Saturday, April 30, 2016

கேள்வியும், பதிலும்!

மிகவும் முயன்று தைரியத்தை வரவழைத்துக் கொண்ட த்வைபாயனன், தந்தையிடம், “தந்தையே, எனக்கு உபநயனம் செய்வித்துப் பூணூல் அணிய வைக்கப்பட்டால், அதற்கென சில வாழ்க்கை முறைகள் இருப்பதாகவும், சில வாக்குறுதிகளையும், சில நெறிமுறைகளையும் நான் கடைப்பிடிக்கவேண்டும் எனவும் கூறினீர்கள் அல்லவா? அவை என்ன? எப்படிப்பட்ட வாழ்க்கை முறை? என்னிடம் இப்போது விளக்கிச் சொன்னீர்கள் எனில் நான் விரைவில் அதர்குத் தயாராக இருப்பேன். அவற்றை அப்படியே கடைப்பிடிப்பேன்.”

“குழந்தாய், உன்னுடைய வயதில் அது அவ்வளவு எளிதன்று. நீ சுத்தமான பிரமசரிய விரதம் கடைப்பிடிக்கவேண்டும். அது மிகக் கடினமானது. உன்னுடைய குருவுடன் குருகுலத்தில் தான் வசிக்க வேண்டும். ரிஷிகளும், முனிவர்களும் வாழ்ந்து காட்டிய பாரம்பரியமான அந்த தவ வாழ்க்கையை நீ மேற்கொள்ள வேண்டும். அனுதினமும் நீ ஒரு பிரமசாரியாக உன் உணவை இரந்து பெற்றுத் தான் குருவின் சம்மதத்தின் பேரில் உட்கொள்ளவேண்டும். அதோடு இல்லாமல் உனக்களிக்கப்பட்ட இந்த பிரமசரியத்தை மட்டுமல்லாது அப்போது நீ எடுத்துக்கொள்ளும் ஒவ்வொரு வாக்குறுதிகளையும், கடுமையான நெறிமுறையையும் காப்பாற்றுவதில் உறுதியாக இருக்கவேண்டும். அதற்காக நீ சத்தியம் செய்ய வேண்டும். அந்தச் சத்தியத்தைக் காப்பாற்ற வேண்டும்.”

“நிச்சயம் நான் எல்லாவற்றையும் கருத்துடனும், கட்டுப்பாட்டுடனும் கடைபிடிப்பேன் தந்தையே! இதோ உங்கள் சீடர் பைலர் இப்படித் தானே இருந்து வருகிறார். இத்தனைக்கும் அவர் என்னை விடப் பெரியவர். எட்டு வயது மூத்தவர்! அவரால் இயலும்போது என்னால் முடியாதா என்ன? நிச்சயம் முடியும், தந்தையே!”

மகனின் முதுகில் தட்டிக் கொடுத்தார் பராசரர். “குழந்தாய்! இந்த மந்திரங்களை சும்மா உச்சரிப்பதனால் எவ்வித பலனும் விளையாது; மந்திரங்களின் உட்பொருளும் புரிந்து கொள்ள வேண்டும். உச்சரிப்பும் சரியானபடி இருக்க வேண்டும். மந்திரங்கள் அனைத்தும் தெய்விகமானது. அந்த மந்திரங்களின் உட்பொருளை உணர உணர உனக்கு வருண பகவான் விண்ணுலகின் அதிசயங்களையும் கிரஹங்களின் சுழற்சியையும் நக்ஷத்திரங்களின் பிரயாணத்தையும் விண்ணகத்து ஒழுங்குமுறையையும் புரிய வைப்பார்.” மத்தியான நேரத்தில் அவர்கள் பயணத்தைக் கொஞ்ச நேரம் நிறுத்திவிட்டு சம்பிரதாயமான சடங்குகளைச் செய்ய வேண்டிய முறைப்படி செய்து முடித்தார்கள். அங்கிருந்த ஜனங்கள் அவர்களை வரவேற்று உணவு அளித்து உபசரித்தார்கள். இவை எல்லாம் முறைப்படி முடிந்த பின்னர் அவர்கள் பயணத்தை மேலும் தொடர்ந்தார்கள். த்வைபாயனன் தன் தந்தை மகிழ்வுடன் இருக்கக் கண்டான். தந்தையிடம், “தந்தையே, எப்போது உங்கள் மந்திர உச்சாடனத்தை ஆரம்பிக்கப் போகிறீர்கள்?” என்று கேட்டான். முனிவர் சிரித்தார். தன் மகன் தோல்வியை ஒப்புக் கொள்ள மாட்டான். சிரித்த வண்ணம், அவர், “அது ஒரு மாபெரும் ரகசியம், குழந்தாய்!” என்றார்.

உடனே த்வைபாயனன் தந்தையிடம், “என்னிடம் மறைக்கும் அளவுக்கு அதில் என்ன ரகசியம் இருக்கிறது, தந்தையே அதிலும் நான் உங்கள் மகன் அல்லவா?!” என்று உடனே கேட்டான். “நான் சொன்னேன் எனில் உன்னால் அதை நம்ப முடியாது!” என்றார் தந்தை! த்வைபாயனனுக்குத் தந்தை தன்னிடம் நம்பிக்கை வைக்கவில்லை என்று வருத்தம் வந்தது. ஒருவேளை அந்த ரகசியத்தைச் சொல்லும்படி தந்தையிடம் வற்புறுத்தினால் அவருக்குக் கோபம் வந்து தன்னை மீண்டும் தாயிடம் அனுப்பினாலும் அனுப்பி வைப்பார். பராசரருக்குப் புரிந்து விட்டது. த்வைபாயனனுக்கு மன வருத்தம் என்பதைத் தெரிந்து கொண்டு விட்டார்.தனக்கும் மகனுக்கும் இடையில் வேறு எதுவும் குறுக்கே வர அவர் விரும்பவில்லை. ஆகவே மகனிடம், “நான் சொல்கிறேன் உன்னிடம், ஆனால் நீ அதை உன்னிடமே வைத்துக் கொள்ள வேண்டும். வேறு எவருக்கும் சொல்லக் கூடாது!” என்றார்.

“நிச்சயமாக தந்தையே, என்னிடம் நம்பிக்கை வையுங்கள்!”

என்னுடைய தாத்தா, வசிஷ்டர் ஆர்யவர்த்தத்தின் அனைத்து ரிஷிகளுக்கும் மூலாதாரமான பரம்பரைத் தலைவர் ஆவார். அவர் கடவுளரிடம் பேசும் வல்லமை படைத்தவர். அப்படிப் பேசிப் பேசித் தான் வேதங்களை அறிந்து கொண்டார். அவற்றின் உச்சாடனத்தையும் எந்த இடத்தில் ஏற்றி எந்த இடத்தில் இறக்கி உச்சரிக்கவேண்டும் என்பதெல்லாம் அவருக்குக் கடவுளர் மூலம் அறிய வந்தது. அதோடு அதன் புனிதத்தன்மையையும் அவர் புரிந்து வைத்திருந்தார்.”

“அப்படியா?” ஆச்சரியத்துடன் கண்கள் விரியக் கேட்ட த்வைபாயனன், “தாத்தா அவர்கள் உண்மையிலேயே கடவுளரிடம் பேசும் வல்லமை படைத்தவரா?” என்று கேட்டான். “ஆம்!” என்ற பராசரரிடம், “நீங்களும் கடவுளரிடம் பேசுவீர்களா, தந்தையே?” என்று கேட்டான் த்வைபாயனன். அதற்கு பராசரர், “ஒரு காலத்தில் என்னால் முடிந்தது; ஆனால் இப்போது முடியாது!” என்று வருத்தத்துடன் கூறிய பராசரர் மகனிடம், “உனக்குக் களைப்பாக இல்லையா குழந்தாய்? கேள்வி மேல் கேள்வியாகக் கேட்டுக் கொண்டே இருக்கிறாயே?” என்று புன்னகையுடன் கேட்டார். தன்னுடைய வழக்கமான அடக்கத்துடன் கூடிய புன்னகை புரிந்த த்வைபாயனன், “உங்களுக்குத் தெரிந்தது எல்லாம் நானும் தெரிந்து கொள்ளவேண்டும் என்று ஆசைப்படுகிறேன், தந்தையே!” என்றான். பராசரருக்கு மகனின் இந்த பதிலில் மிகவும் சந்தோஷம் வந்தது. மகனைத் தட்டிக் கொடுத்து உற்சாகப்படுத்தினார். சற்று நேரம் சும்மா இருந்த த்வைபாயனன், மீண்டும் தன் கேள்வியை ஆரம்பித்தான். “உங்களுக்கு வேதங்கள் கற்றுக் கொடுக்கையில் உங்களுக்கு என்ன வயது ஆகி இருந்தது தந்தையே!” என்று கேட்டான்.

“தாத்தா உச்சரிக்கையில் அதைப் பார்த்துப் பார்த்து நான் கற்றுக் கொண்டேன்.”

“ஏன், உங்கள் தந்தை உங்களுக்கு எதுவுமே சொல்லிக் கொடுக்கவில்லையா?” த்வைபாயனன் கேட்டான்.

“என் தந்தையால் சொல்லிக் கொடுக்க முடியவில்லை. நான் பிறப்பதற்கு முன்பே என் தந்தை ஒரு யுத்தத்தில் கொல்லப்பட்டார். நான் அப்போது என் தாயின் கர்ப்பத்தில் இருந்தேன்.” பரிதாபமான ஒரு புன்னகையுடன் கூறினார் பராசரர். அவரையே சற்று நேரம் பார்த்த த்வைபாயனன், மீண்டும் தன் வழக்கமான புன்னகையுடன், “தந்தையே, நான் கேள்வி மேலே கேள்வி கேட்டுக் கொண்டு போனால் உங்களுக்குக் கோபம் வராதே?” என்று கேட்டான்.

முனிவர் கலகலவெனச் சிரித்தார். “குழந்தாய், நான் கோபமே கொள்ளக் கூடாது என்று சபதம் ஏற்றிருக்கிறேன். அப்படி இருக்கையில் உன்னிடம் நான் கோபம் கொள்வேனா? நிச்சயம் மாட்டேன். இல்லை மகனே, இல்லை! நான் ஏன் உன் கேள்விகளுக்குப் பதில் சொல்லத் தயங்குகிறேன் எனில், எனக்கு உள்ளூர ஒரு பயம், கவலை உள்ளது. அது என்னவென்றால், உன் வயதுக்கும் அனுபவங்களுக்கும் நீ நான் சொல்லிக் கொடுப்பதன் முக்கியத்துவத்தையோ, அல்லது என் பதில்களின் முக்கியத்துவத்தையோ புரிந்து கொள்வாயா என்பதே! சரி, குழந்தாய், இப்போது உனக்கு என்ன தெரிய வேண்டும்?”

Friday, April 29, 2016

ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கிய பயணம்!

யமுனையில் நீரின் போக்கை எதிரிட்டுக் கொண்டு அவர்கள் பயணம் செய்ய நேர்ந்தது. பிரவாகத்தின் வேகம் அதிகமாக இருந்தது. த்வைபாயனன் இது வரையிலும் யமுனையில் இவ்வளவு நீண்ட பயணம் செய்ததில்லை. அதிலும் பிரவாகத்தை எதிரிட்டுக் கொண்டு சென்றதே இல்லை. ஆகவே வழியெங்கும் அவன் கண்ட காட்சிகள் மனதுக்கு உற்சாகத்தையும், ஆச்சரியத்தையும் கொடுத்தன. எல்லாவற்றையும் கூர்ந்து கவனித்துக் கொண்டு வந்தான். கரையோரமாகச் செழித்து வளர்ந்திருந்த அடர்ந்த மரங்கள், அந்த மரங்களின் நிழலில் படுத்திருந்த பெரிய பெரிய முதலைகள், ஏதோ மரத்தை வெட்டிக் கட்டைகளை அடுக்கி இருந்தாற்போல் தோற்றம் அளித்தன. ஒர் சில முதலைகள் சத்தமின்றி நதிக்குள் இறங்கி வாலைத் தூக்கி ஓங்கி அடித்தன. கரை ஓர மரங்களில் இருந்து பூக்கள் நதிப் பிரவாகத்தில் சொரிந்திருந்தது. அது பிரவாகத்துக்கு வேலி கட்டினாற்போல் கரை ஓரமாகப் பயணம் செய்து கொண்டிருந்ததைப் பார்த்தால் யமுனை நதிக்கு நக்ஷத்திரங்களை ஆபரணங்களாகப் பூட்டி இருப்பது போல் காட்சி அளித்தது. அதோடு மட்டுமா? ஓர் கரையில் முதலைகள் எனில் மற்றொரு பக்கம் அடர்ந்த காட்டுக்குள்ளிருந்து யானைக்கூட்டங்கள் வந்து யமுனையில் நீர் அருந்திச் சென்றன. சில குறும்புக்கார ஆனைக்குட்டிகள் தங்கள் தும்பிக்கையில் நீரை நிரப்பிக் கொண்டு கூட்டத்திலிருந்து முதிர்ந்த யானைகளின் மேல் நீரைப் பொழிந்து வேடிக்கை பார்த்தன. சில குட்டிகள் தண்ணீரில் அமிழ்ந்து கொண்டு வெளியே வர அடம் பிடித்தன. இவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டு சென்ற த்வைபாயனனின் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. தான் இருந்த தீவுக்கு வெளியே இப்படி ஓர் அற்புதமான உலகம் விரிந்து பரந்திருப்பதைக் கண்டு அதிசயித்துப் போனான்.

த்வைபாயனனுக்கு மீனவர்களின் கொச்சையான மொழி தான் வரும். அதில் தான் பேசப் பழகி இருந்தான். தன் தந்தையுடனும் அந்த மொழியில் தான் பேசி வந்தான். பராசரருக்கும் மீனவர்களின் மொழி தெரிந்திருந்தாலும் அவர் பயணம் ஆரம்பித்ததுமே மெல்ல மெல்ல ஆரியர்களின் பாரம்பரியமான தெய்விக மொழியைக் கொஞ்சம்கொஞ்சமாக த்வைபாயனனுக்குச் சொல்லிக் கொடுத்து வந்தார். அவர் நம்பிக்கையைப் பொய்யாக்காமல் த்வைபாயனனும் விரைவில் வார்த்தைகளைக் கற்றுக் கொண்டு மெல்ல மெல்ல நிறுத்தி அவற்றை வாக்கியங்களாக ஆக்கித் தன் பேச்சைத் தொடங்க ஆரம்பித்தான். சூரியன் அஸ்தமிக்க ஆரம்பித்தான். படகு தன் பயணத்தை நிறுத்திக் கொண்டு கோதுலி என்னும் கிராமத்துக்கு அருகே சற்றே நிறுத்தப்பட்டது. அந்தக் கிராமத்துக்குச் செல்லவேண்டிப் பயணித்த பயணிகள் தங்கள் இடம் வந்து விட்டதை அறிந்து இறங்கிக் கொண்டார்கள். மற்றவர்கள் படகு இனி பயணத்தைத் தொடராது என்பது தெரிந்து கரை ஓரமாக இரவைக் கழிக்க ஆயத்தமானார்கள். படகில் பயணித்த பயணிகள் மூலம் பாங்கு(நொண்டி) முனிவர் யமுனைக்கரையோரம் தங்கி இருப்பதை அறிந்த ஊர்க்காரர்கள் அவரை வரவேற்கப் பற்பல வாத்தியங்களை முழக்கியவண்ணம் வந்து விட்டார்கள். அவர்கள் மனதுக்கு மிகவும் பிடித்த இந்த நொண்டி ரிஷியை நமஸ்கரித்து ஆசிகளை வாங்கிக் கொண்டார்கள். ரிஷியும் அவ்வாறே அவர்களை ஆசீர்வதித்தார். விரைவில் நோயுற்றவர்களும், மற்றவர்களும் அங்கே வந்து ரிஷியை வணங்கி ஆசிகளை வாங்கிக் கொண்டனர்.

அங்குள்ள சின்ன ஆசிரமம் ஒன்றின் ஆசாரியர் ஆன கௌதம ரிஷி பராசரரின் வருகை குறித்து அறிந்ததும், தன் சீடர்களோடு அங்கே வந்து அவரை எதிர்கொண்டு வரவேற்றார். மேலும் அவர் ஒரு காலத்தில் பராசரரின் சீடராகவும் இருந்திருக்கிறார். பராசரர் தன் அருமை மகனை கௌதமருக்கு அறிமுகம் செய்து வைத்தார். கௌதமர் த்வைபாயனனுக்கு ஆசிகளைக் கொடுத்துவிட்டுத் தன் நெஞ்சோடு சேர்த்து அணைத்துக் கொண்டார். அதோடு அல்லாமல் பராசரர் அவருடன் வந்த இரு சீடர்கள், த்வைபாயனன் மற்றும் அங்கே தங்கி இருந்த மற்ற படகுப் பயணிகள் அனைவரையும் தன் ஆசிரமத்துக்கு வந்து உணவு உண்டு இளைப்பாறிச் செல்லவேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார். அப்படியே அனைவரும் கௌதமரின் ஆசிரமம் சென்று அங்கே தயாரிக்கப்பட்ட உணவை உண்டு இரவைக் கழிக்க ஆயத்தமானார்கள். வந்திருந்த பயணிகளில் பெரும்பாலோர் மிகக் களைத்திருந்ததால் உடனே தூங்கி விட்டார்கள். த்வைபாயனன் தன் தந்தைக்கு அருகே ஒரு மான் தோலை விரித்துப் படுத்துக் கொண்டான்.

மகன் படுத்துக் கொண்டதை அறிந்தார் பராசரர். விண்ணைப் பார்த்தார். தெளிவான வானமாக இருந்ததோடு ஆங்காங்கே நக்ஷத்திரங்கள் ஜொலிக்க ஆரம்பித்திருந்தன. தன் மகனுக்கு அவற்றைக் காட்டி எந்த எந்த நக்ஷத்திரங்கள், அவற்றின் பெயர், அவை இருக்குமிடம் ஆகியவற்றைக் கொஞ்சம் கொஞ்சமாக அறிமுகம் செய்து வைத்தார். அப்படியே கிரஹங்களையும் சுட்டிக் காட்டி அவற்றுக்கும் நக்ஷத்திரங்களுக்கும் உள்ள வித்தியாசத்தைச் சொல்லிக் கொடுத்தார். கிரஹங்களால் மனித வாழ்க்கையில் ஏற்படும் தாக்கம் குறித்தும் எடுத்துக் கூறினார். த்வைபாயனனுக்கு ஏற்கெனவே தன் தாத்தா ஜாருத் கூறியதிலிருந்து தன் தந்தை அனைத்தும் அறிவார் என்று தெரிந்து வைத்திருந்தான். இப்போது சந்தேகத்துக்கு இடமில்லாமல் அது நிரூபணம் ஆயிற்று. பராசரர் சப்தரிஷி மண்டலத்தைச் சுட்டிக் காட்டினார். அதிலே வசிஷ்டர் இருக்குமிடத்தைச் சுட்டியவண்ணம், “அதோ, தெரிகிறதே! அது வசிஷ்டர், நம்முடைய முன்னோர்களில் ஒருத்தர்!” என்றார். அதைப் பார்த்த த்வைபாயனன் ஆச்சரியத்துடன், “தந்தையே, அப்படி எனில் நீங்களும் ஓர் நக்ஷத்திரமாக ஆக முடியுமா?” என்று கேட்டான்.

“ஆகலாம், குழந்தாய், நான் சரியான தர்மத்தைக் கடைப்பிடித்து அதன்படி வாழ்ந்து என் வார்த்தையை நிலைநாட்டினேன் எனில் நானும் ஓர் நக்ஷத்திரம் ஆவேன்!”

“அப்படி எனில் நானும் தர்மத்தின் வழியே சென்று வாழ்ந்து என் வார்த்தைகளையும் நிலைநாட்டினால்? நானும் ஓர் நக்ஷத்திரம் ஆக முடியுமா தந்தையே?”

“நிச்சயமாக, மகனே!”
த்வைபாயனனின் மனம் சந்தோஷத்தில் குதித்தது. மீண்டும் விண்ணில் பயணம் செய்த நக்ஷத்திரங்களைக் கவனித்தான். “தந்தையே, தந்தையே, இந்த நக்ஷத்திரங்கள் ஓர் இடத்தில் நிலைத்து இருக்கவில்லையே! அவை எங்கோ பயணம் செய்து கொண்டு இருக்கின்றன! அவை தானாகப் பயணிக்கின்றனவா? அல்லது வேறு யாரும் அவற்றை நகர்த்துகின்றனரா? அவை மேற்கு நோக்கிய பயணம் மேற்கொண்டிருக்கின்றன!” என்று கேட்டான். “குழந்தாய், அவை எல்லாம் வல்ல வருண பகவானின் ஆட்சிக்குக் கீழ் இருக்கின்றன. வருணன் இந்த விண்ணிற்கும், விண்ணிலிருந்து பொழியும் நீருக்கும் அதிபதி! இந்த நக்ஷத்திரங்கள் அவனுக்குக் கண்கள் போன்றவை. அவற்றால் அவன் ஒவ்வொருவருடைய நடவடிக்கையையும் கண்காணிக்கிறான்.”

“ஓ, அப்படி எனில் இப்போது நாம் பேசுவதையும் அவரால் பார்க்க முடியுமா தந்தையே? உங்களையும், என்னையும் வருணன் பார்த்துக் கொண்டிருக்கிறாரா?”

“நிச்சயமாக!”

த்வைபாயனனின் மனம் குதூகலித்தது. இந்த விஷயம் அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. அவன் இப்போது வருண பகவானின் கண்காணிப்புக்குக் கீழ் இருக்கிறான். அவர் அவனைப் பார்த்துக் கொள்வார். மறுநாள் அதிகாலையே எழுந்த பராசரர் தன் அன்றாடக் கடமைகளை முடித்துவிட்டு அக்னி பகவானுக்கு அர்க்யம் கொடுத்து அவனை மகிழ்வித்தார். மந்திர கோஷங்கள் அங்கே பலமாகக் கேட்டன. தன் தந்தை அருகே அமர்ந்த வண்ணம் அனைத்தையும் பார்த்துக் கொண்டும் கேட்டுக் கொண்டும் இருந்த த்வைபாயனன் மந்திரங்களை மனதில் நிறுத்திக் கொண்டான். தந்தை எப்படி உச்சரிக்கிறார் என்பதையும் நன்கு கவனித்துக் கொண்டான். சூரியன் உதயம் ஆகும்போது பராசரருக்கும் மற்றவர்களுக்கும் கௌதம ரிஷியின் ஆசிரமத்தில் பிரியாவிடை கொடுக்கப்பட்டது. அனைவரும் படகில் ஏறி மேலே பயணிக்க யமுனைக்கரைக்கு வந்தார்கள்.

அவர்கள் பயணம் தொடங்கிய உடனேயே த்வைபாயனன் தன் மனதிலிருந்த சந்தேகங்களை எல்லாம் கேள்விகளாகக் கேட்க ஆரம்பித்தான். தன் மகனின் ஆர்வத்தையும் கற்றுக்கொள்ளும் வேகத்தையும் கண்டு பராசரருக்கே ஆச்சரியம் மேலிட்டது. எல்லாவற்றையும் தெரிந்து கொள்ள விரும்பிய தன் மகனுக்கு அனைத்தையும் கற்றுக் கொடுக்க முடிவு செய்ததோடு அவன் கேள்விகளுக்குத் தக்க பதில்களையும் அளித்து அவனை ஊக்கப்படுத்தினார். எந்தக் கேள்வியாக இருந்தாலும் அவை மோசமானதாக இருந்தாலும் அவற்றையும் எதிர்கொண்டு ஒரே மாதிரியான புன்னகையுடன் மகனுக்கு சந்தேகங்களைத் தெளிவித்தார். இதன் மூலம் த்வைபாயனனுக்குத் தந்தையிடம் நம்பிக்கை வந்ததோடு அல்லாமல் கற்றுக் கொள்ளும் ஆர்வமும் பெருகியது. அவன் தன்னம்பிக்கையும் அதிகரித்தது. அவனுக்கு இப்போது ஒரே ஒரு கவலை தான். தன் தந்தை உபநயனம் என்னும் பூணூல் போடும் சடங்கு முடிந்தவுடன் தான் அவனுக்கு மறு பிறவி கிடைக்கும்; அவன் எல்லாவற்றையும் தடையறக் கற்கலாம் என்று சொல்லி இருந்தார். எப்போது அந்த நிகழ்ச்சி நடக்கும்? அது நடந்ததும் அவனுக்குப் பற்பல சங்கல்பங்களையும் வாக்குறுதிகளையும்,உறுதி மொழிகளையும் ஏற்கவேண்டும் என்று தந்தை சொல்லி இருந்தார். அவை எல்லாம் என்ன? அவற்றின் மூலம் அவனுக்கு எப்படி வாழ்க்கையில் முன்னேற முடியும்? த்வைபாயனனின் சந்தேகம் அதிகரித்தது. தந்தையின் முகத்தைப் பார்த்தான்.

Wednesday, April 27, 2016

பிரியாவிடை!

