Friday, October 21, 2016

மீண்டும் ஜராசந்தன்!

“ஆசாரியரே, அதெல்லாம் சரிதான். ஆனால் நாம் வெற்றி அடைவோம் என எப்படி உறுதி கொள்வது? அதில் என்ன நிச்சயம்?” என்றான் யுதிஷ்டிரன். “போர் என்றால் எதுவேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் நடக்கும்.” என்று கூறிக் கொண்டே கிருஷ்ணன் முகத்தைப் பார்த்தான். எப்படியேனும் தன்னை இந்த இக்கட்டிலிருந்து கிருஷ்ணன் காப்பாற்றி விடுவான். தான் அந்தச் செய்தியினால் ஏற்பட்டிருந்த தாக்கத்திலிருந்து விடுபடலாம் என்று நினைத்தான் யுதிஷ்டிரன். “அறநெறிக்குட்பட்டு எந்த அரசன் உன்னுடைய மேலாதிக்கத்தை ஏற்றுக்கொள்கிறான் என்று பார்க்க வேண்டும். அதோடு இல்லாமல் அப்படி ஒரு சூழ்நிலையை நீ உருவாக்கவேண்டும். சச்சரவுகளோ, மோதல்களோ இல்லாமல் உன்னைத் தன் தலைவனாக மற்ற அரசர்கள் ஏற்கும் சூழ்நிலை வரவேண்டும்.” என்றான் கிருஷ்ணன். “சச்சரவுகளோ, மோதல்களோ இல்லாமலா? அது எவ்வாறு சாத்தியம்?” என்று கேட்டான் யுதிஷ்டிரன். “ஆம், மூத்தவரே, சச்சரவுகளோ மோதல்களோ இல்லாமல் தான்!” என்றான் கிருஷ்ணன்.

“அதை எப்படிக் கொண்டு வரவேண்டும்? என்ன நிபந்தனைகளை விதிக்க வேண்டும்? கிருஷ்ணா, விளக்கமாகச் சொல்! தேவை எனில் அவற்றை நாம் உருவாக்குவோம்.” என்றான் பீமன். “எல்லாவற்றுக்கும் முதலில் நீங்கள் ஐவரும் போருக்குத் தயாராகுங்கள். தக்க ஆயுதங்களோடும், குதிரைப்படைகளோடும், வில்லாளிகள் நிறைந்த ரதப்படைகளோடும் அவற்றைச் செலுத்தும் விசுவாசமிக்க வீரர்களோடும் போருக்கு ஆயத்தம் செய்து கொள்ளுங்கள். இதிலேயே உங்கள் நிபந்தனைகள் முழுதும் நிறைவேற்றப்பட்டு விடும்.” என்றான் கிருஷ்ணன். பின்னர் கிருஷ்ணன் திரும்பி திரௌபதியைப் பார்த்தான். “உன் தந்தையின் நிலைமை குறித்து என்ன செய்தி, திரௌபதி?” என்று விசாரித்தான்.

“பிரபுவே, கிருஷ்ணா! என் தந்தை துருபதன் கட்டாயமாய் எங்களுக்கு உதவிகள் செய்வார். அதில் சந்தேகம் இல்லை. ஆகவே ராஜசூய யாகம் நடப்பதிலும் தடை ஏதும் இருக்காது!” என்றாள் திரௌபதி. பிறந்த அரச குடும்பத்தில் மட்டுமில்லாமல் வாழ்க்கைப்பட்ட அரச குடும்பத்திலும் திரௌபதியின் சொல்லுக்குச் செல்வாக்கு இருந்தது. அவளுடைய வார்த்தைகளும், கருத்துகளும் மதித்து அனைவராலும் கேட்கப்பட்டது. எப்போதுமே இம்மாதிரியான முக்கிய சமாசாரங்களைக் குறித்து விவாதிக்கையில் அவற்றில் திரௌபதிக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும்.

