Wednesday, December 17, 2014

பீஷ்மரின் யோசனை!

“தாயே, நாம் இவற்றிலிருந்து தப்ப முடியாது.  தப்பிச் செல்லும் வழியையும் பார்க்கக் கூடாது.  இந்த நாட்டையும் இதன் அரசாட்சியையும் காக்கவேண்டியது நம் பொறுப்பு.  நம் தர்மம். அதிலிருந்து நாம் எக்காரணத்தைக் கொண்டும் விலகக் கூடாது. கடைசி வரைக்கும் நாம் நம் முயற்சிகளைத் தொடரவேண்டும்.  நம்மால் செய்ய முடிந்ததைச் செய்து கொண்டே இருக்க வேண்டும். நம் உயிரைவிட மேலான இந்த நாட்டுக்கு நம் கடமையைச் செய்தாக வேண்டும். ஒருவேளை துரியோதனன், கர்ணன், அஸ்வத்தாமன், துஷ்சாசனன் ஆகியோரின் உதவியோடு இந்த ஹஸ்தினாபுரத்தை ஆள ஆரம்பித்தான் எனில்! நம் கட்டுப்பாடுகளையும் மீறி அப்படி நடந்ததெனில்! இங்கே எதுவுமே புனிதமாக இருக்காது.  நல்லவை எதுவும் நடைபெறாது.கடவுளருக்கே மதிப்பில்லாமல் போய்விடும்.  பெண்கள் அவமதிக்கப்படுவார்கள். பெரியோரைக் கேவலமாக நடத்துவார்கள்.  கால்நடைகளைக் கூடத் துன்புறுத்துவார்கள். முக்கியமாக நாம் கடவுளென மதிக்கும் ஆநிரைச் செல்வங்களைத் துன்புறுத்துவார்கள். எந்த ரிஷியும், முனிவரும் இங்கே ஆசிரமங்கள் அமைத்துப் பாடசாலைகள் அமைத்து மாணாக்கர்களுக்குப் போதிக்க முன்வர மாட்டார்கள்.  வேதங்கள் கற்ற வேதியர்கள் இங்கே வரவே அஞ்சுவார்கள். தர்மம் சுக்குச் சுக்காக நொறுங்கிவிடும்.:

“ஆனால் காங்கேயா! ஆனால் இது துரியோதனன் ஆட்சிக்கு வந்தால் தானே நடக்கும்? நாம் இங்கிருந்தாலும் இல்லை என்றாலும் துரியோதனன் ஆட்சிக்கு வந்தான் என்றால் மட்டுமே இவை நடக்கும் அல்லவா? அவனை வரவிடாமல் செய்து விட்டால்?” பீஷ்மரின் முகத்தையே ஆவலுடன் பார்த்தாள் சத்யவதி.
“ஆம், தாயே, பெரியோரை நிந்திப்பவர்கள் இருக்கும் குடும்பங்களில், குடும்பமே நசித்துப் போகிறது.  அது போல் பெரியோரை நிந்திக்கும் இளைஞர்கள் ஆட்சியாளர்கள் ஆனால் அந்த ராஜ்யத்தின் கதி! நினைக்கவே முடியவில்லை. ஆட்சியாளர்கள் சரியில்லை எனில் ஆட்சியும் நல்லாட்சியாக இருக்காது.  தர்மத்துக்கு அங்கே வேலையில்லை.  தர்மம் விலகிவிடும். அதர்மம் கூத்தாடும். ஆகையால் தாயே, நாம் நம்மால் முடிந்ததைச் செய்துவிடுவோம். அது வெற்றியடைவதும், தோல்வியடைவதும், கடவுளின் கைகளில் இருக்கிறது.”

“காங்கேயா, என்ன நடந்தாலும், எது நடந்தாலும் நீ பாண்டவர்களுக்குக் கொடுத்த வாக்கினை நிறைவேற்றியே ஆகவேண்டும். அது நம்முடைய தர்மம்.”

யோசனையுடன் நிமிர்ந்து பார்த்தார் பீஷ்மர்.  “யுதிஷ்டிரன் மூத்தவன் தாயே!  அவன் இருக்கும்போது அவனுடைய உரிமைகளை நாம் இன்னொருவருக்கு எவ்வகையில் தூக்கிக் கொடுக்க முடியும்? “திட்டவட்டமாகச் சொன்ன பீஷ்மர் மேலும் தொடர்ந்தார்:” தாயே, ஏற்கெனவே துரியோதனனின் விருப்பத்துக்கு இணங்கி பாண்டவர்களை நான் வாரணாவதத்துக்கு நாடு கடத்தியதே என்னை இன்னும் முள்ளாய்க் குத்துகிறது.  அந்தக் குற்ற உணர்விலிருந்தே நான் இன்னமும் மீளவில்லை. நான் பலஹீனன் ஆகிவிட்டேன் தாயே! அப்படிச் சொன்னதன் மூலம் மாபெரும் பாவம் புரிந்திருக்கிறேன்.  அந்தப் பாவத்திற்கு நான் இப்போது பரிகாரம் தேடி ஆகவேண்டும்.”

“ஹூம், க்ருஷ்ண த்வைபாயனன் மட்டும் இப்போது இங்கிருந்தால்!  ஆஹா, அவன் இங்கே இருக்கமாட்டானா என நான் மிகவும் எதிர்பார்க்கிறேன். இவ்வளவு பிரச்னைகள் நிறைந்த இந்தச் சூழ்நிலையில் அவனால் தக்கதொரு யோசனை கூறமுடியும் என நினைக்கிறேன்.”  சத்யவதிக்குத் தன் மகன் கிருஷ்ணத்வைபாயனர் என்னும் வியாசரின் நினைவு வந்தது.

“ஆம், தாயே, தாங்கள் சொல்வது சரியே!  ஆனால் ஒரு விஷயத்தில் நான் உறுதியாக இருக்கிறேன். யுதிஷ்டிரன் தான் ஹஸ்தினாபுரத்தின் சிம்மாதனத்தில் ஏற வேண்டும். அதுதான் நான் செய்த பாவத்துக்குச் சரியான பரிகாரம்.  ஒருவேளை இதுவே பீஷ்மனின் கடைசிச் செயலாக இருக்கும்!” பீஷ்மர் மீண்டும் யோசனையில் ஆழ்ந்தார்.

Monday, December 15, 2014

சத்யவதியின் கலக்கம்!

“சுவர்ணப்ரஸ்தத்தையும், பானிப்ரஸ்தத்தையும் ஆள்வதற்கு துரியோதனனுக்கு எவ்வகையில் ஆக்ஷேபணை இருக்க முடியும்?”

“தாயே, துரியோதனன் ஹஸ்தினாபுரத்தை விட்டுச் சென்றுவிடுவதாகச் சொல்கிறான்.  அதைக் கேட்ட திருதராஷ்டிரனோ அவன் சென்றுவிட்டால் தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகச் சொல்கிறான். துரியோதனனும் இங்கேயே இருந்தால் தற்கொலை செய்து கொள்வானாம்.”

“கோழைகள்! கோழைகள்! அதிலும் துரியோதனன் மிகவும் கோழை! அவனுடைய ஆசைகள், விருப்பங்கள் அவை நன்மை தரக்கூடியன அல்லவென்றாலும் அவை நிறைவேறாவிட்டால் உடனே தற்கொலை செய்து கொள்வதாக அனைவரையும் பயமுறுத்துவான்.  இதுவே அவன் வழக்கம். அது இருக்கட்டும் மகனே!  நீ துரியோதனனை சமாதானப் படுத்தி இருக்கவேண்டும். யுதிஷ்டிரன் அரசனாவதற்கு துரியோதனனை பக்குவப் படுத்தி இருக்க வேண்டும்.  அவனிடம் நீ இது குறித்துப் பேசி ஒப்புக்கொள்ள வைக்கவில்லையா?”

தன் மகனைப் பார்த்துத் தயையுடன் சிரித்த தாயைப் பார்த்த பீஷ்மர் முகத்தில் வருத்தம் தாண்டவமாடியது. “தாயே, துஷ்சாசனும், விகர்ணனும் சற்று நேரத்திற்கு முன் தான் என்னை வந்து பார்த்தனர். துஷ்சாசனனின் சூழ்ச்சியும் தந்திரமும், கபடமும் தாங்கள் அறியாதது அல்ல.  அவன் என்ன சொல்கிறான் தெரியுமா? யுதிஷ்டிரனை அரசனாக்கினால் அவனும் அவன் சகோதரர்களும் காந்தாரத்துக்குச் சென்று விடுவார்களாம்.”

“ஓஹோ, அப்படியா விஷயம்?  அவ்வளவு தூரத்துக்குப் பேச ஆரம்பித்து விட்டனரா?”

“இன்னும் மோசமாகப் பேசினான். என் வாழ்நாளிலேயே முதல்முறையாக பரதன் பிறந்த குலத்தில் பிறந்த ஒரு வாரிசு தன் மூத்தோரை மதியாமல் எதிர்த்துப் பேசுவதுடன் அவர்கள் கட்டளைகளை ஏற்கவும் மறுக்கிறான்.  இன்றுவரையிலும் இப்படி ஒருவனை நான் பார்த்தது இல்லை. “பீஷ்மர் இதைச் சாதாரணமான குரலில் சொல்ல நினைத்தாலும் அவரால் முடியவில்லை.  அவர் மனவேதனை குரலில் தெரிந்தது.

“அப்படியா சொன்னான்?  அதுவும் உன்னிடமேவா? காங்கேயா!  என்ன இது!”

“ஆம் தாயே, என்னிடமே அப்படித் தான் சொன்னான். அதை நன்றாக உணர்ந்து தான் சொல்லி இருக்கிறான்.  அந்த இடத்திலேயே அவன் மண்டையில் ஒன்று போடலாமா எனக் கோபம் வந்தது. ஆனால் அதனால் என்ன பலன்?  எதுவும் இல்லை. என்னை நானே அடக்கிக் கொண்டேன்.”

“ம்ம்ம்ம், இதைக் குறித்து ஆசாரியர் துரோணர் ஏதேனும் அறிவாரா?”

“தாயே!  அவர் அறியாதது இல்லை.  இதுவும் தெரியும் அவருக்கு.  இன்னமும் அதிகம் தெரிந்திருக்கும். துரியோதனனை அவர் ஆதரிக்கவில்லை எனில் அஸ்வத்தாமா துரோணரை விட்டுச் சென்றுவிடுவதாக அவரிடம் மிரட்டினான் என்று துரோணர் என்னிடம் சொன்னார். அவன் அப்படிச் செய்யக் கூடியவனே.  அதே போல் துரோணரைக் குறித்தும் தாங்கள் அறிவீர்கள். அவருடைய ஒரே மகன் சம்பந்தப்பட்டிருக்கும் எந்த விஷயத்திலும் அவர் பலஹீனம் வெளிப்படும்.  மகனிடம் அவ்வளவு பாசம் அவருக்கு!”

சற்று நேரம் எதுவும் பேசாமல் யோசனையில் ஆழ்ந்த சத்யவதி பின்னர் உள்ளார்ந்த கவனத்துடன் பேச ஆரம்பித்தாள்.  அவள் குரலின் ஆழத்திலிருந்து அவள் இதில் உறுதியாக இருப்பது தெரிந்தது. “காங்கேயா!  இந்த நாட்டுக்கு அரசன் ஆவதற்கு யுதிஷ்டிரனே தகுதி வாய்ந்தவன். அவனே சரியான வாரிசு.  அவனை அரசனாக்குவதே சரியானது.  அவனை ஹஸ்தினாபுரத்தை விட்டுச் செல் என எவரும் கேட்க முடியாது.  அதே சமயம் துரியோதனனின் விபரீத ஆசைகளைக் குறித்தும் நாம் அறிவோம். அவன் எண்ண ஓட்டத்தை நாம் புரிந்தே வைத்திருக்கிறோம். யுதிஷ்டிரன் அரசன் ஆவதற்கோ, பாண்டவர்கள் ஐவரும் இங்கேயே வசிப்பதையோ துரியோதனன் முற்றிலும் விரும்ப மாட்டான்.” அப்போது இருந்த சூழ்நிலையைக் குறித்து விவரித்த சத்யவதி மேலும் யோசனையில் ஆழ்ந்தாள்.

“ஆம், தாயே, ஆம், யுதிஷ்டிரனை மட்டும் நாம் மன்னன் ஆக்கிவிட்டோம் எனில் சகோதரச் சண்டை நிச்சயம்.  பெரியப்பன் மக்களும், சிற்றப்பன் மக்களும் ஒருவருக்கொருவர் அடித்துக்கொள்வார்கள். அதனால் நாட்டில் ஓர் உள்நாட்டு யுத்தமே ஏற்பட்டுவிடும். அதோடு இல்லை தாயே,  திருதராஷ்டிரன் மக்கள் ஹஸ்தினாபுரத்தை விட்டுச் சென்றார்களானால் அவர்களோடு சேர்ந்து நம் ஆசாரியர்களும், படைகளின் தளபதிகளும் ஆன துரோணாசாரியாரும், அவர் மைத்துனர் கிருபாசாரியாரும் கூட அவர்களோடு சென்றுவிடுவார்கள். தன் மக்கள் அனைவரும் சென்றுவிட்டார்களெனில் திருதராஷ்டிரன் மட்டும் இங்கேயே இருப்பானா என்ன? அவனும் சென்று விடுவான். குரு வம்சத்தின் சாம்ராஜ்யமே மெல்ல மெல்லச் சரியத் துவங்கும்.”

நீண்ட பெருமூச்சு விட்டாள் சத்யவதி. “நான் இப்படி எல்லாம் நடக்கும் என்று நினைக்கவே இல்லை மகனே!  என் வாழ்நாளில் என் சந்ததியினர் தங்கள் பாட்டனை எதிர்ப்பார்கள்; நான் அதைக் காண நேரும் என்றே நினைக்கவில்லை.  இதைப் பார்க்கவா நான் உயிருடன் இருக்கிறேன்! இந்தக் குழந்தைகளுக்காக நீ எவ்வளவு செய்திருக்கிறாய்!  அவர்கள் தகப்பனை விட நீ தான் இந்தக் குழந்தைகளை மிக அருமையாக வளர்த்து ஆளாக்கினாய்!  அனைவரையும் வீரர்களாக்கி மகிழ்ந்திருக்கிறாய்! அவர்களுக்கு என்ன தேவையோ அவற்றைச் சரியான சமயத்துக்கு அவர்களுக்குக் கிடைக்கச் செய்து பார்த்தாய். உன்னுடைய வார்த்தையை அவர்கள் மீற முடியாச் சட்டமாக அல்லவோ மதிக்க வேண்டும்!”

“தாயே, உலகம் மாறிக் கொண்டு வருகிறது.  இந்நாட்களில் மூத்தோருக்கு மரியாதை செய்வது என்பது குறைந்தே வருகிறது.” பீஷ்மர் எவ்விதமான உணர்ச்சியும் இல்லாமல் வறட்டுக் குரலில் கூறினார்.

“காங்கேயா, நாம் நீண்டநாட்களாக வாழ்ந்து வருகிறோம் அல்லவா?  அதை நீ உணர்ந்திருக்கிறாய் அல்லவா?” இவ்வளவு நாட்கள் வாழ நேர்ந்தது குறித்த வருத்தம் குரலில் இழையோட சத்யவதி மேலும் பேசினாள்.” நாம் வானபிரஸ்தம் செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது.  நாம் இங்கே இருக்கக் கூடாது.  காட்டிற்குச் செல்ல வேண்டும்.  இதை நான் எப்போதோ செய்திருக்க வேண்டும்.  ஆனால் க்ருஷ்ண த்வைபாயனன் தான் தடுத்துவிட்டான்.  இது சமயமல்ல என்று கூறிவிட்டான். என்னை வற்புறுத்தி நாட்டில் தங்க வைத்து விட்டான்.”Saturday, December 13, 2014

பீஷ்மரின் கவலை!

பீஷ்மருக்கு அவர் இவ்வளவு வருடங்களாகக் கட்டிக் காத்து வந்ததொரு மாபெரும் சாம்ராஜ்யத்தின் அஸ்திவாரமே ஆட்டம் கண்டாற்போலவும், எந்நேரமும் இடிந்து விழுந்துவிடுமோ என்னும் அச்சத்திலும் இருப்பதாக உணர்ந்தார்.  இந்த இளைஞர்கள் அவர் காலத்தில் இருந்தவர்களைப் போல் அல்ல.  உலகம் ஒவ்வொரு நொடியும் மாறிக் கொண்டு வருகிறது.  மாறி வரும் சூழலில் இவர்களது எண்ணங்களும் மாறுபடுகின்றன. நம் காலத்தில் இருந்தாற்போல் எதுவும் இப்போது இல்லை.  ம்ம்ம்ம்ம்ம்ம்ம்………. என்ன செய்யலாம்?  ஆம், அது தான் சரி.  பீஷ்மர் தன் சிறிய தாயாரும் இன்றளவும் அவருடன் இந்த சாம்ராஜ்யத்தின் விஸ்தரிப்புக்கும் ஸ்திர நிலைமைக்கும் பாடுபட்டுக் கொண்டு அவரோடு தோளோடு தோள் கொடுத்துக் கொண்டிருக்கும் மகாராணி சத்யவதியைக் கண்டு அவளோடு ஆலோசனை செய்ய விரும்பினார்.


யோசனையுடன் ஒவ்வொரு அடிகளையும் நிதானமாக அளந்து நடப்பது போல் நடந்த வண்ணம் சத்யவதியின் மாளிகையை பீஷ்மர் அடைந்தார். அவரை அங்கே கண்டதுமே காவலுக்கு என நிறுத்தப்பட்டிருந்த சேடிப் பெண்கள், பூனையைக் கண்டதும் பறந்தோடும் கிளிகளைப் போல ஓட்டமாக ஓடி விட்டனர். ராணி சத்யவதி தன் வழக்கப்படி அங்கே சுவற்றில் அமைக்கப்பட்டிருந்ததொரு பிறையில் பொருத்தப்பட்டிருந்த மகாதேவன், அந்த சங்கரன் உருவச் சிலையைப் பார்த்த வண்ணம் மௌனத்தில் ஆழ்ந்திருந்தாள். கடவுளருக்கெல்லாம் கடவுளான அவரிடம் என்ன வேண்டுகிறாள்? வருடங்கள் பல ஓடியும் சத்யவதியின் எழில் குறையவில்லை.  அவள் வயதுக்கேற்ற சுருக்கங்களையும்  அவள் மேனியில் காணமுடியவில்லை. அவள் அழகுக்கு அழகு சேர்ப்பது போல் அவள் தன் நரைத்த மயிரை எடுத்துக் கட்டியிருந்த விதம் கிரீடம் ஒன்றை அவளுக்குச் சூட்டியது போல் அமைந்துவிட்டது.  இதனால் அவள் கம்பீரமும், எழிலும் அதிகம் தான் ஆனது.


வெகு சிலரையே அவள் பார்க்க அனுமதித்தாள்.  ஆனாலும் அவளை ஒரு முறை பார்ப்பவர்களை  அவள் எழில் மட்டுமின்றி வெளிப்படையான அவள் மன உறுதியும், ஹஸ்தினாபுரத்தின் முன்னேற்றத்துக்குப் பாடுபடும் அவள் குணமும் கவர்ந்து விடும்.  அவள் எதிரே பீஷ்மர் அமர்வதற்கென தங்கத்தகடு வாய்ந்ததொரு ஆசனம் போடப்பட்டது. பீஷ்மர் சத்யவதியை விடச் சில ஆண்டுகள் மூத்தவராக இருந்தாலும் அவளுக்குத் தாய் என்ற ஸ்தானத்தில் மரியாதை செய்யத் தவறியதில்லை.  அது போலவே இப்போதும் அவள் கால்களில் விழுந்து தன் வணக்கத்தைத் தெரிவித்துக் கொண்டார். தன் மூத்தாளின் மகனின் சிரசில் தன் கைகளை வைத்து ஆசீர்வதித்த சத்யவதி ஒரு அன்பான புன்முறுவல் மூலம் தான் பீஷ்மர் மேல் வைத்திருக்கும் பாசத்தை வெளிப்படுத்தினாள்.


“அமர்ந்து கொள் காங்கேயனே!  உன்னைப் பார்த்தால் மாபெரும் குழப்பத்தில் இருப்பது போல் தெரிகிறதே!  என்ன விஷயம்?” இவ்வுலகமே மறந்துபோன அவருடைய உண்மைப் பெயரான காங்கேயன் என்னும் பெயரில் இன்று வரை சத்யவதி மட்டுமே அழைக்கிறாள். இவ்வுலகு அவரைக் கடுமையான சபதம் எடுத்த அதைக் கடுமையாகக் கடைப்பிடிக்கும் பீஷ்மராகவே அறிந்திருக்கிறது. சத்யவதி கேட்டதற்கு பீஷ்மர் சற்று நேரம் மறுமொழி கொடுக்கவில்லை. பின்னர் மெதுவாக, ஒவ்வொரு வார்த்தையையும் ரகசியம் பேசுவது போன்ற குரலில் சொன்னார். “தாயே, நாம் மிகவும் மோசமானதொரு சூழ்நிலையை இப்போது எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது. ஆம், மோசமானதொரு சூழ்நிலை!”


பரிதாபம் பொங்க பீஷ்மரைப் பார்த்த சத்யவதி அது மாறாத குரலிலேயே அதே சமயம் விஷயத்தைத் தெரிந்து கொள்ளும் ஆர்வத்துடன் , “என்ன விஷயம்?” என்று கேட்டாள். “திருதராஷ்டிரன் இன்று காலை என்னைப் பார்த்தான் தாயே!  கண்களில் கண்ணீருடன், “பிதாமகரே, தயவு செய்து துரியோதனனை ஹஸ்தினாபுரத்தை விட்டு அனுப்பி விடாதீர்கள்.” என்று வேண்டினான். அவன் எல்லாவற்றிலும் களைத்துச் சளைத்துப் போனவனாகத் தென்பட்டான்.”


சத்யவதியின் ஆச்சரியம் அவள் குரலிலும், கண்களிலும் வெளிப்படையாகவே தெரிந்தது.  “என்ன?  ஹஸ்தினாபுரத்தின் யுவராஜா துரியோதனனை ஹஸ்தினாபுரத்திலிருந்து அனுப்புவதா?  இதில் எவருக்கும் சம்மதமில்லையே!  எவரும் இப்படிச் சொல்லவும் இல்லையே! அவன் இங்கேயே இருக்கட்டும்;  இருப்பான். யுவராஜாவாகவே!”


