Sunday, May 31, 2015

யுதிஷ்டிரனுக்குக் குழப்பம்!

யாகத்துக்கு வேண்டிய அக்னியையும், இரவு உணவு தயாரிக்கவேண்டிய நெருப்பையும் மூட்டி அவரவர் வேலைகளைக் கவனிக்குமாறு தன் சீடர்களை வியாசர் அனுப்பி வைத்தார். அவர்களுக்கு உதவி செய்ய தன் மல்லர்களை பலியா அனுப்பி வைத்திருந்தான். இதற்கான அரசாணையும் பெறப் பட்டிருந்தது.  இதன் பின்னர் வியாசர் தன் தாய் சத்தியவதியை அவள் அரண்மனையில் சென்று சந்திக்கவேண்டி கிளம்பிச் சென்றார். நொண்டி, குருடு, செவிடு, ஊமை, உடலளவிலும், மனதளவிலும் காயமடைந்தோர் என ஒரு பெரிய மக்கள் கூட்டம் வியாசரின் அன்பையும், ஆசிகளையும் வேண்டிக் காத்துக் கொண்டிருந்தது. அவர் தங்களைத் தொட்டாலே போதும், எல்லாவித நற்பலன்களும் கிடைக்கப்பெறுவோம் என உறுதியாக நம்பினார்கள் அந்த மக்கள். அக்னியை வணங்கி அன்றைய தினத்துக்கான தானங்களை அக்னிக்குக் கொடுத்து முடித்த பின்னர் தன் வழக்கப்படி துன்புறும் மக்களைத் தரிசித்து ஆறுதல் கூறுவது வியாசரின் அன்றாட வழக்கம். அது போல் அன்றும் செய்தார். அங்கு கூடி இருந்த மக்கள் அனைவருக்கும் ஒரு மண் குடுவையில் மூலிகைகள் கலந்த பால் விநியோகிக்கப்பட்டது. அனைவரின் மண் குடுவையையும் தொட்டு ஆசீர்வதித்தார் வியாசர்.

உடலளவில் காயம் பட்டவர்களின் காயங்கள் நன்கு மூலிகை கலந்த வெதுவெதுப்பான சுடுநீரால் கழுவப்பட்டு மூலிகைகளால் பத்துப் போடப்பட்டுக் கட்டி விடப்பட்டது. இவற்றை வியாசரின் சீடர்கள் பொறுப்பேற்றுக் கொண்டு செய்தார்கள். பாலைத் தவிர மக்களுக்குப் பிரசாதமாக அப்பங்களும், கஞ்சியும் விநியோகிக்கப்பட்டது. வியாசரே நேரில் இருந்து இவற்றைக் கவனித்தார். பின்னர் வேத மந்திரங்களால் அனைவரையும் ஆசீர்வதித்தும், அனைவரின் உடல்நலன், மனோபலம் பெருகவும் வியாசர் பிரார்த்திக்க அந்தப் பிரார்த்தனையில் அவரின் சீடர்களும் கலந்து கொண்டனர். அனைவருக்கும் உணவு பரிமாறப்பட்டிருக்கிறதா என்று கவனித்த பின்னரே வியாசரும் அவரின் சீடர்களும் உணவு உண்ண அமர்ந்தனர். பின்னர் வந்திருந்தவர்களில் பெரும்பாலோர் வியாசரின் அருகே வந்து நமஸ்கரித்து ஆசிகளைப் பெற்றுச் சென்றனர்.

அதன் பின்னர் அங்கிருந்த ஒரு பெரிய ஆலமரத்தின் அடியில் வியாசர் ஓய்வு எடுத்துக் கொண்டார். கூட்டம் மெல்ல மெல்லக் கரைந்தது. அனைவரும் மனதில் நம்பிக்கையுடனும் திருப்தியுடனும் சென்றனர். மறுநாள் வியாசர் எழுந்ததும் தன் காலடியில் அமர்ந்திருந்த யுதிஷ்டிரனையும் அவன் தம்பிகள் நால்வரையும் கண்டார். யுதிஷ்டிரனும், மற்றப் பாண்டவர்கள் நால்வரும் வியாசரை நமஸ்கரிக்க, அவர்களை ஆசீர்வதித்த அவர், “யுதிஷ்டிரா, பட்டாபிஷேஹ வைபவத்துக்குத் தயாராகி விட்டாயா?” என்று வினவினார். “என்னால் என்ன செய்ய முடியும்? குருதேவா! நீங்கள் வந்திருக்கிறீர்கள்! என் தாத்தாவும் சித்தப்பாவும் வேண்டிய ஏற்பாடுகளைக் கவனிக்கின்றனர். உங்களை விட நான் என்ன பெரிய ஏற்பாடுகளைச் செய்து விடப் போகிறேன்!” என்றான் யுதிஷ்டிரன்.

“இதைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய் யுதிஷ்டிரா! உன் கருத்து என்ன?” என்றார் வியாசர். “குருதேவரே! நான் அரசன் ஆனதும் என்ன என்ன பிரச்னைகளை எதிர்கொள்ளப் போகிறேன், என் முன்னால் எவை எல்லாம் காத்திருக்கின்றன என்னும் புதிருக்கு விடை காண முடியாமல் தவிக்கிறேன்.” என்றான் யுதிஷ்டிரன். தன்னையே பார்த்த வியாசரிடம் அப்போது ஹஸ்தினாபுரத்தில் உள்ள நிலைமையை உள்ளபடியே விவரித்தான் யுதிஷ்டிரன். துரியோதனன் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டியது, அவன் சகோதரர்கள் அனைவரும் காந்தாரம் செல்ல முடிவெடுத்தது, கர்ணனும், அஸ்வத்தாமாவும் கூட ஹஸ்தினாபுரத்தை விட்டு விலகிச் செல்ல நினைத்தது, துரோணாசாரியாரும் என்ன செய்வது எனப் புரியாமல், தன் மகனுடன் அஹிசத்ரா செல்வதா அல்லது ஹஸ்தினாபுரத்தில் தங்குவதா எனப் புரியாமல் குழம்புவது என அனைத்தையும் விபரமாக யுதிஷ்டிரன் வியாசரிடம் எடுத்துச் சொன்னான். பாண்டவர்களை துரோணாசாரியார் தன் மக்கள் போல் அன்பும், பாசமும் கொண்டு நேசித்தாலும் தன் மகன் இல்லாத ஹஸ்தினாபுரத்தில் தானும் இருக்கவேண்டுமா என்றே யோசிக்கிறார் என்றும் சொன்னான்.  தாத்தா பீஷ்மர் எடுத்திருக்கும் நடவடிக்கைகளையும் சொன்ன யுதிஷ்டிரன் திருதராஷ்டிரன் மற்றும் காந்தாரியின் வருத்தத்தையும் எடுத்துச் சொன்னான்.

பீமன் தன் பங்குக்குத் தான் எது வந்தாலும் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகக் கூறினான். அர்ஜுனன் குரு வம்சத்து அரசப் படை வீரர்கள், தளபதிகள் அனைவரும் பாண்டவர் பக்கமே இருப்பதாகவும், பிரச்னை ஏதேனும் எழுந்தால் பாண்டவருக்கே தாங்கள் ஆதரவு தருவோம் என்றும் கூறுவதாகச் சொன்னான். மேலும் தாத்தா பீஷ்மர் முடிவெடுத்தால் சரியாகவே இருக்கும் என்றும் அவர் முடிவைத் தாங்கள் ஆதரிப்பதாகவும் அவர்கள் சொன்னதாக அர்ஜுனன் கூறினான். நகுலன் குதிரைப்படைகள், ரதப் படை வீரர்கள், அதிரதர்கள், மஹாரதர்கள் ஆகியோரிடம் பேசியதாகவும் அனைவரும் தங்கள் பக்கம் என்றும், செலவுக்கு வேண்டிய தங்கம் அனைத்தும் தங்கள் மாமனார் ஆன துருபதன் கொடுத்திருப்பதாகவும் கூறினான். இவர்களைத் தவிர யாதவர்கள் அனைவரும், மற்றும் ஆர்ய வர்த்தத்து அரசர்களும் யுதிஷ்டிரனையே ஆதரிப்பார்கள் என்றும் கூறினான்.

அமைதியாக அமர்ந்திருந்த சஹாதேவனைப் பார்த்து, “நீ என்னப்பா சொல்கிறாய்?” என்று வியாசர் கேட்டார். சஹாதேவன் ஹஸ்தினாபுரத்து மக்களுக்கு யுதிஷ்டிரன் அரசன் ஆவதே பிடிக்கும் என்று சொன்னான். அவன் குரலில் எவ்விதப் பற்றும் இல்லாமல் ஒரு யோகியைப் போல் பற்றற்றுக் கூறினான். “நீ என்ன செய்யப் போகிறாய் மகனே!” என்று யுதிஷ்டிரனைப் பார்த்துக் கேட்டார் வியாசர். அப்போது பீமன் குறுக்கிட்டான். “நான் குறுக்கிடுவதற்கு மன்னியுங்கள், குருதேவா! எங்கள் அண்ணன் என்ன செய்ய வேண்டும் என்பது என்பதை நான் அறிந்திருக்கிறேன். ஹஸ்தினாபுரத்தின் சிங்காதனத்தில் என் அண்ணன் அமர்ந்து மக்களுக்கு நல்லாட்சியைத் தர வேண்டும். அதர்மத்தை ஒழித்து தர்மத்தின் பாதையில் ஆட்சி செலுத்த வேண்டும்.” என்றான் பீமன்.

அவனைப் பார்த்துக் கருணையுடன் சிரித்த வியாசர், தன் தலை ஆமோதிப்பாக ஆட்டி விட்டு யுதிஷ்டிரன் பக்கம் திரும்பினார். அவன் முகத்தையே பார்த்தார். “நான் என்ன செய்ய வேண்டும் என எனக்கே தெரியவில்லை, குருதேவா!  நான் எனக்கு வழிகாட்டும்படிக் கடவுளை வேண்டிக் கொண்டிருக்கிறேன்.  உங்கள் வழிகாட்டுதலும் எனக்குத் தேவை குருதேவா! நான் இப்போது என்ன செய்ய வேண்டும்? எது என்னுடைய தர்மம்? இம்மாதிரியான ஒரு குழப்பமான சூழ்நிலையில் நான் என்ன செய்ய வேண்டும்?  இப்படி ஒரு பிரச்னையை இதற்கு முன்னர் நான் சந்தித்ததே இல்லை.” என்றான் யுதிஷ்டிரன்.

“யுதிஷ்டிரா! சிறு குழந்தையாக இருக்கையில் இருந்தே நீ குற்றமற்றவனாகவும் எல்லாவிதத்திலும் நேர்மையைக் கடைப்பிடிப்பவனாகவும், சொன்னதைச் செய்பவனாகவுமே இருந்து வருகிறாய்! ஆகவே இப்போதும் நீ கவலைப்படாதே! நிலைமை எப்படி இருந்தாலும் நீ தர்மத்தின் பாதையிலேயே செல்வாய் என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. “ என்றார். “திக்குத் தெரியாத காட்டில் கண்களைக் கட்டி விட்டாற்போல் தவிக்கிறேன், குருதேவா! நான் என்ன செய்ய வேண்டும் என்பதைக் கொஞ்சம் சொல்லுங்கள்!” என்றான் யுதிஷ்டிரன். அன்புடன் அவனைப் பார்த்துச் சிரித்த குருதேவர், “ குழந்தாய்! ஒரு மனிதனுக்கு ஒவ்வொரு சமயங்களில் ஒவ்வொரு மாதிரி நடந்து கொள்ள வேண்டி இருக்கும். பல சமயங்களிலும் அவன் என்ன விரும்புகிறானோ அப்படியே செய்தாலும் ஒரு சில சமயங்களில் அவன் விருப்பத்தை விட்டு விட்டு அவன் என்ன செய்ய வேண்டும், எது செய்தால் சரியாக இருக்கும் என்று யோசிக்க வேண்டி இருக்கும். இது அப்படிப்பட்ட ஒரு சமயம் உன் வாழ்க்கையில் வந்திருக்கிறது.” என்றார் வியாசர்.

“குருதேவா! நானும் என்னால் ஆன மட்டும் யோசித்துப் பார்த்துவிட்டேன். எனக்கு வழி ஒன்றும் புலப்படவில்லை!” எனத் தன் தோல்வியை ஒப்புக் கொண்டான் யுதிஷ்டிரன்.  “உன் வாழ்க்கையின் உச்சக்கட்டத் தேர்வு இப்போது நடக்கிறது, யுதிஷ்டிரா! மகனே! உன் செங்கோல் நியாயமாக இருக்க வேண்டும். செங்கோல் வளையக் கூடாது. உன் வாழ்க்கை இப்போது குரு வம்சத்துச் செங்கோலுடன் பின்னிப் பிணைந்திருக்கிறது. நீ தர்மத்தைக் காக்க வந்தவன். விண்ணுலகில் கடவுளரும் உன்னிடம் தர்மத்தையே எதிர்பார்க்கிறார்கள். முடி சூடிய பின்னர் நீ முடிவு செய்யலாம் என்பது சரியானால், ஏன் இப்போது உன்னால் முடிவு செய்ய முடியாது? ஒரு முடிவுக்கு உன்னால் வர முடியாதா?”

“புதிராக இருக்கிறது குருதேவா! என்னால் என்ன முடிவெடுக்க இயலும்?” யுதிஷ்டிரன் குழம்பினான்.

“ஏனப்பா குழம்புகிறாய்? ஏன் புதிராக நினைக்கிறாய்? எல்லாம் அல்ல அந்த மஹாதேவனை நாடு! அவன் காலடிகளைத் தஞ்சம் அடைந்து விடு! இம்மாதிரியான ஒரு இக்கட்டான சூழ்நிலையில் வேறு எவராலும் உனக்கு ஆறுதலோ, வழி காட்டுவதோ இயலாத ஒன்று. நீயே சுயமாகச் சிந்தித்து முடிவெடு! நீ எப்படி முடிவெடுத்தாலும், அது சரியானதாகவே இருக்கும். யுதிஷ்டிரா, உன் முடிவில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. உன் சகோதரர்களும் நீ எடுக்கப் போகும் முடிவை ஏற்பார்கள். கலங்காதே!” என்றார் வியாசர்.

Friday, May 29, 2015

வியாசர் வந்தார்!

மறுநாள் காலை விடிந்தது. பானுமதியின் மரணத்திற்குப் பின்னர் ஹஸ்தினாபுரம் அன்று தான் இயல்பான நிலைமைக்குத் திரும்ப ஆரம்பித்திருந்தது. அன்றைய காலைப் பொழுது ஆரம்பித்த சில மணிகளில் பறை அறிவிப்பவன் பறையைக் கொட்டிக் கொண்டு ஏதோ அறிவிப்புச் செய்வது பொதுமக்கள் அனைவரின் காதுகளிலும் விழுந்தது. பலரும் அவரவர் வேலைகளை விட்டு விட்டு என்ன அறிவிப்பு என்பதைக் கவனித்தார்கள். வீட்டுக்குள் வேலை செய்து கொண்டிருந்த பெண்டிரும் இதில் விதி விலக்கில்லை. அவர்களும் வந்த என்ன விஷயம் என ஒருவருக்கொருவர் கேட்டுக் கொண்டனர். பறை அறிவிப்பவன் சொன்னதாவது: இதனால் அறிவிப்பது யாதெனில், ஹஸ்தினாபுரத்தின் முடி சூடாச் சக்கரவர்த்தியும், குரு வம்சத்தினரின் பிதாமகரும் ஆன பீஷ்மரின் வேண்டுகோளுக்கு இணங்க, அனைவராலும் “குருதேவர்” என்றும், “மஹாஸ்வாமி” என்றும் போற்றி வணங்கப்படும், க்ருஷ்ண த்வைபாயனர் என்னும் வியாச ரிஷி ஹஸ்தினாபுரத்துக்கு விஜயம் செய்கிறார்.  பாண்டவர்களில் மூத்தவன் ஆன யுதிஷ்டிரனுக்கு நடைபெறப்போகும் பட்டாபிஷேஹ வைபவத்தில் கலந்து கொள்ளவும், அதை ஏற்பாடுகள் செய்து நடத்திக் கொடுக்க இருக்கும் அந்தணர்களுக்கு வழிகாட்டவும் வியாசர் வருகை தருகிறார். பீஷ்மரின் அழைப்பின் பேரில் வியாசர் வருகை புரிகிறார்.” என்பதே ஆகும்.

