்கள் தோள்களில் தொங்கிய சங்குகளை எடுத்து அனைவருக்கும் வரவேற்பு முழக்கங்களைச் செய்தனர்.

திடீரென அதுவரை முழங்கிய இசை ஒலி நின்றது. எங்கும் அமைதி! நிச்சப்தமாக இருந்தது. அனைவரும் நுழைவாயிலையே பார்க்க, தாத்தா பீஷ்ம பிதாமகர், விதுரரின் துணையோடு உள்ளே நுழைந்து கொண்டிருந்தார். இந்த வயதிலும் சற்றும் வளையாத அவர் முதுகு, நிலைப்படியை இடிக்கும் அளவுக்கு உயரம், அனைவரையும் நேருக்கு நேர் பார்த்த கண்கள், அதில் தெரிந்த உண்மையின் ஒளி, பீஷ்மரின் முகத்தில் தெரிந்த கம்பீரம் அனைத்தையும் கண்டு சபையோர் பிரமித்தனர். மெல்ல மெல்லத் தன் அடிகளை எடுத்து வைத்து அவர் நடந்து வந்தாலும் அதில் காணப்பட்ட நிதானம், இந்த வயதிலும் அனைவரையும் கவர்ந்திழுக்கும் வண்ணம் அழகாகக் காணப்பட்ட முகம், அதில் சுற்றி வட்டமிட்டு அமைந்திருந்த தலைமயிரும், தாடியும் சேர்ந்தாற்போல் வெண்மையாகக் காணப்பட்டது, அழுத்தமான உதடுகள், ஆணையைப் பிறப்பிக்கப் போகிறேன் என்பதைச் சொல்லும் வண்ணம் அதிகாரங்களைக் காட்டிய கண்கள் இவற்றோடு வெள்ளைப் பீதாம்பரப் பட்டை அணிந்து கொண்டு அவருக்கெனத் தனியாக இருந்த கிரீடத்தைத் தரித்த வண்ணம் ஒரே ஒரு வைர ஆபரணத்தை அணிந்து கொண்டு தேவலோகத்திலிருந்து வந்த தேவதூதனைப் போல் காட்சி அளித்தார் பீஷ்மர்.

அவருக்குப் பின்னால் வந்தது யாதவர்கள் தலைவன் ஆன பலராமன். பார்க்கவே பெரும் ராக்ஷசன் போல் இருந்தான். எப்போதும் மது மயக்கத்தில் இருப்பதால் அரைக்கண்கள் மூடியே காணப்பட்டன. அனைவரையும் பார்த்து உற்சாகமாகச் சிரித்த வண்ணம் வந்தான் பலராமன். சிவந்த அவன் உடலில் நீல நிறப் பீதாம்பரத்தை அணிந்து கொண்டிருந்தான். விலை உயர்ந்த ஆபரணங்களைப் பூண்டிருந்தான். தலைமயிர் லேசாக நரைக்கத் தொடங்கி இருந்தது. தாடியை ஒழுங்காக ஒதுக்கி விட்டுக் கொண்டிருந்தான். தாத்தா பீஷ்மர்  வியாசருக்கு அருகே தனக்கெனப் போடப்பட்டிருந்த ஆசனத்தில் அமரவும் அவருக்கு அருகே பலராமன் அமர்ந்தான். அவர்கள் இருவரும் உள்ளே நுழைகையில் எங்கும் சங்குகள் ஆர்ப்பரித்தன. எக்காளங்கள் ஊதப்பட்டன. கட்டியக்காரர்கள் பெரும் குரலில் அவர்கள் வரவை முழக்கினார்கள். பீஷ்மருக்குப் பொதுமக்கள் அனைவரும், “பிதாமகருக்கு வாழ்த்துகள்! மங்களம் உண்டாகட்டும்!” என்று சொல்லி வாழ்த்தினார்கள்.

