Saturday, February 28, 2015

பலியா வாய் திறக்கிறான்!

பலியாவின் பேரன் கோபுவிற்குத் தன்னுடைய எஜமானன் மீண்டும் உயிருடன் வந்ததிலும், அவன் பழைய மாதிரியே இருப்பதையும் காண மகிழ்ச்சியும் திருப்தியுமாக இருந்தது. பீமன் அவனை யுதிஷ்டிரனிடம் சென்று தான் சற்றுத் தாமதமாக அரண்மனைக்கு வருவதாகத் தெரிவிக்கச் சொல்லி அனுப்பி வைத்தான்.  அவன் சென்றதும் பலியாவைப் பார்த்து, “நீ உயிருடன் இருப்பாய் என்றோ, உன்னைப் பார்க்க முடியும் என்றோ நான் எண்ணிப் பார்க்கக் கூட இல்லை.” என்றான் பீமன். சந்தோஷத்துடன் அவனைத் தடவிக் கொடுத்துக் கொண்டே சிரித்தான் பலியா. “சின்ன எஜமான், கோபுவை உங்களுடன் வாரணாவதத்துக்கு அனுப்பினேன்.  அவன் திரும்பி வந்து நீங்கள் அனைவரும் உயிருடன் எரிக்கப்பட்டு விட்டீர்கள்; சாம்பல் தான் மிச்சம் என்று சொன்னான்.  ஆனால் நான் அதை முழுவதும் நம்பவே இல்லை. என் உள் மனது உங்களுக்கு ஒன்றும் ஆகியிருக்காது என்று உறுதியாக நம்பியது. என் நம்பிக்கை வீண் போகவில்லை.  அதோடு நான் இறந்து போவதற்கு முன்னர் உங்களைப் பார்ப்பேன் என்றும் எதிர்பார்த்திருந்தேன்;  அதுவும் நடந்துவிட்டது. இனி எனக்குக் கவலை இல்லை.” என்றான்.

பீமனை அன்புடன் மீண்டும் கட்டி அணைத்துக் கொண்ட பலியா, “சின்ன எஜமான், நீங்கள் இப்போது சுகமாகவும் பத்திரமாகவும் திரும்பி வந்த இந்த நல்ல வேளையைக் கொண்டாட வேண்டும். எங்கே உங்கள் தலை?  உங்கள் தலையை நீங்கள் குழந்தையாக இருந்தபோதிலிருந்து தடவிக் கொடுப்பேனே, நினைவிருக்கிறதா?  அதே போல் இப்போதும் தடவிக் கொடுக்க வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது.  அதுவும் நீங்கள் விளையாடும்போது என்னைப் பார்த்து உறுமுவீர்கள், கோபம் வந்தாலோ உங்கள் தலையால் என்னை முட்டுவீர்கள்! நினைவிருக்கிறதா இளவரசே!” இப்போது தன் மருமகளிடம் திரும்பியவன். “மாலா, சின்ன எஜமானுக்காக விரைவில் உணவு தயாராகட்டும்.  அவர் நன்றாகச் சாப்பிடுவார். வீட்டில் என்னவெல்லாம் இருக்கிறதோ எல்லாவற்றையும் வைத்து விரைவில் சமைத்து எடுத்து வா. “ என்று அவளை விரட்டினான்.

மாலா மிகவும் குண்டாக இருந்தாள்.  அவள் கால்கள் தூணைப் போல் இருந்தன. பெரிய வயிறோடு எழுந்திருக்க முடியாமல் எழுந்த அவளைப் பார்த்த பீமன், “விரைவில் உன் கால்களால் உன் உடலைத் தாங்க முடியாமல் போகப் போகிறது. இப்போது விரைந்து செல்!” என்றான். மாலா அதைக் கேட்டுச் சிரித்துக் கொண்டாள். மன்னிப்புக் கேட்கும் பாவனையில் பலியா பீமனைப் பார்த்து, “வீட்டில் உணவுப் பொருட்கள் நிறைய இல்லை. நாங்கள் அனைவரும் தாத்தாவும், மற்றும் மன்னர் திருதராஷ்டிரரும் உங்கள் அனைவரின் வரவுக்காகப் பொதுமக்களுக்கு அளிக்கப் போகும் விருந்தில் கலந்து கொள்ள இருக்கிறோம். ஆகவே அதிகம் சமைக்கவில்லை.” என்றவன், மறுபடி பீமனிடம், “சின்ன எஜமான், உங்கள் வயிற்றுப் பசி முன்னைப் போலுள்ளதா? அல்லது அதிகரித்துள்ளதா? குறைந்துள்ளதா?” என்று ஆவலுடன் வினவினான்.

