Monday, June 4, 2012

திருதராஷ்டிரனின் கபட நாடகம்!


“துரியோதனன், எவர் சொன்னாலும் கேட்க மாட்டான். உனக்குத் தான் நன்கு தெரியுமே அவன் குணத்தைக் குறித்து. தலை கனம் பிடித்தவன்.” கொஞ்சம் தயக்கத்துடனேயே திருதராஷ்டிரன் பேசியதைப் பார்க்கையிலேயே எவ்வகையிலேனும் யுதிஷ்டிரனிடம் தான் நடுநிலையாக நடப்பதாய்க் காட்டிக் கொள்ள விரும்பினான் என்பது தெளிவாகவே புரிந்தது அனைவருக்கும்.  பீஷ்மர் முகத்தில் வெளிப்படையாக வெறுப்புத் தெரிந்தது.  ஆனால் கண்களற்ற திருதராஷ்டிரன் தொடர்ந்தான். “ஒரு தரம் ஒருத்தரை வெறுக்க ஆரம்பித்தால், வெறுப்பின் ஆழத்துக்கே போய் வெறுக்க ஆரம்பிப்பான்.  அவன் வெறுப்புக்கு முடிவு இல்லை.  நான் என்ன செய்ய முடியும் மகனே?”

“எங்களுக்கு ஒரு நல்வழியைக் காட்டுங்கள் அரசே.  நீங்கள் சொல்லும் வார்த்தைக்கு, அல்ல,அல்ல கட்டளைக்குக் கீழ்ப்படிகிறோம்.  நான் மட்டுமல்ல, என் தம்பிகளும் கீழ்ப்படிவார்கள்.” யுதிஷ்டிரன் உறுதிபடச் சொன்னான்.

“இல்லை, மகனே, இல்லை.  என் அருமைத் தம்பியான பாண்டுவின் புத்திரர்களுக்கு நான் துரோகம் செய்ய விரும்பவில்லை.  அவர்களை ஏமாற்ற மாட்டேன்.  ஆனால்……” தயங்கிய திருதராஷ்டிரனின் அசைவற்ற விழிகள் மீண்டும் பீஷ்மர் இருக்கும் திசை நோக்கிச் சென்றன.  திருதராஷ்டிரன் பீஷ்மரின் அநுமதியை வேண்டுபவன் போலக் கெஞ்சலாக முகத்தை வைத்துக் கொண்டிருந்தான்.  “இப்போது இதை நாம் செய்யவில்லை என்றால், இதற்கு உடன்படவில்லை எனில்………. ஹஸ்தினாபுரம் தூள் தூளாக உடைந்து சுக்கு நூறாகி விடும்.  இந்த மாபெரும் சாம்ராஜ்யத்தின் கதி மிக மோசமாகும்.”


“துரியோதனனின் அவநம்பிக்கையை நீக்க நான் எடுத்துக் கொண்ட முயற்சிகள் அனைத்தும் பயனற்றுப் போயினவா?” யுதிஷ்டிரன் வருத்தத்துடன் கேட்டான்.


திருதராஷ்டிரனின் கைகள், கால்கள் என அனைத்தும் நடுங்கத் தொடங்கின.  பீஷ்மரின் மெளனம் அவனைக் கொன்றுவிடும் போல் இருந்தது.  அதை விட அவர் அவனைக் கேவலமான வார்த்தைகளால் திட்டி இருக்கலாம்.  அதைக் கூடப்பொறுத்துக் கொண்டு விடுவான் திருதராஷ்டிரன்.  இந்த மெளனம்.  இது பேச்சை விடவும் கொடிய தண்டனையாகத் தோன்றுகிறது.  பீஷ்மரையே பார்த்த வண்ணம் பேச்சைத் தொடர்ந்தான் திருதராஷ்டிரன்.  “அவநம்பிக்கையைக் குறித்த எந்தப் பேச்சும் இல்லை மகனே!” திருதராஷ்டிரன் தயக்கத்துடன் மீண்டும் தொடர்ந்தான். “ இப்போது செயலில் இறங்கிவிட்டனர் கெளரவர்கள்.  நான் கூறிய புத்திமதிகள் அவர்கள் காதுகளில் ஏறவே இல்லை.  சகோதரச் சண்டையில் இறங்கி விட்டனர்.”