பட்டாபிஷேஹத்துக்கு முதல்நாள் ஹஸ்தினாபுரத்திலிருந்து ஒரு யோசனை தூரத்தில் வியாசர் வந்து கொண்டிருந்தார். அவருடன் எப்போதும் உடன் வரும் சீடர்களும் வந்து கொண்டிருந்தனர். அவர்களை வரவேற்க பீஷ்மர் விதுரரை ஏற்பாடு செய்திருந்தார். கூடவே உதவிக்காகவும், மற்ற சம்பிரதாயமான வரவேற்புகளைக் கவனிக்கவும், சோமதத்தன், தௌம்யர் ஆகிய இருவரும் விதுரருடன் செல்லவும் ஏற்பாடு செய்திருந்தார். மறுநாள் காலை வியாசர் ஹஸ்தினாபுரத்தின் உள்ளே வருகை தரும் நேரம். பீஷ்ம பிதாமகரும், குரு வம்சத்து இளவல்கள் அனைவரும், அரசன் திருதராஷ்டிரனோடு நகரை விட்டு வெளியே புறநகருக்குச் சென்று வியாசரை வரவேற்றனர். பொதுமக்களும் பெரிய அளவில் கூடி இருந்தனர்.

புலித்தோலை அணிந்த வண்ணம் வியாசர் வந்தார். பாரதம் முழுவதும், குறிப்பாக ஆர்யவர்த்தத்தின் ரிஷிகள் அனைவருமே வியாசரைத் தங்கள் தலைவராக எண்ணி வணங்கி வந்தனர். கரு நிறத்தவரான வியாசர் அகன்ற தோள்களுடன், நல்ல தேகபலத்தோடு பார்ப்பதற்கே தனித்தன்மை வாய்ந்தவராக கம்பீரத்தோடு காணப்பட்டார். மேலே தூக்கிக் கட்டப்பட்டிருந்த அவரின் நரைத்த தலை மயிரைப் பார்த்தால் இமயமலையின் மேல் காணப்படும் பனிச்சிகரங்களைப் போல் காணப்பட்டது. அவருடைய பெரிய தலை, அகன்ற அவிசாலமான நெற்றி, அதில் காணப்பட்ட விபூதியினால் வரையப்பட்ட மூன்று நீண்ட கோடுகள், அகன்ற விசாலமான கண்கள், அதில் பொங்கி வழிந்த கருணை வெள்ளம் எல்லாம் சேர்ந்து அவர் ரிஷிகளுக்குள்ளே தனித்தன்மை வாய்ந்தவர் என்பதை மேலும் மேலும் உறுதிப் படுத்திக் கொண்டிருந்தது. அவர் முகமோ கருணை, பாசம், அன்பு, மகிழ்ச்சி என அனைத்தையும் வாரி வாரி வழங்கிக் கொண்டிருந்தது.

வியாசர் தன்னுடைய ஆசிரமம் இருக்கும் குருக்ஷேத்திரத்திலிருந்து ஹஸ்தினாபுரம் வந்திருந்தார். குருக்ஷேத்திரத்தில் தான் சரஸ்வதி நதி இமயத்திலிருந்து ஓடி வருகிறது. முன்னும் , பின்னுமாகச் சற்று ஓடியதும் சரஸ்வதி நதி பூமியில் மறைந்து விடுகிறது. ஆனால் செல்லும் முன்னர் அங்கிருக்கும் ஐந்து ஏரிகளை நிரப்பிவிட்டுச் செல்கிறது. சமந்த பஞ்சகம் என்னும் அந்த ஐந்து ஏரிகளும் நீரால் நிரம்பித் தளும்பிக் கொண்டிருக்கும். அவருடைய குருகுலத்தில் நூற்றுக்கணக்கான சீடர்கள் படித்துக் கொண்டிருப்பார்கள்.  அங்கே படித்து முடித்தவர்களோ பாரத நாட்டின் பல்வேறு பாகங்களுக்கும் சென்று ஆங்காங்கே ஆசிரமங்களை நிர்மாணித்துத் தாங்கள் கற்றதை அங்குள்ள மக்களுக்கும் சொல்லிக் கொடுப்பதன் மூலம் ஆர்யவர்த்தத்தின்  பழக்க, வழக்கங்களை மட்டுமின்றி அதன் எல்லைகளையும் விஸ்தரித்தனர்.

வியாசரே ஆசிரமத்தில் சில மாதங்களைக் கழித்தாலும் தானும் நதிகள் மூலமும், தரை வழியாகவும் பல்வேறு நாடுகளுக்குச் சென்று ஆர்யவர்த்தம் முழுவதையும் ஒரே மாதிரியான பழக்கவழக்கங்கள், விதிமுறைகள் எனப் பின்பற்று ஒரு வழக்கத்தை ஏற்படுத்தி வந்தார். சமூக சிந்தனைகள், நீதி மார்க்கங்கள் மட்டுமின்றி ஆன்மிக போதனைகளிலும் அனைவரும் ஒரே மாதிரியாக அறிவைப் பெறும் வண்ணம் போதித்து வந்தார். அவர் பார்க்கும் எந்த ஒரு மனிதரையும் உயர்ந்த நிலைக்குக் கொண்டு செல்லும் வண்ணம் வியாசருடைய போதனைகள் அமைந்தன. வியாசருடன் கூட அவர் மகன் சுக மஹரிஷியும் வருவார். தலையை மழுங்க மொட்டை அடித்த வண்ணம் உயரமாக, ஒல்லியாக, ஜொலிக்கும் கண்களுடன், தீர்க்கமான நாசியுடனும், ஞானம் அடைந்ததைச் சொல்லும் வண்ணமாக அமைதி நிறைந்த முகத்துடனும் காட்சி அளிப்பார் சுக மஹரிஷி. அவர் கைகளில் நீர் நிறைந்த இரு சுரைக்குடுக்கைகள் ஒரு நீண்ட தண்டத்தில் கட்டப்பட்டுக் காட்சி அளிக்கும். ஒரு குடுக்கையின் நீர் சுகமஹரிஷிக்கும், இன்னொன்று அவர் தந்தை வியாசருக்கும் ஆகும்.

வியாசரின் சீடர்கள் தவிர சுகரின் சீடர்களும் அவருடன் வந்தனர். அவர்களில் முக்கியமானவர்கள் வைஷம்பாயனரும், பைலரும் ஆவார்கள். இவர்களைத் தவிரவும், ஐம்பது சீடர்கள் உடன் வந்தனர். பீஷ்மர், திருதராஷ்டிரன், குரு வம்சத்து இளவல்கள், சஞ்சயன், பலராமன், கிருஷ்ணன் ஆகியோரும் விராட அரசனும் நாக அரசன் மணிமானும் வியாசரின் கால்களில் விழுந்து ஆசிகளைப் பெற்றனர். அங்குள்ள மக்கள் அனைவரும் மிகவும் மதிப்புடனும், மரியாதையுடனும் இவற்றைப் பார்த்துக் கொண்டிருந்தனர். வியாசர் ஏழை, எளிய மக்களுக்காகவே வாழ்ந்து வந்தார் என்பதை அவர்கள் புரிந்து கொண்டிருந்தனர். அதோடு இல்லாமல் அவர் கொடுக்கும் இலவச சிகிச்சையில் குணமடைந்தவர் பலர் இருந்தனர். கஷ்டப்படுபவர்கள் அவர் ஆசியைப் பெற்றதும் தங்கள் கஷ்டங்கள் தீர்ந்து சுகப்பட்டனர் என்பதையும் அறிந்திருந்தனர்.

கையில் ஒரு நீண்ட கழியைப் பிடித்த வண்ணம் வியாசர் மெதுவாக நடந்தார். அவரை வணங்கும் அனைவருக்கும் தன் வலக்கையை உயர்த்தி ஆசிகளைத் தெரிவித்தார். ஒவ்வொருவரையும் பார்த்துத் தனித்தனியாகச் சிரித்து ஒவ்வொரு வார்த்தை அன்பாகவும் பேசினார். அரண்மனைகளில் தங்கும் வழக்கம் இல்லாத வியாசர் தன் வழக்கப்படி ஹஸ்தினாபுரத்தில் கோயில் கொண்டிருந்த பிரதிபேஷ்வர் கோயிலின் முன்றிலில் தனக்கும் தன்னுடன் வந்தவர்களுக்கும் தங்கக் கூடாரங்கள் கட்டி இடம் ஒதுக்கித் தரும்படி கேட்டுக் கொண்டார். பிரதிபேஷ்வர் கோயில் பீஷ்மரின் தாத்தா பிரதீபச் சக்கரவர்த்தியால் கட்டப்பட்டது என்பதால் கோயிலும் அவர் பெயரிலேயே வழங்கப்பட்டது

Friday, May 22, 2015

ஹஸ்தினாபுர சிங்காதனம் யாருக்கு? கோபுவின் கவலை!

ஆயிற்று! பானுமதி இறந்து போய்ப் பத்து நாட்கள் ஆகிவிட்டன. இனி அவள் ஆட்டத்தையும், கொண்டாட்டத்தையும் கலகலவென்ற சிரிப்பையும் நாம் இனி கேட்கப் போவதில்லை; பார்க்கப் போவதில்லை. அரச குடும்பத்தினர் மட்டுமின்றி  ஹஸ்தினாபுரம் முழுவதும் அவள் இறந்ததை துக்கம் அனுஷ்டித்துக் காட்டிக் கொண்டிருக்கிறது. இன்னமும் பலருக்கு அதிர்ச்சி நீங்கவே இல்லைதான்! பத்துநாட்களுக்கான சடங்குகளும் விதிகளும் முடிந்த பின்னர் பதினோராம் நாளுக்கான சடங்குகள் நடைபெற்றன. பனிரண்டாம் நாள் தன் தலை முடியைப் பாதி மழித்துக் கொண்டிருந்த துரியோதனன் பானுமதிக்காகப் பிண்டதானம் செய்து சடங்குகளை நிறைவேற்றினான். ஆரியர்களுக்கு இப்படிப் பனிரண்டாம் நாள் பிண்டதானம் செய்வதால் அதுவரை பூமியில் அங்குமிங்கும் அலைந்து கொண்டிருக்கும் பானுமதியின் ஜீவன் அமைதி பெற்றுப் பித்ருலோகம்போய்ச் சேரும் என்பது வழிவழியாக வந்த அவர்களுடைய நம்பிக்கை.

ஹஸ்தினாபுரத்து மக்களோ எப்போதோ ஓரிருமுறை ஒரு சில அரசக் கொண்டாட்டங்களில் மட்டுமே பானுமதியைப் பார்த்திருந்தனர். அவள் அழகு அவர்களைக் கவர்ந்திருந்தது. எப்போதும் சந்தோஷமாகப் புன்னகைக்கும் இளவரசி இன்று இல்லை என்பதை அவர்களால் நம்ப முடியவில்லை. கடவுளருக்கெல்லாம் கடவுளான அந்த மஹாதேவனுக்கு ஹதகேஸ்வர் என்னும் பெயரில் அவள் ஒரு கோயில் எழுப்பியபோது ஹஸ்தினாபுரத்து மக்கள் அனைவருமே அவள் பக்தியைக் கண்டு வியந்து போற்றினார்கள்; இப்ப்போது அந்தக் கோயிலுக்குச் செல்லும்போதெல்லாம் அவள் இல்லாமல் வெறுமையாக இருக்கும் என்பதை உணர்ந்து மனம் வருந்தினார்கள்.  என்றேனும் ஒரு நாள் துரியோதனன் அவள் ஆளுகைக்கு உட்படுவான் என்றே பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். அரச மாளிகைக்கு நெருங்கி இருந்த அனைவரும் இதைத் தான் எதிர்பார்த்தனர். அவர்கள் எதிர்பார்ப்புப் பொய்யாகும் வண்ணம் இன்று பானுமதியே உயிருடன் இல்லை.

பானுமதி இறந்த மறுநாள் அவள் சகோதரன் சுஷர்மாவுக்கும், ஜாலந்திராவுக்கும் இடையில் பெரிய வாக்குவாதம் ஏற்பட்டது. சுஷர்மா துரியோதனன் ஜாலந்திராவை அடுத்தாற்போல் கல்யாணம் செய்து கொள்ளத் தயாராக இருக்கிறான் என்றும், மற்ற இளவரசிகளை விட அவள் துரியோதனனைக் கல்யாணம் செய்து கொள்வதின் பலாபலன்களையும் எடுத்துக் கூற ஆரம்பித்தான். இதைக் கேட்ட ஜாலந்திரா கொதிப்படைந்தாள். உடனடியாக துரியோதனன் மாளிகையை விட்டு வெளியேறி பானுமதியின் இறுதிச் சடங்குகள் முடியும்வரை வேறு எங்காவது தங்கலாம் என்று முடிவு கட்டி சுஷர்மாவை அதற்கு வற்புறுத்தினாள்.  அவள் தொந்திரவு பொறுக்க முடியாமல் அவர்கள் இருவரும் ரேகாவுடன் அங்கிருந்து வெளியேறினார்கள். கிருஷ்ணன் வசித்த மாளிகைக்குச் சென்றனர். அங்கே உத்தவனின் இரு நாககுல மனைவியரான கபிலாவும், பிங்கலாவும் அவர்களை எதிர்கொண்டு உபசரித்தனர். அவர்கள் இந்தச் சடங்குகளும் துக்கதினங்களும் முடிந்த பின்னர் ஒரு நல்ல நாள் பார்த்து இங்கிருந்து கிளம்பிக் காம்பில்யம் செல்லும் முடிவில் இருந்தனர்.

நாட்கள் நகர்ந்தன. பானுமதி இறந்து பதின்மூன்றாம் நாள் இரவு. கோபு வழக்கம்போல் பீமனின் உடலைப் பிடித்து விட்டுக் கொண்டிருந்தான். தினம் இரவு நேரத்தின் தன் அருமை எஜமானுக்கு இந்தச் சேவையைச் செய்வதில் அவன் சந்தோஷம் அடைந்தான். அப்போது தான் அவன் கேள்விப் பட்ட பல விஷயங்களையும் பீமனுடன் பகிர்ந்து கொள்வான். அது போல் இன்றும் தன் மனதில் காலையில் இருந்து வெளிவரத் தவித்துக் கொண்டிருந்த ஒரு விஷயத்தை பீமனிடம் சொல்ல ஆரம்பித்தான். “பிரபுவே, நான் இல்லாதபோது வாரணாவதத்தில் எரிந்து கொண்டிருந்த மாளிகையிலிருந்து நீங்கள் தப்பி இருக்கக் கூடாது. நீங்கள் தனியாக இருந்ததில் உங்கள் உடலும் வீணாகப் போய் விட்டது. அதோடு உங்கள் ஆயுதங்களும் துருப்பிடித்துப் போய் விட்டன. நான் இருந்திருந்தால் தினம் உங்கள் உடலையும் ஆயுதங்களையும் ஒரு சேரக் கவனித்துக் கொண்டிருப்பேன். “ என்றான்.

