Friday, September 27, 2013

ஷிகண்டின் ஆணா, பெண்ணா? துரோணரின் சந்தேகம்!

“வேத பாடங்கள் ஆரம்பிக்கப்பட்டனவா?”

“ஆம், ஆசாரியரே!”

“வில் வித்தை?”

“ஆம், ஆசாரியரே!”

“தண்டாயுதப் பயிற்சி?”


“ நான் இதை உங்கள் காலடியில் வீழ்ந்து கிடந்து உங்கள் மூலம் கற்க விரும்புகிறேன்.”  சிறுவன் மரியாதை நிமித்தம் தலை குனிந்தவண்ணம் கண்களையும் கீழே தாழ்த்திக் கொண்டு கூறினான்.  “உனக்கு என்ன வயசு?” துரோணருக்கு இவனிடம் ஏதோ ஈர்ப்பு இருப்பதாகத் தெரிந்தது.  “பதினாறு வயது, குருதேவரே!” என்றான் இளைஞன்.  “ஆனால் உன்னைப் பார்த்தால் பனிரண்டு வயதுப் பையன் போல் இருக்கிறாயே?”  துரோணர் கேட்க, “அது தான் என் துரதிருஷ்டம் குருதேவரே!” என்றான் ஷிகண்டின். “ம்ம்ம்ம்ம், மற்போர் பற்றிய அறிவும், அதன் நுணுக்கங்களையும் உனக்குக் கற்பிக்கப்பட்டிருக்கிறதா?” “இல்லை, ஆசாரியரே, எனக்கு யாரும் கற்பிக்கவில்லை.  எந்த ஆசிரியரும் அது குறித்துக் கூறியதில்லை.” குழப்பத்தினால் சிவந்த முகத்தோடு பதிலளித்த ஷிகண்டின் கடைசி வாக்கியத்தைக் கிட்டத்தட்டத் தனக்குள்ளே கூறிக் கொண்டான். “ஏன்?” துரோணர் கேட்டார்.


மீண்டும் ஷிகண்டினின் முகம் சிவந்தது.  கொஞ்சம் தயங்கினான்.  பின்னர் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, “என் ஆசிரியர்கள் நான் ஒரு பெண் என நினைத்தனர். “ என்று கூறினான்.   அதைச் சொல்கையில் குருமார்களிடம் குற்றம் கண்டுபிடிக்கும் தோரணை இல்லாமல் வெகு நிதானமாகவும் அடக்கத்துடனும் அவன் சொன்ன விதம் துரோணரின் முகத்தில் புன்னகையைத் தோற்றுவித்தது. “நானும் பெண்களுக்குப் போர்ப்பயிற்சியைக் கற்றுக் கொடுப்பதில்லை!” என்று கூறினார்.  தொண்டை அடைக்க ஷிகண்டின், “கட்டாயம் எனக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும் குருவே, நிச்சயமாய்க் கற்றுக் கொடுப்பீர்கள்.  நான் அதை அறிவேன்.  அதிலும் நான் எவ்வளவு துரதிர்ஷ்டக்காரன் எனத் தெரிந்தால் மறுக்க முடியாது உங்களால்!” என்றான்.


“நீ எங்கிருந்து வருகிறாய் இளைஞனே, உன் பெற்றோர் யார்?” துரோணர் கேட்டார்.


குருவம்சத்தினரின் ஈடு இணையற்ற தளபதியான துரோணரின் முகம் பொதுவாகக் கடுமையையும், வீரத்தையும் பெளருஷத்தையும் காட்டும்.  அத்தகைய முகத்தில் இப்போது இந்தச் சிறுவனுக்காகக் கொஞ்சம் கருணையும், தயையும் தோன்றியது.  மிக லேசாகப் புன்முறுவலித்த வண்ணம் அவனைப் பார்த்தார் துரோணர்.  “என் தாய், காசி தேசத்து இளவரசியாவாள்.” இதைச் சொன்ன ஷிகண்டினுக்கு அடுத்த வார்த்தை பேச வராமல் தொண்டையை அடைத்தது.  ஏதோ தொண்டையை அடைக்கிறதே என எண்ணியவன் போல், தன் தொண்டையைச் சரிப்படுத்திய வண்ணம், முழு தைரியத்தையும் வரவழைத்துக் கொண்ட ஷிகண்டின், “என் தகப்பனார், உங்கள் பரம வைரி, பாஞ்சால நாட்டு அரசன் துருபதன்.” என்று முடித்தான்.  துரோணருக்குத் தூக்கி வாரிப் போட்டது.  


அவர் புன்சிரிப்பு மறைந்தது.  “ என்றால் அனைவரும் சொன்னது பொய்யல்ல என்றாகி விட்டது.   உன்னைத் தான் உன் தாய் தன் தந்தையான காசி தேசத்து அரசனின் மாளிகையில் ஒரு ஆணைப் போல் வளர்த்தாள் இல்லையா?  நீ துருபதனின் பெண், அல்லவா?” என்று கேட்டார். “ஆம் குருதேவரே, என் தாய் இறந்ததும், நான் தந்தையிடம் எனக்குப் பத்து வயதாக இருக்கையில் அழைத்துச் செல்லப்பட்டேன்.” என்று மீண்டும் அடக்கத்துடன் கண்களைத் தாழ்த்திய வண்ணம் கூறினான்.   “நீ ஒரு ஆணைப் போலவே இது வரை நடந்து கொண்டிருக்கிறாய்?” என்று துரோணர் கேட்க, அதை ஆமோதித்தான் ஷிகண்டின்.  மேலும் தொடர்ந்து, “தந்தையார் என்னை அப்படி எல்லாம் இருக்க வேண்டாம், நீ உண்மையில் எவ்வாறு உள்ளாயோ அவ்வாறே இரு என்று தான் கூறினார்.  ஆனால் நான் கடுமையாக மறுத்துவிட்டேன்.   நான் ஒரு ஆணாக இருக்கவே விரும்புகிறேன்.  தைரியமும், வலுவும் உள்ள இளவரசனாக, போர்ப்பயிற்சிகளை நன்கு கற்றுத் தேர்ந்து எனக்கு உரிமையுள்ள அரண்மனையில், த்ருஷ்டத்யும்னனுக்கும், சத்யஜித்துக்கும் ஒரு சகோதரனாக அவர்களுடன் சேர்ந்து பணியாற்ற விரும்புகிறேன்.  ஆனால் தந்தைக்குக் கோபம் வருகிறது. ஆத்திரப்படுகிறார்.”  என்றான்.


திடீரென இப்படி சந்தேகப்படும்படியான சூழ்நிலையில் ஷிகண்டின் இங்கே வருவானேன்?  துரோணருக்குள் சந்தேகம் வளர்ந்தது.  இந்த விஷயத்தின் ஆணிவேர் வரை சென்று பார்க்க விரும்பினார்.  ஆகவே, “ஏன்?” என்று ஷிகண்டினைக் கேட்டார்.  ஷிகண்டின் நேரடியான, வெளிப்படையான ஒரு பதிலைத் தந்தான். “ நான் ஒரு ஆண்மகன் என்று சொல்லிக் கொள்வது வஞ்சகமான ஒன்று எனத் தந்தை நினைத்தார்.  அவரால் அதை  ஒப்புக்கொள்ள முடியவில்லை.  ஆனால் என்னுள் வார்த்தைகளால் விவரிக்க முடியாத துன்பங்கள் ஏற்பட்டன.  என்னுடைய விருப்பங்கள் அனைத்துமே ஒரு ஆணுடையதாகவே இருந்தது.  நான் வளர்க்கப்பட்டதும் ஒரு ஆணாகவே.   எனக்கு அளிக்கப்பட்ட பயிற்சிகளும் ஒரு ஆணுக்குரியதாகவே இருந்தது.   என் தந்தையையும், சகோதரர்களையும் போல நானும் ஒரு ஆணாகவே விரும்பினேன். "


“ஒரு பெண்ணாக உன்னை நீ எப்போதுமே உணரவில்லையா?”
“சில சமயங்களில் உணர்ந்திருக்கிறேன்.  துஷ்டத்தனங்களையும், கொடூரங்களையும், கரடுமுரடாக நடப்பவர்களையும் பார்க்கையில் மனம் வருந்தி இருக்கிறது.  இதயம் கொந்தளிக்கும்.  ஆண்களிடம் ஈர்ப்பு இருந்ததும் உண்மை தான்;  எனினும் அது ஒரு பெண்ணாக அல்ல.  சிறு பையன்களுக்கு வலிமையும், கம்பீரமும் நிறைந்த  ஆண்களிடம் ஏற்படும் சிறுபிள்ளைத்தனமான ஈர்ப்பு.   உணர்ச்சி வசப்பட்டவனாகவும் இருந்திருக்கிறேன்.   ஆனால் அவற்றை எல்லாம் கொஞ்சம், கொஞ்சமாகத் தூக்கி நசுக்கி எறிந்துவிட்டேன்.   நான் ஒரு முழு ஆணாகவே இருக்க விரும்புகிறேன்.”


“நீ ஒரு பெண் என எப்போது கண்டுபிடித்தார்கள்? அல்லது கண்டுபிடிக்கப்பட்டது?”


“யாருக்கும் நான் ஒரு பெண் எனத் தெரியாது.  என் தந்தை மற்றும்  என் சகோதரர்களுக்கும் கொஞ்சம் தெரியும்.  என் சகோதரி திரெளபதிக்கும், முதல் அமைச்சர் உத்போதனருக்கும் தெரிந்தாலும் அவர்கள் அனைவருமே இதை ஒரு ரகசியமாகவே காப்பாற்றி வருகின்றனர்.   ஒரு சில மக்கள் நான் ஒரு ஆணாக இருக்க முடியாது என சந்தேகப்பட்டனர். என் குருமார்களோ, ஏதோ உணர்ந்திருந்தார்கள்.  ஆகவே பாதுகாப்பு உணர்வோடு எனக்கு தண்டாயுதப் பயிற்சியோ அல்லது மற்போரோ கற்றுக் கொடுக்கவில்லை.   ஒரு வேளை நான் வற்புறுத்தி இருந்தால் நான் யார் எனக் கண்டுபிடிக்கப்பட்டிருப்பேன் என நினைத்தார்கள் போல!” என்றான் ஷிகண்டின். 


“ஆனால் உனக்கும் தஷார்னாவின் இளவரசிக்கும் உன் தந்தையிடம் நீ வரும் முன்னரே திருமணம் நடந்ததாகக் கேள்விப்பட்டேனே?” என்று துரோணர் கேட்டார்.  “ஆம், அவர்கள் இந்த விருப்பத்தைத் தெரிவித்தனர்.  தந்தையும் ஏற்றுக் கொண்டார்.  நாங்கள் திருமணம் செய்து கொள்கையில் அந்த இளவரசிக்கு ஆறு வயது தான் ஆகி இருந்தது.  இப்போது அரசன் ஹிரண்யவர்மன் தன் மகள் இளவரசியைக் காம்பில்யத்திற்கு அழைத்துச் செல்லச் சொல்லிக் கொண்டிருக்கிறார்.  அதனால் தான் நான் அங்கிருந்து ஓடி வந்துவிட்டேன்.” என்று இன்னும் வெளிப்படையாகச் சொன்னான் ஷிகண்டின்.


“ம்ம்ம்ம்? அப்படியா?  அல்லது இதற்கு மாறாக உன் தந்தையே உன்னை இவ்விடம் அனுப்பி இருந்தால்?” துரோணரின் சந்தேகம் தீரவில்லை.  துருபதன் தன் மகளை இங்கே தன்னை  உளவறிய வேண்டி அனுப்பி இருப்பானோ என்னும் சந்தேகம் துரோணருக்கு இருந்தது.   “இல்லை, நிச்சயமாய் இல்லை, “என்ற ஷிகண்டின், “நான் இங்கே வந்திருப்பது கூட என் தந்தைக்குத் தெரியாது!” என்று சொல்லிக் கொண்டே துரோணரின் முகத்தை தைரியமாக நேருக்கு நேர் பார்த்தான்.





Thursday, September 26, 2013

வந்தான் ஷிகண்டின்!

“அப்படியா?  சரி, மற்றவர்கள்?  முதலில் அவர்களை அழை!” என்றார் துரோணர்.  பனிரண்டிலிருந்து பதினான்கு வயதுக்கு உட்பட்ட இரு சிறுவர்களை ஷங்கன் அங்கே அழைத்து வந்தான்.  “இவர்கள் இருவரும் உத்தரகுருவிலிருந்து வந்திருக்கின்றனர்.  குரு வம்சத் தலைவர்களில் ஒருவனான சுபாஹுவின் மகன்கள் ஆவார்கள்.  சுபாஹுவும் வந்திருக்கிறான்.” என்று சொல்லியவண்ணம் சிறுவர்களுக்கு அருகே நின்று கொண்டிருக்கும் சுபாஹுவைச் சுட்டிக் காட்டினான் ஷங்கன்.  “தகப்பனைக் குறித்த அக்கறை ஏதும் எனக்கில்லை.  இளைஞர்களிடம் மட்டுமே என் தனிப்பட்ட கவனம்!” பட்டென்று கூறிய துரோணர் அந்தச் சிறுவர்களின் ஒருவனைப் பார்த்து, “உனக்குப் பனிரண்டு வயதிருக்கும் இல்லையா?  உனக்கு?  உனக்குப் பதினான்கு இருக்குமா?” எனக் கேட்டார்.  அந்தச் சிறுவன் தலையை ஆட்டிக் கொண்டே, துரோணரின் கோபமான வார்த்தைகள் ஏற்படுத்திய பயத்தில், “ஆம், ஐயா!” என்று வேகமாக ஆமோதித்தான்.   தன் புருவங்களை நெரித்த வண்ணம், “இத்தனை காலம் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் இருவரும்?   சாஸ்திரங்கள் கூறியுள்ளபடி குருகுலம் வருவதற்கான வயது எட்டுக்குள்ளாக என்பதை உங்கள் தகப்பன் அறியவில்லையா?”  மீண்டும் கோபத்துடன் கேட்டார் துரோணர்.  சிறுவர்கள் இருவரும் அந்த இடத்திலேயே தங்களை நட்டுவிட்டது போல் மரம் போல அசையாமல் நின்றார்கள்.  அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு தலையையும் குனிந்து கொண்டனர்.  அவர்கள் தகப்பன் தான் சற்று முன்னால் வந்தான்.  துரோணரின் கோபத்தையும், அவரின் கேள்வியையும் கண்டு சற்றுத் தடுமாறியவனாய் பயத்தோடு, “இவர்களின் தாய், அவ்வளவு சிறிய வயதில் இவர்களைப் பிரிய மறுத்துவிட்டாள்.”  என்று கூறினான்.

“ஹூம், நான்கு வருடங்களை வீணாக்கியாயிற்றா? சரி, தொலைந்து போகட்டும், சிறுவர்களே, நான் உங்கள் இருவரையும் என் மாணாக்கர்களாக ஏற்றுக் கொள்ளுகிறேன்.  ஆனால் நீங்கள் இருவரும் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும்.   வீணாக்கிய நான்கு வருடங்களுக்கும் சேர்த்துக் கடுமையான உழைப்புக்கு நீங்கள் இருவரும் தயாரா?” இதைக் கேட்கும்போதே துரோணரின் முகபாவம் மாறி மிகவும் மென்மையானது.  ஒரு தந்தையின் அன்பு அதிலே தெரிந்தது.  அவர் கண்களில் தெரிந்த அன்பைக் கண்டு தைரியம்  கொண்ட சிறுவன் ஒருவன் தன் நடுங்கும் கரங்களைக் கூப்பிய வண்ணம், “ அப்படியே குருதேவரே!” என்று வணங்கினான்.  துரோணர் அன்புடன் இருவரையும் தன்னருகே அழைத்தார்.  இருவரையும் கட்டி அணைத்து உச்சி மோந்தவண்ணம், “நீங்கள் இருவரும் கடுமையாக உழைத்துக் கற்றுக் கொண்டால் நீங்கள் கற்கவேண்டியது அனைத்தையும் கற்றுக்கொடுக்க நான் தயாராக உள்ளேன். “ என்று கூறினார்.  இதைக் கேட்ட சிறுவர்கள் மனம் நிறைந்து கண்கள் பொங்கி வழிந்தன.  துரோணரின் கால்களில் விழுந்து வணங்கிவிட்டு அங்கிருந்து வெளியேறினார்கள்.

