Saturday, April 23, 2016

தந்தையிருக்குமிடம் செல்வோம், தாயே!

“ஓ, கிருஷ்ணா, கிருஷ்ணா, நீ எவ்வளவு நல்ல பையன்! புத்திசாலியும் கூட! ஆனால் ஏன் இப்படி நடந்து கொள்கிறாய்?” இம்மாதிரி ஒரு பொய்யான நம்பிக்கையைத் தன் மகன் வைத்திருப்பது அவளுக்கு தர்மசங்கடமாக இருந்தது. தன் மகனை நினைத்து வருத்தமாகவும் இருந்தது. ஒவ்வொரு நாளும் தன் மகன் இப்படியே நடந்து கொள்வதும் அதற்குத் தான் சொல்லும் எதையும் மகன் கருத்தில் கொள்ளாமல் பதில் அளிப்பதும் திரும்பத் திரும்ப இப்படியே நடந்து வருவதும்  அவள் மனதில் வருத்தத்தை உண்டாக்கியது. அந்தச் சிறுவன் கிருஷ்ணா முழு மனதோடு தன் தாயைப் பார்த்து, “அம்மா, நான் என் தந்தையிடம் செல்ல விரும்புகிறேன்.”என்று மிகுந்த ஆவலுடன் கூறினான். அவன் வயதுக்குச் சற்றும் பொருந்தாத வண்ணம் பெரிய மனிதனைப்போல் பேசியவன்  உடனே தன் தாயின் கைகளைப் பிடித்துக் கொண்டு அதற்கு அனுமதி தருமாறு கண்களாலேயே தாயை வேண்டினான். மச்சகந்தி தன் அருமை மகனை மிகவும் நேசித்தாள். அன்புடன் அவனைத் தட்டிக் கொடுத்து அணைத்து ஆறுதல் சொன்னாள்.

“மகனே, நான் எத்தனை முறை உன்னிடம் கூறி இருக்கிறேன்! நான் எப்படியப்பா உன்னை உன் தந்தையிடம் அழைத்துச் செல்ல முடியும்? அவர் எங்கிருக்கிறார் என்பதை நான் அறியவில்லையே!” என்று வருத்தத்துடன் கூறினாள். மச்சகந்தியின் இந்த வார்த்தைகளுக்கும் அந்தச் சிறுவன் தக்க பதிலை வைத்திருந்தான். “தாயே, உன்னால் அவரிடம் என்னை அழைத்துப் போக முடியவில்லை என்றாலோ, அல்லது தந்தைக்கு இங்கே வர முடியவில்லை என்றாலோ அதனால் தவறில்லை. நாம் நம் படகில் ஏறிக்கொண்டு அவரைத் தேடிச் செல்வோம். தேடிக் கண்டு பிடிப்போம். இதோ இந்த யமுனையில் பயணிப்போம். நம் தாய் இந்த யமுனை! மிகவும் கருணையுள்ளவள். நம்மை ஏமாற்ற மாட்டாள். தந்தை இருக்குமிடம் கொண்டு சேர்த்து விடுவாள்!” என்றான். மச்சகந்தியின் கண்களில் கண்ணீர் ததும்பியது. கன்னத்தில் வழிந்த கண்ணீருடன் அவள், “குழந்தாய், நான் உன்னிடம் பலமுறை சொல்லிவிட்டேன்! அப்பா, அவரால் நம்மை அவருடன் அழைத்துச் சென்று கொண்டு வைத்துக் கொண்டு குடும்பம் நடத்த இயலாது! அவர் அப்படிப்பட்டவரே அல்ல!” அவள் குரல் பாதியிலேயே உடைந்தது.