அடுத்த இரு நாட்களும் கிருஷ்ணா அங்குமிங்கும் அலைந்து அந்தச் சின்னஞ்சிறு தீவுத்திட்டிலும், அதைத் தாண்டி அருகில் இருந்த இன்னொரு திட்டிற்கும் சென்று தான் தன் தந்தையோடு செல்லப் போவதைக் குறித்துக் கூறினான். அவன் வயதே உள்ள சிறுவர், சிறுமியர் அனைவரிடமும் அவன் தந்தை வந்திருப்பதையும், அவனை அழைத்துச் சென்றுவிடுவார் என்றும் பெருமையுடன் கூறினான். இத்தனை நாட்கள் தந்தை இல்லாமல் வளர்ந்து வருகிறான் என அவர்கள் அவனைக் கேலிப் பேச்சுப் பேசி வந்திருக்கின்றனர். இப்போது அவனுடைய முறை வந்துவிட்டது. தந்தை வந்திருப்பதோடு அல்லாமல் அவனை அழைத்துச் செல்லவும் போகிறார். அதுவும் எப்பேர்ப்பட்ட தந்தை! அவருக்கு எல்லாம் தெரியும். தெரியாததே இல்லை! அவர் தனக்குத் தெரிந்த அனைத்தையும் கிருஷ்ணாவுக்கும் கற்றுக் கொடுக்கப் போகிறார். தந்தையைப் போல் அவனும் விண்ணில் ஒளிரும் நக்ஷத்திரங்கள், கிரஹங்கள், சூரிய,, சந்திரர்கள் மற்றும் இந்த யமுனையின் மீன்களைக் குறித்தும் படிப்பான். யமுனையில் எவ்வளவு நீர்த்துளிகள் உள்ளன என்று கூட அவனுக்குச் சொல்லிக் கொடுப்பார் அவன் தந்தை! அவன் தந்தையைப் போல் அவனுக்கும் ஒரு சில கட்டுப்பாடான பழக்கங்கள் ஏற்படும். அவனே ஏற்படுத்திக் கொள்வான். தந்தையைப் போல் நீண்ட தாடியும் வளர்த்துக் கொள்வான். தலை மயிரைத் தூக்கிக் கட்டிக் கொள்வான். அது அவனுக்குக் கிரீடம் போல் அமைந்துவிடும். தந்தையோடு அவன் யானைகளின் மீது பயணம் செய்யும் பெரிய பெரிய அரசர்களைச் சென்று சந்திப்பான். அந்த அரசர்கள் எவ்வளவு பெரியவர்களாக இருந்தாலும் அவன் தந்தையையும் அவனையும் கீழே விழுந்து வணங்கி அவர்கள் ஆசிகளைப் பெற்றுக்கொள்வார்கள்.

திரும்பத் திரும்பத் தன் தந்தையிடம் அவருக்குத் தெரிந்த எல்லாவற்றையும் கிருஷ்ணாவுக்கும் கற்றுக் கொடுக்கப் போவதைக் கேட்டு நிச்சயம் செய்து கொண்டான். பராசரருக்குத் தன் மகனின் இந்த ஆர்வமும் மகிழ்ச்சியும் ஆச்சரியத்தை அளித்தது. பராசரர் கிளம்பும் நாளும் வந்தது. அவர் திரும்பிச் செல்லவேண்டிய படகும் அந்தத் தீவின் கரைக்கு வந்து விட்டது. அங்கிருந்த மீனவர்கள் அனைவரும் ரிஷியை வணங்கி அவர் ஆசிகளைப் பெற்றுக் கொண்டு அவருக்கு விடை கொடுக்க வேண்டித் தயாராக இருந்தனர். ஆயிற்று! இதோ கிருஷ்ணாவும் தயாராக வந்து விட்டான். பிரியும் நேரம் நெருங்கியே விட்டது. பிரியும் நேரம் நெருங்க நெருங்க மச்சகந்திக்குக் கண்ணீர் பெருக்கெடுத்தது. அவள் வாழ்நாளில் இனி தன் மகனை அவள் எப்போது பார்ப்பாளோ! தெரியாது! பார்க்காமலேயே போகலாம். ஏனெனில் இனி அவன் போகப்போகும் பாதை அத்தகையது. ஆகையால் மச்சகந்தி மிகவும் பிரயாசையுடன் தன் மனதுக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டாள். அவள் செல்ல மகனுக்கு இப்போது இது தான் நல்வழியைக் காட்டும். இதன் மூலமே அவன் மிகவும் உயர்ந்ததொரு இடத்துக்கு வருவான். இப்போது இந்த வயதில் அவன் தன் தந்தையுடன் செல்வது தான் அவனுக்குச் சிறந்தது.

எல்லாக் குழந்தைகளையும் போலவா அவள் மகன்? எவ்வளவு சிறப்பு வாய்ந்தவன்! அவளுக்குக் கிடைத்த மாபெரும் பரிசல்லவோ அவன்! அத்தகையதொரு விலை மதிக்க முடியா செல்வத்தை இங்கே மீனவர்களுடன் சேர்ந்து ஒரு மீனவனாக வாழ்க்கை நடத்தச் சொல்ல முடியுமா? அது தகுமா? படகுகளில் பயணிகளை ஏற்றிக் கொண்டு ஒரு கரையிலிருந்து மற்றொரு கரைக்குக் கொண்டு விடும் படகுக்காரனாகத் தான் இருக்க விட முடியுமா? அவளுடைய அற்புதமான மகனுக்கு இந்த மீனவ உலகத்தில் சில காலம் வளர வேண்டும் என்பது அந்த ஆண்டவன் இச்சை. இந்த உலகு அவன் இதோ காண்பதற்காகக் கிளம்பும் உலகை விட மிகச் சிறியது! அவன் மகன் எப்போதும் விண்ணில் ஒளிரும் நக்ஷத்திரங்கள் குறித்து அறியவும், கிரஹங்களின் சஞ்சாரம் குறித்துத் தெரிந்து கொள்ளவுமே ஆசைப்பட்டான். இந்த யமுனையில் ஓடும் நீர்ப் பிரவாகத்தின் ஒவ்வொரு துளியையும் கணக்குப் பண்ண ஆசைப்பட்டான். அதெல்லாம் இந்த மீனவர்களின் உலகிலே சாத்தியமானதே அல்ல. பார்க்கப் போனால் அவள் யமுனைத் தாய்க்கு இப்படிப்பட்டதொரு அருமையான மகனைக் கொடுத்ததற்கு நன்றி சொல்ல வேண்டும். மேலும் மச்சகந்தியின் விதியும் கிருஷ்ணா அங்கிருந்து கிளம்பி அவன் தந்தையுடன் செல்வதிலே தான் இருக்கிறது. அவள் எதிர்காலமே அவன் கையில் தான். இதையும் மச்சகந்தி நன்கு உணர்ந்திருந்தாள்.  கிருஷ்ணன் இங்கே இல்லை எனில் மீனவ இளைஞர்களில் எவரேனும் அவளை மணக்க முன் வரலாம்.

பிரியும் நேரம் நெருங்கியது. மீனவர்கள் கூட்டமாகக் கூடி விட்டனர். அனைவரும் கிருஷ்ணனைப் பார்த்து விசாரித்து அவனுக்குப் பிரியாவிடை கொடுக்க நினைத்துத் தேடினால்! இது என்ன! கரையில் எங்குமே கிருஷ்ணனைக் காணவில்லை! அவரவர் குடிசைகளுக்குப் போயும் தேடி விட்டனர். கிருஷ்ணன் எங்கே? திகைத்துப் போய்விட்டனர். பின்னர் ஒருவர் அங்கே நிற்கும் படகைச் சுட்டிக் காட்டினார். அங்கே கிருஷ்ணன் தண்ணீரில் சிறிது தூரம் நடந்து சென்று படகில் ஏறிக் கொண்டு தந்தை வருவதற்காகக் காத்திருந்தான். அமைதியும், நிறைவும் அவன் முகத்திலே தெரிந்தது. அவன் ஏன் அவ்வளவு அவசரமாக அங்கே சென்று விட்டான் என்றால் கடைசி நிமிடத்தில் தாத்தா ஜாருத்தோ அல்லது தாய் மச்சகந்தியோ மனதை மாற்றிக் கொண்டு விட்டால்? அல்லது தந்தை மனம் மாறிவிட்டால்? தன் மகனைப் படகிலே பார்த்த பராசரர் ஓவென்று வாய் விட்டுச் சிரித்தார். “மத்ஸ்யா, அதோ பார் உன் மகனை! என்னையும் உன்னோடுஇங்கே விட்டு விட்டுப் போகப் போகிறான் போலும்!” என்றார். பின்னர் தன் குரலை உயர்த்திக் கொண்டு “கிருஷ்ணா, கிருஷ்ணா, இங்கே வா அப்பா! நான் உன்னை விட்டுச் செல்ல மாட்டேன். இங்கே வந்து உன் தாய், பாட்டன், பாட்டி ஆகியோர் கால்களில் விழுந்து ஆசிகளை வாங்கிக் கொள்! அதோடு நீ என்னுடன் வருவதற்கு அவர்கள் அனுமதியையும் பெற்றுக் கொள்! அது தான் முறை! ஆரியர்கள் அப்படித் தான் செய்வார்கள்; செய்ய வேண்டும். அவர்கள் அனுமதியுடனும், ஆசிகளுடனுமே நீ என்னுடன் வரலாம்!” என்றார்.

கொஞ்சம் தயக்கத்துடனேயே கிருஷ்ணன் படகிலிருந்து கீழே குதித்தான். பின்னர் தண்ணீரில் நடந்து கரையை நோக்கி வர ஆரம்பித்தான். கிருஷ்ணனின் இந்தச் செயல் அங்கிருப்பவர்களிடையே நகைப்பை மூட்டியது. அதோடு அல்லாமல் அந்தப் படகிலிருந்து ஒரு மான் தோலை எடுத்துத் தன் இடுப்பில் கிருஷ்ணன் கட்டிக் கொள்ள முயன்றிருந்தான். அந்த மான் தோலானது அவன் உடல் முழுவதையும் மூடி விட்டது! ஆகவே அவன் அந்த மான் தோலைத் தன் கைகளால் பிடித்துக் கொண்டு நழுவி விடாமல் இருக்கப் பார்த்துக் கொண்டே மெல்ல மெல்லத் தான் வர முடிந்தது.  அப்படியே வந்து தன் பாட்டன் முன் கீழே விழுந்து நமஸ்கரிக்க யத்தனித்தான். அவன் கைகள் மான் தோலில் இருந்து நழுவியது. அது நழுவிய வேகத்தில் கிருஷ்ணனையும் சேர்த்துக் கீழே தள்ள அப்படியே அவன் மான் தோலுடன் கீழே விழுந்துவிட்டான். அங்கிருந்த எல்லோருக்கும் இது இன்னமும் ஆனந்தத்தைத் தர எல்லோரும் கைகொட்டிக் கொண்டு சிரித்து மகிழ்ந்தனர். பராசரர் தன் மகனை எழுப்பி மான் தோலை சீராகக் கட்டி விட்டார். அது மீண்டும் நழுவாமல் இருக்க இடுப்பில் ஒரு கயிறைக் கட்டி விட்டார். பின்னர் தன் மகனைத் தட்டிக் கொடுத்து ஆறுதல் சொன்னார்.

ஆயிற்று! இப்போது உண்மையாகவே பிரியும் நேரம் வந்தே விட்டது. கண்ணீர் மழை பொழிந்தாள் மச்சகந்தி! “கிருஷ்ணா, கிருஷ்ணா, இனி எப்போது உன்னை நான் பார்ப்பேன்? அல்லது நீ என்னைப் பார்ப்பாயா?” என்று கேட்டாள். அவள் நிலை பரிதாபமாக இருந்தது. கிருஷ்ணாவுக்குத் தன் தாய் இப்படி ஓர் வலை விரித்துத் தன்னை மீண்டும் அவளுடனே வைத்துக் கொண்டு விடுவாளோ என்னும் சந்தேகம் உள்ளூர இருந்தது. ஆகவே சந்தேகத்துடனேயே தன் தந்தையின் முகத்தைப் பார்த்தான். தந்தையோ அவனை நம்பிக்கை கொடுக்கும் ஓர் புன்சிரிப்பால் தட்டிக் கொடுத்து உற்சாகப்படுத்தினார். பின்னர் தாயைப் பார்த்து கிருஷ்ணா, “அம்மா, கவலைப்படாதே! நீ எப்போது என்னைப் பார்க்க வேண்டும் என்றாலும் என்னை நினைத்துக் கொண்டாலும் போதும்! நான் உன் பக்கம் வந்துவிடுவேன். உன் உதவிக்கு வருவேன்!” என்றான். மச்சகந்தி தன் மகனை இறுக அணைத்துக் கொண்டாள்.

“கிருஷ்ணா, ஓர் ஆரியன் அவனைப் பெற்ற தாயை ஒரு போதும் மறக்கவே மாட்டான். அவனைப் பொறுத்தவரையில் அவள் நடமாடும் தெய்வம்!” என்று பராசரர் ஆரியர்களின் பொதுவானதொரு விதியைக் கிருஷ்ணனுக்கு எடுத்துச் சொன்னார். மச்சகந்தி அவரை நன்றியுடன் பார்த்தாள். தன் துக்கத்தை அடக்கிக் கொள்ள நினைத்தும் முடியாமல் தன் கைகளால் முகத்தை மூடிக் கொண்டாள். தன் மகன் தன்னை விட்டுச் செல்வதைத் தாங்க முடியாமல் படகுக்கு எதிர்ப்பக்கம் குடிசைகளைப் பார்த்து நின்று கொண்டாள். பராசரர் அவளிடம், “மத்ஸ்யா, அழாதே! குழந்தைக்கு ஆசிகள் கூறு! நான் அவனை எப்போதுமே “த்வைபாயனா” என்றே அழைப்பேன். ஏனெனில் அவன் இந்தத் தீவில் தானே பிறந்தான். இந்தத் தீவையும் உன்னையும் அவன் என்றுமே மறக்க மாட்டான்.”

தன் மகனைத் தூக்கிக் கொண்டார் பராசரர். தண்ணீரில் நடந்து சென்று படகில் ஏறிக் கொண்டார். கிருஷ்ணனோ சந்தோஷத்தோடு, “அம்மா, அம்மா, அழாதே, நான் தந்தையுடன் செல்கிறேன். போய் வருகிறேன்.” என்று கத்தினான்.

Tuesday, April 26, 2016

மச்சகந்தியின் எதிர்காலம்!

பின்னர் பராசரர் அக்னி வளர்த்து ஹோமம் செய்து ஆஹுதிகள் கொடுத்தார். அவரருகே மிக நெருக்கமாகக் கிருஷ்ணாவும் அமர்ந்து கொண்டு அவர் செய்வதை எல்லாம் உன்னிப்பாகக் கவனித்து மனதில் பதிய வைத்துக் கொண்டான். மந்திரங்களை மிகக் கருத்துடன் கேட்டு அவற்றையும் மனதில் பதிய வைத்தான். இப்போது அவனாக இந்த மந்திரங்களைச் சொல்ல முடியாது; சொல்லக் கூடாது என்று தந்தை சொல்லி இருக்கிறார்.  ஆகவே தந்தை அவற்றைச் சொல்லும்போது ஒவ்வொரு வார்த்தையையும் எப்படி உச்சரிக்கிறார் என்று கவனித்துக் கொண்டான். வழிபாடுகள் முடிந்ததும், பராசரர் அந்த மீனவக் குடியிருப்பின் மற்ற மீனவர்களையும் சந்தித்துப் பேசினார். அனைவரும் அவர் வந்திருப்பது தெரிந்து கொண்டு அவர் இருக்குமிடமே வந்து அவரை நமஸ்கரித்து ஆசிகளைப் பெற்றனர். பின்னர் மீனவன் ஜாருத்தின் குடும்பத்து ஆண்களும், பராசரரும் அவருடன் வந்த அவர் சீடர்களும் உணவு உண்ண அமர்ந்தனர். கிருஷ்ணா எப்போதும் தன் பாட்டன் அருகே தான் அமர்ந்து கொள்வான். இன்று தந்தையை விட்டு அகலவே இல்லை. அவர் அருகேயே அமர்ந்து கொண்டுவிட்டான்.

பாட்டனின் இலையிலிருந்து உணவைப் பகிர்ந்து உண்பதற்கு பதிலாகத் தந்தையின் இலையில் இடப்படும் உணவைத் தந்தையுடன் பகிர்ந்து உண்ண ஆவலுடன் காத்திருந்தான். ஆனால் ஜாருத்திற்கு கிருஷ்ணா அப்படி உண்பதை ரிஷி ரசிப்பாரோ மாட்டாரோ என்னும் எண்ணம் உண்டாயிற்று. ஆகவே கிருஷ்ணனைத் தன் அருகே வந்து அமரும்படி அழைத்தான். கிருஷ்ணன் திட்டவட்டமாக மறுத்தான். “மாட்டேன், பாட்டா! நான் தந்தையின் அருகேயே அமர்ந்து கொள்கிறேன். தந்தை இங்கே இருக்கையில் அவருடன் நான் என்னுடைய நேரத்தைக் கழிக்க விரும்புகிறேன். அது உண்ணும் நேரமாக இருந்தாலும்!” என்றவண்ணம் தந்தையின் பக்கம் திரும்பி, “தந்தையே, நான் இங்கே அமர்ந்து கொண்டு உங்களுடன் உணவு உண்ணுவதால் உங்களுக்குத் தொந்திரவாக இருக்குமா? என்னிடம் கோபித்துக் கொண்டு விடுவீர்களோ?” கிருஷ்ணனுக்குள் இப்போது ஓர் அச்சம் ஏற்பட்டிருந்தது. அது என்னவெனில் தான் தந்தை அருகே அமர்ந்து உணவு உண்பது அவருக்குப் பிடிக்கவில்லை எனில் தன்னை இங்கேயே விட்டு விட்டுச் சென்று விடுவாரோ? அவருக்குப் பிடிக்காத ஓர் காரியத்தை நாம் ஏன் செய்ய வேண்டும்? ஆனால் முனிவரோ தன் மகன் முதுகைத் தடவிக் கொடுத்தவண்ணம், “இல்லை, மகனே, இல்லை! நீ என்னுடன் என் அருகேயே அமர்ந்து கொண்டு உணவை என்னுடன் பகிர்ந்து கொள்!” என்று அன்புடன் கூறினார்.

உணவு உண்ணும் முன்னர் அவர் ஒரு தீர்த்த பாத்திரத்தில் இருந்த நீரை எடுத்து இலையைச் சுற்றி வட்டமாகத் தெளித்தார். பின்னர் சில மந்திரங்களைச் சொல்லிக் கொண்டே உணவை ஒவ்வொரு பருக்கையாக எடுத்து வாயில் போட்டுக் கொண்டார். பின்னர் மீண்டும் நீரை எடுத்து ஆபோஜனம் பண்ணிய பின்னர் இலையை இடக்கையால் தொட்டு மார்பில் வைத்துக் கொண்டார். இது உணவு உண்ணும் முறையின் முதல் பகுதி. இரண்டாம் பகுதியில் பிராணனுக்கு உணவு அளிக்கப்படும். இதைப் பிராணஹுதி என்பார்கள்.  ஏனெனில் இதைப் ப்ராண அக்னி ஹோத்ரம் என்றும் கூறுவது உண்டு. இதன் பின்னர் உண்டு முடித்தபின்னர் செய்வது உத்தராபோஜனம் ஆகும். அம்ருதோபஸ்தரணம் அஸி என்று சொல்லித் தண்ணீரை உணவுக்கு உடையாக்கி அம்ருதமாக மாற்றுகிறது. ஒரு சிலர் வெளி இல்லங்களில் உணவருந்தினால் அன்னதாதா சுகி பவ: என்று வாழ்த்துவதும் உண்டு. இவை எல்லாவற்றையும் அருகிலிருந்து பார்த்த கிருஷ்ணா உணவு உண்கையில் தந்தை செய்வதைப் போலவே செய்தான். ஆனாலும் மந்திரங்களை வாய்விட்டுச் சொல்லவில்லை. மனதுக்குள் நினைவு கூர்ந்து கொண்டான். அனைவரும் அவனையே பார்த்து அவன் செய்வதைப் பார்த்துச் சிரித்தனர்.

அன்றிரவு தந்தையை விட்டு அகலாமல் அவர் அருகேயே கிருஷ்ணாவும் படுத்துக் கொண்டான். ஒரு கையை அவர் மேலே போட்டிருந்தான். அந்தக் கையைத் தூக்கத்தில் கூட எடுக்கவில்லை. தான் தூங்குகையில் தந்தை தன்னை விட்டுப்போய்விடுவாரோ என்னும் சந்தேகம் அவ்வப்போது தோன்ற திடுக்கிட்டு எழுந்து பார்த்துக் கொண்டு மீண்டும் தூங்குவான். இப்படியே அன்றிரவும் கழிந்தது. மறுநாள் காலையில் பராசரர் தன் நித்திய கர்மானுஷ்டானங்களை முடித்த பின்னர் ஜாருத்தின் குடும்பத்தினரைச் சந்தித்தார். அப்போது ஜாருத் கிருஷ்ணா குறித்த பேச்சை ஆரம்பித்தான். “மஹரிஷி, இந்தச் சிறுவன், கிருஷ்ணன் மிகவும் தொந்திரவு கொடுக்கிறான்.” என்று புகாராகக் கூறினான். அவன் உள் மனதில் எப்படியேனும் கிருஷ்ணா இந்தத் தீவை விட்டுப் பராசரருடன் கிளம்பிப் போனால் போதும் என்று இருந்தது. அப்போது தான் மச்சகந்திக்கு ஒரு நல்ல வாழ்க்கை கிடைக்கும். பராசரர் மனம்விட்டுச் சிரித்தார். “ நான் அறிவேன் ஜாருத்! அவன் ஒரு தொந்திரவு கொடுப்பவன் தான். அவ்வளவு ஏன்? அவன் பிறக்கும் முன்னரே தொந்திரவாகத் தான் இருந்தான். பார்த்தாயா, கிருஷ்ணா, உன் தாத்தா என்ன சொல்கிறார்! நீ மிகவும் தொந்திரவு கொடுக்கிறாயாமே அவருக்கு! ஏன் அப்பா?”

“இல்லை, தந்தையே, இல்லவே இல்லை!” வெகுளியாகச் சிரித்தான் கிருஷ்ணா. “அவர் என்னைக் கேலி செய்கிறார். வம்பு வளர்க்கிறார். தந்தையே, நான் எவ்விதமான எதிர்ப்பும் காட்டாமல் அவருக்குக் கீழ்ப்படிந்து நடந்து கொண்டு வருகிறேன்.” என்றவன் தன் பாட்டன் பக்கம் பார்த்துக் கொண்டே, விஷமத்தனமான சிரிப்புடன், “அதோ, அதோ, அதோ பாருங்கள் தந்தையே, பாட்டனார் சிரிப்பதை!” என்றும் கூறினான். அங்கிருந்த அனைவரும் சத்தம் போட்டுச் சிரித்தனர்.  ஆனால் ஜாருத்தோ இன்னும் தீவிரமாக இந்த விஷயத்தைக் குறித்துப் பேசவேண்டும் என நினைத்தவண்ணம் மீண்டும் பேச ஆரம்பித்தான்.

“மாட்சிமை பொருந்திய ரிஷியே! இவன் எப்போது பார்த்தாலும் உங்களுடன் செல்லவேண்டும் என்றே சொல்லிக் கொண்டிருக்கிறான்.” என்ற ஜாருத் தன்னிரு கரங்களையும் கூப்பிய வண்ணம் மேலே பேசினான். “ஐயா, உங்களிடம் நாங்கள் எதையும் எதிர்பார்க்க இயலாது. அப்படி ஏதும் எங்களுக்கு எண்ணம் இல்லை. இவனை உங்களோடு அழைத்துச் செல்வதில் உள்ள கஷ்ட நஷ்டங்களை நாங்கள் நன்கு புரிந்தே வைத்திருக்கிறோம். ஆனால் நீங்கள் அவனை இங்கேயே விட்டுவிட்டுச் சென்று விட்டீர்களானால் அவன் மனம் உடைந்து போய்விடுவான்.” ஜாருத்தின் மனதில் மீண்டும் மீண்டும் இதைச் சொன்னால் ரிஷி எப்படியும் கிருஷ்ணாவை அழைத்துச் சென்று விடுவார் என்னும் எண்ணம் மேலோங்கியது. பராசரர் மீண்டும் நகைத்தார்.

