Sunday, May 3, 2015

கண்ணன் உறுதி! ஜாலந்திரா மகிழ்ச்சி!

ஜாலந்திராவின் முகம் சோகத்தில் வெளுத்தது. “நான் மாபெரும் தவறு செய்து விட்டேன். வ்ருகோதர அரசனுக்குத் தீங்கிழைத்து விட்டேன்.” சொல்லிய வண்ணம் அழுதாள் ஜாலந்திரா. “ஆனால்…ஆனால்…..நான் இதைச் செய்தே தீரவேண்டிய நிலையில் இருந்தேன். என் சகோதரிக்காக இதை நான் செய்தே தீரவேண்டிய சூழ்நிலை! அவள் தன் கணவனுக்கு எவ்வகையிலேனும் உதவியாக இருக்க நினைத்தாள். அதன் மூலம் பிறக்கப் போகும் தன் மகன் ஹஸ்தினாபுரத்து அரியணைக்கு அடுத்த வாரிசாக ஆவான் என்னும் நம்பிக்கை அவளுக்கு இருக்கிறது. வாசுதேவக் கிருஷ்ணா! உம்மைச் சந்திக்க அவள் கணவன் தடை போட்டதில் இருந்து அவள் நிலைமை மிகப் பரிதாபகரமாக ஆகிவிட்டது. ஆகவே எவ்வகையிலேனும் உமக்கு இந்தச் செய்தியை அனுப்ப நினைத்தாள். அவள் என் மேல் மிகவும் நம்பிக்கை வைத்துச் செய்தியைச் சேர்க்கச் சொல்லி இருக்கையில் அவள் நம்பிக்கையை நான் எப்படிக் குலைக்க முடியும்?”

“ஆக, நீ உன்னை நீயே ஏமாற்றிக் கொண்டாய்!” என்று கிருஷ்ணன் புன்னகையோடு சொன்னான். மீண்டும் அவள் அழகிய கண்கள் கண்ணீர்க் குளமாக மாறின. “என்னைப் போன்ற துர்பாக்கியசாலி எவரும் இல்லை!” என்றும் தழுதழுக்கும் குரலில் கூறினாள்.

“அழாதே! ஜாலந்திரா! அழாதே!” கிருஷ்ணன் அவள் துக்கத்தைப் புரிந்து கொண்டவனாகக் காணப்பட்டான் “உன்னுடைய பிரச்னைகள் எனக்குப் புரிகின்றன. கஷ்டங்களும் தெரிகின்றன. ஆனால் உனக்கு நான் இதை மட்டும் உறுதியாகச் சொல்ல முடியும்: எங்கே இருந்தாலும் சரி, என்னவாக இருந்தாலும் சரி பீமனைப் போன்ற நேர்மையானவனைக் காண்பது அரிது. மிகவும் தைரியமானவனும் கூட. அவனுடன் வாழ்வது என்பது ஒரு சந்தோஷமான கனவைப் போன்றது. அவனுடன் வாழக் கொடுத்து வைத்திருக்க வேண்டும். எனக்கு அது மட்டும் நிச்சயமாய்த் தெரியும்.”

தனக்குள் பொங்கி வந்த அழுகையை அடக்கிக் கொண்டாள் ஜாலந்திரா! “பிரபுவே, நீங்கள் ஒரு முறை என் சகோதரியை மரணத்திலிருந்து காப்பாற்றியதோடு அல்லாமல் அவளை உங்கள் தங்கையாக அருமை சகோதரியாகவும் ஸ்வீகரித்துக் கொண்டீர்களாம். என்னையும் உங்கள் சகோதரியாக ஏற்றுக் கொள்ளுங்கள்!”

“அதெல்லாம் சரி, ஜாலந்திரா! பீமன் எங்கே இருந்தாலும், எப்படி இருந்தாலும், என்னவாக இருந்தாலும் நீ அவனை மணக்கத் தயாராக இருக்கிறாயா? இது  உறுதியா?”

“ஆம், ஐயா! நான் உறுதிமொழி கொடுக்கிறேன். இந்த ஜன்மத்தில் மட்டுமல்ல, நான் எத்தனை ஜன்மங்கள் எடுத்தாலும் இவரைப்போன்ற மணாளன் எனக்குக் கிடைக்க மாட்டார்.”

