Monday, June 2, 2014

கண்ணன் ஒரு சூதாடி!

அவ்வளவில் கிருஷ்ணன் அவளிடம் விடைபெற்றுச் சென்றான்.  திரௌபதிக்குக் கனவில் மிதப்பது போல் இருந்தது.  விசித்திரமானதொரு ஜோதி கண்ணனைச் சூழ்ந்ததையும், அவன் முகமே அதில் மிகப் பிரகாசமாகவும் அருள் நிறைந்ததாகவும் தெரிந்ததைக் குறித்தே அவள் சிந்தனை செய்தாள். அப்போது அவன் முகத்திலும் கண்களிலும் நிறைந்திருந்த எல்லையற்ற கருணையை இது வரை அவள் எங்கும் கண்டதில்லை.  அவள் காதுகளில் அவனுடைய அந்தக் குரல் இன்னமும் ஒலித்துக் கொண்டிருந்தது.

அவளை சமாதானம் செய்யும் குரலில், “கிருஷ்ணா, என்னிடம் உனக்கு நம்பிக்கை இல்லையா?” என்று கேட்டதும், அதற்கு அவள், “நான் உன்னை நம்புகிறேன் கோவிந்தா!  நீ என்ன சொல்கிறாயோ அதன்படி நடக்கிறேன்.” என்று பதில் கூறியதும் மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டே இருந்தது.   இதுவரை அவளிடம் இருந்த அவநம்பிக்கையும் மகிழ்ச்சிக்குறைவும் போன இடம் தெரியவில்லை.  நாளை சுயம்வரத்தில் என்ன நடந்தாலும் அவளுக்கு அது குறித்து எந்தக் கவலையும் இல்லை.  அது குறித்து அவள் சிந்திக்கவே இல்லை.  அது அவள் வேலையும் இல்லை.  எவ்வித அக்கறையும் அவளுக்கு இல்லை. என்ன நடந்தாலும் அவள் அதை ஏற்றுக்கொண்டே தீருவாள்.  அதன் மூலம் அவள் தந்தையின் கௌரவத்தைக் காக்கும் பொருட்டு மட்டுமல்ல; அவர் சுமந்து கொண்டிருக்கும் பாரமும் லேசாகும்.


திரௌபதி தன் தந்தையைச் சந்திக்கச் சென்றாள்.  தாங்க முடியாத தலைவலியோடு தன் மஞ்சத்தில் படுத்துக் கிடந்தான் துருபதன்.  சுயமரியாதையும், அதனால் விளைந்த கௌரவமும், கர்வமும் நிறைந்த மன்னனான துருபதன் மனம் முழுவதும் கசப்பால் நிரம்பி வழிந்தது.  கண்களை மூடிப் படுத்திருந்த தந்தையை எழுப்பினாள் திரௌபதி.  அவனிடம் கிருஷ்ணனுக்கும் தனக்கும் இடையே நிகழ்ந்த சம்பாஷணையைக் குறித்துக் கூறினாள். துருபதனுக்கு அதைக் கேட்க அவ்வளவு ஆர்வம் இல்லை.  என்றாலும் திரௌபதி விடவில்லை. கிருஷ்ணன்  தன் தகப்பனையோ, தன்னையோ ஒரு போதும் கைவிடமாட்டான் என உறுதிபடத் தெரிவித்தாள்.  சுயம்வரம் மாபெரும் வெற்றியில் முடியப் போகிறது என்றும் கூறினாள்.  ஜராசந்தனுக்கு திரௌபதியைத் தொடக் கூட தைரியம் இருக்காது.  அவன் அவளைக் கடத்திச் செல்ல மாட்டான் என்றும் தெரிவித்தாள்.  துரியோதனனாலும் அவளைத் தேர்ந்தெடுக்க இயலாது எனவும் துரோணரின் கர்வமும் அடங்கப்போகிறது என்றும் கூறினாள்.

