Tuesday, September 6, 2016

மோசாவுக்கு நேர்ந்தவை!

“நான் குளிக்கவே முடியவில்லை! குளிக்காமல் எங்கள் கடவுளரை வணங்கி அனுஷ்டானங்கள் செய்ய முடியாது. இவை எல்லாம் முடித்தால் தான் சாப்பிடுவேன். அதோடு சாப்பிட்டாலும் நீ கொடுத்திருப்பதை உண்ணமாட்டேன். அதில் பெரும்பாலும் பசுவின் இறைச்சி இருக்கிறது. கோமாதா எங்கள் குல தெய்வம். அவளின் இறைச்சியை நான் உண்டால் தாயை வெட்டிக் கொன்று உண்பது போல் ஆகும். அதை நான் தொடவே மாட்டேன்.”

“ஹூம், நான் கொடுத்திருக்கும் உணவை நீ குறை சொல்கிறாயா? அதை உண்ண மறுக்கிறாயா?” என்று கேட்டான் மோசா. அவன் கோபம் நிமிடத்திற்கு நிமிடம் அதிகரித்து வந்தது. ஆனால் அதை எப்படி வெளிப்படுத்துவது என்று புரியவில்லை அவனுக்கு. “இதை உண்ண மறுத்தாயெனில் உனக்கு ஒரு கவளம் கூட உண்ணக் கிடைக்காது! நீ பசியில் வாடிப் போய்க் கடைசியில் இறப்பாய்! அது தான் நடக்கப் போகிறது!” என்றான் மோசா. “மிகவும் நல்லது தான். பசியினால் வாடினால் நான் மிகவும் ஒல்லியாக ஆகிவிடுவேன். ஆகவே உனக்கு உண்பதற்கு என் உடலின் மாமிசம் கிடைக்காது! எனக்கு அதில் சந்தோஷமே!” என்றார் த்வைபாயனர் பதிலுக்கு! அப்போது இரண்டு, மூன்று வயது முதிர்ந்த பழங்குடிகள் அவர்களில் ஷார்மியின் தந்தை க்ருபா என்பவரும் இருந்தார். ஓடோடி வந்தனர். வரும்போதே, “தலைவா, தலைவா! மஹிஷாசுரனின் அங்கீகாரம் பெற்ற புத்திரனே! ஓர் மஹாப் பிரளயமே நம் குடியிருப்பில் நடந்து விட்டது! ஒரு அக்கிரமம் நடந்திருக்கிறது! அநியாயம் நடந்து விட்டது!” என்று கூவிய வண்ணம் வந்தனர். “என்ன ஆயிற்று உனக்கு? ஏன் இப்படிப் புலம்புகிறாய்?” என்று க்ருபாவைப் பார்த்து மோசா கேட்டான். “என் மகள், ஷார்மி! அவளைக் காணவில்லை. மாயமாக மறைந்துவிட்டாள். ஒருவேளை இவருடைய மந்திர, தந்திர வித்தையாக இருக்கலாம், தலைவா!” என்றான் க்ருபா.

“என்ன, ஷார்மியைக் காணோமா?”

“அது மட்டுமல்ல, பிரபுவே! கூடவே என்னுடைய இரு மகள்களையும் காணவில்லை!” என்று இன்னொரு வயது முதிர்ந்த காட்டுவாசி கூறினார். அவர்களில் இன்னொரு முதிர்ந்தவரைத் தான் அந்தப் பெண்கள் இருந்த பகுதிக்குக் காவலாகப் போட்டிருந்தான் மோசா. இப்போது பெண்களைக் காணவில்லை என்றதும் தலைவன் என்ன செய்யப் போகிறானோ என்ற அச்சத்தில் நடுங்கியவண்ணம் அவர் நின்று கொண்டிருந்தார். “என்ன ஆயிற்று உனக்கு? ஏன் இப்படி உடல் நடுங்கப் பதட்டத்துடன் காணப்படுகிறாய்?” என்றான் மோசா. “பெரிய மோசடியே நடந்திருக்கிறது, என் கடவுளே! நாம் இங்கே சிறைப்பிடித்து அழைத்து வந்து சிறை வைத்த எல்லாப் பெண்களையுமே இப்போது காணவில்லை! எங்கே, எப்படிப் போனார்கள் என்பதே புரியவில்லை!” என்று நடுங்கியபடி கூறினார்.

