Thursday, April 7, 2016

கருநிறக்கடவுளின் இருப்பிடத்தில் கிருஷ்ணன்!

அவர்கள் நால்வரும், அந்த நதிப் பிரவாகத்தைக் கடந்து கொண்டிருந்தனர். ஓர் இடத்தில் நின்று தங்கள் முகம், கை, கால்களைக் கழுவிக் கொண்டு வயிறு நிரம்பும் மட்டும் நீரையும் அருந்தினர். இனிமையாயும், தண்மையாயும் இருந்த நீர் அவரவர் மன அழுத்தத்தைக் குறைத்தது. அதன் பின்னர் நதிக்கரையோரம் ஓடிய பாதையில் நால்வரும் சென்றனர். சத்யா கிருஷ்ணனிடம், “எங்களை எங்கே அழைத்துச் செல்கிறீர்கள், பிரபுவே? எங்கே போகிறீர்கள்?” என்று வினவினாள். கரடிகள் உலகத்தை முழுவதுமாய் மூடி இருந்த உயர்ந்த மலைச்சிகரங்களைச் சுட்டிக் காட்டினான் கிருஷ்ணன். அவர்கள் இப்போது மேலே ஏறத் தொடங்கி விட்டனர்.

மேலே செல்லும் பாதை மிகவும் வழுக்கியதோடு அல்லாமல் செங்குத்தாகவும் இருந்தது. கிருஷ்ணன் ரோகிணிக்கு உதவிய வண்ணம் பாதையின் முன்னே செல்ல சாத்யகி பாமாவைக் கவனித்துக் கொண்டு பின் தொடர்ந்தான். விடியும் வேளையில் அவர்கள் மலை உச்சியில் ஓர் சமவெளியை அடைந்தனர். அந்தப் பாதை அந்தச் சமவெளியை ஊடுருவிச் சென்றது. அவர்கள் அங்கே சிரிது நேரம் தங்கி ஓய்வு எடுத்துக் கொண்டு பின்னர் மேலும் பயணத்தைத் தொடர முடிவு செய்தனர். கிருஷ்ணன் ரோகிணியிடம் திரும்பி, “ஜாம்பவதி, நீ இப்போது கரடிகள் உலகை விட்டு வெளியே வந்துவிட்டாய்! இப்போது உன் தந்தை சொன்னதை எல்லாம் மறந்துவிடு! இந்த உலகுக்கு ஏற்ப வாழக் கற்றுக் கொள். இப்போது உன் நீண்ட கூந்தலை சத்யா வாரிச் சிடுக்கெடுத்துப் பின்னிவிடுவாள். ஆகவே இனி மேலும் மலை ஏறுகையில் அந்தக் கூந்தலால் உனக்குத் தடை ஏதும் ஏற்படாது!” என்றான்.

“என்ன? என் கூந்தலை வாரி முடிவதா? பின்னுவதா?” என்று ஆச்சரியத்துடன் கேட்டாள் ஜாம்பவதி. இதுவரை இல்லாத ஓர் அதிசயம் போலவும், தான் ஆடையின்றி இருந்ததைப் போலவும் உணர்ந்தாள் அவள். கிருஷ்ணனோ விடாமல் சத்யபாமாவிடம் திரும்பி, “தலையை வாரி முடித்ததும், இவள் கொஞ்சமாவது சகித்துக் கொள்ளும்படி இருப்பாள், இல்லையா?” என்று கேலியாகக் கேட்டான். அதைப் புரிந்து கொண்ட சத்யாவும், “ஆம்,பிரபுவே! தலையை வாரினால் இவளைக் கொஞ்சம் சகித்துக்கொள்ளலாம்!” என்று குறும்புப் புன்னகையுடன் கூறிய வண்ணம் அவளும் அந்த விளையாட்டில் பங்கெடுத்துக் கொண்டாள். “சாத்யகி, உன் தலைத் துணியைக் கொடு! இந்தப் பெண் அதை மேலாடையாக அணியட்டும்! சத்யா அதற்கு உதவுவாள்!” என்றான் கிருஷ்ணன் மேலும்.

