Wednesday, September 7, 2016

குனிகருக்கு சந்தேகம்!

விடிவெள்ளி முளைக்கும் முன்னரே ஷார்மியும் அவளுடன் வந்த பதின்மூன்று பெண்களும், ஐந்து பிரமசாரிகளும் கோதுலியின் மண்ணை மிதித்து விட்டனர். காட்டு வழியில் அவர்கள் வேகமாக வந்ததை நடை என்று சொல்ல முடியாது. ஓட்டம் என்றே சொல்லவேண்டும். மூச்சுவிடாமல் ஓடோடி வந்து சேர்ந்திருக்கின்றனர். அதிலும் பெண்கள் முள்ளிலும் கல்லிலும் நடந்து உடை கிழிந்து காலில் இருந்து ரத்தம் வடியச் சோர்ந்து காணப்பட்டனர். கோதுலியை அடைந்து விட்டோம் என்பது நிச்சயம் ஆனதும் ஷார்மி தன்னுடன் வந்த தன் இளைய சகோதரனின் முதுகில் அன்புடன் தட்டிக் கொடுத்து அவனை உடனே திரும்பும்படி கூறினாள். அவனையும் காணவில்லை என்பதைக் காட்டுவாசிகள் கண்டுபிடித்து விட்டால் பின்னர் அவன் இந்தப் பெண்களுக்கு உதவியது வெளியே தெரிந்து விடும். அவனுக்கு மிகக் கொடூரமான தண்டனை கொடுக்கப்படும். ஆகவே அவன் விரைவில் திரும்ப வேண்டும் என்று ஷார்மி அவனை வற்புறுத்தினாள். அந்தப் பெண்கள் ஒரு காலகட்டத்தில் தாங்கள் தங்கள் வாழ்க்கையை இனிமையாகவும் மகிழ்ச்சியாகவும் கழித்த இடத்தை இப்போது பார்க்கையில் மனம் விம்மினார்கள். அவர்கள் இதயமே வெடித்துவிடும் போல் இருந்தது. குறிப்பாக ஷார்மிக்கு! அவள் அங்கே அவள் மனம் கவர்ந்த ஆசாரியருடனும், தங்கள் குழந்தைகளுடனும் எத்தனை இனிய இல்லறத்தைக் கழித்திருக்கிறாள். அதோடு அல்லாமல் அவள் மனம் கவர்ந்த பசுக்கூட்டங்கள்! வாழையடி வாழையாகத் தொடர்ந்து வந்த பசுக்களின் பரம்பரையே அழிக்கப்பட்டு விட்டதே!

இப்போது அவளிடம் எதுவுமே மிச்சம் இல்லை. அவளைத் தவிர! ஆனாலும் அவளால் தன் துக்கத்தை வாய்விட்டுச் சொல்லிக் கொள்ள முடியாது! உரத்த குரலில் புலம்பவும் முடியாது! அவள் துக்கத்தை அடக்கிக் கொண்டே ஆகவேண்டும். இல்லை எனில் அவளுடன் புதியதொரு விடியலைத் தேடி நம்பிக்கையுடன் வந்திருக்கும் அந்த இளம்பெண்கள் தைரியத்தை இழந்து விடுவார்கள். இந்தச் சூழ்நிலையை எதிர்கொண்டு போராடத் தயங்குவார்கள். அங்கே மோசாவால் காவல் வைக்கப்பட்டிருந்த இரு பழங்குடியினரின் காவல்காரர்களும் மரத்தடியில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தனர். தன் படகைக் கரையில் கவிழ்த்து வைத்துவிட்டுக் க்ரிவியும் அவன் மகன்களும் கூட உறங்கிக் கொண்டிருந்தனர். க்ரிவியின் தோள்பட்டையை அசைத்துச் சத்தம் போடாமல் அவனை எழுப்பினாள் ஷார்மி! “க்ரிவி, க்ரிவி, எழுந்திரு! உன் படகைத் தயார் செய்! நாங்கள் அனைவரும் உன் படகில் பிரயாணம் செய்யப் போகிறோம்!” என்று மெதுவான குரலில் கூறினாள்.

