Friday, November 2, 2012

தேடுதல் வேட்டையில் கண்ணன்!


கண்ணனும் மற்றச் சில முக்கியமானவர்களும் காம்பில்யத்திற்குச் செல்வதற்காக ஆயத்தம் ஆனார்கள்.  அந்த நாட்களில் கங்கையைக் கடந்தே காம்பில்யம் செல்ல வேண்டும்.  மற்ற யாதவர்கள் அங்கேயே தங்கி கண்ணன் காம்பில்யத்திலிருந்து திரும்பி வருவதை எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள்.  கண்ணன் காம்பில்யத்திலிருந்து திரும்பி துவாரகை செல்லும் முன்னர் நாககூடம் சென்று தன் தாய் வழிப் பாட்டனான ஆர்யகனைச் சந்திக்க எண்ணி இருந்தான்.  ஆகவே அவர்கள் அவனுடன் செல்ல ஆயத்தம் செய்து கொண்டனர்.  கண்ணனும் மற்றவர்களும் பிரம்மாண்டமாகக் காட்சி கொடுத்த கங்கையைக் கடக்கப் படகுகளில் ஏறினார்கள்.  அந்த நாட்களில் படகுகளின் போக்குவரத்து மிகவும் முக்கியத்துவம் வகித்தது.  கங்கை, யமுனை போன்ற பெரிய நதிகளைப் படகுகளிலேயே கடக்க இயலும்.  சிறு வயதிலிருந்தே கண்ணனுக்கு கங்கையைக் குறித்தும், அதன் புனிதம் குறித்து அறிய நேர்ந்திருந்தாலும் இன்றே அவளின் பிரம்மாண்டமான இந்தத் தோற்றத்தைப் பார்க்கிறான். 
                                     
கண்ணன் கங்கையின் அகலத்தையும் அக்கரை வெகு தூரத்தில் தெரிந்ததையும் பார்த்து ஆச்சரியம் அடைந்தான்.  எத்தனை எத்தனை அதிசயங்களையும், அற்புதங்களையும், சரித்திரங்களையும் தன்னுள் அடக்கிக் கொண்டு இந்த நதி ஓடுகிறது என நினைக்க அவனுக்குப் பிரமிப்பாக இருந்தது.  சமுத்திரத்தில் எழுவது போலவே கங்கையிலும் அலைகள் எழும்பிக் குதித்து அடங்குவதையும், சில அலைகள் கரையோரத்தில் மோதித்திரும்புவதையும் பார்த்தான்.  வாழும் தெய்வமான இந்தக் கங்கையில் தான் எத்தனை நீர்வாழ் உயிரினங்கள் வாழ்கின்றன!  அதோ, கங்கையில் நீந்திச் செல்லும் வாத்துக்கள்.  இதோ இந்தப் பகுதியில் அன்னங்கள் மிதக்கிறதைப் பார்த்தால் நீரின் பச்சையும், அன்னங்களின் வெண்மையும் சேர்ந்த வண்ணக்கலவை மனதை அள்ளியது.  ஆஹா, சித்திர விசித்திரமான மீன்கள், இங்கே தங்கள் வால்களைத் தூக்கிக் கொண்டு , எழும்பிக் குதித்து விளையாடுகின்றனவே!  படகு செல்கையிலேயே முதலைகள் தங்கள் முகத்தைத் தூக்கிக் கொண்டு சிறிய கண்களால் உற்றுப் பார்க்கின்றன.  படகுகள் அருகே வரும் சப்தம் கேட்டதும், துடுப்புகளின் ஓசை கேட்டதும் தங்கள் வாலால் தண்ணீரை அடித்துக்கொண்டு மூழ்கிப் போகின்றன.  விதவிதமான நீர்ப்பறவைகள் தலைக்கு மேலே பறந்து ஏதேனும் தின்னக் கிடைக்குமா எனப் பார்க்கின்றன.  அவைகளின் மதுரமான த்வனி காதுக்கு இனிமையாக இருக்கிறது.  இரு கரைகளிலும் அழகிய புடைவைக்குக் கரை போட்டாற்போல் கரும்பச்சை மரங்கள் அணி வகுத்து நிற்கின்றன.  அவற்றிலிருந்து  உதிர்ந்திருக்கும் வண்ண, வண்ண மலர்கள் ஆழ்ந்த பச்சைக்கரைப் புடைவையில் போட்ட ஜரிகைப் புட்டாக்கள் போலக் காட்சி அளிக்கின்றது.  மேலே பார்த்தால் ஆழ்ந்த நீலத்தில் தெரியும் வானமும், கரும்பச்சை நிற மரங்களும், அவற்றின் வண்ண, வண்ணமான மலர்களும், ஆழ்ந்த பச்சை நிறத்து நீரும் சேர்ந்து ஒரு இந்திரலோகத்தையே சமைத்துவிட்டதே.  தன் மனம் நிறையக் கண்கள் நிறைய அந்தக் காட்சிகளை உள்ளுக்குள் பதித்துக் கொண்டான் கண்ணன்.