“கவலைப்படாதே, ஜாருத்!” என்றவர் அவனிடம், “மத்ஸ்யாவுக்கு ஆக்ஷேபங்கள் ஏதும் இல்லை எனில் நான் கட்டாயமாய் இவனை அழைத்துச் சென்றுவிடுகிறேன். இவ்வளவு நாட்கள் அவன் மிகச் சின்னஞ்சிறு குழந்தையாக இருந்தான். தன்னைத் தானே பார்த்துக் கொள்ளும் அறிவு அவனுக்கு இல்லை. தாயின் துணை தேவையாக இருந்தது. இப்போது வளர்ந்துவிட்டான். இவனால் தன்னைத் தானே கவனித்துக் கொள்ள முடியும். ஆகவே நான் இவனை அழைத்துச் செல்கிறேன்.” என்றார். இதைக் கேட்ட கிருஷ்ணா குறுக்கிட்டுச் சொன்னான். “தந்தையே, தந்தையே, நான் பெரியவனாகி விட்டேன்! இதோ பாருங்கள்!” என்ற வண்ணம் தன் தோள்களை விரித்துக் காட்டினான். “தந்தையே, உங்களுக்கு ஓர் விஷயம் தெரியுமா? நேற்றுத் தாத்தா பிடித்த பெரிய மீனை அவரால் தூக்க முடியவில்லை. கீழே போட இருந்தார். நான் தான் அதைப் பிடித்துப் படகில் போட்டேன்.” என்றான் பெரிய மனுஷத் தோரணையில். அனைவரும் மீண்டும் சிரித்தனர். பராசரர் தன் மகனைப் பார்த்து அன்புடன், “கிருஷ்ணா, அப்படியா? அப்படி எனில் நான் உன்னை என்னுடன் அழைத்துச் செல்கிறேன். ஆனால் நீ மிக மிக நல்ல பையனாக இருக்கவேண்டும். விஷமத்தனம் கூடாது!” என்றார்.

கிருஷ்ணன் முகம் சந்தோஷத்தில் பிரகாசித்தது. பின்னர் தந்தையிடம் மிகவும் அப்பாவியாகக் கேட்டான். “தந்தையே, நாம் ஏன் அம்மாவையும் நம்முடன் அழைத்துச் செல்லக் கூடாது? அவள் உங்களை நன்கு கவனித்துக் கொள்வாள்.” என்றவன் கொஞ்சம் விசித்திரமான முகபாவத்ஹ்டுடன் மீண்டும் அவரைப் பார்த்துக் கேட்டான். “தந்தையே நீங்கள் சொன்னீர்கள், நான் மீண்டும் பிறக்கவேண்டும் என்று. அப்படி எனில் நான் என் அம்மா இல்லாமல் எப்படி மீண்டும் பிறப்பேன்?”

பராசரர் சப்தமாகச் சிரித்தார். “குழந்தாய், அதை நான் கவனித்துக் கொள்கிறேன். கவலைப்படாதே! ஆனால் உன் தாய் நம்முடன் வந்துவிட்டால் உன்னுடைய வயதான பாட்டனையும், பாட்டியையும் யார் கவனித்துக் கொள்வார்கள்? அவர்களுக்கும் வயதாகிவிட்டதல்லவா?” என்றார். கிருஷ்ணாவின் முகம் வாடியது. “ஆம்.” என்றவன் மீண்டும் யோசனையுடன், “தந்தையே, தாத்தா, பாட்டிக்கு வயதாகிவிட்டதால் அவர்கள் விரைவில் இறந்துவிட்டார்களெனில்? அப்போது அம்மாவை யார் பார்த்துக் கொள்வார்கள்? அம்மா தனியாக இருப்பாளே!” என்று கவலையுடன் கேட்டான். அங்குள்ள அனைவருக்கும் வெலவெலத்துப் போனது. ஏனெனில் ஜாருத்தின் திட்டம் அவர்களுக்கெல்லாம் நன்கு தெரியும். ஜாருத்துக்கும் அவன் மனைவிக்குமோ இதயம் வேகமாக அடித்துக் கொண்டது. தங்கள் இதயம் அடித்துக் கொள்வது வெளியே கேட்டுவிடுமோ என்று பயப்படுபவர்கள் போல் நெஞ்சில் கை வைத்து அழுத்திக் கொண்டார்கள். மச்சகந்தியைப் பற்றி முனிவர் என்ன முடிவு எடுத்திருக்கிறாரோ! அவர் வாயிலிருந்து என்ன வரப் போகிறதோ! மனம் திக் திக் என அடித்துக் கொள்ள அனைவரும் காத்திருந்தார்கள்.

பராசரர் சற்று நேரம் கண்களை மூடி தியானத்தில் ஆழ்ந்தார். பின்னர் தன் கண்களைத் திறந்து கிருஷ்ணாவிடம், “உன் தாயைக் குறித்து நீ கவலைப்படாதே!” என்றவர் மீண்டும் தன் கண்களை மூடினார். அனைவரும் அவர் சொல்லப் போவதை நினைத்துக் காத்திருந்தனர். “கிருஷ்ணா, உன் தாய்க்குப் பிரகாசமானதொரு எதிர்காலம் காத்திருக்கிறது. அவள் மிக மிக சந்தோஷமாக இருக்கப் போகிறாள். இதோ நக்ஷத்திரங்கள் சொல்கின்றன. அதோடு மட்டுமல்ல, த்வைபாயனா, நீ வளர்ந்து பெரியவன் ஆனதும் உன் தாய்க்கு மிக உதவியாக இருப்பாய்! அவள் எங்கே இருந்தாலும் நீ ஓடோடிப் போய் உதவுவாய்!” என்றார். மச்சகந்தி பராசரரின் கால்களில் விழுந்து வணங்கினாள். அவள் தலையின் தன் கைகளை வைத்து ஆசீர்வதித்தார் பராசரர்.

Monday, April 25, 2016

தந்தை வந்து விட்டார்!

பூர்ணிமை தினமும் வந்தது. முழுநிலவு ஆஷாட நக்ஷத்திரத்தில் அன்று முழுவதும் இருக்கும். அன்றிரவு முழு நிலைவை ஆஷாட நக்ஷத்திரத்தின் அருகே காணலாம். அன்று தான் கிருஷ்ணா பிறந்தான். கிருஷ்ணா அன்று விடிகாலையிலேயே எழுந்தவன் விரைவில் குளித்து முடித்துவிட்டு அந்தத் தீவின் கரை ஓரம் வழக்கமான இடத்துக்கு வந்து சேர்ந்தான். மேற்கே பார்த்த வண்ணம் நின்று கொண்டு, “தந்தையே, தந்தையே, விரைவில் வாருங்கள்!” என்று அழைத்தான். அவன் அதே நினைவாக ஆழ்ந்து போய்விட்டதைப் புரிந்து கொள்ள முடிந்தது மச்சகந்தியால். சற்று நேரத்தில் அவன் அழைப்புக்குப் பதிலே போல் அந்த யமுனையின் நதிப் பிரவாகத்தில் தூரத்தில் ஓர் சிறிய புள்ளி தெரிந்தது. அது நகர்ந்து நகர்ந்து இந்தத் தீவின் பக்கமாக வரத் தொடங்கிற்று. ஒருவேளை அது ஒரு படகாக இருக்கலாம். கிருஷ்ணன் சந்தோஷத்தில் குதித்தான். ஆடினான்; பாடினான். “அம்மா, அம்மா, விரைவில் இங்கே வா! இதோ பார்! தந்தை வந்து கொண்டிருக்கிறார்!” என்று குதித்தான். மச்சகந்தி வீட்டிலிருந்து வெளியே வந்தாள். அன்று ஆஷாட பூர்ணிமா என்பது அவளுக்கு நன்கு தெரியும். கிருஷ்ணனின் பிறந்த நாள் இன்று. இதற்கு முன்னர் சில வருடங்களில் அவன் தந்தை அங்கே வந்திருக்கிறார். ஆனால் சமீபகாலமாக யாரோ ஒரு கொடிய அரசனால் அவர் ஆசிரமம் தாக்கப்பட்டது. மீண்டும் மீண்டும் தாக்குதலினால் அவர் எங்கோ தொலைதூரத்தில் தன் ஆசிரமத்தை அமைத்துக் கொண்டு சென்று விட்டார். இப்போது அவரால் வரமுடியுமா என்பது தெரியவில்லை. அவர் வரவில்லை எனில் இந்தக் குழந்தை மிகவும் ஏமாற்றத்தில் ஆழ்ந்து போவானே! ஆனால் அவரோ பெரிய மஹரிஷி! அவளோ ஒரு மீனவப் பெண்! ஏதோ ஒரு காரணத்துக்காக ஒரு கண நேரம் ஏற்பட்ட மெய்ம்மறந்த இன்பத்தில் அவளையும் ஆழ்த்தி, தானும் ஆழ்ந்து இந்தக் குழந்தையையும் கொடுத்து அவளை மீண்டும் பழைய மச்சகந்தியாக்கி விட்டுச் சென்று விட்டார். அவர் வரையில் இது இந்நிகழ்வு புறக்கணிக்கப்படவேண்டிய ஒன்று!

இந்த நாளை அவள் சந்தோஷமாகவா எதிர்கொண்டாள்? நடுக்கத்துடன் அல்லவோ எதிர்கொண்டு வந்திருக்கிறாள். என்ன தான் புத்திசாலியாகவும், கீழ்ப்படியும் குணமுள்ளவனாகவும் இருந்தாலும் கிருஷ்ணனால் அவன் தந்தை இன்று வரவில்லை என்னும் பெரிய சோகத்தைத் தாங்கவா முடியும்? அது ஒரு பெரிய இடியாகவன்றோ அவன் மனதில் பதியும்! அதிலிருந்து அவன் மீண்டு வருவது என்பது அவ்வளவு எளிதும் இல்லை. ஆஹா! யமுனைத் தாயே! எப்படிப்பட்டதொரு அற்புதமான மகனை நீ எனக்குக் கொடுத்திருக்கிறாய்! ஆனால் அவனை வெகு நாட்கள் என்னிடமே என்னால் வைத்திருக்க இயலுமா? தெரியவில்லை! என்ன நடக்கப் போகிறது அடுத்து? துயரத்துடன் மீண்டும் யமுனையைப் பார்த்தாள் மச்சகந்தி. கிருஷ்ணனும் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருந்தான். அந்தச் சின்னஞ்சிறு புள்ளி இப்போது முன்னேற முன்னேற ஒரு பெரிய படகாகத் தெரிந்தது. வேகமாக இந்தக் கரையை நோக்கியே வந்து கொண்டிருந்தது. ஆஹா! அதோ தந்தை! கிருஷ்ணன் சந்தோஷத்தில் மீண்டும் ஓர் குதி குதித்தான்! தகப்பனைப் பார்த்துச் சிலகாலம் ஆகி இருந்தாலும் கிருஷ்ணாவுக்கு அவரைக் குறித்த நினைவுகள் பசுமையாகவே இருந்தன. தெளிவாகவே அவரை அவன் நினைவு கூர்ந்தான்.

அவன் தந்தை நல்ல நிறமாக வெளுப்பாக இருப்பார். கிருஷ்ணனைப் போல் கருமை நிறம் கொண்டவரில்லை. தலை மயிரை நன்கு தூக்கிக் கட்டி இருப்பார். நீண்ட தாடி இருக்கும் அவருக்கு. அவர் மேனி வலிமையுடன் இருக்கும். திடகாத்திரமாக இருப்பார். மான் தோலை இடுப்பில் கட்டி இருப்பார். கையில் எப்போதும் தண்டமும், ஜலபாத்திரமும் ஏந்தி இருப்பார். அழகான பல முகம் கொண்ட ருத்ராக்ஷ மாலையை நீளமாகக் கழுத்தில் அணிந்திருப்பார். எல்லாவற்றுக்கும் மேல் அவருடைய பூணூல் மார்பை அலங்கரித்துக் கொண்டிருக்கும். இதை எல்லாம் கிருஷ்ணன் ஒருபோதும் மறந்ததே இல்லை. பசுமையாக அவன் மனதில் பதிந்திருந்தன. தன்னால் இயன்ற மட்டும் பெருங்குரலெடுத்துக் கத்தினான் கிருஷ்ணன். “தந்தையே, தந்தையே, நான் இதோ வந்து கொண்டிருக்கிறேன்.” என்றான். மச்சகந்தி அவன் தோள்களைப் பிடித்துத் தடுத்ததையும் மீறி அவள் கைகளைத் தள்ளி விட்டு விட்டு நதியில் பாய்ந்த கிருஷ்ணா படகை நோக்கி நீந்த ஆரம்பித்தான். பராசர முனிவர் தாக்குதல்களினால் கால் நடக்க முடியாமல் இருந்ததையும் மீறி அவரும் நதியில் பாய்ந்தார். தன் அருமை மகனைத் தூக்கி அணைத்துக் கொண்டார். அவனை ஒரு சிறு குழந்தையைக் கொஞ்சுவது போல் கொஞ்சினார். கிருஷ்ணனுக்கு சந்தோஷத்தில் என்ன செய்வது எனப் புரியாமல் ஒரே சமயத்தில் சிரிக்கவும், அழவும் செய்தான். தன்னிரு கரங்களால் அவர் கழுத்தைக் கட்டிக் கொண்டான். அவர் தாடியில் தன் முகத்தைப் புதைத்துக் கொண்டான்.

தண்ணீரிலிருந்து கரையில் அவர் காலடி எடுத்து வைத்ததும் மச்சகந்தி தன் பெற்றோருடனும், மற்றக் குடும்பத்தினருடனும் அவரை எதிர்கொண்டாள். அவருக்கு அனைவரும் நமஸ்கரித்தனர். அவர் கைகளிலிருந்து நழுவிக் கீழே இறங்கிய கிருஷ்ணா தன் தாயைக் கர்வத்துடன் பார்த்தபடி, “அம்மா, நான் சொன்னேனா இல்லையா? தந்தை வந்துவிடுவார் என்று! நிச்சயம் வருவார் என்று சொன்னேனா இல்லையா?” என்று கேட்டான். அதைக் கேட்ட பராசரர் கண்கள் நகைப்பில் ஒளிர்ந்தன. மச்சகந்தியைப் பார்த்து, “மத்ஸ்யா, என் மகன் உன்னை விட என்னை நன்கு புரிந்து வைத்திருக்கிறான். நான் எங்கே வரப் போகிறேன் என்றே நீ நினைத்திருப்பாய்!” என்று குறும்பாகச் சொன்னவண்ணம் சிரித்தார். பின்னர் தன்னை அந்தத் தீவுக்கு அழைத்து வந்த படகுக்காரர்களைப் பார்த்து, “இப்போது மற்ற பயணிகளை ஏற்றிக் கொண்டு எங்கே வேண்டுமானாலும் செல்லுங்கள். இன்றிலிருந்து மூன்றாவது நாள் என்னை இங்கிருந்து அழைத்துச் செல்லுங்கள். மறக்க வேண்டாம்!” என்றார்.

படகிலிருந்து இறங்கி இருந்த மற்றப் பயணிகளும் பராசரரை நமஸ்கரித்துக் கொண்டனர். அவர் அந்த யமுனைக்கரையில் வசித்து வந்த பலதரப்பட்ட மக்களுக்கும் “நொண்டி ரிஷி” என்னும் பெயரால் அறிமுகம் ஆகி இருந்தார். அவர் முகத்துக்கு எதிரேயே அவரை நொண்டி முனி என்றே அழைத்தாலும் பராசரர் அதில் கோபம் கொள்ளாமல் சிரித்துக் கொண்டே போய்விடுவார். ஆகவே இப்போதும் அப்படியே அவர்கள் அழைத்தவண்ணம் அவரை நமஸ்கரிக்க அவரும் அவர்கள் அனைவருக்கும் ஆசிகளை வழங்கினார். கிருஷ்ணனுக்கோ பெருமையும் கர்வமும் தாங்க முடியவில்லை! எப்படிப்பட்ட பெரிய மனிதர் அவன் தந்தை! கிருஷ்ணனை அவன் தந்தையிடமிருந்து எவராலும் பிரிக்க முடியவில்லை. அவன் கீழே இறங்கவே மறுத்தான். கஷ்டப்பட்டு அவனைக் கீழே இறக்கினார் பராசரர். ஆனாலும் அவன் அவர் அருகேயே இருந்தான். அவர் விரல்களைத் தன் விரல்களால் இறுக்கிப் பிடித்த வண்ணமே இருந்தான். விட்டு விட்டால் எங்கே மந்திரம் போட்டாற்போல் அவர் மறைந்து விடுவாரோ என்னும் எண்ணம் அவனுக்குள். தந்தையின் சீடர்களையும் கிருஷ்ணன் நன்கு அறிவான். போன முறை அவர்களும் அவரோடு வந்திருந்தனர். ஒருவர் பெயர் அஸ்வல். நடுத்தர வயதுக்காரர். இன்னொருவர் பைலர். தன் பதின்ம வயதுகளில் இருந்த சிறுவனும் அல்லாத, இளைஞனும் அல்லாதவன். சிறுவனிலிருந்து இளைஞனாக ஆகிக் கொண்டிருக்கும் வயது! கிருஷ்ணா இப்போதும் அவர்களைப் பார்த்து தன் நமஸ்காரங்களைத் தெரிவித்துக் கொண்டான். அவர்களும் அவனுக்கு ஆசிகளை வழங்கினார்கள்.

அங்கிருந்த மற்ற மீனவர்களும் பராசரரை வந்து வணங்கிச் சென்றார்கள். அவர்கள் அனைவரும் கிளம்பிப் போனதும் முனிவரும் அவருடைய சீடர்களும் நதியில் குளிக்கச் சென்றனர். கிருஷ்ணனும் உடன் சென்றான். குளித்து முடித்ததும் பராசரர் நதியின் நடுவில் நின்றவாறு சூரியனுக்கு அர்க்கியம் கொடுத்தார். ஏற்கெனவே தந்தை வருவதற்கு முன்னரே குளித்திருந்த கிருஷ்ணன் இப்போது இரண்டாம் முறையாகவும் குளித்தான். பின்னர் தன் தந்தை என்ன செய்தாரோ அதை அப்படியே அவனும் செய்தான். மந்திரங்களை எந்த உச்சரிப்புடன் தந்தை கூறினாரோ கிட்டத்தட்ட அதே உச்சரிப்பில் அவனும் கூறினான். பராசரர் அவனைப் பார்த்து, “தப்பு, குழந்தாய், தப்பு! நீ இப்போது மந்திரங்களை அதுவும் இந்த தெய்வீக மந்திரங்களை இப்படி எல்லாம் உச்சரிக்கக் கூடாது! நீ இப்போது இவற்றைச் சொல்லவே கூடாது!” என்று அன்புடன் கூறினார். கிருஷ்ணன் மனம் காயப்பட்டது அவன் கண்களில் தெரிந்தது. துக்கத்துடன் தன் தகப்பனையே பார்த்தான். “ஏன், தந்தையே! ஏன்? நான் உங்கள் மகன் தானே?” என்றும் கேட்டுக் கொண்டான். எங்கே அவர் நீ என் மகன் அல்ல என்று சொல்லிவிடுவாரோ என்ற பயம் அவனுள் எழுந்தது.

“ஆம், குழந்தாய், நீ என் மகன் தான்! இல்லை என்னவில்லை. ஆனால் இந்த மந்திரங்கள் சாமானியமானவை அல்ல. தெய்விக சக்தி வாய்ந்தவை. ஒவ்வொரு வார்த்தையிலும் தெய்விகம் நிறைந்துள்ளது. நீ மறுபடி பிறந்தால் தான் இவற்றை எல்லாம் சொல்ல முடியும். இவற்றைச் சொல்ல வேண்டுமானால் நீ மீண்டும் பிறக்கவேண்டும்.” என்றார். கிருஷ்ணனுக்கு இது புதிராக இருந்தது. நான் எப்படி மீண்டும் பிறக்க முடியும்? தந்தையையே கேட்டான். “எப்படி மீண்டும் பிறப்பது? தந்தையே, நீங்களும் மீண்டும் பிறந்தீர்களா? அது எப்படி?” என்று கேட்டான் தந்தையிடம். “ஆம், குழந்தாய்! நானும் மீண்டும் பிறந்து தான் இவற்றைக் கற்றேன்.” என்றார் முனிவர். “அப்படி எனில் நான் எப்போது மீண்டும் பிறப்பேன்?” என்று கிருஷ்ணன் கேட்டான்.

“இந்த மந்திரங்களைத் தக்க உச்சரிப்புடன் நீ சொல்ல வேண்டும். அதனுடன் கூடச் சில வாக்குறுதிகள், சபதங்களையும் ஏற்கவேண்டும். இல்லை எனில் நீ இவற்றைச் சொல்ல முடியாது!”

“ஆனால் எனக்கு இவை எல்லாம் நன்கு தெரியுமே! நன்கு சொல்லுவேனே!” என்ற வண்ணம் கிருஷ்ணா தன் தந்தை எத்தகையதொரு உச்சரிப்புடன் மந்திரங்களைக் கூறினாரோ அதே போல் தானும் கூறினான். பராசரர் புன்முறுவல் செய்தார். அவர் மனதில் பெருமையும் கர்வமும் எழுந்தது. அவர் மகன்! எத்தகையதொரு குடும்பத்தில் பிறந்திருக்கிறான். எத்தகைய சூழ்நிலையில் வசிக்கிறான். ஆனாலும் அவனுக்குத் தான் இந்த மந்திரங்களை உச்சரிப்பதில் எவ்வளவு ஈடுபாடு! அவன் பிறந்த சூழ்நிலையையும் மீறி அவன் இவற்றை அப்படியே தன்னைப் போல் சொல்கிறான் எனில்! இவன் தெய்விகக் குழந்தை! கிருஷ்ணாவைப் பார்த்த பராசரர், “குழந்தாய்! இவற்றை உன் மனதிலேயே வைத்துக் கொள். மறக்க வேண்டாம். ஆனால் இப்போது சொல்லதே. கடவுளருக்குக் கோபம் வந்துவிடும்!” என்றார்.

Sunday, April 24, 2016

ஆஷாடபூர்ணிமை நெருங்குகிறது!

மச்சகந்தி தனக்குள்ளாக அழுகையை அடக்கிக் கொண்டாள். அவர் எங்கே இருக்கிறார், எப்படி இருக்கிறார் என்பதை அவள் அறிய மாட்டாள். அவர் ஒரு ஆபத்து நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்திருந்தார். பின்னர் எங்கோ சென்றுவிட்டார். இப்போது மீண்டும் அவள் இருக்குமிடம் தேடி வருவாரா என்பது தெரியாது. பல நாட்கள்/வருடங்கள் முன்னரே அவர் கல்பிக்கு வருவதையும் நிறுத்தி விட்டார் என்பதையும் அவள் அறிந்திருந்தாள். ஆனால் அதை எல்லாம் சொன்னால் இந்தச் சின்னக் குழந்தையின் மனம் நொந்து விடும். மொத்தச் சூழ்நிலையுமே மிகவும் வருந்தத் தக்கது. வெறும் ஆறுதல் வார்த்தைகளால் ஆறிவிடக் கூடிய துன்பம் அல்ல இது! அவ்வளவு எளிதில் ஆறுமா? அவள் தந்தையும் அவர்களுடைய மீனவ இனத்திலேயே தக்கதொரு இளைஞனுக்கு அவளை மணமுடித்துக் கொடுக்க வேண்டும் என்று முயன்று கொண்டு தான் இருக்கிறார். இதைக் குறித்துத் தங்கள் இனத்தின் மற்றப் பெரியோர்களிடம் ஆலோசனைகளும், வழிமுறைகளும் கேட்டுக் கொண்டு தான் இருக்கிறார். ஆனாலும் அவரால் தக்கதொரு மணாளனை அவளுக்காகத் தேர்ந்தெடுக்க முடியவில்லை. ஏனெனில் வருபவன் அவளுடைய மகனையும் சேர்த்துத் தன் மகனாகப் பார்க்க வேண்டும். அவ்வளவு பெருந்தன்மை உள்ள இளைஞன் எங்கே கிடைப்பான்? தகப்பன் இருந்தும் தகப்பன் அருகில் இல்லாத அவளுடைய மகனைச் சட்டத்துக்குப் புறம்பாகப் பிறந்தவனாகவே அங்குள்ளவர்கள் நினைக்கிறார்கள். இந்தக் கிருஷ்ணனும் மிகவும் ஆசையும் அன்பும் நிறைந்தவனாக இருந்தாலும் அவன் தன் சொந்தத் தந்தையைத் தான் தன்னை வளர்க்க வேண்டும் என்று விரும்புகிறானே அன்றி இன்னொரு மனிதனை அல்ல. வேற்று மனிதனைத் தந்தையாக அவனால் ஏற்க இயலாது!

இந்த இக்கட்டான சூழ்நிலையை நன்கு புரிந்து கொண்டே அவள் தந்தை தன் பேரனின் தந்தை இம்முறை ஆஷாட பூர்ணிமைக்கு வரும்போது அவருடன் செல்வதற்குத்தயாராக இருக்கும்படி கிருஷ்ணனின் மனதைப் பண் படுத்தி வருகிறாரோ! அதனால் தான் கிருஷ்ணாவின் தந்தையைக் குறித்தே அவனிடம் அவர் அதிகம் பேசுகிறார். அவர் ஒரு பெரிய மனிதன் என்று எடுத்துச் சொல்லி அவனை ஊக்குவிக்கிறார். அவளுக்கு மணம் நடக்கவேண்டுமெனில் இந்தக் குழந்தை இங்கே இருந்தால் சரிப்பட்டு வராது! ஆகவே தன் மகளின் நன்மைக்காகவே அவள் தந்தை இந்தக் குழந்தையின் தந்தை வந்து அவனை அழைத்துச் சென்றுவிட வேண்டும் என நினைக்கிறார். ஒரு தந்தையின் மனோநிலையில் அவர் செய்வது சரியே! ஏனெனில் அவள் தந்தைக்கு மட்டுமின்றி அவள் தாய், சிற்றப்பன்மார் என அனைவருக்கு வயது ஏறிக் கொண்டே போகிறது. ஒவ்வொருவராக இறந்துவிட்டால் அவளுக்குக் கடைசி வரை துணைக்கு யாரும் இருக்க மாட்டார்கள். இந்தக் குழந்தை இருப்பான் தான்! ஆனால் அதுவும் சரிப்பட்டு வராது! எத்தனை நாட்களுக்கு? இவன் இங்கே இருக்கும்வரை எந்த இளைஞனும் அவளை மணக்க முன் வரமாட்டான்!