“ஆனால், ஏன், தாயே, ஏன்? நாம் என்ன தவறு செய்தோம்?”ஆச்சரியத்துடன் கேட்ட கிருஷ்ணா, “அப்படி எல்லாம் நடக்காது தாயே! நிச்சயமாக அவர் நம்மைச் சேர்த்துக் கொள்வார்!” என்று தீர்மானமாகக் கூறினான். தன் அழுகையை அடக்கிக் கொண்ட மச்சகந்தி, “ஏன் என்று காரணத்தை எல்லாம் என்னால் உன்னிடம் சொல்ல முடியாது, மகனே! நீ இப்போது ஆறு வயதே ஆன குழந்தை! ஒரு நாள் நீ பெரியவனாக ஆகிவிடுவாய்! இளைஞனாக இருப்பாய்! ஒருக்கால் அப்போது நான் உன்னிடம் சொல்ல முடியும்!” என்றாள். “தாயே, இப்போது ஏன் சொல்ல மாட்டீர்கள்? ஏன் நான் புரிந்து கொள்ள மாட்டேனா? இந்தக் கிராமத்தில் உள்ள எல்லாச் சிறுவர்களுக்கும் தந்தை இருக்கிறார். எனக்கு மட்டும் ஏன் இப்படி?” என்ற வண்ணம் கிராமத்தின் மற்றக் குடிசைகளைச் சுட்டிக்காட்டியவண்ணம் கேட்டான் கிருஷ்ணன். மச்சகந்திக்கு ஒரு பக்கம் தன்மகன் தந்தையைத் தேடுவது பிடித்திருந்தது. அதை வரவேற்றாள். ஏனெனில் தனக்கு மட்டும் தந்தை தன்னுடன் வசிக்காதது கிருஷ்ணன் மனதில் ஒரு பெரிய இடைவெளியை ஏற்படுத்தி இருந்தது என்பதை அவள் அறிவாள். அவன் வயதுக்குட்பட்ட மற்றச் சிறுவர்கள் விளையாடும்போதும், மற்ற வேலைகளின் போதும் தந்தை உடன் இருக்கிறார். ஆனால் இவன் மட்டும் தனியாக எல்லாம் செய்து கொள்ள வேண்டும். அதை நினைத்து நினைத்து அவன் வருந்தினான். அது மச்சகந்திக்குத் தெரிந்தே இருந்தது.

“கிருஷ்ணா, கிருஷ்ணா, நீ உன் தந்தையிடம் எப்போதும் போக முடியாதடா குழந்தாய்! நான் தான் திரும்பத் திரும்பச் சொல்கிறேன் அல்லவா?” சற்றே எரிச்சல் தலைகாட்டியது மச்சகந்தியின் குரலில். மீண்டும் அவள் குரல் உடைந்து அழ ஆரம்பித்தாள். அவளுக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை. இந்தக் குழந்தையிடம் எப்படிப் புரியவைப்பாள்? நடக்க முடியாத ஒன்றை நினைத்து நினைத்து அது நடக்கவேண்டும் என்று பகல் கனவு காணும் இந்தக் குழந்தை!  உணர்ச்சிப் பெருக்கால் நிரம்பிய இந்தக் குழந்தையிடம் போய் அவள் எதைச் சொன்னாலும் அது சரியாக இருக்காதே! அவனால் தன் தந்தையிடம் சென்று அவருடன் வசிக்க இயலாது என்பதை எப்படி விவரிப்பேன்? கிருஷ்ணன் சோகத்தில் ஆழ்ந்து போன தன் தாயின் முகத்தையே பார்த்தவண்ணம் நின்றிருந்தான். என்றாலும் விடாமல், “தாயே, நான் மட்டும் இப்போது உங்களையும் அழைத்துக் கொண்டு தந்தையிடம் சென்றேன் எனில் தந்தை மிகவும் ஆச்சரியமும்,சந்தோஷமும் அடைவார்!” என்றான். தன் கண்ணீரைத் துடைத்துக் கொண்ட மச்சகந்தி, “குழந்தாய், கிருஷ்ணா, நான் எப்படி உன்னிடம் விளக்கிச் சொல்வேன், என்றே புரியவில்லை! அவரால் உன்னைத் தன்னுடன் அழைத்துச் செல்ல முடியாது, குழந்தாய்! உன்னை மட்டுமல்ல, என்னையும் சேர்த்துத் தான்! நம்மிருவரையும் அவரால் தன்னுடன் அழைத்துச் செல்ல முடியாது! அவர் மிகப் பெரிய மனிதர்! பெரியவர்! புனிதர்! மஹரிஷி! மக்கள் அவரை தினம் வந்து வணங்கி ஆசிகள் பெற்றுச் செல்வார்கள். அதோடு அவர் இருக்குமிடம் எங்கோ தொலைதூரத்தில் உள்ளது மகனே! நாம் எங்கோ இருக்கிறோம். மேலும் நாம் மிகச் சாமானியமான மனிதர்கள். மீனவர்கள்!” என்றாள்.