இவர்கள் வரவுக்குப் பின்னர் வந்தது திருதராஷ்டிரன். எப்போதும் துணைக்கு வரும் சஞ்சயன் கையைப் பிடித்து அழைத்துவர திருதராஷ்டிரன் மெல்ல மெல்ல வந்தான். நின்று நின்று வந்தான். வியாசரின் இடப்புறமாய்ப் போடப்பட்டிருந்த சிங்காதனத்துக்கு அவன் அழைத்துச் செல்லப்பட்டான். திருதராஷ்டிரனுக்குப் பின்னர் அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருந்த கிருஷ்ண வாசுதேவன் வந்தான். வியாசர் வரும் நேரம் கொடுக்கப்படும் இசை மரியாதைகளோடு வாசுதேவக் கிருஷ்ணனும் சரியாக அந்த நேரம் உள்ளே நுழைய வேண்டும் என்பது பீஷ்மர் வலியுறுத்திச் சொன்னது. ஆகவே கிருஷ்ணன் அப்போது தான் வந்தான். அவனுடைய சீரான உடலமைப்பு, வாசனை மிகுந்த மலர்களால் கட்டப்பட்ட அழகான மாலை கழுத்தில், தலையில் அவன் வழக்கமாக அணியும் கிரீடம், அதன் மேல் மயில் பீலி! அவன் ஆயுதமான சக்கரம் இடத்தோளில் தொங்க, கிருஷ்ணனின் சாகசங்களை எல்லாம் கட்டியம் கூறுவோரும் நாடோடிப் பாடல்கள் பாடுவோரும் பாடல்களாகப் பாட கிருஷ்ணன் வந்தான். அனைவரின் கண்களும் அவன் பக்கம் திரும்பின. இத்தனை பெயரும் புகழும் வாய்ந்த அந்தக் கிருஷ்ணன் உண்மையிலேயே இத்தனை அற்புதங்களைச் செய்திருப்பானா என்பதே பலரின் ஆச்சரியமும் கூட!

கதவருகே வந்த கிருஷ்ணன் சபையினரைப் பார்த்துக் கை கூப்பி வணங்கினான். பின்னர் சற்றே தயங்கி நின்றான். அவன் வியாசருக்காகக் காத்திருக்கிறான் என அனைவரும் புரிந்து கொண்டனர். இடுப்பில் இறுக்கிக் கட்டிய புலித்தோலுடன், தோள்கள், முகம், தோள்பட்டை ஆகிய இடங்களில் நீளமாகப் பூசப்பட்ட விபூதிப்பட்டைகள் பளீரெனப் பிரகாசிக்க சந்தனமரக்கட்டையினால் ஆன செருப்பைப் போட்டுக் கொண்டு மெல்ல மெல்ல வந்தார் வியாசர்.  கையில் தண்டத்தை ஏந்தி இருந்தார். வெகுநாட்கள் ஊரில் இல்லாத தந்தை பல நாட்கள் கழித்துத் தன் குழந்தைகளைப் பார்க்கும்போது ஏற்படும் சந்தோஷம் அவர் முகத்தில் தெரிந்தது.  வியாசர் வரும்போது அங்கே அது வரை அமர்ந்திருந்த பிராமணர்கள், ரிஷிகள், முனிவர்கள், துறவிகள் என அனைவரும் எழுந்து நின்று வணங்கினார்கள். சபை மொத்தமும் எழுந்து நின்று கொண்டு தங்கள் கைகளைக் கூப்பிய வண்ணம் வியாசரை நமஸ்கரித்தது.  சாக்ஷாத் மஹாதேவனுக்கு உரிய முரசுகளின் முழக்கங்களும், சங்குகளின் ஆர்ப்பரிப்புக்களும் மட்டுமே அப்போது கேட்டன.

நடுவாகப்போடப்பட்டிருந்த மான் தோலால் மூடப்பட்டிருந்த ஆசனத்தில் வியாசர் அமர்ந்து கொண்டார். தன் கைகளை உயர்த்தி சபை மொத்தத்துக்கும் தன் ஆசிகளைத் தெரிவித்தார். அவர் அமர்ந்ததும் அனைவரும் அமர்ந்தனர். வியாசருக்கு வலப்பக்கம் மூன்றாவதாகப் போடப்பட்டிருந்த ஆசனத்தில் கிருஷ்ணனும் அமர்ந்து கொண்டான். சபையினருக்கும் மற்றும் அரச குலத்தோருக்கும், வந்திருந்தோர் அனைவருக்கும் அக்ஷதைகளைத் தூவி பிராமணர்கள் வேத கோஷங்களைச் செய்த வண்ணம் ஆசீர்வதித்தனர்.