ஆனால், கிருஷ்ணனின் தந்தை இங்கு வந்துவிட்டால் மட்டும் அவனை  அழைத்துச் செல்வது என்பது அவ்வளவு எளிதில் நடக்கக் கூடிய ஒன்றா? அவர் ஆரியவர்த்தத்தின் மிகப் பெரிய மஹரிஷிகளில் ஒருவர் தான்! அவருடைய குருகுலம் ஒரு காலத்தில் மிகப் பெரியதாகவும் இருந்தது. மிக மதிப்பாகவும் பேசப்பட்டது. ஆனால் அவருடைய எதிரிகள்? அவரை ஏன் அவர்கள் தாக்கினார்கள் என்பது குறித்து அவளுக்கு விளக்கமாக எதுவும் தெரியாது! என்றாலும் எதிரிகள் இருக்கின்றனரே! அவர் வெளியே வந்தால், அவர் உயிருடன் இருப்பது தெரிந்துவிட்டால் அவர்கள் அவரைக் கொன்று விடுவார்களே! அதனால் தானே அவர்கள் கண்களில் பட்டுவிடக் கூடாது என்று அவர் ஒவ்வொரு இடமாக மாறிக் கொண்டிருக்கிறார். இப்படிப்பட்டதொரு நிலைமையில் ஒரு மீனவப் பெண்ணுக்குப் பிறந்த ஒரு குழந்தையை என்னதான் தன் மகனாகவே இருந்தாலும் அவர் எப்படி அழைத்துச் செல்வார்? இது மிகவும் ஆபத்தான ஒன்று. இந்த ரகசியம் அவளுக்கு மட்டுமே தெரியும்! எவரிடமும் சொன்னதில்லை. அதே சமயம் தந்தை வரவில்லை என்பது இந்தச் சிறுவன் மனதையும் காயப்படுத்தும் ஒரு விஷயம்.

ஆனால் இந்தக் கிருஷ்ணனோ தன் தந்தையைக் குறித்துப் பேச ஆரம்பித்தானெனில் அதற்கு ஒரு முடிவே இல்லை! அவனுக்கென்று ஒரு அழகான முறையில் எவர் மனதையும் கவரும் வண்ணம் பேசுவான். இந்த விஷயத்தில் அவன் வயதை விட அவன் அதிக புத்திசாலியாகக் காட்சி அளிப்பான். அவ்வளவு ஏன்? அவர்கள் படகில் பயணிக்கும்போது கிருஷ்ணனும் அவர்களுடன் அந்தப் படகில் ஏறிக்கொண்டான் எனில் படகில் உடன் பயணிக்கும் அவர்களுடைய மீனவ உறவினர் மட்டுமின்றி மற்றப் பயணியரும் கிருஷ்ணனின் பேச்சால் கவரப் படுவார்கள். அதிலும் அவன் தன் தந்தை எவ்வளவு பெரியவர் என்பதையும், அவரால் எப்படிக் கடவுளரிடம் பேச முடியும் என்பதையும் சொல்வதோடு அவன் இன்னம் கொஞ்சம் பெரியவன் ஆனதும் அவனையும் அவர் தன்னுடன் அழைத்துச் சென்றுவிடுவார் என்பதையும் அழகாக எடுத்துக் கூறுவான். அவருக்கு அனைத்தும் தெரியும்! நக்ஷத்திரங்களின் போக்கைக் குறித்து, கிரஹங்களின் சஞ்சாரம் குறித்து, சூரிய, சந்திரர் குறித்து, இதோ இந்த யமுனையின் ஒவ்வொரு சொட்டு நீரும் எங்கிருந்து எப்படி வருகிறது என்பது குறித்து, யமுனையில் குடி இருக்கும் மீன்கள், முதலைகள் குறித்து! அனைத்தையும் அவன் தந்தை அறிவார். அதனால் தான் அவனும் தன் தந்தையுடன் செல்லப் போகிறான். அனைத்தையும் அவர் அவனுக்குக் கற்பிப்பார். அவன் சொல்வதைக் கேட்டுக்கொண்டாலும் பயணிகளும் சரி, மீனவர்களும் சரி, குழந்தை ஏதோ எதிர்பார்ப்பில் ஆசை மிகுந்து பேசுகிறான் என்றே நினைப்பார்கள். அந்த மனிதன், அதுதான் கிருஷ்ணனின் தந்தை அவன் யாராக இருந்தாலும் இவனை எங்கே கூட்டிச் செல்வான்! நடக்கப் போவதே இல்லை.

ஆனாலும் இனிமையாகவும் அனைவர் மனதையும் கவரும் வண்ணமும் பேசும் இந்தச் சிறுவனின் பேச்சைக் கேட்பதால் என்ன வந்துவிடப் போகிறது! ஆகவே அவர்கள் மிகவும் ஆவலோடு அவன் சொல்வதை எல்லாம் கேட்டாலும் கடைசியில் பிரிந்து செல்கையில் தங்கள் தலையை சோகமாகவும் வருத்தமாகவும் ஆட்டி மறுப்புத் தெரிவித்துவிட்டுச் செல்வார்கள். எவ்வளவு அழகான புத்திசாலிக் குழந்தை! ஆனால் உண்மை என்ன என்பதைப் புரிந்து கொள்ள மறுக்கிறானே! மெல்ல மெல்ல ஆஷாட பூர்ணிமை தினமும் வந்தது. கிருஷ்ணனின் பொறுமை எல்லை கடந்து கொண்டிருந்தது. ஆனாலும் அவன் உற்சாகமாகவே இருந்தான். விரைவில் தந்தையைப் பார்க்கப்போகும் ஆவல் மீதூறியது. ஆனால் அவன் தாயும் சரி, அவள் பெற்றோர்களும் சரி நடுக்கத்துடனேயே இருந்தனர். இது நடக்கப் போவதில்லை. அவர் வரப்போவதும் இல்லை. அதன் பின்னர் என்ன நடக்கும்? இந்தச் சிறுவன் என்ன செய்யப் போகிறான்? அவனால் இதைத் தாங்கிக் கொள்ள முடியுமா? ஆனால் கிருஷ்ணன் இவற்றை எல்லாம் கவனிக்கும் மனோநிலையில் இல்லை. அவன் தன் தந்தை வந்தால் என்ன செய்யவேண்டும், எப்படிப் பேசவேண்டும் என்று யோசிப்பதில் முழுகி விட்டான். தன் தந்தைக்காக யமுனையிலிருந்து ஒரு பெரியமீனைப் பிடித்தான். அதை நன்கு சுத்தம் செய்துத் தன் பாட்டியிடம் கொடுத்துத் தந்தைக்காகச் சிறப்பு உணவு அந்த மீனிலிருந்து தயார் செய்யச் சொன்னான். அவன் தன் கைகளால் பிடித்த மீனைச் சமைத்துச் சாப்பிடவேண்டும் அவன் தந்தை! இல்லை எனில் அவனால் வேறு என்ன விதத்தில் தந்தைக்கு சேவை செய்ய முடியும்? அவர் மகன் அல்லவோ அவன்! அவருக்குத் தக்க முறையில் நன்கு சமைக்கப்பட்ட மீனை உண்ண அளிப்பது அவன் கடமையன்றோ!

அவன் தன் பாட்டியிடம் திரும்பத் திரும்ப எடுத்துக் கூறினான். அவன் கனவுகளில் அவன் தந்தை வந்து அவனை அழைத்துச் செல்வதாகச் சத்தியம் செய்திருப்பதைக் கூறினான். அவர் கட்டாயம் வந்துவிடுவார் என்றான். அது மட்டுமல்ல. அவன் தன் தாயையும் உடன் அழைத்துச் சென்றுவிடுவான். இங்கே விட்டு வைக்கப் போவதில்லை. எல்லாவற்றையும் கேட்டுக் கொண்ட அவன் பாட்டி தலையை மட்டும் ஆட்டினாள். மச்சகந்திக்கு அழுகை தான் மீண்டும் மீண்டும் வந்தது. மறுபடியும் கண்ணீர்க் கடலில் கண்கள் தத்தளிக்க மகனை அணைத்துக் கொண்ட அவள் அவனுக்குத் தன் தந்தை வரப்போவதில்லை என்னும் சோகமான முடிவுக்குத் தயார் செய்ய யத்தனித்தாள். கிருஷ்ணனைப் பார்த்து, “கிருஷ்ணா, ஒருவேளை அவர் வரவில்லை எனில்? என்ன செய்வாய் அப்பா?”

“அப்படி எனில் தாயே, நாம் அவரைத் தேடிக் கொண்டு நம் படகில் செல்வோம். அவரைத் தேடிக் கண்டுபிடிப்போம்.”

“ஆனால் குழந்தாய், நான் திரும்பத் திரும்ப உன்னிடம் சொல்லி இருக்கிறேன். இப்போது மீண்டும் சொல்கிறேன். அவர் எங்கே இருக்கிறார் என்பதை நான் அறிய மாட்டேன்! எனக்குத் தெரியாது குழந்தாய்!” என்று பொறுமை இழந்து கூறினாள் மச்சகந்தி. அவன் தன்னை நம்பவில்லையே என்று அவள் வேதனைப்பட்டாள். ஆனால் அப்படியும் அந்தக்குழந்தை அவளிடம், “தாயே, நான் இன்று அன்னை யமுனையிடம் பேசினேன். அவள் மிகவும் கருணை மிக்கவள். நமக்கு நல்வழி காட்டுவாள் அன்னையே! சீக்கிரம் தயாராகுங்கள். அழாதீர்கள். நல்லதே நடக்கும். தந்தைக்கூ முன்னால் நீங்கள் அழுதீர்கள் எனில் அவர் என்னை என்னவென்று நினைத்துக் கொள்வார்? நான் தான் உங்களைச் சந்தோஷமாக வைத்துக் கொள்ளவில்லை என்றல்லவோ நினைப்பார்கள்! தாயே அழாதீர்கள்!” என்ற கிருஷ்ணன் அன்போடு தன் தாயைக் கட்டிக் கொண்டான். மச்சகந்தியின் மனம் மிகவும் கனத்தது. அதிலும் தந்தை வரப்போவதில்லை என்பதை அறிந்து கொண்டால் கிருஷ்ணனுக்கு ஏற்படப் போகும் வேதனையை நினைத்து நினைத்து அது அவனுக்குக் கொடுக்கப் போகும் அதிர்ச்சியை நினைத்து நினைத்து அவள் வேதனையில் ஆழ்ந்தாள்.

Saturday, April 23, 2016

தந்தையிருக்குமிடம் செல்வோம், தாயே!

“ஓ, கிருஷ்ணா, கிருஷ்ணா, நீ எவ்வளவு நல்ல பையன்! புத்திசாலியும் கூட! ஆனால் ஏன் இப்படி நடந்து கொள்கிறாய்?” இம்மாதிரி ஒரு பொய்யான நம்பிக்கையைத் தன் மகன் வைத்திருப்பது அவளுக்கு தர்மசங்கடமாக இருந்தது. தன் மகனை நினைத்து வருத்தமாகவும் இருந்தது. ஒவ்வொரு நாளும் தன் மகன் இப்படியே நடந்து கொள்வதும் அதற்குத் தான் சொல்லும் எதையும் மகன் கருத்தில் கொள்ளாமல் பதில் அளிப்பதும் திரும்பத் திரும்ப இப்படியே நடந்து வருவதும்  அவள் மனதில் வருத்தத்தை உண்டாக்கியது. அந்தச் சிறுவன் கிருஷ்ணா முழு மனதோடு தன் தாயைப் பார்த்து, “அம்மா, நான் என் தந்தையிடம் செல்ல விரும்புகிறேன்.”என்று மிகுந்த ஆவலுடன் கூறினான். அவன் வயதுக்குச் சற்றும் பொருந்தாத வண்ணம் பெரிய மனிதனைப்போல் பேசியவன்  உடனே தன் தாயின் கைகளைப் பிடித்துக் கொண்டு அதற்கு அனுமதி தருமாறு கண்களாலேயே தாயை வேண்டினான். மச்சகந்தி தன் அருமை மகனை மிகவும் நேசித்தாள். அன்புடன் அவனைத் தட்டிக் கொடுத்து அணைத்து ஆறுதல் சொன்னாள்.

“மகனே, நான் எத்தனை முறை உன்னிடம் கூறி இருக்கிறேன்! நான் எப்படியப்பா உன்னை உன் தந்தையிடம் அழைத்துச் செல்ல முடியும்? அவர் எங்கிருக்கிறார் என்பதை நான் அறியவில்லையே!” என்று வருத்தத்துடன் கூறினாள். மச்சகந்தியின் இந்த வார்த்தைகளுக்கும் அந்தச் சிறுவன் தக்க பதிலை வைத்திருந்தான். “தாயே, உன்னால் அவரிடம் என்னை அழைத்துப் போக முடியவில்லை என்றாலோ, அல்லது தந்தைக்கு இங்கே வர முடியவில்லை என்றாலோ அதனால் தவறில்லை. நாம் நம் படகில் ஏறிக்கொண்டு அவரைத் தேடிச் செல்வோம். தேடிக் கண்டு பிடிப்போம். இதோ இந்த யமுனையில் பயணிப்போம். நம் தாய் இந்த யமுனை! மிகவும் கருணையுள்ளவள். நம்மை ஏமாற்ற மாட்டாள். தந்தை இருக்குமிடம் கொண்டு சேர்த்து விடுவாள்!” என்றான். மச்சகந்தியின் கண்களில் கண்ணீர் ததும்பியது. கன்னத்தில் வழிந்த கண்ணீருடன் அவள், “குழந்தாய், நான் உன்னிடம் பலமுறை சொல்லிவிட்டேன்! அப்பா, அவரால் நம்மை அவருடன் அழைத்துச் சென்று கொண்டு வைத்துக் கொண்டு குடும்பம் நடத்த இயலாது! அவர் அப்படிப்பட்டவரே அல்ல!” அவள் குரல் பாதியிலேயே உடைந்தது.

“ஆனால், ஏன், தாயே, ஏன்? நாம் என்ன தவறு செய்தோம்?”ஆச்சரியத்துடன் கேட்ட கிருஷ்ணா, “அப்படி எல்லாம் நடக்காது தாயே! நிச்சயமாக அவர் நம்மைச் சேர்த்துக் கொள்வார்!” என்று தீர்மானமாகக் கூறினான். தன் அழுகையை அடக்கிக் கொண்ட மச்சகந்தி, “ஏன் என்று காரணத்தை எல்லாம் என்னால் உன்னிடம் சொல்ல முடியாது, மகனே! நீ இப்போது ஆறு வயதே ஆன குழந்தை! ஒரு நாள் நீ பெரியவனாக ஆகிவிடுவாய்! இளைஞனாக இருப்பாய்! ஒருக்கால் அப்போது நான் உன்னிடம் சொல்ல முடியும்!” என்றாள். “தாயே, இப்போது ஏன் சொல்ல மாட்டீர்கள்? ஏன் நான் புரிந்து கொள்ள மாட்டேனா? இந்தக் கிராமத்தில் உள்ள எல்லாச் சிறுவர்களுக்கும் தந்தை இருக்கிறார். எனக்கு மட்டும் ஏன் இப்படி?” என்ற வண்ணம் கிராமத்தின் மற்றக் குடிசைகளைச் சுட்டிக்காட்டியவண்ணம் கேட்டான் கிருஷ்ணன். மச்சகந்திக்கு ஒரு பக்கம் தன்மகன் தந்தையைத் தேடுவது பிடித்திருந்தது. அதை வரவேற்றாள். ஏனெனில் தனக்கு மட்டும் தந்தை தன்னுடன் வசிக்காதது கிருஷ்ணன் மனதில் ஒரு பெரிய இடைவெளியை ஏற்படுத்தி இருந்தது என்பதை அவள் அறிவாள். அவன் வயதுக்குட்பட்ட மற்றச் சிறுவர்கள் விளையாடும்போதும், மற்ற வேலைகளின் போதும் தந்தை உடன் இருக்கிறார். ஆனால் இவன் மட்டும் தனியாக எல்லாம் செய்து கொள்ள வேண்டும். அதை நினைத்து நினைத்து அவன் வருந்தினான். அது மச்சகந்திக்குத் தெரிந்தே இருந்தது.

“கிருஷ்ணா, கிருஷ்ணா, நீ உன் தந்தையிடம் எப்போதும் போக முடியாதடா குழந்தாய்! நான் தான் திரும்பத் திரும்பச் சொல்கிறேன் அல்லவா?” சற்றே எரிச்சல் தலைகாட்டியது மச்சகந்தியின் குரலில். மீண்டும் அவள் குரல் உடைந்து அழ ஆரம்பித்தாள். அவளுக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை. இந்தக் குழந்தையிடம் எப்படிப் புரியவைப்பாள்? நடக்க முடியாத ஒன்றை நினைத்து நினைத்து அது நடக்கவேண்டும் என்று பகல் கனவு காணும் இந்தக் குழந்தை!  உணர்ச்சிப் பெருக்கால் நிரம்பிய இந்தக் குழந்தையிடம் போய் அவள் எதைச் சொன்னாலும் அது சரியாக இருக்காதே! அவனால் தன் தந்தையிடம் சென்று அவருடன் வசிக்க இயலாது என்பதை எப்படி விவரிப்பேன்? கிருஷ்ணன் சோகத்தில் ஆழ்ந்து போன தன் தாயின் முகத்தையே பார்த்தவண்ணம் நின்றிருந்தான். என்றாலும் விடாமல், “தாயே, நான் மட்டும் இப்போது உங்களையும் அழைத்துக் கொண்டு தந்தையிடம் சென்றேன் எனில் தந்தை மிகவும் ஆச்சரியமும்,சந்தோஷமும் அடைவார்!” என்றான். தன் கண்ணீரைத் துடைத்துக் கொண்ட மச்சகந்தி, “குழந்தாய், கிருஷ்ணா, நான் எப்படி உன்னிடம் விளக்கிச் சொல்வேன், என்றே புரியவில்லை! அவரால் உன்னைத் தன்னுடன் அழைத்துச் செல்ல முடியாது, குழந்தாய்! உன்னை மட்டுமல்ல, என்னையும் சேர்த்துத் தான்! நம்மிருவரையும் அவரால் தன்னுடன் அழைத்துச் செல்ல முடியாது! அவர் மிகப் பெரிய மனிதர்! பெரியவர்! புனிதர்! மஹரிஷி! மக்கள் அவரை தினம் வந்து வணங்கி ஆசிகள் பெற்றுச் செல்வார்கள். அதோடு அவர் இருக்குமிடம் எங்கோ தொலைதூரத்தில் உள்ளது மகனே! நாம் எங்கோ இருக்கிறோம். மேலும் நாம் மிகச் சாமானியமான மனிதர்கள். மீனவர்கள்!” என்றாள்.

“அழாதே அம்மா, அழாதே!” என்ற வண்ணம் தன் தாயைக் கட்டி அணைத்துக் கொண்டான் சிறுவன்.”அப்பா விரைவில் வந்துவிடுவார். அவர் வந்ததுமே நான் அவரிடம் சொல்கிறேன். கெஞ்சிக் கேட்கிறேன். நம்மிருவரையும் அவருடன் அழைத்துச் செல்லும்படி கேட்கிறேன். தாயே, நிச்சயமாய்ப் பாருங்கள்! நான் சொல்வது நடக்கிறதா இல்லையா என! அவர் நம்மைத் தன்னுடன் அழைத்துச் செல்வார்! மாட்டேன் என்று சொல்லவே மாட்டார். மறுக்கவே மாட்டார்!”

மச்சகந்தி குழந்தையை மீண்டும் இறுக அணைத்து உச்சி மோந்தாள். பின்னர் தன் கண்ணீரைக் குழந்தை பார்த்துவிடாதபடிக்குத் தன் முகத்தை வேறுபக்கம் திருப்பிக் கொண்டாள். என்றாலும் மீண்டும் பேசும்போது அவள் குரல் தழுதழுத்தது. துக்கம் தொண்டையை அடைக்க அவள் கூறினாள்:”நீ எப்போது பார்த்தாலும் உன் தந்தையையே நினைத்துக் கொண்டு இருக்காதே, குழந்தாய்! அவரால் வர முடியாமல் போகலாம். நிச்சயமாய் வருவார் என எதிர்பார்க்க முடியாது!” என்றாள். ஆனால் கிருஷ்ணனோ தன் தாய் சொல்வது எதையும் ஆமோதிக்கவில்லை; அவள் சொல்வது அவனுக்குப் பிடிக்கவும் இல்லை! இது அவன் முகத்திலிருந்தே தெரிந்தது. “முன்னால் அவர் வந்திருந்தபோது ஆஷாட மாதப் பூர்ணிமை என்று தாத்தா சொல்லிக் கொண்டிருக்கிறார். அன்று தான் நான் பிறந்தேன் அல்லவா? தாத்தா சொல்லுகிறார் என் தந்தை விரைவில் இங்கு வந்து என்னைத் தன்னுடன் அழைத்துச் சென்றுவிடுவார் என்கிறார்! அவர் சொல்வது உண்மைதானே, அம்மா? தாத்தா பொய் சொல்ல மாட்டாரே!” என்றான் குழந்தை!  “ஆம், குழந்தை! உன் தாத்தாவின் எதிர்பார்ப்புகளும், நம்பிக்கையும் பொய்யாகாமல் இருக்கட்டும்! அவர் நம்பிக்கை பலிக்கட்டும்!” என்றாள் மச்சகந்தி! அவள் கழுத்தைக் கட்டிக் கொண்டு தொங்கினான் அருமைக் குழந்தை!

“ஆஹா, தாத்தா உங்களைப் போல் இல்லை தாயே! நான் எப்போது தந்தையைக் குறித்து உங்களிடம் கேட்டாலும், அவரைக் குறித்துப் பேசினாலும் நீங்கள் கண்ணீர் விட ஆரம்பிக்கிறீர்கள். ஆனால் தாத்தா அப்படி இல்லை! அம்மா, அம்மா, தாத்தா, என்ன சொல்கிறார் தெரியுமா? அவர் சொல்கிறார்: அப்பாவுக்கு எல்லாமும் தெரியுமாம். அவருக்குத் தெரியாத விஷயங்களே இல்லையாம்! அதோ விண்ணில் பளிச்சிட ஆரம்பித்திருக்கின்றனவே அந்த நக்ஷத்திரங்களைக் குறித்தும் அறிவாராம். அதோடு மட்டுமா, இதோ இந்தப் பூர்ணிமை நிலவு, யமுனையின் மீன்கள், இந்த மரங்கள், இந்த நதியிலுள்ள பெரிய பெரிய முதலைகள், வானில் தோன்றும் கிரஹங்களின் மாறுபாடுகள், இப்படி எல்லாமும் அவர் அறிவாராம். மேலும் சொன்னார். எங்கோ தூர தூர தேசங்களில் இருக்கும் ராஜாக்கள், மன்னர்கள்,சக்கரவர்த்திகள் போன்றோரை எல்லாம் தந்தை அறிவாராம். அம்மா, அம்மா, அந்த அரசர்கள் எல்லாம் யானைகள் மீது ஏறிப் பயணம் செய்வார்களாமே! உண்மையா? அம்மா, தாத்தா மேலும் சொன்னார். மீண்டும் ஆஷாட மாதப் பூர்ணிமை வருமல்லவா? அப்போது நிச்சயமாய்த் தந்தை வருவாராம். தாத்தா சொல்கிறார் அம்மா! அழாதே, அம்மா, அழாதே, கண்களைத் துடைத்துக் கொள்!” என்ற வண்ணம் தன் சின்னஞ்சிறு கைகளால் தாயின் கண்ணீரைத் துடைத்தான் சிறுவன்.

“நான் அழவில்லை, கிருஷ்ணா, அழமாட்டேன். நான் உனக்கு வாக்குறுதி கொடுக்கிறேன். இனிமேல் நான் அழவே மாட்டேன். ஆஷாடப் பூர்ணிமைக்கு இன்னும் மூன்று நாட்கள் இருக்கின்றன. நாம் எப்போதும் போல் இந்த வருடமும் காத்திருப்போம், கண்ணே! காத்திருப்போம்.” என்று நீண்ட ஒரு பெருமூச்சுடன் கூறினாள் மச்சகந்தி. “ஓ, அது எனக்கும் தெரியுமே அம்மா! தாத்தா மேலும் என்ன சொன்னார் தெரியுமா? நான் என் முழு மனதுடன் தந்தையை வரவேண்டும் எனப் பிரார்த்தனைகள் செய்து அவரை அழைத்தால் தந்தை கட்டாயம் வந்துவிடுவாராம். தாயே, தாத்தா என்னிடம் பொய் சொல்கிறார் என்றா நீங்கள் நினைக்கிறீர்கள்? தாத்தா உறுதியாகச் சொல்கிறாரே!”