அதற்கூ பீமன், “ அட! என்ன அப்பா நீ? நீ இல்லை எனில் உலகமே தலைகீழாகவா போய்விடும்? உன்னால் தான் அதிசயங்களைச் செய்ய முடியுமா? நீ இல்லை எனில் எவராலும் முடியாதா என்ன?” என்று உடலை முறித்துக் கொண்டே மிகவும் சோம்பலாகச் சொன்னான்.

“பிரபுவே, உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? எனக்குத் தெரியும்! சொல்கிறேன் கேளுங்கள். இளவரசி பானுமதி சாகும் முன்னர் என்ன செய்தாள் தெரியுமா?கிருஷ்ண வாசுதேவன் அவள் அருகில் இருந்திருக்கிறான். அவனிடம் என்ன வேண்டிக் கொன்டாள் தெரியுமா? அவனைப் பார்க்க வேண்டும் என அவள் நினைத்திருக்கிறாள். உடனே உங்கள் அத்தை மகன் அவள் முன்னே தோன்றி இருக்கிறான். அவள் அருகே அமர்ந்து அவளுக்கு ஆறுதல் மொழிகள் சொல்லி அவளை சகோதரி என்றும் அழைத்திருக்கிறான். ஒரு மனிதன் பிரசவித்த அந்நியப் பெண்ணின் அருகேயே செல்லக் கூடாது. கிருஷ்ண வாசுதேவன் சென்றிருக்கிறான். அந்தக் குழந்தையும் உயிருடன் இல்லையாமே!” மெதுவாகப் பேசிய கோபு மீண்டும் ரகசியம் பேசும் குரலில் “அவளிடம் அவன் அடுத்த பிறவியில் உன்னைச் சந்திக்கிறேன் என்று சொல்லி இருக்கிறான்.” என்று ஏதோ முக்கியமான ரகசிய விஷயத்தைச் சொல்வது போல் கூறினான்.

“கதை கட்டி விடாதே! கோபு, உன் வேலையைப் பார்!” என்று சீறினான் பீமன்.

“இல்லை, பிரபுவே, இல்லை. நான் என்னுடைய இந்தப் பூணூல் மேலே சத்தியம் செய்து சொல்கிறேன். புனிதமான இந்தப் பூணூலின் மேல் சத்தியமாக இவை அனைத்தையும் எனக்கு ரேகா என் தாயிடம் சொல்லித் தான் தெரிந்தது.”

“ஹூம், பூணூல் மேல் சத்தியமா? அது சரி! அப்புறம் என்ன நடந்தது?” என்றான் பீமன். அதற்கு கோபு இன்னமும் குரலைத் தழைத்துக் கொண்டு, “பிரபுவே! இப்போது நான் சொல்லப் போவது மிக ரகசியமாக இருக்க வேண்டும். உங்கள் அத்தை மகன் பானுமதிக்கு என்ன சத்தியம் செய்து கொடுத்திருக்கிறான் தெரியுமா? துரியோதனன் தான் ஹஸ்தினாபுரத்தை ஆளுவான் எனச் சத்தியம் செய்து கொடுத்திருக்கிறான்.” என்றான். பீமன் உடனே கோபுவின் காதுகளை வலுக்கும்படி வேகமாகத் திருகினான். “நிச்சயமாய் இல்லை! அவன் எங்களுக்கு அத்தை மகன் மட்டுமல்ல; நண்பனும் கூட! வாசுதேவன் இப்படி எல்லாம் செய்ய மாட்டான்..” என்று சொல்லிவிட்டுச் சிரித்தான்.

கோபுவுக்கு வெறுப்பு மேலிட்டது. அலுப்புடன், “சரி, இப்போது நான் சொல்வதை நீங்கள் நம்பாமல் இருக்கலாம். ஆனால் ஒரு நாள் உண்மை தெரியும். அப்போது உங்களுக்கு என் வார்த்தையைக் கேட்கவில்லையே என்பது புரியும். ரேகாவுக்கு அனைத்தும் தெரியும். வாசுதேவன் இந்த வாக்குறுதியை பானுமதிக்கு அளித்ததை ரேகா கேட்டிருக்கிறாள்.” என்றான். “அவள் தூக்கக் கலக்கத்தில் சொப்பனம் கண்டிருக்கலாம். அல்லது அளவுக்கு மீறிய துக்கத்தில் புரியாமல் இருந்திருக்கலாம். சரி, சரி, இன்றைக்கு இது போதும்! “ என்றான் பீமன். பின்னர் கோபுவின் வாடிய முகத்தைப் பார்த்து விட்டு, “கவலைப்படாதே! போய்த் தூங்கு!” என்று அவனைத்ட் ஹட்டிக் கொடுத்தான். பீமனும் திரும்பிப் படுத்த உடனேயே தூங்கி விட்டான். அவன் தூக்கத்தில் பரத வம்சத்து அரியணையில் துரியோதனன் ஏறி அமருவதற்கு வாசுதேவக் கிருஷ்ணன் உதவுவதைப் போல் கனவு கண்டான். அவனுக்குத் தூக்கி வாரிப் போட விழித்துக் கொண்டவன், தனக்குத் தானே முணுமுணுத்துக் கொண்டான். “கிருஷ்ணன் ஒருக்காலும் நம்மை ஏமாற்ற மாட்டான். இல்லை; இல்லை; கோபு சொன்னது உண்மையாக இருக்காது!” என்று சொன்னவண்ணம் மீண்டும் படுத்தான்.

Tuesday, May 19, 2015

பானுமதி விடை பெற்றாள்!

கிருஷ்ணன் பானுமதியின் கைகளைப் பிடித்த வண்ணம் அவளையே பார்த்தவாறு அமர்ந்திருந்தான். பானுமதியும் கிருஷ்ணனையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் கண்கள் மினுமினுத்தன. துரியோதனனோ பானுமதியின் இனம் காணமுடியாப் பரவசத்தையும், கிருஷ்ணனுக்கும் அவளுக்கும் இடையில் காணப்பட்ட பாசத்தையும் கண்டு வாயடைத்து உட்கார்ந்திருந்தான். அவனால் எதுவும் பேசமுடியவில்லை. அரை மயக்க நிலையில் இருந்தான். அப்போது மருத்துவர் குறுக்கிட்டு, “மாட்சிமை பொருந்திய வாசுதேவரே, தயவு செய்து அவளைப் பேச அனுமதிக்காதீர்கள். அது அவளுக்கு இன்னமும் சிரமத்தையும் உடல் உபாதையையும் தரும். சக்தி அனைத்தையும் இழந்துவிடுவாள்” என்று வேண்டிக் கொண்டார். கிருஷ்ணன் அவரையே சிறிது  நேரம் பார்த்தான். பின்னர் கடுமையாக அவரைப் பார்த்து, “இப்போது இருக்கும் சூழ்நிலையில் உங்களால் எதுவும் செய்ய இயலாது; ஆனால் என்னால் ஓரளவுக்கு உதவ முடியும். அது அவளுக்கு நிம்மதியையும் தரும்.” என்றான்.

இதைக் கெஎட்டதும் மருத்துவரும் துணைக்கு இருந்த மருத்துவப் பெண்மணியும் தங்கள் கைகளைக் கூப்பி வணங்கி விட்டு அங்கிருந்து அகன்றனர். பானுமதி மயக்கத்திற்கும் நினைவுக்கும் மாறி மாறிப் பயணித்துக் கொண்டிருந்தாள். அவள் இப்போது மீண்டும் மயக்கத்தில் ஆழ்ந்திருப்பதைக் கண்ட கிருஷ்ண வாசுதேவன் அவள் நெற்றியில் தன் கைகளை வைத்துக் கொண்டு அவள் முகத்தையே உற்றுக் கவனித்த வண்ணம் அமர்ந்திருந்தான். அவள் மீண்டும் தன் கண்களைத் திறந்து அவனைப் பார்ப்பாள் என்பதை எதிர்பார்த்தான். அதற்கேற்ப பானுமதியும் தன் கண்களைத் திறந்தாள். கிருஷ்ணனையே பார்த்தவள் தன் ஞாபக சக்தியை மிகச் சிரமப்பட்டு ஒன்று சேர்த்துக் கொண்டாள். மிகவும் பக்தியோடு கிருஷ்ணனையே பார்த்தாள். பின் யாருக்கும் எதுவும் புரியாத மொழியில் பேசுபவள் போலப் பேச ஆரம்பித்தாள். வார்த்தைகள் குளறலாக இருந்தன. சிரமப் பட்டுப் புரிந்து கொள்ள நேரிட்டது. “ஆர்ய புத்திரர், ஆர்ய புத்திரர்……………..மிகவும் நல்லவர்………………. ஆம்,………………………………………… மிக மிக நல்லவர்……………………………….. உன்னதமான உயர்குடிப் பிறப்பைச் சேர்ந்தவர்………………………………………..என் மகன்……………………என் மகன்…………………….சக்கரவர்த்தி பரதன் ஆண்ட…………………………….. இந்தச்  சிங்காதனத்தில்…………………………………..அமர வேண்டும்………………………………….ஆனால்……………………………ஆனால்………………………கிருஷ்ணா, அவனுக்கு…………………………….. என்னைத் தெரியுமா?............................அறிந்து கொள்வானா?.......................புரிந்து கொண்டு………………………என்னை நேசிப்பானா?” மிகவும் வெகுளியாகக் கேட்டாள் பானுமதி.

“அவன் உன்னை மிகவும் நேசிப்பான். நிச்சயமாய் நேசிப்பான். கவலைப்படாதே பானுமதி!” உறுதியான தொனியில் பேசின கிருஷ்ணன் மீண்டும் அவளைப் பார்த்து, “ ஆர்வத்தையும் ஏக்கத்தையும் அதிகரித்துக் கொள்ளாதே பானுமதி! அமைதியாக இரு! உன் கணவன் ஹஸ்தினாபுரத்தின் மன்னன் ஆகி விடுவான். நான் என் வாக்குறுதியைக் காப்பாற்றுவேன். நிச்சயம் காப்பாற்றுவேன். என்றான். தன்னிரு கைகளையும் கூப்பிய வண்ணம் பானுமதி ஏதோ பேசினாள். என்னவென்று தெளிவாக இல்லை. ஆனால், “கோவிந்தா, கோவிந்தா!” என்று சொல்கிறாள் என்பது மட்டும் புரிந்தது. அவள் கண்கள் கண்ணீரால் நிரம்பின. துரியோதனனுக்கோ தன் கண்களையும், காதுகளையும் நம்ப முடியவில்லை. கிருஷ்ணன், வாசுதேவக் கிருஷ்ணன், தன்னை ஹஸ்தினாபுரத்தின் மன்னனாக ஒத்துக் கொள்கிறானா? நிஜமாகவா? இந்த வாக்குறுதியைத் தான் பானுமதி தனக்காகக் கிருஷ்ணனிடமிருந்து வாங்கி இருக்கிறாளா?

ஆனால் இத்தனை நாட்களாகத் தான் அவளை ஒரு மோசமான முட்டாள் பெண் என்றல்லவா நினைத்திருந்தோம்! நம்முடைய கஷ்டமான நேரங்களில் எப்படி உதவுவது என்பதே தெரியவில்லை என்றல்லவா நினைத்திருந்தோம். துரியோதனனுக்கு வாய் விட்டுக் கத்தி அழ வேண்டும் போலிருந்தது. சில விநாடிகள் கழித்து பானுமதி ஏதோ முணுமுணுத்தாள். ஆனால் அது தெளிவாக துரியோதனனுக்குக் கேட்டு விட்டது.”ஆர்ய புத்திரா, ஆர்ய புத்திரா, தாங்கள் எங்கே இருக்கிறீர்கள்?” என்று அழைத்த பானுமதி களைப்புத் தாங்காமல் மீண்டும் தன் கண்களை மூடிக் கொண்டாள். மிகக் கஷ்டப்பட்டுத் தன் கண்களைத் திறந்து துரியோதனனைத் தேடினாள். அவளுக்குப் பார்வை நன்றாகத் தெரிகிறதா என்பதில் கிருஷ்ணனுக்கு சந்தேகம் வந்தது.

துரியோதனன், “தேவி, தேவி, நான் இங்கே இருக்கிறேன்.” என்று பதில் கொடுத்தான். உடனே கிருஷ்ணன் இருக்கும் இடம் நோக்கித் திரும்பிய பானுமதியின் பார்வை எங்கோ இருந்தது. ஆனால் அவள் வாயிலிருந்து கீழ்க்கண்ட சொற்கள் உதிர்ந்தன. “வாசுதேவா, வாசுதேவா, என் கணவனை நீதான் பார்த்துக் கொள்ள வேண்டும். பார்த்துக் கொள்வாய் அல்லவா? நான் அவரை மிகவும் நேசிக்கிறேன். மிக மிக அதிகமாக நேசிக்கிறேன்.” என்றாள் பானுமதி. “சகோதரி, கவலைப்படாதே! உன் ஆசையைப் பூர்த்தி செய்வேன்.” என்றான் கண்ணன். அவள் உதடுகளில் புன்னகை பூத்தது. அந்த அழகான புன்னகையை இன்று வரை அவள் முகத்தில் துரியோதனன் கண்டதில்லை. இந்தப் புன்னகையினால் அவள் முகமே திடீரென வசீகரம் பெற்றும் திகழ்ந்தது. இத்தனை அழகா என் பானுமதி என துரியோதனன் வியந்தான். அவன் இதயத்தைப் பிழிந்து எடுப்பது போல் வலி தாங்கவில்லை அவனுக்கு! இவ்வளவு பக்தியுடன் கூடிய ஒரு மனைவி இருந்தும் அவன் அவளை லக்ஷியமே செய்யாமல் இருந்திருக்கிறானே! அவள் இதோ அவனை விட்டுப் பிரியப் போகிறாளே! என்ன துர்ப்பாக்கியம்!

மீண்டும் மயக்கத்தில் ஆழ்ந்த பானுமதி அந்த அரை மயக்க நிலையிலேயே, “கோவிந்தா! எனக்குச் சத்தியம் செய்து கொடு! என்னை மீண்டும் சந்திப்பேன் எனச் சத்தியம் செய்து கொடு! என் அடுத்த பிறவியிலும் நான் உன்னைத் தேடி வந்து சந்திப்பேன்!” என்றாள். “ஆம், சகோதரி! சத்தியம்!நிச்சயம் நான் உன்னை மறக்க மாட்டேன். உன் அடுத்த பிறவியிலும் உனக்குச் சகோதரனாகவே இருப்பேன். உன்னை வந்து சந்திப்பேன்.” என்றான். பானுமதிக்கு மேல் மூச்சு வாங்கியது. “நான் போக வேண்டிய வேளை வந்து விட்டது. நான் போய் வருகிறேன்.” என்று மெல்ல மெல்லச் சொன்னாள். “நாம் கட்டாயமாய் மீண்டும் சந்திப்போம் பானுமதி. உன்னை நீயே சிரமப்படுத்திக் கொள்ளாதே! அமைதியாக இரு!” என்றான் கிருஷ்ணன். அவன் சொன்னது பானுமதிக்குக் கேட்டதா, அவள் கவனித்தாளா என்பது சந்தேகமாக இருந்தது.