“பெரும் புகழ் வாய்ந்த இந்திரனால் இந்த சபையினர் அனைவரும் எல்லா நலன்களும் பெறும்படி ஆசீர்வதிக்கப்படட்டும்.

அனைத்தும் அறிந்த சூரிய தேவனால் இந்த சபையினர் அனைவரும் எல்லா நலன்களும் பெறும்படி ஆசீர்வதிக்கப்படட்டும்.

மஹாவிஷ்ணுவின் வாகனம் ஆன தெய்வீகப் பறவையான பறவைகளின் தலைவன் ஆன கருடனால் அமங்களாமனவற்றை அழித்தொழிக்கும் கருடனால் இந்த சபையினர் அனைவரும் எல்லா நலன்களும் பெறும்படி ஆசீர்வதிக்கப்படட்டும்.

ஞானத்தின் தலைவனும் குருவும் ஆன தேவகுரு பிருஹஸ்பதியால் இந்த சபையினர் அனைவரும் எல்லா நலன்களும் பெறும்படி ஆசீர்வதிக்கப்படட்டும்.

இவை முடிந்ததும், யுதிஷ்டிரனும், துரியோதனனும் தங்கள் தங்கள் ஆசனங்களில் இருந்து எழுந்து கொண்டு வியாசரின் அருகே வந்து அவருக்கு சாஷ்டாங்கமாக நமஸ்கரித்து எழுந்தார்கள். பின்னர் பீஷ்மருக்கும், திருதராஷ்டிரனுக்கும் நமஸ்கரித்து அவர்களின் ஆசிகளையும் பெற்றனர். பின்னர் இருவரும் தங்கள் ஆசனங்களுக்குத் திரும்பிச் சென்றனர். பீஷ்மர் தன் கைகளை உயர்த்திச் சைகை செய்தார். சபையில் அமைதி நிலவியது. மூச்சு விடக் கூட பயந்தாற்போல் எங்கும் அமைதி நிலவ அனைவரும் பீஷ்மர் பேசக் காத்திருந்தனர்.

Saturday, June 6, 2015

ராஜ சபையின் நிகழ்வுகள் (தொடர்ச்சி)!

நுழையும்போதே வேத பிராமணர்கள், துறவிகள், ரிஷிகள் என அமர்ந்திருக்க அவர்களுக்கென மான் தோல் ஆசனங்கள், தர்ப்பாசனங்கள் ஆகியனவும் ஆங்காங்கே போடப்பட்டிருந்தன. பின்னால் உள்ள பாகம் இரண்டு பகுதியாகப் பிரிக்கப்பட்டிருந்தது. ஒரு பாகத்தில் மக்களுக்குச் சேவைகள் செய்யும் புரோகிதர்களும், இன்னொரு பகுதியில் மற்ற நாடுகளிலிருந்து வந்திருந்த முக்கியப் பிரதிநிதிகளும் அமர்ந்திருந்தனர். சிங்காதனங்களுக்கு இடப்பக்கம் உள்ள இடத்தில் குரு வம்சத்து அரசகுலத்தைச் சேர்ந்த மற்ற முக்கியப் பிரதிநிதிகள், மற்ற க்ஷத்திரியத் தலைவர்கள் அமர்ந்திருந்தனர். அனைவரும் பூரண ஆயுதபாணியாகத் தங்கள் வீரத்தை எந்நேரமும் எடுத்துக் காட்டும்படியான வேகத்தை முகத்தில் காட்டி அமர்ந்திருந்தனர். கிராமத்தின் மஹாஜனங்கள், வியாபாரிகள், தலையில் தலைப்பாகை கட்டிக் கொண்டு விலை உயர்ந்த ஆபரணங்களை அணிந்த வண்ணம் காட்சி அளித்தனர்.

