Saturday, July 16, 2016

வாஜ்பேய யக்ஞத்தில் வாடிகா!

வாடிகா தன் கணவன் யாகம் சிறப்பாக நடைபெற வேண்டிச் செய்த ஏற்பாடுகளைக் கண்டு பிரமித்துப் போனதோடு அல்லாமல் தன் மனதையும் கணவன் பால் அதிகம் பறி கொடுத்தாள். நான்கு ஸ்ரோத்திரியர்கள் இந்த யாகத்தில் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். ஆசாரிய விபூதி அத்வர்யூவாகவும், ஆசாரிய கௌதமர் ஹோதாவாகவும், ஆசாரிய தேவயானர் உத்கதாவாகவும் ஆசாரிய ஷௌனகர் பிரம்மனாகவும் இருந்து இந்த யாகத்தை நடத்தித் தரப் போகின்றனர். அனைவரும் இதற்கான ஏற்பாடுகளைத் திறம்படச் செய்வதில் மும்முரமாகத் தங்களை ஈடுபடுத்திக் கொண்டிருந்தனர். பதினேழு என்னும் எண் மறைபொருளாக இருந்து கொண்டு இந்த யக்ஞத்திற்கான அற்புதமான புனிதத் தன்மையை ஏற்படுத்திக் கொண்டிருந்தது. ஆகவே பதினேழு வேதிகள் (அக்னி குண்டங்களைச் சுற்றிய மேடை) ஏற்படுத்தப்பட்டன. நடுவில் உள்ளது மிகப் பெரிதாக இருந்தது. அது அக்னி தேவனுக்கானது. தலைமை தாங்கி நடத்தும் ஆசாரியர்களால் அங்கே வழிபாடுகள் நடத்தப்படும். மற்றவற்றிற்கும் ஒவ்வொரு வேதிக்கும் ஒவ்வொரு ஆசாரியன் தலைமை தாங்குவார்.

சடங்குகளைச் செய்யும் ஸ்ரோத்திரியர்கள் பதினேழு மந்திரங்களைச் சொல்லவும் பதினேழு ஸ்தோத்திரங்களைச் சொல்லவும் பதினேழு சாஸ்திரங்களைச் செய்யவும் பயிற்சி கொடுக்கப்பட்டிருந்தார்கள். பதினேழு ஆடுகள் சரியான நிறத்திலும் உருவ அமைப்பிலும் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தன. யுபம் எனப்படும் கம்பம் ஒன்று பலி கொடுக்கப்படும் மிருகத்தைக் கட்டிப் போடுவதற்காக ஏற்படுத்தப்பட்டது. இது மஹாராணியாலும் மஹாராஜாவாலும் பயன்படுத்தப்படும். அந்த ஸ்தம்பமும் பதினேழு முழ உயரத்தில் இருந்ததோடு அல்லாமல் பதினேழு துண்டுத் துணிகளால் சுற்றப்பட்டிருந்தது. விடிகாலையில் யாகம் நல்ல நேரத்தில் ஆரம்பிக்கப்பட்டது. மன்னனும் மஹாராணியும் வந்திருந்து சோமன் எனப்படும் ராஜ மூலிகையை வரவேற்றனர். புனிதமான அந்த மூலிகை இமயமலைப் பிராந்தியத்திலிருந்து கொண்டு வரப் பட்டிருந்தது. எட்டு வெள்ளைக் காளைகளால் இழுக்கப்பட்ட மாட்டு வண்டியில் அவற்றின் கொம்புகள் தங்க நிற இலைகளால் அலங்கரிக்கப்பட்டிருக்க வந்து சேர்ந்திருந்தது. இந்த “அரசன்” சோமன் மஹாராஜா ஷாந்தனுவால் வரவேற்கப் பட்டு அவனுடைய பிரதிநிதியான அத்வர்யூவிடம் ஒப்படைக்கப்பட்டது.

அவர் அதை தக்க மந்திர உச்சாடனங்களுடன் ஹோதாவிடம் கொடுத்தார். அதன் பின்னர் அந்த மூலிகைச் செடி நன்கு நசுக்கப்பட்டு அதன் சாறு பதினேழு பாத்திரங்களில் எடுக்கப்பட்டது. மற்ற சில குறிப்பிட்ட மூலிகைகளிலிருந்தும் சாறு எடுக்கப்பட்டு வேறு பதினேழு பாத்திரங்களில் சேகரிக்கப் பட்டது. மஹாராஜாவும் மஹாராணியும் யாகத்தை நடத்துபவர்கள் ஆதலால் இருவருமே பதினேழு தங்கச் சங்கிலிகளை அணிந்திருந்தனர். அதோடு அல்லாமல் நான்கு தலைமை ஆசாரியர்களுக்கும் முறையே பதினேழு சங்கிலிகளும் மற்ற வேதிகளில் இருந்தவர்களுக்கு ஆளுக்கு ஒவ்வொன்றும் கொடுத்தனர். தக்க மந்திரங்களை முறைப்படியான உச்சரிப்போடு ஓதி எல்லா வேதிகளிலும் ஒரே சமயத்தில் அக்னி உருவாக்கப் பட்டது. சோமரசம் பதினேழு பாத்திரங்களிலிருந்து அனைத்துக் கடவுளருக்கும் ஆஹுதியாகக் கொடுக்கப்பட்டது. நூற்றுக் கணக்கான ஸ்ரோத்திரியர்களின் வாயிலிருந்து எழுந்த மந்திர கோஷம் அந்த இடத்தை நிறைத்தது.