சத்யபாமாவும் கிருஷ்ணன் சொன்னபடி செய்தாள். ரோகிணியின் தலையை வாரிச் சிக்கெடுத்து முடிந்தாள். ரோகிணிக்கு பயத்திலும் விதிர்விதிர்ப்பிலும் முகம் வெளுத்துப் போய் விட்டது. ரோகிணியின் மேலாடையாக சாத்யகியின் தலையில் கட்டும் உருமால் மாறியது. தன் உடலை இப்படி மூடிப் பழக்கமே இல்லாத ரோகிணி இது எப்படியோ இருந்தது. ரோகிணிக்குப் பணிவிடைகள் செய்து கொண்டிருந்த சத்யபாமாவின் முகத்தையே கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்த கிருஷ்ணனுக்கு அவள் மனம் புரிந்தது. அவளைத் தனக்குள்ளாக அளவிட்டுக் கொண்டு இருந்தான். அவள் மனதில் எப்படிப் பட்ட சிக்கல்களும், சிடுக்குகளும் நிறைந்த எண்ணங்கள் ஓடுகின்றன என்பதையும் புரிந்து கொண்டான்.

சத்யபாமாவின் தோள்களின் மேல் அன்புடன் கை வைத்த வண்ணம், “சத்யா, நீ வெறி பிடித்தாற்போல் அலறுவதில்லை! எதற்கும் கலங்குவதில்லை! என்றெல்லாம் எனக்கு உறுதி மொழி கொடுத்திருக்கிறாய். நாம் துவாரகையை அடையும் வரை நீ அதைக் கடைப்பிடித்துவிடு! அதன் பின்னர் உன் இந்த உறுதிமொழியிலிருந்து உன்னை நான் விடுவிக்கிறேன். அதுவரை முடியாது!” என்றான் வேடிக்கையாக! சத்யபாமாவின் கண்கள் தளும்பின. “பிரபுவே, நாம் துவாரகையை அடைந்ததும்………” என்று ஆரம்பித்தவள் மேலே பேச முடியாமல் உதடுகள் நடுங்க அழ ஆரம்பித்தாள். ஆனால் கிருஷ்ணனோ அதைப் பார்த்துச் சற்றும் கலங்காமல் ஒரு குறும்புக்காரச் சிறுவனைப் போல் நகைத்தான். அதன் பின்னர் நால்வரும் மீண்டும் தங்கள் பயணத்தை ஆரம்பித்தனர். அப்போது கிருஷ்ணன் அவர்களிடம் சொன்னான். “இந்தப் பகுதியில் ஏறுவது மிகவும் கடினமான ஒன்று. பாதை மிக மிகச் செங்குத்தாக இருக்கும். அவ்வளவு எளிதில் இந்தப் பாதையில் நம்பிச் செல்ல முடியாது! சாத்யகி, உன் வில்லையும் அம்புகளையும் எடுத்துக் கொண்டு முன்னே செல்! நான் சொன்னால் தவிர அவற்றை எக்காரணம் கொண்டும் பயன்படுத்தாதே!” என்றான்.

