Sunday, September 1, 2013

கண்ணன் ராக்ஷசவர்த்தம் கிளம்புகிறான்--தொடர்ச்சி!

அப்போது மணிமான் கிருஷ்ணனின் தைரியத்தையும், உத்தவனை எவ்வாறேனும் காக்க உறுதி கொண்டதையும் பார்த்து வெட்கம் அடைந்தவனாய்த் தன் பாட்டனைப் பார்த்து, “தாத்தா, கிருஷ்ணனுடன் நானும் அந்த ராக்ஷசவர்த்தம் செல்கிறேன்.” என அநுமதி கேட்டான்.  “கோழை, கோழை, வீரமில்லாதவனே, இப்போது போகவேண்டுமா உனக்கு? உத்தவன் தன்னந்தனியனாய்ச் செல்கையில் போகத் தோன்றவில்லையா உனக்கு?” கபிலா ஆத்திரத்துடன் கத்தினாள்.  ஆர்யகன் எதுவும் பேசவில்லை.  நாகர்கள் வீரர்களாக இருந்தாலும் யுத்த தந்திரங்களோ, போர்முறைகளோ அறியாதவர்கள்.  அவர்களின் வலுவான ஆயுதமாகக் கோடரி இருந்து வந்தது.  எதிரிகளைத் தாக்கவும்,எப்போதேனும் காட்டை அழித்துப் பயிர்கள் நட்டு விவசாயம் செய்யவும் பயன்பட்டு வந்தது.  களிமண்ணால் குடிசைகள் கட்டி, அங்கே பன்றிகள், ஆடுகள், செம்மறியாடுகள் ஆகியவற்றை வளர்த்து வந்தனர்.  அதுவும் பெரிய அளவில் எல்லாம் இல்லை.  யாதவர்களைப் போல் ஆடு, மாடுகளைப் பெரிய அளவில் கூட்டம், கூட்டமாக வளர்த்துப் பராமரிக்கும் திறமை நாகர்களிடம் இல்லை.  யாதவர்கள் மட்டுமில்லாமல் ஆரிய வர்த்தத்திலேயே  ஆரியர்களால் கால்நடைகள் சிறப்பாகப் பராமரிக்கப்பட்டன.  அதுவும் குதிரைகள், யானைகள் என்றும் பராமரித்தனர். நாகர்களிடமோ ஒரு சில கழுதைகள், கோவேறு கழுதைகள் மட்டுமே இருந்தன.  குதிரைகளை அவர்கள் ஆரியர்களிடமிருந்து வாங்கி இருந்தாலும் அவ்வழியே செல்லும் ஆரியர்களில் சிலர் கைச்செலவுக்குப் பணமில்லாமையாலேயே இவர்களிடம் விற்றனர்.  நாகர்களும் அந்தக் குதிரைகளை வாங்கிப் பயன்படுத்தத் தெரியாமல் கண்காட்சிப் பொருளாகவே வைத்திருந்தனர்.

கங்கை, யமுனைக்கரைகளில் வசித்தால் அவர்களின் பயணம், வேட்டை போன்றவற்றிற்கு நல்லது எனினும், நாளடைவில் ஆரியர்களின் குடியேற்றத்தால் நாகர்கள் இன்னும் உள்ளே காட்டின் உள்ளே செல்ல நேர்ந்தது.  ஆரியர்கள் அவர்களுடன் பழகித் திருமண பந்தங்களை ஏற்றாலும் நாகர்களால் அவர்களோடு மனம் விட்டுப் பழக முடியவில்லை.  ஆனால் இப்போது வந்திருக்கும் யாதவர்களோ தனித்துத் தெரிந்தார்கள்.  ஹஸ்தினாபுரத்திலும் மற்றும் கங்கை, யமுனைக்கரையிலும் வசித்த யாதவர்கள் போன்றில்லாமல் இவர்கள் நாகர்களோடு வெகு எளிதில் கலந்து பழகி அவர்களில் தாங்களும் ஒருவரே என எண்ண வைத்தனர்..  இது நாகர்களின் கண்களைத் திறந்தது எனலாம்.  காம்பில்யத்திலும், ஹஸ்தினாப்புரத்திலும் இருக்கும் சாமானிய ஆரியக் குடிகள் கூட கர்வம் கொண்டிருப்பார்கள்.  ஒருவரை ஒருவர் மதிக்க மாட்டார்கள்.  ஆனால் இவர்களோ தங்கள் தலைவனை மதித்தனர். நாகர்களின் கால்நடைகளை அபகரிக்கும் எண்ணம் சிறிதும் இல்லை.  எல்லாவற்றுக்கும் மேல் நாகர்களின் குலதெய்வம் ஆன பசுபதிநாதரை இவர்களும் வணங்கினர்.  அத்தோடு மட்டுமா?  கண்ணனோ, உத்தவனோ அவர்களுக்குப் புதியவர்கள் அல்ல.  அவர்கள் குல விளக்கான மரீஷாவின் பேரன்கள் இருவரும்.  அவர்கள் மிகவும் மதித்துக் கொண்டாடும் ஆர்யகனின் மகளான மரீஷாவின் பேரன்கள் அன்றோ இருவரும்!   நம்மிடையே அவர்கள் இருப்பதில் தான் நமக்கு எவ்வளவு கெளரவம், மரியாதை! இந்தப் பரந்த பரத கண்டத்தில் ஆரிய வீரர்கள் நம்மிடையே இருப்பதில் நாம் வலுவுள்ளவர்களாக ஆகிவிடுகிறோம்.