“நான் அவ்வளவு முட்டாளில்லை அரசே!  அவர்கள் எங்கள் ஐவரையும் கொன்றுவிடத் திட்டம் தீட்டி இருப்பதை நானும் அறிவேன்.” யுதிஷ்டிரன் தைரியமாகவே கூறினான்.   பீஷ்மரின் கண்களில் மின்வெட்டுப் போல் தோன்றிய கோபம் நிறைந்த ஒளியால் பொசுங்கி விடுவோமோ என யுதிஷ்டிரன் நினைத்தான்.  அவர் கண்களில் கோபம் தோன்றினாலும் வாய் திறந்து ஒரு வார்த்தையும் பேசவில்லை.  வாய் திறந்து பேசாவிட்டாலும் பீஷ்மரின் கோபத்தை உணர்ந்த திருதராஷ்டிரன் பீஷ்மருக்குப் பயந்து அவசரம் அவசரமாக,, “கடவுளே, மஹாதேவா, இல்லை; மகனே; இல்லை;  அப்படி எல்லாம் அவர்கள் நடக்க மாட்டார்கள்.  நானும் அனுமதிக்க மாட்டேன்.”  என்றான்.

இந்த விஷயம் ஒன்றும் புதிதில்லை என்பது போலவும், அன்றாடம் நடக்கும் வழக்கமான ஒன்றைக்குறித்துப் பேசுவது போலும் யுதிஷ்டிரன் பேசினான்.” அரசே, இப்போது நாங்கள் என்ன செய்ய வேண்டும்?  எங்களைக் காத்துக் கொள்ளலாமா?  அல்லது எந்தவிதமான பாதுகாப்பும் இன்றி நிபந்தனைகள் ஏதுமின்றி, எங்களை அவர்களிடம் ஒப்புக் கொடுத்துக் கொள்ளவா?”

“உங்களை நீங்கள் பாதுகாத்துக்கொண்டே ஆகவேண்டும்.” முதல்முறையாக வாய் திறந்தார் பீஷ்மர்.  உறுதியுடனும், தெளிவுடனும், கட்டளை போல் கூறினார். “என்னருமைப் பாண்டுவின் புத்திரர்களை இம்மாதிரியாகக் கொலைக்களம் அனுப்ப முடியாது.  அவர்கள் கொல்லப்படக் கூடாது.  இதில் நான் தெளிவாகவும் உறுதியாகவும் இருக்கிறேன்.”  பீஷ்மரின் இந்தப் பேச்சுக் கத்தியை விடக் கூர்மையாக அனைவர் மனதிலும் போய்ப் பாய்ந்தது.  சற்று நேரம் அங்கே அமைதி காக்கப்பட்டது.  எவரும் பேசவில்லை.  பீஷ்மர் மீண்டும் தன் வெண்தாடியைத் தடவிக் கொடுக்க ஆரம்பித்தார்.

திருதராஷ்டிரன் அவசரம் அவசரமாக, “குழந்தாய், குழந்தாய், நாம் மோதல்களையும், முரண்பாடுகளையும் தவிர்ப்போம்.  யுதிஷ்டிரா, நான் சொல்வதில் உனக்குச் சம்மதம் தானே?”

யுதிஷ்டிரனுக்கு திருதராஷ்டிரன் எந்தப் பக்கம் பேச்சைக் கொண்டு போக விரும்புகிறான் என்பதை நன்கு புரிந்து கொண்டான். “எங்களால் எந்தவிதமான மோதல்களோ, முரண்பாடுகளோ ஏற்படாது மன்னா!  இது நிச்சயம்.  அரியணையில் அமர வேண்டும் என்பதற்காக என் சகோதரர்களோடு சண்டையிடுவதை நானும் விரும்ப மாட்டேன்.  என் சகோதர்களும் விரும்ப மாட்டார்கள்.” என்று நேரடியாக விஷயத்துக்கு வந்துவிட்டான்.  பீஷ்மர் அவனைப் பரிதாபமாய்ப் பார்த்தார்.

“ஆஹா, ஆஹா, ஆஹா, என் தம்பி பாண்டுவைப் போலவே பேசுகிறாய் மகனே.  என் அருமைத் தம்பி பாண்டு ஒரு உயர்ந்த மனிதன்.  அவனைப்போலவே நீயும் பேசுகிறாய்.  நீயும் அவனைப் போலவே உயர்ந்த உள்ளத்தைக் கொண்டிருக்கிறாய்.”  திருதராஷ்டிரனின் குரலில் அவனையும் அறியாமல் மகிழ்வும், சந்தோஷமும் கரை புரண்டு ஓடியது.

No comments: