Wednesday, September 28, 2016

கண்ணன் வருவான், ஏழாம் பாகம் யுதிஷ்டிரர்!

 முதலில் கொஞ்சம் பூர்வ கதையைப் பார்ப்போமா! இந்தக் கண்ணன் தொடர்களின் கடைசிப் புத்தகம் இந்த யுதிஷ்டிரர் பற்றிய புத்தகமும் அதோடு இணைந்துள்ள குருக்ஷேத்திரம் குறித்த பாகமும். குருக்ஷேத்திரம் என்னும் பெயரில் தனிப்புத்தகம் இருப்பதாக நினைத்தேன், இல்லை, இதிலேயே சுமார் 145 பக்கங்கள் யுதிஷ்டிரர் குறித்து வந்த பின்னர் இதன் கடைசிப் பாகம் குருக்ஷேத்திரம் மட்டும் பதின்மூன்றே அத்தியாயங்கள் எழுதப்பட்டு அதையும் இதில் சேர்த்திருக்கின்றனர். திரு கே.எம்.முன்ஷிஜி அவர்கள் இந்தத் தொடரை எழுத ஆரம்பிக்கையில் குருக்ஷேத்திர யுத்தகளத்தில் கண்ணனின் விஸ்வரூபமும் கீதோபதேசம் குறித்தும் எழுதிக் கண்ணன் எப்படி சாஸ்வத தர்ம கோப்தா(saswata dharma gopta)வாக அர்ஜுனனுக்குக் காட்சி கொடுத்தார் என்பதை விவரிக்கும் ஆசையுடன் அதைக் குறித்து முன்னுரையில் குறிப்பிட்டிருக்கிறார். ஆனாலும் கூடவே இதைக் குறித்து நான் எழுதுவதும் அவன் விருப்பமே! அவன் விருப்பம் இருந்தால் நான் நிச்சயம் அதை விவரித்து எழுதுவேன் என்றும் குறிப்பிட்டிருக்கிறார். கண்ணன் விருப்பம் அப்படி அல்ல என்றே ஆகி இருக்கிறது.

குருக்ஷேத்திரம் குறித்துப் பதின்மூன்று அத்தியாயங்கள் எழுதிய முன்ஷிஜி மேற்குறிப்பிட்ட வார்த்தைகளை ஜனவரி 26 ஆம் தேதி 1971 ஆம் வருடம் குறிப்பிட்டுச் சொல்லி இருக்கிறார். திடீரென பிப்ரவரி எட்டாம் தேதி  1971 ஆம் வருடம் இறந்து விட்டார். ஆகவே அதை எட்டாம் பாகமாகத் தனியாக வெளியிடாமல் இந்தப் புத்தகத்திலேயே அந்தப் பதின்மூன்று அத்தியாயங்களும் சேர்க்கப் பட்டுள்ளன. இப்போது கொஞ்சம் முன் கதையைப் பார்த்துக் கொள்வோம்.

பரதகுலப் பேரரசன் ஷாந்தனுவுக்கு மூன்று மகன்கள். கங்கையின் மூலம் தேவவிரதன் எனப்படும் காங்கேயன், சத்யவதி மூலம் சித்திராங்கதன், விசித்திர வீரியன். இதிலே பீஷ்மர் என்றழைக்கப்பட்ட தேவவிரதன் தன் தம்பிகளுக்காகத் தன் அரியணை உரிமையைத் துறந்து வாழ்ந்து வந்தார். ஆனால் சித்திராங்கதனும், விசித்திர வீரியனும் சிறு வயதிலேயே இறந்து விட்டார்கள். சித்திராங்கதன் திருமணம் செய்து கொள்ளாமலேயே இறக்க, விசித்திர வீரியன் இரு இளவரசிகளைத் திருமணம் செய்த பின்னர் நோய்வாய்ப்பட்டு இறந்தான். ஆகவே ஆரியர்களின் பழமையான சம்பிரதாயங்களின்படி நியோக முறைப்படி விசித்திர வீரியனின் இரு மனைவியரும் முறையே இரு பிள்ளைகளைப் பெற்றெடுத்தனர். அதில் அம்பிகை என்னும் இளவரசியின் மகன் பிறவிக்குருடாகப் பிறந்துவிட, அம்பாலிகாவின் பிள்ளை பிறவியிலேயே பலஹீனமுள்ளவனாகப் பிறக்கிறான். இந்த இருவருக்கும் புத்திர தானம் செய்தவர் சத்யவதியின் முதல் பிள்ளையான க்ருஷ்ண த்வைபாயனர் என்னும் வேத வியாசர்.

