Friday, July 22, 2016

ஹஸ்தினாபுரத்தில் குழப்பம்!

த்வைபாயனரின் அறிவு, ஞானம், அவரின் மலர்ந்த முகம் ஆகியவற்றால் கவரப்பட்டப் பல சிறுவர்கள் அவரிடம் வேதம் கற்கவென்று வந்து சேர்ந்திருந்தனர். ஆகவே அவர்களைக் கட்டுப்பாடான வாழ்க்கையும் தவம் செய்து தங்களை முன்னேற்றிக் கொள்ளவும் த்வைபாயனர் உழைக்க வேண்டி இருந்தது. ஆசிரமத்தில் அவருடைய பொறுப்புகள் அதிகம் ஆயின. மெல்ல மெல்ல தர்மக்ஷேத்திரம் தன் தந்தை எதிர்பார்த்தாற்போன்றதொரு தர்ம சாம்ராஜ்யத்தைப் பயில்விக்கும் இடமாக மாறி வருவது குறித்து த்வைபாயனர் சந்தோஷம் அடைந்தார். காலையில் விடிவெள்ளி தோன்றும்போதே த்வைபாயனர் அதர்வரின் ஆசிரமத்துக்குச் சென்று அதர்வ வேதத்தைப் படித்துக் கொண்டு வருவார். வரும் வழியிலேயே உடல்நலமின்றித் தன்னைக் காண வந்திருக்கும் மக்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்துவிட்டுக் குழந்தைகளுக்கு உணவும் அளிப்பார். பின்னர் மதிய உணவு முடிந்ததும் மற்ற ஆசாரியர்களுடன் வேதத்தின் உட்பொருள் குறித்தும் அதைத் தொகுக்கும் முறை குறித்தும் ஆலோசனைகள் கூறுவார்.

இமயத்தில் மட்டுமே கிடைக்கும் அதிசய மூலிகையான சோமன் என்னும் ராஜ மூலிகையை வைத்து சோம யாகங்கள் அடிக்கடி செய்யப்படும். ஆசிரமத்தின் பெண்களோ பசுக்களைப் பராமரிப்பதும் பால் கறப்பதும் குழந்தைகளைப் பாத்துக் கொள்ளுவதுமாகத் தங்கள் வேலைகளில் ஈடுபடுவதோடு கணவன்மார்களுக்கு உதவிகளும் புரிந்தனர். அனைவரும் தங்கள் கணவன்மாரிடம் மாறாத விசுவாசத்துடன் வாழ்ந்து வந்தனர். எட்டு வயதாகும் குழந்தைகளுக்கு அவர்கள் ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் அவரவர் தகப்பன்மாரின் விருப்பத்தோடு உபநயனம் செய்வித்து பிரமசரிய விரதத்தில் ஈடுபடுத்தினர். அந்தக் குழந்தைகள் அதன் பின்னர் வேதத்தை முழு நேரமும் கற்க ஆரம்பிப்பார்கள். ஏற்கெனவே இப்படிக் கற்றுப் பிரமசரிய விரதத்தை முடித்த இளைஞர்கள் தனியாக ஆசிரமம் அமைத்துக் கொள்ளச் சொல்லி அனுமதி கொடுக்கப்படும். அவர்களும் தங்களுக்குப் பிடித்த இடங்களுக்குச் சென்று ஆசிரமங்களை அமைத்து வேத அப்பியாசங்களைச் சொல்லிக் கொடுப்பதோடு தவ வாழ்க்கையில் ஈடுபடுவதின் பெருமையைக் குறித்தும் சொல்லிக் கொடுப்பார்கள். ஸ்ரோத்திரியர்களின் தவ வாழ்க்கையே அனைத்து மக்களின் நலனுக்காகவே தான் என்பதையும் எடுத்து உரைப்பார்கள்.