அதன் பின்னர் வந்தான் ஒரு திடகாத்திரமான வாலிபன்.  அவன் முகத்தில் மிகக் கஷ்டப்பட்டு மறைக்க முயற்சி செய்த குடும்பப் பாரம்பரியப் பெருமை தொக்கி நின்றது.  துரோணரைப் பார்த்த வண்ணம் வந்தான்.  “இவன் பெயர் அங்காரகன் ஆசாரியரே!  காம்போஜத்திலிருந்து வந்துள்ளான்.  யுவராஜா துரியோதனனின் மனைவி இளவரசி பானுமதிக்குச் சொந்தம்.” என்றான்.  “உன் வயது என்ன?” துரோணர் கேட்டார்.  “பதினாறு” என்றான் அங்காரகன்.  அவன் முகம் பெருமையுடன் புன்னகையால் மலர்ந்தது.  “இவ்வளவு வருடங்கள் என்ன செய்து கொண்டிருந்தாய்?  “  அவனுடைய இந்த தாமதமான வரவில் தன் அதிருப்தியை அந்தக் கேள்வியிலேயே தெரிவித்தார் துரோணர்.  “மல்யுத்தம் செய்தேன்; குதிரை ஏற்றம் பழகினேன்; வேட்டையாடினேன்.” அங்காரகன் தன்  தகுதிகளை மிகப் பெருமையுடன் சொல்லிக் கொண்டான்.  அவன் குரலில் மிகுந்த தன்னம்பிக்கையும் காணப்பட்டது.  “பின்னர் எதற்காக நீ குருகுலத்துக்கு வருகிறாய்? “துரோணர் கேட்டார்.  “தந்தையின் விருப்பம் அது குருதேவரே.  ஒரு சிறந்த போர் வீரனாக நான் பயிற்சி பெற நீங்களே தக்க குரு எனத் தந்தையின் விருப்பம்.  அவரின் முடிவான தீர்மானம்.”  என்றான் அங்காரகன்.  “உன் மனதில் சிறந்த போர்வீரனாக மாற வேண்டும் என்ற விருப்பம் உனக்குள்ளே உள்ளதா?” இகழ்ச்சியுடன் கேட்டார் துரோணர்.  துரோணரின் இந்த நடவடிக்கை அந்த இளைஞனைச் சிறிதும் பாதிக்கவில்லை.  அவன் சிரித்துக் கொண்டே, “  நான் ஏற்கெனவே ஒரு சிறந்த போர்வீரனாக உருமாறி வருவதாகத் தந்தை நினைக்கிறார்.” என்றான்.

“நீ என்ன நினைக்கிறாய்?  அதைச் சொல்!” என்றார் துரோணர்.  மீண்டும் புன்முறுவலோடு அவன், “நான் எல்லாப் போர்வீரர்களையும் போல அவர்களையும் விட சிறந்த வீரன் என நினைக்கிறேன்.” என்றான்.  கடுமையாகக் காணப்பட்ட துரோணரின் முகத்திலும் புன்முறுவல் கீற்றுப் போல் தெரிந்து மறைந்தது.  “அப்படியா? சரி, போகப் போகப் பார்க்கலாம்!” என்றவர், ஷங்கனை அழைத்தார்.  “ஷங்கா,  இவனுக்காக ஒரு தேர்வுப் போட்டியை ஏற்பாடு செய்!  மல்யுத்தம், வேட்டையாடுதல், குதிரை ஏற்றம், தண்டங்களை வைத்துப் போர் புரிதல் ஆகியவற்றில் போட்டிகள் ஏற்பாடு செய்! இவனுக்கெதிராக, சுகர்ணனைத் தயார் செய். “ என்று சொல்லிக் கொண்டே அங்காரகனிடம் திரும்பி, “சுகர்ணனுக்குப் பதின்மூன்று வயதே ஆகிறது.  உன்னால் முடிந்தால் அவனைத் தோற்கடித்துப் பார்!” என்றார்.  அங்காரகன் சிரித்த வண்ணம், “அவனை ஒன்றுமில்லாமல் ஆக்குகிறேன்.” என்றான்.  “அப்படியா சொல்கிறாய்?  அப்படி என்றால், உனக்கு இங்கே பயிற்சி எதுவும் தேவை இருக்காது.” என்று நிதானமாகச் சொன்னார்.

“ஒருவேளை அவன் என்னைத் தோற்கடித்துவிட்டால்?” அங்காரகன் கேட்டான்.   அதைக் கேட்ட துரோணர் கலகலவென வெளிப்படையாகச் சிரித்தார்.  “தம்பி, அவன் உன்னைத் தோற்கடித்துவிட்டால் என் குருகுலத்தில் அதாவது யுத்தசாலையில் உனக்கு இடம் இல்லை!” என்றார்.  “என்ன, இடம் இல்லையா? ஏன்?” என்றான் அங்காரகன்.  “ஏன் எனில், ஒரு நல்ல மாணாக்கனுக்கு இருக்க வேண்டிய பணிவோ, விநயமோ உன்னிடம் இல்லை.” மீண்டும் அலட்சியமாகப் பேசிய துரோணர் அதே அலட்சியத்துடனும், தான் அங்கே தலைவன், தன் பேச்சுக்கு மறுபேச்சு இல்லை  எனப் புரியும் வண்ணம் கம்பீரம் குறையாமலும் தன் கைகளின் அசைவின் மூலமே அவனை அங்கிருந்து வெளியேற்றினார்.  அங்காரகன் அங்கிருந்து சென்றதும்,  காத்திருந்த நான்காவது இளைஞனை அங்கே அழைத்து வந்தான் ஷங்கன்.  ஒரு துறவியைப் போல் உடை தரித்திருந்தான் அந்த இளைஞன்.  இவனைத் தான் ஒரு இளைஞன் என்று சொல்வதை விட இளம்பெண் எனச் சொல்லலாம் என்று ஷங்கன் கூறி இருந்தான்.   அவன் பார்க்கவும் அப்படியே மிக அழகாக இருந்தான்.  பட்டுப் போன்ற மென்மையான உடலுடன், அழகான வடிவமைப்புடன் கூடிய திருத்தமான முகமும், நீண்ட விசாலமான நயனங்களும்,  தீர்க்கமான மூக்கும், முகத்தில் அழகாகப்பொருந்தி இருந்த  செக்கச் சிவந்த உதடுகளோடும், அதன் வளைவுகளும் கண்ணைக் கவரும்படி இருந்ததும் பார்க்க அவன் ஒரு பெண்ணைப் போலவே இருந்தான்.

அவன் மெதுவாக மிக மெதுவாக நடந்து வந்தான்.  கொஞ்சம் தயங்கிய வண்ணம் வந்த அவன் நடையில் கண்ணுக்குப் புலப்படாத பெண்மையின் நளினம் நிறைந்திருந்தது.  பட்டுப் போன்ற அவன் கேசம் உச்சியில் முடியப்பட்டிருந்தது.  நீண்ட கேசம் என்பதும் புரிந்தது.  அவன் உடுத்தி இருந்த மான் தோலால் ஆன உடைக்குக் கீழே தெரிந்த அவன் இடை ஒரு பெண்ணின் இடையைப் போல் வளைந்து சிறுத்து நெளிவுகளைக் காட்டியது.  இப்படி எல்லாம் இருந்தும், அவன் வலுவானவாகவும், பலம் மிகுந்தும், தன்னைத் தானே ஆண் என்று சொல்லும்படியான உறுதியோடும் காணப்பட்டான்.  உள்ளே வந்தவன் துரோணரை வணங்கினான்.   அவன் வணங்கிய முறையிலிருந்தே நல்ல குடும்பப் பாரம்பரியம் உள்ளவன் என்பதைப் புரிந்து கொண்டார் துரோணர்.  இவனுடைய தனித்தன்மை நிறைந்த இந்தத் தோற்றம் துரோணரைக் கவர்ந்தது.  இவன் விசித்திரமான ஆணும், பெண்ணும் கலந்த கலவையாக இருக்கிறான் என நினைத்துக் கொண்டார் துரோணர்.  அவனிடம் அவருக்கு ஆவல் மிகுந்தது. அனைவரின் கவனத்தையும் கவரும் அந்த இளைஞன் தன் இரு கரங்களையும் கூப்பிய வண்ணம் இயல்பான பணிவோடும், விநயத்தோடும்  துரோணர் பேசுவதைக் கேட்கத் தயாராக இருக்கும் நிலையில் நின்றான்.  “ நீ தான் இரு நாட்களுக்கு முன்னர் யுத்தசாலைக்குக் கல்வி கற்க வந்தவனா?” துரோணர் எப்போதேனும் வெளி மனிதர்களிடம் அபூர்வமாய்க் காட்டும் கருணையை அந்த இளைஞனிடம் காட்டிக் கேட்டார்.  “ஆம், குருதேவா!”  என்றான் அவன்.  “உன் பெயர் என்ன?” துரோணர் கேட்டார்.

“என் பெயர் ஷிகண்டின் குருதேவரே!  இரண்டு நாட்கள் முன்னர் படகு வழியே நான் இந்த யுத்தசாலைக்குக் கல்வி கற்க வந்து சேர்ந்தேன். “ அவன் என்னதான் முயன்று ஆணைப் போல் திடமாகவும், பலத்தைக் காட்டியும் பேச முயன்றாலும் அந்தக் குரல் பெண்மை மிகுந்து இனிமையாகவே தொனித்தது.  “நான் உன்னைப் பார்த்துப் பேசும்வரை உணவு எடுத்துக் கொள்ளவும் மறுத்துவிட்டாயாமே?” துரோணர் கேட்டார்.  கைகளைக் கூப்பியவண்ணமே தலை குனிந்து, “ஆம், ஐயா!” என்றான் ஷிகண்டின்.

“ஏன்?”

“உங்கள் மாணாக்கனாக வேண்டும் என்பதே என் லக்ஷியம்.  வாழ்க்கையின் அந்த லக்ஷியம் பூர்த்தி அடையவில்லை எனில், உயிர் வாழ்வதில் என்ன பயன்?”

“உன் கோத்திரம் என்ன, பிரமசாரி?”

“நான் பிராமணன் அல்ல ஆசாரியரே, க்ஷத்திரியன்.  கெளசிக கோத்திரத்தைச் சேர்ந்த க்ஷத்திரியன்.”




Tuesday, September 24, 2013

துரோணரின் சீடர்கள்!

கண்ணனை அங்கேயே இப்போதைக்கு விட்டுவிட்டு, நாம் இப்போ அவசரமா ஹஸ்தினாபுரம் போயாகணும்.  அங்கே ஒரு முக்கியமான நிகழ்ச்சி! அதுவும் துருபதனின் ஜென்ம வைரியான துரோணரின் ஆசிரமத்திலே!  என்னனு பார்ப்போமா?  துரோணர் தன் ஆசிரமத்தின் தன் வழக்கமான ஆசனத்தில் கம்பீரமாக அமர்ந்திருந்தார்.  அவருடைய மாளிகைக்கு எதிரே அவர் ஆசிரமத்தின் யுத்தசாலை எனப்படும் பயிற்சிக் கூடத்தில் ஹஸ்தினாபுரத்தின் படைகளின் தலை சிறந்த தளபதியான துரோணர் சிந்தனையுடன் அமர்ந்திருந்தார்.   அவர் முகம் தீவிர சிந்தனையில் ஆழ்ந்திருந்ததை அவர் புருவங்களின் நெரிப்பும், கண்களில் தெரிந்த மனச் சஞ்சலத்தின் அறிகுறியும், அதன் மூலம் விளைந்த அமைதிக்குறைவும் நன்றாகக் காட்டியது.  அவர் முன்னே   கெளரவர்களில் மூத்தவனும் அப்போதைய ஹஸ்தினாபுரத்தின் யுவராஜாவானவனுமான  துரியோதனன், வில் வித்தையில் சிறந்தவன் ஆன துரியோதனனின் நண்பனும், அவனால் அங்க நாட்டரசன் ஆனவனும் ஆன கர்ணன்,   துரோணரின் அருமை மகன் அஸ்வத்தாமன் ஆகியோர் நின்று கொண்டிருந்தனர்.  புஷ்கரத்தை ஆண்ட யாதவர்களின் காவலன் ஆன செகிதானாவை வென்று அங்கிருந்து விரட்டி அடித்ததைக் குறித்த தங்கள் சந்தோஷத்தை துரோணரிடம் கூறி பெருமிதம் கொள்ள வந்தவர்கள், அவர்களுடைய இந்த மூர்க்கத்தனமான நடவடிக்கைக்கு வசைமாரி கிடைத்துச் செய்வதறியாது நின்று கொண்டிருந்தனர்.    துரோணர் கோபமாகப் பேசிக் கொண்டிருந்தார்.

“நான் சொன்னது என்ன துரியோதனா!  எவ்வாறேனும் செகிதானாவை நண்பனாக ஆக்கிக் கொண்டு அவன் மகனை இங்கே மாணவனாகச் சேர்த்து விடு என்றல்லவோ கூறினேன்!  ஆனால் நீ செய்தது என்ன?  அவனை நசுக்கி அல்லவா எடுத்துவிட்டாய்?  அவனை ஆக்கிரமிக்கவா சொன்னேன்?  புழு,பூச்சியை நசுக்குவது போல் அல்லவோ அவனை நசுக்கிவிட்டாய்?  கெளரவர்களுக்கு இது உகந்தது அல்ல.  அதோடு அவனை யமுனையின் அக்கரைக்குத் துரத்தி அடித்திருக்கிறாய்!”

“ஆசாரியரே, அவன் பிடிவாதக்காரனாக இருக்கிறான்.  தோல்வியை எங்கே ஒப்புக் கொண்டான்!” கர்ணன் கூறினான்.   சூரியனைப் போன்ற தேஜஸோடு கூடிய அவன் அழகிய முகம் கோபத்தில் சிவந்து கொந்தளித்தது.  “அவனுக்கு இது வேண்டியது தான்.  அவனுடைய அகம்பாவத்தாலேயே அவன் விரட்டி அடிக்கப்பட்டான்.”

“அவன் கெட்டிக்காரன்; தைரியசாலியும் கூட.  அதனாலே தான் அவனுடைய நட்பு நமக்கு மிகத் தேவையான ஒன்று என நான் நினைத்தேன்.  அதை மிக விரும்பினேன்.  இப்போது அந்த ராஜபாட்டையின் பாதுகாவலனாக யார் இருக்கின்றனர்?  புஷ்கரத்துக்குச் செல்லும் ராஜபாட்டையில் அநேக இடங்களில் யாதவத் தலைவர்கள் குடி இருக்கின்றனர்.  தங்கள் படைகளோடு பலரும் இருக்கின்றனர்.” துரோணர் பேசுகையில் அவருக்கு செகிதானாவை விரட்டி அடித்ததில் கொஞ்சம் கூட விருப்பம் இல்லை என்பதைக் குரலிலேயே காட்டினார்.   ஆனால் அடுத்துப் பேசிய அஸ்வத்தாமனுக்கு துரோணரின் இந்தக் கோபம் பிடிக்கவில்லை என்பதும் தெரிந்தது. “ நீங்கள் தான் அப்போது முழுச் சம்மதம் கொடுத்தீர்கள் தந்தையே!  செகிதானாவை நாங்கள் எதிர்க்க நீங்கள் சம்மதம் கொடுத்தீர்கள்!” என அழுத்தம்திருத்தமாய்ச் சொன்னான்.  துரியோதனனும் தன் குரலில் கடுகடுப்பைக் காட்டியவண்ணம், “அவன் ஒருக்காலும் நம் நண்பனாக மாறப்போவதில்லை ஆசாரியரே!  மாறவும் மாட்டான்!” என்று திட்டவட்டமாகக் கூறினான்.  “நீ உன் மனதை அதற்கேற்றாற்போல் மாற்றிக்கொள்ள வேண்டும், துரியோதனா!” ஆசாரியர் கூறினார்.


இப்போது கர்ணன் மீண்டும் வலியுறுத்தும் குரலில், “அவனெல்லாம் நம்மோடு நட்பை விரும்புபவனல்ல ஆசாரியரே! அவன் ஒரு விஷச் செடியைப் போல் வெட்டி எறியப் பட வேண்டியவன்.” என்றான்.  “ஆஹா, நண்பர்களே இல்லாமல் நீங்கள் அனைவரும் மட்டும் சேர்ந்து உங்கள் எதிரிகளை ஒழிக்கப் போகிறீர்களா?” ஆசாரியர் குரலில் ஏளனம் மிகுந்தது.  “இப்போது புஷ்கரம் நம் கைகளில் இருப்பதால், விராடன், கண்ணன் ஆகியோரின் நடவடிக்கைகளை நாம் கண்காணிக்க இயலும்.  மேலும் ஹஸ்தினாபுரத்தில் இருந்து செளராஷ்டிரம் செல்லும் ராஜபாட்டையில் நம் கண்காணிப்பு இருப்பதால் கட்டுப்பாட்டுடன் வைக்கலாம்,  இது நமக்கு நன்மையே.  அவை நம் ஆட்சியின் கீழ் வருவதால் நன்மையே பயக்கும்.” என்றான் கர்ணன்.  துரோணர் அவனை அலட்சியமாகப் பார்த்தார்.  “விராடனும், யாதவர்களும் ஒன்று கூடிக் கொண்டால்?? அதுவும் நமக்கெதிராக?  அப்போது நமக்கு அவர்களைக் கவனிப்பதும், அவர்களை எதிர்கொள்வதுமே வேலையாக இருக்கும்.  அதற்கே சரியாக இருக்கும்.  அந்தச் சமயம் பார்த்து துருபதன் ஹஸ்தினாபுரத்தில் நுழையப் பார்ப்பான்.  அவனை எவரால் தடுக்க இயலும்?”