இடப்பக்கம் கடைசியில் சிற்பிகள், கைத்தொழில் செய்பவர்கள், தொழில் வினைஞர்கள்,கொல்லர்கள், தச்சர்கள் ஆகியோர் அமர்ந்திருந்தனர். முக்கிய நுழைவாயிலில் வரும் பாதை கொஞ்ச தூரத்திலேயே அகலமாக அமைந்திருந்தது.  அது சதுர வடிவ மேடை ஒன்றின் அருகே அமைந்திருந்தது. அந்த மேடையின் நடுவே அக்னி வளர்க்கும் யாககுண்டம் ஒன்று காணப்பட்டது. இதில் தான் யாகங்கள், யக்ஞங்கள் செய்வார்கள். அதன் அருகே குரு வம்சத்துப் பாண்டவர்களின் வேதகுருவான தௌம்யரும், வியாசரின் பிரதம சீடர்களான வைஷம்பாயனர் மற்றும் பௌலரும் சுற்றி அமர்ந்து வேத மந்திரங்களைக் கோஷித்துக் கொண்டு அக்னியை வளர்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் வைஸ்வதேவன் எனப்படும் அக்னியை அங்கே உருவாக்கிக் கொண்டிருந்தனர்.

அவர்களைத் தவிரவும் நூற்றுக்கணக்கான பிராமணர்கள் அமர்ந்து வேத மந்திரங்களைக் கோஷித்து அக்னியை அழைத்துக் கொண்டிருந்தனர். நான்கு கொம்புகளுடனும், மூன்று பாதங்களுடனும், ஏழு கைகளுடனும் காட்சி அளிக்கும் அக்னிக் கடவுளே! உனக்கு இரு முகங்கள்! கால புருஷனால் மும்முறை கட்டப்படுபவனே! மனிதர்களால் இருவேளையும் அக்னிஹோத்ரம் செய்யப்படுபவனே!

((இங்கே நான்கு கொம்புகள் எனச் சொல்லப்படுவது நான்குவிதமான யாகங்களைச் செய்து வைக்கும் பிராமணர்களைச் சொல்லப்படுகிறது. மூன்று பாதங்கள் என்பது ரிக், யஜுர், சாம வேதங்களைக் குறிக்கும். இரு முகங்கள் என்பது விழாக்கள், விசேஷங்கள் நடைபெறும் இரு விதங்களைக் குறிக்கும்.ஏழு கைகள் எனப்படுவது வேதத்தின் ஏழு விதமான சந்தஸ்,மற்றும் கால புருஷனால் கட்டப்படுவது என்பது ஒரு நாளின் மூன்று காலங்களான காலை, மதியம், இரவு ஆகியவற்றால் கட்டப்படுவதையும் குறிக்கும்.) {Vedicmetre= “சந்தஸ்” பொருள் உதவி: திருமூர்த்தி வாசுதேவன், நன்றி.}

சந்தனக்கட்டைகளை அக்னியில் இடும்போது வரும் மணமும், அக்னியில் சேர்க்கும் நெய்யின் மணமும் சேர்ந்து அந்த அறையே கலவையானதொரு மணத்தில் திகழ்ந்தது. அதோடு கிழக்கில் இருந்து வந்த சூரியக் கதிர்கள் தங்கமயமான ஒளியைப் பாய்ச்சி அந்த அறையையே ஒரு சொர்க்கபுரி போல் காட்டியது. அக்னி குண்டத்திலிருந்து வந்த புகை கருமேகம் போல் காட்சி அளித்தது. அக்னியிலிருந்து அரும் ஒளியும், சூரிய ஒளியும் ஒன்றோடொன்று போட்டி போட்டுக் கொண்டு பிரகாசித்தது. சிங்காதனங்களுக்கு அருகே வலப்பக்கமாகப் போடப்பட்டிருந்த மான் தோல் ஆசனத்தில் வியாசரின் மகனான சுக முனிவர் இடுப்பிலும் மான் தோலையே ஆடையாகத் தரித்துக் கொண்டு மழுங்க மொட்டை அடித்த தலையோடும், வபனம் செய்து கொண்ட முகத்தோடும் உடல் முழுக்க விபூதியைப் பட்டையாகப் பூசிக் கொண்டு காட்சி அளித்தார்.

