Tuesday, October 18, 2016

வேத வியாசர் ஆலோசனைகள் கூறுகிறார்!

ஏற்கெனவே குரு வம்சத்தின் ராஜகுலத்தில் அடுத்தடுத்து நடந்த நிகழ்வுகளால் வேத வியாசர் அமைதியின்றி மிகவும் கலங்கிப் போயிருந்தார். திரும்பத் திரும்ப அந்தக் குடும்பத்தையே துரதிர்ஷ்டம் தாக்குவது குறித்து வேதனை அடைந்தார். தன் தாய் சத்யவதியிடம் முன்னர் கூறிய வார்த்தைகள் அவர் நினைவில் இப்போதும் பசுமையாக நினைவில் இருந்தன. “நான் கடவுளரால் மேலுலகுக்கு அழைக்கப்படும் வரை தர்மத்திற்காகவே பாடுபடுவேன்! இந்தக் குரு வம்சத்தில் அதற்கிசைவாகச் சக்கரவர்த்தி எவரும் தோன்றவில்லை எனில் என் இஷ்ட தெய்வமான சூரிய பகவான் அருளால் சாஸ்வத தர்மகுப்தனாக ஒருவரைக் கண்டடைவேன். அப்படி யார் பிறந்திருக்கின்றார்கள் என்பதைத் தேடிப் பார்ப்பேன். தீமைகளை ஒழித்து நன்மைகளைப் பாதுகாத்து தர்ம சாம்ராஜ்யத்தை நிலை நிறுத்துபவர்களைக் கண்டடைவேன். இது நிச்சயம் ஓர் நாள் நடக்கும். எனக்கு நம்பிக்கை இருக்கிறது!” என்று சொல்லி இருந்தார்.

அவை தீர்க்கதரிசனமான வார்த்தைகள் என்பதை இப்போது அவர் புரிந்து கொண்டிருந்தார். அவர் தீமைகளை அழிக்கவும், தர்மத்தைப் பாதுகாக்கவும் யாரைத் தேடினாரோ அவரை அவருடைய தெய்வமான சூரிய பகவான் எங்கே இருப்பதாகக் காட்டிக் கொடுத்திருக்கிறான்! இதோ எதிரே உள்ளானே! கிருஷ்ண த்வைபாயனர் மனதுக்குள்ளாக வாசுதேவக் கிருஷ்ணனை ஆசீர்வதித்தார். ஒரு பெருமூச்சுக் கிளம்பியது அவரிடமிருந்து! அதை அடக்கிக் கொண்டார். ஹூம், இவன் மட்டும் ஓர் அரசன் மகனாகப் பிறந்திருந்தான் எனில் நிச்சயம் விரைவில் ஓர் மஹா சக்கரவர்த்தியாக ஆகி இருப்பான். இந்த ஆரிய வர்த்தம் முழுமையையும் ஓர் குடைக்குள் அடக்கி தர்ம சாம்ராஜ்யத்தின் ஒரே பிரதிநிதியாக இதற்கு முன் ஆட்சி புரிந்தவர்களை எல்லாம் விட அதிகமாகப் புகழ் பெற்று விளங்கி இருப்பான். இப்படி ஓர் தர்மத்தின் பிரதிநிதி, தர்மத்திற்காக உண்மையாக உழைப்பவன் தான் இப்போதுள்ள சூழ்நிலையில் ஆர்யவர்த்தத்தின் முக்கியத் தேவையும் கூட! ஆனாலும் அவர் தன் நினைவுகளை வெளியில் சொல்லிக் கொள்ளக் கூடாது. நடக்கிறபடி நடக்கட்டும். நிச்சயித்த நேரத்தில் சூரியனால் ஏற்பாடு செய்யப் பட்ட மனிதன் கட்டாயம் வெளிப்பட்டே தீர வேண்டும். எல்லாவற்றுக்கும் அந்தக் கடவுள் அருள் புரிய வேண்டும்.

சற்று நேரம் சம்பிரதாயமான பேச்சு வார்த்தைகளுக்குப் பின்னர் வேத வியாசர் யுதிஷ்டிரனைப் பார்த்தார். “யுதிஷ்டிரா, எங்களை நீ இங்கே அழைத்ததற்கான காரணங்களையும் சூழ்நிலையையும் நன்றாக விளக்கமாகச் சொல்! அது மிகப் பெரிய முக்கியமான விஷயம் என்பது புரிகிறது.” என்றார். “ஆம், ஐயா, ஆம்! அது மிக மிக முக்கியமானதொரு பெரிய விஷயம் தான்! “ என்ற யுதிஷ்டிரனுக்குத் தனக்கு அந்தச் செய்தி கிடைத்த விதம் நினைவில் வர, அந்த வார்த்தைகள் மீண்டும் மீண்டும் ஓர் எதிரொலி போல் அவன் காதுகளில் ஒலித்தன. அவன் மனதை அந்த நிகழ்ச்சி முழுதும் ஆக்கிரமித்துக் கொண்டது.”ஆசாரியரே! எங்கள் முன் இருக்கும் ஒரு பெரிய கேள்விக்குப் பதில் தேவை! அதற்கு உங்கள் உதவியை நாங்கள் எதிர்பார்க்கிறோம். நாங்கள் ராஜசூய யாகத்தை ஏற்று நடத்தலாமா? அல்லது நடத்தாமல் இருந்தால் நல்லதா?” என்று கேட்ட யுதிஷ்டிரன் தன் தந்தை பாண்டு ராஜசூய யாகம் நடத்த ஆசைப்பட்டதையும் அது நிறைவேறாமல் அவர் இறந்ததையும் வியாசரிடம் குறிப்பிட்டான். பின்னர் அவன் யமுனைக்கரையில் இதைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருந்த போது நாரத முனி, கடவுளரின் மனசாட்சியாகச் செயல்படுபவர்  அங்கே தோன்றியதையும், முன்னோர்களின் பித்ருலோகத்தில் இருக்கும் பாண்டுவிடமிருந்து தனக்குச் செய்தியை எடுத்து வந்ததையும் தெரிவித்தான்.