உத்தவனை ராக்ஷசவர்த்தத்தில் இருந்து மீட்டு வரக் கிருஷ்ணனே நேரில் செல்லப் போவது குறித்துக் கேள்விப் பட்டதில் இருந்து நாகர்கள் அனைவரின் மனதிலும் ஒரு போராட்டமே நிகழ்ந்தது.  ஒரு ராக்ஷசனைப் பார்ப்பது கூட அவர்களில் சிறந்த நாகவீரனுக்கு, அவ்வளவு ஏன் சிறந்த நாகத் தலைவனுக்கு நடுக்கத்தையும், பயத்தையும் ஏற்படுத்தும் விஷயம்.   இரவுகளில் வந்து பயங்கரமான சப்தங்களைச் செய்து கொண்டு அவர்களின் கால்நடைகளைத் திருடிக் கொண்டு அவற்றின் மாமிசத்தையும், நர மாமிசத்தையும் பச்சையாகவே தின்று கொண்டு, மிகுந்திருக்கும் ஒன்றிரண்டு கால்நடைகளையும் திருடிக் கொண்டு அவர்கள் ஜீவாதாரத்தையே பாழ்படுத்திக் கொண்டு வெறுப்பூட்டிக் கொண்டிருந்த ஒரு இனம் ராக்ஷச இனம்.  ஒரு ராக்ஷசன் வந்திருக்கிறான் எங்கோ ஒரு கிராமத்தில் எனக் கேள்விப் பட்டாலே போதும், அனைத்து நாகர்களும் அவர்களால் இயன்ற ஆயுதங்களை எடுத்துக் கொண்டு சூழ்ந்து கொண்டு விடுவார்கள்.   அந்த ராக்ஷசனிடம் இருந்து தப்பினால் போதும் என எண்ணுவார்கள்.  ஆனால் இப்போதோ முற்றிலும் புதியதொரு நம்பிக்கைச் சூரியன் உதயம் ஆகிவிட்டான்.  சிகுரி நாகன் அவர்களின் ஒப்பற்ற தலைவர்களில் ஒருவன் எப்படியோ ஒரு ராக்ஷசச் சிறுவனைப் பிடித்து வந்துவிட்டான்.  அவர்களின் உறவினன் ஆன உத்தவனோ அந்த ராக்ஷசர்களின் உலகுக்கே சென்று இருக்கிறான்.   அவனுடைய தைரியம் தான் மெச்சத்தக்கது எனில் இப்போது அவன் சகோதரன் ஆன கிருஷ்ணனோ எனில் இன்னும் தைரியசாலியாக உள்ளான்.


ஜராசந்தனை ஓட ஓட விரட்டினானாமே இந்தக் கிருஷ்ணன்.  மக்கள் அனைவரும் அதைக் கதையாகப் பேசுகின்றனர்;  பாடுகின்றனர்.  அதிசயங்கள் பல செய்யும் இந்த மாவீரனைப் பற்றி மக்கள் அனைவரும் பலப்பல பேசிக் கொள்கின்றனர். இவன் மனிதனே அல்ல;  சாக்ஷாத் அந்தப் பரம்பொருளே என்கின்றனர்.  இவன் உத்தவனை ராக்ஷசர்கள் பிடியிலிருந்து நிச்சயம் காப்பாற்றுவான்.  ஒவ்வொரு நாகனுக்கும் உடம்பு சிலிர்த்தது.  தைரியமும் வீரமும் அவர்களின் நாடி, நரம்புகளில் எல்லாம் புது ரத்தத்தைப் பாய்ச்சியது.  கண்ணனோடு சேர்ந்து செல்ல அனைவரும் தயாரானார்கள்.   புத்திசாலித்தனமாக இதில் கலந்து கொள்ளாமல் உள்ளூரப் பயந்து கொண்டு ஒதுங்கி இருந்த கார்க்கோடகன் கூடக் கண்ணனுடன் செல்லச் சம்மதித்துவிட்டான்.  யாதவத் தலைவர்களின் வீரத்தையும், தைரியத்தையும் பார்த்து மணிமான் எதிர்கால அரசன் ஆன தானும் அது போல் இருக்க வேண்டும் என்பதைப் புரிந்து கொண்டான்.  அவன் உள்ளத்தில் புத்தம்புதிய அபிலாஷைகள் உதயம் ஆகின. ஏற்கெனவே உத்தவனிடம் அவனுடைய வில்லையும், அம்பையும் வைத்துக் கற்றுப் பழகி இருந்த மணிமான் இப்போது இந்தப் புதிய சாகசத்தில் தன் வீரத்தைக் காட்ட ஆவல் கொண்டான்.