“அழாதே அம்மா, அழாதே!” என்ற வண்ணம் தன் தாயைக் கட்டி அணைத்துக் கொண்டான் சிறுவன்.”அப்பா விரைவில் வந்துவிடுவார். அவர் வந்ததுமே நான் அவரிடம் சொல்கிறேன். கெஞ்சிக் கேட்கிறேன். நம்மிருவரையும் அவருடன் அழைத்துச் செல்லும்படி கேட்கிறேன். தாயே, நிச்சயமாய்ப் பாருங்கள்! நான் சொல்வது நடக்கிறதா இல்லையா என! அவர் நம்மைத் தன்னுடன் அழைத்துச் செல்வார்! மாட்டேன் என்று சொல்லவே மாட்டார். மறுக்கவே மாட்டார்!”

மச்சகந்தி குழந்தையை மீண்டும் இறுக அணைத்து உச்சி மோந்தாள். பின்னர் தன் கண்ணீரைக் குழந்தை பார்த்துவிடாதபடிக்குத் தன் முகத்தை வேறுபக்கம் திருப்பிக் கொண்டாள். என்றாலும் மீண்டும் பேசும்போது அவள் குரல் தழுதழுத்தது. துக்கம் தொண்டையை அடைக்க அவள் கூறினாள்:”நீ எப்போது பார்த்தாலும் உன் தந்தையையே நினைத்துக் கொண்டு இருக்காதே, குழந்தாய்! அவரால் வர முடியாமல் போகலாம். நிச்சயமாய் வருவார் என எதிர்பார்க்க முடியாது!” என்றாள். ஆனால் கிருஷ்ணனோ தன் தாய் சொல்வது எதையும் ஆமோதிக்கவில்லை; அவள் சொல்வது அவனுக்குப் பிடிக்கவும் இல்லை! இது அவன் முகத்திலிருந்தே தெரிந்தது. “முன்னால் அவர் வந்திருந்தபோது ஆஷாட மாதப் பூர்ணிமை என்று தாத்தா சொல்லிக் கொண்டிருக்கிறார். அன்று தான் நான் பிறந்தேன் அல்லவா? தாத்தா சொல்லுகிறார் என் தந்தை விரைவில் இங்கு வந்து என்னைத் தன்னுடன் அழைத்துச் சென்றுவிடுவார் என்கிறார்! அவர் சொல்வது உண்மைதானே, அம்மா? தாத்தா பொய் சொல்ல மாட்டாரே!” என்றான் குழந்தை!  “ஆம், குழந்தை! உன் தாத்தாவின் எதிர்பார்ப்புகளும், நம்பிக்கையும் பொய்யாகாமல் இருக்கட்டும்! அவர் நம்பிக்கை பலிக்கட்டும்!” என்றாள் மச்சகந்தி! அவள் கழுத்தைக் கட்டிக் கொண்டு தொங்கினான் அருமைக் குழந்தை!

