Tuesday, October 11, 2016

கண்ணன் வருவான், ஏழாம்பாகம்! யுதிஷ்டிரனின் எண்ணங்கள்!

இன்று வரை அவர்கள் ஐவரும் இதை மிக நன்றாகக் கடைப்பிடித்து வருகின்றனர். யுதிஷ்டிரன் உயிருடன் இருக்கும் வரையிலும் இதை மீறி நடந்து கொள்வதைப் பற்றி அவன் யோசிக்கவே மாட்டான். அவன் உயிரைப் பணயம் வைத்தாவது இதைக் கடைப்பிடிப்பான். பீமனின் சமயோசிதமும்,தைரியமும், பலமும் இல்லையென்றாலோ, அல்லது அர்ஜுனனின் சாகசங்கள் இல்லை என்றாலோ, அல்லது வாயே திறக்காமல் சகோதரர்கள் மூவருக்கும் பணிவிடைகள் செய்து வந்து கொண்டிருக்கும் இரட்டையர்களான நகுலன், சகாதேவன் ஆகியோரின் சேவை மனப்பான்மை இல்லாவிட்டாலோ! ஹூம்! அவர்கள் எங்கோ இருந்து கொண்டு கஷ்டப்பட்டுக் கொண்டிருக்க வேண்டும். ஐவரும் இதை ஒற்றுமையாக எதிர்கொள்வதாலேயே இப்போது இந்த நிலைமைக்கு வந்திருக்கின்றனர். எல்லாவற்றுக்கும் மேல் அவர்கள் தாய் குந்தி ஐவரையும் ஒன்று போல் நினைத்து வளர்த்து வருகையில் அவர்களுக்கு இந்த பந்தத்தை உடைக்கவேண்டும் என்னும் எண்ணமே தோன்றாது.

அவர்கள் ஐவரும் மணந்திருக்கும் துருபதன் மகள் திரௌபதியோ ஒரு விசித்திரமான முறையில் ஐவரையும் ஒருசேரக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கிறாள். அவள் அவர்கள் ஐவருக்குமாகவே உயிர் வாழ்ந்து வருகிறாள். அவர்களும் ஐவருமே அவளில் ஐக்கியம் ஆகி விட்டனர். அவளுக்குத் தன் தந்தையிடம் மட்டுமே இருந்து வந்த கர்வம் இப்போது தன் கணவன்மாரைக் குறித்தும் ஏற்பட்டிருக்கிறது. அவர்களிடம் அவள் அளப்பரிய நம்பிக்கை வைத்திருக்கிறாள். அதன் மூலம் அவர்களை க்ஷத்திரிய தர்மத்திலிருந்தும் அரச நீதிமுறைகளிலிருந்தும் இம்மியளவு கூடப் பிசகாமல், தடுமாற்றம் காணாமல் காத்து வருகிறாள். யுதிஷ்டிரன் க்ஷத்திரிய தர்மத்திலிருந்து சிறிதளவாவது பிசகி விட்டான் என்பது தெரிய வந்தால் அவள் இதயம் சுக்குச் சுக்காக உடைந்து விடும். எப்போதும் அவள் ஓர் அழுத்தத்தில் நெருப்புக்குள் இருப்பது போன்ற உணர்வுடன் இருந்து வருகிறாள். யுதிஷ்டிரனின் எண்ணங்களும், அவற்றின் போக்கும் குறித்து அர்ஜுனனுக்கோ அல்லது நகுல, சகாதேவர்களுக்கோ தெரியவந்தால் யுதிஷ்டிரன் மேல் அவர்களுக்கு மரியாதையே இருக்காது. சகோதரர்கள் அனைவருக்கும் போரில் பெரு விருப்பம் இருக்கிறது என்பதை யுதிஷ்டிரன் அறிவான்.

எல்லா க்ஷத்திரியர்களையும் போல் அவர்கள் எந்தத் தவறையும் செய்யாமல் இருப்பதோடு தவறு கண்ட இடத்தில் தக்க தண்டனையும் கொடுத்து வருகின்றனர். தவறைச் சரியாக்கும் முயற்சியில் முழு மனதோடு ஈடுபட்டு அதைச் சரி செய்கின்றனர். துரியோதனனையும் அவன் சகோதரர்களையும் அவர்கள் செய்த தீமைகளையும் அவர்களால் என்றென்றும் மன்னிக்க முடியாது. ஆனால் யுதிஷ்டிரன்? யுதிஷ்டிரனுக்குத் தன் எண்ணங்களைக் குறித்து வெட்கம் மேலிட்டது. தம்பிகளுக்குத் தெரிந்தால் அவனை மன்னிக்கவும் மாட்டார்கள், மதிக்கவும் மாட்டார்கள். இதை மறைத்துக் கொள்வதே அவமானமாக உணரும் தனக்குத் தன் தம்பிகளுக்குத் தன் உண்மையான மனோநிலை தெரிந்து விட்டால் எவ்வளவு அவமானமாக உணருவோம் என்பதை நினைத்த யுதிஷ்டிரனுக்கு மீண்டும் வெட்கம் வந்தது.