“நான் விகர்ணனைப் புஷ்கரத்தை நிர்வகிக்கச் சொல்லியுள்ளேன்.” என்றான் கர்ணன்.  “கெளரவர்களின் படைகள் இவற்றுக்கு நடுவே எங்கே தங்கும்?  ஒரு பக்கம் முழு விரோதியான விராடன், இன்னொரு பக்கம் ஷால்வன், செகிதானாவைச் சுற்றியோ யாதவப் படைத்தலைவர்கள்!  இவர்களுக்கு நடுவே மாட்டிக் கொண்டு தவிக்கும் கெளரவப் படைகள்!  ஹூம்!  என்ன காரியம் செய்திருக்கிறீர்கள்?  போங்கள், இப்போது போங்கள்!  எப்படி இருந்தாலும் என்னுடைய ஆசிகள் இருக்கும்!   நான் இந்த விஷயத்தைக் குறித்துப் பிதாமகர் பீஷ்மரோடு கலந்து ஆலோசிக்க வேண்டும்.  அதன் பின்னர் நாம் செய்யவேண்டியது என்ன என்று தீர்மானிக்கலாம்.”  துரோணர் அவர்களுக்கு விடை கொடுத்து அனுப்பினார்.  இளைஞர்கள் மூவரையும் அனுப்பிய துரோணர் தீவிர சிந்தனையில் மூழ்கினார்.  துரியோதனன் வழக்கம் போல கர்வம், அகம்பாவம் நிறைந்தே இருந்து வருகிறான்.  கட்டுக்கு அடங்காத மூர்க்கமும், சுயநலமும் அவனை விட்டு மறையவில்லை.  கொடுக்கும் புத்திமதியின் உள்ளார்ந்த பொருளைப் புரிந்து நடக்கும் ராஜதந்திரத்தை அவனிடம் எதிர்பார்க்கவும் முடியவில்லை.  அவனுக்கும் ராஜதந்திரத்துக்கும் வெகு தூரம்.  ஹூம்!  துரோணரின் திட்டங்கள் தோல்வியடைகின்றனவே!  செகிதானாவை ஒரு விசுவாசமுள்ள நண்பனாக ஆக்கிக் கொள்வதன் மூலம், ஷால்வனின் நாட்டுக்கும், யாதவர்களின் சின்னச் சின்ன நாடுகளுக்கும், ஹஸ்தினாபுரத்தின் எல்லைகளுக்கும் இடையே இருந்து வரும் சச்சரவுகளைத் தீர்த்துக் கொண்டு எல்லைகளை பலமாகவும் வலிமையாகவும் மாற்ற விரும்பினார்.  ஆனால் அவருடைய அருமைச் சீடர்களோ, செகிதானாவை அமைதியும், சமாதானமும் விரும்பும் நண்பனாக ஆக்கிக் கொள்ளாமல், அவனை நிரந்தர எதிரியாக மாற்றிவிட்டனர்.  “ஒருவேளை கிருஷ்ணன் செகிதானாவின் உதவிக்குச் சென்று புஷ்கரத்தை மீண்டும் கைப்பற்றிவிட்டால்??


“ஹூம், இந்த இடைக்குலத்தில் வளர்ந்த யாதவச் சிறுவன் ஒரு நிரந்தரத் தொல்லையாக மாறிவிட்டிருக்கிறானே! “  துரோணரின் சிந்தனைக் கொடி உயர உயரப் பறந்தது.  “அவன் இப்போது காம்பில்யத்தில் இருப்பான்.  விரைவில் துருபதனின் மகளை மணந்து கொள்ளவும் போகிறான்.  யாதவத் தலைவன் செகிதானாவை அவனுடைய ஆளுமைக்கு உட்பட்ட பிரதேசத்திலிருந்து விரட்டி அடித்ததைத் தெரிந்து கொண்டால், கிருஷ்ணன் , அவன் மாமனார் ஆன துருபதனோடு கூட நிச்சயம் கெளரவர்களுக்கு எதிராகப் படை திரட்டுவான்.  அதுவும் இப்போது பாண்டுவின் புத்திரர்கள் ஐவரும் இறந்துவிட்ட செய்தியைக் கேட்டதுமே யாதவர்கள் அனைவருக்கும் கெளரவர்களிடம் சந்தேகம், கோபம்.  இந்நிலையில் நிச்சயம் அவர்களின் விரோதம் வளரும்.  போரையும் அறிவிக்கலாம்.  இது மகிழ்ச்சி அளிக்கும் விஷயம் அல்ல.  அவசரக் காரன், பிடிவாதக்காரன், முரடன், மூர்க்கன்”, துரியோதனன் குறித்தே ஆசாரியர் துரோணர் இத்தனை வசைமாரிகளையும் தனக்குள்ளாக முணுமுணுத்துக் கொண்டார். “சும்மாவானும் இப்படி எல்லாம் வலுவில் போரிட்டுத் தங்கள் வீரத்தைக் காட்டுவது தான் சிறப்பு என நினைக்கின்றனர் போலும்.  எப்போது அவர்கள் இவை எல்லாம் தேவையில்லாத அசட்டு தைரியம், வீரத்தில் சேர்த்தியல்ல என்பதைப் புரிந்து கொள்ளப் போகின்றனர்?”


தன் சிந்தனை வெள்ளத்தில் மூழ்கிப்போன துரோணர், தன் அன்றாட வழக்கமும், பொழுது போக்கும் ஆன மீன்கள், ஆமைகளுக்கு நதியில் தானியங்களை இறைத்து உணவளிக்கவும் மறந்து போனார்.  அவருடைய உதவியாளனோ, நான்கு புதிய மாணவர்களைச் சேர்க்க வேண்டி துரோணரின் வருகைக்காக வெகு நேரமாகக் காத்துக் கொண்டிருந்தான்.  துரோணரின் பார்வை யுத்தசாலைப் பக்கம் திரும்பும் நேரத்தை எதிர்பார்த்த வண்ணம் இருந்தான்.  திடீரென நினைவுக்கு வந்தவர் போல, துரோணர் அவன் பக்கம் திரும்பி, “ஷங்கா, இந்த இளைஞர்கள் நம் யுத்தசாலைப் பயிற்சிக்குத் தக்கவர்களாக இருக்கின்றனரா?  நீ அளித்த தேர்வுகளில் தேறிவிட்டனரா?” எனக் கேட்டார். யுத்தசாலையில் பயிற்சி பெற வரும் இளைஞர்களைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பில் இருந்த நடுத்தர வயதுக் காரன் ஆன ஷங்கன், குருவிடம் நெருங்கி வந்து கிசு கிசுத்தான். “ நேற்று வந்த அந்தச் சின்னஞ்சிறு இளைஞன், அவன் இளைஞனா?  இல்லை, அவன் ஒரு ஆண் என்பதை விடப் பெண் என்றே சொல்லலாம்.” என்று மிக மெதுவாக ரகசியம் பேசும் குரலில் கூறினான்.

“அவனை அனுப்பிவிடு!  நான் ஒரு பெண்ணை எல்லாம் யுத்தசாலைப் பயிற்சிக்கு எடுத்துக் கொள்வதில்லை.  முதலில் அனுப்பு அவனை!”  தன் கைகளால் உதாசீனமாக அவனை அனுப்பும்படி ஜாடை காட்டினார் துரோணர். “அவன்போக மாட்டானாம் குருதேவரே!  வந்ததில் இருந்து உணவுகூட உண்ணாமல் உங்களைத் தனியாக நேரில் சந்திக்க வேண்டும் எனக் காத்திருக்கிறான்.  உங்களை நேரில் சந்திக்காமல் இங்கிருந்து செல்லமாட்டானாம்.” என்றான் ஷங்கன்.






Sunday, September 22, 2013

ஆர்யகனின் கடைசி விருப்பம்!

“பாட்டனாரே, உங்கள் மக்களை வெளி உலகைக் கண்களையும், மனதையும் திறந்து வைத்துக் கொண்டு பார்க்கச் சொல்லுங்கள்.  அவர்களுக்கு வெளி உலகில் நடப்பவை பற்றிய அறிவு வேண்டும்.  “  என்றான் கண்ணன்.
“ஓஹோ, அது என்றும் இயலாத ஒன்று என்பதை நான் அறிவேன் கண்ணா!” என்றான் ஆர்யகன்.

“முடியவேண்டும் பாட்டனாரே!  கட்டாயம் நடக்க வேண்டும்.  யாரேனும் ஒரு ரிஷியை உங்கள் நாகர்கள் நாட்டில் ஆஸ்ரமம் அமைக்க வேண்டி அழையுங்கள்.  அந்த ஆஸ்ரமத்தின் மூலம் எல்லாவற்றையும் கற்றுக் கொள்ளலாம்.  உலகத்து மக்களிடம் அன்பு காட்டுவதற்கும், அவர்களின் சுபிக்ஷமான வாழ்க்கைக்குப் பாடுபடவும், எல்லாவற்றுக்கும் மேலாக நீங்கள் விரும்பும் ஆயுதப் பயிற்சி,  அரசாட்சி குறித்த அறிவு, தர்மம் என்றால் என்ன?  அவரவர் சுயதர்மம் எப்படி ஒவ்வொருவருக்கும் மாறுபட்டு அமையும், தர்மத்தைக் கடைப்பிடிப்பதன் அவசியம், இவை அனைத்துக்கும் மேலே இன்னும் உயர்ந்து செல்லும் வழியான தவம் செய்தல் அதன் மூலம் பிரம்ம ஞானம் அடைதல் என அனைத்தையும் பெறமுடியும்.”

“ஆனால், குழந்தாய், நாங்கள் வலுவுள்ளவர்களாக, வலிமை மிக்கவர்களாக ஆவது பற்றி?? அதைக் குறித்து என்ன சொல்கிறாய்?   ஆரியர்கள் எங்களை அடக்கி எங்களுக்கு மேலே வந்துவிடாதபடி தடுக்கும் வலிமை!  அது குறித்து?” ஆர்யகன் ஆவலோடு கேட்டான்.

“ஆஹா, அப்படியா, பாட்டனாரே, அப்படி என்றால் நாகர்கள் தங்கள் இந்த எளிமையான எளிதான வாழ்க்கைமுறையைக் கைவிட வேண்டும்.  ஆரியர்களைப் போலக் கடுமையான தவங்கள் செய்ய வேண்டும்.  ஆசாரியன் ஷ்வேதகேது உங்கள் மக்களைப் போர்த்தந்திரங்களில் பயிற்சி கொடுத்து உதவுவான்.  எல்லாவற்றுக்கும் மேலே குதிரைகளைப் பழக்கவும், குதிரை ஏற்றத்திலும் உங்கள் மக்களைப் பழக்குங்கள்.  ஆரியர்களின் பலமே அவர்கள் குதிரைகளையும் தெய்வமாக ஏற்றுக் கொண்டாடுவதில் தான்.  எல்லாப் போர்களிலும் அவர்களுக்கு வெற்றித் திருமகளைத் தேடித்தரும் தெய்வீக நண்பர்கள் குதிரைகளே.  அவற்றைப் பழக்குவதன் மூலம் அவர்களின் வலிமை இன்னும் அதிகம் ஆகிறது.  பாட்டனாரே, நாகர்கள் ஒரு போரை எப்படி நடத்துவது எனக் கற்றால் மட்டும் போதுமானது அல்ல; போரில் வெற்றியை அடையவும் கற்கவேண்டும்.  வெறும் ரத்தம் சிந்திப் போரிடுவது போரே அல்ல.  அவ்வகையான போர் எனக்குப் பிடிப்பதில்லை.  அப்படியான யுத்தங்களைத் தற்காப்புக்காகவன்றி மற்றசமயங்களில் நான் ஒருபோதும் கடைப்பிடித்தது இல்லை.  ஆனால் பாட்டனாரே, ஒவ்வொரு மனிதனும் தர்மத்தைக் காக்க வேண்டும்.  அதற்காக உழைக்க வேண்டும்.  அதைக் காப்பதற்காக அவன் உயிரையே இழப்பான் என்றாலும் அதற்கும் தயாராக இருக்க வேண்டும்.”

“நான் என்ன தான் செய்யவேண்டும்  என்கிறாய் கிருஷ்ணா? புதிர் போடுவது போல் அல்லவோ பேசுகிறாய்?” ஆர்யகனால் கிருஷ்ணன் சொல்வதின் உள்ளார்ந்த பொருளைப் புரிந்து கொள்ள முடியவில்லை.  “ சரி பாட்டா, நான் நேரடியாகவே  சொல்கிறேன்.  சாத்யகி போய் செகிதானாவைச் சந்திப்பான்.  நான் தெளம்ய ரிஷியிடம் பேசி, உங்கள் மக்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில நாக இளைஞர்களை அவருக்கு மாணவர்களாக ஏற்கச் சொல்லிக் கேட்டுக் கொள்கிறேன்.  அவர் ஆசிரமம் உத்கோசக தீர்த்தத்தில் உள்ளது.  அங்கே  இந்த நாக இளைஞர்கள் செல்ல வேண்டும்.  உங்களுக்காக 25 ஆண் குதிரைகளையும், 10 பெண் குதிரைகளையும் இங்கே விட்டுச் செல்கிறேன்.  இவை பாஞ்சால நாட்டு மன்னன் துருபதனால் எனக்குப் பரிசாக அளிக்கப்பட்டவை. மேலும் பாஞ்சால நாட்டு மன்னனுக்கு, நூறு பசுக்களை உங்களுக்கு அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.  அனைத்துப் பசுக்களும் பால் சுரப்பில் சிறந்தவையாகத் தேர்ந்தெடுத்து அனுப்பும்படி கேட்டுக் கொள்கிறேன்.  ஏனெனில் ஆஸ்ரமத்திற்கு அவை தேவைப்படும்.  ஆசாரியர் சாந்தீபனியிடம் போர்ப்பயிற்சிகளில் சிறந்ததொரு சீடனை இங்கே அனுப்பக் கோருகிறேன்.  உங்கள் மக்களுக்கு அவன் தற்கால நடைமுறைகளில் இருக்கும் ஆயுதங்களில் பயிற்சி அளிப்பான்.” கிருஷ்ணன் கூறினான்.

“ஆனால் கிருஷ்ணா, நீ?? நீ இல்லாமல் இப்படிப்பட்ட புதிய வழிகளை என் மக்கள் ஏற்பார்களா என்பது சந்தேகமே!  அவர்களுக்கு இதிலெல்லாம் விருப்பமே  இல்லை என்பதும் எனக்கு நன்கு தெரியும்.”

“காலவரையின்றி இங்கே இருக்க என்னால் இயலாது பாட்டனாரே!  அவந்தியில் ஆசாரியர் சாந்தீபனி எனக்காகக் காத்துக் கொண்டிருக்கிறார்.  நான் அங்கே செல்ல வேண்டும்.  ஆனால் உத்தவனுக்கும், உங்கள் பேத்திகள் இருவருக்கும் திருமணம் முடிந்ததும் அவன் இங்கே ஓராண்டு முழுதும் தங்கி இருப்பான்.  அடுத்த வருடம் பெளஷ மாதத்தில் நான் திரும்ப வரும் வரைக்கும் உத்தவன் இங்கிருப்பான்.” என்றான் கண்ணன்.  “அடுத்த பெளஷ மாதம் நீ திரும்ப இங்கே வருவாயா?” ஆர்யகன் கேட்டான்.

“ஆம், பாட்டனாரே, நான் சில யாதவப் படைத்தலைவர்களையும் என்னுடன் அழைத்து வருகிறேன்.   பாஞ்சால அரசன் துருபதனின் மகளுக்குச் சுயம்வரம் நடைபெறப் போகிறது.  அதில் கலந்து கொள்ள வருவேன்.  துருபதனிடம் பேசி மணிமானையும் சுயம்வரத்திற்கு அழைக்கச் சொல்கிறேன்.  உத்தவனை மணிமான் மிகவும் விரும்புகிறான்.  அலாதியான பாசம் காட்டுகிறான்.”  பின்னர் கார்க்கோடகன், மற்ற நாகத் தலைவர்கள், ஷ்வேதகேது, சாத்யகி, உத்தவன் ஆகியோர் ஆர்யகன் முன்னிலையில் தருவிக்கப்பட்டனர்.  ஆர்யகன் சற்று நேரம் தன் கண்களை மூடியவண்ணம் எதுவுமே பேசாமல் இருந்தான்.  அனைவரும் அவன் கண் திறந்து பேசக் காத்துக் கொண்டிருந்தனர்.  ஆர்யகன் ஒருவழியாகக் கண்களைத் திறந்தான்.  அவற்றில் மின்வெட்டுப் போன்றதொரு அபூர்வ ஒளி தெரிந்தது.

“தலைவர்களே, கார்க்கோடகா, பசுபதிநாதர் சொன்னதாக நம் மதகுரு சொன்னவை அனைத்தும் உண்மையாகும் நேரம் வந்துவிட்டது.  கண்ணன் நம்மை ஆதரிக்கச் சம்மதம் கூறியதோடு உறுதியும் கொண்டிருக்கிறான்.  “ புன்னகை எனச் சொல்லும் வண்ணம் ஆர்யகனின் உதடுகள் கோணிக்கொண்டன.  “வெற்றித்திருமகளிடம் கிருஷ்ணன் உங்களை அழைத்துச் செல்வான்.  அவனுடைய தலைமையை நீங்கள் அனைவரும் எவ்விதமான மறுப்புமின்றி ஏற்பதாக எனக்குச் சத்தியம் செய்து கொடுங்கள்.  எங்கே, உங்கள் கரங்களைக் கொண்டு வாருங்கள்.”