இவை எல்லாம் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கையில் வாடிகாவோ இது எதையுமே கவனிக்காமல் தன் கணவனையும், மஹாராணியையுமே மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்தாள். த்வைபாயனரோ மிகவும் சந்தோஷத்துடனும் அனைவரையும் ஊக்கப்படுத்தியும் உற்சாகப் படுத்தியும் யாகத்தில் பங்கெடுத்துக் கொண்டிருந்தார். ஆனால் கூட்டம் எல்லாம் அவர் செல்லுமிடமெல்லாம் சென்று கொண்டிருந்தது. அவரைச் சிறிது நேரம் தனிமையில் விடவே இல்லை. குழந்தைகள் அனைவரும் அவர் கொடுக்கப் போகும் உணவை எதிர்பார்த்து அவரைச் சூழ்ந்து கொண்டனர். பெண்களோ தங்களுக்கும் தங்கள் குழந்தைகளுக்கும் ஆசிகளை வேண்டி அவரிடம் வந்தனர். நோயுற்றவர்கள் நோய் தீர்க்கக் கோரி வந்தனர். குனிகருக்கும் அவருடைய ஊழியர்களுக்கும் இந்தக் கூட்டத்திலிருந்து த்வைபாயனரைக் காப்பாற்றுவது பெரும்பாடாக இருந்தது.

வாடிகாவுக்கு முதலில் தன் கணவன் இந்த யாகத்தின் முக்கியப் பொறுப்புக்களிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டது பிடிக்கவே இல்லை. அவரும் இதில் பங்கெடுத்திருக்க வேண்டும் என்றே நினைத்தாள். இந்த யாகம் நடத்துவது குறித்து யோசனை சொன்னதே அவர் தானே! ஆகவே அவரே அத்வர்யூவாக இருந்திருக்க வேண்டும். ஆனால் அவர் வயதில் இளைஞர் என்பதால் அனைவரும் ஒத்துக்கொள்ளும் வண்ணம் ஓர் முதியவரைத் தேர்ந்தெடுத்து விட்டார். இதன் மூலம் அவர் இளையவராக இருந்தாலும் உலக அளவில் பாராட்டுகளைப் பெற்று விட்டார். அதிலும் அவர் பராசர முனிவரின் மகன் என்னும் ஒரே காரணத்தால் அல்ல! அவரே ஓர் தக்க ரிஷியாகவும், முனிவராகவும் இருப்பதாலேயே! இதை நினைத்து அவள் மிகவும் பெருமையும் கர்வமும் அடைந்தாள்.இந்த யாகம் நடக்கும் பதினேழு நாட்களும் கணவன், மனைவி ஆகியோர் பிரிந்திருக்க வேண்டும். ஆகவே அவளுக்குத் தன் கணவனைச் சந்திக்க வாய்ப்புக் கிடைக்காது. தினம் இரவு வெகு நேரம் சென்று அவர் தூங்க வரும் அந்தச் சில நொடிகளிலேயே அவரைக் கொஞ்சம் பார்த்துக் கொள்ளலாம். அதுவும் அவர் மிகவும் களைப்பாக இருப்பார்.