“அதுதான் சரி! நல்லதும் கூட! நீ பீமனுடன் வாழப்போகும் வாழ்க்கையில் எத்தனை கஷ்டங்களைச் சந்தித்தாலும் நான் உன்னுடன் கூடவே இருப்பேன். இனி நீயும் என் சகோதரிகளில் ஒருத்தியே! பானுமதியைப் போல் நீயும் என் அருமைத் தங்கையாவாய்! சரி, அதெல்லாம் போகட்டும்! இப்போது நீ நன்றாக விஷயத்தைப் புரிந்து கொண்டிருப்பாய் என எண்ணுகிறேன். இத்தனைக்குப் பிறகும் நீ கேட்டிருக்கும் வாக்குறுதியை பானுமதிக்காக நான் கொடுக்க வேண்டும் என எதிர்பார்க்கிறாயா?” என்று கேட்டான் கிருஷ்ணன்.

ஜாலந்திராவின் உள்ளம் தத்தளித்தது என்பது அவள் விட்ட பெருமூச்சுகளிலும் அவள் மார்பு எழுந்து தாழ்ந்ததிலிருந்தும் தெரிந்தது. மிகவும் சிக்கலான பிரச்னையில் அவள் மாட்டி இருக்கிறாள் என்பதைக் கண்ணன் நன்கு புரிந்து கொண்டிருந்தான். கண்ணனின் கேள்வியை அடுத்து அவள் கண்ணனை அவன் கண்களுக்குள்ளேயே உற்று நோக்கினாள். அந்தப் பார்வையில் அவள் மனது புரிந்தது கண்ணனுக்கு! மீண்டும் பெருமூச்சு விட்ட ஜாலந்திரா மேலே பேசத் தொடங்கினாள்.

“பிரபுவே! இது உங்கள் முடிவுக்கே நான் விட்டு விடுகிறேன். என்ன செய்யவேண்டும் என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள். நான் என்ன செய்ய வேண்டும் என்பதையும் நீங்களே சொல்லுங்கள். என்னிடம் இவ்வளவு கருணை காட்டும் நீங்கள் செய்யும் முடிவை நான் ஏற்கிறேன். ஆனால் பிரபுவே! என் சகோதரி அங்கே மிகவும் ஆவலுடன் தங்கள் வாக்குறுதிக்காகக் காத்திருப்பாள். சாப்பிட்டிருக்க மாட்டாள்; தூங்கி இருக்க மாட்டாள்.  நீங்கள் மட்டும் அவளுக்கு வாக்குக் கொடுக்கவில்லை எனில் அவள் அடுத்த கணமே இறந்து விடுவாள். ஐயா, அவள் எத்தகைய நிலைமையில் இருக்கிறாள் தெரியுமா? இப்போது நான் என்னுடைய சுயநலத்துக்காக அவள் நலனைப் பலியிட விரும்பவில்லை. என் சகோதரியின் எதிர்காலம் என்னால் பாழ்பட்டுப் போவதை நான் விரும்பவில்லை.”

“நல்லது; நல்லது! நன்று சொன்னாய் ஜாலந்திரா! நீ பானுமதிக்கு நான் கொடுக்கும் செய்தியைப் போய்ச் சொல்! துரியோதனன் ஹஸ்தினாபுரத்துக்கு அரசனாவான் என்னும் உறுதிமொழியை நான் அளித்ததாகச் சொல்!”

ஜாலந்திரா நிம்மதிப்பெருமூச்சு விட்டாள். “பிரபுவே, மிக்க நன்றி. நன்றி. எவ்வாறு உங்களுக்கு நன்றிக்கடனைச் செலுத்துவேன்?”

“நீ எனக்கு நன்றி சொல்லாமல் இருந்தாலே நன்றிக்கடனைச் செலுத்தியது ஆகும். சரி, இப்போது பீமனை அழைக்கும் நேரம் வந்து விட்டது!” என்றான் கண்ணன்.

