Tuesday, November 4, 2014

துரியோதனன் போடும் கணக்கு!

ஆனாலும் அவன் தன் முயற்சிகளை விடவில்லை.  அதன் காரணமாக  அவன் தன் குரு துரோணாசாரியாரின் விருப்பத்துக்கு விரோதமாக பாஞ்சால இளவரசிக்காக நடத்தப்பட்ட சுயம்வரத்தில் கலந்துகொள்ள முடிவெடுத்ததைப் பெரியவர்கள் அங்கீகரித்தனர்.  அவனுள்ளும் தன்னம்பிக்கை ஊற்றாகச் சுரந்தது. திரௌபதியை வென்றுவிடலாம் என்றே அவன் திண்ணமாக நம்பினான். பாஞ்சாலத்தின் சக்தி வாய்ந்த சக்கரவர்த்தியான துருபதனுடன் இதன் மூலம் அவனுக்கு ஓர் பிணைப்பு ஏற்பட்டு இருவரும் அரசியல் ரீதியாகவும் ஒருவருக்கொருவர் துணையாக நிற்கமுடியும் என்னும் நம்பிக்கையில் இருந்தான்.  வலுவானதொரு சாம்ராஜ்யத்தின் இளவரசியைத் திருமணம் செய்து கொள்வதன் மூலம் தன் அரசியல் வாழ்க்கையில் ஓர் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படும் என எண்ணினான்.  ஆனாலும் அவனுடைய துரதிர்ஷ்டம் அவனைத் தொடர்ந்தது.


சுயம்வர மண்டபத்தில் அவன் முறை வந்து அவன் போட்டிக்குத் தயார் ஆனபோது மிக மோசமான முறையில் தோற்றுப் போனான்.அந்தத் தந்திரக்காரக் கண்ணன் எப்படியோ திட்டமிட்டு! ஹூம், அவன் எனக்கு உதவி செய்வதாகவன்றோ கூறி இருந்தான்.  ஆனால் அவன் செய்தது! துரோகம்! நம்பிக்கைத் துரோகம்! என்ன செய்து விட்டான்!  ஐவரையும் எப்படியோ உயிர்ப்பித்து விட்டான்! அவன் இவ்வுலகிலேயே மிகவும் வெறுக்கும் நபர்கள் இந்த ஐவர் தான்.  இவர்கள் இறந்துவிட்டனர் என்றல்லவோ அவன் நினைத்திருந்தான்! திடீரென சுயம்வர மண்டபத்தில் அவர்கள் ஐவரும் உயிருடன் வந்துவிட்டனர்!அது மட்டுமா?  சுயம்வரத்தில் அர்ஜுனன் போட்டியில் வென்று திரௌபதியை மணமகளாய்ப் பெற்றும்விட்டான்.  துரியோதனனின் வாழ்க்கையே அழிந்து விட்டது. அவன் முன்னர் ஒரு கோரமான, பயங்கரமானதொரு எதிர்காலம் தெரிகிறது.


