Friday, May 1, 2015

கண்ணன் விளக்கம்! ஜாலந்திரா வருத்தம்!

அப்போது தான் அந்த இளம்பெண்ணை நன்றாகக் கவனித்த கிருஷ்ணன், “ஆஹா, இது காசி தேசத்து இளவரசி அல்லவோ?” என்றான். தன் உடலோடு சேர்த்துத் தலை வரை மூடிக் கொண்டிருந்த புடைவையின் முனையை நீக்கினாள் ஜாலந்திரா. வயதில் மூத்தவர் முன்னும், அரச குலத்தவர் முன்னும் சாமானியப் பெண்கள் தங்கள் முகத்தைக் காட்டும் வழக்கம் இல்லை. ஆகவே, “நன்றாகப்பாரும், வாசுதேவக் கிருஷ்ணரே!” என்ற வண்ணம் அவ்வளவு நேரம் அரச குலத்தாரைச் சந்திக்கும் சேடிப் பெண்கள் தங்கள் சேலையின் முந்தானையால் எவ்வாறு முகத்தையும் தலையையும் சேர்த்து மூடிக் கொள்வார்களோ அப்படி மூடிக் கொண்டிருந்த சேலையை நீக்கினாள். மூடிக் கொண்டிருந்த மேகங்கள் விலகியதும் பளிச்சென ஒளி வீசும் சந்திரனைப்போல் அவள் சிவந்த முகம், கரிய கண்கள், பவளம் போன்ற சிவந்த உதடுகள், தாமரை போன்ற பாதங்கள் என அனைத்தும் காட்சி கொடுத்தன.

“ம்ம்ம்ம், நான் உன்னைத் தான் எதிர்பார்த்திருக்க வேண்டும்.” ஜாலந்திராவைப் பார்த்ததுமே அவளைப் புரிந்து கொண்ட கிருஷ்ணன் மேலும் சொன்னான். “இந்த மல்யுத்தக் களத்திற்கு வருவதன் மூலம் நீ செய்திருக்கும் மூடத்தனத்தை அறிவாயா? நடு இரவில் இந்த மல்யுத்தக் களத்திற்குத் தன்னந்தனியே தோழி ஒருத்தியின் துணை மட்டும் கொண்டு வந்து என்னை ரகசியமாகச் சந்திப்பதில் உள்ள பேராபத்தை நீ உணரவில்லையா? இது மட்டும் வெளியே பரவினால், உன் வாழ்க்கையே கேள்விக்குறியாகிவிடும். அறிவாயா?” என்றான்.

“ம்ம்ம்ம், ஆம், பிரபுவே, நான் நன்கறிவேன்.  ஆனால் இந்த மாதிரியான அபாயம் விளைவிக்கும் வேலையை நான் துணிந்து செய்ய வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறேன். இது வாழ்வா, சாவா என்னும் போராட்டத்தில் அடங்கியுள்ளது.”

“என்ன அது? பானுமதிக்கு ஏதேனும் ஆபத்தா?” கிருஷ்ணன் நேரிடையாக விஷயத்துக்கு வந்துவிட்டான். “பிரபுவே, உம் தங்கையார் பானுமதியிடமிருந்து உமக்கு ஒரு செய்தி என் மூலம் வந்துள்ளது. அதைச் சேர்ப்பிக்கவேண்டியே நான் உம்மைத் தனிமையில் சந்திக்க வந்தேன்.” என்றாள் ஜாலந்திரா. கிருஷ்ணனின் கண்களும், முகமும் குழைந்து மென்மையையும், கருணையையும் தாங்கி நின்றன. அந்தக் கருணை மாறாமலேயே கிருஷ்ணன், “என்ன அது? என்ன செய்தியை அனுப்பியுள்ளாள் பானுமதி? அவள் என்னைப் பார்க்கவேண்டும், பேசவேண்டும் என விரும்பினாள் எனில் எனக்கு ஒரு வார்த்தை சொன்னால் போதுமே!  நானே நேரில் வந்து அவளைப் பார்ப்பேன்.” என்றான் கிருஷ்ணன்.