“இல்லை, குழந்தாய், இல்லை!” என்ற வண்ணம் இந்த வேதனை தரும் சம்பாஷணையை முடித்துக் கொள்ள நினைத்தாள் மச்சகந்தி. அவள் அவ்வளவில் அவனை விட்டு வீட்டுப் பக்கம் செல்வதற்காகத் திரும்பினாள். அப்போது கிருஷ்ணன் அவளிடம், “அம்மா, அம்மா, நாம் ஏன் இங்கேயே இருந்து கொண்டு அவருக்காகக் காத்திருக்க வேண்டும்? வாருங்கள், நாம் அவரிடம் செல்லலாம்.” என்று பெரிய மனிதத் தோரணையுடன் தாயை அழைத்தான். “தந்தையிடம் செல்ல வேண்டுமா? எங்கே? அவர் எங்கே இருக்கிறார்?” கிருஷ்ணனுக்குத் தன் தாய்க்குத் தந்தை இருக்குமிடம் தெரியும் என்றும் தன்னிடம் மறைக்கிறாள் என்னும் எண்ணமும் இருந்தது. ஆகவே திட்டவட்டமாகச் சொன்னான். “வேறு எங்கு? தந்தை எங்கே இருக்கிறாரோ, அங்கே தான்!” என்றான்.

Friday, April 22, 2016

தந்தையே, தந்தையே, என்னிடம் வாருங்கள்!

மாலை நேரம். யமுனைக்கரை. யமுனையின் பிரவாஹம் மிக வேகமாக இருக்கிறது. சூரியனின் செம்பொற்கிரணங்கள் யமுனையின் நீரை உருக்கிய தங்கம் ஓடுவதைப் போலக் காட்டிக் கொண்டிருந்தது. யமுனையின் நடுவே ஒரு சின்னஞ்சிறு தீவு! தீவின் முனையில் கரையில் ஒரு சின்னஞ்சிறு சிறுவன் நின்றிருந்தான். நிலப்பகுதியிலிருந்து பிரிந்து வந்து கடலில் சேர்ந்த ஒரு சிற்றோடையினால் அந்த இடம் தீவாகி இருந்தது. அந்தச் சிறுவன் மேல்வானத்தைப் பார்த்த வண்ணம் நின்றிருந்தான். அடிவானத்தில் அவன் எதைக் கண்டானோ தெரியவில்லை! ஆனால் நீண்ட யமுனையின் பிரயாணம் அடிவானத்தைத் தொட்டுக்கொண்டும் அதற்கு மேலும் ஓடிக் கொண்டிருந்ததால் அங்கே இருந்து பார்த்தபோது யமுனை அடிவானத்தைத் தொடுவது போல் இருந்தது. அந்தக் காட்சியை ரசித்த அந்தச் சிறுவன் தன் கைகளை நீட்டி எவரையோ அழைத்தான். கருமை நிறத்துடன் கட்டை, குட்டையாகத் தெரிந்த அந்தச் சிறுவனின் நெற்றி விசாலமாகவும், கண்கள் தீவிரமானதொரு ஒளியுடனும் காணப்பட்டது. சிறுவன் எளிமையாகவே இருந்தான்.

அந்தத் தீவில் அவன் தன் தாயுடனும், தாய்வழிப் பாட்டனுடனும் வசித்து வந்தான். பாட்டன் ஜாருத்தின் உடன்பிறந்தவர்களும் மற்ற உறவினர்களும் கூட அவர்களுடனேயே வசித்தனர். அங்கிருந்து சற்று தூரத்தில் நிலப்பகுதியில் இருந்த கிராமங்களுக்கு இவர்கள் தான் மீன்களைப் பிடித்துச் சுத்தம் செய்து விற்று வந்தனர். அதைத் தவிரவும் அனைவரிடத்தும் படகுகள் இருந்தமையால் இக்கரைக்கும் அக்கரைக்கும் பயணிகளை ஏற்றிச் சென்றும் கொண்டு விட்டும் பணம் சம்பாதித்தனர். அருகிலிருந்து கல்பி என்னும் ஊரே அவர்களின் பொருளாதார மையமாக விளங்கிற்று. யமுனையை அவர்கள் தாயாகக் கருதினர். அவர்கள் வாழ்வின் ஜீவாதாரமே இந்த யமுனையும் அதில் இருக்கும் மீன்களும் தான். அவளால் தான் இன்று அவர்கள் உணவு உண்டு இந்த சமூகத்தில் ஜீவித்திருக்க முடிகிறது. இந்தச் சிறுவனும் தன் தாய் வழிப்பாட்டனுடன் சேர்ந்து படகுகளில் சென்று மீன்களைப் பிடிப்பதிலும், அவற்றைச் சுத்தம் செய்வதிலும், வலைகளைத் தைத்துக் கொடுப்பதிலும் பெருமளவு உதவி செய்து வந்தான். அவன் வேலை செய்ய அஞ்சியதில்லை. மிகவும் கீழ்ப்படிதல் உள்ள ஓர் குழந்தையாகவே வளர்ந்து வந்தான். அவன் இயல்பாகவே பெரியோர் வார்த்தைகளை மீறாதவனாக இருந்து வந்தான். அவன் தாயோ, பாட்டனோ மீன்களை விற்க நகரத்துக்குச் செல்லும்போதெல்லாம் அவன் தனியாகப் பிடித்த மீன்களை ஒரு கூடையில் போட்டுக் கொண்டு அவர்களுடன் அவனும் சென்று அவற்றை விற்பான்.

அந்தத் தீவுக்குடியிருப்பிலுள்ள மற்றக் குழந்தைகளைப் போல் அல்லாமல் அவன் தனித்துத் தெரிந்தான். அதோடு மற்றக் குழந்தைகளுடன் கலந்து அவன் விளையாடுவதும் இல்லை. அவர்களுடன் அமர்ந்து பேசிக் களிப்பதும் இல்லை! எப்போதும் எதையோ தேடும் கண்கள்! எங்கோ தொலைதூரத்தைப் பார்க்கும் பார்வை! அப்படியே அந்தச் சிறுவர்களோடு அவன் கலக்க நேரிட்டாம் மௌனமே அவன் மொழி! அந்தச் சிறுவன் தனக்குள்ளே ஓர் உலகைச் சிருஷ்டித்துக் கொண்டு அதில் வாழ்ந்து வந்தான். அந்த உலகில் அவன் தாயையும், தகப்பனையும் தவிர எவருக்கும் இடமில்லை. அவனைக் கண்ட கிராமத்துப் பெரியோர்கள் பலருக்கும் இந்தச் சிறுவனுக்கு மூளைக்கோளாறோ என்னும் எண்ணம் உண்டாயிற்று. அவன் வேலைகளிலிருந்து சற்று ஓய்வு கிடைத்தாலும் போதும். யமுனையின் இந்தக் கரைக்கு வந்து தன் தகப்பனைத் தேட ஆரம்பிப்பான். மேற்குத் திசையையே அவன் கண்கள் பார்க்கும். குரலெடுத்துக் கூவுவான். அவன் குரல் அவன் தந்தையின் காதில் விழுந்து அவர் வந்துவிட மாட்டாரா? எங்கிருந்தாலும் அவர் வரவேண்டும். இப்போதும் அதைத் தான் அவன் செய்து கொண்டிருந்தான்.

பயணிகளை ஏற்றிச் சென்றிருந்த மச்சகந்தியின் சிறுபடகு யமுனைக்கரையில் அவர்கள் இருந்த தீவுக்குத் திரும்பியது. மச்சகந்தி தன் மகனைப் பார்த்தாள். ஆனால் அவள் மகன் அவளைப் பார்க்கவில்லை. பார்த்ததாகவே காட்டிக் கொள்ளவில்லை! மாறாக,”தந்தையே, தந்தையே! விரைவில் வாருங்கள்! எப்போது வரப் போகிறீர்கள்?” என்று கூவினான். படகிலிருந்து வெளியே குதித்த மச்சகந்தி படகை ஒரு மரத் தண்டில் இழுத்துக் கட்டிவிட்டுத் தாங்கள் குடி இருந்த குடிசையை நோக்கி வேக நடையாகச் சென்றாள். சுமார் இருபது வயதுக்குட்பட்ட மச்சகந்தி ஒல்லியாகவும் மிக அழகாக உருண்டு திரண்டும், படகு ஓட்டுவதால் ஏற்பட்ட திண்ணிய கரங்களோடும் வெயிலிலும், மழையிலும் அடிபட்டு அடிபட்டு ஆரோக்கியத்தைப் பெற்ற செம்பொன் நிற மேனியுடனும் காணப்பட்டாள். அவள் நடையே எழிலார்ந்து காணப்பட்டது. கண்களோ எனில் நக்ஷத்திரங்களோ என்னுமாறு பளபளத்தன. சிப்பிகளாலும், வெள்ளியினாலும் ஆனதொரு பெரிய ஆபரணத்தை மார்பில் அணிந்திருந்தாள். குடிசையை நோக்கி ஓடிய அவள் ஓடும்போதே தன் மகனை, “கிருஷ்ணா, கிருஷ்ணா!” என அழைத்தபடி ஓடினாள். அவள் தாய் சண்டோதரி, “உன் மகன் இங்கில்லை! வழக்கம் போல் அவன் தந்தையை அழைக்க யமுனைக்கரைக்குப் போய்விட்டான். ஹூம், அவர் எங்கே வரப்போகிறார்! அவர் வரபோவதே இல்லை!” என்று முடித்தாள்.

மச்சகந்தி ஓடிச் சென்று தன் மகனை அணைத்துக் கொண்டாள். அவனைத் தூக்கிக் கொண்டாள். தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள். “கிருஷ்ணா, கிருஷ்ணா, ஏன் நேரத்தை வீணாக்குகிறாய்? இங்கிருந்து நீ அழைப்பதை உன் தந்தையால் கேட்க இயலாது!” என்றாள். இது ஏற்கெனவே பலமுறை நடந்திருந்தாலும் அந்தச் சிறுவன் கிருஷ்ணா முதல்முறையாக இதைக் கேட்பது போல் அவள் முகத்தையே பார்த்தான். அவன் அறியாமையும், வெகுளித் தன்மையும் அவன் கண்களில் பளிச்சிட்டது. அவன் வயதுக்குப் பொருந்தாத ஒரு தன்னம்பிக்கையுடன் தாயைப் பார்த்து, “தாயே, நீங்கள் சொல்வது தவறு! அவர் வருவார்! நிச்சயமாய் வருவார்! நான் தூங்குகையில் ஒவ்வொரு நாளும் என்னிடம் வருகிறார். வந்து. “குழந்தாய்! நீ என்னை அழைத்தால் நான் வருவேன்!” என்று சொல்லிச் செல்கிறார்.” என்றான்.


Thursday, April 21, 2016

வியாசரின் பிறப்பு! தெரிந்த கதை!

இதுவரை நாம் பராசரருக்கும் மத்ஸ்யகந்திக்கும் ஏற்பட்ட தொடர்புக்கான காரணம் குறித்துப் பார்த்தோம். இது திரு முன்ஷி அவர்களின் கற்பனைதான் என்றாலும் ஹைஹேயர்களின் ஆக்கிரமிப்பும் அதில் பராசரருக்கு ஏற்பட்ட நஷ்டங்களும் இதிகாசத்தில் உள்ளன. இந்த ஹையேயம் தான் கேகய நாடு என்றும் தசரதன் மனைவி கைகேயி அந்த நாட்டைச் சேர்ந்தவள் தான் என்றும் தெரியவருகிறது. இந்த நாடு தற்போதைய ஜீலம் நதியைத் தாண்டி உள்ள  ஷாபுர், சிந்து, குஜராத் பகுதியாக இருந்திருக்கவேண்டும் என்றும் ஒரு கூற்று. இந்த ஹைஹேயர்களின் மன்னனே கார்த்தவீரியன். இவன் தற்போதைய கொங்கணப்பகுதியை ஆண்டதாகத் தெரிகிறது. ஏனெனில் தமிழ்நாட்டு சுவாமிமலைக் கோயிலின் தலவரலாற்றில் கார்த்தவீரியன் அந்தக் கோயிலுக்குத் திருப்பணி செய்ததாகச் சொல்கின்றனர். இது எவ்வளவுக்கு உண்மை என்று புரியவில்லை. இன்னும் சிலர் ஹைஹேயர்கள் பரந்து விரிந்திருந்த பாரத வர்ஷத்தில் ஈரானியப் பகுதியை ஆண்டனர் என்றும் சொல்கின்றனர்.

இப்போது மஹாபாரதம் பராசரர் பற்றிக்கூறுவதையும் பார்த்துவிட்டோமானால் மேலே தொடருவதற்கு வசதியாக இருக்கும். சப்தரிஷிகளில் ஒருவரான வசிஷ்டரின் மகனான சக்தியின் குமாரரே பராசரர். வசிஷ்டருக்குப் பேரன் ஆவார். கர்ப்பத்திலேயே வேத ஞானம் பெற்றவர். இவரை இவர் தாய் வயிற்றில் சுமந்திருக்கும்போது வசிஷ்டரின் குமாரன் ஆன சக்திக்கு மரணம் நேரிடப் புத்திர சோகத்தில் ஆழ்ந்த வசிஷ்டர் தன்னை மாய்த்துக்கொள்ள எண்ணி கங்கைக்கரையில் நதியில் மூழ்கி இறக்கச் சமயம் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அவர் பின்னால் வேத கோஷங்கள் கேட்டன. எவரோ இளங்குரலில் திருத்தமாகச் சுருதியோடு வேதங்களை ஓதிக்கொண்டிருக்கக் கேட்ட வசிஷ்டருக்கு அது தன் மகன் சக்தியின் குரலாகத் தொனித்தது. பின்னால் திரும்பிப் பார்த்தால் கர்ப்பிணியான சக்தியின் மனைவி நின்றிருந்தாள். அவள் வயிற்றிலிருந்தே வேத கோஷம் கேட்டுக் கொண்டிருந்தது. வசிஷ்டர் தன் மருமகளைப் பார்த்து என்ன விஷயம் என்று கேட்க, அவள், அருந்ததி தான் தன்னை அவர் பின்னே செல்லுமாறு பணித்ததாய்க் கூறினாள். வாழ்விழந்த மருமகளைப் பார்த்து மனம் நொந்து போயிருந்த வசிஷ்டர் அருந்ததி அனுப்பியதன் காரணத்தைக் கேட்க, அதற்கு சக்தியின் மனைவி வசிஷ்டர் இழப்பின் மிகுதியால் சித்தம் பேதலித்துச் செய்யக் கூடாதவற்றைச் செய்துவிடுவார் என்னும் காரணத்தாலேயே அவரைப் பின் தொடர்ந்து செல்லும்படி அருந்ததி அனுப்பி வைத்ததாகக் கூறினாள்.

மனம் வெட்கிப் போன வசிஷ்டர் நமக்கு மட்டுமா துக்கம்? பெற்றவளான அருந்ததிக்கோ, உற்றவளான நிறை கர்ப்பிணியான மருமகளுக்கோ துக்கம் இல்லையா? அவர்களுக்கும் துக்கம் தானே! நாம் நம் துக்கத்தை மட்டுமே பெரிதாக நினைத்து விட்டோமே! என நினைத்துக் கொண்டு இக்ஷ்வாகு குலதனமான ரங்கநாதனைப் பிரார்த்தித்துக் கொண்டு பிறக்கப் போகும் பேரனைச் சகல கலைகளையும் கற்க வைத்து எல்லாவற்றிலும் வல்லவனாக்க வேண்டும் என முடிவு செய்து கொண்டு ஆசிரமம் திரும்பினார். பிரசவ நாளும் நெருங்கியது! பேரனும் பிறந்தான். பராசரர் எனப் பெயரிட்டு சாஸ்திரப்படியும், சம்பிரதாயப்படியும் குழந்தைக்குச் செய்யவேண்டியவற்றை முறையே செய்த வசிஷ்டர் தக்க பருவம் வந்ததும் பேரனுக்கு உபநயனமும் செய்வித்தார். எங்கு சென்றாலும் கூட அழைத்துச் சென்று அனைத்தையும் கற்பித்தார். வேள்விகள் செய்யவும், வானிலை குறித்து ஆய்ந்து அறியவும் ஜோதிட சாஸ்திரமும் கற்பித்தார். பராசரரும் அனைத்தையும் முறையே கற்றுத் தேர்ந்ததோடு அல்லாமல் பராசர ஸ்மிருதி என்னும் நூலையும் இயற்றினார். பிரமசரியத்தில் தகதகவென ஜொலித்த தன் பேரனை கிருஹஸ்தாசிரமம் மேற்கொள்ளும்படி வசிஷ்டர் கேட்க பேரனோ மென்மையாகவும் அதே சமயம் திண்ணமாகவும் மறுத்தார். ஆனால் வசிஷ்டரோ பராசரர் பெற்ற வேத அறிவு எல்லாம் அவர் மகனுக்கும் கிடைக்கவேண்டும். அந்த மகன் உலகம் போற்றும் உன்னதமானவனாக இருக்க வேண்டும் என்றெல்லாம் ஆசைப்பட்டார்.

ஆகவே பராசரர் மானுடம் சிறக்கவும் வேதங்கள் புனருத்தாரணம் ஆகவும் வேண்டி ஒரு புத்திரனைத் தான் கர்ப்பாதானம் செய்வதன் மூலம் பெற்றுத் தருவதாகவும் திருமணம் என்னும் பந்தம் வேண்டாம் என்றும் வேண்டினார். அதற்கு வசிஷ்டர் பராசரர் கூடப் போகும் பெண்ணும் முற்றிலும் கன்னித்தன்மை உள்ளவளாகவும் ஐம்பூதங்களும்  இயக்கச் சுத்தமாகவும், வெளியில் உள்ள சூழ்நிலையை உணரும் தன்மையோடும், கிரகங்களின் நிலை சரியானபடி அமையும் வேளையில் இருவரும் மனமொத்து ஒன்று சேர்ந்தால் சத்புத்திரன் உண்டாவான் என்றும் எடுத்துச் சொல்கிறார். அதன் பின்னர் பராசரரும் அத்தகைய யோகமும் வேளையும் அமையும் வேளையில் தானும் கர்ப்பாதானம் அவசியம் செய்வதாகவும் அதுவரை பொறுத்திருக்குமாறும் தன் தாத்தாவிடம் வேண்டுகிறார். அதன் பின்னர் ஒரு முறை கங்கைக்கரையில் அக்கரைக்குச் செல்லப் படகுக்குக் காத்திருந்த வேளையில் மச்சகந்தி என்னும் கன்னிகை படகு ஓட்டி வர அவள் படகில் பயணித்த பராசரர் அவள் அழகிலும், அவள் விருத்தாந்தத்திலும் மனம் திருப்தி உற்றவராய் அவளிடம் தான் இன்னார் எனக் கூறி இப்போது இன்னும் சற்று நேரத்தில் குறிப்பிட்ட கிரகநிலையுடன் கூடிய வேளை வரப் போவதால் அப்போது அவர் அவளுடன் கூடினால் சத்புத்திரன் பிறப்பதோடு உலகம் உய்யவும் அந்த மகன் உதவி செய்வான் என்று சொல்கிறார்.

முதலில் மறுக்கிறாள் மச்சகந்தி. தன் கன்னித் தன்மை போய்விடுமே எனப் பதறுகிறாள். மேலும் பராசரர் போன்ற கற்றுணர்ந்த பிரமசாரி ஒரு மீனவப் பெண்ணான அவளைத் தொட்டுக் கூடினால் உலகம் அபவாதமாகப் பேசுமே எனப் பயப்படுகிறாள்.  ஒரு குழந்தைக்காக இத்தகைய தவறு செய்யலாமா என்றும் கேட்கிறாள். அவளைப் பல்வேறு ஆறுதல் மொழிகள் சொல்லித் தேற்றிய பராசரர் அவளுக்குப் பிள்ளை பிறந்த உடனேயே அவள் மீண்டும் பழைய மாதிரி கன்னித் தன்மையை அடைவாள் என வாக்கும் கொடுக்கிறார். அதன் பின்னர் பராசரர் அந்தத் தருணம் இயற்கையின் அமைப்பும், கிரஹங்களின் அமைப்பும்,உயர் நன்மை தரும் காலமாகவும் இருப்பதாகக் கூறி அருகிலுள்ள ஒரு தீவுக்குப் படகை ஓட்டிச் செல்லும்படி அவளிடம் சொல்கிறார். அவள் உடலில் அதுவரை இருந்த மீன் வாடையை முற்றிலும் போக்கிப் பரிமள காந்தியாக்கிய பின்னர், அங்கே பனி மூட்டத்தை உருவாக்கி அவளுடன் கூடுகிறார். அவர் நினைத்தபடியே ஆண் மகவு பிறக்கிறது. குழந்தைக்குக்  கருமை நிறத்துடன் இருந்ததாலும் தீவில் பிறந்ததாலும் க்ருஷ்ண த்வைபாயனர் என்னும் பெயரைச் சூட்டுகிறார். குழந்தையைத் தன்னுடன் எடுத்துச் சென்று ரிஷிகளின் ஆசிரமத்தில் வளரச் செய்தார். மச்சகந்தி நினைக்கும் நேரம் அவள் மகன் அவளை வந்து பார்ப்பான் என்னும் வரத்தையும் அருளுகிறார்.

இது தான் நாம் மஹாபாரதத்தில் காணும் மச்சகந்தி—பராசரர் குறித்தும் வேத வியாசர் பிறப்பு குறித்தும் அறிந்த கதை. இப்போது நாம் போகப் போவது முற்றிலும் புதிதான சம்பவங்களைக் கொண்ட ஒரு கதைக்கு! அதில் வேத வியாசர் பராசரருடன் செல்லவில்லை. மாறாக மச்சகந்தியுடன் இருக்கிறார். தந்தைக்காக ஏங்குகிறார். தந்தைக்கு ஏங்கும் வியாசரை அடுத்துக் காண்போம்.

Wednesday, April 20, 2016

மத்ஸ்யகந்தியும், பராசரரும்!

மறுநாள் சூரியோதயம் ஆகிச் சற்று நேரத்தில் மீனவன் ஜாருத் என்பவனின் படகு ஒன்று பராசரர் அடிபட்டுக் கீழே வீழ்ந்து கிடக்கும் கரையோரமாய் ஒதுங்கியது. யமுனையில் நடுவே காட்சி அளித்த ஒரு தீவில் ஜாருத் வசித்து வந்தான். பராசர முனிவருக்கு ஏற்கெனவே அறிமுகம் ஆன அவன் நெடுந்தூரத்திற்கு மீன் பிடிக்கச் செல்லும்போதெல்லாம் பராசரரின் ஆசிரமத்துக்கு வந்து தன் வணக்கத்தை அவருக்குத் தெரிவித்து ஆசிகள் பெற்றுச் செல்வது வழக்கம். இப்போதும் அப்படியே வந்தவன் ஆசிரமம் எரிக்கப்பட்டு நாசமாக்கப்பட்டுக் கிடப்பதைக் கண்டதும் அதிர்ச்சியுற்றான். ஆசிரமத்தை நெருங்கிச் சென்று பார்க்க அச்சமுற்று அவன் ஒதுங்கியே இருந்து விட்டான். மறுநாள் அந்தக் கொடியவர்கள் அனைவரும் அங்கிருந்து கிளம்பிச் சென்று மறைந்ததும் ஜாருத் மெல்ல மெல்லப் படகை அங்கே நிலை நிறுத்திவிட்டுப் படகிலிருந்து கீழே இறங்கிப் பார்க்க யத்தனித்தான். உள்ளூர அவன் மனதில் பயமும் இருந்து வந்தது. அந்தப் படகில் அவனுடன் வந்தவர்களில் அவனுடைய பெண்ணான பதினான்கே வயதான மத்ஸ்யா என்னும் பெண்ணும் இருந்தாள். சிப்பிகளையும், சங்குகளையும் கொண்டு செய்யப்பட்ட ஆபரணங்களை அணிந்து கொண்டிருந்த அவள் மெல்லிய இடையில் சிப்பிகளால் ஆன ஆபரணம் ஒன்றைப் பூண்டிருந்தாள். காலிலும், கைகளிலும், கழுத்திலும் கூட சிப்பிகளாலும் சங்குகளாலும் ஆன ஆபரணங்களைப் பூண்டிருந்தாள்.