அவள் தன்னிச்சையாக ஏதேதோ பேசிக் கொண்டிருந்தாள். அவள் முகம் அந்த அழகுப் புன்னகையோடேயே காட்சி அளித்தது. அவள் அருகே சென்று அவள் காதுகளில் கிருஷ்ணன், “கவலைப் படாதே! ஏழேழு பிறவிகளிலும் நான் உன்னைச் சந்திப்பேன். உன் சகோதரனாகவே இருப்பேன். ஒவ்வொரு பிறவியிலுக் உனக்கு சகோதரனாகவே இருப்பேன்.”என்றான். அவள் கைகளை இறுகப் பிடித்துக் கொண்டான். அந்த அறையில் யாரோ கண்ணுக்குத் தெரியாமல் நுழைந்து பானுமதியை அழைத்துச் செல்லப் போகிறார்கள் என்னும் அச்சம் துரியோதனன் உள்ளத்தில் தோன்றியது. கண்ணுக்குத் தெரியாத அந்த யாரோ அந்த அறையில் நுழைந்திருப்பதாகவும் உணர்ந்தான். அருகே இருந்த சுவரைப் பிடித்த வண்ணம் தன்னைத் தானே சமாளித்துக் கொண்டான். திருமணம் ஆனதிலிருந்து இத்தனை காலமாகத் தன்னால் அவமதிப்பையும், வெறுப்பையும், அலட்சியத்தையுமே வாங்கிக் கொண்டு உயிர் வாழ்ந்திருந்த அந்தப் பெண் இன்று மெல்ல மெல்ல இறந்து கொண்டிருப்பதைக் கண்டபோது அவனுக்குள் குற்ற உணர்ச்சி தலை தூக்கியது.

அவள் மீண்டும் தன் கண்களைத் திறந்து, “கோவிந்தா!” என்று சொல்ல முயற்சி செய்தாள். ஆனால் அவளால் இயலவில்லை. கிருஷ்ணன் மீண்டும் அவள் காதுகளில், “நான் என்றென்றும் உன்னோடு இருப்பேன். இது சத்தியம்!” என்றான். அவன் அதைச் சொல்வதைக் கேட்டவண்ணமே பானுமதி தன் கடைசி மூச்சை விட்டாள். ஜாலந்திராவுக்கு என்ன நடந்தது என்று புரியவே அவள் பானுமதியின் உடல் மேல் விழுந்து, “என் அருமைச் சகோதரி, என் பானு, என் அருமை பானு! “ என்ற வண்ணம் புலம்பி அழ ஆரம்பித்தாள். “ஜாலந்திரா, சகோதரி, உன்னை நீயே அமைதிப் படுத்திக் கொள்! தைரியமாக இரு!” என்றான் கிருஷ்ணன். அங்கே துரியோதனன் கூட தன் கரங்களால் முகத்தை மூடிய வண்ணம் ஒரு சிறு பிள்ளையைப் போல் வாய் விட்டுக் கதறிக் கொண்டிருந்தான். கிருஷ்ணன் பானுமதியின் அருகிலிருந்து எழுந்தவன் துரியோதனன் அருகே சென்று அவன் தோள்களைத் தொட்டு ஆறுதல் சொன்னவண்ணம் அவனை அறைக்கு வெளியே அழைத்துச் சென்றான். அடுத்த அறையில் பிறந்த குழந்தையுடன் இருந்த ரேகாவின் அழுகைக்கு அளவில்லாமல் இருந்தது. அவள் தன் கைகளில் இருந்த துணிச்சுருளுக்குள் பொதிக்கப்பட்டிருந்த குழந்தையைக் கண்டு விம்மி விம்மி அழுதாள். அத்தனை அழுகையிலும் கையில் இருந்த துணிச் சுருளைக் கீழே போடாமல் இறுகப் பற்றி இருந்தாள்.

அவளருகே சென்ற கிருஷ்ணன், “ரேகா, அழாதே! அழாதே! உன் எஜமானி, நீ வளர்த்த அந்தச் சின்னஞ்சிறு பெண் இப்போது அமைதியாகவும், சந்தோஷமாகவும் இருப்பாள். அவளுடைய கடைசி நிமிஷத்தில் கூடத் தன் கணவனிடம் தனக்கு இருந்த அன்பையும் விசுவாசத்தையும் சற்றும் மறைக்காமல் வெளிப்படுத்தினாள்.  உன்னதமான பெண்மணி! அவள் மனதில் அன்பும், பாசமும் அதை உண்மையாக வெளிப்படுத்திய தன்மையும் மட்டுமே இருந்தது. அற்புதமான பெண். “ என்றான்.

Saturday, May 16, 2015

பானுமதியின் கடைசி ஆசை!

உள்ளே வந்த கிருஷ்ணன் சற்றும் தயங்காமல் கோட்டைத் தாண்டி உள்ளே சென்றான். மருத்துவப் பெண்மணி கிருஷ்ணனை உள்ளே வரக் கூடாது என எச்சரிக்கை செய்தாள். ஆனாலும் கிருஷ்ணன் அதை லக்ஷியம் செய்யவில்லை. பானுமதியின் அருகே சென்றுவிட்டான். அவள் நெற்றியில் கையை வைத்துப் பார்த்தான். தாங்க முடியாத ஜ்வரத்தில் தவித்துக் கொண்டிருந்தாள் பானுமதி. பானுமதியின் அருகே வந்ததோடு இல்லாமல் அவளைத் தொட்டும் பார்த்த கிருஷ்ணனைப் பார்த்து மருத்துவப் பெண் ஆச்சரியமும், அதிர்ச்சியும் அடைந்தாள்.  ஏனெனில் ஆரியர்களின் நடைமுறை வழக்கப்படி ஒரு இளம்பெண்ணுக்கு அருகே அவள் தகப்பன், சகோதரன், கணவன் அல்லது மகன் தான் செல்லலாம். அவளைத் தொடலாம்.  அதிலும் கல்யாணம் ஆன பெண் என்றால் இவர்களைத் தவிர்த்த மற்ற ஆண்களை அருகே நெருங்கவே விடமாட்டார்கள். ஆனால் கிருஷ்ணன் பானுமதியின் அருகே வந்ததோடு அல்லாமல் அவளைத் தொட்டும் விட்டான்.

ஆனால் கிருஷ்ணன் முகம் கனிந்து இருந்தது. முகத்தில் பானுமதியின் நிலைமை குறித்த விசாரம் தெரிந்தது. அனம் மனம் பூராவும் பானுமதியின் உடல்நிலை குறித்த கவலையே நிரம்பி இருந்தது. கருணையினால் நிரம்பிய உள்ளத்தின் அனைத்து அன்பும் அவன் கண்கள் வழியே வந்து அவன் கைகள் மூலம் பானுமதியின் உடலில் பிரவாகித்தது. சொந்த சகோதரனைப் போன்ற பாசத்துடன் கிருஷ்ணன் பானுமதியைப் பார்த்தான். வேறெந்த ஆண்மகனிடமும் காண முடியாத பாசம் அவன் கண்களில் மிளிர்ந்தது. ஆனாலும் வழக்கமில்லாத வழக்கமாகக் கிருஷ்ணன் பிரசவித்த பெண்ணின் அருகே சென்றது அங்கிருந்த அனைவருக்கும் ஏற்கமுடியாததாகவே இருந்தது. இதன் மூலம் கிருஷ்ணன் இனி எந்தவிதமான நித்ய கர்மானுஷ்டானங்களும் செய்ய இயலாது என்பதோடு அவன் இதற்கான பரிகாரங்களையும் செய்து தன்னைப் புனிதமாக்கிக் கொண்டால் தான் நித்யகர்மானுஷ்டானங்களைத் தொடர முடியும். அனைவரும் திகைப்பில் இருப்பதை கிருஷ்ணன் உணர்ந்து கொண்டான்.

உடனே அவர்களைப் பார்த்து, “நான் என்ன செய்கிறேன் என்பதை நன்கு அறிந்து புரிந்து கொண்டே செய்கிறேன்.” என்று சொன்னவண்ணம் மருத்துவப் பெண்மணியிடமும் அதைத் தெரிவித்தான். பின்னர் பானுமதியிடம் திரும்பி, “பானுமதி, பானுமதி! என் அருமைச் சகோதரி! நான் வந்துவிட்டேன். உன் கோவிந்தா வந்திருக்கிறேன்.” என்று குரலில் கனிவு தெரியச் சொன்னான். அவள் கைகளைத் தன் கைகளில் எடுத்துக் கொண்டவன் அவள் நாடியை ஒரு தேர்ந்த மருத்துவனைப் போல் கணக்கிட்டான். அவள் நாடி மெல்ல மெல்ல விழுந்து கொண்டிருந்தது என்பதையும் கண்டான். இவ்வளவு ஜுரத்தோடு அவள் எப்படிப் பிழைத்து எழுந்திருக்கப் போகிறாள் என்பதையும் நினைத்துக் கவலை கொண்டான்.

கிருஷ்ணன் உள்ளே சென்றதைக் கண்ட ஜாலந்திரா தானும் கோட்டைத் தாண்டி உள்ளே சென்றாள். பானுமதியின் அருகே அமர்ந்தவள் அவளைத் தடவிக் கொடுத்தாள். அவள் கண்களில் நீர் நிரம்பியது. அப்போது பானுமதி தன் கண்களை மீண்டும் திறந்தாள். அருகே ஜாலந்திரா இருப்பதைப் பார்த்தவள் மிகவும் சிரமப்பட்டு விழிகளை விரியத் திறந்து கிருஷ்ணனையும் கண்டு கொண்டாள். தனக்காக அவன் வந்திருப்பதை எண்ணி அவள் முகம் ஒரு கணம் ரத்த ஓட்டம் பெற்றுப் பின் மீண்டும் பழைய நிலையை அடைந்தது. “கோவிந்தா! நீ வந்து விட்டாயா? உண்மையாகவா?” என்றாள் பானுமதி. அவள் குரலில் மகிழ்ச்சி தெரிந்தது. அடுத்த கணமே அவள் மீண்டும் மயக்கத்தில் ஆழ்ந்தாள். கிருஷ்ணன் அவள் கையை விடவே இல்லை. தொடர்ந்து பிடித்துக் கொண்டிருந்தான்.

சில நிமிடங்களில் மயக்கம் தெளிந்தவளாகக் கண் விழித்த பானுமதி மீண்டும் கிருஷ்ணனை வியப்புடன் உற்று நோக்கினாள். அவள் முகம் மலர்ந்தது. அவனையே உற்று நோக்கியவள் கண்களில் அளப்பரிய அர்ப்பணிப்புடன் கூடிய பக்தி தெரிந்தது. “கோவிந்தா, கோவிந்தா………. என்று அவனை மெல்ல அழைத்தவள், “உனக்குத் தெரியுமா? எனக்கு மகன் பிறந்திருக்கிறான்.” இதைச் சொல்வதற்குள்ளாக அவளுக்கு மூச்சு வாங்கியது. மிகவும் திணறினாள். பின்னர் திக்கித் திக்கிப் பேசினாள். “அவன் தான் குருவம்சத்தின் அடுத்த சக்கரவர்த்தியாக இருப்பான்.” என்றாள். இதற்குள்ளாகக் களைத்துப் போனவளாகத் தன் கண்களை மூடியவள் மீண்டும் மயக்கத்தில் ஆழ்ந்தாள்.  மறுபடியும் அவள் தன் கண்களைத் திறக்கச் சில நிமிடங்கள் ஆயிற்று. கண்களைத் திறந்தவள் கிருஷ்ணனைப் பார்த்து, “என்னை மன்னித்து விடு…. சகோதரா! “ என்றபடியே கிருஷ்ணனை அரை மயக்கத்தில் பார்த்தவள், “உன்னைச் சந்தித்து என் மரியாதைகளைத் தெரிவிக்க என்னால் வர முடியவில்லை.” என்றவள் தன் சக்தி அனைத்தையும் திரட்டிக் கொண்டு பேச ஆரம்பித்தாள். “கோவிந்தா! நீ எனக்கு மிகப் பெரியதொரு வரம் கொடுத்திருக்கிறாய்.  என் கணவன் தான் ஹஸ்தினாபுரத்தை ஆள்வான் என்னும் வாக்குறுதியைக் கொடுத்ததன் மூலம் நீ எனக்கு மிகப் பெரிய உதவியைச் செய்திருக்கிறாய். “

மீண்டும் அவளுக்கு மயக்கம் வந்தது. மயக்க நிலையிலேயே அவள் மனம் அங்குமிங்கும் அலை பாய்ந்தது. தெளிவில்லாத வார்த்தைகளைப் பேச ஆரம்பித்தாள். பின்னர் மீண்டும் நினைவுக்கு வந்தவள் போல் கிருஷ்ணனையே உற்றுப் பார்த்த வண்ணம், “எனக்குச் சத்தியம் செய்து கொடு, கோவிந்தா! என்னுடைய கடைசி ஆசை. எனக்கு நீ செய்யப் போகும் கடைசி உதவி. இதன் பின்னர் நான் உன்னை எதுவும் கேட்க மாட்டேன்.” என்றாள்.

Thursday, May 14, 2015

கண்ணன் வரவு! துரியோதனன் கொதிப்பு!

பானுமதி இருந்த அந்தப்புர அறை நன்கு சுத்தம் செய்யப்பட்டது பானுமதியும் சுத்தம் செய்யப்பட்டாள். அவளை வேறொரு படுக்கையில் கிடத்தினார்கள். இவை எல்லாம் முடிந்ததும், காந்தாரி தன் மகன் துரியோதனனை அங்கே வந்து பானுமதியைப் பார்க்கும்படி அழைப்பு விடுத்தாள். கூடவே சுஷர்மாவையும் அழைத்து வரச் சொன்னாள். பானுமதி மிகவும் உடல் நலம் கெட்டு இருக்கிறாள். ஆகவே அவள் கணவனை அவள் சந்திக்கட்டும் என்பதே காந்தாரியின் எண்ணம். துரியோதனனும் படபடக்கும் இதயத்துடன் செய்தியைக் கேட்டதும் முன்னறைக்குள் வெகு வேகமாக நுழைந்தான். அங்கே ரேகா கண்களில் கண்ணீருடன் கையில் ஒரு துணி மூட்டையைச் சுமந்து கொண்டு அந்த மூட்டையையே ஏதோ காணக்கிடைக்காத பொக்கிஷம் போல் பார்த்துக் கொண்டு இருப்பதையும் கண்டான். அவளிடம் எதுவும் பேசவில்லை அவன்.

அடுத்த அறைக்குச் சென்றான். அங்கே பானுமதி ஒரு படுக்கையில் படுத்திருந்தாள். அவளைச் சுற்றியும் புனித விபூதியினால் கோடு வரையப்பட்டிருந்தது. எவரும் அந்தக் கோட்டைத் தாண்டி உள்ளே படுத்திருக்கும் பானுமதியின் அருகே செல்லக் கூடாது என்பதற்கான எச்சரிக்கை அது. அவர்கள் உள்ளே செல்வது சுத்தமாகக் கருதப்படவில்லை. அந்தக் காலங்களில் ஆரியர்கள் பிரசவித்த பெண்ணின் அருகே சென்றால் ஆசாரக் குறைவாக எண்ணினார்கள். பின்னர் அவர்களை அன்றாட நடைமுறைக்கு ஏற்பப்  புரோகிதர்களின் உதவியுடன் புனிதப்படுத்திக்கொள்ள வேண்டும். ஆகவே துரியோதனன் இந்தக் கோட்டைப் பார்த்ததுமே வெளியே நின்றுவிட்டான். பானுமதியையே நீர் நிறைந்த கண்களுடன் பார்த்துக் கொண்டிருந்தான். வெளுத்துச் சோகையான முகத்துடன் மிகவும் பலவீனமாக மயக்க நிலையில் கிடந்தாள் பானுமதி. இவள் விதியோடு சேர்ந்து அவன் விதியும் பிணைக்கப்பட்டிருந்ததோடு அல்லாமல் இன்னும் என்னென்னமோ நடக்கப் போகிறது என்றே அவன் உள்ளுணர்வும் கூறியது.