“ஐயா, அவள் உங்களைப் பார்க்கத் துடிக்கிறாள். ஆனால் அவள் கணவன் துரியோதனன் அவள் உங்களைப் பார்க்கக் கூடாது எனத் தடுத்து விட்டான். அவ்வளவு ஏன்? உங்களுக்கு எவர் மூலமும் செய்தி கூட அனுப்பக் கூடாது என்று சொல்லிவிட்டான்.”

கிருஷ்ணன் பானுமதிக்காகப் பரிதாபப் பட்டான். “அப்படியா? பாவம் பானுமதி!” என்றும் அனுதாபம் நீங்காமல் சொன்னான். “ஐயா, உங்களுக்கு பானுமதி கர்ப்பமாக இருப்பதும், இப்போது அவள் நிறை கர்ப்பிணி என்பதும் விரைவில் அவள் தாயாகிவிடுவாள் என்பதும் நீங்கள் அறிவீர்களா?”

“நன்றாக அறிவேன். நீ செய்தியைச் சொல்!”

“ஐயா, பானுமதி என்னிடம் நேரில் எப்படிச் சொன்னாளே அப்படியே வார்த்தை பிசகாமல் அவள் வார்த்தைகளிலேயே உங்களுக்குச் சொல்கிறேன். நீங்கள் தனியாக இருக்கும்போது உங்களைப் பார்த்து அவள் சொல்லச் சொன்ன செய்தி இது தான்: “ வாசுதேவக் கிருஷ்ணா! உன்னுடைய சின்னத் தங்கை, செல்லத் தங்கை எப்போதும் உன்னையே நினைத்துக் கொண்டிருக்கிறாள். அவள் வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்தையும் உன்னால் தான் வாழ முடிந்தது என்பதை உணர்ந்திருக்கிறாள். பார்க்கப் போனால் இன்று நானே, நானே, முதலில் முன் வந்து உனக்குரிய மரியாதைகளைச் செலுத்தி இருக்க வேண்டும். ஆனால் ஆனால், என் பிரபு, என் தலைவர் என்னைத் தடுத்து விட்டார்! கோவிந்தா! ஆர்யபுத்திரர் உன்னைப் பார்ப்பதிலிருந்து என்னைத் தடுத்து விட்டார் என்பதற்காக நீ அவர் மேல் கோபம் கொள்ளாதே! சினம் அடையாதே!”

கொஞ்சம் நிறுத்திக் கொண்ட ஜாலந்திரா மேலும் தொடர்ந்தாள்: “ஐயா, அவள் மேலும் சொல்லச் சொன்ன செய்தி இதுதான்!” என்றவள் தொடர்ந்து, “கோவிந்தா! உன்னுடைய இந்த துரதிர்ஷ்டக்காரியான தங்கைக்கு நீ தொடர்ந்து நன்மைகளுக்கு மேல் நன்மைகளே செய்து வருகிறாய். ஏற்கெனவே நன்றிக்கடனால் நிரம்பி இருக்கும்போது நான் இன்னொரு உதவியும் உன்னிடம் கேட்கப் போகிறேன். கோவிந்தா! ஒரு வேளை நான் உன்னிடம் உதவி கேட்பது இது தான் கடைசி முறையாகவும் இருக்கலாம். தயவு செய்து ஆர்யபுத்திரரை ஹஸ்தினாபுரத்தின் ஆட்சிக் கட்டிலில் ஏற அனுமதிப்பாய்! அதன் மூலம் எனக்குப் பிறக்கப் போகும் பிள்ளை, சரியான சமயம் வந்ததும் அடுத்த வாரிசாகத் தானும் அந்த அரசக் கட்டிலில் அமர முடியும். குரு வம்சத்துக்கு ஒரு உகந்த வாரிசாக என் பிள்ளை விளங்க வேண்டும்.”