பீமன் தன் புஜபல பராக்கிரமத்தால் மற்ற சகோதரர்கள் அனைவருக்கும் நல்ல பாதுகாப்புக் கொடுத்து வந்தான். அவர்களுக்குக் கஷ்டங்கள் வந்தபோதெல்லாம் ஒரு முறை அல்ல பலமுறை பீமன் அவர்களுக்காகத்தன் உயிரைப் பணயம் வைத்திருக்கிறான். ஒரு சின்ன சந்தேகம்; யுதிஷ்டிரன் க்ஷத்திரிய தர்மத்தை மீறி விட்டான் என்றாலோ மீற நினைக்கிறான் என்றோ பீமனுக்குத் தெரிந்து விட்டால் எரிமலை போல் வெடித்து விடுவான். புயலைப் போல் தாக்குவான்; சாபங்கள் கொடுத்தாலும் கொடுப்பான். யுதிஷ்டிரன் மேல் தனக்கு இருந்த, இருக்கும் அன்பை விலக்கிக் கொள்வான். எதிரியாக நினைப்பான். கோபம் கொந்தளிக்கும்போது அவர்களை விட்டுப் பிரிந்தாலும் பிரிந்து விடுவான்.

பீமனும் துரியோதனன் அவர்கள் ஐவரையும் எவ்வளவு வெறுக்கிறானோ அதே அளவுக்கு துரியோதனனை வெறுத்து வருகிறான். பீமன் தைரியம் மிகுந்தவன் தான். பெருந்தன்மை நிறைந்தவனும் கூட. ஆனால் ஓர் தவறு தெரிந்தே செய்யப்பட்ட தவறு அதை அவனால் மன்னிக்கவே முடியாது. அதிலும் சிறு வயதில் நதியில் குளிக்கும்போது பீமனை நதியில் மூழ்கடித்துக் கொல்வதற்கு துரியோதனன் செய்த சூழ்ச்சிகளை பீமனால் இன்றும் மறக்க முடியவில்லை. அதன் பின்னரும் துரியோதனன் சும்மா இருக்கவில்லையே! ஐவரையும் வாரணாவதம் அனுப்பி அங்கே அரக்கு மாளிகையில் உயிருடன் எரித்துக் கொல்ல சூழ்ச்சிகள் செய்தானே! அவனுடைய இந்தக் கொடூரமான செயல்களிலிருந்து தப்பியதோடு அல்லாமல் மேலும் அவனால் தீமைகள் ஏற்படாமல் இருக்க வேண்டும் என்பதால் தானே அவர்கள் ராக்ஷசவர்த்தம் சென்று தங்க நேரிட்டது.

திரௌபதியுடன் அவர்கள் ஐவருக்கும் திருமணம் முடிந்ததும் கர்ணனின் ஆலோசனையின் பேரில் துரியோதனன் அவர்கள் மேல் போர் தொடுக்கத் தயாராகப் படைகளை ஏற்பாடு செய்தான். பிதாமகர் பீஷ்மர் மட்டும் இல்லை எனில்! ஹூம், அவருக்குப் பயந்து கொண்டு தானே துரியோதனன் அந்தப் போரை ஆரம்பிக்காமல் நிறுத்தி வைத்தான்! அதோடு மற்றக் குரு வம்சத் தலைவர்களும் இப்படி ஓர் தாயாதிச் சண்டை வேண்டாம் என்றே நினைத்தனர். அதைத் தடுக்கவே எண்ணினார்கள். இல்லை எனில் மாபெரும் யுத்தம் மூண்டிருக்கும். அந்த தர்மசங்கடமான நிலையை யுதிஷ்டிரன் மிகவும் வெறுத்தான். அவன் மனதில் அதைக் குறித்து மகிழ்ச்சியே இல்லை.  ஆகவே கிருஷ்ணன் முயற்சி எடுத்து ராஜ்ஜியத்தைப் பங்கிட்டுக் கொடுத்ததிலும் அதைத் தன் மற்ற சகோதரர்களையும் முக்கியமாக பீமனையும் சம்மதிக்க வைத்தான். அதில் கிருஷ்ணனின் பங்கு மிகப் பெரியது. ஆனால் ஹஸ்தினாபுரம் துரியோதனன் கைகளுக்குப் போய்விட்டது. முற்றிலும் காடாந்தகரமாக இருந்த இந்திரப் பிரஸ்தம் தான் பாண்டவர்கள் கைக்கு வந்தது. அதையும் நகராக நிர்மாணித்தாயிற்று!