சுகருக்கு அடுத்தபடியாக குரு வம்சத்தவரின் படைத்தளபதியும் ஆயுதப்  பயிற்சி அளிக்கும் குருவும் ஆன துரோணாசாரியார் அமர்ந்திருந்தார். அவர் அமர்ந்திருந்த தோரணையே அவருக்கு அங்கே இருக்கும் முக்கியத்துவத்தை உணர்த்தியது. ஒரு எச்சரிக்கை உணர்வோடு அங்குமிங்கும் சுற்றிப் பார்த்தவண்ணம் தன் கைகளில் நாண் இழுத்துக் கட்டப்படாத வில்லை ஏந்திய வண்ணம் காட்சி அளித்தார். அவரின் மைத்துனரும், குருவம்சத்தினரின் ஆதி குருவும் ஆன கிருபாசாரியாரும் துரோணரின் அருகே அமர்ந்திருந்தார். கிருபர் தன் கைகளில் அங்குசத்தை ஏந்தி இருந்தார். இவர்களுக்கு அடுத்தபடியாகப் பாண்டவர்களில் யுதிஷ்டிரனைத் தவிர மற்ற சகோதரர்கள் நால்வரும் தங்களுக்கென இடப்பட்டிருந்த ஆசனங்களில் அமர்ந்திருந்தனர். இவர்கள் நால்வரில் பீமன் மட்டும் தன் தேக வலிமையாலும், பெரிய உருவத்தாலும் தனித்துக் காணப்பட்டான். அங்கிருந்த அனைவரையும் பார்த்துச் சிரித்தவண்ணம் அமர்ந்திருந்த பீமனுக்கு அருகே அர்ஜுனன் விலை உயர்ந்த பட்டுப் பீதாம்பரத்தை அணிந்த வண்ணம், சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டு தனக்குத் தெரிந்தவர்களை அடையாளம் கண்டு கொண்டும், சிலரைப் பார்த்துச் சிரித்தும், சிலரைப்பார்த்துத் தலையை ஆட்டியும் தன் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டிருந்தான். அவனுடைய புத்திசாலித்தனத்தை வெளிக்காட்டும் கண்களால் கூடி இருந்த கூட்டத்தினரின் மனோநிலையை அளவிட்டுக் கொண்டிருந்தான். அவன் அருகே அமர்ந்திருந்த நகுலனோ, தன் கண்களாலேயே கூடி இருந்த மக்களின் மனோநிலையை  அளப்பவன் போலப் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் அருகே இருந்த சஹாதேவனோ எந்த வித உணர்வையும் வெளிக்காட்டாமல் அமைதியாகவும்,சாந்தமாகவும் தரையைப் பார்த்த வண்ணம் அமர்ந்திருந்தான். அவர்களோடு உத்தவனும்,சாத்யகியும் அமர்ந்திருந்தனர்.

மேடையின் இடப்பக்கமாக இருந்த இருக்கைகளில் மந்திரிமார்களில் முக்கியமான குனிகர் அமர்ந்திருந்தார். இவர்களைத் தவிரவும் விதுரருக்கும், சஞ்சயனுக்கும் அங்கே இருக்கைகள் போடப்பட்டிருந்தன. இவர்களை எல்லாம் தாண்டி இருந்த இருக்கைகளில் ஒன்றில் ஷகுனி அமர்ந்திருந்தான். தந்திரக்காரன் ஆன ஷகுனி அப்போது என்ன தந்திரத்தை யோசித்தானோ! அவன் தந்திரங்களை வெளிப்படுத்தும்  அவன் கண்கள் அங்குள்ள மக்களையும் கூடி இருந்த மற்றோரையும் பார்த்தவண்ணம் அங்குமிங்கும் அலை பாய்ந்தன. அவர் அருகே இருந்த கர்ணன் அலையமாகவும், வெறுப்பாகவும் பாண்டவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் மனதின் குரோதம் கண்களில் தெரிந்தது. அவன் அருகிலிருந்த அஸ்வத்தாமாவும் மனதின் குரோதம் கண்களில் தெரியப் பாண்டவர்களைக் கடுமையாகப் பார்த்துக் கொண்டிருந்தான். அவர்களுக்குப் பின்னால் துஷ்சாசனன் தன் மற்ற சகோதரர்களோடு அமர்ந்திருந்தான். அனைவருமே தங்களுக்குப் பொருந்தாத சூழ்நிலையில் தங்களுக்கு இக்கட்டான சூழ்நிலையில் இருப்பதை ஒவ்வொரு அசைவிலும் வெளிக்காட்டிக் கொண்டிருந்தனர்.