“தாயே, அவனை அப்படி இருக்கச் செய்வதில் ஆபத்து நிறைந்திருக்கிறது. நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள் தாயே!  வாரணாவதத்தில் என்ன நடந்தது என்பதைத் தாங்கள் அறிவீர்கள் தானே! பாண்டவர்களின் உயிரை எடுப்பதில் துரியோதனன் கிட்டத்தட்ட ஜெயித்து விட்டான். விதுரனின் சமயோசிதம் பலிக்கவில்லை எனில்!  பாண்டவர்கள் உயிருடன் இருப்பது எங்கே!”


“அதெல்லாம் சரிதான் மகனே!  ஆனால் இப்போதோ யுதிஷ்டிரனை அரசனாக்கப் போகிறோம். அரசனை அவனால் எப்படி எதிர்க்க முடியும்? இயலாத காரியம் மகனே!”


“இல்லை தாயே, தாங்கள் துரியோதனனைச் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை.  அவன் முன்னெப்போதையும் விட இப்போது மிகவும் மோசமானவனாக, பயங்கரமானவனாக ஆகி விட்டான். அதோடு இல்லாமல் அதிகாரத்தின் ருசியையும் அனுபவித்து விட்டான். யுதிஷ்டிரனோ அவன் சகோதரர்களோ இங்கில்லாமல் தனியாகப் பதவி சுகம் கண்டுவிட்டான். அனைத்து வளங்களையும் தன் ஆதிக்கத்திற்குள் கொண்டு வந்துவிட்டான். தன்னைப் பின்பற்றும் ஒரு கூட்டத்தை உருவாக்க இவை அனைத்தும் தேவை என்பதை உணர்ந்து கொண்டு அப்படியே நடந்து கொண்டு தனக்காக ஒரு தனிக் கூட்டத்தை உருவாக்கியும் விட்டான்.  அஸ்வத்தாமா துரியோதனனின் சிறந்த நண்பனாகி விட்டான்.  ஆகவே அஸ்வத்தாமா மீது அளவு கடந்த பாசம் வைத்திருக்கும் துரோணர் எந்த அளவுக்கு யுதிஷ்டிரனுக்கு உதவுவார் என்பது கேள்விக்குறி!  யுதிஷ்டிரன் துரோணரை நம்ப முடியாது. துரியோதனன் ஹஸ்தினாபுரத்திலேயே தொடர்ந்து இருந்தான் எனில், பாண்டவர்கள் ஐவரும் அவனுடைய தயவிலும், கருணையிலும் தான் உயிர் வாழ வேண்டும்.”

Sunday, December 7, 2014

இந்தக் கிழவன் தான் நம் முதல் எதிரி!

பீஷ்மர் தன் வாழ்க்கையில் நிகழ்ந்த முக்கியமான நிகழ்வுகளைக் குறித்துத் திரும்பத் திரும்ப யோசிக்கையில் அவரைச் சந்திக்க துரியோதனனின் சகோதரன் துஷ்சாசனனும், விகர்ணனும் வருவதாக அவருக்குத் தெரிவிக்கப்பட்டது.  பீஷ்மரின் மலர்ந்த முகத்தில் கருமேகம் போல் நிழல் படர்ந்தது. இந்த கௌரவர்கள் சும்மாவே இருப்பதில்லை. எப்படியேனும் பாண்டவர்களுக்குத் தொந்திரவு கொடுக்கவே எண்ணுகின்றனர்.  அவர்களுடைய தந்திரமான வேலைகளின் மூலம் எதிர்பாரா வண்ணம் ஒரு பெரிய சங்கடத்தை உண்டு பண்ண நினைக்கின்றனர்.  தைரியமாக வெளிப்படையாக அவர்கள் இதைச் செய்கின்றனர்.  என்ன துரதிர்ஷ்டம்!  அவருடைய நீண்ட நெடிய வாழ்விலே அவர் பேச்சை மீறி எவனும் இந்த ஹஸ்தினாபுரத்தில் நடந்ததில்லை.  அவர் சொல்லுக்கு மறு சொல் இருக்காது.  ஆனால் இப்போதோ!  இந்தக் கௌரவர்கள் ஆட்டி வைக்கின்றனரே!  இப்படிப் பட்டதொரு நிலைமையை அவர் வாழ்க்கையில் முதல் முறையாக அனுபவிக்கிறார்.

துஷ்சாசனனும், விகர்ணனும் உள்ளே வந்து எப்போதும் போல் அவர் கால்களில் விழுந்து நமஸ்கரித்தனர்.  வாய் பேசாமல் கைகளால் அவர்களை ஆசீர்வதித்த பீஷ்மர் இருவரையும் உற்று நோக்கினார்.  காந்தத்தைப் போன்ற தன் கண்களால் அவரையே பார்த்தான் துஷ்சாசனன்.  அவன் பார்வையும், அவன் ஒரு தீர்மானமான முடிவில் இருப்பதைச் சொல்லாமல் சொன்னது. தீர்க்கமான முகவாய் அவன் தன்னம்பிக்கையை எடுத்துக் காட்டியது.  யார் என்ன சொன்னாலும் அதிலும் பீஷ்மர் சொன்னால் கூட நிலை குலையாத உறுதியான மனம் கொண்டவன் என்பது அவன் பார்த்த ஒரு பார்வையே சொல்லிற்று. மாறாக விகர்ணன் சாந்தமான முகபாவத்தோடு பார்க்கையிலேயே அனைவரையும் ஈர்க்கும் நல்ல உள்ளம் கொண்டவன் என்பது தெரியும்படி இருந்தான். பார்வையாலேயே இருவரையும் அமரச் சொன்னார் பீஷ்மர்.  சிறிது நேரம் அங்கே அமைதி நிலவிற்று.

பீஷ்மரும் தன் ஆசனத்தில் அசையாமல் அமர்ந்த வண்ணம் துஷ்சாசனையே உற்றுக் கவனித்துக் கொண்டிருந்தார்.  துஷ்சாசனன் வாயைத் திறப்பதாகத் தெரியவில்லை. விகர்ணன் நெளிந்தான்.  அவனுக்கு அந்த நிலை அசௌகரியமாகத் தெரிந்தது.  துஷ்சாசனை நோக்கித் தன் பார்வையைத் திருப்பியவன் அவனையே சம்பாஷணையை ஆரம்பிக்கும்படி ஜாடை காட்டினான்.  துஷ்சாசனன் ஆரம்பித்தான்.

“தாத்தா அவர்களே, எங்களுடைய முடிவை உங்களுக்குத் தெரிவித்துக்கொள்ளவே நாங்கள் இங்கே வந்திருக்கிறோம்.  தயை செய்து ஏற்றுக் கொள்ளுங்கள்.” என்றான் துஷ்சாசனன்.

“சொல்” என்றார் பீஷ்மர் சற்றே முரட்டுத்தனமாக அதே சமயம் சுருக்கமாகக் கூறினார்.

“மாட்சிமை பொருந்திய தாத்தா அவர்களால் இந்த நாட்டுக்கு யுதிஷ்டிரன் அரசனாகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருப்பதாகத் தெரிகிறது.”

பீஷ்மர் முகத்தில் எவ்விதச் சலனமும் இன்றிக் கேட்டுக் கொண்டிருந்தார்.  எந்த பதிலும் தரவில்லை.  விகர்ணன் முகம் பயத்தில் வெளுத்தது. துஷ்சாசனனுக்கோ மேற்கொண்டு என்ன சொல்வது எப்படி ஆரம்பிப்பது என்பது புரியவில்லை.  கொஞ்சம் தன்னை நிதானித்துக் கொண்டு தைரியத்தை வரவழைத்துக் கொண்டு மேலே பேச ஆரம்பித்தான்.

“தாத்தா அவர்களே! எங்களை மன்னியுங்கள்.  நாங்கள் கௌரவர் நூற்றுவரும் சேர்ந்து ஒரு முடிவு எடுத்துள்ளோம்.  யுதிஷ்டிரன் மன்னன் ஆனால்  நாங்கள் எவரும் அவனுக்குக் கீழே பணி புரிய மாட்டோம்.”

பீஷ்மர் இப்போதும் அசைந்து கொடுக்கவில்லை.  துஷ்சாசனன் குழப்பத்தை அதிகரிக்கும் வண்ணமாக மேலும் மௌனத்தையே கடைப்பிடித்தார்.  அதே சமயம் அவன் சொல்வதைத் தான் கவனித்து வருவதையும் காட்டிக் கொண்டார்.  என்றாலும் எவ்விதமான பதிலும் கொடுக்கவில்லை.

“யுதிஷ்டிரன் மன்னன் ஆகிவிட்டால், அடுத்த நிமிடமே நாங்கள் ஹஸ்தினாபுரத்தை விட்டுச் சென்று விடுவோம்.”

“சரி,” என்றார் பீஷ்மர் குரலில் எவ்வித உணர்ச்சியும் காட்டாமல்.

துஷ்சாசனன் தடுமாறினான்.  திகைத்துப் போனான்.  தன் உதடுகளைக் கடித்துக் கொண்டான்.  பின்னர் தன் தொண்டையைச் சரி செய்து கொண்டு மேலும் பேச ஆரம்பித்தான். “ எங்களுக்கு உங்கள் அனுமதி வேண்டும், தாத்தா அவர்களே!  நாங்கள் ஹஸ்தினாபுரத்தை விட்டுச் சென்று காந்தாரத்தில் எங்கள் தாய் வழிப்பாட்டனார் சுபலாவுடன் வசிக்கப் போகிறோம்.  அங்கே செல்ல தங்கள் அனுமதி வேண்டும்.”

தீர்க்கமாக துஷ்சாசனையே பார்த்தார் பீஷ்மர்.  பின்னர், “நான் அனுமதி கொடுக்கப் போவதில்லை!” என்று ஒரே வார்த்தையில் முடித்தார்.

கோபத்திலும், வெட்கத்திலும் அவமானம் தாங்க முடியாமலும் துஷ்சாசனன் முகம் சிவந்து விட்டது.  பாட்டனை எதிர்க்க வேண்டும் என்னும் உணர்வு அவனை அறியாமல் பீறிட்டு எழுந்தது.  “நாங்கள் இங்கிருந்து கிளம்பி விடுவோம்.  ஆம் கிளம்பி விடுவோம்!” என்று முணுமுணுத்துக் கொண்டான்.  இந்தக் கிழவன் படு பொல்லாதவனாக இருக்கிறானே! தன் கட்டுப்பாடுகளை அறவே இழந்தான் துஷ்சாசனன். பெரியவர்கள் முன்னர் ஆரிய வர்க்கத்து இளவல்கள் நடந்து கொள்ளும் முறையையும் முற்றிலும் மறந்தான்.  ஆனால் பீஷ்மரோ எதற்கும் கலங்காமல் அவனையே கோபப் பார்வை பார்க்க இளைஞர்கள் இருவரும் உள்ளுக்குள் நடுங்கினர்.

துஷ்சாசனன் இப்படி ஒரு நிலைமையை எதிர்பார்க்கவில்லை.  பீஷ்மரின் கோபம் அவனுள் வியப்பையும் கோபத்தையும் ஒருங்கே விளைவித்தது.  அங்கிருந்து அவரிடம் சொல்லிக் கொள்ளாமல் கிளம்ப யத்தனித்தான். கிளம்பியும் விட்டான்.  ஆனால் இன்னமும் மரியாதை குறையாத விகர்ணன் பீஷ்மரின் கால்களில் மீண்டும் விழுந்து எழுந்து மரியாதையுடன் விடை பெற்றுக் கொண்டான்.  போகலாமா என அனுமதியும் கேட்டுக் கொண்டான்.  வாய் திறவாமல் கண் ஜாடையிலேயே அனுமதி கொடுத்தார் பீஷ்மர்.


பெரியவர்களுக்கு எதிரே முதுகைக் காட்டிக் கொண்டு செல்லக் கூடாது என்னும் பாரம்பரியத்தையும் மறந்தவனாக துஷ்சாசன் பீஷ்மருக்கு முதுகைக் காட்டித் திரும்பிக் கொண்டு அங்கிருந்து செல்ல ஆரம்பித்தான். ஆனால் பீஷ்மர் சும்மா இருக்கவில்லை.  தன் கம்பீரமான அதே சமயம் கண்டிப்பான குரலில் கூறினார். “இளைஞர்களே! நான் சொல்லி விட்டேன்.  சொன்னால் சொன்னது தான். யுதிஷ்டிரன் ஹஸ்தினாபுரத்துக்கு மன்னனாக முடிசூட்டப்படுவான்.  நீங்கள் இப்போது போகலாம்.” அவர் வார்த்தைகளில் ஒரு தீர்மானமான முடிவு தெரிந்தது.  அவர் தீர்மானித்துவிட்டார் என்பது துஷ்சாசனுக்குக் கோபத்தைக் கிளறி விட்டது.  அவன் அடக்க முடியாக் கோபத்தில் ஆழ்ந்தான். வார்த்தைகளால் விவரிக்க ஒண்ணாக் கோபத்தில் ஆழ்ந்த துஷ்சாசனன், “இந்தக் கிழவன் தான் நமக்கு முதல் எதிரி!” என்று எண்ணினான்.

Wednesday, November 19, 2014

பீஷ்மர் போடும் திட்டம்!

திருதராஷ்டிரன் காந்தார நாட்டு இளவரசி காந்தாரியை மணந்து பல குழந்தைகளைப் பெற்றெடுத்தான். அவர்களில் பலரும் குழப்பங்களையே ஏற்படுத்தினார்கள்.  பெரியவர்களிடம் மரியாதை இன்றியும் நடந்து கொண்டனர். சுய விருப்பம் மிகுந்து தன்னலமே பெரியதாய் நடந்து கொண்டனர்.  தர்மத்தைக் குறிப்பாக அரச தர்மத்தை மதிப்பதே இல்லை.  அவர்களில் மூத்தவன் ஆன துரியோதனன் பாண்டவர்கள் ஐவரில் பெரியவன் ஆன யுதிஷ்டிரனை விடச் சிறியவன்.


பீஷ்மப் பிதாமகருக்கும் வயது ஆகிக் கொண்டே இருந்தது.  ஆனால் அவர் தந்தையின் ஆசிகளாலும் மஹாதேவன் அருளாலும் அவர் நினைத்தபோது உயிரை விடலாம் என்னும் வரம் அவருக்கு இருந்தது.  என்றாலும் முதுமை அவரை வாட்டத் தொடங்கி இருந்தது.  அந்நிலையிலும் அவர் தன் பொறுப்பை மறக்காமல் தன் தம்பியின் பிள்ளைகளான பாண்டுவுக்கும், திருதராஷ்டிரனுக்கும் பிறந்த குழந்தைகளை வளர்த்தார்.  அவர்களைத் தக்க வயதில் குருகுலத்தில் சேர்த்தார்.  அவர்கள் அனைத்துக் கலைகளிலும் வல்லவர்களாக இருத்தல் வேண்டும் என்பதற்காக அரச குரு கிருபாசாரியாரிடம் கலந்து ஆலோசித்து கிருபரின் மைத்துனன் ஆன துரோணாசாரியாரைத் தன் பேரப்பிள்ளைகளுக்கு ஆசான் ஆக்கினார்.  துரோணர் பரசுராமரின் நேர் சீடர் ஆவார்.


ஐந்து சகோதரர்களும் தங்கள் குருகுல வாசத்தை முடித்ததும் பீஷ்மர் யுதிஷ்டிரனை ஹஸ்தினாபுரத்தின் யுவராஜாவாக நியமித்தார்.  யுதிஷ்டிரனும் தன் பொறுப்பைச் செவ்வனே நிறைவேற்றி வந்தான்.  அதோடு இல்லாமல் திருதராஷ்டிரன் பட்டம் ஏற முடியாமல் பாண்டுவே அரசனாக இருந்ததாலும் முறைப்படி யுதிஷ்டிரனுக்கே அந்தப் பதவி கிடைக்க வேண்டும் என அனைவரின் விருப்பமாகவும் இருந்தது.  தன் வயதுக்கு மீறிய விவேகமும், புத்திசாலித் தனமும் கொண்ட யுதிஷ்டிரனோ தன் யுவராஜா அதிகாரத்தைச் சரியான முறையிலேயே பயன்படுத்தி வந்தான்.  ஹஸ்தினாபுரத்து மக்களாலும், மற்றும் அரண்மனை ஊழியர்களாலும் மிகவும் நேசிக்கப்பட்டான்.  ஆனால் இது தொடர முடியாமல் கௌரவர்கள் என அழைக்கப்பட்ட திருதராஷ்டிரனின் மக்கள் தொந்திரவு கொடுத்தனர்.பாண்டுவின் புத்திரர்கள் நாட்டுக்கு அழைத்து வரப் பட்ட நாளில் இருந்தே அவர்களுக்கும் கௌரவர்களுக்கும் ஒருவருக்கொருவர் பிடிக்காமல் போய் விட்டது.  பாண்டவர்களைத் தங்கள் எதிரிகளாகவும், தங்கள் உரிமையைப் பறிக்க வந்ததாகவும் கௌரவர்கள் நினைத்தனர். ஆகவே அவர்களை மனமார வெறுத்ததோடு அவர்களைப் பல விதத்திலும் சிரமங்களுக்கும் உள்ளாக்கினார்கள்.  அவர்களை எப்படியேனும் கொன்றுவிடவும் சதியாலோசனை செய்தார்கள்.  இது தெரிந்த பீஷ்மர் பாண்டவர்களின் உயிரையானும் காப்பாற்ற வேண்டியும் அவர்களை இந்த மாபெரும் அரசியல் பிரளயத்திலிருந்து காக்க வேண்டியும் சிறிது காலத்துக்காக அவர்களைப் பிரிக்க எண்ணினார்.  ஆகவே வாரணாவதத்துக்கு அவர்களை அனுப்பி வைத்தார்.  ஆனால் துர் நோக்கம் கொண்ட துரியோதனன் அங்கேயும் அவர்களை நிம்மதியாக இருக்க விடாமல் மாளிகையை அரக்கினால் கட்டி அதில் ஓர் குறிப்பிட்ட நாளில் நெருப்பையும் வைக்க ஏற்பாடுகள் செய்திருந்தான்.இதை அறிந்த விதுரர் மிகவும் ரகசியமாக பூமிக்குக் கீழே சுரங்கப் பாதை கட்டி அதன் மூலம் பாண்டவர்களையும், குந்தியையும் காப்பாற்றி வெளியேற்றினார்.  தப்பிப் பிழைத்த பாண்டவர்கள் தங்கள் தாயுடன் துரியோதனனின் எல்லைக்கு வெளியே ராக்ஷச வர்த்தம் சென்று மறைந்து வாழ்ந்தனர்.  பாண்டவர்களை வெளியேற்றும்போதே அரை மனதாக அனுப்பி வைத்த பீஷ்மருக்கு அவர்கள் வாரணாவதத்தில் கொல்லப்பட்டிருக்கலாம் என்னும் செய்தி முதலில் கலக்கத்தையே கொடுத்தது.  ஆனால் பின்னர் அவர்கள் தப்பிய செய்தியும், ஆனால் ராக்ஷசவர்த்தத்தில் பல்வேறு இடையூறுகளுக்கிடையே வாழ நேர்ந்ததும் அவர் மனதை மிகவும் புண்ணாக்கி விட்டது.மீண்டும் தன் அருமைப் பேரப் பிள்ளைகளைப் பார்ப்போமா என்றிருந்த பீஷ்மருக்கு பாண்டவர்கள் ராக்ஷசவர்த்தத்தை விட்டு வெளியேறி காம்பில்யம் வந்ததும், அங்கே அர்ஜுனன் சுயம்வரப் போட்டியில் கலந்து கொண்டு திரௌபதியை வென்றதும், பின்னர் ஐவரும் திரௌபதியை மணக்க நேரிட்ட செய்தியும் மிக்க மகிழ்வைத் தந்தது.  பாண்டவர்கள் கௌரவர்களால் கொல்லப்பட்டிருக்கலாம் என்று குரு வம்சத்தினருக்கு அன்று வரை ஏற்பட்டிருந்த மாபெரும் களங்கம் மறைந்ததை எண்ணி மகிழ்ந்தார்.  அர்ஜுனன் ஆர்யவர்த்தத்தின் சிறந்த வில்லாளி, இந்தப் போட்டியில் வென்றதும் அவருக்கு மகிழ்வைத் தந்தது. இந்தச் செய்தி அவரை வந்தடைந்ததும், கர்வத்திலும் பெருமிதத்திலும் மூழ்கிப் போனார்.  தற்கால மரபுக்கு ஒவ்வாத போதிலும் திரௌபதி பழங்கால மரபை ஒட்டி ஐந்து சகோதரர்களையும் மணந்து கொண்டதிலும் அவருக்கு மகிழ்ச்சியே.இதன்மூலம் குரு வம்சத்தினருக்கும் பாஞ்சால நாட்டுக்கும் நட்பு உருவாகும். அதோடு இல்லாமல் யாதவர்கள் இப்போது பணபலம், படைபலம் மிகுந்து காணப்படுகின்றனர்.  அவர்களின் ஒப்பற்ற தலைவன் ஆன ஶ்ரீகிருஷ்ணனோ பாண்டவர்களுக்கு நட்பு ரீதியிலும், அரசியல் ரீதியிலும் பல உதவிகள் புரிந்து வருகிறான். யாதவப் படைகளே பாண்டவர்கள் பின்னால் நிற்கின்றன.  ஆம், இது தான் தக்க தருணம்.  யுதிஷ்டிரனை இப்போது தான் ஹஸ்தினாபுரம் வரவழைத்தாக வேண்டும்.  அவனுக்கு அரச மகுடம் சூட்ட வேண்டும்.  இதை விட்டால் வேறு தருணம் இல்லை.  பீஷ்மர் முடிவெடுத்தார். இதன் மூலம் துரியோதனனின் யுவராஜப் பட்டத்தைப் பறிக்க வேண்டாம்.  அவன் அப்படியே யுவராஜாவாகவே இருந்துவிட்டுப் போகட்டும். அப்படி அவனுக்கும் ராஜ்யம் ஆளும் ஆசை இருந்தால் ஸ்வர்ணப்ரஸ்தமோ, பானிப்ரஸ்தமோ ஆளட்டும்.  அவனுடையை ஆசையையும் தீர்த்து விட்டாற்போல் ஆகும்.  யுதிஷ்டிரன் அமர வேண்டிய இடம் பரதனுக்குப் பின்னர் பரம்பரையாக குரு வம்சத்தினர் ஆண்டு வந்த இந்தச் சிம்மாதனமே.  அவனுக்கே இது உரியது.இதன் மூலம் அரச நீதியும், தர்மமும் நிலை நிறுத்தப்படும்.  அதோடு இல்லாமல் துரியோதனனின் ஒவ்வொரு அசைவையும் கவனிக்க வேண்டும்.  யுதிஷ்டிரனிடம் பொறுப்பை ஒப்படைத்தாலோ அதன் பின்னர் நமக்கு வேறு கவலைகள் வேண்டாம்.  எல்லாவற்றையும் அவன் திறமையாகக் கையாளுவான்.  நமக்கும் வயதாகி விட்டது.  பொறுப்புக்களை இளம் தோளில் சுமத்திவிட்டு ஓய்வு எடுக்க வேண்டும்.  உடனே விதுரனை அழைத்த பீஷ்மர் அவரிடமும் கலந்து ஆலோசித்துவிட்டு விதுரரை உடனே காம்பில்யத்துக்கு அனுப்பி வைத்தார்.  சகோதரர்கள் ஐவரையும், குந்தியோடும், திரௌபதியோடும் ஹஸ்தினாபுரம் வரும்படி அழைப்பு விடுத்தார்.  இப்போது அவர்கள் ஐவரும் வருகின்றனர்.  வந்து கொண்டிருக்கின்றனர்.  யாதவப் படைவீரர்கள் தவிர கிருஷ்ணனும், பலராமனும் கூட அவர்களோடு வருகின்றனர்.  சுநீதனும், விராடனும் மற்றப் பல அரசர்களும், சிற்றரசர்களும் ஹஸ்தினாபுரத்தின் நட்பு நாடுகளின் அரசர்களும் அவர்களோடு வருகின்றனர்.  அவர்களை வரவேற்க வேண்டிய ஏற்பாடுகளையும் செய்து முடித்தாயிற்று.

