Sunday, September 13, 2015

கண்ணனை நம்பாதே!

“முதலில் அந்தப் பூனையைத் தலையைச் சுற்றி சமுத்திரத்தில் மூழ்கடித்துக் கொன்று விடு!” என்றான் சத்ராஜித் கோபமாக.

“தந்தையே, தந்தையே! பாவம் ஊரி! இவள் என்ன செய்தாள் உங்களை? அவளுக்குக்கோபம் வந்தால் உங்களைப் பார்த்து சீறுகிறாள். மற்றபடி மிக மிக நல்லவள். என்னிடம் மிகவும் அன்பு காட்டுவதோடு உங்களிடம் மரியாதையும் வைத்திருக்கிறாள். இவளைப்போய் நான் மூழ்கடிப்பேனா? வாய்ப்பே இல்லை தந்தையே!”சத்ராஜித்துக்கு என்ன சொல்வது என்பதோ அல்லது அடுத்து என்ன செய்யலாம் என்றோ தெரியவில்லை. இந்தப் பூனையைத் தானே வாங்கித் தூக்கி எறிந்துவிடலாமா என்று கூட நினைத்தான்; அல்லது இதை ஒரேயடியாக மறந்துவிட்டு பாமாவிடம் தான் தொடங்கிய சம்பாஷணையின் தீவிரம் குறையும் முன்னர் தொடரவேண்டும்! எதைச் செய்யலாம்? முடிவாக அவன், “இந்தச் சனியனை என் கண்பார்வையிலிருந்து அப்புறம் கொண்டு செல்!” என்றான். தன்னுடைய அடக்கம் மாறாமலேயே அதே கீழ்ப்படிதலுடன் சத்யபாமா அறை வாயிலுக்குச் சென்று பூனையை அறைக்கு வெளியே விட்டுவிட்டுத் திரும்பத் தந்தையிடம் வந்தாள்.

அவள் எதிர்பார்த்தது நடந்து விட்டது; அவள் திரும்புவதற்குள்ளாக சத்ராஜித்தின் கோபம் மறைந்து போயிருந்தது. என்றாலும் சத்யபாமாவிடம் பேசுகையில் பழைய கோபமும், உறுதியும் இருக்கிறாற்போலவே பேச ஆரம்பித்தான். “இதோ பார்! சத்யபாமா! முதலும் முடிவுமாக உனக்கு ஒன்றைக் கூறுகிறேன். சாத்யகியைக் குறித்த என்னுடைய திட்டத்தில் நீ தலையிட்டாயெனில் உன்னைச் சாட்டையால் அடிப்பேன்!” என்று கோபத்தை வரவழைத்துக் கொண்டு சொன்னான். சொல்லிக் கொண்டே தன் தாடியை நீவி விட்டுக் கொண்டான். சத்யபாமா மாறாப் பணிவை மீண்டும் காட்டிய வண்ணம் தீவிரமான குரலில், “தந்தையே, என் மனப்பூர்வமான உறுதிமொழியை உங்களுக்கு அளிக்கிறேன். சாத்யகியை என் கணவனாக அடைய வேண்டும் என்னும் எண்ணம் எனக்குக் கிடையவே கிடையாது. அதற்காக நான் எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை.”

“உனக்காக நான் செய்வேன்! நான் செய்கிறபடி செய்தால் அந்த சாத்யகன் வழிக்கு வருவான். தன் பிள்ளைக்கு உன்னை மணமுடித்துக் கொள்வான். அவன் கர்வத்தை எப்படி ஒடுக்குவது என்பது எனக்குத் தெரியும்.”

“ஆம், தந்தையே!” என்ற பாமா கொஞ்சம் தயங்கினாள். என்றாலும் தந்தைக்கு மீண்டும் உறுதிமொழியை அளித்தாள். சந்தோஷமாகவே இந்த் உறுதிமொழியை அளித்தாள். ஏனெனில் சாத்யகிக்கும் அவளை மணக்கும் எண்ணம் சிறிதும் இல்லை என்பதை அவள் நன்கு அறிந்திருந்தாள். அவள் தந்தை என்ன செய்தாலும் அவன் ஒத்துக்கொள்ள மாட்டான் என்பதும் அவளுக்குத் தெரிந்திருந்தது. அவள் நடந்து கொள்ளும் முறையை நினைத்து நினைத்து அவளுக்கு உள்ளூரச் சிரிப்பு வந்தது. சாத்யகன் நிச்சயமாக அவளைத் தன் மகனுக்கு மணமுடிக்க ஒத்துக்கொள்ளப்போவதில்லை. அவன் மகனான யுயுதானா சாத்யகியோ கிருஷ்ணனை அவள் மணக்க அவளுக்கு உதவி செய்வதாக உறுதி அளித்திருக்கிறான்.

