Friday, April 8, 2016

பாமாவுக்குக் கிடைத்த வெகுமதி!

கிருஷ்ணன் சாத்யகியிடமிருந்து அவனுடைய வல்லமை பொருந்திய வில்லையும், உலோகத்தைத் தீட்டிப் பொருத்தப்பட்ட கூரான நுனிகளைக் கொண்ட அம்புகளையும் வாங்கிக் கொண்டான். அப்போது சத்யா திடீரெனத் தன் கண்களை அகலத் திறந்து கொண்டாள். ஆச்சரியமும், பயமும் கலந்த பார்வையுடன் அவள் கிருஷ்ணனை அழைத்து, “பிரபுவே, பிரபுவே, அதோ பாருங்கள்! அங்கே! ஏதோ தெரிகிறது, பாருங்கள்!” என்ற வண்ணம் அந்தத் தொடர் பாதையின் விளிம்பு கீழே பள்ளத்தாக்குச் செல்லும் வழியில் இறங்குமிடத்தைச் சுட்டிக் காட்டினாள். கிருஷ்ணன் பாமா சுட்டிக் காட்டிய இடத்தைக் கூர்ந்து கவனித்தான். அங்கே ஒரு மிகப் பெரிய உருவம் கொண்ட கருநிறப்பாம்பு ஒன்று படுத்திருந்தது. சுமார் முப்பது அல்லது நாற்பது முழங்களுக்கும் மேல் நீளமாக இருக்கலாம். அந்தப் பாதையில் அது தன் அகல, நீளம் முழுவதையும் பரப்பிப் படுத்திருந்தது. அதனுடைய நாக்கு அங்குமிங்கும் அலை பாய்ந்து கொண்டிருந்தது. இவர்கள் நால்வரும் புதர்களுக்கிடையே இருந்து மேலே திடீரெனக் கிளம்பியதைக் கண்ட அது மிகக் கோபம் கொண்டு தன் நாக்கை வெளியே நீட்டிச் சீறியவண்ணம் தலையைத் தூக்கி கிருஷ்ணனையும் அவன் தோழர்களையும் பார்த்தது. நாக்குப் பிளவு பட்டுக் கூராக இருந்ததோடு மஞ்சள் நிறத்திலும் காட்சி அளித்தது. தன் வாயிலிருந்து அதை அடிக்கடி வெளியே நீட்டுவதும், பின்னர் உள்ளே இழுப்பதுமாக இருந்தது.

ஒருவாறு நிலைமையைப் புரிந்து கொண்ட ரோகிணி தன் கண்ணைக் கட்டி இருந்த கட்டுக்களை அவிழ்க்காமலேயே அங்கேயே அப்படியே கீழே விழுந்து நமஸ்கரித்தாள். எனினும் அதீத பயத்தினால் கொஞ்சம் க்ரீச்சிட்டுக் கத்தவும் செய்தாள். அடுத்த நொடியே தங்கள் குல தெய்வமான அந்தக் கருநிறக்கடவுளை வழிபட்டு வேண்டிப்பிரார்த்திக்கவும் ஆரம்பித்தாள். சத்யபாமாவோ அதன் பின்னர் தன் கண்களைத் திறக்கவே பயந்தாள். “பிரபுவே, அவர் நம்மைப் பார்த்துவிட்டாரா? எவ்வளவு நீளம் இருக்கிறார் அவர்?” என்று கிருஷ்ணனிடம் விசாரித்தாள். “ஆஹா, கடவுளின் கடவுள்! கடவுளே, கடவுளே, மஹாதேவா! இது சேஷன், அநந்த சேஷன்! ஆம், அவரே தான். தேவலோகத்துக் குடி இருக்கும் ஶ்ரீமஹாவிஷ்ணுவின் பாம்பணையாகிய அநந்த சேஷன் இந்தப் பாம்பு!” என்றான் சாத்யகி!