மிகுந்த மனக்கசப்புடன் அவன் ஹஸ்தினாபுரம் திரும்பினான்.  அவமானம் அடைந்த உள்ளத்துடன் மனத் துடிப்புத் தாங்க முடியாமல், அனைவர் கண்ணெதிரேயும் நகைப்புக்கு இடமானவனாய், வெற்றிப் பாதையின் அனைத்து வழிகளும் அடைக்கப்பட்டு, நெஞ்சம்முழுக்கக் கசப்பைச் சுமக்க முடியாமல் சுமந்து கொண்டு வந்து சேர்ந்தான்.  ஆனாலும் அவனுடைய ஐந்து விரோதிகளும் திரௌபதியை மணந்து கொண்டிருக்கும் செய்தியைக் கேட்டு வெந்த உள்ளத்துடன் அவர்கள் ஹஸ்தினாபுரம் வரும் முன்னரே அவர்களைக் காம்பில்யத்திலோ அல்லது வரும் வழியிலோ அழிக்கத் துடித்தான்.  ஆனால் அவன் நெருங்கிய நண்பர்களே அதை எதிர்த்துவிட்டனர். அப்படிச் செய்வது கூடாது என மறுத்துவிட்டனர்.  முடிவாகத் தாத்தா பீஷ்மர் ஐந்து சகோதரர்களையும் மிகவும் விமரிசையாக ஹஸ்தினாபுரத்துக்கு வரவேற்க முடிவு செய்துவிட்டார்.  அதோடு நிறுத்தாமல் யுதிஷ்டிரனை மீண்டும் யுவராஜாவாகவோ, அல்லது ராஜாவாகவோ முடிசூட்டவும் முடிவெடுத்து விட்டார்.  இதை அவன் அருமைத் தந்தை திருதராஷ்டிரரும் ஒப்புக் கொண்டிருக்கிறார்.  காம்பில்யத்துக்கு விதுரச் சித்தப்பாவை அனுப்பி ஐவரையும் இங்கே பத்திரமாகக் கொண்டு சேர்க்க முடிவெடுத்து இருக்கின்றனர்.  பரிசுகளை வேறு கொடுத்து அனுப்பி இருக்கின்றனர். அவன் முன்னர் எல்லா வழிகளும் அடைக்கப்பட்டு விட்டன.கடைசியாக அவன் நம்பி இருந்தது ராணிமாதா சத்யவதியைத் தான்.  அவன் பாட்டியான அவரை அவன் மிகவும் நம்பி இருந்தான். அவளிடம் பாண்டவர்கள் ஐவரும் பாண்டுவுக்கு நேரிடையாகப் பிறந்தவர்கள் அல்ல என்பதைத் தெளிவாக எடுத்துரைத்தான்.  ஆகவே அவர்களுக்கு சட்டரீதியாகவோ, அல்லது வேறெந்த வழியிலோ ஹஸ்தினாபுரத்து சிம்மாதனத்தை, பரதன் ஆண்டு வந்த புராதனமான சிங்காதனத்தை அடைய அவர்களுக்கு எவ்வித உரிமையும் இல்லை என்பதைத் தெள்ளத் தெளிவாகச் சொன்னான்.  ஆனால் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாக அந்தக் கிழவி, ஆனாலும் தன்னை வயதானதே தெரியவில்லை எனச் சொல்லிக் கொள்பவள், புதிதாக ஒரு கதையை அவிழ்த்துவிட்டாள்.  ஆனால் அது உண்மையாகவே இருந்து விட்டது என்பது அவன் துரதிர்ஷ்டம் தான்.அவன் தந்தையும், பாண்டுவும் எப்படிப் பிறந்தனர் என்பதை அந்தக் கிழவி எடுத்துச் சொன்னாள்.  இதன் மூலம் பாண்டவர்கள் ஐவருக்கும் ஹஸ்தினாபுரத்திலோ குரு வம்சத்தின் சாம்ராஜ்யத்திலோ இடமில்லை என்றால் அப்படியே அவனுக்கும் அங்கே இடம் இல்லை என்பதைச் சுட்டிக் காட்டினாள்.  அவனுடைய இந்த அகம்பாவம் கொண்ட மனதுக்காக அவனைக் கண்டிக்கவும் செய்தாள்.  இதன் பின்னர் அவனுக்குத் தற்கொலை செய்து கொள்வதைத் தவிர வேறு வழி இருக்கவில்லை. அதிலும் யுதிஷ்டிரன் ஹஸ்தினாபுரம் வந்ததும் அவனை இதற்கு அரசன் ஆக்குவதைப் பார்த்துக் கொண்டு சும்மா இருப்பது என்பதை விட வேறு அவமானகரமான செயல் வேறில்லை.


மனம் மிகவும் வெறுத்த நிலையில்  தன் நெருங்கிய நண்பர்களான கர்ணன், அஸ்வத்தாமா, அவன் சொந்த சகோதரன் துஷ்சாசனன், அவன் தாய்மாமன் ஆன காந்தார இளவரசன் ஷகுனி ஆகியோருடன் ரகசியமாகக் கலந்து ஆலோசித்தான்.  அவன் ஆலோசகர்கள் அனைவருமே ஒரு மனதாக இப்போது எதிர்ப்பைக் காட்ட வேண்டிய சூழ்நிலை இல்லை என்றும், அது மிகவும் முட்டாள்தனமானது என்றும் எடுத்துரைத்தனர்.  மேலும் என்ன நடக்கிறதோ அதை வேடிக்கை பார்த்துக் கொண்டு அதை மகிழ்ச்சியுடன் வரவேற்பது போல் நடிக்கவும் சொன்னார்கள். அதற்குள்ளாக அவர்கள் அனைவரும் இந்தச் சூழ்நிலையில் இருந்து தப்பிக்கவோ, அல்லது இதை மாற்றி அவர்களுக்கு ஏற்ற சூழ்நிலையை உருவாக்கவோ ஏதேனும் ஒரு வழியைக் கண்டு பிடித்துவிடலாம்.