Friday, November 14, 2014

பீஷ்மரின் நினைவோட்டம்!

இது ஒரு பயங்கரமான சபதம் என்பதை தேவ விரதன் நன்கறிவான். அவனைப் போன்ற துடிப்பும், இளமையும் நிறைந்த வாலிபர்களால் எளிதாக நிறைவேற்ற முடியாத ஒன்று என்பதையும் புரிந்து கொண்டான்.  ஆகவே அதற்காக அவன் தன்னுடைய வாழ்க்கைப் பாதையையே மாற்றிக் கொள்ள நேர்ந்தது.  வாழ்க்கையின் , இளமையின் அனைத்து இன்பங்களையும் துறந்தான். கிட்டத்தட்டத் துறவு வாழ்க்கையை மேற்கொண்டான்.  அவனைப் போன்ற இளைஞனுக்கு இயல்பாக இருக்கும் உணர்வுகளை அடக்கி ஆண்டான். தன்னலத்தையும் சிற்றின்ப வேட்கையையும் அடக்கி ஆண்டான்.  அந்த சாம்ராஜ்யத்துக்கே அசைக்க முடியாத ஒரு தூணாக மாறி உறுதியுடன் நின்றான்.  இதன் மூலம் அவனை அனைவரும், “பீஷ்மர்” பயங்கரமான சபதம் எடுத்தவன் என்னும் பொருளில் அழைக்கத் துவங்கினார்கள்.  அந்தப் பெயரே நிலைக்கவும் நிலைத்தது.


அவன் தந்தை ஷாந்தனுவுக்கு சத்யவதி மூலம் இரு பிள்ளைகள் பிறந்தனர்.  முறையே சித்திராங்கதன், விசித்திர வீர்யன் என்னும் பெயர் பெற்ற அந்த இளைஞர்கள் வளர்ந்து வருகையில் ஷாந்தனுவுக்கு முடிவு ஏற்பட பீஷ்மரே அரியணை ஏறாத அரசனாக அந்த சாம்ராஜ்யத்தைத் தன் தம்பிமாருக்குச் சரியான பருவம் வரும் வரை கட்டிக் காத்தார்.  பல போர்களைப் புரிந்தார். குருவம்சத்தின் அந்த சாம்ராஜ்யம் பீஷ்மரின் முயற்சிகளால் மேலும் மேலும் வளர்ந்து விரிவடைந்தது.  தன் தம்பிகளிடம் ஒரு தந்தையின் அன்பைக் காட்டினார்.  அவ்விதமே குரு வம்சத்து சாம்ராஜ்யத்திடமும் மாறா அன்பு கொண்டு சாம்ராஜ்யத்தைப் பல வகைகளிலும் விஸ்தரித்து வந்தார்.  தன் சிற்றன்னையின் மகன்களை நல்லதொரு குருகுலத்தில் சேர்த்து அவர்கள் அனைத்துக் கல்வியையும் கற்றுத் தேற வழி செய்தார்.  சித்திராங்கதன் இளவயதிலேயே நோயால் தாக்கப்பட்டு இறந்து போனான்.  விசித்திர வீரியனுக்கு ஏற்றதொரு அரசகுமாரியைத் தேட முடியாமல் பீஷ்மர் காசி அரசனின் இரு மகளைக் கடத்தி வந்தார்.  அவர்களைத் தன் தம்பி விசித்திர வீரியனுக்குத் திருமணம் செய்து கொடுக்க நினைத்தார்.  இதன் மூலம் விசித்திர வீரியனுக்கு வலுவும், பலமும் வாய்ந்த இளவரசர்கள் பிறந்து குரு வம்சத்தினரின் இந்த சாம்ராஜ்யம் மேலும் மேலும் வளர்ச்சி பெற்றுத் தழைத்தோங்கும் என்றும் எதிர்பார்த்தார்.  ஆனால் துரதிர்ஷ்டவசமாகக் குழந்தைகள் பிறக்காமலேயே விசித்திர வீரியனும் இறந்து போனான்.


இதன் மூலம் சாம்ராஜ்யத்தில் பல்வேறு பிரச்னைகள் தலை தூக்கின.  ஆனால் தன் கணவன் இறந்தாலும் ராஜ்யத்தில் தனக்குள்ள உரிமையை நிலைநாட்டிக் கொள்ள விரும்பிய சத்யவதி பீஷ்மரின் உதவியை நாடினாள்.  இருவருமே ஷாந்தனுவின் வம்சம் அவனோடு முடிந்து போக விடுவதில்லை என்னும் முடிவை எடுத்தனர்.   பீஷ்மரின் போற்றுதலுக்கும், வணக்கத்துக்கும் உரியவளாக இருந்த ராணிமாதா சத்யவதியும் இளமையில் அவளுக்குப் பராசர முனிவர் மூலம் பிறந்த பிள்ளையான க்ருஷ்ண த்வைபாயனர் என்னும் வேத வியாசரை அழைத்தாள்.  அவர் முனிவர்களுக்குள்ளே சிரேஷ்டராக ஆசிரமத்தில் வாழ்ந்து வந்தார். என்றாலும் தன்னைப் பெற்ற அன்னை அழைத்ததும் ஹஸ்தினாபுரம் வந்த அவர் தன் தாயின் இரண்டாவது மகனின் இரு விதவைகளுக்கும் அக்கால முறைப்படியான நியோகம் மூலம் விந்து தானம் செய்தார்.


இது ஒரு கஷ்டமான முடிவு.  ஆனால் இதை விட்டால் வேறு வழியும் இல்லை. சாஸ்திரங்களின் சம்மதமும் இதற்கு இருந்தது.  இதை ஒரு வழக்கமாக வைத்துக்கொள்ளாமல் பெண்ணுக்குக் கர்ப்பம் தரிக்கும் நேரம் மட்டுமே இருவரும் அனுமதிக்கப்படுவார்கள். இதை நடத்திக்காட்டுவதிலும் மிகவும் கஷ்டங்கள் இருந்தன.  பல்வேறு பிரச்னைகள் தோன்றின.  என்றாலும் குரு வம்சத்தினரின் அரச வம்சம் நூலறுந்து போகாமல் இதன் மூலம் காப்பாற்றப்பட்டது.  ஆனாலும் இது நல்லதொரு மக்களைத் தரவில்லை.  கிரஹங்களின் மோசமான நிலை தன் வேலையைக் காட்டி விட்டது.  அரண்மனையில்  பாவத்தின் ஆதிக்கம் மேலோங்கியது. விசித்திர வீரியனின் மூத்த மனைவியான அம்பிகா என்னும் ராணிக்குப் பிறவிக் குருடனாக திருதராஷ்டிரன் என்னும் பெயரில் ஓர் மகன் பிறந்தான்.  இரண்டாவது மனைவியான அம்பாலிகாவோ பிறவியிலேயே பாண்டு ரோகத்தால் பாதிக்கப்பட்ட ஆண் குழந்தையைப்பெற்றெடுத்தாள்.  எதற்கும் மனம் தளராமல் பீஷ்மர் அந்தக் குழந்தைகளைப் பொறுமையுடனும், அன்புடனும் வளர்த்து ஆளாக்கினார்.  அவர்களுக்குச் சிறப்பான ஆசிரியர்கள் மூலம் தக்க பயிற்சிகள் அளித்தார்.  ஒரு அரசகுமாரர்களுக்குத் தெரிந்திருக்க வேண்டிய வித்தைகள் அனைத்தையும் கற்க வைத்தார்.  இதன் மூலம் குரு வம்சத்தினரின் அரசகுலத்தின் மேன்மையையும் பாரம்பரியத்தையும் காப்பாற்றினார்.  ஆரியர்களின் பழைமையான சட்டத்தின்படி பிறவிக் குருடன் ஆன திருதராஷ்டிரன் மூத்தவனாக இருந்த போதும் ராஜ்யம் ஏற முடியாது.  ஆகவே இளையவன் பாண்டுவை ஹஸ்தினாபுரத்தின் சிம்மாதனத்தில் ஏற்றினார்.  பாண்டுவுக்கு இயல்பாக இருந்த நற்குணங்களாலும், பெருந்தன்மையான போக்கினாலும் மக்களிடம் உள்ள அன்பினாலும் சாம்ராஜ்யத்தின் மக்களிடம் பேராதரவைப் பெற்றான்.  நல்லாட்சி நடத்தி வந்தான் பாண்டு.பாண்டுவுக்குப் பிறவியில் ஏற்பட்டிருந்த ரோகம் காரணமாகவும் ரிஷி ஒருவரின் சாபம் காரணமாகவும் அவனால் மனைவியுடன் இணைந்து குழந்தை பெற முடியவில்லை.  அவன் மனைவி குந்தி வசுதேவரின் சொந்தச் சகோதரி, குந்திபோஜனால் வளர்க்கப்பட்டவள்.  அவளைத் தவிர மாத்ரி என்னும் இன்னொரு அரசகுமாரியையும் பாண்டு மணந்திருந்தான். இரு மனைவியர் இருந்தும் அவனால் தாம்பத்திய சுகத்தை நுகர முடியவில்லை.  அதனால் இருவருக்கும் குழந்தைகள் பிறக்கவே இல்லை.  ஆகவே அவன் மனம் வெறுத்து ராஜ்யத்தைத் துறந்து காட்டுக்கு ஏகினான்.  அங்கே அவனுடன் சென்ற அவன் மனைவி குந்தி பாண்டுவின் வேண்டுகோளின் பேரில் பழைய நியோக முறைப்படி மூன்று பிள்ளைகளைப் பெற்றெடுத்தாள்.  அதன் பின்னர் அவள் மறுத்ததால் அவளிடமிருந்து அனுமதியைப் பெற்றுக் கொண்டு மாத்ரியும் இரு பிள்ளைகளை இரட்டையராகப் பெற்றெடுத்தாள்.  இவர்கள் ஐவரையும் பாண்டவர்கள் என்றும் ஐந்து சகோதரர்கள் என்றும் அனைவரும் அழைத்தனர்.  யார் பார்த்தாலும் கவரும் வண்ணம் இனிய சுபாவத்துடனும், கவர்ச்சியான அழகுடனும், புத்திசாலித்தனமும், தைரியமும் நிரம்பிப் பெற்றிருந்த பாண்டவர்கள் வளர்ந்து வந்தனர். அவர்களில் மூத்தவனே யுதிஷ்டிரன்.

Tuesday, November 11, 2014

பீஷ்மரின் எண்ணங்கள்!

பீஷ்மப் பிதாமகர் ஏதோ ஆழ்ந்த சிந்தனையில் அமர்ந்திருந்தார்.  அவர் அமர்ந்திருந்த கோலம் அவர் மிக வருத்தமானதொரு மனோநிலையில் இருப்பதைக் காட்டியது.  ஒரு மாபெரும் பிரச்னை அவர் முன்னே தலை தூக்கிக் கொண்டிருந்தது.  எப்படி அதைத் தீர்ப்பது என்னும் தீர்க்கமான சிந்தனையில் அவர் ஆழ்ந்திருந்தார்.  நடக்கும் நிகழ்வுகளில் அவர் மனம் மகிழ்ச்சியுறவே இல்லை. துரியோதனனின் மனோபாவம் அவருக்குப் புரிந்தே இருந்தது.  அதே சமயம் தன்னுடைய வாழ்க்கையையும் பின்னோக்கிப் பார்க்க அவர் தயங்கவில்லை.


சிறு குழந்தைப் பருவத்திலேயே அவர் தாய் அவரை விட்டுச் சென்றுவிட்டாள்.  எல்லாக் குழந்தைகளுக்கும் கிடைத்த தாயன்பு அவருக்குக் கிட்டவே இல்லை.  புனிதமான அந்த கங்கையே மானுட வடிவெடுத்து அவருக்குத் தாயாக வந்ததாகவே அனைவரும் சொன்னார்கள்.  அவரும் அதை முழு மனதுடன் நம்பினார்.  அதனாலேயே அவரை அனைவரும் “காங்கேயன்” என அழைப்பதையும் தெரிந்து வைத்திருந்தார்.  அது முதற்கொண்டே கங்கை நதியிடம் அவருக்கு இனம் காணாத பாசம். கங்கையைப் பூரணமான அன்புடன் நேசித்து வந்தார்.  பூஜித்து வந்தார்.  தான் ஒரு தேவதைக்குப் பிறந்தவன் என்னும் எண்ணமே அவருக்கு மனதுக்குள்ளாக ஓர் பலத்தையும், வலிமையையும் கொடுத்தது.  மிகவும் பெருமிதம் அடைந்தார்.


சிறு வயதில் விபரம் புரியாமல் இருந்தபோதெல்லாம், “அம்மா எங்கே?” எனத் தன் தந்தையிடம் கேட்டிருக்கிறார்.  தந்தை பதில் சொல்ல முடியாமல் தவிப்பதையும், கண்களின் ஓரத்தில் எட்டிப் பார்க்கும் கண்ணீரையும் கண்டிருக்கிறார்.  தாய் இல்லாமல் தன்னைத் தாயின் பாசத்தையும் சேர்த்து அளித்து வளர்த்து வரும் தந்தையிடம் அபாரமான அன்பும், பாசமும் கொண்ட காங்கேயன் இனி தந்தையிடம் தன் தாயைக் குறித்த எந்தக் கேள்வியும் கேட்கக் கூடாது என உறுதி பூண்டான்.  எட்டு வயதுக்கு காங்கேயனாகிய அவர் குருகுலத்துக்கு அனுப்பப் பட்டார். அவர் குரு பராசர முனிவர்.  தன்னைச் சுற்றிலும் வியப்பும், ஆர்வமும், புதுமையும் நிறைந்த பலவிதமான கதைகளைக் கொண்டவர்.  அது ஏற்படுத்தி இருந்த பிரகாசமான ஒளிவெள்ளத்தில் காங்கேயனும் அமிழ்ந்து போனான்.  தளர்வே அடையாத அவர் குருவின் வலிமையை எண்ணி எண்ணி வியந்து போனான் காங்கேயன். அவருடைய மனோபலம் எவராலும் தவிர்க்க இயலா ஒன்று.  அத்தகைய மனோபலத்தை காங்கேயனுக்குள்ளும் உருவாக்க முயன்றார் பராசரர்.  அதில் வெற்றியும் கண்டார்.


ஆம், பதினெட்டு வயதில் வேத, சாஸ்திரங்களையும், அர்த்த சாஸ்திரம், ஆயுத சாஸ்திரம் போன்றவற்றையும் பரிபூர்ணமாகக் கற்று ஒரு அழகான அதே சமயம் உடல் வலிமையும், மனோ வலிமையும் கொண்டவனாக அவர் உருமாறி இருக்கையில் அவர் வாழ்க்கையின் மிகப் பெரிய மனோபீஷ்டம் பூர்த்தி ஆகிவிட்டதென்றே நினைத்தார். அப்போது தான் ஒரு நாள் அவர் தந்தையான ஷாந்தனு மிகவும் வருத்தமாக இருப்பதைக் கண்டார். சில நாட்களாகவே அவர் வருத்தத்தில் ஆழ்ந்திருப்பதையும் தெரிந்து கொண்டார்.  தன் தந்தையிடம் அவர் வருத்தத்தின் காரணத்தைக் கேட்டபோது அவர் தன் மகனைத் தான் மிகவும் நேசிப்பதாலும், அதன் காரணமாக ஏற்பட்ட நம்பிக்கையினாலும் மகனிடம் தன் ரகசியத்தைப் பகிர்ந்து கொண்டார்.


கங்கைக்கரையில் ஓர் நாள் உலாவிக் கொண்டிருந்த அவர் தந்தை ஷாந்தனு, ஓர் அழகிய பெண்ணை அங்கே கண்டதாகவும், அந்தப் பெண்ணின் பெயர் மத்சகந்தி என்றும், அவள் ஓர் மீனவப் பெண் என்றும் கூறினார். இவ்வுலகில் உள்ள பெண்களிலேயே இவள் தனித்தன்மை வாய்ந்தவளாகவும், மிகவும் அழகானவளாகவும், அதே சமயம் புத்திசாலித் தனத்தில் குறையில்லாமலும் இருந்தாள்.  அவள் அழகும், புத்திக்கூர்மையும் ஷாந்தனுவை ஆட்டிப் படைத்தன.  அவள் மேல் தீராக் காதல் கொண்டான் ஷாந்தனு.  அவளுக்கும் ஷாந்தனுவின் மேல் காதல் ஏற்பட்டது.  ஷாந்தனு அவளை மணக்கவும் விரும்பினான்.  அந்தப் பெண் தன் தந்தையிடம் பேசும்படி சொல்ல, அவள் தந்தையைக் கண்டு பேசினான் ஷாந்தனு.


ஆனால் அவள் தந்தை ஒரு கடுமையான நிபந்தனையைப் போட்டான்.  தன் மகள் வயிற்றில் பிறக்கும் பிள்ளையே சிம்மாதனம் ஏறவேண்டும் என்பதே அந்த நிபந்தனை.  இது ஒரு மோசமான, கொடூரமான நிபந்தனை என ஷாந்தனுவின் மனதில் தோன்றியது.  இதில் சற்றும் நீதி இல்லை என்பதும் அவனுக்குத் தெரிந்தது.  அவனுக்குப் பின்னர் சகல தகுதிகளும் வாய்ந்த அவன் மூத்த மகன் ஆன காங்கேயனே பட்டம் ஏற வேண்டும்.  அவனுக்கே இந்த அரியணை உரியது.  இதை எப்படி அவனிடமிருந்து பறிப்பது!  ஹூம், ஷாந்தனுவிற்கு இதில் சம்மதமே இல்லை.  அவன் காங்கேயனை மிகவும் நேசித்தான்.  அவனுக்கு துரோகம் செய்ய அவன் மனம் ஒப்பவில்லை.  அதே சமயம் மத்சகந்தியை அவனால் மறக்கவும் இயலவில்லை.  இரவும், பகலும், விழித்திருக்கையிலும், தூங்குகையிலும், அவள் அவன் முன்னே தோன்றிக் கொண்டே இருந்தாள்!  அவள் புன்னகையாலும் அவள் அழகிய வடிவினாலும் அவன் மன வேதனை அதிகமாயிற்றே தவிரக் குறையவில்லை.  அவளை மணந்து கொண்டு தனக்கு ராணியாக்கிக் கொள்ள மிகவும் விரும்பினான்.


தன் மகனுக்கு உரிய சிம்மாதனத்தைப் பறித்துக்கொள்ளவும் அவன் விரும்பவில்லை.  அதே சமயம் மத்சகந்தியை இழக்கவும் விரும்பவில்லை.  இந்த அசாதாரணமான நிலை அவனைத் துன்பத்தில் ஆழ்த்தியது.  இதை அனைத்தையும் கேட்ட காங்கேயனுக்கு உடனே முடிவெடுக்க ஒரு கணம் கூட ஆகவில்லை.  அவன் தந்தையிடம் தான் அரியணையை விட்டுக் கொடுப்பதாகவும், தந்தை, மீனவனைப் பார்த்து அவன் நிபந்தனையை ஏற்பதாகவும் கூறிவிட்டு மத்சகந்தியை மணக்கும்படியும் கேட்டுக் கொண்டான்.  இதற்கும் அந்த மீனவன் நம்பிக்கை கொள்ளாவிட்டால் தான் ஓர் சபதம் எடுத்துக் கொள்வதாகவும் கூறிய காங்கேயன்,  தான் திருமணமே செய்து கொள்ளாமல் வாழ்நாள் முழுவதும் பிரமசாரியாகவே கழிக்கப் போவதாகவும் கூறினான்.  திருமணம் செய்து கொள்ளப் போவதில்லை என்பதோடு அரியணைக்கு உரிமையும் கோரப் போவதில்லை என்பதையும் உறுதிபடக் கூறினான்.


அவனுடைய ஒரே அபிலாஷை அந்த சிம்மாதனத்தில் யார் அமர்ந்தாலும் அவர்களுக்கு உறுதுணையாக இருந்து சாம்ராஜ்யம் விரிவடையவும், எவ்விதத் தொல்லைகளும் இல்லாமல் மன்னன் ஆட்சி புரிய உதவுவதுமே ஆகும் எனவும் இதுவே தன் தலையாய கடமை எனவும் கூறினான்.  தன்னையோ, தன் வாழ்க்கையையோ குறித்து நினைக்காமல் சாம்ராஜ்யத்தைக் குறித்து மட்டுமே தான் இனி நினைக்கப் போவதாகவும் அதன் நலனுக்கெனவே பாடுபடப் போவதாகவும் கூறினான்.

Sunday, November 9, 2014

துஷ்சாசனன் உதவிக்கு வருகிறான்!

“என்ன சத்தியம் செய்து தரவேண்டும் மகனே?”


“என்ன நடந்தாலும் எதுவானாலும் ஹஸ்தினாபுரத்தை நான் தான் ஆட்சி புரிவேன்.  அதற்கு நீங்கள் ஒத்துழைக்க வேண்டும்.”