“ஆஹா, அப்படியா சொல்கிறாய் சாத்யகி? இவர் தான் அநந்த சேஷனா? மூவுலகையும் இவர் முதுகுதான் தாங்குகிறதா? அப்படி மட்டும் இருந்துவிட்டால் நம்மை விடப் பாக்கியசாலிகள் எவருமில்லை. சரி, இப்போது நாம் ஆகவேண்டியதைக் கவனிப்போம். அனைவரும் அப்படி அப்படியே இருக்குமிடத்தில் அசையாமல் நில்லுங்கள். ஒருவரும் எதுவும் பேசவேண்டாம். ஏதாவது பேச நேரிட்டால் பின்னர் இந்த சேஷனின் வாய்க்குள்ளே நாம் போய்விடுவோம்.” என்றான் கிருஷ்ணன். சத்யபாமா கிருஷ்ணனை ஒட்டி நின்று கொண்டாள். ஒருவேளை அந்த அநந்தசேஷன் கிருஷ்ணனைத் தூக்கி விழுங்கினால் அவனருகே நிற்கும் தானும் அவனோடு ஒன்றாக அந்தப் பாம்பின் வயிற்றில் பயணம் செய்யலாமே! கிருஷ்ணன் யமலோகத்தை நோக்கிப் பயணப்பட்டான் எனில் அவள் இங்கே தனியாக இருந்து என்ன செய்வது? அவனுடன் தானும் போயாக வேண்டும். அப்போது கிருஷ்ணன் மெல்ல மெல்ல அந்தப் புதர்களை விலக்கிக் கொண்டு வெளியேறினான். அதைக் கண்ட சாத்யகிக்கும், பாமாவுக்கும் மனம் நொறுங்கியது. கிருஷ்ணன் மரணத்தை நோக்கி அன்றோ பயணிக்கிறான்! ஆனால் கிருஷ்ணன் அஞ்சாமல் வெளியே வந்தான். அந்தக் கருநிறப்பாம்பை நோக்கி மெல்ல மெல்ல நடந்தான். அவன் கண்கள் அதீத ஒளியுடன் பளிச்சிட்டன! மேலும் அந்தப் பாம்பின் மேலிருந்து தன் பார்வையை விலக்காமல் எவராலும் தவிர்க்க இயலாத தன் வசீகரப் பார்வையுடன் மெதுவாகப் பாம்பை நோக்கிச் சென்றான்.

சாத்யகியும், சத்யாவும் மயங்கி விழும் நிலைக்குச் சென்று விட்டனர். ஆனால் கிருஷ்ணனோ அந்தப் பாம்பின் அருகே சென்று அசையாமல் நின்று கொண்டான். பாதை அங்கே தான் கீழே இறங்குகிறது! எதிரே அந்தப் பாம்புத் தன் முழு உடலையும் பரப்பிப் படுத்திருந்தது. கிருஷ்ணன் தன் கையில் வில்லை ஏந்திக் கொண்டிருந்தான். அதைப் பார்த்தால் அவன் ஆயுதத்தை ஏந்தி இருப்பது போல் அல்லாமல் மன்னன் ஒருவன் செங்கோலை ஏந்தி இருப்பது போல் இருந்தது. கிருஷ்ணனின் கண்கள் பளிச்சிட்டதைப் போல் அவன் முகமும் ஒளி வீசிப் பிரகாசித்தது. அவனைச் சுற்றிலும் ஓர் ஒளிவட்டம் தோன்றியது. அவன் வாய் ஏதோ முணுமுணுத்தது. அது, அந்தக் குரல் அதிகாரத் தொனியுடன், அதே சமயம் சர்வ நிச்சயத்துடனும், மிக மெதுவாகவும் கேட்டது. கிருஷ்ணன் முணுமுணுத்தது இவை தான்:
“ஆயிரம் நாக்குகளுடைய அநந்த சேஷன் நீங்கள் தான் எனில், என் பகவானே!
உங்கள் முதுகில் தான் இம்மூவுலகங்களையும் நீங்கள் தாங்குவதாய் இருந்தால், என் பகவானே!
நீங்கள் தான் காலதேவன் எனில், என் பகவானே, உங்களிடம் தான் இவ்வுலகம் தன்னைத் தானே கரைத்துக் கொள்ளும் என்பது உண்மையானால் என் பகவானே!
எங்களுக்கு வழி விட்டு விலகி நில்லும்! எங்களைக் காத்து ரக்ஷியும்!”
கிருஷ்ணனின் பார்வை, மந்திரப் பார்வை அந்தப் பாம்பின் மீதே இருந்தது. அந்தக் கருநிறக் கடவுளான பாம்பு கிருஷ்ணனைத் தன் இமைகளற்ற கண்களால் பார்த்தது. தன் உடலைச் சற்று அங்குமிங்கும் நெளித்து அலை போல் பரப்பியது. பின்னர் என்ன நினைத்ததோ அந்தப் பாதையில் நீள நெடுகப் படுத்துவிட்டது. பின்னர் திடீரெனத் தன் உடலின் ஒரு பாகத்தை மேலே தூக்கிய வண்ணம் தன் தலையைத் தூக்கி கிருஷ்ணனையும், மற்றவர்களையும் பார்த்துத் தன் தலையை இப்படியும், அப்படியும் ஆட்டியவண்ணம், மிகப் பயங்கரமாகச் சீறியது. பாமா நடுங்கினாள். தன் கண்களை மூடிக் கொண்டாள். இதோ, அந்தக் கருநிறக் கடவுள் இப்போது கிருஷ்ணனைத் தன் வாயில் போட்டு விழுங்கப் போகிறது! கிருஷ்ணனை அது விழுங்கி விட்டால், பின்னர் அவளுக்கு வாழ்வு தான் எங்கே! திரும்பத் துவாரகைக்குப் போகவும் அவளுக்குப் பிடிக்கவே இல்லை. ஆகவே இங்கே இப்போதே இந்தக் கருநிறப்பாம்பிடம் அவளும் தன் உயிரை அர்ப்பணிக்க வேண்டியது தான் ஒரே வழி!