கிருஷ்ணன் பீமனைப் பார்த்து, “உங்கள் நாட்டு மக்களின் நிலை குறித்து என்ன சொல்கிறாய் பீமா? அவர்கள் தங்கள் முழு ஆதரவையும் உங்களுக்கு அளிப்பார்கள் அல்லவா?” என்று விசாரித்தான். “ஓ, அவர்கள் விசுவாசம் அளப்பரியது! அதில் சந்தேகமே இல்லை.” என்றான் பீமன். “ம்ம்ம்ம்ம்ம் அப்படியா சொல்கிறாய்? பீமா! அவர்கள் விசுவாசத்தில் உனக்கு எந்த அளவு நம்பிக்கை இருக்கிறது? ஒருவேளை நீ ஒன்றிரண்டு போர்களில் தோற்றுப் போய் வந்துவிட்டாலும் அவர்களிடம் இதே மாறா விசுவாசத்தை எதிர்பார்க்கலாமா? அதை நீ நம்புகிறாயா?” என்று கேட்டான் கிருஷ்ணன். “ஆம், என்றே நம்புகிறேன்.” என்றான் பீமன். பின்னர் தொடர்ந்து, “ஆனால் நாங்கள் ஓரிரு போர்களில் தோற்றுப் போய்த் திரும்புவோம் என்பதை என்னால் நம்பவும் முடியவில்லை; அதை நான் எதிர்பார்க்கவும் இல்லை!” என்றான்.

கிருஷ்ணன் சிரித்துக் கொண்டே, “நீ எப்போதுமே வசதியாக வாய்ப்பாக உள்ளவற்றை மட்டுமே பார்க்கிறாய்! பிரச்னைகளின் எல்லாக் கோணங்களையும் அலசி ஆராய்வதில்லை!” என்று கிண்டலாகச் சொன்னான். “ஆஹா, அப்படி நான் செய்யவில்லை என்றால் உன் கண்ணீர் வெள்ளத்தில் என்னை மூழ்கடித்துவிட மாட்டாயா? கிருஷ்ணா, கிருஷ்ணா” என்ற வண்ணம் வழக்கம்போல் பெருங்குரலெடுத்துச் சிரித்தான் பீமன். “அது சரி அப்பா! உங்கள் மற்றத் துணைவர்கள் குறித்து என்ன சொல்கிறீர்கள்? அவர்களைக் குறித்து என்ன நினைக்கிறீர்கள்?” என்று கேட்டான் கிருஷ்ணன். “ஓஓ, அவர்களைக்குறித்துக் கவலை வேண்டாம், கிருஷ்ணா! எப்போதும்போல் அவர்கள் அனைவரும் நம்மிடம் விசுவாசம் பூண்டவர்களாகவே இருந்து வருகின்றனர். ஒரு சிலர் மனது தடுமாறலாம் ஆனாலும் வெகு எளிதில் நாம் அவர்களையும் நம் பக்கம் வர வைத்துவிடலாம். ஆனால் அவர்கள் முட்டாள்கள் அல்ல. “ என்றான்பீமன்.

“அப்படி எனில், அது போருக்கே வழி வகுக்கும்!” என்றான் மெல்லிய குரலில் யுதிஷ்டிரன். “ம்ம்ம்ம், சேதி நாட்டு மன்னன் சிசுபாலன் குறித்து என்ன நினைக்கிறீர்கள்? அவன் உங்கள் எதிரி. அதே போல் காருஷ நாட்டின் தந்தவக்கிரன், ப்ரக்யோதிஷ நாட்டின் பகதத்தன், விதர்ப்ப நாட்டின் ருக்மி மேலும் பௌண்டுரக வாசுதேவன். இவர்களை மறந்துவிடாதீர்கள். விட்டு விடாதீர்கள். இவர்கள் அனைவருமே ஜராசந்தனின் துணைவர்கள் என்பதையும் மறக்காதீர்கள்!” என்றான் கிருஷ்ணன். அதற்கு அர்ஜுனன், “சிசுபாலனையும் தந்த வக்கிரனையும் நாம் எளிதில் வெல்லலாம்.” என்றான். கிருஷ்ணன் மறுப்பாகத் தலை அசைத்தான்.