துரியோதனனுக்குத் தன்னை மீறியோ தனக்கு மேலோ யாரும் ஆட்சி செய்யக் கூடாது என்னும் எண்ணம் இருந்ததை அறிந்திருந்த யுதிஷ்டிரன் இப்போது ஹஸ்தினாபுரம் முழுவதும் துரியோதனன் கைகளுக்கு வந்ததில் அவன் மகிழ்ச்சியாக இருப்பான் என்று எண்ணிக் கொண்டான். திருப்தியும் அடைந்திருப்பான். காடாக இருந்தாலும் இந்திரப் பிரஸ்தமாவது கிடைத்ததே என்று பாண்டவர்களான தாங்கள் ஐவரும் திருப்தி அடைந்திருக்கையில் ஹஸ்தினாபுரமே கிடைத்த பின்னர் துரியோதனனின் மகிழ்வுக்குக் கேட்கவா வேண்டும்! கிருஷ்ணன் சரியானபடி வழி காட்டினான். கிருஷ்ணன் சமயோசிதமாகச் செயல்பட்டுப் போரைத் தவிர்த்து ராஜதந்திரத்துடன் ராஜரீக விவகாரங்களைத் தீர்த்து வைக்கிறான். அவன் அதில் நிபுணனாக இருக்கிறான். இது மிக நல்லதொரு தீர்வு. கிருஷ்ணனால் தான் இவ்வாறு யோசித்து முடிவு எடுக்க முடியும். ஆகவே இது தான் மிகச் சிறப்பான முடிவு. இனி பிரச்னை ஏதும் இல்லை; இருக்காது. சரியான சமயத்தில் கிருஷ்ணனும் மற்ற யாதவர்களும் செய்த உதவிகளினால் தான் இந்திரப் பிரஸ்தம் இன்று இந்நிலையை அடைந்துள்ளது. காடாக இருந்த இந்திரப் பிரஸ்தம் கண்கவர் நகராக மாறி விட்டதே! இதைப் பார்த்து ஆசாரியரும் தாத்தாவுமான வேத வியாசருக்கே மனதில் பரிபூரண திருப்தி ஏற்பட்டு விட்டது. குந்தியும் மிகவும் சந்தோஷமாகவே இருந்தாள்.

ஆனாலும் யுதிஷ்டிரனுக்குள்ளே ஓர் கவலை அரித்துக் கொண்டு தான் இருந்தது. துரியோதனன் அவ்வளவு எளிதில் தன் பொறாமையையும் தீய குணத்தையும் விட்டு விடுவான் என்றோ அவர்களை நிம்மதியாக வாழ விடுவான் என்றோ யுதிஷ்டிரனால் நினைக்க முடியவில்லை. அதோடு இல்லாமல் தங்கள் தந்தை ஆண்டு வந்த ஹஸ்தினாபுரத்து அரியணை தனக்கு மறுக்கப்பட்டது குறித்துத் தன் மற்ற சகோதரர்களுக்கு மகிழ்ச்சி இல்லை என்பதையும் யுதிஷ்டிரன் அறிவான். தவறானதொரு நீதியினால் ராஜ்ஜியம் இப்படிப் பிரிக்கப்பட்டுத் தங்களுக்கு உரிமையுள்ள சிங்காதனத்தை விட்டுக் கொடுக்க நேர்ந்தது எனத் தன் தம்பிமார் நினைக்கிறார்கள் என்பதையும் யுதிஷ்டிரன் அறிவான். இரண்டு பக்கத்திலும் தீர்வுகளும் ஏற்பட்டிருக்கின்றன. அதே சமயம் அதன் மூலம் வருத்தங்களும், மனக்கசப்புகளும் ஏற்பட்டிருக்கின்றன. என்றாலும் குரு வம்சத்தினர் ஒருவருக்கொருவர் போரிட்டுக் கொள்ளாமல் இருந்தாலே போதுமானது. ஆகவே இப்படியே இருப்பது நல்லது என்றே யுதிஷ்டிரன் நினைத்தான்.

No comments: