Wednesday, April 20, 2016

மத்ஸ்யகந்தியும், பராசரரும்!

மறுநாள் சூரியோதயம் ஆகிச் சற்று நேரத்தில் மீனவன் ஜாருத் என்பவனின் படகு ஒன்று பராசரர் அடிபட்டுக் கீழே வீழ்ந்து கிடக்கும் கரையோரமாய் ஒதுங்கியது. யமுனையில் நடுவே காட்சி அளித்த ஒரு தீவில் ஜாருத் வசித்து வந்தான். பராசர முனிவருக்கு ஏற்கெனவே அறிமுகம் ஆன அவன் நெடுந்தூரத்திற்கு மீன் பிடிக்கச் செல்லும்போதெல்லாம் பராசரரின் ஆசிரமத்துக்கு வந்து தன் வணக்கத்தை அவருக்குத் தெரிவித்து ஆசிகள் பெற்றுச் செல்வது வழக்கம். இப்போதும் அப்படியே வந்தவன் ஆசிரமம் எரிக்கப்பட்டு நாசமாக்கப்பட்டுக் கிடப்பதைக் கண்டதும் அதிர்ச்சியுற்றான். ஆசிரமத்தை நெருங்கிச் சென்று பார்க்க அச்சமுற்று அவன் ஒதுங்கியே இருந்து விட்டான். மறுநாள் அந்தக் கொடியவர்கள் அனைவரும் அங்கிருந்து கிளம்பிச் சென்று மறைந்ததும் ஜாருத் மெல்ல மெல்லப் படகை அங்கே நிலை நிறுத்திவிட்டுப் படகிலிருந்து கீழே இறங்கிப் பார்க்க யத்தனித்தான். உள்ளூர அவன் மனதில் பயமும் இருந்து வந்தது. அந்தப் படகில் அவனுடன் வந்தவர்களில் அவனுடைய பெண்ணான பதினான்கே வயதான மத்ஸ்யா என்னும் பெண்ணும் இருந்தாள். சிப்பிகளையும், சங்குகளையும் கொண்டு செய்யப்பட்ட ஆபரணங்களை அணிந்து கொண்டிருந்த அவள் மெல்லிய இடையில் சிப்பிகளால் ஆன ஆபரணம் ஒன்றைப் பூண்டிருந்தாள். காலிலும், கைகளிலும், கழுத்திலும் கூட சிப்பிகளாலும் சங்குகளாலும் ஆன ஆபரணங்களைப் பூண்டிருந்தாள்.

மிக அழகாகப் பெண்மையின் அழகெல்லாம் ஓருருவாகத் தோன்றிய அவளின் எழிலார்ந்த நடையே ஒரு நாட்டியம் போல் இருந்தது. அழகிய தாமரை மொட்டுக்களைப் போன்ற மார்பகத்தை ஒரு துணியால் மூடி இருந்த அவள் நிறம் கருமையும், சிவப்பும் கலந்த செம்பின் நிறமாகக் காட்சி அளித்தது. அப்போது பளீரெனப் பிரகாசித்த சூரிய ஒளியில் அவள் செம்புச் சிலையெனக் காட்சி அளித்தாள். அவள் மனதில் நிறைவும் சந்தோஷமும் இருப்பதற்கு அறிகுறியாக அவள் கண்கள் ஒளிர்ந்ததோடு அல்லாமல் அந்த ஒளியினால் அவள் கன்னங்களும் செம்மை நிறம் பெற்றுப் பிரகாசித்தன. மத்ஸ்யாவின் தந்தையும் மற்றவர்களும் அவர்களுக்கு ஆகாரம் தயார் செய்ய முற்பட்டபோது அங்குமிங்கும் சுற்றி வந்த மத்ஸ்யா ஓர் மனிதன் கீழே விழுந்து கிடப்பதைப் பார்த்தாள். அசைவற்றுக் கிடந்தான் அவன். யாரெனப் பார்க்க வேண்டி அவன் அருகே ஓடினாள் மத்ஸ்யா! பராசரர் தான் அது! இன்னமும் நினைவிழந்த நிலையிலேயே இருந்தார். அவர் வாயின் ஓரங்களில் இருந்து ரத்தம் கசிந்து கொண்டிருந்தது. மத்ஸ்யா பயந்தே போனாள். சற்றே குனிந்த அவள் அந்த மனிதனின் நிலையைப் பரிசோதிக்க விரும்பியபோது இவர் தாங்கள் வணங்கி வரும் பராசர முனிவரே என்பதையும் அறிந்தாள். அவள் இங்கே ஒவ்வொரு முறையும் அவள் தந்தையோடு வரும்போதெல்லாம் இந்த முனிவரைப் பார்த்து வணங்காமல் சென்றதில்லை. அன்பும் கருணையும் வடிவான முனிவரும் அவர்களை ஆசீர்வதிப்பார்.