சிங்காதனங்கள் போடப்பட்டிருந்த நடுமேடைக்கு நேர் பின்னால் இருந்த கதவு திறக்க அதன் வழியே இரு பிரதானிகள் நுழைந்து கைகளில் தங்கக் கோல்களை ஏந்திய வண்ணம் அறைக்கதவின் இருபக்கங்களிலும் பக்கத்துக்கு ஒருவராக நின்று கொண்டனர். அதன் வழியே கட்டியக்காரகள் கட்டியம் கூறி அறிவிக்க யுதிஷ்டிரனும், துரியோதனனும் நுழைந்தனர். அனைவரும் எழுந்து இளவரசர்களுக்கு வணக்கம் தெரிவிக்க, அங்கிருந்த பிராமணர்களும், மற்றும் துறவிகள், ரிஷிகள் ஆகியோர் மட்டும் தங்கள் கரங்களை உயர்த்தி ஆசிகளைத் தெரிவித்தனர்.

Monday, June 1, 2015

ராஜ சபையில் விறுவிறுப்பான நிகழ்வுகள்!

சூர்யோதயம் ஆகி நான்கு நாழிகைகளுக்கு மேல் ஆனதும் ராஜ சபை கூடியது. பீஷ்மர் முக்கியமான அதிகாரிகள், மந்திரிகள், சிற்றரசர்கள் போன்றோருக்கு அழைப்பு விடுத்திருந்தார். சக்கரவர்த்தி சிங்காதனத்தில் அமர்ந்து சபையைக் கூட்டி நடத்துவதற்கென இருந்த அறையில் இது ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அனைவரும் அங்கே கூடி இருந்தனர். சபை கூடப் போவதையும் மற்ற தேசங்களில் இருந்து அரசர்கள், சிற்றரசர்கள் வருகின்றார்கள் என்பதையும் அறிந்திருந்த நகர மக்கள், அன்று விடிகாலையில் இருந்தே மாளிகைகளின் முன்னால் இருந்த மைதானங்களில் கூடி விட்டனர். அனைவரும் ஒரு எதிர்பார்ப்போடு ஏதோ நடக்கப் போகிறது என்று காத்திருந்தனர். ராஜ சபையின் முக்கியமான இடம் விறுவிறுப்பான நடவடிக்கைகளில் மூழ்க ஆரம்பித்தது. சாலையின் இரு மருங்கிலும் ஆயுதங்கள் தாங்கிய வீரர்கள் அணி வகுத்து நின்றிருந்தனர். எட்டு யானைகள் நன்றாக அலங்கரிக்கப்பட்டு பட்டுத்துணியால் போர்த்தப்பட்டு முகபடாம் ஜொலிக்க நின்று கொண்டிருந்தன. யானை அசையும்போதெல்லாம் அவற்றின் மேலிருந்து தொங்க விடப்பட்டிருந்த மணிகள் காற்றிலும், யானையின் அசைவிலும் ஒலியை இனிமையாக எழுப்பின.

