Thursday, July 21, 2016

வேதங்கள் பகுக்கப்பட்டன!

வாஜ்பேய யக்ஞம் வெற்றிகரமாக நிறைவு பெற்றது. எந்த நோக்கத்துக்காக யக்ஞம் செய்யப்பட்டதோ அந்த நோக்கத்தில் அது முழுமையாக வெற்றி அடைந்தது. ஸ்ரோத்திரியர்கள் அனைவரும் ஒருங்கு திரண்டு ஒற்றுமையாக நடத்தியதோடல்லாமல் இனி வரும் நாட்களிலும் இதே ஒற்றுமையைக் கடைப்பிடிப்போம் என பிரதிக்ஞை எடுத்தனர். மஹாராஜா ஷாந்தனுவின் கௌரவம் மற்ற அரசர்களிடையே மிக உயர்ந்தது. ஆரியர்களின் மனசாட்சி துருப் பிடித்துப் போயிருந்ததை இந்த யக்ஞம் சாணை பிடித்துக் கூர் தீட்டி வைத்தது. சஹஸ்ரார்ஜுனனோடு நீடித்து நடந்த போரில் மழுங்கிப் போயிருந்த அவர்கள் மனசாட்சி இப்போது நன்கு கூர் தீட்டப்பட்டது. ஓநாய்களின் ராஜ்ஜியமாக இருந்த அந்தக் காடு இப்போது மீண்டும் இழந்த தன் பழைய கௌரவத்தைப் பெற்று தர்ம க்ஷேத்திரமாக, தர்மம் உதயமாகும் இடமாக மாறியது. யாகத்திற்கு வந்திருந்த மாபெரும் கூட்டம் மறுநாளில் இருந்து மெல்ல மெல்லக் கரைய ஆரம்பித்தது. ஆசாரிய விபூதி மிகவும் முயன்று அந்த யாகத்தை முறையாகவும், சம்பிரதாயங்களை மீறாமலும் உரிய சடங்குகளைச் சரிவரச் செய்ய வைத்தும் நடத்திக் கொடுத்திருந்தார். ஆகவே அனைத்து ஸ்ரோத்திரியர்களிடமும் தன் கௌரவமும் உயர்ந்து விட்டதை நன்றாகவே புரிந்து கொண்டிருந்தார். அந்த சந்தோஷத்துடனேயே அவர் ஹஸ்தினாபுரம் திரும்பினார்.

வந்திருந்த மற்ற அரசர்கள், இளவரசர்கள், தலைவர்கள் அனைவரும் ஒவ்வொருவராகத் தங்கள் பரிவாரங்களோடு திரும்ப ஆரம்பித்தனர். அவர்கள் செல்லும் முன்னர் த்வைபாயனரைக் கண்டு தங்கள் வணக்கங்களைத் தெரிவித்துக் கொண்டனர். அவர் தானாகவே தன்னிச்சையான ஓர் முனிவராக அனைவராலும் ஒப்புக் கொள்ளப் பட்டிருந்தார். இது பொதுவாக அனைவருக்கும் கிடைக்காதது. அனைத்திலும் சிறந்தவருக்கும் சிறப்பாகத் தவங்களில் ஈடுபட்டவருக்குமே கிடைக்கக் கூடியது. அதிசயங்களை நிகழ்த்தக் கூடியவருக்குக் கிடைக்கக் கூடியது. த்வைபாயனரும் அத்தகைய அதிசயங்களை நிகழ்த்தி இருப்பதாகவே அனைவரும் நம்பினார்கள். ஆகவே அவருக்கு உரிய மரியாதையைச் செலுத்தினார்கள். மந்திரி குனிகர் அதுவரை இயங்கிக் கொண்டிருந்த சமையலறை, அனைவருக்கும் இலவச உணவு அளிக்கப்படுவதற்காக ஏற்படுத்தப் பட்டிருந்த சமயலறை இரண்டு நாட்களுக்குத் தான் இயங்கும் எனவும் அதன் பின் அதை மூடுவதாகவும் அறிவித்திருந்தார். ஆனால் மன்னன் கட்டளைப்படி உணவு, தானியங்கள் பராசர ஆசிரமவாசிகளுக்கும், மற்றும் அங்கே தங்கி பனிரண்டு வருட ஸ்ரௌத்த சாஸ்திரம் படிப்போருக்கும் விநியோகிக்கப்படும் என்றும் அவர்கள் தங்கு தடையில்லாமல் வேதங்களைக் கற்று மற்றவர்க்கும் அதன்படி வாழக் கற்பிக்க எல்லாவிதமான வசதிகளும் செய்து கொடுக்கப்படும் என்றும் அறிவித்தார்.