“ஓ, ஓ, சரிதான் கிருஷ்ணா!” என்றான் சாத்யகி. அவனுக்கு அவனுடைய ஆயுதங்கள் முக்கியமாய் வில்லும் அம்புகளும் வந்து சேர்ந்ததுமே மனதிலும் உடலிலும் அசாதாரண பலம் கூடி விட்டது. பழைய கலங்காத சாத்யகியாக மீண்டும் மாறி விட்டான். “ஹூம், அந்தக் கருநிறக்கடவுள் மட்டும் என் எதிரே வரட்டும்! எனக்குத் தெரிந்ததை எல்லாம் காட்டி அவரை ஒரு கை பார்த்துவிடுகிறேன்.” என்றான் சாத்யகி. அதற்குக் கிருஷ்ணன் கிசுகிசுப்பாக, “நாம் கருநிறக் கடவுளைச் சந்திக்கையில் அவரை எதிர் கொள்ள ஓர் வழியை நிச்சயம் கண்டு பிடிக்கலாம். ஆனால் அதற்கு முன்னர் நீ உன் ஆயுதங்களைப் பயன்படுத்திவிடாதே! எதற்கும் அவசரப் படாதே! இப்போதைக்கு இந்தச் செங்குத்தான மலைப்பாதையில் அதி கவனமாக நாம் மேலேற வேண்டும். சாத்யகி, நீ முன்னே செல்! ரோகிணி, நீ சாத்யகியின் கைகளைப் பிடித்த வண்ணம் மேலேறு. சத்யா, நீ நடுவே வா! ஒரு கையை ரோகிணியிடமும் இன்னொரு கையை என்னிடமும் கொடு! நான் அனைவருக்கும் கடைசியில் வருகிறேன். நாம் ஓர் மனிதச் சங்கிலியைப் போல் ஒருவர் கையை ஒருவர் பிடித்த வண்ணம் மேலேறுவோம். என்ன நடந்தாலும் அவரவர் கைகளை விட்டு விலக வேண்டாம். திடமாக நடக்கவும். இல்லை எனில் நாம் கீழே பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்துவிடுவோம். அப்படி யாருக்கானும் வழுக்கினாலோ, ஏறுகையில் நடை தடுமாறினாலோ உடன் அடுத்தவர் உதவ வேண்டும். தடுமாறுபவர்களைப் பிடித்துக் கொண்டு உதவ வேண்டும். சத்யா பலமுள்ளவாளாக இருப்பதால் ரோகிணியைத் தடுமாற்றத்திலிருந்து சுலபமாகக் காப்பாற்றலாம். அப்படி சத்யாவுக்கு ஆபத்து நேரிட்டால் நான் பின்னே வந்து கொண்டே இருக்கிறேன். உடனடியாக உதவிக்கரம் நீட்டுவேன்!”

அவர்கள் மேலே ஏற ஏற அங்கிருந்த செடி, கொடிகள், மரங்கள் ஆகியவற்றில் மாற்றங்கள் தெரிந்தன. இப்போது புதர்களும் மற்றத் தரையில் படரும் தாவரங்களும் காணப்பட்டன. மரங்களை அதிகம் காண முடியவில்லை. மேலே ஏறிக்கொண்டே இருக்கையில் திடீரென இயற்கையின் வனப்பில் மாற்றம் தெரிய ஆரம்பித்தது.  அவர்கள் ஏறி வந்த பாதை இப்போது ஓர் எரிமலைப் பாறையில் இயற்கையாகவே படிகளைப் போன்று அமைக்கப்பட்டிருந்த அகலமான இடத்தில் கொண்டு விட்டது. அகலமான படிகளாகத் தென்பட்ட அந்தப்பாறைகளில் ஏறி மேலே வந்த அவர்களுக்குச் சுற்றுப்புறத்தின் சீதோஷ்ணத்தில் மாற்றம் தென்பட்டது. ஈரம் நிறைந்த பகுதியாகத் தெரிந்தாலும் சுற்றுப்புறச் சூழ்நிலையில் வெப்பம் மிகுந்திருந்தது.  எங்கோ தூரத்தில் தண்ணீர் கொப்பளிப்பதைப் போலவும் தண்ணீர் கொதிப்பதைப் போலவும் சப்தம் கேட்டது. அவ்வப்போது மிகச் சப்தமாக ஏதோ பாம்பு சீறியது போன்ற ஓசையும் கேட்டது.