இப்போது இங்கே இப்படி நினைவிழந்து இவர் கிடப்பதைப் பார்த்த மத்ஸ்யாவின் மனம் வெதும்பியது. கண்களில் கண்ணீர் வந்தது. அவரை அழைத்துப் பார்த்தாள்; பலனில்லை! அந்த ராக்ஷதர்கள் இவரைக் கொன்றுவிட்டார்களோ என நினைத்தாள். உடனே அவர் மார்பில் தன் காதுகளை வைத்துப் பார்த்தாள். பின்னர் பெரிதாக அழ ஆரம்பித்தாள். அவள் அழுகையைக் கேட்ட ஜாருத் மற்றும் அவன் மனைவியும், மத்ஸ்யாவின் தாயுமான சண்டோதரி இருவரும் அங்கே வந்தார்கள். “என்ன விஷயம்? ஏன் அழுகிறாய் பெண்ணே!” என்று கேட்டார்கள். தன் தாயிடம், நம் மதிப்புக்குரிய ரிஷி பராசரர் இறந்து கிடக்கிறார் என்று மத்ஸ்யா சொல்ல அதைக் கேட்ட சண்டோதரி ஓட்டமாக ஓடி வந்தாள். அவளும் ரிஷியைப் பார்த்துவிட்டு சந்தேகத்துடன் தன் கைகளை அவர் கண்களில் வைத்தாள். மெல்லக் கண்களைத் திறந்து அவளைப் பார்த்த ரிஷியின் கண்கள் மீண்டும் மூடிக் கொண்டன. “இவர் இறக்கவில்லை; நிச்சயமாக இறக்கவில்லை! நிச்சயம்!” என்றாள் சண்டோதரி. அவள் கத்துவதையும் கேட்ட மற்ற மீனவர்கள் அனைவரும் அங்கு கூடினார்கள். அவர்களுக்கு இவர்களின் கூச்சலில் திரும்பிச் சென்ற அந்தக் கொடியவர்கள் மீண்டும் இங்கு வந்துவிட்டால் என்ன செய்வது என்னும் அச்சம்!