“அது அவ்வளவு எளிதல்ல சகோதரா! நீ சிசுபாலனுடனும், தந்தவக்கிரனுடனும் போரில் மும்முரமாக ஈடுபட்டிருப்பாய். அப்போது தான் ஜராசந்தன் நேரம் பார்த்துத் தன்னை உள்ளே நுழைத்துக்கொள்ளப் பார்ப்பான். அவர்கள் பக்கம் தன் பலத்தைக் கொண்டு வந்து காட்டுவான். அதோடு மட்டுமல்ல! உங்கள் பெரியப்பா மகன், உங்கள் சகோதரன் துரியோதனனுக்கு உங்கள் மேல் அன்பு பெருக்கெடுத்து ஓடவில்லை! உங்களை வெறுக்கிறான். அவன் இதெல்லாம் தெரிந்தால் ஒருவேளை ஜராசந்தனுக்குத் தன் ஆதரவைத் தெரிவிக்கலாம். பீஷ்மர், துரோணாசாரியார், கிருபாசாரியார் ஆகியோருக்கு இதில் உடன்பாடு இல்லாமல் இருக்கலாம். ஆனாலும் துரியோதனன் விட மாட்டான். அதிலும் அவன் நண்பன் அந்த ராதேயன் கர்ணன் இருக்கிறானே, அவன் உங்களைத் தாக்க எது சந்தர்ப்பம் என்று காத்துக் கிடக்கிறான். அர்ஜுனா முக்கியமாய் உன்னோடு தான் அவனுக்குப் போர் புரிந்து உன்னைத் தோற்கடிக்க வேண்டும் என்று ஆவல். அதிலும் தன் நண்பன் ஆருயிர் சிநேகிதன் துரியோதனனுக்காக இந்தக் கர்ணன் எதை வேண்டுமானாலும் செய்வான்!” என்றான் கிருஷ்ணன்.

“நீ என்னதான் சொல்கிறாய்? கிருஷ்ணா! அதைத் தெளிவாகச் சொல்!” என்றான் பீமன். கிருஷ்ணன் இப்படி அடுத்தடுத்து ஒவ்வொரு காரணங்களாக அடுக்கிக் கொண்டே போவதைப் பார்த்தால் ராஜசூய யாகம் செய்வதிலிருந்து அவர்களைத் தடுப்பான் போல் தெரிகிறதே! பீமனுக்கு ஏமாற்றமாக இருந்தது. ஆனால் கிருஷ்ணன் உடனே பதில் பேசவில்லை! ஏதோ ஆழ்ந்த சிந்தனையில் இருந்தான். அவன் கண்கள் இடுங்கிக் கொண்டு தொலைதூரத்தைப் பார்த்துக் கொண்டிருந்தன. பின்னர் அவன் சொன்னான்:”நீங்கள் அனைவரும் நான் ராஜசூய யாகம் செய்வதற்கான ஏற்பாடுகளில் பங்கெடுக்க வேண்டுமென்றால்……………….” என்று இழுத்தான்.

“அதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். இதில் ஒருவேளை என்றெல்லாம் இல்லை கிருஷ்ணா! எங்களுடன் நீ கலந்து கொண்டு ராஜசூய யாகம் செய்வதற்கான ஏற்பாடுகளில் பங்கெடுக்கவில்லை எனில் நாங்கள் இந்த யாகம் செய்வதையே விட்டு விடுகிறோம்.” என்றான் பீமன். “கிருஷ்ணா, உனக்கே நன்றாகத் தெரியும்! நாங்கள் போர் என்று ஆரம்பித்தால் போதும், நீ எங்கிருந்தாவது வந்து உதவிகள் செய்து எங்களைக் காப்பாற்றுவாய்! எங்களைப் பாதுகாப்பாய்!” என்றான் பீமன்.