மோசா குரோதத்துடன் த்வைபாயனர் பக்கம் திரும்பினான். “போக்கிரி, மோசடி செய்து விட்டாய்! வஞ்சகா! நயவஞ்சகா! எனக்குத் தெரியும் இது உன்னுடைய வேலையாகத் தான் இருக்க வேண்டும். உன் மந்திர, தந்திரங்களை இங்கே பிரயோகம் செய்திருக்கிறாயா?” என்றவன் திரும்பித் தன்னுடன் வந்தவர்களில் தனக்கு விசுவாசியாக இருக்கும் ஒருவனை அழைத்து அவனிடம், “ பில்லி, சூனியம் வைக்கும் மந்திரவாதியிடம் உடனே செல்! கை தேர்ந்தவனாக இருக்கட்டும். அவனிடம் கேள் இதைச் செய்தது யார் என்று! பதிலுக்கு அவனை விட்டே இவர்களுக்குச் சூனியம் வைக்கச் சொல்! இது என் கட்டளை!” என்றவன் த்வைபாயனரிடம் திரும்பி, “உண்மையைச் சொல்! முனிவா! எங்கே உன்னுடன் இருந்த இளைஞர்களும், இந்தப் பெண்களும் சென்றனர்?”

“நான் ஏற்கெனவே உன் காவலர்களைக் கேட்கச் சொல்லிவிட்டேன்!” என்றார் த்வைபாயனர்.

மோசா ஷார்மியின் தந்தை பக்கம் திரும்பி, “மாமா, ஷார்மி எங்கே சென்றிருப்பாள்?” என்று வினவினான். “எனக்கெப்படித் தெரியும், தலைவரே! நான் அவளைக் காணவில்லை என்றதுமே இதில் ஏதோ சூழ்ச்சி, மோசடி இருப்பதை உணர்ந்து நேரே உங்களிடம் வந்து விட்டேன்.” என்றார் க்ருபா. “அதோடு இல்லை, தலைவா! ஆசிரமத்திலிருந்து அழைத்துவரப்பட்ட பெண்கள் அடங்காமல் தான் இருந்தார்கள். இங்குள்ள மக்களையும் அவர்கள் மதித்ததில்லை. நம் பழங்குடியினரின் சம்பிரதாயங்களையும்,சடங்குகளையும் லட்சியம் செய்யவில்லை. அவர்களுக்குள்ளேயே பழகிக் கொண்டனர். இங்குள்ளவர்களுடன் கலந்து பழகவில்லை. அவர்கள் எதற்கு லாயக்கானவர்களாக இருந்தார்கள் என்பதே தெரியவில்லை; புரியவும் இல்லை. அவர்களும் தாங்கள் இனிமேல் இங்கே என்ன செய்வது என்ற குழப்பத்தில் இருந்தார்கள். இங்குள்ளவற்றோடு அவர்களால் ஒத்துப் போகமுடியவில்லை. ஆகவே ஒருவேளை அனைவருமாகச் சேர்ந்து யமுனை நதியின் வெள்ளத்தில் மூழ்கி இருக்கலாம்.”

அப்போது அவர்கள் இனத்தின் தலைவர்களில் ஒருவன் ஓட்டமாக ஓடி வந்து கொண்டிருந்தான். “மஹிஷாசுரனின் அவதாரமான எங்கள் அன்புத் தலைவரே! ஈடு இணையற்றவரே!” என்றெல்லாம் அழைத்தபடி ஓடி வந்தான். மூச்சு வாங்க அவன் சொன்னதாவது! “மதிப்புக்குரிய தலைவா! உங்கள் இரு சகோதரிகளும்………” என்றான். அவனால் மேலே பேச முடியவில்லை. அவனைப் பார்த்து மோசா கோபத்தால் சிவந்த கண்களுடன், “என்ன ஆயிற்று என் சகோதரிகளுக்கு?” என்று வினவினான். “அவர்கள் மறைந்துவிட்டனர்!” என்றான் அந்தத் தலைவன். “என்ன? மறைந்துவிட்டனரா? நீ நிச்சயமாகத் தான் சொல்கிறாயா?”