வாடிகா எவ்வளவு தான் நினைத்துப் பார்த்தாலும் அவர் மேல் புகார் சொல்லுமளவுக்கு எதுவும் இல்லை. அவரைச் சந்திக்கும்போதெல்லாம் அவர் முகம் மலரும். கண்கள் அவளைப் பார்த்துச் சிரிக்கும். ஆனாலும் அந்த மஹாராணி தன் கணவனிடம் எப்படி நடந்து கொள்கிறாள் என்பதையும் அவளால் கண்காணிக்காமல் இருக்க முடியவில்லை! அப்படிப் பார்க்கையில் எல்லாம் இருவருக்கும் இடையில் ஏதோ மறைபொருள் இருக்கிறது! அது அவர்கள் இருவருக்கு மட்டுமே தெரியும், புரியும் என்னும்படியான பார்வையாக இருக்கும். இது வாடிகாவின் மனதை வருத்தியது. மஹாராணிக்கும் அவள் கணவனுக்கும் இடையில் என்ன ரகசியம்? இந்த மஹாராணி மிகப் பொல்லாதவளாக இருக்கிறாள். அவள் கண்களை வாடிகா சந்திக்கும்போதெல்லாம் அந்த மஹாராணி சிரிக்கிறாளே! என்ன அர்த்தம் அதற்கு? வாடிகாவே அவளுடைய சொந்தச் சொத்து என்னும்படியாக அல்லவோ நினைக்கிறாள் போல! அந்தச் சிரிப்பில் உண்மை இல்லை. பாசாங்குத் தனம் நிறைந்திருக்கிறது. இதில் ஏதோ மோசடி இருக்கிறது. அல்லது அந்த மஹாராணி நினைக்கலாம்; “பார்த்தாயா, பெண்ணே! உன் கணவன் என் வசம்! அவன் அன்பெல்லாம் எனக்கே எனக்கு!” என்னும் எண்ணமும் இருக்கலாம். வாடிகா ஓர் முடிவுக்கு வந்துவிட்டாள்.

வாடிகாவும் உபநயனம் முடிந்து பிரமசரியம் அனுஷ்டிக்கையில் மிகக் கடுமையான நியம, நிஷ்டைகளைச் சந்தித்திருக்கிறாள். அது மிகவும் முக்கியமானதொரு கட்டுப்பாடு ஆகும். சிறிதும் பாலுணர்வு என்பதே அவள் மனதில் தோன்றியதில்லை. கடுமையான கட்டுப்பாடுகளைக் கடைப்பிடித்திருக்கிறாள். அது எல்லாம் த்வைபாயனரைச் சந்திக்கும் வரை தான். அவரைச் சந்தித்ததுமே அவள் மனம் கட்டுடைத்துக் கொண்டு வெளியே பாய்ந்து விட்டது. அன்பெனும் ஊற்று பிரவாகமெடுத்து அவளையும் த்வைபாயனரையும் மாபெரும் வெள்ளத்தில் மூழ்கடித்துத் திணற வைத்து விட்டது. ஆனால் இப்போதோ! எங்கிருந்தோ ஓர் மஹாராணி வந்து அவள் அன்பான கணவனை கண்ணுக்குக் கண்ணான கணவனைத் தன் பால் திரும்ப யத்தனிக்கிறாள்! அவள் பால் இருந்த அவள் கணவனின் இதயத்தைத் தன் பால் திருப்புகிறாள். வாடிகாவின் மனதில் பொறாமை கொழுந்து விட்டு எரிந்தது. இந்த வயதிலும் இவ்வளவு கவர்ச்சியுடன் காணப்படும் இந்த் அமஹாராணியை என் இல்லற வாழ்விலிருந்து, வாழ்க்கைப் பாதையிலிருந்து முழுவதுமாக அகற்ற வேண்டும். அவள் மனம் அவளிடம் சொன்னது.

யாகத்தின் பதினாறாம் நாள் யாகசாலை கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. சூரியன் சுட்டெரிப்பதைக் கூடச் சட்டை செய்யாமல் மக்கள் கூட்டம் திரண்டிருந்தது. ஆயிரக்கணக்கான மக்கள் கூடி இருந்து யாகத்தின் முக்கியக் கட்டம் நெருங்குவதைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். புனித ஸ்தம்பத்தில் ஒரு சக்கரம் பதினேழு ஆரங்களோடு அங்கே கட்டப்பட்டிருந்தது. அந்த ஸ்தம்பத்தின் ஒரு பக்கம் பதினேழு நபர்கள் அமர்ந்து கொண்டு பதினேழு முறை பேரிகைகளைக் கொட்டி முழக்கினார்கள்.. இது ஒவ்வொரு நாளும் நடந்தது, ரதப் போட்டி நடக்கும் பாதை பதினேழு அம்புகள் விழும் தூரத்தில் அமைந்திருந்தது. ஆரியர்களுக்கு ரதப் போட்டியும் குதிரைகளும் மிகவும் தெய்வீகமான ஒன்று. குதிரை என்பது வேதங்களில் மிகவும் போற்றப்படும் தெய்விகமான ததிக்ரவஸ் என்னும் குதிரையின் மூலம் வந்த வம்சாவளி என்றே நினைத்தார்கள். அது வாழ்க்கைக்கு ஓர் பொருளைக் கொடுத்ததோடு வலிமையையும், உற்சாகத்தையும் கொடுத்தது. ஒரு போர் எனில் நான்கு குதிரைகள் பூட்டிய ரதத்தை ஓட்டி வந்து போர் புரிபவன் கட்டாயம் வெற்றி அடைவான் என்னும் நம்பிக்கையும் இருந்தது. ரதங்களில் இருந்து போர் புரிந்தால் அழிவு நிச்சயம் என்னும் எண்ணமும் இருந்தது. போரில்லா நாட்களில் ஒருவருக்கொருவர் ரதப் போட்டிகள் நடத்துவார்கள். அதில் உற்சாகம் அடைவார்கள்.

