Monday, June 1, 2015

ராஜ சபையில் விறுவிறுப்பான நிகழ்வுகள்!

சூர்யோதயம் ஆகி நான்கு நாழிகைகளுக்கு மேல் ஆனதும் ராஜ சபை கூடியது. பீஷ்மர் முக்கியமான அதிகாரிகள், மந்திரிகள், சிற்றரசர்கள் போன்றோருக்கு அழைப்பு விடுத்திருந்தார். சக்கரவர்த்தி சிங்காதனத்தில் அமர்ந்து சபையைக் கூட்டி நடத்துவதற்கென இருந்த அறையில் இது ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அனைவரும் அங்கே கூடி இருந்தனர். சபை கூடப் போவதையும் மற்ற தேசங்களில் இருந்து அரசர்கள், சிற்றரசர்கள் வருகின்றார்கள் என்பதையும் அறிந்திருந்த நகர மக்கள், அன்று விடிகாலையில் இருந்தே மாளிகைகளின் முன்னால் இருந்த மைதானங்களில் கூடி விட்டனர். அனைவரும் ஒரு எதிர்பார்ப்போடு ஏதோ நடக்கப் போகிறது என்று காத்திருந்தனர். ராஜ சபையின் முக்கியமான இடம் விறுவிறுப்பான நடவடிக்கைகளில் மூழ்க ஆரம்பித்தது. சாலையின் இரு மருங்கிலும் ஆயுதங்கள் தாங்கிய வீரர்கள் அணி வகுத்து நின்றிருந்தனர். எட்டு யானைகள் நன்றாக அலங்கரிக்கப்பட்டு பட்டுத்துணியால் போர்த்தப்பட்டு முகபடாம் ஜொலிக்க நின்று கொண்டிருந்தன. யானை அசையும்போதெல்லாம் அவற்றின் மேலிருந்து தொங்க விடப்பட்டிருந்த மணிகள் காற்றிலும், யானையின் அசைவிலும் ஒலியை இனிமையாக எழுப்பின.

அரசவைப் பாடகர்கள், பேரிகைகள் முழக்குவோர், எக்காளம் ஊதுபவர்கள், சங்கு ஊதுவோர், புலவர்கள் போன்றோரும் நடன மாதர்களும் அங்கே தயாராகக் காத்திருந்தனர். கட்டியக்காரர்கள் ஒரு வரிசையில் நின்று ஒவ்வொரு முக்கிய விருந்தாளியின் வரவின் போதும் அவர்கள் வரவை அறிவிக்க இன்னொருவன் ஹஸ்தினாபுரச் சக்கரவர்த்தியின் சார்பாக அவர்களை வரவேற்றான். மன்னர்கள் பயணம் செய்து வந்த குதிரைகள், ரதங்கள், யானைகள், பல்லக்குகள் ஆகியன அரண்மனை வளாகத்திற்கு வெகு தொலைவிலேயே நிறுத்தப்பட்டு அங்கிருந்து அரச மரியாதைகளுடன் அழைத்து வரப்பட்டனர். மன்னர் சார்பில் விதுரர் தாமே நேரில் அங்கே நின்று கொண்டு அனைவரையும் வரவேற்றார்.  விரைவில் சபா மண்டபம் நிறைந்து போயிற்று. சபாமண்டபத்தின் நுழைவாயிலுக்கு நேர் எதிரே ஒரு அழகான மண்டபம் நடுவில் காணப்பட்டது. கோபுரம் போல் உயர்ந்து காணப்பட்ட அங்கே ஒன்பது சிங்காதனங்கள் காணப்பட்டன. எல்லாவற்றிலும் சிங்க முகம் செதுக்கப்பட்டுக் காணப்பட்டது. வலப்பக்கமாக ஐந்தும், இடப்பக்கமாக நான்கும் இருந்தன. இரண்டு பக்கமும் உள்ள கடைசி சிங்காதனம் வெள்ளியால் ஆக்கப்பட்டிருக்க மற்றவை எல்லாம் சொக்கத்தங்கமாக இருந்தது. அங்கே ஒரு மரப்பெஞ்சும் காணப்பட்டது. அதன் மேல் மான் தோல் போட்டு அலங்கரிக்கப்பட்டிருந்தது. அங்கே தான் வியாசருக்கு அமர இடம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது என அனைவரும் அறிந்தனர்.

எல்லா சிங்காதனத்தின் பின்னும் ஒரு அழகான பெண் அழகாக அலங்கரித்துக் கொண்டு கைகளில் சாமரங்களுடன் அரச குலத்தினர் அமர்ந்ததும் அவர்களுக்கு சாமரத்தால் விசிறத் தயாராகக் காத்திருந்தனர். ஆங்காங்கே இருந்த தூண்களில் குலைகளோடு கூடிய வாழை மரங்கள் கட்டப்பட்டிருந்தன. அங்கிருந்த சுவர்களின் முன்னால் மல்லர்கள் தங்களைச் சால்வைகளாலும் நல்ல பட்டாடைகளாலும் அலங்கரித்துக் கொண்டு தங்கள் பலத்தைக் காட்டிக் கொண்டு நின்றிருந்தனர். சிங்காதனங்களுக்கு அருகே பலியா தன் பலமற்ற கால்களின் துணையோடு நின்று கொண்டிருந்தான். அவனருகே துணைக்கு அவன் மகன் சோமேஸ்வர் நின்று கொண்டிருந்தான். சோமேஸ்வர் கரங்களில் ராஜ குலத்தினர் பயன்படுத்தும் ஓர் அழகான அலங்காரமான குடை காணப்பட்டது. ஓரங்களில் தங்க மணிகள் தொங்க உள்ளே முழுதும் ஜரிகை வேலைப்பாட்டுடன் காணப்பட்டது அந்தக் குடை.

இம்மாதிரியான அரசகுல சம்பிரதாயங்களை பாண்டவர்களின் தகப்பன் ஆன பாண்டு இறந்ததிலிருந்து கடைப்பிடிக்கவில்லை. ஏனெனில் பீஷ்மர் தான் சிங்காதனம் ஏற மாட்டேன் என சபதம் செய்திருக்க, திருதராஷ்டிரனோ பிறவிக் குருடாதலால் சிங்காதனம் ஏறும் தகுதியை இழந்து பெயருக்குத் தான் அரசனாக வீற்றிருந்தான். இங்கேயும் அரசகுலத்தவருக்கு எனத் தனியாக அமர்த்தப்பட்ட கட்டியக்காரர்கள் அவரவர் ஆசனத்தில் அமரும்போது அவரவர் தகுதியையும், விருதுகளையும், திறமைகளையும் எடுத்துச் சொல்லத் தயாராகக் காத்திருந்தார்கள்.  நுழைவாயிலில் இருந்து நேரே ஒரு நடைபாதை சென்றதால் அந்த சபா மண்டபத்தை அது இரு பிரிவாகப் பிரித்திருந்தது. இருபக்கமும் அழைக்கப்பட்ட முக்கிய விருந்தாளிகள் அமர்ந்திருந்தனர். ஒவ்வொருவருக்கும் தனியாக அமரும்படி பட்டுக்கயிறுகளால் ஆசனங்கள் தடுக்கப்பட்டிருந்தன.

1 comment:

ஸ்ரீராம். said...

வர்ணனைகள்...வர்ணனைகள்!