Monday, September 26, 2016

ஷகுனியின் ஏமாற்றம்!

ஷகுனி கொஞ்சம் தணிந்த குரலில் பேச ஆரம்பித்தான். அவன் புன்னகையே அவன் எப்படியேனும் பீஷ்மரின் நன்மதிப்பைப் பெற வேண்டும் என்பதில் அவன் முக்கியமாக நினைப்பதைச் சுட்டிக் காட்டியது. பீஷ்மரைப் பார்த்து, “பிதாமகரே, ஆசாரியர் அவ்வாறு கூறினாரா? நீங்களும் அதையே செய்வேன் என்று சொல்வதில் தவறே இல்லை. ஏனெனில் இந்த ஆரியவர்த்தம் முழுதும் தேடினாலும் ஆசாரியரின் சொல்லை எதிர்த்துச் செயலாற்றும் தைரியமோ உரிமையோ எவருக்கும் இல்லை என்பது உலகறியுமே! அதோடு பாரம்பரியப் பழக்கவழக்கங்களை எடுத்துச் சொல்வதிலும் அதைக் கடைப்பிடிக்க வேண்டிய அவசியத்தை உணர்த்துவதிலும் ஆசாரியருக்கு இல்லாத அதிகாரம் வேறெவருக்கு உண்டு! ஆனால் பிதாமகரே, உங்களுக்குத் தெரியாததில்லை! சூழ்நிலைகளையும், சந்தர்ப்பங்களையும் ஒட்டி ஒவ்வொரு சமயம் பழைய சம்பிரதாயங்களை மீற வேண்டிய அவசியம் ஏற்படும் இல்லையா? நீங்கள் அறியாததா! நான் வேண்டுமானால் இன்னும் கொஞ்சம் வெளிப்படையாகவே பேசட்டுமா?” என்றான் ஷகுனி.

“நீர் பேசுவதை நான் ஒருக்காலும் தடுக்கவில்லை; தடுக்கவும் மாட்டேன்.”

“காந்தார நாட்டுத் தலைவர்கள், படைவீரர்கள் அனைவரும் இங்கே குரு வம்சத்தினரோடு இணைந்து செயலாற்ற விரும்புகின்றனர். இந்தக் கூட்டுத் தொடர வேண்டுமெனில் பீஷ்ம பிதாமகர் தன் முடிவை மாற்றிக் கொண்டு எங்களுடைய விருப்பத்தைப் பரிசீலிக்க வேண்டும் என்பதே என் தந்தையின் மற்றும் எனது வேண்டுகோள்!” பின்னர் ஷகுனி சற்று நேரம் பேச்சை நிறுத்திவிட்டு ஏதோ யோசனையில் இருந்தான். பின்னர் பீஷ்மரைப் பார்த்துத் தன் கைகளைக் கூப்பிய வண்ணம் மேலும் தொடர்ந்தான். “என் தந்தை மாட்சிமை பொருந்திய காந்தார அரசர் என்ன நினைக்கிறார் எனில், காந்தார தேசத்து அரச குடும்பத்தின் நட்பும், தொடர்பும், இங்கே பெரிதும் மதிக்கப்பட வேண்டும்; மதிக்க வேண்டும் என்பதே!” என்றான்.

“சும்மாச் சும்மாச் சுற்றி வளைத்து வளைத்துக் கேள்விகள் கேட்கவேண்டாம், இளவரசே! இப்போது உண்மையாகவும் ஒளிக்காமலும் என்னிடம் பேசுங்கள். உங்கள் தந்தையின் முடிவை நாங்கள் ஏற்கவேண்டும்; ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும் என்று அவர் சொல்கிறாரா?” பீஷ்மர் பட்டென்று உடைத்துப் பேசினார். சொல்லும்போது ஷகுனியின் முகத்தையே உன்னிப்பாகக் கவனித்தார். அத்தகைய உள்நோக்கங்கள் ஏதும் இல்லை என்று மறுக்கப் போன ஷகுனியை இடைமறித்த பீஷ்மர்,”இதோ பாரும், காந்தார இளவரசே, உங்கள் தந்தையிடம் இதைச் சொல்லுங்கள்.” என்றவர் சற்றே நிறுத்தினார். தன் பொறுமையின்மையை அடக்கிக் கொண்டு கோபத்தையும் அடக்கிக் கொண்ட பீஷ்மர், “குரு வம்சத்தின் அதிகாரங்களையும், அரச நீதியையும் செம்மையாகச் செய்து முடிக்க பீஷ்மனுக்குப் பிறர் உதவி ஏதும் தேவை இல்லை என்பதை உம் தந்தையிடம் போய்ச் சொல்லும்!” என்றார்.

