Thursday, September 5, 2013

கண்ணனிடமா அவநம்பிக்கை????

நாகர்களின்  பிரதேசத்தில், யமுனையின் வடகரையில் உள்ள பகுதிக்குள்ளே எதிரிகள் ஊடுருவி இருப்பதனால், ராக்ஷசவர்த்தத்தில் இருந்து வெற்றியுடனும், உத்தவனுடனும் திரும்பும் வீரர்களின் கொண்டாட்டங்களில் எந்தவிதமான தாக்கமும் ஏற்படுத்தவில்லை.  அவர்கள் மிகவும் குதூகலமாக வெற்றிச் சங்கங்களை முழங்கிக் கொண்டும், பேரிகைகளையும், எக்காளங்களையும் ஊதிக் கொண்டும் ஆடிப்பாடிக் கொண்டும் வந்தனர்.  ஓய்வுக்காகவும், தூங்கவும், உணவுக்காகவும் எங்கெல்லாம் தங்கினார்களோ, அந்தப் பிரதேசத்து கிராம மக்கள் அனைவரும், அவர்களை மிகுந்த உற்சாகத்துடன் வரவேற்றதோடு அல்லாமல், தக்க செளகரியங்களையும் செய்து கொடுத்தனர்.   வீரர்களை உற்சாகப்படுத்த ஆட்டம், பாட்டங்களால் மகிழ்வித்தனர்.  ராக்ஷசச் சக்கரவர்த்தி வ்ருகோதரனால், ஆர்யகனுக்கு அனுப்பப் பட்டிருக்கும் பரிசுகளை அறிந்து கொள்ளவும், அவற்றைப் பார்க்கவும் ஆவல் கொண்டனர்.  இனி எந்த ராக்ஷசக் குடிமகனும் தங்கள் எதிரி அல்ல என்னும் நற்செய்தி அவர்களை மகிழ்வித்ததோடு அல்லாமல், அவர்கள் மனதில் பெரும் நிம்மதியையும் தோற்றுவித்தது.

உத்தவன் என்னவோ மகிழ்ச்சியுடன் இல்லை.  தன்னுடைய வீர, தீர, சாகசங்களைக் குறித்தும், ராக்ஷசவர்த்தத்தில் நடந்தவைகள் குறித்தும் உத்தவன் ரவிகாவிடமும், கார்க்கோடகனிடமும் கூறுகையில் இரட்டைச் சகோதரிகளையும் அவர்களோடு கண்டான்.  ஆனால் அவர்கள் அவனைப் பார்த்த விதமே புதுமையாக இருந்தது.  உத்தவன் மனம் மிக வலித்தது.   உத்தவனுக்கு அவர்கள் அளித்து வந்த முக்கியத்துவம் திடீரெனக் குறைந்தாற்போலவும், உத்தவனை அவர்கள் தவிர்க்கப் பார்ப்பதாகவும் தோன்றியது அவனுக்கு. இது உத்தவன் சற்றும் எதிர்பாரா ஒன்று.  ஏதோ தவறு நடந்திருக்கிறது என உத்தவனுக்குப் புரிந்தது.   காரணம் ஏதுமில்லாமல் இப்படி வெளிப்படையாக அவர்கள் இருவரும் உத்தவனை ஒதுக்கித் தள்ள மாட்டார்கள்.  நிச்சயம் ஏதோ இருக்கிறது.  என்ன அது?  மணிமான் இப்போது தைரியமும், பராக்கிரமமும் மிகுந்தவனாகத் தன்னைக் காட்டிக் கொண்டான். தனக்குள்ள உரிமையை நிலைநாட்டியதன் மூலம், தன்னுடைய இழந்த நம்பிக்கையையும் திரும்பப் பெற்றிருந்தான். அவனிடம் உத்தவன் கேட்டான்:” மணிமான், சகோதரா, பிங்கலாவுக்கும், கபிலாவுக்கும் என்ன ஆயிற்று?என்னிடம் இன்னமும் கோபமாகத் தான் இருக்கிறார்களா?  ஏன் என்னைத் தவிர்க்கின்றனர்?” என்று கேட்டான்.  உத்தவன் என்னவோ ரகசியமாகவே கேட்டான்.  ஆனால் கார்க்கோடகனோடு பேசிக் கொண்டிருந்த கிருஷ்ணன் காதுகளில் அவை விழ உடனே கிருஷ்ணன் உத்தவனைத் திரும்பிப் பார்த்தான்.