“ஹூம், உறுதி மொழிகள், மீண்டும் மீண்டும் உறுதிமொழிகள்!  இந்த வாசுதேவனை நம்பாதே திரௌபதி.  அவன் எதுவேண்டுமானாலும் சொல்வான். “  களைப்படைந்து போயிருந்த துருபதன் தன் சலிப்பைக் காட்டினான்.  “நான் கதிகலங்கிப்போய் உட்கார்ந்திருக்கிறேன்.  அவன் எப்படி எல்லாவற்றையும் செய்து முடிக்கப் போகிறான்?”

“நமக்கு அதைக் குறித்து எந்தக் கவலையும் வேண்டாம், தந்தையே!  என் மனதில் எவ்விதமான வியாகூலமும் இல்லை.  நான் தெளிவாக இருக்கிறேன்.  அனைத்தையும் கிருஷ்ணனின் தோள்களில் ஏற்றி விட்டேன்.  பாரத்தை அவன் சுமக்கிறான்.”

“குழந்தாய், அவன் உன்னை மயக்கிவிட்டான்.  ஏதேதோ தந்திரங்களைச் செய்து நம்மை ஏமாற்றப் பார்க்கிறான்.” துருபதனுக்கு வாசுதேவன் மேல் நம்பிக்கை பிறக்கவில்லை.  கிருஷ்ணன் நிஜமாகவே இவை அனைத்தையும் சொல்கிறான் என்றோ அவற்றைச் செய்து முடிப்பான் என்றோ அவன் மனதில் நிச்சயமாகத் தோன்றவே இல்லை.  

“இல்லை , தந்தையே! எவ்வளவு தூரம் தான் அப்படி நடக்க முடியும்?  அவன் தர்மத்துக்குக் கட்டுப்பட்டு நடக்கிறான்.  அதற்குத் தன்னை அர்ப்பணம் செய்திருக்கிறான்.  நம்மை அவமானப்படுத்துவதிலோ, துரோணரோடு சேர்ந்து சதி செய்து நம்மை வீழ்த்துவதிலோ அவனுக்கு என்ன லாபம் கிடைக்கப் போகிறது?  எதுவும் இல்லை.”

“என்னால் அவனைப் புரிந்து கொள்ளவே முடியவில்லை, திரௌபதி!   அவன் பேச்சைக் கேட்கும் நாம் தான் முட்டாள்களாக இருக்கிறோம்.   ஏன் இப்படி நடக்கிறது என்றே தெரியவில்லை. “ துருபதனின் சுய பச்சாத்தாபமும், சுயவெறுப்பும் பூரணமாகப்புலப்பட்டது.

“தந்தையே, வாசுதேவன் சொன்னது போல தர்மம் நம்மை எப்படி வழி நடத்துகிறதோ அதன்படி நாம் நடப்போம்.  நாம் சுயம்வரத்தை எதிர்கொள்வோம். “ என்றாள் திரௌபதி.  திடீரெனத் தான் மிக வலுவிழந்தாற்போலவும், திரௌபதி முன்னை விட மன உறுதியும் பலமும் பெற்றிருப்பது போலவும் உணர்ந்தான் துருபதன்.  அப்போது தான் தன்னை திரௌபதி சமாதானம் செய்து கொண்டிருப்பதும் அவனுக்கு உறைத்தது.  “நாம் என்ன செய்ய முடியும்?  செய்ய எதுவும் இல்லை! நடப்பதைப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டியது தான்!” என்று சொன்னவண்ணம் தன்னுடைய தலையைத் தன் இருகைகளாலும் பிடித்த வண்ணம் சூன்யத்தை வெறித்தான் துருபதன்.  அப்போது தான் அவனுக்கு திடீரென திரௌபதியிடம் ஏற்பட்டிருக்கும் மாறுதல்கள் புரிந்தது.  சட்டெனத் திரும்பி அவளையே உற்றுப் பார்த்தான்.  அவளையே கவனித்துப் பார்த்த வண்ணம், “கிருஷ்ணா, திடீரென நீ ஏன் இப்படி மாறி விட்டாய்?  உன்னை யாரோ நன்றாக மயக்கி இருக்கின்றனர்!   அல்லது….. அல்லது தவறிப் போய் மதுவை அருந்திவிட்டாயா?  ம்ம்ம்ம்… அது கிருஷ்ண வாசுதேவனாகத் தான் இருக்கும். அவன் கூறியவற்றை உன் மூளையில் செலுத்திக் கொண்டு விட்டாயா என்ன? அவற்றை அப்படியே நம்புகிறாயா?”