அங்கே தன் தாய் மற்றும் பெரியவர்கள் பலரும் இருப்பதைக் கண்டபின்னரும் அதை லக்ஷியம் செய்யாமல் ஆதுரத்துடன் பானுமதியை “தேவி” என்று அழைத்தான் துரியோதனன். அனைவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர். என்றாலும் யாரும் எதுவும் பேசவில்லை. மயங்கிக் கிடந்த பானுமதிக்கு இந்த அழைப்பு எப்படித் தான் கேட்டதோ! அவள் தன் கண்களை மிகவும் சிரமப்பட்டுத் திறந்தாள். குரல் வந்தபக்கம் பார்த்தவளுக்கு துரியோதனன் தெரிய அவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள். மெல்ல மெல்ல அவளுக்குக் கொஞ்சம் சுய நினைவும் வந்தது. உடனே துரியோதனனைப் பார்த்து, “பிரபு! “ என அழைத்தாள். அவளால் தொடர்ந்து பேச முடியவில்லை. ஆனாலும் திக்கித் திணறி ஒவ்வொரு வார்த்தையாகப் பேசினாள். “என்னை……. மன்னியுங்கள்…….பிரபு! நான்………….நான்………..நான் என்னால் முடிந்தவரை…………..முயன்றேன். பிரபு!......... ஆனால்…………… என்னால்……… உங்களை மகிழ்ச்சியில் வைத்திருக்க………………. இயலவில்லை.”

அவள் நிறுத்தினாள். சற்று நேரம் மூச்சு வாங்கியது அவளுக்கு. அங்குமிங்கும் அலை பாய்ந்து கொண்டிருந்த தன் எண்ணங்களை எல்லாம் ஒன்று சேர்த்துத் திரட்டி நினைவுக்குக் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டாள். அதில் களைத்தும் போனாள். பின்னர் நினைவுக்கு வந்தவளாக, “பிரபுவே, நான் என்னுடைய கடமையை……… உங்களுக்கும்………….. உங்கள் முன்னோர்களுக்கும் செய்து விட்டேன். பிரபு!  இப்போது……………….. உங்களுக்கு நான் ஒரு மகனை …………….அளித்திருக்கிறேன். அவனைக்………………… குரு வம்சத்தின் அடுத்த …………………………..சாம்ராஜ்யச் சக்கரவர்த்தியாக ஆக்குங்கள்.” இதைக் கேட்ட அங்கிருந்த அனைவர்க்கும் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது. சேடிப் பெண்கள் விம்மி அழ ஆரம்பித்தனர். பின்னர் அரச வம்சத்தினர் இருக்கையில் சப்தம் போட்டு அழக்கூடாது என்பது நினைவில் வந்தது போல் அனைவரும் வெளியே சென்று அழ ஆரம்பித்தனர்.

அப்போது காந்தாரி, தன் மருமகள் தன் மகனுடன் சிறிது நேரம் தனிமையில் பேசட்டும் என நினைத்துத் தன்னை அறைக்கு வெளியே அழைத்துச் செல்லச் சொன்னாள். அவள் கண்களில் கட்டி இருந்த துணி மடிப்பின் கீழே இருந்து அவள் கண்களில் கொட்டிய நீர் வந்து கொண்டிருந்தது. காந்தாரியோடு அந்த அறையில் இருந்த அனைவருமே வெளியே சென்றனர்.  மருத்துவரும் உதவிக்கு பானுமதியின் அருகே இருந்த மருத்துவப் பெண்மணியும், சுஷர்மாவும், துரியோதனனும் மட்டுமே இருந்தனர். துரியோதனனுக்கு தொண்டை அடைத்துக் கொண்டு பேச முடியாமல் தவித்தான்.  அப்போது பானுமதி மீண்டும் பேச ஆரம்பித்தாள். ஏதோ நினைவுக்குக் கொண்டு வந்தவள் போல யோசனையுடன் பேசினாள் அவள். “ஆர்ய புத்திரரே! ஆனால்…………… ஒரு விஷயத்தில்…………………. எனக்கு மகிழ்ச்சியே!...........ஜாலந்திரா……………….ஜாலந்திரா…………….. என்னை விட உங்களை அதிகம் சந்தோஷப்படுத்துவாள். அவள்…………..மிகவும் கெட்டிக்காரி…….. என்னைப் போல் இருக்க………………………மாட்டாள்………………………………….நான் உங்களை…………………. ஒரு போதும்…………….. சந்தோஷப்படுத்தவே இல்லை. நம் மகனைக் கூட…………………………. அவள் ஒரு நல்ல தாயாக…………………………… வளர்த்துத் தருவாள். ………………….தன் சொந்த மகனைப் போல்………………………….கண்ணும், கருத்துமாக……………………… வளர்ப்பாள்.”

துரியோதனன் உடலே நடுங்கியது. தன்னைச் சமாளித்துக்கொள்ள வேண்டி அருகே இருந்த சுவரில் தன் கையை வைத்துக் கொண்டு சாய்ந்து கொண்டான். “ஆம், காஷ்யா, ஆம்!” என துக்கம் நிரம்பிய குரலில் கூறினான். ஆனால் சுஷர்மாவுக்கு இதைக் கேட்டதும் தாங்க முடியவில்லை. பெரிய குரலில் அழுத வண்ணம் அந்த அறையை விட்டே சென்றான். மீண்டும் பானுமதியின் நினைவுகள் முன்னோக்கியும், பின்னோக்கியும் சென்றன. அவளால் எதையும் சரியாக நினைவு கூர முடியவில்லை. ஜன்னி வேகத்தில் தன் கண்களைத் திறந்து கொண்டு நிலையில்லாமல் எங்கேயோ பார்த்தவண்ணம் ஏதேதோ சொல்லிப் பிதற்றினாள். கோட்டுக்கு வெளியே நின்றிருந்த மருத்துவர் அங்கே இருந்த வண்ணமே ஏதோ மருந்தைக் கலந்து உள்ளே பானுமதியின் அருகே இருந்த மருத்துவப் பெண்ணிடம் கொடுக்க அவள் அதை வாங்கி பானுமதியின் வாயில் ஊற்றினாள். பானுமதிக்குக் கொஞ்சம் தெளிவு வந்தாற்போல் இருந்தது.

“நம் குழந்தையை, நம் ஒரே மகனைப் பார்த்துக் கொள்ளுங்கள் பிரபு!” என்று சேர்ந்த வண்ணம் பேசியவள் அது தாங்க முடியாமல் மீண்டும் கண்களை மூடிக் கொண்டாள் அவள் குரல் இப்போது ரகசியம் பேசுவது போல் மிகவும் மெலிதாக ஆகி விட்டது. மிகப் பலஹீனமாக அவள், “கோவிந்தா! கோவிந்தா! நீ இன்னும் வரவில்லையா? வா…..கோவிந்தா….வா! வந்து…… என்னைக் காப்பாற்று! நான் உன் கோபியரில் ஒருத்தி! உனக்காகக் காத்திருக்கிறேன். கோவிந்தா! எங்கே இருக்கிறாய் நீ?” என்று படுக்கையில் எழுந்து அமர்ந்த வண்ணம் கிறீச்சிட்டுக் கத்தினாள் பானுமதி. அவள் கண்கள் அங்குமிங்கும் அலை பாய்ந்தன. அவள் குரலைக் கேட்டதுமே வந்தது போல் அப்போது அந்த அறைக்கதவைத் தடாரெனத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தான் வாசுதேவக் கிருஷ்ணன். அவன் சாதாரண ஆடை அணிந்திருந்தான். அவன் தலையில் கிரீடமோ, மயில் பீலியோ காணப்படவில்லை. அவன் மாலைகளையும் அணியவில்லை. ஆயுதங்களையும் தரிக்கவில்லை. செய்தியைக் கேட்டதும் உடனே ஓடோடி வந்தவன் போல் காணப்பட்டான். அவன் பின்னே ஜாலந்திராவும் வந்தாள். அவளும் பதட்டத்துடன் காணப்பட்டாள். கண்ணன் அந்த அறைக்குள் நுழைவதைக் கண்டதுமே துரியோதனன் மனம் குரோதத்திலும் ,ஆங்காரத்திலும் கொதித்தது. அவனுக்குக் கத்த வேண்டும் போல் இருந்தது. ஆனால் இப்போது இருக்கும் துயரமான நிகழ்வின் போது கத்துவது சரியாக இருக்காது எனத் தன்னைத் தானே மிகவும் கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டான்.

Wednesday, May 13, 2015

பானுமதியின் நிலைமை ---தொடர்ச்சி!

துரியோதனன் அந்தப்புரத்திலிருந்து வெளியே வந்த ஜாலந்திராவைப் பார்த்து, “ஜாலந்திரா! உள்ளே என்ன நடக்கிறது? பானுமதி எப்படி இருக்கிறாள்?” என்று கேட்டான்.

“எனக்குத் தெரியவில்லை என்னை உள்ளே அனுமதிக்கவில்லை! ஒரு புதிய பெண்மணி வந்து என்னை வெளியேறும்படி கட்டளை இட்டாள்.”

“அவள் இறந்துவிடுவாளா? செத்துக் கொண்டிருக்கிறாளா?”

தன்னுடைய உணர்ச்சிகளுக்கு இடம் கொடுத்திருந்த ஜாலந்திரா சற்றுத் தயங்கினாள். மிகவும் சிரமப்பட்டு தன் துக்கத்தை அடக்கிக் கொண்டாள். அதற்கு அவள் மிகவும் போராட வேண்டி இருந்தது. பின்னர் துரியோதனனைப் பார்த்து, “எனக்குத் தெரியாது! ஆனால் நான் இதை மட்டும் நன்கறிவேன். அப்படி ஒருவேளை அவள் இறந்து போனால் அதற்குக் காரணம் நீர் தான். மேலும் அதன் பின்னர் இத்தனை அழகான, அன்பான மனைவியை உங்களால் பெறவும் முடியாது. அது மட்டும் நிச்சயம்..” சொல்லிய வண்ணம் தன் தலையை ஒரு ஆட்டு ஆட்டி துரியோதனனுக்குத் தன் எதிர்ப்பைத் தெரிவித்த ஜாலந்திரா அங்கிருந்து வேகமாக வெளியேறினாள். அந்த மாளிகையின் முற்றத்தை அவள் தாண்டும்போது எதிரே ராணி காந்தாரி இரு சேடிப் பெண்கள் உதவி செய்ய அங்கே வந்து கொண்டிருந்ததைப் பார்த்தாள்.

தன் கணவன் திருதராஷ்டிரன் மேல் உள்ள அன்பைக் காட்டும் விதமாக அவனுடன் தன் திருமணம் நிச்சயிக்கப்பட்டதுமே நன்றாக இருந்த தன் இரு கண்களையும் ஒரு துணியால் இறுக்கிக் கட்டிக் கொள்ள ஆரம்பித்திருந்தாள் காந்தாரி. தன் கணவனுக்குக் கிடைக்காத ஒன்று தனக்கும் தேவை இல்லை என்பது அவள் எண்ணம். இப்போதும் அப்படியே கண்களைக் கட்டிய வண்ணம் சேடிகள் துணை செய்ய உடல் நலமில்லாமல் போராடிக் கொண்டிருக்கும் தன் மரும்கள் பானுமதியைப் பார்க்க வந்து  கொண்டிருந்தாள் காந்தாரி. அதைப் பார்த்த ஜாலந்திரா அங்கிருந்து வெகு வேகமாகச் சென்று கிருஷ்ணன் தங்கி இருந்த மாளிகையை அடைந்தாள். ஆனால் அவள் ஏமா’ற்றம் அடையும் விதமாகக் கிருஷ்ணன் அங்கே இல்லை. அவன் விராட அரசனைப் பார்க்கப் போயிருப்பதாகச் சொன்னார்கள்.

தன் விசாரத்திலும், பதட்டத்திலும் என்ன செய்வது எனப் புரியாமல் தவித்த ஜாலந்திரா நேரே பாண்டவர்கள் தங்கி இருந்த மாளிகையை நோக்கிப் போனாள். அங்கு குந்தியிடமும், திரௌபதியிடமும் பானுமதியின் நிலைமை பற்றிச் சொன்னாள். மேலும் திரௌபதியிடம் கிருஷ்ணனை உடனே அழைத்துவர எவரையாவது அனுப்பவும் வேண்டினாள். குந்தியும் திரௌபதியும் ஜாலந்திராவின் செய்தியைக் கேட்டதும் அவர்களும் பானுமதியைச் சென்று பார்க்கக் கிளம்பினார்கள். நேரம் சென்று கொண்டிருந்தது. பானுமதியின் கதறல்கள் குறைந்து வந்தன. ஆனால் அவளுக்குக் கடுமையான ஜ்வரம் ஏற்பட்டது. தாங்கமுடியாத காய்ச்சலினால் தவித்தாள். அவள் மனம் அங்கும் இங்குமாகச் சுற்றிக் கொண்டிருந்தது. கிட்டத்தட்ட ஜன்னி கண்ட நிலைமையை அடைந்தாள் பானுமதி. இந்தச் செய்தியை அறிந்ததும் உடனே அங்கு தலைமை மருத்துவர் அழைக்கப்பட்டார்.

Friday, May 8, 2015

பானுமதியின் நிலைமை!

அளவில்லா பயத்திலும், அருவருப்பிலும் திகைத்துத் திணறினாள் பானுமதி. அவளால் மேற்கொண்டு எதையும் நினைக்கவே முடியாமல் திகைத்துப் போயிருந்தாள். மெல்ல மெல்லத் தன் அந்தப்புரத்துக்குத் திரும்பினாள். தள்ளாடியவண்ணம் வந்தவளுக்குக் கண்ணெதிரே ஒரே இருட்டாகக் காட்சி தந்தது. எங்கும் இருட்டு அப்பிக் கிடந்தது. தன் கண்களைக் கசக்கிக் கொண்டு பார்த்தவளுக்குத் தான் தன் படுக்கை அறையில் இருப்பது தெரிய வந்தது. இவ்வளவு தூரம் சமாளித்துக் கொண்டு அங்கே எப்படி வந்தாள் என்பதே அவளுக்குப் புரியவில்லை. மெல்லப் படுக்கையில் அமர்ந்தவளுக்கு துக்கம் தொண்டையை அடைக்க, பெரிதாக சத்தம் போட்டு விம்மி விம்மி அழ ஆரம்பித்தாள். அவளுக்கு ஒரு விஷயம் தெள்ளத் தெளிவாகப் புரிந்து விட்டது. அவளுக்கோ அவள் மகனுக்கோ எதிர்காலம் என்று எதுவும் கிடையாது.

இத்தனை நாட்களாக துரியோதனன் செய்த கொடுமைகளை எல்லாம் பொறுத்துக் கொண்டு அவள் பொறுமையுடன் காத்திருந்ததே கடைசியில் எப்படியேனும் ஒரு நாள் அவள் கணவன் அவள் அன்பைப்புரிந்து கொள்வான்; தானும் அவள் மீது அன்பு செலுத்த ஆரம்பிப்பான் என்னும் நம்பிக்கை ஒன்றினால் தான் அவள் அனைத்தையும் சகித்துக் கொண்டிருந்தாள். அதிலும் இப்போது அவள் கணவனுக்கு ஹஸ்தினாபுரத்து அரியணை உரிமையைத் தான் வாங்கிக் கொடுத்ததில் அவன் மிகவும் மகிழ்ந்து தன்னைக் கொண்டாடுவான் என்றே எதிர்பார்த்தாள் இதன் மூலம் அவன் அவள் மேல் அன்பு செலுத்த ஆரம்பிப்பான் என்றும் எண்ணினாள். ஆனால்?? ஆனால்?? உண்மை கசந்தது அவளுக்கு! தான் தோற்றுவிட்டோம் என்பதைப் புரிந்து கொண்டாலும் அவளுக்கு அதன் நிச்சயம் கசந்தது. இனி இழக்க ஒன்றுமே இல்லை. அனைத்திலும் தோற்றுவிட்டாள். இனி நம்பிக்கை என்பதற்கு இடமே இல்லை. அவள் கணவனின் அன்பு அவளுக்குக் கிடைக்கப் போவதில்லை. அவள் தோற்று விட்டாள். மிக மோசமாகத் தோற்றிருக்கிறாள்.