இப்போது அந்த ஐவரும் வெற்றி பெற்ற தலைவர்களைப் போல் ஹஸ்தினாபுரம் நோக்கி வந்து கொண்டிருக்கின்றனர்.  மக்கள் அனைவரும் இதைப் பெரும் விழாவாகக் கொண்டாட ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.  அவன் தந்தையும் பிதாமகர் பீஷ்மரும் பாண்டவ சகோதரர்களை வரவேற்கத் தக்க ஏற்பாடுகளுடன் காத்திருக்கின்றனர்.  அவர்கள் தங்களுடன் ஒரு மாபெரும் படையையும் அன்றோ அழைத்து வருகின்றனர்!  வல்லமை பொருந்திய யாதவ குலத்தலைவன் ஆன கிருஷ்ணனும் அவர்களுடன் வருகிறானாம்.  துரியோதனனின் முதல் எதிரியே அந்த இடையன் கிருஷ்ணன் தான்.


ஹூம்! ஆனாலும் அவன் அண்ணன் பலராமன் துரியோதனனின் குருவாகப் போய்விட்டார்.  தண்டாயுதப் போரில் அவனைத் திறமை வாய்ந்தவனாகச் செய்தவர் அவர் தானே!  இவர்களோடு யாதவர்களில் திறமைசாலிகளான அதிரதர்களும் வருகின்றனராம்.  சுயம்வரத்துக்கு வந்திருந்த பெரும்பாலான இளவரசர்கள் இந்தச் சுயம்வரத்தையும் பாண்டவர்களுடனான திரௌபதியின் திருமணத்தையும் அங்கீகாரம் செய்தவர்களும் தத்தம் பரிவாரங்கள், படை வீரர்களோடு கூட வருகின்றனர்.  ஒரு மாபெரும் ஊர்வலம் ஹஸ்தினாபுரத்தை நோக்கி வருகிறது.


அதற்காகத் தான் அவனுடைய தந்திரக்கார மாமன் ஆன ஷகுனி அவனை இப்போது இங்கே திருதராஷ்டிரனைச் சந்திக்க அனுப்பி உள்ளான்.  திருதராஷ்டிரனுக்குத் தன் மூத்த மகன் துரியோதனனிடம் பாசம் அதிகம்.  தன் மகன் சிறந்த வீரன் என்றும் திறமைசாலி என்றும் மிகவும் அழகானவன் என்றும் திருதராஷ்டிரன் அறிவான்.  ஆனால் தன்னுடைய பிறவிக் குருட்டுத்தனத்தால் மகன் அடைய வேண்டிய அதிர்ஷ்டம் எல்லாம் அவன் கைமீறிச் சென்று விட்டது என்பதை அறிந்து வருந்தினான்.  இதனால் அவன் தன் மகனிடம் கொஞ்சம் அதிகமாகவே பிரியமும், சலுகையும் காட்டி வந்தான்.  மகன் என்ன சொன்னாலும் மறுப்புச் சொல்வதில்லை. இப்போது ஷகுனி திருதராஷ்டிரனின் இந்தப் பாசமும், பரிவும் பாண்டவர்களின் வருகையால் மங்கிவிடாமல் இருக்கவேண்டியே துரியோதனனைத் தன் தகப்பனைச் சென்று பார்க்க அனுப்பி வைத்திருந்தான்.  அவனுடைய ஆலோசனையினாலேயே துரியோதனன் இங்கே தந்தையிடம் வந்திருந்தான்.

2 comments:

ஸ்ரீராம். said...

துரியோதனன் மிகவும் அழகானவன் என்பதை அவன் குணத்தினாலேயே யாரும் ஒப்புக் கொள்வதில்லை போல!

'துரியோதனனை ஆதரித்து ஒரு வழக்கு' புத்தகப் பகிர்வு எங்கள் ப்ளாக்கில் இட்டது உங்களுக்கு நினைவிருக்கும். சென்ற வாரம் அதே புத்தகத்தைப் பற்றி நடிகர் சிவகுமார் சிலாகித்துப் பேசி இருக்கிறார்!

Vasishta said...

கீதாம்மா அவர்களே,

மிகவும் சுவாரசியமான உணர்வுபூர்வமான தொடராக உள்ளது. தொடரட்டும் உங்கள் பணி.

மேலும் இங்கு திரு. முன்ஷியின் இந்த எழுத்தின் நடை, கண்ணனை மிகவும் சாதாரண மனிதனைப் போல் காட்டுகிறது. ஆனால் பாகவதம் கண்ணனை சர்வ சக்தி படைத்த கடவுளாக காட்டுகிறது.

உதாரணமாக பாகவதத்தின் படி குரு சாந்தீபனியின் குமாரனை எமலோகம் சென்று எமதர்மனிடமிருந்தே கண்ணபிரான் மீட்டு வந்தார். ஆனால் இங்கு முன்ஷி வைவஸ்தபுரி என்ற தேசத்திலிருந்து எமன் என்னும் சாதாரண அரசனிடமிருந்து மீட்டதாக குறிப்பிடுகிறார்.

இவற்றில் எது உண்மை? முக்கியமான சந்தேகம். தயவு செய்து பதிலளிக்கவும்.