Friday, September 11, 2015

பாமாவின் சாகசங்கள்!

வரவேற்பு விழாவுக்கு பாமா சென்றதன் உண்மையான காரணத்தை அவள் தந்தையால் புரிந்து கொள்ள முடியவில்லை என்பதில் பாமா சந்தோஷமே அடைந்தாள். ஆனாலும் தந்தையிடம் இன்னும் அடக்கமாகத் தலையைக் குனிந்த வண்ணமே, “இல்லை  தந்தையே!” என்றாள். “ஹூம்! நிமிர்ந்து என்னைப் பார் பாமா!” சத்ராஜித் கோபமாக ஆணையிட்டான். பாமா நிமிர்ந்து பார்த்தாள். அவள் கண்களோ நீரை மழையாக வர்ஷித்தன. சத்ராஜித் அவளைக் கோபமாகப் பார்த்தான்.

“நீ அவனிடம் பைத்தியமாக இருக்கிறாய்!” என்றான் குற்றம் சாட்டும் தொனியில். பாமா வாயைத் திறந்து ஒரு வார்த்தை கூடப்பேசவில்லை. ஆனாலும் அவள் தந்தை தன்னைத் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறார் என்பதை உணர்ந்தும் அவள் அதை மாற்றச் சிறிதும் முயலவில்லை. ஏன் வரவேற்புக்குச் சென்றோம் என்பதையும் அவரிடம் கூறவில்லை. “வெட்கம் கெட்ட பெண்ணே! இரு வருடங்கள் முன்னர் தான் நீ அவனைக் கடத்தி வந்தாய்! ஒரு திருடனைப் போல் என் குதிரைகளைத் திருடி அவனுக்குக் கொடுத்தாய்! ரதங்கள், படைக்கலங்கள் எனப் பலவும் அவனிடம் ஒப்படைத்தாய்!” சத்யபாமா அவனிடம் முறையிடும் தொனியில் பேச ஆரம்பித்தாள். “தந்தையே! பலராமனிடம் இருந்தும் முக்கியமாய் அவருடைய கடுங்கோபத்திலிருந்தும் உங்களைக் காக்க வேண்டியே நான் இதைச் செய்தேன். சாத்யகியை நீங்கள் ஆட்களை வைத்துக் கொன்று விட்டீர்கள் என சந்தேகப்பட்டார். அவருடைய கோபம் உசுப்பி விடப்பட்டால் என்ன நடக்கும் என்பதை நீங்கள் நன்கறிவீர்களே தந்தையே! உங்களை இந்தப் பழியிலிருந்து நீக்க வேண்டி சாத்யகியை நான் ராஜா உக்ரசேனரின் முன்னால் ஒப்படைக்க வேண்டி இருந்தது. “ மிகவும் யோசித்து யோசித்துப் பேசினாள் சத்யபாமா.

“அது என்னவோ உண்மை தான்! என்னை ஒரு தர்மசங்கடமான சூழ்நிலையிலிருந்து நீ காப்பாற்றித் தான் விட்டாய்! ஆனால் அதன் பிறகு? நடந்தது என்ன? நான் உன்னை எவ்வளவு எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளும்படி அறிவுறுத்தினேன்! அந்த நிகழ்ச்சிக்குப் பிறகாவது கொஞ்சம் நாகரிகத்தைக் கடைப்பிடிக்கும்படி வற்புறுத்தினேன். உனக்குப் பிடித்திருக்கிறது என்பதற்காக இளைஞர்களைக் கடத்தாதே என அறிவுறுத்தினேன். நீ யாருடைய பெண்? சத்ராஜித்தின் பெண்! என் பெண்ணாக இருந்து கொண்டு நீ இம்மாதிரியான அசிங்கமான நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கலாம். இவற்றில் எல்லாம் நீ கலந்து கொள்ளவே கூடாது!”
சொல்லொணா அடக்கத்துடன், “சரி, தந்தையே!” என்று தலையை ஆட்டினாள் சத்யபாமா! ஆனால் சத்ராஜித் சமாதானம் அடையவில்லை. “ஒவ்வொரு முறையும், நீ சரி அப்பா! என்று தான் கூறுகிறாய்! அதனால் என்ன பயன்? அந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் நீ உன் திருமணத்தை சாத்யகியுடன் நடத்துவது குறித்த முடிவை முழுக்க முழுக்க என்னிடம் விட்டிருந்தாய்! அதுவாவது உன் நினைவில் இருக்கிறதா? “ “ஆம் தந்தையே! நான் அப்படித் தான் சொன்னேன்!” என்றாள் பாமா.

“உனக்குக் கொஞ்சமாவது தன்மானமோ, சுய மரியாதையோ இருக்கிறதா? இருந்திருந்தால், இப்படிப் போவாயா? அந்த சாத்யகி, திமிர்பிடித்தவன், துஷ்டன், பொல்லாதவன் என்னையும் நம் குடும்பத்தினர் மொத்தப் பேரையும் எப்படி அவமதித்து விட்டான்!” மேலும் கடுமையாகப் பேசினான் சத்ராஜித். “தன் மகனுக்கு உன்னை மணமுடிக்க மறுத்ததன் மூலம் அந்த சாத்யகன் என்னையும் நம் குடும்பத்தினரையும் அவமரியாதை செய்துவிட்டான். “கடுமையாகப் பேசினான் சத்ராஜித். முகத்தைச் சுளித்துக் கொண்டு, கோபத்தில் வளைந்த உதடுகளுடன், “உன்னை அவன் மகனுக்கு மணமுடிக்க மறுத்திருக்கிறான். அவன் மனதில் தான் என்னவோ பெரிய சக்கரவர்த்திக் குடும்பம் என்னும் நினைப்புப் போலும்! நம்மை விட எவ்விதத்தில் அவர்கள் உயர்ந்தவர்கள்?”