க்ஷத்திரியர்களுக்குக் குதிரைகளை வளர்ப்பதிலும் போஷிப்பதிலும் முக்கியக் கடமையாக இருந்து வந்தது. ஒவ்வொரு அரசனிடமும் மாபெரும் குதிரை லாயம் ஒன்று கட்டாயமாக இருக்கும். க்ஷத்திரியர்களுக்குள்ளே ரதம் ஓட்டியில் திறமைசாலிகளாக இருப்பவர்களைக் கீழ்க்கண்டவாறு அழைப்பார்கள். ரதம் ஓட்டுபவன் சாரதி அல்லது ரதி என்றும், மிக நன்றாய் ஓட்டுபவன் மஹாரதி என்றும் அதைவிடச் சிறந்தவன் அதிரதி என்றும் அழைக்கப்படுவார்கள். இந்த யாகத்தில் முடிவில் நடைபெறப் போகும் ரதப் போட்டிக்கெனப் பதினேழு ரதங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தன. அவற்றில் பதினாறு ரதங்களை நான்கு சிறந்த ஆண் குதிரைகள் ஒவ்வொரு ரதத்தையும் இழுக்கும். ஒவ்வொன்றுக்கும் நான்கு என்று குதிரைகள் தெரிவு செய்யப்பட்டிருந்தன. பதினேழாவது ரதத்தில் மஹாராணியும் மஹாராஜாவும் பயணிக்கப் போவதால் அதற்கு மூன்று ஆண் குதிரைகளே தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தன. அவற்றை ரதத்தின் நுகத்தடியில் பிணைத்திருந்தனர். அந்த ரதத்தின் நான்காவது குதிரையைக் கட்டவில்லை. அப்படியே விட்டிருந்தனர். அதைப் பார்க்கவே கொஞ்சம் பயமாக இருந்தது. மற்றக் குதிரைகளை விட அது எல்லாவற்றிலும் சிறந்ததாக இருந்தது. ரத சாரதியும் அதைக் கண்காணிக்க நியமிக்கப்பட்டிருந்தான். ரதம் ஓடும்போது கட்டப்படாத இந்தக் குதிரையையும் சேர்த்து அவன் ஓட்டி வரவேண்டும், அதற்கென இரு லகான்கள் தனியே இருந்தன. இந்த நான்காம் குதிரையை மிகவும் தெய்விக சக்தி உள்ளதாக நம்பிக்கை இருந்தது.

ஷாந்தனுவின் உடல்நிலையை உத்தேசித்து அனைவரும் இளவரசர் காங்கேயர் அந்த ரதத்தை ஓட்டட்டும் என்று முடிவு செய்திருந்தனர். மஹா அதர்வரும் த்வைபாயனரும் இது எல்லாவற்றையும் பார்த்து ரசித்துக் கொண்டும் மனதில் மகிழ்ச்சிபொங்கவும் அந்த ரதப் போட்டி துவங்கும் இடத்தருகே நின்று கொண்டிருந்தனர். அங்கே மற்ற தலைமை ஆசாரியர்களும் நின்று கொண்டிருக்க மன்னன் மெல்ல மெல்லத் தன் நடுங்கும் கால்களுடன் அந்த இடத்தை அடைந்தான். காங்கேயன் தன் தகப்பன் ரதத்தில் ஏறி அமர்வதற்கு உதவி செய்தார். மஹா அதர்வரும் த்வைபாயனரும் அப்போது ஒருவருக்கொருவர் பொருள் பொதிந்த பார்வையைப் பார்த்துக் கொண்டனர். பின்னர் மஹா அதர்வர் கண்களால் சம்மதம் சொல்ல த்வைபாயனர் காங்கேயன் பக்கம் திரும்பினார்.

1 comment:

ஸ்ரீராம். said...

அத்வர்யூ, ஹோதா, உத்கதா, பிரம்மனாகவும் என்றெல்லாம் வருகிறதே... என்ன? இவர்களின் ரோல் என்ன? இதை பற்றிய விவரங்கள் பின்னர் வருமா?

//இவ்வளவு கவர்ச்சியுடன் காணப்படும் இந்த் அமஹாராணியை// திருத்தம் தேவை.

ஏகப்பட்ட விவரங்கள்.

எதற்கு பொருள் பொதிந்த பார்வை?

தொடர்கிறேன்.