Tuesday, April 5, 2016

ஜாம்பவானின் பிரியாவிடை!

“ஐயா, என்னையும் என் நண்பர்களையும் எப்போது போக அனுமதிப்பீர்கள்?”
“இப்போதே! இந்த நிமிடமே! அங்கே எங்கள் குலதெய்வத்திற்கு என எரிந்து கொண்டிருக்கும் நெருப்பின் அருகே அதைச் சுற்றி என் மக்கள் நன்கு உறங்குகின்றனர். இப்போது அவர்கள் ஒருவித மயக்கத்தில் இருக்கின்றனர். நாளை எழுந்ததும் ஒருவேளை மயக்கம் தெளிந்து விட்டால் உன்னை அந்த நெருப்பில் தூக்கிப் போடலாம். ஆனால் என்னைப் பொறுத்தவரையில் அந்த மந்திரமணிமாலையான ச்யமந்தகம் உனக்கும் அதிர்ஷ்டத்தையே கொண்டு வரும் என நான் நம்புகிறேன்; ஆம் முழு மனதோடு நம்புகிறேன். ஆகவே எங்கள் கருநிறக் கடவுள் கூட உன்னைச் செல்ல அனுமதிக்கலாம் என்றே எண்ணுகிறேன்.”

“அதெல்லாம் சரி ஐயா! ச்யமந்தக மணிமாலை எவ்வகையில் எங்களுக்கு அதிர்ஷ்டத்தைத் தேடித் தரும்? அதை நீங்கள் அல்லவோ வைத்திருக்கிறீர்கள்? உங்களிடம் அன்றோ அது இருக்கிறது! அதை நான் என் பாதுகாப்பில் வைத்திருந்தால் தான் அதிர்ஷ்டம் என்னைத் தேடி வர வாய்ப்பு உள்ளது! அதோடு இல்லாமல் ச்யமந்தக மணிமாலை இல்லாமல் நான் துவாரகைக்குச் செல்ல மாட்டேன்! அதற்குப் பதிலாக இங்கேயே இருந்து நெருப்பில் தூக்கிப் போட அனுமதிக்கிறேன்; அல்லது நானே என்னை நெருப்பில் இட்டுக் கொள்வேன்!”

“ஓ, எனக்கு அது எல்லாம் நன்கு தெரியும். உன் சிநேகிதன் என்னிடம் எல்லாவற்றையும் விளக்கமாகச் சொல்லி விட்டான்.”என்ற ஜாம்பவான் சிரித்துக் கொண்டே, “இதோ, இப்போதே நான் அதை உன்னிடம் கொடுத்துவிடுகிறேன். எடுத்துச் செல்!” என்ற வண்ணம் தன் அரைக்கச்சையை அவிழ்த்த ஜாம்பவான், அதிலிருந்து ச்யமந்தக மணிமாலையை எடுத்துக் கிருஷ்ணனிடம் கொடுத்தான். “இப்போது எவ்வளவு விரைவில் கிளம்ப வேண்டுமோ அவ்வளவு விரைவில் இங்கிருந்து கிளம்பிச் செல்!” என்றும் கூறினான்.

“ஆம், நான் விரைவில் கிளம்பவேண்டும். ஆனால் அதற்கு முன்னர் சாத்யகிக்கும், சத்யாவுக்கும் இதைக் குறித்துச் சொல்லி அவர்களையும் உடன் வருவதற்குத் தயார் செய்ய வேண்டும். அதுவும் உடனே! இப்போதே! அவர்கள் எங்கிருக்கிறார்கள்? மாட்சிமை பொருந்திய கரடிகளின் தலைவனே! என்னுடைய ஆயுதங்கள் என்ன ஆயின? அவற்றை என்னிடமிருந்து நீங்கள் தானே எடுத்துக் கொண்டீர்கள்? என்னிடம் திரும்பக் கொடுத்துவிடுகிறீர்களா?”