ஆனால் சத்யபாமா இந்த உறுதிமொழியை அவள் தந்தைக்கு அளிக்கையில் சத்ராஜித்தின் முகம் பெருமையிலும், கர்வத்திலும் மலர்ந்தது.  தாயற்ற தன் ஒரே மகளான சத்யபாமாவை அவன் மிகவும் நேசித்தான். அவள் குழந்தைப் பருவத்திலிருந்தே அவள் முகம் வாடுவதை அவன் விரும்பியது இல்லை. அதோடு அவளை நீண்ட நேரம் கோபித்துக் கொண்டு அவளை வாட விடுவதையும் அவன் விரும்பியது இல்லை. ஆகவே தன் கோபத்தைக் குறைத்துக் கொண்டான் சத்ராஜித். இப்போது அவன் மனம் மிகவும் நெகிழ்ந்து போயிருந்தது. முற்றிலும் மாறிவிட்டான். அவளிடம் சமாதானமாகப் பேசும் தோரணையில் விவரித்தான்: “பாமா! இந்த யாதவத் தலைவர்களை சாமான்யமாக எண்ணாதே! மிகவும் கர்வம் பிடித்தவர்கள். நம்மை என்னவோ அவர்களுக்கு அடிமை என்றே நினைக்கிறார்கள். நீ எதற்கும் கவலைப்படாதே! அவர்கள் செருக்கை நான் அடியோடு ஒழித்துக் கட்டுகிறேன். விரைவில் நீ சாத்யகியின் மனைவியாக ஆகிவிடுவாய்!” என்றான்.

“சரி, பெண்ணே, நீ இப்போது இங்கிருந்து செல்! உன் சிற்றன்னையர் உனக்காகக் காத்துக் கொண்டிருப்பார்கள். “ என்று கூறிய சத்ராஜித்தின் உள் மனதில் தன் பெண்ணின்  மனதை மாற்றிவிட்டோம் என்ற பெருமிதம் நிரம்பி இருந்தது. சத்யபாமா அங்கிருந்து செல்ல எண்ணி எழுந்தாள். ஆனால் அவளுள் திடீரென ஓர் எண்ணம்! தந்தை இப்போது நல்ல மனதோடு சுமுகமான மனநிலையில் இருக்கிறார். இப்போது கிருஷ்ணனைப் பற்றிக் கூறி ஒரு முயற்சி செய்து பார்த்தால் என்ன? தன்னைச் சுதாரித்துக் கொண்டு அவளால் எவ்வளவு இயலுமோ அவ்வளவு இயல்பாகவும், இனிமையாகவும் தன் குரலை வைத்துக் கொண்டு தந்தையைப் பார்த்து, “தந்தையே, வாசுதேவன் என்ன சொன்னான் என்பதை நீங்கள் அறிவீர்களா?” என்று கேட்டாள்.

“எந்த வாசுதேவன்? பலராமனா? அல்லது அந்தக் கிருஷ்ணனா?”

“கிருஷ்ணா!” என்று சொன்ன பாமாவின் குரல் அந்தப் பெயரைச் சொல்லும்போதே அந்தக் குரலுக்குடையவன் தனக்குத் தான் சொந்தம் என்னும் எண்ணம் தோன்றும்படியாகச் சொன்னாள்; அல்ல; சொல்ல நினைத்தாள்; ஆனால் அவள் குரல் அந்தப் பெயரைச் சொல்கையில் தழுதழுத்தது. அவளுக்குக் குரலே வரவில்லை. இதை எல்லாம் சற்றும் கவனிக்காத சத்ராஜித் கடுகடுவென்ற குரலில்,” அவன் ஒரு மோசக்காரன்; வஞ்சகன்!” என்றவன் மேலும் தொடர்ந்து, “அவன் என்னமோ தன்னை ஒரு கடவுள் அல்லது கடவுளுக்கு நிகரானவன் என்றல்லவோ நினைக்கிறான்! அவன் யார், என்ன, எப்படி இருந்தான், எப்படி இருக்கப் போகிறான் என்பதை எல்லாம் நான் விரைவில் அவனுக்குக் காட்டுகிறேன்.” என்றான்.