“உத்தவா, அவர்கள் இருவரும் உன்னை மீட்டு வரவேண்டும் என எல்லோரிடமும் எவ்வளவு கெஞ்சினார்கள் என்பதை நீ அறிவாயா? அதுவும் உயிரோடு கொண்டு வந்துவிட வேண்டும் என்று துடியாகத் துடித்தார்கள்.  உன்னை வரவேற்க வேண்டியே இந்தக் கடினமான பாதையில் எங்களோடு பயணம் செய்து வந்திருக்கிறார்கள்.  அது சரி அப்பா, அவர்கள் கோபத்தின் காரணத்தை நீ அறியவில்லையா?” என்றான் கண்ணன். “என்னிடம் கோபம் கொண்டிருக்கிறார்களா?  நான் என்ன செய்தேன் அவர்களை?” உத்தவனின் மனவேதனை அவன் குரலில் தெரிந்தது.   கிருஷ்ணன் முகம் முழுவதும் குறும்புப் புன்னகையில் விரிந்து மலர்ந்தது.  “நீ!  நீ மட்டுமே அவர்கள் கோபத்திற்குக் காரணம்.  நீ ஒன்றுமே செய்யவில்லை என்பதோடு அவர்கள் மனம் புண்படும்படியாகவும் நடந்திருக்கிறாய்!” என்றான் கண்ணன்.  “அப்படி என்னதான் செய்துவிட்டேன் நான்?” உத்தவனுக்குப் புரியவில்லை.  “நீ தான் உத்தவா!  நீ அவர்கள் கணவன்.  குறைந்த பட்சமாக அவர்கள் இருவர் வரையுமாவது நீ அவர்களின் கணவன் தான்.  அப்படித் தான் அவர்கள் இருவரும் நினைக்கின்றனர்.  ஆனால் நீ என்ன செய்தாய்?  வந்ததுமே எல்லோரிடமும் பேசுகிறாய்.  அவர்களைக் கவனிக்கவே இல்லை.  நீ அவர்களை அழைக்கவில்லை.  தனிமையில் பேசவில்லை.  உன்னுடைய எல்லா சாகசங்களையும் அவர்கள் உன்னிடமிருந்து தனிமையில் கேட்க விரும்புகின்றனர்.  இப்படி எல்லார் முன்னிலையிலும் அல்ல.  அவர்கள் இருவருக்கும் மட்டும் கேட்கும்படியாக நீ அவர்களோடு தனிமையாகப் பேசி எல்லாவற்றையும் சொல்ல வேண்டும்.  ஆனால் நீ??? என்ன செய்கிறாய்?  உத்தவா, உத்தவா, ஒரு நல்ல கணவனாக எப்போது மாறப்போகிறாய்?  எப்போது நல்ல கணவனாக நடப்பாய்?” கண்ணனின் குறும்பு நிற்கவே இல்லை.  உத்தவனோ அவனை ஆச்சரியமாகப் பார்க்க, கண்ணன் மீண்டும் கலகலவென நகைத்தான்.

