Tuesday, June 23, 2015

யுதிஷ்டிரனுக்கே பட்டம்! பீஷ்மர் அறிவிப்பு!

“யுதிஷ்டிரன் தன் திறமை, விவேகம், ஞானம் ஆகியவற்றால் என் தந்தையும் குரு வம்சம் கண்ட மாபெரும் சக்கரவர்த்தியும் ஆன ஷாந்தனு கண்ட கனவுகளை எல்லாம் நனவாக்குவான். அடுத்ததாக ஒரு முக்கிய முடிவு. இது வரையிலும் யுவராஜாவாக இருந்து வந்த நம் அருமை மகன் ஆன துரியோதனன் அந்தப் பதவியிலேயே நீடிப்பதோடு அல்லாமல் அரசன் ஆன யுதிஷ்டிரனுக்கு ராஜாங்க காரியங்களில் பெரும் உதவிகளையும் செய்வான் என எண்ணுகிறோம். எந்த அளவு விசுவாசத்தோடும், ஈடுபாட்டோடும் எங்களுக்குச் சேவை செய்தானோ அதே அளவு விசுவாசத்தையும், ஈடுபாட்டையும் யுதிஷ்டிரனுக்கும் காட்டுவான் என நினைக்கிறோம். “ பீஷ்மர் இதைச் சொன்னதுமே அந்த மாபெரும் சபையில் நிசப்தம் ஏற்பட்டது. அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். துரியோதனன் முகம் மிகவும் பயங்கரமாக மாற அவன் சகோதரர்களும் கடுமையான முகபாவத்தைக் காட்டினார்கள். அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். கர்ணன் முகம் க்ரோதத்தில் கொதிக்க அஸ்வத்தாமாவோ தன் கொடூரமான பார்வையை பிதாமகர் பீஷ்மர் பக்கம் திருப்பினான்.

இது எதைப் பற்றியும் கவலையே இல்லாமல் பீஷ்மர் தொடர்ந்தார்:”நாம் குலகுருவும் மூத்தவரும் ரிஷிகளில் சிறந்தவரும் ஆன வேத வியாசரின் ஆசிகளோடு முடிசூட்டு விழா நாளையிலிருந்து ஐந்தாம் நாளன்று ஆரம்பம் ஆகும். சூரிய உதயம் ஆகி ஒரு கடிகைக்குப் பின்னர் ஆரம்பிக்கும் பட்டாபிஷேஹ விழா, கிரஹங்களின் சேர்க்கையின் மூலம் கிடைக்கப்பெற்ற நல்ல நேரத்தில் நடைபெறும். இது தான் எங்கள் முடிவு.”

“இந்த எங்கள் முடிவை நீங்கள் அனைவரும் ஆதரிக்க வேண்டும். இன்று வரை எங்களிடம் நீங்கள் அனைவரும் காட்டி வரும் விசுவாசத்தையும், ஆதரவையும் யுதிஷ்டிரனுக்கும் அளித்து அவன் நல்லாட்சி புரிய உதவ வேண்டும்.” பீஷ்மர் தன் பேச்சை முடித்தார்!

“மங்களம் உண்டாகட்டும்! யுதிஷ்டிரனுக்கு ஜெயம்!” என்றெல்லாம் கோஷங்கள் எழுந்தன. ஒரு சிலர், “பிதாமகருக்கு ஜெயம்!” என பீஷ்மருக்கும் வெற்றி முழக்கங்களை எழுப்பினார்கள். இந்த முழக்கங்கள் நின்றதும் சற்று நேரம் இடைவிடாமல் சங்கங்கள் ஊதப்பட்டன. உடனே அனைத்து வாத்தியங்களும் தங்கள் முழக்கங்களை எழுப்பச் சிறிது நேரம் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமான முழக்கங்களை வாத்தியங்கள் எழுப்பின. பீஷ்மர் மீண்டும் அவற்றை நிறுத்தும் வண்ணம் கைகளால் சைகை செய்தார். பின்னர், “இப்போது நம் அரசப் பிரதிநிதியாக இருந்து வரும் திருதராஷ்டிரன் பேசுவான்.” என அறிவித்தார். திருதராஷ்டிரன் கைகள் நடுங்கின. தன் கைகளை நெற்றியின் மேலே வைத்துக் கொண்டு தலை கவிழ்ந்தான். அவன் உதடுகள் கோணிக்கொண்டன. ஆனாலும், அவன் மெல்லப் பேச ஆரம்பித்தான். மிகவும் பலவீனமான தொனியில் அவன் பேச ஆரம்பித்தான்.