“ஆஹா, நீ அவ்வளவு எளிதில் எதையும் மறக்கமாட்டாய் போல் இருக்கிறது!” என்ற ஜாம்பவான் கிருஷ்ணனின் மேல் தன் கரத்தை அன்போடு வைத்த வண்ணம், “நான் உன் ஆயுதங்களையும், உன் நண்பர்களையும் சேர்த்தே குகைக்கு வெளியே இருக்கச் செய்கிறேன். ஆனால் இங்கிருந்து உடனே கிளம்பு! தாமதம் செய்யாதே! முழுநிலவு தன் பூரண ஒளியையும் பூமிக்குக் காட்டிப் பிரகாசிக்கிறது. ஆகவே உனக்கு வழி கண்டுபிடிப்பதிலும் கஷ்டம் இருக்காது. மேலும் அங்கே மேலே உச்சிக்கு ஏறுவது கொஞ்சம் கடினமாகவும் இருக்கும்! பாறைகள் கடினமாகவும் வளையாதவாறும் இருக்கும்.”
“நானும் அப்படித்தான், அரசே! அதற்குச் சரிசமமாகத் தான் நானும் இருப்பேன்!”

“காலை சூரியோதயத்தின் போது நீயும் உன் நண்பர்களும் எங்கள் குலதெய்வமான கருநிறக்கடவுளின் சந்நிதானத்தில் இருப்பீர்கள். உன் கையில் ச்யமந்தகமணிமாலை இருப்பதால் எங்கள் எல்லையில்லா சக்தி படைத்த கடவுள் உன்னை அவரைத் தாண்டிச் செல்ல அனுமதிப்பார்!”
ரோகிணிக்குப் பிரியும் நேரம் வந்துவிட்டதால் தன் தந்தையை மீண்டும் காணமுடியாதே என மனதினுள் சோகம் ஏற்பட்டது. தன் தந்தையை இறுகத் தழுவிக் கொண்டாள். சின்னக் குழந்தை போல் அழுதாள். அதில் மகிழ்ச்சியும், வருத்தமும் கலந்தே இருந்தது. “தந்தையே, தந்தையே, எனக்குப் புதியதொரு அற்புத உலகைச் சிருஷ்டித்துக் கொடுத்து விட்டீர்கள்! புதியதொரு வாழ்க்கையைக் கொடுத்துவிட்டீர்கள்!” என்றாள். ஜாம்பவானும் அன்புடன் ரோகிணியின் முகத்தைத் தன் தோள்களில் சார்த்திக் கொண்டு அவள் தலையை வருடிக் கொடுத்தார். அவள் கன்னங்களைத் தடவிக் கொடுத்தார். அவளை மனப்பூர்வமாக ஆசீர்வதித்தார். “குழந்தாய்! சந்தோஷமாக வாழப் பழகிக் கொள். உன் மகிழ்ச்சியான இல்வாழ்க்கையில் உனக்கு மகன்கள் பிறக்கையில் என்னையும் உன் தாயையும் நினைத்துக் கொள்!” என்றார். அவர் குரலும் துயரத்தில் தழுதழுத்தது. கண்கள் கண்ணீரால் நிரம்பின.

“தந்தையே, எங்களுடன் நீங்களும் வந்துவிடுங்களேன்!” என்றாள் ரோகிணி.
“குழந்தாய்! என் முன்னோர்கள் இந்தக் கரடி உலகின் அரசர்களாக இருந்து வந்துள்ளனர். அதை என்னால் மறக்க இயலாது. அவர்கள் எப்படி இந்தக் கரடி உலகைப் பாதுகாத்தார்களோ அப்படியே நானும் இந்தக் கரடி உலக மக்களைப் பாதுகாக்கக் கடமைப்பட்டுள்ளேன். எனக்கும் வயதாகிக் கொண்டு வருகிறது குழந்தாய்! என்றாவது ஓர் நாள் நானும் மரணத்தின் வாயிலுக்குச் சென்று அங்கிருந்து எல்லாம் வல்ல இறைவனால் அழைத்துக் கொள்ளப்படுவேன். ஆனால் அதற்காக நான் என் மக்களை விட்டு விட்டு வருவது எளிதல்ல! நான் இருக்கும்வரை என் பாதுகாப்பு அவர்களுக்குத் தேவை!” என்ற ஜாம்பவான் சற்று நேரம் தரையையே பார்த்தவண்ணம் நின்றிருந்தார். மனக்கசப்பும், நம்பிக்கையின்மையும் அவர் குரலில் தெரிந்தாலும் அதையும் மீறி நடப்பனவற்றை அங்கீகாரம் செய்யும் தொனியும் காணப்பட்டது.