“என்ன, நானா?  இவர்கள் கணவனா?  வாசுதேவா, இது என்ன விளையாட்டு?  நீ கூடவா?  நீ கூடவா நான் இவர்களை மணக்கவேண்டும் என்கிறாய்?” உத்தவனுக்கு என்ன சொல்வது எனத் தெரியவில்லை.  தான் மிகவும் நம்பிய கண்ணன் கூட இப்படிச் சொல்கிறானே?  கண்ணனோ, “ உத்தவா,  இந்த இரு பெண்களும் ஏற்கெனவே உன்னை மானசீகமாக மணந்து விட்டனர்.  தங்கள் பக்தியை, அர்ப்பணிப்பை எல்லாம் உனக்குக் காட்டி உன்னை வென்றும் விட்டனர்.  உத்தவா, பெண்கள் ஒரு ஆணைக் கணவனாக வரிக்கவும், அவனைத் தங்கள் பக்கம் இழுக்கவும் நினைத்துவிட்டால், அவர்களிடமிருந்து எவரும் தப்ப இயலாது.  உன்னிடத்தில் நான் மட்டும் இருந்தேன் எனில் அவர்கள் விருப்பத்துக்குத் தலை வணங்கி இருப்பேன்.”  சொன்ன கிருஷ்ணன், மணிமானிடம் திரும்பி, “மணிமான், யாரும் இல்லாத நேரமாகப் பார்த்து உத்தவனை உன் சகோதரிகள் இருவரிடமும் அழைத்துச் செல்.  உத்தவனை அங்கே விட்டு விட்டு நீ திரும்பி விடு.  நீயும் உடன் தங்கிவிடாதே.  உத்தவனைப் பார்த்தும், அவனிடம் அடைக்கலம் புகுந்தும் இருவரும் தங்கள் மனம் கொண்ட மட்டும் அழுது தீர்க்கட்டும்.  அப்போது தான் அவர்கள் மனம் ஆறும்.  உத்தவனைச் சமைத்துச் சாப்பிட வேண்டி ராக்ஷசர்கள் செய்த முயற்சியையும், அதிலிருந்து தான் எப்படித் தப்பினேன் என்பதையும், அந்தக் கடைசி நிமிடங்களில் இரு சகோதரிகளையும் நினைத்ததையும் உத்தவனே அவர்களிடம் நேரில் சொல்லட்டும்.  அதைக் கேட்டு அவர்கள் மனம் ஆறுதல் அடையும்.”

“கண்ணா, நீ எவ்வாறு அறிவாய்?  நான் அந்தக் கடைசி நிமிடங்களில் அவர்களையும் நினைத்தேன் என்பதை? “

“ஆஹா, நீ நினைத்தாய்!  இல்லையா?  நினைத்தாயா இல்லையா? எனக்கு எப்படித் தெரிந்தது என்பதை நான் சொல்வேனா?  அது என்னுடைய ரகசியம்! “ கண்ணன் சிரித்துக் கொண்டே அங்கிருந்து சென்றான்.