ஆகவே ஜாருத் தன் மகளையும், மனைவியையும் பார்த்து மீண்டும் படகுக்குப் போகச் சொன்னான். அந்தக் கொடியவர்களால் நாசமாக்கப்பட்ட ஆசிரமத்தில் தாங்கள் இருப்பதால் இனி இங்கே இருக்கக் கூடாது என்றும் பேயும் பிசாசுகளும் ஆட்சி செய்யும் இந்த இடத்திலிருந்து மத்ஸ்யா போன்ற கன்னிப் பெண்களும், சண்டோதரி போன்ற பெண்களும் இருக்கக் கூடாது என்றும் கூறி அவர்களைப் படகில் போய் இருக்கச் சொன்னான். ஆனால் மத்ஸ்யாவுக்கோ ரிஷியை விட்டுச் செல்ல மனமில்லை. “தந்தையே, இதோ பாருங்கள், நம் ரிஷியை, கிட்டத்தட்ட இறக்கும் நிலையில் இருக்கிறார்.” என்றாள் சோகத்துடன். ஜாருத் கூர்ந்து பார்த்து ரிஷியை அடையாளம் கண்டு கொண்டான். “ஆஹா, ஆம், இவர் நம் ரிஷியே தான்! இந்த ஆசிரமத்தை எரித்த அந்தப் பிசாசு மனிதர்கள் இவரையும் கொன்றிருக்க வேண்டும்!” என்றான். அதற்குச் சண்டோதரி, “இல்லை, இல்லை, இவர் இறக்கவில்லை! நாம் இவரை நம்முடன் தூக்கிச் செல்வோம். வைத்தியம் செய்து உயிரைக் காப்பாற்றுவோம்.” என்றாள். அதன் பேரில் அனைவரும் படகுக்குச் செல்கையில் பராசரரையும் தூக்கிச் சென்று படகில் கிடத்தினார்கள். சண்டோதரியும், மத்ஸ்யாவும் அவர் உடலின் காயங்களை கழுவி மருந்திட்டு அவருக்குக் குடிக்க நல்ல நீரும் கொடுத்தார்கள். அவர்கள் படகு கல்பி என்னும் இடத்துக்கு அருகிலிருந்த தீவுக்கு விரைந்தது. அங்கே பராசரரை இலைகளால் ஆன மெத்தென்ற படுக்கையில் படுக்க வைத்து வைத்தியம் செய்தார்கள்.

இரண்டு நாட்களுக்குத் தொடர்ந்து வைத்தியம் செய்தனர். இரண்டு நாட்களாகக் கண் விழிக்காத பராசரர் மூன்றாம் நாள் நிலவு கீழ்த்திசையில் பிரகாசமாக எழுந்தது. நதியில் நிலவொளி பட்டுப் பிரகாசித்தது. நதியின் நீரெல்லாம் நிலவொளியில் உருக்கி வார்த்த வெள்ளியைப் போல் தகதகத்தது! அப்போது தான் பராசரருக்குக் கொஞ்சம் நினைவு வந்தது. மெல்ல மெல்ல கண்களைத் திறந்தார். ஆனாலும் இன்னமும் பூரணமாக மயக்கம் தெளியவில்லை. அரை மயக்கத்திலேயே இருந்தார். சிறிது நேரம் அவருடைய வெளிறிய முகத்தையே பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாள் மத்ஸ்யா! பின்னர் அவர் அருகே சென்றாள். அவர் தலையைத் தூக்கித் தன் மடியில் வைத்துக் கொண்டு அவர்கள் மீன் பிடிக்கச் செல்கையில் பாடும் தெம்மாங்குப் பாடலொன்றை மெல்லிய குரலில் மெதுவாகப் பாடினாள். உடலில் காயங்களோடும் அதற்கேற்ப மனதில் ஹைஹேயர்கள் செய்த கொடுமையினாலும் பல மடங்கு பாதிக்கப்பட்டிருந்த பராசரருக்கு அந்தக் குரல் ஆறுதலைக் கொடுத்தது. அந்தப் பாடல் காதுக்கு இனிமையாக இருந்ததோடு மனதுக்கு அமைதியையும் கொடுத்தது. அந்தப் பெண்ணின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார் பராசரர்.

2 comments:

வல்லிசிம்ஹன் said...

பராசர மஹரிஷி யின் வாழ்வில் மத்ஸ்யகந்தி
புகும் அழகு அருமை.விவரங்கள் எல்லாம் புதிது.

நன்றி கீதா.

ஸ்ரீராம். said...

அப்படியே நேரில் பார்த்தது போல மத்ஸ்யா பற்றித்தான் என்ன ஒரு வர்ணனை?

மண்டோதரியின் சகோதரியா சண்டோதரி?!

:)