திருதராஷ்டிரனின் குருட்டு விழிகள் கூட ஒரு கணம் அசைந்தன.  பின்னர் தன் மகனிடம் அவன், “ஆம், இது நல்ல யோசனையாகத் தெரிகிறது மகனே!  நான் பிதாமகர் பீஷ்மரிடமும், ராணிமாதா சத்யவதியிடமும் இது குறித்துப் பேசுகிறேன்.  இருவரும் அநேகமாக இதற்கு ஒப்புதல் கொடுப்பார்கள் என எண்ணுகிறேன்.” தன் மகனின் உச்சந்தலையை மீண்டும் ஆசையுடனும், அன்புடனும் தடவிக் கொடுத்தான் திருதராஷ்டிரன்.  தன் தொண்டையில் வரவழைத்துக் கொண்ட விம்மலை அடக்கும் விதமாகத் தன் தந்தையின் பாதங்களில் முகத்தைப் புதைத்துக் கொண்டான் துரியோதனன்.  “தந்தையே, இந்தப் பரந்த உலகில் என்னை நேசிப்பார் எவரும் இல்லை.  தங்களைத் தவிர!  ஆம் தந்தையே தாங்கள் ஒருவரே என்னை மிக அதிகமா நேசிக்கிறீர்கள்.  தயங்காதீர்கள் தந்தையே. தங்கள் பவித்திரமான வாக்கை எனக்கு அளியுங்கள்.  உங்கள் மூத்த மகனாகிய நான், நான் மட்டுமே ஹஸ்தினாபுரத்தை ஆள வேண்டும் என்னும் வாக்குறுதியை எனக்கு அளியுங்கள்.”


“நல்லது மகனே, நல்லது.  உன் விருப்பம் போல் நடக்கும். நான் சத்தியம் செய்கிறேன். ஆனால் தாத்தா பீஷ்மர் என்ன நினைக்கிறார் என்பதும், என்ன செய்யப் போகிறார் என்பதும் எவர் அறிவார்கள்?”  சொன்னவண்ணம் தன் மகனுக்கு விடை கொடுத்து அனுப்பினான்.  துரியோதனனுக்குத் தான் பாண்டவர்களை எதிர்கொண்டு அழைக்க வேண்டும் என்னும் நினைப்பே மாளாத் துயரத்தைக் கொடுத்தது.  அவனால் இந்த அவமானத்தைத் தாங்க முடியவில்லை.  அவன் மனதுக்குள் ஓர் போராட்டமே நிகழ்ந்தது.  தன் மாளிகைக்குச் சென்றவனை அங்கே அவன் வரவுக்குக் காத்திருந்த துஷ்சாசனன் வரவேற்றான்.  துரியோதனனைப் போல் தோற்றத்தில் பொலிவும், அழகும் இல்லாவிட்டாலும் துஷ்சாசனனும் வாட்டம், சாட்டமாக நல்ல உயரமும் பருமனுமாகவே காணப்பட்டான்.  அதோடு அவன் தீர்க்கமான அறிவும் அவன் முகத்தில் சுடர் விட்டது.  “தந்தை என்ன சொல்கிறார்?”என துரியோதனனைக் கேட்டான்.“அவர் என்ன சொல்லப் போகிறார்! எப்போதும் போல் அவரால் எதுவும் இயலாமல் தான் இருக்கிறது.  கையால் ஆகாதவராகவே இருந்து வருகிறார்.  ஆனால் யுதிஷ்டிரனை ஹஸ்தினாபுரத்தின் சிம்மாதனத்தில் அமர்த்தாமலிருக்க வேண்டியவற்றைச் செய்வதாக எனக்கு உறுதி மொழி கொடுத்திருக்கிறார்.  அதே சமயம் ஹஸ்தினாபுரத்தின் சிம்மாதனத்தில் நான் அமர்வதற்கு வேண்டிய ஏற்பாடுகளையும் கவனிப்பதாகச் சொல்கிறார்.  இதற்காகப் பாட்டனார் பீஷ்மரிடமும், ராணிமாதா சத்யவதியிடமும் பேசுவதாகச் சொல்லி இருக்கிறார்.  அவர்கள் சம்மதிப்பார்களா என்பது தான் புரியவில்லை.  எனக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை. துஷ்சாசனா! தந்தை என்னை நகருக்கு வெளியே சென்று என் மனைவியுடன் பாண்டவர்களை எதிர்கொண்டு அழைக்கும்படி கேட்டுக் கொண்டார்.  அதற்கு நானும் உறுதிமொழி கொடுக்க வேண்டியதாகி விட்டது. “ தன் நிராதரவான நிலையை எண்ணி அப்படியே அமர்ந்து விட்டான் துரியோதனன்.  அவன் ஏமாற்றமும், வருத்தமும் குரலிலேயே தெரிந்தது.தன் அண்ணனையே பொருள் பொதிந்த பார்வை பார்த்தான் துஷ்சாசனன்.  அவன் கண்கள் ஈட்டி போல் இருந்தன.  அவன் பார்வையாலேயே அவனைப் பார்த்துக் குத்துவது போல் இருந்தது துரியோதனனுக்கு. கொஞ்சம் எரிச்சலுடனேயே துஷ்சாசனன் மீண்டும் பேசினான்:”மீண்டும் சொல்லாதே!  நான் என்ன செய்வேன் என!” என்று கோபமாகக் கூறினான்.  நீ அவர்களை எதிர்கொண்டு அழைக்கச் செல்!  உன்னால் எவ்வளவு நல்லவனாக நடிக்க இயலுமோ அவ்வளவு நல்லவனாக மென்மையான, இனிமையான வார்த்தைகளால் அவர்களை நம்ப வை.  திரௌபதியைக் குறித்து நீ என்ன நினைக்கிறாய் என்பதையும் நான் நன்கறிவேன்.  அவள் பெயரைக் கேட்டாலே என் ரத்தம் கொதிக்கிறது.  இப்போது இங்கே நேரிலும் வரப் போகிறாள்.  நாம் இப்போது அடக்கி வாசிக்கவேண்டும்.  நாம் நல்லவர்களாக மாறிவிட வேண்டும்.  அனைவரும் நம்மை நம்ப வேண்டும். ““தைரியத்தை இழக்காதே!  நாம் அவர்களுடன் தீர்க்க வேண்டிய கணக்குகள் இன்னும் முடிவடையவில்லை.  அவற்றை முடித்தாக வேண்டும்.  நாம் என்ன அவர்களைப் போல் ஐவரா?  நாம் நூற்றுவர்.  அவர்கள் ஐவர் தானே!  நம்மால் முடியாதது என்ன?  அவர்களை என்னிடம் விட்டு விடு.  நீ தந்தையை மட்டுமே கவனித்துக் கொள்.  அது போதும்.  உன்னால் அது சுலபமாக முடியும்.  ஏனெனில் அவர் உன்னை மிகவும் நேசிக்கிறார்.  எங்கள் அனைவரையும் விட உன்னைத் தான் அவருக்கு மிகவும் பிடிக்கும்.  உன்னைத் தான் அவர் விரும்புகிறார்.”“நான் அறிவேன்;  நன்கறிவேன்.  அது ஒன்றே எனக்கு ஆறுதல்!”“அது உனக்கு ஆறுதல் மட்டுமல்ல சகோதரா!  அதுவே உனக்கு பலம்!” என்று சொல்லிச் சிரித்தான் துஷ்சாசனன்.“ஆனால் தந்தை மிகவும் இயலாதவராகவே இருக்கிறார்.  தாத்தா பீஷ்மரையோ, அந்தக் கிழவி ராணிமாதா சத்யவதியையோ ஆலோசனை கேட்காமல் சுயமாக அவரால் எந்தவித முடிவுக்கும் வர முடிவதில்லை.  அவராக எந்த முடிவும் எடுக்கத் தயங்குகிறார்.”“நீ அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாதே!  தாத்தா பீஷ்மரை நான் கவனித்துக் கொள்கிறேன்.  பல நாட்களாக எனக்கு அவருக்கு ஒரு பாடம் கற்பிக்க ஆசை.  அவருக்குப் போதும், போதும் என்னும் அளவுக்கு நான் அவரைக் கவனித்துக் கொள்கிறேன்.”“அது சரி அப்பா!  ஆசாரியர்?  அவர் என்ன ஆவார்? அல்லது என்ன ஆனார்?  அவருக்கும் பாண்டவர்கள் ஐவரிடம் தான் அன்பு மிகுதியாக உள்ளது.”“அதை விடு சகோதரா!  அவருக்கும் அவர் மகன் அஸ்வத்தாமாவுக்குப் பின்னரே மற்றவர்கள்.  அவர் அஸ்வத்தாமாவை எந்த அளவுக்கு நேசிக்கிறார் என்பதை நீ அறிய மாட்டாயா?  அஸ்வத்தாமா ஏற்கெனவே துரோணாசாரியாரிடம் கூறிவிட்டான்.  என்ன தெரியுமா? யுதிஷ்டிரன் மட்டும் ஹஸ்தினாபுரத்துக்கு அரசனாக முடி சூட்டப்பட்டால் அஸ்வத்தாமா ஹஸ்தினாபுரத்தை விட்டே சென்றுவிடுவான் எனத் தெரிவித்திருக்கிறான்.  தன் அருமை மகனைப் பிரிந்து ஆசாரியரால் எப்படி இருக்க முடியும்?  அவருக்கு இதில் மிகவும் வருத்தம்.”“எனக்கு என்ன சொல்வது, என்ன செய்வது என்றே புரியவில்லை.”தன் உதடுகளை அழுந்தக் கடித்துக் கொண்ட துஷ்சாசனன் மேலும் தொடர்ந்தான்:” நேற்றைய இரவில் நாங்கள் அனைவரும் கலந்து பேசினோம்.  யுதிஷ்டிரனை ஹஸ்தினாபுரத்துக்கு அரசனாக முடி சூட்டினால் அனைவரும் ஹஸ்தினாபுரத்தை விட்டு வெளியேறுவோம்.  ஏற்கெனவே கர்ணன் அவனுடைய அங்க நாட்டுத் தலைநகருக்குச் செல்லவேண்டிய ஆயத்தங்களைச் செய்ய ஆரம்பித்துவிட்டான்.”“என்ன?  நீங்கள் அனைவருமே ஹஸ்தினாபுரத்தை விட்டுச் சென்றுவிடுவீர்களா?  என்னைத் தனியாக விட்டுவிட்டா?  எப்படி மனம் வருகிறது உங்களுக்கு?” துரியோதனன் தன் நிராதரவான நிலையை ஒரு கணம் எண்ணிப் பார்த்துவிட்டுக் கத்த ஆரம்பித்தான். “ நீங்கள் அனைவரும் இல்லாமல் நான் மட்டும் இங்கே தனியாக என்ன செய்வது?  மஹாதேவா, மஹாதேவா, என்ன நடக்கப் போகிறது?  என்னை என்ன செய்ய உத்தேசித்திருக்கிறாய்?”“எல்லாம் சரி சகோதரா.  இவை அனைத்திலிருந்து உன் மனைவியைக் கொஞ்சம் விலக்கியே வை!  அவளுக்கு மட்டும் தெரிந்துவிட்டால்!! ஆசாரியர் அவளைத் தன் அருமை மகளாகவே நினைக்கிறார்.  அந்தக் கிருஷ்ண வாசுதேவனோ தன் தங்கையாகவே நினைக்கிறான்.  இருவருக்கும் அவள் மூலம் நம் விஷயம் சென்றுவிடலாம்.  ஆகவே அவளிடம் எதையும் சொல்லிவிடாதே!  அவள் தலையிட்டு விட்டாளெனில் எல்லாமும் சர்வ நாசமாகி விடும்.”

Saturday, November 8, 2014

திருதராஷ்டிரன் கட்டளை! துரியோதனன் கேட்ட சத்தியம்!

மனம் நிறையப் பாசத்துடன் துரியோதனன் உச்சந்தலையைத் தடவிக் கொடுத்தான் திருதராஷ்டிரன்.  “மகனே, இறை சக்தியை எவரால் எதிர்த்து நிற்க முடியும்?  அந்த ஒப்பற்ற சக்தி இதை இப்படித் தான் நடக்கவிடவேண்டும் என நினைத்திருக்கிறது  துரியோதனா, யாருக்குத் தெரியும் ஐவரும் உயிருடன் இருந்திருப்பதும், திரௌபதியின் சுயம்வரச் செய்தி தெரிந்து அவர்கள் காம்பில்யம் செல்லப்போவதும் எவர் அறிந்திருந்தார்?  போனதோடு அல்லாமல் அவர்கள் அதிர்ஷ்டம் திரௌபதியை அர்ஜுனன் வென்றும் விட்டான்.  எல்லா கிரஹங்களும் அவர்களுக்கு அநுகூலமாகச் செயல்பட்டிருக்கின்றன.”


“தந்தையே, விண்ணகத்து கிரஹங்கள் மட்டுமில்லை; மண்ணகத்து மனிதர்களும் தான் அவர்களுக்கு உதவியாகச் செயல்பட்டிருக்கின்றனர்.  உங்கள் அனைவரின் போற்றுதலுக்கு உரிய உங்கள் அருமைப் பாட்டியார் மஹாமஹா ராணி சத்யவதி தேவியார், தாத்தா பீஷ்மர், விதுரச் சித்தப்பா மற்றும் ஹஸ்தினாபுரத்தின் அனைத்து மக்களும் ஒன்று சேர்ந்து அவர்களுக்காகப் பாடுபட்டிருக்கின்றனர்.  தந்தையே, தந்தையே, இந்நிலையில் கூட நீங்கள் என் பக்கம் உதவியாக எனக்குத் துணையாக நிற்காவிடில் நான் வாழ்வதில் தான் என்ன பயன்?  “மீண்டும் தன் விண்ணப்பத்தை, வேண்டுகோளைத் தெரிவிக்கும் வண்ணமாகத் தன் தந்தையின் கரங்களை இறுகப் பிடித்தான் துரியோதனன்.


“என்னால் என்ன முடியும், மகனே!  என்னால் முடிந்ததெல்லாம் எது சரியானதோ அதைச் செய்வது ஒன்றே!” திருதராஷ்டிரன் பதில் கொடுத்தான். கடுமையான கோபத்துடன் துரியோதனன், “சரி, சரி, அவர்கள் மட்டுமே எல்லாவற்றையும் சரியாகச் செய்கின்றனர்.  நான் செய்வதெல்லாம் தவறானது.  அது தானே நீங்கள் சொல்வது? அப்படியே இருக்கட்டும்.  உங்கள் மூத்த மகன் ஆன நான் எனக்கு உரிமையானதை அடைய விடாமல் அனைவரும் தடுப்பது சரியா?  அதற்கெதிராகச் சதி செய்வது சரியா? உங்கள் மூத்த மகன் ஆன நான் சக்கரவர்த்தி ஆவதற்கான முழுத் தகுதிகளும் பெற்றிருந்தும், அந்தப் பாண்டவர்கள் ஐவருக்கும் கீழ் ஓர் ஊழியனாகப் பணி புரிய வேண்டுமா?  ஏன்?  எதற்காக?  ஒவ்வொரு நாளும், அந்த பீமன், என்னை, “குருடனின் பிள்ளை” என அழைப்பான்;  அதை நான் என்னிரு காதுகளால் கேட்டுக் கொண்டு மனம் புண்ணாகித் தவிக்க வேண்டும்.  ஹூம், காம்பில்யத்தில் கூட திரௌபதியின் சுயம்வரத்திற்காகக் கூடி இருந்த அனைத்து அரசர்கள், இளவரசர்கள், மன்னாதி மன்னர்கள் கூடியிருந்த அந்த மாபெரும் சபையிலேயே பீமன் இதைத் தான் கூறினான்.  தந்தையே!  எனக்கு அப்போது எப்படி இருந்தது தெரியுமா?  அக்னியில் இறங்கி என்னை எரித்துக் கொள்ளலாமா அல்லது கங்கையில் மூழ்கி உயிரை விடுவோமா என நினைத்தேன். “ துரியோதனன் ஆக்ரோஷம் முழுதும் குரலில் வெளிப்படும்படிக் கூறினான்.


“அப்படி எல்லாம் பேசாதே மகனே!  தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தைக் கைவிடு.  வீரன் ஆன உனக்கு இது விவேகமான செயல் இல்லை.  ஆனால் நான் என்ன செய்ய முடியும்?இப்போது அதற்கெல்லாம் யோசிக்கும் அளவுக்கு நேரமில்லை.  நாளை மதியத்துக்குள்ளாக அவர்கள் அனைவரும் இங்கே வந்து சேர்ந்து விடுகின்றனர்.  யுவராஜாப் பொறுப்பில் இருக்கும் நீ தான் முன்னால் சென்று அவர்களை எதிர்கொண்டு அழைத்து வர வேண்டும்.  இல்லை எனில் தாத்தா பீஷ்மரும், பாட்டியார் மஹாராணி சத்யவதியும் கோபமும், வருத்தமும் அடைவார்கள்.  மேலும் நீயும் உன் மனைவியும் நேரில் சென்று அவர்களை அழைத்து வரும்படி பாட்டியார் சத்யவதி தனியான செய்தி ஒன்றும் அனுப்பி உள்ளார்கள்.  இப்படி ஒரு சூழ்நிலையில் நான் என்ன செய்ய முடியும்?  என்ன செய்யலாம் என்பதையும் நீயே சொல் மகனே!”


“தந்தையே,தந்தையே, ஏதானும் செய்யுங்கள்.  நீங்கள் உங்கள் மகனை உயிருடன் பார்க்க விரும்பினால் கட்டாயம் ஏதேனும் செய்ய வேண்டும்.  இவ்வுலகிலேயே உடனடியாக இறக்கத் தக்க தகுதி வாய்ந்தவர்களில் நான் முதன்மையானவன். என்னை விட துரதிர்ஷ்டசாலி எவருமில்லை.”


“அப்படி எல்லாம் சொல்லாதே என் அருமை மகனே! “ இதைச் சொல்லும்போதே துக்கம் தொண்டையை அடைக்க திருதராஷ்டிரனின் குருட்டுக் கண்கள் கண்ணீரைப் பொழிந்தன.  தன் தந்தையின் கரங்களை விடாமல் பிடித்துக் கொண்டிருந்த துரியோதனன், “நான் இறக்க வேண்டியவன், ஆம், ஆம்!” என்று முனகியவண்ணம் மீண்டும் தந்தையின் முழங்கால்களில் தன் முகத்தைப் புதைத்துக் கொண்டான்.  “இல்லை மகனே!  நீ தான் உன் மனைவியோடு சென்று அவர்களை எதிர்கொண்டு அழைத்து வர வேண்டும்.  இல்லை எனில் இந்த ஹஸ்தினாபுரத்து மக்களுக்கே உன் மேல் கோபம் தாங்காது போய்விடும்.  உன் மேல் ஆத்திரம் அடைவார்கள். ஒரு மரியாதைக்காகவேனும் நீ இதைச் செய்ய வேண்டும்.  இல்லை எனில் குரு வம்சத்தினரின் சாம்ராஜ்யத்தின் குடிமக்களே உன்னை வெறுக்கத் தொடங்கி விடுவார்கள்.”


“ஓ, அப்படியா? மக்கள் என்னை வெறுப்பார்களா?  சரி, சரி, உங்கள் கட்டளை அப்படி எனில் அதை நான் நிறைவேற்றுகிறேன், தந்தையே!  ஆனால் ஒன்று!  இந்த ஹஸ்தினாபுரத்து மக்களை நானும் வெறுக்கிறேன்.” மிகுந்த மனக்கசப்போடு கூறினான் துரியோதனன்.  ஆனாலும்  துரியோதனன் தலையோடு கால் நடுங்கினான்.  அதிலும் சுயம்வர மண்டபத்தில் கேட்ட பீமனின் குரல் அவன் காதுகளில் இப்போது தான் கேட்பது போல் மீண்டும் எதிரொலிக்க, பீமனின் சிரிப்பையும் அவன் மீண்டும் கேட்பது போல் உணர, அப்போது திரௌபதியின் முகத்தில் தெரிந்த நிம்மதியையும், மகிழ்ச்சியையும் மீண்டும் தன் கண்களால் கண்டான் துரியோதனன்.  அவன் சுயம்வரப் போட்டியில் தோற்றது புரிந்ததுமே திரௌபதி சிரித்த சிரிப்பும், முழு மணமகள் அலங்காரத்தில் அவள் நின்ற கோலமும், அவளை அடைய முடியாத மனக்கசப்பும் சேர்ந்து கொள்ள துரியோதனன் உடலே பற்றி எரிவது போல் இருந்தது அவனுக்கு.  மிகுந்த முயற்சியுடன் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டான் அவன்.  “தந்தையே, நான் செத்தால் செத்துவிட்டுப் போகிறேன்.  ஆனால் அதற்கு முன்னால் உங்கள் கட்டளைப்படியே, பாண்டவர்கள் ஐவரையும், அவர்கள் மணந்து வந்திருக்கும் மணமகளையும் எதிர்கொண்டு அழைக்கச் செல்கிறேன்.  ஆனால் தாங்கள் எனக்கு ஒரு சத்தியம் செய்து தர வேண்டும்.”

Thursday, November 6, 2014

துரியோதனன் சாக விரும்புகிறான்!

கண்ணை விழிக்கும்போதே தன்னருகில் துரியோதனன் அமர்ந்திருக்கிறான் என்பதை திருதராஷ்டிரன் உணர்ந்தான்.  தன் மகனின் இந்த மோசமான நிலைக்குத் தான் தான் காரணம் என்னும் எண்ணம் அவனிடம் உண்டு.  ஆகையால் உள்ளூர அவனிடம் திருதராஷ்டிரனுக்கு அனுதாபம் மிகுந்தது.  ஹூம்!  தான் மட்டும் குருடாகப் பிறக்கவில்லை எனில்!!!  தன் தகப்பனின் அனுதாபத்தை துரியோதனனும் தனக்கு சாதகமாகவே பயன்படுத்திக் கொண்டான்.  அவனுடைய இப்போதைய நிலையையும், அவன் அடைந்த ஏமாற்றங்களையும் உருக்கமாகத் தன் தந்தையிடம் எடுத்து உரைத்தான்.  எல்லாவற்றையும் மகன் வாயிலாகக் கேட்ட திருதராஷ்டிரனுடைய குருட்டுக் கண்கள் கண்ணீரை மழையாக வர்ஷித்தன.