“தந்தையே, நான் மதுவெல்லாம் அருந்தவில்லை.  என்னை யாரும் மயக்கவும் இல்லை.  நான் மயங்கிவிடவும் இல்லை.  ஆனால் அவற்றை எல்லாம் விட கட்டுக்கடங்காத சந்தோஷத்தில் நான் இருக்கிறேன்.”
“என்ன சந்தோஷம் உனக்கு மகளே! எனக்கு எதுவும் புரியவில்லையே!”

“தந்தையே!  நான் அனைத்தையும் அவனிடம் ஒப்படைத்துவிட்டேன்.  பரிபூரண சரணாகதி அடைந்து விட்டேன்.”  தந்தையின் நெற்றியை ஆதுரமாகப் பிடித்து விட்டுக் கொண்டே கூறினாள் திரௌபதி.

“என்ன? பைத்தியமா உனக்கு?? அவன் அப்படி என்னதான் உன்னிடம் சொன்னான்?  அதை என்னிடம் அப்படியே சொல்லு!  ஏற்கெனவே தாங்க முடியாத் தலைவலியில் இருக்கும் எனக்கு இப்போது தலை சுற்றலும் சேர்ந்துவிட்டது. அப்படி என்ன வாக்குறுதியை உனக்கு அவன் அளித்திருக்கிறான் என்பதை நான் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.  அதில் என்ன சிறப்பான செய்தி புதைந்து கிடக்கிறது என்பதையும் அறிய விரும்புகிறேன்.”

“வாசுதேவன் நிறையப் பேசினான் தந்தையே!  முக்கியமாக அவன் நம் பக்கமே நின்று நம்மைக் கைவிடமாட்டேன் என்னும் உறுதியை அளித்துள்ளான்.  அதோடு இல்லாமல் ஜராசந்தனால் என்னைக் கடத்தித் தூக்கிச் செல்ல முடியாது என்றும் உறுதி அளித்துள்ளான்.  துரியோதனனை நான் திருமணம் செய்து கொள்ளப் போகும் நிர்ப்பந்தம் ஏற்படாது என்றும் கூறி இருக்கிறான்.  துரோணரின் கர்வம் தூள் தூளாக நொறுங்கி விடும் என்றும் கூறி உள்ளான். “

“அனைத்துமே  ஒரு தேர்ந்த சூதாடியின் வாக்குறுதிகள்!”  மனம் உடைந்த நிலையில் கூறினான் துருபதன்.  திரௌபதியோ சிரித்தாள்.  “ஆம் , தந்தையே, மிக வலிமை படைத்த சூதாடியும் கூட.  அவன் தன்னுடைய பெயர், புகழ், வீரம், எதிர்காலம், ஏன் அவன் உயிரைக் கூட இந்த சுயம்வரத்திற்காகப் பணயம் வைத்துள்ளான். “

“தனக்காக அவன் எப்படி வேண்டுமானாலும், எதை வேண்டுமானாலும் பணயம் வைத்துச் சூதாடட்டும்.  ஆனால், மகளே, உன்னுடைய எதிர்காலத்திலும், என்னுடைய கௌரவத்திலும் அவன் ஏன் பணயம் வைத்துச் சூதாட வேண்டும்?  அவனுக்கு இதில் என்ன லாபம்?”

“தந்தையே, அவன் நம்மோடா சூதாடுகிறான்?  இல்லையே, நமக்காகச் சூதாடி வெல்ல விரும்புகிறான். அவன் பணயம் வைப்பதெல்லாம் நம்மைக் காக்கவேண்டியே!”

1 comment:

ஸ்ரீராம். said...

துருபதனும் கண்ணனுடன் நேரில் பேசியிருந்தால் அவனும் மயங்கி இருப்பான்! :)))))