கண்ணனே முன்னால் சென்று கதவுகளை நன்கு திறந்து பீமனை அழைத்தான். “பீமா, உள்ளே வா! இதோ இந்தப் பெண்மணியை நீ அறிவாயா?” என்று கேட்டான். பீமன் வாய் விட்டுச் சிரித்தான். “இந்தச் சேடிப்பெண்ணையா தெரியாது? வெட்கமே அறியாதவள்! இவள் எனக்கு வேறு மாற்று வேலை எதையுமே வைக்கவில்லை. உத்கோசகத்தில் இருக்கையில் வேண்டுமென்றே கங்கையில் மூழ்குவது போல் நாடகம் ஆடினாள். அதோடு மயங்கி விட்டது போலும் நடித்தாள். பின்னர் இவளை நான் தோள்களில் தூக்கிச் செல்லும் நிலைமை ஏற்பட்டு விட்டது!”

“பீமா! பீமா! இவள் என்னைத் தன் சகோதரனாக ஏற்றுக் கொண்டிருக்கிறாள். இதை நீ அறிவாயா?”

பீமன் தோள்களைக் குலுக்கிக் கொண்டு விரக்தி அடைந்தவன் போல் நடித்துக் கொண்டு தன் கைகளை விரித்தான். “ கடவுளே, கடவுளே, இந்த மனிதனிடமிருந்து என்னைக் காப்பாற்று. தன்னருகில் வரும் எந்தப் பெண்ணையும் எப்படியோ மயக்கித் தனக்கு சகோதரியாக்கிக் கொண்டு விடுகிறான். அப்புறம் அந்தப் பெண்கள் தங்கள் கணவனை விட இந்தச் சகோதரனையே பெரிதாக நினைக்க ஆரம்பிக்கின்றனர். இவனுக்காக எதையும் செய்யத் தயாராகின்றனர்!”

“அது சரி அப்பா! உன்னைப் பற்றி என்ன சொல்கிறாய்? நீ இந்தப் பெண்ணின் கணவனாகப் போகிறாயா? ஆனால் உனக்கு அந்தத் தகுதி இல்லை என்பதை நான் நன்கறிவேன். ஆனால் இந்தப் பெண்ணோ உன் மேல் மோகமாக அன்றோ இருக்கிறாள்! ஆகவே இவளின் கணவனாக ஆவதை விடப் பெரிய வேலை வேறொன்றும் உனக்கு இல்லை!” இதைச் சொன்ன கண்ணன் ஜாலந்திரா பக்கம் திரும்பினான். “இதோ பார் காஷ்யா! உனக்கு ஏதேனும் பிரச்னைகள் தீர்க்கமுடியாமல் ஏற்பட்டால் சற்றும் தயங்காமல் என்னிடம் வா! அப்போது இதோ இந்த பீமன் உன்னிடம் என்னைப்பார்க்கக் கூடாது என்று சத்தியம் வாங்கி இருந்தாலும் லக்ஷியம் செய்யாதே! என்னிடம் வந்து விடு!” என்றான்.

“அப்படியே பிரபுவே! என்னை இங்கே சந்திக்க ஒத்துக் கொண்டதன் மூலம் நீங்கள் எனக்கு மிகப் பெரிய உதவியைச் செய்திருக்கிறீர்கள். “

“ம்ஹூம், நீ எனக்கு நன்றியே சொல்லவில்லை. கிருஷ்ணனை எப்படியேனும் இங்கே வரவழைக்க நான் எவ்வளவு தந்திரங்கள் செய்திருக்கிறேன் என்பது தெரியுமா உனக்கு? “ இதைச் சொல்லியவண்ணம் மனம் வேதனைப் பட்டவன் போல் நடித்த பீமன், மேலும் சொன்னான்:” இவ்வளவு கஷ்டப்பட்டு உங்கள் இருவரையும் சந்திக்க வைத்தது நான். ஆனால் இந்த மனிதன் ஒரு நாழிகையில் உன்னை என்னிடமிருந்து திருடி விட்டானே!” என்றான். பீமன் இதைச் சொன்னதும் கிருஷ்ணனும், காஷ்யாவும் சிரிக்க, பீமனும் அதில் கலந்து கொண்டான்.

1 comment:

ஸ்ரீராம். said...

சுவாரஸ்யமாகப் படித்தேன்.