ஆடுகளை மேய்க்க வந்திருந்த ஆட்டிடையர்கள், காட்டுவாசிகள், வியாபாரிகள் மற்றும் யாகத்தைக் காண வந்திருந்த பயணிகள் அனைவரும் அங்கிருந்து கிளம்ப ஆரம்பித்தனர். த்வைபாயனரை வணங்கிவிட்டுச் சென்றார்கள். கடைசியாக உடல் நலமின்றி வைத்தியத்துக்காக வந்திருந்தவர்களும் அங்கிருந்து கிளம்ப ஆரம்பித்தனர். அவர்கள் கிளம்பும்போது மிகவும் உணர்ச்சி வசப்பட்டுக் கண்ணீரைப் பொழிந்து விடை பெற்றார்கள். பாலமுனியின் அதிசய சக்தியினால் தங்கள் உடல்நிலையை மேம்படுத்திக் கொள்ள வந்தவர்கள் அவர்கள் அனைவரும். தங்கள் கைகளை நீட்டி பாலமுனியை அணைத்துத் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியவர் பலர். ஆனால் பாலமுனியான த்வைபாயனரோ தன்னிடம் அப்படி ஏதும் சக்தி இல்லை என மறுத்தார். அனைத்தும் வேத மந்திரங்களின் மூலமாகவே நடந்தது என்றும் வேதம் ஒன்றே அனைத்துக்கும் காரணம் என்றும் சொன்னார். எவர் ஒருவர் நம்பிக்கை வைத்து வேதத்தில் சொல்லி இருப்பதைக் கடைப்பிடிக்கிறார்களோ அவர்களை அது காப்பாற்றுகிறது என்றும் கூறினார்.

அனைவரும் ஆண், பெண்,குழந்தைகள் உட்பட பாலமுனியைச் சூழ்ந்து கொண்டு தங்கள் கைகளில் ஒரு சின்ன மண்பானையில் பாலோடு அமர்ந்து கொண்டனர். தக்க மந்திரங்களை அவரவர் உடல்நிலைக்கு ஏற்ப உச்சரித்த வண்ணம் பாலமுனியானவர் தன் கையிலிருந்த மூலிகைச் சாறை அந்தப் பாலில் விட்டார். அவர்கள் அனைவரும் அந்தப் பாலை உட்கொண்ட பின்னர் அனைவரையும் தனித்தனியாக சந்தித்து ஆசிகளை வழங்கினார். அவருக்கு எனத் தனியாக ஆசி கூறும் முறை இருந்தது. “அனைவரும் வேதத்தை நம்புங்கள். அது ஒன்றே நம்மைக் காக்கும். நம் உடல் நிலையையும் அதுவே சரியாக்கும்!” இதுவே அவர் திரும்பத் திரும்பக் கூறுவது. ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக அவரவர் தனிப்பட்ட பிரச்னைகள் குறித்தும் கேட்டுத் தெரிந்து கொண்டு தக்க ஆலோசனை கூறுவார். அவர்கள் இல்லற வாழ்க்கை குறித்தும் கேட்டுத் தெரிந்து கொள்வார். அவர்களின் கால்நடை வளர்ப்புக் குறித்தும் ஆலோசனைகள் கூறுவார். அந்த நோயாளி ஒருவேளை பெண்ணாக இருந்தால் அவர்களின் மக்களைக்குறித்தும், மருமகன் அல்லது மருமகள் குறித்தும் கேட்டுத் தெரிந்து கொள்வார்.

எல்லாரையும் விட அங்கே வந்திருந்த குழந்தைகள் தாம் அவரைப் பிரிவதற்கு மிகவும் மனம் வருந்தினார்கள். அவர்களிடம் அவர் தாம் யமுனைக்கரையில் இருக்கையில் அங்கே யமுனையில் இருந்த மீன்களைக் குறித்துக் கதைகள் சொல்லுவார். அவற்றோடு தாம் பேசி இருப்பதாகவும் அவற்றின் மொழி தமக்குத் தெரியும் என்றும் கூறினார். அதைக் கேட்ட ஒரு குழந்தை அவரிடம் வந்து தனக்கும் மீன்களின் மொழியைக் கற்றுக் கொடுக்கச் சொல்லிக் கேட்டது. அதற்கு அவர் , அடுத்த முறை அந்தக் குழந்தை வரும்போது சொல்லித் தருவதாகவும் இப்போது பெற்றோருடன் ஊருக்குச் செல்லும்படியும் கூறி சமாதாம் செய்தார். பின்னர் அனைவரையும் அழைத்துக் கொண்டு ஆசிரம வாயில் வரை சென்றார். ஒருவழியாக அனைவரும் பிரியும் நேரம் வந்து விட்டது. அனைவரின் கண்களிலும் கண்ணீர் பொங்கியது. அவரைப் பிரியும் வருத்தம் இருந்தாலும் அனைவர் மனமும் நிறைந்து போயிருந்தது. ஏனெனில் அனைவர் மனதிலும் நம்பிக்கை என்னும் விதையை விதைத்திருந்தார் அவர். என்ன இருந்தாலும் அவர்கள் அனைவரும் மனமே இல்லாமல் தான் அவரைப் பிரிந்து அவரவர் இருப்பிடம் சென்றார்கள்.