“என்ன, குறைவதா? பலியா, முன்னை விட அதிகரித்திருக்கிறது.  அதிகரித்துக் கொண்டே போகிறது. பலியா, நான் எப்படி ராக்ஷசவர்த்தத்தின் அரசன் ஆனேன் என்பது தெரியுமா உனக்கு? ஒரு ராக்ஷசன் எவ்வளவு உணவு உண்பான் என்பது தெரியுமா?  அப்படி ஒரு ராக்ஷசன் என்னுடன் போட்டி போட்டான்.  அவன் உணவு உண்ணுவதில் நிபுணன்.  தலைவனாம். என்னுடன் சாப்பிடுவதில் போட்டி போட வந்தான். அப்படி நான் ஜெயித்தால் அவர்கள் தலைவனாகலாம் என்பதே போட்டியின் விதி. இருவரும் சாப்பிட ஆரம்பித்தோம்.  நான் சாப்பிட்டுக் கொண்டே இருந்தேன்.  சிறிது நேரத்திலேயே ராக்ஷசனுக்கு வயிறு வலிக்க ஆரம்பித்து விட்டது. அவனால் உண்ண முடியாமல் மயங்கி விழுந்து விட்டான். அவ்வளவு சாப்பிட்டும் என் பசி என்னமோ அடங்கவில்லை.” பீமன் சத்தம் போட்டுச் சிரித்தான். “பலியா, பலியா, அந்த ராக்ஷசன் மயங்கிக் கிடப்பதைப் பார்க்கப் பார்க்க வேடிக்கையாக இருந்தது.  தெரியுமா! பின்னர் அதிகம் உணவு உட்கொண்டதன் காரணமாக அவன் இறந்தே போய்விட்டான்.”

“எல்லாம் சரிதான் சின்ன எஜமான், நீங்கள் எவ்வளவு பேர் கையால் உணவு உண்டிருந்தாலும் உங்கள் வளர்ப்புத் தாய் உங்களுக்குச் சமைத்து அளித்த உணவைப் போல் ருசியாக இருக்காது.” என்றான் பலியா.

“ஓ, நான் அவரை மறந்தே போனேனே!  எங்கே அவர்?  உடல்நலமில்லாமல் இருக்கிறாரா?” என்று பீமன் கேட்க, பலியாவின் முகம் மாறியது. வருத்தத்துடன் கூறினான்:”அவள் எப்போதோ இறந்துவிட்டாள் என் எஜமானே! உங்களை மீண்டும் பார்க்க அவளுக்குக் கொடுத்து வைக்கவில்லை. அது வரை உயிருடன் இருக்க முடியவில்லை அவளால்.  ஆனால் கடைசி வரை உங்களை ஒரு முறை பார்க்க விரும்பினாள்.  மிக மோசமாக விரும்பினாள். அது நடக்கவே இல்லை.”

“பலியா, நீ அவளைத் திட்டித் திட்டியே கொன்றிருப்பாய்!” என்று அவனைப் பார்த்துத் தன் ஆள்காட்டி விரலை நீட்டிக் குற்றம் சாட்டினான் பீமன். “அதெல்லாம் இல்லை, எஜமான்.  அவள் அதிகம் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.  அதனால் தான் இறந்துவிட்டாள்..” என்று சொல்லிய பலியா தன் வயதான சுருங்கிய விரல்களால் பீமனின் உடலைத் தடவிக் கொடுத்தான்.  அவன் விரல்கள் பீமனின் தோள் பலத்தையும் மார்பின் அளவையும் அளப்பது போல் அங்குமிங்கும் சென்று தடவிக் கொடுத்தது. முன்னை விடத் தன் சின்ன எஜமான் வலுவானவனாகவும், பலம் பொருந்தியவனாகவும் இருப்பதைப் பார்த்து பலியாவுக்கு உள்ளூர சந்தோஷம் ஏற்பட்டது. “சரி, பலியா, நீ இப்போது நாங்கள் வாரணாவதம் சென்ற பின்னர் இங்கே நடந்தவற்றைச் சொல்!” என்றான் பீமன்.