“ஆம், தந்தையே!”

“நிறுத்து, உன்னுடைய ஆமாம், ஆமாம் என்னும் சொல்லைக் கேட்டு எனக்கு அலுத்துவிட்டது.” கோபம் வரும் சமயங்களில் எல்லாம் குரலை உயர்த்திப் பேசுவது சத்ராஜித்தின் வழக்கம். இதன் மூலம் எதிராளிகள் பயந்துவிடுவார்கள் என்று எண்ணினான். “அப்போதும் நீ என்னை அவமதித்தாய்; அவமானம் தேடிக் கொடுத்தாய்! இப்போதும் நீ என்னை அவமதித்து விட்டாய்! அவமானம் தேடிக் கொடுத்திருக்கிறாய்!” என்று கத்திக் கொண்டே தன் கண்களைப் பயங்கரமாக உருட்டி விழித்த வண்ணம் அவளைப் பார்த்தான் சத்ராஜித். சத்யபாமாவோ கண்ணீரை ஏராளமாகப் பெருக்கினாள். அதன் பின்னர் தன் கையிலிருந்து ஒரு துணியினால் முகத்தை மூடிக் கொண்டு நெஞ்சைப் பிளக்கும்படி விம்மி அழ ஆரம்பித்தாள். அவளுக்கு நினைத்த நேரம் கண்ணீர்  வருவதோடு விம்மி அழுவதையும் அவள் வழக்கத்திற்குக் கொண்டு வந்திருந்தாள். அவள் தந்தையை சாந்தப்படுத்த இது நல்லதொரு தீர்வாகவும் இருந்தது.

அந்தப்புரத்திலிருந்து சத்யபாமாவுடன் வந்திருந்த அவள் செல்லப் பூனை ஊர்வசி சிறிது நேரம் அங்கேயே தன் எஜமானிக்காகக் காத்திருந்தது. ஏற்கெனவே பொறுமையின்றி இருந்த அந்தப்பூனை இப்போது தன் எஜமானியின் விம்மல் கேட்டதும், அது தானும் இந்தப் பிரச்னையில் நுழைய இதுவே தக்கதொரு சந்தர்ப்பம் என நினைத்தது போலும்! மெதுவாக ஆனால் உறுதியாகத் தன் அடிகளை ஒவ்வொன்றாக எடுத்து வைத்து வந்தது அது. சத்ராஜித் அந்த வீட்டின் தலைவன் என்றாலும் அது அவனை லட்சியம் செய்ததே இல்லை. அவனை ஒரு பார்வை கூடப் பார்த்தது இல்லை. இப்போதும் அது தன் எஜமானியிடம் சென்று அவளை உரசிக்கொண்டு தன் வாலை உயர்த்திக் கொண்டு நின்றது. சத்ராஜித்தைப் பார்த்து, ஒரு “மியாவ்” என்னும் குரல் மூலம் தன் எதிர்ப்பையும் தெரிவித்தது. சத்யபாமாவுக்குச் சிரிப்பு வந்துவிட்டது. அவள் தன் சிரிப்பை அடக்கிக் கொள்ளப் பெரும்பாடு பட்டாள். அவள் தந்தை மிகக் கோபத்துடன் அந்தப் பூனையைப் பார்த்தார். பின்னர் அவளிடம் அதே கோபத்துடன் “சத்யா, இந்தப் பூனையை வீட்டை விட்டு வெளியே விரட்டு என உன்னிடம் எத்தனை முறை கூறியாகி விட்டது!” என்றான். அவன் கோபம் இப்போது ஊர்வசியின் பால் சென்றது.

“தந்தையே! நான் என்ன செய்ய முடியும்?” என்று வேறு வழியில்லை தனக்கு என்பதைக் காட்டும் வண்ணம் பேசிய பாமா மேலும் கூறினாள். “ நான் இந்தப் பூனையை வெளியே விரட்டும்படி பலமுறை நீங்கள் கூறிவிட்டீர்கள் தான். நானும் பலமுறை முயன்றேன். ஆனால் இந்தப் பூனை வெட்கம் கெட்டதாக இருக்கிறது. ஒவ்வொரு முறை நான் வெளியே இதை விரட்டும்போதெல்லாம் இவள் துவாரகை முழுதும் சென்று சுத்துகிறாள். மற்றப் பூனைகளுடன் பழகுகிறாள். அதன் பின்னர் நடு இரவில் உடல் முழுக்க அழுக்கோடு மிக அலங்கோலமான நிலையில் திரும்புகிறாள். நான் இரவு முழுதும் செலவு செய்து அவளைச் சுத்தப்படுத்த வேண்டி உள்ளது. ஆஹா! இவள் மிகவும் பயங்கரமானவளாகத் தான் இருக்கிறாள், தந்தையே!” என்ற வண்ணம் அந்தப் பூனையைத் தன் கைகளில் எடுத்து அணைத்துக் கொஞ்சினாள் பாமா.

1 comment:

ஸ்ரீராம். said...

//அவளுக்கு நினைத்த நேரம் கண்ணீர் வருவதோடு விம்மி அழுவதையும் அவள் வழக்கத்திற்குக் கொண்டு வந்திருந்தாள்.//

யு டூ பாமா!!

//சத்ராஜித்தைப் பார்த்து, ஒரு “மியாவ்” என்னும் குரல் மூலம் தன் எதிர்ப்பையும் தெரிவித்தது.//

ஹா...ஹா....ஹா...