அரசவைப் பாடகர்கள், பேரிகைகள் முழக்குவோர், எக்காளம் ஊதுபவர்கள், சங்கு ஊதுவோர், புலவர்கள் போன்றோரும் நடன மாதர்களும் அங்கே தயாராகக் காத்திருந்தனர். கட்டியக்காரர்கள் ஒரு வரிசையில் நின்று ஒவ்வொரு முக்கிய விருந்தாளியின் வரவின் போதும் அவர்கள் வரவை அறிவிக்க இன்னொருவன் ஹஸ்தினாபுரச் சக்கரவர்த்தியின் சார்பாக அவர்களை வரவேற்றான். மன்னர்கள் பயணம் செய்து வந்த குதிரைகள், ரதங்கள், யானைகள், பல்லக்குகள் ஆகியன அரண்மனை வளாகத்திற்கு வெகு தொலைவிலேயே நிறுத்தப்பட்டு அங்கிருந்து அரச மரியாதைகளுடன் அழைத்து வரப்பட்டனர். மன்னர் சார்பில் விதுரர் தாமே நேரில் அங்கே நின்று கொண்டு அனைவரையும் வரவேற்றார்.  விரைவில் சபா மண்டபம் நிறைந்து போயிற்று. சபாமண்டபத்தின் நுழைவாயிலுக்கு நேர் எதிரே ஒரு அழகான மண்டபம் நடுவில் காணப்பட்டது. கோபுரம் போல் உயர்ந்து காணப்பட்ட அங்கே ஒன்பது சிங்காதனங்கள் காணப்பட்டன. எல்லாவற்றிலும் சிங்க முகம் செதுக்கப்பட்டுக் காணப்பட்டது. வலப்பக்கமாக ஐந்தும், இடப்பக்கமாக நான்கும் இருந்தன. இரண்டு பக்கமும் உள்ள கடைசி சிங்காதனம் வெள்ளியால் ஆக்கப்பட்டிருக்க மற்றவை எல்லாம் சொக்கத்தங்கமாக இருந்தது. அங்கே ஒரு மரப்பெஞ்சும் காணப்பட்டது. அதன் மேல் மான் தோல் போட்டு அலங்கரிக்கப்பட்டிருந்தது. அங்கே தான் வியாசருக்கு அமர இடம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது என அனைவரும் அறிந்தனர்.

எல்லா சிங்காதனத்தின் பின்னும் ஒரு அழகான பெண் அழகாக அலங்கரித்துக் கொண்டு கைகளில் சாமரங்களுடன் அரச குலத்தினர் அமர்ந்ததும் அவர்களுக்கு சாமரத்தால் விசிறத் தயாராகக் காத்திருந்தனர். ஆங்காங்கே இருந்த தூண்களில் குலைகளோடு கூடிய வாழை மரங்கள் கட்டப்பட்டிருந்தன. அங்கிருந்த சுவர்களின் முன்னால் மல்லர்கள் தங்களைச் சால்வைகளாலும் நல்ல பட்டாடைகளாலும் அலங்கரித்துக் கொண்டு தங்கள் பலத்தைக் காட்டிக் கொண்டு நின்றிருந்தனர். சிங்காதனங்களுக்கு அருகே பலியா தன் பலமற்ற கால்களின் துணையோடு நின்று கொண்டிருந்தான். அவனருகே துணைக்கு அவன் மகன் சோமேஸ்வர் நின்று கொண்டிருந்தான். சோமேஸ்வர் கரங்களில் ராஜ குலத்தினர் பயன்படுத்தும் ஓர் அழகான அலங்காரமான குடை காணப்பட்டது. ஓரங்களில் தங்க மணிகள் தொங்க உள்ளே முழுதும் ஜரிகை வேலைப்பாட்டுடன் காணப்பட்டது அந்தக் குடை.

இம்மாதிரியான அரசகுல சம்பிரதாயங்களை பாண்டவர்களின் தகப்பன் ஆன பாண்டு இறந்ததிலிருந்து கடைப்பிடிக்கவில்லை. ஏனெனில் பீஷ்மர் தான் சிங்காதனம் ஏற மாட்டேன் என சபதம் செய்திருக்க, திருதராஷ்டிரனோ பிறவிக் குருடாதலால் சிங்காதனம் ஏறும் தகுதியை இழந்து பெயருக்குத் தான் அரசனாக வீற்றிருந்தான். இங்கேயும் அரசகுலத்தவருக்கு எனத் தனியாக அமர்த்தப்பட்ட கட்டியக்காரர்கள் அவரவர் ஆசனத்தில் அமரும்போது அவரவர் தகுதியையும், விருதுகளையும், திறமைகளையும் எடுத்துச் சொல்லத் தயாராகக் காத்திருந்தார்கள்.  நுழைவாயிலில் இருந்து நேரே ஒரு நடைபாதை சென்றதால் அந்த சபா மண்டபத்தை அது இரு பிரிவாகப் பிரித்திருந்தது. இருபக்கமும் அழைக்கப்பட்ட முக்கிய விருந்தாளிகள் அமர்ந்திருந்தனர். ஒவ்வொருவருக்கும் தனியாக அமரும்படி பட்டுக்கயிறுகளால் ஆசனங்கள் தடுக்கப்பட்டிருந்தன.