ஒவ்வொருவராக கிழ மன்னனின் கைகளில் தங்கள் கைகளை வைத்துச் சத்தியம் செய்தனர்.  தன் பலவீனமான கரங்களால் மெல்லக் கிருஷ்ணனைத் தொட்டான் ஆர்யகன்.  அவன் கண்கள் ஏற்கெனவே பெரியதாக இருந்தது இன்னும் பெரிதாக மாறியது.  “கண்ணா, வாசுதேவா, என் அருமை மரிஷாவின் பேரனே, உன் சத்தியத்தை நீ காப்பாற்றுவாயாக.  என் மக்களை என்றென்றும் ஆதரித்து வருவாயாக!”

கண்ணன் தன் விசாலமான நேத்திரங்களில் கருணை, அன்பு, பாசம் அனைத்தையும் ஒருசேரத் தேக்கியதால்  ஏற்பட்டதோ என்னும் வண்ணம் உணர்வுகள் பொங்கிக் கண்களின் வழியாகப் பாய்ந்து வரத் தன் தலையைத் தாழ்த்திக் கொண்டு கார்க்கோடகனும், மற்ற நாகர்கள் தலைவர்களும் வைத்த கரங்களின் மேல் படும்படி வைத்துத் தன் உறுதியை மீண்டும் மெளனமாக அளித்தான்.  அங்கே ஒருவருக்கும் அப்போது பேச முடியவில்லை.  உணர்வுகள் பிரவாகமாகப் பொங்கிக் கொண்டிருந்தது.  ஆர்யகனின் வயதான கண்களில் இருந்தும் அருவிபோல் கண்ணீர் கொட்டியது.  “இனி நான் சந்தோஷமாக இறப்பேன்.” என்று சொன்ன ஆர்யகன், மிகவும் கஷ்டப்பட்டு ஒரு புன்னகை செய்தான்.  அது நிரந்தரமாக அவன் உதடுகளில் உறைந்தது.


Saturday, September 21, 2013

ஆர்யகனின் விருப்பம்

இயல்பாகவே பாசமும், கருணையும் மிகுந்த கண்ணன் தன் பாட்டனின் இந்த மொழிகளில் மிகவும் மனம் உருகினான்.  பாட்டனின் நடுங்கும் கைகளைப் பிடித்து அவனை ஆதரவாகத்தட்டிக் கொடுத்தான். ஆர்யகன் தொடர்ந்தான்:” கண்ணா, நான் யோசிக்கிறேன், மீண்டும், மீண்டும் யோசிக்கிறேன்! எங்களை காட்டின் இந்தக் கோடிக்கு விரட்டியது எது?  எவர்?” குரல் தழுதழுக்க அவன் குரல் கேட்கமுடியா அளவுக்குப் போனது.  சற்றே நிறுத்தித் தன்னைச் சமாளித்துக் கொண்ட ஆர்யகன், “கார்க்கோடகன் இந்தப் போருக்கெல்லாம் தாங்குபவன் அல்ல.  அவனால் இது இயலாது.  என் கெட்டிக்கார, வலிமை மிக்க மகன்கள் அனைவரும் இறந்துவிட்டனர்.   மணிமானோ “கண்டதே காட்சி; கொண்டதே கோலம்” என சுகவாழ்வை விரும்புவான்.   ஆரியர்களின் வலிமையோ, ஆற்றலோ, பலமோ, எழுச்சியோ எங்களிடம் இல்லை.  அவர்களுக்கு நாங்கள் சமம் இல்லை!”

கிருஷ்ணன் இந்த வயதான கிழட்டு நாக அரசனின் புத்தி சாதுர்யத்தை வியந்தான்.  ஆர்யகனும் மூச்சுவிடக் கொஞ்சம் நிறுத்திக் கொண்டான்.  “உன்னையும், அதன் முன்னர் உத்தவனையும் நான் பார்த்ததுமே என் வேண்டுகோளை அந்த பசுபதி நாதர் கேட்டுக் கருணை காட்டியே அனுப்பி வைத்திருக்கிறார்;  அதுவும் என் மக்களைக் காப்பாற்ற வேண்டியே அனுப்பியுள்ளார் எனப் புரிந்து கொண்டேன்.  கண்ணா, நான் எங்கள் ஆசாரியர்களையும், குருமார்களையும் கலந்து பேசினேன்.  பசுபதிநாதரின் கட்டளையின் பேரிலேயே நீ இங்கே வந்திருக்கிறாய் என்பதை அவர்களும் ஒத்துக் கொண்டனர்.  வந்த சில நாட்களிலேயே நீ என் மக்களுக்கு ஒரு புதிய பாதையை, ஒரு புதிய வாழ்க்கையைக் காட்டிவிட்டாய்!  சாகசங்களின் அற்புதத்தை- அதன் உணர்வை- அது சிறிது நேரமே இருந்திருந்தாலும்- அவர்களுக்கு சாகசங்கள் என்றால் என்னவெனக் காட்டி விட்டாய்.  அவர்களும் துணிந்து சாகசங்களில் ஈடுபட்டார்கள். ராக்ஷசர்களுடனான சமாதான உடன்படிக்கையால் அவர்கள் மனதில் பெரும் நிம்மதி பிறந்துள்ளது.  அவர்களுக்கு ஒரு புதிய நம்பிக்கையும் பிறந்துள்ளது.”


“எங்கள் வருகையினால் உங்கள் அனைவருக்கும் விளைந்த நன்மை குறித்து சந்தோஷம் பாட்டனாரே!” என்றான் கண்ணன்.   ஆர்யகன் தொடர்ந்தான். “இன்று வரையிலும் நான் ஆரியர்களின் வாழ்க்கை முறையை என் மக்கள் கடைப்பிடிப்பதை முற்றிலும் எதிர்த்து வந்தேன்.  ஏனெனில் என் மக்கள் அமைதியானவர்கள், சமாதானம் விரும்புபவர்கள்.  அவர்களைத் தேடி வந்து யார் போருக்கு அழைக்கப் போகின்றனர்?  ஆனால் கண்ணா, சென்ற வாரத்திலிருந்து, ஒவ்வொரு நாளும்,இரவும், பகலும், ஒவ்வொரு நிமிடத்திலும் என் சிந்தனை அதைச் சுற்றியே இருக்கிறது.  நான் சிந்தித்துக் கொண்டே இருந்தேன்; இருக்கிறேன்.  கண்ணா, நான் ஒரு முடிவுக்கு வந்துவிட்டேன்.  என் மக்கள் ஆரியர்கள் வாழும் பாதையிலேயே செல்லட்டும்.  அவர்களைப் போல ஆயுதம் எடுக்கட்டும்.  யுத்தம் என்றால் பயமின்றிப் போர் புரியட்டும். யுத்த தந்திரங்களை அறியட்டும்.   கால்நடை வளர்ப்புகளைக் கற்று கால்நடைகளைப் பராமரிக்கட்டும்.  ஆரியர்களைப் போலவே பார்லி, அரிசி போன்ற தானியங்களை விளைவிக்கக் கற்கட்டும்.  குதிரை ஏற்றம், யானை ஏற்றம் பழகட்டும்.   கண்ணா, என் மக்களுக்கு எங்கள் எளிமையான வாழ்க்கை முறைதான் பிடிக்கும்.  அதற்குப் பழகியவர்களே.  என்றாலும் உன் வார்த்தைகளுக்குச் செவி சாய்ப்பார்கள்.   ஏனெனில் நீ மரிஷாவின் பேரன்.  அது மட்டுமல்ல, உன்னைக் கண்டால் அவர்கள் பயப்படுவதும் இல்லை.  அவர்கள் உன்னை நம்புகின்றனர். நீ அவர்களை அடிமையாக்கப் போவதில்லை என்றும், அவர்களின் அரசனாக ஆளப் போட்டியிட மாட்டாய் என்றும் புரிந்து கொண்டிருக்கின்றனர்.”

“மாட்சிமை பொருந்திய பாட்டனாரே!  நான் உங்கள் நாக குலத்துக்கோ, அல்லது எங்கள் ஆரியர்களின் ஏதேனும் ஒரு ராஜ்யத்துக்கோ அரசனாக இருக்க வேண்டும் என என்றுமே விரும்பியதில்லை; இனியும் விரும்ப மாட்டேன்.  எங்கள் யாதவ குலத்தில் இருந்தே ஒருமுறைக்கு இருமுறை எனக்கு அரச பதவி அளிக்கப்பட்டது.  ஆனால் நான் மறுத்துவிட்டேன்.  ஏன் தெரியுமா?  ஒரு முறை நாம் அரசபதவியை அடைந்து அரசனாகிவிட்டால்  மக்கள் உங்களைக் கண்டு பயந்து ஒதுங்குவார்கள். தங்கள் மனதை உங்களுக்காகத் திறக்க மாட்டார்கள்.  அச்சம் அவர்களைக் கொன்றுவிடும்.  நான் வேண்டுவது எல்லாம் எல்லா மக்களும் திறந்த மனதோடு என்னை அணுகித் தங்கள் மனதைத் திறந்து என்னிடம் நெருங்கிப் பேசுவது தான்.  அவர்கள் மனதில் நான் இருக்க வேண்டுமே தவிர, அரசனாக அல்ல. “ கண்ணன் சொன்னதில் இருந்த உணர்ச்சி பூர்வமான பாவம் ஆர்யகன் மனதில் வியப்பையும், ஆனந்தத்தையும் ஒருசேரத் தோற்றுவித்தது.   உணர்வு மிகுதியால் கண்ணீர் பெருகியது ஆர்யகனுக்கு.  “உதவு கண்ணா, எனக்கு உதவி செய்!” கண்ணீர் வழிய நடுங்கும் கரங்களால் கண்ணனின் கரங்களைப் பிடித்தான் ஆர்யகன்.  “என் மக்களுக்கு உதவி செய்.  அவர்களை உன் தலைமையில் தைரியமுள்ளவர்களாக, பலமானவர்களாக மாற்று.  “

“மாட்சிமை பொருந்திய பாட்டனாரே, குதிரைகளையும், ரதங்களையும் பற்றி நினைப்பது மிக எளிது.  ஆனால் அவற்றை அடைவது சாமானியமான ஒன்றல்ல!” என்றான் கண்ணன்.  “எனக்குப்  புரியவில்லை.” என்றான் ஆர்யகன்.  “குதிரைகள் பூட்டிய ரதங்கள், விற்கள், அம்புகள், எல்லாம் இருக்கின்றன.  யுத்தம் செய்வதற்கு வேண்டிய ஆயுதங்கள்.  உண்மை தான் பாட்டா, ஆனால் அவை மிகவும் விலை பெற்றவை.  மதிப்பில்லாதவை.  அதை சாமானியன் கையாள முடியாது.  வல்லுநர்களாலேயே கையாள முடியும்.  குதிரைகளைப் பழக்குவதும் சாமானியம் அல்ல.  மிகுந்த உழைப்பு வேண்டும்.  மன உறுதி வேண்டும். அதோடு பணமும் நிறைய வேண்டும்.    என்னவெல்லாம் தேவையோ எல்லாவற்றையும் பூமித்தாய் கொடுக்கிறாள் தான்.  எப்படி? கால்நடைச் செல்வங்களைப் பெருக்கி, முக்கியமாய்ப் பசுக்கள்!  அவை விலையில்லா செல்வங்கள்.  அவை எல்லோருக்கும்/எல்லாவற்றுக்கும் தாயாக இருந்து வருகின்றன.  அந்தப் பசுக்களைப் பெருக்க வேண்டும். அதுவும் எளிதானது இல்லை.  கடுமையான உழைப்பு, உழைப்பு, உழைப்பு ஒன்றே வழி!  இவற்றில் ஒன்றில்லாமல் மற்றது இல்லை. “

“கண்ணா, உன் மக்களை மத்ராவில் இருந்து துவாரகை அழைத்துச் செல்கையில் எப்படி இவ்வளவு கால்நடைகளையும் எடுத்துச் செல்ல முடிந்தது உன்னால்?  எப்படிச் சமாளித்தாய்?”

“பாட்டா, நாங்கள் எங்கள் சுதந்திரத்தைத் தேடி மத்ராவை விட்டுச் செல்கையில், மிகுந்த துன்பத்துடன் இருந்தோம்.  சொல்ல முடியாத் துன்பம்.  அனுபவித்தோம்;  சொந்த நாட்டை விட்டுச் செல்லும்போதும் அனுபவித்தோம்.  அது எங்களைக் கொஞ்சம் இல்லை நிறையவே முரடர்களாக மாற்றிவிட்டது.  அது தான் நாங்கள்; யாதவகுல மக்கள்.  நாங்கள் கால்நடைகளையும் கூடவே அழைத்துச் சென்றோம்.  அதோடு நாங்கள் நிலத்தை உழுது பயிர் செய்வதிலும், மாடுகள் வளர்ப்பிலும், மற்றக் கால்நடை வளர்ப்பிலும் நிபுணர்கள்.  ஆகவே எங்களால் அழைத்துச் செல்ல முடிந்தது.  அது மட்டுமல்ல.  செளராஷ்டிரா அடைந்த சில மாதங்களிலேயே பசுமை வளம் மிகுந்ததாக ஆக்கிவிட்டோம்.   முக்கியமாக எல்லாம் வல்ல அந்தப் பரம்பொருள் எங்களுக்கு அருமையான மூன்று துறைமுகங்களைக் கொடுத்துள்ளான்.  பிரபாச க்ஷேத்திரம், துவாரகை, சாபர் கட்ச். இதன் மூலம் எங்களுக்கு எங்கள் தேவைக்கு மேலேயே வருமானம் கிடைக்கிறது.  மஹாலக்ஷ்மி தன் கருணாகடாக்ஷத்தை வாரி வழங்குகிறாள்.   ஆகவே எங்களுக்கு மற்ற மன்னர்களைப் போல இன்னொரு நாட்டுடன் போரிடவோ, வரி வசூலிக்கவோ தேவை இல்லை.  அதன் மூலம் எங்கள் பலத்தைப் பெருக்கிக் கொள்ளவேண்டிய அவசியமும் இல்லை.”

“நீ அதிர்ஷ்டக்காரன் கிருஷ்ணா!  கடவுள் உனக்கு அனைத்துச் செல்வங்களையும் தாராளமாக வழங்கியுள்ளார்.  அதோடு அதைக் காப்பாற்ற வேண்டிய புத்தி சாதுர்யமும் உன்னிடம் உள்ளது.  கண்ணா, நான் செய்யவேண்டியது என்ன?  உன் ஆலோசனையைக் கூறு.” என்றான் ஆர்யகன்.  “பாட்டா, உங்கள் மக்கள் எந்த விஷயத்தில் மிகப் பலவீனம் அடைந்துள்ளார்களோ, அவற்றில் ஆரிய வழிமுறைகளையும், மற்றபடி அவர்களின் சுய மரியாதையைக் காக்கும் விதமாக நாகர்களின் பழைய வாழ்க்கை முறையையும் கடைப்பிடிக்கட்டும்.   இதுவே அவர்களுக்கு நன்மை பயக்கும்.” என்றான் கண்ணன்.  “எனக்கு அந்த வழியைக் காட்டு, குழந்தாய்!” ஆர்யகன் இறைஞ்சினான்.  “என் மக்கள் அடிமை வாழ்க்கை வாழ்வதை நான் விரும்பவில்லை.   அவர்களை நான் காப்பாற்றியாக வேண்டும்.”



Tuesday, September 17, 2013

ஆர்யகன் மனம் திறக்கிறான்.

“பாட்டனார் அவர்களே, நல்லது.  எதற்கும் ஒரு படையை செகிதனாவை விரட்ட அனுப்பி வையுங்களேன், பார்க்கலாம்.  அந்தப் படையோடு உத்தவன் செல்லட்டும்;  வேண்டுமானால் சாத்யகியையும் அனுப்பி வைக்கிறேன்.  நீங்கள் வெற்றி பெறுவீர்கள் என்பதில் ஐயமே இல்லை.  ஆனால், “ தொடர்ந்த கிருஷ்ணன், “இது யுத்தம் பாட்டனாரே,  அப்படி என்றால் என்னவென்று அறிவீர்கள் அல்லவா?  மனிதனை மனிதன் கொல்வது, குடிமக்களின் குடியிருப்புக்களுக்குத் தீ வைத்து அழிப்பது, பெண்களை மானபங்கம் செய்வது போன்றவையும் அடங்கும்.” கிருஷ்ணன் கொஞ்சம் நிறுத்திவிட்டு அனைவரையும் பார்த்தான்.  தன் பேச்சு அவர்களிடம் எத்தகைய பாதிப்பை உண்டாக்குகிறது என அறிய விரும்பினான்.  பின்னர் மேலும் தொடர்ந்தான், “ நீங்கள் என் ஆலோசனையை ஏற்றீர்களானால், செகிதனா உங்களிடமிருந்து வலுக்கட்டாயமாகப் பிடுங்கிக் கொள்வதை நீங்களே அன்பின், விருந்தோம்பலின் அடையாளமாய்க் கொடுத்ததாக ஆகும்.  அப்போது அவன் மனம் இளகி இருக்கும் சமயம் பார்த்து அவனை இங்கிருந்து அனுப்ப முயல்வேன்.” என்றான்.  “இது உறுதி. நான் உங்களுக்கு வாக்குக் கொடுக்கிறேன்.” என்றான் கிருஷ்ணன் முடிவாக.  நாகர்களின் வீரர்களும் தலைவர்களும் ராக்ஷசவர்த்தத்தில் கிருஷ்ணனுக்கு நடந்தவற்றைக் கண்டே அதிசயம் அடைந்திருந்தனர்.  ஒரு சின்னத் தாக்குதல் கூட இல்லாமல் ராக்ஷசர்களைக் கிருஷ்ணன் வெற்றி கொண்டதில் அவர்கள் அனைவரும் வசியம் செய்தவர்களைப் போல் இருந்தனர்.   இப்போது கிருஷ்ணன் தெள்ளத் தெளிவாக அளித்த இந்த வாக்குறுதியும் அவர்களைக் கவர்ந்தது.