இவர் பராசரமுனிவருக்கும், மச்சகந்தி என அப்போது அழைக்கப்பட்ட மீனவப் பெண்ணிற்கும் பிறந்தவர். பராசர முனிவர் முக்காலமும் அறிந்தவர். ஒரு முறை யமுனையைக் கடக்கையில் விண்ணில் தோன்றிய கிரஹச் சேர்க்கையைக் கண்டறிந்த அவர் இப்போது தன் மூலம் ஒரு பிள்ளை ஜனித்தால் அது மிகவும் புகழுடனும், ஞானத்துடனும், அனைவராலும் போற்றி வணங்கக்கூடிய தெய்விகத் தன்மையுடனும் இருப்பான் என்பதைத் தெரிந்து கொண்டார். ஆனால் உடனடியாக விந்து தானம் செய்ய அப்போது எதிரே மச்சகந்தியைத் தவிர வேறு எவரும் இல்லை. ஆகவே அவர் மச்சகந்தியிடம் தன் நோக்கத்தைச் சொல்ல, முதலில் பயந்த அவள் பின்னால் தன் கற்புக்குக் களங்கம் நேராது என்று தெரிந்து கொண்டு சம்மதிக்கிறாள். அந்த யமுனை நதியிலேயே ஒரு தீவில் அவளுடன் கூடுகிறார் பராசரர். உடனே பிள்ளையும் பிறக்கிறது. மஹாபாரதக் கதைப்படி அந்தப் பிள்ளை உடனே வளர்ந்து தந்தையுடன் சென்று விடுவான். ஆனால் நம் கதையில் ஐந்து வயது வரை தாயிடம் வளர்ந்து பின்னர் தந்தையால் அழைத்துச் செல்லப்படுகிறான் இந்தக் குழந்தையே பின்னால் வேதங்களைத் தொகுத்து வேத வியாசர் என்னும் பெயர் பெற்று ஆரியவர்த்தம் முழுமைக்கும் ஆசாரியராய் குருவாய் விளங்கினார்.

இங்கே ஹஸ்தினாபுரத்தில் திருதராஷ்டிரன் பிறவிக்குருடு என்பதால் அரியணை ஏற முடியாது என்று சாஸ்திர சம்பிரதாயங்களின் படி முடிவானதால் பாண்டு அரியணை ஏறுகிறான். ஆனால் சில காலமே அரியணையில் இருந்த பாண்டு தன் பலஹீனமான உடல் நலத்தால் மனம் வெறுத்துப் போகிறான். அவனால் மனைவியுடன் சுகித்து இருக்க முடியாமல் சாபம் வேறு குறுக்கிடவே இமயமலைப் பகுதிக்குச் சென்று விடுகிறான். அவன் இரு மனைவியரும் அவனுடன் செல்கின்றனர். திருதராஷ்டிரனுக்குப் பல பிள்ளைகள் பிறக்கின்றனர். அவன் மனைவி காந்தார தேசத்து இளவரசி காந்தாரி. அவள் சகோதரன் ஷகுனியும் அவளுடன் ஹஸ்தினாபுரத்திலேயே வாழ்வதற்கு வந்திருக்கிறான். இந்த ஷகுனி ஹஸ்தினாபுரத்துக் கௌரவர்களிடையே பிரிவினையைத் தூண்டி விடுகிறான். காட்டுக்குச் சென்ற பாண்டு தன் மனைவியர் இருவருக்கும் குழந்தைகள் மேல் இருக்கும் ஆசையைக் கண்டு இருவரையும் நியோக முறையில் குழந்தை பெற்றுக்கொள்ள அனுமதி கொடுக்கிறான் குந்தி என்னும் முதல் மனைவிக்கு யுதிஷ்டிரன், பீமன், அர்ஜுனன் என்னும் மூன்று பிள்ளைகள் பிறக்க மாத்ரி என்னும் இரண்டாம் மனைவிக்கு நகுலன், சஹாதேவன் என்னும் இரட்டையர் பிறக்கின்றனர்.