நாககூடத்தை அவர்கள் அடைந்த சமயம் ஆர்யகனும், மற்ற நாக குலத்தலைவர்களும் முன் வந்து வரவேற்று அழைத்துச் சென்றனர்.  வரவேற்பு வைபவம் ஒரு திருவிழாப் போல் பிரமாதமான ஏற்பாடுகளுடன் நடந்தது.  ஆனாலும் அதிலும் ஒரு அவசரம், ஒரு பதட்டம், இருப்பதைக் கூர்ந்து பார்ப்பவர்கள் மட்டுமே அறிந்தனர்.  அனைவர் மனதிலும் திடீரென ஏற்பட்ட இந்த ஊடுருவல் குறித்த கவலையும், அச்சமும் இருந்தது.  அன்றே ராக்ஷசர்களை வென்று நண்பர்களாக ஆக்கிக் கொண்டதைப் பாராட்டும் வகையில் மிக விமரிசையான அரச போஜனம் நடைபெற்றது.  அனைவரும் அவரவர் வசதிக்கேற்ப உண்டு, அவரவர் மனதுக்குப் பிடித்த ஜோடியுடன் நடனம் ஆடி இரவைக் கழித்தனர்.  மறுநாள் பொழுது விடிந்தது.  தூதுவர்கள் செய்தியைக் கொண்டு வந்தனர்.  செகிதனா, என்னும் யாதவ அரசன் புஷ்கர நாட்டின் தலைவன்.  அவனை குருவம்சத்தின் அப்போதைய யுவராஜாவான துரியோதனன் திடீரெனத் தாக்கிவிட்டான்.  ஆனால் செகிதனாவோ, துரியோதனனிடம் சரணாகதி அடைய மறுத்து யமுனையைக் கடந்து இந்தப் பக்கம் வந்துவிட்டான்.  வந்தவன் தனக்கு ஏற்பட்ட அவமானத்தையும், தோல்வியையும் பொறுக்க இயலாமல் நாகர்களைத் தாக்க முற்பட்டான்.  யமுனைக்கரையில் நாகர்களின் பிரதேசத்தின் எல்லைக்கிராமங்களில் இருந்த நாககுலக் குடிமக்களை அவரவர் குடியிருப்புகளிலிருந்து விரட்டி விட்டு அவற்றை அவனும் அவன் பரிவாரங்களும் ஆக்கிரமித்துக் கொண்டனர்.  அப்போது அவர்களுக்குள்ளாக நடந்த சிறிய போரில் பல நாகர்கள் கொல்லப்பட்டனர்.  யாதவர்களின் அந்த பலத்தையும், ஆக்கிரமிப்பையும் எதிர்கொள்ள முடியாத நாகர்கள் அனைவரும் எல்லைக்கிராமங்களில் இருந்து தப்பி நாட்டின் உள்ளே வந்து கொண்டிருந்தனர்.

அவ்வளவு வருடங்களாக அங்கே நிலவி வந்த அமைதியைக் குலைக்கும் இந்தச் செய்தியைக் கேட்ட அனைவருக்கும் வருத்தமாக இருந்தது.  ஆரியர்கள் இது வரையிலும் யமுனையைத் தங்கள் எல்லையாகக் கொண்டிருந்தனர்.  யமுனையைக் கடந்து இந்தப்பக்கம் அவர்கள் இதுவரை வந்ததே இல்லை.  அவரவருக்கு உள்ள எல்லைக்கட்டுப்பாடுகளை மதித்து நடந்தனர்.  அதே போல் நாகர்களும் யமுனையைக் கடந்து அந்தப் பக்கம் சென்றதில்லை.  ஆனால் இப்போதோ பெருமளவு யாதவர்கள் யமுனையைக் கடந்து இந்தப்பக்கம் வந்து குடியேறுகின்றனர்.   இந்தச் செய்தி குடிமக்களிடையே பரவ ஆரம்பித்ததும் அனைவரும் அதிர்ச்சியும், குழப்பமும் அடைந்தனர்.  மனம் வருந்திய ஆர்யகன், இதனால் மிகவும் தர்மசங்கடமான நிலையில் இருந்தான்.  நாகர்களின் முக்கியத் தலைவர்களோடு ஒரு சந்திப்புக்கும், கலந்தாலோசனைக்கும் ஏற்பாடு செய்தான்.  அதற்கு கிருஷ்ணன், உத்தவன், ஷ்வேதகேது, சாத்யகி ஆகியோரையும் அழைத்திருந்தான். யாதவத் தலைவர்கள் அனைவரும் மன அமைதியின்றிக் குழப்பத்தில் ஆழ்ந்திருந்தனர்.  யமுனைக்கரையில் இருந்து வராமல் இன்னமும் தங்கி இருக்கும் தங்கள் நாக குல மக்களைக் காப்பாற்ற வேண்டி ஒரு சிறு படைப்பிரிவை அனுப்பியாக வேண்டும் என்பது அவர்களின் ஒட்டுமொத்தக் கருத்தாக இருந்தது.