அவன் வாய் கோணிக்கொண்டது.  உதடுகள் மட்டுமின்றிக் கைகள், அவ்வளவு ஏன், மொத்த உடலும் நடுங்கியது.  அவன் மனம் முழுவதும் மகனின் இந்த மோசமான மனநிலையே ஆட்கொண்டது. ஆனாலும் அவனால் என்ன செய்ய இயலும்?  தன்னுடைய நலிந்த நிலையை அவன் உள்ளூர வெறுத்தான். பெயருக்குத் தான் அவன் அரசன்!  அவனால் செய்ய முடிந்ததெல்லாம் தன் மகனின் உச்சியை முகர்வதும், அவ்வப்போது ஆறுதல் வார்த்தைகள் சொல்வதும், தன் மகனைத் தடவிக் கொடுப்பதும் தான்.  “என்னால் என்ன செய்ய முடியும், மகனே?” என்று கடைசியாகக் கேட்டான் திருதராஷ்டிரன் மகனிடம். “ உனக்கு ஏற்பட்ட துரதிர்ஷ்டங்களை நான் நன்கறிவேன்.  இப்போது நீ சொல்வதை எல்லாம் கேட்கக் கேட்க என் மனம் சுக்குச் சுக்காக நொறுங்கி விட்டது மகனே! ஆனால் என்ன செய்வது? “ தன் ஆற்றல் அற்ற தன்மையை நினைந்து நினைந்து மனம் வருந்தினான் திருதராஷ்டிரன்.  தட்டுத் தடுமாறி, வார்த்தைகளை உடைத்த வண்ணம் தன் வழக்கப்படி பேசியவன் மீண்டும் உதடுகள் கோணிக்கொள்ள துக்கத்துடன் தன் மகனைத் தடவிக் கொடுத்தான்.  அதன் மூலம் தன் மனநிலையைத் தன் மகனுக்குத் தெரிவிக்க முயற்சி செய்தான்.


“நீ சொல்வது சரியே மகனே!  நீ தான் இந்த நாட்டுக்கு யுவராஜா!  நீ அதற்கு முற்றிலும் தகுதியானவனே!  ஆனால் பிதாமகர் பீஷ்மரும் சரியாகவே சொல்கிறார்.  எல்லாம் வல்ல மஹாதேவன் அருளாலே பாண்டவ சகோதரர்கள் ஐவரும் உயிருடன் இருக்கின்றனர்.  இது மிகவும் நல்ல செய்தியன்றோ! நமக்கு ஏற்பட்டிருந்த மிகப் பெரிய களங்கத்தை இது நீக்கி விட்டது.  இந்நாட்டு மக்கள் அனைவரும் அவர்கள் ஐவரும் உன்னால் தான் கொல்லப்பட்டதாகவன்றோ சொல்லிக் கொண்டிருந்தனர்!  இப்போது அந்தக் கெட்ட பெயர் நீங்கி விட்டது.  மகனே!  நான் உனக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என உண்மையாக விரும்புகிறேன்.  என்னாலும் ஏதேனும் செய்ய முடியும் என நிரூபிக்க விரும்புகிறேன்.  ஆனால் என்னால் இயன்றது என்ன என்று தான் புரியவில்லை!” இயலாமையுடன் பேசினான் திருதராஷ்டிரன்.


“தந்தையே, தாங்கள் இந்த நாட்டின் மன்னர்!  உங்களால் எவ்வளவோ செய்ய முடியும்!” என்று சொன்ன வண்ணம் தந்தையின் கரங்களைப் பிடித்துத் தன் கைகளுக்குள் வைத்த துரியோதனன் அதன் மூலம் தன்னுடைய வேண்டுகோளைத் தந்தைக்குத் தெரிவித்தான்.


“துரியோதனா, என் அருமை மகனே!  பாண்டவர்களின் உரிமையை நாம் எப்படி மறுக்க முடியும்? அது அரச நீதிக்குப் புறம்பானது.  அதர்மமான ஒன்று.  மேலும் பாட்டனார் பீஷ்மரை எதிர்க்க என்னால் இயலாது.  நாம் அவர்களோடு போர் தொடுக்கவா முடியும்?  யோசித்துப் பார்  துரியோதனா!  நாம் இப்போது பாண்டவர்களோடு போர் தொடுத்தால், அது பாஞ்சாலத்துடனும் போர் தொடுப்பதற்குச் சமம் ஆகிவிடும்.  “


“அதுமட்டுமல்ல மகனே!  கிருஷ்ண வாசுதேவன் அவர்கள் பக்கம் துணையாக நிற்கின்றான்.  அவனுடைய யாதவப் படைகளும் அவர்களுக்கே உதவி செய்யும்.  உன்னுடைய தண்டாயுத குரு பலராமன், அரச குரு துரோணர், விராட அரசன், சுநீதன், அனைவரும் அவர்கள் பக்கம் நிற்கின்றனர். “ தன் குருட்டுக் கண்களை மகன் பக்கம் திருப்பிய திருதராஷ்டிரன் தன் தலையையும் ஆட்டி மறுப்புத் தெரிவித்தான்.  “விதுரன் சொல்வது போல் அது குரு வம்சத்தினரின் அழிவுக்கு வழி வகுக்கும்.” என்றும் கூறினான்.


“தந்தையே, என்னையும் என் சகோதரர்களையும் குறித்தும் தாங்கள் கொஞ்சம் சிந்திக்க வேண்டும்.  உங்களைக் கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன். என்னுடைய இடத்தில் இப்போது யுதிஷ்டிரன் மீண்டும் யுவராஜா ஆகிவிட்டான் எனில்!! ஆஹா, குரு வம்சத்தின் இந்தப் புராதனமான பரதன் அமர்ந்த சிம்மாதனத்துக்கும் அவனே உரியவன் ஆகிவிடுவானே!  துருபதனின் மகள் அந்தக் கிருஷ்ணை இந்தச் சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தினியாக அவன் அருகில் வீற்றிருப்பாள். “ துக்கம் தாங்க முடியாமல் துரியோதனன் குரல் தழுதழுத்தது.  தொண்டையை அடைத்துக் கொண்டது.  அவன் மனதின் கசப்பு முழுவதும் அவன் குரலில் தெரிந்தது.  எத்தனை மாதங்கள்!  ஆம், மாதக் கணக்காக அவன் திரௌபதியை வெல்வது குறித்துப் பல கனவுகள் கண்டான். வெற்றி அவனுக்கே என்பதில் உறுதியாக்க இருந்ததோடு இதன் மூலம் தன் அரசியல் வாழ்க்கையில் ஏற்படப் போகும் முன்னேற்றங்களையும் கௌரவத்தையும் குறித்துச் சிந்தித்துப் பெருமிதம் அடைந்திருந்தான்.


திரௌபதியை வெல்வதே தன் அரசியல் வாழ்க்கையில் தான் அடையப் போகும் முன்னேற்றங்களுக்கான முதல் படி எனக் கனவு கண்டான்.  இப்போது?? அவனால் மேலே சிந்திக்கவே முடியவில்லை.  தலையைக் குனிந்த வண்ணம் கண்ணீரை மௌனமாகப் பெருக்கினான்.  தழுதழுத்த குரலில், “தந்தையே, தந்தையே, நான் இன்னமும் ஏன் உயிருடன் இருக்க வேண்டும்?  நான் சாக விரும்புகிறேன்.” என்றான்.

Tuesday, November 4, 2014

துரியோதனன் போடும் கணக்கு!

ஆனாலும் அவன் தன் முயற்சிகளை விடவில்லை.  அதன் காரணமாக  அவன் தன் குரு துரோணாசாரியாரின் விருப்பத்துக்கு விரோதமாக பாஞ்சால இளவரசிக்காக நடத்தப்பட்ட சுயம்வரத்தில் கலந்துகொள்ள முடிவெடுத்ததைப் பெரியவர்கள் அங்கீகரித்தனர்.  அவனுள்ளும் தன்னம்பிக்கை ஊற்றாகச் சுரந்தது. திரௌபதியை வென்றுவிடலாம் என்றே அவன் திண்ணமாக நம்பினான். பாஞ்சாலத்தின் சக்தி வாய்ந்த சக்கரவர்த்தியான துருபதனுடன் இதன் மூலம் அவனுக்கு ஓர் பிணைப்பு ஏற்பட்டு இருவரும் அரசியல் ரீதியாகவும் ஒருவருக்கொருவர் துணையாக நிற்கமுடியும் என்னும் நம்பிக்கையில் இருந்தான்.  வலுவானதொரு சாம்ராஜ்யத்தின் இளவரசியைத் திருமணம் செய்து கொள்வதன் மூலம் தன் அரசியல் வாழ்க்கையில் ஓர் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படும் என எண்ணினான்.  ஆனாலும் அவனுடைய துரதிர்ஷ்டம் அவனைத் தொடர்ந்தது.


சுயம்வர மண்டபத்தில் அவன் முறை வந்து அவன் போட்டிக்குத் தயார் ஆனபோது மிக மோசமான முறையில் தோற்றுப் போனான்.அந்தத் தந்திரக்காரக் கண்ணன் எப்படியோ திட்டமிட்டு! ஹூம், அவன் எனக்கு உதவி செய்வதாகவன்றோ கூறி இருந்தான்.  ஆனால் அவன் செய்தது! துரோகம்! நம்பிக்கைத் துரோகம்! என்ன செய்து விட்டான்!  ஐவரையும் எப்படியோ உயிர்ப்பித்து விட்டான்! அவன் இவ்வுலகிலேயே மிகவும் வெறுக்கும் நபர்கள் இந்த ஐவர் தான்.  இவர்கள் இறந்துவிட்டனர் என்றல்லவோ அவன் நினைத்திருந்தான்! திடீரென சுயம்வர மண்டபத்தில் அவர்கள் ஐவரும் உயிருடன் வந்துவிட்டனர்!அது மட்டுமா?  சுயம்வரத்தில் அர்ஜுனன் போட்டியில் வென்று திரௌபதியை மணமகளாய்ப் பெற்றும்விட்டான்.  துரியோதனனின் வாழ்க்கையே அழிந்து விட்டது. அவன் முன்னர் ஒரு கோரமான, பயங்கரமானதொரு எதிர்காலம் தெரிகிறது.


மிகுந்த மனக்கசப்புடன் அவன் ஹஸ்தினாபுரம் திரும்பினான்.  அவமானம் அடைந்த உள்ளத்துடன் மனத் துடிப்புத் தாங்க முடியாமல், அனைவர் கண்ணெதிரேயும் நகைப்புக்கு இடமானவனாய், வெற்றிப் பாதையின் அனைத்து வழிகளும் அடைக்கப்பட்டு, நெஞ்சம்முழுக்கக் கசப்பைச் சுமக்க முடியாமல் சுமந்து கொண்டு வந்து சேர்ந்தான்.  ஆனாலும் அவனுடைய ஐந்து விரோதிகளும் திரௌபதியை மணந்து கொண்டிருக்கும் செய்தியைக் கேட்டு வெந்த உள்ளத்துடன் அவர்கள் ஹஸ்தினாபுரம் வரும் முன்னரே அவர்களைக் காம்பில்யத்திலோ அல்லது வரும் வழியிலோ அழிக்கத் துடித்தான்.  ஆனால் அவன் நெருங்கிய நண்பர்களே அதை எதிர்த்துவிட்டனர். அப்படிச் செய்வது கூடாது என மறுத்துவிட்டனர்.  முடிவாகத் தாத்தா பீஷ்மர் ஐந்து சகோதரர்களையும் மிகவும் விமரிசையாக ஹஸ்தினாபுரத்துக்கு வரவேற்க முடிவு செய்துவிட்டார்.  அதோடு நிறுத்தாமல் யுதிஷ்டிரனை மீண்டும் யுவராஜாவாகவோ, அல்லது ராஜாவாகவோ முடிசூட்டவும் முடிவெடுத்து விட்டார்.  இதை அவன் அருமைத் தந்தை திருதராஷ்டிரரும் ஒப்புக் கொண்டிருக்கிறார்.  காம்பில்யத்துக்கு விதுரச் சித்தப்பாவை அனுப்பி ஐவரையும் இங்கே பத்திரமாகக் கொண்டு சேர்க்க முடிவெடுத்து இருக்கின்றனர்.  பரிசுகளை வேறு கொடுத்து அனுப்பி இருக்கின்றனர். அவன் முன்னர் எல்லா வழிகளும் அடைக்கப்பட்டு விட்டன.கடைசியாக அவன் நம்பி இருந்தது ராணிமாதா சத்யவதியைத் தான்.  அவன் பாட்டியான அவரை அவன் மிகவும் நம்பி இருந்தான். அவளிடம் பாண்டவர்கள் ஐவரும் பாண்டுவுக்கு நேரிடையாகப் பிறந்தவர்கள் அல்ல என்பதைத் தெளிவாக எடுத்துரைத்தான்.  ஆகவே அவர்களுக்கு சட்டரீதியாகவோ, அல்லது வேறெந்த வழியிலோ ஹஸ்தினாபுரத்து சிம்மாதனத்தை, பரதன் ஆண்டு வந்த புராதனமான சிங்காதனத்தை அடைய அவர்களுக்கு எவ்வித உரிமையும் இல்லை என்பதைத் தெள்ளத் தெளிவாகச் சொன்னான்.  ஆனால் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாக அந்தக் கிழவி, ஆனாலும் தன்னை வயதானதே தெரியவில்லை எனச் சொல்லிக் கொள்பவள், புதிதாக ஒரு கதையை அவிழ்த்துவிட்டாள்.  ஆனால் அது உண்மையாகவே இருந்து விட்டது என்பது அவன் துரதிர்ஷ்டம் தான்.அவன் தந்தையும், பாண்டுவும் எப்படிப் பிறந்தனர் என்பதை அந்தக் கிழவி எடுத்துச் சொன்னாள்.  இதன் மூலம் பாண்டவர்கள் ஐவருக்கும் ஹஸ்தினாபுரத்திலோ குரு வம்சத்தின் சாம்ராஜ்யத்திலோ இடமில்லை என்றால் அப்படியே அவனுக்கும் அங்கே இடம் இல்லை என்பதைச் சுட்டிக் காட்டினாள்.  அவனுடைய இந்த அகம்பாவம் கொண்ட மனதுக்காக அவனைக் கண்டிக்கவும் செய்தாள்.  இதன் பின்னர் அவனுக்குத் தற்கொலை செய்து கொள்வதைத் தவிர வேறு வழி இருக்கவில்லை. அதிலும் யுதிஷ்டிரன் ஹஸ்தினாபுரம் வந்ததும் அவனை இதற்கு அரசன் ஆக்குவதைப் பார்த்துக் கொண்டு சும்மா இருப்பது என்பதை விட வேறு அவமானகரமான செயல் வேறில்லை.


மனம் மிகவும் வெறுத்த நிலையில்  தன் நெருங்கிய நண்பர்களான கர்ணன், அஸ்வத்தாமா, அவன் சொந்த சகோதரன் துஷ்சாசனன், அவன் தாய்மாமன் ஆன காந்தார இளவரசன் ஷகுனி ஆகியோருடன் ரகசியமாகக் கலந்து ஆலோசித்தான்.  அவன் ஆலோசகர்கள் அனைவருமே ஒரு மனதாக இப்போது எதிர்ப்பைக் காட்ட வேண்டிய சூழ்நிலை இல்லை என்றும், அது மிகவும் முட்டாள்தனமானது என்றும் எடுத்துரைத்தனர்.  மேலும் என்ன நடக்கிறதோ அதை வேடிக்கை பார்த்துக் கொண்டு அதை மகிழ்ச்சியுடன் வரவேற்பது போல் நடிக்கவும் சொன்னார்கள். அதற்குள்ளாக அவர்கள் அனைவரும் இந்தச் சூழ்நிலையில் இருந்து தப்பிக்கவோ, அல்லது இதை மாற்றி அவர்களுக்கு ஏற்ற சூழ்நிலையை உருவாக்கவோ ஏதேனும் ஒரு வழியைக் கண்டு பிடித்துவிடலாம்.


இப்போது அந்த ஐவரும் வெற்றி பெற்ற தலைவர்களைப் போல் ஹஸ்தினாபுரம் நோக்கி வந்து கொண்டிருக்கின்றனர்.  மக்கள் அனைவரும் இதைப் பெரும் விழாவாகக் கொண்டாட ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.  அவன் தந்தையும் பிதாமகர் பீஷ்மரும் பாண்டவ சகோதரர்களை வரவேற்கத் தக்க ஏற்பாடுகளுடன் காத்திருக்கின்றனர்.  அவர்கள் தங்களுடன் ஒரு மாபெரும் படையையும் அன்றோ அழைத்து வருகின்றனர்!  வல்லமை பொருந்திய யாதவ குலத்தலைவன் ஆன கிருஷ்ணனும் அவர்களுடன் வருகிறானாம்.  துரியோதனனின் முதல் எதிரியே அந்த இடையன் கிருஷ்ணன் தான்.


ஹூம்! ஆனாலும் அவன் அண்ணன் பலராமன் துரியோதனனின் குருவாகப் போய்விட்டார்.  தண்டாயுதப் போரில் அவனைத் திறமை வாய்ந்தவனாகச் செய்தவர் அவர் தானே!  இவர்களோடு யாதவர்களில் திறமைசாலிகளான அதிரதர்களும் வருகின்றனராம்.  சுயம்வரத்துக்கு வந்திருந்த பெரும்பாலான இளவரசர்கள் இந்தச் சுயம்வரத்தையும் பாண்டவர்களுடனான திரௌபதியின் திருமணத்தையும் அங்கீகாரம் செய்தவர்களும் தத்தம் பரிவாரங்கள், படை வீரர்களோடு கூட வருகின்றனர்.  ஒரு மாபெரும் ஊர்வலம் ஹஸ்தினாபுரத்தை நோக்கி வருகிறது.


அதற்காகத் தான் அவனுடைய தந்திரக்கார மாமன் ஆன ஷகுனி அவனை இப்போது இங்கே திருதராஷ்டிரனைச் சந்திக்க அனுப்பி உள்ளான்.  திருதராஷ்டிரனுக்குத் தன் மூத்த மகன் துரியோதனனிடம் பாசம் அதிகம்.  தன் மகன் சிறந்த வீரன் என்றும் திறமைசாலி என்றும் மிகவும் அழகானவன் என்றும் திருதராஷ்டிரன் அறிவான்.  ஆனால் தன்னுடைய பிறவிக் குருட்டுத்தனத்தால் மகன் அடைய வேண்டிய அதிர்ஷ்டம் எல்லாம் அவன் கைமீறிச் சென்று விட்டது என்பதை அறிந்து வருந்தினான்.  இதனால் அவன் தன் மகனிடம் கொஞ்சம் அதிகமாகவே பிரியமும், சலுகையும் காட்டி வந்தான்.  மகன் என்ன சொன்னாலும் மறுப்புச் சொல்வதில்லை. இப்போது ஷகுனி திருதராஷ்டிரனின் இந்தப் பாசமும், பரிவும் பாண்டவர்களின் வருகையால் மங்கிவிடாமல் இருக்கவேண்டியே துரியோதனனைத் தன் தகப்பனைச் சென்று பார்க்க அனுப்பி வைத்திருந்தான்.  அவனுடைய ஆலோசனையினாலேயே துரியோதனன் இங்கே தந்தையிடம் வந்திருந்தான்.

Sunday, October 19, 2014

துயரத்தில் துரியோதனன்!

இப்போது நாம் அவசரமாக ஹஸ்தினாபுரம் போயாகணும்.  அங்கே துரியோதனன் ஏற்கெனவே கோபத்தில் இருக்கிறான். அவனை மேலும் கோபமூட்டும்படியான நிகழ்ச்சிகள் வேறு நடக்க இருக்கின்றன.  வாருங்கள்! விரைந்து செல்வோம்!  அட!  அதிகாலை நேரமன்றோ!  அதனால்  இப்போது தான் விடிய ஆரம்பித்துள்ளது.  ஹஸ்தினாபுரம் மெல்ல மெல்ல விடியலுக்குத் தன்னைத் தயாராக்கிக் கொண்டிருக்கிறது.  இதோ கங்கைக்கரை!  கரையில் நீள நெடுக ஆங்காங்கே காணப்பட்ட அரச மாளிகைகள் கரையின் பெரும்பாலான பகுதியில் காணப்பட்டன.  சில மாளிகைகளின் பக்கவாட்டில் கங்கை ஓடினால், சிலவற்றின் பின் பக்கமும், சில மாளிகைகள் கங்கையைப் பார்த்தவண்ணமும் அமைக்கப்பட்டிருந்தன.  ஆங்காங்கே பணியாளர்கள் தங்கள் அதிகாலை வேலைகளைத் தொடங்கிவிட்ட சப்தமும் கேட்டுக் கொண்டிருந்தது.


துப்புரவுப் பணியாளர்கள் சுத்தம் செய்து கொண்டிருக்கப் பெண் வேலையாட்கள் கங்கையிலிருந்து நீரை மொண்டு வந்து சுத்தம் செய்து கொண்டிருந்தனர்.  தண்ணீர்ப் பாத்திரங்களில் தண்ணீர் நிரப்பப்பட்டது.  மாளிகையில் கட்டப்பட்டிருந்த கோயில்களில் வழிபாடுகளை நடத்தும் பிராமணர்கள் கங்கையில் இறங்கித் தங்கள் நித்ய கர்மானுஷ்டானங்களைச் செய்த வண்ணம் கைகளில் நீரை ஏந்தி அர்க்யம் விட்டுக் கொண்டிருந்தனர்.  அனைவரும் சூரியன் உதிக்கும் கிழக்குத் திசையை நோக்கி நின்ற வண்ணம் சூரியனுக்கு வழிபாடு செய்து கொண்டிருந்தனர்.


ஒரே ஒரு அரசமாளிகை மட்டும் அங்கே தனித்துக் காணப்படவில்லை.  தனித்தனியாகப் பல மாளிகைகள், பணியாளர் குடியிருப்பு எனக் காணப்பட்டன.  அத்தனை மாளிகைகளுக்கும் சேர்த்து நீண்ட பெரிய சுற்றுச் சுவரும் கட்டப்பட்டிருந்தது.  அந்தச் சுற்றுச் சுவரை ஒட்டிய ஒரு பெரிய மாளிகையில் திருதராஷ்டிரன் குடி இருந்தான்.  அந்தக் காலத்தில் பொதுவாக அனைவரும் திறந்த வெளியிலேயே படுக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தனர்.  அதைப் போல திருதராஷ்டிரனும் திறந்த வெளியில் கட்டிலைப் போட்டுக் கொண்டு அதன் மேல் படுத்துத் தான் தூங்குவான்.  இப்போதும் வெள்ளியால் இழைக்கப்பட்ட தன் தந்தக் கட்டிலில் பாதி படுத்த வண்ணமும், பாதி அமர்ந்த வண்ணமும் காட்சி அளித்தபடி அமர்ந்திருந்தான் திருதராஷ்டிரன்.  இரு பக்கமும் தலையணைகளை அண்டக் கொடுத்த வண்ணம், வயதுக்கு மீறிய முதுமையோடு நரைத்த தலைமயிரோடும், தாடியோடும், சுருக்கங்கள் விழுந்த நெற்றியோடும் காணப்பட்டான்.  மிகவும் பலஹீனமாகவும் காணப்பட்டான். வலுவற்ற அவன் மனம் அவன் முகத்திலேயே வெளிப்படையாகத் தெரிய செயலற்று அமர்ந்திருந்தான்.