ஒரு மயக்கும் பொழுதில் தன் இளைய மனைவி மாத்ரியுடன் கூட நினைத்த பாண்டு அக்கணமே இறந்து போகத் தன் கணவன் சாவுக்குத் தானே காரணம் என்று மாத்ரியும் உடன் கட்டை ஏறி விடுகிறாள். செய்வதறியாது திகைத்த குந்தி வியாசரை வரவழைத்து ஆலோசனை கேட்டுக் கொண்டு ஹஸ்தினாபுரம் திரும்ப முடிவெடுக்கிறாள். இந்தச் செய்தி ஹஸ்தினாபுரத்தையும் சென்றடைய அங்கே பாண்டவ புத்திரர்களைக் கோலாகலமாக வரவேற்க ஏற்பாடுகள் செய்யப்படுகிறது, பாண்டு இறந்து போனதால் அவன் மூத்த பிள்ளை யுதிஷ்டிரனே அடுத்த அரசனாக வேண்டும் என்றும் முடிவு செய்யப்படுகிறது. கௌரவ சகோதரர்களுக்கு இது பிடிக்கவில்லை. நியாயமாகப் பார்த்தால் தங்கள் தந்தை தான் அரியணை ஏறி இருக்க வேண்டும். ஆனால் அவர் குருடாகப் போய் விட்டார். இருந்தாலும் தனக்குத் தான் பட்டம் கட்ட வேண்டும் என்றே துரியோதனன் எதிர்பார்த்தான். தன் மாமன் ஷகுனியைப் பிதாமகர் பீஷ்மரைக் கண்டு பேச அனுப்பி வைக்கிறான். பீஷ்மர் எதற்கும் அசைந்து கொடுக்கவில்லை.

மஹாராணி சத்யவதி தன் இரு மருமகள்களுடன் கோதுலி ஆசிரமத்திற்கு வானப்பிரஸ்தமாகச் சென்று விட இங்கே அனைவரையும் சமாளிக்கும் பொறுப்பு பீஷ்மரின் தலையில் விழுகிறது. ஏற்கெனவே க்ருபாசாரியார் என்னும் ஆசாரியர் குரு வம்சத்தின் குருவாக இருந்து வர அவருடைய சகோதரியின் கணவனும் பரசுராமரின் சீடருமான துரோணாசாரியாரைப் பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் ஆசாரியராக நியமிக்கிறார் பீஷ்மர். பாண்டவர்கள் அனைத்திலும் சிறந்து விளங்குகின்றனர். அவர்களின் நேர்மையான போக்கும், பெருந்தன்மையான குணமும், இனிமையான நடத்தையும் அனைவரையும் கவர்கின்றது. அதோடு ஆயுதப் பயிற்சியிலும் தேர்ந்து விடுகின்றனர். ஒவ்வொருவரும் ஒவ்வொரு துறையில் மிகச் சிறப்பான பயிற்சி பெறுகின்றனர்.

துரியோதனனும் ஆயுதப் பயிற்சியை நன்றாகச் செய்து சிறப்பாக விளங்கினாலும் வில் வித்தையில் அர்ஜுனனைத் தோற்கடிக்க அவனால் முடியவில்லை. அதற்குத் தன் சிநேகிதனான தேரோட்டி மகன் கர்ணனையே நம்புகிறான். கர்ணனும் துரோணாசாரியாரிடம் வில் வித்தை பயின்றாலும் துரோணாசாரியார் அர்ஜுனனிடம் காட்டிய அளவுக்கு ஈடுபாடு கர்ணனிடம் காட்டவில்லை. தான் ஓர் சூத புத்திரன் என்னும் எண்ணம் ஒரு பக்கம் கர்ணனை வாட்டி வதைக்க மறுபக்கம் தான் அர்ஜுனனை மிஞ்ச வேண்டும் என்னும் எண்ணமும் தோன்றுகிறது. அதற்குள்ளாக யுவராஜா யுதிஷ்டிரனையும், அவனுடன் அவன் சகோதர்கள் நால்வரையும் அவர்கள் தாய் குந்தியுடன் வாரணாவதம் என்னும் இடத்திற்குத் தன் சூழ்ச்சி மூலம் அனுப்பி வைக்க ஏற்பாடுகள் செய்கிறான் துரியோதனன். வாரணாவதத்தில் அரக்கினால் ஓர் மாளிகை கட்டி அதில் பாண்டவர்கள் ஐவரையும் அவர்கள் தாயுடன் உயிருடன் எரிக்க வேண்டும் என்பதே அவன் முடிவு.