கோவிந்தா தன் வாக்குறுதியை நிறைவேற்றினான் என்றாலும் கூட அவள் மகனுக்கு ஹஸ்தினாபுரத்தின் அரியணை உரிமை கிடைக்குமா என்பது சந்தேகமே! அதை நினைக்க நினைக்க அவள் மனமே வெடித்து விடும் போல் இருந்தது. தலையணைகளில் முகத்தைப் புதைத்துக் கொண்டு நெஞ்சே வெடித்து வெளியே வந்துவிடும் போல் குமுறினாள். திடீரென அவளுக்கு யாரோ அவளைப் பார்ப்பது போல் தோன்றியது. அந்த அறையின் மூலையில் யாரோ நிற்கின்றனர். முதுகுத் தண்டில் சில்லிட்டது பானுமதிக்கு. நிமிர்ந்து யார் அது எனப் பார்க்கவேண்டும் என்று ஆவல் தான். ஆனால் பயமாகவும் இருந்தது அவளுக்கு. ஆனால் அவளால் ஆவலை அடக்க முடியவில்லை. மெல்ல தலையைத் தூக்கி நிமிர்ந்து பார்த்தவளுக்கு மூச்சே நின்றுவிடும் போலிருந்தது. யார் இவன்? ஒரே ஒருமுறை சிறு வயதில் உயிருக்குப் போராடும் நோயினால் தவித்தபோது பார்த்திருக்கிறாள். இந்த நீண்ட முகம்! கொடூரமான முகபாவம்! அவள் கிட்டத்தட்ட செத்துவிடுவாளோ என்று இருந்த அந்த மிகச் சிறு வயதில் பார்த்திருக்கிறாள் இந்த ஆளை!

சுருக்குப் போட்ட கயிற்றைத் தன் கைகளில் வைத்துக் கொண்டு மிகவும் கறுப்பான எருமை மாட்டின் மேலே அமர்ந்த வண்ணம் அவளையே பார்த்துக் கொண்டிருக்கும் இந்த உருவம்! ஆம், ஆம் அவனே தான்! அவனே தான்! கடவுளே! இவன் வந்துவிட்டானே! இப்போது அவளைக் காப்பாற்றும் ஒரே சக்தி, கோவிந்தா தான்! ஆம், கோவிந்தா ஒருவனால் தான் அவளைக் காக்க முடியும்! இந்தத் தூக்குக்கயிறில் மாட்டிக் கொள்ளும் விதியிலிருந்து அவளைக் காக்கக் கூடியவன் கோவிந்தா மட்டுமே! அவனிடம் சென்று விட்டாளானால் அவளுக்கு எதுவும் நேராது! கோவிந்தா! கோவிந்தா!  என்னைக் காப்பாற்று! என்னைக் காப்பாற்று கோவிந்தா!அவள் உரக்க அழ நினைத்தாள். ஆனால் அவளால் முடியவில்லை. ஆகவே கோவிந்தா, கோவிந்தா என முனக ஆரம்பித்தாள். படுக்கையிலிருந்து எழுந்து மெல்ல மெல்ல கோவிந்தாவிடம் மட்டும் போக முடியுமானால்! ஆம், அப்படித் தான் செய்ய வேண்டும்! படுக்கையிலிருந்து எழுந்தாள் பானுமதி. அந்த அறையிலிருந்து ஓட்டமாக ஓட நினைத்தாள். ஆனால் எழுந்தவளுக்குக் கால்கள் பூமியில் பதியாமல் தள்ளாடின. அவளால் ஓர் அடி கூட எடுத்து வைக்க முடியவில்லை. மெல்ல முயற்சி செய்தவள் அந்த முயற்சியில் தோற்றுப்போய் அப்படியே கீழே விழுந்தாள்.

“கோவிந்தா! கோவிந்தா! என்னைக் காப்பாற்று! இங்கே யமதர்மராஜா வந்துவிட்டான்! ஆம்! மரணத்தின் தலைவன் என்னை அழைத்துச் செல்ல வந்திருக்கிறான். நான் போக மாட்டேன்! கோவிந்தா! நீதான் என்னைக் காப்பாற்ற வேண்டும். உதவி செய்! எனக்கு உதவி செய்! கோவிந்தா! என் அருமை சகோதரா! எனக்கு உதவி செய்!” புலம்பினாள் பானுமதி. அப்போது அந்த மரண தேவன் அவள் பக்கம் வருவதற்காக ஓரடி முன்னால் எடுத்து வைத்தாற்போல் தோன்றியது அவளுக்கு. அவளுக்குத் தன் உடலில் உணர்ச்சியே இல்லாமல் மரத்துப் போய்விட்டாற்போல் இருந்தது. அவள் நாடி,நரம்புகளெல்லாம் மரத்துப் போயின. பயத்தில் அவள் க்ரீச்சிட்டு அலறினாள். அப்படியே மயக்கத்தில் ஆழ்ந்து போனாள்

அடுத்த அறையில் இருந்த ரேகாவுக்கு பானுமதியின் அலறல் குரல் காதில் விழ அவள் ஓட்டமாக ஓடோடி வந்தாள். அவளுக்கு பானுமதி கட்டிலில் இருந்து கீழே விழுந்து கிடப்பதும், அவள் நினைவின்றி இருப்பதும், அந்த நிலையிலும் முனகிக் கொண்டு இருந்ததையும், அவள் வலியால் துடிப்பதையும் கண்டாள். உடனே ஓடோடி மருத்தவச்சியையும், உதவிக்கு ஆட்களையும் அழைக்க வேண்டிச் சென்றாள்.  சற்று நேரத்தில் தன் குளியலை முடித்துக் கொண்ட ஜாலந்திராவுக்கும் பானுமதியின் பயம் கலந்த அலறல் காதில் விழுந்தது. அவள் தன் அறையில் தான் இருக்கிறாள் என்பதையும் புரிந்து கொண்டாள். தன் அருமைச் சகோதரியிடம் தீவிரமான அன்பு பூண்டிருந்த ஜாலந்திரா தன் சகோதரிக்கு ஏதோ ஆபத்து எனப் புரிந்து கொண்டு உடனே அவள் அறைக்கு விரைந்தாள். இத்தனைக்கும் அவள் முழுமையாக் ஆடை அணியக் கூட இல்லை. என்றாலும் தமக்கைக்கு ஆபத்து என்ற ஒரே விஷயமே அவள் மனதில் இருந்தது.

ஜாலந்திரா சென்ற போது அவள் சகோதரியின் அந்தப்புர அறை மூடி இருந்தது.  சேடிப் பெண்கள் அங்கும் இங்குமாக ஓடிக் கொண்டிருந்தனர். சிலர் மருந்துகளையும், சிலர் பெரிய பெரிய பாத்திரங்களில் வெந்நீரையும் எடுத்துக் கொண்டு சென்றார்கள்.  என்ன நடக்கிறது இங்கே? ஜாலந்திராவுக்கு எதுவும் புரியவில்லை. அந்த அறைக்கதவைத் தட்டினாள். ஆஜானுபாகுவான ஒரு வயதான மூதாட்டி அந்த அறைக்கதவைத் திறந்தாள். இவளை இதற்கு முன்னர் ஜாலந்திரா இங்கே பார்த்ததே இல்லை. அவள் கதவைத் திறந்தவுடன் கிடைத்த இடைவெளியில் ஜாலந்திரா உள்ளே பார்த்தாள். அவள் தமக்கையின் ஆடைகள் விலக்கப்பட்டுக் கட்டிலில் கிடத்தப்பட்டிருந்தாள். மூச்சு விடவும் கஷ்டப்பட்டுத் திணறிக் கொண்டிருந்த பானுமதி விடாமல் வேதனையில் அலறிக்கொண்டும் இருந்தாள். அவள் முகமெல்லாம் வியர்த்துப் போய்த் தலைமயிர்கள் எல்லாம் பரந்து முகத்தில் சில கற்றைகள் ஒட்டிக் கிடந்தன.

அவ்வளவு வேதனைக்கும், கத்தலுக்கும் இடையில் அவள் சகோதரி, “கோவிந்தா! என்னைச் சாக அனுமதிக்காதே! என் மகனையும் காப்பாற்றிவிடு!” என்று அலறினாள். ஜாலந்திராவுக்கு நிலைமை புரிந்தது.  பயத்தில் அவள் முகம் வெளுத்தது. தன் கைகளால் தன் முகத்தை மூடிக் கொண்டாள். அவள் சகோதரி படும் வேதனையைத் தாங்க அவளால் முடியவில்லை. அப்போது அந்த ஆஜானுபாகுவான வயதான மூதாட்டி ஜாலந்திராவைப் பார்த்து மெல்லிய குரலில், “உன் போன்ற திருமணமாகாத இளம்பெண்கள் பார்க்கக் கூடிய காட்சி அல்ல இது; நீ இப்போது இங்கே இருக்கக் கூடாது. கிளம்பு உன் அறைக்கு!” என்று சொல்லியவண்ணம் அந்த அறைக்கதவைச் சார்த்தினாள்.  ஜாலந்திராவுக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. துக்கம் பொங்கியது. ஆனால் அவளுடைய வருத்தத்தையோ, துக்கத்தையோ காட்டிக் கொண்டிருக்க இது சமயம் அல்ல.

பானுமதி உண்மையிலேயே இப்போது வாழ்வா, சாவா என்னும் நிலையில் இருக்கிறாள். அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை எவராலும் கணிக்க இயலாது. ஆனால் அவள் மிகவும் நேசிக்கும் அவள் சகோதரன் கிருஷ்ண வாசுதேவனைச் சந்திக்க விரும்புகிறாள்.  அதற்கு ஆவன் செய்ய வேண்டும். குளித்துவிட்டு அறையின் தனிமையில் அணியும் ஆடையை மாற்றவோ, ஈரம் சொட்டிய தன் தலையைத் துடைத்துக் கட்டிக் கொள்ளவோ முயலாமல் ஜாலந்திரா அந்தப்புரத்தை விட்டு வெளியேறினாள். தாழ்வாரத்தில் அவள் சகோதரி கணவன் துரியோதனனையும், தன் சகோதரன் சுஷர்மாவையும் அவள் கண்டாள்.  அதற்குள்ளாக துரியோதனனுக்குச் செய்தி போயிருக்க வேண்டும் போல! மேலும் பானுமதியின் அலறல்களும் அங்கே வரை கேட்டுக் கொண்டிருந்தன. ஆகவே அவன் பொறுமையின்றித் தவித்துக் கொண்டிருந்தான்.

Wednesday, May 6, 2015

பானுமதியின் கொதிப்பு!

அளப்பரிய சந்தோஷத்தில் ஆழ்ந்து போயிருந்தாள் பானுமதி. இவ்வுலகமே அவள் கண்களில் அழகாகவும் புதுமையாகவும் தோற்றியது. பார்க்குமிடமெல்லாம் சந்தோஷம் நிரம்பி வழிவதாகத் தெரிந்தது அவளுக்கு! தன்னை விட அதிர்ஷ்டசாலியும் உண்டா என நினைத்ததோடு அல்லாமல் உயிர் வாழ்வதில் புது ருசியும் உண்டாகி இருந்தது அவளுக்கு. வாசுதேவக் கிருஷ்ணன், அவள் சகோதரன் அவளுக்கு வாக்குக் கொடுத்து இருக்கிறான். அவள் பாதுகாவலன், அவள் கடவுள், அவள் நண்பன் எல்லாவற்றுக்கும் மேல்! அவன் அவளுக்கு வாக்குக் கொடுத்துவிட்டான்! அவள் கணவன், அவள் தலைவன் துரியோதனன் ஹஸ்தினாபுரத்தை ஆளுவான்! எத்தகைய வாக்குறுதி! ஆஹா! இனி அவள் கணவனின் எதிர்காலத்தில் எவ்வித பயங்கரங்களும், ஆபத்துக்களும் இராது! அவன் தான் ஹஸ்தினாபுரத்தின் அரசனாகப் போகிறானே! அப்புறம் என்ன?

இது எப்படி நடக்க முடியும்? எவ்வாறு நடைபெறும் என்றெல்லாம் அவள் சிறிதும் யோசித்துப் பார்க்கவே இல்லை. கிருஷ்ணன் சொல்லிவிட்டான்! அவ்வளவே! பானுமதிக்கு அவன் மேல் அளவு கடந்த நம்பிக்கை இருந்தது.அவனால் இதைச் செய்ய முடியும்! அதோடு பல அதிசயங்களையும் நிகழ்த்தியவனுக்கு இந்தச் சின்ன விஷயத்தை நிறைவேற்ற முடியாதா? அதோடு வாக்குக் கொடுத்த கிருஷ்ணனுக்கு அதை எவ்வகையிலேனும் நிறைவேற்றித் தர வேண்டும் என்னும் எண்ணம் இருக்காதா என்ன?  யோசனையில் இருந்தவளுக்குச் சட்டெனத் தன் வயிற்றில் குழந்தை புரள்வது அவளுக்குத் தெரிந்தது. வேகமாகப் புரண்டது குழந்தை! பானுமதியின் மனம் நெகிழ்ந்தது. குழந்தை பிறக்கும் முன்னரே அதன் மீது அளவில்லா அன்பு கொண்டிருந்த அவள் இப்போது பெரு மகிழ்ச்சி அடைந்து அதோடு பேசவும் ஆரம்பித்தாள்.

“எப்படி இருக்கிறாய்? என் அருமை மகனே! எதற்கும் கவலைப்படாதே! வேளை வரும்போது நீ தான் இந்தக் குருவம்சத்து அரியணையில் அமரப் போகிறாய்!” என்றவண்ணம் சிரித்தாள். அவள் கண்ணெதிரே தானும் ஹஸ்தினாபுரத்துப் பட்டமஹிஷியாக அரியணையில் அமர்ந்திருப்பது போன்ற காட்சி தோன்றியது. அவள் மிதமிஞ்சிய மகிழ்ச்சியில் மிதந்தாள். தன் ஆனந்தத்தை எல்லோருடனும் பகிர்ந்து கொள்ளவேண்டும் போல் இருந்தது அவளுக்கு. அவள் சகோதரி ஜாலந்திராவுடன் பேசலாமெனில் இரவு முழுவதும் வெளியில் கழித்திருந்தாள் அவள். ஆகையால் இப்போது நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தாள்.  ஜாலந்திரா குளிப்பதற்கான ஏற்பாடுகளை ரேகா கவனித்துக் கொண்டிருந்தாள். அவள் ஏற்கெனவே பானுமதியோடு எல்லா விபரங்களையும் பேசியாகி விட்டது. ரேகா முன்னிலையில் தானே பானுமதி ஜாலந்திராவிடம் வாக்குறுதி வாங்கிக் கொண்டாள். அவர்களுக்குள் ஒளிவு, மறைவு ஏதும் இல்லை. மேலும் கிருஷ்ணனை ஜாலந்திரா சந்திக்கப் போகையில் கூடச் சென்றதும் ரேகாதான். அங்கே கிருஷ்ணன் ஜாலந்திராவுக்கு வாக்குறுதி கொடுக்கையில் அருகில் இருந்த ஒரே சாட்சியும் ரேகாதான்.