ரோகிணியைத் திரும்பிப் பார்த்து மேலும் பேசலுற்றார்:” குழந்தாய், எங்களில் சிலரே இப்போது உயிருடன் இருக்கிறோம். இந்தக் கரடி உலகு விரைவில் அழிய நேரலாம். அதனால் தான் நான் உன்னைப்புதிய வாழ்க்கையைத் தேடிச் செல்ல அனுப்பி வைக்கிறேன். வாசுதேவக் கிருஷ்ணனால் உனக்கு சகலவிதமான சந்தோஷங்களும் வாழ்க்கையில் கிடைக்கும் என நம்புகிறேன்.” பின்னர் மீண்டும் ரோகிணியின் முகத்தைத் தடவிக் கொடுத்துத் தன் தோள்களில் சார்த்திக் கொண்டார். ரோகிணி அவர்கள் வழக்கப்படி தன் கைகளைக் குறுக்காக மார்பில் போட்டு அவரை வணங்கினாள்.

பின்னர் கண்ணீர் மாறாத குரலில் மேலும் அவர் சொல்வார்:”ரோகிணி, நீ உன் வாழ்க்கையின் நன்மைக்காகவே இந்தக் கரடி உலகை விட்டுச் செல்கிறாய்! அதை நினைவில் கொள்! இந்த உலகை நினைக்கவே நினைக்காதே! எங்களை எல்லாம் மறந்துவிடு! வாசுதேவனோடு சந்தோஷமான வாழ்க்கையை வாழ்ந்து கொள்!இப்போது அவனுடைய உலகம் தான் உன்னுடையதும். அதை நினைவில் கொள்.” இதைச் சொன்ன ஜாம்பவான் துயரம் தாளாமல் விம்மினார். ரோகிணியும் சிறு குழந்தையைப் போல் அழுதாள். ஜாம்பவான் அங்கிருந்து செல்கையில் ரோகிணி விடாமல் அவரைக் கட்டிக் கொண்டு விக்கி விக்கி அழுதாள். மிகச் சிரமத்தின் பேரில் அவள் தன்னைத் தானே சமாளித்துக் கொண்டாள். பின்னர் மிகப் பரிதாபமாகத் தன் தந்தையைப் பார்த்து, “தந்தையே, என் பறவைகள்! என் குரங்குகள்? அவை எல்லாம் என்னைத் தேடுமே! அவற்றுக்கு என்ன ஆகும் தந்தையே! ஒரு வேளை, ஒரு வேளை நான் இங்கிருந்து சென்றதும் அவை இறந்துவிட்டால்?”

“ஆஹா, அப்படி எல்லாம் நடக்காது மகளே! கவலைப்படாதே!” ரோகிணியின் முதுகில் தடவிக் கொடுத்த ஜாம்பவான் “ரோகிணி, நான் என்னால் ஆன முயற்சிகளைச் செய்து அவற்றைக் காப்பாற்றுகிறேன்.  நான் அதிகாரத்தில் இருக்கும்வரை அவற்றுக்கு ஒன்றும் நேராது! ஆனால் நீ இங்கேயே இருந்தாயெனில் உன்னை நீயே நம் குலதெய்வமான கருநிறக்கடவுளிடம் ஒப்படைத்துக் கொள்ளும்படி ஆகி விடும். பின்னர் மரங்களில் குடி இருக்கும் குரங்குகளும், பறவைகளும் கூட அழிந்து விட வாய்ப்பு உண்டு. ஆகவே முதலில் நீ தப்பிச் செல்!” என்ற வண்ணம் தன் கண்களிலிருந்து வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்ட ஜாம்பவான், ரோகிணியின் கண்ணீரையும் துடைத்துவிட்டு அங்கிருந்து கிளம்பினார். அவர் நடை தள்ளாடுவதையும் உயர்ந்து நிமிர்ந்த நடை நடக்கும் அவர் இப்போது கூனனைப் போல் தரையில் கண்களைப் பதித்த வண்ணம் தடுமாறியபடி நடப்பதையும் கிருஷ்ணன் கண்டான்.