இவற்றைச் சொன்ன பிறகு யுதிஷ்டிரனால் தன் உண்மையான எண்ணத்தை மறைக்க இயலவில்லை. அந்தச் செய்தியைச் சொன்ன விதம் அது தான் இறுதி முடிவு என்பதாகவும் அவன் அதற்கு அடங்கியே கீழ்ப்படிந்து நடக்கவேண்டும் என்றும் தெரிய வருவதாகக் குறிப்பிட்டான். “என் சகோதரர்கள் தந்தையின் நிறைவேறாத இந்த ஆசையை நிறைவேற்றியே ஆகவேண்டும் என்கிறார்கள். அது தான் சரியோ?” என்று தயக்கம் கலந்த விதமாகக் கேட்டான் யுதிஷ்டிரன். அவனால் தான் என்ன செய்ய முடியும் என்ற எண்ணம் இருந்ததும் புரிய வந்தது. வியாசர் அதற்கு, “உன் சகோதரர்கள் என்ன கருத்ஹ்டுச் சொல்கின்றனர்?” என்று கேட்டார். பீமன் அப்போது குறுக்கிட்டான்.

“ஆசாரியரே, நாங்கள் ஏற்கெனவே பல மன்னர்களை வென்றிருக்கிறோம். எங்கள் மேலாதிக்கத்தை அவர்கள் அனைவரும் ஒப்புக் கொண்டிருக்கின்றனர். ஆகவே இப்போது நாங்கள் ராஜசூய யாகம் செய்ய விரும்புகிறோம். அதற்கு உங்கள் ஆசிகளும் கிருஷ்ண வாசுதேவனின் உதவியும், ஆலோசனைகளும் தேவை!” என்றான். சஹாதேவனைப் பார்த்துத் திரும்பிய வியாசர் சிரித்தார். “சஹாதேவா, உனக்கு எதிர்காலம் குறித்து சொல்வதற்கு நன்கு தெரியும்! ஆனாலும் நீ ஏன் வாயே திறப்பதில்லை? யாரேனும் கேட்டால் தவிர நீ உன் வாயைத் திறப்பதில்லை என்று வைத்திருக்கிறாய் போலும்! எல்லாம் சரி! அந்த சுப முஹூர்த்த நேரம் வந்து விட்டதா? உங்கள் வீரர்கள் அனைவரும் இந்த யாகத்திற்கான வேலைகளில் ஈடுபடலாமா?” என்று கேட்டார். சகாதேவனோ தன் ஒற்றை விரலைக் கிருஷ்ண வாசுதேவன் பக்கம் நீட்டிய வண்ணம், “அதோ, அவனைக் கேளுங்கள்!” என்று சொல்லிவிட்டு மீண்டும் வாயை மூடிக் கொண்டான்.

“சரி, இப்போது என்ன கஷ்டம்? புரியவில்லையே!” என்றார் வியாசர். “ஒரு பிரச்னையும் இல்லை. கஷ்டம் ஏதும் இல்லை. உங்கள் ஆசிகள் எங்களுக்குத் தேவை, ஆசாரியரே! நாங்கள் ராஜசூய யாகத்தை ஏற்று நடத்தினால் அதற்குத் தலைமை தாங்குவது நீங்களாகத் தான் இருக்க வேண்டும். உங்கள் ஆசிகளும் தேவை!” என்றான் பீமன். “ஆம் என் ஆசிகள் எப்போதும் உங்களுக்கு உண்டு. அதோடு தேவை எனில் ராஜசூய யாகத்தை நடத்துவதற்கும் தலைமை தாங்குகிறேன். “என்றார் வேத வியாசர்.

“ஆசாரியரே, இந்த ராஜசூய யாகத்தை ஏற்று நடத்துவது அனைவராலும் விரும்பத் தக்கதாக இருக்குமா?” என்று யுதிஷ்டிரன் கேட்டான். வியாசர் அதற்கு, “ஆம், இருக்கும். ஆனால் நீ நினைக்கும் காரணங்கள் ஏதும் இல்லை. என்னுடைய சொந்தக் காரணங்கள் இதற்கென உள்ளன.” என்றார் வியாசர். “அவை என்ன, ஆசாரியரே!” என்று யுதிஷ்டிரன் கேட்டான்.

“இந்த ராஜசூய யாகம் மூலம் பல நூற்றுக்கணக்கான ஸ்ரோத்திரியர்கள் ஒன்று சேர்ந்து எங்கெல்லாம் தேவையோ அங்கெல்லாம் வேத கோஷம் செய்து சூழ்நிலையைப் புனிதமாக்குவார்கள். ஸ்வர சுத்தமாக அவர்களால் ஒலிக்கப்படும் வேத கோஷத்தால் மக்கள் நன்மையுறுவார்கள். நேர்மையான வாழ்க்கை வாழ்பவர்களையும் சரி, அப்படி வாழ முடியாமல் போனவர்களையும் சரி நல்வழிக்குத் திருப்பும். தவறுகள் சரி செய்யப்படும். வேதத்தின் அதிகாரம் அதன் புனிதம் பாதுகாக்கப்பட்டு வலிமை பெற்று ஓங்கும்.” என்றார்.

1 comment:

ஸ்ரீராம். said...

தொடர்கிறேன்.