அவனருகே தரையில் துரியோதனன் அமர்ந்திருந்தான்.  குரு வம்சத்து யுவராஜாவான துரியோதனன்  தன் தந்தையின் பாதங்களின் மேல் தன் தலையை வைத்த வண்ணம் கவலையும், துயரமும் நிறைந்த முகத்தோடு காணப்பட்டான்.  அவன் மனம் சுக்குச் சுக்காக உடைந்து விட்டது.  மீளாத் துயரத்தில் ஆழ்ந்திருந்தான் துரியோதனன்.  வருடக்கணக்காக அவன் அவமானங்களுக்கு மேல் அவமானத்தையே சந்தித்து வந்திருக்கிறான். ஒன்று மாற்றி ஒன்று அவமானம் அடைந்திருக்கிறான்.  இப்போதோ!  அனைத்தையும் தூக்கிச் சாப்பிடும் வண்ணம் அவனை இழிவு செய்யும் பெரியதொரு நிகழ்வு நடந்துவிட்டது.  மிகச் சிறு வயதிலிருந்தே அவன் சந்தித்தது ஏமாற்றங்களே.


அவன் தந்தை திருதராஷ்டிரன் கண் தெரியாக் குருடனாகப் பிறந்தது அவனுடைய மிகப் பெரிய துரதிர்ஷ்டம்.  ஏனெனில் அதன் பொருட்டே அவன் தந்தைக்கு இந்த மாபெரும் குரு வம்சத்தினரின் சாம்ராஜ்யத்துக்கு அதிபதியாக ஆகும் பாக்கியம் கிட்டவில்லை.  அந்தக் காலத்து ஆரியர்களிடம்  ஒரு குருடனை அரசனாக்கும்படியான நியமங்களுக்கு இடமில்லாமல் போய்விட்டது.  ஆகவே திருதராஷ்டிரனின் இளைய சகோதரன் பாண்டு குரு வம்சத்து அரியணையில் ஏறும்படி ஆகிவிட்டது.   பாண்டு சக்கரவர்த்தியானதில், துரியோதனனுக்கு நியாயப்படி கிடைக்கவேண்டிய மாபெரும் சாம்ராஜ்யம் கிட்டவில்லை.  ஏனெனில் பாண்டுவிற்குப் பிறகு அவன் மூத்த மகனுக்குத் தான் அந்த சாம்ராஜ்யம் போகும்.  ஹூம்!  அவன் தகப்பன் குருடனாக இருந்தது துரியோதனன் செய்த தவறா!  அவன் செய்யாத ஒரு தவறுக்கு எப்படி எல்லாம் தண்டனை அனுபவிக்க வேண்டி வருகிறது!  அவனிடம் என்ன இல்லை?


தைரியம், ஆர்வம், விடாமுயற்சி, போர் புரியும் திறன், கதையில் செய்யும் சாகசங்கள், வில் வித்தை, ரதம் ஓட்டுதல், குதிரை ஏறுதல், யானை ஏற்றம் என அனைத்திலும் திறம்படப் பயிற்சி பெற்றவனே துரியோதனன்.  ஆஹா, இது அனைத்துக் கடவுளரும் அவனுக்கு எதிரே செய்த மாபெரும் சதியன்றோ!  இதை அவன் எவ்வகையிலேனும் தடுத்தாக வேண்டும்.  இதை வெல்ல வேண்டும்.  இதோடு மட்டுமா?  தாத்தா  பீஷ்மர்!  அவன் சிறுவனாக இருந்தபோதில் இருந்தே அவருக்கு அவனிடம் உண்மையான பாசம் இல்லை.  அந்தக் கிழவி,  நம் தந்தையின் பாட்டி, மஹாராணி, சத்யவதி அம்மையார்!  ஹா!  உண்மையில் அந்தக் கிழவியும், அவள் மூத்தாள் மகனுமான அந்தக் கிழவன் பீஷ்மனும் தானே இந்த ஹஸ்தினாபுரத்தை ஆள்கின்றனர்!இருவருக்கும் துரியோதனனிடமும், அவன் சகோதரர்களிடமும் பாசம் என்பதே இல்லை.  அவர்களின் பாசமெல்லாம் பாண்டுவின் புத்திரர்கள் என அழைக்கப்படும் அந்த ஐவரிடம் தான்.  ஐவரையும் சித்தப்பா பாண்டுவின் புத்திரர்களாக ஏற்றுக் கொண்டதோடு அவர்களுக்கு உரிய அரச மரியாதைகளையும் கிடைக்கும்படி செய்துவிட்டனரே!  அந்தக் கிழவர்கள் இருவரும் சூழ்ச்சிக்காரர்கள்!


கொடுமையிலும் கொடுமையாகப் பாண்டவர்கள் ஐவரும் மிகவும் தேஜஸோடும், அழகும், கம்பீரமும் நிறைந்தவர்களாகக் காட்சி அளிக்கின்றனர்.  புத்திசாலிகளாகவும், திறமைசாலிகளாகவும் இருப்பதோடு அனைவரையும் வெகு விரைவில் கவர்ந்து விடுகின்றனர்.  மக்களிடமும் மிகவும் அன்பைப் பெற்றிருக்கின்றர்.  அனைவரின் நம்பிக்கை நக்ஷத்திரங்களாக அவர்கள் திகழ்கையில் துரியோதனனை நம்புவார் யாருமில்லை.  அவனைக் கண்டாலே அனைவரும் நடுங்குகின்றனர்;  அச்சமடைகின்றனர்.  அவன் மனைவியான பானுமதி உட்பட! ஹூம்! வாழ்க்கையே வீணாகிவிட்டது.  என்னைப் போன்ற துரதிர்ஷ்டக்காரன் யாருமில்லை.  இப்படி எல்லாம் நினைத்து நினைத்துத் தன் மனதை விஷமாக்கிக் கொண்டிருந்தான் துரியோதனன்.  பாண்டவர்கள் மேல் அவன் கொண்டிருந்த பொறாமையும் சேர்ந்து கொண்டு அவன் வெறுப்பில் இன்னமும் துணை புரிய பொறாமையும் வெறுப்பும் கலந்ததொரு அணைக்க முடியா அக்னியில் வெந்து சாம்பலாகிக் கொண்டிருந்தான் துரியோதனன்.


துரியோதனனின் பொறாமையை அதிகப்படுத்தும் வண்ணம் பாண்டவர்களில் மூத்தவன் ஆன யுதிஷ்டிரனுக்கு யுவராஜப் பட்டாபிஷேஹம் செய்து வைக்கப்பட்டு அவன் யுவராஜாவாக அறிவிக்கப்பட்டான்.  ஹூம்!  இதை துரியோதனன் தந்தை திருதராஷ்டிரனும் ஒத்துக்கொள்ள நேர்ந்தது.  துரியோதனனின் ஆசைக்கனவுகளுக்குக் கிடைத்த மாபெரும் மரண அடியாக அது அமைந்தது.  அதற்காகவெல்லாம் துரியோதனன் வாளாவிருந்துவிடவில்லை.  உட்பகையைத் தூண்டி விட்டுக் கொண்டே இருந்தான்.  அவனால் இயன்ற அளவுக்கு அவன் பகையைத் தூண்ட அதற்குப் பக்கபலமாக அவன் மாமன் சகுனியும், நண்பர்கள் அஸ்வத்தாமா, கர்ணன் ஆகியோரும் உதவினார்கள்.  கடைசியில் அவனுடைய தொல்லை பொறுக்க முடியாமல் பாண்டவர்களைத்  தாத்தா பீஷ்மர் நாடு கடத்தி வாரணாவதத்துக்கு அனுப்பி வைத்தார்.  இங்கேயும் துரியோதனன் சும்மா இருக்கவில்லை.


தன்னுடைய தீவிர முயற்சிகளால் வேலையாட்களைத் துணைக்கு வைத்துக் கொண்டு பாண்டவர்கள் ஐவரும் அங்கேயே அரக்கு மாளிகையில் எரிந்து சாம்பலாகும்படி ஏற்பாடுகள் செய்து மாளிகைக்குத் தீயும் வைக்கச் செய்தான். அவர்கள் எரிந்து சாம்பலாகிவிட்டதாகவே அனைவரும் கூறினார்கள்.  கடைசியில் அவனுக்கு எதிர்ப்பே இல்லாமல் போக, அவன் நினைத்ததும் நடந்தது.  துரியோதனன் இந்த மாபெரும் சாம்ராஜ்யத்தின் யுவராஜாவாக அறிவிக்கப்பட்டான்.  துரியோதனன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.  ஆனால்……ஆனால்……!!


துரியோதனனின் விருப்பத்துக்கு மாறாகவே அனைத்தும் நடந்தது.  அவன் பெயரளவுக்கே யுவராஜாவாக இருந்தான்.  அவனுடைய யுவராஜப் பதவியை வைத்துக் கொண்டு அவனால் எதையும் சாதிக்க முடியவில்லை.  அவன் என்ன செய்தாலும் குறுக்கே வந்தார் தாத்தா பீஷ்மர்!  அவன் விரும்பிய வண்ணம் எதையும் செய்ய அவர் அவனை அனுமதிக்கவே இல்லை. சாம்ராஜ்யத்தின் அரசியல் நிலவரங்களைக் கட்டுப்படுத்தும் பொறுப்பை அவரே மேற்பார்வை பார்த்து வந்தார்.  அவருடைய முழுக்கட்டுப்பாட்டில் அது இருந்து வந்தது.   இந்நிலையில் தான் துரியோதனனுக்கு மற்றொரு இடி! அவனுடைய குருவான துரோணர் அவன் ஆசைகளில் மண்ணை வாரிப் போட்டார்.  தன்னுடைய தனித்துவம் வாய்ந்த திறமைகளால் குரு வம்சத்தினரின் அந்த மாபெரும் சாம்ராஜ்யத்தின் வீரர்களுக்குப் பயிற்சி அளிக்கும் குருவாகவும், மேலும் அந்த மாபெரும் படையை நடத்திச் செல்லும் தளபதியாகவும் நியமிக்கப்பட்டிருந்த துரோணர் துரியோதனனை நம்பவில்லை.  அது மட்டுமா?  சாம்ராஜ்யத்தின் மக்களுக்கு எப்படியோ துரியோதனன் தான் வாரணாவதத்து அரக்கு மாளிகைக்குத் தீ வைத்துப் பாண்டவர்களைக் கொன்றான் என்னும் விஷயம் தெரிந்து விட்டிருந்தது. ஆகவே அவன் வெளியே உலாச் சென்றாலே மக்கள் அவனைப் பார்க்க மறுத்தனர்; வெறுத்தனர்.  பாண்டவர்களின் மரணத்துக்கு அவன் தான் பொறுப்பு என்பதைச் சுட்டிக்காட்டிப் பேசிக் கொண்டனர்.

Wednesday, October 15, 2014

பீமன் சத்தியம் செய்கிறான்!

பீமன் உள்ளே நுழைந்ததுமே கிருஷ்ணன் அவனைப் பார்த்துச் சிரித்தான்.  “இதோ நம் வீராதி வீரன், கதாநாயகன் வந்துவிட்டான்!  யுதிஷ்டிரா, எவ்வளவு அருமையான சகோதரனைப் பெற்றிருக்கிறாய் நீ!  இவன் மட்டும் இல்லை எனில் நேற்று சுஷர்மாவும், ஜாலந்தராவும் நதியில் மூழ்கி இருப்பார்கள்.  பீமன் தக்க சமயத்தில் அங்கே சென்று அவர்களைக் காப்பாற்றினான்.  அது மட்டுமா!  அவன் நகுலனை ஏகசக்கரத்துக்கு அனுப்பி வைத்திருக்கிறான். எதற்குத் தெரியுமா!  ஏகசக்கரத்து அரசனின் படகை வாங்கி வருவதற்காக. அப்போது தான் சுஷர்மாவும், ஜாலந்தராவும் இன்றிரவே ஹஸ்தினாபுரம் செல்ல முடியும் அல்லவா!நகுலனுடன் சாத்யகியும், சிகுரி நாகனும் உடன் சென்றிருக்கின்றனர். இப்படி ஒரு தர்மசங்கடமான சூழ்நிலையைச் சமாளிக்கவும், சிந்தித்துச் செயலாற்றவும் வ்ருகோதர அரசனைத் தவிர வேறு எவரால் முடியும்?”


பீமனுக்கு என்ன சொல்வது எனத் தெரியவில்லை.  கிருஷ்ணன் முகத்தையே பார்த்தான்.  முகத்தில் குறும்பு கூத்தாடியது.  கண்களும் சிரித்தன. கிருஷ்ணனின் உடல் முழுதுமே சிரித்தது போல் இருந்தது பீமனுக்கு. தன் சகோதரர்களைப் பார்த்தான். இருவர் முகங்களிலும் பீமனைக் குறித்த பெருமிதம் தெரிந்தது.  பீமனுக்கு என்ன செய்வது எனப் புரியவில்லை. கண்ணன் சொன்னவற்றையும், அதை வைத்து பீமனைப் பாராட்டும் விதமாய்ப் பார்க்கும் சகோதரர்கள் இருவரையும் உண்மையைச் சொல்லி மிரள வைப்பதா?  கண்ணன் சொல்வதை ஏற்பதா?  சகோதரர்களின் பாராட்டை ஏற்பதா?  அல்லது மறுப்பதா?  என்ன செய்யலாம்!  அல்லது கண்ணன் இப்படிச் செய்து விட்டானே என அவன் மேல் கோபப்படுவதா? கோபத்தை அடக்கிக் கொள்வதா?  இந்தக் கண்ணன் நம்மை தர்மசங்கடமான நிலையில் அல்லவோ ஆழ்த்திவிட்டான். “ஆம், ஆம், நான் தான் செய்தேன்.  இவற்றை எல்லாம் நான் தானே செய்தேன்!  கண்ணா!  நீ சர்வ நிச்சயமாக அறிவாய் அல்லவா?”“ஆஹா, பீமா! பீமா!  யுதிஷ்டிரா, பீமன் தன்னடக்கத்தோடு சொல்லிக் கொள்கிறான். இல்லையா பீமா!” என்று கிருஷ்ணன் சொல்ல மூவரும் சிரித்தனர்.  “தன்னடக்கம்!  எனக்கு!” கொஞ்சம் கத்திய பீமன்,”என் வாழ்நாளிலேயே இதான் முதல்முறை!  என்னையும் ஒருவர் தன்னடக்கம் எனச் சொன்னது.” என்றும் தனக்குத் தானே கூறிக்கொள்வது போல் சொல்லிக் கொண்டான்.  சற்று நேரத்தில் அங்கிருந்து யுதிஷ்டிரனும், பீமனும் வெளியேறினார்கள்.  பீமன் அதுவரை அடக்கி வைத்திருந்த கோபமெல்லாம் ஒருசேரப் பொங்கி வரக் கோபத்துடன் கிருஷ்ணன் மேல் பாய்ந்தான்.  தன் மூர்க்கத்தனம் சற்றும் குறையாமல் கிருஷ்ணனைப் பார்த்து, “கோவிந்தா, கோவிந்தா, இரு இரு, என்றாவது ஒரு நாள் உன் மண்டையை நான் உடைத்து விடுகிறேன்.”  என்றான்.


கிருஷ்ணன் உல்லாசமாகச் சிரித்தான்.  “பொறு, பீமா!  என் மண்டையை நீ நிதானமாக ஒரு நாள் உடைக்கலாம்.  அதற்கு முன் செய்ய வேண்டிய காரியங்கள் நிறைய இருக்கின்றன.  நீ ஜாலந்தராவிடம் ரகசியமாக ஏதோ கிசு கிசுத்தாயாமே!  அது என்ன?  அதை மட்டும் என்னிடம் சொல்லிவிடு!”


சட்டென பீமனின் மனோபாவம் மாறியது. கொஞ்சம் கபடமாகச் சிரித்தான்.  சிரித்துக் கொண்டே, “ நான் அவள் காதுகளில் ரகசியம் பேசினேனா?  நான் பேசினேன்?  அப்படியா?  அது உனக்கு எப்படித் தெரியும்?”


“அவள் என்னிடம் புகார் கொடுத்தாள்.” என்றான் கிருஷ்ணன்.  தன் ஆள்காட்டி விரலால் பீமனைப் பயமுறுத்துவது போல் சைகையும் செய்தான்.  “ஆஹா, உன்னிடம் அவள் புகார் அளித்தாளா?  கோவிந்தா, கோவிந்தா, நீ என்ன மாயம் செய்கிறாய்?  இந்த உலகிலுள்ள அனைத்து இளம்பெண்களும் தங்கள் அந்தரங்கத்தை உன்னிடம் பகிர்ந்து கொள்கின்றார்களே!  இதில் அவர்களுக்கு எவ்விதத் தயக்கமும் இருப்பதாகத் தெரியவில்லையே! எப்படி இது?  அது சரி, ஜாலந்தரா உன்னிடம் என்ன சொன்னாள்?”


“அவள் பேச்சை விடப் பார்வை பல விஷயங்களைச் சொன்னது.  உன்னைப் பற்றி உன் தாயிடம் பேசிக் கொண்டிருந்தேன் காலையில்.  அப்போது அவளைப் பார்த்தால் அவள் முகம் பல விஷயங்களைச் சொன்னது.”


“உண்மையாகவா?  கிருஷ்ணா, நான் ஜாலந்தராவைக் கல்யாணம் செய்து கொள்ள விரும்புகிறேன்.  நீ எனக்கு இந்த விஷயத்தில் உதவுவாயா?”


“கட்டாயம் பீமா!  ஆனால் நீ எனக்கு ஒரு உறுதிமொழி கொடுக்கவேண்டும்.”


“என்ன அது”


“நீ அவள் கையைத் திருமணத்துக்காகப் பற்ற வேண்டிய நாள் இன்னும் தூரத்தில் இருக்கிறது.  எப்போது தெரியுமா?  யுதிஷ்டிரன் உண்மையாகவே மன்னன் ஆக வேண்டும்.  நீ யுவராஜா ஆகவேண்டும். பேருக்கு அல்ல.  உண்மையாகவே. “


“ஆஹா, அதற்கென்ன, கிருஷ்ணா!  நான் கட்டாயம் சத்தியம் செய்து கொடுக்கிறேன்.  நான் விரைவில் யுவராஜாவாக ஆகிவிடுவேன் என்னும் நம்பிக்கைஎனக்குஇருக்கிறது.  அதிலே ஒரே ஒரு சங்கடம் தான்.  என் அருமைப் பெரியப்பாவின் அன்பு மகன் துரியோதனன் விரைவில் யமதர்மனுக்குத் தோழனாகச் செல்ல வேண்டும்.  அந்த நாள் விரைவில் வரவேண்டும்.”


“சரி, பீமா! அப்போது நீ சத்தியம் செய்திருக்கிறாய்.  இதை நினைவில் வைத்துக் கொள்.  கிருஷ்ணன் தன் உள்ளங்கையை நீட்டியவண்ணம் பீமனுக்கு எதிரே காட்ட, பீமனும் தன் உள்ளங்கையால் கிருஷ்ணன் கைகளின் மேல் ஓங்கி அடித்துச் சத்தியம் செய்தான்.


Sunday, October 12, 2014

கண்ணனின் கொட்டமும், பீமனின் திண்டாட்டமும்!

அன்றைய தினம் பீமன் எழுந்திருக்கச் சற்று நேரம் ஆனது.  தாமதமாகவே எழுந்தான் பீமன்.  அவனுக்குள் சந்தோஷ ஊற்றுப் பெருக்கெடுத்தது. அவனுடைய தீவிர முயற்சியால் ஜாலந்தராவைத் தரை வழிப் பயணம் செல்ல வேண்டிய நிலையை உருவாக்கிவிட்டான் பீமன்.  அதில் அவன் சந்தோஷம் அடைந்தான். நதிக்கரைக்குச் சென்று குளித்து நித்திய கர்மானுஷ்டானங்களை முடித்துக் கொண்டான்.  பின்னர் தன் தாய் தங்கி இருக்கும் குடிலுக்குச் சென்று தாயை நமஸ்கரித்தான்.  பின்னர் அவள் அருகே அமர்ந்திருந்த ஜாலந்தராவை ஒரு கள்ளப்பார்வை பார்த்தான்.  ஜாலந்தராவும் அதே ரகசியத்தைக் கடைப்பிடித்துத் தன் பார்வையைத் திருட்டுத்தனமாக பீமன் மேல் காட்டினாள்.


அப்போது குந்தி பேச ஆரம்பித்தாள்.  “காசி அரச குடும்பத்துப் படகுகள் நீரில் மூழ்க ஆரம்பித்தது மிகவும் துரதிர்ஷ்டவசமான ஒன்று.  மூழ்க இருந்த படகுகளில் இருந்து இவர்களை  நீ எவ்வளவு சாமர்த்தியமாகவும் கெட்டிக்காரத்தனமாகவும் காப்பாற்றினாய் என இளவரசி எனக்குச் சொல்லிக் கொண்டிருந்தாள்.”


“தாயே, நீங்களே நன்கறிவீர்கள் அல்லவா?  இத்தகைய சங்கடங்களில் மாட்டிக் கொள்பவர்களைத் தப்புவித்து மீட்டுக் கொண்டு வருவதற்கே நான் என் வாழ்நாளைச் செலவு செய்து வருகிறேன்.””மீண்டும் ஒரு வெற்றிச் சிரிப்போடு ஜாலந்தரா பக்கம் கள்ளப்பார்வை பார்த்தான் பீமன்.  அப்போது மீண்டும் குந்தி பெருமையுடன், “அப்படி எனில் உன்னைப் பாராட்டுவதை எங்களிடம் விட்டு விடு பீமா!” என்றாள்.  “ஆஹா, தாயே, என்னைப் பாராட்டுவதா?  என்னைப் பாராட்டுவதை மனமின்றி அல்லவோ செய்கிறீர்கள் நீங்கள் அனைவரும். முழு மனதோடு பாராட்டுபவர் யார்? நல்லதிற்கே காலம் இல்லை, அம்மா! ஆனால் எனக்கு இளவரசனும் இளவரசியும் காப்பாற்றப்பட்டது மிக மகிழ்ச்சியை அளிக்கிறது.  நான் மட்டும் தக்க சமயத்தில் அங்கே செல்லவில்லை எனில் நதியின் ஆழத்தில் இருவரும் மூழ்கி இருப்பார்கள்.” தன் குறும்பை நினைத்து உள்ளூரச் சிரித்த வண்ணம் கூறினான் பீமன்.