இங்கே ஆசிரமம் இப்படி நடைபெற்றுவருகையில் ஹஸ்தினாபுரத்தில் விரும்பத் தகாத பல சம்பவங்கள் அடுத்தடுத்து நிகழ்ந்தன. வாஜ்பேய ஹோமம் முடிந்த பின்னர் ஷாந்தனு மஹாராஜா ஒன்றரை வருடங்களே உயிருடன் இருந்தார். அதன் பின்னர் இவ்வுலகை நீத்து முன்னோர்களுடைய பித்ரு லோகத்துக்குச் சென்று விட்டார். சத்யவதியின் நிலைமையைச் சொல்லி முடியாது. எனினும் இளவரசர் காங்கேயர் தான் கொடுத்த வாக்கை நிறைவேற்றினார். ஷாந்தனுவுக்கான துக்கம் அனுஷ்டிப்பது எல்லாம் முடிவடைந்ததும் ஓர் நல்ல நாளில் சித்திராங்கதனுக்குப் பட்டம் சூட்டி ஹஸ்தினாபுரத்தின் அரியணையில் அமர்த்தினார். ஆனால் வருந்தத்தக்க விதத்தில் சித்திராங்கதன் ஓர் எல்லைப் போரில் உயிர் நீத்தான். சத்யவதி மனம் உடைந்து போனாள். அவளுக்கு இது மரண அடியாக விழுந்து விட்டது. எனினும் மக்கள் இப்போது சத்யவதியை மிகவும் மதிப்புடன் நடத்தினார்கள். மதிப்புக்குரிய தாய் என்றே அழைக்கப்பட்டாள். ராஜமாதா என்னும் பெயரிலும் அழைத்தனர். சித்திராங்கதனின் இழப்பிலிருந்து மீண்டு வரச் சில காலம் ஆயிற்று சத்யவதிக்கு. ஆகவே த்வைபாயனர் ஷாந்தனு இறந்ததில் இருந்தே அடிக்கடி ஹஸ்தினாபுரம் சென்று தாயைப் பார்த்து வருவார். ஆனால் ஒவ்வொரு முறை அவர் அங்கே சென்று வரும்போதும் ஆசிரமத்தின் தன் வேலைகளை ஆரம்பிக்கும் முன்னர் தக்க பிராயச்சித்தம், பரிகாரங்கள் செய்து கொள்ள வேண்டி இருந்தது. இல்லை எனில் ஷ்ரௌத்த சத்ராவில் திரும்பக் கலந்து கொண்டு பணியாற்ற முடியாது. இது அவருக்குக் கொஞ்சம் சிரமமாகவே இருந்ததால் அதன் பின்னர் வாடிகாவை ஹஸ்தினாபுரத்துக்கு அனுப்ப ஆரம்பித்தார்.

சித்திராங்கதனின் மரணத்திற்குப் பிறகு அவன் தம்பி விசித்திர வீரியனுக்குப் பட்டம் சூட்டப்பட்டது. அவன் பிறவியிலேயே நோய்வாய்ப்பட்டவன். அவ்வளவு வலிமை உள்ளவன் அல்ல. ஆகவே குருவம்சத் தலைவர்கள் எவருக்கும் இதில் ஆர்வம் இல்லை. அனைவரும் வேறு வழியின்றியே விசித்திர வீரியனைத் தங்கள் அரசனாக ஏற்றனர். ஆனால் ஹஸ்தினாபுரம் செய்த அதிர்ஷ்டம் காங்கேயர் வலுவுடனும் வலிமையுடனும் இருந்தது தான். ஆகவே அவர் குரு வம்சத்து சாம்ராஜ்யத்தின் நிர்வாகத்தைத் தானாகவே முன்வந்து ஏற்றுக் கொண்டதுடன் அதை விஸ்தரிக்கவும் செய்தார். இப்படியான கடுமையான நேரங்களில் எல்லாம் வாடிகா ஹஸ்தினாபுரத்தில் தான் இருந்தாள். அவளுக்கும் ஓர் ஆண் குழந்தை பிறந்து சுகர் என்னும் பெயரிடப்பட்டு வளர்ந்து வந்தது. அந்தக் குழந்தையைத் தன் அத்தை உர்வியிடம் விட்டு விட்டுச் செல்வாள் வாடிகா. இரு வாரங்களுக்கு ஒரு முறை ஆசிரமத்துக்கு வந்து த்வைபாயனரிடம் ஹஸ்தினாபுரத்தின் நிலைமையை விவரிப்பாள். சத்யவதி சொல்லும் செய்திகளை வந்து சொல்லுவாள். இந்த நேரங்களில் எல்லாம் அளவு கடந்த துன்பத்தை அனுபவித்தாள் சத்யவதி. அவளுக்கு இது வேதனை நிறைந்த நாட்களாக இருந்தது. கண்ணுக்குத் தெரியாததோர் சக்தி தன்னையும் தன் பிள்ளையையும் ஹஸ்தினாபுரத்தையும் அதோடு சேர்த்துக் குரு வம்சத்தையும் இழுத்துச் சென்று மூழ்கடித்து விடப்போகிறது என்னும் அச்சத்தில் இருந்தாள். அந்த சக்தியிடமிருந்து தன்னை விடுவிப்பவர் யார்?