க்ரிவி திடுக்கிட்டுக் கண் விழித்தான். தன் கண்களையே நம்பாமல் அவளை விழித்துப் பார்த்தான். “நீங்கள் ஷார்மி அன்னையாரா? அவர் தானே! என் கண்கள் என்னை மோசம் செய்யவில்லையே!” என்றெல்லாம் கேட்டவண்ணம் அவளையே உற்றுப் பார்த்தான். தான் தூக்கத்தில் கனவு காண்கிறோமோ என்று கூட எண்ணினான். “ஆம், நான் ஷார்மி தான்!” என்றாள் ஷார்மி. பின்னர் அவன் காதுகளைப் பிடித்து முயல்குட்டியைத் தூக்குவது போல் அவனைத் தூக்குவதாக பாவனை பண்ண வலி தாங்க முடியாத க்ரிவி தான் காண்பது கனவல்ல, நனவே என நிச்சயம் கொண்டான். பின்னர், “ஓ, எருமைக் கடவுளே! இந்த ஏழையும் முதியவனும் ஆன க்ரிவிக்குக் கருணை காட்டு!  தாயே, என்னை விட்டு விடு! நீ ஷார்மி அன்னைதான் என்பதை ஒப்புக்கொள்கிறேன்!” என்றான் க்ரிவி.

“அப்போது சீக்கிரமாய் உன் படகைத் தயார் செய்! அதில் ஏறி நாங்கள் அரசப் படகுக்குச் செல்ல வேண்டும்.” என்ற வண்ணம் அவனைத் தன் பிடியிலிருந்து விடுவித்தாள் ஷார்மி. “என்ன அரசப் படகுக்கா? அப்படி எனில் நீங்கள் அனைவரும் அங்கிருந்து தப்பியா வந்திருக்கிறீர்கள்?” என்று கேட்டான் க்ரிவி. “பாலமுனி எங்களை எல்லாம் சூரிய உதயத்துக்கு முன்னரே அரசப்படகில் ஏறிவிடும்படி சொல்லி அனுப்பி உள்ளார்.” என்றாள் ஷார்மி சுருக்கமாக. “பாலமுனி? அப்படி எனில் அவர் எங்கே இப்போது? அவர் ஏன் வரவில்லை?” என்று க்ரிவி கேட்க, “அவர் இப்போது எங்களை அடைத்து வைத்திருந்த சிறைச்சாலையில் இருக்கிறார். எங்களை எல்லாம் அங்கிருந்து தப்புவதற்கு உதவி செய்து இங்கே வந்து அரசப் படகுக்குச் செல்லும்படி கூறியுள்ளார். க்ரிவி, மேலும் மேலும் கேள்விகளைக் கேட்டுக் கொண்டு நேரத்தை வீணாக்காதே!” என்றாள் கண்டிப்புடன் ஷார்மி.

“ஆனால் நான் எப்படி உங்களுக்கு உதவுவேன்? மஹிஷாசுரனின் மகனைப் போன்றவனும் நம் பழங்குடியினரின் தலைவனுமான மோசா என்னை இங்கேயே இருக்கும்படி கட்டளை இட்டிருக்கிறாரே! நான் எப்படி வருவேன்?” என்று செய்ய முடியாத தவிப்புடன் கேட்டான் க்ரிவி.  “இதோ பார் க்ரிவி! நாங்கள் அனைவரும் கிட்டத்தட்ட இறப்பிலிருந்து தப்பி வந்திருக்கிறோம். இதை விட மோசமான நிலை ஏற்பட முடியாது! நீ மட்டும் இப்போது எங்களை ஏற்றிச் செல்ல மறுத்தாயானால் எங்களுக்கெல்லாம் யமுனையில் குதித்து உயிர் விடுவதைத் தவிர வேறு வழியே இல்லை! நாங்கள் இத்தனைக்கும் பின்னர் திரும்பி அந்த நரகத்துக்குச் செல்ல விரும்பவில்லை!”