ஆகவே இப்போது நம் சந்தோஷத்தை யாரிடம் பகிர்ந்து கொள்வது? யோசித்தாள் பானுமதி! அவள் கணவனிடம் பகிர்ந்து கொள்ள முடியாது. அவன் மிகவும் ஏமாற்றத்துடன் வெறுப்புடன் பரிதாபமான நிலையில் காணப்படுகிறான். அவனைத் தவிர வேறு யாரிடம் சொல்லலாம்? அவள் கணவன் அன்பு செலுத்தத் தகுதி வாய்ந்தவனே! அவளிடமும் அன்பு உண்டு அவனுக்கு! ஆனால் அவனுக்குக் கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் அனைத்தும் தட்டிப்பறிக்கப்படவே அவன் மனதில் வெறுப்பும், குரோதமும் புகுந்து விட்டது. நடக்கவே முடியாத சம்பவங்கள் நடந்து அவனுக்குக் கிடைக்கவேண்டிய அரசுரிமையைப் பறித்து விட்டது. ஐந்து சகோதரர்களும் மறைந்து வாழ்ந்த இடத்திலிருந்து வெளிவரக் காரணமாக இருந்தவன் கிருஷ்ண வாசுதேவன் என்றே அனைவரும் சொல்கின்றனர். திரௌபதியின் சுயம்வரத்தில் அவர்கள் கலந்து கொண்டு வெற்றி அடையக் காரணம் ஆனவனும் கிருஷ்ண வாசுதேவன் தான் என்றே அனைவரும் சொல்கின்றனர். ஆகவே கிருஷ்ணவாசுதேவனையும் அவன் சொல்லும் வாக்குறுதியையும் துரியோதனன் நம்பவும் மாட்டான். அதை ஏற்கவும் மாட்டான்.

அவளும் அவளால் இயன்றவரையிலும் அவள் கணவனுக்கு எதிராக இருக்கும் விஷயங்களைச் சேகரித்துக் கொண்டு தான் இருந்தாள். அவளிடம் அவள் கணவன் தனிமையில் வந்து கடுமையான வார்த்தைகளாலும், நடத்தையாலும் அவளைத் துன்புறுத்திச் சென்றதிலிருந்து அவள் இதே வேலையாக இருந்தாள்.  அவனுக்கு நியாயமாகக் கிடைக்கவேண்டிய சிங்காதனம் கிடைக்காததால் தானே அவன் இத்தனை கடுமையாக நடந்தான்? அவை எல்லாம் மன்னிக்கப்படக் கூடியதே! பானுமதி மிகவும் ஆவலாக இருந்தாள். அவனுக்கு இழைக்க இருந்த துரோகத்திலிருந்து அவனை விடுவித்தது குறித்து அவளுக்கு மிகவும் நிம்மதியாக இருந்தது. அவனையும் இந்தக் கஷ்டத்திலிருந்து விடுவிக்க நினைத்தாள்  ஆம், இதைத் தன் கணவனுடன் தான் பகிர்ந்து கொள்ள வேண்டும். கொஞ்ச நேரம் வரைக்கும் பானுமதி அப்படித் தான் நினைத்தாள். ஆனால்????? அவள் மீண்டும் சிந்திக்க ஆரம்பித்தாள்! இது சரியா? அவள் கணவனுடன் இதைப் பகிரலாமா?

இதில் நன்மை ஏற்படுமா? துரியோதனனுடன் பகிர்ந்து கொள்வது புத்திசாலித்தனமாக இருக்குமா? கோவிந்தன் தனக்கு வாக்குக் கொடுத்திருப்பதை துரியோதனன் அறிய நேர்ந்தால் சந்தோஷம் அடைவானா? அவளை….பானுமதியை மன்னித்துவிடுவானா? பானுமதி அவனை மதிக்கவில்லை என்பதை மறந்துவிடுவானா? இதை எல்லாம் நினைத்துக் கொண்டிருந்த பானுமதிக்குத் திடீர் எனத் தன் நினைப்புகள் அனைத்தும் சிறுபிள்ளைத்தனமாகத் தோன்றவே வாய் விட்டுச் சிரித்தாள்.  ஏனெனில் அவளுக்கு நிச்சயமாகத் தெரியும்! அவள் கணவன் அவளை நினைத்துப் பெருமைப்படுவான். கிருஷ்ண வாசுதேவனிடம் வாக்குறுதி வாங்கியதில் சந்தோஷமே அடைவான்! உண்மையில் அவன் உயிரை அன்றோ அவள் காப்பாற்றி விட்டாள்! துரியோதனன் பெருமிதமே அடைவான்!

அவள் தன் அந்தப்புரத்திலிருந்து வெளியே வந்து தாழ்வாரத்தில் நடக்க ஆரம்பித்தாள். அப்போது அவள் கணவனுடன் யாரோ மிகவும் அந்தரங்கமாகப்பேசும் குரல் கேட்டது. யாரென்று உற்றுக் கவனித்தாள். அவள் சகோதரன் சுஷர்மா தான் துரியோதனனுடன் மிகவும் மெல்லிய குரலில் பேசிக் கொண்டிருந்தான். அவள் அங்கேயே நின்றாள். ஆங்காங்கே ஓரிரு பேச்சுக்கள் மட்டும் காதில் விழுந்தன என்றாலும் அவள் அதைக் கேட்டதுமே அங்கேயே நிலைகுத்தி நின்றுவிட்டாள்.  “பிரபுவே, உங்களுக்கு விருப்பமிருந்தால், நீங்கள் விரும்பினால் ஜாலந்திராவின் சுயம்வரம் அடுத்த வருஷத்துக்குள்ளேயே நடந்துவிடும். நடத்துவோம்!” என்றான் சுஷர்மா!

“சுஷர்மா! உன் தந்தை அப்படி நினைத்தால் எனக்கு ஒன்றும் ஆக்ஷேபணை இல்லை!” மெலிதாகச் சிரித்தபடி சொன்னான் துரியோதனன். பானுமதி தன் நெஞ்சைக் கைகளால் அமுக்கிக் கொண்டு தள்ளாடினாள். அவள் முகம் வெளுத்தது. பக்கத்திலிருந்த கைப்பிடிச் சுவரைப் பிடித்துக் கொண்டு நிற்க முயன்றாள்.  துரியோதனனுக்கு சுஷர்மா பதில் சொன்னதையும் கேட்டாள்:” என் இரு சகோதரிகளும் ஒன்றாக சந்தோஷமாக இருக்கலாம். அவர்களுக்குள் பிரச்னைகள் வர வாய்ப்பில்லை; அதோடு உங்களுக்கும் ஜாலந்திராவை மிகவும் பிடித்திருக்கிறது!” என்றான். இதைக் கேட்டதுமே எங்கிருந்தோ ஒரு குளிர் பானுமதிக்குள் புகுந்து அவளை அங்கேயே உறைய வைத்தது. அதற்கு துரியோதனன், “ஆம், ஆம், பிரம்மதேவன் ஜாலந்திராவை சூரிய சந்திரரின் கிரணங்களாலேயே செய்திருப்பான் போல ஒளிர்கிறாள். ஆனால் அவளுடைய மனோபாவம் தான் மிகவும் மோசமாக இருக்கிறது! சில சமயங்களில் நிதானம் தவறி நடக்கிறாள். சிறு பெண் தானே! போகப்போகச் சரியாகிவிடுவாள்!” என்றான்.

அதற்கு சுஷர்மா துரியோதனனை அவள் மணந்து கொண்ட பின்னர் எல்லாம் சரியாகிவிடும் என்றான். மேலும் இப்படிப் பட்ட பெண்கள் துரியோதனனைப் போன்ற அழகான வடிவுடைய  அதே சமயம் அன்பான கணவன் கிடைத்தான் எனில் காலப் போக்கில் மாறிவிடுவார்கள் என்றும் சொன்னான். பானுமதி ஆணி அடித்தது போல் அங்கேயே நின்றிருந்தாள்

Sunday, May 3, 2015

கண்ணன் உறுதி! ஜாலந்திரா மகிழ்ச்சி!

ஜாலந்திராவின் முகம் சோகத்தில் வெளுத்தது. “நான் மாபெரும் தவறு செய்து விட்டேன். வ்ருகோதர அரசனுக்குத் தீங்கிழைத்து விட்டேன்.” சொல்லிய வண்ணம் அழுதாள் ஜாலந்திரா. “ஆனால்…ஆனால்…..நான் இதைச் செய்தே தீரவேண்டிய நிலையில் இருந்தேன். என் சகோதரிக்காக இதை நான் செய்தே தீரவேண்டிய சூழ்நிலை! அவள் தன் கணவனுக்கு எவ்வகையிலேனும் உதவியாக இருக்க நினைத்தாள். அதன் மூலம் பிறக்கப் போகும் தன் மகன் ஹஸ்தினாபுரத்து அரியணைக்கு அடுத்த வாரிசாக ஆவான் என்னும் நம்பிக்கை அவளுக்கு இருக்கிறது. வாசுதேவக் கிருஷ்ணா! உம்மைச் சந்திக்க அவள் கணவன் தடை போட்டதில் இருந்து அவள் நிலைமை மிகப் பரிதாபகரமாக ஆகிவிட்டது. ஆகவே எவ்வகையிலேனும் உமக்கு இந்தச் செய்தியை அனுப்ப நினைத்தாள். அவள் என் மேல் மிகவும் நம்பிக்கை வைத்துச் செய்தியைச் சேர்க்கச் சொல்லி இருக்கையில் அவள் நம்பிக்கையை நான் எப்படிக் குலைக்க முடியும்?”

“ஆக, நீ உன்னை நீயே ஏமாற்றிக் கொண்டாய்!” என்று கிருஷ்ணன் புன்னகையோடு சொன்னான். மீண்டும் அவள் அழகிய கண்கள் கண்ணீர்க் குளமாக மாறின. “என்னைப் போன்ற துர்பாக்கியசாலி எவரும் இல்லை!” என்றும் தழுதழுக்கும் குரலில் கூறினாள்.

“அழாதே! ஜாலந்திரா! அழாதே!” கிருஷ்ணன் அவள் துக்கத்தைப் புரிந்து கொண்டவனாகக் காணப்பட்டான் “உன்னுடைய பிரச்னைகள் எனக்குப் புரிகின்றன. கஷ்டங்களும் தெரிகின்றன. ஆனால் உனக்கு நான் இதை மட்டும் உறுதியாகச் சொல்ல முடியும்: எங்கே இருந்தாலும் சரி, என்னவாக இருந்தாலும் சரி பீமனைப் போன்ற நேர்மையானவனைக் காண்பது அரிது. மிகவும் தைரியமானவனும் கூட. அவனுடன் வாழ்வது என்பது ஒரு சந்தோஷமான கனவைப் போன்றது. அவனுடன் வாழக் கொடுத்து வைத்திருக்க வேண்டும். எனக்கு அது மட்டும் நிச்சயமாய்த் தெரியும்.”

தனக்குள் பொங்கி வந்த அழுகையை அடக்கிக் கொண்டாள் ஜாலந்திரா! “பிரபுவே, நீங்கள் ஒரு முறை என் சகோதரியை மரணத்திலிருந்து காப்பாற்றியதோடு அல்லாமல் அவளை உங்கள் தங்கையாக அருமை சகோதரியாகவும் ஸ்வீகரித்துக் கொண்டீர்களாம். என்னையும் உங்கள் சகோதரியாக ஏற்றுக் கொள்ளுங்கள்!”

“அதெல்லாம் சரி, ஜாலந்திரா! பீமன் எங்கே இருந்தாலும், எப்படி இருந்தாலும், என்னவாக இருந்தாலும் நீ அவனை மணக்கத் தயாராக இருக்கிறாயா? இது  உறுதியா?”

“ஆம், ஐயா! நான் உறுதிமொழி கொடுக்கிறேன். இந்த ஜன்மத்தில் மட்டுமல்ல, நான் எத்தனை ஜன்மங்கள் எடுத்தாலும் இவரைப்போன்ற மணாளன் எனக்குக் கிடைக்க மாட்டார்.”

“அதுதான் சரி! நல்லதும் கூட! நீ பீமனுடன் வாழப்போகும் வாழ்க்கையில் எத்தனை கஷ்டங்களைச் சந்தித்தாலும் நான் உன்னுடன் கூடவே இருப்பேன். இனி நீயும் என் சகோதரிகளில் ஒருத்தியே! பானுமதியைப் போல் நீயும் என் அருமைத் தங்கையாவாய்! சரி, அதெல்லாம் போகட்டும்! இப்போது நீ நன்றாக விஷயத்தைப் புரிந்து கொண்டிருப்பாய் என எண்ணுகிறேன். இத்தனைக்குப் பிறகும் நீ கேட்டிருக்கும் வாக்குறுதியை பானுமதிக்காக நான் கொடுக்க வேண்டும் என எதிர்பார்க்கிறாயா?” என்று கேட்டான் கிருஷ்ணன்.

ஜாலந்திராவின் உள்ளம் தத்தளித்தது என்பது அவள் விட்ட பெருமூச்சுகளிலும் அவள் மார்பு எழுந்து தாழ்ந்ததிலிருந்தும் தெரிந்தது. மிகவும் சிக்கலான பிரச்னையில் அவள் மாட்டி இருக்கிறாள் என்பதைக் கண்ணன் நன்கு புரிந்து கொண்டிருந்தான். கண்ணனின் கேள்வியை அடுத்து அவள் கண்ணனை அவன் கண்களுக்குள்ளேயே உற்று நோக்கினாள். அந்தப் பார்வையில் அவள் மனது புரிந்தது கண்ணனுக்கு! மீண்டும் பெருமூச்சு விட்ட ஜாலந்திரா மேலே பேசத் தொடங்கினாள்.

“பிரபுவே! இது உங்கள் முடிவுக்கே நான் விட்டு விடுகிறேன். என்ன செய்யவேண்டும் என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள். நான் என்ன செய்ய வேண்டும் என்பதையும் நீங்களே சொல்லுங்கள். என்னிடம் இவ்வளவு கருணை காட்டும் நீங்கள் செய்யும் முடிவை நான் ஏற்கிறேன். ஆனால் பிரபுவே! என் சகோதரி அங்கே மிகவும் ஆவலுடன் தங்கள் வாக்குறுதிக்காகக் காத்திருப்பாள். சாப்பிட்டிருக்க மாட்டாள்; தூங்கி இருக்க மாட்டாள்.  நீங்கள் மட்டும் அவளுக்கு வாக்குக் கொடுக்கவில்லை எனில் அவள் அடுத்த கணமே இறந்து விடுவாள். ஐயா, அவள் எத்தகைய நிலைமையில் இருக்கிறாள் தெரியுமா? இப்போது நான் என்னுடைய சுயநலத்துக்காக அவள் நலனைப் பலியிட விரும்பவில்லை. என் சகோதரியின் எதிர்காலம் என்னால் பாழ்பட்டுப் போவதை நான் விரும்பவில்லை.”

“நல்லது; நல்லது! நன்று சொன்னாய் ஜாலந்திரா! நீ பானுமதிக்கு நான் கொடுக்கும் செய்தியைப் போய்ச் சொல்! துரியோதனன் ஹஸ்தினாபுரத்துக்கு அரசனாவான் என்னும் உறுதிமொழியை நான் அளித்ததாகச் சொல்!”

ஜாலந்திரா நிம்மதிப்பெருமூச்சு விட்டாள். “பிரபுவே, மிக்க நன்றி. நன்றி. எவ்வாறு உங்களுக்கு நன்றிக்கடனைச் செலுத்துவேன்?”