“ஆனால், தந்தையே, அவன் நம்முடன் நட்புப் பாராட்டவே விரும்புகிறான்.”

“எனக்கு அதைப் பற்றியெல்லாம் எவ்விதக் கவலையுமில்லை; அக்கறையும் இல்லை! பெண்ணே! அவன் நண்பனாக இருந்தால் என்ன? எதிரியாக இருந்தால் தான் என்ன?” என்றவனுக்குள் திடீர் சந்தேகம் தலை தூக்க, “அது சரி, பாமா, உனக்கு அவன் கூறியது எப்படித் தெரியும்?” என்று கேட்டான். “ஓ, அவனே என்னிடம் கூறினான், தந்தையே! சுபத்ரா அவனிடம் என்னை அறிமுகம் செய்து வைத்து சத்ராஜித்தின் மகள் என்று கூறினாள். உடனே அவன், என்னிடம், “பெண்ணே, மாட்சிமை பொருந்திய  உன் தந்தையைச் சந்தித்து என் நமஸ்காரங்களை அவரிடம் தெரிவித்து ஆசிகள் வாங்க நானே உங்கள் மாளிகைக்கு ஒரு நாள் வருகிறேன்.” என்றான்.

“ஆஹா, அவன் சொல்வதை எல்லாம் நீ நம்பிவிடாதே! உனக்கு என்ன தெரியும்?” என்று இறுமாப்புடன் அலட்சியமாகப் பேசிய சத்ராஜித் தொடர்ந்து அவளிடம், “ அவன் மிக இனிமையாகத் தான் பேசுவான்; ஆனால் அவன் மனமெல்லாம் விஷம்! யாதவ குலத்தையே அவன் தான் கெடுத்துவிட்டான். அவனைத் தலைவனாக அவர்கள் ஏற்றதிலிருந்து தீராத சங்கடங்களையும், பிரச்னைகளையும் யாதவர்கள் சந்தித்து வருகின்றனர். பொறுத்திரு பெண்ணே! இவனையும் நான் ஒரு கை பார்க்கிறேன். என் வழியில் இவனுடைய அட்டகாசங்களுக்கு ஒரு முடிவு காணுவேன்.”

“ஆனால் தந்தையே, கம்சனை மட்டும் இவன் கொன்றிராவிட்டால், நாம் இருந்த இடத்திலிருந்து திரும்ப மதுரா வந்திருப்போமா? சந்தேகம் தான் இல்லையா? ஜராசந்தனின் கொடுங்கோன்மையிலிருந்தும் தப்பினோம். இவை அனைத்தும் வாசுதேவ கிருஷ்ணனால் தான் அல்லவா?”

“இம்மாதிரி முட்டாள் தனமான பேச்சுக்களை எல்லாம் கேட்டு அவற்றை நம்பாதே! அவன் தன்னையும், தன் குடும்பத்தையும் காப்பாற்றிக் கொள்ள வேண்டித் தன் மாமன் ஆன கம்சனைக் கொன்றான். இந்தக் காட்டுக்கு நம்மை அழைத்து வந்ததும் அவன் தானே! அதுவும் எதற்காக? ஜராசந்தனிடமிருந்து தப்புவதற்காக!  ஜராசந்தன் இந்தக் கிருஷ்ணனை மட்டும் ஒப்படைத்திருந்தால் நம்மை எல்லாம் விட்டிருப்பான். அவன் ஒருவனைக் காப்பாற்ற வேண்டி நம்முடைய ராஜ்யத்தையும் ஊரையும் விட்டு விட்டு இந்தக் காட்டில் வந்து அடைக்கலம் புகுந்திருக்கிறோம். அவன் மட்டும் ஜராசந்தனிடம் சரண் அடைந்திருந்தால் யாதவர்கள் இப்படிக் கடுமையான பிரயாணம் செய்து இங்கே வந்திருக்க வேண்டியதே இல்லை. மதுராவிலேயே சந்தோஷமாக இருந்திருக்கலாம்.” என்றவன் மேலும் தொடர்ந்து, “இவனால் தான் மதுராவில் இருந்த நம் பூர்விக வீடு எரிக்கப்பட்டுச் சாம்பலாயிற்று!” என்றான்.

1 comment:

ஸ்ரீராம். said...

அவருக்கு அவர் நியாயம்!