அங்கே யாகத்தில் கலந்து கொள்ள வேண்டி வந்திருந்த சில ஸ்ரோத்திரியர்களும் கிளம்பினார்கள். அனைவரும் பாலமுனியை வணங்கிச் சென்றனர். யமுனைக்கரையில் இருந்த பராசரரின் ஆசிரமத்திலிருந்து வந்திருந்த ஆசாரியர்களும் கிளம்பினார்கள். என்றாலும் விடைபெறும் முன்னர் அவர்கள் த்வைபாயனரிடம் அவருடைய பனிரண்டு வருட ஸ்ரௌத்த சத்ரா முடிவடைந்ததும் கட்டாயமாய் யமுனைக்கரைக்கு வந்து அவர்கள் அனைவரையும் பார்த்துவிட்டுச் செல்லவேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். இதற்கு முன்னர் பாங்கு முனி என்றும் நொண்டி முனி என்றும் அழைக்கப்பட்ட பராசர முனிவர் எப்படி எல்லோரையும் வந்து பார்த்துக் கொண்டிருந்தாரோ அதே போல் இப்போது பாலமுனியும் செய்ய வேண்டும் என்பது அவர்கள் ஆசை! அவர்கள் கிளம்புகையில் த்வைபாயனர் கடைசி எச்சரிக்கை ஒன்றை விடுத்தார்.

“வேதம் ஒன்றே சரியான வாழ்க்கை முறையைக் காட்டும்; நேர்மையாக வாழ வழி வகுக்கும். அறவழியில் வாழ வழி ஏற்படுத்தும். ஆகவே வேதவழியைக் கடைப்பிடிக்கும் ஸ்ரோத்திரியர்களான நாம் பேராசைப் படக் கூடாது. தவ வாழ்க்கையே மேற்கொள்ள வேண்டும். அறவழியிலேயே வாழ்வதையே முக்கியமாகக் கருத வேண்டும். வறுமை ஏற்பட்டால் கலங்காமல் இருக்கவேண்டும். எளிமையான வாழ்க்கையையே வாழவேண்டும். கடுமையான சுயக் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்க வேண்டும். தவம் இல்லாமல் நம்மால் எதையும் எப்போதும் எங்கும் சாதிக்க முடியாது!”

பின்னர் அவர் பிரார்த்தனை செய்தார்!
ஏ, கடவுளே, எங்களுக்குப் பாதுகாப்புக் கொடு!
ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு ஆர்வம் குறையாமல் தபம் செய்ய வழிகாட்டு
அப்படிப்பட்டதொரு புரிதலால் உண்மையை சத்தியத்தை நாங்கள் உணர்வோம்
சத்தியத்தைக் குறித்த ஞானம் எங்களுக்கு ஏற்படும்.
அந்த ஞானத்தினால், அறிவினால் நேர்மையான அறவழியிலான வாழ்க்கையை நாங்கள் வாழ்வோம்
அதற்கான உறுதி எங்களுக்கு ஏற்படும்
அந்த உறுதியினால் அனைத்துப் பொருட்கள் மேலும் அனைத்து மனிதர்கள் மேலும் எங்களுக்கு மாறா அன்பு ஏற்படும்
அந்த அன்பு எங்களுக்கு ஏற்பட்டால் வேதத்தின் மேல் எங்களுக்கு உள்ள நம்பிக்கை இன்னும் அதிகம் ஆகும்!
அது தான் விண்ணில் ஏற்படும் கிரஹ மாறுதல்களால் பூமியில் வாழும் நமக்கு ஏற்படும் தாக்கத்தை சமப் படுத்த முடியும்.
விண்ணின் ஒழுங்குமுறை மாறாமல் செயல்படும். செயல்பட வைப்போம்.  இந்தப் பிரபஞ்சத்தை அதன் போக்கில் இயங்க வைப்போம்

த்வைபாயனர், கௌதமர், பைலர், சுமாந்து ஆகியோர் சேர்ந்து ஒரு மாபெரும் ஆசிரமத்தை ஏற்படுத்தினார்கள். அப்போது இருந்தவர்களிடையே பராசர கோத்திரத்தில் மூத்தவராக கௌதமரே இருந்ததால் அவர் தலைமையில் இதை நடைபெற வைப்பதாகவும் முடிவு செய்தனர். ஆனால் அதற்கான வழிகாட்டுதல் அனைத்தும் நம் பாலமுனி த்வைபாயனரே செய்து வந்தார். அவர் பைலரை ரிக் வேதத்தின் குருவாகவும் தலைவராகவும் நியமித்தார். கௌதம முனிவர் சாம வேதத்தின் தலைவர் ஆனார். சுமாந்து அதர்வ வேதத்தலைவராக ஆனார்.