ஆர்யகன் மெல்லத் தன் பல்லக்கில் இருந்து எழுந்து கண்களை மூடி பசுபதி நாதரை தியானித்தான். “பசுபதி நாதரின் கருணையும், அருளும் மகத்தானது.  கிருஷ்ணா, குழந்தாய், நீ சொல்வது போல் நடக்கட்டும். என் மக்கள் செகிதனாவுக்கு விருந்தோம்பல் செய்வார்கள்.  ஆனால் ஒன்று, மழைக்காலம் முடிந்ததும், அவர்கள் அனைவரும் என் எல்லைப் பகுதிகளை விட்டு அகன்றுவிட வேண்டும்.  அதை உறுதியாகச் செய்ய வேண்டும்.” எனக் கூறினான்.   அத்துடன் அங்கிருந்து சென்ற கிருஷ்ணன் மறுநாள் ஆர்யகனின் அழைப்பின் பேரில் அவனைக் காண வந்தவன் திடுக்கிட்டுப் போனான்.  ஒரே நாளில் ஆர்யகனுக்குப்பல ஆண்டுகள் கூடிவிட்டாற்போன்ற முதுமை மட்டுமின்றி அவன் உடலின் ஒவ்வொரு பாகமும் நடுங்கிக் கொண்டிருந்தது.  அத்தோடு அவன் கண்பார்வையில் ஒளியும் இல்லை.  எங்கோ சூன்யத்தைப் பார்த்தன விழிகள்.   கிருஷ்ணன் அவனை வணங்கிவிட்டு, “பாட்டனாரே, நான், வாசுதேவ கிருஷ்ணன், உங்கள் ஆணையை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.” என்றான்.  ஆர்யகனோ, கிருஷ்ணனோடு தனிமையில் பேச விரும்புவதாய்த் தெரிவித்தான்.  தன் கரங்களின் ஒரு சிறு அசைவால் அங்கிருந்த கார்க்கோடகனையும், மற்ற நாகர்கள் தலைவர்களையும் அப்புறப்படுத்தினான்.   அனைவரும் அகன்றதும், கிருஷ்ணனைப் பார்த்து, “கண்ணா, உன் கரங்களைக் கொடு!” என்று கூறினான்.   நீட்டிய அவன் கரங்களைப் பிடித்துக் கொண்ட ஆர்யகன், “கிருஷ்ணா, நேற்றுக் கேட்ட செய்தியினால் எனக்கு மிகவும் அதிர்ச்சி ஏற்பட்டு விட்டது.   கண்ணா, நான் கனவு கூடக் கண்டதில்லை.  ஆரியர்கள் யமுனையைத் தாண்டி என் ராஜ்யத்தினுள் நுழைந்து என் குடிகளைத் தொந்திரவு செய்வார்கள் என நினைத்துக் கூடப் பார்க்கவில்லை. மிகுந்த மன உளைச்சலில் இருக்கிறேன். “இதைச் சொல்கையில் ஆர்யகனின் ஒளி இழந்த கண்கள் கண்ணீரைப் பெருக்கின. “குழந்தாய், இதைக் கேள், என் கதையை, இந்த வயதான பாட்டனின் கதையைக் கேள் அப்பா.  நான் இன்னமும் எத்தனை நாட்கள் இருப்பேனோ, தெரியவில்லை.  ஒரு சில நாட்கள் தாம் இருப்பேன்.  நீ என் அருமை மரிஷாவின் பேரன். குழந்தாய், உன்னிடம்  எனக்கு பாத்தியதை உண்டு.”

“பாட்டனாரே, உங்கள் மகன் கார்க்கோடகனின் மகன் மணிமான் உங்களுக்கு எப்படியோ, அப்படியே நானும்.  அவனிடம் உள்ளதைப் போன்ற உரிமையில் நீங்கள் என்னிடமும் உரிமையுடன் சொல்லலாம். நான் என்றென்றும் உங்களுடையவனே!” எனக் கூறிய கண்ணன் கிழவனின் முதிர்ந்த கரங்களைப் பிடித்துக்கொண்டு அவனைத் தட்டிக் கொடுத்து ஆசுவாசம் செய்தான்.  சற்று நேரம் நிறுத்தி யோசித்த ஆர்யகன், தன் உணர்ச்சி மிகுந்த குரலில் தொடர்ந்தான்:” நேற்று நீ எங்களுக்குச் செய்த அறிவுரைகள் மிகவும் அவசியமானவை மட்டுமின்றி கெட்டிக்காரத்தனம்  நிறைந்ததும் கூட.   அது மிக்க நன்மை தரக் கூடியதே.  ஆனால் கண்ணா, உன்னைப் போன்ற இளைஞனிடம் இருந்து இவற்றை நான் முற்றிலும் எதிர்பார்க்கவே இல்லை.  எல்லாம் வல்ல அந்தப் பசுபதிநாதர் இவற்றை எல்லாம் நிறைவேற்ற வேண்டிய மனோபலத்தை உனக்குத் தரட்டும்.”

“கவலைப்படாதீர்கள் தாத்தா.  அந்தப் பரம்பொருளுக்கு நம்மைக் காத்து ரக்ஷிப்பதை விட வேறு வேலை என்ன?  ஆனால் என் உயிரைக் கொடுத்தாவது, என் வாக்குறுதியை  நான் காப்பாற்றுவேன்.  கவலைப்படாதீர்கள்.” என மீண்டும் ஆறுதல் வார்த்தைகளை மொழிந்தான்.  “கிருஷ்ணா, என் குழந்தாய்! எனக்கு இப்போது என்ன பயம் அல்லது கவலை எனில் என் நாட்டிற்கும், குடிமக்களுக்கும் மிக மோசமானதொரு எதிர்காலம் காத்திருக்கிறது என்பதே!” என்றான் ஆர்யகன்.  “ஏன், தாத்தா, அப்படி நினைக்கிறீர்கள்?  காரணம் என்ன?”  தன் அநுதாபம்  முழுவதும் குரலில் வெளிப்படுத்தினான்  கிருஷ்ணன்.  ஆர்யகன், பழைய நினைவுகளில் ஆழ்ந்தவனாக  “கண்ணா, அப்போது நான் இளைஞன்.  வலு நிரம்பியவன்.  ஆரியர்கள் ரதங்களில் ஏறிக் கொண்டு விற்கள், அம்புகள் எடுத்து வருகையில்  அவர்களைப் பார்த்துச் சிரித்துக் கேலி செய்திருக்கிறேன்.  அப்போது நாகர்களாகிய எங்களை வலிமை மிக்கவர்கள் எனவும் எவராலும் அழிக்க முடியாது எனவும் கருதினேன்.  எங்கள் பிரதேசங்களிலிருந்து எவரும் எங்களை விரட்ட இயலாது எனவும் நினைத்திருந்தேன்.  அப்போது தான் உன் தாத்தாவின் வீரர் கள் வந்து யமுனையின் அக்கரையில் தாங்கள் குடியிருக்க வேண்டி ஒரு நகரை நிர்மாணிக்க ஆரம்பித்தனர்.  எங்கள் காடுகளெல்லாம் அழிக்கப்பட்டுக் குடியிருப்புகளாக மாறின.  அப்பனே, கங்கைக் கரையின் வளம் மிகுந்த பிரதேசங்கள் அனைத்துமே எங்களுடையவையாகவே இருந்தன.  மெல்ல, மெல்ல குரு வம்சத்தினரும், பாஞ்சால நாட்டவரும் அங்கே வந்து தங்கள் ராஜ்யத்தை விஸ்தரித்துக் கொண்டனர். அவர்களை எதிர்கொண்டு நிற்க இயலாத என் குடிமக்கள் காட்டின் உள்ளே கங்கைக்கும், யமுனைக்கும் இப்பால் இந்தக்கரையின் உள்ளே  காட்டுப் பகுதிகளுக்கு இடம் பெயர்ந்தனர்.”

சற்றே நிறுத்தி பெரிய பெருமூச்சாக ஒன்றை விட்ட ஆர்யகன், பின்னர் தொடர்ந்து, “கண்ணா, என் மக்களைக் குறித்து நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.   மிகவும் நல்ல குடிமக்கள் அவர்கள்.  நல்ல பழக்கங்கள் உள்ளவர்கள், அனைவரோடு ஒத்திருப்பதில் வல்லவர்கள், சமாதானத்தை விரும்புபவர்கள்.  அவர்கள் இப்படி ஆங்காங்கே ஒரு சில சில்லறைச் சண்டை, சச்சரவுகளில் விரும்பி ஈடுபட்டாலும், பெரிய போர்கள் எனில் அவர்கள் மிகவும் வெறுப்பார்கள்.  மேலும் முறையாகப் போரிடவும் தெரியாதவர்கள்;  அவர்களுக்குப் பெரிய போர்களை சமாளிப்பதும் கஷ்டமான ஒன்று.  உன் ஆரிய இனத்து மக்களைப் போல் அவர்களால் உங்கள் வழிமுறைகளை அவ்வளவு எளிதாக எடுத்துக் கொள்ள இயலாது.  போர் எனில் வில், அம்புகளைக் கொண்டும், குதிரைகள், ரதங்களின் மூலமும் வீரர்களை எங்களால் உருவாக்க இயலாது.  அதே போல் விவசாயமும், கால்நடை வளர்ப்பிலும் உங்களைப் போன்ற நாகரிகம் படைத்தவர்களும் அல்ல.  எங்களுடைய பழைய, மிகப் பழைய அந்த நடைமுறையையே நாங்கள் இன்னமும் பின்பற்றி வருகிறோம்.  எங்களுக்குத் தெரிந்தது அது ஒன்று தான்.  ஆனால் இப்படியே தொடர்ந்து நடந்தால், கண்ணா, எங்கள் நாகர்கள் இனமே அழிந்து போய்விடும். ஒருவர் கூட நாகர்களாக இருக்க மாட்டார்கள். “



Thursday, September 5, 2013

கண்ணனிடமா அவநம்பிக்கை????

நாகர்களின்  பிரதேசத்தில், யமுனையின் வடகரையில் உள்ள பகுதிக்குள்ளே எதிரிகள் ஊடுருவி இருப்பதனால், ராக்ஷசவர்த்தத்தில் இருந்து வெற்றியுடனும், உத்தவனுடனும் திரும்பும் வீரர்களின் கொண்டாட்டங்களில் எந்தவிதமான தாக்கமும் ஏற்படுத்தவில்லை.  அவர்கள் மிகவும் குதூகலமாக வெற்றிச் சங்கங்களை முழங்கிக் கொண்டும், பேரிகைகளையும், எக்காளங்களையும் ஊதிக் கொண்டும் ஆடிப்பாடிக் கொண்டும் வந்தனர்.  ஓய்வுக்காகவும், தூங்கவும், உணவுக்காகவும் எங்கெல்லாம் தங்கினார்களோ, அந்தப் பிரதேசத்து கிராம மக்கள் அனைவரும், அவர்களை மிகுந்த உற்சாகத்துடன் வரவேற்றதோடு அல்லாமல், தக்க செளகரியங்களையும் செய்து கொடுத்தனர்.   வீரர்களை உற்சாகப்படுத்த ஆட்டம், பாட்டங்களால் மகிழ்வித்தனர்.  ராக்ஷசச் சக்கரவர்த்தி வ்ருகோதரனால், ஆர்யகனுக்கு அனுப்பப் பட்டிருக்கும் பரிசுகளை அறிந்து கொள்ளவும், அவற்றைப் பார்க்கவும் ஆவல் கொண்டனர்.  இனி எந்த ராக்ஷசக் குடிமகனும் தங்கள் எதிரி அல்ல என்னும் நற்செய்தி அவர்களை மகிழ்வித்ததோடு அல்லாமல், அவர்கள் மனதில் பெரும் நிம்மதியையும் தோற்றுவித்தது.

உத்தவன் என்னவோ மகிழ்ச்சியுடன் இல்லை.  தன்னுடைய வீர, தீர, சாகசங்களைக் குறித்தும், ராக்ஷசவர்த்தத்தில் நடந்தவைகள் குறித்தும் உத்தவன் ரவிகாவிடமும், கார்க்கோடகனிடமும் கூறுகையில் இரட்டைச் சகோதரிகளையும் அவர்களோடு கண்டான்.  ஆனால் அவர்கள் அவனைப் பார்த்த விதமே புதுமையாக இருந்தது.  உத்தவன் மனம் மிக வலித்தது.   உத்தவனுக்கு அவர்கள் அளித்து வந்த முக்கியத்துவம் திடீரெனக் குறைந்தாற்போலவும், உத்தவனை அவர்கள் தவிர்க்கப் பார்ப்பதாகவும் தோன்றியது அவனுக்கு. இது உத்தவன் சற்றும் எதிர்பாரா ஒன்று.  ஏதோ தவறு நடந்திருக்கிறது என உத்தவனுக்குப் புரிந்தது.   காரணம் ஏதுமில்லாமல் இப்படி வெளிப்படையாக அவர்கள் இருவரும் உத்தவனை ஒதுக்கித் தள்ள மாட்டார்கள்.  நிச்சயம் ஏதோ இருக்கிறது.  என்ன அது?  மணிமான் இப்போது தைரியமும், பராக்கிரமமும் மிகுந்தவனாகத் தன்னைக் காட்டிக் கொண்டான். தனக்குள்ள உரிமையை நிலைநாட்டியதன் மூலம், தன்னுடைய இழந்த நம்பிக்கையையும் திரும்பப் பெற்றிருந்தான். அவனிடம் உத்தவன் கேட்டான்:” மணிமான், சகோதரா, பிங்கலாவுக்கும், கபிலாவுக்கும் என்ன ஆயிற்று?என்னிடம் இன்னமும் கோபமாகத் தான் இருக்கிறார்களா?  ஏன் என்னைத் தவிர்க்கின்றனர்?” என்று கேட்டான்.  உத்தவன் என்னவோ ரகசியமாகவே கேட்டான்.  ஆனால் கார்க்கோடகனோடு பேசிக் கொண்டிருந்த கிருஷ்ணன் காதுகளில் அவை விழ உடனே கிருஷ்ணன் உத்தவனைத் திரும்பிப் பார்த்தான்.

“உத்தவா, அவர்கள் இருவரும் உன்னை மீட்டு வரவேண்டும் என எல்லோரிடமும் எவ்வளவு கெஞ்சினார்கள் என்பதை நீ அறிவாயா? அதுவும் உயிரோடு கொண்டு வந்துவிட வேண்டும் என்று துடியாகத் துடித்தார்கள்.  உன்னை வரவேற்க வேண்டியே இந்தக் கடினமான பாதையில் எங்களோடு பயணம் செய்து வந்திருக்கிறார்கள்.  அது சரி அப்பா, அவர்கள் கோபத்தின் காரணத்தை நீ அறியவில்லையா?” என்றான் கண்ணன். “என்னிடம் கோபம் கொண்டிருக்கிறார்களா?  நான் என்ன செய்தேன் அவர்களை?” உத்தவனின் மனவேதனை அவன் குரலில் தெரிந்தது.   கிருஷ்ணன் முகம் முழுவதும் குறும்புப் புன்னகையில் விரிந்து மலர்ந்தது.  “நீ!  நீ மட்டுமே அவர்கள் கோபத்திற்குக் காரணம்.  நீ ஒன்றுமே செய்யவில்லை என்பதோடு அவர்கள் மனம் புண்படும்படியாகவும் நடந்திருக்கிறாய்!” என்றான் கண்ணன்.  “அப்படி என்னதான் செய்துவிட்டேன் நான்?” உத்தவனுக்குப் புரியவில்லை.  “நீ தான் உத்தவா!  நீ அவர்கள் கணவன்.  குறைந்த பட்சமாக அவர்கள் இருவர் வரையுமாவது நீ அவர்களின் கணவன் தான்.  அப்படித் தான் அவர்கள் இருவரும் நினைக்கின்றனர்.  ஆனால் நீ என்ன செய்தாய்?  வந்ததுமே எல்லோரிடமும் பேசுகிறாய்.  அவர்களைக் கவனிக்கவே இல்லை.  நீ அவர்களை அழைக்கவில்லை.  தனிமையில் பேசவில்லை.  உன்னுடைய எல்லா சாகசங்களையும் அவர்கள் உன்னிடமிருந்து தனிமையில் கேட்க விரும்புகின்றனர்.  இப்படி எல்லார் முன்னிலையிலும் அல்ல.  அவர்கள் இருவருக்கும் மட்டும் கேட்கும்படியாக நீ அவர்களோடு தனிமையாகப் பேசி எல்லாவற்றையும் சொல்ல வேண்டும்.  ஆனால் நீ??? என்ன செய்கிறாய்?  உத்தவா, உத்தவா, ஒரு நல்ல கணவனாக எப்போது மாறப்போகிறாய்?  எப்போது நல்ல கணவனாக நடப்பாய்?” கண்ணனின் குறும்பு நிற்கவே இல்லை.  உத்தவனோ அவனை ஆச்சரியமாகப் பார்க்க, கண்ணன் மீண்டும் கலகலவென நகைத்தான்.