பசுபதிநாதர் கோயிலில் அனைவரும் கூடினர்.  ஆரியர்களோடு வந்திருந்த ஆசாரியன் ஷ்வேதகேதுவும், நாகர்களின் குலகுருவும் பசுபதிநாதருக்கு விசேஷமான வழிபாடுகள் செய்து அவரின் அருளாசிகள் நாகர்களுக்கும் , யாதவர்களுக்கும் கிடைக்கப் பிரார்த்தித்துக் கொண்டனர்.  இரட்டைச் சகோதரியர் இருவரும் கூட வழக்கமான தங்கள் அழுகையைவிட்டுவிட்டுப் புன்னகையுடன் இந்த வழிபாட்டில் கலந்து கொண்டனர்.   சாத்யகி தேர்ந்தெடுத்த நூறு நாக வீர இளைஞர்களுக்குக் கடைசிக் கட்டப் பயிற்சியைக் கொடுத்தான்.  ஒவ்வொரு இருபது யாதவர்களிடையேயும் நாகர்களில் ஐந்து பேரைக் கலந்து இருக்கும்படியாகப் படையை அமைத்தான்.  கண்ணனுடன் கருடர்கள் படையில் சிறந்த ஐந்து பொறுக்கி எடுத்த வீரர்கள் அவன் யாதவப் படையுடன் இருந்தனர்.  கருடர்கள் பார்க்கவே விசித்திரமாக இருந்தனர்.  அவர்கள் வாயருகே பக்ஷிகளின் அலகுகளைப் போல செயற்கை அலகுகள் பொருத்திக் கொண்டிருந்தனர்.  அவர்கள் கழுகுகளைப் போன்ற குரலில் கத்திக் கொண்டு தரையில் நடக்கின்றனரா, பறக்கின்றனரா என்பதே தெரியாமல் சென்றனர்.   ஆசாரியர்களால் குறித்துக் கொடுக்கப்பட்ட சுப நாளில் கிருஷ்ணன் நாகர்களின் நாட்டின் எல்லைக்கிராமத்துக்குப் பயணம் கிளம்பினான்.  சிகுரி நாகன் வழிகாட்டிக்கொண்டு முன்னே செல்ல அனைவரும் பின் தொடர்ந்தனர். 


கிருஷ்ணன் எப்போதும் போல் சிரித்துக் கொண்டும், நகைச்சுவை ததும்பப் பேசிக் கொண்டும் காணப்பட்டான்.  ஆர்யகனை நமஸ்கரித்து விடைபெற்ற கிருஷ்ணன், அவனிடம் ஏதோ நகைச்சுவையாகப் பேசி அவனைச்சிரிக்க வைத்ததோடு அல்லாமல், இரட்டைச் சகோதரிகளையும் கருணை பொங்கப் பார்த்துப் புன்னகைத்தான். மணிமானை முதுகில் தட்டிக் கொடுத்து ஆசுவாசம் செய்தான்.   யசோதா அம்மாவிடம் தான் வெண்ணெய் கேட்டால் கண்ணன் திருடித் தின்பதைச் சுட்டிக் காட்டி அவள் தர மறுப்பாள் என்றும், தான் விடாமல் யசோதா அம்மாவிடமே திருடித் தின்றதையும் சொல்லி ரவிகாவையும் சிரிக்க வைத்தான்.   கிருஷ்ணனின் தைரியமும், தன்னம்பிக்கையும் அனைவரையும் தொத்திக்கொள்ள ஒவ்வொருவரும் உத்தவன் இல்லாமல் தாங்கள் திரும்பப் போவதில்லை என்பதை உணர்ந்தனர்.   ஆர்யகன் தன் பல்லக்கில் அவர்களோடு அரைநாள் முடியும்வரை தொடர்ந்தான்.  பின்னர் அவன் உடல்நிலை இடம் கொடுக்கவில்லை.  கார்க்கோடகனோ அவர்கள் வரவை எதிர்பார்த்து நேரே லஹூரியா கிராமத்துக்கே முன்னால் சென்று காத்திருந்தான். அரண்மனைப்பெண்டிரும் அவனுடன் சென்றிருந்தனர்.