“ஆம், ஐயா, நம் குலதெய்வமான அந்த மஹிஷாசுரன் மேல் ஆணை!”

“எங்கே போயிருப்பார்கள் அவர்கள்?”

“எனக்கெப்படி ஐயா தெரியும்?”

மோசாவுக்கு மிகவும் ஆச்சரியமாகவும் அதிசயமாகவும் இருந்தது. அடுத்து என்ன செய்யவேண்டும் என்பதும் குழப்பமாக இருந்தது. என்ன செய்வது என்றே அவனுக்குப் புரியவில்லை. அவன் வாய் ஒட்டி உலர்ந்து போயிற்று. பின்னர் தன் மனதுக்கு இனிய நண்பர்கள் பக்கம் திரும்பினான். “நீங்கள் அனைவரும் அந்தப் பெண்களைத் தேடிச் செல்லுங்கள். அவர்களை உயிருடனோ அல்லது பிணமாகவோ பிடித்து வாருங்கள். உயிருடன் பிடித்து வந்தால் உடனே என்னிடம் கொண்டுவாருங்கள்!” என்று ஆணையிட்டான். பின்னர் வியாசரிடம் திரும்பி, “நீ எங்கள் மந்திரவாதி வரும்வரை காத்திருக்க வேண்டும். ஏன் சிரிக்கிறாய்? என்னைப் பார்த்தா சிரிக்கிறாய்? பொல்லாதவனே! மஹிஷாசுரனுக்கு நீ எதிரியா?” என்று கோபத்துடன் கத்தினான்.

த்வைபாயனருக்குச் சிரிப்புப் பொங்கிக் கொண்டு வந்தது. தாங்க முடியாமல் சிரித்தவர் எழுந்து நின்றார். மோசா அவரைப் பார்த்துக் கோபத்துடன், “எதற்குச் சிரிக்கிறாய்?” என்று கேட்டான். “தலைவா, விதி என்பது கடவுளால் கூட மாற்ற முடியாது. ஒருவனுக்கு மரணமோ, வாழ்வோ ஏற்கெனவே நிச்சயிக்கப்பட்டது. அதை மாற்ற உன்னால் இயலாது. நீ வேத கோஷத்தைக் கேட்க ஆசைப்பட்டாயல்லவா? இப்போது கேள்!” என்றவர் தன் கைகளை விண்ணைப் பார்த்து மேலுயர்த்தினார். திடீரென முனிவரிடம் ஏற்பட்ட இந்த மாற்றத்தைக் கண்டு மோசாவுக்குள் ஏதோ செய்தது. அவனும் அந்த மாற்றத்தினால் பாதிக்கப்பட்டான். இனம் தெரியாததொரு ஒளி அவரைச் சூழ்ந்து கொண்டிருப்பதைப் போல் அவர் முகம் ஒளிர்ந்தது. கண்களும் ஒளிர்ந்தன. அவர் உடல் விறைத்துக் கொண்டது. குரல் ஓங்கி ஒலித்தது. கம்பீரமான குரலில் மந்திரங்களைச் சொல்ல ஆரம்பித்தார்.