“ஆஹா! ஜாலந்திரா, ஜாலந்திரா! இத்தகைய செய்தியையா தாங்கி வந்திருக்கிறாய்? இதிலுள்ள ஆபத்தை நீ உணரவில்லையா? உன்னுடைய நற்கீர்த்திக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் இத்தகைய தூது வேலையில் நீ ஈடுபடத்தான் வேண்டுமா? உன் அக்காவிடம் உனக்கு இருக்கும் அளவிடற்கரிய பாசத்துக்காக இதைச் செய்யத் துணிந்தாய் போலும்!” என்ற கிருஷ்ணன் மேலும் தொடர்ந்து, “ உன் பாசம் போற்றுதலுக்குரியது தான். நீ பாசத்துடனேயே நடந்திருக்கிறாய். ஆனால் இதில் உள்ள ஆபத்தை நீ உணரவில்லை. சற்றும் யோசித்துப் பார்க்காமல் காரியத்தில் இறங்கி இருக்கிறாய்! அது சரி! நீ இப்போது எனக்குக் கொடுத்திருக்கும் இந்தச் செய்தியினால் உன்னுடைய ஆசைகள் நிராசைகளாகிவிடும் என்பதை உணர்ந்திருக்கிறாயா? அதை உணர்ந்தே இந்தச் செய்தியை எனக்குச் சொல்லி இருக்கிறாயா?”

“எப்படி, கிருஷ்ணா, எப்படி?”

“இதோ பார் பெண்ணே! ஒரு வேளை துரியோதனன் கைகளில் ஹஸ்தினாபுரம் வந்து விட்டால்? அப்புறம் பீமன் துரியோதனனைச் சார்ந்து நிற்க வேண்டும். அவன் சொல்லாமல் பீமனால் எதுவும் செய்ய முடியாது. ஒருவேளை சடங்குகளும்,சம்பிரதாயங்களும் கடைப்பிடிக்கப்பட்டு யுதிஷ்டிரன் இந்த ஹஸ்தினாபுரத்தின் சக்கரவர்த்தியாக ஆனாலும் கூட, பீமன் இங்கிருந்து வெளியே சென்று தான் தனக்கென ஒரு இடத்தைத் தேடியாக வேண்டும்.”

பீமனின் வாழ்க்கையைக் குறித்து முக்கியத்துவம் கொடுத்துக் கிருஷ்ணன் பேசியதன் உள்ளர்த்தத்தை ஜாலந்திரா புரிந்து கொண்டாள். அவள் எதிர்காலம் பீமனின் எதிர்காலத்தோடு பின்னிப் பிணைந்திருக்கிறது என்பதைக் கிருஷ்ணன் புரிந்து கொண்டிருக்கிறான் என்பதையும் அவள் தெரிந்து கொண்டாள். “ஆஹா, கடவுளே, மஹாதேவா! வ்ருகோதர அரசரின் அழிவுக்கு நான் துணை போய்விட்டேனா?” என்று பதறினாள். “நீ சொல்வது சரியே காஷ்யா! அவன் தானும் ஒரு யுவராஜனாக ஆகி உன்னுடைய சுயம்வரத்தில் கலந்து கொண்டு உன்னை வென்று அடையவேண்டும் என்னும் எண்ணத்தில் இருக்கிறான். நீ அதை அறிவாய் அல்லவா?”

ஜாலந்திராவின் முகம் வெளுத்தது. “ஆஹா, நான் வ்ருகோதரருக்குத் தீங்கை அல்லவோ இழைத்திருக்கிறேன்.” என்று சொல்லிய வண்ணம் அழ ஆரம்பித்தாள்.

1 comment:

ஸ்ரீராம். said...

கண்ணன் என்ன, பானுமதியின் இந்த விருப்பத்தை நிறைவேற்றி வைக்கவா போகிறான்?