ஆர்யகன் கிருஷ்ணனை யோசனை கேட்டான்.  கிருஷ்ணன் சொன்னான்:” பாட்டனாரே, துரியோதனனின் இந்த நடத்தைக்குப் பின்னர் ஏதோ ஒரு முக்கியமான, அதே சமயம் வஞ்சகமான காரணம் இருக்க வேண்டும்.  செகிதனா யாதவர்களில் ஒரு முக்கியத் தலைவன்.  அவன் செளராஷ்டிரத்திலிருந்து ஹஸ்தினாபுரம் வரும் ராஜபாட்டையின் முக்கியக் காவலனும் ஆவான்.  துரியோதனன் ஒருவேளை இதற்குள்ளாகப் புஷ்கரத்தைக் கைப்பற்றி இருக்கலாம்.  நம்மை  வடக்கே செல்ல விடாமல் தடுக்க அவன் இந்த நடவடிக்கையை எடுத்திருக்கக் கூடும்.   செகிதனாவால் அவனை எதிர்க்க முடியாமல், வேறு வழியில்லாமலேயே உங்கள் நாக நாட்டில் அடைக்கலம் தேடி வந்திருக்கலாம். அதற்காகவே யமுனையைக் கடந்து வந்திருப்பான்.” என்றான்.  ஆனால் ஆர்யகனுக்குப் பொறுமை இல்லை.  கிருஷ்ணன் சொல்வதையும் , இந்த நிகழ்ச்சியை எப்படி நடந்திருக்கலாம் எனக் கிருஷ்ணன் ஆராயும் கோணமும் ஆர்யகனுக்குச் சம்மதமாக இல்லை.  அவன் கொஞ்சம் பொறுமையை இழந்தே, “அவன் ஒன்றும் அடைக்கலம் தேடி வந்தவனாகத் தெரியவில்லை!” என்று கோபத்துடனேயே சொன்னான்.  “அப்படி அடைக்கலம் தேடி வந்திருந்தால் ஏன் நாகர்களைக் கொல்ல வேண்டும்?  குடியிருப்புகளிலிருந்து அவர்களை விரட்ட வேண்டும்?”

“அது தவறே பாட்டனாரே!” என்ற கிருஷ்ணன், “செகிதனா இதன் மூலம் தவறு தான் செய்திருக்கிறான்.  ஆனால் ஒரு முறை போர் என்று ஆரம்பித்துவிட்டோமானால் மக்களுக்கு எதுவும் புரிவதில்லை.  எது சரி, எது தவறு என்பதை நிர்ணயம் செய்து போர் செய்யவேண்டும் என்பது அவர்களுக்குப் புரிவதில்லை.  நீங்கள் அநுமதித்தால் நான் ஒரு ஆலோசனை சொல்வேன்.” என்றான் கிருஷ்ணன்.  “குழந்தாய், சொல், சீக்கிரம், உன் ஆலோசனைக்குக் காத்திருக்கிறோம்.” என்றான் ஆர்யகன்.  “மாட்சிமை பொருந்திய பாட்டனாரே, என்னுடைய யூகம் மட்டும் சரியாக இருந்ததெனில், வரும் மழைக்காலத்தில் நாம் செகிதனாவை ஒரு விருந்தினனாக வரவேற்று அவனுக்கு உரிய மரியாதைகளைச் செய்து அவனை நன்கு உபசரிக்க வேண்டும்.”