இரு கரைகளிலும் மனிதர் சென்றறியாத அடர்ந்த காடுகளும் தென்பட்டன.  சில இடங்களில் மனித நடமாட்டம் இருப்பதற்கான அறிகுறிகளும் தென்பட்டன.  அருகே உள்ள கிராமங்களில் இருந்து மக்கள் வந்து நீராடிச் செல்வதற்கும், தண்ணீர் கொண்டு செல்வதற்கும் ஏற்படுத்தப்பட்ட வழி போலும்.  அந்தப் பிராந்தியத்து மக்களான நாகர்கள் பெரும்பாலும் நிர்வாணமாகக் காணப்பட்டார்கள்.  சிறிய ஓடங்களைப் போக்குவரத்துக்குப் பயன்படுத்தினார்கள்.  இதைத் தவிரவும் பெரிய பெரிய குடியிருப்புக்களையும் கண்டனர்.   அவை காட்டை அழித்துக் கட்டப்பட்டிருந்தன.  இவை ஆரிய வர்த்தத்தின்  எல்லைகள் எனவும்,  நாகர்களோடு கலந்து சம்பந்தம் வைத்துக்கொண்ட ஒரு சில ஆரியர்களால் ஏற்படுத்தப்பட்ட குடியிருப்புகள் என்றும் புரிந்து கொண்டனர்.  அங்கே வசித்த மக்கள் இந்தப் படகுகளின் ஊர்வலத்தைக் கண்டதும், அவர்களை நிறுத்தித் தங்கள் இல்லத்துக்கு வருகை தருமாறு உபசரித்தனர்.  படகுகளில் இருந்தவர்களுக்குப்பல விதங்களில் மரியாதை செய்தனர்.  இரவு அங்கே தங்கிச் செல்லுமாறு கேட்டுக் கொண்டனர்.  அனைவருக்கும் படகில் பயணிப்பது கிருஷ்ணன் எனத் தெரிந்ததும், ஆச்சரியமும், உவகையும் கொண்டு கண்ணனின் பாதங்களை அலம்பி வழிபட்டு அவனை ஒரு கடவுள் போலப் போற்றி வணங்கினர்.  ஜராசந்தனை ஓட ஓட விரட்டியதும், யாதவர்கள் அனைவரையும் துவாரகையில் குடியேற்றியதும் கண்ணனை அவர்களிடையே ஒரு வீர தீரப் பராக்கிரமம் உள்ள கதாநாயகனாகக் காட்டி இருந்தது. 