ஷகுனிக்குப் பதட்டம் ஏற்பட்டது. “இல்லை, இல்லை, பிதாமகரே, அப்படி எல்லாம் இல்லை!” என்று அவசரம் அவசரமாக மறுத்த ஷகுனி, “குரு வம்சத்தினரின் ராஜரீக விவகாரங்களில் தலையிடுவதற்கு என் தந்தை ஒத்துக்கொள்ள மாட்டார். தலையிடவும் மாட்டார்!” என்று மறுத்தான். அதைக் கேட்ட பீஷ்மர், அதிகாரத் தொனியில், கிட்டத்தட்டக் கட்டளையைப் போலவே, “சரி, உங்கள் தந்தையிடம் போய்ச் சொல்லுங்கள் இளவரசே! பீஷ்மன் பாண்டுவின் புத்திரர்கள் ஐவரையும் ஏற்றுக் கொண்டு முறைப்படி ஹஸ்தினாபுரத்துக்கு உரிய இளவரசர்களாக அங்கீகாரம் செய்யப் போகிறான் என்பதைச் சொல்லுங்கள். பாண்டுவிற்கு அவன் அரியணையில் இருக்கையில் என்ன உரிமைகள் இருந்தனவோ, என்ன வசதிகளை அவன் அனுபவித்தானோ அத்தனையும் இந்த ஐந்து இளவரசர்களுக்கும் உண்டு என்பதையும் பீஷ்மன் ஏற்றுக்கொள்கிறான் என்பதை உங்கள் தந்தைக்குத் தெரிவிக்கவும். அப்படி யாரேனும் இதைத் தடுக்க முயன்றால், குரு வம்சத்தினரின் ராஜரீக விவகாரங்களில் எவரேனும் குறுக்கிட்டால், பின்னர் அவர்கள் மிகவும் மோசமான பின் விளைவுகளைச் சந்திக்க நேரிடும். குரு வம்சத்து வீரர்கள் அனைவரும் ஒன்று திரண்டு அவர்கள் மேல் போர் தொடுத்து அவர்களை ஒன்றுமில்லாமல் செய்து விடுவார்கள்.” உரத்த குரலில் பீஷ்மர் இதைச் சொன்னபோது அவர் குரல் இடிமுழக்கம் போலவே கேட்டது.

அதற்குள்ளாக அரண்மனைக் காரியஸ்தர் கதவுக்கருகே நின்று கொண்டிருந்தவர் பீஷ்மருக்கு அருகே வந்து கூப்பிய கரங்களுடன் வணக்கம் தெரிவித்து விட்டு, “பிரபுவே, ஆசாரியருக்காக நாம் அனுப்பி இருந்த படகு நதியில் வருவது தெரிகிறது விரைவில் ஆசாரியர் இங்கே வந்து விடுவார்! !” என்று தெரிவித்தான். “சரி, உடனே ராஜமாதாவிடம் போய் நான் ஆசாரியரை அழைத்துக் கொண்டு அவரை வந்து சந்திப்பதாகத் தெரிவித்து விடு. ராஜமாதா களைப்புடன் இருந்தால் தொந்திரவு செய்யாதே! அவர் அழைத்து வரச் சொன்னால் அழைத்துச் செல்லலாம்.” என்றார் பீஷ்மர். பீஷ்மர் அவ்வளவில் எழுந்து ஷகுனியுடனான சந்திப்பு முடிந்தது என்பதற்கு அறிகுறியாக அந்த அறையிலிருந்து வெளியேறத்தொடங்கினார். ஷகுனி அவரை வணங்க, அதை ஓர் தலை அசைவின் மூலம் அங்கீகரித்த பீஷ்மர் ஆழ்ந்த யோசனையில் இருப்பதை அவருடைய நெரிந்த புருவமும், ஆழமான கண்களும் தெரிவித்தன. ஷகுனி யோசனையில் ஆழ்ந்திருந்தான். அவன் தந்தை அவனிடம் ஏற்கெனவே பீஷ்மரிடம் ரொம்பவும் வற்புறுத்தியோ கட்டாயப்படுத்தியோ பேச வேண்டாம் என்று சொல்லியே அனுப்பி இருந்தான். ஆகையால் ஷகுனி மிகவும் சிரமப்பட்டுத் தன்னை அடக்கிக் கொண்டான். குரு வம்சத்தினரோடு இந்த அபிப்பிராய பேதத்தினால் பெரும் பின் விளைவுகள் ஏற்படக் கூடாது என்பதில் காந்தார அரசன் உறுதியாக இருந்தான்.

என்றாலும் வெளிப்படையாகப்போலி அடக்கத்தைக் காட்டியவன், “பிரபுவே, நான் மிகவும் ஏமாற்றத்துடன் செல்கிறேன்.” என்று பீஷ்மரிடம் தெரிவித்தான். கிட்டத்தட்டக் கதவுக்கருகே சென்றுவிட்ட பீஷ்மர் திரும்பினார். சகுனியைப் பார்த்து, “ இன்னமும் மூன்று நாட்களில் நீ காந்தாரத்துக்கே நேரில் சென்று உன் தந்தையிடம் என்னுடைய செய்தியைத் தெரிவிப்பாய் என்று எதிர்பார்க்கிறேன்.”என்று கிட்டத்தட்டக் கட்டளையாகச் சொன்னார். ஷகுனிக்கும் இது ஓர் வேண்டுகோளே இல்லை, கட்டளை என்பதும் புரிந்து விட்டது. ஆகவே வேறு வழியில்லாமல் தலை வணங்கித் தான் அதை வரவேற்பதாகத் தெரிவித்துக் கொண்டான். ஆனாலும் அவன் மனம் உள்ளூர வெறுப்பில் ஆழ்ந்தது. பீஷ்மர் தன் காரியஸ்தன் பின் தொடர அந்த அறையை விட்டு வெளியேறினார்

1 comment:

ஸ்ரீராம். said...

தொடர்கிறேன்.