“ஆசாரியர் வியாசர் அவர்களே, மரியாதைக்குரிய தாத்தா பீஷ்மர் அவர்களே, இங்கு கூடியிருக்கும் மாட்சிமை பொருந்திய அரசர்களே, மற்றும் திறமையும் வலிவும் வாய்ந்த க்ஷத்திரியப் பெருமக்களே! இப்போது பீஷ்மர் அறிவித்தவற்றை நீங்கள் அனைவரும் கேட்டீர்கள். எனக்கு அவற்றில் முழு ஒப்புதல் உள்ளது. என் முழுமனதோடு அவர் சொன்னவற்றை நான் ஆமோதிக்கிறேன். பீஷ்மரின் முடிவு நியாயமானது. முறையானது. தேவகுருவான பிரஹஸ்பதியை ஒத்த அறிவு படைத்த பீஷ்மப் பிதாமகர் பிரஹஸ்பதியை விட அறிவிற் சிறந்ததொரு முடிவை எடுத்துள்ளார். இதை விடச் சிறந்த முடிவை எவராலும் எடுக்க முடியாது என்பதோடு இங்கே வருகை தந்திருக்கும் ஆசாரியர் வேத வியாசர், ரிஷிகளுக்குள் சிறந்தவரின் ஆசிகளும் இந்த முடிவுக்குக் கிடைத்துள்ளது. இந்த முடிவின் மூலம் நமக்குச் சிறப்பானதொரு அரசாட்சியும் கிடைக்கும். அதன் பலன்களையும் நாம் அனுபவிக்க இருக்கிறோம்.”

“என் தம்பி பாண்டுவின் மூத்த மகன் ஆன யுதிஷ்டிரனுக்கு என்னுடைய நல்லாசிகளை நான் தெரிவித்துக் கொள்கிறேன். குரு வம்சத்திலே சிறந்ததொரு இளவரசன் ஆன யுதிஷ்டிரன் இனி அரசப் பொறுப்பையும் ஏற்றுத் திறம்பட நிர்வகித்து நல்லாட்சியைத் தருவான் என உறுதிபடக் கூறுகிறேன்.” இதைச் சொல்கையில் திருதராஷ்டிரன் குரல் தழுதழுத்துச் சற்றே அவன் பேச்சை நிறுத்தும்படி நேரிட்டது. பின்னர் தன்னைச் சமாளித்துக் கொண்ட அவன் மேலும், “தர்மத்தின் பாதையிலும், குரு வம்சத்தினரின் பாரம்பரியத்தைக் காக்கும் விதத்திலும் யுதிஷ்டிரனின் ஆட்சி நடைபெறும் என உறுதியாக நம்புகிறேன்.”

“என் அருமை யுதிஷ்டிரா! மாட்சிமை பொருந்திய இளவரசே! என்றும் என் நினைவுகளில் நீங்கா இடம் பிடித்திருக்கும் என் அருமைத் தம்பி பாண்டுவின் குமாரனே! தாத்தா பீஷ்மர் உன்னை அரசனாகத் தேர்ந்தெடுத்ததில் இருந்து அவர் மிகச் சரியானதொரு முடிவை எடுத்திருப்பதை உணர முடிகிறது. நீ அரசன் ஆனதும், நான் இந்த அரசப் பதவியை விட்டு விலகி உனக்கு வழிகாட்டியாக இருப்பேன். இனி என் மகன்கள் துரியோதனனும், மற்றவர்களும் உன் பொறுப்பு! நீ பார்த்து அவர்களுக்கு எது நன்மையோ, எது நியாயமோ அதைச் செய்வாய்! அதன் மூலம் உங்களுக்கிடையே நட்பு வலுப்படட்டும். சகோதரர்களுக்குள்ளே ஒற்றுமை ஓங்கினால் தான் குடும்பம் சிறக்கும். இந்தக் குரு வம்சம் சிறந்தால் தான் இந்த நாட்டுக்கும் நல்லாட்சி கிடைக்கும். நாடும் செழிக்கும்.”

