Sunday, December 7, 2014

இந்தக் கிழவன் தான் நம் முதல் எதிரி!

பீஷ்மர் தன் வாழ்க்கையில் நிகழ்ந்த முக்கியமான நிகழ்வுகளைக் குறித்துத் திரும்பத் திரும்ப யோசிக்கையில் அவரைச் சந்திக்க துரியோதனனின் சகோதரன் துஷ்சாசனனும், விகர்ணனும் வருவதாக அவருக்குத் தெரிவிக்கப்பட்டது.  பீஷ்மரின் மலர்ந்த முகத்தில் கருமேகம் போல் நிழல் படர்ந்தது. இந்த கௌரவர்கள் சும்மாவே இருப்பதில்லை. எப்படியேனும் பாண்டவர்களுக்குத் தொந்திரவு கொடுக்கவே எண்ணுகின்றனர்.  அவர்களுடைய தந்திரமான வேலைகளின் மூலம் எதிர்பாரா வண்ணம் ஒரு பெரிய சங்கடத்தை உண்டு பண்ண நினைக்கின்றனர்.  தைரியமாக வெளிப்படையாக அவர்கள் இதைச் செய்கின்றனர்.  என்ன துரதிர்ஷ்டம்!  அவருடைய நீண்ட நெடிய வாழ்விலே அவர் பேச்சை மீறி எவனும் இந்த ஹஸ்தினாபுரத்தில் நடந்ததில்லை.  அவர் சொல்லுக்கு மறு சொல் இருக்காது.  ஆனால் இப்போதோ!  இந்தக் கௌரவர்கள் ஆட்டி வைக்கின்றனரே!  இப்படிப் பட்டதொரு நிலைமையை அவர் வாழ்க்கையில் முதல் முறையாக அனுபவிக்கிறார்.

துஷ்சாசனனும், விகர்ணனும் உள்ளே வந்து எப்போதும் போல் அவர் கால்களில் விழுந்து நமஸ்கரித்தனர்.  வாய் பேசாமல் கைகளால் அவர்களை ஆசீர்வதித்த பீஷ்மர் இருவரையும் உற்று நோக்கினார்.  காந்தத்தைப் போன்ற தன் கண்களால் அவரையே பார்த்தான் துஷ்சாசனன்.  அவன் பார்வையும், அவன் ஒரு தீர்மானமான முடிவில் இருப்பதைச் சொல்லாமல் சொன்னது. தீர்க்கமான முகவாய் அவன் தன்னம்பிக்கையை எடுத்துக் காட்டியது.  யார் என்ன சொன்னாலும் அதிலும் பீஷ்மர் சொன்னால் கூட நிலை குலையாத உறுதியான மனம் கொண்டவன் என்பது அவன் பார்த்த ஒரு பார்வையே சொல்லிற்று. மாறாக விகர்ணன் சாந்தமான முகபாவத்தோடு பார்க்கையிலேயே அனைவரையும் ஈர்க்கும் நல்ல உள்ளம் கொண்டவன் என்பது தெரியும்படி இருந்தான். பார்வையாலேயே இருவரையும் அமரச் சொன்னார் பீஷ்மர்.  சிறிது நேரம் அங்கே அமைதி நிலவிற்று.

பீஷ்மரும் தன் ஆசனத்தில் அசையாமல் அமர்ந்த வண்ணம் துஷ்சாசனையே உற்றுக் கவனித்துக் கொண்டிருந்தார்.  துஷ்சாசனன் வாயைத் திறப்பதாகத் தெரியவில்லை. விகர்ணன் நெளிந்தான்.  அவனுக்கு அந்த நிலை அசௌகரியமாகத் தெரிந்தது.  துஷ்சாசனை நோக்கித் தன் பார்வையைத் திருப்பியவன் அவனையே சம்பாஷணையை ஆரம்பிக்கும்படி ஜாடை காட்டினான்.  துஷ்சாசனன் ஆரம்பித்தான்.

“தாத்தா அவர்களே, எங்களுடைய முடிவை உங்களுக்குத் தெரிவித்துக்கொள்ளவே நாங்கள் இங்கே வந்திருக்கிறோம்.  தயை செய்து ஏற்றுக் கொள்ளுங்கள்.” என்றான் துஷ்சாசனன்.

“சொல்” என்றார் பீஷ்மர் சற்றே முரட்டுத்தனமாக அதே சமயம் சுருக்கமாகக் கூறினார்.

“மாட்சிமை பொருந்திய தாத்தா அவர்களால் இந்த நாட்டுக்கு யுதிஷ்டிரன் அரசனாகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருப்பதாகத் தெரிகிறது.”

பீஷ்மர் முகத்தில் எவ்விதச் சலனமும் இன்றிக் கேட்டுக் கொண்டிருந்தார்.  எந்த பதிலும் தரவில்லை.  விகர்ணன் முகம் பயத்தில் வெளுத்தது. துஷ்சாசனனுக்கோ மேற்கொண்டு என்ன சொல்வது எப்படி ஆரம்பிப்பது என்பது புரியவில்லை.  கொஞ்சம் தன்னை நிதானித்துக் கொண்டு தைரியத்தை வரவழைத்துக் கொண்டு மேலே பேச ஆரம்பித்தான்.

“தாத்தா அவர்களே! எங்களை மன்னியுங்கள்.  நாங்கள் கௌரவர் நூற்றுவரும் சேர்ந்து ஒரு முடிவு எடுத்துள்ளோம்.  யுதிஷ்டிரன் மன்னன் ஆனால்  நாங்கள் எவரும் அவனுக்குக் கீழே பணி புரிய மாட்டோம்.”

