Sunday, June 30, 2013

உத்தவனைக் காத்த ராக்ஷஸன்!

கருணையான புன்சிரிப்பு ஆசாரியரின் முகத்தில் காணப்பட்டது.  “இதிலிருந்து எங்கனம் வெளியேறுவது என்பதைக் குறித்து நாம் நிதானமாய்ச் சிந்திக்கலாம்.” என்ற வியாசர், உத்தவனைப் பார்த்து, “உத்தவா, நீ ஏன் இந்தப் பெண்களை மணந்து கொள்ளக் கூடாது?” என்று வினவினார். நம்முடைய குலாசாரப்படி மணந்து கொள்வாயாக.  இந்தப்பெண்களுக்கும் இதில் சம்மதம் இருக்கும் என்றே நினைக்கிறேன்.   உன் தாத்தா ஷூரன் மரிஷாவைத் தூக்கிச் சென்றது போல் நீயும் இவர்களை துவாரகைக்கு அழைத்துச் சென்றுவிடு!” என்றார் வியாசர்.  உத்தவன் நடுநடுங்கிப் போனான்.  தன்னுடைய மகத்தானதொரு சபதம், அதுவும் ஷாய்ப்யா போன்றதொரு பெண்ணைத் துறந்ததின் பின்னர் மிகுந்த மனக்கட்டுப்பாடுடன் இருக்கப் போவதாய்ச் செய்த சபதம் உடைந்து விடுமோ என்று பயந்தது மட்டுமல்ல;  தன் யாதவ குலத்தினருக்கு முன்னர் இரு நாககன்னிகளைத் தன் மனைவியராய்க் கொண்டு செல்லவும் அவன் விரும்பவே இல்லை.  அந்த எண்ணமே அவனைக் கொன்றுவிடும் போல் இருந்தது.

“ஆனால், ஆசாரியரே, நான் திருமணமே செய்து கொள்ளப் போவதில்லை என சபதம் செய்திருக்கிறேன். அதோடு பார்க்கும் பெண்களை எல்லாம் அந்த சாக்ஷாத் அம்பிகையின் திருவுருவாகவே பார்த்து வருகிறேன்.  எல்லாப் பெண்களும் என்னைப் பொறுத்தவரை அம்பிகையின் திருவுருவே!” என்றான் மிக இரக்கமான குரலில்.  விஷமத்தனமானதொரு சிரிப்பும் ஒளியும் ஆசாரியரின் கண்களில் படர்ந்தது.  உத்தவன் மேலும் தொடர்ந்து, “குருவே, உங்களை விடச் சிறந்ததொரு தபஸ்வி இவ்வுலகில் இல்லை.  நான் ஆணவத்துடனோ, வெட்கம் கெட்டோ பேசுவதாக நினைக்காதீர்கள்.  நான் இம்மாதிரியான ஒரு சபதம் எடுத்திருக்கிறேன் என்பதை அறிந்தும் அதை உடைத்துத் திருமணம் செய்து கொள்ளும்படி நீங்கள் என்னை எப்படிக் கேட்டீர்கள் என்பது எனக்கு வியப்பை அளிக்கிறது.”  மிகப் பணிவான குரலிலேயே சொன்னான் உத்தவன். 

“நான் ஒரு தபஸ்வியாக இருக்க முயற்சிக்கிறேன்; முயற்சித்தேன்; முயல்வேன்.  ஆனால் காமதேவனை வெல்வது என்பது எல்லோராலும் முடியக் கூடிய ஒன்றல்ல மகனே!  நான் தபஸ்வியாக இருக்க நினைப்பதினாலேயே அதைக் குறித்து அதிகம் அறிந்திருக்கிறேன்.  எனக்கும் சுகன் என்ற பெயரில் ஒரு மகன் இருப்பதை அறிவாய் அன்றோ!  காமதேவனை சாமானியர்கள் அனைவரும் வெல்லலாம் என நினைப்பது முட்டாள்தனம் மகனே!  உலகில் சிருஷ்டி நடப்பது எவ்வாறு?  மிகச் சிலருக்கே இறைவனால் அத்தகையதொரு பாக்கியம் கிடைக்கிறது.  மிக மிகச் சிலருக்கே.  மற்றவர்கள் அனைவருமே இவ்வுலக வாழ்க்கையில் உழன்றே ஆகவேண்டும்.  காமனை எதிர்கொள்ள முடியாமல் அவனுக்கு ஆட்பட்டே வாழ்க்கையை நடத்த வேண்டும்.  ஆனால் மகனே, அதிலும் மிகச் சிலர், தங்கள் திருமணத்தின் மூலம் எது நடக்கவேண்டும் என்பதைச் சரியாகப் புரிந்து கொண்டு அதன்படி நடந்து தங்கள் இல்லறவாழ்க்கையை முடித்துக் கொண்டு ஞானமார்க்கத்தை நாட வருகின்றனர்.  அப்படி வருபவர்கள் எங்களில் ஒருத்தராக ஆவதோடு அல்லாமல் எங்களைப் போன்ற தபஸ்விகளை வலிமை மிக்கவர்களாகவும் ஆக்குகின்றனர்.”