அவளுடைய நாடி, நரம்புகள் அனைத்தும் நடுங்க பாமாவும் தனக்குள்ளே பிரார்த்தித்துக் கொண்டாள். “ஏ, கருநிறக் கடவுளே! தயவு செய்து என்னையும் உனக்கு பலியாக ஏற்றுக்கொள்! என்னையும் விழுங்கிவிடு!” அந்தப் பாம்பு மிகவும் கோபமாகவும், விஷத்தைக் கக்கியவண்ணமும் கிருஷ்ணனை நோக்கிச் சீறியது. அதைப் பார்த்த பாமா பயத்துடன் அந்தப் புதர்களிலிருந்து வெளியேறும் வழியில் தானும் வெளியே வந்தாள். அதைக் கண்ட கிருஷ்ணன் அவள் மனதில் ஓடும் எண்ணங்களைப் புரிந்து கொண்டான். அவனால் ஏற்கெனவே அவள் மனதையும் அதில் ஓடும் எண்ணங்களையும் அளவிட முடிந்தது. ஆகவே இப்போதும் நன்றாகவே புரிந்து கொண்டான். தன் முகத்தைச் சிறிதும் திருப்பவில்லை அவன். அதே போல் அந்தப் பாம்பின் மேல் நிலை நாட்டிய தன் விழிகளையும் அதிலிருந்து மீட்கவில்லை. தான் நின்றிருந்த நிலையையும் மாற்றவில்லை. அப்படியே பாமாவின் தோள்களை மட்டும் வெடுக்கெனப் பற்றி இழுத்துப் புதர்களினுள்ளே தள்ளினான். அதே சமயம் அவள் காதுகளில் மட்டும் விழும் வண்ணம் மெல்லக் கிசுகிசுத்தான்;”இதோ பார், பாமா! நீ ஒரு வீரதீர சாகசங்கள் செய்யும் கதாநாயகனின் மனைவியாக வேண்டும் என்றல்லவோ விரும்புகிறாய்! அப்படி நடக்கவேண்டும் எனில், என்னை ஒரு வீரதீர சாகசங்களைச் செய்யும் கதாநாயகனாக நடந்து கொள்ள விடு! இப்போது அங்கேயே இரு!” என்றான்.

2 comments:

வல்லிசிம்ஹன் said...

கண்ணன் சொல்லிவிட்டான். பாமா நீ வெற்றி பெற்றாய்.
கண்ணனுக்குக் கட்டுப் படும் சேஷன் வாழ்க.

ஸ்ரீராம். said...

அருமையான ஒரு அத்தியாயம்.