“ஆனால் பாலமுனி எங்கே? அவர் ஏன் வரவில்லை?” க்ரிவி மீண்டும் மீண்டும் கேட்டான். சுகர் இப்போது தலையிட்டார். “க்ரிவி, தந்தை தன்னைக் கடவுளரிடம் ஒப்படைத்து விட்டார். ஆகையால் அவர் அங்கேயே தங்கி இருக்கிறார். நீ இப்போது செய்யவேண்டியதெல்லாம் உடனே எங்களை உன் படகின் மூலம் அரசப் படகில் கொண்டு விட வேண்டியது தான். தந்தை எங்களை எல்லாம் ஹஸ்தினாபுரத்துக்கு உடனே செல்லும்படி பணித்திருக்கிறார்.” என்றார். அதற்குள்ளாகத் தொடர்ந்த பேச்சுக்குரல் கேட்டுக் க்ரிவியின் இரு மகன்களும் எழுந்து அங்கே வந்துவிட்டனர். “ஆஹா, நான் ஓர் துரதிர்ஷ்டமான மனிதன்!” என்ற வண்ணம் தன் தலையில் அடித்துக் கொண்டான் க்ரிவி.பின்னர் பரிதாபமான குரலில் தொடர்ந்து கூறினான். “நான் மட்டும் உங்களை அழைத்துச் சென்றேன் என்பது தெரிந்தால் தலைவர் கைகளிலிருந்து நானும் என் மகன்களும் தப்ப முடியாது. மரணம் எங்களுக்குக் காத்திருக்கும். அப்படி நான் உங்களை அழைத்துச் செல்லவில்லை எனில் உங்கள் அனைவரது சாபமும் எல்லாவற்றுக்கும் மேல் பாலமுனியின் சாபமும் எனக்குக் கிட்டும்! நான் என்ன செய்வேன்!” என்றான் க்ரிவி. “சரி, அப்பா, சரி! இப்போது உடனே சென்று எங்களை அரசப் படகுக்கு அழைத்துச் செல்வாய்!” என்றார் சுகர்.  மீண்டும் அவன் தோள்களில் தட்டி அவனைச் சமாதானப் படுத்தினார்.

கருக்கிருட்டு கலைந்து விடியும் நேரம். அரசப் படகின் தலைமைப் படகோட்டி விழித்துக் கொண்டிருந்தான். சற்று தூரத்தில் ஓர் படகு வருவது தெரிந்தது. கூர்ந்து கவனித்தபோது அது க்ரிவியின் படகு என்பதும் அதில் சில பெண்களும் சில பிரமசாரிகளும் வருவதும் தெரிந்தது. உடனே மந்திரி குனிகரை அழைத்துக் காட்டினான். குனிகர் அப்போது நதியில் இடுப்பளவு ஆழத்தில் நின்ற வண்ணம் தன் அதிகாலை அனுஷ்டானங்களைச் செய்து கொண்டிருந்தார். அவருடன் கூடவே வியாசருடன் வந்து  பின்னர் அவரால் அரசப் படகில் ஏற்றப்பட்ட ஸ்ரோத்திரியர்களும் தங்கள் காலைக் கடமைகளைச் செய்து கொண்டிருந்தனர். ஒரு சில படகோட்டிகள் அந்தக் காலை இளங்குளிரில் குளிக்கும் சுகமான அனுபவத்தைப் பெற்றுக் கொண்டிருந்தனர். ஒரு சில வில்லாளிகளும்ல அந்த அதிகாலை அனுஷ்டானங்களில் ஈடுபட்டிருந்தனர்.

மந்திரி குனிகர் படகோட்டியால் சுட்டிக்காட்டப்பட்ட படகைப் பார்த்ததுமே அது க்ரிவியின் படகு என்பதைப் புரிந்து கொண்டு ஆச்சரியம் அடைந்தார். அந்தப் படகில் இருந்த மனிதர்களையும் பார்த்து அதிசயித்த அவர் அவர்களில் யார் முக்கியமாய் இருக்க வேண்டுமோ அந்த வேத வியாசர் இல்லாததைக் கண்டு மனம் வருந்தினார். அதிர்ச்சியும் அடைந்தார். படகு இழுத்துக் கட்டப்பட்டு நிறுத்தப்பட்டது. அதிலிருந்த ஷார்மியும் மற்றப் பெண்களும் படகிலிருந்து குதித்து இறங்கினார்கள். இளம்பெண்களும் தூக்கக் கலக்கம் கலையாமல் படகிலிருந்து குதிக்க முயன்றனர். அதற்குள் மந்திரி குனிகரைப் பார்த்த ஷார்மி, “மந்திரியாரே, குனிகரே!” என்று அழைத்த வண்ணம் அவரை நெருங்கினாள். அவளைப் பார்த்த குனிகருக்கு அவள் உடை கிழிந்து தொங்கியது கண்களில் பட்டது. அவள் மார்பகம் முழுவதும் சரியாக மூடப்படவில்லை. மூடியும் மூடாமலும் கிடந்த அவள் உடலின் வளமும் செழுமையும் மட்டுமே குனிகரின் கண்களில் பட அவளையே வெறித்தார். ஷார்மிக்குக் கோபம் வந்தது.