மிக அழகாகப் பெண்மையின் அழகெல்லாம் ஓருருவாகத் தோன்றிய அவளின் எழிலார்ந்த நடையே ஒரு நாட்டியம் போல் இருந்தது. அழகிய தாமரை மொட்டுக்களைப் போன்ற மார்பகத்தை ஒரு துணியால் மூடி இருந்த அவள் நிறம் கருமையும், சிவப்பும் கலந்த செம்பின் நிறமாகக் காட்சி அளித்தது. அப்போது பளீரெனப் பிரகாசித்த சூரிய ஒளியில் அவள் செம்புச் சிலையெனக் காட்சி அளித்தாள். அவள் மனதில் நிறைவும் சந்தோஷமும் இருப்பதற்கு அறிகுறியாக அவள் கண்கள் ஒளிர்ந்ததோடு அல்லாமல் அந்த ஒளியினால் அவள் கன்னங்களும் செம்மை நிறம் பெற்றுப் பிரகாசித்தன. மத்ஸ்யாவின் தந்தையும் மற்றவர்களும் அவர்களுக்கு ஆகாரம் தயார் செய்ய முற்பட்டபோது அங்குமிங்கும் சுற்றி வந்த மத்ஸ்யா ஓர் மனிதன் கீழே விழுந்து கிடப்பதைப் பார்த்தாள். அசைவற்றுக் கிடந்தான் அவன். யாரெனப் பார்க்க வேண்டி அவன் அருகே ஓடினாள் மத்ஸ்யா! பராசரர் தான் அது! இன்னமும் நினைவிழந்த நிலையிலேயே இருந்தார். அவர் வாயின் ஓரங்களில் இருந்து ரத்தம் கசிந்து கொண்டிருந்தது. மத்ஸ்யா பயந்தே போனாள். சற்றே குனிந்த அவள் அந்த மனிதனின் நிலையைப் பரிசோதிக்க விரும்பியபோது இவர் தாங்கள் வணங்கி வரும் பராசர முனிவரே என்பதையும் அறிந்தாள். அவள் இங்கே ஒவ்வொரு முறையும் அவள் தந்தையோடு வரும்போதெல்லாம் இந்த முனிவரைப் பார்த்து வணங்காமல் சென்றதில்லை. அன்பும் கருணையும் வடிவான முனிவரும் அவர்களை ஆசீர்வதிப்பார்.

இப்போது இங்கே இப்படி நினைவிழந்து இவர் கிடப்பதைப் பார்த்த மத்ஸ்யாவின் மனம் வெதும்பியது. கண்களில் கண்ணீர் வந்தது. அவரை அழைத்துப் பார்த்தாள்; பலனில்லை! அந்த ராக்ஷதர்கள் இவரைக் கொன்றுவிட்டார்களோ என நினைத்தாள். உடனே அவர் மார்பில் தன் காதுகளை வைத்துப் பார்த்தாள். பின்னர் பெரிதாக அழ ஆரம்பித்தாள். அவள் அழுகையைக் கேட்ட ஜாருத் மற்றும் அவன் மனைவியும், மத்ஸ்யாவின் தாயுமான சண்டோதரி இருவரும் அங்கே வந்தார்கள். “என்ன விஷயம்? ஏன் அழுகிறாய் பெண்ணே!” என்று கேட்டார்கள். தன் தாயிடம், நம் மதிப்புக்குரிய ரிஷி பராசரர் இறந்து கிடக்கிறார் என்று மத்ஸ்யா சொல்ல அதைக் கேட்ட சண்டோதரி ஓட்டமாக ஓடி வந்தாள். அவளும் ரிஷியைப் பார்த்துவிட்டு சந்தேகத்துடன் தன் கைகளை அவர் கண்களில் வைத்தாள். மெல்லக் கண்களைத் திறந்து அவளைப் பார்த்த ரிஷியின் கண்கள் மீண்டும் மூடிக் கொண்டன. “இவர் இறக்கவில்லை; நிச்சயமாக இறக்கவில்லை! நிச்சயம்!” என்றாள் சண்டோதரி. அவள் கத்துவதையும் கேட்ட மற்ற மீனவர்கள் அனைவரும் அங்கு கூடினார்கள். அவர்களுக்கு இவர்களின் கூச்சலில் திரும்பிச் சென்ற அந்தக் கொடியவர்கள் மீண்டும் இங்கு வந்துவிட்டால் என்ன செய்வது என்னும் அச்சம்!

ஆகவே ஜாருத் தன் மகளையும், மனைவியையும் பார்த்து மீண்டும் படகுக்குப் போகச் சொன்னான். அந்தக் கொடியவர்களால் நாசமாக்கப்பட்ட ஆசிரமத்தில் தாங்கள் இருப்பதால் இனி இங்கே இருக்கக் கூடாது என்றும் பேயும் பிசாசுகளும் ஆட்சி செய்யும் இந்த இடத்திலிருந்து மத்ஸ்யா போன்ற கன்னிப் பெண்களும், சண்டோதரி போன்ற பெண்களும் இருக்கக் கூடாது என்றும் கூறி அவர்களைப் படகில் போய் இருக்கச் சொன்னான். ஆனால் மத்ஸ்யாவுக்கோ ரிஷியை விட்டுச் செல்ல மனமில்லை. “தந்தையே, இதோ பாருங்கள், நம் ரிஷியை, கிட்டத்தட்ட இறக்கும் நிலையில் இருக்கிறார்.” என்றாள் சோகத்துடன். ஜாருத் கூர்ந்து பார்த்து ரிஷியை அடையாளம் கண்டு கொண்டான். “ஆஹா, ஆம், இவர் நம் ரிஷியே தான்! இந்த ஆசிரமத்தை எரித்த அந்தப் பிசாசு மனிதர்கள் இவரையும் கொன்றிருக்க வேண்டும்!” என்றான். அதற்குச் சண்டோதரி, “இல்லை, இல்லை, இவர் இறக்கவில்லை! நாம் இவரை நம்முடன் தூக்கிச் செல்வோம். வைத்தியம் செய்து உயிரைக் காப்பாற்றுவோம்.” என்றாள். அதன் பேரில் அனைவரும் படகுக்குச் செல்கையில் பராசரரையும் தூக்கிச் சென்று படகில் கிடத்தினார்கள். சண்டோதரியும், மத்ஸ்யாவும் அவர் உடலின் காயங்களை கழுவி மருந்திட்டு அவருக்குக் குடிக்க நல்ல நீரும் கொடுத்தார்கள். அவர்கள் படகு கல்பி என்னும் இடத்துக்கு அருகிலிருந்த தீவுக்கு விரைந்தது. அங்கே பராசரரை இலைகளால் ஆன மெத்தென்ற படுக்கையில் படுக்க வைத்து வைத்தியம் செய்தார்கள்.

இரண்டு நாட்களுக்குத் தொடர்ந்து வைத்தியம் செய்தனர். இரண்டு நாட்களாகக் கண் விழிக்காத பராசரர் மூன்றாம் நாள் நிலவு கீழ்த்திசையில் பிரகாசமாக எழுந்தது. நதியில் நிலவொளி பட்டுப் பிரகாசித்தது. நதியின் நீரெல்லாம் நிலவொளியில் உருக்கி வார்த்த வெள்ளியைப் போல் தகதகத்தது! அப்போது தான் பராசரருக்குக் கொஞ்சம் நினைவு வந்தது. மெல்ல மெல்ல கண்களைத் திறந்தார். ஆனாலும் இன்னமும் பூரணமாக மயக்கம் தெளியவில்லை. அரை மயக்கத்திலேயே இருந்தார். சிறிது நேரம் அவருடைய வெளிறிய முகத்தையே பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாள் மத்ஸ்யா! பின்னர் அவர் அருகே சென்றாள். அவர் தலையைத் தூக்கித் தன் மடியில் வைத்துக் கொண்டு அவர்கள் மீன் பிடிக்கச் செல்கையில் பாடும் தெம்மாங்குப் பாடலொன்றை மெல்லிய குரலில் மெதுவாகப் பாடினாள். உடலில் காயங்களோடும் அதற்கேற்ப மனதில் ஹைஹேயர்கள் செய்த கொடுமையினாலும் பல மடங்கு பாதிக்கப்பட்டிருந்த பராசரருக்கு அந்தக் குரல் ஆறுதலைக் கொடுத்தது. அந்தப் பாடல் காதுக்கு இனிமையாக இருந்ததோடு மனதுக்கு அமைதியையும் கொடுத்தது. அந்தப் பெண்ணின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார் பராசரர்.

Sunday, April 17, 2016

கார்த்தவீரியனின் அராஜகம்! பராசரரின் மயக்கம்!

பராசரரும் மச்ச கந்தி எனப்படும் மத்ஸ்யகந்தியும் சந்தித்தது குறித்து நாம் அனைவரும் மஹாபாரதம் மூலமாகவே அறிந்திருக்கிறோம். எனினும் ஹைஹேயர்களின் படை எடுப்புக்காரணமாகப் பல ஆசிரமங்கள் அழிந்தது குறித்தும் தெரிந்திருக்கும். அதில் பராசரரின் ஆசிரமமும் ஒன்று. அதைக் குறித்தும் அவர் எப்படி மச்சகந்தியிடம் போய்ச் சேர்ந்தார் என்பது குறித்தும் திரு முன்ஷிஜியின் பார்வை மூலமாக இப்போது பார்க்கப் போகிறோம். தத்தாத்ரேயரின் அருள் பெற்றவனாகச் சொல்லப்படுவது உண்டு. அவர் அருளாலேயே அவனுக்கு ஆயிரம் கைகள் ஏற்பட்டதாகவும் சொல்லுவார்கள். கார்த்தவீரியனின் மஹா சக்தி குறித்தும் அவனுக்குக் கிடைத்த பற்பல வரங்கள் குறித்தும் நாம் பார்த்திருப்போம். ராமாயண காலத்திலேயே  வாழ்ந்திருந்த கார்த்தவீரியன் என்னும் சஹஸ்ரார்ஜுனன் ராவணனையே சிறைப்பிடித்தவன். 45,000 ஆண்டுகள் ஆட்சி செய்ததாகச் சொல்லப்படுகிறது. அத்தகையவன் இப்போது ஆரியர்களின் பகுதியான ஆர்யவர்த்தத்தில் தன் படையெடுப்பை விஸ்தரித்திருக்கிறான். இந்தப் பின்னணியைப் புரிந்து கொண்டு படிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இனி நேற்றைய சம்பவங்களின் தொடர்ச்சி குறித்துப் பார்ப்போம்.

பராசரர் எவ்வளவு எடுத்துச் சொல்லியும் ஆரிய அரசர்கள் கேட்கவில்லை. அனைத்தும் செவிடன் காதில் ஊதிய சங்காகவே போய் முடிந்தது. தன் ஆசிரமத்தையாவது காப்பாற்றிக் கொள்ள நினைத்து அங்கே வந்தார் பராசரர்! ஆனால்! அங்கேயோ! அவர் என்ன நடக்கக் கூடாது என்று பிரார்த்தித்துக் கொண்டு வந்தாரோ அது நடந்தே விட்டது! சரஸ்வதி நதிக்கரையில் இருந்த மற்ற ரிஷிகளின் ஆசிரமங்களை எரித்து அழித்த கார்த்தவீரியனின் வீரர்களும், அவனும் பராசரரின் ஆசிரமத்தையும் முற்றிலும் அழித்திருந்தார்கள். ஆசிரமவாசிகளைத் துன்புறுத்தி அடித்துக் கொன்று, பெண்களை மானபங்கப்படுத்தி, கால்நடைகளைக் கொன்று அல்லது அங்கிருந்து ஓட்டி விட்டு என்று பற்பல அக்கிரமங்களைப் புரிந்து கொண்டிருந்தனர் ஹைஹேயர்கள். பராசரர் பார்த்தது அழிவின் மிச்சங்களை மட்டுமே! பராசரர் கார்த்தவீரியனைப் பார்த்து இதைக் குறித்து முறையிடவேண்டும் என்று எண்ணினார். பல வருடங்கள் முன்னர் சஹஸ்ரார்ஜுனன் இளைஞனாக இருந்தபோது அவனைப் பார்த்திருக்கிறார் பராசரர். அவர் தாத்தாவான வசிஷ்டரின் ஆசிரமத்தில் வலிமை பொருந்திய இளைஞனாக, எவர்க்கும், எதற்கும் அஞ்சாதவனாகக் காட்சி அளித்தான். இப்போது அதை விட வல்லமை மிகுந்திருக்கிறான் போலும்!

அங்குமிங்கும் நடந்து அழிவுகளைப் பார்த்துக் கொண்டிருந்த பராசரருக்குத் திடீரென ஒரு புகை மண்டலம் கண்களில் பட்டது. தொடர்ந்து குதிரைகள் ஓடி வரும் சப்தமும், ரதங்களின் சக்கரங்கள் உருளும் சப்தமும் கேட்டது. பராசரர் நிதானித்துப் பார்த்தார். சுமார் நூறு ரதங்களுக்கு மேல் பின் தொடர ஒரு மாபெரும் ரதத்தில் ஆரோகணித்து கம்பீரமாக வந்து கொண்டிருந்தான் அர்ஜுனன். அவன் முகத்தில் அச்சம் என்பதே இல்லை.  அவன் கண்கள் அவனுக்குக் கிடைத்திருந்த மாபெரும் அதிகார மயக்கத்தின் ஒளிர்ந்தன. கண்ணெதிரே பட்டவர் யாராக இருந்தாலும் அவர்களைத் துச்சமாகக் கருதினான். என்றாலும் பராசரர் சற்றும் அஞ்சாமல் முன்னே சென்றார். எல்லாம் வல்ல மஹாதேவனிடம் தன் விதி எதுவாக இருந்தாலும் தன்னைக் காத்தருளுமாறு வேண்டிக் கொண்டார். வேகமாய்ச் சென்றவர் கார்த்தவீரியனின் ரதத்தை ஓட்டிக் கொண்டிருந்த சாரதிகளிடமிருந்து முகக்கயிற்றை வாங்கிக் கொண்டு அந்தக் குதிரைகளின் வேகத்தை மட்டுப்படுத்தி நிற்க வைத்தார். கார்த்தவீரியனை ஏறிட்டு நோக்கினார். தான் ரதத்தில் வேகமாக வரும்போது சிறிதும் பயமின்றித் தன் ரதத்தைத் தடுத்து நிறுத்திய இந்த மனிதன் யார்? என்று கார்த்தவீரியன் ஆச்சரியத்துடன் பார்த்தான். எவ்விதமான ஆயுதங்களும் இல்லாமல் பிற மனிதர்களின் உதவியும் இல்லாமல் தனி ஒருவனாகத் தன் ரதத்தைத் தடுத்து நிறுத்திய இவன் சக்தி மஹாசக்தியாகத் தான் இருக்கவேண்டும்.

கார்த்தவீரியனின் ஊழியர்கள் அனைவரும் தங்கள் தங்கள் ரதங்களில் இருந்தும் குதிரைகளில் இருந்தும் கீழே இறங்கி வாளைச் சுழற்றிக் கொண்டு பராசரரைச் சூழ்ந்து கொண்டனர். கார்த்தவீரியன் மிகத் துச்சமாகவும், ஏளனமாகவும் அவரைப் பார்த்து, “முட்டாள் ரிஷியே! என்ன செய்கிறாய்? நான் யார் என்பதை அறிவாயா?” என்று கேட்டான். சற்றும் பதட்டமின்றி நிலைத்து அதே சமயம் நிதானமாகவும் நின்று கொண்ட பராசரர், “சக்கரவர்த்தி! நீ யாரென்பதை நான் அறிவேன். மிகப் பெரிய மஹாசக்தி பொருந்திய ஆயிரம் கைகளை உடைய வீரன் நீ! தத்தாத்ரேயரின் அருள் பெற்றவன். ஹைஹேயர்களின் குல தெய்வம் நீ! அவர்களின் தலைவன்! ஆனால், சக்கரவர்த்தி, நீ மேலே முன்னேறாமல் திரும்பி உன் நாட்டுக்குப்போய்ச் சேர்! நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்! எப்படிப் பட்ட அழிவை நடத்துகிறாய் என்பதை இப்போது நீ அறியவில்லை. இங்கே இதுவரை சிந்திய, இனியும் சிந்தப் போகும் ஒவ்வொரு ஆரியனின் ரத்தத்துக்கும் நீ தக்க பதில் சொல்லியாகவேண்டும்.”

“இதோ பார் அரசே! ஹைஹேயர்களின் தலைவா! நீ இந்தப் பூவுலகில் ஒரு மாபெரும் பகுதிக்குக் கடவுளைப் போல் இருந்து வருகிறாய். அப்படி இருக்கையில் நீ அதில் மன நிறைவு கொள்ளாமல் இந்த அழிவை ஏன் செய்து கொண்டிருக்கிறாய்? வெறுப்பு உனக்கு வெற்றியைத் தேடித் தரும் என்றா நினைக்கிறாய்? வெறுப்பு யாருக்கும் உதவி செய்ததில்லை, உனக்கும் உதவி செய்யப் போவதில்லை. அது ஓர் கொழுந்து விட்டெரியும் நெருப்பைப் போன்றது! உன்னை அது அழித்து எரித்துவிடும்! இங்கேயே நில்! ஆழ்ந்து யோசி! நான் சொல்வதைக் கேள்! உன் நாட்டிற்குத் திரும்பிப் போவாய்!” என்று பராசரர் அவனிடம் கெஞ்சினார். மிகுந்த அதிருப்தியுடன் இதைக் கேட்டான் கார்த்தவீரியன். அவன் மனதினுள் இந்த மனிதன் ஒரு பைத்தியம்! இல்லை எனில் என்னிடம் இப்படி அசட்டுத் துணிச்சலோடு பேசுவானா என்னும் எண்ணமே ஓடியது! குரூரமாகச் சிரித்தான். தன் கையிலிருந்த சாட்டையால் பராசரரை ஓங்கி அடித்தான். இதைக் கண்ட அவன் ஊழியர்கள் அவருடைய காலிலேயே ஓங்கி அடித்தார்கள். மயக்கம் போட்டுத் தன் நினைவிழந்து கீழே விழுந்தார் பராசரர். அவர் வாயிலிருந்து ரத்தமாக வழிந்து ஓடியது. இதைப் பார்த்த அர்ஜுனனின் வீரர்கள் கட்டுக்கடங்கா மகிழ்ச்சியுடன் சிரித்தார்கள்.

கீழே விழுந்த பராசரரைத் திரும்பிக் கூடப் பார்க்காமல் கார்த்தவீரியன் தன் துணைவர்களோடு அங்கிருந்து சென்றுவிட்டான். அன்றிரவு முழுவதும் கண்ணில் பட்ட ஆசிரமங்களையும், குருகுலங்களையும் அடித்து நொறுக்கி நெருப்பு வைத்துக் கொளுத்தினார்கள். கண்ணில் பட்ட பெண்களெல்லாம் மானபங்கம் செய்யப்பட்டனர். தன்னுடைய ஆசிரமத்தின் வெளியே பராசரர் நினைவிழந்து கிடந்தார். ஒரு காலத்தில் நூற்றுக்கணக்கான சீடர்கள் அவரிடம் வந்து பாடம் படித்துக் கொண்டும், வேதம் கற்றுக் கொண்டும் இருந்தார்கள். இன்றோ! மாணாக்கர்களில் கொல்லப்பட்டவர்கள் தவிர மற்றவர்கள் கார்த்தவீரியனால் பிடித்துச் செல்லப்பட்டனர். தப்பிப் பிழைத்தவர்கள் ஓடிய இடம் தெரியவில்லை. இங்கே பராசரரோ மயக்கத்தில் கிடந்தார்.

Saturday, April 16, 2016

வேத வியாசர்-- தொடர்ச்சி!

வியாசர் குறித்துப் பார்க்கும் முன்னர் வியாசர் பிறப்பதற்கு முன்னர் இருந்த நாட்டு நிலவரங்கள் குறித்த ஒரு பார்வை! பாரத வர்ஷத்தின் மேற்குக் கடற்கரை! ஹைஹேயர்களின் சக்கரவர்த்தி மஹிஷ்மத் பயங்கரமானவன், மேலும் முரட்டுத் தனமான தலைக்கனம் பிடித்தவன். தனக்கு நிகர் யாருமில்லை என்னும் எண்ணம் கொண்டவன். சூறைக்காற்றைப் போலத் தன் ராஜ்ஜியத்தைத் தன் தலைநகரான மஹிஷ்மதியிலிருந்து கிழக்கேயும், வடக்கேயும் விரிவு படுத்திக் கொண்டிருந்தான். தெற்கேயும் விரிவு செய்ய வேண்டும். அவ்வளவு ஏன்? மேலைக்கடலைத் தாண்டிப் படாலாவில் குடியிருக்கும் மக்களையும் தன் ஆட்சிக்குக் கீழ் கொண்டு வரவேண்டும். மேலைக்கடலைத் தாண்டிய பிராந்தியத்தில் உள்ள மக்கள் மஹிஷ்மதன் பெயரைக் கேட்டாலே அஞ்சினார்கள். மஹிஷ்மதனின் ராஜகுருவான ரிசிகாவின் ஆலோசனைகளையோ, புத்திமதிகளையே அவன் லட்சியம் செய்தவன் அல்ல! இத்தனைக்கும் அவர் சாமானியமானவர் அல்ல! பிருகு வம்சத்தில் வந்தவர்! ஆயுதங்கள் எடுத்துப் போர் புரியும் வல்லமை கொண்டவர். ஆசாரியனாகவும், அதே சமயம் ஆயுதப் பயிற்சி கொடுப்பவராகவும் இருந்து வந்தார்.

ஆரியர்களுக்கென ஒரு தர்மம் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. அந்த தர்மம் அவர்களுடைய சநாதன தர்மத்தையும் சார்ந்திருந்தது. அதைக் கட்டுப்படுத்தியது அண்ட கோளங்களில் ஏற்படும் மாற்றங்கள். இவற்றை அண்ட விதி என்றனர். இதன் மூலம் பூமியிலுள்ள மக்களை நெறிப்படுத்தியதாக வருணனைக் குறிப்பிட்டார்கள். வருணன் இந்தப் பிரபஞ்சத்துக்கே அரசனாக அனைத்தையும் கட்டுக்குள் கொண்டுவருபவனாக இயற்கையின் நியதிகளை ஒழுங்குபடுத்துபவனாக அறியப்பட்டான். ஆரியர்கள் அனைவருமே தங்கள் சடங்குகளில் வருணனை வணங்கி வந்தனர். ஆனால் மஹிஷ்மதனோ இந்த விதிகளை மட்டும் நிந்திக்காமல் மொத்தமாக ஆரியர்களையும் வருணனையுமே நிந்தித்தனர். அதர்வண வேதத்தில் நிபுணரான ரிசிகருக்கு ஹைஹேயர்களிடமும், அவர்களின் அரசனான மஹிஷ்மதனிடமும் அளவற்ற கோபம் ஏற்பட்டது. ஆகவே அவர்களுக்குச் சாபம் கொடுத்துவிட்டு தன் அதிருப்தியை வெளிக்காட்டும் விதமாக நாட்டை விட்டே வெளியேறினார். வெளியேறியவர் நாகரிகத்தில் தேர்ந்தவர்களும், ஆசாரியர்களுக்கு மதிப்புக் கொடுப்பவர்களும் ஆன ஆரியர்கள் வசிக்கும் பிரதேசத்தை அடைந்தார். அவர் குடி புகுந்த இடம் பிரிக்கப்படாத பஞ்சாப் பகுதி என்கின்றனர். அங்கு சென்ற ரிசிக முனிவர் தன் சீடர்கள், பசுக்கள் மற்றும் குதிரைகள் போன்ற கால்நடைகளுடன் அங்கே ஆசிரமம் அமைத்துக் கொண்டார்.

ஆர்யவர்த்தத்தில் சரஸ்வதி நதிக்கரையோரமும், கங்கை நதிக்கரையோரமும், யமுனைக்கரையோரமும் பல ரிஷி, முனிவர்கள் தங்கள் ஆசிரமங்களையும் குருகுலத்தையும் அமைத்துக் கொண்டு நிம்மதியாக வாழ்ந்து வந்தனர். பல முக்கியமான ரிஷிகள் அங்கே வாழ்ந்தனர். அவர்களின் சாந்தமான போக்குப் பல தேசத்து அரசர்களையும், இளவரசர்களையும் வீரர்களையும் அங்கே மாணாக்கராகச் சேரும்படி அழைத்தது. தங்களிடம் வருபவர்களுக்கு அவர்கள் தங்களுக்குத் தெரிந்த வித்தையை எல்லாம் கற்றுக் கொடுத்தனர். ஒரு நல்ல மனிதனாக வாழ்வது குறித்தும் அவரவர் சுய தர்மம் குறித்தும் மற்றும் வேத பாடங்களும், பல்வேறு கலைகளும் அங்கே போதிக்கப்பட்டன. ரிசிகாவைப் போன்ற போர்ப்பயிற்சி, ஆயுதப் பயிற்சியில் தேர்ந்த பல ரிஷிகளும் மன்னர்களுக்கும், இளவல்களுக்கும் தங்களுக்குத் தெரிந்த வித்தைகளைக் கற்றுக் கொடுத்தனர்.