சத்யவதியின் அச்சம் பொய்யாகவில்லை. அதில் உண்மை இருந்தது. ஏனெனில் விசித்திர வீரியனின் உடல்நிலை மோசமாகிக் கொண்டு தான் இருந்தது. அவனுக்கு ஏதேனும் நேர்ந்து விட்டால்? பின்னர் குரு வம்சத்தில் அடுத்துப் பட்டம் ஏற எவரும் இல்லை! அரச பரம்பரையே வாரிசின்றித் தவிக்கும். பரதனால் நிர்மாணிக்கப்பட்ட இந்த மாபெரும் வம்சம் சந்ததியின்றி ஒழிந்து அழிந்து போய்விடும். என்ன செய்யலாம்? இதற்குள்ளாக ஹஸ்தினாபுரத்திலும் மற்றும் மற்ற அரசர்கள், தலைவர்கள் எல்லோருக்கும் பாலமுனியாகிய த்வைபாயனர் சத்யவதி பெற்றெடுத்த பிள்ளை தான் என்னும் செய்தி பரவி இருந்தது. அனைவரும் அவர்களுக்குள்ளாக இதைப் பேசினார்களே தவிர எவருக்கும் சத்யவதியிடம் இருந்த மதிப்போ, பாலமுனி த்வைபாயனரிடம் இருந்த மதிப்போ சற்றும் குறையவில்லை. முன்போலே அவர்களை மிகவும் மதித்தார்கள். இதை ஒரு பெரிய விஷயமாக எவரும் கருதவில்லை.

சத்யவதிக்கு இயல்பாகவே நற்குணங்கள் இருந்தன. அவள் அனைவரிடமும் நல்லவளாகவே நடந்து கொண்டாள். வேண்டியவருக்கு வேண்டியன செய்து கொடுத்தாள். பெருந்தன்மையாக நடந்து கொண்டாள். உதவி நாடி வந்தவருக்கு உதவிகளைச் செய்தாள். த்வைபாயனரோ தன் அறிவாலும் ஞானத்தாலும் வேதத்தை அறிந்து அதன்படி ஒழுகுபவர் என்பதாலும் அதிகம் அனைவராலும் கவரப்பட்டார். மேலும் அவர் எப்போதும் உலக க்ஷேமத்தையே  நினைத்து வந்தார். அதற்கேற்றபடி வாழ்வதற்கு அனைவருக்கும் பயிற்சி அளித்து வந்தார். நோயுற்றவர்களுக்குத் தக்கபடி மூலிகைகள் மருந்துகள் அளித்துக் காப்பாற்றினார். அன்றாடம் குழந்தைகளுக்கு உணவளித்துத் தான் உண்டார். எல்லாவற்றிற்கும் மேல் யமன் வாய்க்குப் போன ஷாந்தனுவை மீட்டு ஒன்றரை வருடங்கள் வாழ வைத்தார்.

1 comment:

ஸ்ரீராம். said...

தொடர்கிறேன்.