“என்ன, நானா?  இவர்கள் கணவனா?  வாசுதேவா, இது என்ன விளையாட்டு?  நீ கூடவா?  நீ கூடவா நான் இவர்களை மணக்கவேண்டும் என்கிறாய்?” உத்தவனுக்கு என்ன சொல்வது எனத் தெரியவில்லை.  தான் மிகவும் நம்பிய கண்ணன் கூட இப்படிச் சொல்கிறானே?  கண்ணனோ, “ உத்தவா,  இந்த இரு பெண்களும் ஏற்கெனவே உன்னை மானசீகமாக மணந்து விட்டனர்.  தங்கள் பக்தியை, அர்ப்பணிப்பை எல்லாம் உனக்குக் காட்டி உன்னை வென்றும் விட்டனர்.  உத்தவா, பெண்கள் ஒரு ஆணைக் கணவனாக வரிக்கவும், அவனைத் தங்கள் பக்கம் இழுக்கவும் நினைத்துவிட்டால், அவர்களிடமிருந்து எவரும் தப்ப இயலாது.  உன்னிடத்தில் நான் மட்டும் இருந்தேன் எனில் அவர்கள் விருப்பத்துக்குத் தலை வணங்கி இருப்பேன்.”  சொன்ன கிருஷ்ணன், மணிமானிடம் திரும்பி, “மணிமான், யாரும் இல்லாத நேரமாகப் பார்த்து உத்தவனை உன் சகோதரிகள் இருவரிடமும் அழைத்துச் செல்.  உத்தவனை அங்கே விட்டு விட்டு நீ திரும்பி விடு.  நீயும் உடன் தங்கிவிடாதே.  உத்தவனைப் பார்த்தும், அவனிடம் அடைக்கலம் புகுந்தும் இருவரும் தங்கள் மனம் கொண்ட மட்டும் அழுது தீர்க்கட்டும்.  அப்போது தான் அவர்கள் மனம் ஆறும்.  உத்தவனைச் சமைத்துச் சாப்பிட வேண்டி ராக்ஷசர்கள் செய்த முயற்சியையும், அதிலிருந்து தான் எப்படித் தப்பினேன் என்பதையும், அந்தக் கடைசி நிமிடங்களில் இரு சகோதரிகளையும் நினைத்ததையும் உத்தவனே அவர்களிடம் நேரில் சொல்லட்டும்.  அதைக் கேட்டு அவர்கள் மனம் ஆறுதல் அடையும்.”

“கண்ணா, நீ எவ்வாறு அறிவாய்?  நான் அந்தக் கடைசி நிமிடங்களில் அவர்களையும் நினைத்தேன் என்பதை? “

“ஆஹா, நீ நினைத்தாய்!  இல்லையா?  நினைத்தாயா இல்லையா? எனக்கு எப்படித் தெரிந்தது என்பதை நான் சொல்வேனா?  அது என்னுடைய ரகசியம்! “ கண்ணன் சிரித்துக் கொண்டே அங்கிருந்து சென்றான்.

நாககூடத்தை அவர்கள் அடைந்த சமயம் ஆர்யகனும், மற்ற நாக குலத்தலைவர்களும் முன் வந்து வரவேற்று அழைத்துச் சென்றனர்.  வரவேற்பு வைபவம் ஒரு திருவிழாப் போல் பிரமாதமான ஏற்பாடுகளுடன் நடந்தது.  ஆனாலும் அதிலும் ஒரு அவசரம், ஒரு பதட்டம், இருப்பதைக் கூர்ந்து பார்ப்பவர்கள் மட்டுமே அறிந்தனர்.  அனைவர் மனதிலும் திடீரென ஏற்பட்ட இந்த ஊடுருவல் குறித்த கவலையும், அச்சமும் இருந்தது.  அன்றே ராக்ஷசர்களை வென்று நண்பர்களாக ஆக்கிக் கொண்டதைப் பாராட்டும் வகையில் மிக விமரிசையான அரச போஜனம் நடைபெற்றது.  அனைவரும் அவரவர் வசதிக்கேற்ப உண்டு, அவரவர் மனதுக்குப் பிடித்த ஜோடியுடன் நடனம் ஆடி இரவைக் கழித்தனர்.  மறுநாள் பொழுது விடிந்தது.  தூதுவர்கள் செய்தியைக் கொண்டு வந்தனர்.  செகிதனா, என்னும் யாதவ அரசன் புஷ்கர நாட்டின் தலைவன்.  அவனை குருவம்சத்தின் அப்போதைய யுவராஜாவான துரியோதனன் திடீரெனத் தாக்கிவிட்டான்.  ஆனால் செகிதனாவோ, துரியோதனனிடம் சரணாகதி அடைய மறுத்து யமுனையைக் கடந்து இந்தப் பக்கம் வந்துவிட்டான்.  வந்தவன் தனக்கு ஏற்பட்ட அவமானத்தையும், தோல்வியையும் பொறுக்க இயலாமல் நாகர்களைத் தாக்க முற்பட்டான்.  யமுனைக்கரையில் நாகர்களின் பிரதேசத்தின் எல்லைக்கிராமங்களில் இருந்த நாககுலக் குடிமக்களை அவரவர் குடியிருப்புகளிலிருந்து விரட்டி விட்டு அவற்றை அவனும் அவன் பரிவாரங்களும் ஆக்கிரமித்துக் கொண்டனர்.  அப்போது அவர்களுக்குள்ளாக நடந்த சிறிய போரில் பல நாகர்கள் கொல்லப்பட்டனர்.  யாதவர்களின் அந்த பலத்தையும், ஆக்கிரமிப்பையும் எதிர்கொள்ள முடியாத நாகர்கள் அனைவரும் எல்லைக்கிராமங்களில் இருந்து தப்பி நாட்டின் உள்ளே வந்து கொண்டிருந்தனர்.

அவ்வளவு வருடங்களாக அங்கே நிலவி வந்த அமைதியைக் குலைக்கும் இந்தச் செய்தியைக் கேட்ட அனைவருக்கும் வருத்தமாக இருந்தது.  ஆரியர்கள் இது வரையிலும் யமுனையைத் தங்கள் எல்லையாகக் கொண்டிருந்தனர்.  யமுனையைக் கடந்து இந்தப்பக்கம் அவர்கள் இதுவரை வந்ததே இல்லை.  அவரவருக்கு உள்ள எல்லைக்கட்டுப்பாடுகளை மதித்து நடந்தனர்.  அதே போல் நாகர்களும் யமுனையைக் கடந்து அந்தப் பக்கம் சென்றதில்லை.  ஆனால் இப்போதோ பெருமளவு யாதவர்கள் யமுனையைக் கடந்து இந்தப்பக்கம் வந்து குடியேறுகின்றனர்.   இந்தச் செய்தி குடிமக்களிடையே பரவ ஆரம்பித்ததும் அனைவரும் அதிர்ச்சியும், குழப்பமும் அடைந்தனர்.  மனம் வருந்திய ஆர்யகன், இதனால் மிகவும் தர்மசங்கடமான நிலையில் இருந்தான்.  நாகர்களின் முக்கியத் தலைவர்களோடு ஒரு சந்திப்புக்கும், கலந்தாலோசனைக்கும் ஏற்பாடு செய்தான்.  அதற்கு கிருஷ்ணன், உத்தவன், ஷ்வேதகேது, சாத்யகி ஆகியோரையும் அழைத்திருந்தான். யாதவத் தலைவர்கள் அனைவரும் மன அமைதியின்றிக் குழப்பத்தில் ஆழ்ந்திருந்தனர்.  யமுனைக்கரையில் இருந்து வராமல் இன்னமும் தங்கி இருக்கும் தங்கள் நாக குல மக்களைக் காப்பாற்ற வேண்டி ஒரு சிறு படைப்பிரிவை அனுப்பியாக வேண்டும் என்பது அவர்களின் ஒட்டுமொத்தக் கருத்தாக இருந்தது.

ஆர்யகன் கிருஷ்ணனை யோசனை கேட்டான்.  கிருஷ்ணன் சொன்னான்:” பாட்டனாரே, துரியோதனனின் இந்த நடத்தைக்குப் பின்னர் ஏதோ ஒரு முக்கியமான, அதே சமயம் வஞ்சகமான காரணம் இருக்க வேண்டும்.  செகிதனா யாதவர்களில் ஒரு முக்கியத் தலைவன்.  அவன் செளராஷ்டிரத்திலிருந்து ஹஸ்தினாபுரம் வரும் ராஜபாட்டையின் முக்கியக் காவலனும் ஆவான்.  துரியோதனன் ஒருவேளை இதற்குள்ளாகப் புஷ்கரத்தைக் கைப்பற்றி இருக்கலாம்.  நம்மை  வடக்கே செல்ல விடாமல் தடுக்க அவன் இந்த நடவடிக்கையை எடுத்திருக்கக் கூடும்.   செகிதனாவால் அவனை எதிர்க்க முடியாமல், வேறு வழியில்லாமலேயே உங்கள் நாக நாட்டில் அடைக்கலம் தேடி வந்திருக்கலாம். அதற்காகவே யமுனையைக் கடந்து வந்திருப்பான்.” என்றான்.  ஆனால் ஆர்யகனுக்குப் பொறுமை இல்லை.  கிருஷ்ணன் சொல்வதையும் , இந்த நிகழ்ச்சியை எப்படி நடந்திருக்கலாம் எனக் கிருஷ்ணன் ஆராயும் கோணமும் ஆர்யகனுக்குச் சம்மதமாக இல்லை.  அவன் கொஞ்சம் பொறுமையை இழந்தே, “அவன் ஒன்றும் அடைக்கலம் தேடி வந்தவனாகத் தெரியவில்லை!” என்று கோபத்துடனேயே சொன்னான்.  “அப்படி அடைக்கலம் தேடி வந்திருந்தால் ஏன் நாகர்களைக் கொல்ல வேண்டும்?  குடியிருப்புகளிலிருந்து அவர்களை விரட்ட வேண்டும்?”

“அது தவறே பாட்டனாரே!” என்ற கிருஷ்ணன், “செகிதனா இதன் மூலம் தவறு தான் செய்திருக்கிறான்.  ஆனால் ஒரு முறை போர் என்று ஆரம்பித்துவிட்டோமானால் மக்களுக்கு எதுவும் புரிவதில்லை.  எது சரி, எது தவறு என்பதை நிர்ணயம் செய்து போர் செய்யவேண்டும் என்பது அவர்களுக்குப் புரிவதில்லை.  நீங்கள் அநுமதித்தால் நான் ஒரு ஆலோசனை சொல்வேன்.” என்றான் கிருஷ்ணன்.  “குழந்தாய், சொல், சீக்கிரம், உன் ஆலோசனைக்குக் காத்திருக்கிறோம்.” என்றான் ஆர்யகன்.  “மாட்சிமை பொருந்திய பாட்டனாரே, என்னுடைய யூகம் மட்டும் சரியாக இருந்ததெனில், வரும் மழைக்காலத்தில் நாம் செகிதனாவை ஒரு விருந்தினனாக வரவேற்று அவனுக்கு உரிய மரியாதைகளைச் செய்து அவனை நன்கு உபசரிக்க வேண்டும்.”

“அதெல்லாம் சரிதான் அப்பனே!  அத்தனையையும் பெற்றுக்கொண்ட பின்னரும் அவன் மக்களிடம் போர் புரிந்தால்?? அவர்களைக் குடியிருப்புகளிலிருந்து விரட்டினால்?  நம்முடைய விருந்துபசாரத்தையே அவன் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு நம்மை அழித்து விட்டான் எனில்?” கார்க்கோடகன் கேட்டான்.  “வாசுதேவா, ஆரியர்களோடு எங்களுக்கு நிறையவே அனுபவம் இருக்கிறது.  அவர்கள் இரக்கமற்றவர்கள்.  அதிலும் போரென்று வந்துவிட்டால் மிகவும் கொடூரமானவர்கள்.  அதே சமயம் போரில்லாத அமைதியான காலங்களில்   வஞ்சகமாக ஏமாற்றுபவர்கள்.” என்றான்.  தன் வழக்கமான கவர்ச்சிச் சிரிப்பை உதிர்த்த கண்ணன், “நீங்கள் சொல்வது சரியே மாமா அவர்களே!  போர்களில் நாங்கள் வெற்றி பெற்றிருந்தாலும் எங்களுடைய நற்பெயர் சிதைந்தே போகிறது.  அதிலும் பலவீனமான மக்களிடம் போரிடுகையில் இரக்கமற்றவர்கள் என்ற பெயரே கிடைக்கிறது. ஆனால்,,மழைக்காலம் முடிந்து போகும்போது செகிதனா இந்தப் பிரதேசத்தை விட்டுச் சென்றுவிடுவான் என்று நான் வாக்குறுதி கொடுக்கிறேன்.   அப்போது கூட நீங்கள் எல்லாருமே அவனை இங்கிருந்து விரட்டி அடிக்கத்தான் வேண்டும் என்றா விரும்புகிறீர்கள்?” என்றான் கிருஷ்ணன்.

கிருஷ்ணனின் வார்த்தைகளைத் தான் துளிக்கூட நம்பவில்லை என்பதைக் கார்க்கோடகன் தன் முகத்திலேயே காட்டினான்.  என்றாலும் தன் தந்தையாரின் விருப்பம் என்ன என்பதையும் அவன் அறிய விரும்பினான்.  ஆர்யகனைப் பார்த்தான்.  கிருஷ்ணனோ தொடர்ந்து, “மாமா அவர்களே, என்னை நீங்கள் நம்பவே வேண்டாம்.  உங்களுக்கு உத்தவனை நன்கு தெரியும்.  என்னை விட அதிகம் தெரியும்.  அவன் விரைவில் உங்கள் இரட்டைப் பெண்களையும் மணப்பான்.  என்னால் செகிதனாவை இங்கிருந்து செல்லும்படி வைக்கமுடியாத பட்சத்தில் உத்தவன் இங்கே உங்களுள் ஒருவனாக இருந்து கொண்டு அவனை விரட்டி அடிக்கும் பணியை மேற்கொள்ளுவான்.  இப்போது உங்களுக்கு எல்லாம் என்னிடம் கொஞ்சமானும் நம்பிக்கை, விசுவாசம் வந்திருக்கிறதா?” கண்ணன் கேட்டான்.  ஆர்யகன் எதுவுமே சொல்லாமல் தன் மகனைப் பார்க்கக் கார்க்கோடகனோ, மற்ற நாகர்குலத் தலைவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தான்.  அவர்களில் எவருமே கண்ணனை நம்பவே இல்லை என்பது அவர்களின் முகத்திலிருந்து நன்கு தெரிந்தது.



Tuesday, September 3, 2013

வெற்றிச் சங்கு முழங்குகிறது! சாதனையும், சோதனையும்!

சிகுரி நாகன் தலைமையில் அந்தக் குழுவினர் கற்கள் நிரம்பி, ஏற்றமும், இறக்கமுமாய் இருக்கும் அந்தப் பாதையில் சென்றனர்.  அனைவருக்கும் பின்னால் பாதுகாப்பாக சாத்யகி வந்தான்.  அவனுடன் வந்த சிலர் அவர்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களைச் சுமந்து வந்தனர்.  செங்குத்தான, உயரமான அந்த மலைப்பாதையில் குறிப்பிட்ட உயரம் வந்ததும், கிருஷ்ணன் யாதவர்கள் பாடும் போர் கீதத்தைப்பாட ஆரம்பித்தான்.   உணர்ச்சி பொங்கும் குரலில் அவன் பாடுவதைத் தொடர்ந்து மற்ற யாதவர்களும் கலந்து கொள்ள, நாகர்கள் அவர்கள் பாடலின் வரிகளைத் திரும்பப் பாடி அவர்களைத் தொடர்ந்தார்கள்.  அவர்களுக்கு அந்த மொழியும் புரியவில்லை;  பாடலும் புரியவில்லை.  ஆனாலும் உணர்வுகள்  பொங்கப் பாடிய யாதவர்களைப் பார்த்ததும், அவர்களுக்கும் அதே உணர்வுகள் பொங்கின. பாடப் பாட அவர்களின் நாடி, நரம்புகளில் எல்லாம் புது ரத்தம் பாய்ந்தது போல் தோன்ற மனதில் உற்சாகம் பொங்க மீண்டும் மேலே வேகமாகவே ஏறினார்கள்.  செங்குத்தாக மேலே ஏறிய அந்தப் பாறையின் சரிவுக்கருகே வந்தார்கள் அவர்கள் அனைவருமே.


அப்போது யாரும் எதிர்பாரா வண்ணம் கண்ணன் தன் பாஞ்சஜன்யத்தை எடுத்துக் கொண்டு, தன் வில்லாகிய சார்ங்கத்தையும் இன்னொரு கையில் பிடித்த வண்ணம், சங்கை முழங்கினான்.  அவன் ஊதியது வெற்றிச் சங்க முழக்கம்.  அது காட்டின் மூலை, முடுக்குகளில் எல்லாம் சென்று எதிரொலித்தது. ஆங்காங்கே பறவைகள், விலங்குகள், புழு, பூச்சிகள் என அனைத்திலும் அதன் தாக்கம் தெரிந்தது.