லஹூரியாவில் கண்ணன் அரண்மனைப் பெண்டிரிடமும் கார்க்கோடகனிடமும் விடைபெற்றுக் கொண்டான்.  அவர்கள் திரும்பி வரும்வரை கார்க்கோடகன் மட்டுமே அங்கே தங்கிக் காத்திருப்பதாக முடிவு செய்யப்பட்டது.  இரட்டைச் சகோதரியரோ கண்ணனுடன் தாங்களும் வருவதாகக் கெஞ்சினார்கள்.  கண்ணன் அவர்களைப் புன்னகையுடன் பார்த்தான்.  அவன் கண்களின் குறும்பு முகம் முழுதும் பரவித் தெரிந்தது.  “உத்தவன் அந்த ராக்ஷசர்களால் சாப்பிடப் பட்டான் என்பது தெரிந்த அந்த க்ஷணமே நான் இங்கே இருந்து உங்கள் இருவரையும் அழைத்துவரச் செய்து உங்களையும் ராக்ஷசர்களால் சாப்பிடச் செய்கிறேன்.  அதுவரையிலும் இருவரும் பொறுமையுடன் இருங்கள்!” என்றான் கண்ணன் கேலியும், குறும்பும் ததும்ப.  “எங்களை ஏன் உங்களோடு அழைத்துச் செல்லக் கூடாது வாசுதேவா?” என்று இருவரும் மீண்டும்கெஞ்சினர். “ அதெல்லாம் இப்போது நீங்கள் வர வேண்டாம்.  ஒருவேளை அந்த ராக்ஷசர்கள் உங்களைச் சாப்பிட்டுவிட்டு, உத்தவன் மட்டும் உயிரோடு தப்பி இருந்தான் எனில்?? அப்போது என்ன செய்ய முடியும் நீங்கள் இல்லாமல்? “ கண்ணன் சிரித்துக் கொண்டே கேட்கவும், இருவராலும் கூடச் சிரிப்பை அடக்க முடியவில்லை.  அப்போது பிங்கலா திடீரெனக் கண்ணனிடம், “ஒருவேளை உத்தவன் ராக்ஷசர்களால் சாப்பிடப் பட்டிருந்தால்? அப்போது நீங்கள் என்ன செய்வீர்கள் கிருஷ்ணா?”


“கவலையே படாதே!” கண்ணன் அவள் கன்னத்தைச் செல்லமாய்க் கிள்ளினான். பின்னர், “ஒருவேளை உத்தவன் ராக்ஷசர்களால் உணவாக்கப் பட்டிருந்தான் எனில், நான் அந்த ராக்ஷசர்களை விட மாட்டேன்.  எல்லோரையும் நானும் கொன்று தின்றுவிடுவேன்.  உங்களுக்கும் சில ராக்ஷசர்களை உணவாகத் தருகிறேன்.  “ சிரித்த கண்ணன் தொடர்ந்து,” ஆனால் உத்தவன் இறந்திருக்க மாட்டான்.  அவன் உயிருடன் தான் இருப்பான்.  அவனால் இப்போது இறக்க முடியாது.  நான் நிச்சயம் அவனுடன் தான் வருவேன்.” என்றான்.3 comments:

இராஜராஜேஸ்வரி said...

ஜராசந்தனை ஓட ஓட விரட்டினானாமே இந்தக் கிருஷ்ணன். மக்கள் அனைவரும் அதைக் கதையாகப் பேசுகின்றனர்; பாடுகின்றனர். அதிசயங்கள் பல செய்யும் இந்த மாவீரனைப் பற்றி மக்கள் அனைவரும் பலப்பல பேசிக் கொள்கின்றனர். இவன் மனிதனே அல்ல; சாக்ஷாத் அந்தப் பரம்பொருளே என்கின்றனர்.

சுவாரஸ்யமான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!

வை.கோபாலகிருஷ்ணன் said...

சுவாரஸ்யமாகச்செல்கிறது.

பாராட்டுக்கள்.

ஸ்ரீராம். said...

"நிச்சயம் உத்தவனோடுதான் வருவேன்..."

கண்ணனுக்குத் தெரியாததா... சகோதரிகளின் ஆர்வமறியாதிருக்கிறானே உத்தவனங்கு! :))