தன் தலையை மேலும், கீழும் ஆட்டிக் கொண்டான் பலியா.”சின்ன எஜமான், உங்களிடம் சொல்வதற்கு என்னிடம் நிறையச் செய்திகள் உள்ளன.  ஆனால் அவற்றால் உங்கள் மனம் மகிழ்வுறாது. மெல்ல மெல்லச் சொல்கிறேன். முதலில் உணவு உண்ணுங்கள்.”என்ற வண்ணம் அடுக்களைப்பக்கம் திரும்பி மாலாவை அழைத்தான். “இன்னும் என்ன செய்கிறாய் பெண்ணே! விரைந்து வா! சின்ன எஜமான் இன்னும் எத்தனை நேரம் பசியுடன் காத்திருப்பார்? வா, சீக்கிரம், “என்ற வண்ணம் பீமனிடம் மறுபடி திரும்பி, “சின்ன எஜமான், முதலில் உணவு உண்ணுங்கள்.  உணவு உண்ணும்போது கெட்ட செய்திகளைக் கேட்டால் உங்கள் உடல்நலம் பாதிக்கப்படும். உண்ணும் உணவு செரிக்காது.” என்றான்.

“அதெல்லாம் ஒன்றும் இல்லை; பலியா, நீ சொல்! எதுவானாலும் சொல். என்னுடைய ஜீரண சக்தி நன்றாகவே இருக்கிறது.  அது நல்ல விஷயங்களையும் கிரகித்துக் கொள்ளும்; கெட்ட விஷயங்களையும் ஜீரணம் செய்யும்.” என்றான் பீமன். மாலா பீமனுக்கு உண்ண உணவை எடுத்து வந்தாள். சிறு தானியங்களால் செய்யப்பட்ட அப்பங்கள், ஒரு பானை நிறைய மோர், வெல்லக் கட்டிகள், போன்றவற்றை அவள் பரிமாறினாள். “சின்ன எஜமான், தற்சமயம் வீட்டில் இருப்பதை வைத்து உங்களை உபசரிக்க வேண்டியதாயிற்று.” என்று மீண்டும் மன்னிப்புடன் கேட்டுக் கொண்டான் பலியா.  மாலாவும் அதை ஆமோதித்தாள். தன் குடும்பத்து நபர்களை எல்லாம் அப்புறப் படுத்தினான் பலியா. அவனுடைய கொள்ளுப்பேரன்கள் மூவர் மட்டும் அவர்களையே கவனித்துக் கொண்டிருந்தனர்.

அந்தக் குழந்தைகள் இதுவரையிலும் அவர்கள் வீட்டில் எந்த இளவரசனும் வந்து பார்த்ததில்லை. தாங்கள் அனைவரும் பிரமிப்புடனும், பயபக்தியுடனும் பார்க்கும் தங்கள் கொள்ளுப்பாட்டன் இப்படி ஒரு ராக்ஷசன் போன்ற இளவரசனைக் கொஞ்சிக் கொண்டும் கட்டி அணைத்துக் கொண்டும் சீராட்டுவதை அவர்கள் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை. அவர்களுக்கு இதெல்லாம் வியப்பாக இருந்தது.

“இதோ பார் பலியா! என்னை அப்படிப் பார்க்காதே.  நான் ஒன்றும் உன்னையும் சேர்த்துத் தின்றுவிட மாட்டேன்.  இந்த அப்பங்களை நாமிருவரும் பகிர்ந்து கொள்வோம், வா!” என்றபடி பீமன் அந்தக் குழந்தைகளையும் அருகே அழைத்தான். ஆனால் அந்தக் குழந்தைகள் பீமனைக் கண்டு பயந்து கொண்டு நின்றிருந்தன.  அருகில் செல்லும் தைரியம் அவர்களிடம் இல்லை. பின்னர் பீமன் மீண்டும் மீண்டும் அழைத்ததும், அவன் புன்னகை கொடுத்த தைரியத்தில் மெல்ல மெல்ல ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து பீமனிடம் சென்றனர்.  பீமன் அவர்கள் கைகளைப் பிடித்துக் கொண்டான். அவர்களைத் தன் பக்கம் இழுத்து அவர்கள் இடுப்பில் கிசு கிசு மூட்டிச் சிரிக்க வைத்தான். பின்னர் மாலாவும், குழந்தைகளும் அறையை விட்டு வெளியேறினர். பீமன் பலியாவைப் பார்த்து,


“இப்போது நான் பாட்டனாரையும், பெரியப்பா திருதராஷ்டிரரையும் சென்று பார்க்க வேண்டும்.  எல்லாவற்றையும் விட முக்கியமாகக் கொள்ளுப்பாட்டி ராணி சத்யவதியைச் சந்திக்க வேண்டும். ஆகவே நீ விரைவில் இங்கே நடந்தவைகளைப் பற்றிச் சொல்!” என்று அவசரப்படுத்தினான்.

1 comment:

msuzhi said...

கோபு என்ற பெயர் ஆச்சரியம்.

என்னதான் செய்தார் பலியா என்று பார்த்தால்...