சாத்யகி துணிச்சல்காரன் தான். ஆனாலும் மேலே செல்லாமல் அப்படியே நின்று விட்டான். கிருஷ்ணனிடம், “என்ன இது, கோவிந்தா? விஷத்தன்மையுடைய நீராவியின் சப்தமா? அது என்னை எங்கோ இழுக்கிறது. கீழே தள்ளுகிறது!” என்றான் கரகரத்த குரலில். “கடவுளே, மஹாதேவா, எல்லாம் வல்லவரே! அனைவருக்கும் தலைவரே! எங்களைக் காத்து ரக்ஷியும்! ஆஹா, இது என்ன? என் கண்கள்? அவற்றில் ஏதோ நிழலாடுகின்றன! எரிச்சல் தாங்கவில்லையே! கோவிந்தா, வாசுதேவா, எல்லாம் வல்ல மஹாதேவன், தன் மூன்றவது கண்ணைத் திறந்து நம்மைப் பார்க்கிறான் என நினைக்கிறேன்.” என்றான் சாத்யகி.

அனைவரும் அங்கேயே சிறிது நேரம் நின்றுவிட்டனர். “உன் கண்களை மூடிக் கொள் ஜாம்பவதி!” என்ற வண்ணம் கிருஷ்ணன் தன் அரைக்கச்சையிலிருந்து ஒரு சின்ன பாகத் துணியைக் கிழித்து ரோகிணியின் கண்களை மூடினான். ரோகிணி நிம்மதிப் பெருமூச்சு விட்டாள். பின்னர் மெல்ல மெல்ல மேற்கொண்டு ஏறத் தலைப்பட்டனர். அவர்கள் அந்த எரிமலைப்பாறையின் கடைசிப் படியில் வந்ததும் ஏதோ மந்திரம் போட்டாற்போல் நின்று விட்டார்கள். அவர்கள் முன்னர் அந்த மலைச்சிகரத்தின் நடுப்பகுதி காணப்பட்டது. அது பார்க்க ஒரு பெரிய மிகப் பெரிய கிண்ணம் நடுவே ஒரு கூம்பு வடிவத்தை வைத்துக்கொண்டிருப்பது போல் நின்று கொண்டிருந்தது. அதிலிருந்து தான் தண்ணீர் கொப்பளிக்கும்/கொதிக்கும் சப்தம் வந்து கொண்டிருந்தது. மேலே என்ன செய்வது என்பது அவர்களுக்குப் புரியவில்லை.

ஏனெனில் அந்த மலைப்பாதை அந்தப்பெரிய பாறைக்கிண்ணத்தின் விளிம்பில் இப்போது சென்றது. ஒருவேளை அங்கிருந்து கீழே பள்ளத்தாக்கிற்குச் செல்லலாம். ஆனால் அந்தக் கொதிக்கும் நீரைக் கொண்டிருக்கும் பாறையின் விளிம்பில் எப்படிச் செல்வது? அங்கே காணக்கிடைத்த காட்சியும் அவர்கள் மூச்சையும், பேச்சையும் நிறுத்தியது. எங்கே பார்த்தாலும் கணக்கற்ற எலும்புக்கூடுகள். அவற்றில் பல மனிதர்களுடையவை! சில மிருகங்களுடையவை! பலவிதமான தோற்றங்களில் காட்சி அளித்தன. ஒருவேளை இவை அனைத்தும் கருநிறக்கடவுளுக்கு அர்ப்பணிக்கப் பட்டவர்களுடையதாக இருக்கலாம். ஆம், அப்படித் தான் இருக்க வேண்டும். ஒவ்வொரு சமயத்திலும் கருநிறக்கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட பலிகள் தான் இங்கே எலும்புக்கூடுகளாகக் காட்சி அளிக்கின்றன. அவர்கள் நால்வரும் நடுங்கினார்கள். அவர்கள் இப்போது கருநிறக்கடவுளின் இருப்பிடத்துக்கு வந்துவிட்டதையும், அதைத் தாண்டித் தாங்கள் செல்லவேண்டும் என்பதையும் உணர்ந்திருந்தனர்.


1 comment:

ஸ்ரீராம். said...

ஓ... இதை நடுவில் தவற விட்டிருக்கிறேன்.