“ஓ, சர்வ வல்லமை படைத்த கடவுளே, வலிமை மிக்க வருண தேவா!
விண்ணிலும் மண்ணிலும் சதா சர்வ நேரமும் உலா வந்து விண்ணையும் மண்ணையும் ஆட்சி புரியும் கடவுளே
எல்லையற்ற இந்தப் பிரபஞ்சத்தின் தேவனே!
ஓ, கடவுளே, பராசர முனிவரின் புத்திரனும், மஹா வசிஷ்டரின் கொள்ளுப் பேரனும் ஆன த்வைபாயனன் ஆகிய நான் உங்களிடம் பிரார்த்திக்கிறேன்.
என் பிரார்த்தனைகளைச் செவி மடுத்து நிறைவேற்றுங்கள்.
ஓ, சர்வ வல்லமை படைத்த கடவுளே,
இங்கே நேர்மையற்றும் நியாயமற்றும் நடப்பவர்களைப் பொறி வைத்துப் பிடிப்பாயாக!
அவர்கள் உன்னுடைய கோபத்திலிருந்து விலகாமல் பார்த்துக் கொள்!
ஓ, கடவுளே, மனிதர்களை நன்கு கவனித்துச் செயலாற்றுபவனே!
இந்த மாபெரும் அண்டத்தின் ஒழுங்குமுறையைக் குலைப்பவரை, அதன் புனிதத்தைக் கெடுப்பவரை இதன் பிரதானமான ஒழுங்கைக்குலைப்பவரைத் தண்டிப்பவனே!
இந்த ஒழுங்குமுறையில் தான் மனிதகுல வாழ்க்கையே இருக்கிறது. இந்தப் பிரபஞ்சமும் இயங்குகிறது.
இதோ இவனுடைய கெட்ட எண்ணங்களும் கெடுதலான செயல்களாலும் நெருப்பிலிட்ட தழும்புகளைப் போல் காண்கிறோம்.
ஓ கடவுளே, விண்ணிலிருந்து இந்த பூமியைக் கண்காணித்து ஆட்சி புரியும் வருண தேவா
உன்னுடைய ஆற்றல் ஓர் நெருப்பைப் போல் இவனைச் சூழ்ந்து கொள்ளட்டும்
நேர்மையையும் நீதியையும் உண்மையையும் இவன் அவமதிக்கிறான்!
இவனை நெருப்புச் சூழட்டும்!”

அப்போது திடீரென மோசாவின் இளைய சகோதரன் ஓடோடி வந்தான். “அண்ணாரே, அண்ணாரே, அவள் மறைந்துவிட்டாள்!” என்ற வண்ணம் மேலே பேச முடியாமல் மேல் மூச்சு வாங்க நிற்க முடியாமல் நின்றான். அவனால் தொடர்ந்து பேச முடியவில்லை. மோசா அவனைப் பார்த்து, “யார்? யார் மறைந்துவிட்டார்கள்?” என்று வினவினான். “உன்னுடைய முதல் மனைவி!” என்றான் அவன். அங்கிருந்த வயது முதிர்ந்த பழங்குடித் தலைவர்களுக்குப் பயம் கலந்த ஆச்சரியம் ஏற்பட்டது. அனைவரும் த்வைபாயனரையே பார்த்தார்கள். மோசாவுக்கு நிலை கொள்ளவில்லை. என்ன செய்வதென்று தெரியாமல் தன் கைகளில் இருந்த தண்டாயுதம் போன்ற எருமைத் தொடை எலும்பு ஆயுதத்தைத் தூக்கிக் கொண்டு த்வைபாயனர் மேல் பாய்வதற்குப் பார்த்தான். ஆனால் ஷார்மியின் தந்தை அவனை இறுகப் பிடித்துக் கொண்டு விடவே இல்லை. மோசா தன்னை உலுக்கி விடுவித்துக் கொண்டான். தன் கையிலிருந்த ஆயுதத்தைத் தரையில் வீசி விட்டு அங்கிருந்து உயிருக்குத் தப்பி ஓடுபவன்போல் ஓடிப் போனான்.

2 comments:

பித்தனின் வாக்கு said...

நல்லா இருக்கு, மோசா கதை எல்லாம் நான் கேள்விப்படாதது. அந்தக் காலத்துல முனிவர்கள் எல்லாம் ஸ்வாகா சொன்னாப் போதும்,கோதானம்,ஸ்வர்ண தானம் கிடைக்கும்ன்னு நினைச்சேன். இப்பத்தான் தெரியுது இதுல இவ்வளவு ஆபத்து இருக்கு.

ஸ்ரீராம். said...

அடுத்த பகுதிக்காய் ஆவலுடன்...