ஆர்யவர்த்தத்தை அடைந்த ரிசிக முனி அங்குள்ள அரசன் கதி என்பவனுடைய குமாரியான சத்யவதியை மணந்தார். அவருக்கு ஒரு மகன் பிறந்தான். ஜமதக்னி என்னும் பெயருடைய அந்த மகன் தன்னுடைய திறமைகளினாலும், பிரம்மத்தைக் குறித்துத் தான் பெற்ற அறிவாலும், தன்னுடைய புனிதத் தன்மையாலும் இன்றளவும் பேசப்படும் ஏழு சப்தரிஷிகளுள் ஒருவராக ஆனார். மஹிஷ்மத அரசனுக்குப் பின்னர் சஹஸ்ரார்ஜுனா என்னும் மஹிஷ்மதனின் பேரன் ஹைஹேயர்களின் சக்கரவர்த்தி ஆனான். இவனுக்கு ஆயிரம் கைகள் உண்டென்று ஓர் கூற்று உண்டு. இவன் ஆர்யவர்த்தத்திற்கு வந்து ஜமதக்னியைச் சந்தித்தான். அவரிடம் ஹைஹேய நாட்டிற்குத் திரும்பும்படியும் தங்கள் மேல் விதிக்கப்பட்ட சாபத்தை நீக்குமாறும் கேட்டுக் கொண்டான். ரிசிகரின் குமாரர் ஆன ஜமதக்னிக்கு ஹைஹேய நாட்டிற்குத் திரும்புவதற்கான முழு உரிமையும் உள்ளது என்றும் சொன்னான். ஜமதக்னி அனுப்தேசத்திற்குத் திரும்புவதற்கு மறுத்துவிட்டார். மேலும் தன் தந்தையால் கொடுக்கப்பட்ட சாபத்தை நீக்குவதற்கும் தனக்கு உரிமை இல்லை என்று சொன்னார். கோபம் கொண்ட சஹஸ்ரார்ஜுனன் ஜமதக்னியின் இளைய மகன் ராமா என்பவரைக் கடத்திக் கொண்டு தங்கள் நாட்டிற்குச் சென்று விட்டான். (இவர் தான் பரசுராமர்) ஆர்ய வர்த்தத்தில் சஹஸ்ரார்ஜுனன் வந்தபோது அங்குள்ள நியதிகள், சட்டங்கள், கோட்பாடுகள் ஆகியவற்றிற்கு அவன் கட்டுப்பட வேண்டி இருந்தது. இது சஹஸ்ரார்ஜுனனுக்கு அவமானமாகத் தோன்றியது. ஆரியர்களின் கட்டுப்பாடுகள், சட்டதிட்டங்கள், தர்ம நியாயங்களை முழு மனதோடு வெறுத்த அவன் அதைப் போதிக்கும் ரிஷிகளைப் பழிவாங்குவதாகவும் சபதம் செய்தான்.

பரசுராமர் கடத்திச் செல்லப்பட்டாலும் அவர் தந்தை மற்றும் தாத்தாவைப் போலப் போரில் வல்லவராக எவராலும் வெல்ல முடியாதவராக விளங்கினார். அவர் சஹஸ்ரார்ஜுனனிடம் சவால் விட்டார். அர்ஜுனனின் கொடுங்கோலாட்சியால் வெறுத்துப் போயிருந்த பல ஹைஹேயர்களை அவர் ஆர்யவர்த்தம் நோக்கிச் சென்று அங்கே வாழும்படி கூறினார். இதெல்லாம் அர்ஜுனனுக்கு மேலும் மேலும் கோபத்தை விளைவித்தது. அர்ஜுனன் ஒரு புயலைப் போல் கிளம்பி ஆர்யவர்த்தத்தை வேரோடு அழித்துவிட்டு ரிஷி, முனிவர்களின் ஆசிரமங்களையும் தீக்கிரையாக்க வேண்டிக் கிளம்பினான். அப்படியே ஒவ்வொரு இடமாகச் செய்து கொண்டும் வந்தான். அப்போது வசிஷ்டரின் பேரன் ஆன பராசர முனிவர் ஆர்யவர்த்தத்தின் ஒவ்வொரு அரசனிடமும் சென்று சஹஸ்ரார்ஜுனனின் அட்டூழியத்தைக் குறித்துக் கூறி அவனைத் தடுக்க அனைவரும் ஒன்று கூடி எதிர்க்குமாறு வேண்டினார். ஆனால் ஆர்யவர்த்தத்தின் அரசர்களோ இதைச் சிறிதும் ஏற்கவில்லை. மெத்தனமாக இருந்தனர். தங்களை மீறித் தங்கள் பகுதிகளுக்கு எதிரிகள் வந்து அழிக்க முடியாது என்னும் ஆழ்ந்த நம்பிக்கையில் அவர்கள் மூழ்கி இருந்தனர்.

Friday, April 15, 2016

வேத வியாசர்--தொடர்ச்சி!

வியாசர் மஹாபாரதப் போரை மட்டும் நேரில் காணவில்லை. குரு வம்சத்தினரான கௌரவர்களும், பாண்டவர்களும் அவரின் பேரன்கள் ஆவார்கள். ஆம், அந்தக் காலத்திலேயே விந்து தானத்தின் மூலம் தன் தம்பி மனைவியருக்குப் பிள்ளைப்பேறு ஏற்படச் செய்தவர் வியாசர் தான். நமக்குத் தெரிந்ததெல்லாம் அவர் சத்யவதி என்னும் மீனவப் பெண்ணிற்கும், பராசரர் என்னும் ரிஷிக்கும் பிறந்த பிள்ளை என்பதே! மஹாபாரதம் மட்டுமின்றிப் பதினெட்டுப் புராணங்களையும் வேத வியாசரே தொகுத்தார் என்கின்றனர். அவர் எழுதியவற்றில் ஶ்ரீமத் பாகவதம் எழுதியதும் அவரே. ஏழு சிரஞ்சீவிகளுள் ஒருவராகவும் வியாசர் கருதப்படுகிறார். எல்லாவற்றுக்கும் மேல் வியாசரை ஶ்ரீமஹாவிஷ்ணுவின் அவதாரமாகவே கருதுகின்றனர்.
ஆசாரிய பரம்பரையில் வரும் ஸ்லோகத்தில் வியாசரின் பெயரும் வருகிறது.

நாராயணம், பத்மபுவம், வஸிஷ்டம்
சக்திம் ச தத்புத்ர பராசரம் ச |
வ்யாஸம் சுகம் கௌடபதம் மஹாந்தம்
கோவிந்த யோகீந்த்ரம் அதாஸ்ய சிஷ்யம்||


ஆஷாட மாத பௌர்ணமியை நாம் இன்றளவும் குரு பூர்ணிமா என்றே கொண்டாடுகிறோம். அன்று தான் வேத வியாசர் பிறந்ததாக ஐதீகம். மேலும் அன்று தான் வேதங்கள் தொகுக்கப்பட்ட தினமாகவும் கருதப்படுகிறது. த்ரயி வித்யா என்னும் மூன்று வேதங்களை மட்டும் சொல்லிக் கொடுக்கப்படும் குருகுலத்தில் அதர்வணர், ஆங்கிரஸ் ஆகியோருடைய குருகுலத்துக்கும் இடையே சிற்சில வேறுபாடுகள் இருந்து வந்தன. ரிக், யஜுர், சாமம் ஆகிய வேதங்களைச் சொல்லிக் கொடுக்கும் குருகுலத்துப் பெரியோர்கள் அதர்வண வேதம் சொல்லிக் கொடுக்கப்படும் குருகுலத்தைக் கொஞ்சம் அவமதிப்புடனேயே பார்த்து வந்தனர். ஏனெனில் அதர்வ வேதத்தில் பில்லி, சூனியம் குறித்த மந்திரங்கள் இருந்தன. அதுமட்டுமில்லாமல் உயிர்காக்கும் மருத்துவமான ஆயுர்வேதமும் அதர்வ வேதத்தைச் சேர்ந்ததாகவே சொல்லப்படுகிறது. ஒரு அரசனின் ஆட்சி எப்படி இருக்கவேண்டும் என்னும் நிர்வாகக் கலையும் அதிலே இருந்தது. இப்படி லௌகிகமான விஷயங்கள் அதர்வ வேதத்தில் நிறைய இருந்ததால் அதர்வ வேதம் கற்ற ரிஷிகள் யாகங்களிலும், யக்ஞங்களிலும் அதன் யஜமானாக இடம் பெற முடியவில்லை. என்றாலும் இந்தப்பிளவே ஒரு வகையில் அவர்களுக்கு நன்மையும் பயத்தது.

அவர்களுடைய புனித மந்திரங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு வேதங்களோடு சேர்க்கப்பட்டது. அதர்வணாங்கிரஸ் ரிஷிகள் யக்ஞங்களில் யஜமானாக அமர வைக்கப்பட்டனர். ஆனாலும் அவர்கள் யாகம், யக்ஞங்கள் நடக்கையில் அதர்வ வேத மந்திரங்களைச் சொல்வதற்கு அனுமதி கிட்டவில்லை. இந்த அதர்வ வேதம் ஆரம்பத்தில் அதர்வணாங்கிரஸ் என்றே சொல்லப்பட்டு வந்தது. இதிலே அதர்வணர் கொஞ்சம் மங்களகரமான மந்திரங்களை மட்டுமே கையாள ஆங்கிரஸ் மாறாக மந்திர, தந்திரங்களில் தேர்ந்தவராக இருந்ததாகச் சொல்லப்படுகிறது. பின்னர் நாளாக ஆக, அதர்வணரின் மங்களகரம் மட்டுமே பேசப்பட்டு இந்த வேதம் பரவலாக்கப்பட்டதாகவும் அறிகிறோம்.  ஆகவே வேத வியாசரின் சீடர்களின் பரம்பரையை ஆராய்கையில் அவருடைய குருகுலத்தில் அதர்வண வேதம் குறித்தும் கற்றுக்கொடுக்கப்பட்டிருக்கிறது. அப்படிக் கற்று வந்தவர்களில் சுமாந்து ரிஷி என்பவர் அதர்வ வேதத்தின் முதல் சீடர் ஆவார்.

இந்தச் சமயத்தில் தான் வியாசர் வேதங்களை நான்காகத்தொகுத்ததாக அறியப்படுகிறது. அவர் ரிக் வேதத்திற்குப் பைல ரிஷியையும், யஜுர் வேதத்திற்கு வைசம்பாயனரையும், சாம வேதத்திற்கு ஜைமினியையும், அதர்வ வேதத்திற்கு சுமந்து ரிஷியையும் நியமித்ததாகச் சொல்லப்படுகிறது. இதில் சுமந்து ரிஷி ஜைமினியின் மகன் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது. இதைக் குறித்து விஷ்ணு புராணத்தில் சொல்லப் பட்டிருக்கிறது. இதன் பின்னர் வியாசர் செய்ததில் முக்கியப் பங்கு வகிப்பது உச்சரிப்பு. வாய்மொழியாகவே பரவிய வேதத்தின் உச்சரிப்பையும் வார்த்தைக்கு வார்த்தை தரப்படுத்தியதில் வியாசரின் பங்கு முக்கியமானது. இது மூவாயிரம் வருடங்களுக்கும் மேலாக இருந்தும் வருகிறது. வியாசரின் மனைவி குறித்தெல்லாம் அதிகம் கேள்விப் பட்டிருக்க மாட்டோம். ஜாபாலி ரிஷியின் மகள் தான் வியாசரின் மனைவி வடிகா என்பவள். சுக முனிவர் இவர்களுக்குப் பிறந்தவர் என்றே அறிகிறோம். சுகரை சுத்தப் பிரம்மம் என்றும் சந்நியாசி என்று சொன்னாலும் ஹரி வம்சத்திலும், தேவி பாகவதத்தின் படியும் சுகருக்குத் திருமணம் ஆகிக் குழந்தைகள் உண்டு. தேவி பாகவதத்தின் படி சுகருக்கு அமைந்த மனைவியின் பெயர் பீவரீ என்றும் நான்கு மகன்களும் ஒரு மகளும் சுகருக்கு உண்டு என்று தெரிய வருகிறது.


வேத வியாசர் குறித்த சிறு முன்னுரையுடன் ஆரம்பித்துள்ளேன். விரைவில் நாம் வியாசர் குறித்து விரிவாகப் பார்ப்போம். 

Tuesday, April 12, 2016

கண்ணன் வருவான் ஆறாம்பாகம்! வேத வியாசர்!


அடுத்து நாம் இப்போது பார்க்கப் போவது வேத வியாசர் குறித்த சில தகவல்களை! வேத வியாசரை நாம் அறியாமல் இல்லை. அவரைக் குறித்து இப்போது புதிதாக என்ன என யோசிக்கலாம்.நம்முடைய கிருஷ்ணாவதாரம் குறித்த தொடர்களுக்கே வேத வியாசர் தான் முன்னுரையாகவும் முகவுரையாகவும் அமைந்துள்ளார். அவரில்லாமல் பாரதமோ, பாகவதமோ இல்லை. கண்ணன் உபதேசித்த கீதையில், “அனைத்து ரிஷிகளிலும் நான் வேத வியாசனாக இருக்கிறேன்!” என்று கூறி இருப்பதிலிருந்தே இவரின் மகத்துவம் நமக்குப் புரியவரும். கிருஷ்ணனின் வாழ்க்கையும் அவன் சாதித்த சாதனைகளுக்கும் ஊடே, அல்லது அடிப்படையில் வேதவியாசரின் வாழ்க்கையும் ஒரு மெல்லிய சரடாக ஓடுகிறது. வேத வியாசரின் பிறப்பு குறித்து மஹாபாரதத்தில் மிகக் கொஞ்சமாகச் சில குறிப்புகள் கிடைக்கின்றன. அதன் பின்னர் கிட்டத்தட்ட அறுபது முழு வருடங்களுக்குப் பிறகே அவரின் இருப்பு குரு வம்சத்தினரின் ஆசாரியராக, குருவாக, அவர்களின் நல்வாழ்க்கைக்குப் பாடுபடுவராக, வேதங்களை மீண்டும் தொகுத்து அளித்தவராக தர்மத்தின் தலைவராக, தர்மமே அவராகத் தோன்றுகிறார். அவரின் உபதேசங்களும், ஆலோசனைகளும் குரு வம்சத்துப் பெரியோரால் ஏற்கப்படுகிறது.
வேத வியாசர் மஹாபாரதப் போரை நேரில் கண்டவர்! அதன் பின்னரே அவர் இந்த மஹாபாரதத்தின் நிகழ்வுகளை எழுதினார் என்பார்கள். இதில் பல இடைச்செருகல்கள் உண்டு என்கின்றனர். ஆனால் மூலம் வியாசருடையது தான் என்பதில் எவருக்கும் கருத்து வேறுபாடு இல்லை!
இப்போதைக்கு ஆரம்பிச்சு வைச்சிருக்கேன். இதிலே முக்கியமான சிலது குறித்துப் படித்துப் புரிந்து கொண்டு மீண்டும் வருகிறேன்.

Monday, April 11, 2016

வாசுதேவக் கிருஷ்ணனுக்கே வெற்றி!

சத்ராஜித்தின் தற்பெருமை, அகந்தை, தன்னம்பிக்கை, யாதவர்களைத் தன் அளப்பரிய செல்வத்தின் மூலம் அடக்கி ஆளலாம் என்று நினைத்திருந்த ஆசை, விருப்பம், அவன் சூரியக் கடவுளுக்கு மிகவும் பிடித்தமானவன் என்னும் எண்ணம் அனைத்தும் சுக்கு நூறாகச் சிதறிப் போய்விட்டது. அவன் ஒன்றுமில்லாதவனாக ஆகி விட்டான். அங்கேயே அப்படியே அந்தப் புனிதக்குகையின் வாயிலில் உடல் தளர்ந்து அமர்ந்தவன் சிறு குழந்தையைப் போல் விம்மி விம்மி அழுதான். பங்ககரா மௌனமாகத் தன் தகப்பனின் துக்கத்தில் பங்கெடுத்துக் கொண்டான். தன் ஒரு கையைத் தகப்பனின் முதுகில் வைத்து தட்டிக் கொடுத்து ஆசுவாசம் செய்தான். வல்லமை மிக்கவர் என அவன் இத்தனை வருடங்களாக நம்பி வந்த அவன் தகப்பன் இப்போது உடைந்து போய் அழுவதைக் கண்டு ஆச்சரியம் அடைந்தான். மனம் உடைந்த நிலையிலேயே சத்ராஜித் துவாரகைக்குத் திரும்பினான். அவனுக்குள்ளே ஆழ் மனதிலோர் பயம் இருந்துகொண்டிருந்தது. அது இன்னொரு மஹா பிரளயம் வெகு விரைவில் ஏற்படப் போகிறது என்பதும், இது வரை அவன் அனுபவித்தது எல்லாம் ஒன்றுமே இல்லை என்னும் வண்ணம் அது பயங்கரமாக இருக்கப் போகிறது என்றும் எண்ணம் அவன் மனதில் தோன்றியது. ஆகவே அவன் செய்வதறியாது தவித்தான். பகல் முழுவதும் இவற்றை எல்லாம் நினைத்து நினைத்துக் கவலை அதிகம் ஆனது எனில் இரவுகள் அவனைக் கண் மூடவிடவில்லை. கண்ணை மூடித் தூங்க முடியாமல் தவித்தான். அவனுடைய நித்திய கர்மானுஷ்டானங்களை முற்றிலும் மறந்தான். ஹூம்! அவன் என்ன செய்து என்ன! இந்த நன்றி கெட்ட சூரிய பகவான் அவனை இப்படி ஏமாற்றி விட்டானே!

அவனுடைய மனைவியரில் மூத்தவள் ஆன துவாரவதி என்பவள் பயந்து கொண்டே வந்து அவன் முன்னால் உணவுகள் நிரம்பிய தட்டுக்களை வைப்பாள்; அதன் பின்னர் அவள் பின் வாங்கி மௌனமாக அவன் சாப்பிடுவானா என்பதை எதிர்பார்த்துக் காத்திருப்பாள். ஆனால் அவனோ அவளை லட்சியம் செய்யாமல் அவமதிப்பான். இப்படியாகவே நாட்கள் கழிந்து கொண்டிருக்கையில் தான் இன்று காலை அவன் எழுந்திருக்கும்போதே மதியம் ஆகி விட்டிருந்தது. அவனுக்குள் ஏதோ நடக்கப் போகிறது என்னும் எண்ணம் ஏற்பட்டு முடியும் முன்னரே வீட்டின் வெளி வாயிலுக்கருகே ஏதோ குழப்பமான வாதங்கள், பதில் வாதங்கள் என்று கேட்டன. ஒரே சமயத்தில் பல குரல்கள் கேட்டதால் அவை தெளிவற்றுக் கேட்டன. சத்ராஜித்திற்குக் கோபம் ஏற்பட்டு, அங்கே என்ன சத்தம் என்று கேட்டு அந்தக்குரல்களை ஒருவழியாக அடக்க வேண்டி வாயைத் திறந்தான். அவன் வாயிலிருந்து சொற்கள் வரும்முன்னரே அவை திரும்ப அவன் வாயினுள்ளேயே சென்றுவிட்டன. அவன் தொண்டை அடைத்துக் கொண்டது போல் உணர்ந்தான். உள்ளே நுழைந்தது சத்யபாமா!

அதுவும் எப்படி? தன்னுடைய சிற்றன்னைகளைத் தள்ளி விட்டுவிட்டு உள்ளே நுழைந்திருக்கிறாள். சிற்றன்னையின் மகன்களும், மற்றோரும் அவளைத் தடுக்கும்போது அனைவரையும் மீறிக் கொண்டு உள்ளே நுழைந்திருக்கிறாள்! இங்கே இருந்தபோது கொஞ்சம் குண்டாகவே இருந்தாள் சத்யபாமா. ஆனால் இப்போதோ கடந்த சில நாட்களில் அவள் எதிர்கொண்ட கடுமையான உழைப்பினாலும், சிரமங்களினாலும் நன்றாக இளைத்துத் துவண்டு பார்க்கவே தனி கம்பீரமும், அழகும் பொருந்தி எழிலாகத் தெரிந்தாள். அவள் உடுத்தியிருந்ததோ பண்டிகைக்கால உடை. மிக விலை உயர்ந்த உடைகளை உடுத்தி இருந்தாள். உடல் முழுவதும் ஆபரணங்கள்! கைகளில் ஒவ்வொரு விரலிலும் ஒரு மோதிரம்!அவள் இடையைக் கற்களினால் ஆன மணிமேகலை அலங்கரித்தது. எல்லாவற்றுக்கும் மேல் அவள் நெற்றியைச் சிந்தூரம் அலங்கரித்தது! சத்ராஜித்திற்குத் தூக்கி வாரிப் போட்டது. அப்படி எனில்! சீச்சீ! சீச்சீ! சத்ராஜித்தின் கண்களையே அவனால் நம்பவே முடியவில்லை! கண்களை மூடி மூடிப் பின்னர் மீண்டும் திறந்து பார்த்தான். அந்தச் சிந்தூரம் அவள் முன் நெற்றியிலே பிரகாசமாக ஒளிர்விட்டது. சத்ராஜித்தின் முகம் பயங்கரமாக மாறியது. வந்தது சத்யா என்பதும், அவள் இருந்த நிலையையும், உடுத்தி இருந்த உடையையும் பார்த்த சத்ராஜித்தின் கோபம் தலைக்கு மேல் ஏறியது!

சத்யபாமாவோ கவலையே படவில்லை. சிறிதும் பயப்படவும் இல்லை. தன் தந்தைக்கு எதிரே கீழே விழுந்து வணங்கி அவர் பாதங்களைத் தொட்டுத் தன் கண்களில் ஒற்றிக் கொண்டாள். ஆனால் அப்படிச் செய்யவிடாமல் சத்ராஜித் பாதங்களை உள்ளுக்கிழுத்துக் கொண்டான். அவன் அவளைத் தள்ளியே வேகம் ஏதோ நாகப்பாம்பு அவனைக் கொத்தி விட்டாற்போன்ற பதட்டத்துடன் இருந்தது. சத்யபாமா அசராமல், “தந்தையே, உங்கள் ஆசிகள் எனக்குத் தேவை!” என்றாள். அப்போது பங்ககரா உள்ளே நுழைந்து தன் ஒரு கரத்தால் தகப்பனைத் தொட்டு ஆறுதல் கூறியவண்ணம் அமர்ந்தான். ஆசிகளைக் கேட்ட சத்யபாமாவைப் பார்த்த சத்ராஜித்தின் முகம் அஷ்டகோணலாக மாறியது. பற்களைக் கடித்த வண்ணம் அவளைப் பார்த்து உறுமினான். தன் கண்களை உருட்டிக் கொண்டு அவளைப் பார்த்து, “ எங்கே வந்தாய்? துஷ்டப்பெண்ணே! வெட்கம் கெட்டவளே! வெளியே போ! நீ ஒரு விஷமுள்ள பாம்பு! இத்தனை வருடங்களாக ஒரு நன்றிகெட்ட பாம்பை நான் வளர்த்து வந்திருக்கிறேன். நீ என்னைத் தொடாதே! உன்னுடைய ஸ்பரிசம் கூட விஷமுள்ளது. வெளியேறு இங்கிருந்து! இந்தக் குலத்தையும் குலத்து முன்னோர்களையும் அவமதித்து விட்டாய்! குடும்ப மானமே உன்னால் சீரழிந்துவிட்டது!” என்று கத்தினான். சத்யபாமா முழந்தாளிட்டு அமர்ந்து கொண்டு தன் கைகளைக் கூப்பிக் கொண்டாள். எங்கே அவள் மீண்டும் தன்னைத் தொட்டுவிடுவாளோ என நினைத்தாற்போல் சத்ராஜித் கொஞ்சம் பின்னே நகர்ந்து கொண்டான். பின்னர் மீண்டும் தன் கண்களைக் கோபமாக உருட்டினான்.

“ஹூம், வெட்கமில்லாதவளே! நீ அந்த மோசக்காரன் சாத்யகியுடன் ஓடி இருக்கிறாய்! உன்னைக் கட்டி வைத்துச் சாட்டையால் வீற வேண்டும். இங்கே எதற்கு இப்போது வந்தாய்? என்னை அவமதித்த சாத்யகனின் மகனை என் சம்மதமும்  அனுமதியும் இல்லாமல் மணந்து கொண்டு விட்டேன் என்பதைச் சுட்டிக்காட்டி என்னை மீண்டும் அவமானம் செய்யவா வந்தாய்? பொல்லாத பெண்ணே!”

“இல்லை, தந்தையே, இல்லை. நான் சாத்யகியை மணக்கவில்லை!”

“என்ன, பொய்யா சொல்கிறாய்? செய்வதெல்லாம் செய்து விட்டுப் பொய் வேறேயா ஏன் நீ பண்டிகைக்கால உடையை அணிந்து வந்திருக்கிறாய்? உனக்குத் திருமணம் ஆகவில்லை என்றா சொல்லப் போகிறாய்? உன்ன் நெற்றிச் சிந்தூரம் சொல்கிறதே! இந்த உடைகளையும், ஆபரணங்களையும் உனக்கு வேறு யார் அளித்தார்கள்? வெட்கமில்லாமல் அலைகிறாயே? சாத்யகியை மணக்கவில்லை எனில்…நீ………. சொல்லக் கூட எனக்கு நாக்குக் கூசுகிறது! வெட்கமில்லாத பெண்களைப் போல் ஆரம்பித்து விட்டாயா? சே! உன்னைப் பார்ப்பதே பாவம்!”