இந்தச் சூழ்ச்சி குறித்துப் பாண்டு மற்றும் திருதராஷ்டிரன் ஆகியோரின்  சகோதரரும் அம்பிகா, அம்பாலிகாவின் பணிப்பெண்ணால் பெற்றெடுக்கப்பட்டவருமான விதுரருக்குத் தெரிய வர அவர் அந்த மாளிகையின் கீழ் சுரங்கம் வெட்டுவித்து அனைவரையும் தப்புவிக்கிறார். ஆனால் இது தெரியாத துரியோதனன் அவர்கள் இறந்தார்கள் என்று எண்ணி நிம்மதியாக பாஞ்சால நாட்டின் அரசன் தன் மகள் திரௌபதிக்காக ஏற்பாடு செய்த சுயம்வரத்திற்குச் செல்கிறான். ஆனால் ஐந்து சகோதரர்களும் வாரணாவதத்திலிருந்து தப்பிச் சென்று ராக்ஷஸ வர்த்தம் சென்று அங்கே பீமன் ஹிடிம்பனைக் கொன்று விட்டு அவன் சகோதரி ஹிடிம்பியைத் திருமணம் செய்து கொண்டு கடோத்கஜன் என்னும் பெயரில் ஓர் பிள்ளையும் பெறுகிறான்.

குந்தியின் சகோதரன் ஆன வசுதேவரின் எட்டாவது பிள்ளையான கண்ணன் பாண்டவர்களுக்குச் சகோதரன் முறை, ஆகவே பாண்டவர்கள் அனைவரிடமும் அன்புடன் பழகுவதோடு அர்ஜுனனிடம் தனியான அன்பும் செலுத்துகிறான் கிருஷ்ணன். அவன் பாண்டவர்களின் நலத்தைத் தன் சொந்த நலமாகக் கருதி அவர்களைப் பாதுகாத்து வருகிறான், ராக்ஷஸவர்த்தத்தில் பாண்டவர்கள் இருப்பதை அறிந்த கண்ணன் உத்தவனை அனுப்பி அவர்களைச் சுயம்வரத்தில் கலந்து கொள்ளப் பாஞ்சாலம் வரும்படி கிருஷ்ணன் சொல்ல ஐவரும் பாஞ்சாலம் வருகின்றனர். அர்ஜுனன் சுயம்வரத்தில் வெற்றி கொண்டு திரௌபதியை மனைவியாக அடைகிறான். ஆனால் குந்தி தவறாகச் சொன்ன ஓர் வார்த்தையால் திரௌபதி வேத வியாசர் மற்றும் கிருஷ்ணனின் யோசனையைக் கேட்டுக் கொண்டு ஐந்து சகோதரர்களையும் மணந்து கொள்கிறாள். இப்போது துருபதனின் பலமும் சேர யுதிஷ்டிரன் பலம் பொருந்தியவனாய்த் திரும்பி வர திருதராஷ்டிரனால் ஏதும் சொல்ல முடியாமல் போகிறது. ஆனாலும் ஹஸ்தினாபுரத்திலேயே அவர்கள் தொடர்ந்து இருந்தால் தன் பிள்ளைகளுக்கும் அவர்களுக்கும் இடையில் நடைபெறும் சண்டைகளை யோசித்து திருதராஷ்டிரன் யுதிஷ்டிரனைத் தன் சகோதரர்களை அழைத்துக் கொண்டு ஹஸ்தினாபுரத்தை விட்டுச் சென்றுவிடும்படி வற்புறுத்துகிறான்.

அங்கே காண்டவ வனத்தை அழித்து இந்திரப் பிரஸ்தம் என்னும் பெயரில் ஓர் புதிய நகரைக் கண்ணன் ஆலோசனையின் பேரில் எழுப்புகிறார்கள் பாண்டவர்கள் ஐவரும். ஹஸ்தினாபுரத்தில் இருந்த பலரும் யுதிஷ்டிரனுக்குக் கீழ் வாழ விரும்பி இங்கே வருகின்றனர். யுதிஷ்டிரனை அங்கே சக்கரவர்த்தியாகப் பிரகடனம் செய்து வாழ்த்துகின்றனர் வேத வியாசரும், கண்ணனும். பின்னர் வியாசர் தர்மக்ஷேத்திரம் சென்றுவிட, கண்ணன் துவாரகை திரும்புகிறான். கண்ணனைப் பிரிய மனமில்லாமல் விடை கொடுக்கின்றனர் பாண்டவர்கள். இதன் பின்னர் தொடர்கிறது நம் கதை!