“சரி, அப்போது நாம் முதலில் ஜராசந்தனை ஒழித்துக் கட்டிவிட வேண்டும். அவன் நம் எதிரிகளில் மிக முக்கியமானவன். மிகக் கசப்பான அனுபவங்களை நமக்குத் தந்தவன். அதிலும் யாதவர்களாகிய எங்களை அடியோடு அழிப்பதில் மிகவும் ஊக்கம் கொண்டவன். அதற்காக எவ்விதமான வழிமுறைகளைக் கூடக் கையாள்வான். கையாண்டும் பார்த்திருக்கிறான். என்னை அழிப்பதற்காக ஈடுபட்ட முற்றுகையில் அவன் எங்கள் புராதன நகரான மத்ராவை அடியோடு அழித்து எரித்து விட்டான். என்னை அகற்றவேண்டும் என்று செய்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. ஏனெனில் அவனால் என்னைக் கண்டே பிடிக்க முடியவில்லை. திரௌபதியைக் கடத்திக் கொண்டு போய் அவன் பேரனுக்குத் திருமணம் செய்து வைக்கவேண்டும் என்னும் எண்ணத்தில் திரௌபதியின் சுயம்வரத்திற்கும் வந்திருந்தான். ஆனால் நான் குறுக்கிட்டுத் தடுத்து அவனை ஊரை விட்டே போகச் செய்தேன்!” என்றான் கிருஷ்ணன்.

“எப்படி நாம் ஜராந்தனை அழிப்பது? கிருஷ்ணா, விளக்கமாய்ச் சொல்! அவன் இங்கே பக்கத்திலும் இல்லையே! எங்கோ தொலைதூரத்தில் மகதத்தில் அல்லவா இருக்கிறான்! அவன் சகோதரன் ஆன காசி தேசத்து அரசன் சுஷர்மா கூட அவனைக் கண்டாலே நடுங்குகின்றான்.” என்றான் யுதிஷ்டிரன். “ஆம், சகோதரரே! நீங்கள் சொல்வது சரியே! இப்போது நான் சொல்வதைக் கேளுங்கள். சூரியன் மகர ராசிக்கு வரும்போது ஜராசந்தன் நூற்றுக்கணக்கான அரசர்களின் உதவியுடனும், ஆதரவுடனும் ஓர் மாபெரும் யாகத்தை நடத்துகிறான், உயிர்ப்பலிகள் கொடுக்கிறான் போலும். ஆகவே அதற்கான ஏற்பாடுகளைச் செய்ய ஆரம்பிப்பான்.”

“உண்மையாகவா? இது உண்மை எனில் இதை விட மோசமான ஒரு செய்தி ஏதும் இல்லை!” என்று குறுக்கிட்டார் த்வைபாயனர். கிருஷ்ணன் சொன்ன செய்தியினால் அவருக்கு ஏற்பட்டிருந்த தாக்கம் அவர் குரலிலும் முகத்திலும் தெரிந்தது. “அப்படி அவன் செய்வதும் மனுஷத்தன்மையே இல்லாத இப்படி ஓர் யாகத்தை அவன் நடத்துவதும் உண்மைதானா? வாசுதேவக் கிருஷ்ணா! நீ சொல்வது உண்மையா?” என்று கேட்டார் த்வைபாயனர். அதற்குக் கிருஷ்ணன், “இந்தச் செய்தியை எனக்குக் கொண்டு வந்தது ஆசாரிய இந்திரபிரமதர் ஆவார். ஆசாரிய ஷ்வேதகேதுவின் சீடர் இவர். காசிக்கு அருகே இவர் ஆசிரமம் உள்ளது. இது இளவரசன் மேகசந்தியிடமிருந்து தெரிய வந்தது!” என்றான் கிருஷ்ணன்.

“ஆஹா, நான் இந்திரபிரமதரை நன்கறிவேனே! இப்போது அவர் எங்கே?” என்று கேட்டார் த்வைபாயனர். அவர் திரும்பவும் கிரிவ்ரஜம் நோக்கிச் சென்று கொண்டிருக்கிறார். அங்கே போய் ஜராசந்தனின் பேரன் சகாதேவனிடமும் மேகசந்தியிடமும் இப்படி ஓர் யாகத்தைச் செய்வது கூடாது என்று தடுப்பதற்காகவும் சென்றிருக்கிறார். குறைந்த பட்சமாக நான் அங்கே சென்றடையும் வரையிலும் அந்த உயிர்ப்பலியைக் கொடுக்காமல் தடுக்க நினைக்கிறார்.” என்றான் கிருஷ்ணன்.