சத்யபாமாவின் கண்களில் நீர் திரண்டது. கண்ணீர் அவள் கன்னங்களின் வழியே உருண்டோடியது. “தந்தையே, என்னைப் பார்த்து நீங்கள் அப்படிச் சொல்லலாமா? ஏன் சொன்னீர்கள் தந்தையே! தந்தையே, கொஞ்சம் பொறுமையாக நான் சொல்வதைக் கேளுங்கள். நான் மணந்திருப்பது சாத்யகியை அல்ல. வசுதேவரின் அருமைக்குமாரன் ஆன வாசுதேவக் கிருஷ்ணனைத் தான் நான் திருமணம் செய்து கொண்டிருக்கிறேன். ஆம், என்னை மணந்து கொண்டது அவர் தான். சர்வ வல்லமை பொருந்திய வீர, தீர சாகசங்களைச் செய்த, இனியும் செய்யப் போகும் வாசுதேவக் கிருஷ்ணன் தான் என் கணவர்!”

“என்ன? வாசுதேவனா? கிருஷ்ணனா? என் ஜன்ம வைரியா? பொய்யை மீண்டும் மீண்டும் சொல்லாதே பாமா! மேலும் மேலும் பொய் சொல்லிக்கொண்டு இருக்காதே! நீ ஓர் பொய்யான பொய்களினால் நிறைந்த பொல்லாத பெண்!”

“இல்லை, தந்தையே இல்லை! என் விருப்பமே அவரை மணப்பது ஒன்று மட்டுமே! அதைத் தாங்கள் அறிந்திருக்கவில்லை. ஆர்யபுத்திரரான வாசுதேவக் கிருஷ்ணன் தானும் என்னுடன் வந்து உங்களிடம் ஆசிகளை வாங்கவேண்டும் என்றே விரும்பினார். ஆனால் அவர் அப்படி வந்திருந்தால் உங்களைப் பார்த்துத் தன் வெற்றியைக் கொண்டாடவே வந்திருப்பதாக நீங்கள் நினைப்பீர்கள். உங்கள் மனம் வருந்தச் செய்யவேண்டாம் என்றே அவர் வரவில்லை!” என்றாள் பாமா.

“வாசுதேவன்! வசுதேவனின் புத்திரன் வாசுதேவன்! உன் கணவன்! அந்தப் பொல்லாத மோசமான மனிதனா உன் கணவன்? என்னைக் கொன்றுவிடுவதாகக் கொக்கரித்தவன் உன் கணவனா? அவன் இன்னமும் உயிருடன் தான் இருக்கிறானா? இப்போது திரும்பி இங்கே துவாரகைக்கு வந்து விட்டானா? ஹூம், ச்யமந்தகத்தைத் திருடி எடுத்துக் கொண்டு போனவன் அவன் தானே! அதோடு அதைக் கண்டுபிடிக்கவில்லை எனில் தன்னைத் தானே நெருப்புக்கு அர்ப்பணிப்பதாகப் பொய்யான வாக்குறுதியும் கொடுத்தானே! இப்போது எந்த முகத்தோடு இங்கே வந்திருக்கிறான்? ஏமாற்றுக்காரன்! நய வஞ்சகன்! நீ இன்னமும் மோசமான வெட்கம் கெட்ட பெண்! அவனைப் போய் மணந்திருக்கிறாயே! அவன் ஒரு திருடன்! என்னுடைய மோசமான கடுமையான எதிரி! ஜன்ம வைரி!”

சத்யபாமா மெல்லப் புன்னகை புரிந்தாள். பின்னர் தந்தையிடம், “ஆர்யபுத்திரர் வசுதேவ குமாரர், வாசுதேவர் ச்யமந்தகமணியைத் தேடிக் கண்டுபிடித்து விட்டார், தந்தையே!அது ஜாம்பவான் என்னும் கரடிகளின் அரசனிடம் இருந்தது. ஜாம்பவானுக்கும் உங்களுக்கும் வெகுநாட்கள் நட்பாமே! ச்யமந்தகத்தை  வாசுதேவரிடம் கொடுத்த ஜாம்பவான் இதை உங்களுக்கே பரிசாக அளிக்கச் சொல்லிக் கேட்டுக் கொண்டார். வாசுதேவரின் விருப்பமும் அதுவே! இதோ ச்யமந்தகம் தந்தையே! இந்தாருங்கள்!” என்ற வண்ணம் தன் அரைக்கச்சையிலிருந்த ச்யமந்தகத்தை எடுத்துத் தந்தையிடம் கொடுத்தாள் பாமா. பின்னர் மேலும் பேசினாள். “தந்தையே! அவர், வாசுதேவர் இப்போது என் கணவர், ச்யமந்தகத்தை என் மூலம் உங்களுக்கு அனுப்பி வைத்துள்ளார். இனியாவது நீங்கள் பழைய விஷயங்களை எல்லாம் மறந்து விட்டு எங்களையும் மன்னித்து ஏற்றுக் கொண்டு எங்கள் எதிர்கால வாழ்க்கைக்காக ஆசிகளை வழங்க வேண்டும் என்பதே அவர் விருப்பம். என் விருப்பமும் அதுவே!”

சத்ராஜித் நம்பிக்கையே இல்லாமல் ச்யமந்தகத்தை எடுத்துப் பார்த்தவன், அது உண்மையாகவே ச்யமந்தகமணிதான் என்பதை ஊர்ஜிதமும் செய்து கொண்டான். அவன் உடல் நடுங்கியது. அதுவரை இருந்த கட்டுப்பாடுகளெல்லாம் தளர்ந்து போய் அவன் நிலை தடுமாறினான். சத்ராஜித் அவன் அமர்ந்திருந்த ஆசனத்தில் இருந்து எழுந்தான். மொத்த உடலும் நடுங்கியது. கண்கள் சிவந்தன. ரத்தத்தைக் கண்கள் வழியாகக் கக்கிவிடுவானோ என்னும்படிக் கண்கள் சிவந்து காணப்பட்டன. அவனுடைய மொத்தக் கோபமும் அடங்கும்படியாக அல்லது அந்தக் கோபத்தைக் காட்டும்படியாக எதுவானும் கிடைக்குமா என நினைப்பவன் போலச் சுற்றும் முற்றும் பார்த்தான். சத்யாவின் கைகளிலிருந்து ச்யமந்தகத்தைப் பிடுங்கிக் கொண்டவன் அதே வேகத்தோடு அதை அவள் மேல் விட்டெறிந்தான். சத்யபாமா தன் உடலைக் கொஞ்சம் நெளித்து ஒருபுறமாக ஒதுங்கிக் கொள்ள அது அவளைத் தாண்டிக் கொஞ்சம் தூரத்தில்போய் விழுந்தது. சத்ராஜித் எழுந்தான், உணவுகள் நிறைந்த தட்டை காலால் உதைத்து அப்புறப்படுத்தினான். பின்னர் அந்த அறையிலிருந்து வெளியேறினான்! அவன் வாய், “உன்னை நான் சபிக்கிறேன்! உன்னை நான் சபிக்கிறேன்!” என்றே முணுமுணுத்தது


இத்துடன் கண்ணன் வருவான் தொடரின் ஐந்தாம் பாகம் முற்றுப் பெற்றது. இனி வரப் போவது ஆறாம் பாகம்! விரைவில்!


Sunday, April 10, 2016

சத்ராஜித் மனம் கொதிக்கிறான்!

துவாரகை! சத்ராஜித்தின் மாளிகை! மதிய நேரம்! இரவு பூராவும் தூங்காமல் சிந்தனைகளில் ஆழ்ந்து போயிருந்த சத்ராஜித் காலையில் தான் தூங்கினான். ஆகவே அன்று எழுந்து கொள்ளவே அவனுக்கு மதியம் ஆகிவிட்டது! தூக்கிவாரிப் போட்டு எழுந்த அவன் சுற்றிலும் பிரகாசமான மதிய வெளிச்சத்தைப் பார்த்துத் தன் கண்களைத் தேய்த்துவிட்டுக் கொண்டான். தன் நினைவுகளை எல்லாம் மீட்டுக் கொண்டு வந்தான். இந்தச் சில வாரங்களில் அவன் முற்றிலும் புதியதொரு மனிதனாகி விட்டிருந்தான். அவனை அவனாலேயே இப்போது அடையாளம் காண இயலாத வண்ணம் மாறிப்போயிருந்தான். அவனுக்குத் தூக்கம் இல்லை; கடந்த சிலவாரங்களில் பல இரவுகளைத் தூங்காமலேயே கழித்திருக்கிறான். விடியற்காலையில் தான் சிறிது தூங்குவான். ஆனால் அந்தத் தூக்கமும் கெட்ட கனவுகளினால் தடைபெறும்! இப்போதெல்லாம் அவனுக்குப் பசி இருந்தாலும் உணவில் நாட்டம் இல்லை. சுத்தமாக உணவருந்தும் எண்ணமே தோன்றுவதில்லை! எதைப் பார்த்தாலும் எரிச்சல் மிகுந்து வந்தது! அவனுடைய மனைவிமாரைப் பார்க்கவோ, குழந்தைகளைப் பார்க்கவோ மனதில்லாமல் வெறுத்தான். அவர்களைக் கண்டாலே எரிச்சல் மிகுந்தது. அவனருகே குடும்பத்து நபர்கள் எவர் வந்தாலும் அவர்களைக் கண்டால் கூச்சல் போடுவான் சத்ராஜித்! அதற்குப் பயந்தே எவரும் அவனருகே வருவதில்லை.

மதிய நேரங்களில் விழித்திருந்தாலும் அவன் அறைக்கருகிலிருந்து தாழ்வாரத்தில் ஓர் ஆசனத்தில் அமர்ந்த வண்ணம் எங்கோ சூன்யத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருப்பான். கண்கள் என்னமோ திறந்திருக்கும். ஆனால் காட்சிகள் மனதில் பதியாது! திரும்பத் திரும்ப அவன் கண்கள் முன்னர் ஒரே காட்சிகள் வந்து போய்க் கொண்டிருந்தன! கிருஷ்ணன் சத்ராஜித்திடம் ச்யமந்தகத்தைக் கேட்கிறான்; சத்ராஜித் மறுக்கிறான். பதிலாகக் கிருஷ்ணனைக் கழுத்தை நெரித்துக் கொல்ல முயல்கிறான். பின்னர் தைரியமாக உக்ரசேனரைச் சென்று சந்திக்கிறான். அவரிடம் ச்யமந்தகத்தைத் திருடியது கிருஷ்ணன் தான் என்று பொய் சொல்லிக் கிருஷ்ணனுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்க முயல்கிறான். அப்போது கிருஷ்ணன் சபதம் செய்கிறான். ச்யமந்தகத்தைத் தான் தேடிக் கண்டுபிடித்துத் திரும்பக் கொண்டுவருவதாகவும், இல்லையேல் தான் தீக்குளிப்பதாகவும் சபதம் செய்கிறான். அதன் பின்! அதன் பின்! பின்னர்!

சத்ராஜித்திற்கு மானம் போகும்படியான நிகழ்வு நடந்துவிட்டது! அவன் மகள் அவனுடைய அருமை மகள் சத்யபாமா அவனை ஏமாற்றினாள். சொந்தத் தந்தையை ஏமாற்றிவிட்டாள். பாவிப் பெண்! வெட்கம் கெட்டவள். பொறுப்பற்றவள்! அவன் சாத்யகன் தன் மகன் யுயுதானா சாத்யகிக்கு பாமாவை மணமுடிக்க விரும்பாமல் தட்டிக் கழித்ததற்குப் பழி வாங்க விரும்பினான். சாத்யகனுக்கு ஓர் பாடம் புகட்ட விரும்பினான். ஆனால் அதற்குள்ளாக நடந்தது என்ன? அவன் அருமை மகள் அந்த சாத்யகியுடனேயே ஓடிப் போய்விட்டாள்! தந்தையை ஏமாற்றிவிட்டுச் சென்று விட்டாள்! இந்த அவமானத்தை எத்தனை வருஷங்கள் ஆனாலும் சத்ராஜித்தால் சகிக்க முடியாது! சொல்லொணா அவமானத்தில் ஆழ்த்திவிட்டாள் பாவிப் பெண்! ஆனால் அவன் பத்திரமாக இருக்கட்டும் என்று நினைத்துத் தன் சகோதரன் பிரசேனனிடம் கொடுத்த ச்யமந்தகம்? அது பத்திரமாக இருக்கிறதா? பல விசித்திரமான சம்பவங்கள் அன்றோ நடந்து விட்டன! சூரியனால் அளிக்கப்பட்ட அந்த ஒப்பற்ற விலை உயர்ந்த ச்யமந்தகமணிமாலை பத்திரமாக இருக்க வேண்டும் என்பதே அவன் விருப்பம். ஆகவே கிருஷ்ணன் அதைத் திருடிச் சென்றுவிடுவானோ என்னும் எண்ணத்தில் பிரசேனனிடம் கொடுத்துப் புனிதக் குகையிலேயே அதை வைத்து வழிபட்டு வருமாறு சொல்லி அனுப்பினான்.

ஆனால் பிரசேனனுடன் அவன் அனுப்பி வைத்த அவன் ஊழியன் திரும்பி வந்து சொன்ன கதையைக் கேட்ட சத்ராஜித்துக்கு ஏற்பட்ட நடுக்கம் இப்போது அதைக் குறித்து யோசிக்கையிலும் ஏற்பட்டது. பிரசேனன் ஒரு சிங்கத்தால் கொல்லப்பட்டான் என்பதைத் தான் அந்த ஊழியன் சொன்னான். இதைக் கேட்ட சத்ராஜித் தன் மகன் பங்ககராவுடன் அந்தக் காட்டிற்குப் பயணம் மேற்கொண்டான். அங்கே போய்ப் பார்த்தால் பசியுடன் பல பிணந்தின்னிக் கழுகுகள் எஞ்சி இருந்த பிரசேனனின் உடலைக் கொத்திக் கொண்டிருக்கும் பயங்கரக் காட்சியைக் கண்டான். ஒரு சில குறைந்த அடையாளங்களினாலும், உடுத்தி இருந்த துணியின் மூலமே அது பிரசேனன் என்று தெரிந்தது. அந்த அளவுக்கு அவன் உடலைக் கொத்தித் தின்றிருந்தன கழுகுகள். இதைப் பார்த்த சத்ராஜித் மனம் உடைந்து போனான். தன் தம்பியின் இந்த நிலை குறித்து வருந்திய அவன் எஞ்சிய உடலையாவது முறைப்படி கிரியைகள் செய்வோம் என நினைத்து எஞ்சிய உடல் பாகத்தைக் கைப்பற்றி அங்கேயே எரித்தான். துவாரகை வரை அவற்றைக் கொண்டு செல்ல முடியாதபடி சின்னாபின்னமாய் ஆகிவிட்டது அந்த உடல்!

அவன் ஊழியன் சொன்னது சரியே. பிரசேனன் ஒரு சிங்கத்தால் கொல்லப்பட்டிருந்தான். சத்ராஜித் ச்யமந்தகத்தை அங்குமிங்கும் புதர்களிலும் தேடினான். எங்கும் அது கிடைக்கவில்லை. பதிலாக பிரசேனனின் ஆயுதங்களும், அவனுடைய விலை உயர்ந்த அரைக்கச்சையும் மற்றும் ஒரு சில நகைகளும் பூமிக்குள்ளே எவராலோ புதைத்து வைக்கப்பட்டிருந்தது கிடைத்தது. அந்தச் சிங்கத்தின் காலடிச் சுவடுகளைப் பிடித்துக்கொண்டு முன்னேறினான் சத்ராஜித். ஆனால் அந்தச் சிங்கமும் கொஞ்ச தூரத்தில் பிணமாகக் கிடந்தது. அதையும் பிணம் தின்னிக் கழுகுகள் கொத்திக் கொண்டிருந்தன. ச்யமந்தகம் எங்கே தான் போயிற்று? இந்தச் சிங்கம் எடுத்துச் சென்றிருந்தால் அது இப்போது யாரிடம் இருக்கும்? இந்தச் சிங்கத்தைக் கரடிகள் கொன்றிருப்பதாகத் தெரிய வருகிறது. அப்போது அந்தக் கரடிகள் சிங்கத்தைக் கொன்றுவிட்டு ச்யமந்தகத்தை எடுத்துச் சென்றுவிட்டதா? அங்குமிங்கும் கூர்ந்து பார்த்த சத்ராஜித்திற்குப் பல மனிதர்கள், மிருகங்கள் அங்கே வந்து சென்றிருப்பது காலடிகளிலிருந்து தெரிந்தது. அவற்றைக் கவனமாக ஆராய்ந்ததில் இந்தச் சிங்கத்தைக் கொன்ற கரடிக்கு ஒரு நண்பன் கூடவே இருந்திருக்கிறான் என்பது தெரிந்தது. அது மனிதனா அல்லது மிருகமா எனப் புரியாவண்ணம் காலடிச் சுவடுகள் குழப்பமாக இருந்தன. அப்போது தான் அவனுக்கு ஜாம்பவானின் நினைவு வந்தது! ஆஹா! இவை ஜாம்பவானின் காலடித் தடங்களா? அப்படி எனில் இந்தக் கரடி அவனுடைய மருமகன் கரடியாகத் தான் இருக்க வேண்டும். அதனால் தான் இந்தக் காலடித் தடங்கள் இத்தனை பெரிதாக இருக்கின்றன.

சற்று தூரத்தில் ஓர் பெண்ணின் உடையில் சில கிழிந்த பகுதிகளும் கிடைத்தன. அவை எதிரே காணப்பட்ட புதர்களுக்குள்ளிருந்து கிடைத்தன. இந்தப் புதர்களைத் தாண்டி அப்புறம் செல்ல அவள் முயன்றிருக்க வேண்டும். அப்போது அவள் உடை கிழிந்திருக்க வேண்டும். புதர்களுக்கிடையே தெரிந்த இடைவெளி வழியாக பங்ககரா துணை வர சத்ராஜித்தும் தாண்டிக் கொண்டு அப்புறம் சென்று பார்த்தான். ஆனால், அங்கே எந்தப் பெண்ணும் காணப்படவில்லை. ஆனால் பெண்ணின் காலடித்தடங்கள் மட்டும் தென்பட்டன. அது சத்யாவின் காலடித்தடஙக்ளா? சத்யாவும் சாத்யகியும் இங்கே வரை வந்திருந்தார்களா? கிழிந்திருந்த சத்யாவுடையதாக இருந்து காலடித்தடங்களும் அவளுடையதாக இருந்தால் அந்தக் கரடிகள் அவளையும் கொன்றிருக்க வேண்டும். விட்டு வைத்திருக்காது! அல்லது சிங்கத்தைக் கொன்றுவிட்டு ச்யமந்தகத்தோடு அவன் பெண்ணையும் தங்கள் கரடி உலகுக்குத் தூக்கிச் சென்றிருக்கவேண்டும். இங்கே பெண்ணின் சடலம் ஏதும் காணப்படாததால் இரண்டாவது தான் நடந்திருக்கும். சத்ராஜித்தின் மனம் துவண்டது! மேலும் மேலும் பார்த்தான். பலருடைய காலடிச்சுவடுகள் அங்கே வந்து போயிருந்தன. அவற்றுக்கான அடையாளங்களும் தெரிந்தன. கவனமாகப் பார்த்தவன், அந்தக் காலடிச் சுவடுகளில் சில புனிதக்குகையை நோக்கிச் சென்றிருப்பதைக் கண்டான். அவற்றைப் பின் தொடர்ந்தான்.புனிதக் குகையை அடைந்தான். தான் நினைத்தது சரியாக இருந்திருக்கிறது என்பதைப்புரிந்து கொண்டான். சில மனிதர்களும், சில கரடிகளும் அந்தக் குகையில் தங்கி இருந்திருக்கின்
றனர்.

கரடி அரசனும், அவனுடைய மற்றக் கரடி நண்பர்களும் சேர்ந்து சத்யபாமாவைக் கரடி உலகுக்குத் தான் தூக்கிச் சென்றிருக்கின்றனர். அங்கே செல்ல வேண்டியது தான் என முடிவெடுத்தான் சத்ராஜித்! ஆனால்????? பல வருடங்களாக ஜாம்பவானோடு அறிமுகம் ஆனதிலிருந்து அவன் மகள் ரோகிணியைத் தன் மகன் பங்ககராவுக்கு மணமுடித்துக் கொள்வதாக ஜாம்பவானுக்கு வாக்குக் கொடுத்திருந்தான் சத்ராஜித்! அதை ரோகிணி பருவம் அடைந்ததிலிருந்தே ஜாம்பவானும் சத்ராஜித்துக்கு அவ்வப்போது நினைவூட்டி வந்தான். அவனும் மறுக்காமல் அதை உறுதிமொழியாகவே கொடுத்து வந்தான். அப்படித் தான் ஜாம்பவானை அந்த நதிப்பிரவாகத்திலிருந்து தங்கம் கலந்த மணலை எடுத்துவரச் செய்ய அவனால் இயன்றது. இப்படியான வாக்குறுதிகளின் மூலமே ஜாம்பவானிடமிருந்து அந்தத் தங்கத் துகள்களைப் பெற முடிந்தது. அவற்றை ச்யமந்தகத்திற்கு அர்ப்பணிப்பதாகச் சொல்லிவிட்டு துவாரகைக்கு எடுத்துச் செல்ல முடிந்தது. ஜாம்பவானும் சத்ராஜித்தை முழு மனதுடன் நம்பினான். சத்ராஜித்தும் பங்ககராவும் நகர நாகரிகங்களில் மூழ்கியவர்கள் என்பதும், தானும் ரோகிணியும் நாகரிக வாழ்க்கை குறித்து அறியாத காட்டுமிராண்டி வாழ்க்கை நடத்துபவர்கள் என்பதையும் ஜாம்பவான் உணர்ந்ததாகத் தெரியவில்லை. ஏனெனில் அந்த அளவுக்கு அவன் சத்ராஜித்தின் வாக்குறுதியை நம்பினான். பங்ககரா ஓர் அதிரதியாகத் திகழ்ந்தான். பல்வேறு போர்ப்பயிற்சிகளிலும் நிபுணன். அவன் வழிமுறைகள் அவன் தேர்ந்தெடுத்த வல்லுனன். அப்படிப் பட்டவன் தன் காட்டுமிராண்டி மகளை மணப்பானா என ஜாம்பவான் நினைத்தும் பார்க்கவில்லை.

இதை எல்லாம் யோசித்த சத்ராஜித் எப்படி இருந்தாலும் இப்போது பங்ககரா தன்னுடன் இருப்பது தனக்குப் பாதுகாப்பும் வலுவும் சேர்க்கும் என்று நினைத்தான். ஆகவே இப்போதே கரடி உலகுக்குப் போய் ரோகிணியை பங்ககராவுக்குத் திருமணம் செய்து வைத்துவிட்டுப் பதிலுக்குச் சீதனமாக ச்யமந்தகத்தைத் திரும்பப் பெற்றே ஆகவேண்டும். ஆகவே அவன் அங்கே தெரிந்த அந்த நதிப்பிரவாகம் ஆரம்பிக்கும் இடத்துக்குச் சென்று குகைக்குள் மேலே நுழைய யத்தனித்தான். ஆனால்! துரதிர்ஷ்டவசமாக மேல் குகை மூடிக் கிடந்தது. அதன் வழியாகத் தான் ஜாம்பவான் இந்தப் புனிதக்குகைக்கு வந்து செல்வான். இப்போது அது மூடிக் கிடக்கிறது! அதிலும் பெரிய பெரிய பாறைகளைப் போட்டு அடைத்திருக்கின்றனர். இவற்றை அப்புறப்படுத்துவது மிகக் கடினம். தலையில் அடித்துக் கொண்டான் சத்ராஜித்! இனிமேல் கரடி உலகுக்கு அவன் செல்வது மிகக் கடினம். என்றாலும் நம்பிக்கையை இழக்காத சத்ராஜித் அந்தப் புனிதக் குகையிலேயே மேலும் இரண்டு நாட்கள் தங்கினான். ஏதேனும் அதிசயங்கள் நடக்குமா என எதிர்பார்த்தான். கரடிகளின் அரசன் ஜாம்பவான் எப்படியானும் தான் வந்திருப்பதை அறிந்து அங்கு வருவான் என நினைத்தான். ஆனால் எதுவும் நடக்கவில்லை! ச்யமந்தகம் போய்விட்டது! அவன் மகள் சத்யபாமாவும் போய்விட்டாள்! கரடி உலகுக்குப் போக முடியாதபடி வழியும் அடைக்கப்பட்டு விட்டது. பல வருடங்களாக அவன் ஜாம்பவானிடமிருந்து பெற்று வந்த தங்கத் துகள்கள், சின்னச் சின்ன தங்க மணிகள் அனைத்துக்கும் இப்போது மூடுவிழா நடந்து விட்டது. இனி அவன் ஜாம்பவானையும் பார்க்க முடியாது! ச்யமந்தகமும் அவனிடம் இல்லை! தங்கமும் இனி கிடைக்காது!