“ஏ, மந்திரி! ஏன் என்னை அப்படி வெறித்து வெறித்துப் பார்க்கிறாய்? நான் என்ன தேவலோகத்திலிருந்து நேரே கீழே இறங்கி விட்ட அப்சரஸா என்ன? நான் உன் தாயை விட வயதானவளாகவே இருப்பேன். உனக்கு ஆசாரிய கௌதமரின் மனைவி ஷார்மியை மறந்து விட்டது என்று தோன்றுகிறது. நீ என் உடலை மட்டும் பார்க்காதே! எங்கள் கோலத்தைப்பார்! நாங்கள் காட்டு வழியில் அங்குமிங்கும் அலைந்து திரிந்து வழி கண்டு பிடித்து முட்களிலும் கற்களிலும் விழுந்து காயம்பட்டுக் கொண்டு ரத்தம் வழியும் கால்களோடும் கிழிந்த ஆடைகளோடும் வந்திருப்பதை மட்டும் பார்! அது உன் மாசு பட்ட கண்களில் தெரிகிறதா இல்லையா?” என்று கத்தினாள்.

அவளின் ஒவ்வொரு வார்த்தையும் சாட்டை அடி போல் குனிகரின் மேல் விழுந்தது. அவருக்கு வெட்கம் மீதூற ஷார்மியின் உடலிலிருந்து தன் கண்களை அகற்றிக் கொண்டார். “மன்னிக்கவும், ஷார்மி அம்மையாரே! நீங்கள் எல்லோரும் எப்படி இங்கே வந்து சேர்ந்தீர்கள்? நீங்கள் அனைவருமே மோசாவால் கொல்லப்பட்டிருப்பீர்கள் அல்லது கடுஞ்சிறையில் இருப்பீர்கள் என்று அல்லவோ எண்ணினேன்!” என்று கேட்டார். அதற்கு ஷார்மி தன் உதடுகளின் மேல் கையை வைத்து ஜாடை காட்டினாள். “இதோ பார், மந்திரி, நான் இப்போது மிகவும் களைத்துச் சோர்ந்திருக்கிறேன். ஒவ்வொருவரிடமும் நான் தப்பி வந்த கதையைச் சொல்லிக் கொண்டிருக்க எனக்கு நேரமும் இல்லை. என்னால் முடியவும் இல்லை. நாங்கள் பழங்குடியினரின் தலைமையகத்துக்குக் கொண்டு செல்லப்பட்டதும், அங்கே சிறை வைக்கப் பட்டதும், எந்த நேரமும் எங்களைக் கொல்ல முயற்சி செய்யப் போகிறார்கள் என்பதை எதிர்பார்த்துக் கொண்டு நரக வாழ்க்கை வாழ்ந்ததும் உண்மை தான். அப்போது தான் விடிவெள்ளியைப் போல பாலமுனி எங்கள் உதவிக்கு வந்தார். எங்களைத் தப்புவித்தார். அவர் தான் எங்களை கோதுலிக்குச் சென்று அங்கிருந்து க்ரிவியின் படகில் அரசப் படகைச் சென்றடையச் சொன்னார். இப்போது நீ செய்ய வேண்டியதெல்லாம் எங்களை ஹஸ்தினாபுரம் அழைத்துச் செல்லவேண்டியது ஒன்றே!” என்றாள்.

1 comment:

ஸ்ரீராம். said...

பரபரப்பான காட்சிகள். குனிகரின் பார்வை குறித்து வரும் வரிகள் இயற்கை!