“ஆஹா, தாத்தா உங்களைப் போல் இல்லை தாயே! நான் எப்போது தந்தையைக் குறித்து உங்களிடம் கேட்டாலும், அவரைக் குறித்துப் பேசினாலும் நீங்கள் கண்ணீர் விட ஆரம்பிக்கிறீர்கள். ஆனால் தாத்தா அப்படி இல்லை! அம்மா, அம்மா, தாத்தா, என்ன சொல்கிறார் தெரியுமா? அவர் சொல்கிறார்: அப்பாவுக்கு எல்லாமும் தெரியுமாம். அவருக்குத் தெரியாத விஷயங்களே இல்லையாம்! அதோ விண்ணில் பளிச்சிட ஆரம்பித்திருக்கின்றனவே அந்த நக்ஷத்திரங்களைக் குறித்தும் அறிவாராம். அதோடு மட்டுமா, இதோ இந்தப் பூர்ணிமை நிலவு, யமுனையின் மீன்கள், இந்த மரங்கள், இந்த நதியிலுள்ள பெரிய பெரிய முதலைகள், வானில் தோன்றும் கிரஹங்களின் மாறுபாடுகள், இப்படி எல்லாமும் அவர் அறிவாராம். மேலும் சொன்னார். எங்கோ தூர தூர தேசங்களில் இருக்கும் ராஜாக்கள், மன்னர்கள்,சக்கரவர்த்திகள் போன்றோரை எல்லாம் தந்தை அறிவாராம். அம்மா, அம்மா, அந்த அரசர்கள் எல்லாம் யானைகள் மீது ஏறிப் பயணம் செய்வார்களாமே! உண்மையா? அம்மா, தாத்தா மேலும் சொன்னார். மீண்டும் ஆஷாட மாதப் பூர்ணிமை வருமல்லவா? அப்போது நிச்சயமாய்த் தந்தை வருவாராம். தாத்தா சொல்கிறார் அம்மா! அழாதே, அம்மா, அழாதே, கண்களைத் துடைத்துக் கொள்!” என்ற வண்ணம் தன் சின்னஞ்சிறு கைகளால் தாயின் கண்ணீரைத் துடைத்தான் சிறுவன்.

“நான் அழவில்லை, கிருஷ்ணா, அழமாட்டேன். நான் உனக்கு வாக்குறுதி கொடுக்கிறேன். இனிமேல் நான் அழவே மாட்டேன். ஆஷாடப் பூர்ணிமைக்கு இன்னும் மூன்று நாட்கள் இருக்கின்றன. நாம் எப்போதும் போல் இந்த வருடமும் காத்திருப்போம், கண்ணே! காத்திருப்போம்.” என்று நீண்ட ஒரு பெருமூச்சுடன் கூறினாள் மச்சகந்தி. “ஓ, அது எனக்கும் தெரியுமே அம்மா! தாத்தா மேலும் என்ன சொன்னார் தெரியுமா? நான் என் முழு மனதுடன் தந்தையை வரவேண்டும் எனப் பிரார்த்தனைகள் செய்து அவரை அழைத்தால் தந்தை கட்டாயம் வந்துவிடுவாராம். தாயே, தாத்தா என்னிடம் பொய் சொல்கிறார் என்றா நீங்கள் நினைக்கிறீர்கள்? தாத்தா உறுதியாகச் சொல்கிறாரே!”

“இல்லை, குழந்தாய், இல்லை!” என்ற வண்ணம் இந்த வேதனை தரும் சம்பாஷணையை முடித்துக் கொள்ள நினைத்தாள் மச்சகந்தி. அவள் அவ்வளவில் அவனை விட்டு வீட்டுப் பக்கம் செல்வதற்காகத் திரும்பினாள். அப்போது கிருஷ்ணன் அவளிடம், “அம்மா, அம்மா, நாம் ஏன் இங்கேயே இருந்து கொண்டு அவருக்காகக் காத்திருக்க வேண்டும்? வாருங்கள், நாம் அவரிடம் செல்லலாம்.” என்று பெரிய மனிதத் தோரணையுடன் தாயை அழைத்தான். “தந்தையிடம் செல்ல வேண்டுமா? எங்கே? அவர் எங்கே இருக்கிறார்?” கிருஷ்ணனுக்குத் தன் தாய்க்குத் தந்தை இருக்குமிடம் தெரியும் என்றும் தன்னிடம் மறைக்கிறாள் என்னும் எண்ணமும் இருந்தது. ஆகவே திட்டவட்டமாகச் சொன்னான். “வேறு எங்கு? தந்தை எங்கே இருக்கிறாரோ, அங்கே தான்!” என்றான்.