“அதெல்லாம் சரிதான் அப்பனே!  அத்தனையையும் பெற்றுக்கொண்ட பின்னரும் அவன் மக்களிடம் போர் புரிந்தால்?? அவர்களைக் குடியிருப்புகளிலிருந்து விரட்டினால்?  நம்முடைய விருந்துபசாரத்தையே அவன் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு நம்மை அழித்து விட்டான் எனில்?” கார்க்கோடகன் கேட்டான்.  “வாசுதேவா, ஆரியர்களோடு எங்களுக்கு நிறையவே அனுபவம் இருக்கிறது.  அவர்கள் இரக்கமற்றவர்கள்.  அதிலும் போரென்று வந்துவிட்டால் மிகவும் கொடூரமானவர்கள்.  அதே சமயம் போரில்லாத அமைதியான காலங்களில்   வஞ்சகமாக ஏமாற்றுபவர்கள்.” என்றான்.  தன் வழக்கமான கவர்ச்சிச் சிரிப்பை உதிர்த்த கண்ணன், “நீங்கள் சொல்வது சரியே மாமா அவர்களே!  போர்களில் நாங்கள் வெற்றி பெற்றிருந்தாலும் எங்களுடைய நற்பெயர் சிதைந்தே போகிறது.  அதிலும் பலவீனமான மக்களிடம் போரிடுகையில் இரக்கமற்றவர்கள் என்ற பெயரே கிடைக்கிறது. ஆனால்,,மழைக்காலம் முடிந்து போகும்போது செகிதனா இந்தப் பிரதேசத்தை விட்டுச் சென்றுவிடுவான் என்று நான் வாக்குறுதி கொடுக்கிறேன்.   அப்போது கூட நீங்கள் எல்லாருமே அவனை இங்கிருந்து விரட்டி அடிக்கத்தான் வேண்டும் என்றா விரும்புகிறீர்கள்?” என்றான் கிருஷ்ணன்.

கிருஷ்ணனின் வார்த்தைகளைத் தான் துளிக்கூட நம்பவில்லை என்பதைக் கார்க்கோடகன் தன் முகத்திலேயே காட்டினான்.  என்றாலும் தன் தந்தையாரின் விருப்பம் என்ன என்பதையும் அவன் அறிய விரும்பினான்.  ஆர்யகனைப் பார்த்தான்.  கிருஷ்ணனோ தொடர்ந்து, “மாமா அவர்களே, என்னை நீங்கள் நம்பவே வேண்டாம்.  உங்களுக்கு உத்தவனை நன்கு தெரியும்.  என்னை விட அதிகம் தெரியும்.  அவன் விரைவில் உங்கள் இரட்டைப் பெண்களையும் மணப்பான்.  என்னால் செகிதனாவை இங்கிருந்து செல்லும்படி வைக்கமுடியாத பட்சத்தில் உத்தவன் இங்கே உங்களுள் ஒருவனாக இருந்து கொண்டு அவனை விரட்டி அடிக்கும் பணியை மேற்கொள்ளுவான்.  இப்போது உங்களுக்கு எல்லாம் என்னிடம் கொஞ்சமானும் நம்பிக்கை, விசுவாசம் வந்திருக்கிறதா?” கண்ணன் கேட்டான்.  ஆர்யகன் எதுவுமே சொல்லாமல் தன் மகனைப் பார்க்கக் கார்க்கோடகனோ, மற்ற நாகர்குலத் தலைவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தான்.  அவர்களில் எவருமே கண்ணனை நம்பவே இல்லை என்பது அவர்களின் முகத்திலிருந்து நன்கு தெரிந்தது.4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

பழைய பகிர்வுகளையும் படிக்க வேண்டும்... இனி தொடர்கிறேன்...

வல்லிசிம்ஹன் said...

இது என்ன கண்ணனுக்கே சோதனையா. எவ்வளவு அரசியல் நடந்திருக்கிறது கீதா.

ஸ்ரீராம். said...

கண்ணன் மேல் ஏன் அவர்களுக்கு நம்பிக்கை வரவில்லை? செகினா என்ற பெயர் கேள்விப்பட்டதில்லை. மிச்ச பேர் எல்லாம் கரை கண்டு விட்டாயா என்று கேட்கக் கூடாது! :)))

உத்தவன் சகோதரிகளைத் தனிமையில் காணும் படலத்துக்கு வெய்ட்டிங்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

அருமை.

கண்ணனை நம்பினோர் கைவிடப்படார்.

கண்ணனின் சூழ்ச்சிகளை யாரால் அறிய முடியும்?

பாராட்டுக்கள். தொடருங்கோ.