ஆசாரியரின் வார்த்தைகளைப் பணிவுடனும், விநயத்துடனும் கேட்டு வந்த உத்தவன் அதே சமயம் தன்னைக் குற்றம் செய்ததாகவும் கருதிக் கொள்ளாமல் இயல்பாகவே இருந்தான்.  நாகர்கள் அனைவரும் ஆசாரியர் உத்தவன் மனதை மாற்றச் செய்த முயற்சிகளைக் கண்டு உள்ளூர மகிழ்ந்தாலும் உரையாடலின் போக்கு அவர்களைத் திகைக்க வைத்தது.  அதன் முக்கியத்துவம் என்ன என்பதையும் அவர்களால் புரிந்து கொள்ள இயலவில்லை.  அவர்கள் புரிந்து கொண்டது எல்லாம் ஒரு ஆரிய இளவரசன் தங்கள் குல மகளிரை மணந்து கொள்ளும்படி வற்புறுத்தப்படுகிறான் என்பது மட்டுமே.  ஆனால் உத்தவனோ இதிலிருந்து தப்பும் வழியைத் தேட விரும்பினான்.  அதற்கு அவனுக்குக் கால அவகாசம் தேவைப்பட்டது. 

“ஆசாரியரே, உங்கள் ஆலோசனைகள் அனைத்தும் எனக்கு நீங்கள் இட்ட கட்டளையாகவே கருதுகிறேன்.  ஆனாலும் ஆசாரியரே, எனக்குச் சிந்திக்கக் கொஞ்சம் நேரம் தேவை.  இப்போதே என்னால் எந்த முடிவையும் எடுக்க இயலாது.  தாத்தா ஆர்யகன் அவர்களுக்குத் தன் வணக்கத்தையும், தன் குல முன்னோர்களின் விசாரிப்புக்களையும் தெரிவிக்கக் கண்ணன் இங்கே வரப்போகிறான்.  குருவே, கண்ணன் வந்து சேரட்டும்.  நான் அவனைக் கலந்துஆலோசித்துச் சொல்கிறேன்.” என்றான் உத்தவன்.

ஆனால் கார்க்கோடகனுக்கு இதில் துளிக்கூட சம்மதமில்லை.  “இது மாபெரும் அவமானம்.  நம் குலப்பெண்களுக்கும்,  நம் திருமண முறைக்கும் இழைக்கப்பட்டதொரு மாபெரும் துரோகம்.  இது எல்லாம் நடவாத ஒன்று!” எனத் தீர்மானமாகச் சொன்னான்.

“ஆம், கார்க்கோடகா, நீ சொல்வது சரியே!” என்ற வியாசர், அவன் மனைவியைப் பார்த்து, “ரவிகா, நீ என்னை நம்புகிறாயல்லவா?” என்று வினவினார்.  உத்தவனுக்கு முதுகுத் தண்டில் சில்லிட்டது. கைகால்கள் செயலற்றுப்போயின.  அந்த இரு பெண்களையும் மணந்து கொள்ளுமாறு வியாசர் தன்னிடம் சொல்லிவிட்டால்?  என்ன செய்வது?  ஆசாரியரின் வார்த்தைகளை எவ்வாறு மீறுவது? உத்தவன் மனம் வேகமாகச் சிந்தித்தது.  “ஆசாரியரே!” என ஏதோ சொல்ல ஆரம்பித்தான் உத்தவன்.  அப்போது திடீரென அங்கே கூக்குரலும் சப்தமும், அழுகையுமாகக் கேட்டது.  மனிதர்கள் ஓட்டமாக ஓடிவரும் காலடிச் சப்தங்கள்.  ஓடி வருகிறார்களா?  ஓடித் தப்பிக்கிறார்களா என்பதே புரியவில்லை.  ஒரே கூச்சலும் குழப்பமுமாக நிலவியது அந்தச் சூழ்நிலை.   அரசனின் மாளிகைச் சுற்றுச் சுவருக்கு வெளியே, “ராக்ஷசன், ராக்ஷசன்!” என்ற கூக்குரல், கூப்பாடு.  மக்கள் பயந்து ஓடும் ஓசை.  அலறும் குரல்கள்.

அச்சத்தில் ஆழ்ந்த அங்கிருந்த அரசகுலப்பெண்கள் குழப்பத்தில் ஒருவரை ஒருவர் நெருக்கிக் கட்டிப் பிடித்துப் பாதுகாப்புத் தேடிக் கொண்டனர்.  கார்க்கோடகன், மணிமான், இன்னொரு உறவினர் மூவரும் தங்கள் ஈட்டிகள், கேடயங்கள் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு வெளியே ஓடினார்கள்.  தன்னைச் சுற்றி ஏற்படுத்தப்பட்டதொரு தவிப்பும், கலக்கமும் நிறைந்த சூழலை உதறி எறிந்துவிட்டுத் தன் வில்லையும், அம்புகளையும் எடுத்துக்கொண்டு உத்தவனும் உதவி செய்ய ஓடினான். 


புயல் ஒன்று வெளியே நர்த்தனமாடியதோ!

7 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

புராணக் கதை அழகாகச் செல்கிறது. மேலும் படிக்க ஆவலுடன் ....

திண்டுக்கல் தனபாலன் said...

இனி புயல் தான்...!

ஸ்ரீராம். said...

காத்திருக்கிறேன்......

ஸ்ரீராம். said...

அடுத்தடுத்த பதிவுகள் வேகம் பெற்றுள்ளனவோ!

sambasivam6geetha said...

வாங்க வைகோ சார், நன்றி.

sambasivam6geetha said...

வாங்க டிடி, நன்றி, என்ன ஆகப் போகிறனு பார்ப்போம். :)

sambasivam6geetha said...

வாங்க ஸ்ரீராம், நன்றி. ஆமாம், எழுதி வைச்ச்சதைப் போட்டுடலாம்னு போடறேன். :)))