மேலும் படகுகள் செல்லச் செல்ல ரிஷி, முனிவர்கள் சிலரின் ஆசிரமங்களையும் அவர்கள் கடக்க வேண்டி வந்தது.  அங்கிருந்து வந்த வேத கோஷமும், யாகங்களின் அக்னியிலிருந்து எழுந்த புகையும் விண்ணையே தொடும்போல் கேட்டுக்கொண்டிருந்தது.  கிருஷ்ணனும், அவன் கூட வந்தவர்களும் முக்கியமான ரிஷி, முனிவர்களின் ஆசிரமங்களின் அருகே இறங்கி அவர்களை வணங்கி ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டனர்.  சத்யவதியைப் பார்க்கும் முன்னர் கண்ணனிடம் இருந்த துக்கம் எல்லாம் பறந்து ஓடி விட்டது.   இரவுகளில் சாந்தமான சந்திரனை கங்கை நீர் பிரதிபலிப்பதைக் கண்டு கண்ணன்மனமும் சாந்தம் அடைந்தது.  அது அவனுக்குப் புதியதோர் பலத்தையும் கொடுத்தது.  அவர்கள் தனியாக இருக்கையில் மட்டுமே உத்தவனோடு பாண்டவர்களைக் கண்டு பிடிப்பது குறித்துக் கண்ணன் ஆலோசித்தான்.  தங்களுடன் வரும் யாதவத் தோழர்கள் கூட அறியாமல் பாண்டவர்கள் இருக்கும் இடம்கண்டுபிடிக்கப் படவேண்டும் எனக் கண்ணன் நினைத்தான்.  சாத்யகிக்குக் கூடத் தெரியக் கூடாது.  அவன் மனதில் ஒன்றும் தங்காது.  வெளியிட்டு விடுவான்.  உத்தவன் ஒருவனே இந்த ரகசியத்தைப் பகிர்ந்து கொள்ளச் சரியானவன்.  வேறு யாரிடமும் சொல்ல இயலாது. உத்தவனும் ரகசியமாக இந்தத் தேடுதல் வேட்டையை நடத்த வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து கொண்டான்.  ஒப்புக் கொண்டான்.7 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

கங்கையின் விளக்கங்களை ரசித்தேன்... தொடர்கிறேன்...

ஸ்ரீராம். said...

கங்கை - அந்தக் காலத்தில் இன்னும் எவ்வளவு சுத்தமாக இருந்திருக்கும்?
[ஒரு சந்தேகம். கங்கையின் வர்ணனைகள் உங்களுடையதா அல்லது மூலத்திலிருந்தேவா?]

//கண்ணனின் பாதங்களை அலம்பி வழிபட்டு அவனை ஒரு கடவுள் "போல"ப் போற்றி...//

கடவுள் "போல".... :))))


sambasivam6geetha said...

வாங்க டிடி, ரசனைக்கு நன்றி.

sambasivam6geetha said...

வாங்க ஸ்ரீராம், மூலத்திலே இந்த வர்ணனை இருந்ததா நினைவில் இல்லை. மீனும், முதலையும் மட்டும் பார்த்த நினைப்பு. :))))) எதுக்கும் செக்கிட்டுச் சொல்றேனே. :))))

sambasivam6geetha said...

பார்த்துட்டேன் ஸ்ரீராம், மூலத்திலே இத்தனை வர்ணனை இல்லை. கொஞ்சம் இருக்கிறது. முதலைகள் நீந்துவதும், இரு கரைகளிலும் அடரத்தியான மரங்கள் வரிசை கட்டி நிற்பதையும் பற்றி உள்ளது. :)))))

ஸ்ரீராம். said...

நன்றி.... மறுபடியும் ஒருமுறை அந்தப் பாராவைப் படித்து விட்டு வந்தேன். உங்கள் கற்பனைத்திறனுக்கு ஒரு சலாம். ஆனால் இதை நீங்கள் அங்கு மூலத்தில் மறுபடி படித்துதான் சொல்ல வேண்டுமா என்ன? உங்கள் கைவண்ணம் உங்களுக்குத் தெரிந்திருக்குமே! :))))

sambasivam6geetha said...

என்னையும் அறியாமல் மூலத்தில் உள்ள வர்ணனைகளின் விளக்கம் வந்திருக்கலாம் இல்லையா? எதுக்கும் ஒரு தரம் பார்த்துக்கறது நல்லது தானே! :)))))