“நீ எனக்கு நன்றி சொல்லாமல் இருந்தாலே நன்றிக்கடனைச் செலுத்தியது ஆகும். சரி, இப்போது பீமனை அழைக்கும் நேரம் வந்து விட்டது!” என்றான் கண்ணன்.

கண்ணனே முன்னால் சென்று கதவுகளை நன்கு திறந்து பீமனை அழைத்தான். “பீமா, உள்ளே வா! இதோ இந்தப் பெண்மணியை நீ அறிவாயா?” என்று கேட்டான். பீமன் வாய் விட்டுச் சிரித்தான். “இந்தச் சேடிப்பெண்ணையா தெரியாது? வெட்கமே அறியாதவள்! இவள் எனக்கு வேறு மாற்று வேலை எதையுமே வைக்கவில்லை. உத்கோசகத்தில் இருக்கையில் வேண்டுமென்றே கங்கையில் மூழ்குவது போல் நாடகம் ஆடினாள். அதோடு மயங்கி விட்டது போலும் நடித்தாள். பின்னர் இவளை நான் தோள்களில் தூக்கிச் செல்லும் நிலைமை ஏற்பட்டு விட்டது!”

“பீமா! பீமா! இவள் என்னைத் தன் சகோதரனாக ஏற்றுக் கொண்டிருக்கிறாள். இதை நீ அறிவாயா?”

பீமன் தோள்களைக் குலுக்கிக் கொண்டு விரக்தி அடைந்தவன் போல் நடித்துக் கொண்டு தன் கைகளை விரித்தான். “ கடவுளே, கடவுளே, இந்த மனிதனிடமிருந்து என்னைக் காப்பாற்று. தன்னருகில் வரும் எந்தப் பெண்ணையும் எப்படியோ மயக்கித் தனக்கு சகோதரியாக்கிக் கொண்டு விடுகிறான். அப்புறம் அந்தப் பெண்கள் தங்கள் கணவனை விட இந்தச் சகோதரனையே பெரிதாக நினைக்க ஆரம்பிக்கின்றனர். இவனுக்காக எதையும் செய்யத் தயாராகின்றனர்!”

“அது சரி அப்பா! உன்னைப் பற்றி என்ன சொல்கிறாய்? நீ இந்தப் பெண்ணின் கணவனாகப் போகிறாயா? ஆனால் உனக்கு அந்தத் தகுதி இல்லை என்பதை நான் நன்கறிவேன். ஆனால் இந்தப் பெண்ணோ உன் மேல் மோகமாக அன்றோ இருக்கிறாள்! ஆகவே இவளின் கணவனாக ஆவதை விடப் பெரிய வேலை வேறொன்றும் உனக்கு இல்லை!” இதைச் சொன்ன கண்ணன் ஜாலந்திரா பக்கம் திரும்பினான். “இதோ பார் காஷ்யா! உனக்கு ஏதேனும் பிரச்னைகள் தீர்க்கமுடியாமல் ஏற்பட்டால் சற்றும் தயங்காமல் என்னிடம் வா! அப்போது இதோ இந்த பீமன் உன்னிடம் என்னைப்பார்க்கக் கூடாது என்று சத்தியம் வாங்கி இருந்தாலும் லக்ஷியம் செய்யாதே! என்னிடம் வந்து விடு!” என்றான்.

“அப்படியே பிரபுவே! என்னை இங்கே சந்திக்க ஒத்துக் கொண்டதன் மூலம் நீங்கள் எனக்கு மிகப் பெரிய உதவியைச் செய்திருக்கிறீர்கள். “

“ம்ஹூம், நீ எனக்கு நன்றியே சொல்லவில்லை. கிருஷ்ணனை எப்படியேனும் இங்கே வரவழைக்க நான் எவ்வளவு தந்திரங்கள் செய்திருக்கிறேன் என்பது தெரியுமா உனக்கு? “ இதைச் சொல்லியவண்ணம் மனம் வேதனைப் பட்டவன் போல் நடித்த பீமன், மேலும் சொன்னான்:” இவ்வளவு கஷ்டப்பட்டு உங்கள் இருவரையும் சந்திக்க வைத்தது நான். ஆனால் இந்த மனிதன் ஒரு நாழிகையில் உன்னை என்னிடமிருந்து திருடி விட்டானே!” என்றான். பீமன் இதைச் சொன்னதும் கிருஷ்ணனும், காஷ்யாவும் சிரிக்க, பீமனும் அதில் கலந்து கொண்டான்.

Friday, May 1, 2015

கண்ணன் விளக்கம்! ஜாலந்திரா வருத்தம்!

அப்போது தான் அந்த இளம்பெண்ணை நன்றாகக் கவனித்த கிருஷ்ணன், “ஆஹா, இது காசி தேசத்து இளவரசி அல்லவோ?” என்றான். தன் உடலோடு சேர்த்துத் தலை வரை மூடிக் கொண்டிருந்த புடைவையின் முனையை நீக்கினாள் ஜாலந்திரா. வயதில் மூத்தவர் முன்னும், அரச குலத்தவர் முன்னும் சாமானியப் பெண்கள் தங்கள் முகத்தைக் காட்டும் வழக்கம் இல்லை. ஆகவே, “நன்றாகப்பாரும், வாசுதேவக் கிருஷ்ணரே!” என்ற வண்ணம் அவ்வளவு நேரம் அரச குலத்தாரைச் சந்திக்கும் சேடிப் பெண்கள் தங்கள் சேலையின் முந்தானையால் எவ்வாறு முகத்தையும் தலையையும் சேர்த்து மூடிக் கொள்வார்களோ அப்படி மூடிக் கொண்டிருந்த சேலையை நீக்கினாள். மூடிக் கொண்டிருந்த மேகங்கள் விலகியதும் பளிச்சென ஒளி வீசும் சந்திரனைப்போல் அவள் சிவந்த முகம், கரிய கண்கள், பவளம் போன்ற சிவந்த உதடுகள், தாமரை போன்ற பாதங்கள் என அனைத்தும் காட்சி கொடுத்தன.

“ம்ம்ம்ம், நான் உன்னைத் தான் எதிர்பார்த்திருக்க வேண்டும்.” ஜாலந்திராவைப் பார்த்ததுமே அவளைப் புரிந்து கொண்ட கிருஷ்ணன் மேலும் சொன்னான். “இந்த மல்யுத்தக் களத்திற்கு வருவதன் மூலம் நீ செய்திருக்கும் மூடத்தனத்தை அறிவாயா? நடு இரவில் இந்த மல்யுத்தக் களத்திற்குத் தன்னந்தனியே தோழி ஒருத்தியின் துணை மட்டும் கொண்டு வந்து என்னை ரகசியமாகச் சந்திப்பதில் உள்ள பேராபத்தை நீ உணரவில்லையா? இது மட்டும் வெளியே பரவினால், உன் வாழ்க்கையே கேள்விக்குறியாகிவிடும். அறிவாயா?” என்றான்.

“ம்ம்ம்ம், ஆம், பிரபுவே, நான் நன்கறிவேன்.  ஆனால் இந்த மாதிரியான அபாயம் விளைவிக்கும் வேலையை நான் துணிந்து செய்ய வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறேன். இது வாழ்வா, சாவா என்னும் போராட்டத்தில் அடங்கியுள்ளது.”

“என்ன அது? பானுமதிக்கு ஏதேனும் ஆபத்தா?” கிருஷ்ணன் நேரிடையாக விஷயத்துக்கு வந்துவிட்டான். “பிரபுவே, உம் தங்கையார் பானுமதியிடமிருந்து உமக்கு ஒரு செய்தி என் மூலம் வந்துள்ளது. அதைச் சேர்ப்பிக்கவேண்டியே நான் உம்மைத் தனிமையில் சந்திக்க வந்தேன்.” என்றாள் ஜாலந்திரா. கிருஷ்ணனின் கண்களும், முகமும் குழைந்து மென்மையையும், கருணையையும் தாங்கி நின்றன. அந்தக் கருணை மாறாமலேயே கிருஷ்ணன், “என்ன அது? என்ன செய்தியை அனுப்பியுள்ளாள் பானுமதி? அவள் என்னைப் பார்க்கவேண்டும், பேசவேண்டும் என விரும்பினாள் எனில் எனக்கு ஒரு வார்த்தை சொன்னால் போதுமே!  நானே நேரில் வந்து அவளைப் பார்ப்பேன்.” என்றான் கிருஷ்ணன்.

“ஐயா, அவள் உங்களைப் பார்க்கத் துடிக்கிறாள். ஆனால் அவள் கணவன் துரியோதனன் அவள் உங்களைப் பார்க்கக் கூடாது எனத் தடுத்து விட்டான். அவ்வளவு ஏன்? உங்களுக்கு எவர் மூலமும் செய்தி கூட அனுப்பக் கூடாது என்று சொல்லிவிட்டான்.”

கிருஷ்ணன் பானுமதிக்காகப் பரிதாபப் பட்டான். “அப்படியா? பாவம் பானுமதி!” என்றும் அனுதாபம் நீங்காமல் சொன்னான். “ஐயா, உங்களுக்கு பானுமதி கர்ப்பமாக இருப்பதும், இப்போது அவள் நிறை கர்ப்பிணி என்பதும் விரைவில் அவள் தாயாகிவிடுவாள் என்பதும் நீங்கள் அறிவீர்களா?”

“நன்றாக அறிவேன். நீ செய்தியைச் சொல்!”

“ஐயா, பானுமதி என்னிடம் நேரில் எப்படிச் சொன்னாளே அப்படியே வார்த்தை பிசகாமல் அவள் வார்த்தைகளிலேயே உங்களுக்குச் சொல்கிறேன். நீங்கள் தனியாக இருக்கும்போது உங்களைப் பார்த்து அவள் சொல்லச் சொன்ன செய்தி இது தான்: “ வாசுதேவக் கிருஷ்ணா! உன்னுடைய சின்னத் தங்கை, செல்லத் தங்கை எப்போதும் உன்னையே நினைத்துக் கொண்டிருக்கிறாள். அவள் வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்தையும் உன்னால் தான் வாழ முடிந்தது என்பதை உணர்ந்திருக்கிறாள். பார்க்கப் போனால் இன்று நானே, நானே, முதலில் முன் வந்து உனக்குரிய மரியாதைகளைச் செலுத்தி இருக்க வேண்டும். ஆனால் ஆனால், என் பிரபு, என் தலைவர் என்னைத் தடுத்து விட்டார்! கோவிந்தா! ஆர்யபுத்திரர் உன்னைப் பார்ப்பதிலிருந்து என்னைத் தடுத்து விட்டார் என்பதற்காக நீ அவர் மேல் கோபம் கொள்ளாதே! சினம் அடையாதே!”

கொஞ்சம் நிறுத்திக் கொண்ட ஜாலந்திரா மேலும் தொடர்ந்தாள்: “ஐயா, அவள் மேலும் சொல்லச் சொன்ன செய்தி இதுதான்!” என்றவள் தொடர்ந்து, “கோவிந்தா! உன்னுடைய இந்த துரதிர்ஷ்டக்காரியான தங்கைக்கு நீ தொடர்ந்து நன்மைகளுக்கு மேல் நன்மைகளே செய்து வருகிறாய். ஏற்கெனவே நன்றிக்கடனால் நிரம்பி இருக்கும்போது நான் இன்னொரு உதவியும் உன்னிடம் கேட்கப் போகிறேன். கோவிந்தா! ஒரு வேளை நான் உன்னிடம் உதவி கேட்பது இது தான் கடைசி முறையாகவும் இருக்கலாம். தயவு செய்து ஆர்யபுத்திரரை ஹஸ்தினாபுரத்தின் ஆட்சிக் கட்டிலில் ஏற அனுமதிப்பாய்! அதன் மூலம் எனக்குப் பிறக்கப் போகும் பிள்ளை, சரியான சமயம் வந்ததும் அடுத்த வாரிசாகத் தானும் அந்த அரசக் கட்டிலில் அமர முடியும். குரு வம்சத்துக்கு ஒரு உகந்த வாரிசாக என் பிள்ளை விளங்க வேண்டும்.”

“ஆஹா! ஜாலந்திரா, ஜாலந்திரா! இத்தகைய செய்தியையா தாங்கி வந்திருக்கிறாய்? இதிலுள்ள ஆபத்தை நீ உணரவில்லையா? உன்னுடைய நற்கீர்த்திக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் இத்தகைய தூது வேலையில் நீ ஈடுபடத்தான் வேண்டுமா? உன் அக்காவிடம் உனக்கு இருக்கும் அளவிடற்கரிய பாசத்துக்காக இதைச் செய்யத் துணிந்தாய் போலும்!” என்ற கிருஷ்ணன் மேலும் தொடர்ந்து, “ உன் பாசம் போற்றுதலுக்குரியது தான். நீ பாசத்துடனேயே நடந்திருக்கிறாய். ஆனால் இதில் உள்ள ஆபத்தை நீ உணரவில்லை. சற்றும் யோசித்துப் பார்க்காமல் காரியத்தில் இறங்கி இருக்கிறாய்! அது சரி! நீ இப்போது எனக்குக் கொடுத்திருக்கும் இந்தச் செய்தியினால் உன்னுடைய ஆசைகள் நிராசைகளாகிவிடும் என்பதை உணர்ந்திருக்கிறாயா? அதை உணர்ந்தே இந்தச் செய்தியை எனக்குச் சொல்லி இருக்கிறாயா?”

“எப்படி, கிருஷ்ணா, எப்படி?”

“இதோ பார் பெண்ணே! ஒரு வேளை துரியோதனன் கைகளில் ஹஸ்தினாபுரம் வந்து விட்டால்? அப்புறம் பீமன் துரியோதனனைச் சார்ந்து நிற்க வேண்டும். அவன் சொல்லாமல் பீமனால் எதுவும் செய்ய முடியாது. ஒருவேளை சடங்குகளும்,சம்பிரதாயங்களும் கடைப்பிடிக்கப்பட்டு யுதிஷ்டிரன் இந்த ஹஸ்தினாபுரத்தின் சக்கரவர்த்தியாக ஆனாலும் கூட, பீமன் இங்கிருந்து வெளியே சென்று தான் தனக்கென ஒரு இடத்தைத் தேடியாக வேண்டும்.”

பீமனின் வாழ்க்கையைக் குறித்து முக்கியத்துவம் கொடுத்துக் கிருஷ்ணன் பேசியதன் உள்ளர்த்தத்தை ஜாலந்திரா புரிந்து கொண்டாள். அவள் எதிர்காலம் பீமனின் எதிர்காலத்தோடு பின்னிப் பிணைந்திருக்கிறது என்பதைக் கிருஷ்ணன் புரிந்து கொண்டிருக்கிறான் என்பதையும் அவள் தெரிந்து கொண்டாள். “ஆஹா, கடவுளே, மஹாதேவா! வ்ருகோதர அரசரின் அழிவுக்கு நான் துணை போய்விட்டேனா?” என்று பதறினாள். “நீ சொல்வது சரியே காஷ்யா! அவன் தானும் ஒரு யுவராஜனாக ஆகி உன்னுடைய சுயம்வரத்தில் கலந்து கொண்டு உன்னை வென்று அடையவேண்டும் என்னும் எண்ணத்தில் இருக்கிறான். நீ அதை அறிவாய் அல்லவா?”

ஜாலந்திராவின் முகம் வெளுத்தது. “ஆஹா, நான் வ்ருகோதரருக்குத் தீங்கை அல்லவோ இழைத்திருக்கிறேன்.” என்று சொல்லிய வண்ணம் அழ ஆரம்பித்தாள்.