குந்தி புன்னகை புரிய, ஜாலந்தரா தனக்கு வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டாள்.  “அதோடு இல்லை பீமா!  நீ நகுலனையும், சாத்யகியோடு ஏகசக்கரத்துக்கு அனுப்பி அங்குள்ள அரசகுலப் படகைக் கொண்டு வரச் செய்து இவர்களை இன்றே அனுப்ப ஏற்பாடு செய்ததும் பாராட்டுக்கு உரியதே!” என்றாள் குந்தி.  பீமனுக்குத் தூக்கி வாரிப் போட்டது.  “என்ன!  என்ன!  நான் நகுலனை அனுப்பினேனா?  அதிலும் ஏக சக்கரத்துக்கு?  அரசகுலப்படகை வாங்கி வந்து இன்றே இவர்களை அனுப்ப ஏற்பாடு செய்தேனா? “பீமனின் ஆச்சரியம் அவன் குரலின் ஏற்ற, இறக்கத்திலிருந்து புரிந்தது.  குந்தி தன் ஆள்காட்டி விரலை பீமன் முன் நீட்டி பயமுறுத்துவது போல் விளையாட்டாக ஆட்டிய வண்ணம், “ஓஹோ, பீமா!  இதிலும் நீ என்னை ஏமாற்றப் பார்க்காதே!  உனக்குத் தெரியாமலா நகுலன் சென்றான்!”  என்றாள்.  மேலும், “ஏகசக்கரத்து அரசன் உன்னுடைய தோழன்.  வேறு எவர் நகுலனை அங்கே அனுப்ப முடியும்?  எனக்குத் தெரியும் அப்பா!  நீ எவ்வாறு அனைவரின் சௌகரிய, அசௌகரியங்களைக் கவனித்துக் கொள்கிறாய் என்பதை நான் நன்கறிவேனே!” என்று குந்தி மீண்டும் பாராட்டுக் குரலில் கூறினாள்.


“அது சரி அம்மா!  இவை அனைத்தையும் உங்களுக்குச் சொன்னவர் யார்?” பீமனுடைய பிரமிப்பு இன்னமும் நீங்கவில்லை.  தான் ஏதேனும் கனவு காண்கிறோமா என அவன் எண்ணினான்.  “ஓஹோ, அது உனக்குத் தெரியாதா?  வேறு யார்?  கோவிந்தன் தான் சொன்னான்.  இங்கே வந்திருந்தான்.  அவன் தான் அனைத்தையும் என்னிடம் சொன்னான்.  நீ அவர்களை எப்படிக் காப்பாற்றினாய் என்பதையும் சொன்னான்.  அதோடு இன்றே அவர்கள் திரும்ப நீ செய்திருக்கும் ஏற்பாடுகளையும் கூறினான். அதிலும் இன்றிரவே இவர்கள் திரும்ப நீ ஏற்பாடு செய்திருக்கிறாய்.  ஆஹா, என் மகன் பீமனை நினைத்து நான் பெருமை கொள்கிறேன்.  பீமா, பீமா, நீ மிகவும் நல்ல பையன்.” குந்தியின் குரலில் கர்வம் மிகுந்திருந்தது.


பீமனுக்குத் தான் செய்ததாகக் கூறும் நல்ல காரியத்தை மறுக்கவும் மனமில்லை.  அதே சமயம் அவனால் நகுலன் அனுப்பப்பட்டான் என்பதை நம்புவதும் கடினமாக இருந்தது.  திரும்பத் திரும்ப அவன், “நான் நகுலனை ஏகசக்கரத்துக்கு அனுப்பினேனா?  நான் நகுலனை அனுப்பினேனா?” எனக் கேட்டுக் கொண்டான். “ஆம், பீமா, ஆம், நீ தான் அனுப்பி உள்ளாய்.  நீ நகுலனை அனுப்பியது குறித்து மிகவும் பெருமையுடன் கூறினான் கோவிந்தன்.  பீமன் எவ்வளவு கவனமாக எல்லா ஏற்பாடுகளையும் செய்கிறான் என எடுத்துச் சொன்னான்.  உன்னைக் குறித்து அவனுக்கு மிகவும் பெருமை.  அதோடு நீ ஏகசக்கரத்தையும், அதன் மக்களையும் ராக்ஷசர்களிடமிருந்து காப்பாற்றி இருக்கிறாய்.  ஆகவே அதற்கான நன்றியைத் தெரிவித்துக் கொள்ள ஏகசக்ர மன்னனுக்கும் இது சரியானதொரு சந்தர்ப்பமாக அமைந்து விட்டது.”


“ஆமாம், ஆமாம்,” அவசரமாக ஆமோதித்தான் பீமன்.  கண்ணன் ஏதோ குறும்பு வேலை செய்திருக்கிறான் இதில் என்பது வரை அவன் புரிந்து கொண்டான்.  வேகமாக தன் தாயின் குடிலில் இருந்து வெளியேறியவன் கண்ணனின் குடிலை நோக்கிச் சென்றான்.  ஆஹா!  அங்கே கண்ணன் தனியாக இருக்கவில்லை!  கூடவே யுதிஷ்டிரனும், அர்ஜுனனும் இருந்தனர்.

Saturday, October 11, 2014

சுஷர்மன் கோபம்; கண்ணன் சாந்தம்!

“ஹூம், படகுகள் எப்படி ஓட்டையாயின என அறிவாயா கோவிந்தா?  அவை ஒருவரின் கட்டளையின் பேரில்  ஓட்டை ஆயின! அல்ல…. அல்ல விருப்பத்தின் பேரில் ஓட்டையாயின.  நான் என்ன செய்வது என்று எனக்குப் புரியவில்லை.”


கிருஷ்ணன் அவன் தோள்களைப் பிடித்து அழுத்தி ஆறுதல் சொன்னான். இருவரும் சேர்ந்தாற்போல் நதிக்கரையை நோக்கி ந்நடக்க ஆரம்பித்தனர். கண்ணன் பேச ஆரம்பித்தான்.


“இது மிக துரதிர்ஷ்டவசமானது.  நாங்கள் ஹஸ்தினாபுரம் வந்தடைவதற்குள்ளாக நீங்கள் அங்கே போயாகவேண்டும் அல்லவா?  உன்னை உடனடியாக ஹஸ்தினாபுரம் வரச் சொல்லி துரியோதனன் அவசரச் செய்தி அனுப்பி இருக்கிறான் எனக் கேள்விப் பட்டேனே!”


“ஆம், நாங்கள் விரைவில் ஹஸ்தினாபுரம் சென்றடைய வேண்டும்.  துரியோதனன் அதில் மிக ஆர்வம் காட்டுகிறான்.  எங்கள் வரவை ஆவலுடன் எதிர்பார்க்கிறான்.  நீங்களெல்லாம் வருவதற்குச் சில நாட்கள் முன்னாலேயே அவன் எங்களை அங்கே எதிர்பார்க்கிறான்.  இப்போது நாங்கள் இங்கே தடுத்து நிறுத்தப்பட்டோம்.  நாங்கள் உங்களுடன் தான் வந்தாகவேண்டும்.  வேறு வழியில்லை.  கடவுளே, மஹாதேவா!  துரியோதனன் எங்களைக் குறித்து என்ன நினைப்பான்?”


“நீங்கள் அனைவரும் எங்களுடன் வருவதை நான் சிறிதும் ஆதரிக்கவில்லை. அந்த யோசனை எனக்குப் பிடிக்கவில்லை.  உனக்குத் தெரியும் அல்லவா? பானுமதியை நான் என் சகோதரியாக ஸ்வீகரித்திருக்கிறேன் என்பதை அறிவாய் அல்லவா?  நீ மட்டும் துரியோதனனால்  குறித்த நேரத்துக்குள்ளாக ஹஸ்தினாபுரம் சென்ல்லவில்லை எனில் துரியோதனன் அவள் மேல் தன் கோபத்தை எல்லாம் காட்டுவான்.  அவளால் தாங்க இயலாது.”


“ஆஹா, எனக்குத் தெரியும், அவன் அவளை என்னவெல்லாம் செய்வான் என!  அவளைத் தூக்கி எறிவான் அல்லது அவள் இடத்திற்கு வேறு யாரையேனும் கொண்டு வருவான். அதிலும் நாங்கள் பாண்டவர்களோடு சேர்ந்து வருவதை அறிந்தால் நாங்கள் அவர்களுக்கு எங்கள் ஆதரவைக் காட்டுகிறோம் என நினப்பான்.  பாண்டவர்களுடன் அவனுக்கு இருக்கும் சண்டை பெரிதாகவும் ஆகி விடும்.  எங்களையும் வெறுக்க ஆரம்பிப்பான்.  கடவுளே, கடவுளே, இத்தகைய நிலைமையில் நான் என்னதான் செய்வது? ஒன்றும் புரியவில்லை!”


“கவலையே படாதே!  பீமன் இருக்கிறான்,  பார்த்துக் கொள்வான்.”


“என்ன, பீமன் பார்த்துக் கொள்வானா?  கோவிந்தா! இந்தத் தடங்கலை ஏற்படுத்தி எங்களை இங்கேயே நிறுத்தியதே அவன்  தான்.  அவன் செய்த விளையாட்டுத் தனத்தால் ஏற்பட்ட விளைவு தான் இது.  நாங்கள் நதிவழிப் பயணம் செய்வதை நிறுத்த வேண்டி அவன் வேண்டுமென்றே போட்ட திட்டம் தான் இது.”  கோபத்துடன் கத்தினான் சுஷர்மன்.


“நீ பீமனைச் சரியா நடத்தவில்லை.  அவனிடம் நட்போடு பழகு!”


“பீமனிடம் நட்பு? அவனை நான் சரியாக நடத்தவில்லையா?  கோவிந்தா!  அவன் கழுத்தை வெறும் கைகளாலேயே நெரித்துவிடலமா எனத் தோன்றுகிறது எனக்கு. “


“நீ ரொம்ப அவசரப் படுகிறாய் சுஷர்மா! துரியோதனனிடம் நீ தோற்றுப் போய் நிற்பதை பீமன் விரும்ப மாட்டான்.”


“ஹூம், துரியோதனனிடம் தோற்றுப் போயாகிவிட்டது.   பீமன் நாங்கள் உங்களுடன் தரைவழிப் பயணம் செய்ய வேண்டும் என்றே விரும்பினான்.  அவன் விரும்பியது போலவே இப்போது நடக்கிறது. “


“சுஷர்மா, அவன் உங்களை நதிப் பயணம் தான் செய்யச் சொல்கிறான். அதுவும் நாளை நள்ளிரவுக்குள் நீங்கள் கிளம்ப வேண்டும். நீ தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறாய்.”


“ஓஹோ, கோவிந்தா, நாளை என்பது இதோ சூரிய உதயம் ஆனதும் வந்துவிடும்.  ஆனால் நாங்கள் போவது எங்கனம்?”


ஏகசக்கரத்து அரசனின் அரசப்படகை வாங்கி வருவதற்காக பீமன் தன் சகோதரன் நகுலனை அங்கே அனுப்பி வைத்துள்ளான்.  இன்று மாலைக்குள் அது இங்கே வந்துவிடும்.”


“என்ன? நிஜமாகவா?  இன்றிரவு நாங்கள் கிளம்புவதற்கு பீமனா இந்த ஏற்பாடுகளைச் செய்தான்?” சுஷர்மாவால் இதை நம்பவே முடியவில்லை.  “ஆம், சுஷர்மா.  உண்மை தான்.  நகுலன், சாத்யகி மற்றும் நாகநாட்டு இளவரசன் மணிமானின் படைத்தளபதியான சிகுரி நாகன் மூவரும் சிறு படகு ஒன்றில் ஏகசக்கரம் நோக்கிப் பயணித்திருக்கின்றனர். “


“ஓஹோ, அப்படியா?” எனக் கேட்ட சுஷர்மாவின் குழப்பம் முற்றிலும் அகலவில்லை.  என்றாலும் கொஞ்சம் தன்னை நிதானப்படுத்திக் கொண்டு, மீண்டும் பேச ஆரம்பித்தான்.  இம்முறை அவன் குரலில் கொஞ்சம் பணிவு தெரிந்தது.  “ பின் அவன் ஏன் எங்கள் படகுகளை ஓட்டை போட்டு முழுகச் செய்தான்?” என்று வினவினான். “இளவரசே, பல சமயங்களில் நம் கண்கள் நம்மை ஏமாற்றும்.  நாம் காண்பதில் உண்மை இருப்பது போலத் தோன்றினாலும் அதில் பொய்யும் இருக்கும்.”


“போகட்டும், கோவிந்தா!  உண்மையாகவே இன்றிரவே நான் கிளம்புவதற்கான ஏற்பாடுகளை பீமன் மட்டும் செய்திருந்தான் எனில் நான் என் வாழ்நாள் முழுதும் அவனுக்குக் கடமைப் பட்டிருப்பேன்

Wednesday, October 8, 2014

கண்ணன் காப்பாற்றுகிறான்!

 “அவர்கள் இப்போது எங்கிருக்கின்றனர்?” கிருஷ்ணன் கேட்டான்.


“மயக்கத்தில் இருந்த ஜாலந்தராவை பீமன் எங்கள் தாய் குந்தியின் குடிலுக்கு அழைத்துச் சென்றான். அங்கே அவளைத் தாயின் பொறுப்பில் ஒப்படைத்திருக்கிறான்.  சுஷர்மா கடும் கோபத்தில் அனைவரையும் வசைபாடிக் கொண்டு எங்கள் குடிலுக்கு வந்தவன், துணிகளை மாற்றிக் கொண்டு பீமனின் படுக்கையில் படுத்தான்.  அவனுக்கு நன்கு புரிந்து விட்டது. இது பீமனின் விளையாட்டு என்று.  வேண்டுமென்றே படகுகளில் துளைகள் போட்டு அவனுடைய நதி வழிப் பயணத்தைத் தடுத்துத் தரை வழிக்கு மாற்றி விட்டான் என்பதை சுஷர்மா புரிந்து கொண்டு விட்டான்.”


“பீமன் என்ன நோக்கத்தில் இதைச் செய்திருக்கிறான் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. அவன் மூளை முழுவதும் காசி இளவரசி ஜாலந்தராவே நிறைந்திருக்கிறாள்.  அவள் நம்மோடு தரைவழிப் பயணத்தில் ஹஸ்தினாபுரம் வர வேண்டும் என பீமன் எதிர்பார்க்கிறான்.  அவர்கள் இருவரும் காம்பில்யத்தில் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொண்டனர். அப்போது இருவரும் ஒருவர் பால் ஒருவர் ஈர்க்கப்பட்டு விட்டனர்.”


“ஆஹா, இது தான் என் அண்ணன் பீமன்!  நாங்கள் திரௌபதியை மணந்து இன்னமும் ஒரு மாசம் கூட ஆகவில்லை.”


கிருஷ்ணன் புன்னகையுடன், “ உனக்குத் தான் உன் தமையனைத் தெரியும்.  ஒருவேளை அவன்  திரௌபதி நான்கு வருடங்களுக்கு ஒருமுறை தான் சேர்ந்து இருக்கலாம் என முடிவு கட்டியதற்காக அவளைத் தண்டிக்கிறானோ?”


“அது எப்படி இருந்தாலும் சரி கிருஷ்ணா!  திரௌபதி எடுத்தது சரியான முடிவு என்பதில் எங்களில் யாருக்கும் சந்தேகம் இல்லை.  நியாயமான முடிவு!”


“பீமனுக்கு உன்னுடைய முடிவு பிடித்திருக்காது.  அவன் உன்னுடன் ஒத்துப் போக மாட்டான். நீ பார்க்கும் கோணமும், அவன் பார்க்கும் கோணமும் வேறுபட்டிருக்கும்.  உன்னை மாதிரி இந்த விஷயத்தை அவன் எதிர்கொள்ள மாட்டான்.” கிருஷ்ணன் புன்னகையுடன் கூறினான்.


“கோவிந்தா!  நீ சொன்ன மாதிரி சுஷர்மா  துரியோதனன் குறித்த காலத்துக்குள் ஹஸ்தினாபுரத்தை அடையவில்லை எனில் துரியோதனன் அவனை என்ன செய்வான் எனச் சொல்ல முடியாது.  மேலும் அவன் தன்னுடைய மைத்துனன் ஆன சுஷர்மாவிடம் நாங்கள் அங்கே வரும்போது அந்த நிகழ்வை எப்படி எதிர்கொள்வது என ஆலோசிக்கவும் விரும்பலாம்.  அதையும் நாங்கள் அங்கே சென்றடைவதற்குள்ளாக அவன் ஆலோசிக்க விரும்பலாம்.”


“ஏன் ஒருவேளை என்கிறாய்?  நிச்சயமாக அவன் திட்டம் அது தான் என நான் அறிவேன்.  இல்லை எனில் உடனே ஹஸ்தினாபுரம் வரவேண்டும் என்று துரியோதனன் சுஷர்மாவுக்குச் செய்தி அனுப்பி இருக்கமாட்டான்.  பீமன் செய்திருப்பது மிக துரதிர்ஷ்டவசமான ஒன்று.  துரியோதனனை மீண்டும் மீண்டும் எரிச்சலூட்டுவது போல் நடந்து கொள்வதால் அவனை வெல்ல முடியாது.”


“கோவிந்தா, இப்போது என்ன செய்வது?  அரச குடும்பத்தினரின் படகு தயார் ஆவதற்குக் குறைந்தது பதினைந்து நாட்களாவது தேவைப்படும்.  நாமோ இன்னமும் மூன்று நாட்களில் இங்கிருந்து கிளம்ப வேண்டும். “


“பீமன் சரியான வழியில் திரும்புவதற்கு நாம் தான் அவனுக்கு உதவவேண்டும்.”


“கோவிந்தா, அவனை எப்படிச் சரியான வழியில் திருப்புவது?  அவன் இப்போது தானே பின்னிக்கொண்டதொரு வலையில் மிக மோசமாகச் சிக்கி இருக்கிறான்.  சுஷர்மா எங்கள் குடிலுக்கு வரும்போது அவன் அடைந்திருந்த கோபத்தை நீ பார்க்கவில்லை கிருஷ்ணா!  அவனுக்குச் சிறிதும் சந்தேகமே இல்லை.  இந்த வேலையை பீமன் தான் செய்திருக்கிறான் என்பதும், அவன் போட்ட துளைகளால் தான் படகு மூழ்க ஆரம்பித்தது என்பதையும் சுஷர்மா நன்கு புரிந்து கொண்டிருக்கிறான்.”


“அவன் மனோநிலை புரிந்து கொள்ளக் கூடிய ஒன்றே. ஒருவேளை….ஒருவேளை ஜாலந்தரா பீமனை மணந்து கொண்டாளானால்?? அது பானுமதிக்கும் ஓர் தவிர்க்க முடியாத சங்கடமான சூழ்நிலையைத் தோற்றுவிக்கும்.  “


“கோவிந்தா, கோவிந்தா!  என்ன செய்வது?”


“இந்தக் குறும்புத்தனமான விளையாட்டின் விளைவுகளைச் சரி செய்ய வேண்டும்.”


“எப்படி, கிருஷ்ணா, எப்படி? எவ்வாறு?  இந்த ஆசிரமத்தில் படகுகள் இருப்பதாகத் தெரியவில்லையே?  சுஷர்மாவும், இளவரசி ஜாலந்தராவும் அவர்களின் பரிவாரங்களும் செல்லத் தக்க பெரிய படகல்லவோ வேண்டும்!”


“கவலைப் படாதே நகுலா!  நாம் வந்த வழியில் ஏகசக்கரத்தில் ஒரு அரச குடும்பப் படகு நங்கூரமிட்டிருந்ததை நான் கண்டேன்.  “இதைச் சொன்ன வண்ணம் சாத்யகியைப் பார்த்துத் திரும்பிய கோவிந்தன், “சாத்யகி, உடனே இளவரசன் மணிமானைச் சென்று பார்ப்பாயாக!  உனக்கும் நகுலனுக்கும் துணையாக சிகுரி நாகனை அனுப்பி வைக்கும்படி அவனிடம் கேள்!  இங்கு இருப்பதிலேயே சிறந்த படகை எடுத்துச் செல்! நீ வெகு விரைவில் ஏகசக்ரத்தை அடைவாய் என எண்ணுகிறேன்.  அங்கே அரசனைப் போய்ப் பார்! அவனிடம் பீமனுக்கு அரசகுடும்பப் படகு தேவை என்று தெரிவி!  இந்தப் படகில் சுஷர்மாவையும், அவன் சகோதரியையும் உடனடியாக ஹஸ்தினாபுரம் அனுப்பியாக வேண்டும் என்று நிலைமையைச் சொல்!  ஏகசக்ரத்தின் அரசனை பீமன் ராக்ஷசர்களின் படை எடுப்பு, அவர்களின் தாக்குதல்கள் போன்றவற்றிலிருந்து காப்பாற்றி இருக்கிறான்.  ஆகவே அவன் பீமனுக்குக் கடமைப் பட்டிருக்கிறான்.  தன் மக்களையும் தன் நாட்டையும் காத்த பீமனின் வேண்டுகோளை அவன் புறக்கணிக்க மாட்டான். சந்தோஷமாக அவன் தன் படகைக் கொடுப்பான்.  அதை எடுத்துக் கொண்டு நீ நாளை மாலைக்குள்ளாக இங்கே வந்து சேர்ந்துவிடு.  நாளை நள்ளிரவில் ஹஸ்தினாபுரப் பயணத்தை அவர்கள் தொடங்கினால் சரியாக இருக்கும். “ என்றான் கண்ணன்.


“கோவிந்தா, பீமன் ஏதேனும் சொன்னால்?”


“அதை என்னிடம் விடு நகுலா!  நான் பார்த்துக் கொள்கிறேன்.” என்றான் கிருஷ்ணன்.


கிருஷ்ணன் தன் நித்திய கர்மானுஷ்டானங்களைச் செய்ய வேண்டி நதிக்கரைக்குச் செல்ல ஆயத்தமானான்.  செல்லும் வழியில் பீமனின் குடிலை எட்டிப் பார்த்தான்.  சுஷர்மா நதிக்குச் செல்ல ஆயத்தங்கள் செய்து கொண்டிருக்க பீமனோ இன்பக்கனா கண்ட மகிழ்வில் இதழ்களில் புன்னகையோடு தூங்கிக் கொண்டிருந்தான்.  கிருஷ்ணன் சுஷர்மாவிடம், “சுஷர்மா, உன் படகுகளில் தண்ணீர் புகுந்தது எனக்கு மிக வருத்தமாய் உள்ளது.” என அனுதாபத்துடன் தெரிவித்தான்.

Tuesday, October 7, 2014

நகுலன் கவலை அடைகிறான்!