”பூம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்” என ஆரம்பித்த அந்த முழக்கம் ஒரு எதிரொலியாக மாறி ஆயிரம், பதினாயிரம் முறைகள் அனைவருக்கும் கேட்டது.   மாட்சிமை பொருந்திய அந்த ராக்ஷச வர்த்தத்தில் வசிக்கும் அனைத்து ராக்ஷசர்களையும் சவாலுக்கு அழைக்கும் விதத்தில் இருந்தது அந்தச் சங்கநாதம்!  கண்ணனின் இந்த வெளிப்படையான சவால் விடுக்கும் அழைப்பு அனைவருக்கும் ஒரே நேரத்தில் ராக்ஷசர்களிடம் பயத்தையும், கண்ணனிடம் மரியாதையும் பக்தியையும் உண்டாக்கியது.  அப்போது நடந்தது ஒரு ஆச்சரியம்.  கண்ணனின் அந்தச் சங்க நாதத்துக்கு பதில் கிடைத்தது.  ஆம்.  அந்தக் காட்டுப் புதர்களில் இருந்து முளைத்தாற்போல் உத்தவன் கண்ணனின் சங்க நாதத்துக்குப்பதிலாக சந்தோஷக் கூச்சலிட்டுக் கொண்டு,  ஓட்டமாக ஓடி வந்தான்.  அவனைத் தொடர்ந்து கால்களை நொண்டிக் கொண்டே ராக்ஷசச் சிறுவன் நிகும்பனும் ஓடி வந்தான்.  கண்ணனும், அவனுடன் வந்தவர்களும், உத்தவனையும், நிகும்பனையும் மட்டும் பார்க்கவில்லை.   அவர்கள் இருவருக்கும் பின்னே, நிழல்கள் போன்ற சில தோற்றங்களைக் கண்டனர்.  ஆம், ராக்ஷசர்களில் சிலர் அந்த அடர்ந்த காட்டுப் புதர்களின் பின்னே தங்களை மறைத்துக் கொண்ட வண்ணம் முதுகுகளில் சில மூட்டைகளைத் தூக்கிக் கொண்டு வந்து மறைந்து கொண்டிருந்தனர்.  கண்ணனின் சங்கொலியைக் கேட்ட மாத்திரத்தில் அவர்கள் அனைவரும் தாங்கள் தூக்கி வந்த மூட்டைகளை அப்படி அப்படியே போட்டுவிட்டு வேகமாக ஓடி மறைந்தனர்.


அது பார்க்கவே கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.  விசித்திரமாகவும் இருந்தது.  கிருஷ்ணன் சங்கை முழக்குகிறான்.  அந்த அடர்ந்த காட்டில் இருந்து எங்கிருந்தோ விண்ணிலிருந்து இறங்கியவன் போல உத்தவன் பதில் கொடுத்துக் கொண்டு ஓடோடி வருகிறான்.  விண்ணகத்து தேவர்களுக்குக் கண்ணன் கட்டளையிட்டாற்போலும், அவர்கள் அதை ஏற்று உத்தவனை அனுப்பியது போலும் உணர்ந்தனர்.  இவன் நிச்சயம் சாமானிய மனிதன் அல்ல.  சாக்ஷாத் அந்தப் பர வாசுதேவனே ஆகும்.  ஆம், இவன் அந்தப் பரம்பொருளே ஆவான்.  உறைந்து நின்றனர் அனைவருமே. ராக்ஷசவர்த்தம் சென்றும் ஒருவன் உயிருடன் மீண்டானா? இல்லை, இல்லை, இது கண்ணன் செய்த மாயமே!  இவனிடம் ஏதோ இருக்கத் தான் செய்கிறது.  ஒரு நரகத்திலிருந்து அல்லவோ உத்தவனை மீட்டிருக்கிறான்.  உத்தவனைக் கண்ட கிருஷ்ணன் மகிழ்ச்சி பொங்க ஆரவாரம் செய்த வண்ணம் தன்னிரு கைகளையும் நீட்டிக் கொண்டு உத்தவனைத் தழுவிக் கொள்ளும் வேகத்தோடு ஓடினான்.  இன்னமும் இந்த அதிசயத்தை நம்ப முடியாத மற்றவர்கள் அனைவரும், “வாசுதேவ கிருஷ்ணனுக்கு மங்களம்!  வாசுதேவ கிருஷ்ணனுக்கு ஜெயம்!” என ஜெய கோஷம் கோஷித்துக் கொண்டு பின் தொடர்ந்தனர்.   உத்தவனைக் கட்டி அணைத்துக் கொண்ட கிருஷ்ணன் அவன் காதுகளில் மட்டுமே விழும் வண்ணம், “ஐந்து சகோதரர்களும், அத்தை குந்தியும் உயிருடன், நலமாக இருக்கின்றனரா?” என விசாரித்தான்.


உத்தவன் தலையை மட்டும் ஆட்டி ஆமோதித்தான்.  பின்னர் அனைவர் எதிரிலும் இதைக் குறித்துப் பேச வேண்டாம் எனக் கண்ணனுக்குத் தன் கண்களால் எச்சரிக்கை விடுத்தான்.  அனைவரும் கேட்கும் வண்ணம், “ மாட்சிமை பொருந்திய கண்ணா, வாசுதேவா, உன்னைப் பார்த்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.  ராக்ஷசர்களின் மாபெரும் தலைவனும், அரசனும் ஆன அரசன் வ்ருகோதரன் , நாகர்களின் தலைவனும், அரசனும் ஆன மாட்சிமை பொருந்திய ஆர்யகனுடன் சிநேகம் வைத்துக் கொண்டு நட்புறவை நீடிக்க விரும்புகிறான்.  அதில் மகிழ்ச்சி அடையும் அரசன் வ்ருகோதரன், நாகர்கள் அரசனுக்குத் தன்னால் இயன்ற சில பரிசுகளையும் அனுப்பி உள்ளான்.  நாகர்களுக்கும் ராக்ஷசர்களுக்கும் இடையே இனி சமாதானம் நிலவி அமைதி பெருகவும் பிரார்த்தித்துக் கொண்டு இந்தப் பரிசில்களை ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறான்.” என அறிவிப்புச் செய்தான்.


ராக்ஷசர்கள் அனைவரும் தூக்கி எறிந்துவிட்டுப் போன அந்த மூட்டைகளைச் சுட்டிக் காட்டிய கண்ணன் இவற்றில் என்ன பரிசுகள் உள்ளன எனக் கேட்டான். “காட்டு நரிகளின் பதப்படுத்தப்பட்ட தோல்கள்!” என்றான் உத்தவன். “பாட்டனாருக்கு இவற்றைப் பரிசாக அளித்துள்ளானா, வ்ருகோதரன்?” எனக் கண்ணன் கேட்க, ஆமோதித்த உத்தவன், “ஆம், இனி ராக்ஷசர்களும், நாகர்களும் நண்பர்கள் எனவும் சொல்லி அனுப்பி உள்ளான்.  இரு நாடுகளுக்குமிடையே இனி அமைதியே நிலவும்.  எந்த ராக்ஷசனும் எந்த நாகனையும் கொன்று தின்ன மாட்டான்.  இந்த நட்பின் அடையாளமாகவே மேற்கண்ட பரிசுகளை வ்ருகோதரன் அனுப்பியுள்ளான்.  ஆர்யகனின் குடிகளுக்கு இனி எந்த பயமும் தேவையில்லை!” என்றான் உத்தவன்.  மேலும் புன்னகையுடன் உத்தவன் கூறியதாவது:”  ஆர்யகனின் பிரதிநிதியாக நானும் வ்ருகோதரனுக்கு ஒரு வாக்குறுதி கொடுத்துள்ளேன் -மாட்சிமை பொருந்திய மன்னர் ஆர்யகன் அதை நிறைவேற்றுவார் என்னும் நம்பிக்கையில் கொடுத்தேன் ----இந்தப் பரிசுகளுக்குப் பதிலாக நாகர்கள் வ்ருகோதரனுக்கு ஐம்பது ஆடுகள், செம்மறியாடுகளின் தலைகளைப் பரிசாக அளிப்பான் எனக் கூறியுள்ளேன்.  இதோ இந்த ராக்ஷசச் சிறுவன் இருக்கிறானே, இவன் பெயர் நிகும்பன்.  இப்போது நம் மொழியை நன்கு பேசவும், புரிந்து கொள்ளவும் ஆரம்பித்துவிட்டான்.  இவன் ஒவ்வொரு மாதமும் பெளர்ணமி தினத்தன்று ராக்ஷசப் பிரதிநிதியாக இங்கே வந்து இந்த மாற்றங்களை எல்லாம் கவனித்து ஏற்றுக்கொண்டு அமைதியைப் பிரகடனம் செய்யும் முயற்சிகளுக்கு உதவி வருவான்.”


நாகர்கள் அனைவருக்கும் விவரிக்க ஒண்ணா சந்தோஷம் ஏற்பட்டது.  அவர்களின் மனதின் மகிழ்ச்சியை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை அவர்களிடம்.  ஒரு மாபெரும் துர் சொப்பனம் காண்பதில் இருந்து திடீரென விடுதலை அடைந்த குழந்தையைப் போல இனி ராக்ஷசர்கள் நம்மை உணவாக்க மாட்டார்கள், அவர்களைக் கண்டு பயப்பட வேண்டாம்;  அவர்கள் நண்பர்கள் என்னும் இந்தப் புதிய மாற்றம் அவர்களுக்குப் பெரும் மன நிம்மதியைக் கொடுத்தது.  பின்னர் அவர்கள் கொண்டு வந்திருந்த உணவுப் பொருளை வைத்து அனைவருக்கும் விருந்து தயாரித்து அளித்தனர்.  அதன் பின்னர் அவர்கள் நாகர்கள் பிரதேசத்துக்குத் திரும்ப வேண்டிய ஆயத்தங்களைச் செய்தனர்.  அப்போது கண்ணன் உத்தவனைப் பார்த்தான்.  அனைவரையும் முன்னே செல்ல விட்டுவிட்டு உத்தவனை மட்டும் தன்னோடு நிறுத்திக் கொண்ட கண்ணன் அவனைப் பார்த்து, “எப்படியப்பா தப்பினாய் அந்த ராக்ஷசக் கும்பலிடமிருந்து?  நீ உயிருடன் திரும்பி வந்தது குறித்து எனக்கு இவ்வளவு அவ்வளவு சந்தோஷமில்லை.  அளவிட முடியா சந்தோஷம்.  ஆனால் இந்த அதிசயம் நடந்தது எப்படி?  ஐந்து சகோதரர்களையும் உன்னால் பார்க்க முடிந்ததா?  அத்தை குந்தியை?” எனக் கேள்வி மேல் கேள்வியாகக் கேட்டான்.

“அனைவரும் நலம்.  அத்தை குந்தியும், அவளுடைய ஐந்து குமாரர்களும்; அனைவரும் நலம்!” என்ற உத்தவன், “ராக்ஷசச் சக்கரவர்த்தி வ்ருகோதரன் யாரென எண்ணுகிறாய் கிருஷ்ணா?  சாக்ஷாத் நம் பீமனே தான்!” என்றான் புன்னகையுடன்.  “என்ன, பீமனா? “ ஆச்சரியத்துடன் கேட்ட கிருஷ்ணன், “பீமன் இதை எப்படிச் சாதித்தான்?  எவ்வாறு ராக்ஷச அரசனாக மாறினான்?” என்று கேட்டான்.  “அது ஒரு பெரிய கதை கண்ணா, அதைச் சொல்கிறேன் உனக்கு.  கொஞ்சம் அவகாசம் கொடு!” என்ற உத்தவன், “ஆனால் பீமன் ஒருவனால் தான் இது எல்லாம் நடந்திருக்க முடியும்!” என்றான். மேலும் தொடர்ந்து, “ஆனால் இப்போது அவர்கள் எவரும் துவாரகைக்கு வர விரும்பவில்லை!” என்றான்.  “ஓஹோ, நல்லது.  எனக்கும் அது தான் சரியெனப் படுகிறது.  நான் விரும்புவதும் அது தான்.  அடுத்தவருடம் மார்கழி மாதத்துக்கு முன்னர் அவர்கள் வெளிப்பட வேண்டாம்.  அவர்கள் இப்போது இருக்கும் இடத்திலேயே இருக்கட்டும்.  அது தான் நல்லது.  துருபதனின் மகளும் காம்பில்யத்தின் இளவரசியுமான  திரெளபதியின் சுயம்வரம் அடுத்த வருடம் புஷ்ய மாதம் நடக்கப் போகிறது.  “

“என்ன சுயம்வரமா? வாசுதேவா, அவள் உன்னைக் கல்யாணம் செய்து கொள்ளப் போகிறாள் என்றல்லவோ நினைத்தேன்!’ உத்தவன் ஆச்சரியத்துடன் கேட்டான்.  “ஹாஹாஹா, உத்தவா, என்னைத் திருமணம் செய்து கொள்ள நினைக்கும் எல்லாப் பெண்களிடமிருந்தும் நான் எப்படியோ தப்பிவிடுகிறேன்.” என்று சிரித்தவன், “திரெளபதி சுயம்வரத்தின் மூலம் அவளுக்கேற்ற மணமகனைத்  தேர்ந்தெடுத்துக் கொள்ளட்டும் என நாங்கள் கூடிப் பேசி முடிவு செய்திருக்கிறோம்.” என்றான்.  “சுயம்வரத்தில் போட்டியும் உண்டு.  போட்டியில் வென்றவனே திரெளபதியை மணக்க முடியும்.” என்றான் மேலும்.  “நீ அந்தப் போட்டியில் கலந்து கொள்வாய் அல்லவா?”உத்தவன் கேட்டான்.  “நான் கலந்து கொள்ள வேண்டும் என்றா நினைக்கிறாய்?  உத்தவா, என்னைவிட அர்ஜுனன் உகந்தவன்.  அர்ஜுனன் இந்தப் போட்டியில் கலந்து கொண்டு வெல்ல வேண்டும் என எண்ணுகிறேன்.  அதனாலேயே அவர்கள் இங்கேயே இப்போது தங்கி இருந்து அடுத்த வருடம் புஷ்ய மாதத்தின் போது வெளிவந்தால் போதுமானது என்றும் நினைக்கிறேன்.” என்றான் கண்ணன்.   “நல்லது வாசுதேவா, இது பீமனுக்குக் கொஞ்சம் நிம்மதியைக் கொடுக்கும்.  அவனுக்கும் இது சரியாக வரும்.  அவனுக்குக் குழந்தை பிறக்கப் போகிறது.  ஆகவே இப்போது வர அவன் விரும்பவில்லை.  அவர்கள் அனைவருமே நீ அவர்களை வெளிப்படுத்திக்கொள்ளச் சொல்கையிலே வெளிப்படுத்திக்கொள்ளலாம் என எண்ணுகின்றனர்.” என்றான் உத்தவன்.


“எனக்கு சந்தோஷம் தான் உத்தவா!  இப்போது இருக்கும் இடத்திலேயே இன்னொரு வருஷத்தைக் கழிக்க அவர்கள் அனைவரும் ஒத்து முடிவெடுத்தது நல்லது. “ என்ற கண்ணனைப் பார்த்து, உத்தவன், “ஒத்துப் போய்த் தான் ஆகவேண்டும்.  அவ்வளவு ஏன்?  யானைகள் வந்து கட்டி இழுத்தால் கூட அவர்களால் இப்போது வர இயலாது.  இந்த ராக்ஷச வர்த்தத்திற்கு யுவராஜா பிறக்கப் போகிறான். பீமனுக்கு அடுத்த வாரிசு தோன்றப் போகிறது.  பீமனின் ராக்ஷச மனைவி ஹிடும்பி மூலம் அவனுக்கு ஒரு மகன் பிறக்கப் போகிறான்.  அதுவரையிலும் பீமனால் எங்கும் அசைய முடியாது.  யுவராஜாவுக்கு ஆறு மாதம் ஆகும்வரையிலும் பீமன் அங்கே இருந்தே ஆகவேண்டும்.” என்றான்.  கிருஷ்ணன் சிரித்தான்.  “இந்த பீமன் அடுத்து என்ன செய்வான், என்ன அதிசயங்கள் நடக்கும் என்பதை எவராலும் கணிக்க முடியாது!’ என்றான்.  பேசிக்கொண்டே லஹூரியாவை அவர்கள் அடைந்த சமயம்  அவர்களுக்காக ஒரு செய்தி காத்திருந்தது.  ஆர்யகனின் சொந்த தூதுவனே வந்திருந்தான்.  “அனைவரும் விரைவில் திரும்புங்கள்.  ஒரு பொல்லாத அரசன் நாககூடத்தை முற்றுகையிட்டிருக்கிறான்.  படைவீரர்களின் உதவி தேவை!” இவையே ஆர்யகனின் செய்தி.   அனைவருக்கும் தூக்கிவாரிப் போட்டது.  வியப்பாகவும் இருந்தது.  ஏனெனில் நாகர்களை முற்றுகையிடும் அளவுக்கு எந்த அரசனும் அப்போது விரோதியாக இல்லை.  நாட்டைப் பிடிக்கும் அளவுக்கு ஊடுருவியவன் எவனாயிருக்கக் கூடும்?  ஆனால் அனைவருக்கும் ஏற்கெனவே கிருஷ்ணனின் நடவடிக்கைகளால் ஏற்பட்டிருந்த வீரமும், தைரியமும், சக்தியும் பொங்கிப் பிரவாஹிக்க ஊடுருவி உள்ளே வந்திருக்கும் அரசனைப் பொடிப் பொடியாக்கத்  துடித்தனர்.