பீஷ்மர் இப்போதும் அசைந்து கொடுக்கவில்லை.  துஷ்சாசனன் குழப்பத்தை அதிகரிக்கும் வண்ணமாக மேலும் மௌனத்தையே கடைப்பிடித்தார்.  அதே சமயம் அவன் சொல்வதைத் தான் கவனித்து வருவதையும் காட்டிக் கொண்டார்.  என்றாலும் எவ்விதமான பதிலும் கொடுக்கவில்லை.

“யுதிஷ்டிரன் மன்னன் ஆகிவிட்டால், அடுத்த நிமிடமே நாங்கள் ஹஸ்தினாபுரத்தை விட்டுச் சென்று விடுவோம்.”

“சரி,” என்றார் பீஷ்மர் குரலில் எவ்வித உணர்ச்சியும் காட்டாமல்.

துஷ்சாசனன் தடுமாறினான்.  திகைத்துப் போனான்.  தன் உதடுகளைக் கடித்துக் கொண்டான்.  பின்னர் தன் தொண்டையைச் சரி செய்து கொண்டு மேலும் பேச ஆரம்பித்தான். “ எங்களுக்கு உங்கள் அனுமதி வேண்டும், தாத்தா அவர்களே!  நாங்கள் ஹஸ்தினாபுரத்தை விட்டுச் சென்று காந்தாரத்தில் எங்கள் தாய் வழிப்பாட்டனார் சுபலாவுடன் வசிக்கப் போகிறோம்.  அங்கே செல்ல தங்கள் அனுமதி வேண்டும்.”

தீர்க்கமாக துஷ்சாசனையே பார்த்தார் பீஷ்மர்.  பின்னர், “நான் அனுமதி கொடுக்கப் போவதில்லை!” என்று ஒரே வார்த்தையில் முடித்தார்.

கோபத்திலும், வெட்கத்திலும் அவமானம் தாங்க முடியாமலும் துஷ்சாசனன் முகம் சிவந்து விட்டது.  பாட்டனை எதிர்க்க வேண்டும் என்னும் உணர்வு அவனை அறியாமல் பீறிட்டு எழுந்தது.  “நாங்கள் இங்கிருந்து கிளம்பி விடுவோம்.  ஆம் கிளம்பி விடுவோம்!” என்று முணுமுணுத்துக் கொண்டான்.  இந்தக் கிழவன் படு பொல்லாதவனாக இருக்கிறானே! தன் கட்டுப்பாடுகளை அறவே இழந்தான் துஷ்சாசனன். பெரியவர்கள் முன்னர் ஆரிய வர்க்கத்து இளவல்கள் நடந்து கொள்ளும் முறையையும் முற்றிலும் மறந்தான்.  ஆனால் பீஷ்மரோ எதற்கும் கலங்காமல் அவனையே கோபப் பார்வை பார்க்க இளைஞர்கள் இருவரும் உள்ளுக்குள் நடுங்கினர்.

துஷ்சாசனன் இப்படி ஒரு நிலைமையை எதிர்பார்க்கவில்லை.  பீஷ்மரின் கோபம் அவனுள் வியப்பையும் கோபத்தையும் ஒருங்கே விளைவித்தது.  அங்கிருந்து அவரிடம் சொல்லிக் கொள்ளாமல் கிளம்ப யத்தனித்தான். கிளம்பியும் விட்டான்.  ஆனால் இன்னமும் மரியாதை குறையாத விகர்ணன் பீஷ்மரின் கால்களில் மீண்டும் விழுந்து எழுந்து மரியாதையுடன் விடை பெற்றுக் கொண்டான்.  போகலாமா என அனுமதியும் கேட்டுக் கொண்டான்.  வாய் திறவாமல் கண் ஜாடையிலேயே அனுமதி கொடுத்தார் பீஷ்மர்.


பெரியவர்களுக்கு எதிரே முதுகைக் காட்டிக் கொண்டு செல்லக் கூடாது என்னும் பாரம்பரியத்தையும் மறந்தவனாக துஷ்சாசன் பீஷ்மருக்கு முதுகைக் காட்டித் திரும்பிக் கொண்டு அங்கிருந்து செல்ல ஆரம்பித்தான். ஆனால் பீஷ்மர் சும்மா இருக்கவில்லை.  தன் கம்பீரமான அதே சமயம் கண்டிப்பான குரலில் கூறினார். “இளைஞர்களே! நான் சொல்லி விட்டேன்.  சொன்னால் சொன்னது தான். யுதிஷ்டிரன் ஹஸ்தினாபுரத்துக்கு மன்னனாக முடிசூட்டப்படுவான்.  நீங்கள் இப்போது போகலாம்.” அவர் வார்த்தைகளில் ஒரு தீர்மானமான முடிவு தெரிந்தது.  அவர் தீர்மானித்துவிட்டார் என்பது துஷ்சாசனுக்குக் கோபத்தைக் கிளறி விட்டது.  அவன் அடக்க முடியாக் கோபத்தில் ஆழ்ந்தான். வார்த்தைகளால் விவரிக்க ஒண்ணாக் கோபத்தில் ஆழ்ந்த துஷ்சாசனன், “இந்தக் கிழவன் தான் நமக்கு முதல் எதிரி!” என்று எண்ணினான்.

1 comment:

ஸ்ரீராம். said...

பீஷ்மருக்குத்தான் என்ன ஒரு ஆளுமை!