அனைவரும் “சாது, சாது!” என கோஷித்து இதை ஆமோதித்தார்கள். இதற்கு மேல் பேசமுடியாத திருதராஷ்டிரன் தன் பேச்சை நிறுத்திவிட்டு முகம், வாய் போன்ற இடங்களை ஒரு பட்டுத் துணியால் துடைத்தான். பீஷ்மரின் கண் பார்வையின் மூலம் அவர் தான் பேச வேண்டும் என்று விரும்புவதைப் புரிந்து கொண்ட யுதிஷ்டிரன் எழுந்து நின்றான். பெரியோர்கள் அனைவருக்கும் தன் வணக்கங்களைத் தெரிவித்துக் கொண்டான். பின்னர் சபையைப் பார்த்த வண்ணம் நின்றவன் தன் இருகரங்களையும் கூப்பினான். அவன் மனதில் உள்ள ஆர்வத்தையும், அவன் உண்மையாக நடப்பவன் என்பதையும் அவன் முகமும் கண்களும் காட்டிக் கொடுக்க யுதிஷ்டிரன் பேச ஆரம்பித்தான்.
“ஆசாரியரே, முனிசிரேஷ்டர்களே, என் பிரியமான தாத்தா அவர்களே, மாட்சிமை பொருந்திய மன்னர் பெரியப்பா திருதராஷ்டிரன் அவர்களே, அனைவருக்கும் என் நமஸ்காரங்கள். மிக மிகப்பணிவோடும், வணக்கத்தோடும் என் மீது நீங்கள் அனைவரும் சுமத்தி இருக்கும் இந்த மாபெரும் பொறுப்பை ஏற்கிறேன்.” சற்றே நிறுத்திய யுதிஷ்டிரன் மீண்டும் வணக்கத்துடனும், பணிவுடனும் பேசியதாவது:--

“என் மேல் நீங்கள் கொண்டு நம்பிக்கையும், விசுவாசமும் பொய்த்துப் போகாமல் நான் நல்லாட்சி புரிய விண்ணுலகத்து தேவர்களும், கடவுளரும் உதவுவார்களாக! அதற்குத் தேவையான மனோபலத்தை எனக்கு நல்குவார்களாக! குரு வம்சத்தினரின் இந்த நீண்ட நெடிய பாரம்பரியத்தையும், அரச தர்மத்தையும் நான் கட்டிக்காப்பேன் என உறுதி கூறுகிறேன்.”

“என் சக்திக்கு உள்ளபடியும், என் சகோதரர்கள் மற்றும் குருவம்சத்து அனைத்துப் பெரியோர்களின் உதவியினாலும், ஒரு காலத்தில் சக்கரவர்த்தி பரதனால் ஏற்படுத்தப்பட்ட இந்த மாபெரும் சாம்ராஜ்யம் வலுவாக விளங்கும்படி பாதுகாப்பேன்; சக்கரவர்த்தி சாந்தனு அவர்களால் விஸ்தரிக்கப்பட்ட இதன் விஸ்தீரணம் சற்றும் குறையாமல் பாதுகாப்பேன்; அவருக்குப் பின்னால் இதோ என் அருமைத் தாத்தா பீஷ்மர் இந்த நாட்டுக்கெனவே உயிர் வாழ்பவர் அவரின் கனவுகளை நனவாக்குவேன்; அவர் போட்ட அஸ்திவாரத்தின் மேல் இந்த சாம்ராஜ்யக் கட்டிடத்தை வலுவாகவும், பெரிதாகவும் எழுப்புவேன்.”

“இதை நான் உறுதிபடக் கூறுகிறேன். நான் பக்தியுடன் வணங்கும் கடவுளர் சாட்சியாகவும், இங்குள்ள அனைத்துப் பெரியவர்கள் சாட்சியாகவும், நான் பணிவுடனும், அர்ப்பணிப்புடனும் பணியாற்றுவேன்.”

“எல்லாம் வல்ல மஹாதேவனை நான் தர்மத்தின் வழி நடந்து நல்லாட்சி தரவும், அரச தர்மத்தைப் பாதுகாக்கவும், அதற்கேற்ற உடல் வலுவையும், மனோவலுவையும் எனக்குத் தந்து அருளவும் பிரார்த்திக்கிறேன்.”

“மாட்சிமை பொருந்திய மன்னா! பெரியப்பா திருதராஷ்டிரரே! நீங்கள் இன்று வரை எங்களுக்குத் தந்தையாகவே இருந்துள்ளீர்கள்! இல்லை….இல்லை…. தந்தையிலும் மேலானவராக இருந்திருக்கிறீர்கள். என் மதிப்புக்கும், மரியாதைக்கும் உரிய தாத்தா பீஷ்மரே! நீங்கள் எங்களை மிகவும் அருமையான முறையில் நல்வழிப்படுத்தி உள்ளீர்கள். உங்கள் கட்டளைகளை நாங்கள் சிரமேற்கொண்டு நடத்தி வைப்போம். உங்கள் விருப்பங்களை நாங்கள் எங்களுக்கு நீர் அளித்த கட்டளைகளாகக் கருதி நிறைவேற்றி வைப்போம்.”

1 comment:

ஸ்ரீராம். said...

கர்ணனை, துரியோதனனைப் பேச அழைக்கிறேன்!