கொஞ்சம் பின்னோக்கிப் போய் பீமனுடன் ஒரே குடிசையில் தங்கிய நகுலனைச் சிறிது கவனிப்போம்.  பீமனோடு ஒரே குடிசையில் தங்கினான் நகுலன்.  அன்றிரவு அனைவரும் படுத்துக் கொண்ட பிறகு வெகு நேரம் பீமன் தூங்கவில்லை.  நடு இரவுக்குச் சிறிது முன்னர் அவன் எழுந்து எங்கோ வேகமாக வெளியேறியதை நகுலன் பார்த்து ஆச்சரியம் அடைந்தான்.  உடனே தானும் எழுந்து அவனைப்பின் தொடர்ந்தான்.  அவன் பீமனைக் கவனித்தவரையில் விரைவில் ஏதோ குறும்புத்தனமான சேட்டைகள் செய்ய அவன் தனக்குள் தயார் ஆகிக்  கொண்டிருப்பதை நகுலன் உணர்ந்தான்.  உடனே அவன் மனம் இதை சுஷர்மாவோடு இணைத்து நினைக்க ஆரம்பித்தது.  அன்று மதியம் தான் நகுலன் சுஷர்மாவைக் கிருஷ்ணனின் குடிலில் பார்த்திருந்தான்.  அவனிடம் பீமன் தயவாகக் கேட்டுக் கொண்டும் சுஷர்மா தரைவழிப் பயணத்துக்கு மறுத்ததையும் பார்த்துக் கொண்டிருந்தான்.

நகுலனுக்குத் தன் சகோதரனின் இந்தக் குறும்புகளிலும் சேட்டைகளிலும் சிறிதளவு நம்பிக்கை கூட இருந்ததில்லை.  என்னதான் அவை எந்தவிதமான தீமையையும் விளைவிக்காவிட்டாலும் பல சமயங்களில் தர்மசங்கடமான நிலை ஏற்பட்டு விடுகிறது. பீமன் இருந்த இடத்திலிருந்து சற்று தூரத்தில் இருந்து கவனித்துக் கொண்டிருந்த நகுலன் பீமன் நதியில் நீந்தி படகுகளுக்கு அடியில் சென்றதையும், சற்று நேரத்தில் திரும்பியதையும் கவனித்தான். அதன் பின்னர் சற்று நேரத்திலேயே படகுகளுக்குள் நீர் புகுந்து படகுகள் மூழ்க ஆரம்பித்ததையும் கவனித்தான்.  அப்போது உடனேயே பீமன் மறுபடி நீரில் பாய்ந்து படகுகளுக்கு அருகே சென்றதையும் சுஷர்மாவை நீந்த வைத்ததையும், ஜாலந்தராவைத் தன் தோள்களில் சுமந்து கொண்டு கரைக்கு வந்து சேர்ந்ததையும் கவனித்துக் கொண்டான்.  இதை எல்லாம் சத்தம் போடாமல் கவனித்த நகுலன் பீமனும், சுஷர்மாவும் வரும் முன்னரே விரைவாக குடிலுக்குச் சென்று அங்கே தன் படுக்கையில் படுத்துத் தூங்குவது போல் நடித்தான்.


சற்று நேரத்தில் சுஷர்மா குடிலுக்குள் சொட்டச் சொட்ட நனைந்த வண்ணம் குளிரில் நடுங்கிக் கொண்டும், அதே சமயம் கோபத்தில் கொந்தளித்துக் கொண்டும், வசைமாரி பொழிந்து கொண்டும் நுழைவதைக் கண்டான்.  பீமன் குரலும் அப்போது கேட்டது:”இளவரசே, நான் என் தாயிடம் உங்கள் சகோதரியை ஒப்படைத்துவிட்டு வருகிறேன்.” என்றது அந்தக் குரல்.  பீமனின் நோக்கம் தெள்ளத் தெளிவாகப் புரிந்தது நகுலனுக்கு.  பயத்தில் திகைத்துப் போன நகுலன் தன் தமையனின் இந்தச் சிறுபிள்ளைத் தனமான போக்கினால் ஏற்படப் போகும் விளைவுகளை எண்ணி மீண்டும் கவலை அடைந்தான்.  சுஷர்மா பீமனின் படுக்கையில் படுத்துக் கொண்டு தூங்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டான்.  சிறிது நேரத்தில் தன் குடிலுக்குத் திரும்பிய பீமன் உலர்ந்த ஆடைகளை உடுத்தி இருந்தான்.  எவ்விதமான ஆர்ப்பாட்டமும் செய்யாமல் அங்கேயே தரையில் படுத்தவன் உடனே தூங்கியும் போனான். சீரான அவன் குறட்டை ஒலி அவன் ஆழ்ந்து உறங்குவதை நிச்சயம் செய்தது.  நகுலனுக்கு உள்ளூரச் சிரிப்பு வந்தது. பீமன்,  தன் இந்தச் சிறுபிள்ளை விளையாட்டால், சுஷர்மாவுக்கு ஏற்பட்டிருக்கும் தர்மசங்கடமான நிலைமையை நினைத்துக் கொண்டு அதனால் சந்தோஷத்துடனும், நிம்மதியுடனும் இன்பக்கனா கண்டு கொண்டிருப்பான் என நகுலன் நினைத்துக் கொண்டான்.


விடிவெள்ளி முளைக்கும் முன்னரே நகுலன் எழுந்து தன் வாளை உருவிச் சரிபார்த்த வண்ணம் கிருஷ்ணனின் குடிலுக்குச் செல்ல ஆயத்தமானான்.  குடிலுக்குள் மெதுவாக சப்தமின்றி அவன் நுழைந்தாலும் நுண்ணுணர்வு அதிகம் கொண்ட கிருஷ்ணன் எப்படியோ தன் குடிலுக்கு யாரோ வந்திருப்பதை அந்த ஆழ்ந்த உறக்கத்திலும் அறிந்து கொண்டுவிட்டான்.  “யாரது?” என்றும் கேட்ட வண்ணம் எழுந்து அமர்ந்தான்.  “கோவிந்தா, நான் நகுலன்.  உன்னுடன் தனிமையில் பேச வேண்டும்.”  “வா, நகுலா, வா! உள்ளே வா!” என வரவேற்றான் கிருஷ்ணன்.  கிருஷ்ணனின் குரலைக் கேட்ட சாத்யகி உடனே படுக்கையிலிருந்து எழுந்து தன் வாளை உருவிக்கொண்டு பாய ஆயத்தம் ஆனான்.  “சாத்யகி, சாத்யகி, இது நகுலன்!” என்று நிதானமான குரலில் கிருஷ்ணன்கூறினான்.   தன்னைச் சுதாரித்துக் கொண்ட சாத்யகி, “உள்ளே வா நகுலா, இவ்வளவு அதிகாலையில் நீ இங்கே வரவேண்டிய அவசியம் என்னவோ?  எந்த விஷயம் உன்னை இங்கே வரவழைத்தது?” என்று வினவினான்.


“அண்ணன் பீமனின் சிறுபிள்ளைத்தனமான விளையாட்டு ஒன்றினால் விரும்பத் தகாத விளைவுகள் நேருமோ என அஞ்சுகிறேன்.”  மெதுவாகக் கூறினான் நகுலன்.  “என்ன விஷயம்?” என்றான் கிருஷ்ணன்.  “கோவிந்தா, உனக்குத் தெரியுமா?  பீமன் காசி தேசத்து இளவரசன், இளவரசி இருவரையும் தரை வழிப் பயணம் மேற்கொள்ள வற்புறுத்திக் கொண்டிருந்தான்.  பார்த்தாயா?” என்று நகுலன் கேட்டான்.  “ஓ, ஓ, நான் பார்த்துக் கொண்டிருந்தேன்.  சுஷர்மா அதை மிகவும் புத்திசாலித்தனமாக மறுத்துவிட்டான்.  அவனுக்கு துரியோதனனிடமிருந்து தனிப்பட்ட முறையில் ஒரு செய்தி வந்திருக்கிறது.  சுஷர்மாவை ஹஸ்தினாபுரத்துக்கு உடனே வரச் சொல்லி அந்தச் செய்தி கூறுகிறது.  சுஷர்மா மட்டும் இந்தத் திருமணத் தம்பதிகளின் ஊர்வலத்தோடு வந்தானானால் துரியோதனன் பானுமதியின் குடலை உருவி மாலை போட்டுக் கொள்வான் என்றும் அந்தச் செய்தி கூறுகிறது.  அது சரி, அதற்கு என்ன?” கிருஷ்ணன் மீண்டும் கேட்டான்.“பீமன் தன் நோக்கத்தில் ஜெயித்துவிட்டான்.  அவன் நதிக்குச் சென்று நதியின் நீர்மட்டம் உயர்ந்து படகுகள் செலுத்தத் தயாரானதும், நங்கூரத்தை எடுத்த கணமே படகினுள் நீர் புகும்படி பார்த்துக் கொண்டு விட்டான். அதன் பின்னர் அவர்களைக் காப்பாற்றச் செல்பவன் போல் நடித்துக் கொண்டு அங்கே சென்று அவர்கள் இருவரையும் ஆசிரமத்துக்கு அழைத்து வந்துவிட்டான்.”

Monday, October 6, 2014

பீமனின் சதியும், ஜாலந்தராவின் சந்தோஷமும்!

நள்ளிரவு நேரம்.  எங்கும் நிசப்தம்.  அந்த நிசப்தத்தைக் கிழித்துக் கொண்டு அவ்வப்போது நதியின் அலைகள் கரையில் மோதும் சப்தமும், துடுப்புக்களால் நதியலைகள் தள்ளப்படும் சப்தமும், அமைதியற்ற குதிரைகள் அவ்வப்போது கனைக்கும் சப்தமும், தூரத்துக் காடுகளில் இருந்த நரிகளின் ஊளைச் சப்தமும் மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தன.  எங்கும் இருட்டுக் கருமையாக அப்பிக் கிடந்த அந்த இரவிலே விண்ணில் நக்ஷத்திரங்கள் மட்டுமே அவ்வப்போது கொஞ்சம் ஒளியை பூமிக்கு அனுப்பிக் கொண்டிருந்தன.  பீமன் ஆசிரமத்திலிருந்து வெளியே வந்தான்;  அவன் கையில் ஓர் அங்குசம் இருந்தது.  யானைப் பாகர்கள் யானைகளை அடக்கி ஆளப் பயன்படுத்தும் அந்த ஆயுதத்தை வைத்து அவன் என்ன செய்யப் போகிறான்? கரைக்கு வந்த பீமன் நதியில் மிதந்து கொண்டிருந்த படகுகளைக் கவனமாகப் பார்த்தான். இளவரசன் சுஷர்மா, இளவரசி ஜாலந்தரா மற்றும் அவர்களுக்கு உதவி செய்ய வந்த வேலையாட்கள் அனைவருமே படகினுள் அமைக்கப்பட்டிருந்த கூடார அறையில் தூங்கி விட்டிருந்தனர்.  ஒரு சில படகோட்டிகள் மட்டுமே நதியின் நீர்மட்டம் உயர்ந்து வந்ததும் நங்கூரத்தை எடுத்துவிட்டுப் படகைச் செலுத்தத் தயாராகக் காத்திருந்தனர்.பீமன் சத்தமில்லாமல் நதிக்கரையில் நடந்து நதியில் இறங்கும் இடத்துக்கு அருகே வந்து, நீரின் அலைகள் எழுப்பும் சப்தம் வராத நேரமாகப் பார்த்து நதியில் இறங்கினான்.  காசி அரசகுமாரனும், அரசகுமாரியும் உறங்கிக் கொண்டிருந்த பெரிய படகை நோக்கி சப்தம் எழுப்பாமல் நீந்தினான். நீருக்குள்ளேயே நீந்தியவன் படகுக்கு அடியில் போனான்.  அங்கே படகை நங்கூரத்துடன் பிணைத்திருந்த இடத்துக்குச் சென்றவன், தன் கையில் இருந்த அங்குசத்தினால் படகில் துளைகள் போட முனைந்தான்.  தன் பலத்தை எல்லாம் பிரயோகித்து மிகவும் பிரயாசைப்பட்டுத் துளைகள் போட்டு முடித்தான் பீமன்.   அதன் பின்னர் அருகே இருந்த மற்றொரு படகுக்குச் சென்றான்.  இந்தப் படகில் தான் சாப்பாடு தயாரிக்கப்பட்டதோடு, சமையல் பொருட்களும் நிரம்பி இருந்தன.  அதிலும் இப்படியே துளைகள் போட்டான். இந்த வேலை முடிந்ததும், வந்தது போலவே சப்தமின்றிக் கரைக்குத் திரும்பினான்.  தன் துணிகளைப் பிழிந்து காய வைத்துக் கொண்டு அரச குமாரனின் படகுக்கு எதிரே சற்று தூரத்தில் சென்று அமர்ந்த வண்ணம் என்ன நடக்கப் போகிறது என்பதை எதிர்பார்த்துக் காத்திருந்தான்.அவன் எதிர்பார்ப்புப் பொய்யாகவில்லை.  சற்று நேரத்தில் நதியின் நீர்மட்டம் உயர்ந்தது.  படகோட்டிகள் நங்கூரத்தை அகற்றினார்கள்.  படகு மெல்ல மெல்ல நீரில் மிதக்க ஆரம்பித்தது.  திடீரென அரசகுலத்தினரின் படகில் இருந்து கூச்சலும், குழப்பமுமாகக் கேட்டது.  படகில் ஏற்படுத்தப்பட்ட துளைகளின் மூலம் தண்ணீர் படகினுள் புகுந்து கொண்டிருந்தது.  மெல்ல மெல்ல உட்புகுந்த தண்ணீர் இப்போது வேகமாகப் புக ஆரம்பித்தது.  படகின் பயணிகள் அதன் மேல் தளத்துக்கு வந்து சேர்ந்து நின்று கொண்டு திடீரெனத் தண்ணீர் புகுந்ததின் காரணத்தை ஆராயந்தனர்.  ஒருவருக்கும் ஒன்றும் புரியவில்லை.  தண்ணீர் எப்படி உட்புகுந்தது என்பதை எவராலும் கண்டறிய முடியவில்லை.  விளக்குகளை ஏற்ற முயன்றால் அப்போது வீசி அடித்த காற்றினால் விளக்குகளையும் ஏற்ற முடியவில்லை.  நக்ஷத்திரங்கள் மட்டுமே தந்த அந்தக் குறைந்த ஒளியில் காசி இளவரசனும், இளவரசியும் படகின் மேல் தளத்தில் நின்று கொண்டிருந்ததையும் அவர்களின் உதவியாட்கள் அவர்களைச் சுற்றி நின்று கொண்டு இருப்பதையும் ஒவ்வொருவரும் அவரவர் விருப்பத்திற்கேற்பப் பேசிக் கொண்டிருந்ததையும் ஒருவரும் மற்றவர் சொல்வதைக் கேட்கும் மனதோடு இல்லாமல் இருந்ததையும் பீமன் கண்டான்.நதி நீருக்குள் வெகுவேகமாய்ப் பாய்ந்த பீமன் இரண்டொரு விநாடிகளில் வேகமாக நீந்திப் படகுக்கு அருகே வந்து விட்டான்.   படகை நோக்கிய வண்ணம், “யுவராஜா, விரைவில் படகை விட்டு வெளியேறுங்கள்.  படகு நதியின் நட்டநடுவில் அலைகளுக்கு நடுவே ஆழமான பகுதியில் மாட்டிக் கொண்டால் வெளியேற முடியாது.  இளவரசி, தாங்களும் வெளியேறுங்கள்.  இருவரும் உடனே குதியுங்கள்!  இளவரசி, நீங்கள் குதிக்கையில் நான் உங்களைத் தாங்கிக் கொள்கிறேன்.” என்று சப்தமாகக் கத்தினான். அனைவரும் ஒருசேரப் பேசிக் கொண்டிருந்த அந்தக் குழப்பமான ஒலியையும், நதியின் அலை ஓசையையும் மீறிக் கொண்டு பீமனின் குரல் காண்டாமணியின் ஓசையைப் போல் கேட்டது.  “ஆஹா, ராக்ஷச அரசர் வ்ருகோதரரா?” இளவரசி கேட்டாள்.“ஆம், இளவரசி, நானே தான்.  விரைவில் குதியுங்கள். “ என்றான் பீமன். இளவரசி சிறிதும் தயக்கமின்றி நீரில் குதிக்க பீமனும் அவளைப் பிடித்துக் கொண்டான்.  அவளை அடுத்து இளவரசனும் நீரில் குதித்தான்.  நீரில் குதித்த இளவரசன் தன்னைச் சமாளித்துக் கொண்டு நீந்த உதவிய பீமன் இளவரசியை நீருக்கு மேல் பிடித்துக் கொண்டு நீந்த ஆரம்பித்தான்.  ஒரு கையால் நீந்திய வண்ணம் இன்னொரு கையால் இளவரசியை நீருக்கு மேல் பிடித்துக் கொண்டு இருந்தான் பீமன்.  படகில் இருந்த ஆட்களிடம், “இளவரசியையும் இளவரசனையும் நான் நன்றாகக் கவனித்துக் கொள்கிறேன்.” என சப்தம் போட்டுக் கத்தினான்.  படகு மூழ்காமல் நீர் வரும் துளைகளை அடைக்கும்படியும் அவர்களைக் கேட்டுக் கொண்டான்.   இதற்குள்ளாக நதியிலிருந்து வந்த கூச்சல், குழப்பம் போன்ற சப்தங்களால் கரையிலும் மனிதர்கள் கூடி விட்டனர். சிலர் கைகளில் விளக்குகளையும் ஏந்திய வண்ணம் வந்தனர்.  அவர்களை பீமன் நீந்திப் படகுகளுக்குச் சென்றுப் படகின் துளைகளை அடைக்கும் ஆட்களுக்கு உதவும்படியும் படகுகள் முழுகாமல் காக்கும்படியும் கட்டளையிட்டு அனுப்பினான்.  பீமன் கரைக்குப் போய்ச் சேர்வதற்குள்ளாக ஜாலந்தரா அவன் கைகளிலேயே மயக்கம் அடைந்தாள்.சுஷர்மாவுக்கு பீமன் ஜாலந்தராவைத் தொட்டுத் தூக்கிச் சென்றதைப் பொறுக்க முடியவில்லை.  ஆனால் இப்போது வேறு வழியும் தெரியவில்லை.  இந்த அவமானத்தைச் சகிக்க முடியவில்லை தான்.  ஆனால் அவனே வலுவில்லாதவன்.  நதியில் குதித்ததில் குளிரால் நடுங்கிக் கொண்டிருந்தான். அவனைக் கவனித்துக் கொள்வதே அவனுக்குப் பெரும்பாடாக இருந்தது. இதில் ஜாலந்தராவை எவ்வாறு கவனிக்க முடியும்?  வேறு வழியில்லை!  பொறுக்க வேண்டியது தான்!அப்போது பீமன், “இந்தக் குளிர் காற்றிலே இங்கே வெட்ட வெளியில் இருப்பது உடல் நலனுக்கு உகந்தது அல்ல இளவரசே, வாருங்கள்.  உங்கள் இருவரையும் நான் ஆசிரமத்துக்கு அழைத்துச் செல்கிறேன்.” என்றான்.  அரை மனதாக இளவரசன் செய்த ஆக்ஷேபங்களை எல்லாம் புறக்கணித்துவிட்டு ஓர் ஆள் விளக்குடன் வழிகாட்ட பீமன் இளவரசி ஜாலந்தராவைத் தன் தோள்களில் சுமந்த வண்ணம் ஆசிரமத்தை நோக்கி நடந்தான்.  வேறு வழியின்றி இளவரசனும் அவனைப் பின் தொடர்ந்தான்.  ஜாலந்தரா கொஞ்சம் கூட கனமாக இல்லாமல் லேசாக ஒரு குழந்தையின் எடையுடன் இருப்பதைக் கண்டு பீமன் வியந்தான்.  அவனுக்கு ஹிடும்பியின் நினைவு வந்தது.  அவளுடைய எடையையும், இவள் எடையையும் ஒப்பிட்டுப் பார்த்த பீமனுக்கு உள்ளூரச் சிரிப்பு வந்தது.  “ஆஹா, இவளைப் பூக்களாலேயே பிரமன் படைத்திருப்பானோ!” என எண்ணிக் கொண்டான்.  தன் சுயநினைவின்றி அவள் ஓர் குழந்தையைப் போல் அவனைச் சார்ந்திருப்பதை மிகவும் விரும்பினான்.  அவள் உடலின் ஸ்பரிசம் பட்டதுமே தனக்குக் குளிரெல்லாம் அகன்று உடல் சூடானதாகவும் உணர்ந்தான்.அவர்கள் சென்று கொண்டிருக்கும்போதே, பீமன் காதுகளில் ஓர் குரல் மெலிதாகக் கிசுகிசுத்தது.  “நீங்கள் தானே படகுகளை மூழ்கடித்தீர்கள்?” பீமன் தூக்கிவாரிப் போட ஜாலந்தராவைப் பார்த்தான்.  அப்படி என்றால் அவளுக்குச் சுய நினைவு வந்துவிட்டதா?  ம்ம்ம்ம்?  ஒருவேளை சுயநினைவு வந்திருக்கலாம்; அல்லது வராமலும் இருக்கலாம்.  ஆனால் அவள் தன் கைகளிலிருந்து விடுவித்துக் கொண்டு செல்ல விரும்பவில்லை.  ஆகையால் ஜாலந்தரா சுய நினைவின்றி இருக்கிறாள் என்னும் எண்ணத்திலேயே அவளைத் தூக்கிச் செல்லவே பீமன் விரும்பினான்.  ஆசிரமத்தை அடைந்ததும் சுஷர்மனிடம் திரும்பிய பீமன், “இளவரசே, உங்கள் தங்கையை நான் என் தாயிடம் விட்டு விட்டு வருகிறேன்.  நீங்கள் அதோ இருக்கும் என் குடிசைக்குச் சென்று உடனடியாக உடையை மாற்றிக் கொண்டு தூங்கச் செல்லுங்கள்.  இந்தக் குளிரில் உங்களுக்குக் கடுமையான ஜலதோஷம் பிடிக்கப் போகிறது.” என்றான்.சுஷர்மாவுக்கு அந்தச் சூழ்நிலையில் தான் செய்யவேண்டியது என்னவென்று புரியவில்லை.  வேறு வழியின்றி பீமன் கூறியபடி அவன் குடிசைப் பக்கம் திரும்பிச் சென்றான்.  பீமன் அவளைத் தன் தாயிடம் தூக்கிச் செல்கையில் அவள் காதுகளில் கேட்கும்படி மெல்லிய குரலில், “என்னை விட்டு விட்டு நீ ஹஸ்தினாபுரத்துக்குப் படகுப் பயணமாகச் செல்ல நினைத்தாயா?  நல்லது, இப்போது முயன்றுதான் பாரேன்!” என்றான் அவளிடம்.  ஜாலந்தராவுக்கு நினைவு திரும்பியதாகத் தெரியவில்லை.  ஆனால் அவள் இதழ்களில் மெல்லிய புன்முறுவல் தோன்றியது.  அதைக் கண்ட பீமன் உள்ளம் சந்தோஷத்தில் கூத்தாடியது.