“உத்தவா, நம்மை எதிர்நோக்கிப் புதிதாக ஒரு சோதனையும், சவாலும் வந்துள்ளது!” என்றான் கிருஷ்ணன்.





Sunday, September 1, 2013

கண்ணன் ராக்ஷசவர்த்தம் கிளம்புகிறான்--தொடர்ச்சி!

அப்போது மணிமான் கிருஷ்ணனின் தைரியத்தையும், உத்தவனை எவ்வாறேனும் காக்க உறுதி கொண்டதையும் பார்த்து வெட்கம் அடைந்தவனாய்த் தன் பாட்டனைப் பார்த்து, “தாத்தா, கிருஷ்ணனுடன் நானும் அந்த ராக்ஷசவர்த்தம் செல்கிறேன்.” என அநுமதி கேட்டான்.  “கோழை, கோழை, வீரமில்லாதவனே, இப்போது போகவேண்டுமா உனக்கு? உத்தவன் தன்னந்தனியனாய்ச் செல்கையில் போகத் தோன்றவில்லையா உனக்கு?” கபிலா ஆத்திரத்துடன் கத்தினாள்.  ஆர்யகன் எதுவும் பேசவில்லை.  நாகர்கள் வீரர்களாக இருந்தாலும் யுத்த தந்திரங்களோ, போர்முறைகளோ அறியாதவர்கள்.  அவர்களின் வலுவான ஆயுதமாகக் கோடரி இருந்து வந்தது.  எதிரிகளைத் தாக்கவும்,எப்போதேனும் காட்டை அழித்துப் பயிர்கள் நட்டு விவசாயம் செய்யவும் பயன்பட்டு வந்தது.  களிமண்ணால் குடிசைகள் கட்டி, அங்கே பன்றிகள், ஆடுகள், செம்மறியாடுகள் ஆகியவற்றை வளர்த்து வந்தனர்.  அதுவும் பெரிய அளவில் எல்லாம் இல்லை.  யாதவர்களைப் போல் ஆடு, மாடுகளைப் பெரிய அளவில் கூட்டம், கூட்டமாக வளர்த்துப் பராமரிக்கும் திறமை நாகர்களிடம் இல்லை.  யாதவர்கள் மட்டுமில்லாமல் ஆரிய வர்த்தத்திலேயே  ஆரியர்களால் கால்நடைகள் சிறப்பாகப் பராமரிக்கப்பட்டன.  அதுவும் குதிரைகள், யானைகள் என்றும் பராமரித்தனர். நாகர்களிடமோ ஒரு சில கழுதைகள், கோவேறு கழுதைகள் மட்டுமே இருந்தன.  குதிரைகளை அவர்கள் ஆரியர்களிடமிருந்து வாங்கி இருந்தாலும் அவ்வழியே செல்லும் ஆரியர்களில் சிலர் கைச்செலவுக்குப் பணமில்லாமையாலேயே இவர்களிடம் விற்றனர்.  நாகர்களும் அந்தக் குதிரைகளை வாங்கிப் பயன்படுத்தத் தெரியாமல் கண்காட்சிப் பொருளாகவே வைத்திருந்தனர்.

கங்கை, யமுனைக்கரைகளில் வசித்தால் அவர்களின் பயணம், வேட்டை போன்றவற்றிற்கு நல்லது எனினும், நாளடைவில் ஆரியர்களின் குடியேற்றத்தால் நாகர்கள் இன்னும் உள்ளே காட்டின் உள்ளே செல்ல நேர்ந்தது.  ஆரியர்கள் அவர்களுடன் பழகித் திருமண பந்தங்களை ஏற்றாலும் நாகர்களால் அவர்களோடு மனம் விட்டுப் பழக முடியவில்லை.  ஆனால் இப்போது வந்திருக்கும் யாதவர்களோ தனித்துத் தெரிந்தார்கள்.  ஹஸ்தினாபுரத்திலும் மற்றும் கங்கை, யமுனைக்கரையிலும் வசித்த யாதவர்கள் போன்றில்லாமல் இவர்கள் நாகர்களோடு வெகு எளிதில் கலந்து பழகி அவர்களில் தாங்களும் ஒருவரே என எண்ண வைத்தனர்..  இது நாகர்களின் கண்களைத் திறந்தது எனலாம்.  காம்பில்யத்திலும், ஹஸ்தினாப்புரத்திலும் இருக்கும் சாமானிய ஆரியக் குடிகள் கூட கர்வம் கொண்டிருப்பார்கள்.  ஒருவரை ஒருவர் மதிக்க மாட்டார்கள்.  ஆனால் இவர்களோ தங்கள் தலைவனை மதித்தனர். நாகர்களின் கால்நடைகளை அபகரிக்கும் எண்ணம் சிறிதும் இல்லை.  எல்லாவற்றுக்கும் மேல் நாகர்களின் குலதெய்வம் ஆன பசுபதிநாதரை இவர்களும் வணங்கினர்.  அத்தோடு மட்டுமா?  கண்ணனோ, உத்தவனோ அவர்களுக்குப் புதியவர்கள் அல்ல.  அவர்கள் குல விளக்கான மரீஷாவின் பேரன்கள் இருவரும்.  அவர்கள் மிகவும் மதித்துக் கொண்டாடும் ஆர்யகனின் மகளான மரீஷாவின் பேரன்கள் அன்றோ இருவரும்!   நம்மிடையே அவர்கள் இருப்பதில் தான் நமக்கு எவ்வளவு கெளரவம், மரியாதை! இந்தப் பரந்த பரத கண்டத்தில் ஆரிய வீரர்கள் நம்மிடையே இருப்பதில் நாம் வலுவுள்ளவர்களாக ஆகிவிடுகிறோம்.

உத்தவனை ராக்ஷசவர்த்தத்தில் இருந்து மீட்டு வரக் கிருஷ்ணனே நேரில் செல்லப் போவது குறித்துக் கேள்விப் பட்டதில் இருந்து நாகர்கள் அனைவரின் மனதிலும் ஒரு போராட்டமே நிகழ்ந்தது.  ஒரு ராக்ஷசனைப் பார்ப்பது கூட அவர்களில் சிறந்த நாகவீரனுக்கு, அவ்வளவு ஏன் சிறந்த நாகத் தலைவனுக்கு நடுக்கத்தையும், பயத்தையும் ஏற்படுத்தும் விஷயம்.   இரவுகளில் வந்து பயங்கரமான சப்தங்களைச் செய்து கொண்டு அவர்களின் கால்நடைகளைத் திருடிக் கொண்டு அவற்றின் மாமிசத்தையும், நர மாமிசத்தையும் பச்சையாகவே தின்று கொண்டு, மிகுந்திருக்கும் ஒன்றிரண்டு கால்நடைகளையும் திருடிக் கொண்டு அவர்கள் ஜீவாதாரத்தையே பாழ்படுத்திக் கொண்டு வெறுப்பூட்டிக் கொண்டிருந்த ஒரு இனம் ராக்ஷச இனம்.  ஒரு ராக்ஷசன் வந்திருக்கிறான் எங்கோ ஒரு கிராமத்தில் எனக் கேள்விப் பட்டாலே போதும், அனைத்து நாகர்களும் அவர்களால் இயன்ற ஆயுதங்களை எடுத்துக் கொண்டு சூழ்ந்து கொண்டு விடுவார்கள்.   அந்த ராக்ஷசனிடம் இருந்து தப்பினால் போதும் என எண்ணுவார்கள்.  ஆனால் இப்போதோ முற்றிலும் புதியதொரு நம்பிக்கைச் சூரியன் உதயம் ஆகிவிட்டான்.  சிகுரி நாகன் அவர்களின் ஒப்பற்ற தலைவர்களில் ஒருவன் எப்படியோ ஒரு ராக்ஷசச் சிறுவனைப் பிடித்து வந்துவிட்டான்.  அவர்களின் உறவினன் ஆன உத்தவனோ அந்த ராக்ஷசர்களின் உலகுக்கே சென்று இருக்கிறான்.   அவனுடைய தைரியம் தான் மெச்சத்தக்கது எனில் இப்போது அவன் சகோதரன் ஆன கிருஷ்ணனோ எனில் இன்னும் தைரியசாலியாக உள்ளான்.


ஜராசந்தனை ஓட ஓட விரட்டினானாமே இந்தக் கிருஷ்ணன்.  மக்கள் அனைவரும் அதைக் கதையாகப் பேசுகின்றனர்;  பாடுகின்றனர்.  அதிசயங்கள் பல செய்யும் இந்த மாவீரனைப் பற்றி மக்கள் அனைவரும் பலப்பல பேசிக் கொள்கின்றனர். இவன் மனிதனே அல்ல;  சாக்ஷாத் அந்தப் பரம்பொருளே என்கின்றனர்.  இவன் உத்தவனை ராக்ஷசர்கள் பிடியிலிருந்து நிச்சயம் காப்பாற்றுவான்.  ஒவ்வொரு நாகனுக்கும் உடம்பு சிலிர்த்தது.  தைரியமும் வீரமும் அவர்களின் நாடி, நரம்புகளில் எல்லாம் புது ரத்தத்தைப் பாய்ச்சியது.  கண்ணனோடு சேர்ந்து செல்ல அனைவரும் தயாரானார்கள்.   புத்திசாலித்தனமாக இதில் கலந்து கொள்ளாமல் உள்ளூரப் பயந்து கொண்டு ஒதுங்கி இருந்த கார்க்கோடகன் கூடக் கண்ணனுடன் செல்லச் சம்மதித்துவிட்டான்.  யாதவத் தலைவர்களின் வீரத்தையும், தைரியத்தையும் பார்த்து மணிமான் எதிர்கால அரசன் ஆன தானும் அது போல் இருக்க வேண்டும் என்பதைப் புரிந்து கொண்டான்.  அவன் உள்ளத்தில் புத்தம்புதிய அபிலாஷைகள் உதயம் ஆகின. ஏற்கெனவே உத்தவனிடம் அவனுடைய வில்லையும், அம்பையும் வைத்துக் கற்றுப் பழகி இருந்த மணிமான் இப்போது இந்தப் புதிய சாகசத்தில் தன் வீரத்தைக் காட்ட ஆவல் கொண்டான்.


பசுபதிநாதர் கோயிலில் அனைவரும் கூடினர்.  ஆரியர்களோடு வந்திருந்த ஆசாரியன் ஷ்வேதகேதுவும், நாகர்களின் குலகுருவும் பசுபதிநாதருக்கு விசேஷமான வழிபாடுகள் செய்து அவரின் அருளாசிகள் நாகர்களுக்கும் , யாதவர்களுக்கும் கிடைக்கப் பிரார்த்தித்துக் கொண்டனர்.  இரட்டைச் சகோதரியர் இருவரும் கூட வழக்கமான தங்கள் அழுகையைவிட்டுவிட்டுப் புன்னகையுடன் இந்த வழிபாட்டில் கலந்து கொண்டனர்.   சாத்யகி தேர்ந்தெடுத்த நூறு நாக வீர இளைஞர்களுக்குக் கடைசிக் கட்டப் பயிற்சியைக் கொடுத்தான்.  ஒவ்வொரு இருபது யாதவர்களிடையேயும் நாகர்களில் ஐந்து பேரைக் கலந்து இருக்கும்படியாகப் படையை அமைத்தான்.  கண்ணனுடன் கருடர்கள் படையில் சிறந்த ஐந்து பொறுக்கி எடுத்த வீரர்கள் அவன் யாதவப் படையுடன் இருந்தனர்.  கருடர்கள் பார்க்கவே விசித்திரமாக இருந்தனர்.  அவர்கள் வாயருகே பக்ஷிகளின் அலகுகளைப் போல செயற்கை அலகுகள் பொருத்திக் கொண்டிருந்தனர்.  அவர்கள் கழுகுகளைப் போன்ற குரலில் கத்திக் கொண்டு தரையில் நடக்கின்றனரா, பறக்கின்றனரா என்பதே தெரியாமல் சென்றனர்.   ஆசாரியர்களால் குறித்துக் கொடுக்கப்பட்ட சுப நாளில் கிருஷ்ணன் நாகர்களின் நாட்டின் எல்லைக்கிராமத்துக்குப் பயணம் கிளம்பினான்.  சிகுரி நாகன் வழிகாட்டிக்கொண்டு முன்னே செல்ல அனைவரும் பின் தொடர்ந்தனர். 


கிருஷ்ணன் எப்போதும் போல் சிரித்துக் கொண்டும், நகைச்சுவை ததும்பப் பேசிக் கொண்டும் காணப்பட்டான்.  ஆர்யகனை நமஸ்கரித்து விடைபெற்ற கிருஷ்ணன், அவனிடம் ஏதோ நகைச்சுவையாகப் பேசி அவனைச்சிரிக்க வைத்ததோடு அல்லாமல், இரட்டைச் சகோதரிகளையும் கருணை பொங்கப் பார்த்துப் புன்னகைத்தான். மணிமானை முதுகில் தட்டிக் கொடுத்து ஆசுவாசம் செய்தான்.   யசோதா அம்மாவிடம் தான் வெண்ணெய் கேட்டால் கண்ணன் திருடித் தின்பதைச் சுட்டிக் காட்டி அவள் தர மறுப்பாள் என்றும், தான் விடாமல் யசோதா அம்மாவிடமே திருடித் தின்றதையும் சொல்லி ரவிகாவையும் சிரிக்க வைத்தான்.   கிருஷ்ணனின் தைரியமும், தன்னம்பிக்கையும் அனைவரையும் தொத்திக்கொள்ள ஒவ்வொருவரும் உத்தவன் இல்லாமல் தாங்கள் திரும்பப் போவதில்லை என்பதை உணர்ந்தனர்.   ஆர்யகன் தன் பல்லக்கில் அவர்களோடு அரைநாள் முடியும்வரை தொடர்ந்தான்.  பின்னர் அவன் உடல்நிலை இடம் கொடுக்கவில்லை.  கார்க்கோடகனோ அவர்கள் வரவை எதிர்பார்த்து நேரே லஹூரியா கிராமத்துக்கே முன்னால் சென்று காத்திருந்தான். அரண்மனைப்பெண்டிரும் அவனுடன் சென்றிருந்தனர்.

லஹூரியாவில் கண்ணன் அரண்மனைப் பெண்டிரிடமும் கார்க்கோடகனிடமும் விடைபெற்றுக் கொண்டான்.  அவர்கள் திரும்பி வரும்வரை கார்க்கோடகன் மட்டுமே அங்கே தங்கிக் காத்திருப்பதாக முடிவு செய்யப்பட்டது.  இரட்டைச் சகோதரியரோ கண்ணனுடன் தாங்களும் வருவதாகக் கெஞ்சினார்கள்.  கண்ணன் அவர்களைப் புன்னகையுடன் பார்த்தான்.  அவன் கண்களின் குறும்பு முகம் முழுதும் பரவித் தெரிந்தது.  “உத்தவன் அந்த ராக்ஷசர்களால் சாப்பிடப் பட்டான் என்பது தெரிந்த அந்த க்ஷணமே நான் இங்கே இருந்து உங்கள் இருவரையும் அழைத்துவரச் செய்து உங்களையும் ராக்ஷசர்களால் சாப்பிடச் செய்கிறேன்.  அதுவரையிலும் இருவரும் பொறுமையுடன் இருங்கள்!” என்றான் கண்ணன் கேலியும், குறும்பும் ததும்ப.  “எங்களை ஏன் உங்களோடு அழைத்துச் செல்லக் கூடாது வாசுதேவா?” என்று இருவரும் மீண்டும்கெஞ்சினர். “ அதெல்லாம் இப்போது நீங்கள் வர வேண்டாம்.  ஒருவேளை அந்த ராக்ஷசர்கள் உங்களைச் சாப்பிட்டுவிட்டு, உத்தவன் மட்டும் உயிரோடு தப்பி இருந்தான் எனில்?? அப்போது என்ன செய்ய முடியும் நீங்கள் இல்லாமல்? “ கண்ணன் சிரித்துக் கொண்டே கேட்கவும், இருவராலும் கூடச் சிரிப்பை அடக்க முடியவில்லை.  அப்போது பிங்கலா திடீரெனக் கண்ணனிடம், “ஒருவேளை உத்தவன் ராக்ஷசர்களால் சாப்பிடப் பட்டிருந்தால்? அப்போது நீங்கள் என்ன செய்வீர்கள் கிருஷ்ணா?”


“கவலையே படாதே!” கண்ணன் அவள் கன்னத்தைச் செல்லமாய்க் கிள்ளினான். பின்னர், “ஒருவேளை உத்தவன் ராக்ஷசர்களால் உணவாக்கப் பட்டிருந்தான் எனில், நான் அந்த ராக்ஷசர்களை விட மாட்டேன்.  எல்லோரையும் நானும் கொன்று தின்றுவிடுவேன்.  உங்களுக்கும் சில ராக்ஷசர்களை உணவாகத் தருகிறேன்.  “ சிரித்த கண்ணன் தொடர்ந்து,” ஆனால் உத்தவன் இறந்திருக்க மாட்டான்.  அவன் உயிருடன் தான் இருப்பான்.  அவனால் இப்போது இறக்க முடியாது.  நான் நிச்சயம் அவனுடன் தான் வருவேன்.” என்றான்.